Tuesday, May 31, 2011

தாகூர் இலக்கிய விருது - 2011



தாகூர் இலக்கிய விருது - 2011

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தாகூர் விருது பெற்றமைக்காக வெளியிடப்படும் சிறப்புக் கட்டுரை.

கிருஷ்ண பிரபு

1861-ம் ஆண்டு பிறந்து 1941-ல் பூதவுடலைத் துறந்து இயற்கை எய்தினாலும், தன்னுடைய படைப்புகளின் மூலம் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

'ஜனகன மன' - என்ற பாடலின் மூலம் இந்தியர்களின் இரத்தத்தில் இரண்டறக் கலந்திருப்பவர். வங்காள தேசத்தின் தேசியப் பாடலிலும் இவருடைய பங்களிப்பு இருக்கிறது. இலங்கையின் தேசியப் பாடலை எழுதியவர் தாகூரின் கருத்துகளில் பற்றுடையவர் என்பதால் அங்கும் இவருடைய தழுவல் இருக்கிறது. தேசங்களைக் கடந்து உணர்ச்சிகரமான கவிதைகளின் மூலம் ஒலித்தவருக்கு 1913-ல் கீதாஞ்சலிக்காக நேபால் பரிசு கிடைத்தது. அதன் மூலம் நோபல் பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் படைப்பாளி என்ற பெருமையைப் பெற்றார். கவிஞர், நாடகாசிரியர், சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், கல்வியாளர், பதிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். தாகூரின் பன்முக பங்களிப்பைக் கருத்தில் கொண்ட வாங்க அரசு, தேசத்தில் துவங்கப்படும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு "ர" என்ற எழுத்தை திட்டப் பெயரின் முன்னாள் சேர்த்து மகாகவியைப் பெருமைப்படுத்துகிறார்கள். சாகித்ய அகாடமி, லலித்கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் தாகூரின் ஜெயந்தி விழாவைக் கொண்டாடி வருகின்றன.

தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய விருதின் 2010-ற்கான பட்டியலை (Tagore Literature Award) அறிவித்திருக்கிறார்கள். விருதுக்கான பரிசீலனையில் 24 மொழிகளில் வெளியான இந்திய படைப்புகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆண்டிற்கான விருதுப் பட்டியலில் எஸ் ராமகிருஷ்ணனின் "யாமம்" இடம் பெற்றுள்ள மகிழ்ச்சியான செய்தியை நவீன படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இவருடன் சேர்ந்து எட்டு மொழியின் படைப்பாளிகள் இந்த விருதினைப் பெறுகிறார்கள். ஒரு தமிழ் படைப்பாளி இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்றாலும் விருதானது 2009-ல் தான் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெபாப்ரட்ட தாஸ் எழுதிய அசாமிய சிறுகதைத் தொகுப்பான "Nirabchita Galpa", சந்தோஷ் கஜுர்லவின் டோக்ரி மொழி கவிதை தொகுப்பான "Bandlondian Bahaaraan", விஜய் டான் தெத்தாவின் ராஜஸ்தானி சிறுகதைத் தொகுப்பான "Bataan Ri Fulwari", சிறுபான்மையினர் மொழியான சந்தளியில் 'சொமை கிஸ்கு' எழுதி வெளிவந்த நாவலான "Namalia", பேராசிரியர் RG ஜதவின் மராட்டிய விமர்சன நூலான "Nivadak samiksha", ப்ரஜ்னத் ரத் எழுதிய ஒரிய கவிதை நூல் "Samanya Asamanya", உருதுக் கவிஞர் சந்தர் பான் க்ஹயல் எழுதிய "Subah-e-Mashriq", எஸ் ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலையும் சேர்த்து மொத்தம் 8 படைப்புகள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எஸ்ராவின் படைப்புகள் மாய வசீகரம் கொண்டவை. வாசகனை உள்ளிழுத்து கற்பனைப் போர்வையில் உலாவச் செய்பவை. பனிக்கட்டியானது வெப்பத்தினால் உருகி, நீர்க் கட்டிகளாகச் சிதறி, நதியாக நகர்ந்து நீராகவே விரியும் இயல்புடையது எஸ்ரா-வின் எழுத்து. மையத்திலிருந்து விளிம்பு நோக்கி நகர்ந்து மீண்டும் மையமாக உருக்கொள்ளும் படிமங்களை இவருடைய எழுத்தில் நிறையவே காணலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய சிற்றிதழான "அட்சரம்" இவரைத் தீவிர இலக்கியவாதியாக அடையாளப்படுத்தியது. 2000-த்தில் வெளியான 'உபபாண்டவம்' தான் எஸ்ராவின் முதல் நாவல். இது மலையாளம், வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்பே இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து இருந்தாலும் ஆனந்த விகடனில் வெளியான "துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி" போன்ற தொடர்கள் தான் எஸ்ராவை பரவலான வாசகர்களிடம் கொண்டு சென்றது. 'துணையெழுத்து' - அன்பும் அரவணைப்பும் கொண்ட முகம் தெரியாத மனிதர்களின் நெருக்கத்தைப் பற்றிக் கூறுகையில், 'தேசாந்திரி' - பயணத்தில் விருப்பமுள்ள தேசாந்திரியாக சுற்றி அலையும் இளைஞனின் பார்வையில் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி பேசியது.

இதுவரை வெளியான எஸ்ராவின் நாவல்களான "உபபாண்டவம், நெடுங்குருதி, உறுபசி, யாமம், துயில்" ஆகிய எதுவும் தொடராக பத்திரிகைகளில் வெளிவந்ததில்லை. எல்லாமே புத்தக வடிவில் தான் நமக்குக் கிடைத்திருக்கிறது. இவற்றில் யாமம் என்ற நாவலுக்குத் தான் 2010-ஆம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது.

இது நிதர்சனத்திற்கும், மாயைக்கும் இடைப்பட்ட நாவல். இந்த நாவல் மூன்று நூற்றாண்டுகளின் கதையை விவரிக்கிறது. அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு பக்கீர் (அல் அசர் முசாபர்) ஞானியிடமிருந்து கனவின் மூலம் வரமாகப் பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் பத்துத் தலைமுறை வியாபாரக் கதையாக ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் ‘யாமம்’. முக்கியக் கதாப்பாத்திரங்கள் தொடர்பற்று தனித்து நின்றாலும், அத்தர் அவர்களுக்கிடையிலான இடைவெளியை காற்றில் கலந்து வாசனையால் நிரப்புகிறது. சமயத்தில் காமத்தின் குறியீடாக புடைத்தெழுகிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்ற விழைந்த போது வாசனைத் திரவியமும், தானியமும், நெசவுத் துணிகளும் முக்கிய வியாபாரப் பொருட்களாகப் பயன்பட்டிருக்கிறது. இந்தியா மேற்கத்திய நவீனத்துவம் நோக்கி நகர்வதையும், மேற்கத்திய காலனியாதிக்க மனோபாவம் இந்தியாவில் காலூன்ற எத்தனிக்கும் தருணத்தையும் ஏராளமான உள்மடிப்புகளுடன் நகர்த்திச் செல்லும் நாவல். இரவானது உறக்கத்திலும், முழிப்பிலும் இருக்கும் மக்களைத் தாண்டி ஏராளமான ரகசியங்களை பூனையின் லாவகத்துடன் கவ்விச் செல்கிறது. இரவின் சுவாரஸ்யம் மிகுந்த உள்படிமங்களே கதைக் களன்களாக விரிகிறது. வித்யாசமான முயற்சிகாக எஸ்ரா விருது பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவல் ஏற்கனவே கனடாவின் இயல்விருது பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- கிருஷ்ண பிரபு


http://koodu.thamizhstudio.com/katturaigal_21.php





Wednesday, May 25, 2011

ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்…... - கலாப்ரியா



ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்…...

http://koodu.thamizhstudio.com/thodargal_7_22.php


கலாப்ரியா

புதிய ஊர், புதிய கிளை. ஒரு வகையில் வாழ்க்கையின் புதிய திருப்பம் அது என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட முப்பது வருட வாழ்க்கையில் இரண்டே இரண்டு வருடங்கள்தான் சொந்த பூமியை விட்டு வெளியூரில் இருந்திருக்கிறேன். அதிலும் எப்படா சனிக்கிழமை வரும் என்று காத்திருந்து ஊருக்கு ஓடி வந்துவிடுவேன். அது நடு இரவோ நடுப்பகலோ, எந்நேரமானாலும் சரி, எவ்வளவு பசித்தாலும், வயிறு நிறைந்திருந்தாலும் சரி, வீட்டுக்குள் நுழைந்தவுடன், மண்பானையில் பிடித்து வைத்திருக்கும் தாமிரபரணித் தண்ணீரை இரண்டு பெரிய தம்ளர்-அதற்குப் பெயரே ஐஸ் தம்ளர். அருமையான செம்புத்தம்ளர், உருண்டையான வடிவத்தில் கொஞ்சம் அழகிய வேலைப்பாடுடன் இருக்கும். சாப்பிடும்போதும் அதில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டுதான் உட்காருவேன். அது எனக்குப் பிடித்தமான தம்ளர் என்று வீட்டில் எல்லோருக்கும் தெரியும் அதனாலேயே அதை இன்னும் விற்கவோ, அடகு வைக்கவோ செய்யாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளுவேன் –தாமிரபரணித் தண்ணீரை மொண்டு மடக்மடக்கென்று குடிப்பேன். ஒருவாரப் பிரிவையும் ஆற்றிக் கொள்ளுகிற மாதிரி இருக்கும்

இப்போது. ஊரை விட்டு வந்தாயிற்று. சொந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் பெரிய தொலைவில்லை. அங்கே தாமிர பரணியென்றால் இங்கே அருகில் குற்றாலம். ஆனாலும் அந்த ருசி குற்றாலம் தண்ணீருக்கு வராது. இதுவும் செழிப்பான ஊர்தான். காற்றும் குளுமையும் பிரமாதமாய் இருக்கும். சீசனுக்கு சீசன் குற்றாலம் வருவதற்கு அவ்வளவு பிரயாசையும் பிரியமும் காட்டியது போக, குற்றாலம் அருகிலேயே வருவோம் என்று நினைத்தே பார்த்ததில்லை. முதல் நாள் அலுவலகத்திற்குப் போன போது மணி காலை ஒன்பது. யாருமே வந்திருக்கவில்லை. பஸ்வசதி அப்படித்தான். எட்டே முக்காலுக்கு ஒரு தனியார் பஸ் வரும் அதை விட்டால் ஒருமணி கழித்து ஒரு அரசு பஸ், அது நின்றாலும் நிற்கும், அல்லது ‘டாட்டா காட்டி விட்டுப் போனாலும் போய்விடும். ”ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்....”என்று ஒரு கதை கூட எழுதி வைத்திருந்தேன். பிரசுரமாகாத கதை. அதனால் எட்டேமுக்கால் பஸ்ஸில் ஏறி ஐம்பது பைசா டிக்கெட். எடுத்து இறங்கினேன். இறங்கியதும் ஒரு ஆள் அருகே வந்து ரகசியமாய் “அண்ணாச்சி, கடலை விதை வேணுமா என்றான்...” இது ஏதடா புதுப் பாஷையா இருக்கே, இந்த ஊர்ல ’அதுக்கு’ இப்படிப் பேரா....” என்று நினைத்துக் கொண்டே அவனிடமே எங்கள் அலுவலகக் கிளை எங்கே இருக்கிறது என்று கேட்டேன், சார் அதுவா என்று வழியைச் சொன்னான். அங்கே யாருமே வந்திருக்கவில்லை. ஒரு வயதான ஆள் கதவுகளை சும்மா சாற்றி வைத்துக் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தான். கதவைத் திறந்த அவனிடம் மேனேஜர் வரவில்லையா என்று கேட்டேன். அவன் பதிலே பேசவில்லை. நல்ல, காதை மறைத்து தலைப்பாகை கட்டியிருந்தார்., நான் கேட்டது காதில் விழவில்லையோ என்று நினைத்தேன். நாலைந்து பள்ளிக்கூடப் பையன்கள், வாசலில் நின்று கொண்டு, உள்ளே எட்டிப்பார்த்து, “ஏய்...கப்பல்..” என்று கத்தி விட்டு ஓடின. கிழவர், “போங்கலே ஒக்காள ஓளிகளா..” என்று தெருவில் இறங்கி வாரியல்க் கையுடன் விரட்டிக் கொண்டே போனார்....” ஆபீஸ் திறந்தே கிடந்தது.

மேனேஜர் வந்தார். அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. நான் தலைமை அலுவலகத்திலிருந்துதான் மாற்றலாகி வந்திருக்கிறேன். அவர் தலைமை அலுவலகம் வரும் போது என்னைப் பார்த்திருக்கிறார் போல் இருந்தது. ”சார் வாங்க, இன்னக்கி ஜாயின் பண்ணறீங்களா..” என்றார். ஆமாம் சார் என்றேன். அதற்குள் கிழவர் வாரியலுடன் உள்ளே வந்தார்... பின்னாலேயே... “கப்பல்.. கப்பலோட்டிய தமிழன்... ”என்று கேலிக்குரல்கள்.... கிழவர் மறுபடி தெருவுக்கு இறங்க முயற்சிக்க... மேனேஜர் சத்தம் போட்டார். ”ஆபீஸை திறந்துபோட்டூட்டு போகாதீரும் என்று சொல்லியிருக்கென்லா...,” இன்னம நீரு வேலைக்கு வேண்டாம் நின்னுக்கிடும்..” என்றார். கிழவர் உள்ளே போனார். பின்னாலிருந்து பார்க்கையில் தலைப்பாக்கட்டு, கப்பலோடிய தமிழன் போலவே இருந்தது... சிரிப்பு வந்தாலும்.. மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் சின்னப் பையன்கள ‘பட்டப்பேர்’ வைக்கிற ‘சுதந்திரத்தை’, எந்த ஊரானாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தோன்றியது. ஒவ்வொருவராக சக அலுவலர்கள் வந்தார்கள். அறிமுகப் படுத்திக் கொண்டோம். ”எல்லாருமே நான் தலைமை அலுவலகக்காரன் என்கிற மாதிரி சற்று தூரமாகவே நிற்பது போலிருந்தது. ”நானும் அடக்கி வாசிக்கிற முடிவோடுதான் வந்திருந்தேன்... ஆனால் பிறவிக்குணம் சும்மா இருக்குமா... என் ‘கல்யாண குணங்களை’ நானே வெளிச்சம் போட்டுக்காட்டி விட்டேன், கொஞ்ச நாளில்.

ஜோயல் நல்லையாதான், ”ச்சே, சாரும் நம்ம கேஸ்தான் போல இருக்கு... நல்ல ஆளாத்தான் கொண்டாந்து போட்ருக்காங்க,”, என்றார் சத்தமாக, ஒரு பின் மத்தியான வேளையில். அநேகமாக அன்றைய வேலைகள் முடிந்து, வீட்டுக்கு புறப்படுகிற நேரம். என்னை அன்று காலையில் தூத்துக்குடியிலிருந்து பார்க்க வந்திருந்த நண்பர் ஒருவர், கையில் ’டெபோனீர்’ இதழ் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்... எழுபதுகளில் அது ரொம்ப பிரபலமான இதழ். அமெரிக்க ’ப்ளே பாய்’ மாதிரி இந்திய ஆண்களுக்கான இதழ். அதில் நல்ல விஷயங்களும் வரும் என்று சொல்வார்கள். நாமல்லாம் நடுப்பக்கம் படம் பாக்கறதோட சரி. ஒரு இந்திய அழகு கொழிக்கும் படங்களை எச்சில் ஒழுகப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது.

(ஆசைப்படுகிறவர்களுக்காக தொடர்பு...)

http://www.google.co.in/search?hl=en&biw=1024&bih=
665&gbv=2&tbm=isch&sa=1&q=debonair+
magazine+india&aq=1&aqi=g10&aql=&oq=debonair+

”சும்மா பஸ்ல படிக்கலாமேன்னு வாங்கினேன், சவம் இதை எங்க பஸ்ல வச்சு விரிச்சுப் படிக்க முடியும்.. இந்தா நீயே பாரு, படி, என்ன எழவும் செய்யி.. ”என்று கொடுத்துவிட்டுப் போய் விட்டான். அதை நைசாக எடுத்து ஒரு பெரிய லெட்ஜருக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிறுவனங்களில் அலுவலர்களே புத்தக கிளப் நடத்துவார்கள். அதற்குப் பேரெல்லாம் கூட இருக்கும். நண்பர் ஒருவரின் வங்கியில் புத்தகக் கிளப் பெயர் “THE PAGES” அதற்கு ரப்பர் ஸ்டாம்ப் எல்லாம் இருக்கும். நண்பரின் டிசைனில் ஒரு புத்தகத்திற்குக் கண்ணாடி போட்டது போல் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கூட உண்டு. அங்கே டெபோனிர் இதழ்கள் எல்லாம் கூட வாங்குவார்கள். நண்பர் ’கணையாழி’ வாங்கிப் போடுவார். ஆனால் அதை யாரும் எடுத்துப் போவதில்லை என்பது வேறு விஷயம். இப்போதும் கூட இதெல்லாம் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலும் இவை ஏதாவது சண்டையினால், அற்பாயுளில் முடிந்து விடும். அநேகமாக சினிமா இதழ்களை முதலில் பெறுவதில்த்தான் சணடை வரும்.

தலைமை அலுவலகத்திலும் நாங்கள் ஒரு புக் கிளப் நடத்தினோம். அதை முதலில் நடத்தியவர், ரொம்ப அழகாக நிர்வாகம் பண்ணினார். பத்து ரூபாய்க்கு ஏகப்பட்ட புத்தகங்கள் படிக்கலாம்.. அவர் பத்துப் பதினைந்து கிலோ மீட்டர் தள்ளியிருந்த ஊரிலிருந்து வருவார். அதனால் நாலரை மணிக்கு புத்தக விநியோகத்தை ரகசியமாக ஆரம்பித்து விடுவார். இது நிர்வாகத்தின் கழுகுக் கண்ணுக்கு தெரியாமலா போகும். கூப்பிட்டு விசாரித்தார்கள். நான்தான் யூனியன் கிளைச் செயலாளர். அதனால் என்னிடம், என்ன செய்யலாம் அவரை என்றார்கள். “நான் இதில் என்ன தவறு இருக்கிறது, வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் விநியோகம் செய்து கொள்ளுகிறோம்,” என்றேன். நான் அலுவலகத்திற்கு சில விளம்பர வாசகங்கள், வண்ணதாசனின் படங்களுடன் சில விளம்பரங்கள் எல்லாம் செய்து தந்திருந்தேன். அதனால், அந்த விசாரணை அதிகாரிக்கு என் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு. பல அதிகாரிகளும் அதில் உறுப்பினர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டியதும். அலுவலக நேரம் முடிந்ததும் ஏதோ செய்து கொள்ளுங்கள்... என்றார்கள். அதனால் விநியோகப் பொறுப்பு என் தலையில் விழுந்தது.

