Monday, November 29, 2010

கதை சொல்லி - மனுஷ்யபுத்திரன் (Manushyaputhran)



கதை சொல்லி - மனுஷ்யபுத்திரன் (Manushyaputhran)

லிவி

ஞாயிற்றுக்கிழமையின் பின் மதியப் பொழுதில் நகரமே ஒரு தனிமை விரும்பியைப் போல் மந்தைவெளி பேருந்து நிலையம் நெரிசல்களைக் குறைத்துக் கொண்டு வெறுமையைப் பாடிக் கொண்டிருந்தது. சென்னையின் வாகன வியாபார இரைச்சலுக்கிடையில் அந்த மந்தமான கணங்களை மிக அரூபமாகவே உணர முடியும். மந்தைவெளி பேருந்து நிலையத்தில் இறங்கி செயின்ட் மேரிஸ் சாலையில் நடந்து கதை சொல்லிப் பகுதிக்காக மனுஷ்யபுத்திரனை அவரது வீடு மற்றும் உயிர்மை அலுவலகம் உள்ள அபிராமபுரத்தில் சென்று சந்தித்தோம். தன் மடிக்கணினியில் எதனையோ அலைந்து கொண்டிருந்தார். தமிழ்ஸ்டூடியோவில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்ததும்,வரவேற்று தன் அறையில் அமரச் சொன்னார்.


இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியில் செழுமை வாய்ந்தது கவிதை. நாம் வெறும் செய்யுட்களை மட்டுமே நம் சங்கப்பாடல்களில் காண முடியும். உரைநடைகள், சிறுகதை நாவல்கள் இவை யாவும் பிற மொழியில் இருந்து நாம் கடன் பெற்றுக் கொண்டவை மட்டுமே. கவிஞனை பிற எழுத்தாளர்களை விடுத்து மிகப் பெரியவன் எனப் பொது புத்தி கொண்டது நம் சமூகம்.பாரதிக்கு இணையென்று எந்த ஒரு சமகால எழுத்தாளனை குறிப்பாக கவிதை தவிர்த்து பிற எழுத்து வகையில் தமிழில் உச்சம் தொட்டவர்களை நாம் கருத மாட்டோம்.கவிதைக்கு மட்டுமே பேர் போனவன் பாரதி அவனைவிட உரைநடையில் கட்டுரையில் சிறுகதையில் என எத்தனைப் பேர் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றால் கவிஞன் மட்டுமே. இன்று தமிழ் நிலப்பரப்பின் ஜால்ராக் கூட்டங்கள் "தான் கவிஞன், தான் எழுதுவது கவிதை" என்று சொல்லியே சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்பிக் கொண்டிருக்கிறது பாவப்பட்ட சமூகம்.

இன்றுள்ள தமிழ் நவீன கவிஞர்களில் மிக முக்கியமா


கதைகளைக் கேட்க:

http://koodu.thamizhstudio.com/kadhaisolli_8.php




Friday, November 26, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (11)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (11)

வெங்கட் சுவாமிநாதன்

கடைசியில் எந்திரன் படத்தை வைத்துக்கொண்டு நாம் பெருமைப் பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என் கேள்வி, கவனிக்கவும். நான் எந்திரன் படத்தை ஒரு சினிமாவாக இல்லை, ஒரு வியாபாரப் பொருளாகவே எடுத்துக்கொண்டு தான் பேசுகிறேன். சினிமாவாகப் பேச தமிழில் படங்கள் நமது சினிமாவின் 80 வருட வரலாற்றில் ஏதோ ஒன்றிரண்டு தேரலாமோ என்னவோ.

திரும்பவும் சொல்கிறேன். சினிமாவாகப் பேசத் தான். பெருமைகொள்ள அல்ல. இதை நான் முன்னரே அவசியம் நேரும் போதெல்லாம் இத் தொடரிலேயே பல முறை சொல்லியே வந்திருக்கிறேன். கலாநிதி மாறன் சார் ரஜனி ஸார், சங்கர் சார், ரஹ்மான் சார் ஆக இந்த சார்கள் எல்லாம் தவிர அலகு குத்திக்கொண்ட, பாலாபிஷேகம் செய்த, மொட்டை அடித்துக் கொண்ட, யாகம் செய்த ரசிகர் எல்லோருமே ஒத்துக்கொண்ட, “இது வியாபாரம்” “சினிமாவே எடுப்பதே 150 கோடி ரூபாய் முதல் போட்டதே மக்கள் விரும்புவதைக் கொடுத்து லாபம் சம்பாதிக்கத்தான்” போன்ற பொன்மொழிகளை நினைவில் கொண்டு அதை வைத்துக்கொண்டு சில கேள்விகளைக் கேட்கலாம் கேட்க வேண்டும். சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதன் காரணமாகத் தான், தாத்தா கொள்கை என்னவாக இருந்தாலும் மாமிகள் கதைகள் தான் தொடராகும், ஜோஸ்யம், ராசி பலன், கர்நாடக சங்கீதம், தெய்வ தரிசனம், அருணாசல கார்த்திகை தீபம் எல்லாம் சன் டிவியில் காட்ட வேண்டியிருக்கிறது. தமிழினத் தலைவர் தமிழ் பெயருக்கு வரி விலக்கு கொடுத்தாலும், தமிழ் நாட்டில் அது சன் டிவி தான். கேடிவி தான்.

மற்ற இடங்களில் அது சூர்யாவாகும், உதயாவாகும், அங்கெல்லாம் சன் டிவி பெயர் செல்லுபடியாகாது தமிழினத் தலைவரும்/.தாத்தாவும் இந்த சந்தை நியாயங்களை, தர்மங்களைப் புரிந்து கொள்வார். கண்டு கொள்ளமாட்டார்.

எந்திரன் படத்தில் நாம் பார்த்து வாய்பிளந்த விஷயங்கள் எதையும் காட்டி நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமீப காலத்தில் நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொள்வது நம் சினிமா சம்பந்தப்பட்ட வரையிலான தொழில் நுட்ப வளர்ச்சி. எனக்கு நம்ம தமிழ் சினிமாக் காரர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும், இந்த தொழில் நுட்ப சமாசாரங்கள் எதுவும் அதிகம் புரிந்ததில்லை. படிகளின் உச்சியில் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் ரஜனி சார் தன் வலது காலை இடது கால் மேல் போட்டால் ரம்பம் அறுக்கற மாதிரி ஒரு சபதம் வரும். அந்த சபதம் தன் ஆள்காட்டி விரலை அசைத்தாலே கூட வரும். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டாலும் வரும். அந்த சபதம் வந்தால், சூப்பர் ஸடார் ஏதோ எதிரியை வீழ்த்துவதற்கு தன் பட்டாக்கத்தியை உருவி விட்டார் என்று ரசிகப் பெருமக்களுக்குச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அந்த ரம்பம் அறுக்கும் சப்தம் தான் வாளை உருவி காற்றில் வீசும் சப்தம் என்று சொல்லப்படுகிறதோ என்னவோ.

இந்த ஒலிப்பதிவு நான் வேறு எங்கும் காணாத புதுமை தான். . நம்ம தமிழ் சினிமாவில் யாரும் ரயிலேறினால் ரயில் நிலையத்தில் நம்ம காதலனையும் காதலியையும் விட்டால் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நம்ம ஊர் காதலி பிரயாணம் செய்யும் 21 கோச்சுகள் கொண்ட ரயிலில் தனியாகத்தான் இருப்பாள். அந்தக் கோச்சில் இன்னும் இரண்டு பேர் ஒப்புக்கு இருப்பார்கள். மற்றபடி ரயில் நிலையம் காலியாகத் தான் இருக்கும். அப்பத்தான் கமலஹாஸன் கிளம்பிவிட்ட ரயிலில் இருக்கும் ஸ்ரீதேவியை நோக்கி கதறிக்கொண்டும் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டும் வர சௌகரியமாக இருக்கும். இப்படி எத்தனையோ சமாசாரங்கள் தொழில் நுட்பங்கள் எனக்குப் புரிந்ததில்லை.

ஆர்ட் டைரக்டர் என்றால் கதை நடக்கும் இடமும் நம்பகமாக தோற்றம் தர உதவுகிறவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நம்ம சினிமாவில் டான்ஸ் பண்ணுவதற்கு பிரம்மாண்டமான மாயாஜாலங்கள் நிறைந்த செட் போடுகிறவர் என்று அர்த்தப் படுகிறவர். இதற்கு தோட்டா தரணியும், கிருஷ்ணமூர்த்தியும் போன்றவர்களை பயன்படுத்துவது மிகவும் கேவலப்படுத்தும் விஷ்யம். அவர்களை[ப் போன்ற ஓவியக் கலைஞர்களை மட்டுமல்ல, ஆர்ட் டைரக்ஷன் என்ற ஒரு கலைத் துறையையே கேவலப்படுத்துவதும் ஆகும். ஆனால் நம் சினிமாக் காரர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களுக்குத் தெரிந்தது வியாபாரம். கொள்ளையாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை.

மளிகை, ஜவுளிக்கடை வியாபாரம் போல, சினிமாவும் ஒரு வியாபாரம் என்பது தான் அவர்கள் புத்தியில் பட்டிருப்பது. அது தான் அவர்கள் பேணும் மரபும். Last Emperor படம் எடுக்க வந்தவர்களுக்கு பெய்ஜிங்கில் இருக்கும் அரண்மனையை வெளிப்புறத்தில் இருந்து கூட படம் எடுக்க சீன அரசு மறுத்து விட்டது. பின்னர் அந்த மாளிகை ஒரு செட்டில் வேறு நாட்டில் உருவாக்கப்பட்டது.அந்த செட் 40 பேருடன் ரஜனி சாரோ கமல் சாரோ டான்ஸ் பண்ணுவதற்கல்ல சைனாவின் கடைசி வாரிசுவின் கதை, புரட்சியில் அல்லாடும் கதையைச் சொல்ல பெய்ஜிங் அரண்மனை தேவைப் பட்டது. யாருக்காவது படம் பார்த்தவர் களுக்கு அது உருவாக்கப்பட்ட செட் என்பது தெரிந்ததா? அதில் அதை உருவாக்கிய கலைஞனும், இப்படிச் செயல்படும் ஒரு நாட்டின் கலைஉணர்வும், பண்பாடும், பெருமைப் படத்தக்க ஒன்று. சிவாஜி படத்துக்கும் யந்திரன் படத்துக்கும் போட்ட செட் கலையும் இல்லை. அதை வேண்டிய தயாரிப்பாளரோ, இயக்குனரோ அல்லது அதைப் பார்த்து வாய்பிளக்கும் சமூகமோ,சினிமா சம்பந்தப்பட்டவர்கள் இல்லை.

திமுக மாநாடுகளுக்கு பிரம்மாண்ட அரண்மனைத் தோற்றம் தரும் செட் உருவாக்குகிறவர்களுக்கும் தோட்டா தரணிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. இங்கு தோட்டா தரணி ஒரு கலைஞராக இல்லை, தச்சு வேலை, செங்கல் கட்டிட வேலை செய்யும் மேஸ்திரியாகத் தான் கீழிறங்கியிருக்கிறார். இங்கு மட்டுமல்ல தமிழ் சினிமா இந்தமாதிரியான கலைஞர்களை எங்கெல்லாம் டான்ஸ் ஆடுவதற்கு செட் போட அமர்த்தி வருகிறார்களோ அந்த வரலாறு முழுதுமே ஒரு கேவலப்பட்ட வரலாறு தான். ஆர்ட் டைரக்டருக்கு தயாரிப்பாளர் இயக்குனர் சொன்னதைச் செய்தால் பணம் கிடைக்கிறது என்பது வேறு விஷயம். வெற்றிகரமான வியாபாரம் என்பதும் வேறுவிஷயம்,. ஆனால் இதெல்லாம் சினிமா சம்பந்தப் பட்ட சமாசாரங்கள் இல்லை. பணக் கொழுப்பில் வளர்ந்த டம்பங்கள்.

