Monday, February 28, 2011

பின்நவீனத்துவம்-2



யாயும் ஞாயும் யாரா கியரோ- 6

பின்நவீனத்துவம்-2

தமிழவன்

பின்நவீனத்துவம் பலவிதமான விளக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக லையோத்தாரின் கருத்துக்கள் அமைகின்றன என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.. இவர் கருத்துக்கள் இதுவரை உண்மை என்று கருதப்பட்ட பல விசயங்களை மறுக்கினறன. அதனால் தான் பின்நவீனத்துவம் என்ற சொல் தமிழில் ஒரு சிலரின் கையில் அகப்பட்டு அவஸ்தைப்படும் சொல்லாகியுள்ளது.

பின்நவீனத்துவம் பற்றிச் சொல்லும் லையோத்தார் அறிவியல் பற்றிய புதிய கருத்துக்களைக் கவனத்தில் கொள்கிறார். அறிவியல் பற்றிய பழைய கருத்துகள் உலகம் உருவாவதற்கு அடிப்படையாக உள்ள பொருளை அளக்கமுடியும் என்றும் அப்பொருள்களை சோதனைசெய்து நிரூபிக்கமுடியும் என்றும் அப்பொருள் மனிதனிலிருந்து பிரிந்து தன்னிச்சையாக இருக்கமுடியும் என்றும் கருதின. ஆனால் இக்கருத்துக்கள் சமீபத்திய அறிவியலில் ஏற்கப்படுவதில்லை. இதன்மூலம் பழமரபுக் கருத்துக்களும் இன்றைய அறிவியலும் ஒத்த கருத்துக்களைத்தான் கொண்டிருக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. லையோத்தார் இங்குதான் நாட்டுப்புறக் கதைகளைத் தன் கவனத்தில் கொண்டார்.

சமிபத்தில் தமிழில் ஒரு நல்ல நூல் வந்துள்ளது. அதன் ஆசிரியர் ஏ.எஸ்.டி. பிள்ளை. இவர் "கல்வி, கலாச்சாரம், இலக்கியம் இன்றைய நிலவரம்" என்னும் தலைப்பில் எழுதியுள்ள சிறுநூல் முக்கியமானது.
இவர் லையோத்தாரை மிக எளிமையாகப் புரிய வைக்கிறார்.

தொழில் நுட்பம் சார்ந்து உலகம் ஒருகாலத்தில் வளர்ந்தது. இன்று அப்படியில்லை. உலகம் அறிவுத்தொழில் நுட்பம் சார்ந்து வளர ஆரம்பித்துவிட்டது. கணினித்தொழில்நுட்பம் இந்த புதிய உலக உண்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இதனால் ஒரு புதிய உற்பத்தியானது உலகில் தோன்றியுள்ளது. இவ்விசயம் பற்றி அறிய பிள்ளை அவர்களின் நூலைப் படிக்கலாம்.

உலகத்தில் புதிய விசயங்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பதையும் மார்க்ஸ் போன்றவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே கூற ஆரம்பித்தார்கள். மார்க்ஸ், உலகில் மாறாதது ஒன்றுண்டு, அது எல்லாம் மாறும் என்ற வாக்கியம் தான் என்றார். தத்துவாதிகள் உலகம் பொருளால் ஆனதா அல்லது கருத்தால் ஆனதா என்று சண்டையிட்டுகொண்டு இருந்தபோது மார்க்ஸ் உலகம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது என்றார். அதில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் முரண்பட்ட உறவே இருக்கமுடியும் என்றார். ஏனெனில் தொழிற்சாலையும் தொழில் செய்யும் இடமும் தொழில்செய்ய ஒரு உற்பத்திப் பொருளும் வேண்டும். இவை முரண்பாடான உறவின் தன்மை கொண்டவை என்றார்.

கணினி இன்று முதலாளி-தொழிலாளி உறவையும் தொழிற்சாலை, அது இருக்கும் இடம், உற்பத்திப் பொருள் போன்றவற்றை மாற்றிவிட்டது. உற்பத்தி செய்யப்படுவது ஒரு மென்பொருளாகிறது. கையில் தொட்டுப் பார்க்கத்தக்க நட்டும் போல்ட்டும் போன்றதல்ல மென்பொருள். சமீபத்தில் எங்கும் பரவியுள்ள மென்பொருள் என்ற ஒன்று மரபான தத்துவத்தில் இருந்த கருத்து/பொருள் என்ற முரண்பாட்டை அகற்றிவிட்டது. இதை அன்றே கம்யுனிஸ்டுகள் அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் கம்யூட்டரை அன்று எதிர்த்தனர். கம்யூட்டரை எந்திரமாக பார்த்தனர்.
கம்யூட்டர் எந்திரமல்ல என்கிறது பின்நவீன்த்துவம்.

இதுதான் உலகத்தில் இன்று ஏற்பட்ட அறிவுப்புரட்சிக்கு அடிப்படை. பின்நவீனத்துவத்தின் தோற்றத்திற்கான தேவை இங்குத்தான் ஏற்பட்டது. இதனைப் புரிந்துகொள்ளும் போது உலகம் புதுமுறையில் இயங்குவது ஓரளவு விளங்குகிறது.

மார்க்ஸியம் பற்றிக் கொஞ்சம் தெரிந்தால் தான் உலகம் மாறும் விதத்தையும் அந்தமாற்றத்தில் பொருளாதாரம் வகிக்குமிடத்தையும் பற்றி நாம் அறியமுடியும். நாம் நம்மைப் பற்றியும் நாம் வாழும் சமூகத்தைப் பற்றியும் தெரிந்துகொண்டுள்ளோம். தெர்ந்துகொள்ளவில்லையென்று அர்த்தமல்ல. ஆனால் அந்த அறிவு நாம் வாழும்போது நம்மையறியாமல் நமக்குக் கிடைத்தது. சமுகவியலைப் படித்து நாம் நம் சமூகத்தைப் பற்றி அறியவில்லை. பொருளாதாரத்தைப் படித்துவிட்டு சந்தைக்குப் போவதில்லை. ஆனால் கொஞ்சம் படிப்பு இருந்தால் நல்லது. அதனால் தான் இலக்கியம் படைக்கவும் படைக்கப் பட்ட இலக்கியத்தைப் படிக்கவும் உலகம் இயங்கும் விதம் பற்றித்தெரிந்து கொள்வது நல்லது. சிலர் பின்நவீனத்துவம் தெரிந்தால்தான் நாவல் எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதையும் அறிந்துகொள்வது தான் அறிவு. ஒருவன் நல்ல குடிமகனாக இருக்கத் தான் வாழும் தேசம் பற்றித்தெரிந்து கொள்வது போன்றது இது. ஒரு சமூகத்தில் அறிவு பரவப் பரவ அத்தேசத்தில் வாழும் எழுத்தாளர்களும் அதிக திறமையுடன் எழுதுவார்கள். நாற்பது சதமானம் படிப்பறிவற்றவர்கள் வாழும் தமிழகத்தில் இன்றைய அரசியல்வாதிதான் நம் தலைவன், அதுபோல் இன்று ஒருசில வலைப்பூ எழுத்தாளர்கள் தான் எழுத்தாளர்கள். அவர்களின் அறிவுப் பின்னணி பற்றித் தெரிந்து கொண்டால் நமக்கு உண்மை விளங்கும். அவர்களுக்குச் சம்மந்தமில்லாத விசயங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இது இரண்டாம் கிளாஸ் படித்த ஒரு நடிகர் கட்சி அரம்பித்தவுடன் அவருக்குச் சம்பந்தமில்லாத அணு உலைநுட்பம் பற்றிப் பேசுவது போன்றது. எனவே பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொண்டால் குறைந்தபட்சம் சிலரிடம் ஏமாறாமலாவது இருப்போம்.

இதுபோல் திரைப்பட அறிவும் கூட பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்துகொண்டால் மிகும். இன்று தமிழில் திரைப்பட விமரிசனம் ஒரு ஏமாற்று வேலையாக உள்ளது.

இப்போது தமிழில் எழுதுபவர்களின் நாவலின் தரம் உலகத்தரமானது என்று உங்களில் சிலர் அந்த எழுத்தாளர்களுக்குப் புகழ்ந்து எழுதுகிறீர்கள். அது எந்த அளவு சரியானது என்று இப்போது உங்களுக்குப் புரியும். அந்த எழுத்தாளர் உங்களிடம் தொடர்பு வைத்துத் தான் ஒரு தமிழ்ப் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று கூறுகிறார். செக்ஸ் எழுத்து என்று நீங்கள் நினைக்கும் எழுத்தை அவர் இது கூட உனக்குத் தெரியவில்லையா, இதுதான் பின்நவீனத்துவம் என்று கூறுகிறார். அவர் உங்களை ஏமாற்றவில்லையென்று உறுதியாக உங்களுக்குத் தெரியுமா?

இன்று இந்திய அரசு அறிவு கமிஷன் (Knowledge Commission) என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவு என்பது நவீன உலகை உருவாக்குகிறது என்ற பின் நவீனத்துவ அடிப்படைச் சிந்தனையிலிருந்து தான் இந்தக் காரியம் நடைபெறுகிறது. பல்கலைக் கழகங்களை இந்த குழுவினர் அணுகுகின்றனர். இந்தியாவுக்கு இன்னும் பல பல்கலைக் கழகங்கள் வேண்டும். ஏனெனில் அறிவு உற்பத்தி பல்கலைக் கழகங்களை நம்பித்தான் இருக்கிறது. இதுவரை பொருள் இருந்தால் உலகை வசப்படுத்தல்லாம் என்று கருதி் பொருளால் ஆன உலகம் வேண்டும் என்றனர். இதற்கு மாற்றாய் மதவாதிகள் ஆன்மீகத்தால் ஆன உலகம் வேண்டும் என்கின்றனர். பின்நவீனத்துவம் அறிவால் ஆன உலகம் தான் உண்மை என்கிறது.

இந்த அறிவு என்பது முன்பு அறிவியல் என்று அழைக்கப்பட்ட விஞ்ஞானத்தில் இருந்தது. என்றைக்கு அறிவியலும் பரம்பரையாகக் கூறப்படும் கதையும் ஒன்றுபோன்றவைதான் என்று லையோத்தார் கூறினாரோ அன்றிலிருந்து அறிவு என்பது என்ன என்ற கேள்வி வந்தது. இந்த இடத்தில் நாம் அறிவியலுக்கும் நாட்டுப்புறக் கதைக்கும் உள்ள வித்தியாசம் பற்றியும் அவை இரண்டும் ஒரே அடிப்படைகளைக் கொண்டவை என்று ஏன் லையோத்தார் கூறினார் என்றும் பார்க்கவேண்டும்.

ஒரு கதையை ஒருவன் சொல்லும்போது அக்கதையின் உலகத்துக்குள் கதைசொல்பவனும் கதை கேட்பவனும் வருகிறார்கள். எப்படியென்றால் கதைசொல்பவன் மேற்கொள்ளும் நியாயத்தையே (Legitemacy) கதையைக் கேட்பவனும் மேற்கொள்கிறான். இந்த சுயநியாயம் தான் இங்கு முக்கியமாகிறது. இதுபோல் தான் விஞ்ஞானமும் செயல்படுகிறது என்று இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இரண்டுபேர் அல்லது கொஞ்சம் பேர் நியாயம் இருக்கிறது இந்தக் கண்டுபிடிப்பில் என்று பேசுவதுதான் அறிவியல். தொமஸ் குன் (Thomas Kuhn) மற்றும் பாயர்பென்ட் (Feyerabend) போன்ற அறிஞர்கள் இதைக் கூறி விளக்கியுள்ளார்கள். வேறொன்றும் இல்லை. இப்படிப் பார்த்தால் கதையாடலும் அறிவியலும் ஒன்றுபோல் செயல்படுகின்றன.அமைப்பியலும் இத்தகைய கருத்துக்களைக் கூறின.
எனவே அறிவைப்பெருக்குபவன் வல்லாவனாகிறான்.

இதனால் கல்வி முக்கியமாகியுள்ளது. தமிழத்தைப் பொறுத்தவரையில் கல்வி பின் தள்ளபட்டுள்ளது. இலக்கியத்துறையிலும் திரைப்படத்துறையிலும் அரசியலிலும் கல்வி தமிழகத்தில் பின் தள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்நிலை மாறும். தமிழகம் கல்விக்கான முக்கியத்துவத்தைக் கண்டுள்ளது. எனவே தான் தமிழகத்தில் இந்த பின்நவீனத்துவச் சர்ச்சை வந்துள்ளது.

பொதுவாக விளக்கவேண்டுமென்றால் என் "பின்நவீனத்துவ அரசியல் "(வெளியீடு, பரிசல், சென்னை-94) என்ற நூலின் ஒரு வாக்கியத்தை இங்குத் தரலாம்: லையோத்தார் அழகியலை பொருளாதாரத்தோடும் வரலாற்றோடும் இணைத்தார். பிரட்ரிக் ஜேம்சன் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் அழகியலாக்கினார்.

இவ்விளக்கங்கள் ஓரளவு பின்நவீனத்துவம் பற்றி அறிய துணைபுரியலாம்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com


from:

http://koodu.thamizhstudio.com/thodargal_13_6.php




Thursday, February 24, 2011

ஜாகரண்ட பூக்கள்


ஜாகரண்ட பூக்கள்

சுஜாதா தேசிகன்

17.11.2006 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து)

"நடு ராத்திரி ஒருத்தர் வந்து கதவை தட்டி ஒரு கதையை கொடுத்து இதில என்ன தப்பு சொல்லுங்க... நீங்க எழுதற குப்பைய எல்லாம் போடறாங்க.. எவ்வளவோ முறை நான் எழுதி திரும்ப வந்துவிட்டது" என்றார்.

அந்தக் கதையைப் படித்த போது, அது ஒரு காலேஜ் காதல் கதை.

"எந்த காலேஜ்?" என்று கேட்டேன். ஏதோ பேர் சொன்னான்.

"சரி அந்த காலேஜுல நுழையும் போது, என்ன இருக்கும்?"

"என்ன... உள்ளே போகும் போது மரங்கள் எல்லாம் இருக்கும்"

"சரி அந்த மரத்துக்கு பேர் என்ன ?"

"அதெல்லாம் தெரியணுமுங்களா ?"

"ஏம்பா, நீ தினமும் ஒரு காலேஜ் போற. அந்த மரத்தை எப்பவாவது நிமிர்ந்து பார்த்திருக்கியா? என்ன மரம்னு கூட சொல்ல முடியலை. அந்த Detail இல்லைன்னா நீ எப்படி எழுத்தாளன் ஆறது?"

"ஏங்க நீங்க கூட நிறைய கொலை கதை எழுதியிருக்கீங்க. நீங்க என்ன கொலையா செய்திருக்கீங்க?" என்றார்.

என்னால பதிலே சொல்ல முடியலை.

தி.ஜானகிராமன் சொல்லுவார்.. ஒரு தடவை டெல்லியில் Barakhamba சாலையில் போய்கொண்டு இருந்த போது இரண்டு பக்கமும் சோலை போல மரங்கள். தி.ஜா என்னிடம் கேட்டார், "நீ எப்பவாவது நிமிர்ந்து மேலே பார்த்திருக்கியா? அந்த மரம் பேர் தெரியுமா?"

He was very precise and was remembering every tree. அதனாலதான் அவருடைய கதைகளில் அவ்வளவு டிட்டேய்ல் இருக்கும். எனக்குக் கூட மரங்களை அடையாளம் காணமுடியும். சங்ககாலப் பாடல்களை பார்த்தால் எல்லா மரமும் இருக்கும். What is important is that look at nature and know something.

அப்படித்தான் பெங்களூரில் இருக்கும் போது... நீங்க கூட பார்த்திருப்பீங்க, ஒரே நாள்ள பூக்கும்.. அதன் கலர் கூட

"மோகலர்..."

"ஆமாம் மோகலர்.. Have you seen it? பேர் தெரியுமா?"