என்னால் முடியவில்லை, ஐந்து அடித்ததும் பாதிப் பேர் ஓடி விடுவார்கள், அதனாலெல்லாம் கொஞ்ச நாளில் அதை ஊற்றி மூடி விட்டோம். 120 பேருக்கு மேல் அங்கே உண்டு. பலமான யூனியன் உள்ள கிளை. மேதினம், யூனியன் ஆரம்ப தினம் என்றால் அலங்காரங்கள், கோஷங்கள் என்று அமர்க்களப் படுத்துவோம். யூனியன் ஃபௌன்டிங் டே அன்று வானம்பாடி பாணியில், ஒரு வருஷம் கவிதை எழுதி வாசித்தேன். அப்புறம் யாரும் ரிட்டயர் ஆனால் அதற்கும் கவிதை எழுத வேண்டும். தொழிற்சங்க நடவடிக்கைகளில் என் பங்களிப்பைப் பார்த்து, சேர்மனே, ”எதற்கப்பா உனக்கு இந்த வம்பெல்லாம்.. பேசாம அதிகாரியாகிற வழியைப் பார். .”..என்று சொல்லுவார். அதெல்லாம் கேட்க முடியுமா. இல்லை கேட்கும்படியாகத்தான் வளர்ந்திருக்கிறேனா. ஆனால் இந்தக் கிளைக்கு வந்த பின் சில புதிய இளைஞர்கள் “ என்ன சார் யூனியன்” என்று விட்டேற்றியாகக் கேட்டு சரியான ஒத்துழைப்புத் தராத போது கஷ்டமாக இருக்கும். ஒரு இயக்கத்தைக் கட்டி வளர்ப்பது என்பது எவ்வளவு முக்கியமான காரியம். அதுவும் ஒரு தனியார் நிறுவனத்தில் போராடுவது அவ்வளவு எளிதல்ல. இன்றைய இளைஞர்கள் கூட அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருப்பதைப் பற்றி ஒரு மூத்த போராளி சமீபத்தில் சில ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நல்லையா, நான் டெபோனிர் படிப்பதைப் பார்த்து விட்டு மற்றவர்களிடம் சொன்னார்,” சார் புத்தகம் படிக்கிறாரே. நம்ம இனம்தான் போலிருக்கு” என்று. “என்னது, புத்தகம் படிப்பாரா” என்று சிலர் கோரஸாகக் கேட்டார்கள். அப்புறம்தான் அவர்கள் அகராதியில், புத்தகம் என்றால் பெண்கள் என்று. அய்யயோ நான் உண்மையிலேயே தாள்ப்புலிதான் என்று விளக்க வேண்டியதிருந்தது. ஜோயல் நல்லையா எதைப்பற்றியும் கவலைப்படாத ஆள் என்று தெரிய வந்தது. அவர் பக்கத்துக் கிளைக்கு மாறுதல் ஆகிச் சென்ற பின்னரே நிறையத் தெரியவந்தது. நான் வந்த சில மாதங்களிலேயே அவர் மாறுதலாகி விட்டார். மற்றவர்கள் சொல்லுவார்கள். ரொம்ப ஜாலியான் ஆள் சார் என்று. மாதம் தவறாமல் கேரளா ப்ரோகிராம் ஒன்று போட்டு விடுவாராம். கடன் வாங்க அஞ்சவே மாட்டார். அப்போது எம்.ஜி ஆர் ஆட்சி. இரண்டாம் முறையாக முதல்வர் ஆகியிருந்தார். மது விலக்கு அமலில் இருந்தது. ஜோயல் கடனோ உடனோ வாங்கி இரண்டு மூன்று பேருடன் பக்கத்தில் புனலூர் சென்று விடுவார். அங்கே தாகம் தீர்ந்த பின் “புத்தம் புதிய புத்தகமாகப் படித்துவிட்டு’ வருவார்களாம். எல்லாரும் செலவைப் பங்கு போட்டுக்கொள்வார்கள். புத்தகச் செலவு அவர் மட்டும். அவர் மட்டும்தான் ’புத்தகம்’ படிப்பார். மற்றவர்கள் சரக்கோடு சரி.

அப்புறம் மதுவிலக்கைத் தளர்த்தி 25 ரூபாய்க்கு ஒரு பெர்மிட் வாங்கினால் போதும், கூட்டுறவு அங்காடிகளில் சரக்கு கிடைக்கும், என்று கொண்டு வந்தார்கள். பேருக்குத்தான் பெர்மிட். எல்லோருக்கும் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம் புனலூருக்குப் போவது குறைந்து விட்டது. .கடன் கொடுத்தவர்கள் அவரைப் பார்க்க வரும் போது வேடிக்கையாக இருக்கும். ஒரு நாள் காலையில் நாங்கள் அலுவலகம் வந்து கொண்டிருந்த போது, எதிரே ஒருவர் வந்தார். ஒரு நண்பரிடம், சார் ஜோயல் இருக்காரா என்றார். இருப்பாரே என்றார். ”என்ன சார், கடையில ஜவுளி எடுத்த வகையில் பாக்கி இருக்கு, முதலாளி கேட்டுக்கிடே இருக்காரு தரமாட்டேங்கிறாரே.. இன்னக்கி ‘சலுப்பை’ (கேவலமாக நடத்தி) இழுத்தாவது வசூல் பண்ணாம போக மாட்டேன்” என்று கூடவே நுழைந்தார். அவரைப் பார்க்கவே எனக்குச் சற்று பயமாக இருந்தது. நல்லையா கவிழ்ந்த தலையோடு சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிரில் வந்து நின்றார், வந்தவர். நாங்கள் எல்லாம் அவரவர் சீட்டில் உட்கார்ந்து விட்டோம். ஜோயல் நிமிரவே இல்லை. வந்தவரும் கூப்பிடவும் இல்லாமல், பேசாமல் நின்று கொண்டிருந்தார். பயங்கரமான தகராறு ஒன்று நடக்கப்போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தால், ஒன்றுமே இல்லை.

கால் மணி நேரம் கழித்து, நல்லையா நிமிர்ந்து, என்ன வேண்டும் என்று தலையை மட்டும் அசைத்த படி கேட்டார்.” இல்லை.... ஐயா.... இந்தப் பாக்கியை வாங்கீட்டு வரச் சொன்னாரு..” என்று இழுத்தார். ஜோயல் கொஞ்சங்கூடப் பதறாமல் “யோவ்... அண்ணாச்சி, மனுஷன் எதுக்கு கடன் வாங்குதான்.... கையில இல்லாமத்தானெ கடன் வாங்குதான்.... இப்பவும் இல்லையே, இருந்தாத்தான் கொடுத்துருவேனே... முதலாளி என்ன தெரியாமலா இருக்காக..” சொல்லிவிட்டு தலையைக் கவிழ்ந்தவர்தான். நிமிரவே இல்லை. வந்தவர் அரை மணி நேரம் கழித்துப் பெட்டிப்பாம்பாக அடங்கிப் பேசாமல் போய்விட்டார். சாயந்தரம் அதற்கு எதிர்த்த கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு எல்லாக் கடைக்காரர்களையும் தெரியும். எல்லாரிடமும் ஏதாவது வரவு செலவு இருக்கும். பஸ் கண்டக்டர், டிரைவரிடம் கூட கடன் சொல்லிவிட்டு இறங்கி விடுவார். கண்டகடர் முனுமுனுப்பார், ஜோயலோ கண்டுகொள்ளவே மாட்டார். ஆனால் எங்காவது வழியில் கையைக் காட்டினால்க் கூட நிறுத்தி ஏற்றிக் கொள்ளுவார்கள். அவர் ராசி அப்படி.

இதை விடப் பெரிய விஷயம் நடந்தது. ஒருநாள் காலை பத்துப் பதினோருமணி இருக்கும். அலுவலகம் பரபரப்பாக இருந்தது. திடீரென்று ஒரு பெண் வந்தார். கொஞ்சம் மலையாள ஜாடை. நல்லையா தற்செயலாக பாத் ரூம் போய் விட்டு பின்புறமாக நின்று தம் அடித்துக் கொண்டிருந்தார்.வந்தவள், ’ஜோயல் எங்கே’ என்றாள். யாரும் பேசவில்லை.. கொஞ்சம் மனநிலை சரியில்லையோ என நினைக்கும்படி, கேட்டுக் கொண்டே இருந்தாள். “வரலை, லீவு” என்று ஒருவர் சொன்னார். அவரைப் பிடித்துக்கொண்டாள்..” அப்படீன்னு சொல்லச் சொன்னாரா.. எனக்குத் தெரியும் இன்னக்கி வந்திருக்காரு.. கூப்பிடுங்க...” என்று. ”சொன்னாக் கேளும்மா, அவர் வரலை” என்று சற்று காட்டமாக அவர் சொன்னார்.பட்டென்று சேலையை உருவி அவர் முகத்தில் எறிந்து விட்டு ஜம்பரும் பாவாடையுமாக நின்றாள். “ அவர் நல்ல சிகப்பாக இருப்பார், அவர் காது கன்னமெல்லாம் மேலும் சிவந்துவிட்டது. ”யோவ் ஐயரா இருந்துகிட்டுப்.... பொய் சொல்லாதீரும்.. மரியாதையாக் கூப்பிடும்..” என்றாள். அவர், எம்மா நான் ஐயரில்லம்மா... என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டார். அவருக்கு அடுத்த சீட், நான். கால் கையெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. அவர் இருக்கும் வரை அவளது வாளிப்பான உடலை நான் ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு கிட்டத்தட்ட நேருக்கு நேர் வந்த போது, தலை தானாக கவிழ்ந்து விட்டது.

பார்க்காமப் போக மாட்டேன்.... என்று மாடிக்குச் செல்லும் படியில் அமர்ந்து கொண்டாள். அது மாடியில் எங்கள் டைனிங் ஹாலுக்குப் போகும் படிக்கட்டு.சேலை பக்கத்து சீட்டில் கிடந்தது.டார்க் ரோஸ் நிறச் சேலை. லைட் ரோஸில் சட்டை அணிந்திருந்தாள்.அற்புதமான உடல்.ஆனால் பார்க்கிறவ்ர்கள் எல்லாம், தலையை பட் பட்டென்று கவிழ்ந்து கொண்டார்கள். ஜோயல் ஆபிஸுக்குள் வரவே இல்லை. மேனேஜர் பாடுதான் சங்கடமாயிருந்தது. போலீஸுக்குச் சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். சுமார் ஒருமணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். என்ன நினைத்தாளோ, மறுபடி, யோவ் சாமி, அந்த சேலையை எடுத்துப் போடுமென்றாள். அவர் விரல் நுனியால் எடுத்து கௌண்டர் மேலே போட்டார். சுற்றிக் கொண்டு கிளம்பிப் போனாள். நல்லையா ஒன்றுமே நடக்காதது போல சீட்டில் உட்கார்ந்து வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று சாயந்தரம் நாங்கள் கடை வீதி வழியாக நடந்து கொண்டிருந்தோம். ஒரு ஜவுளிக்கடையிலிருந்து, “அட்டென்ஷன் ப்ளீஸ்” என்று குரல் கேட்டது. ஜோயல்தான். அருகே ரோஸ் நிறச் சேலை கட்டிக் கொண்டு அவள். தலை நிறையப் பூ. அன்றைக்கு ஆஃபீஸ் வந்து பணம் கேட்க வந்தவர், புதிய சேலைகளைக் காட்டிக் கொண்டிருந்தார். ”வாங்க காம்ரேட்” என்று கூப்பிட்டார்....ஜவுளிக்கடை கல்லாவில் உட்கார்ந்திருந்தவரிடம் ”அண்ணாச்சி, எல்லாம் நம்ம காம்ரேட்ஸ், சீனி தூக்கலா மூனு டீ சொல்லுங்க...” என்றார். அவரும் டீ வாங்கி வரச் சொன்னார். ஏதோ துணிப் பொட்டலங்களுடன் கடையை விட்டுக் கிளம்பி, “அண்ணாச்சி, ஒன்னாந்தேதி ஆளை அனுப்பிருங்க.. எல்லாத்தையும், ’சப்ஜாடா’ (முழுசா) செட்டில் பண்ணிருவோம்...” என்றார். முதலாளி வாயெல்லாம் பல்லாக, ”அதுக்கென்ன அனுப்பிருதேன்...” என்றார்.

கொஞ்ச நாளில் அவர் பக்கத்து கிளைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு போய் விட்டார். தினமும் அவரைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். அவரது மனைவிக்கும் அவருக்கும் நல்ல உறவு இல்லை. இவர் நன்றாக, புத்தகம் படிக்காமல், புனலூர் போகாமல், இருக்கும் போதே அவர் மதிக்க மாட்டாராம். அவர் மனைவிக்கு சொந்தத்தில் ஒரு ஸ்கூல் இருந்ததாம். நல்ல வசதி. ஆனால் ஜோயல் ஒரு நாள் கூட மனைவியைப் பற்றி ஆவலாதி சொல்லி நான் கேட்டதில்லை. சொல்லவும் மாட்டாராம். ஆனால் வேலையில் ரொம்ப கெட்டிக்காரர். அப்போது கால்குலேட்டரெல்லாம் கிடையாது. இரட்டை இலக்கமாகவே கூட்டிவிடுவாராம். அதாவது 43,55,14,23,89,74,15,20,14,99,...

என்றால், அப்படியே,43+55+14+....... என்று கூட்டி விடுவாராம். 3,5,4,3,9,4,5,0,4,9........என்று முதல இலக்கத்தினைக் கூட்ட மாட்டாராம். எந்த சர்க்குலரைக் கேட்டாலும் சொல்லுவாராம்...அவருக்கு திடீரென்று ப்ரோமோஷன் கிடைத்த போது அவரது இந்த பிரதாபங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

ப்ரொமோஷன் ஆகி கொஞ்ச நாள்த்தான் ஆகியிருந்தது. காலையில் கிளையின் யூனியன் செயலாளருக்குப் ஃபோன் வந்திருப்பதாக மேனேஜர் சொன்னார். போய்ப் பேசினவர் அப்படியே வெளியே போய் கருப்பு ரிப்பன் வாங்கி வந்து, சிறிய துண்டாக வெட்டி எல்லோருக்கும் கொடுத்தார். என்ன என்று கேட்டபோது. யூனியன் தலைவர் சொன்னதாகச் சொன்னார்,” ஜோயல் சார் கிட்னி ஃபெயிலியராகி இறந்து போயிட்டாராம்...” மௌனமாக எல்லோரும் பேட்ஜை அணிந்து கொண்டோம். அன்று மாலை வாயில்க் கூட்டம் போட்டு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போன போது.. பஸ் ஒன்று ஸ்டாப்பில் நிற்காமலே போனது.... ஜோயலைப் பார்த்தால் எப்போதும் நடுவழியில்க் கூட பஸ்ஸை நிறுத்துகிற டிரைவர்தான் ஓட்டிப் போனார்..



சுகிர்தராணி – பாலியல் போரின் ஒற்றைச் சிறகு - குட்டி ரேவதி



ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 12

சுகிர்தராணி – பாலியல் போரின் ஒற்றைச் சிறகு


http://koodu.thamizhstudio.com/thodargal_14_13.php




குட்டி ரேவதி

அதிகமும் காயடிக்கப்பட்ட உடலரசியல் சார்ந்த விவாதங்களை மீண்டும் தொடக்க இடத்திலிருந்தே விவாதிக்கலாம். எல்லோரும் சேர்ந்து இழுத்தப் பின்னரும், அதே இடத்தில் நிற்கப் பணித்தது போல் உறைந்து போய் நிற்கிறது அந்தத் தேர். வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு காரணங்கள் தோன்றி, தேர் நகரவே முடியாது என்று உறுதிப்படும் நிலையில் கூட தேரை வலுவோடு இழுத்து ஊரைச் சுற்றிவருவதற்கான இன்னொரு வாய்ப்பும், மொழியும் பெண் கவிஞர்களுக்கு கிடைத்துவிடும். ஏனெனில், பெண்ணின் உடல் மீது செலுத்தப்படும் வன்முறைகள் அத்தனைக்கு எல்லையற்றவை.
‘பெண்ணின் உடல் ஒரு புதிர்; அது விடுவிக்கப்படக் கூடாது’ என்று பெண்களே வழிமறித்து நிற்கும் போதும், தன் ஒவ்வொரு கவிதையிலும், முன்செல்லும் வண்டியில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் இடுப்பை நுகர்ந்து தன் காமத்தைச் சொற்களாகப் படைத்து திருப்தியெய்திய ஆண்களே பெண்களுக்கு அந்த அனுமதியை மறுத்த போதும் இன்னும் அதிகமாக பெண் மொழி வலு பெற்றிருக்கிறது. வழிமறிப்புகள் எப்பொழுதுமே பாலியல் ஒடுக்குமுறையாகப் பெண் உடல் மீது தான் நிகழ்த்தப்படுகின்றன. போர்க்களம் என்பது, இந்த விஷயத்தில் பெண்ணின் விரிந்த உடல். காயங்களும் வலிகளும் இழப்புகளும் உடலுக்குத் தந்த வடுக்களை பெண்கள் மொழியாக்கி வைப்பது மூதாதைத்தாயிடமிருந்து வந்த மரபணுப் பழக்கம் இல்லையா?

அதற்கு உதாரணமாக, பெண் உடல் மீது செலுத்தப்பட்ட வன்முறைகளை இங்கு அட்டவணைப்படுத்தலாம் என்று இருக்கிறேன். ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணாய் வாழ்வது எத்தனை கொடிய ஆயுள் தண்டனை என்பது புலனாக, இவ்வுதாரணங்கள் உதவக்கூடும். அந்தத்தண்டனை, பெண் என்ற பெயரால் எந்த ஒரு பெண்ணுக்கும் நிகழலாம். தான் அந்தத் தண்டனையை அனுபவிக்க மறுத்து, தற்கொலை செய்து கொண்டால், இன்னொரு பெண் வழியாகவேனும் அத்தண்டனை தொடரும்.