இது போலத்தான் எந்திரன் படம் சம்பந்தப்பட்டவர்களும் நம் சமூகமும் பெருமைப்பட்டுக்கொள்ளும் எதுவும். சங்கருக்கு வித்தியாசமான கற்பனைகள் தோன்றுவது வழ்க்கம். அது அவர் பிராண்ட் மேதமை. சரி. தான் உருவாக்கிய ஒரு மனித யந்திரம் தன் பிரதிமை போன்ற ஒன்று தனக்கே எதிரியானால்…. சரி சுவாரஸ்யமான கற்பனை தான். இந்த சமாசாரத்தை நாம் ஏற்கனவே இந்த தொழில் நுட்ப பிரம்மாண்ட கற்பனை என்னும் டம்பங்கள் எல்லாம் தலைகாட்டாத காலத்தில் ஜெமினி ஸ்டுடியோஸின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பார்த்து விட்டோம். அதுவும் ஒரு வியாபாரச் சூழலில் வள்ர்ந்த எஸ் எஸ் வாசன் என்ற மனிதர் தந்தது தான். ஏதும் கலை அது இது என்று டம்ப புண்ணாக்குகள் பண்ணாத ஆனால் பொதுப் புத்திக்கு ஏற்கும் ஒரு கதையாக, படமாக நமக்குத் தந்திருந்தார். சுவாரஸ்யமான கதை சொல்லல். அதுவே அலெக்ஸாண்டர் டூமாஸின் கார்ஸிகன் ப்ரதர்ஸ் என்ற நாவலின் தழுவல் தான்.

ஆனால் நம் சாதாரண பொதுப் புத்திக்கும், நடிகர்களின் திறமைக்கும் ஏற்ற ஒன்றாக இருந்தது. அதை இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில், பாட்மான், சூப்பர்மேன், டெர்மினேட்டர் எல்லாம் பார்த்து தன்னை நவீனப் படுத்திக்கொண்ட 2010-ன் சங்கர் பதிப்பாக மேம்படுத்த நினைத்தால் அதையும் ஒரு அளவிற்கு நாம் ஒத்துக்கொள்ள முயலலாம். ஆனால் சங்கர் சாதாரண மனிதர் இல்லை. அவர் கால்கள் தமிழ் மண்ணில் பதிய மறுப்பவை. தமிழ் என்ன, இந்த மண்ணிலேயே பதிய கட்டாயம் மறுப்பவை. அவருடைய ரோபோ ரஜனி மாதிரியே உருவாகும். அந்தக் காலத்தில் ரஞ்சன் இரட்டை வேடத்தில் செய்ததை, இங்கு ரஜனி ரூபம் கொண்ட ரோபோ செய்யவேண்டும். ரஜனியே இரட்டை வேடம் போடலாமே. ரசிகர்கள் அடையும் பரவசம் சொல்லமுடியாதே. பாலாபிஷேகம் என்ன, தேனாபிஷேகமே செய்வார்களே கட் அவுட்டுக்கு. ஆனால் அது சங்கர் பிராண்ட் சிந்தனைக்கும் இயக்குனர் ஆளுமைக்கும் சரிப்பட்டு வராத சமாசாரம். . அவரது தனி ரக கற்பனை இதோடு நிற்பதில்லை.

ரஜனி என்கிற விஞ்ஞானி தன் காதலியோடு மாத்திரமில்லை இன்னும் நாற்பது பேரோடு பிரபு தேவா சொல்லிக்கொடுத்த டான்ஸாக இருக்கவேண்டும். அது ஆட வேண்டும். அந்த டான்ஸ் ஆட பெருநாட்டுக்கு அதுவும் மச்சு பிச்சுக்குத் தான் போயாக வேண்டும். இல்லையானால் ப்ரேஸிலிலோ அங்கு வேறு எங்கேயோ ஒரு பாலைவனத்தில் தான் டான்ஸ் பண்ணுவார், அதுவும் அந்த விஞ்ஞானி, மேரி ஈ. வோட் என்ற பெயர் கொண்ட ஒரு அயல் நாட்டுப் பெண்மணி தயாரித்த உடை அணிந்து கொண்டால் தான் மச்சு பிச்சுவில் ஐஸ்வர்யா ராயோடு ஆட முடியும். அந்த புதிய டிஸைன் ஆடைகளும் சங்கர் மாதிரி கற்பனை கொண்ட பெண்மணியாகத் தான் இருக்க வேண்டும். நம்ம ஊரில் ஊசி விற்கிறவர்களும், பகல் வேஷக் காரர்களும், தெருவில் மாஜிக் காட்டுகிறவர்களும் பாப் ம்யூஸிக் காரர்களும், வித விதமான கோமாளி உடைகளில் வருவார்கள். அந்த மாதிரி ஏகப்பட்ட டிசைன்களில். உடைகள் அணிந்துவ் வருவார் நம்ம சூப்பர் ஸ்டார். இது நம் தமிழ் சினிமா எல்லா ஹீரோ ஹீரோயின்களுக்குமான மரபு. ஒவ்வொரு டான்ஸிலும் 10 வித உடையலங்காரங்கள். இது இன்றைய விதி. 20 வருடங்களுக்கு முன் நல்ல குரலில் ரம்மியமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஹரிஹரன் இப்போது மாசத்துக்கு ஒரு ஸ்டைலில் உடை உடுத்திக்கொள்கிறார். மீசை, தலை முடி, கிருதா எல்லாம் மாற்றிக்கொள்கிறார். இல்லையா? எல்லாம் நாம் வாழும் காலத்தின் கோலமோ அலங்கோலமோ. சினிமா கலாசாரம்.

நம் டான்ஸும் பாட்டும், உடைகளும் எல்விஸ் பெஸ்லியும் மைக்கேல் ஜாக்ஸனும் பாட்டிலும் கால் கைகளை வலித்துக் கொள்வதிலும் உடையிலும் செய்த கோமாளித்தனங்கள் அத்தனையையும் செய்தால் தான் அது பாட்டும் டான்ஸும் ஆகும் என்ற நினைப்பில் உருவாகிறவை கடந்த இருபது ஆண்டுகளாக. பெஸ்லியையும் ஜாக்ஸனையும் மீறி விட்டவர்கள் நம் சங்கர் சார் போன்ற இயக்குன மேதைகள். அவர்கள் பொது மேடைகளில், ஸ்டுடியோக்களில் தான் ஆடினார்கள் பாடினார்கள். டோரண்டோ போகிறேன், மச்சு பிச்சு போகிறேன் என்று கிளம்ப வில்லை..



படிமை (திரைப்பட பயிற்சி இயக்கம் தொடக்க விழா)



படிமை (திரைப்பட பயிற்சி இயக்கம் தொடக்க விழா)

நாள்: ஞாயிற்றுக்கிழமை , 28-11-2010

இடம்: No. 41, Circular Road, United India Colony, Kodambaakkam, Chennai 600026
Opposite to Liberty theater, neary by kodambakkam Park.

நேரம்: மாலை நான்கு மணியளவில் (4 PM)

வணக்கம் வாசகர்களே,

தமிழ் ஸ்டுடியோவின் கனவுத் திட்டமான "படிமை" திரைப்பட பயிற்சி இயக்கம் தொடக்க விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (28-11-2010) மாலை நான்கு மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் படிமை மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாணவர்களுடன், மேலும் பதினைந்து குறும்பட / இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எனவே இதில் கலந்துக் கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளவும்.

நவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான திரு. எஸ். ராமகிருஷ்ணன்அவர்கள் "படிமை" இயக்கத்தை தொடங்கி வைத்து வாசகர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

இடத்தை தெரிந்துக் கொள்ள... நிலப்படத்தை பார்க்க (Map)

http://thamizhstudio.com/thodarbukku.php

முகவரி:

No. 41, Circular Road, United India Colony, Kodambaakkam, Chennai 600026
Opposite to Liberty theater, neary by kodambakkam Park.

மேலும் விபரங்களுக்கு:

9840698236, 9894422268

--------------------------------------------------------------------------------------------------------

Thursday, November 25, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் புதுச்சேரி கிளைத் தொடக்க விழா மற்றும் அரிக்கன் மேடு ஆவணப்படம் வெளியீட்டு விழா



தமிழ் ஸ்டுடியோ.காம் புதுச்சேரி கிளைத் தொடக்க விழா மற்றும் அரிக்கன் மேடு ஆவணப்படம் வெளியீட்டு விழா

வணக்கம் வாசகர்களே,

தமிழ் ஸ்டுடியோவின் நிர்வாக வசதிக்காகவும், குறும்படங்களை பொதுவாக அனைத்து விதமான மக்களிடையேயும் கொண்டு சேர்க்கும் விதமாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் ஸ்டுடியோவின் கிளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தமிழ் ஸ்டுடியோ மூலம் குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து விதமான உதவிகளும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. மேலும், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த மாவட்டத்தில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். மேலும், குறும்படப் படைப்பாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும் இதுப் போன்ற கிளைகள் உதவும். இதன் மூலம் குறும்பட உலகம் விரிவடைவதோடு, மாற்று ஊடகத்திற்கான வாய்ப்பும் பிரகாசமாகும். இதன் முதல் கட்டமாக முதலில் புதுச்சேரியில் தமிழ் ஸ்டுடியோவின் கிளை தொடகப்படவிருக்கிறது.

நாள்: சனிக்கிழமை (27-11-2010)

இடம் : சாம்பர் ஆப் காமர்ஸ், பாரதி பார்க், புதுச்சேரி பொது மருத்துவமனை அருகில்

நேரம்: மாலை ஐந்து மணி (5.00 மணியளவில்)

சிறப்பு அழைப்பாளர்கள்:

திரு. பிரபஞ்சன் எழுத்தாளர்,
திரு. எ.மு. இராசன், புதுவை,
திரு. பாஸ்கர் சக்தி, திரைப்பட வசனகர்த்தா,
திரு. சந்தோஷ், திரைப்பட ஒளிப்பதிவாளர்,
திரு. ஆர். தணிகைத் தம்பி, புதுவை பத்திரிக்கையாளர்,
திரு. அன்பழகன், ஓவிய ஆசிரியர், புதுவை

நிகழ்வின் சிறப்பாக மாவீரர் நாள் வருகிறது. எனவே இரண்டு மணியளவில், எல்லாளன் திரைப்படம் திரையிடப்படுகிறது. எல்லாளன் போர்க்களத்தில் நேரடியாக பதிவு செய்த திரைப்படம்.

தொகுப்பு: கா. முருகன்,
அறிமுக உரை: யாழ் நிலவன்,
நன்றியுரை: கரிகாலன்.

நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


www.thamizhstudio.com




Tuesday, November 23, 2010

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய பத்தாவது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய பத்தாவது பௌர்ணமி இரவு

(10th Full Moon Day Film Screening)


அக்கினிப் பார்வை21-11-2010


ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று நிலா வெளிச்சத்தில், திரைப்படங்கள் பார்த்து, நிலா சோறு சாப்பிட்டு, நிலா வெளிச்சத்தில் திரைப்படங்களைப் பற்றி இரவெல்லாம் பேசி மகிழும் பௌர்ணமி இரவு இந்த மாதம் திட்டமிட்டபடி இனிதாக நடந்து முடிந்தது.

பௌர்ணமி இரவின் முதல் பகுதியாக குறும்படம் திரையிடல் தொடங்கியது, அதில் கணபதி இயக்கிய வாழ்க ஜனநாயகம் குறும்படம் திரையிடப்பட்டது.

வாழ்க ஜனநாயகம் படம் தமிழ் நாட்டில் பணநாயகம் எப்படி ஜனநாயகத்தை வீழ்த்துகிறது என்பதை பற்றிய பாடம். ஜனநாயக நாட்டில் பணம் வாங்கிகொண்டு அனைத்து கட்சிகள் சார்பாக செய்திகள் கருத்துகணிப்புகள் அனைத்து கட்சியுமே வெற்றிபெறும் என்று ஆருடம் சொல்லுவதும் அதை ஒரே தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளார் கட்சி கொடிகளின் வண்ணம் மாற்றி தலைல் கட்டி கண்டு அந்தந்த கட்சி தான் வெற்றி பெறும் என சொல்ல மக்கள் தலை பிய்த்துக்கொள்ள, “விடுங்கள் மக்களுக்கு தலையை பிய்த்துக்கொள்ளவாவது சுதந்திரம் இருக்கிறதே அது தான் ஜனநாயகம் என்ற வசனம் நிறையவே யோசிக்க வைத்து.

மிக நல்ல குறும்படம் நேரம் கிடைத்தல் நிச்சயம் பாருங்கள்.

அதை தொடர்ந்து அனைவரும் நிலா சோறு உண்டோம், மொட்டைமாடி சுற்றி தீப திருவிழா கோலாகலம், வாண வேடிக்கைகள் நடுவில் இங்கு மொட்டை மாடியில் மாற்று சினிமாவுக்கான தீப விழாவை நாம் கொண்டாடினோம்.

