Tuesday, November 2, 2010

டூரிங் டாக்கீஸ்டூரிங் டாக்கீஸ்

வண்ணநிலவன்

வண்ணநிலவன்

உ. த. ராமச்சந்திரன் எனும் இயற் பெயர் கொண்ட வண்ண நிலவன், பெயரைக் கூட கவிதையாக மாற்றிக் கொள்ளும் மிக சில தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் மணக்கும் திருநெல்வேலிக்காரர். தமிழ் இலக்கிய சூழலில் மிக அதிகமாக எழுதிக் குவித்தவர் அல்ல வண்ணநிலவன். ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து நாவல்கள், இரண்டு கவிதைத் தொகுதிகள் என மிதமாகவே எழுதிவந்துள்ளார்.

ஆனால் தனக்கு என ஒரு நடை, பெரிய வாசகர் வட்டம் என தன்னுடை குறுகிய படைப்புகள் மூலமே சாதித்தவர். இவர் எழுத்துக்கள் தற்கால எழுத்தாளர்கள் பலருக்கும் பெரிய உந்து சக்தியாகவே அமைந்தது. இவர் தமிழக அரசு விருது, இலக்கிய சிந்தனை விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரர். சில காலம் துக்ளக் பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவும் இவருக்கு உண்டு. மேலும் 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தின் வசன கர்த்தாவும் இவரே.

வண்ணநிலவன் அவர்கள் தான் ரசித்த, நேசித்த, தமிழ் மற்றும் உலகத் திரைப்படங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொள்கிறார்.

வண்ணநிலவன் தன்னுடைய கொட்டகை அனுபவத்தை இங்கே நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.

இப்போதுபோல் வாரந்தோறும் சினிமா படம் ரிலீசாகும் காலமல்ல அது. மாதத்திற்கு ஒரு படம் வெளி வந்தாலே அபூர்வம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும் மூன்று நான்கு படங்கள் வெளியாகும்.

நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெமினியின் 'சம்சாரம்', திருநெல்வேலி ஜங்கஷனில் பாலஸ் டி.வேல்ஸ் என்ற தியேட்டர் ரயில்வே லயனை ஒட்டி இருந்தது. அந்தத் தியேட்டரில்தான் சம்சாரம் படத்தை என் அப்பாவைப் பெற்ற அம்மாவுடன் (ஆச்சி) பார்த்தேன். சிறு வயதில் பார்த்த பல படங்கள் இன்றும் ஞாபகத்திலிருக்கின்றன. ஜெனோவா, குணசுந்தரி, ஜனக்ஜனக் பாயல்பாஜே.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் டூரிங் டாக்சீஸை 'டெண்ட் கொட்டகை' என்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளில் டூரிங் டாக்கீஸ் என்று தான் பெயர். கூரை தென்னங்கீற்றால் ஆனது. ஆபரேட்டர் ரூம் மட்டும்தான் செங்கல் கட்டிடம். சுற்றுலுமுள்ள காம்பவுண்ட் கூட தென்னங்கீற்றுத் தடுப்புதான். தரை டிக்கெட் என்றால், அசல் தரைதான். மணல் பரப்பியிருப்பார்கள். வெறும் மரப்பலகைகளுக்கு இரண்டு பக்கமும் முடுக் கொடுத்து ஆணியால் அடித்திருப்பார்கள். இதுதான் பெஞ்ச் டிக்கெட். ஆபரேட்டர் ரூமை ஒட்டி ஏழெட்டுப் பிரம்பு நாற்காலிகளைப் போட்டிருப்பார்கள். அதுதான் ஸோபா டிக்கெட்.

ஸோபா டிக்கெட் பகுதி வரை கீழே தரையில் மணலைப் பரப்பியிருப்பார்கள். அதனால் தரை குளிர்ச்சியாக இருக்கும். அந்தக் காலத்தில் டூரிங் டாக்கீஸ்களில் மேட்னி ஷோக்களை போட மாட்டார்கள். இரவு நடைபெறும் இரண்டே காட்சிகள்தான். மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த திரைப்படங்களைத்தான் திரையிடுவார்கள்.