பெண் சிசுக் கொலையில் தொடங்குகிறது, இந்த வன்முறை. நம்மூரில், கள்ளிப்பால் கொடுத்தோ, நெல்முளையை விழுங்கச் செய்தோ அல்லது ஈரத்துணியால் மூச்சடக்கியோ கொல்வதுண்டு. இன்னும் இக்கொடிய முறை சேலத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் உயிர்ப்புடன் இருக்கிறது. சீனப்புரட்சிக்கு முன்பாக, பிரசவத்தின் தயாரிப்புகளில் ஒன்றாக சாம்பல் நிரப்பிய பெட்டி ஒன்றையும் அருகில் வைத்திருப்பார்கள். பிறந்தது பெண் குழந்தையென்றால், அச்சாம்பலில் முகத்தை அழுத்திக் கொன்றுவிடுவர். இத்தகைய வன்முறை, பெரும்பாலும் பெண்ணுக்குத் திருமணம் என்பதே எல்லை, அதற்குப் பொருட்செலவு அதிகமாகும் போன்ற பாமரத்தனமான காரணங்களால் தாம் நிகழ்ந்திருக்கின்றன. இலட்சம் இலட்சமாய்ப் பெண் குழந்தைகள், வலியை உச்சரிப்பதற்கான அழுகுரலுக்குக் கூட வாய்ப்பின்றி மூச்சடைத்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அடுத்தக் கட்டமாக, வளர்ந்த பெண்களின் முக்கியமான பணி, ஆண்களுக்கு பாலிமை இன்பத்தை வழங்கி அவர்களைக் களிப்பூட்டுவதே. இதை நிறவேற்றாத அரசக்குலப்பெண்கள் கூட நீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு விநோதமான முறைகள் கூடப் பின்பற்றப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவின் நான்காவது இவான் என்ற மன்னன், தனக்குத் தேவைப்படாத மனைவியை, கனமான கோணிப்பையில் போட்டு மூட்டையாகத் தைத்து பாஸ்பரஸ் ஜலசந்தியில் நீரில் போட்டு மூழ்கடித்துக் கொன்றான்.

இந்து மதத்தில், உடன்கட்டையேறுதல் என்பது தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. பெருங்கோப்பெண்டு என்னும் பெண், கணவன் மாண்ட பின் தான் விதவைப் பெண்ணாய்க் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விரதங்களினும், அவனுடைய சிதையில் குதித்து எரிந்து போவதே மேல் என்று தீயில் குதித்து எரிந்தாள். கைம்மை எவ்வளவு கைப்பாய் இருந்திருக்கிறது பாருங்கள். உடன் கட்டையேறும் பெண், சொர்க்கத்தில் பலவித இன்பங்களுடன் வாழும் பாக்கியத்தைப் பெறுகிறாள் என்ற கட்டுக்கதைகளும் நிறுவப் பட்டன. இன்றும், சொர்க்கம் என்னும் உலகம், மதநிறுவனங்கள் தம் அதிகாரத்தை, பெண்கள் மீது நிகழ்த்திக் கொள்வதற்கான எக்கச்சக்கமான வாய்ப்புகளை அது எந்த மதமானாலும், அம்மதகுருக்களுக்கு வழங்குகிறது.

பெண்களின் பிறப்புறுப்பைக் கட்டுப்படுத்துவதற்காகவென்றே, இடுப்புப்பகுதி முழுமைக்குமான இரும்பாலான கச்சை ஒன்றைத் தயார் செய்த காலங்களும் உண்டு. இக்கச்சை, கால்களுக்கிடையே இரும்பாலான பட்டை ஒன்றுடன் இணைவதாக இருக்கும். பெண்ணின் சிறுநீர் துளை, பாலுறுப்பு துளை மற்றும் மலவாய் எதையுமே ஆணின் கட்டளையின்றி பயன்படுத்தமுடியாது. ஜெர்மனியில் நிறைய பெண்கள் இக்கச்சைகளுடன் புதைக்கப்பட்டது வரலாற்று ஆவணத்தில் பதிவாகி இருக்கின்றது. தண்டனைகளில் பொதுவானது, கசையடிக் கொடுப்பது. இரத்தம் பீறிடும் வரை கசையடிக் கொடுப்பது!
இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண், தான் பெண் என்று அறியும் முன்னரே எல்லா வித சமூக அமைப்பிற்கும் அவளைக் கட்டுப்பட்டவளாக ஆக்குவது என்பது வழக்கமாக இருக்கிறது. சிறு வயது திருமணங்கள் பெண் குழந்தைகள் பருவம் எய்தும் முன்னரே நடத்தப்பட்டன. அதுமட்டுமன்றி, அத்திருமணங்கள், அந்தப் பெண் இன்னும் கன்னியாக இருக்கிறாள், பிற ஆண்களால் உபயோகப்படுத்தப்படாதவள் என்பதை உறுதி செய்வதற்குமானதாக இருந்தது. இந்தியச் சமூகத்தில், பெண்ணின் பிறப்புறுப்பும் அதன் செயல்பாடுகளும் வேறெந்தச் சமூகத்தையும் விட தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் பெண்கள் தம் பால்நிலை விழைவை எப்படி வெளிப்படுத்துவது? ஆனால், அவ்விழைவைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பே இன்றி அதற்கு வசதியான எல்லா ஊடகங்களிலிருந்தும் புறம் நிறுத்தப்பட்டாள். குறிப்பாக, மொழி என்பதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைக் கூட அவள் பெற்றிருக்க வில்லை. மொழியும் சொல்லும், பெண்களை மெளனமாக இருக்கவிடாது என்பதை உணர்ந்து தான் ஆணாதிக்கச் சமூகம் பெண்களுக்கு மொழியை, கல்வியை மறுத்தது.

சுகிர்தராணியின் கவிதைகள், மொழியற்ற மெளனத்தால் கட்டிப்போடப்பட்டிருந்த உடலை தனக்குக் கிடைத்த மொழியாலும், அதன் வீச்சாலும் கட்டறுத்து அவிழ்த்துவிடுகிறது. மொழியால் உடலுக்குச் சுகிப்பைத் தரமுடியும் என்பதன் நேரடியான மொழிதல்கள் இவரது கவிதைகள்.

‘பருவ திரவத்தில் தோயாத என்னுடல்’, ‘பருவங்கள் வாய்த்த என்னுடல் காளானைப் போலக் கனிந்து குவிகிறது’, ‘ஒற்றைக்கரை கொண்ட உடல்’, ‘மயிர்கள் சிரைக்காத என் நிர்வாணம்’, ‘வார்களால் இழுக்கப்பட்ட உன் இசைவுகளுக்கேற்ப கட்டப்பட்டிருக்கிறது என்னுடல்’, ‘அவரவர் விரும்பியபடி ஆணிகளால் நிரப்பப்படுகிறது என்னுடல்’, ‘தூர்ந்து போன உடல்’ என பலவகையான உடல்களைக் கண்டடையும் கவிதைகளாக இருக்கின்றன இவருடையவை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்ணின் உடல்கள் தட்டையானதாகவும் ஒற்றைப் பரிமாண அர்த்தத்துடனும் தான் புரிந்து கொள்ளப்படுகின்றன. உழைப்பிற்கான இயந்திரமாயும் நாட்டின் பொருள் உற்பத்திப் பெருக்கத்திற்குப் பயன்படும் ஒன்றாகவே அர்த்தம் பெறுகின்றன. இந்நிலையில், தன்னுடலை முழுதும் தனக்கேயான ஒன்றாக்கி அதன் மற்ற பரிமாணங்களையும் கண்டடையும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார், சுகிர்தராணி.

கடலளவு

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
அதிவிரைவு வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன
அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என் மீது படிந்து நகர்கின்றன
முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்த படி செல்கிறது
நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்
போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையொளி
இரயிலை நிறுத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடக்கிறது
கடலளவு இரத்தம்

பெரும்பாலான இவரது கவிதைகளில் தனித்து ஒற்றையாய் இருக்கின்றது இவரது உடல். எதிர்வரும் கற்பனை உருவமோ, இரவோ, காற்றோ, நிகழ்வோ உடலுக்குள் தீராத வினைகளைப் புரியும். அதனால் உண்டாகும் உடலெழுச்சிகள் கவிதைகளாகும். ஆனால், இத்தகைய கவிதைகளாய் இவருடையது மட்டுமே இருப்பது தான் இவருடைய சிறப்பு.

அதுமட்டுமன்றி, சுயம் பொங்கும் தனது உடலை மட்டுமே தொடர்ந்து எழுத்தாக்குகின்றன இவரது கவிதைகள். வன்மத்தைச் சொற்களாக்கும் போது, அவை கோபத்தின் சீற்றத்தோடும் பெருமூச்சோடும் முடிந்து போகும் பிறரின் கவிதைகளுக்கிடையில், சுகிர்தராணி தன் கோபத்தைத் தெளிவான அம்பொன்றாக எய்தத் தெரிந்தவர்.

தமிழில் பாலிமை உணர்வுகள் கவிதை ஆகும் போது, உதாசீனப்படுத்தப்பட்டன. அதற்குக் காரணமாக நான் எண்ணுவது, அதைப் புரிந்து கொள்ள பழக்கப்படாத உளவியலுடன் ஆண்களும் பெண்களும் திரியும் சமூகமிது என்பதே. உடலை விடுதலைக்குத் திறந்து கொடுத்த நிலையில், தன்னகத்தே சிக்கல் ஏற்படாத கவிஞர்களும் இல்லாமல் இல்லை. அதன் எல்லா பிசிறுகளுடனும் தான் உடல் மொழிக்கவிதை உருவாகிறது. பெண் பால் உணர்ச்சியை அதன் அழகு குறையாது, சங்ககாலப் பாடல்களில் பயிலப்பட்டது போல் முனை முறையாது வழங்குவதில் சுகிர்தராணி வல்லவர். இவரது, ‘உடலெழுத்து’ கவிதை, இம்மாதிரியான முதல் கவிதை. இதற்குப் பின்பு, சில பெண் கவிஞர்கள் இம்மாதிரியாக எழுத முனைந்தனர். என்றாலும் இம்மாதிரியான முதல் கவிதை இதுவே.

தன் பாலிமையின் விடுதலையைக் கண்டடையும் பயணத்தில், ஒரு பெண் இன்னொரு பெண்ணின் உடலில் தான் அதற்கான கதவைக் காண்கிறாள். ஒருபாலுணர்ச்சி, அரசியலாகவும் சமூகக் கருத்தாக்கமாகவும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கவிதையில் அது அழகு பெறும்போது, உடல் மொழியை இயல்பாகவே, உண்மையாகவே விடுதலை செய்கிறது. இரு ஒரேவிதமான துயரங்களை அனுபவிக்கும், ஒரே மாதிரியான உடல்களின் உரையாடலை இக்கவிதை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறது.

உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்கமுடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக்கோப்பைகள்
பற்றப்பட வாகாய்க் காத்திருந்தன
பணித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத்தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துகள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது

இரவு மிருகம்

பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்
கதவடைத்து விட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போது தான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.

‘இரவு மிருகம்’ என்ற கவிதை வெளியான காலக்கட்டம் இன்றும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ‘பனிக்குடம்’ இதழில் தான் முதலாக வெளியானது என்று நினைக்கிறேன். மிகவும் சர்ச்சைக்கு உள்ளான கவிதையும் கூட. இரவை மிருகமாக்கி எழுதப்பட்ட கவிதை. கொடிய இரவுகள் தொடரும் பெண்ணின் தனிமை முழுதும், காமவயப்பட்டதாயும், அதனடியில் நிரம்பும் சோகமும் உடைய கவிதை.

என்னைப்பொறுத்த வரை, பெண்ணின் விடுதலை என்பது உரக்க உச்சரிக்கப்படும் புரட்சியான எச்சில் தெறிக்கும் வார்த்தைகளில் இல்லை. அது ஒரு வகையில் இல்லாததைப் பேச முயலும் மனித உளவியலின் எழுச்சி மட்டுமே. ஆனால் சோகமும் துயரமும் வலியும் சொற்களாகும் போது அவை அந்த உடலிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதற்கான வழியைத் தேடிக்கொள்கின்றன என்று தான் பொருள். உடலிலிருந்து சிறகடித்து வெளியேறத் துடிக்கும் உணர்ச்சிகள், உடலுக்கு ஆசுவாசத்தைத் தருகின்றன. பேராற்றலைத் தருகின்றன. அம்முயற்சியைத் தொடர்ந்து செய்கையில், உடலை உடனுக்குடன் துயரற்றதாக மாற்றும் கமலைகளாக வார்த்தைகள் மாறி நின்று, துயரை வாரி இறைக்கின்றன. அப்பொழுது, அதன் கடைசி வரியில், அல்லது வார்த்தையில், துயரைக் கடந்த பெருங்களிப்பு ஊற்றெடுக்கிறது.

பறக்கடவுள்

சொல்லுகிறீர்கள்
முதுகு விரியக் காய்ந்தால்
அதன் பெயர் பறவெயில்

உலரும் புழுத்த தானியத்தை
அலகு கொத்தி விரையும்
அது பறக்காகம்

கையிலிருப்பதை
மணிக்கட்டோடு
பறித்துச் சென்றால்
அது பறநோய்

நிலத்தை உழுது
வியர்வை விதைத்தால்
அது பறப்பாடு

சகலத்திற்கும் இப்படியே
பெயர் என்றால்
இரத்த வெறியில் திளைக்கும்
எது அந்தப் பறக் கடவுள்

‘பறக் கடவுள்’ கவிதையும், கீழே வரும் ‘ஓட்டம்’ கவிதையும் சாதிய அரசியலை வெளிப்படையாகப் பேசும் கவிதைகள். மலினமானது எதையும் ‘பற…’ என்னும் சொல்லடையுடன் வழங்கும் மனிதனின் சாதிய உளவியலை, ஆதிக்கத்தை, நேரடியான கேள்வியால் கொக்கி போட்டு இழுப்பவை. ‘ஓட்டம்’ கவிதை வரையும் புத்தி விளையாட்டும் அதன் ஓவியமும், ஒடுக்கும் விழைவு கொண்ட எந்த ஓர் ஆதிக்க மனதையும் சவாலுக்கு அழைப்பதுடன், ’நான் இல்லாத போது என் தொடக்க இடத்தில் குவியும் உங்கள் காலடித்தடங்கள்’ என்ற வரியில், எல்லோரின் தந்திரங்களையும் தான் அறிந்திருப்பதை சூசகமாகச் சொல்கிறது.

ஓட்டம்

சிக்கலான விதிமுறைகள்
கொண்டது
என்னுடைய ஓட்டம்

தோற்பவர் எவருமின்றி
வென்றுவிட வேண்டும்
வெல்பவர் எவருமின்றி
தோற்க வேண்டும்

பயணத் தூரத்தை
மனம் தீர்மானித்துக் கொள்ளலாம்
தொடக்க இடத்தில்
கால்கள் குறியிட்டுக் கொள்ளலாம்

பயணிக்க வேண்டிய
பாதையை
நதியோரமோ
வெளிச்சத்தின் சாயல்படாத
வனத்தின் வழியோ
சாம்பல் படிந்த
எரிமலைப் படிவுகளைக் கடந்தோ
ஆதித்தோட்டத்தின் அந்தரங்க வழியோ
கண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடக்க முடியவில்லையெனில்
இடையில் இளைப்பாறிக் கொள்ளலாம்.
காலத்தின் கைகளில்
நிறுத்து கடிகாரம் இல்லை

திரும்பிவரும் தூரம் கூட
முன்னோக்கிய பயணத்தில்
சேர்த்துக்கொள்ளப்படும்

ஓட்டத்தை முடித்துவைக்க
கையசைவுகளோ
கொடியசைப்புகளோ
ஏதுமிருக்காது

பின்
எவை என்னைத்
தீர்மானிக்கும்?
நான் இல்லாதபோது
என் தொடக்க இடத்தில்
குவியும் உங்கள் காலடித் தடங்கள்

யோனிகளின் வீரியம்

பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன் குறி மறைந்து போகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

‘யோனிகளின் வீரியம்’ என்ற இக்கவிதை, அது சொல்ல வந்திருக்கும் கருப்பொருளால், இத்தலைமுறையின் மிக முக்கியமான கவிதை ஆகிறது. தொடர் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் பெண்ணுடலின் இயல்பான உடற்கூறுகள், நூற்றாண்டுகளாக மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. உருமாற்றமும், வளர்சிதை மாற்றமும் பெற்றிருக்கின்றன. ‘குடல் வால்’ எனும் உறுப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் பயனற்றுப் போன உறுப்பாக இருக்கிறது. அந்த வரிசையில் ஆணின் குறியும் தேய்ந்து நலிந்து போகும் என்று குறிப்பிடுகிறார். பரிணாம வளர்ச்சியில் அப்படியான ஒரு நிலை என்றால் மானுடத்தின் தோல்வி தான் அது. என்றாலும், வீர்யமுற்றிருக்கும் எம் யோனி எனும் சொற்பதத்தை முத்திரையாக்கி, சொல்லவந்த பொருளை தொடர்நிலையில் வைக்கிறார்.

சுகிர்தராணிக்குப் பின்பாக உருவான பெண் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும், அவர் பேசிய பொருளையே மீண்டும் வேறொரு தொனியில் பேசிப்பார்ப்பதாய் இருக்கின்றனவே அன்றி, அவர் கவிதைகளில் கையாண்ட சுயத்துவத்தைச் சிறிதும் உள்நுகர்ந்ததாய் இல்லை. குறிப்பாக, நான் மேலே சுட்டிக் காட்டிய, ஒரு பாலுணர்ச்சி, சுயப்புணர்ச்சி, தன் உடலின் சுயம் மேலோங்கிய ஆண் புணர்ச்சி என்று பால் உறவின் எல்லா வெளிகளையுமே தமிழ்ச் சூழலில் வேறெவருக்கும் முன்பாகவே பேசத் துணிந்தவர். அல்லது எப்பொழுதோ பேசத் தொடங்கியவர். பாலியல் போருக்கான தன் சிறகுகளைத் தானே அசைத்து எழுந்தவர். மேலும், அது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்குரலென அடையாளம் பெறுகையில், அது தன் மீது அழுந்தியிருக்கும் எல்லோருடைய குரலையும் துச்சமாகத் தூக்கியெறியும் சக்தியுடன் பீறிட்டிருக்கிறது.