"பார்த்திருக்கேன், பேர் தெரியாது... ஆனா நீங்க 'இருள் வரும் நேரம்' கதையில முதல் பாராவில அதை பத்தி எழுதியிருப்பீங்க"

"Exactly"

"அதனுடைய பேர் Jakaranda. அந்தப் பூவோட பேர் எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னா-- ஒரு வெளிநாட்டுகாரர் வந்திருந்தார். அவருடைய பேர் Thomas Dish. He was a science fiction writer. அவர் இந்தப் பூவை பார்த்திட்டு, இது என்ன 'பூ'ன்னு கேட்டார். எனக்குத் தெரியலை, அப்பறம் எங்கல்லாமோ தேடி கடைசியில Botany Professor கிட்ட கேட்டு அதன் பெயர் Jakaranda அப்படீன்னு கண்டுபிடிச்சோம். He then wrote a small Haiku like கவிதை. அந்த கவிதை எனக்கு இன்னும் கூட நினைவு இருக்கு

இந்த ஜாகரண்ட மாதிரி பூக்கள், மரங்கள் பேர்களை எல்லாம் தெரிஞ்சுக்கணும். நீங்க கூட என்னுடைய எழுத்துல பார்க்கலாம், ஒரு விஷயம் தெரியலைன்னா அதன் டீட்டெய்ல் தெரியும் வரை வெயிட் பண்ணுவேன். This is one of the secrets of writing. யாரிடமாவது கேட்பேன், இல்ல தேடுவேன்... இப்ப ரொம்ப சுலபம்

"கூகிள் இருக்கிறது"

"(சிரிப்பு) ஆமாம்"

0 - 0 - 0 - 0 - 0

2003 ஆம் ஆண்டு ஒரு சனிக்கிழமை சுஜாதா அவர்களைப் பார்த்த போது, "நேற்று ஒரு கதை எழுதினேன், கொஞ்ச நேரத்துல கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது" என்றார். ஸ்ரீரங்கத்துக் கதைகளில் கடைசி கதையான "மாஞ்சு" என்ற கதை அது.

"சில கதைகளில்தான் இந்த மாதிரி அனுபவம் கிடைக்கும். நாம ஒன்றுமே செய்ய வேண்டாம் அதுவா எழுதிக்கொள்ளும். அப்படி எழுதப்பட்ட கதைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கும்" என்றார்.

"கதையை சொல்லாதீங்க விகடனில் வரும் போது படித்துக்கொள்கிறேன்" என்றேன்.

அடுத்த வாரம் அவரைச் சந்தித்த போது விகடனில் அந்தக் கதையை கொஞ்சம் எடிட் செய்து தரச் சொல்லிவிட்டார்கள். 2-3 பக்கம் அதிகமா இருக்காம். சின்னது செய்து அனுப்பியிருக்கேன். ஆனா புத்தகமா வரும் போது முழுக் கதையும் போட வேண்டும்" என்றார்.

மாஞ்சு அவர் எழுதிய கடைசி கதை என்று கூட சொல்லலாம். மாஞ்சுவிற்கு பிறகு 7-8 கதைகள் எழுதியிருப்பார் ஆனால் இது கிளாசிக். ஆண்டாள் என்ற பெண்ணுக்கு திருமணம் நடந்து, இளம் வயதில் விதவையாகி, இரண்டு பையன்கள் அதில் மூத்தவன் படிப்பு இல்லாமல், கல்யாணம் ஆகாமல்... இளையவன் புத்திசாலி; நன்கு படித்து அமெரிக்கா சென்று... என்று கதை செல்லுகிறது கடைசியாக ஆண்டாள் எடுக்கும் முடிவு என்பது படிக்கும் நமக்கு என்னவோ செய்யும்.

விகடனில் அந்தக் கதையைப் படித்துவிட்டு சுஜாதா அவர்களிடம் இந்த கதையின் முடிவை முன்பே முடிவு செய்து எழுதினீர்களா என்றேன். "இல்லப்பா, எழுதும் போது கடைசியில் அதுவே முடித்துக்கொண்டது" என்றார்.

நமக்கு பிடித்த கதை எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெரும்பாலனவருக்கு பிடிக்கலாம் என்று சொல்லலாம். இருவத்தைந்து வயது உடைய ஒருவருக்கு மாஞ்சு பிடிக்கும் என்று சொல்ல முடியாது அதே நாற்பது அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒருவருக்கு மாஞ்சு நிச்சயம் பிடிக்கும். அதற்குக் காரணம் கதையில் வருபவர்களையோ, அல்லது கிட்டதட்ட அதே மாதிரி சூழ்நிலையையோ பார்த்திருப்போம். அம்மாவிற்கு எந்தப் பையன் முன்னுக்கு வரவில்லையோ அந்தப் பையனிடம் ஆசை அதிகமாக இருக்கும். எதார்த்தத்தை கதையில் ஆண்டாள் மூலமாக அழகான வர்ணனைகளுடன் சொல்லியிருப்பார். உதாரணம் "பாச்சாவின் பெயர் இங்கிலிஷ் கல்யாண பத்திரிகையில் பார்த்திஸச்ந்தா என்று போட்டிருந்தது" Well crafted story. சின்னக் குழந்தைகளை படிக்க வைப்பது, கல்யாணம் செய்துகொடுப்பது, பேரன் பிரசவத்துக்கு அமெரிக்கா போவது, மூத்த மகன் இறந்து போவது, கடைசியில் ஆண்டாள் முடிவு என்று இரண்டு தலைமுறைக் கதையை ஒரு சிறுகதையில் அடக்குவது என்பது பெரிய வேலை. எப்படியாவது சிறுகதை எழுத வேண்டும் என்று துடிப்பவர்கள் ஸ்ரீரங்கத்துக் கதைகளை ஒரு முறை படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வேன். நிச்சயம் மாஞ்சு படித்தாகவேண்டும்.

- 0 - 0 - 0 - 0 - 0 - 0 -

2008, பிப்ரவரி 28- விடியற்காலை இரண்டு மணி இருக்கும். ஆஸ்பத்திரியிலிருந்து மொத்தமாக வெளியே வந்து, பார்க் செய்த பைக்கை எடுக்கும்போது அங்கே இருந்த வாட்ச்மென் ஒரு சலாம் போட்டுச் சிரிக்க, பையிலிருந்த பத்து ரூபாயைக் கொடுத்தேன். கையிலிருந்த பிரபந்தப் புத்தகத்தை எடுத்து பெட்ரோல் டாங்க் மேல் இருக்கும் பையில் சொறுகிவிட்டு கிரீம்ஸ் ரோட்டில் பைக் ஓட்டிக்கொண்டு நேராக மவுண்ட் ரோடு வந்தபோது சில வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. இடது பக்கம் திரும்பி சத்தியம் தியேட்டர் பக்கம் வந்த போது பெட்ரோல் டாங்க் பையில் பிரபந்தப் புத்தகம் இல்லை. திரும்பவும் மவுண்ட் ரோடு போய் இருட்டில் எங்கே விழுந்திருக்கும் என்று தேட- லாரிகளும், வெளியூர் பேருந்துகளும் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தன.. யாரையாவது கேட்கலாம் என்றால் சாலை மனித நடமாட்டம் இல்லாமல் காலியாக இருந்தது. சென்ற பாதை முழுவதும் பார்க்கலாம் என்று பைக்கை ஒன்வேயில் ஓட்டிக்கொண்டு சென்றபோது ஒரு ஆட்டோ நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. ஆட்டோ டிரைவர் கையில் கந்தலாக அந்தப் பிரபந்த புத்தகம்.

"சார் அது என்னுடையது!" என்றேன்.

"சாரி கீழே கடந்தது.. லாரியோ பஸ்ஸோ ஏற்றிட்டது."

கொத்தாக அவரிடம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அந்தப் புத்தகத்தை இன்னும் ஒட்டாமல் அப்படியே ஒரு பையில் வைத்திருக்கிறேன். பிரபந்தம் புத்தகம் கிழிந்ததற்கான காரணம்தான் இன்னும் தெரியவில்லை!

- 0 - 0 - 0 - 0 - 0 -



Wednesday, February 16, 2011

நல்லதோர் வீணை செய்து - திரைக்கதை பயிற்சி



நல்லதோர் வீணை செய்து


திரைக்கதை பயிற்சி

சிறந்த சிறுகதைகளை குறும்படமாக்கும் முயற்சியின் இத்திட்டத்தில் முதலில் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆர்வலர்களுக்கு திரைக்கதை எழுதுவதற்கான பயற்சி அளிக்கப்படுதிறது.

நாள்: 18-02-2011 முதல் 19-02-2011

இடம்: தமிழ் ஸ்டுடியோவின் கோடம்பாக்கம் அலுவலகம்.

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை.

ஒவ்வொரு நாளும் இரண்டு பிரிவுகளாக பிரித்து திரைக்கதை எழுதவதற்கான பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. காலை 10 முதல் 1 வரை ஒரு பகுதியாகவும், மதியம் 2 முதல் 6 வரை இரண்டாவது பகுதியாகவும் நடைபெறவிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர்களைத் தவிர ஆர்வமுள்ள நண்பர்கள் முன்பதிவு செய்து விட்டு கலந்துக் கொள்ளலாம்.

பயிற்சி அளிக்க வரும் சிறப்பு பயிற்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு - எழுத்தாளர் அஜயன் பாலா

வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு - ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன்

சனிக்கிழமை காலை 10 மணிக்கு - திரைப்படக் கல்லூரி பேராசிரியர் ரவிராஜ்

சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு - ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்.


from: http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_1.php






சுகந்தி சுப்ரமணியன் – தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -4

சுகந்தி சுப்ரமணியன் – தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு

குட்டி ரேவதி

http://koodu.thamizhstudio.com/thodargal_14_4.php


பெண்கள் ஏன் கவிதை எழுத வருகிறார்கள் ஏன் நாவல், சிறுகதைகளை பெரும்பான்மையும் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை? என்ற கேள்விக்குப் பலமுறைகள் பதிலெழுதியும் நிறைவுறாத இலக்கிய இடைவெளிகள் இன்னும் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றன. சுகந்தி சுப்ரமணியனிடம் அதற்கான முழுப்பொருளையும் உணர்ந்ததுபோல் தோன்றிற்று. குடும்பம் என்பதை, பெண்கள் தாங்கள் ஒளித்து வைத்திருக்கும் ‘தாலியைப்’போன்று மறைத்து வைத்துக் கொண்டாடும் மனநிலையிலிருந்து வெளிப்பட்டுத் தன் குரலை வெளிப்படுத்துவதற்குச் சரியான மொழியைக் கவிதை தான் தருகிறது. குடும்பத்தின் சிக்கலான தருணங்கள், அசெளகரியங்கள், அவமானங்கள் என்னவாயினும் வெளிப்படுத்த இயலாத, வாய்ப்பிலாத பொழுது கவிதை தான் அவற்றைப் பூடகமாகவும் அதே சமயம் வெளிப்படுத்தும் ஆசுவாசத்துடனும் வழங்குவதற்கு ஏற்றதாக இருக்கிறது, என்பதை சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள் நிரூபிக்கின்றன. ஏற்கெனவே உடல் அரசியலை முன்வைக்கும் நேரடியான கவிதைகளுக்குப் பழக்கமான நம் வாசகர்களுக்கு, சுகந்தியின் கவிதைகளை உயர்த்திக் கூறுவதாகத் தோன்றலாம். ஆனால், என்னளவில் குடும்பம் என்ற பெண்ணின் மீதான நேரான ஒடுக்குமுறை ஆயுதத்தை இவ்வளவு துல்லியமான காட்சியாக எவருமே எடுத்துவைக்கவில்லை என்பதே இவரது கவிதைகளை நான் முன்மொழியும் காரணம். அதுமட்டுமன்றி, நவீன உடலரசியல் மொழிக்கு முன்பாக, இவ்வரசியலுக்கும் மொழியைத் திறந்து கொடுத்த கவிஞர்களில் முக்கியமானவர் சுகந்தி சுப்ரமண்யன். இவரது கவிதைகளை வாசிக்காமல் நவீனப் பெண் கவிதைகளை வாசிக்க நேர்கையில் பெண் கவிதையின் சாதனை ஏதோ தற்காலத்தியது போன்று தோன்றும் அபாயம் இருக்கிறது.

1988 –ல் அன்னம் வெளியீடாக வந்த ‘புதையுண்ட வாழ்க்கை’ எனும் இவரது கவிதைத் தொகுப்பும், 2003-ல் பதிப்பான ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுப்பான ‘மீண்டெழுதலின் ரகசியம்’ எனும் தொகுப்பும் எவ்வளவு எதிரெதிரான அதே சமயம், ‘புதையுண்ட வாழ்க்கையி’லிருந்து ’மீண்டெழுதலின் ரகசியத்தை’க் கண்டறிந்திருப்பதையும் பாருங்கள். இது இத்தொகுப்புகளின் தலைப்பளவில் மட்டுமல்ல, ஒவ்வொரு கவிதையும் தனித்த அளவிலும் அளவிடமுடியாத துயரத்தைச் சித்தரித்தப் பின்னர், ஒரு மீட்சியைப் பாடி முடிகிறது. அது தன்னளவிலேனும் சாத்தியப்படுகிறதா என்ற அக்கறையுடயதாயும் இருக்கிறது.

எழுத்து

ஆயுதம் தாங்கிய வீரன்
தன் படையுடன் செல்கையில்
கவனம் பிசகாது
அடியெடுத்து வைக்கிறான்.
அவன் பாதங்கள்
எலும்பெண்ணிச் செல்கின்றன
கடவுள்களின் நாமங்களினூடாக.

என்ற கவிதையைப் போல வெகுசில கவிதைகள் தாம் தன் சூழலுக்கு, அதாவது குடும்பம் என்னும் நான்கு சுவர்கள் வரையறுக்கப்பட்ட பிரக்ஞையிலிருந்து வெளியே செல்வதுடன், அர்த்தங்கள் அடுக்கிய கவித்துவம் உடைய கவிதைகளாக இருக்கின்றன.

கண்களுக்குள் காட்சிகள் நிறைந்து போனதால்
இமைக்கமுடியாமல்
தத்திப் பறக்கும் சிறுகுருவி போல்
எனதுள்ளம்.

என்றாலும் அவர் ஆளுமை என்பது குடும்பத்தை நிர்வகிக்கும் ஆளுமையாகத்தான் அவருடைய எல்லா கவிதைகளிலும் தொடர்ந்து ஒலிக்கிறது. அவரது உணர்வெழுச்சி குடும்பத்தின் அதிகாரச் சிக்கல்களையும் சமரசங்களையும் தன் வழியே தீராமல் எழுதிக்கொண்டே செல்கிறது. வேறுபட்ட கதாபாத்திரங்கள், மாமியார், கணவன், பாட்டி, தங்கை, இரவல் கேட்டு வரும் பக்கத்து வீட்டுப் பெண்கள், கருத்தில் மாறுபட்டாலும் நெருங்கிய வேற்றுமதத் தோழிகள், வயிற்றில் கருவுண்ட குழந்தை, கட்டிலில் படுத்திருக்கும் குழந்தை, குழாயில் நீரடிக்கச் சிரமப்படும் தான், அவருக்கு உதவி வாளியில் சந்தோசமாய் நீர்வழியச் செய்யும் தெருச் சிறுவன், அவனை

அதட்டி இழுத்துச் செல்லும் அவன் அம்மா என மத்திய தர வர்க்கத்தினரின் அன்றாடத்தை நிறைக்கும் கதாபாத்திரங்கள் தொடர்ந்து இவர் கவிதைகளின் உள்ளும் புறமும் இயங்கிக்கொண்டே இருக்கின்றனர். கணவனும் குழந்தையும் வெளியே சென்று விட்ட அன்றாடப் பகல் நேரங்களின் மெளனத்தைச் சிந்தனைகளுடன் கழிக்கும் பெண்ணாக மாறிய இவர், ‘தெரியாதவை, உணராதவை எல்லாவற்றிலும் பாதுகாப்பில்லா பயமும் சந்தோசமும்’ தான் ‘தான்’ எனப் பதிவு செய்கிறார். அதே சமயம், குடும்பம் என்னும் அமைப்பால் புறக்கணிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள், குருட்டுப் பெண்களும் இவர் நினைவு வெளியில் உலவுவதைக் கவனிக்கலாம்.