என்னுடைய சொந்த ஊரானா தாதன்குளம் என்ற கிராமம், திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரின் வடக்குப் பகுதியில் வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலைத் தாண்டிப் போனால் கருங்குளம் என்ற ஊர் வரும். எங்கள் ஊருக்கும் கருங்குளத்துக்கும் நடுவே பிரதான சாலையில் ஒரு ரைஸ்மில் உண்டு. சுற்றுப் பகுதியிலுள்ள பல ஊர்களுக்கு இந்த மில் ஒன்று தான் பயன்பட்டு வந்தது.

இந்த ரைஸ்மில்லின் உரிமையாளருக்கு நாசரேத். தினசரி ரயிலில் தாதன்குளம் ஸ்டேஷனில் வந்திறங்கி, அதேபோல் மாலை ரயிலில் மீண்டும் தன் ஊருக்குத் திரும்புவார். 1960-ம் ஆண்டு வாக்கில் இந்த மில் உரிமையாளர், தனது ரைஸ் மில் அருகிலிருந்த காலியிடத்தில் ஒரு டூரிங் டாக்கீசை ஆரம்பித்தார். 'ரீகல்' டூரிங் டாக்கீஸ் என்று பெயர் வைத்தார். அப்போது எங்கள் குடும்பம் கருங்குளத்துக்குக் குடியேறியது. ஸ்ரீவைகுண்டம் குமரகுபேர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது படித்து வந்தேன்.

தினசரி பஸ்ஸில் ஸ்ரீவைகுண்டம் சென்று படித்து வந்தேன். ரீகல் டூரிங் டாக்கீஸில் மானேஜராக அப்பாவின் நெருங்கிய நண்பர் கொம்பையா வேலை பார்த்து வந்தார். அநேகமாக எல்லா சனி, ஞாயிறுகளிலும் இந்த டூரிங் டாக்கீசுக்குப் படம் பார்க்கச் சென்று விடுவேன். கொம்பையா மாமா என்னை பெஞ்ச் டிக்கெட்டில் உட்கார வைத்து விடுவார். எங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் சென்றாலும் டிக்கெட் வாங்க விட மாட்டார் மாமா.

அந்த நாட்களில் எங்கள் பக்கத்துக் கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆங்காங்கே மினுக் மினுக்கென்று எரியும் லாந்தர் விளக்குகள் தான் எங்காவது மூலைக்கொன்று எரிந்து கொண்டிருக்கும். அதனால் சினிமா பார்க்கச் செல்லும்போது கையோடு ஒரு அரிக்கேன் விளக்கையும் எடுத்துச் செல்வோம். அந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வீடு வந்து சேர வேண்டும். பக்கத்தில் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு படம் பார்ப்பது வேடிக்கையாகப் படலாம். ஆனால், அந்தக் காலத்தல் இது சர்வ சாதாரணமானது.

காட்சி துவங்குவதற்கு முன்னால் டாக்கீஸின் மேல் கட்டப்பட்டிருக்கும் நீளமான குழாய் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவார்கள். முதல் காட்சி ஏழு, ஏழே காலுக்குச் சாவகாசமாகத் துவங்கும். தரை டிக்கெட் 25 பைசா. பெஞ்ச் டிக்கெட் 39 பைசா. ஸோபா 75 பைசா. 27 பைசா இருந்தால் தரை டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஒரு முறுக்கும் சாப்பிடலாம். ஒரு முறுக்கின் விலை 2 பைசாதான். டீ 5 பைசா. அது ஆறு பைசாவுக்கு இரண்டு வாழைப்பழம் விற்ற காலம்.

ரீகல் டூரிங் டாக்கிஸில் நான் பார்த்த முதல் படம் சிவாஜிகணேசன் நடித்த காத்தவராயன் படம்தான். அன்னையின் ஆணை, திருமணம், சுமங்கலி, என்று பல படங்களை அந்த டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்துப் படங்களெல்லாம் மூன்று மணி நேரம் ஓடும். ஒவ்வொரு படமும் 18 ரீல்கள் இருக்கும். டூரிங் தியேட்டர்கள் டபுள் புரொஜக்டர்கள் கிடையாது. சிங்கிள் புரொஜக்டர்தான் அதனால் நான்கு முறை படத்தை நிறுத்தி நிறுத்தி ரீலை மாட்டி ஓட்டுவார்கள். முதல் காட்சி முடியும்போது இரவு பத்து மணியாகி விடும். இரண்டாவது காட்சி இரண்டு மணிவாக்கில்தான் முடியும்.