’கைப்பிடித்து என் கனவு கேள்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு சாதாரண மிகுபுனைவுக் குரலாகவே பதிவாயிருந்தது. என்றாலும், வளமான மொழியும் கருப்பொருளும் கொண்ட இவரது இரண்டாம் தொகுப்பு முதலான கவிதைகள், தொடர்ந்த ஒரே மாதிரியான தொனியால் தன் படிமங்களை முன் வைக்கும் போது தொடர் வாசிப்பில் எங்கோ அயர்ச்சியூட்டுகின்றன. எங்கேயோ வாசித்த உணர்வை அவை தருவதையும் தவிர்க்கமுடியவில்லை. விடுதலையின் வேட்கையை வெவ்வேறு தொனியும் மொழியும் கொண்டு வரிகளாக்குகையில், அடுத்தடுத்த அடிகள் இன்னும் அதிகமாய் வேகம் பெற்று முழங்கும். அதற்கான அத்துணை பலமும் கொண்டவர் சுகிர்தராணி என்பதை, அவரது தொடர் கவிதை இயக்கம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: ‘கைப்பற்றி என் கனவு கேள்’(2002), ‘இரவு மிருகம்’ (2004), ‘அவளை மொழிபெயர்த்தல்’ (2006), ’தீண்டப்படாத முத்தம்’ (2010) ஆகிய நான்கு கவிதை தொகுப்புகளைப் படைத்துள்ள இவர் தலித் பெண் கவிதையின் முன்னோடிக் கவிஞர். வேலூர் மாவட்டம் அம்மூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.





Tuesday, May 24, 2011

வலது புறம் செல்லவும் - 9 - இயக்குனர் அகத்தியன்




வலது புறம் செல்லவும் - 9


இயக்குனர் அகத்தியன்24-05-2011, 01:58 PM

கேரளாவில் கோட்டையம் அருகே குடமலூர் என்ற கிராமம். 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ஒரு பெண் பிறந்தார். 1946 ஜூலை 28ல் இறந்து போனார். தான் வாழ்ந்த காலத்தில் துன்பமும் வறுமையும் உடல்நலக் குறைவும் அவரோடு துணைவந்த சொந்தங்கள். ஆசிரியப் பணி புரிந்தார். இறப்பிற்குப் பிறகு மக்களால் வணங்கப் பெற்றார். 1986 பிப்ரவரி 8ந் தேதி ஜான்பால்-II அவரைப் புனிதராக அறிவித்தார் (Deatification). 1996 ஜூலை 19 இந்திய அரசு அவரின் ஐம்பதாவது நினைவு நாளில் தபால் தலை வெளியிட்டது. 2008 ஜூன் ஒன்றாம் தேதி போப் பெனிடிக்ட் - XVI அவரைப் புனிதராக (செயின்ட்) அறிவித்தார். அந்த அன்னையின் பெயர் அல்போன்சா.

நாம் வாழும் காலத்தில் கத்தோலிக்கத் திருச்சபை அங்கீகரித்த ஒரு அன்னை இவர்.

இந்து மதப் பாரம்பரியத்தில் இந்த அங்கீகாரம் தேவையில்லை. மக்கள் வழிவழியாக வழிபடும்போது தெய்வநிலையை ஒரு ஆணோ, பெண்ணோ அடைகின்றனர்.

குஷ்புவுக்குக்கூட நாம் கோயில் கட்டியிருக்கிறோம். குஷ்புவுக்கே கோயில் கட்டும்போது இந்த மண்ணில் மனிதகுலத்துக்காக வாழ்ந்த அன்னையர்கள் வணங்கப்பட்டதும், தெய்வமானதும் வியப்புக்கோ நகைப்பிற்கோ இடமளிக்காத ஒன்று.

உழைக்கும் மக்களிடமிருந்து உழைப்பைத் திருடும் ஒரு கூட்டம் மக்களிடம் உருவானபோது திருட்டு என்பது ஒரு தொழிலாக மாறிப்போனது. மக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்குள் கூடி ஒருவனை காவலனாக தேர்ந்தெடுத்தனர். இன்றைய காவல்துறையின் ஆரம்பம் அது.

அப்படி ஒருவன் மக்களால் காவலுக்கு நியமிக்கப்பட்டான். மாபெரும் வீரன். மொத்தக் கயவர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்தான். ஆஜானபாகுவான உருவம். கையில் நீண்டக் கத்தி, தானியங்களையோ, தனது மக்களின் வேட்டையாடிய பொருட்களையோ மழைக் காலங்களில் உண்டு, உண்டு தூங்கிய எழ பெரும் பானைகளில் காய்ச்சி புதைக்கப்பட்ட மதுவையோ கயவர்கள் திருடிக் கொண்டு போகாமல் காவல் செய்தான். தன் அடையாளத்திற்காய் கருப்பு நிறத்தில் தொடையில் ஒரு துணி சுற்றிக் கொண்டான். இரவு நேரங்களில் நன்றாக மதுக்குடித்து, மாமிசம் தின்று, கையில் அரிவாளுடன் நான்கு, ஐந்து அடி உயர நாயைக் கையில் பிடித்துக் கொண்டு, கையில் தீப்பந்தம் ஏந்தி கள்வர்கள் வேட்டைக்காக வலம் வருவான். அவன் வந்தால் மொத்தமாய் குலை நடுங்கி வீட்டிற்குள் அடைந்து விடுவார்கள். அவர் பொருளை அவரே இரவில் எடுக்க முடியாது. இன்னைக்கு கருப்பு வருது என்று கயவர்கள் வெகு தொலைவில் முடங்கி விடுவார்கள்.

கருப்புவை எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஆழ்ந்த தூக்கத்திலும், மது மயக்கத்திலும் கருப்பசாமி என்ற சத்தம் கேட்டால் விழித்துக் கொள்வான். கருப்பசாமியிடம் வழக்குகள் போனால் அவன் நியாய சபைக்கு வரும் முன்பே சம்பந்தப்பட்டவர்கள் வழக்குகளை முடித்துக் கொள்வார்கள்.

இப்படி வாழ்ந்த மனிதன் இறந்தபோது இன்னொருவன் பதவிக்கு வந்தான். இவனைப் போலவே சுடலை ஒரு பிராந்தியத்தில் இருந்தான். மாடன் ஒரு பகுதியைக் காவல் செய்தான். ஐயன் மற்றொரு பகுதியில் மக்களைக் காத்தான். இன்றும் கருப்பசாமியும் சுடலையும், மாடனும் ஐயனும் ஊர் எல்லைகளில் சிலையாக காவல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

வன்முறையைப் பிரயோகித்து மக்களின் வாழ்வைக் காக்க வேண்டிய நிலை அன்றும் இருந்தது. அதிலும் ஆணாதிக்கச் சமுதாயம் நிலைபெற்றபின் பெண்களே பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர். மனிதகுல வரலாற்றில் மது பங்கெடுத்த பிறகு மதுவை அருந்தி மங்கையரை விருந்தாக்கிக் கொள்ளும் ஆண்வர்க்கம் உருவாகிவிட்டது. குழுத்தலைவனாகவோ, வலிமையுடையவனாகவோ இருக்கும் ஆண் பெண்களை பாலியல் தேவைகளுக்காக அதிகாரத்தின் பெயரால் பயன்படுத்துவது நடந்தது. அப்போதுதான் அதுவும் நடந்தது.

இன்றைய கொல்கொத்தா, நேற்றைய கல்கத்தா.. மக்கள் சற்று அதிகமாகக் கூடி வாழ ஆரம்பித்த காலக்கட்டம். அந்தப் பெரிய மக்கள் கூட்டத்தில் பெண் இனம் மிகக் கோரமாக நடத்தப்பட்டது. யாரும் யாரையும் இழுத்துச் செல்லலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்யலாம். மூச்சு நின்று விட்டால் அவளைக் கொண்டு போய் கடலில் சேர்க்க கங்கை இருந்தாள்.

அங்கு இருந்த கூட்டத்தின் தலைவன் பெண்களுக்கு கொடுமைகள் இழைத்தான். தாங்க முடியாத பெண்கள் கூடினர். தலைவனின் மனைவியிடம் முறையிட்டனர். தலைவி, நதியில் குதித்து உயிர் துறக்கப் போகிறோம் என்ற பெண்களுக்காக, அன்றிரவு குடித்துப் புசித்து கைத்தடிகளுடன் மெய்த்தடங்கள் தேடிய தலைவனின் உயிர் தலத்தை அறுத்தாள். குடிபோதையில் இருந்த கைத்தடிகளின் தலைகளைத் கொய்தாள்.

விடிந்தபோது தலைகளை மாலையாக்கி கழுத்தில் போட்டு, வெறிகொண்டு அரிவாளுடன் வெளியே வர குலை நடுங்கிப் போனது கூட்டம்.

இந்த பூமியில் ஒரு பெண் மொத்தமாகச் செய்த முதல் கொலை அது.

வாய் வழியாய் காட்டுத்தீபோல் சம்பவம் பரவ, அந்தப் பெண் குழுவுக்கு தலைமை ஏற்று ருத்ர ஆட்சி புரிய, இந்தியா மொத்தத்துக்கும் முதல் முறையாக ஒரு பெண் தெய்வ வழிபாடு ஆரம்பமானது. அன்னை காளி அவதரித்தாள்..

எந்த மண்ணில் எந்த இடத்தில் கோபம் கொண்டு, ரத்தம் கண்டு அன்னை காளி உருவானாரோ.. எந்த மண்ணில் ஒரு ஆணைக் கொலை செய்தாரோ .. அதே மண்ணில் அதே இடத்தில் அதுவும் அன்னை காளியின் இல்லத்தில் அமைதியும் பொறுமையும் சாந்தமும் கொண்டு அன்னை சாரதாதேவி உருவானார். ஒரு ஆண் கடவுள் நிலையை அடைய உதவினார். எப்போதுமே காலம் தன் கணக்குகளை விதிகளோடு போடுகிறது. நாம் விதி என்கிறோம்.

ராமகிருஷ்ணருக்காக அவர் அன்னை பெண் தேடிக்கொண்டிருந்தார். பல இடங்களில் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. ஒரு நாள் தன் அன்னையிடம் ஜெயராம்பாடி என்ற ஊரைக் குறிப்பிட்டு, ஒரு வீட்டைக் குறிப்பிட்டு, எனக்காக ஒருத்தி அங்கிருக்கிறாள் என்றார்.

சாரதைக்கு அப்போது வயது ஐந்து. திருமணம் முடிந்து, பதினெட்டு வயது மங்கையாக, அன்னை ராமகிருஷ்ணரை கல்கத்தா வந்து சந்திக்கிறார்.

ராமகிருஷ்ணருக்கு மனமும் உடலும் தெய்வீகமாக மாறி இருந்த நேரம். ஆனால் மனைவியின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கணவன். அன்னையிடம் கேட்டார்.

நீ என்ன என்னை உலகியலுக்கு இழுக்கவா வந்திருக்கிறாய்? அன்னை உடன் பதில் சொன்னார். இல்லை உங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவவே வந்திருக்கிறேன்.

ராமகிருஷ்ணர் பரமஹம்சராக மாறியது அன்னையின் தியாகத்தினால்..

அன்னை கேட்டார். நீங்கள் எப்படி என்னைப் பார்க்கிறீர்கள்? "அன்னையாக, அன்னை பராசக்தியின் வடிவாக, அவள் கோவிலில் சிலையாக நிற்கிறாள். நேரில் உன் வடிவத்தில் வீற்றிருக்கிறாள்" என்றார். வெறும் வார்த்தையல்ல அது. அன்னையை அமர வைத்து சாத்திர விதிகளுக்கேற்ப, மந்திரங்கள் உச்சரித்து, புனித நீரைத் தெளித்து, தேவியாக எண்ணி வணங்கி, உணவு படைத்து, வாயில் ஊட்டி, பூமியில் அன்னையின் வடிவமாக மனைவியைக் கண்டார். தெய்வநிலைக்கு தகுதியானவராக அன்னை இருந்தார். இல்லற வாழ்வில் ஈடுபட்டு தன்னை அம்மா வென்றழைக்க குழந்தை பெற்றுக் கொள்ளாத அன்னையை இன்று வரையல்ல, நாளை பிறக்கும் குழந்தையும் அம்மா என்று அழைத்துக் கொண்டுதான் இருக்கப்போகிறது. பூமி உள்ள மட்டும் ஒரு பெண் அம்மாவாக இருப்பது பெண்ணினதுக்கு எவ்வளவு பெருமை.

இன்னொரு அன்னையும் கல்கத்தாதான் நமக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவர் பணிபுரிந்த பள்ளி, ராணுவ நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டது. வேறு இடம் பெயர்ந்த அந்த அன்னை, கல்கத்தாவின் சேரிப்பகுதிகளை அருகிருந்து காண ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிதான் அவரை ஏழைகளின் பால் ஈர்த்ததா எனக் கேட்டபோது, இல்லை எனக்கு ஏசுவின் அழைப்பு என்றார்.

ஏசு என்ற ஆணைப் பெருமைப்படுத்திய ஒரு பெண் அவர். அவருடைய கருணை உள்ளத்தினால் மதங்களைக் கடந்த மனிதனாக ஏசு வணங்கப்பட ஆரம்பித்தார். ஏசுவின் மதத்தைத் திணிக்காமல் அவரின் மனிதநேயத்தை மக்களிடையே எடுத்துச் சென்றவர். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதுகூட ஒரு குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு என்னெதிரே கருணை பொழிந்து கொண்டிருக்கிறார், அன்னை தெரசா.

ஆண் பாதி பெண் பாதி என்ற இறைத்தத்துவத்தில் சக்தி ஆணில் உறைகிறாள். தன் உடலில் பெண்ணுக்கு பாதியை கொடுத்ததாகத் தான் சொல்கிறார்கள். சக்தி தன்னில் பாதியை சிவனுக்கு கொடுத்தாள் என்று ஏன் சொல்வதேயில்லை.

பூமியில் பிறக்கின்ற யாரும் அன்னையைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பது என் எண்ணம். அன்னைதான் இவன் என் மகன், மகள் என்ற தேர்ந்தெடுக்கிறார். (தேர்ந்தெடுப்பதா.. பின்னால் பேசத்தான் போகிறோம்)

ஒரு பெண் பிறக்கும்போது பூமிக்கு அல்லது பூமியில் ஒரு அன்னை பிறந்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்களேன்.

திராவிட மொழிகளின் தாய் தமிழ். அ என்ற மொழியின் முதல் எழுத்தில் பெண் அம்மா என்றழைக்கப்படுவது நம்மைத் தவிர வேறு எங்கும் இல்லையென்றே நினைக்கிறேன். மனிதர்க்கு பால்தரும் பசு, ஆடு இவைகளின் ஒலி மட்டும் "ம்மா" என்றும் "ம்மே" என்றும் அமைந்திருப்பதை வியப்போடு கவனித்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன் "மா மனிதன்" என்றால் நற்குணங்கள் நிறைந்த உயர்ந்த மனிதன். "அம் மா மானிதன்" என்பது கூட அம்மா மனிதனாக ஆரம்பத்திருக்குமோ என்று.

மொழியின் சிதைவைப் பற்றி நான் வணங்கும் அன்னை ஒருவர் (இப்படிக்கூட சொல்லலாம்). என் வணக்குத்துக்குரிய அன்னை ஒருவர் என்னிடம் சொன்னார்.

பெண்ணின் பிறப்புறுப்பு தமிழில் பூ உருண்டை என்று அதன் வடிவம், மென்மை கருதி அழைக்கப்பட்டது. ஆணின் பிறப்புறுப்பு பூவிதழ் என்று அழைக்கப்பட்டது. காலத்தின் மருவலில் அது இன்றயை வடிவம் பெற்றது என்றார்.

அவர் மேலும் ஒரு குறிப்புத் தந்தார். ஆங்கிலத்தில் Allthee என்பதற்கும் தமிழில் ஆதி என்பதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்றார்.

பெண்ணின் பிறப்புறுப்பு மங்களகரமான வார்த்தையால் குறிக்கப்படும்போது Holy என்றே அது குறிக்கப்பட்டது. அதுவும் மருவி வேறுவிதமாக உச்சரிக்கப்படுகிறது என்றார். மங்களமான சொற்கள் மருவியதுபோல் மங்களமான பெண்மையும் மாறித்தான் போய் இருக்கிறது.

ஒரு பெண்ணின் மாற்றம் குடும்பம் சார்ந்ததாகவோ, சமுதாயம் சார்ந்ததாகவோ அமைந்து விடுகிறது. இங்கே இப்போது சமுதாயத்தால் மாற்றமடைந்த ஒரு பெண்ணைப் பற்றிப் பேசப் போகிறேன். கொஞ்சம் விரிவாக, நான், கௌரவப்படுத்தப்படவேண்டிய அன்னை என்று பல காலம் எண்ணியிருக்கிறேன். எனக்கு அறிமுகமானதோ வேறு பெயரில், அவரை அறிந்து கொண்ட பின் அன்னையாகவே அவரைப் பார்க்கிறேன்.

ஓஷோவை தினசரிகள், வாரப்பத்திரிகைகள், செக்ஸ் சாமியார் என்றே எனக்கு அறிமுகப்படுத்தின. அவரைப் படித்த பின், உலகின் தலைசிறந்த மனநல மருத்துவர் என்று புரிந்து கொண்டேன். அப்படித்தான் இந்த அன்னையும்.

அந்தப் பெண்ணுக்கு திருமணம். அப்போது அவள் பதினோரு வயதைக் கடந்திருந்தாள். திருமணம் என்றால் என்னவென்று அவள் இளைய சகோதரி சந்தேகம் கேட்டபோது எனக்குத் தெரியாது என்று சொல்லும் வயது. அவள் சகோதரி மாப்பிள்ளையைப் பார்த்து சொன்னாள். "உனக்கு இரண்டு அப்பாக்கள்".

அம்மா பசிக்குது, சாப்பாடு போடு என்று கேட்ட சிறுமியை அழைத்துபோய் மணவறையில் அமர்த்தினர். பருத்த தொந்தியும் நரைத்த முடியுமான அந்த மனிதன் சொன்னான். வீட்டில் வேலை செய்ய உணவு தர யாரும் இல்லை, அதனால் மட்டுமே இவளைத் திருமணம் செய்து கொள்கிறேன். இவள் பெரிய மனுஷி என்று தன்னைத்தானே உணரும் வரை இவளை உடலளவில் மனைவியாக பயன்படுத்த மாட்டேன்.