மாதவிடாய், கருவுறுதல், பிரசவ வேதனை போன்ற பெண்ணின் உடலுக்கேயான உடலியங்கியல் நிகழ்வுகளைப் பேசுபொருளாக்கும் ‘உடலரசியல் காலத்திற்கு முன்னமேயே எழுத்தில் கருத்தின் சாரம் குறையாமல், கவனம் குலைக்கும் உத்தி இல்லாமல் முன்வைத்தவர்.

பெண்ணுடல் நிகழ்வுகளிலேயே மிகவும் சமூக இறுக்கம் உடையது பிரசவம் தான். பெண்ணுடலின் இயல்பான நிகழ்வாயும், இயற்கையின் மிக முக்கிய தருணமாயும் உணரப்படவேண்டிய பிரசவம், பிரசவ அறைகளில் பெண்ணுடலின் மீதான சாபமாயும், பெண் மருத்துவர் மற்றும் செவிலியராலேயே அது அருவறுப்பாயும் அதன்வழியாக, பிரசவ இயக்கத்திற்கு உள்ளாகும் பெண் அச்சமுறுவதாயும் இருக்கிறது. இன்று வரை, இதன் சிக்கல்கள் மருத்துவமனை வளாகங்களில் பெருகிக்கொண்டே இருக்கின்றன. பல நேரங்களில், பிரசவ அறைகள் மனநோய் விடுதிகளாகத் தான் என் மருத்துவப் பணி அனுபவங்களில் தென்பட்டிருக்கின்றன.

மெல்ல வந்து கொண்டு
இருந்தது வலி.
பக்கத்து தடுப்பின் வழியே
சின்ன முனகலும், அழுகையும்.
பிரசவ அறையை விட்டு
வெளியே மெளனமாய் நடுப்பகல்
அந்தப் பெண்ணுக்கு சிசேரியனாம்
சிஸ்டர்கள் பேச்சு கேட்டதும்
மெல்ல விழித்து அனுதாபமாய்
ஐயோ என்றேன்.
அடுத்தது நீ என்றாள்.
நர்ஸ் ஒருத்தி.
என் வலியைச் சொல்லுகையில்
அனுதாபப்பட பக்கத்து
படுக்கைக்காரி இருப்பாள்
மெல்லச் சரிந்தேன்
பயத்துடன்.

அறை

அறை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தேவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது.
இந்த அறையில் தான்
வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பி வழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாகவே இருக்கமுடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.


இந்தக் கவிதையில் மெல்ல மெல்ல அறையே உடலாக மாறி, உற்றுநோக்குவதைக் கவனிக்கலாம்.

பெண்ணையே நாம் கண்டதில்லை.
ஆணையே நாம் கண்டதில்லை.
உடல்கள் உடைகளில் மறைந்திருக்க
வயிற்றுக்குள் உணவும் மலமும் கலந்திருக்க
ஒவ்வொரு கடவுளுக்கும்
பண்டிகைக்கு மட்டும் பூஜை செய்ய
சூரியனும் சந்திரனும் கடமையில் இருக்க
அம்மாவுக்காக நான் காத்திருக்க
எனக்காக என் குழந்தைகள் காத்திருக்க…
போதும் ஏக்கம்,
எதுக்கினி இவ்வுடல்?

பெண்களுக்கு ‘நாட்குறிப்பு’ எழுதுவது என்பது மிகவும் பிடித்தமான வேலை. தங்களுக்கென வரலாறும் பதிவுகளும் இல்லாது போனதால், நினைவின்மை என்பதே பெண்களுக்கானதால் நாட்குறிப்பு எழுதுவதை அதிலும் ரகசியமாய் எழுதிவைப்பதை பெண்கள் தமக்கான உத்தியாகக் கொண்டதால் தான் கவிதை எழுதத்தொடங்கினர். பெண்களுக்கே நினைவின்மை என்பதை சுகந்தியின் கவிதை மட்டும் தான் இதுவரையிலான நவீன தமிழ்க் கவிதையில் மிகச்சரியாகப் பதிவு செய்திருக்கிறது. ரகசியங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் ஊடகம் கவிதையே! பெண்களின் உடல் நினைவுகளைச் சேமித்து வைக்கும் கலயமாகவும், நினைவுகளை சேமித்து வைப்பதற்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளே அவர்களுக்கு சாபம் போலவும் இருக்கின்றன. ஆனால், சுகந்தி குறிப்பிடுவதைப் போல் நினைவின்மையைப் பெண்களுக்கு வழங்கும் அரசியலும், மதம், திருமணம், குடும்பம் இவற்றில் நூல் பிறழாமல் நடக்கத் தேவையான ஞாபகங்களும் அதே சமயம் தன்னிடமிருந்து அபகரிக்கப்படும் நினைவுகளும் எனப் பெண்கள் குடும்பத்தின் தூண்டிலில் நிரந்தர இரை.

என் குழந்தையின்
தொப்புள் கொடியை
அறுத்தது யார்?
பாட்டியா? நர்ஸா?
நினைவில்லை.
என் முதல் கர்ப்பம்
பற்றிய முதல் செய்தியை
யாரிடம் சொன்னேன்?
ஞாபகமில்லை.
பள்ளியில் அ.ஆ.இ.ஈ.
கற்றுக்கொடுத்த ஆசிரியர் யார்?
மறந்து போனது.
பள்ளி மைதானத்தில்
விளையாடும்போது ருதுவான கணத்தில்
என் கைபிடித்து சந்தோஷம் கொண்டமுகம்
நினைவில்லை.
சட்டென செத்துப் போன அப்பா
எனக்காய் விட்டுப்போன வார்த்தைகள்
எவை எவை?
நினைவில்லை.
முதல் பிரசவம் குறித்து
பயமுறுத்திச் சொன்னவர் யார்?
மறந்து போனது.
பாஷை புரியாத ஊரில்
புது பாஷையில்
முதலில் கேட்ட பெண்
நீள்கிறது நினைவின்மை
ஏதோ ஒருவகையில்
எல்லாவற்றிற்கும்
முக்கியத்துவம் இருந்தும்.

மத்தியத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகள் அரூபமாகவும் நிரந்தரமாகவும் எழும்பி வருபவை. தோண்டிய பள்ளத்தில் விழுந்த யானையைப் போன்ற அலைக்கழிப்பும் பேதலிப்பும் தருவது. கட்டமைக்கப்படும் குடும்பப்பெருமிதங்கள், வாழையிலையில் விளக்கெண்ணையைத் தடவி நெய்ப்பாயாசம் சாப்பிட்டதாகக் குடும்பத்தை நிமிர்த்தி வைக்கும் சாதுர்யம், காசை எண்ணி எண்ணி காலத்தைக் கழிக்கும் வாழ்க்கை முறை, சிறிய சிறிய நிகழ்வுகளில் தோய்ந்து அலைவுறும் வீட்டின் சூன்யம், வீட்டின் எல்லா பொருட்களும் கருப்பொருள்களாய் உயிர்பெற்று நிழலாடும் சிந்தனை, கணவனை மையமிட்ட குடும்பக் கட்டம், கணவனின் சிந்தனைக்கெட்டாத எதையும் எவரும் சிந்தித்துப் பார்க்கமுடியாத குடும்பத்தினர், இயலாமை, வறுமை, அதை மறைக்கும் பாசாங்கு, கண்ணீரை உள் உறிஞ்சி மறைத்துக் கொள்ளும் போராட்டம் எனக் குடும்பத்தைக் கட்டியெழுப்பவும், அதில் தன் இருப்பை நிழல் தரும் மரமாயும் நிலை நிறுத்திக்கொள்ளவும் போராடிய பெண்கள் தாம் முதல் தலைமுறையாயும், முதல் முறையாயும் குடும்ப அமைப்பை விமர்சித்தவர்கள்.

எனது சூரியன்

பொழுதுகளின் விளையாட்டில்
சிக்கித் தவிக்கும் பொம்மையாய்
அலறுகிறது குழந்தையின் துக்கம்.
ஏதும் நினைத்தபடியற்றுத் தவித்து
வெற்று எண்களைக் காகிதத்தில் எழுதி
வானத்தில் பறக்கவிட்டேன்.
எங்கே தொலைந்தாய் என
உன்னை நானும் என்னை நீயும்
கேட்டுத் தொலைக்க
சிரித்தபடி சிவக்கும் சூரியன்
மேலெழுவான் ஓர் ஓரமாய்.
சிந்தையற்று அமர்ந்திருந்தால்
சுளீரென அடித்து
பிரக்ஞையுடன் பேச வைப்பான்.
இழந்து போன நிமிடங்களை
எண்ணிக் கணக்கிட நிமிர்ந்தால்
நிகழ்காலம் பலியாகிறது.
அடுப்பின் ஓரம் முகம் சிவக்க அமர்ந்தேன்.
செத்துப் போனவர்களின் புகலிடம்
மீளவேண்டும் என்றேன்.
ஓர் இடமும் பாக்கியில்லையென்றான்.
கண்ணீர் வற்றிக் காய்ந்துபோன
கண்களை
மீட்டுத்தர முடியாதா என்றேன்.
கவலையுடன் அவனும் சிரித்தான்.
நீர் கண்டு விரைந்தேன் அது
கானல் நீரெனத் தெளிந்தேன்.
எழுதுகின்ற வேளையும்
நான் மறந்திருந்தால் என்னை
நினைவூட்டும் சூரியன்
எங்கு சென்று தொலைந்தான்.
பாடலின் தெளிவு
ஆரம்பம் ஆகிறது
உன்னை நானும்
என்னை நானும் வென்றெடுக்கலாம்.
எதிர்க்கின்ற வேளையும்
தொலைந்து போக
மீதியிருந்தவன் ரகசியம்
எனக்குள் உதயமாகவில்லை இன்னும்.
சூரியனோ மெல்லச் சிரித்தபடி
மெதுவாய் வருகிறான்.
தீராக்காதல் கொண்டேன்
ஆசை கொண்டேன். அவனுள் செல்ல
அனுமதிக்குமோ காலம்.

வெறுமனே துயரைப் பாடுவது மட்டுமன்று, படைப்பாளுமை. அதிலிருந்து மீண்டு எழுதலையும் பாடி எழுப்ப வேண்டும். சுகந்தி சுப்ரமண்யம் தன் சொந்தத் துயரையெல்லாம் வெறுமனே கோழைத்தனமாகத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல், பொதுத்துயராக்கினார். நெடிய தன் தனிமையான ஒற்றைக் குரலால் தொடர்ந்து எழுதினார். குடும்பம் எனும் தொடர் இயந்திரம் உருவாக்கிய மனப்புழுக்கத்தால் பீறிட்ட தகிப்பையும், கொதிநிலையையும் தன் கவிதைகளில் நிறைப்பதன் வழி, எப்பொழுதும் அவற்றை உதிர்த்து விடுதலையேகும் பயணத்தில் தீவிரமாயிருந்தார். 2009 –ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13–ம்தேதி மறைந்தார். தன் வாழ்வு முழுதும் தீரா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறுகின்றனர். தன் துயரத்தைத் தானே தின்று மாயாது பதிவு செய்த பெண்களெல்லாம், இவ்வாறு அடையாளப்படுத்தப்படுவதுதானே அரசியல்!

------------------------------------------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு; சுகந்தி சுப்ரமண்யத்தின் முதல் தொகுப்பு, புதையுண்ட வாழ்க்கை (1988), மொத்தக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு (2003)- ல், மீண்டெழுதலில் ரகசியம் எனும் நூலாய் வெளியானது.

‘தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு’ அவரது கவிதையில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை வரி.





நல்லதோர் வீணை செய்து



நல்லதோர் வீணை செய்து

அறிமுகக் கூட்டம்

நல்லதோர் வீணை செய்து - தமிழ் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை குறும்படமாக வடித்து, மக்களிடையே கொண்டு செல்வது இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இலக்கியமும், ஊடகமும் ஒரு சேர, ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வாய்ப்பு அமையும். இதன் பிரதிபலனாக சிறந்த படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும் தமிழ் ஸ்டுடியோவின் கிராமத் திரையிடலில் இந்தக் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களிடையே கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் மூலம் ஓரளவேனும் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் வாய்ப்பு கிட்டும்.

இந்த திட்டத்திற்காக மிக தீவிர வாசிப்பு பழக்கம் உள்ள பத்து ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி அன்று ஒரு அறிமுகம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போக்கு மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார் 13 மேற்பட்ட ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இதன் படி திரைக்கதை அமைக்க இருவர், ஒளிப்பதிவு பணிக்கு இருவர், இயக்கம் இருவர், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியளிக்க ஒருவர், இடங்களை தெரிவு செய்ய ஒருவர், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு பணிகளை செய்ய இருவர் என குழுப் பிரிக்கப்பட்டது. இந்த மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அவர்களுக்கான பயிற்சி தொடங்கப்படுகிறது. திரைக்கதை அமைத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த திட்டம் அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். பயிற்சி மற்றும் குறும்பட உதவிகள் தமிழ் ஸ்டுடியோ மூலம் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

ஆர்வலர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட துறை, அவர்கள் பற்றிய முழு விபரங்கள் ஆகியவை விரைவில் வெளிவரும்.

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs.php





தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 13வது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 13வது பௌர்ணமி இரவு

(13th Full Moon Day Film Screening)


18-02-2011


வெள்ளி, 18-02-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

வணக்கம் நண்பர்களே,

இது பௌர்ணமி இரவின் இரண்டாமாண்டு தொடக்க விழா..

குறும்படங்களுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை "குறும்பட வட்டம்" நடத்திய போதும், மாற்று திரைப்படம் சார்ந்த ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்த அது போதுமானதாக இல்லை. மேலும், திரைப்படம் என்றாலே இருளின் பிரம்மிப்பில் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில்தான் காண நேரிடுகிறது. இதுப் போன்ற நிலைகளை தவிர்த்து அவரவர் தன் விருப்பபடி, படுத்துக் கொண்டும், சாய்ந்துக் கொண்டும், எவ்வித இறுக்கமும் இல்லாமல் இரைச்சல்கள் அடங்கிய ஒரு இரவு நேரத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் எடுக்கப்பட்ட மிக சிறந்த திரைப்படங்களை கண்டு நல்ல திரைப்படத்திற்கான புரிதலை உருவாக்கி கொள்ளும் எண்ணத்துடன் பௌர்ணமி இரவு தொடங்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாதமும், தமிழில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த குறும்படமும், உலக அளவில் எடுக்கப்பட்ட சிறந்த உலகப் படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சில மாதங்கள் சிறப்பு விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை அழைப்பதில் இருந்த சிக்கல்களால் பௌர்ணமி இரவு வாசகர்களே திரைப்படங்களை பார்த்து அதுபற்றி மிக பெரிய அளவில் கலந்துரையாடும் நிகழ்வாக மாறியது.

இதில் உச்சக்கட்டமாக ஒவ்வொரு மாதமும் "நிலாச்சோறு" என்கிற உணவு உபசரிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. மொட்டை மாடியில், இதமான தென்றலின் இம்சையில், முழு நிலவை ரசித்தவாறே நமக்கு பிடித்த திரைப்படங்களை பார்த்துக் கொண்டே, மூலிகை செடிகளின் வாசத்தில் உணவருந்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. தொடங்கி ஒரு வருடத்திற்குள் பத்திரிகை நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும், ஆர்வலர்களும் கொடுத்த வரவேற்பு மிக பெரியது.

கத்திரி வெயில், அடைமழை, பேய்க்காத்து, கடுங்குளிர் என எந்த ஒரு சீதோசன நிலையிலும் திறந்த வெளியில் நடத்தப்படும் இந்த பௌர்ணமி இரவு ஒரு மாதம் கூட நிறுத்தப்படாமல் 12 மாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. உங்களின் அதே ஆதரவை எதிர்வரும் மாதங்களிலும் கொடுத்து இந்த பௌர்ணமி இரவு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

சென்னையின் மையபகுதியில், மரங்கள் அடர்ந்த ஒரு மொட்டைமாடியில், சுற்றிலும் மூலிகை செடிகளின் வாசத்தில், புல்வெளியில் அமர்ந்துக் கொண்டு, ஒத்த உணர்வுள்ள நண்பர்களுடன் நமக்குப் பிடித்த திரைப்படங்களை பார்த்து, அது பற்றி விவாதத்தில் கலந்துக் கொண்டு, இந்த நிலாச்சோற்றை ருசிக்க வாருங்கள். நீங்களில்லாமல் எந்த ஒரு நிகழ்வும் வெற்றி பெற சாத்தியமில்லை. உங்களை இனிதே எதிர் நோக்குகிறோம்.