அதை தொடர்ந்து "தெ சிட்டி ஆஃப் லாஸ்ட் சில்ட்ரன்" எனும் பிரென்ச்சு படம் ஒளிபரப்பபட்டது. ஒரு சுயநலம் பிடித்த விஞ்ஞானி தன் குழந்தை பருவ ஆசைகளை நிறைவேற்றவும், அதிக சக்தி பெறவும், குழந்தைகளை கடத்தி அவர்களின் கனவுகளை திருடுகிறான் அவனிடம் மாட்டிக்கொண்ட தன் சகோதரனை எப்படி மீட்கிறான் டாம் எனும் கழக்கூத்தாடி என்பது தான் கதை.

மிக தொழிநுட்ப அம்சங்கள் நிறந்த அருமையான திரைக்கதையை கொண்ட இந்தபடம் லேசான குழபத்தையும் பெருமளவில் தொழிநுட்ப அழகையும் கொடுத்தது. அதை தொடர்ந்து வழக்கமான அரட்டை கச்சேரி ஆரம்பாமகியது, தமிழ் சினிமா, மாற்று சினிமா, கோவை என்கவுண்டர், மைனா என்று பல விடயங்களை மிக தீவிரமாக, தெளிவாக அலசினோம்.

அதிகாலை நெருங்க தொடங்கியவுடன் எங்களை தூக்கம் ஆர தழுவ அனைவரும் கிளம்பினோம்.

சரி ஒவ்வொரு பௌர்ணமி இரவும் நிகழ்வு தான் ஆனல் ஒவ்வொரு முறையும் நம்முடன் ஒத்த கருத்துடய நணபர்கள் கிடைப்பது தான் அதன் முதல் சுவாரசியம். இயந்திர கதியான உலகில் இயந்திரமாகவே மாறிவிட்ட நாம், நமக்கு பிடித்த விடயம் முதல், ஒரு நண்பருடன் பேசினால் கூட என்ன பலன் கிடைக்கும் என்று கணகிட்டு வாழும் மனிதர்களிடையே, மனிதான இருக்கும் ஒரு முயற்சி தான் பவுர்ணமி இரவு.

பல தரப்பட்ட மக்கள், பல தரப்பட்ட அனுபவங்கள், பல விடயங்கள், அனுபவங்கள் என்று சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்குமே ஒரு ஊக்குவிக்கும் சக்தியும், ஒரு களம், ஒரு அனுபவ கையேடு தான் பவுர்ணமி இரவு..

அட இதெல்லாம் படிச்சா புரியாது சார் வந்து அனுபவிக்கனும்..

(இந்த மாதம் முதல் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியை வழி நடத்தும் பொறுப்பு முருகேசன் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.)

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/ahdebI#



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)

(4th Shortfilm Screening Travel, Nanmangalam, Chennai)

அக்கினிப் பார்வை


சென்ற சனிக்கிழமை தமிழ்ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணத்திற்காக சென்னைக்கு அருகில் உள்ள மலைத் தொடர் மிகுந்த பசுமையான வனப்பகுதி கிராமமான நன்மங்கலத்திற்கு பயணமானோம்.

சென்னைக்கு மிக அருகில் கிராமம் போல் தோன்றினாலும், உண்மை அவ்வளவு தூரத்திற்கு நகரம் விரிந்துவிட்டது. நன்மங்கலம் கிராமம், நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைகும் இடையில் ஒரு புதுவித வாழ்க்கை மேற்கொள்கிறது. வனத்துறையின் சீறிய கட்டுப்பாடுகளால் இன்னும் அந்த காடு பிழைத்திருக்கிறது. இன்னும் அப்பார்ட்மெண்டுகள், ஐடி பார்க்குகள், தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவில்லை என்று ஒரு பக்கம் மனது மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் எப்பொழுது தாரைவார்த்து கொடுக்கபடுமோ என்ற பயம் உள்ளது நிஜம்.

அந்த காடுகளின் நடுவே இயற்கையுடன் இயற்கையாக ஐக்கியம் ஆகிவிட, அதுனுடன் மழை பெய்ததால் உணடான தென்றல் காற்று, இறைச்சல் இல்லாத இயற்க்கையின் சத்தம் இதனிடியே வாழும் கிராம மக்கள் கொடுத்துவைத்த்வர்கள் தான். சொர்கம் மன்ணிலே தான் இருக்கிறது.

ஒரு 30 வருடம் முன்பு சென்னை வாழ் மக்கள் எதிர்காலம் பற்றி நினைத்து பார்த்திருந்தால் கூவம் ஆற்றை இப்படி பாழ்படுத்தியிருக்கமாட்டார்கள். தங்களின் பிள்ளைகளுக்கே அவர்கள் விட்டு சென்றது துர்நாற்றம் வீசும் கூவம் தான். மக்கள் கொஞ்சம் யோசித்தால் நலம்.

இந்த இயற்கையுடன் இயற்கையாக இணைந்து சென்று கொண்டிருந்த நேரம் இருட்ட தொடங்கிவிட்டது. சரி இன்னும் குறும்படங்கள் திரையிடல் தான். நன்மங்கலம் கிராமத்தின் முக்கிய வீதியில் எப்பொழுதும் போல் நமக்கு முழு ஆத்ரவளிக்கும் சிறுவர் படையுடன் தான் நம்/......................

Read More.... http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_4.php



Monday, November 22, 2010

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 8



உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் – 8

பா.செல்வராஜ்

முப்பத்தி ஒன்பது வயது கமல் பதினைந்து வருடங்களாக தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். பி.காம் பட்டதாரி தனக்கு மனக்குழப்பம் அதிகமாகி சில வேலைகளில் மனம் செயல்படாமல் வெறுமை நிலைக்கு ஆளாகி விடுவதாகவும், யாரைப் பார்த்தாலும் சமீப காலமாக கோபம் அதிகமாக வருவதாகவும், மனைவியிடத்தும் சங்கடம் அதிகமாகிக் கொண்டே போவதாகவும் கூறி தன் நடத்தைகளை சரி செய்துகொள்வதற்காக ஆலோசனைகளை வேண்டினார்.

கமலுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மகள் நான்காம் வகுப்பும், மகன் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். அவரின் மனைவி எம்.ஏ பட்டதாரி. இரண்டு வருடமாக ஓர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மனக்குழப்பம், கோபம் இதுதவிர வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளனவா என அவரிடம் வினவினேன். மனம் வெறுமையடையும் போது மனதில் எந்த உணர்வும் இல்லாதது போன்று உணர்கிறேன், கோபம் அதிகமாகும் போது மனப்பதட்டம் அதிகமாகி கைகள் இரண்டும் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன, சில நாட்களாக எதைப்பற்றியுமே சிந்திக்க முடிவதில்லை. மனைவி மீதும் உடன் பணியாற்றுபவர்கள் மீதும் அளவு கடந்த கோபம் வருகிறது. குழந்தைகளும் சில சமயம் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றனர். பெரிய மகள் தொடக்கத்திலிருந்தே நன்கு படிப்பதில்லை. அவளுக்கு மறதி அதிகம் என்று கமல் கூறினார்.

உங்கள் குடும்பத்தை பற்றி கூறுங்கள் என அவரிடம் வினவினேன். தனது குடும்பத்தை பற்றியும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் கமல் விவரமாக கூறினார். கமலின் குடும்பம் ஏழ்மையானது. அவர் உடன் பிறந்தவர் இரு தம்பியர். இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாகள். ஒரு தம்பிக்கு திருமணம் முடிந்துவிட்டது. இன்னொரு தம்பிக்கு பெண் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒருவருடத்திற்கு முன்பு கமலின் தந்தை இறந்துவிட்டார். அதிகம் படிக்காத கமலின் தந்தை குடும்ப உறுப்பினர்களிடம் சற்று கறார் பேர்வழி மனைவியிடமும், குழந்தைகளிடமும் மிகவும் கண்டிப்புடனும் நட்ந்து கொள்வார். இதனால் கமல் உள்பட மகன்கள் யாரும் அப்பாவிடம் சகஜமாக பழகியதோ பேசியதோ கிடையாது. கமல் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் வந்த பிறகு அவ்வப்போது சென்று அம்மா அப்பாவை பார்த்துவிட்டு தேவைகள் ஏதுமிருந்தால் நிறைவேற்றிவிட்டு வருவார். தற்போது கமலின் தாய் அவர் தம்பிகளின் பராமரிப்பில் இருந்து வருகிறார். கமலுக்கு அவர் உறவினர் அனைவரிடமும் நல்ல உறவு உண்டு. அடிக்கடி அவர்களை சந்திக்கவும் செய்வார். அப்போதெல்லாம் தன் உறவினர்களை மகிழ்விக்க அவர்களோடு சேர்ந்து அளவாக மது குடிப்பது உண்டு. ஆனால் பிற சமயங்களில் கமல் மது குடிக்க மாட்டார், வேறெந்த கெட்ட பழக்கமும் அவருக்கு கிடையாது.

கமலுக்கும் அவர் மனைவிக்கும் சில வருடங்களாக சிறிது மனத்தாங்கள். தன் கணவர் தன் குழந்தைகளுக்கு வேண்டும் என எதையும் சேமித்து வைக்காமல் சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை அவர் வீட்டினருக்கே செலவு செய்து விடுகிறார் என கமலின் மனைவிக்கு வருத்தம். அதை தன் மனைவி சொல்லிக் காட்டும் போதெல்லாம் கமலுக்கு கோபம் தலைக்கேறி கணவன் மனைவி இடையே கடுமையான சண்டை நடந்து அடிதடியில் முடிந்துவிடும். உண்மையில் கமலும் அளவுக்கு மீறி எதையும் தன் குடும்பத்தினருக்கு செய்வது கிடையாது. அதே சமயத்தில் அவர்களை கஷ்டத்திலும் விடாமல் முக்கிய தேவைகளை நிறை வேற்றி விடுவார். ஆயினும் மனைவி இப்பிரச்சனைக்காக சண்டையிடும் போது “ஒருவேளை நான் அவ்வாறு தான் நடந்து வருகின்றேனோ” என்ற சுய சந்தேகம் கமலுக்கு ஏற்படுவதுண்டு. சொத்து வாங்கிய விஷயங்கள் பலவற்றை சில நண்பர்கள் பேசும்போது, தன்னிடம் சேமிப்போ, சொத்துக்களோ இல்லை என்று நினைக்கும் போதும் இச்சந்தேகம் கமலின் மனதில் வலிமை அடையும்.

கமலின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் இரண்டு விஷயங்கள்தான். முதலாவது அவர் தந்தையின் இறப்பு. சிறு வயதிலிருந்தே தந்தையுடன் சரியாக பேசாத பழகாத கமல் மனதில் தன் தந்தைக்கு எதுவும் செய்யவில்லையோ என்ற மனத்தாங்கள் ஆழ்மன அளவில் உள்ளது. உறவினர்களிடம் நல்ல தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களை மரியாதையோடும் நடத்தி வருகின்ற கமலின் நடத்தையிலிருந்தே அவர் மனிதர்களிடம் பாச உணர்வு மிக்கவர் என்று தெரிந்துகொள்ளலாம். மேலும் தந்தை இறந்த பிறகுதான் கமலின் மனப்பிரச்சனைகள் தீவிரமடைந்திருகின்றன. எனவே தந்தை பாசமும், அவரின் இழப்பும் தீவிரமான மனச்சோர்வை கமலுக்கு உண்டாக்கியிருக்கிறது.

இதனிடையே வேலைக்கு செல்ல ஆரம்பித்த கமல் மனைவி வெளி உலக அனுபவத்தினால் கிடைத்த மன தைரியத்தில் வருகிற வருமானத்தில் கணிசமாக உங்கள் வீட்டுக்கு செலவு செய்கிறீர்களே என போர்கொடி தூக்கியுள்ளார். தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியது என் கடமை. அதை இவள் கேட்கிறாளே என்பதே கமலின் கோபத்திற்கு காரணம். பிரச்சனைகளை சமாளிக்கவும் முடியவில்லை வெளியில் சொல்லவும் முடியவில்லை என்ற நிலையில்தான் கை நடுக்கம் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆழ்மனதில் தீவிரமான உணர்ச்சிகள் அடக்கப் பட்டிருந்தால் அவை உடல் நோயாக ஏதாவதொரு வகையில் வெளிப்படலாம். இதற்கு மாற்ற நோய் (Conversion disorder) என உளவியல் பெயர். தந்தை இறந்த மனச்சோர்வும், மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத மனக்குழப்பமுமே கைநடுக்கமாக வெளிப்பட்டுள்ளது. குழந்தைகள் படிப்பில் கவணம் செலுத்த முடியாமல் போனதும் வீட்டில் பெற்றோர் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்வதால் ஏற்படும் மன அழுத்தமும், பெற்றோர்களின் கவனிப்பின்மையுமே ஆகும்.