வறுமையும், சொன்ன சொல்லின் நம்பிக்கையும் அவளை அனுப்பி வைக்க அவள் பெற்றோருக்கு காரணமாயிற்று. பதினோரு வயதில் கணவன் வீடு வந்த அந்தப் பெண்ணின் மேலாடையை அவிழ்த்துப் பார்த்து ஊர்ப்பெண்கள் சிரித்தனர். "இவளுக்கு முலை கூட இல்லை" என்றனர். முளைவிடாத விதையாகவே இருந்தாள்.

வீட்டிற்கு வேலை செய்ய பெண் வேண்டும் என்று சொல்லி அழைத்து வந்த அந்த முதிய கணவன் "சேலையை அவிழ்க்கும்போது, உனக்கு பத்து வயதாகிவிட்டது, எந்த ஆணின் முன்னும் உடம்பைக் காட்டக்கூடாது என்ற அம்மாவின் அறிவுரைதான் அவள் நினைவிலிருந்தது".

அந்த மனிதனுக்கு அவள் குழந்தை என்று தெரியவில்லை. குழந்தையைக் கொடுப்பவள் என்றுதான் தெரிந்தாள். ஓடி ஒளிந்து, மறைந்து, பசிமறந்து, அடிவாங்கி, இல்லறம் என்பது தொல்லை என்று மனதில் கொண்டு, தப்பித்து, தாய்வீடு வந்து மீண்டும் பெற்றோரால் கணவன் வீடு அனுப்பப்பட்டு, மீண்டும் பெற்றோரிடம் ஓடி வந்து, மறுபடியும் கணவனிடம் அனுப்பப்பட்டு, அந்த பிஞ்சு, காயாகி, பழுக்காமல், கணவன் என்ற மிருகத்தால் கசக்கப்பட்டு ரத்தம் வடித்தது.

அந்தக்குழந்தையின் பெயர் பூலான், பின்னாளில் இந்திய சரித்திரம், பூலான்தேவி என்றும், கொள்ளைக்காரி என்றும் பதிவுசெய்து கொண்ட பெண்.

எனக்கு அந்தப் பெண்ணை கொள்ளைக்காரி, கொலைக்காரி என்றுதான் தினசரிகள் அறிமுகப்படுத்தின. ஆனால் அவளைத்தான் கொள்ளையடித்தார்கள், வாழும்போதே பலமுறை கொலை செய்தார்கள். இறுதியிலும் அந்த அன்னையை கொலைதான் செய்தது ஆண் வர்க்கம்.

உத்திரப்பிரதேசம்தான் இந்திராகாந்தி என்ற அன்னையை நமக்குத்தந்தது. பூலான் தேவியைத் தந்ததும் அதுதான். இருவரும் சுட்டுத்தான் கொல்லப்பட்டார்கள். இந்திரா காந்தி இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்கு எத்தனையோ கையெழுத்துக்கள் போட்டிருக்கிறார். மன்னர்மானியம என்று மக்களின் பணத்தை தின்று கொண்டிருந்தது ஒரு கும்பல். வயிற்றுப்போக்கு என்று காரணம் காட்டி அன்று மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து எஸ்.எஸ்.ஆர் என்று தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ராசேந்திரன் என்ற நடிகர் மன்னர் மானிய ஒழிப்பிற்கு ஆதரவாக ஓட்டுப் போடாமல் ஒளிந்து கொண்டார். அன்று அவருக்கு ஏதோ தேவை இருந்திருக்கிறது. தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தன் வலிமையான கையெழுத்தால் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றினார் அன்னை இந்திரா. அன்னை பூலானோ தன் சுயசரிதையை சொல்லி, அதை எழுதிக்கொண்டு வந்த தாள்களில், கைநாட்டுத்தான் வைத்தார். எழுதப் படிக்கத் தெரியாமல் பாராளுமன்றம் சென்ற முதல் பெண், இன்று எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் நாடாளுமன்றத்தில் தின்றது செரிக்காமல் (குசு) விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை பல ஆண்டுகளுக்கு முன் வந்த குஷ்வந்த் சிங்கின் சுயசரிதைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட செய்தி இது.

அந்த சிறுமி கசக்கப்பட்டாள், தன் பதினைந்து வயதில் திருடி என்று காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டாள். மேல் சாதி ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த தனது கிராமத்தில் தாய், தந்தையரை துப்பாக்கி முனையில் நிறுத்தி, அவர்களின் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்டாள்.

அதே மேல் சாதி வர்க்கத்தால் ஒரு கொள்ளைக் கும்பல் மூலமாக எங்கள் ஊரில் ஒரு கொள்ளைக்காரி இருக்கிறாள் அவளைக் கடத்திச் செல்லுங்கள் என்று சொல்லப்பட அவள் கடத்தப்பட்டாள்.

பாபு என்ற கொள்ளைக்காரன் அவளைப் புணரப்படர்ந்தபோது விக்ரம் என்ற கொள்ளைக்காரனால் சுடப்பட்டு, அவள் காப்பாற்றப்பட்டு, விக்ரமை திருமணம் செய்து கொள்ளைக்காரியாக மாற்றப்பட்டு, ஒரு கொள்ளைக்காரி இந்தக் கட்டுரையில், அன்னையாக பதிவு செய்யப்படுகிறார்.

இதன் அடிப்படைக் காரணம் என்ன? ஆணாதிக்க சமூகம்தான். எந்தப் பெண்ணுக்காவது உடலுறவு பிடிக்காமல் இருக்குமா? ஆனால் பூலானுக்கு பிடிக்கவில்லை. சிறுவயதில் ஆணால் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் வேதனையும், வலியும்தான் அவர் மனதில் இருந்தது. விக்ரம் மெல்ல மெல்ல கொள்ளைக்காரி என்று இந்திய சமூகம் பதிவு செய்த அந்த அன்னையை இல்லற வாழ்விற்கு தயார் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

விக்ரமுடன் இணைந்த பிறகு பதினோரு வயதில் தன்னை திருமணம் என்ற பெயரில் அழைத்து போய் கற்பழித்த அந்த மிருகத்தைப் பழிவாங்கினார். தன்னை தன் தாய் தந்தையின் கண்முன்னே கற்பழித்தவர்களுக்கு பாடம் புகட்டினார்.

விக்ரமை அவர் கூட்டாளிகள் கொலை செய்து விட தனிமைப்படுத்தப்பட்டார். எதிர்க்கும்பலால் கிட்டத்தட்ட ஒரு வாரம் நிர்வாணமாகவே வைக்கப்பட்டார். வரிசையில் நின்று மேல் சாதி ஆண்கள் அவரைக் கற்பழித்தார்கள். மனிதாபிமானமுள்ள ஒரு ஆணால் தப்புவிக்கப்பட்டார். மீண்டும் பலம் பெற்று தன்னைக் கற்பழித்த ஆண்களை வரிசையாக நிறுத்தி ஆண்குறிகளை வெட்டியெறிந்தார்.

தன் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கீழ்சாதி பெண்களை அழைத்து அவர்களோடு தூங்கச் சொல்லும் கேவலமான கலாச்சாரம் இருந்த ஊரில் அப்படிச் செய்தவனின் ஆண்குறியை வெட்டி எறிந்தார்.

தன்னந்தனியாக காட்டில் மாதக்கணக்கில் வாழும் நிலையெல்லாம் அவருக்கு வந்திருக்கிறது. அவரால், அவரைப் பிடிக்க முடியாமல், ஒரு மாநில முதல்வர் பதவி இழந்தார். அவரை சரண் அடைய முயற்சி செய்து வெற்றி பெற்று "முதலமைச்சரிடம் சரண் அடையுங்கள் என்று சொல்லி", "சரண் அடையும் போது CM வந்து விட்டார், சரண் அடையுங்கள் என்று சொல்ல, "நான் CM இடம் எல்லாம் சரண் அடைய "மாட்டேன்", "நீங்கள் சொன்னபடி முதலமைச்சரை வரச் சொல்லுங்கள்", என்று சொன்னவர் அவர்.

சரண் அடையும்போது தன்மேல் மீடியாவின் ஒளிவிளக்குகள் வீழ்ந்தபோது தன்பக்கத்தில் இருந்த உதவியாளன் "இந்த வெளிச்சம் பட்டா நாம சீக்கிரம் செத்துப்போயிடுவோம்" என்று சொல்ல கேமராவின் விளக்குகளுக்கு பயந்து ஒளிந்தவர்.

இப்படி அப்பாவியாக ஒரு கொள்ளைக்காரி இருக்க முடியுமா?

ஆணாதிக்க சமூகம் பெண்ணை நிறைய மாற்றி இருக்கிறது. நம் தங்கையை, குழந்தையை பதினோரு வயதில் திருமணம் செய்து கொடுப்போமா? கோவையில் அந்த மகள், பிஞ்சு மகள் புணரப்பட்டதை அறிந்தபோது நெஞ்சு வலித்தது. தமிழகம் கொதித்தது. அந்த என்கவுன்டர் கூட வரவேற்கப்பட்டது.

பூலனும் அப்படி ஒரு குழந்தைதானே. நம் மகள் தானே. சகோதரிதானே. அன்னைதானே. அன்று அன்னை ஒருத்தி பெண்களைக் காக்க கணவன் உயிர்த்தலத்தை அறுத்து கைத்தடிகளைக் கொன்று கழுத்தில் மாலையாக தலைகளைப் போட்டு காளி என்று பெயர் தாங்கினாள். "அவள் மட்டும் அன்னை காளி என்று வணங்கப்படலாம். இவள் மட்டும் கொள்ளைக்காரியா?" இவளும் காளிதான். இன்னொரு அன்னை காளிதான். பூமியில் பூலான் வணங்கியது அன்னை துர்க்கையை. நானும் அப்படித்தான், அன்னை துர்க்கையாகத்தான், பூலானை வணங்குகிறேன். விரும்பினால், நீங்களும் சிரம் தாழ்த்தி ஒரு வணக்கம் செய்யுங்கள், "அன்னைக்கு".

அன்னையர்களை வணங்கி .. அகத்தியன்.





Monday, May 16, 2011

திகைப்பூண்டுகள் - 1 - இலட்சுமணப் பெருமாள்



திகைப்பூண்டுகள் - 1

கருப்பண்ணசாமியும் சக்கண்ணனாசாரியும்

http://koodu.thamizhstudio.com/thodargal_17_1.php

இலட்சுமணப் பெருமாள்16-05-2011, 23:58 PM

ஞாபக சூழ‌ச்சேற்றுக்குள் மனசை அழுத்திக் கொண்டே போனால் தனது தட்டுகிற இடத்தில் அந்த சின்ன வயது பிராயச் சம்பவம் எல்லார்க்கும் எது முதலில் அகப்படுமோ! எனக்கு எங்க ஊர் கருப்பண்ண சாமி கோயிலும் சக்கண்ணனாசாரியும் தான் மனசிற்குள் படிந்து கிடக்கிறார்கள்.

மேற்கூரையின்றி ஆளுயர சுற்றுச் சுவருக்குள் கையில் அரிவாளுடன் இளம்பிராய அரும்பு மீசையுடன் அதுவும் சிரித்த முகத்துடனான கருப்பன் சிலை வேறெங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சுற்றிலும் வேலி கருவேல மரங்கள் கோட்டை போல் சுற்றி வளைந்து கிடக்கிறது. கோயிலின் எதிரே தூரத்தில உயர்ந்த கருவேல மரம் ஒரு பாட்டம் மழையை தாங்குமளவிற்கு குடைபோன்று கிளைகள் கவைகளாய் ஒன்றையன்று கோர்த்தும் சிறிய இலைகளும் முட்களும் பின்னி விரிந்து கிடக்கும்.

உருண்ட கம்பளிப் பூச்சிபோன்ற அதன் மல்லிகைப் மணத்தைவிட பல மடங்கு கமாளிக்கும் தன்மை கொண்டது. காற்றின் திசையில் மைல் கணக்கில் வாசனை தூக்கியடிக்கும் உடை மரத்திற்கும் கோட்டை வேலிக்கும் நடுவே போகிறது வண்டிப்பாதை. அதன் வழியே நடந்து போகும் பாதசாரிகள் கோயிலின் நேரே வந்ததும் மேல்துண்டை எடுத்து இடது குடங்கையில் போட்டு வணங்கி கீழே குனிந்து தரை மண்ணள்ளி நெற்றியில் பூசியபடி போகிறார்கள்.

ஏரு பூட்டிப்போகிற விவசாயி தலையில் கஞ்சிக்கலயம் இருப்பதால் கழுத்தை திருப்பாமல் கோயிலின் முன்னால் வந்திருக்கிறோம் என்பதை யூகமாய் உணர்ந்து அனிச்சையாய் கால்செருப்புகளை கழற்றிவிட்டு, ''அய்யா கடவுளே கருத்தப்பாண்டி'' இன்னைக்கி பொழுது எந்த நொம்பளமும் இல்லாம போகணுமப்பா'' என்றதும் கால்களால் மீண்டும் செருப்புகளை கோதியபடி மாடுகளுக்குப் பின்னால் தொடர்ந்து வேகமாக நடைபோடுவார்.

சாமிக்கு நிழலோட்டமா மேலே கூரைத்தளமும் சுத்தி கோட்டையும் கட்டணுமப்பா. ஊர் காக்கிற தெய்வத்தை இப்படி மழையும் வெயில் போட்டு வைக்கப்போய்த்தான விருத்தியில்லாம இருக்கு என்று ஒரு சாரரும். அதெல்லாம் கூடவே கூடாது. சாமியும் நம்மளக்கணக்கா வெயில்ல காய்ஞ்சி மழையில நனைஞ்சி கிடந்தாத்தான் நம்மகஷ்ட நஷ்டங்கள்லாம் தெரியும். இல்லேன்னா சாமி சுகங்கண்டுக்கிடும் என்று ஒரு கோஷ்டியும் இருந்தார்கள்.

ஊருக்குள்ளிருக்கிற எல்லா சாதிக்கும் இந்த ஒரு கோயில்தான். ஒரு பூசாரிதான். ஆளுக்கொரு மாதமா சாதிவாரி கொடை நடக்குமேயழிய நீ இன்ன சாதி கோயிலை விட்டு தள்ளி நில்லு என்கிற சமாச்சாரமெல்லாம் கிடையாது.

வடக்கேயிருக்கிற ஒரு அரசியல்வாதி போகிற போக்கிலே இந்தக் கோயில் கும்பிட்டுப் போக, அவர் தேர்தல்ல ஜெயிச்சு அதில் இருந்து வருசா வருசம் கிடா வெட்டி ஊரு பூராம் சோறு போடுறார். அவ்வளவு துடியாவுளசாமி. நெனச்சதெல்லாம் நடக்கும். கோயிலின் முன் படிக்கட்டுப் பக்கத்தின் இருபுறமும் தடித்து உயர்ந்த இரண்டு கல் தூண்களுக்கு நடுவே வெண்கலத்திலான பெரிய மணி ஒன்று கட்டப்பட்டிருக்கும். அதை அடித்து ஓசை உண்டாக்கினால் ஊர் முழுக்க கேட்கும். சிறுசுகள் முதல் பெரியவர் வரை அதை அடித்துப் பார்க்க ஆசைப்படாதவர்கள் யாரும் கிடையாது. அது ஒரு தடவை திருடுபோய்விட்டது. ஊருக்குள்ளும் அக்கபக்க கிராமத்தில் இது சம்பந்தமாக ஒரே பேச்சாகக் கிடந்தது. விடிந்ததிலிருந்து அடையுற வரை இதே பேச்சுத்தான். நாற்பது நாட்களில் மீண்டும் மணி கோயிலில் தொங்கிக் கொண்டிருந்தது. பழையபடி ஊருக்குள் கூட்டங்கூட்டமாய் நின்று பேசுறாங்க. களவாகுனவன் வீட்டு ''ஒரு மொய்'' ஆடு துள்ளத்துடிக்க செத்துப் போச்சுத்துன்னும், இன்னும் கொஞ்சப்பேர் ''நல்ல பால் மாடு ஆறேழு மாடு வாய்க்காணம் நோக்காடு வந்து'' செத்துப் போச்சுன்னும், நான்கு ஜோடி உழவுமாடு ராத்திரியே செத்து வெறச்சமட்டுல கிடந்ததாம். அதனால்தான் திருட்டுப்பய திரும்பக் கொண்டு வந்துட்டான்னும் எங்கு பார்த்தாம் பேச்சுக்கால் நடந்ததேயொழிய நபர் இன்னார்ன்னு யாரும் ருசிபிச்சிச் சொல்லவில்லை.

இருந்தால் மணியை திரும்பக் கொண்டு வந்து சேர்த்துவிட்ட கருப்பனின் மகிமையை வியந்து, சந்தோசத்திற்கும், பக்தி பரவசத்திற்கும் ஆளாளுக்கு நேமுகம் போட்டு செய்துகொண்டிருந்தார்கள். மொட்டை, கவுறுகுத்து என்று கோயில் அல்லோகலப்பட்டுக் கிடந்தது. வீட்டுக்கொரு கிடாய் என்ற பங்காரப்படி சொந்த கருத்துகளும் அழைப்பு அனுப்பி வரவழைத்து விருந்துகள் நடந்தது.

இதிலே சக்கண்ணனாசாரி கொஞ்சம் கூடுதலாக தான் அக்னிசட்டி ஏந்தி நான்கு ஊரு சுற்றி வந்து சன்னதியில் வந்து சட்டி செய்வதா நேர்ச்சை பண்ணிட்டார். ஆசாமி ரொம்பவும் சாமி மேல் உணர்ச்சிவசப்பட்டுட்டார்ன்னுதான் எல்லாரும் நெனச்சாங்க. பிறகுதான் அவரு ஒரு காரியார்த்தமாத்தான் இப்படி ஒரு எடுப்பு எடுத்திருக்கார்ன்னு தெரிய வந்தது.