இந்த மாதம் திரையிடப்படவிருக்கும் படங்கள்:

இந்த மாதம் தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ராஜாங்கத்தின் முடிவு, அருள் எழிலன் இயக்கிய இந்தக் குறும்படம் சதத் ஹசன் மாண்டோவின் சிறுகதையை அப்படியே பிரதிபலித்து எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு, நம்முடன் உரையாட தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வரவிருக்கிறார்.

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்:செவன் சாமுராய் (அகிரா குரோசோவா)

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt0047478/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முதலாமாண்டு நிறைவு விழா, இரண்டாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்த மாதம் ஒரு குட்டி உணவுத் திருவிழாவே நடக்கவிருக்கிறது. வகை வகையான உணவினை ருசிக்க, சிறந்த திரைப்படங்களைக் கண்டு ரசிக்க வாருங்கள் நண்பர்களே...

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268



Tuesday, February 15, 2011

சொல்லின் வனப்பே வனப்பு - 1



சொல்லின் வனப்பே வனப்பு - 1

கவிஞர் சுகுமாரன்

தி.ஜானகிராமன் 'எழுதுவது எப்படி?' தொகுப்பு நூலின் முதல் பாகத்தில் சிறுகதை எழுதுவதைக் குறித்த கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 'யாராவது சிறுகதை எழுதும்படிச் சொன்னால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதுபோல ஆகிவிடுகிறது.' இந்த வரிகளை எழுதிய தருணத்தில் அவர் தன்னுடைய மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதி முடித்திருந்தார். தமிழில் மிக முக்கியமான சிறுகதையாளர்களில் ஒருவராகப் பாராட்டுப் பெற்றிருந்தார்.அவரது வயிற்றுக் கலக்கத்துக்குக் காரணம், தனது ஊடகத்தின் இலக்கணம் புரியாதது அல்ல; பொதுவாக படைப்பாளிக்கு நேரும் மனச்சிக்கல்தான் அந்த வரிகளுக்குப் பின்னாலிருப்பது. ஒரு நல்ல படைப்பை உருவாக்கிய எழுத்தாளனிடம்/ கவிஞனால் அந்தப் படைப்புக்கு ஆதாரமாக இருந்த உணர்வெழுச்சியையும் பின்புலத்தையும் அது உருவான விதத்தையும் பற்றிப் பேச முடிகிறது. ஆனால்,அது எப்படி நல்ல படைப்பு என்ற கேள்விக்கு எல்லாரும் ஏற்கும்படியான விடையைக் கண்டுபிடிப்பது கடினம். என்னுடைய மிகச் சிறந்த கவிதையை இன்னும் கண்டடையாத நிலையில் கவிதையைப் பற்றிப் பேசும்போது எனக்கும் இந்த மனக் கலக்கம் இருக்கிறது.

எது கவிதை? என்று விளக்குவது எளிதல்ல என்று எண்ணுகிறேன். வேறு எந்த இலக்கியப் பிரிவை விடவும் கவிதைக்குத்தான் ஏராளமான அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை ஒவ்வொன்றும் அந்தந்தக் கவிஞனின் எதிர்பார்ப்பைச் சார்ந்தது. (பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்' - பாரதி), அவனுடைய ஊடகப் புரிதலைச் சார்ந்தது ('என்னை அழிக்க யாருண்டு/ எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்' - சுந்தர ராமசாமி).அவனுடைய நோக்கங்களைச் சார்ந்தது (சிந்தனை/தெளிவு/ சிக்கனம்/ஆனந்தம்/கவிதை - ஞானக்கூத்தன்) சமயங்களில் அவனுடைய மிகையுணர்வைச் சார்ந்தது ('இந்த பூமி உருண்டையைப் புரட்டி விடக் கூடிய நெம்புகோல் கவிதை' - மு.மேத்தா). இவ்வளவு வகைப்பாடுகளை முன்வைப்பதை விட எது கவிதையல்ல என்று சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால் அந்த விளக்கமும் தற்சார்பானது.

பத்திரிகையாளனாக இருந்த நாட்களில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தன்னைப் பற்றி எழுதக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். அவருடைய விசித்திரமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எழுத வேண்டும். அவருடைய அன்றாட உணவு கல்லும் மண்ணும் சவரத் தகடுகளும். நம்மைப் பொறுத்து அவையெல்லாம் உணவே அல்ல. ஆனால் அவருடைய உணவுப் பழக்கத்தைக் குறைகூற நம்மால் முடியாது. அதை விசித்திரமான பழக்கம் என்று விலக்கி வைக்கிறோம். உணவுப் பழக்கம் பற்றிய பேச்சில் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை.மாறாக மனிதர்கள் உண்ணும் உணவைக் குறித்தே நாம் பேசுகிறோம். இலக்கியத்துக்கும் குறிப்பாகக் கவிதைக்கும் ஓர் இலக்கியப் பொது மரபு இருக்கிறது. விவாதங்கள் அதையொட்டியே அமைகின்றன. இந்த மரபு சமூக நகர்வுகளையும் மொழியில் ஏற்படும் மாறுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இதிலிருந்துதான் கவிதைக்கான மொழி - கவிதை மொழி (Poetic Idiom) உருவாகிறது. இதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஒரு புதிய வாசகன் கவிதையை அதன் புற வடிவம் சார்ந்தே அணுகுகிறான். அவனுக்குத் தகவல்கள் தரும் ஒரு வடிவத்திலிருந்து வேறுபட்ட ஒன்றையே அவன் கவிதையாகக் காண்கிறான். 'டாலிஸ்மான்' என்ற ஆங்கிலச் சிறு பத்திரிகையின் சமீபத்திய இதழில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. அதன் மொழிபெயர்ப்புப் பின் வருமாறு:

ஒன்று இரண்டு மூன்று
நான்கு ஐந்து ஆறு
ஏழு எட்டு ஒன்பது
பத்து பதினொன்று.

இதைச் சட்டென்று பார்க்கும்போது தென்படும் புற வடிவம் கவிதை என்று சந்தேகம் கொள்ளச் செய்கிறது.அப்படிச் சந்தேகப்படும் பிராணியே கவிதைக்கான வாசகன்.

கவிதையில் உருவம் உள்ளடக்கம் என்று பேசப்படுபவை இந்தப் புறவடிவம் சார்ந்ததல்ல. இது பற்றிய மயக்கம் கவிதை எழுதுபவர்களுக்கும் கவிதையை ஆய்வு செய்பவர்களுக்குமே இருக்கிறது.

தமிழில் புதுக் கவிதை அறிமுகமானபோது நிகழ்ந்த விவாதங்கள் அனைத்தும் இந்தப் புற வடிவம் சார்ந்ததாகவே இருந்தது என்று இப்போது தோன்றுகிறது. புதுக்கவிதை மரபுக்கு எதிரானது என்று பண்டிதர்களும் கவிதைக்கு மரபு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நவீனர்களும் முட்டிக் கொண்டனர். இருதரப்பினரும் செய்யுள் என்ற புற வடிவத்தையே முன்வைத்துச் சர்ச்சையில் ஈடுபட்டார்கள் என்று இப்போதைய சிந்தனையில் புலனாகிறது. இருதரப்பினரும் அவரவர் பக்கத்து வாதங்களை வைத்தனர். புலமையாளர்கள் நவீனர்களை இலக்கிய விலக்குச் செய்தனர். புலமையாளர்கள் சொல்வதில் பொருள் பொதிந்த ஏதாவது இருக்கலாமோ என்ற சந்தேகம் கொண்ட நவீனர்களில் சிலர் 'எங்களுக்கும் யாப்பிலக்கணம் தெரியுமாக்கும்' என்று நிரூபிப்பதற்காக மரபு வடிவில் எழுதவும் முயன்றார்கள். புதுக்கவிதை முன்னோடியான ந.பிச்சமூர்த்தி ''குயிலின் சுருதி' என்ற செய்யுள் தொகுப்பையே வெளியிட்டார். இந்த விவாதத்தில் கவனம் கொள்ள வேண்டிய அம்சங்கள் இரண்டு. ஒன்று: கவிதை என்பது வடிவம் சார்ந்தது மட்டுமல்ல. அது சிந்தனையும் உணர்வும் சார்ந்தது. இரண்டு: ஒவ்வொரு காலப் பகுதியிலும் எந்த இலக்கிய நடைமுறை பரவலாக இருக்கிறதோ அதில்தான் படைப்புகள் உருவாகும். நவீன காலத்தின் நடைமுறை உரைநடையைச் சார்ந்தது. எனவே கவிதை உரைநடையில் எழுதப்படுவதே பொருத்தம். தவிர தமிழில் இதுவரை எழுதப்பட்டிருக்கும் இலக்கணம் செய்யுளுக்கானது. அதில் புதிய நடைமுறையைப் பொருத்திப் பார்ப்பது வியர்த்தம். இந்த நுட்பம் புரியாமல் போனதன் மூலமே வரிகளை மடக்கிப் போட்டால் அது புதிய கவிதை என்ற நம்பிக்கையும் அவநம்பிக்கையும் உருவானது.

ஆனால் கவிதை இதைக் கடந்தது. ஒரு மொழியின் உள்ளார்ந்த மரபு எப்போதும் புதுமையையே வேண்டி நிற்கும். வடிவத்திலும் சிந்தனையிலும் புதியவற்றுக்கே இடம் கொடுக்கும். அவையே படைப்பு என்று அறியப்படும். இது மொழியியல்பு. ஒரு மனிதன் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபட்டவனாக அறியப்படவும் அறிவிக்கவுமே விரும்புவான. இது மனித இயல்பு. இவைதாம் கவிதையைத் தூண்டும் கூறுகள்.

மரபான செய்யுள் வடிவம் அளித்ததை விட உரைநடை வடிவம் இலக்கணம் பயின்றிராத ஆர்வலனுக்குத் தன்னுடைய சிந்தனையை, உணர்வைக் கவிதையில் எழுதும் சுதந்திரத்தைத் தந்தது. இந்த அர்த்தத்தில் புதிய கவிதை ஜனநாயகத்தன்மை கொண்டது. அந்த ஜனநாயகத்தன்மையே கோளாறுகளையும் கொண்டு வந்தது. எல்லாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பது சுதந்திரம். சமூக நோக்குள்ளவர்கள் ஈடுபட வேண்டும் என்பது பொறுப்பு. சமூகத்தைச் சுரண்டுபவர்களும் ஈடுபடலாம் என்பது குறைபாடு. எல்லாரும் கவிதை எழுதலாம். ஆனால் அதிலும் கவிதையும் கவிதைப் போலிகளும் உள்ளன. அதை இனங்காண முடிகிற ஆர்வலனே கவிதையை வாழச் செய்கிறான். சரி, ஒரு கவிதையை இனங்காண்பது எப்படி?

தந்தையே,
நீங்கள் கொடுத்து சென்றது
அட்சயபாத்திரம்
எங்கள் கையில் இருப்பதோ
பிச்சைப்பாத்திரம்.

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல்தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒருபிடி நிலம்.

மேலுள்ள இரண்டு பகுதிகளில் எதைக் கவிதை என்பீர்கள்?


from :





Monday, February 14, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (17)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (17)

வெங்கட் சுவாமிநாதன்

தமிழ் சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும் நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள, எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும், வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும், கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன். ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள் அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள். வோட்டுக்களும் பிராபல்யமும் நம் ஜனநாயகத்தைத் தீர்மானிப்பதால், சினிமாவின் அவலங்கள் அரசியலுக்கும் அரசியலின் அவலங்கள் சினிமாவுக்கும் பரவி ஒரு மட்டத்தில் இது சினிமாவா இல்லை அரசியலா என்று இனங்காட்டி பிரிக்க முடியாதவாறு ஒன்று கலந்து விட்டதையும் பார்க்கிறோம். பராசக்தி படத்தை இன்றும் ஒரு மைல்கல்லாக, ஒரு க்ளாசிக் என்று தான் மதிப்பிடுகிறார்கள். அந்தப் படம், கோர்ட்டில் சிவாஜி கணேசனின் உரத்த வாக்குமூலம் சினிமாவா, அரசியலா? அதை எழுதிய போது கருணாநிதி அரசியல் வாதியாக தன்னை எண்ணிக்கொண்டாரா, இல்லை சினிமா கதையாசிரியராகவா?

இன்று காலை தற்செயலாக விவேக் ஒரு படத்தில் அந்த கோர்ட் பிரசங்கத்தை ஒட்டி மூச்சு விடாமல் 15 நிமிஷம் கதறித் தள்ளிய காட்சியைப் பார்த்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. அது நகைச்சுவைக் காட்சிகளையே கொண்ட ஒளிபரப்புப் பகுதி. சாதாரணமாக விவேக்கின் காமெடி எனக்குப்பிடிக்காது ஆனால் அவர் திறமை இந்தக் காட்சியில் எனக்குப் பிடித்ததாக இருந்தது.. அதே உரத்த குரல், அதே கேள்விகள், அதே பதில்கள் அதே அடுக்கு மொழிகள். நகைச்சுவைப் பகுதியாதலால் அது கிண்டல் என்று எனக்கு மாத்திரம் அல்ல, தொலைக்காட்சிக்காரர்களுக்கும் அது கிண்டல் வகையைச் சார்ந்ததாகத் தான் பட்டிருக்க வேண்டும். அது கிண்டல் தான் என்றால், அந்தக் கிண்டல், சிவாஜி கணேசனின் நடிப்பைக் கிண்டல் செய்ததா. இல்லை, அந்த புகழ்பெற்ற அறைகூவலைக் கிண்டல் செய்தாரா, இல்லை பாராட்டுதலாகத்தான் காப்பி அடித்தாரா? அது சினிமாவா? இல்லை, அரசியலா? அதைப் பாராட்டு என்று நினைத்துத்தான் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கு உரியவரானாரா? உலக நாயகன் பராசக்தி வசனத்திலிருந்து தான், தான் சினிமா நுணுக்கங்களையும் தமிழையும் கற்றதாகச் சொல்லும் போது, அது அரசியலா, இல்லை சினிமா ரசனையா? முதல் அமைச்சர் நினைத்த போதெல்லாம் சினிமாக் காரர்களுக்கு சலுகைகளாக வாரி வழங்கிக்கொண்டு வருகிறாரே, அந்த ஒவ்வொரு சலுகை அறிவிப்பும் அவருக்கு சினிமாககாரர்கள் தரும் பிரம்மாண்ட பாராட்டு விழாவில் முடிகிறதே, அந்த ஒவ்வொரு பாராட்டு விழாவும் அனேகமாக நாள் முழுதும் நீடிக்கும் குத்தாட்ட விழாவாகவே முடிகிறதே, அது சினிமா ரசனையா?, இல்லை அரசியலா? இல்லை நாள் முழுதும் குத்தாட்டம் பார்க்கக் கிடைத்த ஒரு வாய்ப்பா? இல்லை அது குத்தாட்ட அழகிகள் தமிழக அரசியலுக்குத் தரும் பங்களிப்பா? தமிழகத்தில் இலக்கியம் மாத்திரம் அல்ல, சினிமா, அரசியல், பாராட்டுவிழா, குத்தாட்டம் எல்லாமே பன்முக பரிமாணம் பெற்றுத் திகழ ஆரம்பித்துவிட்டனவே, இதுவே தமிழ்க் கலை வாழ்க்கையில் எல்லோரும் எப்போதும் சொல்லிப் பெருமைகொள்ளும் பொற்காலத்தில் வாழ்கிறோமோ ஒருவேளை?

