Tuesday, November 2, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (10)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (10)

வெங்கட் சுவாமிநாதன்

இவ்வளவையும் எழுதிக்கொண்டிருக்கும்போது நான் என்ன ஒரு வியர்த்தமான காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை சன் குழும தொலைக்காட்சி அனைத்துக்களும் அதன் அச்சு ஊடகங்களும் மாத்திரமில்லை, ஸான்ப்ரான்ஸிஸ்கோ விலிருந்து ஜப்பான் மலேசிய வரை ஒரு அகண்ட உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்கள் மாத்திரமில்லை, எந்திரன் படத்தையும் அதன் விளம்பர பகாசுரத்தனத்திற்கு ஆட்பட்ட எந்த நாட்டவரும், எந்த மொழியினரும் ஒரே ஏகோபித்த குரலில் அதன் பாராட்டில், அதன் வரலாறு காணாத மகத்துவத்தில் பிரம்மாண்டத்தில் மயங்கி மது உண்ட மிதப்பில் உழல்வதிலிருந்து தெரிகிறது.

இத்தகைய வரலாறு காணாத களேபர இரைச்சலில், நான் சொல்வதை யார் கேட்கப் போகிறார்கள்? யார் மதிக்கப் போகிறார்கள்? காலை ஐந்து மணிக் காட்சிக்கு மூன்று மணியிலிருந்து காத்திருப்பது என்ன, சூப்பர் ஸ்டாரின் பிரம்மாண்ட ஃப்ளெக்ஸி போர்ட் விளம்பரஙக்ளுக்கு ஏதோ நாமக்கல் ஆஞ்சனேயருக்கோ, ஸ்ரவணபேல கோலா கோமதேஸ்வரருக்கோ அபிஷேகம் செய்வது போல, பாலாபிஷேகங்கள் என்ன, சூப்பர் ஸ்டாரை பழனி ஆண்டவனாக்கி எடுக்கும் காவடிகளின் ஊர்வலங்கள் என்ன, மொட்டை அடித்துக் கொண்ட பிரார்த்தனைகள் என்ன, அதன் வெற்றிக்கா அல்லது வரவேற்கவா, செய்யப்பட்ட யாகங்கள் என்ன, இந்தியாவின் எந்த மொழித் தொலைக்காட்சிச் சானலைத் தொட்டாலும் அது 24 மணி நேரமும் எந்திரன் பட பாடலையோ, விளம்பரங்களையோ அல்லது அதன் வினோத மாயா ஜாலங்களைப் பற்றிய பரவசம் அடைந்து பேசும் சங்கர் சார்... சூப்பர் ஸ்டார் சார்... ரஹ்மான் சார், உலக அழகி ஐஸ்வர்யா ராய். இதிலிருந்தெல்லாம் ஒரு கணம் தப்ப முடிந்ததில்லை. தொடர்ந்த விளம்பர அலைமோதல், அதற்கேற்ற இரைச்சலுடன்.

இவற்றுக்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் யார் மீளமுடியும்? இங்கு எதற்கும், கலை, இலக்கியம், சினிமா, நாடகம், பாட்டு, அரசியல், தமிழ், வரலாறு, பகுத்தறிவு, இத்யாதி எல்லாவற்றிற்கும் கடைசி அதாரிடியாகிய கலைஞர், தமிழினத் தலைவரே பார்த்து தன் பாராட்டுதலைத் தெரிவித்த பிறகு யார் என்ன சொல்லமுடியும்? சொன்னாலும் அதை மதிப்பார் யார்? இது வசூலிலும், மக்கள் வரவேற்பிலும் உலகளாவிய புகழிலும் இனி ரொம்ப காலத்துக்கு யாரும் மீறிச் சாதிக்க வியலாத ஒரு மைல் கல் சாதனையாக முதல் வாரத்திலெயே ஸ்தாபிக்கப் பட்ட பிறகு யார் என்ன மாற்று அபிப்ராயம் சொல்லமுடியும்? முணுமுணுக்கக் கூட முடியாது. யார் வாய் திறவாதிருக்கிறார்களோ அவர்களுக்கு இது அதிசயமாகப்படாதிருக்கலாம். உலகநாயகன் ஏதும் இது பற்றிச் சொல்லவில்லையோ, அல்லது என் பார்வையிலிருந்து தான் இது தப்பிவிட்டதோ? இருவருமே ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வது தான் வழக்கம்.