சக்கண்ணனாசாரிக்கு வயசு அறுபது ஆகியும் குழந்தை பாக்கியம் கிடையாது. அவரு சம்சாரமும் குழந்தைக்காக இருக்காத விரதமில்ல. போடாத நேர்ச்சையில்ல. கோயில் குளம்ன்னு அலைஞ்சி கடைசியில அந்தம்மா ஒரு சாமிகொண்டாடியாவே ஆகிப்போச்சு. மேளச்சத்தம் கேட்டவுடன் ஆட்டம் கொடுத்திடும். கொட்டுமேளம் கொட்டி ஊருக்குள்ள யாரும் அக்னி சட்டி ஏந்தி வந்தா, ராத்திரி நல்ல தூக்கச் சடவுல இருந்தாம் குலவை போட்டபடி தெருவழியே ஓட்டமா ஓடி இருக்கிற நாய்களெல்லாம விரட்ட அக்னிசட்டியை தேடிப்போய் தன் கையில் வாங்கி ஒரு மூச்சு ஆடுவா. ஒரு வளையம் போட்டு சுத்தி சுத்தி ஆடுறது பார்க்க அவ்வளவு அம்சமாயிருக்கும். ஆசாமி பின்னாடியே வந்து இடுப்பைச் சேர்த்து பிடிச்சி சாமியை கொஞ்சம் கொஞ்சமாய் ஆசாரமாக்கி தன் நிலைக்கு கொண்டு வந்து மெல்ல வீட்டுக்கு கூட்டிப்போவார்.

சக்கண்ணனாசாரி ஏன் இப்படி ஒரு நேர்த்திக்கடன் போட்டாருன்னா ஊருக்குள்ளே அவரு ஏகப்பட்ட நல்லது பொல்லாததுகளுக்கு மொய்ச் செய்து வச்சிருக்காரு. இவருக்குத்தான் பிள்ளை குட்டி இல்லாதுனா வீட்டுல ஒரு கல்யாணம் காதுகுத்து சடங்கு சம்பிரதாயம்னு எதுவம் நடக்காததுனா செய்து வச்ச மொய்ப்பணத்தை எப்படி வாங்குறதுன்னு ஓசனை பண்ணி இந்த மாதிரி அக்னி சட்டி எடுத்து கோயில்ல செய்துற காரியம்னு பத்திரிகை அடிச்சி ஊர்ச்சோறு போட்டு மொய்யை வசூல் பண்ணீரலாம்னு வீடு தவறாம தகவல் தந்திட்டாரு. எப்படியும் அழிவு செலவு போக பத்து, ஆயிரம் மிஞ்சும்ன்னு அவரு கணக்கு. அவருக்கு கூடப்பிறந்த தம்பிமார் நான்கு பேரு. தங்கச்சிமாரு நான்கு பேரு. மகன்கள் மருமகள்கள் மகள்கள் மருமகன்கள்ன்னு ஏகப்பட்ட கூட்டம். பெரிசு வச்சிருக்கிற பணம் காசு சொத்து பாசம் பொங்குற மாதிரி வீட்டை சுற்றி சுற்றி வந்து நாளைக்கு ஒரு தேறமாவது சாப்பிட்டு போயிடுவாங்க. ஒருத்தனை ஒருத்தன் வீம்பு போட்டு வந்து கை நனைச்சிருவாங்க பெரிசு வீட்டுல சாப்பிட்டு வந்திர்ராங்க. நமக்கு வாச்சது நம்ம வீட்டு சோத்துப் பானையைத்தான் காலி பண்ணுது போங்கடா எதாவது கொண்டு வரப்பாருங்கடான்னு விரட்டி விடுவாங்க. பூராம் அசல் ஊர் நாயி மாதிரி அங்கேயே சுத்திக்கிட்டு கிடப்பாங்க.

அக்னிசட்டி எடுத்து ஊர் சுத்தி வரும்போது மேளதாளத்தோட வீட்டு ஆளுகளும் கூடவே விடிய விடிய அலையணும். பெட்ரோமாக்ஸ் விளக்குப்பிடிக்க, தட்சினை விழகுற தாம்பாளத் தட்டுப்பிடிக்க, எண்ணை தூக்குவாளி வச்சிருக்கி, அக்னியி போட வேப்பங்குச்சி எடுத்து வர்றதுக்கின்னு ஆளுக்கொரு வேலை. பொம்பளை பிள்ளை பின்னாடி குலவை போட்டு வரும்ங்க. இப்படி கூட்டமா வீடு வீடா போயி நின்னு காணிக்கை வாங்கணும்.

இதிலே தாம்பாளத்தட்டு பிடிக்கத்தான் இள வட்டங்களுக்குள்ளே அடிபிடி. வீட்டு வீட்டுக்குப் போயி அக்னி சட்டி நிற்கும்போது அதில் தான் காணிக்கையாய்ப் போட்டு அதில் இருக்கிற திருநீறை எடுத்து பூசிக்கிடுவாங்க.

அப்பொ ஒரு ரூபாத்தாள்ன்னா ரொம்பப் பெரிசு. அந்தக் காலத்து அன்னாடு கூலிக்கு ஒரு நாள் சம்பளமே ஒரு ரூபாய்தான். ஆசாரிக்கு இது மொத மொத சம்பவமா இருக்கிறதனா ரெண்டு, அஞ்சு, பத்துன்னு, ஒவ்வொரு வீட்டுயும் காணிக்கைகள் தட்டு நிறைஞ்சு போச்சு.

சில வீடுகள்ல அக்னி சட்டியில எண்ணை விடுவாங்க. சட்டி ஏந்துறவர்க்கு தலை வழியே தண்ணிவிட்டு அக்னியில எண்ணை விட்டு காணிக்கையும் போடுவாங்க. ஊர் நாட்டாமைக்காரர் பெண் சாதி சுத்தபத்தமா குளிச்சி மொழுகி மெனக்கிட்டு ஊர்க் கிணத்துல போயி ஒரு பானை தண்ணியெடுத்து வந்து வச்சிருந்து, அந்தம்மா வீட்டு வாசல முன்னாடி அக்னி சட்டி வரவும் தண்ணிப்பானையைத் தூக்கி சக்கண்ணனாசாரி தலையில ஊத்தப்போகும்போது ''ஏ...ஏ... ஊத்தாதே ஊத்தாதேன்னு தடுத்திட்டாரு. அந்த அம்மாவுக்கு என்னம்மோ மாதிரியாகிப்போச்சு.

சாமி இப்படி அபசஞ்சொன்னமாதிரி தடுத்திட்டாரேன்னு ரொம்ப வருத்தாமகிப்போச்சி. ஆசாரி மடியிலிருந்த பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து பக்கத்து கொடுத்திட்டு இப்பொ ஊத்துமான்னு குனிஞ்சாரு. இந்தக் காரணத்தை கவனியாத நாட்டாமையம்மா நேரா கோயிலுக்கு போயி கருப்பனுக்கு முன்னாடி நா என்ன கொற செஞ்சேன் ஏது கொற செஞ்சேன் என் விரதத்து கொறவா என் செய்கையில கொறவின்னு கையை நீட்டி நீட்டி முறையிட்டு ஒரு மூச்சு அழுது, மூக்கைச்சிந்தி சிந்தி அழுதுத மூஞ்சியே சிவந்து போயி கொண்டையை அள்ளி முடிஞ்ச வாக்குல வீடு வந்து சேந்தது.

நாட்டாமையம்மா மொத மொதல்ல தண்ணி ஊத்துனதுதான் தாம்சம். ஆசாரிக்கு அடுத்தடுத்து வீடுகள் ஒரே குளிப்பாட்டுத்தான். ஆசாரி தன்னா குளிர் பொறாமல் பெண்டாட்டி கிட்ட சட்டியை மாற்றிவிட்டு ஒரு பானைத் தண்ணிக்கு ஒரு பீடியை பத்தவச்சிக்கிட்டே வந்தார்.

இவரு அக்னி சட்டி ஏந்திக்கிட்டு தலையில தண்ணிய ஊத்தச்சொல்லி நனைஞ்ச புறாக் குஞ்சு மாதிரி கீநாடி மேநாடி அடிக்க ஊரு ஊரா அலைய வேண்டியதான். பின்னாடி தாம்பாளத்தட்டுக்காக நாம்பிடிப்பேன் நீ பிடிப்பேன்னு பயங்களுக்குள்ள ஒரே அடிபிடி. ஒண்ணோட ஒண்ணு போட்டி போட்டு இவன் அடிக்க அவன் அடிக்க ஒருதனையருத்தன் பின்னாடியிருந்து மிதிக்க பிடுங்கன்னு ஒரே சண்டைக்காடு, சத்தமின்றி நடந்துக்கிட்டு இருந்தது. ரெண்டு நாளா இரவும் பகலும் நான்கு ஊரு சுத்தி தாம்பாளத்தல அஞ்சாறு ரூபா சில்லறை தான் கிடந்தது. ரூபாய்தாள்கள் பூராவையும் அவனவன் அன்றாய்ர் பையில்ல சொருகிட்டாங்க.

தவசுப்பிள்ளை போட்டு சோறு பொங்கி ஊருபூராம் சோறு போட்டு அந்த மொய்யை வாங்க தனி ஏற்பாடும் பண்ணி அது ஒரு பக்கம் நடந்துகிட்டிருந்தது.

ஒரு கட்டம் போல ஊரு மந்தைக்கு மேளதாளத்தோட அக்னி சட்டி ஏந்தி வந்தாரு. அங்கே யாரோ ஒருத்தன் இவரு காதுபட, இருக்கிறவனெல்லாம் அக்னி சட்டி ஏந்தி என்னய்யா செய்ய. சக்கண்ணனுக்கு எப்படி தச்சுரூபமா பொருந்தியிருக்கு பாரு. அந்த கருப்பனே எதிர வந்த மாதிரி முகத்தில்ல பாரு. வீரம் கொப்பளிக்கிறதை. ஆன்னு சொல்லவும் இவருக்கு கெம்பீரியம் தாங்காம வயசுக்கு மீறி ஆய் ஊய்ன்னு மேலேயும் கீழேயும் ஆட்டமா ஆடுனார். பல் இல்லாத வாயை திறந்து திறந்து மூடினார்.

அவன் அடேங்கப்பா என்ன ஆட்டம். பாக்கிறவன் கண்ணு தெறிச்சுப் போற மாதிரி சும்மா சொல்லப்படாது. இவை கொடுத்து வச்சிருக்கணும் பாக்க. அப்படீன்னு ஏத்து ஏத்துன்னு ஏத்திவிட்டுக்கிட்டே போனான். இவருக்கு நெல கொள்ளல. அவ்வளவுதான் ஒரு சந்துக்குள்ள திடுத்திடுதின்னுன்னு திடீர்ன்னு ஆக்ரோசமா நாக்கை துருத்துன மட்டு ஆய்... ஏய்..ன்னு அவயம் போட்டு ஓடுனார்.

எல்லாரும் மெம்மறந்து போலி நின்னுட்டாங்க. ரொம்ப குறுகிய சந்து. ஒரே இருட்டு. ஒரு தீக்குச்சியை உரசி பார்க்கிறதுக்குள் இன்னொரு சந்து வழியே நொண்டிக்கிட்டே வந்தார். சட்டி புகைஞ்சமட்டு இருந்தது.

அந்தச் சந்துக்குள்ளே நிறைய பீங்கான் கிடந்திருக்கு. எவனோ என்னம்மோ சொல்றான்னு பெருமை மயிரா ஓடி அதில்ல மிதிச்சு பக்கத்து வாறுகா இருக்கிறது தெரியாம அது தடுக்கி ஊட்டிக்குப்புற விழுந்து சட்டி ஒரு பக்கம் இவரு ஒரு பக்கமா கிடந்து எழுந்திரிச்சி சிதறிக்கிடந்த ஒண்ணுரெண்டு கங்குகளை அள்ளிப்போட்டுக்கிட்டு வந்திருக்கார்.

ஆரம்பத்து அக்னி வளர்க்கும்போது சட்டியை கை தாங்குகிற அளவுக்கு மொதலயே அரைச் சட்டிக்கு சாம்பல் போட்டு கிட்டிச்சு சூடு கைக்கு பரவாம பாதுகாப்புச் செய்து அதுக்குப்புறம்தான் வேப்பஞ்சிராய்களைப் போட்டு அக்னி வளர்ப்பாங்க. இந்த மனுசர் ஆட்டமா ஆடி அவை துப்புறவா கொட்டிப்போட்டு இப்பொ நேரடியா சூடான கங்குகள் சட்டியை சுட்டு அதுக்குமேல இன்னும் சிராய்களைப் போட்டு எண்ணைய ஊத்துனாங்க. தாங்குமா?

சூடுன்னா சூடு உசிருபோகிற வலி. இன்னும் உள்ளுர் சுற்ற வேண்டிய பாக்கி இருக்கு. அதுவும் மண்சட்டியா இருந்தா பரவாயில்ல. இவரோட பவுசைக்காட்ட வெண்கலச் சட்டி எடுத்திட்டாரு யம்மா.... அதோட அருமை இப்பத்தானே தெரியுது. எப்படியும் செய்துதானே ஆகணும்.

ஊர்ச்சோறு போட்ட இடத்துல்ல மொய் வாங்கின பயன்கள் இன்னொருன்னு தெரியாம அந்த கணக்கு வழக்கைக் காணோம். தாம்பாளத் தட்டு அவனிருந்தான் இவனிருந்தான் எனக்குத் தெரியாது. உனக்கு தெரியாதுன்னாட்டாங்க. எல்லாவற்றிம் ஏகப்பட்ட நட்டமாகிப்போன சக்கண்ணனாசாரி ரெண்டு கால கட்டிப்போட்டி கை வெந்ததிலே மஞ்சப்பத்துப்போட்டு நடமாட்டமில்லாத சட்டியா வீட்டு திண்ணையில அக்கடான்னு உட்கார்ந்திட்டார்.

அவரு பெண்சாதியை அடிக்கடி உத்து உத்து பாத்து அதிசயிச்சுப்போவார். பயமவ எவ்வள காலமா சாமியாடுறா அந்த வளையத்துவிட்டு ஒரு அடியாச்சும் நவிந்து ஆடுறாளா எவ்ளோ பந்தோபஸ்தா ஆடுறா! ரெண்டு கையையும் பாத்து, நொந்த கால்களை அமுக்கி விடவரமாட்டாளான்னு வளைச்சு வளைச்சு பாக்குறார்.

இப்பொ கருப்பசாமி கோயிலுக்கு மேற்கூரை அமைச்சு கசங்களெல்லாம் வச்சாச்சு. சுற்றி கல் கோட்டை கட்டி கேட்டெலாம் போட்டாச்சு. கோவில் முன்னாடியிருந்த உடைமரம் இருந்த இடத்தில தங்கும் விடுதி கட்டிட்டாங்க. வண்டிப்பாதை, பிரதான தார்சாலை ஆகிப்போச்சு. அதுவும் கார்களும் வேன்களும் பஸ்களும் போக வர இருந்தது.

கோயிலுக்கு பக்கமெல்லாம் வரிசை பிடித்து கருப்பண்ணசாமி கொடையை வாழ்த்தி ரசிகர் மன்ற பிரொக்ஸ் போர்டுகள் கட்சி பேனர்கள் கொடிகள் இறைந்து போயிருந்தது. ஊருக்குள் நரர்கள் ஒண்ணுக்குப் பத்தாய்க் கூறப்போயிருந்தார்கள். அவங்களுக்குள் பிரச்சனைகளும் நூறுவிதமாக நாள்தோறும் நீயா நானாவென்று விடிந்தது. இதையெல்லாம் பார்க்கமுடியாம கருப்பண்ணசாமி கைதியாகிப் போய் உள்ளேயே கிடந்தார்.


தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 16வது பௌர்ணமி இரவு


தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 16வது பௌர்ணமி இரவு

(16th Full Moon Day Film Screening)

http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_16.php


17-05-2011

ஞாயிற்றுக் கிழமை, 17-05-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகக் குறும்படம்: Chicken a la Carte

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகத் திரைப்படம்: Krzysztof Kieślowskiஇயக்கிய "Camera Buff"

இந்த திரைப்படம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://en.wikipedia.org/wiki/Camera_Buff

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_16.php




Sunday, May 15, 2011

வயது வந்தவர்களுக்கு மட்டும்



வயது வந்தவர்களுக்கு மட்டும்

கலாப்ரியா

http://koodu.thamizhstudio.com/thodargal_7_21.php


ஊருக்கு தென் மேற்கே ஒருபெரிய மண்மேடு போல இருக்கும். செக்கச்சிவப்பாய், ஏதோ பல ரகசிய இறந்த காலங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருப்பது போல் இருக்கும். ஏதாவது பாண்டியர்களின் பொக்கிஷங்களை அடக்கியிருக்கும் என்று அதன் மேல் ஏறிப் போகும்போதெல்லாம் சொல்லிக்கொள்ளுவோம். அநேகமாக சனிக்கிழமை மத்தியான வெயிலில்த்தான் இப்படி யோசனைகள் யாருக்காவது உதிக்கும். ”ஏல, திருநாங் கோயில் போவோமாலே, சுத்தமல்லி அணைக்கிப் போவோமாலே”, என்று யாருக்காவது யோசனை கிளம்பும். நேரம், சைக்கிள் வசதி இவற்றைப் பொறுத்து, போகும் இடம் முடிவாகும்.குன்னத்தூர்ப் பொத்தை என்றால், அடிவாரம் வரைதான் சைக்கிளில் போகமுடியும் அதனால் அங்கு நடந்தே போய்விடுவோம்.

குன்னத்தூர் பொத்தை என்கிற மண் குன்றுக்கு, கல்லணை வாய்க்கால், பாட்டப்பத்து, கம்புக்கடைத்தெரு என்று போகிற வழியும் ரம்மியமாய் இருக்கும். அடிவாரத்துக்குச் சற்று முன்னர் ஒரு பலசரக்குக் கடை உண்டு அதுதான் அந்தப்பக்கத்து மக்களுக்கான சூப்பர் மாக்கெட்.’லண்டன் நேவிகட்’ சிகரெட் மட்டும் கிடைக்கும். மற்றப்படி பீடிதான். சிகரெட்டையும் அவர் கல்லாப்பெட்டிக்குள்தான் வைத்திருப்பார், அந்த வயசான செட்டியார். அநேகமாக, இந்தமாதிரிக் கிளம்பும்போதெல்லாம், நாங்கள் ஊருக்குள்ளிருந்தே சிகரெட் வாங்கிக் கொள்ளுவோம். குஞ்சுப்பிள்ளை மகன் – ’குசன்,.(லெச்சுமணபிள்ளை சன், ‘லெசன்’ கந்தையாப்பிள்ளை சன் ‘கசன்’ கொஞ்ச காலம் இப்படி ஒருவரையொருவர் கூப்பிட்டுக் கொள்ளுவோம், அப்புறம் அது வழக்கொழிந்து போகும்.) அபூர்வமாய் ‘கூல்’ என்று ஒரு சிகெரெட் வாங்கி வருவான், அது மெந்தால் கலந்தது. அது இல்லையென்றால் ’நார்த் போல்’ என்று ஒரு மெந்தால் சிகரெட் வாங்கி வருவான். பொத்தையின் மீது அநியாயத்துக்கு காற்றடிக்கும்.ஒரு பாக்கெட் சிகரெட்டைப் பத்த வைக்க இரண்டு பெட்டி தீக்குச்சிகள் வேண்டும். எல்லோருக்கும், எப்போதாவது ‘திருட்டு தம்’ குடிக்கிற பள்ளிக்கூட வயசு. வழியிலேயே ‘கூல்’ சிகெரெட் காலியாகிவிட்டால்தான், செட்டியார் கடையில் லண்டன் நேவிகட்.