கடந்த பகுதியில் நான் உலக நாயகனையும் சூப்பர் ஸ்டாரையும் மாத்திரம் எடுத்துக்கொண்டு சில அபிப்ராயங்களைச் சொன்னேன். அவர்களை இரண்டு பெரும் பிரிவுகளுக்கு பாரிய உதாரணங்களாகத் தான் எடுத்துக்கொண்டேன். இடைப்பட்ட பல புள்ளிகளும் உண்டு. அவர்களைப் பற்றி நான் பேசாததால், அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அர்த்த மில்லை. ஒவ்வொருவரிடமும் உலக நாயகனின் தன் மிதப்பும், உண்டு. சுப்பர் ஸ்டாரின் சாகஸக்காட்சிகளும் கொஞ்சம் கூட குறைய உண்டு. யாரையும் நடிகர் என்று சொல்ல லாயக்கில்லை

ரசிகர்களின் கனவுலகப் பிரமைகளுக்கும், மூடை மூடையாக பணம் பண்ண வந்த தயாரிப்பாளர்களின் கயிற்றசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைகள் தான். தயாரிப்பாளர்களும் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற உலக நாயகன், சூப்பர் ஸ்டார் ஆகிய இரண்டு பெரும் மாடலகளின் லீலைகளை வசதிக்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து உபயோகப் படுத்திக்கொள்வார்கள். ஆக, இதைச் சொல்ல ஒவ்வொருவரையும் பற்றி விளாவாரியாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு பலர் பின்னோட்டமாக எழுதும் அபிப்ராயங்களைப் படிக்கும் போது, நான் எழுதுவதை அவர்கள் எதிர்கொள்வதே இல்லை என்று தெரிகிறது. சூப்பர் ஸ்டாரை, நான் தனிமனிதராக மதிக்கிறேன் என்று சொல்லி விட்டதில் அவர்கள் புளங்காகிதமடைந்து விடுகிறதைப் பார்க்கிறேன். அவர்களுடைய பாலாபிஷேக மூலமூர்த்தியைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்லி விட்டேனே, அது போதும் அவர்களுக்கு. சூப்பர் ஸ்டாரை யாரும் முக்கியமாக மதிக்க வேண்டியது அவரிடம் இருந்திருக்க வேண்டிய, ஆனால் இல்லாது போய்விட்ட அவரது நடிப்பாற்றலுக்காகத்தான்., அவர் தன் சினிமாக்களில் முன் வைத்திருக்க வேண்டிய சமூக மதிப்புகள் சார்ந்த பார்வைக்காக. வாழ்க்கை விமர்சனத்துக்காகத்தான்.

கலை சார்ந்த இந்த குணங்களுக்காகத்தான், எந்தக் கலைஞனும் பாராட்டப்பட வேண்டியவனாகிறான், அவன் எந்தக் கலைத்துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி. அப்போது தான் அவன் கலைஞனாகிறான். இதே போலத்தான் உலகநாயகனின் பக்த கோடிகளும், கமலிடம் நடிப்புத் திறமையைக் காண்கிறேன் என்று சொல்லிவிட்டேன். உடனே, கமலைப்பாராட்டி விட்டேன் என்று ஆற்றில் மிதக்கிறவனுக்கு பற்றிக்கொண்டு மிதக்கவாவது ஏதோ கிடைத்துவிட்ட பரவசத்தில் காவடி எடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவரது நடிப்புத் திறன் சுயமோகத்தில் தன் கலையையும் இழந்து, முதலும் முடிவுமாக தன் மனிதத்துவத்தையும் இழந்து ஒரு அருவருக்கத் தக்க ஆபாச கலாசாரத்தில் தானும் மூழ்கி தமிழ் சமுகத்தையும் மூழ்க அடித்துவிட்டதாக நான் குற்றம் சாட்டியதை இவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதைத் தான் மிக ஆபாசமான சினிமா, அரசியல் கலாசாரம் என்று சொல்கிறேன்.

இப்படி தன் ஆபாசத்தைப் பற்றி ஏதாவது ஒரு நல்ல வார்த்தையாவது கிடைக்காதா என்ற தவிப்பு தான் இவர்களை தமிழ் சினிமா மாத்திரமா இப்படி?, இதே ஃபார்முலா தானே ஹிந்தி சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் என்று கேட்கும் பரிதாபம் நேர்கிறது. வாஸ்தவம். தெலுங்கு சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வேளை இன்னம் மோசமாகக் கூட இருக்கும் என்கிற சாத்தியத்தையும் நான் மறுக்கவில்லை. கன்னட சினிமாவிலும் தமிழ் சினிமாவின் கூறுகள் உண்டு. அதன் வெகுஜன சினிமாவும் தமிழ் சினிமாவைப் போல் தான். அங்கும் ஒரு ராஜ் குமார் உண்டுதான். நடிகர் திலகங்களும் சூப்பர் ஸ்டார்களும் நம் தமிழ் நாட்டுக்கே தரப்பட்ட ஏக போக குத்தகை அல்லர். ஆந்திரா என்.. டி ராமராவுக்கு கோவில் கட்டிய கலாசாரம் தான் தமிழ் நாட்டு சினிமா கலாசாரம் முழுதுமாக வெகுஜன கவர்ச்சி பெற்ற இடம் தான் அது. தமிழ் நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் சினிமா இன்னும் பல விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் நிறையவே இருக்கின்றன, இது ஆந்திரா, இது தமிழ் நாட்டு சமாசாரம் என்று பிரித்தறிய முடியாதவாறு. ஆனால் அங்கு ஒரு குக்குனூரையும் காணலாம். அவருடைய ஹைதரபாத் ப்ளூஸ், இக்பால், ஆஷாயே(ன்) போன்ற படங்கள் தமிழ் சினிமா போன்ற ஒரு அருவருக்கத்தக்க ஆபாச கலாசாரத்திலிருந்து மீண்டு இங்கு வித்தியாசமாக சிந்திப்பவர்களும் உண்டு, சூழலை மாற்ற வேண்டும் என்ற ஆசையில் தன் எளிய ஆரம்ப முயற்சிகளை இந்த படங்களில் காணலாம். அங்கு ஒரு ராம் கோபால் வர்மாவையும் காணலாம். அவர் ஹிந்தி சினிமாவின் ஃபார்முலாவை முழுமையாக ஸ்வீகரிக்காமல், முற்றாகவும் விலக்காமல், அதே சமயம் வித்தியாசமான கதைகளையும், வித்தியாசமான கதை சொல்லும் பாணியையும் கையாண்டு, ஃபார்முலாவுக்குப் பழக்கப் பட்டவர்களை சினிமா தியேட்டருக்குள் அழைத்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை ஒரு இரண்டும் கெட்ட நிலையில் சினிமா கலாசாரத்தை நகர்த்திக்கொண்டு செல்கிறார்.

அது அவரால் ஹிந்தி சினிமாவில் செய்ய முடிகிறது என்றால்; அதற்குக் காரணம், ஹிந்தி சினிமாவின் ஒரு சத விகித பார்வையாளர்கள் இதற்குப் பழக்கப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதற்கு அவர்களைத் தயார் செய்தது, ஆரம்ப காலத்தில் ஜோகன் பற்றிச் சொன்னேனே, அதைத் தொடர்ந்து பிமல் ராய், கமால் அம்ரோஹி போன்றவர்கள் தமக்கென ஒரு சாத்தியப்பட்ட வித்தியாசமான ரசிகர் கூட்டத்தை உருவாக்க முயற்சி செய்ததும் அவர்களைத் தொடர்ந்து, ஷ்யாம் பெனெகல் போன்றோ ஒரு இடைப்பட்ட சினிமா கலாசாரத்தை உருவாக்கியதும் தான். ஒரு சினிமா கலாசாரத்தில் எல்லா தயாரிப்பாளர்களும், 150 கோடி ரூபாய் முதலீடு செய்து 300 கோடி சம்பாதிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு சினிமா நடிகரும் தனக்கு 10 கோடி 25 கோடி சம்பாத்தியம் தரும் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்றும், தன் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும், மொட்டை அடித்துக்கொண்டும் காவடி எடுத்துக்கொண்டும் தன் பட ரிலீஸ் கொண்டாடப்பட வேண்டும் போன்ற கனவுகளுடன் தமிழ் சினிமா ரசிகர்களை அதல பாதாள சாக்கடைக்குள் தள்ளிக்கொண்டே இருப்பார்களானால், அதுவே நம் சினிமா கலாசாரமும்.

ஆனால், ஒரு ராம் கோபால் வர்மாவையோ, குக்குனோரையோ நாம் நம் தமிழ் சினிமாவில் காண இயலாது. தெலுங்கில் இல்லையா?, ஹிந்தி சினிமாவில் என்ன வாழ்ந்தது? என்று கேள்விகள் எழுப்புகிறவர்கள் எல்லாம் ஏன் வங்காளத்தையோ, மலயாளத்தையோ, கர்நாடகாவையோ குறிப்பிடவில்லை. இந்தியா முழுதிலும் ஒவ்வொரு இடத்துக்கும் உரிய ஃபார்முலாக்கள் உண்டு தான். இதையும் ஒரு பெரிய சூதாட்ட வியாபாரமாக சரக்கு உற்பத்திக்களமாக ஆக்குகிறவர்கள் உண்டு தான். வங்காள சினிமா முழுதுமே சத்யஜித் ரேயும், ரித்விக் காடக்கும், அபர்ணாசென்னும், ரிதுபுர்ணோவும் மிருணால் சென்னுமாக நிறைந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வங்காளியும் பேசுவது பெருமை கொள்வது, உலக அரங்கில் தன்னது என்று முன் வைப்பது இவர்களைத் தான். அந்த ஊரிலேயும் சிம்புவும், பீம்சிங்குகளும், சரோஜா தேவிகளும், உண்டு தான். அவர்கள் தேவகி போஸும் ரித்விக் காடக்கும் வாழ்ந்த இடத்தில் தம் கடை பரப்பக் காரணம், ராஜ்கபூர், தேவ் ஆனந்து, ராஜேஷ் கன்னாக்களும் கல்கத்தா தியேட்டர்களுக்கு நுழையவே அவர்களுக்கான மார்க்கெட்டும் அங்கு உருவாயிற்று. அவர்கள் நுழைந்ததும் அந்த ரக சரக்குகளைத் தவிர வேறு எதையும் சந்தைக்குள் நுழைய விடாது வங்க சினிமா கலாசாரமே ராஜேஷ்கன்னா, மும்தாஜ் கலாசாரமாகிவிடவில்லை. இப்போதும் சத்யஜித் ரேயும் மிருணால் சென்னும் உருவாக்கிய சினிமா ஒரு வாழும் மரபாக, வளமான மரபாகத் தொடர்கிறது. இன்றும் அங்கு ஒரு ரிதுபூர்ண கோஷைக் காணலாம்.

இப்படித்தான் ராஜ் குமார் வகையறாக்கள் சூப்பர் ஸ்டார் ஆன போதிலும், ராஜ் குமார் பெயர் சொன்ன மாத்திரத்தில் கன்னட சினிமாவே வெறிபிடித்து சாமியாடத் தொடங்கினாலும், அங்கு ஒரு கிரீஷ் காஸரவல்லியும் உண்டு. அவர் போல கர்னாட், பி.வி. காரந்து என்று ஒரு சிறிய கூட்டம் உண்டு. ராஜ் குமார் பக்த கோடிகள் வேறு யாரையும் வாழவிடாது செய்துவிடவில்லை.

மலையாள சினிமாவைப் பற்றி கமல் சாரின், ரஜினி சாரின் பக்த கோடிகள் பேச்சு எடுக்கவில்லை. வங்க சினிமாவைக் கெடுத்த ஹிந்தி சினிமா பற்றிச் சொன்னேன். அது போலத்தான், மலையாள சினிமாவைக் கெடுத்ததும் தமிழ் சினிமா கலாசாரம் தான். அங்கும் குத்தாட்டங்களும், ஸ்டண்ட் காட்சிகளும் மலையாள வெகு ஜன சினிமா கலாசாரமாகிவிட்டது தான். ஆனால், அங்கு ஒரு தனி உலகம் உண்டு தான். அந்தத் தனி உலகத்துக்கும் மலையாள சந்தையில் இடம் உண்டு. அது இன்னமும் தன்னை தமிழ் சினிமா ஆபாசத்துக்கு முற்றிலுமாக இழந்து விடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், மம்மூட்டியும், மோகன்லாலும் தமிழ்ப் படங்களிலும் நடித்தாலும், தமிழ்ப் படங்களில் எப்படி மிகையாக நடிப்பதும், தமிழ் சினிமாக் கதைகளே எல்லாம் கார்ட்டூன்களாக மிகைகளாகத் தானே. சீரழிந்துள்ளன. அவற்றில் இயல்பான வாழ்க்கையின் அழகும், உயிர்ப்பும் ஏது? சிவாஜி கணேசன், தமிழ் சினிமா ரசிகர்களைக் குஷிப் படுத்தி, குஷிப்படுத்தி தன் வாழ் நாளில் பெரும்பகுதியைக் கழித்த காரணத்தால், அந்த அபத்த மிகை நாடகத் தனம் அவரை நடிகர் திலகமாகவும் ஆக்கிவிட்ட கள் மயக்கத்தில், சினிமா ஷூட்டிங்குக்கு வெளியே உள்ள உலகத்திலும், சாதாரண வாழ்க்கையிலும் சினிமாவில் நடிப்பது போன்ற நாடக பாவனையில்தான் நடப்பார், பேசுவார் முக பாவனைகளோடு கைகால்களை அபிநயிப்பார் என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த சமாசாரம் வெளியே நிறைய பரவியிருப்பது, ஹிந்தி சினிமா நக்ஷத்திரம் ஒருவர் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் இதைப் பற்றிச் சொன்னபோது தெரிந்தது. இந்த கண்றாவியை நம் சினிமா ரசிகர் பட்டாளம் கேட்டால் என்ன செய்வார்கள்? மெய் சிலிர்த்துப் போவார்கள். ஆகா, நம் நடிகர் திலகம் பிறவிக் கலைஞர் அல்லவா? வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நடித்துக்கொண்டே இருக்கிறார். அதுவல்லவோ கலை வாழ்க்கை. கலைக்குச் சேவை. அவர் என்ன பணத்துக்காகவா சினிமாவில் நடிக்கிறார்? என்று மாய்ந்து போவார்கள்.

அப்படி அல்ல. மோகன் லாலும் மம்மூட்டியும் தமக்குள் சிரித்துக் கொள்வார்கள், தமிழ் சினிமாவில் நடிக்கும் போது என்று தான் நினைக்கிறேன். ”இந்த பாண்டிக்காரனுகளே ஒரு மாதிரிதான், கேட்டியா சேட்டா? என்று தமக்குள் பரிமாறிக்கொண்டால் அது நாம் ஆச்சரியப்படவேண்டிய விஷயமாக இராது. மலையாள சினிமாவில் கதை என்றால், நடிப்பு என்றால் அவர்கள் கொள்ளும் அர்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும். அங்கும் தமிழ் சினிமாவின் வெகுஜன குணத்தின் தாக்கம் உண்டு தான். அதற்காக அவர்கள் தம் கலை பிரக்ஞையை இழந்து விடவில்லை. வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் அவர்களுக்குத் தெரியும். வெகுஜன பாமர ரசனைக்கும் தீனி போட வேண்டும் தான். பாமர ரசிகர்களுக்கும் அவர்களது இப்போதைய ரசனைக்கு ஏற்ப சந்தோஷிக்க சரக்குகள் வேண்டும் தான். அதற்காக அதைத் தவிர வேறு எதுவும் உலகத்தில் இருக்கக் கூடாது என்ற தமிழ் சினிமா கலாசாரம் அங்கு இல்லை.

தமிழ் சினிமாவுக்கு ஏற்ப அவர்கள் தம்மை தமிழ் ரசனைக்கு மாற்றிக்கொண்டாலும், மலையாள சினிமாவில் அவர்கள் தம் இயல்பில் தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் உருவான படங்களைத் தமிழில் எடுக்கும் போது அதைத் தமிழ் சினிமாத்தனத்துக்கு மாற்ற வேண்டியிருக்கிறது. சிவாஜி, சந்திர முகி போன்ற படங்கள் அவற்றின் மலயாள மூலத்தில் உள்ள குணத்திற்கும் தமிழில் நம்ம சூப்பர் ஸ்டாரின் இமேஜைக் காப்பாற்ற, அவர் தம் பக்த கோடிகளான ரசிகர்ளையும் குஷிப்படுத்த செய்த மாற்றங்களை மனதில் கொள்ளலாம். எதாக இருந்தாலும், நம் ஊருக்குக் கொண்டு வந்தால் அதை நம் ரசனைக்கேற்ப மாற்றித் தான் ஆகவேண்டும். நமக்கு வேண்டிய நமக்கு ஏற்ற தீவனத்தைத் தானே நமக்குக்கொடுப்பார்கள்.