சிவகங்கைச் சீமை இரண்டாவது காட்சிக்குச் சென்று வந்தது. இன்றும் நினைவிருக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த சிறிது நேரத்தில் விடிந்து விட்டது. ஆற்றுக்குக் குளிக்கக் கூட்டிக் கொண்டு போக நண்பர்கள் வந்து விட்டார்கள். எங்கள் கிராமத்துக்கு அருகிலுள்ள சேரகுளம், கார்சேரி, முள்ளிக்குளம் போன்ற ஊர்களிலுள்ளவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்றால் ரீகல் டூரிங் டாக்கீசுக்குத்தான் வரவேண்டும். 1961ல் பாளையங்கோட்டைக்கு எங்கள் குடும்பம் குடிபெயரும் வரை ரீகல் டூரிங் டாக்கீஸ்தான் எனது சினிமா பார்க்கும்ஆசையைப் பூர்த்தி செய்து வந்தது.

I

என் ஆரம்பக்கல்வி திருநெல்வேலி டவுனில்தான் நடந்தது. உயர்நிலைப் பள்ளிப் படிப்பு திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டையில். பாளையங்கோட்டையில் இருந்தபோதுதான் ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. 61,62 லேயே ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ஸைக்கோ, ரியர் ஷண்டோ போன்ற படங்களைப் பார்க்க முடிந்தது.அப்போது பார்வதி டாக்கீஸீல் ஏராளமான ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. கான் வித் த விண்ட், கவுண்ட் ஆஃப் மியூஸிக், பென்ஹர், டென்கமாண்மெண்டஸ், ஹன்ச்பேக் ஆஃப் நாட்டர்டேம், ஜெர்ரி லூயிஸின் பல அற்புதமான நகைச்சுவைப் படங்களை எல்லாம் பார்வதி டாக்கீஸில்தான் பார்த்தேன்.

தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை நான் ஸ்ரீதருடைய ரசிகன். கே. பாலசந்தர் வந்த பிறகு அந்த ரசனை அவர் பக்கம் திரும்பிற்று. கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏபி.நாகராஜன் போன்ற பிற இயக்குனர்களின் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஸ்ரீதரும், பாலசந்தரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 59,60ல் எங்கள் குடும்பம் திருநெல்வேலி, திருச்செந்தூர் சாலையிலுள்ள கருங்குளம் என்ற சிற்றூரில் வாழ நேர்ந்தது.

அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அந்த டூரிங் டாக்கிஸீன் மேனேஜர் அப்பாவின் ஸ்நேகிதர். அதனால் அடிக்கடி அந்த டாக்கீசுக்குப் படம் பார்க்கச் செல்வேன்.

73ல் சென்னைக்கு வந்த பிறகு 'பிரக்ஞை' என்ற சிற்றிதழின் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பிலிம் சொசைட்டி' என்ற விஷயமே சென்னைக்கு வந்த பிறகுதான் தெரியும். அலியான்ஸ் பிரான்ஸ், அமெரிக்கன் சென்டர், ரஸ்யன் கல்ச்சுரல் சென்டர், பிலிம் சேம்பர் என்று பிற நாட்டுப் படங்களைத் தேடித் தேடித் பார்த்தேன். அகிரா குரோசவா, பெர்க்மான், ட்ரூபா, கொடார்ட், பாஸ் பைண்டர் என்று உலகத்தின் தலை சிறந்த இயக்குனர்களின் படங்களைப் பார்க்க முடிந்தது. சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியை ஏழெட்டுத் தடவை பார்த்திருக்கிறேன். பை ஸைக்கிள் தீஃப், ட்ரூபாவின் 400 ப்ளோஸ் போன்ற பல படங்களை மூன்று நான்கு முறைகள் பார்த்திருக்கிறேன்.