சரி, இதெல்லாம் ஒரு சினிமா படம் சம்பந்தப்பட்ட சமாசாரங்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஒரு சினிமாவை, தங்களுக்குப் பிடித்த ஒரு நடிகரை தமிழ் சினிமா ரசிகர்கள், ஒரு நடிகரின் ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்த கூத்துக்களும் கொண்டாட்டங்களும். இந்த ஆரவாரக் கொண்டாட்டத்தை, ரசனை என்பதை விட, மகிழ்ச்சி என்பதை விட ஒரு மாதிரியான பக்தி பரவசம் என்று சொல்ல வேண்டும். இங்கு தமிழ் நாட்டில் மாத்திரமில்லை, இந்தியாவில், உலகில் தமிழர் வசிக்கும் இடங்களில் மாத்திரமில்லை, மற்ற நாட்டு மக்களும், மற்ற மொழி பேசும் மக்களிடையேயும், வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஆரவார ரசனை நம் தமிழ் சூப்பர் ஸ்டார் நேரிலோ அல்லது சினிமாவிலோ காட்சி தந்தாலே போதும் என்ற எல்லை வரை சென்றுள்ளது என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக ஜப்பான் நாட்டில், அகிரா குரசவாவும், யோசிஜிரோ ஓஸூ போன்றவர்களைத் தந்த ஜப்பானிலா ரஜினிகாந்த் போன்றாரின் கோமாளிக்கூத்துக்களையும் சேஷ்டைகளையும் ரசிக்கிறார்கள்? சிவாஜி கணேசனை ஒரு நடிகர், என்றும், அதிலும் நடிகர் திலகம் என்றும் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே சிலை எழுப்பியும், அவர் ஒரு நடிப்புக் களஞ்சியம் என்றும் கொண்டாடும் தமிழ்நாட்டில் வேண்டுமானால், கர்நாடகாவில், கேரளாவில் செல்லுபடியாகாத கூத்தாட்டங்களுக்கு “தமிழ் நாடு தான் உங்களுக்கு ஏற்ற மண் கொண்டது, ரசிகர் பட்டாளம் கொண்டது என்று எம்.ஜி.ஆர்களையும் ரஜினிகாந்த்களையும் அனுப்பி விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட நம் மண் போன்ற வளம் கொண்டது ஆந்திரா தான் என்று நினைக்கிறேன். என்.டி. ராமராவைக் கிருஷ்ணபகவானாக்கி கோயில் கட்டிவிடுகிறார்கள். இங்கு குஷ்புவுக்குக் கோவில். சிவாஜி கணேசனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இன்னும் ஏன் கோவில் கட்டவில்லை என்று தெரியவில்லை. நான் சொல்ல வந்தது எல்லா குப்பை கூளங்களுக்கும், கோமாளிகளுக்கும் விளை நிலமும் வளர்நிலமும் தமிழ் நாடாகத்தான் இருந்து வருகிறது.

இதற்கும் சினிமாவுக்கும் ஏதும் உறவு கிடையாது. முற்றிலும் கிடையாது. இது இன்னும் ஆழத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதாகத்தான் கொள்ள வேண்டும். கலாச்சாரத்தின் சீரழிவு என்று கொள்ள வேண்டும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ”எல்லோரும் நிர்வாணமாகத் திரியும் ஊரில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்,” என்று அப்படித்தான் இருக்கிறது, தமிழில் சினிமா என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று பார்வையாளர் மாத்திரமல்ல, தயாரிப்பாளர், நடிகர், அறிவாளிகள் சமூகம் எல்லோருமே ஒரே மனத்தினராய் தமக்குச் சொல்லிக்கொள்வது, மற்றவர்ககு அறிவுரை கூறுவதும். “சினிமாலே அப்படிச் செய்ய முடியாதுங்க. மக்கள் பாக்க வேண்டாமுங்களா” என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் சொல்வது, ‘இல்லிங்க கோவணம் கூட கட்டக் கூடாதுங்க. நிர்வாணமாத் தான் திரியணும். அதிலே நீங்கள் புதுமைகள் செய்யலாம். தொழில் நுட்பங்கள் கொண்டு வரலாம். அதையெல்லாம் மக்கள் வரவேற்பாங்க. ஆனால் ஒரு சின்ன துண்டு கோவணம் கட்டினாக்கூட ஒப்புத்துக்க மாட்டாங்க” என்பதைத்தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

இப்போது நாம் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல வரவேற்றுக் கொண்டாடும் ரஜனி காந்தின் சினிமா சேஷ்டைகள் கோமாளித் தனமே தவிர அது நடிப்போ, அது சினிமாவோ இல்லையென்றால், ஜப்பானிலே அவருக்கு இருக்கும் வரவேற்பைப் பாருங்கள் என்று சொல்வார்கள். எனக்கும் இது ஒரு புரியாப் புதிராகத்தான் இருக்கிறது. இந்த கோமாளித் தனங்கள் எல்லாம் அங்கு எப்படி செல்லுபடியாகிறது என்று. ஹோகேனக்கல் சமாசாரமோ இல்லை காவேரி தண்ணீர் சமாசாரமோ, அல்லது இது போல ஏதோ ஒரு விஷயத்தில் இங்கு வீராவேச முழக்கம் செய்துவிட்டு அடுத்த நாள் கட்டாயம் சென்று அவர் அடிக்கடி போய் மன்னிப்புக் கோரும் சொந்த ஊராகிய கர்நாடகத்திலேயே கூட அவரை வைத்து படம் எடுக்க யாரும் இல்லை. தமிழ் நாட்டைத் தவிர அவரை நடிகராக ஏற்று படம் தயாரிக்க யாரும் தயாரில்லை.