பாலு மகேந்திராவும் கூட நம் சினிமாவில் ஒரு மாற்றத்தைக் கொணர விரும்பினார். அவரால் சில மாற்றங்களை, சினிமாவுக்கு ஏற்ற கதை சொல்லும் முறைகளை, நம் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர முயன்றார் தான். கன்னடத்தில் கிரீஷ் காஸரவல்லியும் மலையாளத்தில் அரவிந்தன், ஏன் தெலுங்கில் கூட குக்குனூர் போன்றோர் முயன்றது தான். ஆனால் இன்று பாலு மகேந்திராவைக் கொண்டாடுவாரும் இல்லை. வரவேற்பாரும் இல்லை. அவர் பெயரைச் சொல்வாரும் இல்லை. அவர் போன இடம் தெரியவில்லை. பாலு மகேந்திரா மலையாளத்தில் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் அவர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைத் தமிழில் அவரால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.





from: www.thamizhstudio.com


Wednesday, February 9, 2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 29வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 29வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (12-02-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி) - ஒளியோடு விளையாடு...

முதல் பகுதியில் ஒவ்வொரு மாதமும், ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெறும். ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், லென்ஸ், ஷாட்ஸ், கோணங்கள், போன்றவற்றை பற்றி விரிவான பயிற்சியும், ஆர்வலர்களுடன் அது சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும்.

ஒளியோடு விளையாடு நிகழ்வில் இந்த மாதம் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன்பங்கேற்கிறார். இவர் செத்தாழை என்கிற குறும்படத்தின் ஒளிப்பதிவாளர். மேலும் தற்போது யுகம் என்கிற திரைப்படத்திற்கு ஆபரேடிவ் கேமரா மேனாக பணிபுரிகிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர் வித்யாதரன் பங்கேற்கிறார். குறும்படங்களில் இயக்கம் தொடர்பாகவும், முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் பேசவிருக்கிறார். மேலும் வாசகர்களின் இயக்கம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பார்.

இவர் வைத்தீஸ்வரன், ரசிக்கும் சீமானே போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

விழித்தெழு

உசேன்

5 நிமிடங்கள்

விளையாட மறந்ததென்ன?

ஜெய் வினோ

22 நிமிடங்கள்
விண்ணைத் தாண்டி வருவேனா?

சிவபாதசுந்தரம்

8 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட தயாரிப்பாளர் சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


Tuesday, February 8, 2011

கதை சொல்லி - அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)



கதை சொல்லி - அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)

லிவி



‘புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்’
-மாக்ஸிம் கார்க்கி.

சாதி என்ற காட்டுமிராண்டிப் பழக்கத்தை இன்னும் இறுக பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தொன்று தொற்று காப்பாற்றி வரும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அழகிய சமூகம் தமிழ்ச் சமூகம். இந்த கலாச்சாரம் உடைந்தால்தான் சாதி உடையுமென்றால் இந்த புண்ணாக்கு கலாச்சாரத்தை உடைப்பதில் தவறில்லை. மனித விடுதலையைத் தவிர்த்து இங்கு எதுவும் உயர்ந்ததல்ல. தன்னளவில் சாதிப் பெயரைக் கேட்பதும் சொல்வதும் அசிங்கம் என்னும் நிலை வராமல் மாற்றம் வந்து விட இயலாது. பார்ப்பானுக்கு அடிமையாக இருந்தும் இந்த உயர்சாதி என்று சொல்லித் திரியும் சில்லரைகளின் இம்சை தாங்க முடியவில்லை. குட்டக் குட்டக் குனியும் சமூகம் திருப்பி அடிக்கத் தொடங்கி நாட்கள் ஆகிவிட்டது. அழகிய பெரியவனின் கதையான "குறடு" என்பதை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் " நடந்த கதை" அதில் ஒன்று. தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் அழகிய பெரியவன்.

வெயில் வெம்மை நிறம் உடைத்து என்பதை வேலூரிருந்து பேர்ணாம்பட்டு செல்லும் பேருந்திலிருந்து உணர்ந்து கொண்டேன். வெப்பத்தில் ஊரையே யாரோ துடைத்து சுத்தம் செய்து விட்டது போல் தெளிவாக துலங்கியது. அவ்வளவு ஸ்படிகம் போன்ற இடத்தைப் பார்த்ததில்லை என்பது போல் கொழுத்திக் கொண்டிருந்தது மதிய வெயில். அங்கங்கே மரங்கள் அதிகம் அடர்ந்து இல்லாத மலை முகடுகள். அடிக்கடி தென்படும் இஸ்லாமியர்கள். தமிழ் நாட்டின் தேசிய மரம் போன்ற முள்ளுச் செடிகள். இதை காமராசர் ஆட்சியில் ராமநாதரபுரம் போன்ற வறட்சியான இடங்களில் முளைப்பதற்கு ஏற்றதான செடிகளை ஆப்ரிக்காவில் இருந்து வாங்கி வந்து தூவியாதாக செவி வழிச் செய்து ஒன்று இருக்கிறது. இன்று வனமென்று தமிழ்நாட்டில் இருந்தால் இந்த செடிகளைத் தவிர அதிகம் வேறு எதையும் பார்க்க இயலாது. அண்டை மாகாணங்களான கேரளாவிலும் கர்நாடகத்திலும் நான் இதைக் கண்டதில்லை. முதன்முதல் வேலூர்ப் பயணம் ஆதலால் அலுக்காமல் சன்னலோரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.

பங்களாமேடு, என்னும் அழகிய பெரியவன் வசிக்கும் கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது பேருந்து. அருகில் வந்து அமர்ந்த பெண்ணிடம் சரியான இடத்தில் இறங்க வேண்டும் என்பதற்காக பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். நட்போடு அவரும் பேசத் தொடங்கவே அவரவர் பற்றிய விசாரிப்புகள் வரத் தொடங்கின. என்னுடைய அறிமுகம் முடிந்த பின் தானொரு காவல்துறையில் வேலை செய்யும் பெண் என்றார். அண்ட சராசரங்களும் ஒரு கணம் ஆடி அடங்கியது. 'நான் எந்த தப்பும் செய்யலீங்க' என்ற முதல் வரியை வாயினுள்ளாகவே தின்று செறித்தேன். 'ஆனா இதுவரைக்கும் எந்த குற்றவாளியையும் பிடித்ததில்லை' என்றார் சிரித்துக் கொண்டே. நானும் சமாளித்துக் கொண்டு இதுவெல்லாம் எனக்கு சாதாரணம் என்ற தொனியுடன் பேசத் தொடங்கினேன். அவரைச் பற்றிச் சொன்ன விடயங்கள் சுவாரசியமானவை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதற்கு முன் பணியில் இருந்திருக்கிறார். 'அங்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது பத்து கொலைகளாவது நடக்கும்' என்றார். எச்சிலை ஒருமுறை முழுங்கி விட்டுக் கொண்டேன். விபத்து நடந்தாலே அருகில் சென்று பார்க்க திராணி இல்லாத தைரியசாலி நான். 'கொலை நடந்த இடத்திற்கு ஒரு மாத காலம் அல்லது இரண்டு மாத காலம் காவலாக போட்டு விடுவார்கள். தங்குவதற்கும் சரியான இடத்தை ஒழுங்கு செய்து தர மாட்டார்கள். நரக வேதனையாக இருக்கும்' என்றார். கீழ் நிலைக் காவலராக இருப்பதால் தேர்வு எழுதி மேல் மட்டம் செல்லலாம். ஆனால் தேர்வாகிய பின் போவதற்கும் எட்டு அல்லது ஒன்பது 'ல'னாக்கள் கொடுக்க வேண்டும். இப்போது முன்பு போல் பென்சனும் கிடையாது' என்றார் கவலையுடன். வாழ்கவென் தேசத்தின் குற்றத்தைத் தடுக்கும் கணவான்கள்.

பங்களாமேடு வந்துதும் விட்டு பிரியாவிடை பெற்றுக் கொண்டோம். ஒரு சிறு மளிகைக் கடை, கொஞ்சம் தள்ளியொரு தேனீர் விடுதி , உணவுவிடுதி எதுவும் இல்லாத ஊர் அது. அம்பேத்கர் சிலை கடந்து செல்லும் வீதியில் அழகிய பெரியவனின் வீடு இருந்தது. வாசலில் நின்று வீட்டின் அடையாளம் காட்டி வரவேற்றார் அழகிய பெரியவன். ஆரஞ்சு நிற வண்ணமும் முற்றத்தில் பயிரிடப்பட்ட சிறு தோட்டமுமென அழாகாக இருந்தது வீடு. நீண்ட தூர பயணமென்பதால் சாப்டீங்களா என்று கேட்டு விட்டு உணவு பறிமாறினார். அழகிய பெரியவன் இடை நிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியர். தமிழ் சொல்லித் தருவாரென்று நினைத்தால், அவர் கற்பிப்பது அறிவியலும் ஆங்கிலமும். 'முரன் என்பதில் தானே வாழ்வின் சுவையும் அடங்கியிருக்கிறது' என்றார் சிரித்துக்கொண்டு.

அழகிய பெரியவனின் எழுத்துக்கள் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியது. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதைகள் அவை. அழகியலோடு அவர் கதைகளை முன்வைக்கையில் இலக்கியம் அதன் உச்சத்தில் செயல்படுகிறது. சிறுவயதில் இருந்தே தன் சுயத்தால் இலக்கியத்தை விரும்பியிருக்கிறார். 'வாழ்வில் அவர் எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்கள், நெருக்கடிகள், சமூக புறக்கணிப்புகள் இவை யாவும் சேர்ந்து தன்னை அனுபவங்களின் வழி தேர்ந்த எழுத்தாளன் ஆக்கியிருக்கிறது'. ஒரு எழுத்தாளனுக்கு அனுபவங்களைத் தவிர என்ன கொடை வாய்த்து விடப் போகிறது. வாழ்வில் இருக்கும் வலியை, சுகத்தை, உன்னதத்தை அன்பை, அவனை விட யாரால் சொல்லிவிட இயலும். தன்னுடைய கல்லூரி காலத்தில் வலம்புரிஜான் ந‌டத்திய பத்திரிகை ஒன்றில் லா.சா.ரா எழுதிய 'சிந்தா நதி' என்னும் தொடர் தீவிர இலக்கியத்தினை அவர் தேடி அடைய வைத்திருக்கிறது.

கதை சொல்லுவதற்கான தயாரிப்புகளோடு காத்திருந்தார் அழகிய பெரியவன். கதை மாந்தர்களின் பெயர்களை ஒரு தாளில் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். அதனாலே அவர் கதைகளை சொல்லும் போது கதை மாந்தர்களின் பெயரும் கதைக்கான‌ சுவையை கூட்டிக் கொண்டே சென்றது. கதைகளில் வரும் பெயர்களும் ஒரு கதையை அழகானதாக‌ மாற்றும் ரசவாதத்தை அழகிய பெரியவனின் கதைகளில் உணர்ந்தேன். கதைகளின் வேட்டை ஆரம்பமாகியதும் கதைகளின் வனாந்திரத்திலிருத்து மிகக் கொழுத்த காட்டின் வனப்பை தனக்குள்ளே வைத்திருக்கும் மிருகங்களையொத்த செழுமை நிறைந்த கதைகளைச் சொன்னார் அழகிய பெரியவன். அவர் சொன்ன கதைகளில் எந்த கதையும் எந்த இடங்களிலும் வீரியம் இழக்கவில்லை.

ஒரு எழுத்தாளன் என்கிற அடையாளத்தோடு அழகிய பெரியவன் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. அவர் குரல் தேர்ந்த கதை சொல்லிக்கான குரலாக மாற்றம் அடைந்திருக்கிறது. குரலின் இனிமையை அவரிடம் சாதாரணமாக கதைத்துக் கொண்டிருக்கும் போதே ரசிக்கலாம். உலக எழுத்தாளர்களின் சிறுகதை ஒன்று (எத்தாலோ கால்வினோ), இந்திய எழுத்தாளர்கள் சிறுகதை மூன்று (பால் சக்கிரியா, மஹாஸ்வதே தேவி, தேவனூர் மகாதேவா), தமிழ் எழுத்தாளர் சிறுகதை இரண்டு, தனது கதைகள் இரண்டென மொத்தம் எட்டு கதைகளையும் அலுக்காமல் சொன்னார் அழகிய பெரியவன். கதை சொல்வதற்கு இடையில் பல்லிகளின் அழைத்தலும், பொழுதாக தொடங்கியவுடன் கோழியின் கூவலுமாக கதை சொல்லும் இடமும் ரம்மியமாக மாறி ஒருவித மனக் கிளர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது.

அழகிய பெரியவன் கதைகளைச் சொல்லும் போது ஒரு தீவிர மன‌ நிலையுடன் சொன்னார். கதைகளின் காத்திரம் எங்கும் சருகவுமில்லை. குறையவுமில்லை. அவர் கூறிய‌ கதைகளை வாசிக்கும் போது இத்தனை ஆனந்தமும் மனவெழுச்சியும் நிகழுமாவென சந்தேகத்தை ஏற்படுத்தினார். கதைகளை மிகச் செறிவாக தான் கதை சொல்லும்போது கொண்டுவந்தார். அழகிய பெரியவன் சொன்ன கதைகளில் வலியிருந்தாலும், கதைகளை நகர்த்துவது வாழ்வின் அற்புதமான கணங்களும் அதன் ஊடாடும் நகைச்சுவைகளும். 'மஹாஸ்வதே தேவி'யின் 'விதை' கதையில் வரும் துலனின் இறுதி வரிகளில் அழகிய பெரியவன் உடைந்துவிட்டார். குரல் கம்மி அவரால் சிறிது நேரம் பேச இயலவில்லை. சிறிது நேரங்களில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கதையை முடித்தார். கதைகளுக்குள் தன்னை இழந்து கரையாமல், அந்த கணம் நிகழ்ந்துவிடாது.

கதை சொல்லி முடித்து நாட்கள் ஆகியும் துஷ்யந்தன், துலன் என்னும் பெயர்கள் மீண்டும் மீண்டும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கதைகளும் குரலும் என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. அக்கதைகளில் இருந்து மீள இன்னும் சில நாட்களாவது ஆகும்.

அழ‌கிய‌ பெரிய‌வ‌னின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானைத் த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)


கதைகள் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_16.php



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -3



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -3

செல்வியும் சிவரமணியும் – சொற்களால் நிலம் கவர்ந்தவர்கள்

குட்டி ரேவதி

செல்வி

ஆதிக்க சமூகத்தினுடைய இலக்கியங்கள் தாம் இன்றுவரை உயிர்வாழும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. இது, சங்க இலக்கியங்களுக்கும் பொருந்தும். காலந்தோறும் அரசு மற்றும் இதர சமூக நிறுவனங்களின் அதிகார நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் தக்கபடி தமது கருப்பொருட்களையும் வடிவ உத்திகளையும் கையாண்ட இலக்கியங்கள் தாம் வாழும் தகவமைப்பைப் பெறக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன. சமகாலத்திலும் கூட அதிகார அரசின் சமர்ப்பணங்களுக்கு உள்ளாகிய படைப்புகளையும் நாம் அடையாளம் காட்டமுடியும். இத்தகைய சமரசங்களுக்கு ஆளாகாமல், அதே சமயம் சமூகத்தின் புண்களையும் சொறிந்து கொடுக்காமல் படைப்பாக்கம் பெறும் மொழியின் பயன்பாடுகள் முற்றிலும் வேறானவை. ஒடுக்கப்பட்ட உயிரினமாய் இருக்கும் பெண்ணின் மொழி சமூகத்தில் பெறும் பயன்பாட்டிலும் செயல்பாட்டிலும் முக்கியமான ஒன்றாய், நான் இங்கே குறிப்பிட விரும்புவது, மொழியின் வழியாக, அதிலும் தாங்கள் கூர்மைப்படுத்தி வழங்கும் சொற்கள் வழியாக அவர்கள் தங்களுக்கான மண்ணைத்தான் முதலில் உடைமையாக்க விரும்புகிறார்கள். விட்டு விடுதலையாகித் தெறிக்கும் சொற்களினும் பெரிய, தீவிரமான இயக்க நடவடிக்கை ஏதுமில்லை.