செட்டியார், சின்னப் பெண்பிள்ளைகளுக்கு, தாளில் பொதிந்து, சாமான் கொடுக்கும் போது கையை ஒரு தடவு தடவித்தான் கொடுப்பார். ”சும்மா இருங்க தாத்தா”, என்று பிள்ளைகள் வெட்கத்துடன் சொன்னால் “ஏட்டீ, கிழவன் சாமான் கிழங்குடீ….பாக்கியா தாத்தாவுக்கு பவுன் பவுனா விழும்.”என்பார்.”போங்க பாட்டையா..” என்று சொல்லியபடியே ஓடிப்போகும். குசன்தான், “என்னா அண்ணாச்சி…பெரிய ஆளா இருந்துகிட்டு இப்படியெல்லாம் பேசுதீங்க..” என்று கொஞ்சம் நக்கலாய்க் கேட்டான். அதற்கு அந்த ஊக்காரர் ஒருவரே, “தம்பிகளா என்ன டவுன் பசங்களா வந்து வெவகாரம் பண்ணுதீங்களா….” என்று சண்டைக்கு வந்து விட்டார். நாங்கள் ”யாத்தாடி இது என்ன வம்பு, பாட்டையா பிரபலமான ஆள் போல இருக்கே என்று நகர்ந்துவிட்டோம்..அடுத்த முறை அடிவாரம் வரை போகும் போது நல்ல மழை பெய்து இரண்டு நாட்களாகி இருந்தது. கோடை மழை. அதனால் சகதியான பாதையில் வண்டிகள் ஓடி ஓடி,சகதி பாதையெங்கும் கரண்டை உயரத்திற்கு வரிவரியாக, நீளமாக காய்ந்திருந்தது. சைக்கிளில்தான் போயிருந்தோம். சைக்கிளை ஓட்டுவதும் சிரமமாக இருந்தது. உருட்டிக் கொண்டு போவது அதைவிடச் சிரமமாயிருந்தது. காலை, திரடு கட்டிப் போயிருந்த சகதி வரிகள் அறுத்தது.

நாங்கள் புதிதாக ஆரம்பிக்க இருந்த எம்.ஜி.ஆர் மன்றத்திற்கும் திறப்பு விழாவிற்கும் ரசீது புத்தகம் அடித்து நிதி பிரித்துக் கொண்டிருந்தோம்.அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த ஒரு கட்சிப் பிரமுகர் இரண்டு ரூபாய் எழுதியிருந்தார். ஆனால் பணம் தரவேயில்லை.இரண்டு ரூபாய் என்பது மிகப்பெரிய நன்கொடை. ஒரு ரூபாய்க்கு மேல் எழுதுபவர்களுக்கு என்று தனி ரசீது புத்தகம் வைத்திருந்தோம். அதில் முதல் ரசீதாக அவர் இரண்டு ரூபாய் எழுதிய போது நாங்கள் எல்லாம் அதிசயித்துப் போனோம். அதுவரை அதிகபட்ச ஸ்கோரே எட்டணாதான். ஆனால் அவரிடம் பணத்தை வசூல் பண்ணத்தான் சிரமமாயிருந்தது. பல முறை வீட்டுக்கு நடந்தும் ஆளையே பிடிக்க முடியவில்லை. தெருவின் மூத்த கட்சிக்காரர்கள் எல்லாம் சொன்னாகள். ”வேய் தம்பியாபுள்ளைகளா, இந்த மாதிரி பார்ட்டிகளெல்லாம் நாம திறப்பு விழா நடத்தற அண்ணக்கி வந்து மேடையில பேசறதுக்கு சான்ஸ் கேட்டு நிப்பாங்க, அப்பத்தாம்ப்பா கறக்கணும்….நீங்க இப்பவே ரசீது கிழிச்சிட்டீங்களே… இன்னம இந்த மாதிரி ‘பிரமுகர்கள்’ கிட்ட வசூல் பண்ணற வேலையை எல்லாம் எங்க கிட்ட விட்டுருங்க…” என்றார்கள். இதை எப்படியும் வசூல் பண்ணிருவோம் என்ற தீர்மானத்தில்தான் கிளம்பிப் போனோம். அவர் குன்னத்தூர் வயலுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அங்கேயே போயிர்றதுன்னு முடிவு செய்து திடீரென்று பதினோரு மணி வெயிலில் கிளம்பினோம். சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

அன்று மத்தியானம் பாப்புலரில் ‘வெண்ணிற ஆடை’ இரண்டாவது ‘ரன்’ போட்டிருந்தார்கள். அதற்குப் போவதாகப் பிளான். ஆறு ஏழு மாதத்திற்கு முன்னால் ராயலில்தான் முதல் ரிலீஸ். ’வயதுவந்தவர்களுக்குமட்டும் ’என்று சென்ஸார் சர்ட்டிஃபிகேட்டுடன் வந்த படம். தமிழின் இரண்டாவது ’’ஏ’ சர்ட்டிஃபிகேட் படம். முதல்ப்படம் மர்மயோகி. வெண்ணிற ஆடையுடன் ‘கார்த்திகை தீபம்’ என்ற படத்திற்கும் ‘ஏ’ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருந்தார்கள். அதாவது சற்றுப் பொருத்தமானதாக இருந்தது.

வெண்ணிற ஆடைக்கு ’ஏ’ சர்ட்டிஃபிகேட் சற்றும் தேவையில்லை. காதலிக்க நேரமில்லையின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் வந்த ஸ்ரீதரின் படம். ஏ சர்ட்டிஃபிகேட் வேறு ரொம்ப எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டது. முதல் நாள் பயங்கரக் கூட்டம். அதிலும் முதல் நாள் என்னையெல்லாம், 15 வயது கட்டிளங்காளையான என்னையெல்லாம், அனுமதிக்கவில்லை. இவ்வளவிற்கும் அண்ணனின் நாலு முழ வேட்டியை, இடுப்புப் பகுதியில் கொஞ்சம் மடித்து மூணரை முழமாக்கிக் கட்டிக்கொண்டு போனேன், ’ம்ஹூம்’, விட மறுத்துவிட்டார்கள். மாட்னி ஷோவுக்கு அப்புறம் ரிசல்ட் கூவி விட்டது. செகண்ட் ஷோவுக்கு ஆளைத் தேட வேண்டியதாயிற்று. நாங்கள் மறுநாள்க் காலைக்காட்சிக்கு டிராயர் சட்டையுடன் போனோம். எங்களுக்குப் படம் ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் தியேட்டரில் ஒரே கூச்சலாயிருந்தது. படமும் ஓடவில்லை. எங்கவீட்டுப்பிள்ளை படத்தின் தாக்கம் இரண்டு மாதமாகியும் குறையவில்லை. எந்தப் படம் வந்தாலும் சுருண்டு கொண்டிருந்தது. காதலிக்கநேரமில்லை படமும் அப்படியே, அது ஓடும் போது வந்த படங்களையெல்லாம் சாப்பிட்டு விட்டது.

பிரமுகரைத் தேடி காலைப்பதம் பார்க்கும் காய்ந்த சகதிச் சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலும் பயணம் பண்ணியும் பயனில்லை. இன்னொரு வழியாய் வந்து பழைய செட்டியார்கடை அருகே பிரமுகரை ஒரு வழியாய்ப் பிடித்தோம். ரொம்ப அன்பாய் உபசரித்தார். மூன்று பேருக்கும் செட்டியார் முணுமுணுக்க, கடனுக்கு கலர் வாங்கித் தந்தார். பர்ஸ் வீட்டில் இருக்கு தம்பிகளா என்றார். எங்களுக்கு படம் போகிற நினைப்பு வேறு விரட்ட நாளைக்கு வீட்டில் வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு திரும்பினோம். மனுஷன் கடைசி வரை தரவே இல்லை.

திறப்புவிழாவிற்கு, அப்போதிருந்த ஐம்பது எம்.எல்.ஏக்களில் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு போக்குவரத்துச் செலவிற்கு ஐம்பது ரூபாய்தான் அனுப்பியிருந்தோம். எவ்வளவோ பெரிய ஆட்களையெல்லாம் கூப்பிட பிளான் போட்டோம். பணம் அவ்வளவு திரட்டமுடியவில்லை. மூத்த தோழர்கள் சொன்னது போல் அவர்கள் பெரிய ஆட்களிடம் கொஞ்சம் வசூல் செய்து தந்தது கூட்ட மேடை, ஒலிபெருக்கிச் செலவுக்கு கூட காணவில்லை. கடைசியில், திறப்புவிழா முடிந்து கூட்டம் துவங்கியதும், எனக்கு ஒரு ஐந்து நிமிடம் பேச வாய்ப்புத் தாருங்கள் என்று ,பிரமுகர்கள் கெஞ்ச ஆரம்பித்தனர். அப்போது தென் பகுதியில் எம்.எல்.ஏக்களே கிடையாது. வந்திருந்தவரும் சட்டமன்றத்தில் உரத்துக் குரல் கொடுப்பவர். அதனால் உள்ளூர்ப் பிரமுகர்கள் அவர் முன்னால் பேசி, தங்களை நன்கு அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டுமென்ற முனைப்பில் எங்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். இதுதான் சமயமென்று மூத்த தோழர்கள் சொல்லித் தந்த மாதிரி. நன்கொடை கேட்டோம். மறு பேச்சுப் பேசாமல், பத்து ,பதினைந்தெல்லாம் தந்தார்கள். சிலர் அதற்கு வசதியில்லாமல் தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணியை நெருங்க நெருங்க நச்சரிப்பும் கூடிக்கொண்டிருந்தது. ஏனென்றால்,ஒன்பது மணிக்கு ‘ஸ்டார் ஸ்பீக்கர்’ பேச ஆரம்பித்தால்தான் பத்து மணிக்குள் முடிக்க முடியும்.கோவில்பட்டி தேவராஜன் என்று அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த பாடகர் ஒருவர் தானும் கடைசியில் இரண்டு இயக்கப்பாடல்கள் பாட விருப்பம் தெரிவித்திருந்தார்.

அப்போதுதான் ஒரு பெரிய மாலையுடன் நம்ம ‘இரண்டு ரூபாய் பிரமுகர்’ வந்தார். மூச்சுக் காட்டாமல் என்னிடம் பத்து ரூபாயை நீட்டினார்….நான் வாங்கவா வேண்டாமா என்று தயங்கினேன். எங்கள் அரசியல் குருநாதர், வாங்கிக்கோ என்று கண்ணைக் காட்டினார்… வாங்கியதுதான் தாமதம், விறுவிறுவென்று மேடையில் ஏறி மாலையை எம்.எல்.ஏவுக்குப் போட்டுவிட்டு மைக்கை விடாப்பிடியாகப் பிடித்து பத்து நிமிடம் முழங்கி விட்டே இறங்கினார். என்னிடமும் சில நண்பர்களிடமும், ”தம்பி நம்ம பேச்சு எப்படி” என்றார். நாங்கள் பிரமாதம் அண்ணாச்சி, அந்த ரெண்டு ரூபாய் நன்கொடை என்று இழுத்தோம். சரியான விடாக்கண்டனுங்கப்பா என்று ‘கொடாக்கண்டனாய்’ நழுவினார். மீட்டிங் முடிந்ததும் எல்லோரும் பிரமுகரின் கெட்டிக்காரத்தனத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். பாரு பின்னால பெரிய ஆளா வரப்போறான் பாரு.,என்றார் எங்கள் ‘குருநாதர்;’ குருநாதர் என்னவோ கடைசி வரை எங்களைப்போல் தொண்டனாகவே இருந்தார். நாங்களோ மேற்படிப்பு, வேலை சோலி என்று தேடிக் கொண்டிருந்தோம்.. ஆனால் அவர் சொன்ன மாதிரி, பிரமுகரோ பிரபலமாகி விட்டார். யூனியன் சேர்மனாகி போடுபோடென்று போட்டுக் கொண்டிருந்தார். என்னை எங்கே பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வார். என்ன தம்பி மன்றமெல்லாம் நல்லா நடக்கா என்று கேட்பார். ஆமா அண்ணாச்சி என்று நிறுத்திக் கொள்வேன். ஆனால் அதெல்லாம் எப்பொழுதோ விட்டாயிற்று. எத்தனையோ அரசியல் மாற்றங்கள்… வாழ்க்கை மாற்றங்கள்.

நண்பர்கள் அழைத்த அழைப்பிற்கெல்லாம், அங்கே போக இங்கே போக என்று ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டிருந்தது. ஒரு நண்பனுக்கு சென்னையில் பெரிய தனியார் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக ஒருவர் சொல்லியிருந்தார். அவர் நம்பகமான ஆளில்லை, சரியான ’டம்பாச்சாரி’ (ஏமாற்றுப் பேர்வழி) என்று நான் கேள்விப்பட்டதை அவனிடம் சொன்னேன். அவனது அப்பா அந்த ஆளை நெருக்க, அவர் சென்னைக்கு அவனை அழைத்துப் போய் அந்தப் பெரிய கம்பெனியினைச் சுற்றிக் காட்டிக் கொண்டுவந்து விட்டார். பேருக்கு ஏதோ ஒரு அதிகாரியிடம் இன்டர்வியூ மாதிரி நடத்திக் கூட்டி வந்து விட்டார். அதிகாரி, நீ சரியாகத் தயார் செய்யவில்லை, இன்னொரு முறை வா என்று அனுப்பி விட்டார். டம்பாச்சாரி ஒரு விபத்தில் மாட்டி ஒரு காலை எடுக்க வேண்டியதாயிற்று.ஒரு கையும் சரியாக விளங்கவில்லை. அவர் ஒரு டம்பாச்சாரி என்று என் அப்பாதான் சொன்னார். எனக்கும் அவர் மூலமாக வேலைக்கு முயற்சிக்கலாமா என்று கேட்ட போது அப்படிச் சொன்னார்.

சென்னைக்குப் போய் அவரைப் பாத்து விவரம் கேட்டு வர என்னையும் துணைக்கு அழைத்தான். ”எதுக்குலே துக்கம் விசாரிக்கவா, எவ்வளவுலே கொடுத்தே… ” என்றேன். தொகையைச் சொன்ன போது ஆச்சரியமாயிருந்தது.”உங்க அப்பா அவ்வளவு சீக்கிரமா ஏமாற மாட்டாரே..” என்றேன். “நீ வாறியா இல்லையா என்றான். கிளம்பினேன். சென்னையில் இலக்கிய நண்பர்களைப் பார்க்கலாம் என்றும் யோசனை. சென்னையில் அவர் தங்கியிருந்த லாட்ஜைப் பார்த்து அசந்து போனேன். அது கொஞ்சம் ஒதுங்கிய சந்து ஒன்றில் இருந்தது. ஆனால் ரொம்ப நன்றாக இருந்தது.. அதையும் அவரையும் கண்டுபிடிக்கச் சிரமமாயிருந்தது. அப்போது எமெர்ஜென்சி நேரம். பல கட்சிக்காரர்கள் சிறையில் இருந்தனர். பலர் எனக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு ஒளிந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் தரப்பில் அப்படி விளம்பரம் கொடுக்க நிர்ப்பந்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று கேள்வி. அப்படி விளம்பரம் கொடுத்த பின்னும் சிலரை விடுவதாயில்லை. அதை வைத்தே ஒளிந்திருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க யுக்தி செய்தார்கள் என்றெல்லாம் கதைகள் உலவிக் கொண்டிருந்தன.

லாட்ஜிலும், எங்களை எளிதில் விடவில்லை.எப்படியோ அறையைக் கண்டு பிடித்து ரொம்ப நேரம் தட்டிய பின், ஊன்றுகோலுடன் ‘டம்பாச்சாரி’ தட்டுத்தடுமாறி வந்து திறந்தார். பார்க்கவே பாவமாயிருந்தது. அவருக்கு வயது கிட்டத்தட்ட 67 வயது இருக்கும். ரொம்பத் தளர்ந்திருந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து இங்கே வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார். எங்களுடன் ஒரு சென்னை நண்பர், ’ஸ்ரீ’ வந்திருந்தார். அவர் எங்கள் ஊர்தான். சென்னையில் இருக்கிறார். ரொம்பக் கெட்டிக்காரப் பையன். சினிமாவில் நல்ல செல்வாக்கானவன். அவனால்த்தான் லாட்ஜைக் கண்டு பிடிக்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும்.அவன் எப்படியோ அறையில் மூன்றாவது ஆள் ஒருவர் இருப்பதை மோப்பம் பிடித்து விட்டான். நைசாக டம்பாச்சாரியின் வாயைக் கிளறிக் கண்டு பிடித்துக் கேட்டும் விட்டான். அப்புறம்தான் அவர் சொன்னார்.”ஏம்யா பயப்படனும் இந்தா நாங்கள்ளாம் கரை வேட்டி கட்டிக்கிட்டு தைரியமா அலையலையா அவரை வெளிய வரச் சொல்லுங்க’’ என்றான்.