இவையாவற்றையும் கமலுக்கு விளக்கிக் கூறி பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினேன்:-

கமல் தன் மனைவியிடம் “நான் உனக்கும் குழந்தைகளுக்கும் வஞ்சனை செய்து என் குடும்பத்திற்கு இரகசியமாக எதுவும் செய்வதில்லை என்பதை தெளிவாக விளக்க வேண்டும். தகவல் பரிமாற்ற கோளாறினால்தான் கமலின் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கமல் தன் மனைவியின் ஆதங்கத்தை சரிசெய்து விட்டாலே அவர் தன் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தல், குடும்பத்தினருக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல் என அனைத்தையும் மகிழ்வோடு செய்ய வாய்ப்பு ஏற்படும்.

கமல் மனைவி தற்போது வேலைக்குச் செல்வதால் அவர் இரட்டை பாத்திரத்தில் – தொழிலாளியாககும், குடும்பத்தலைவியாகவும் கடமையாற்ற வேண்டியுள்ளது. அவர் அடிக்கடி கோபப்படுவதற்கு காரணமும் இதுவே. எனவே அவரின் பணிப் ப்ழுவை குறைக்கும் வண்ணம் கமல் வீட்டு வேலைகளில் அவர் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும். குழந்தைகளை கவணித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உதவி செய்வதே பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்.

குழந்தைகள் படிப்பு காரணமாக கவலை கொள்ளத் தேவையில்லை என்ன வேலையிருந்தாலும் தினமும் மாலை ஆறு மணிக்கு குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களை படிக்க பழக்க வேண்டும். கமலோ அல்லது அவர் மனைவியோ, யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். நாளடைவியில் குழந்தைகள் தானாக நன்றாக படிக்கத் தொடங்கிவிடும்.




Sunday, November 21, 2010

கதை சொல்லி - இந்திரா பார்த்தசாரதி (Indhira Parthasarathi)


கதை சொல்லி - இந்திரா பார்த்தசாரதி (Indhira Parthasarathi)

ஆதவன்

சென்னையில் மழை என்பது மிக அசாதாரமான ஒன்று. உலகில் உள்ள எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மழையை ரசிக்க, சென்னை வாசிகள் மட்டும் தன் நெஞ்சாங்கூட்டில் அந்த ரசனையை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, எப்போதும் வெயிலை வசைப்பாடிக் கொண்டு ஆனால் அந்த வெயிலையே நிதமும் எதிர்பார்த்துக் கொண்டும் வாழும் ஒரு முரணான சமூகம். எங்க கிராமத்துல ஐப்பசி மாசத்துல மழை பெய்யும் பாரு.. அடேங்கப்பா.. என்று எப்போதும் சென்னையில் வாழும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் சொந்த இருப்பிடங்களைப் பற்றி உயர்த்திப் பேசிக்கொண்டே இருப்பர். ஆனால் அதே மழை சென்னையை தழுவி சென்றால் அவர்கள் அந்த ரசனையில் இருந்து நழுவி செல்வதே வாடிக்கை.

அப்படி யாரும் எதிர்பாராத ஒரு மழைக்கால மாலை நேரத்தில் மிக ரம்மியமான பொழுதில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் வீடு நோக்கி விரைந்தேன். காலையில் பேசும்போதே ஒரே மழையா இருக்கே.. உனக்கு பரவா இல்லையா? ரொம்ப சிரமப்படாதே? என்று என் மேலான தன் அக்கறையை வெளிப்படுத்தினார். ஆனால் பரவா இல்லை சார்..நான் இன்னைக்கே வந்துடுறேன் என்று சொல்லி, மாலையில் சாரல் மழையில் புறப்படலானேன். அடையார் எல்.பி. சாலையும், மந்தைவெளி ஆர். கே. மடம் சாலையும் நான் பார்த்த வரையில் சென்னையின் சாபக்கேடுகள். மழைக் காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டியம் கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம். இப்படிப்பட்ட நிலையில் சாரல் மழையை எங்கே ரசிப்பது?

ஒரு வழியாக இந்திரா பார்த்தசாரதி வீட்டை அடைந்தேன். ஏற்கனவே பலமுறை அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த சாரல் மழையில் அம்புஜம்பால் சாலையின் அழகை என்னவென்று சொல்வது? இருபுறமும் அடர்ந்த மரங்கள், கற்பனையைக் குழைத்து தூரிகை தெளித்து கட்டப்பட்ட வீடுகள்.. ஐந்து நொடியில் கடந்து விடக்கூடிய சாலை என்றாலும், அதன் அழகு பல வருடங்கள் மனதை விட்டு நீங்காது. அஸ்வரூடா அடுக்கு மாடிக் குடியிருப்பில் கதை சொல்லிப் பகுதிக்காக இந்திரா பார்த்தசாரதி அவர்களை சந்தித்தேன்.

நான்கைந்து மாதங்களாக தொடர்ந்து அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் நான் கதை சொல்லி இல்லப்பா.. என்ன விட்டுடேன்.. என்று மறுத்து வந்தார். ஆனால் விடாது கருப்பாக அவரை தொடர்ந்தேன். இறுதியில் "இவ்ளோப் பெரிய எழுத்தாளன் னு சொல்றாங்க.. இவனுக்கு ஒரு கதை கூட சொல்லத் தெரியலியே.. னு எல்லாம் ஏளனம் பேசுவாங்க" னு முன்னர் மறுத்ததை ஆமோதித்தார். ஆனால் "நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள். நல்ல வரலே னு சொன்னா நான் அதப் பயன்படுத்தாம விட்டுடுறேன்" என்று வாக்குக் கொடுத்தப் பின்னர் சம்மதித்தார். ஆனால் அவர் கதை சொல்லும் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதியக் கதைகளை கொஞ்சம் கூட அட்சரம் பிசகாமல் எங்கேயும் வார்த்தைகளை நிறுத்தி யோசிக்காமல் அடைமழை என அடித்து தீர்த்தார். "அற்றது பெற்றதெனில்" கதையை கூறும்போது இடையில் அது சார்ந்த பல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார். அந்தக் கதை எப்படி உருவானது, ஏன் அந்த முடிவை அப்படி வைத்தார், கதை மாந்தர்களின் பெயர்களை எப்படி உருவாக்கினார் என்பது உள்ளிட்ட பல விடயங்களை அது சார்ந்து கூறும்போது இப்படி ஒரு கதை சொல்லியா கதை சொல்ல மறுத்தார் என வியந்துதான் போனேன்.

இரண்டு கதைகளையும் சொல்லி முடித்தப் பின்னர் பொது விடயங்களைப் பேசலானார். தமிழ் இலக்கிய சூழல் தன்னுடைய ஆதங்கங்களை பகிர்ந்துக் கொண்டார். ஒரு முறை எட்டயபுரம் சென்று பாரதி வீட்டின் முன்னர் நின்றுக் கொண்டு அது தெரியாமல் அங்கே இருந்தவர்களை பாரதியின் வீடு எங்கே என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அதுதான் பாரதியின் வீடு என்பதற்கு அடையாளம் கூட அங்கே ஏதுமில்லை. மேலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர்தான் பாரதியின் வீட்டை வந்துப் பார்த்து விட்டுப் போவதாக வருத்தப்பட்டார். மகாகவி என்று கொடாடப்பட்ட பாரதிக்கே அந்த நிலை என்றால் இங்கே மற்ற படைப்பாளிகளுக்கு எந்த விதமான மரியாதை இருக்கும் என்றார். ஆனால் இதே போன்று வெளிநாடுகளில் இல்லை என்றும் அங்கே நடந்த சில சம்பவங்களை உதாரணமாக கூறி விளக்கினார். மார்க் ட்வெயின் எனும் அமெரிக்காவின் முதல் அங்கத எழுத்தாளர் (இத்தனைக்கும் அமெரிக்காவில் அப்போது எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்த காலக்கட்டம்). ஆனால் பின்னர் அவர் மரித்துப் போனபின்னர், அவரை அமெரிக்க சமூதாயம் கொண்டாடிய விதம் நம்மை எல்லாம் பார்த்து கைக்கொட்டி சிரிப்பது போல் தோன்றும். மார்க் ட்வெயின் தேநீர் குடித்த கடை முதற்கொண்டு அவர் வாழ்ந்த வீடுகள், அவர் புகைப்பிடித்த இடங்கள் என எல்லாவற்றிலும் அவரின் பெரிய உருவப்படங்கள் மாட்டி அந்த இடத்தில் தொடர்ந்து இலக்கியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.


மேலும், சோபன் (Chopan) என்கிற போலாந்தை சேர்ந்த பியானோ இசைக் கலைஞரை (இந்திரா பார்த்தசாரதி போலாந்தில் பேராசிரியராக பணியாற்றியவர்) அந்த சமூகம் எப்படி கொண்டாடியது என்பதையும் பகிர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அந்த நாட்டு பள்ளிக்குழந்தைகள் அவர் பியானோ வாசிக்கும்போது அங்கே ஆஜராக வேண்டும், இது ஒரு கட்டளையாக இல்லாமல் அந்தக் குழந்தைகளே விருப்பத்தோடு வந்து பியானோ இசைத்தலை கேட்டு மகிழ்கின்றனர். இதன் மூலம் அந்தக் குழந்தைகள் அந்த நாட்டின் இசைப் பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

அதற்கு மாறாக இங்கே எழுத்தாளர்களை எப்படி எல்லாம் அவமானப்படுத்தலாமோ அப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறார்கள். ஒரு முறை கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இறந்து விட்டதாக ஏதோ ஒரு இதழில் செய்தி வெளிவர, மறுநாள் அந்த இதழுக்கு "மன்னிக்கணும், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்" என்று பதில் எழுதினாராம் கல்கி. அதே போல் ல.ச. ரா. இறந்தபோது ஒரு இதழ் அவரது புகைப்படத்திற்கு பதில் ல.சு. ரங்கராஜன் அவர்களின் (காந்தி புத்தக ஆசிரியர், தி ஹிந்து) புகைப்படத்தை போட்டுவிட்டனர் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் நான் அவரை போல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பேச்சு கொஞ்சம் அரசியல் பக்க திரும்பவே, மொர்ராஜி தேசாய் அவர்கள் எப்போதும் அரசியல் தலைவர்கள் இறந்தால் அதற்காக அரசாங்க விடுமுறை விடுவதை விரும்பாதவர். ஆனால் அவரது தொன்னூறு சொச்சம் வயதில் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளிவர அப்போது இருந்த பிரதமர் இரண்டு நாட்கள் அரசாங்க விடுமுறை அறிவித்தார். ஆனால் அது தவறான செய்தி என்று பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாட்கள் அரசாங்க விடுமுறை.. மூன்றாவது நாள் உணமையாகவே தேசாய் இறந்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் மீண்டும் அரசாங்க விடுமுறை.. இப்படியாக தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் அரசாங்க விடுமுறையாகிப் போனது.. விடுமுறையை விரும்பாத தேசாய்க்கு ஒரு வாரம் விடுமுறை என்பது எவ்வளவு முரணான செய்தி என்று முதித்துக் கொண்டார்.

என்பத்தியாறு வயதில் கொஞ்சம் கூட கோபப்படாமல், ஒலிப்பதிவில் எவ்வித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்று மிகுந்த சிரமத்திற்கிடையில் கதை சொல்லிப் பகுதியை இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மிக சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் பல.

இனி அவரது கதைகளை கொஞ்சம் கேளுங்கள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)



கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_7.php



Thursday, November 18, 2010

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது பௌர்ணமி இரவு


21-11-2010


ஞாயிற்றுக்கிழமை, 21-11-2010

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இந்த மாதம் முதல் பௌர்ணமி இரவு நிகழ்ச்சி முழுவதும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: அட்சயம் . இயக்கம்: கணபதி

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்: Costa-Gavras இயக்கிய Le couperet (2005)

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0422015/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268




Tuesday, November 16, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)

ஆதவன்


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது குறுந்திரைப் பயணம் எதிர்வரும்சனிக்கிழமை (20-11-2010) அன்று சென்னையின் புறநகர் பகுதியான நன்மங்கலம் கிராமத்தில் மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருபதிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

(நன்மங்கலம் கிராமம் சென்னையிலிருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் வழியில் மேடவாக்கத்திற்கு அடுத்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இது இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி.. சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினர்கள் எடுத்த சிலப் புகைப்படங்களை பாருங்கள்).

http://www.chennaitrekkers.org/2009/07/nanmangalam-forest-walk-october-26-2008.html

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்திற்கு வர விரும்பும் ஆர்வலர்கள், V 51 பேருந்தில் ஏறி வெள்ளக்கல்லு பேருந்து நிலையத்தில் இறங்கிய பின்னர் கீழ்க்கண்ட எண்களுக்கு அழைக்கவும்.