இத்தகையதொரு சித்தாந்தத்தை தம் உடல் வழியாக உள்வாங்கி, தம் சொற்கள் வழியாக பெருங்குரலெடுக்கச் செய்தவர்கள் தாம் செல்வியும் சிவரமணியும். இவர்கள் இருவருக்கும் இடையே இலங்கும் ஒற்றுமை என்பது ஈழத்தில் தோன்றிய கவிஞர்கள் என்பது மட்டிலுமே. மற்றபடி, படைப்பின் அகன்ற வெளியிலும் ஆளுமையிலும் தங்களுக்குள் செழுமையாக்கி வைத்திருந்த கருத்தாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

1996-ல் வெளிவந்த செல்வி சிவரமணி கவிதைகள் எனும் நூல் தமிழ்ச்சமூகத்தில் மிகத்தொடர்ச்சியான, அதே சமயம் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை உருவாக்கின. செல்வியின் எட்டு கவிதைகளும் சிவரமணியின் இருபத்தியிரண்டு கவிதைகளும் அடங்கிய சிறு தொகுப்பு அது. அவர்கள் இருவரையும் ஒரு சேர நான் இங்கே முன்வைப்பதற்கு காரணம் அந்நூலின் வழியாக அவர்கள் தமிழ்ப் பெண்கவிதையின் மீது நிகழ்த்திய தாக்கமும் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பமுடியாத சிதைப்பும் தாம்.

இராமனே இராவணனாய்

…………………………………………………………..

அசோக வனங்கள் அழிந்து போய்விடவில்லை
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல. இராமனே தான்.

இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய்
முகமூடிகளை மாற்றிக்கொண்டதை
பார்க்க நேர்ந்த கண்கள்…
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.

…………………………………………………………………………………………….

எனக்குள்ளே…….

…………………………………….

பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
எனது மனமும் கொதிக்கும்; குமுறும்
பார்; நீ – ஒரு நாள்
வாமனன் நானென நினைக்கும் உமது
எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்

வானமெங்கும் அதற்கப்பாலும்
நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள்
பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய்
எனது கால்கள் அழுந்திப் புதையும்
பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல்
சீறியெழுந்து எரிமலையாவேன்

அன்றேயுமது சாத்திரம் தகரும்;
அன்றேயுங்கள் சடங்குகள் மாளும்
இன்னதின்னதாய் இருப்பீரென நீர்
எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்.
வானம் பொழியும்; எரிமலைக் குழம்பிலே

ஆறுபாயும்-
அதில் நான் நீந்துவேன்-
சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும்
தனித்தே சுற்றுவேன்
இனிய மாலை, எழில் மிகு காலை – எல்லாம்
எனது மூச்சிலே உயிர்க்கும்.

இக்கவிதையின் வீச்சு இதுவெளியான காலத்தில் மட்டுமன்று இன்றும் புத்துயிர்ப்புடன் இருக்கிறது. வீட்டின் சுவர்களையும் வேலிகளையும் உடைத்து முறிக்கும் பெண்களுக்கு இடையே, நிலத்தின் எல்லைகளையும் அதன் வரையறைகளையும் கிழித்துப் போடும் ஆவேசமான மூச்சுடன் இவ்வெழுத்துக்கள் எழுதப்பட்டன. இவை இங்கு எழுதிக்கொண்டிருந்த பெண்களிடமும் எழுத வந்த பெண்களிடமும் தம் ‘மண்’, ‘இனம்’ என்ற கருத்தாக்கத்தை எப்படி அணுகுவது, எப்படிச் சிதைப்பது, எப்படி மீண்டும் எழுதுவது அல்லது எப்படி அவர்களின் நினைவுகளுக்குப் பயிலப்பட்டிருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தியது. இவை தனக்கான நிலத்தைக் கோரும் கவிதைகள்!

இன்றும் தந்தையின் நிலத்தில் பங்கு கேட்கும் உரிமையும் சட்டமும் பெண்களுக்கு இருந்தும் சமூகத்தின் அதிகாரத்தினால் அதை மறுக்கும் புறக்கணிக்கும் நோக்கமும் இருக்கிறது. இது பெண்ணை நிலத்துடன் கால் பதிய விடாமல் எப்பொழுதும் அவளை அந்தரத்தில் இருக்கச் செய்து, பேரம் செய்யும் தந்திரம் தான். இனவொடுக்கு முறையிலும் முதலில் நிலத்திலிருந்து வேரோடு பெயர்க்கப்படுவது பெண்கள் தாம். இதை உணர்ந்த ஈழத்துக் கவிப்பெண்கள் தங்கள் சொற்களாலேயே உறுதியாக நிலம் பற்றிக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொண்டவர்கள்.

விடை பெற்ற நண்பனுக்கு

----------------------------------------------

மின் குமிழ்கள் ஒளியுமிழ
நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்
விரைவில் வருவதாய்
உனது நண்பனுடன் விடைபெற்றாய்.

உன்னிடம் பகிர
எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன
முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்பா.

செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து
வசந்தம் பாடிய குயில்களும்
நீயும் நானும் பார்த்து இரசித்த
கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது
தலையை அசைத்தும்
எனது செய்தியை உனக்குச் செல்லும்.

பருந்தும், வல்லூறும் வானவெளியை மறைப்பதாக
இறக்கையை வலிந்து விரித்தன நண்பா
கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன;
கூடவே சில கோழிகளும்…

இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க
எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.

நடந்து நடந்து வலித்துப் போகும்
கால்களின் மீது படியும் என்
மண்ணின் புழுதியை
முகர்ந்து
வீதியிலன்றி வீட்டினுள்ளும்
முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி
குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு –
இறையைத் தேட,
இறக்கையைக் கிழிக்க-

வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த
கொடுமைகட்கெதிராய்க் கோபம் மிகுந்து
குமுறும் உனது குரலுடன்
குழந்தைச் சிரிப்புடன் விரைந்துவா
நண்பா!

அடர்ந்த மெளனத்தை தனது உணர்வாக்கிக்கொண்டு எழும்பும் இவருடைய ஒவ்வொரு கவிதையிலுமே இம்மெளனமே மொழியாவதை உணரமுடியும். இந்த மெளனம் என்பது அவர்கள் பிறந்த நிலத்தைப் பொறுத்தவரை இன்னொரு தாய்மொழி. இம்மொழியைச் சுமந்தும் இதன் வழியாக தங்கள் உணர்ச்சிகளைச் செரித்துக்கொண்டும் வாழ நேர்ந்த தருணங்களை மொழி வழியாகக் கடக்கும் போதெல்லாம் கண்டிக்கப்பட்டிருக்கின்றனர். தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மெளனம் நாவறுந்த ஒரு பெரிய வெண்கல மணியைப் போல மிகவும் கனமான அந்தகாரம் மிக்கது. போர் மற்றும் அதிகாரத்திற்கான நேரடியான சொல்லாட்சிகள் ஈழத்தில் துலக்கம் பெறும் இக்காலத்திற்கு முன்பே சொற்களே படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கவிதைகளுக்குள் பேணப்பட்டன. முட்டைகளை அடைகாப்பதற்கான தகிப்பையும் அச்சொற்களுக்கு வழங்கியிருந்தனர். அக்கவிதைகள் ஒவ்வொரு முறையும் வாசிப்புக்காகத் திறக்கப்படும் போதெல்லாம் அடுக்கடுக்காய் அர்த்தங்களுடனும் உணர்வெழுச்சிகளுடனும் மன அறையை நிறைக்கின்றன. அரசியல் ஊக்கத்துடன் இயங்க வைக்கின்றன.

செல்வியின் கலக மனம் வெறும் மேம்போக்கானது அன்று. சொற்களை அலட்சியமாய் கற்களைப் போல தூக்கியெறியும் இலகுவான செய்கையும் அன்று. சொற்களைத் தீட்டித் தீட்டி அதிக பட்ச வெப்பங்களோடு தோல் தீய்க்கும் கங்குகளாக்குவது! அதுமட்டுமன்றி, இவருடைய கவிதைகள் எங்குமே கவித்துவச் செம்மை குலையாமல் கருப்பொருள் மீது கண்வைத்தே நகரும்.

கோடை

………………………………………………..

வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச்செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்
ஒதுங்கிப் போன கல்
ஏளனமாய் இளிக்கும்

இதயத்தின் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடிதுயர்ந்த
கூழா மரத்தின் பசுமையும்

நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப்பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப் போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதை அழுத்தும்.

செல்வியின் சுயசரிதை மிகவும் சுருக்கமானது. 1991 – கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட இவருக்கு, 1992 ஆம் ஆண்டு International PEN என்ற சர்வதேச கவிஞர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு சிறப்புப்பரிசு அறிவித்தது. 1994- ஆம் ஆண்டுக்கான Poetry International விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விரண்டு பரிசுகளுமே இவரால் பெறப்படவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------

சிவரமணி

தனது எழுத்தையெல்லாம் எரித்துவிட்டு,
“எனது கைக்கெட்டியவரை
எனது அடையாளங்கள் யாவற்றையும்
அழித்துவிட்டேன்”

என்று இறுதி நேரக்குறிப்பாக எழுதியும் வைத்திருந்தார், சிவரமணி. ஈன்ற பாம்பே தன் குட்டிகளை உண்ணுவது போல! 1991 – ஆம் ஆண்டில் தனது இருபத்திமூன்றாவது வயதில் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவ்வாறு அவர் எரிக்காமல் மிஞ்சிய இருபத்தியிரண்டு கவிதைகள் தாம் இன்று சிவரமணியினுடையதாக அடையாளம் பெறுகின்றன.

சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் ஈழத்தின் பெண்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான பருவம். பெண்ணியக் கருத்தாக்கங்கள் எல்லாம் செயலூக்கம் பெற்று கலை இலக்கியங்களாக மலர்ந்த காலம். பெண்கள் அரசியல் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் நேரடியாகத் தங்களை இணைத்துக்கொண்டு பிரச்சாரக் குரல்களாகவும் கருத்தாளர்களாகவும் மாறியிருந்தனர். இது தமிழகத்தில் நிகழ்ந்ததினும் வீரியமிக்கதாயும் மொழி-நிலம் தொடர்பான பெண்ணிய அரசியலை சீரமைக்க முனைவதாயும் இருந்தது. விடுதலைப் போராட்டங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் அரசியல் தெளிச்சியை வெளிப்படுத்த முடிந்தது, என்றாலும் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் வேறானது என்ற அக்கறையும் இருந்தது.

சிவரமணியின் பெரும்பாலான கவிதைகள் பிரச்சாரக்குரலாகவே எழுந்துள்ளன. இதனால் கவித்துவ அழுத்தம் பெறாமல் வெறுமனே வாக்குமூலங்களாக சரேலென்று முடிந்து போகின்றன. கவித்துவ எழுச்சிக்கான பயிற்சியை ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளாமல், வார்த்தைகள், நீச்சல் குளத்தின் மேலுச்சியில் உள்ள அசைப்பலகையிலிருந்து சடேலென்று நீர் நிலையில் குதித்து நீந்த வேண்டும் என்று ஒருவர் விழைவதால், குதித்தல் என்பதில் தான் கவனம் இருக்குமேயொழிய நீச்சல் பற்றிய அனுபவத்திற்கான தயாரிப்பு இருக்காது. அப்படியான கவிதைகள் பலவற்றை எழுதிய சிவரமணி, தனக்குத்தானே ஊட்டிக்கொண்ட படைப்பூக்கத்தினால் சிறகசைப்பினாலும், அவரது மொழியும் அரசியல் பார்வையும் வலிமையுற்று வீர்யமெடுத்ததையும், இன்று வரை பெண்ணிய அரசியல் ஏட்டின் சமன்பாடுகளாய் மாறி நிற்பதையும் காண முடியும். இதை அவரது இரு முக்கியமான, பிரபலமான கவிதைகளைக் கொண்டு நிறுவலாம். அவை, ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ மற்றும் ’அவமானப்படுத்தப்பட்டவள்.

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

--------------------------------------------------------------------

யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.

நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
மெளனமாயிருக்கவும்
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர். (1989)

அவமானப்படுத்தப்பட்டவள்

----------------------------------------------------

உங்களுடைய வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ளமுடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்துவரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்.

என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக்கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.

இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான் பிரசன்னமாயுள்ளேன்.

என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஓர் அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப்பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

என் கடந்தகால இலக்கியப்பயணத்தில் எத்தனையோ முறைகள், பல வேறுபட்ட தொகுப்புகளுக்காகவும் ஆய்வின் பொருட்டும் இவ்விரண்டு கவிதைகளையும் பலமுறை கடந்து சென்றிருக்கின்றேன். ஓர் அகழியை எப்படித் தாண்டுவது? கடந்து தானே செல்லவேண்டும். அம்மாதிரியான ஒரு நிராகரிக்கமுடியாத அனுபவத்திற்கு, வாசிக்கும் எந்தவொரு பெண்ணையும் இழுத்துச்செல்பவை. இவ்விரண்டு கவிதைகளே சிவரமணியின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அகப்பெருவெளியையும் நமக்கு எந்தவித சிரமுமின்றி வெளிப்படுத்தக் கூடியவை. ‘யுத்தகால இரவு’ என்பதில் வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் அதிமுக்கியமான கவலையும், அது அகண்ட உருவம் கொள்ளும் அரசியல் சிக்கலையும் கவிதையாக்கியிருக்கிறார். இம்மாதிரியான அசாதாரண தருணங்களையும் அதற்கான நெகிழ்ச்சிகளையும் சொற்களால் முன்வைப்பதில் பெண்களுக்கு நிகர் எவரும் இல்லை என்று எழுதிக்கொள்வதன் வழியாக, சிவரமணியின் இக்கவிதையை எம்மெல்லோருக்குமான வாயில் ஆக்கிக்கொள்கிறேன்.

இன ஒடுக்குமுறையின் தொடர்துயர்களுக்கு ஆளான இப்பெண்களின் கவிதைகள் வழியாகத் தாம் தமிழகத்திற்குள்ளும் பெண் கவிதை தனது அழுத்தமான பாதங்களை எடுத்துவைத்திருக்கவேண்டும். ‘இனியுமென்ன தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்’ எனும் ஒற்றை வரி, பெண்ணிலைவாதத்தை முன்னெடுப்பவர் எல்லோருக்கும் அவர் நெஞ்சத்தின் கூரையின் மீது அசைந்து பறக்கும் கொடியைப் போன்ற பொலிவு மிக்கது. இன்னும் சொல்லப்போனால், இக்கவிதையில் அவர் நிறைத்திருக்கும் நெஞ்சுரம் மிக்க அழுத்தமான நிலைநிறுத்தலையும் இருப்பையும் ஒவ்வொரு பெண்ணும் தன்னிலையிலிருந்து மீண்டும் மீண்டும் பிரதியெடுப்பதும் பதிவுசெய்வதும் தாம் நம் பெண்ணிலைவாதமாக இருக்கமுடியும்.

எழுத வரும் எந்த ஒரு பெண்ணும் எந்த ஒரு வரலாற்று ஆசிரியனாலும் எழுதவே முடியாத ‘தன் வரலாற்றைத்’ தாம் எழுதிச் செல்கின்றனர்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:

செல்வநிதி தியாகராஜ என்ற இயற்பெயருடைய கவிஞர் செல்வி வவுனியாவில் உள்ள சேமமடுவில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில், ‘நாடகமும் அரங்கியலும்’ துறையில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தார். ‘தோழி’ என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.