1976 மார்ச் வாக்கில் இயக்குனர் ஜெயபாரதியும், நானும் கௌடியா மடம் சாலையில் இருந்த ஒரு பிரிவியூ தியேட்டரில் பி.வி. கராந்தின் சோமனுலுடி பார்க்கச் சென்றோம். அங்கே வந்திருந்த ருத்ரைய்யாவை ஜெயபாரதி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ருத்ரையா அப்போது சென்னை பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

ருத்ரையாவின் அறை லாயிட்ஸ் காலனியில் இருந்தது. அவரது அறையில் பிரபல பிரெஞ்சு சினிமா விமர்சகரும், பிரெஞ்சு 'நியூவேவ்' இயக்கத்தின் பிதாமகருமான ஆந்த்ரே பஸினின் புத்தகங்கள் இருந்தன. ஜேம்ஸ்மொனாகா என்ற சினிமா விமர்சகரின் சினிமா பற்றிய நூல்கள் பெர்க்மான் பட ஸ்கிரிப்ட்கள் என்று ஏராளமான சினிமா நூல்கள் இருந்தன. ஒரு வெறியுடன் எல்லாவற்றையும் படித்தேன்.

பிலிம் சொசைட்டி படங்கள், திரைப்படம் சம்பந்தப்பட்ட நூல்கள் இவை எல்லாம் சேர்ந்து என் திரைப்பட ரசனையையே மாற்றி விட்டன. 1976ல் 'துக்ளக்' பத்திரிகையில் பணியில் சேர்ந்தேன். சினிமா விமர்சனம் எழுத வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. மூன்று பேர்கள் சேர்ந்து ஒரு படத்தைப் பார்ப்போம். அவர்களுடைய கருத்துக்களையும சேர்த்து, கேலி, கிண்டல் கலந்து பல திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதினேன்.

16 வயதினிலே, உதிரிப்பூக்கள், சில நேரங்களில், சில மனிதர்கள் போன்ற சில நல்ல படங்களை துக்ளக் விமர்சனக்குழு பாராட்டவும் செய்தது. போகப்போக தமிழ்சினிமாவின் தரம் குறைந்து விட்டதால், துக்ளக்கில் சினிமா விமர்சனப் பகுதி நிறுத்தப்பட்டது. பிற பத்திரிகைகளைப் போல் இல்லாமல், துக்ளக்கின் சினிமா விமர்சனம், சம்பந்தப்பட்டஇயக்குனர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களது பதிலும் பிரசுரிக்கப்பட்டது. இதைப் பிற்காலத்திய இயக்குனர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வரவில்லை.

வயதாக ஆக, ஆக சினிமா பார்ப்பதற்காகத் தியேட்டருக்குச் செல்வது குறைந்து விட்டது. என்றாலும், இப்போதும் தொலைக்காட்சியில் அந்தக் காலப் படங்களைப் பார்க்கத்தான் செய்கிறேன். சுமார் 2000 படங்களாவது பார்த்திருப்பேன். கமர்சியல் சினிமாப் படங்களைப் பொறுத்த வரை எம்.ஜி.ஆர் நடித்த அந்தக்கால ஆக்சன் படங்களைத்தான் இன்றும் விஜய், குணால், ஜீவா போன்ற நடிகர்களின் படங்களிலும் பின்பற்றுகிறார்கள். 'காதல்' என்பது அன்றும், இன்றும் இந்திய திரைப்படத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது. காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நாலு காமெடி சீன்கள் இதுதான் இந்திய சினிமா.

கதாநாயகர்கள் காதலித்துக் கொண்டும், வில்லன்கள் மோதிக்கொண்டும் இருக்கிறார்கள். பி யூ சின்னப்பா காலத்திலிருந்து இந்த அடிப்படைக் கதையமைப்பை விட்டு தமிழ் சினிமா நகரவில்லை. பிற இந்திய மொழிகளிலும் இதே ஃபார்முலாதான் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, இந்திய சினிமா என்பது மசாலா கதை தான்.

பிற உலக மொழிப் படங்களில், குறிப்பாக ஆங்கிலப் திரைப்படங்களில் கூட முன்பெல்லாம் ஆக்சன், த்ரில்லர், சோசியல் காமெடி என்று தனித்தனி கதையமைப்புகளைக் கொண்ட படங்கள் வெளிவந்தன. இப்போது ஆங்கிலப் படங்களிலும் இந்த மசாலாத்தனம் சேர்ந்துவிட்டது.