இந்த திரையிடலுக்கு வழிவகுத்த நண்பர் ஜெயகாந்தன், மற்றும் நன்மங்கலம் கிராம வார்ட் உறுப்பினர் திரு. சமாதானம் நல்லமுத்து ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் மனமார்ந்த நன்றி.

மேலும் இந்த மாதம் முதல் தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணம் ஒருங்கிணைப்பாளராக கல்பாக்கம் கலையரசன் பொறுப்பேற்கிறார்.

உங்கள் கிராமத்தில் இதுப் போன்ற குறும்படத் திரையிடல்கள் நடைபெற வேண்டுமாயின் கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268



Monday, November 15, 2010

படைப்பாளிகள் - த. அறிவழகன்



படைப்பாளிகள் - த. அறிவழகன்

யாழ்


பால்ய வயதில் எத்தனை கதைகளை கேட்டு வளர்ந்திருந்தாலும் நம்முள் அச்சம் ஏற்படுத்தியிருக்கும் ஆவி கதைகளை நினைவு கொண்டால் இன்றும் நமக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அப்பாவிச் சிறுவன் வெளிப்படுவான்.மரத்தில் ஆடும் பாலித்தீன் பைகள்,எதிர் படும் கரிய உருவம், எங்கிருந்தோ வரும் சீட்டை ஒலி , தவளைகளின் துணை தேடும் படலத்தின இடைவிடாத இரைச்சல், இரவுப் பூச்சிகளின் தொடரும் ரீங்காரம் யாவும் நம்மை ஒரு சேர பயமுறுத்தும்.

சிறுவயதில் உறங்கும் போது அம்மாவை,அப்பாவை,பாட்டியை யாரையேனும் அணைத்துக் கொண்டு தூங்கி இருப்போம்.இதில் யாரிலும் சேராத ஸ்பரிஸம் தாத்தாவினுடையது.தாத்தாவின் திறந்த உடல்,அவரின் பெரிய‌ தொப்பை,அருகில் செல்லும் போது அடிக்கும் வெற்றிலை நெடி, பேச்சிலே குழைந்திருக்கும் அக்கறை,ஆழ்ந்த நித்திரையில் கட்டிப் பிடிக்க கைக்குள் அடங்காத பெரிய வயிறு இவ்வாறெ நீண்டு கொண்டு போகும் தாத்தாவின் நினைவுகள்.இவை யாவையும் உங்க‌ள் நினைவுக்குள் மீட்டெடுக்கும் கலை நேர்த்தி மிக்க குறும்படம் செவ்ளி. இதன் இயக்குநர் த.அறிவ‌ழகன்.

இனி இயக்குனர் திரு. த. அறிவழகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:


1.உங்கள் குறும்படம் மண் வாசனையை, அதன் மனிதர்களை அழகாய் படம் பிடிக்கிறது. உங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுங்கள்?

நெய்வேலிக்கு அருகில் உள்ள வெளிக்கூனங்குறிச்சி எனது ஊர். இது கடலூர் மாவட்டத்தில் இருக்கிறது. விவசாய கிராமமான இங்கு கரும்பு, நெல், மல்லாட்டை போன்றவை அதிகம் பயிரிடப்படுகின்றன. ஆரம்பத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த ஊர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வந்த பிறகு சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைப் பயன்படுத்தி தற்போது பசுமையான ஊராக இருந்து வருகிறது. எனது பத்தாவது வயதிலேயே என் பழைய கிராமத்தை நெய்வேலி நிறுவனத்திற்காக இழந்திருக்கிறேன். தற்போதைய ஊர் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. செவ்ளி குறும்படத்தின் பெறும்பான்மையான காட்சிகள் பதிவு செய்யப்பட்டது இந்த ஊரில் தான்.

2."செவ்ளி" அத‌ன் கதாப்பாத்திர‌ங்க‌ளுட‌ன் இருளின் ஒளிய‌மைப்பும் க‌தை சொல்கிற‌து. நீங்க‌ள் ஓளிப்ப‌திவின் போது ச‌ந்தித்த‌ தொழில்நுட்ப‌(technical) ரீதியிலான‌ ச‌வால்க‌ளை ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

இருட்டு வேலையே திருட்டு வேலைதான் என்று ஊரில் சொல்வார்கள். அதாவது திருட்டு வேலை என்பது பயத்துடன் செய்யப்படுவது. இருளில் மிகக்குறைந்த லாந்தர் வெளிச்சத்தில் இயல்பாய் பதிவு செய்ய சிரமமாகத்தான் இருந்தது. அதற்கேற்ற தகுதியாக DSR 450 என்கிற கேமராவை முதலில் தேர்வு செய்தோம். லாந்தர் வெளிச்சத்தை சரியாகக் கொண்டுவர சாதாரண 60 வாட்ஸ் குண்டு பல்புகளை பயன்படுத்தினோம். லாந்தர் வெளிச்சத்தை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் டிம்மரை பொறுத்தி பயன்படுத்தினோம். தாத்தாவும், பேரனும் பேசிக்கொண்டு நடக்கும்போது மட்டும் வெளிச்சத்தை தொடரச்செய்வதில் அதிக நேரம் பிடித்தது. படப்பிடிப்பு நடந்த இரவுகளில் பனிப்பொழிவு இருந்ததால் நீளமாக இணைத்திருந்த மின்சார வயர்களில் ஏற்பட்ட மின்கசிவு அச்சுறுத்தலாக இருந்தது. சிறு விபத்தும் நடந்து, பின் சரி செய்யப்பட்டது.

3. இக் குறும்ப‌ட‌ம் எழுத்தில் கீ.ராஜநாராயணனை நினைவு படுத்துகிறது. உங்கள் வாசிப்பு பழக்கம் பற்றி கூறுங்கள்.

சிறுவயது முதலே நூலகம் செல்லும் பழக்கம் எனக்கு இருந்தது. ஆரம்பத்தில் எதைப் படிப்பது என்று தெரியாமல் கையில் கிடைத்த புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பிறகு இலக்கிய அமைப்புகளோடு ஏற்ப்படுத்திக்கொண்ட தொடர்பினால் கவிதைகள் ,சிறுகதைகள், புதினங்களை தேர்ந்தெடுத்து வாசிக்கமுடிந்தது. தமிழின் பெரும்பான்மையான எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்திருக்கிறேன், படித்துக்கொண்டிருக்கிறேன். கீ.ரா. அவர்களையும் வாசித்திருக்கிறேன். இந்தி, உருது மொழிகளில் எழுதிய எழுத்தாளர் பிரேம்சந்த் அவர்களின் மொழி பெயர்க்கப்பட்ட கதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். அவரின் தாக்கம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன். கிராமத்து அனுபவத்தோடு வாழ்ந்தவன் என்பதும் காரணம்.

4. இக் கதைக்கான பின்னணி உங்கள் நினைவில் இருந்து பின்னப்பட்டதா இல்லை கற்பனையில் புனையப்பட்டதா அல்லது இரண்டின் கலவைகளா?

இரண்டின் கலவைகளாகத்தான் இதன் பின்னணி உருவாக்கப்பட்டது. சிறு வயது முதல் என் தாத்தாவுடன் எனக்கிருந்த நெருக்கம், அதன் காரணமாக அவருடன் வயலுக்கு காவலுக்குச் சென்ற அனுபவம், அங்கு காவல் முடியும் வரை சிறுவனான என்னை தக்க வைத்துக்கொள்ள அவர் சொல்லும் கதைகள், அவற்றை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் லாவகம் போன்ற நினைவுகளோடு, எனது கற்பனையையும் சேர்த்து புனையப் பட்டதுதான் "செவ்ளி" சிறுகதை & குறும்படம்.

5.தமிழில் சிறுகதைகளை குறும்படமாக்கும் முயற்சி மிக அரிதாகவே காணக் கிடைக்கிறது. இதற்காண காரணமாக எதைச் சொல்வீர்கள்.

குறும்படங்கள் இயக்கும் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் தன்மை உடையவர்களாக இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அடுத்தவர்களின் அனுபவங்களை, படைப்புகளை உள் வாங்குவதில் அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள் ஒரு காரணாமாக இருக்கலாம். மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் என தன்னை முன்னிலைப்படுத்த முனைவதும் காரணம் என்று நினைக்கிறேன்.

6.உங்கள் படத்தில் கலை அம்சத்தையும் தொழிற்நுட்ப ஒழுங்கமைவையும் காண முடிகிறது. உங்கள் திரைப்படத்தில் பணியாற்றிய பிற கலைஞர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

இந்தக் குறும்படத்தை ஒளிப்பதிவு செய்தவர் தினேஷ் ஶ்ரீனிவாஸ். இவர் ஒளிப்பதிவாளர் அமரர், ஜீவா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஸ்டைல், நாளைய பொழுதும் உன்னோடு, கலிகாலம் போன்ற திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர். படத்தொகுப்பு மதன் குணதேவா. இவர் வெயில், பூ, நேபாளி போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர். சிறப்பு சப்தம் எம்.ஜே. ராஜூ. இவர் தமிழின் பெரும்பான்மையான படங்களுக்கு சிறப்பு சப்தம்(Sound effect) செய்தவர். தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இசை க. திருமுருகன். இவர் புதியவர்.

7.குறும்படத்தை அறிவுரை கூறும் ஊடகமாகவும் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரப் படமாகவே நிறைய குறும்பட இயக்குனர்கள் கையாள்கிறார்கள். இதன் மீதான உங்கள் விமர்சனம் என்ன?.

செய்திப்படம், ஆவணப்படம், விவரணப்படம், விளம்பரப்படம், விழிப்புணர்வு என தனித்தனி பிரிவுகளில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறும்படம் இதில் வேறொரு தளம் என்பதை சரியாகப் புரிந்துகொள்ளும் நிலையில் சரியாகலாம் என்பது என் கருத்து.

8.குறும்படங்களின் கலை நேர்த்தியை தாண்டி இன்று திரைப்பட மசாலாவைப் போல் மாறி வரும் அபாயம் இருக்கிறது. இதை வரவேற்பீர்களா?.இதைப் பற்றிய உங்களின் பார்வை என்ன?

திரைப்பட ஊடகத்திற்கு மாற்று ஊடகமாக பலரும் பரவலாக பேசிவரும் நிலையில் குறும்படங்களில் கலை நேர்த்தியை தாண்டி இது போன்ற படங்களை எதிர்கொள்வதில் சங்கடம் ஏற்படவே செய்கிறது.

9.சினிமா உங்க‌ள் இல‌க்குக‌ளில் ஒன்றா அல்ல‌து குறும்ப‌ட‌ இய‌க்குன‌ராக‌வே தொடர்வீர்க‌ளா?

குறும்படம் என் இலக்குகளில் ஒன்று. திரைப்படம் இலக்கு.

10.நீங்க‌ள் ர‌சித்த‌ மிக‌ச் சிற‌ந்த‌ குறும்ப‌ட‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடுங்க‌ள்.

நான் பார்த்த வரையில் சிறந்தவைகளாக சில படங்கள் இருக்கின்றன. பார்க்காதவையாகவும் சிறந்த குறும்படங்கள் இருக்கின்றன எனவே வரிசைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக நினைக்கிறேன்.

இவரது குறும்படத்திற்கான திறனாய்வை வாசிக்க:

http://thamizhstudio.com/shortfilm_review_8.php

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...




Sunday, November 14, 2010

கதை சொல்லி - பாஸ்கர் சக்தி (Baskar Shakthi)



கதை சொல்லி - பாஸ்கர் சக்தி (Baskar Shakthi)

லிவி

மோனோலிசாவின் ம‌ர்ம‌ப் புன்னகைக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பை பாஸ்கர் சக்தியின் கதை சொல்லி நிகழ்வு எனக்கு அளித்தது. ஏதேனும் முகவரி கொடுத்து யாரையேனும் சந்திக்கச் சொல்லும் நேரங்களில் திருவிழா நாட்களில் பெற்றோரை தொலைத்துவிட்டு அழும் குழந்தையைப் போல் மாறிவிடுவேன்.சிறுவயதில் மோனோலிசா ஒவியங்களை அதிகம் திரைபடங்களிலும் நாடகங்களிலும் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் ஒரு கிருஸ்துவ கத்தோலிக்கப் புனிதர்களில், அருள் நிறைந்த மரியாள்களில் ஒருவர் என்றே நினைத்திருந்தேன். அவர் அந்த ஒவியத்தில் புன்னகை செய்வதாக என்றும் நினைத்ததில்லை.நாட்கள் செல்லச் செல்ல மோனோலிசா ஓவியத்தை பற்றி வாசிக்கத் தொடங்கியபோது அவர் மெலிதாக சிரிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஓவியத்தை உற்றுப் பார்க்கையில் அவர் சிரிப்பதாக‌ என்னால் சமாதான‌ம் கொள்ள முடியவில்லை.