கவிஞர் சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றைக் கற்றார். இறுதிப்பரீட்சைக்குச் செல்லும் முன்னரே தற்கொலை செய்து கொண்டார். இலக்கியத்தில் மட்டுமன்றி ஓவியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.



Saturday, February 5, 2011

பின்நவீனத்துவம்-1 - தமிழவன்



யாயும் ஞாயும் யாரா கியரோ- 5

பின்நவீனத்துவம்-1

தமிழவன்

பின்-நவீனத்துவம் பற்றி இன்று நிறைய பேர் பேசுகிறார்கள்.

பல இடங்களில் இந்த வார்த்தையைப் பார்க்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள். எனவே பின் நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள பலர் விரும்புகிறார்கள்.

இதற்குமுன் நான் தமிழ்ச் சூழல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

கல்வி என்பது அறிவைப் பெற வழிசெய்யவில்லை. கல்வியின் ஒரு பிரிவான தமிழ்க் கல்வி பற்றித்தான் தெரியுமே. ஆனால் தமிழில் எழுதுபவர்களும் முக்கியமான விசயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் ஆங்கிலம் மூலமே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். நவீனமாகச் சிந்தித்தலைப் பொறுத்தவரையில் தமிழ் ஆங்கிலத்தின் உப மொழியாக இருக்கிறது. தமிழில் அதிகம் போனால் ராணிமுத்து, அல்லது வேறு ஒரு நேரப்போக்கு இதழைப் படிக்கமுடியும். உலக அறிவைப் பெறமுடியாது. சீரிய விசயங்களைப் படிக்க இன்டர்நெட் மூலம் படிக்கிறோம் அல்லது ஆங்கிலத்துக்குப் போகிறோம்.

ஆங்கிலத்தில் வரும் விசயங்களைத் தமிழில் எழுதுகிறோம். அதாவது தமிழில் எந்தெந்த விசயங்களைக் கூறவேண்டுமோ அவற்றைத ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஏற்றவிதமாகக் கூறுகிறோம். அதாவது மாற்றவும் குறுக்கவும் செய்கிறோம். இப்படித்தான் உலகப் பின்-நவீனத்துவத்தை ஏற்கிறோம். பின்பு அதைத் தமிழிற்கு ஏற்ற விதமாக விளங்கிக் கொள்கிறோம்.. "தமிழிற்கு ஏற்ற "என்பதில் தான் தமிழ்ச்சிந்தனை அடங்கி இருக்கிறது. எனவே பின் நவீனத்துவம் கூட தமிழ்த்தன்மை ஏறிய சிந்தனையாகவும் உள்ளது. உலகம் முழுவதும் பின் நவீனத்துவச் சிந்தனை வரும் போது தமிழிலும் அது பரவத்தான் செய்யும். குவலயமாகும் தமிழின் (Globalizing Tamil) மீது பின் நவீனத்துவம் எங்குத்தாக்கம் செலுத்துகிறது எங்குத் தாக்கம் செலுத்தவில்லை என்று நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

முக்கியமாகத் தமிழர்கள் சினிமாவுக்கு அடிமைகளாக இருப்பதால் பின்-நவீனத்துவம் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவைகளை எல்லாம் பற்றிப் பார்க்குமுன் ஏற்கனவே நான் போன கட்டுரையில் சொன்னதுபோல் பின்-நவீனத்துவம் நவீனத்துவத்தின் எதிராகவும் அதன் தொடர்ச்சியாகவும் அமைகிறது. எதிராக எப்படி அமைகிறது என்று முதலில் பார்க்கலாம்.

நவீனத்துவம் அறிவுக்கு (Knowledge) முக்கியத்துவம் கொடுத்தால் பின்-நவீனத்துவம் 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகம் கொண்டாடிய அறிவைத் தாண்டிப் போகிறது. அறிவு என்பது தர்க்கத்தையும் நிரூபணத்தையும் ஆதாரமாகக் கொண்டது. அதாவது அறிவல்ல என்று கருதிய விசயங்களைப் பின்-நவீனத்துவம் ஆதரிக்கிறது. Postmodern Condition என்ற நூலை எழுதிய லையோத்தார் (Lyotard) என்ற பிரஞ்சு தத்துவவாதி கதையாடல்களை (Narrativity) அறிவை விட முக்கியமானவை என்று கூறுகிறார். கதைகள் அவற்றைக் கேட்பவனையும் அதைச் சொல்பவனையும் ஒரு சொல்லாடலில் இணைக்கிறது என்பார் லையோத்தார். தமிழில் நிரம்ப ஆட்கள் லையோத்தார் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் லையோத்தார் பற்றி ஏதும் தெரியாத பொய்யர்கள்; பாசாங்குகாரகள்.

லையோத்தார் நமக்கு - தமிழர்களுக்கு முக்கியமான பெயர் என்பது என் கருத்து. ஏனென்றால் அவர் தான் பெரியாருக்கு மாற்றான கருத்தைக் கூறுகிறார். பெரியாருக்கு எதிரான கருத்து முக்கியம் என்று நான் கூறுகிறேன் என்று தப்பாக எடுக்கக் கூடாது. பெரியார் நம்மிடம் அகில உலகம் அன்று பின்பற்றிய அறிவு வழிபாட்டைக் கொண்டு வந்தார். பகுத்தறிவு மூலம் தான் நாம் முன்னேறமுடியும் என்ற கருத்தைக் கொண்டுவந்தார். அது அன்று ரொம்ப நல்ல காரியம். சந்தேகமே இல்லை. பெரியார் அன்று உலகம் ஏற்றுக்கொண்ட "அறிவை" மக்களிடம் பரப்புவது தன் கடமை என்று கருதினார். தன்னைப் பகுத்தறிவுவாதி என்று அழைத்தார். அக்காலத்தில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய் பகுத்தறிவு வழியாகப் பல நல்ல கருத்துக்களைக் கொண்டு வந்தார். மேற்கில் விஞ்ஞானம் வளர்ந்ததற்குக் காரணம் அறிவு வழிபாடுதான். உலக யுத்தங்களைப் பார்த்த பின்பு தான் பகுத்தறிவுடன் வேறுவித அறிவும் இணையவேண்டும் என்று உலகம் கண்டுகொண்டது.

இந்தப் பகுத்தறிவுக்கு எதிராக அன்று நடந்துகொண்டவர் அயோத்திதாசர்.தமிழில் தலித் சிந்தனையை முதன் முதலில் கொண்டுவந்தவர். இன்றைய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது புனைகதைகளைச் சார்ந்த சொல்லாடல்களை (சொல்லாடல் என்ற சொல்லைப் பற்றி பிறகு பார்க்கலாம்) கொண்டுவந்து தலித்தினரைத் தமிழிலக்கியச் சரித்திரத்தில் மையமாக்கினார். பௌத்தச் சிந்தனையைப் பகுத்தறிவுக்கு எதிராகக் கண்டுபிடித்தவர் அயோத்திதாசர். பெரியாரின் கடவுள் மறுப்பு கிராமக் கடவுளர்களை மறந்துவிட்டது. பெரியார் அண்ணன்மார் சுவாமி வழிபாட்டைப் பற்றிப் பேசவில்லை. அதனால் நாட்டுப் புறவியல் தமிழகத்தில் அழிந்தது. நாட்டுபுறவியல் கதையாடல் அறிவுமுறையை அடிப்படையாகக் கொண்டமைந்தது. திராவிடக் கழகம் / திராவிடமுன்னேற்றக் கழகம், இவைகள் இலக்கியத்தில் கோட்டைவிட்டதும் அவர்களின் மிகையான அறிவு வழிபாட்டால்தான். எல்லாவற்றையும் தர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியாது. அன்றைய அறிவியலும் அன்றைய சமூகச் சிந்தனையும் பகுத்தறிவுக்கு மிகையான முக்கியத்துவத்தைக் கொடுத்தன. ஆனால் இவ்வியக்கங்கள் பரப்பிய கருத்துக்களால் நல்ல விளைவு ஏற்பட்டது; மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் எதிர்த்த மூடநம்பிக்கையைக் குறைசொல்லக்கூடாது. மூடநம்பிக்கை எதிர்ப்பு தருக்கத்தால் வந்தது. பகுத்தறிவு ஒருவகை அறிவை மட்டும் ஆதரித்தது. அதனால் அது தவறுகளுக்கு இட்டுச் சென்றது என்று கூறியது பின்- நவீனத்துவம். பின்-நவீனத்துவம் பல்வித அறிவை நாடியது.

இந்த இடத்தில் அமைப்பியலும் பகுத்தறிவை ஏற்கவில்லை என்பதைக் கூறவேண்டும். எப்படி என்று இப்போது விளக்கமுடியாது. தேவை ஏற்பட்டால் பிறகு பார்க்கலாம்.

அதாவது நான் சொல்ல முயல்வது ஒரே ஒரு கருத்துதான். அது பகுத்தறிவு என்பது ஒரு சொல்லாடல்; அவ்வளவுதான். அதுதான் ஒரே உண்மை அல்ல. தருக்கம் முக்கியம்; தருக்கம் மரபான அறிவிலும் உண்டு. தொல்காப்பிய அறிவுமுறையில் வியக்கத்தக்க தருக்கம் இருக்கிறது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் பகுத்தறிவு அப்படியே தொல்காப்பியத்தில் இல்லை.

அடுத்து மிகமுக்கியமான ஒரு சிந்தனை பற்றிப் பேசவேண்டும். அது பெருங்கதையாடல் (Grand Narrative) என்ற சிந்தனை. லையோத்தார் தான் இதைச்சொன்னவர். உலகம் முழுசும் செல்லுபடியாகும் சிந்தனையென்று ஒன்று இல்லை என்றது இச்சிந்தனை. கதைவழிச் சிந்தனை பற்றி யோசித்த இவர் கம்யூனிசத்தின் தந்தையென்று கருதப்படும் மார்க்ஸ் மற்றும் ஜெர்மன் தத்துவவாதி ஹெகலை மறுத்தார். மார்க்ஸ் ஆகட்டும் ஹெகல் ஆகட்டும் இவர்கள் உலகப் பொதுச்சிந்தனை ஒழுங்கமைவு என்று ஒன்று இருக்கிறது என்றனர். லையோத்தார் இதனை மறுத்தார். இது உலகப் புகழை லையோத்தாருக்கு கொடுத்தது. இங்கு ஒரு விசயத்தை நாம் மறக்கக் கூடாது. மார்க்ஸியத்தைப் பல வழிகளில் புரிந்து கொள்ள முடியும். சிலர் மார்க்ஸியம் ஒரு முழுமைக் கோட்பாடு என்று கருதினர். அவர்களை மட்டுமே லையோத்தார் மறுத்தார். மார்க்ஸியத்தை அல்ல. (மார்க்ஸியத்தைப் பற்றி இன்னொரு சந்தப்பத்தில் பேசலாம்). ஹெகலின் சிந்தனையிலும் முழுமைக் கோட்பாடு இருந்தது. முழுமைக் கோட்பாடு ஹெகலிடமிருந்து மார்க்சுக்கு வந்தது. அதாவது ஒரு கிரமமான மாற்றம் உலகத்தின் உள் இயக்கத்தில் இருக்கிறது என்ற மார்க்ஸின் சிந்தனையின் ஒழுங்கை லையோத்தார் கேள்விக்குட்படுத்தினார். அதுபோல் மார்க்ஸ் எல்லாத்துறைகளிலும்-வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் தத்துவத்திலும் என்று பலதுறைகளில் தன் சிந்தனைமுறை ஒன்றை உருவாக்கினார். அதையும் லையோத்தார் கேள்விக்குட்படுத்தினார். இவ்வாறு மார்க்ஸின் உலக முழுமைச்சிந்தனையை லையோத்தார் பெருங்கதையாடல் என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட பெருங்கதையாடல்கள் பல எழுந்தன. உலகளாவியகோட்பாடு உருவாக்குவது அன்று வழக்கமாக இருந்தது. மனிதனை உய்விக்கவேண்டும் என்ற ஆசையில் தோன்றும் கோட்பாடுகள் ஆசையைப் பிரதானமாக வைப்பதால் அவை பெருங்கதையாடல்களாகின்றன. மனித ஆசையிலிருந்து கோட்பாடு விடுபடவேண்டும்.

இந்தப் பெருங்கதையாடல் என்ற விசயமும் தமிழில் பேசப்பட்டது. புதிய விசயங்களைப் பாஷனுக்குப் பேசும் சிலர் இருக்கிறார்கள். அப்படிப் பேசுபவர்கள் மத்தியில் இப்பேச்சு அடிபட்டது.
அதுபோல் முக்கியமான இன்னொரு விசயம் பற்றி அமெரிக்க மார்க்சிய விமரிசகரான பிரடரிக் ஜேம்சன் (Frederic Jameson) கூறுகிறார். அவர் மார்க்சிய சிந்தனையாளரான எர்னஸ்ட் மென்டல் (Ernest Mendal) என்பவரின் "பிந்திய முதலாளியம் (Late Capitalism)" என்ற கருத்தாக்கத்தை ஏற்கிறார். இவர் முதலாளியம் தன் பண்பை மாற்றிக்கொண்டு வளர்கிறது என்று கூறினார். மார்க்ஸ் அறிந்த முதலாளியம் இன்று உலகில் பெரும்பாலும் இல்லை என்றார் இவர். இவரின் விளக்கத்தைப் பின்பற்றும் ஜேம்சன் அமெரிக்காவில் நார்த் கரலினா நரத்தில் உள்ள டுயூக் பல்கலைக் கழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். உலகப் புகழ் பெற்ற இலக்கிய விமரிசகர். எனக்கும் அவருக்கும் கடிதப் பரிமாற்றம் இருந்தது. அவரைப் பற்றி ஏன் கூறுகிறேன் என்றால் அவர் எழுதி அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பாடபுத்தகமாக இருந்த Postmodernism, Cultural Logic of Late காபிடலிசம் (பின்-நவீனத்துவம் பிந்திய முதலாளியத்தின் பண்பாட்டு வெளிபாடு) என்ற நூல் உலகப் புகழ் பெற்ற பின்-நவீனத்துவ விளக்கமாகும். இவரது விளக்கம் சற்று வேறு விதமானது. பின்-நவீனத்துவம் இவருக்கு ஒரு பண்பாட்டு வெளிப்பாடாகும் .சென்னையில் கார் சொந்தமாக வைத்திருப்பவன் பின்பற்றும் பண்பாடு ஒன்று; குடிசையில் வாழும் கூலித்தொழிலாளி பின்பற்றும் பண்பாடு இன்னொன்று. பொருளாதாரத்துக்குத் தக்கபடி பண்பாடு அமையும். மாறும்.

அதாவது "பிந்தியமுதலாளியம்" என்பது முதலாளியத்திலிருந்து சற்று மாறுபட்டது. முதலாளியத்தில் உடல் உழைப்பை வலியுறுத்தினால் "பிந்திய முதலாளியம்" அறிவு உழைப்பைப் பற்றிக் கூறும். அதாவது கணினி முறை உழைப்பு பற்றிக் கூறுகிறேன். அந்தப் பிந்திய மார்க்சியத்தின் பண்பாட்டு வெளிப்பாடுதான் பின்-நவீனத்துவம். இவ்விளக்கம் லையோத்தாரின் விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் கவனித்திருப்பீர்கள். பழைய மார்க்சியக் கருத்தான (Orthodox Marxist idea) பொருளாதாரத்தினடிப்படையில் உருவாவதுதான் பண்பாடு என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. பின்-நவீனத்துவத்தை மார்க்சீயர்கள் ஏற்கவேண்டும் என்பது ஜேம்சன் கருத்து. இந்திய மார்க்சீயர்கள் ஏற்பதில்லை என்பதை அறிந்திருப்பீர்கள்.

இன்றைய எல்லாச் சிந்தனைகளும் மார்க்சியத்தை அறிந்தே நடையிடுகின்றன. அந்த அளவுக்கு மார்க்சியம் இன்று முக்கியமாகிவிட்டது. ஆனால் மார்க்சியமும் வளர்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்சியம் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் வேண்டிய ஒன்றல்ல.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com

தமிழவன் கட்டுரை மாதமிருமுறை (15 நாட்களுக்கு ஒருமுறை) பதிவேற்றப்படும்