பிற மொழிப் படங்களில் இல்லாத ஒரு தனி அம்சம் இந்திய சினிமாவில் மட்டும்தான் உண்டு, காதலித்தால் பாட்டு, துயரப்பட்டால் பாட்டு, டப்பாங் குத்துப் பாட்டு என்று இந்திய சினிமாவில் பாட்டுக்கள் ஏராளமாக இடம் பெறுகின்றன. சராசரி இந்தியனால் பாட்டு இல்லாத திரைப்படத்தைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. 'மெல்லிசை' என்ற தனியான இசைத்துறையே சினிமா பாடல்களால் ஏற்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான செவிக்கினிய இந்தி, தமிழ், மலையாளப் பாடல்கள் மனதைத் தொடத்தான் செய்கின்றன.

II

ஏராளமான திரைப்படங்களை நான் பார்த்திருந்தாலும், திரைப்படத்துறையில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் என்றுமே எனக்கு ஏற்பட்டத்தில்லை. நண்பர் ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' சினிமாவுக்கு வசனம் எழுதியது தற்செயலாக நடந்தது. சில காட்சிகளுக்கு என்னையும் வசனம் எழுதச் சொன்னார். பணத்தேவைக்காகச் சில இயக்குனர்களிடம் சேர முயற்சித்ததுண்டு. ஆனால் நல்ல காலமாக அந்த முயற்சிகள் கை கூட வில்லை.

கமர்சியல் படங்கள் ஜனங்களுக்குச் சந்தோசத்தை தருகிற மாதிரி கலைப்படங்கள் என்று கூறப்படுகிற திரைப்படங்களும் சிலருக்கு சந்தோசத்தைத் தருகின்றன. கமர்சியல் படங்களுக்கென்று ஒரு பாணி, ஃபார்முலா இருப்பது போல் கலைப்படங்களுக்கும் ஒரு ஃபார்முலா இருக்கத்தான் செய்கிறது. அதனால் கலைப்படங்கள் என்பவை வானத்திலிருந்து குதித்தவை அல்ல.

அவையும ஃபார்முலா வசப்பட்டவையே. வேண்டுமானால் அவற்றை வித்தியாசமாக எடுக்கப்பட்ட, இயக்கப்பட்ட படங்கள் என்று கூறலாம். கதையை விவரிக்கும் பாணியை வைத்து கமர்சியல், கலை என்று பிரிப்பது இங்கே ஊறிப்போன வழக்கமாக உள்ளது. இது அபத்தமானது.

ஒரு தேர்ந்த சினிமா ரசிகனால் சத்யஜித் ரேவையும் ரசிக்க முடியும், அந்தக்கால சாந்தராம் படங்களையும் ரசிக்க முடியும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிக்கின்றனர். ரசிக்கவே முடியாத எழுத்து இருக்கிற மாதிரி ரசிக்கவே முடியாத படு குப்பையான திரைப்படங்களும் உள்ளன.

கமர்சியல் என்ற பேரில் அடிதடி டப்பாங்குத்துப் பாட்டு, காதல் காட்சிகள் என்ற அபத்தமும் தேவையில்லை. யதார்த்தம், கலை என்ற பேரில் நடந்து செல்வதையே ஐந்து நிமிடத்துக்குக் காட்டிக் கொண்டிருக்கவும் வேண்டாம். மிடில் சினிமா என்ற ஒன்றிருக்கிறது. பாசு காட்டர்ஜியின் 'ரஜினிகந்தா' போன்ற திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவரவேண்டும். இவை ரசனையை வளர்க்க உதவும்.

வெகு ஜன பத்திரிகைகளில் வருகிற சினிமா விமர்சனங்களோ, அல்லது சிற்றிதழ்களில் சினிமா பற்றிய புரிதலே இல்லாமல் எழுதப்படும் மேனா மினுக்கி விமர்சனங்களோ சினிமா ரசனைக்கு மேம்பட உதவாது. சினிமா என்றில்லை சங்கீதம், எழுத்து, ஓவியம், நாடகம் என்று எந்த கலைத் துறையாக இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்பது, பார்ப்பது, படிப்பது இவற்றின் மூலம்தான் ரசனை வளரும், தேர்ந்த சினிமா ரசிகனாக வேண்டுமானால் நிறையத் திரைப்படங்களைப் பார்ப்பது ஒன்றுதான் வழி.
1 comment:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Post a Comment