பாஸ்கர் சக்தியை சந்திக்க சற்று தாமதமாகவே செல்ல நேர்ந்தது. அவரிடம் தொடர்பு கொண்டு தாமதமாக வருவதற்கு மன்னிப்பு கோரி விட்டு,பேருந்தில் ஏறி கே.கே நகரை வந்தடைந்தேன். எத்தனை முறை இந்த கே.கே நகருக்கு கேணி கூட்டத்திற்காக வந்திருப்பேன். வழக்கம் போல் இந்த முறையும் அழ‌கிரிசாமி சாலையை கண்டடைய முடியவில்லை.கூகுள் மாப்சை(google maps) என் ம‌ண்டையில் ப‌திவிற‌க்க‌ம் செய்தாலும் என்னால் உட‌ன‌டியாக‌ ஒரு இட‌த்தை க‌ண்டு பிடிக்க‌ முடியாது. ஏழு ம‌லை தாண்டி ஏழு க‌ட‌ல்க‌ள் தாண்டி! வ‌ரும் சோத‌னைக‌ளையெல்லாம் க‌ட‌ந்து இள‌வ‌ரிசியை ம‌ண‌முடிக்க‌ அவ‌ள் உயிரைக் காப்பாற்ற‌ புற‌ப்ப‌ட்ட‌ இள‌வ‌ர‌ச‌னின் ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌து. அந்த இளவரசன் என்ன ஆனான் என்று தெரிந்து கொள்வதற்கு முன் ஒரு கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்.

சென்னையில் வேலைக்கு வந்த எனக்குள் மிக அதிக எதிர்பார்ப்பு என்ன என்றால் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும்... கனவு நட்சத்திரங்களான எழுத்தாளர்களை சந்திக்கலாம்... அவர்களுடன் இலக்கிய விவாதங்கள் நடத்தலாம்... என பலப்பல கற்பனைகள். மஞ்சள் பைக்கு பதிலாக ட்ராவல் பாக்கையும்( Travel bag) சூட்கேசையும்(suitcase) எடுத்துக் கொண்டு வந்தேன். எந்


more: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_6.php



Wednesday, November 10, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் குறும்பட விற்பனை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்.



தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் குறும்பட விற்பனை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்.


ஆதவன்28-10-2010 : 11:03 PM

நாள்: சனிக்கிழமை (13-11-2010)
இடம் : தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
நேரம்: மாலை 4 முதல் இரவு 8 வரை

வணக்கம் வாசகர்களே,

தமிழ் ஸ்டுடியோவில் குறும்பட படைப்பாளிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் பொருட்டு அவர்களின் குறும்படங்களுக்கான விரிவானதொரு சந்தையையும் குறும்படப் படைப்பாளிகளின் நலன் காக்கும் பொருட்டு அவர்களுக்கான ஒரு சங்கத்தையும் தோற்றுவிக்கும் முதல் முயற்சியின் கலந்தாய்வுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (13-11-2010) நவம்பர் 13அன்று கோடம்பாக்கத்தில் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் மிக முக்கியமானதொரு பயனை உங்களுக்கு விளைவிக்கும் என்பது திண்ணம்.

தமிழ் குறும்படங்களை உலக அளவில் சந்தைப்படுத்துதல், குறும்படப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வழிவகை செய்தல், குறும்பட படைப்பாளிகள் ஒன்றிணைந்து குறித்த இடைவெளியில் ஊர் சுற்றுவது, அங்கே குறும்படங்கள் சார்ந்து விவாதிப்பது போன்ற பல திட்டங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

எனவே தமிழகம் முழுவதிலும் இருக்கும் குறும்படப் படைப்பாளிகள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆர்வலர்களுக்கு தங்குமிடம் தமிழ் ஸ்டுடியோவே செய்துக் கொடுக்கும்.

குறும்படத்தை நேசிக்கும் எவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கான உரிமையை, தேவையை அறிந்துக் கொள்ளுங்கள்.

வாருங்கள் சந்திப்போம்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268



Sunday, November 7, 2010

கதை சொல்லி - 'கோவை' ஞானி (Kovai Gnani)

கதை சொல்லி - 'கோவை' ஞானி (Kovai Gnani)

லிவி

கதை சொல்லிக்காக கோவை ஞானியை அணுகியபோது "நான் சிறுகதை எழுத்தாளனோ, நாவல் ஆசிரியரோ அல்ல! என்னிடம் என்ன கதை கேட்க போகீறீர்கள்?" என சற்றே தயங்கினார்." நீங்கள் எழுதிய கதை தான் கூற வேண்டும் என்று இல்லை, நீங்கள் படித்த கதைகள், உங்களுக்கு யாரேனும் சொல்லக் கேட்டு பிடித்த கதைகள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்" என்று எடுத்துக் கூறிய பிறகு ஒப்புக்கொண்டார்.கோவை ஞானி நவீனத் தமிழிலக்கியத்தில் உள்ள மிகச் சிறந்த விமர்சகர். அவருடைய பார்வை மார்க்ஸிய தன்மை கொண்டதெனினும் இலக்கியத்தை இலக்கிய விதிகளால் அணுகியவர்.அதனாலே மிகச் சிறந்த விமர்சகராக இன்றும் கொண்டாடப் படுகிறார். ஜெயமோகனின் முதல் சிறுகதையை சுந்தரராமசாமி பிரசுரிக்க மறுத்தபோது அக் கதையை முதலில் பிரசுரிக்க செய்தவர் ஞானி. இன்று ஜெயமோகன் தமிழ் கூறும் நல்லுலகின் தவிர்க்க இயலாத எழுத்தாளர். இதுவே அவர் புகழுக்குச் சான்று. கோவை ஞானியை கோவையில் உள்ள வெள்ளக் கவுண்டன் பிரிவு என்னும் அவர் ஊரில் கதை சொல்லிக்காக் சந்தித்தேன்.

கோவை ஞானி தன் கண்களை இழந்திருந்தார். அவரின் உதவிக்காக பெண் வாசிப்பாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தி வைத்திருந்தார். எம்மை இன்முகத்துடன் வரவேற்ற பிறகு அவர் தம் அறைக்கு அழைத்துச் சென்றார். அறை முழுதும் அலமாரியில், தரையில் என அடுக்கி வைக்கப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள். கதை சொல்லிக்காக பதிவு செய்யத் தொடங்கினோம். மிக ஆர்வமுடன் கதைகளை கூறத் தொடங்கியவர், மளமளவென கதைகளை சொல்லிக் கொண்டே போனார். மணிமேகலையிலிந்து கதைகள், தான் படித்து பிடித்த கதைகள், தன் சிறு வயதில் சந்தித்த நக்ஸல் தோழர் ஒருவர் என கதைகளை அடுக்கிக் கொண்டே போனார். தாத்தாவிடம் பேரன் கேட்கும் கதைகளை போல் மெய்மறந்து கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் அவர் மனைவி தேநீருடன் பலகாரங்கள் என அன்புடன் உபசரித்தார். பிறகும் கதைகளை தொடர்ந்து பதிவு செய்யத் தொடங்கினோம். அறையின் வெளியே அமர்ந்திருந்த என் நண்பன் கையை பார்த்து ஆருடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர் மனைவி.

கதைகளை பதிவு செய்து முடித்த பிறகு இலக்கியம் பற்றிய உரையாடல்களில் எங்கள் பேச்சு தொடர்ந்தது. ஜெயமோகன் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட நினைவுகள் சுவாரசியமானவை. ஜெயமோகன் தன் முதல் சிறுகதையை எழுதி சுந்தரராமசாமியிடம் கொடுத்திருக்கிறார். "இது கதையே இல்லை" எனக் கூறி அதை பிரசுரிக்க மறுத்து விட்டார். பின்னர் ஜெயமோகன் அதைக் கோவை ஞானியிடம் கொடுத்தருக்கிறார். அக்கதையை பாராட்டி அதை பிரசுரம் பண்ணியிருக்கிறார் கோவை ஞானி. இதை ஜெயமோகன் சுந்தரராமசாமியிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் "கோவை ஞானிக்கு இலக்கியம் தெரியாது" என்றிருக்கிறார். இன்றைக்கு ஜெயமோகன் அடைந்திருக்கும் உயரங்களை வைத்து நான் "சுந்தரராமசாமிக்கு இலக்கியம் தெரியாது!" எனக் கூறலாமா என்றார் கோவை ஞானி. முன்பெல்லாம் ஜெயமோகன் அடிக்கடி கோவை வருவாராம், வந்து ஞானியுடன் சிலப்பதிகாரத்திலிருந்து சமகால இலக்கியம் வரை பேசிக் கொண்டிருப்பார்களாம். ஜெயமோகன் தன் ஆசானாக் குறிப்பிட்டவர்களில் கோவை ஞானியும் ஒருவர். ஒரு முறை ஜெயமோகனிடம் "இந்திய ஜனநாயகம் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" என்ற கேள்விக்கு 'மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக' பதில் சொல்லியிருக்கிறார். அதற்கு ஞானி "ஜெயமோகன் ...........

மேலும்:


http://koodu.thamizhstudio.com/kadhaisolli_5.php




Tuesday, November 2, 2010

டூரிங் டாக்கீஸ்



டூரிங் டாக்கீஸ்

வண்ணநிலவன்

வண்ணநிலவன்

உ. த. ராமச்சந்திரன் எனும் இயற் பெயர் கொண்ட வண்ண நிலவன், பெயரைக் கூட கவிதையாக மாற்றிக் கொள்ளும் மிக சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் மணக்கும் திருநெல்வேலிக்காரர். தமிழ் இலக்கிய சூழலில் மிக அதிகமாக எழுதிக் குவித்தவர் அல்ல வண்ணநிலவன். ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து நாவல்கள், இரண்டு கவிதைத் தொகுதிகள் என மிதமாகவே எழுதிவந்துள்ளார்.

ஆனால் தனக்கு என ஒரு நடை, பெரிய வாசகர் வட்டம் என தன்னுடை குறுகிய படைப்புகள் மூலமே சாதித்தவர். இவர் எழுத்துக்கள் தற்கால எழுத்தாளர்கள் பலருக்கும் பெரிய உந்து சக்தியாகவே அமைந்தது. இவர் தமிழக அரசு விருது, இலக்கிய சிந்தனை விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர். சில காலம் துக்ளக் பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவும் இவருக்கு உண்டு. மேலும் 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் வசன கர்த்தாவும் இவரே.

வண்ணநிலவன் அவர்கள் தான் ரசித்த, நேசித்த, தமிழ் மற்றும் உலகத் திரைப்படங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொள்கிறார்.

வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.

நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.

ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.

என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.

இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.

தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.

அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.

காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.

ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.

சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.

I

என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.

தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.

அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அந்த டூரிங் டாக்கிஸீன் மேனேஜர் அப்பாவின் ஸ்நேகிதர். அதனால் அடிக்கடி அந்த டாக்கீசுக்குப் படம் பார்க்கச் செல்வேன்.

73ல் சென்னைக்கு வந்த பிறகு 'பிரக்ஞை' என்ற சிற்றிதழின் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பிலிம் சொசைட்டி' என்ற விஷயமே சென்னைக்கு வந்த பிறகுதான் தெரியும். அலியான்ஸ் பிரான்ஸ், அமெரிக்கன் சென்டர், ரஸ்யன் கல்ச்சுரல் சென்டர், பிலிம் சேம்பர் என்று பிற நாட்டுப் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அகிரா குரோசவா, பெர்க்மான், ட்ரூபா, கொடார்ட், பாஸ் பைண்டர் என்று உலகத்தின் தலை சிறந்த இயக்குனர்களின் படங்களைப் பார்க்க முடிந்தது. சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியை ஏழெட்டுத் தடவை பார்த்திருக்கிறேன். பை ஸைக்கிள் தீஃப், ட்ரூபாவின் 400 ப்ளோஸ் போன்ற பல படங்களை மூன்று நான்கு முறைகள் பார்த்திருக்கிறேன்.

