Tuesday, March 1, 2011

கதை சொல்லி - லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidya)


கதை சொல்லி - லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidya)

றெமியதாஸ்



ரணங்கள், வலி, புறக்கணிப்பு, அழுகை, நரகம், துயரம் இந்த சொற்களில் இருக்கும் அழுத்தத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறோமா? என்ற கேள்வி அடிக்கடி எழும். நாம் அதிகம் அழுதது இந்த உலகத்தில் எதற்கானதாக இருந்திருக்கும்? அதிகபட்சம் பிரியமானவரின் மரணம் அல்லது பிரிவு? பிறந்ததில் இருந்தே மேற்சொன்ன சொல்லாடல்களை உண்மையில் அனுபவிக்கும் ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும்? இந்த கோர வார்த்தைகளுக்கு எதிர்வினையாக புன்னகைக்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. திருநங்கைகளைப் பற்றிய குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத அறிவுஜீவியான இந்தச் சமுதாயத்தில் போராடும் வல்லமை கொண்ட நெஞ்சங்களில் ஒன்று அவருடையது. வாழ்வின் இரக்கமற்ற தருணங்களோடு மோதி தன்னை நிரூபித்திருக்கும் அழகிய முகம் லிவிங் ஸ்மைல் வித்யா.

வித்யாவை கதைசொல்லிக்காக சந்திப்பதற்காக மதிய நேரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். முதல் மூன்று நாட்கள் பெய்த மழையால் அதிக வெப்பம் இல்லாமல் லேசான குளிர்காற்று வீசியது. திருநங்கைகள் பற்றிய அறியாமையினை கொண்டுள்ள இந்தச் சமூகத்தை என்ன செய்வது? நம் குழந்தைகள் அவர்களை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே சொல்லிக் கொடுக்கப் படுவதெல்லாம் திருநங்கைகள் ஏளனத்துக்கு உரியவர்கள் என்பது மட்டுமே. சினிமா கோமாளிகளின் பங்கு இதில் அளப்பறியது. பெண்களுக்கே என்ன உடை உடுத்த வேண்டுமென சொற்பொழிவு தரும் கலாச்சார அறிவீனர்களை விளங்கிக் கொள்ளச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை.

சைதாப்பேட்டை பெருமாள் கோவில் அருகே செல்லும் ஒழுங்கையின் சில திருப்பங்களில் இருந்தது அவர் தங்கியிருக்கும் வீடு. அடையாளமாக பிள்ளையார் கோவிலுடன் அந்த தெரு முடிவடைந்தது. அருகே இருந்த நாகலிங்க மரம் பூத்துக் குலுங்கியது. உருண்டையாக காய்களும் புடைத்துத் தொங்கியது. பார்வையைச் சுழற்றினேன் மாடியில் இருந்து கையசைத்தார் வித்யா. பதில் புன்னகையோடு கையசைத்தேன். அவர் தங்கியிருந்தது மிகச் சிறிய வீடு. கதிரைகள் எதுவும் இல்லை. பாயில் வாகாக அமர்ந்து கொண்டு உரையாடத் தொடங்கினோம்.

வித்யா இன்று நவீன நாடகங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். மாலை பெச‌ன்ட் ந‌க‌ரில் உள்ள ஸ்பேஸில் ந‌டைபெறும் பரிக்ஷா நடத்தும் நாடகத்திற்கு செல்வதாக இருந்தார். அதனால் பின்னேரத்திற்குள் முடித்துக் கொள்வதாக இருந்தது. ஒரு குழந்தை போல கதைத்தார். கதை சொல்லும் போதும் அவ்வாறே இருந்தார். மிக ரசித்துக் கொண்டே அவருடன் உரையாடினேன். இடையிடையே கதைகள் சொல்கையில் சிறு சம்பவம் மறந்துவிட்டால் அவர் கொண்ட‌ சின்ன ப‌த‌ற்ற‌ம் மெல்லிய‌ புன்ன‌கையை என‌க்குள் வ‌ர‌வ‌ழைத்துக் கொண்டிருந்த‌து.

மதியம் கதை பதிவு செய்யத் தொடங்கியபோது இருவரும் உண‌வருந்தியிருக்கவில்லை. 'வெளியே சென்று இருவரும் சாப்பிட்டுவிட்டு தொடர்வோம் என்றேன்.'இங்கு மிடில் கிளாஸ் குடும்பங்கள் அதிகம். நாம் இருவரும் ஒன்றாக சென்று திரும்பி வந்தால் தப்பாக எடுத்துக் கொள்வார்கள்' என்றார். எவ்வாறு புரிந்து கொள்ளச் செய்ய‌ப் போகிறோம் இந்த‌ ந‌ன்னில‌த்தை? கதைகளின் பதிவு தொடர்ந்தது. நிகழ்ந்தது.

திருந‌ங்கைக‌ளுக்காக‌ போராடி வ‌ரும் க‌ள‌ப்போராளி லிவிங் ஸ்மைல். வெற்று காகித‌ப் புலி ம‌ட்டும் அல்ல‌ அவ‌ர். குழ‌ந்தைக‌ளுக்குச் சொல்ல‌ அவ‌ரிட‌ம் நிறைய‌ க‌தைக‌ள் இருந்தன‌. இர‌ண்டு க‌தைக‌ளை மாத்திர‌ம் ப‌திவு செய்து கொண்டோம். குழந்தைக் கதைகள் நம்மையும் சிறுபிராயத்தில் வாயைப் பிளந்து கொண்டு கேட்கும் தன்மையைக் கொண்டிருந்தது. த‌ன‌க்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தஞ்சை பிரகாஷின் கதை நெடுநாட்கள் முன்பு படித்து மறந்திருந்தாலும் அதைச் சொல்ல அவர் எடுத்துக் கொண்ட பிராயத்தணம் அத்தனை அழகு.‌

க‌தைக‌ள் அனைத்தையும் முடித்து திருப்புகையில் பூக்கள் சொறிந்த அந்த‌ நாக‌லிங்க‌ ம‌ரத்தாலும் வித்யாவின் நினைவாலும் நிர‌ம்ப‌ப் பெற்றிருந்தேன். வாழ்வின் துய‌ரை வென்று க‌ளிக்கும் தொட‌ர் போராட்ட‌த்தைக் கொண்ட‌வ‌ரிட‌ம் ப‌ழ‌கினால் உலகமே புதிதாகத் தோன்றும் அரூப‌மான‌ உண‌ர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன்.

லிவிங் ஸ்மைல் வித்யாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.

for stories: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_17.php



No comments:

Post a Comment