அப்படி இருக்க ஜப்பானிலா? ரஜினியும் சரி, நம் பத்திரிகைகளும் சரி, ரஜினி ரசிகர்களும் சரி, யாருக்கும் இது போன்ற சந்தேகங்கள் வந்ததில்லை. ரஜினி புகழ் பாடி என்ன செய்தி எங்கிருந்து வந்தாலும் அதை கேள்வியின்றி ஒப்புக்கொள்ளும் மனநிலை தான் நமக்கு. சரி, இதோ ஒரு காட்சி. ஜப்பானில் ரஜினியின் படத்திலிருந்து ஒரு பாட்டும் நடனமும் கொண்ட ஒரு காட்சி.யை ஜப்பானின் ரஜினி ரசிகர்கள் என்று இங்கு பெருமிதத்துடன் கொண்டாடப்படுபவர்கள் ரஜினி ஸ்டைலில் ஆடிப்பாடி ஆர்ப்பரித்து மகிழும் காட்சி.

இவர்கள் ரஜினி ரசிகர்களா, இல்லை ரஜினியின் கோமாளிக் கூத்தாட்டத்தைக் கேலி செய்து மகிழ்கிறார்களா என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். ரஜினி வேஷத்தில் ஆடுபவரும் சரி, அவரைச் சுற்றி நடனமாடும் மங்கையரும் சரி, அந்த தியேட்டரில் நிறைந்திருக்கும் பார்வையாளரும் சரி ரஜினியை ரசிக்கிறார்களா இல்லை கேலி செய்து மகிழ்கிறார்களா? இதில் ஏதும் கருத்து மாறுபாடு இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சரி அந்த காட்சி இதோ:

http://www.youtube.com/watch?v=hI7eDWyTaRE

இந்தக் காட்சியைப் பார்க்கும் நம் ஒவ்வொருவரும் நம்மில் பெரும் புகழ் பெற்றவராகவும் மக்களின் ஏகோபித்த அபிமானத்துக்குப் பாத்திரரான ஒருவர் இப்படி கேலிக்கு ஆளாவது கண்டு வெட்கப்படவேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட சூப்பர் ஸ்டாரும் சரி, நம் மக்களும் சரி, நம் மேதைகளும் சரி, எல்லோரும் நமது சூப்பர் ஸ்டாரின் லீலா விநோதங்கள் கண்டு பெருமிதம்தான் கொள்கிறார்கள்.

150 கோடி ரூபாய்கள் என்று சொல்கிறார்கள். இவ்வளவு பணம், இந்தப் படத்திற்கான விளம்பரம், இப்படம் எடுக்க எடுத்துக்கொண்ட காலம் இந்தப் படத்தின் எத்தனை பிரதிகள் உலகம் முழுதும் வினியோகிக்க எடுக்கப்பட்டன போன்ற புள்ளி விவரங்கள் நம்மைத் திக்கு முக்காடச் செய்கின்றன. இவையே படம் வெளிவரும் முன்னரே படத்தின் மகோன்னத குணங்களாக மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளன. இவை எதுவும் சினிமா சம்பந்தப்பட்டதல்ல.

இதுபற்றிச் சொல்லப்படுவன வெல்லாம் இந்தப் படத்தை 2010 –ன் விட்டலாசசாரியாவின் படைப்பாகத் தான் நம் முன் வைக்கின்றன. அம்புலி மாமா கதையின் இத்தலைமுறை பதிப்பு. சூப்பர்மேன், டெர்மினேட்டர், பாட்மேன் வகையறாக்கள் பார்வையாளர்களை வாய்பிளக்க வைக்கும் சமாச்சாரங்களே தவிர சினிமா என்னும் கலை சம்பந்தப்பட்டதல்ல. ஒரு காலத்தில் நம் தமிழ்ப் படங்களிலேயே கூட அபூர்வ சகோதரர்கள், விக்கிரமாதித்தன் கதை எல்லாம் மாயா ஜாலக் காட்சிகளை முன்வைத்தன. ஆனாலும் அவை அதீத கற்பனைகளேயானாலும் மனித வாழ்க்கையின் அவசியத்தைச் சொன்னவை தான். ஆனால் பாட்மேன், டெர்மினேட்டர் வகையறாக்களின் நம்மூர் காபியான எந்திரன், தன் இஷ்டத்துக்கு சம்பவங்களை அடுக்கிச் செல்லும் மனத்தைத் தான் நம் முன் வைக்கின்றன. ஒரே குறிக்கோள் என்னென்ன விசித்திர கற்பனைகள் செய்தால், பார்ப்போரின் வாய் பிளக்க வைக்க முடியும் என்பதாகத்தான் இருந்துள்ளது. உலக நாயகன் பற்பல வேஷங்களுக்கு ஏதுவாக கதையைக் கற்பனை செய்தால், நம் சூப்பர் ஸ்டார் வேஷங்களில் நம்பிக்கை வைப்பதில்லை, மாயா ஜாலங்களிலும் தன் கோமாளித்தனங்களிலும் நமபிக்கை வைத்துள்ளார்.

(தொடரும்)




No comments:

Post a Comment