1976 மார்ச் வாக்கில் இயக்குனர் ஜெயபாரதியும், நானும் கௌடியா மடம் சாலையில் இருந்த ஒரு பிரிவியூ தியேட்டரில் பி.வி. கராந்தின் சோமனுலுடி பார்க்கச் சென்றோம். அங்கே வந்திருந்த ருத்ரைய்யாவை ஜெயபாரதி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ருத்ரையா அப்போது சென்னை பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

ருத்ரையாவின் அறை லாயிட்ஸ் காலனியில் இருந்தது. அவரது அறையில் பிரபல பிரெஞ்சு சினிமா விமர்சகரும், பிரெஞ்சு 'நியூவேவ்' இயக்கத்தின் பிதாமகருமான ஆந்த்ரே பஸினின் புத்தகங்கள் இருந்தன. ஜேம்ஸ்மொனாகா என்ற சினிமா விமர்சகரின் சினிமா பற்றிய நூல்கள் பெர்க்மான் பட ஸ்கிரிப்ட்கள் என்று ஏராளமான சினிமா நூல்கள் இருந்தன. ஒரு வெறியுடன் எல்லாவற்றையும் படித்தேன்.

பிலிம் சொசைட்டி படங்கள், திரைப்படம் சம்பந்தப்பட்ட நூல்கள் இவை எல்லாம் சேர்ந்து என் திரைப்பட ரசனையையே மாற்றி விட்டன. 1976ல் 'துக்ளக்' பத்திரிகையில் பணியில் சேர்ந்தேன். சினிமா விமர்சனம் எழுத வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. மூன்று பேர்கள் சேர்ந்து ஒரு படத்தைப் பார்ப்போம். அவர்களுடைய கருத்துக்களையும சேர்த்து, கேலி, கிண்டல் கலந்து பல திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதினேன்.

16 வயதினிலே, உதிரிப்பூக்கள், சில நேரங்களில், சில மனிதர்கள் போன்ற சில நல்ல படங்களை துக்ளக் விமர்சனக்குழு பாராட்டவும் செய்தது. போகப்போக தமிழ்சினிமாவின் தரம் குறைந்து விட்டதால், துக்ளக்கில் சினிமா விமர்சனப் பகுதி நிறுத்தப்பட்டது. பிற பத்திரிகைகளைப் போல் இல்லாமல், துக்ளக்கின் சினிமா விமர்சனம், சம்பந்தப்பட்டஇயக்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களது பதிலும் பிரசுரிக்கப்பட்டது. இதைப் பிற்காலத்திய இயக்குனர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.

வயதாக ஆக, ஆக சினிமா பார்ப்பதற்காகத் தியேட்டருக்குச் செல்வது குறைந்து விட்டது. என்றாலும், இப்போதும் தொலைக்காட்சியில் அந்தக் காலப் படங்களைப் பார்க்கத்தான் செய்கிறேன். சுமார் 2000 படங்களாவது பார்த்திருப்பேன். கமர்சியல் சினிமாப் படங்களைப் பொறுத்த வரை எம்.ஜி.ஆர் நடித்த அந்தக்கால ஆக்சன் படங்களைத்தான் இன்றும் விஜய், குணால், ஜீவா போன்ற நடிகர்களின் படங்களிலும் பின்பற்றுகிறார்கள். 'காதல்' என்பது அன்றும், இன்றும் இந்திய திரைப்படத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது. காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நாலு காமெடி சீன்கள் இதுதான் இந்திய சினிமா.

கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டும், வில்லன்கள் மோதிக்கொண்டும் இருக்கிறார்கள். பி யூ சின்னப்பா காலத்திலிருந்து இந்த அடிப்படைக் கதையமைப்பை விட்டு தமிழ் சினிமா நகரவில்லை. பிற இந்திய மொழிகளிலும் இதே ஃபார்முலாதான் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, இந்திய சினிமா என்பது மசாலா கதை தான்.

பிற உலக மொழிப் படங்களில், குறிப்பாக ஆங்கிலப் திரைப்படங்களில் கூட முன்பெல்லாம் ஆக்சன், த்ரில்லர், சோசியல் காமெடி என்று தனித்தனி கதையமைப்புகளைக் கொண்ட படங்கள் வெளிவந்தன. இப்போது ஆங்கிலப் படங்களிலும் இந்த மசாலாத்தனம் சேர்ந்துவிட்டது.

பிற மொழிப் படங்களில் இல்லாத ஒரு தனி அம்சம் இந்திய சினிமாவில் மட்டும்தான் உண்டு, காதலித்தால் பாட்டு, துயரப்பட்டால் பாட்டு, டப்பாங் குத்துப் பாட்டு என்று இந்திய சினிமாவில் பாட்டுக்கள் ஏராளமாக இடம் பெறுகின்றன. சராசரி இந்தியனால் பாட்டு இல்லாத திரைப்படத்தைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. 'மெல்லிசை' என்ற தனியான இசைத்துறையே சினிமா பாடல்களால் ஏற்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான செவிக்கினிய இந்தி, தமிழ், மலையாளப் பாடல்கள் மனதைத் தொடத்தான் செய்கின்றன.

II

ஏராளமான திரைப்படங்களை நான் பார்த்திருந்தாலும், திரைப்படத்துறையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் என்றுமே எனக்கு ஏற்பட்டத்தில்லை. நண்பர் ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' சினிமாவுக்கு வசனம் எழுதியது தற்செயலாக நடந்தது. சில காட்சிகளுக்கு என்னையும் வசனம் எழுதச் சொன்னார். பணத்தேவைக்காகச் சில இயக்குனர்களிடம் சேர முயற்சித்ததுண்டு. ஆனால் நல்ல காலமாக அந்த முயற்சிகள் கை கூட வில்லை.

கமர்சியல் படங்கள் ஜனங்களுக்குச் சந்தோசத்தை தருகிற மாதிரி கலைப்படங்கள் என்று கூறப்படுகிற திரைப்படங்களும் சிலருக்கு சந்தோசத்தைத் தருகின்றன. கமர்சியல் படங்களுக்கென்று ஒரு பாணி, ஃபார்முலா இருப்பது போல் கலைப்படங்களுக்கும் ஒரு ஃபார்முலா இருக்கத்தான் செய்கிறது. அதனால் கலைப்படங்கள் என்பவை வானத்திலிருந்து குதித்தவை அல்ல.

அவையும ஃபார்முலா வசப்பட்டவையே. வேண்டுமானால் அவற்றை வித்தியாசமாக எடுக்கப்பட்ட, இயக்கப்பட்ட படங்கள் என்று கூறலாம். கதையை விவரிக்கும் பாணியை வைத்து கமர்சியல், கலை என்று பிரிப்பது இங்கே ஊறிப்போன வழக்கமாக உள்ளது. இது அபத்தமானது.

ஒரு தேர்ந்த சினிமா ரசிகனால் சத்யஜித் ரேவையும் ரசிக்க முடியும், அந்தக்கால சாந்தராம் படங்களையும் ரசிக்க முடியும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிக்கின்றனர். ரசிக்கவே முடியாத எழுத்து இருக்கிற மாதிரி ரசிக்கவே முடியாத படு குப்பையான திரைப்படங்களும் உள்ளன.

கமர்சியல் என்ற பேரில் அடிதடி டப்பாங்குத்துப் பாட்டு, காதல் காட்சிகள் என்ற அபத்தமும் தேவையில்லை. யதார்த்தம், கலை என்ற பேரில் நடந்து செல்வதையே ஐந்து நிமிடத்துக்குக் காட்டிக் கொண்டிருக்கவும் வேண்டாம். மிடில் சினிமா என்ற ஒன்றிருக்கிறது. பாசு காட்டர்ஜியின் 'ரஜினிகந்தா' போன்ற திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவரவேண்டும். இவை ரசனையை வளர்க்க உதவும்.

வெகு ஜன பத்திரிகைகளில் வருகிற சினிமா விமர்சனங்களோ, அல்லது சிற்றிதழ்களில் சினிமா பற்றிய புரிதலே இல்லாமல் எழுதப்படும் மேனா மினுக்கி விமர்சனங்களோ சினிமா ரசனைக்கு மேம்பட உதவாது. சினிமா என்றில்லை சங்கீதம், எழுத்து, ஓவியம், நாடகம் என்று எந்த கலைத் துறையாக இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்பது, பார்ப்பது, படிப்பது இவற்றின் மூலம்தான் ரசனை வளரும், தேர்ந்த சினிமா ரசிகனாக வேண்டுமானால் நிறையத் திரைப்படங்களைப் பார்ப்பது ஒன்றுதான் வழி.




மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (10)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (10)

வெங்கட் சுவாமிநாதன்

இவ்வளவையும் எழுதிக்கொண்டிருக்கும்போது நான் என்ன ஒரு வியர்த்தமான காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை சன் குழும தொலைக்காட்சி அனைத்துக்களும் அதன் அச்சு ஊடகங்களும் மாத்திரமில்லை, ஸான்ப்ரான்ஸிஸ்கோ விலிருந்து ஜப்பான் மலேசிய வரை ஒரு அகண்ட உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்கள் மாத்திரமில்லை, எந்திரன் படத்தையும் அதன் விளம்பர பகாசுரத்தனத்திற்கு ஆட்பட்ட எந்த நாட்டவரும், எந்த மொழியினரும் ஒரே ஏகோபித்த குரலில் அதன் பாராட்டில், அதன் வரலாறு காணாத மகத்துவத்தில் பிரம்மாண்டத்தில் மயங்கி மது உண்ட மிதப்பில் உழல்வதிலிருந்து தெரிகிறது.

இத்தகைய வரலாறு காணாத களேபர இரைச்சலில், நான் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்? யார் மதிக்கப் போகிறார்கள்? காலை ஐந்து மணிக் காட்சிக்கு மூன்று மணியிலிருந்து காத்திருப்பது என்ன, சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட ஃப்ளெக்ஸி போர்ட் விளம்பரஙக்ளுக்கு ஏதோ நாமக்கல் ஆஞ்சனேயருக்கோ, ஸ்ரவணபேல கோலா கோமதேஸ்வரருக்கோ அபிஷேகம் செய்வது போல, பாலாபிஷேகங்கள் என்ன, சூப்பர் ஸ்டாரை பழனி ஆண்டவனாக்கி எடுக்கும் காவடிகளின் ஊர்வலங்கள் என்ன, மொட்டை அடித்துக் கொண்ட பிரார்த்தனைகள் என்ன, அதன் வெற்றிக்கா அல்லது வரவேற்கவா, செய்யப்பட்ட யாகங்கள் என்ன, இந்தியாவின் எந்த மொழித் தொலைக்காட்சிச் சானலைத் தொட்டாலும் அது 24 மணி நேரமும் எந்திரன் பட பாடலையோ, விளம்பரங்களையோ அல்லது அதன் வினோத மாயா ஜாலங்களைப் பற்றிய பரவசம் அடைந்து பேசும் சங்கர் சார்... சூப்பர் ஸ்டார் சார்... ரஹ்மான் சார், உலக அழகி ஐஸ்வர்யா ராய். இதிலிருந்தெல்லாம் ஒரு கணம் தப்ப முடிந்ததில்லை. தொடர்ந்த விளம்பர அலைமோதல், அதற்கேற்ற இரைச்சலுடன்.

இவற்றுக்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் யார் மீளமுடியும்? இங்கு எதற்கும், கலை, இலக்கியம், சினிமா, நாடகம், பாட்டு, அரசியல், தமிழ், வரலாறு, பகுத்தறிவு, இத்யாதி எல்லாவற்றிற்கும் கடைசி அதாரிடியாகிய கலைஞர், தமிழினத் தலைவரே பார்த்து தன் பாராட்டுதலைத் தெரிவித்த பிறகு யார் என்ன சொல்லமுடியும்? சொன்னாலும் அதை மதிப்பார் யார்? இது வசூலிலும், மக்கள் வரவேற்பிலும் உலகளாவிய புகழிலும் இனி ரொம்ப காலத்துக்கு யாரும் மீறிச் சாதிக்க வியலாத ஒரு மைல் கல் சாதனையாக முதல் வாரத்திலெயே ஸ்தாபிக்கப் பட்ட பிறகு யார் என்ன மாற்று அபிப்ராயம் சொல்லமுடியும்? முணுமுணுக்கக் கூட முடியாது. யார் வாய் திறவாதிருக்கிறார்களோ அவர்களுக்கு இது அதிசயமாகப்படாதிருக்கலாம். உலகநாயகன் ஏதும் இது பற்றிச் சொல்லவில்லையோ, அல்லது என் பார்வையிலிருந்து தான் இது தப்பிவிட்டதோ? இருவருமே ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வது தான் வழக்கம்.

சரி, இதெல்லாம் ஒரு சினிமா படம் சம்பந்தப்பட்ட சமாசாரங்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு சினிமாவை, தங்களுக்குப் பிடித்த ஒரு நடிகரை தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு நடிகரின் ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்த கூத்துக்களும் கொண்டாட்டங்களும். இந்த ஆரவாரக் கொண்டாட்டத்தை, ரசனை என்பதை விட, மகிழ்ச்சி என்பதை விட ஒரு மாதிரியான பக்தி பரவசம் என்று சொல்ல வேண்டும். இங்கு தமிழ் நாட்டில் மாத்திரமில்லை, இந்தியாவில், உலகில் தமிழர் வசிக்கும் இடங்களில் மாத்திரமில்லை, மற்ற நாட்டு மக்களும், மற்ற மொழி பேசும் மக்களிடையேயும், வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஆரவார ரசனை நம் தமிழ் சூப்பர் ஸ்டார் நேரிலோ அல்லது சினிமாவிலோ காட்சி தந்தாலே போதும் என்ற எல்லை வரை சென்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஜப்பான் நாட்டில், அகிரா குரசவாவும், யோசிஜிரோ ஓஸூ போன்றவர்களைத் தந்த ஜப்பானிலா ரஜினிகாந்த் போன்றாரின் கோமாளிக்கூத்துக்களையும் சேஷ்டைகளையும் ரசிக்கிறார்கள்? சிவாஜி கணேசனை ஒரு நடிகர், என்றும், அதிலும் நடிகர் திலகம் என்றும் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே சிலை எழுப்பியும், அவர் ஒரு நடிப்புக் களஞ்சியம் என்றும் கொண்டாடும் தமிழ்நாட்டில் வேண்டுமானால், கர்நாடகாவில், கேரளாவில் செல்லுபடியாகாத கூத்தாட்டங்களுக்கு “தமிழ் நாடு தான் உங்களுக்கு ஏற்ற மண் கொண்டது, ரசிகர் பட்டாளம் கொண்டது என்று எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் அனுப்பி விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட நம் மண் போன்ற வளம் கொண்டது ஆந்திரா தான் என்று நினைக்கிறேன். என்.டி. ராமராவைக் கிருஷ்ணபகவானாக்கி கோயில் கட்டிவிடுகிறார்கள். இங்கு குஷ்புவுக்குக் கோவில். சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இன்னும் ஏன் கோவில் கட்டவில்லை என்று தெரியவில்லை. நான் சொல்ல வந்தது எல்லா குப்பை கூளங்களுக்கும், கோமாளிகளுக்கும் விளை நிலமும் வளர்நிலமும் தமிழ் நாடாகத்தான் இருந்து வருகிறது.

இதற்கும் சினிமாவுக்கும் ஏதும் உறவு கிடையாது. முற்றிலும் கிடையாது. இது இன்னும் ஆழத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாகத்தான் கொள்ள வேண்டும். கலாச்சாரத்தின் சீரழிவு என்று கொள்ள வேண்டும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ”எல்லோரும் நிர்வாணமாகத் திரியும் ஊரில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்,” என்று அப்படித்தான் இருக்கிறது, தமிழில் சினிமா என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று பார்வையாளர் மாத்திரமல்ல, தயாரிப்பாளர், நடிகர், அறிவாளிகள் சமூகம் எல்லோருமே ஒரே மனத்தினராய் தமக்குச் சொல்லிக்கொள்வது, மற்றவர்ககு அறிவுரை கூறுவதும். “சினிமாலே அப்படிச் செய்ய முடியாதுங்க. மக்கள் பாக்க வேண்டாமுங்களா” என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் சொல்வது, ‘இல்லிங்க கோவணம் கூட கட்டக் கூடாதுங்க. நிர்வாணமாத் தான் திரியணும். அதிலே நீங்கள் புதுமைகள் செய்யலாம். தொழில் நுட்பங்கள் கொண்டு வரலாம். அதையெல்லாம் மக்கள் வரவேற்பாங்க. ஆனால் ஒரு சின்ன துண்டு கோவணம் கட்டினாக்கூட ஒப்புத்துக்க மாட்டாங்க” என்பதைத்தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

இப்போது நாம் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல வரவேற்றுக் கொண்டாடும் ரஜனி காந்தின் சினிமா சேஷ்டைகள் கோமாளித் தனமே தவிர அது நடிப்போ, அது சினிமாவோ இல்லையென்றால், ஜப்பானிலே அவருக்கு இருக்கும் வரவேற்பைப் பாருங்கள் என்று சொல்வார்கள். எனக்கும் இது ஒரு புரியாப் புதிராகத்தான் இருக்கிறது. இந்த கோமாளித் தனங்கள் எல்லாம் அங்கு எப்படி செல்லுபடியாகிறது என்று. ஹோகேனக்கல் சமாசாரமோ இல்லை காவேரி தண்ணீர் சமாசாரமோ, அல்லது இது போல ஏதோ ஒரு விஷயத்தில் இங்கு வீராவேச முழக்கம் செய்துவிட்டு அடுத்த நாள் கட்டாயம் சென்று அவர் அடிக்கடி போய் மன்னிப்புக் கோரும் சொந்த ஊராகிய கர்நாடகத்திலேயே கூட அவரை வைத்து படம் எடுக்க யாரும் இல்லை. தமிழ் நாட்டைத் தவிர அவரை நடிகராக ஏற்று படம் தயாரிக்க யாரும் தயாரில்லை.

அப்படி இருக்க ஜப்பானிலா? ரஜினியும் சரி, நம் பத்திரிகைகளும் சரி, ரஜினி ரசிகர்களும் சரி, யாருக்கும் இது போன்ற சந்தேகங்கள் வந்ததில்லை. ரஜினி புகழ் பாடி என்ன செய்தி எங்கிருந்து வந்தாலும் அதை கேள்வியின்றி ஒப்புக்கொள்ளும் மனநிலை தான் நமக்கு. சரி, இதோ ஒரு காட்சி. ஜப்பானில் ரஜினியின் படத்திலிருந்து ஒரு பாட்டும் நடனமும் கொண்ட ஒரு காட்சி.யை ஜப்பானின் ரஜினி ரசிகர்கள் என்று இங்கு பெருமிதத்துடன் கொண்டாடப்படுபவர்கள் ரஜினி ஸ்டைலில் ஆடிப்பாடி ஆர்ப்பரித்து மகிழும் காட்சி.

இவர்கள் ரஜினி ரசிகர்களா, இல்லை ரஜினியின் கோமாளிக் கூத்தாட்டத்தைக் கேலி செய்து மகிழ்கிறார்களா என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். ரஜினி வேஷத்தில் ஆடுபவரும் சரி, அவரைச் சுற்றி நடனமாடும் மங்கையரும் சரி, அந்த தியேட்டரில் நிறைந்திருக்கும் பார்வையாளரும் சரி ரஜினியை ரசிக்கிறார்களா இல்லை கேலி செய்து மகிழ்கிறார்களா? இதில் ஏதும் கருத்து மாறுபாடு இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சரி அந்த காட்சி இதோ:

http://www.youtube.com/watch?v=hI7eDWyTaRE

இந்தக் காட்சியைப் பார்க்கும் நம் ஒவ்வொருவரும் நம்மில் பெரும் புகழ் பெற்றவராகவும் மக்களின் ஏகோபித்த அபிமானத்துக்குப் பாத்திரரான ஒருவர் இப்படி கேலிக்கு ஆளாவது கண்டு வெட்கப்படவேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட சூப்பர் ஸ்டாரும் சரி, நம் மக்களும் சரி, நம் மேதைகளும் சரி, எல்லோரும் நமது சூப்பர் ஸ்டாரின் லீலா விநோதங்கள் கண்டு பெருமிதம்தான் கொள்கிறார்கள்.

150 கோடி ரூபாய்கள் என்று சொல்கிறார்கள். இவ்வளவு பணம், இந்தப் படத்திற்கான விளம்பரம், இப்படம் எடுக்க எடுத்துக்கொண்ட காலம் இந்தப் படத்தின் எத்தனை பிரதிகள் உலகம் முழுதும் வினியோகிக்க எடுக்கப்பட்டன போன்ற புள்ளி விவரங்கள் நம்மைத் திக்கு முக்காடச் செய்கின்றன. இவையே படம் வெளிவரும் முன்னரே படத்தின் மகோன்னத குணங்களாக மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளன. இவை எதுவும் சினிமா சம்பந்தப்பட்டதல்ல.

இதுபற்றிச் சொல்லப்படுவன வெல்லாம் இந்தப் படத்தை 2010 –ன் விட்டலாசசாரியாவின் படைப்பாகத் தான் நம் முன் வைக்கின்றன. அம்புலி மாமா கதையின் இத்தலைமுறை பதிப்பு. சூப்பர்மேன், டெர்மினேட்டர், பாட்மேன் வகையறாக்கள் பார்வையாளர்களை வாய்பிளக்க வைக்கும் சமாச்சாரங்களே தவிர சினிமா என்னும் கலை சம்பந்தப்பட்டதல்ல. ஒரு காலத்தில் நம் தமிழ்ப் படங்களிலேயே கூட அபூர்வ சகோதரர்கள், விக்கிரமாதித்தன் கதை எல்லாம் மாயா ஜாலக் காட்சிகளை முன்வைத்தன. ஆனாலும் அவை அதீத கற்பனைகளேயானாலும் மனித வாழ்க்கையின் அவசியத்தைச் சொன்னவை தான். ஆனால் பாட்மேன், டெர்மினேட்டர் வகையறாக்களின் நம்மூர் காபியான எந்திரன், தன் இஷ்டத்துக்கு சம்பவங்களை அடுக்கிச் செல்லும் மனத்தைத் தான் நம் முன் வைக்கின்றன. ஒரே குறிக்கோள் என்னென்ன விசித்திர கற்பனைகள் செய்தால், பார்ப்போரின் வாய் பிளக்க வைக்க முடியும் என்பதாகத்தான் இருந்துள்ளது. உலக நாயகன் பற்பல வேஷங்களுக்கு ஏதுவாக கதையைக் கற்பனை செய்தால், நம் சூப்பர் ஸ்டார் வேஷங்களில் நம்பிக்கை வைப்பதில்லை, மாயா ஜாலங்களிலும் தன் கோமாளித்தனங்களிலும் நமபிக்கை வைத்துள்ளார்.

(தொடரும்)




Monday, November 1, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் மூன்றாமாண்டு தொடக்க விழா கொண்டாட்டாம்... . கடைசித் தேதி: நவம்பர் 15, 2010.



கொண்டாட்டாம்: 1

ஒரு நிமிட குறும்படப் போட்டி

வணக்கம் வாசகர்களே...

தமிழ் ஸ்டுடியோ.காம் எதிர்வரும் நவம்பர் 23 அன்று தன்னுடைய இரண்டாண்டுகளை நிறைவு செய்து மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ.காம் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதலாவதாக ஒரு நிமிடக் குறும்படப் போட்டியை நடத்தவிருக்கிறது. மிக பிரமாண்டமாக நடக்கவிருந்த இந்த விழா தமிழ் ஸ்டுடியோ.காம் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளால் கொஞ்சம் எளிமையாக கொண்டாடப்படவிருக்கிறது.

குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள்:

* குறும்படங்கள் ஒரு நிமிடத்திற்குள்ளாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் (Including Title Card).

* குறும்படங்கள் D.V.D. அல்லது V.C.D. வடிவில் தரமானதாக இருக்க வேண்டும்.

* இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கனவே பரிசுப் பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

*குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கிய காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இயக்குனரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.

* தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து குறும்படங்கள் தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவில் திரையிடப்படும்.

* குறும்படங்கள் 01-01-2009 க்குப் பின்னர் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.

* போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள் அனுமதிக்கப் பட மாட்டா.

* போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: நவம்பர் 15, 2010.

தெரிவு செய்யப்படும் படங்களில் முதல் படத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் மற்ற நான்குப் படங்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

இலக்கிய சிறுகதைகளை குறும்படமாக எடுப்பது வரவேற்க்கப்படுகிறது. இதற்கு சிறப்பு பரிசுகளும் உண்டு.

குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

349, Kannagi Nagar,
Okkiyam Thuraipakkam,
Chennai 600097.

மேலும் விபரங்கள் பெற:

9840698236, 9894422268