பாத் ரூமிலிருந்து ‘பிரமுகர்’-இரண்டு ரூபாய்ப் பிரமுகர் வந்தார், அசட்டுச் சிரிப்புடன். ”தம்பீ…, நீங்க.., நம்ம புள்ளைகளா, நான் பயந்துட்டேன்” என்றார். டம்பாச்சாரியிடம் அவனே பேசினான். ஒரு வழியாக பாதிப்பணத்தை தருவதாகச் சொன்னார். அவனும் பிரமுகரும் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அவரிடமும் சண்டை போட்டான், நீங்கல்லாம் என்ன கட்சிக்காரங்க என்று. நாளை வருவதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

பிரமுகர் பின்னாலேயே வந்து ஸ்ரீயைத் தனியே உள்ளே அழைத்தார். நாங்கள் வெளியேயே நின்றோம். ஸ்ரீ வெளியே வந்து தலையில் அடித்துக் கொண்டான். என்னப்பா விஷயம் என்றேன். “என்ன விஷயம், எல்லாம் பொம்பளதான்..காலும் கையும் வெளங்கலேன்னாலும் கிழவனுக்கு ரொம்பநாளாச்சாம்ன்னு ஆசையா இருக்காம்….அவருக்கேயிருந்தா அப்புறம் சின்னக் கிழவனுக்கு இருக்காதா….சினிமாக்குட்டியா கிடைக்குமான்னு கேக்கானுக….”என்றான். என்னாப்பா இந்த வயசிலயா..என்றோம் நாங்கள் இருவரும். ஸ்ரீ சிரித்துக் கொண்டே, :” ஒரு கைப்பிடி உமியைத் தூக்கற அளவுக்கு சீத்துவம் (தெம்பு) இருக்கிற வரை எல்லாருக்கும் இந்த ஆசை விடாதுன்னு நம்ம ஊர்ல சொல்லுவாங்கல்லா… அந்தக்கதைதான்…….“ ,என்றான். உம்ம விஷயத்துக்காக வேண்டியாவது ஏதாவது ஏற்பாடு செய்யறேன்னேன். ஒன்றியம்தான் பணத்துக்குப் பொறுப்புன்னும் சொல்லீட்டு வந்திருக்கேன்….”என்ற ஸ்ரீ, ”எத்தனையோ பிள்ளைங்க என்னைச் சுத்திச்சுத்தி வந்தாலும் நான் ஒன்னைக்கூடத் தொட்டதே கிடையாது…”என்று சிரித்தான். ஆம்.. ’ஸ்ரீ’ அவ்வளவு அழகாயிருப்பான்.




Thursday, May 12, 2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 32வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 32வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (14-05-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரு. ப. சிவக்குமார் பங்கேற்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் குறும்படங்கள் குறித்தும், ஆவணப்படங்கள் குறித்தும், அதன் தயாரிப்புகள் குறித்தும், படமெடுப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய குறிப்புகள் குறித்தும், ஆர்வலர்களுக்கு வழிகாட்டுவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய விவாதங்கள் நடைபெறும்.
இனி அடுத்த சில மாதங்களுக்கு திரைப்பிரபலங்கள் எடுத்து குறும்படங்கள் மட்டுமே திரையிடப்படும். குறும்படம் எப்படி எல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இக்குறும்படங்கள் இருக்கும் என்பது திண்ணம்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

நம்பிக்கை

பாலு மகேந்திரா

22 நிமிடங்கள்

பொன்னாசை

பாலு மகேந்திரா

25 நிமிடங்கள்
தப்புக்கணக்கு

பாலு மகேந்திரா

22 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்த மாதம் மூன்றாம் பகுதிக்கு சிறப்பு விருந்தினராக திரு. பாலுமகேந்திரா அவர்கள் பங்கேற்க இருக்கிறார். அவர் இயக்கிய குறும்படங்கள் குறித்து வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், பொதுவாக குறும்படங்கள் குறித்தும் உரையாடவிருக்கிறார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268



Tuesday, May 10, 2011

வலது புறம் செல்லவும் - 7



வலது புறம் செல்லவும் - 7


இயக்குனர் அகத்தியன்09-05-2011, 23:58 PM

ஒவ்வொரு வாரமும் உங்களிடம் முற்றிலும் உண்மை பேச வேண்டும் என்பதே என் ஆசை. இதுவரை நிகழ்வுகளில் ஒரு பொய்கூட கலக்கவில்லை. சில உண்மைகளை தவிர்த்திருக்கிறேன். சிலரைக் காயப்படுத்த வேண்டாமே என்பதற்காக.

1997ல் ஒரு வாரப் பத்திரிக்கை என்னை அணுகியது. ஒரு தொடர் எழுத சம்மதித்தேன். மனம் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்த நேரம் அது. முன்னுரை எழுதி அனுப்பினேன். பிரசுரித்தார்கள். இயக்குனர் திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அதைப் படித்துவிட்டு "வேண்டாமே அகத்தியன் இப்போது இது உங்களுக்கு" என்றார். அவர் சொன்னது யோசிக்க வைத்தது. அதற்குள் முதல் தொடரை அந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த வாரம் என் தொடரைத் தேடினேன். அகத்தியனின் தொடர் சில காரணங்களால் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் என் கோபம் முற்றிலும் தணிந்து போனது. அது அவர்கள். இது நாம். ஏன் காயப்படுத்த வேண்டும் என்ற மனநிலை இப்போது. சில உண்மைகளை தவிர்த்து விட்டுத்தான் இப்போதும் எழுதுகிறேன். பொய் மட்டும் கலக்கவே இல்லை.

என்னைப் பொறுத்த அளவு எந்த இலக்கணத்தையும் வகுத்துக் கொண்டு நான் நட்பை அணுகியதே இல்லை. அந்த நேரம் என் மனம் எதைச் சொல்கிறதோ அதைக் கேட்டு நான் எப்படி செயல்படுகிறனோ அதுவே நட்புக்கான இலக்கணமாக எனக்கு ஆகிப்போனது.

கல்லூரிக் காலத்தில் என் நேசிப்புக்குட்பட்ட ஒரு நண்பனோடு பாலியல் தேவைக்காக ஒரு விடுதிக்குப் போனேன். ஒரே ஒரு பெண் இருந்தார். நண்பனை அனுப்பி வைத்தேன். வெளியே வந்து 'நீ'? என்றான். "வேண்டாம்... உன்னோடு இல்லறம் கண்ட பெண்ணை என்னால் தொட முடியாது. நீ என் நண்பன்" என்றேன்.

சராசரி மனிதனுக்குள்ள எல்லா அழுக்குகளும் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு நேர்மை இருந்தது.

என்னை நேசித்த ஆதரித்த ஒருவரின் இல்லத்தில் தங்கியிருந்தேன். வீட்டில் எல்லோரும் இரவுக் காட்சிக்கு போய் விட்டனர். அந்த இல்லத் தலைவி மட்டும் இருந்தார். என் மீது ஒரு பல்லி விழுந்தது. அலறிவிட்டேன். என்ன என்று அந்தப் பெண் கேட்டார். இடது தோளில் பல்லி விழுந்து விட்டது என்றேன். அதற்கு ஸ்திரிபோகம் கிடைக்கும் என்றார். என் மனைவி சென்னையில் இருக்கிறாள் என்றேன். நீங்கள் நினைத்தால் இங்கேயே கிடைக்கும் என்றார். வெளியேறி அனைவரும் இரவுக் காட்சி முடிந்து வரும் வரை எதிரே இருந்த டீக் கடையில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அந்தக் காட்சி கண்முன் விரிந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு தோழி என்னைக் கெஞ்சினார். நான் பெண்ணாய் உங்களுக்குத் தோன்றவில்லையா என்றார். தவிர்த்தேன். உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது வேண்டாம் என்றேன். தேவையில்லை, வாழ்வோம் என்றார். என்றாவது ஒரு நாள் உனக்குத் திருமணம் நடக்கும். கணவனோடு முதல் இல்லறம் துவங்கும்போது என் நினைவு வரும். குற்ற உணர்வில் மனசு சிதறும் என்றேன். ஒரு நாள் திருமணம் முடிந்தது. போனில் அழைத்துச் சொன்னார். நன்றி "நிம்மதியாக உறங்கினேன்" என்று.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் தேவைக்காக நட்பை நான் பயன்படுத்தியதே இல்லை. எனக்கு தேவைகள் இருந்தன. அவை தம் தேவைகளைத் தேடியபோது நட்புக்களைக் காயப்படுத்தாமல் நதிகளைத் தேடிக் குளித்தன. குளித்து கரையேறி துவட்டும்போது நதியும் நானும் நண்பர்களாக மாறி இருப்போம்.

ஒரு நதியில் குளித்து கரை ஏறியபோது நதி என்னைக் கேட்டது "உங்களை மாதிரி ஒரு குழந்தை வேணும்".

எத்தனையோ அழுக்குக்களை கழுவிய நதி என் அழுக்கு கழுவி என்னை மட்டும் ஏன் நேசிக்க வேண்டும். நான் நதியில் குளிப்பதில்லை. நதியை நேசிப்பேன். நதி என்னைக் குளிப்பாட்டும். கரையேறித் துவட்டும்போது இதுதான் நட்பு என்று மனம் சொல்லும்.

"என் உயிர் நண்பன்" என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தை வெளிப்பாடு. என் உயர்ந்த நண்பன் என்பதே நண்பனுக்கு நான் சொல்லும் அடைமொழி. உயர்வு என்பது ஒரு சொல்லில், ஒரு செயலில் கூட இருக்கும்.

அந்த நண்பன் எனக்கு நெருக்கமானவன். ஆரம்பப் பள்ளி தொடங்கி, உயர்நிலைப் பள்ளி முடிந்து, தொடர்ந்து கொண்டே இருந்த நட்பு. நான் முதலாண்டு படிக்கும்போது அவனுக்கு திருமணம். திருமணம். முடிந்து வீடு வந்து சேர்ந்த அந்த இரவு வேளையில் வீட்டிற்கு பின்னால் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதேன். என் நட்பு பறிபோய் விட்டதே என்ற ஆதங்கத்துடன். "எங்கேடா போயிட்டேன் கருணாநிதி" என்று அவன் தேற்றியது இப்போதும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

அந்தக் காலக் கட்டத்தில்தான் அவளும் பெண் தானே, அவள் ஒரு தொடர்கதை படங்கள் வெளியான நேரம். பெண் தவறை ஒத்துக் கொள்ளும்போது அவளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் ஆமோதித்தான். மனைவியிடம் அதே கருத்தை அவன் சொல்ல, நீங்கள் அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக் கொள்வீர்களா? என்று அந்தப் பெண் கேட்டார். அவன் நிச்சயமாக என்றான், அவர் தன் கடந்த கால தவறுகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார். அவரை விவாகரத்து செய்தான்.

அந்த விவாகரத்துக்கு அவன் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்த முறைகளை விளக்கியபோது ஒரு த்ரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி வேண்டினேன். மறுத்தான், நாமே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொள்ளலாமா என்ற வெறிகூட வந்தது. முதன் முறையாக நட்பில் பயம் வந்தது.

நட்பு தொடர்ந்தது. நான் இயக்குனரான பிறகு ஊருக்குப் போயிருந்தேன். தொலைபேசியில் அழைத்து நான் வந்திருக்கிறேன். உடனே கிளம்புகிறேன் உன்னைப் பார்த்து விட்டுப் போக வேண்டும் என்றேன். ஒரு முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். மூன்று மணி நேரம் கழித்து வா என்றான். சந்திக்காமலே சென்னை திரும்பினேன்.

என் மூத்த மகள் கார்த்திகாவின் திருமணப் பத்திரிகையோடுதான் அவனை அடுத்து சந்தித்தேன். பத்திரிக்கை வாங்கி தேதி பார்த்தான். டைரி எடுத்துப் புரட்டினான். இந்த தேதியில் எனக்கு வேறு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? என்றான்.

கட்டிப்பிடித்து அழுதபோது எங்கேடா போயிடப்போறன் கருணாநிதி என்றவன் எங்கேயோ போய் விட்டான். நட்பு தோற்பது காதலைவிட வலி தரும் விஷயம்.

சுமார் ஐந்து வயது வரை மலேசியாவில். பிடுங்கி நடப்பட்ட நாற்றாக ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அக்காவும் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம். குட்டைப் பாவாடையும் காலில் செருப்பும் அணிந்து கொள்வார் அக்கா. நானும் அழகாக உடை உடுத்தி செருப்புப் போட்டுக் கொண்டு அக்காவின் கை பிடித்து பள்ளிக்குச் செல்லும்போது அந்தக் கிராமத்து சிறுவர்களுக்கு நாங்கள் காட்சிப் பொருட்கள். வேலிகளில் ஒளிந்து கொண்டு "டேய் புருஷன் பொண்டாட்டிடா" என்று கல்லெறிவார்கள். எங்கள் வீட்டின் பக்கத்தில் இருந்தான் ரெங்கசாமி. ஒரு நாள் அப்படித் திட்டி கல்லெறிந்த ஒருவனை அடித்துப் புரட்டிப் போட்டான். நான் சந்தித்த முதல் எம்.ஜி.ஆர் ஆகிப்போனோன் எனக்கு. ஏனோ அவன் படிப்பைத் தொடரவில்லை.

நான்காம் வகுப்பில் சீதாலெட்சுமி டீச்சர் மாற்றலாகிப் போகும்போது அவருக்கு பரிசு வாங்கிக் கொடுக்க காசு சேர்த்தோம். ஆறுமுகம் என்ற நண்பன் காசுக்குப் பொறுப்பாளன். காசை ஏமாற்றினான். நட்பு ஏமாற்றும் என்று முதலில் சொல்லிக் கொடுத்தவன் அவன்.

உயர்நிலைப் பள்ளியில் எல்லோரும் எல்லோருக்கும் நண்பர்கள் தான். ராமசாமி மட்டும் விதிவிலக்கு. என்னை 'வா' 'போ' என்று அழைப்பார். நான் 'வாங்க' 'போங்க' என்று அழைப்பேன். ராமசாமி வகுப்பில் முதல் மாணவன். தினமும் அறிவுரை சொல்லும் ராமசாமியைப் பார்க்கும் போதெல்லாம் இவர் எதிர்காலத்தில் ஆசிரியராக வருவார் என்று எனக்குத் தோன்றும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் சீக்கிரமே புறப்பட்டு வந்து வகுப்பறையில் அமர்ந்து எதைப் பற்றியோ கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். உள்ளே நுழைந்த ராமசாமி ஏன் கருணாநிதி தனிமையில் இருக்கிறாய்? என்றார். எனக்கு தனிமை பிடிக்கிறது என்றேன்.

தனிமை தவறானது. மனதைக் கொல்லும். தனிமையைத் தேர்ந்தெடுக்காதே என்றார். அப்போது எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. பின் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டபோது ராமசாமி மனசுக்குள் வந்து சொன்னேனே என்பார். உயர்நிலைப் பள்ளி முடிந்த பின் அவரைச் சந்திக்கவே முடியவில்லை.

பள்ளி முடிந்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பியுசி. தங்கமணி, அழகேந்திரன், செல்லையா என்று நண்பர்கள் எல்லோரும் எனக்கு சீனியர்கள். நான் அழைப்பது அண்ணா. தங்கமணிக்கு என்னை மிகவும் பிடிக்கும். என் எல்லாத் தவறுகளுக்காகவும் அவர் வருந்துவார். தன்னை வருத்திக் கொள்வார். அழகேந்திரனும் நானும் கவிதைப் பைத்தியங்கள். செல்லையா அறை நண்பர். செல்லையா ஒரு பெண்ணைக் காதலித்தார். நாங்கள் தங்கியிருந்தது தனியார் விடுதி. அந்தப் பெண் அவர் அம்மாவோடு நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவார். ஒரு நாள் கல்லூரி முடிந்து வந்தபோது செல்லையா அழுது கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு நாளை கல்யாணம். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றார். நானும் மாரிமுத்து என்பவரும் சைக்கிள் எடுத்துக் கொண்டு 15 கிலோ மீட்டர் உள்ள அந்த கிராமத்துக்குச் சென்றோம். மிகுந்த சிரமங்களுக்கிடையே அந்தப் பெண்ணை சந்தித்தோம். இரவு 12 மணிக்கு தயாராக இருக்கிறேன். காரோடு வந்து விடுங்கள் என்றார்.

இரவு 9 மணிக்கு விடுதி திரும்பினோம். செல்லையா அறையில் இல்லை. சினிமாவுக்கு போயிருந்தார். திரையரங்கில் தேடிக் கண்டுபிடித்தோம். அவர் அண்ணனும் கூட இருந்தார். செல்லையா என்னிடம், "அண்ணன் அந்தப் பொண்ணை மறந்துரு". வேற பொண்ணு பாத்துக்கலாம்னாரு. மறந்துட்டேன். என்றார். "அண்ணன் என்னிடம் கேட்டார். யாரு பொண்ணு கூப்பிடப்போனது?" நான், "நாந்தான்".

"அப்ப நீயே கலியாணம் பண்ணிக்க".

முகத்தில் காறித்துப்ப வேண்டும் போல் இருந்தது. கண்ணாடிக்கு முன்னால் நின்று காறித்துப்பினேன். பின்னாளில் அது கோகுலத்தில் சீதை ஆனது. செல்லையன் ஐ.சி. மோகன் ஆனார். கரண் நடித்தார். மேலே சொன்ன உரையாடலை அப்படி பயன்படுத்தினேன். கார்த்திகிடம் கோகுல கிருஷ்ணா பேசினார்.

பி.யு.சி.யுடன் தங்கமணியும் அழகேந்திரனும் செல்லையனும் வாழ்க்கையில் விடைபெற்றார்கள்.

காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பி.ஏ. முதலாண்டு தமிழிலக்கியம். விடுதிக்குள் நுழையும்போதே அறிவுரை. காந்தி என்பவனுடன் சேராதே. முதலில் நான் பழகியது அவனோடு. அவன் முந்தைய ஆண்டும் அதே கல்லூரி மாணவன். வேறு துறையில். குடிப்பது, கஞ்சா அடிப்பது, இரவுகளில் நிர்வாணமாக விடுதியைச் சுற்றி வருவது என்று அவனே அவனைப் பற்றி பட்டியல் இட்டான்.

"சரி வா போய்க் குடிக்கலாம் என்றேன்". "நிறுத்திவிட்டேன்" என்றான். "சிகரெட்?" அதுவும்தான். ஒருவருஷம் ஜாலியா இருக்கணும்னு ஆசப்பட்டேன். செஞ்சேன். இனி வேற வாழ்க்கை என்றான்.

இன்று வரை ஒழுக்கமான மனிதன். குடிப்பதில்லை. எந்த கெட்டபழக்கமும் இல்லை. பின்னாளில் கராத்தே மாஸ்டர். ஹோமியோபதி டாக்டர். சமீபத்தில் அவனைக் கைபேசியில் அழைத்தபோது தேர்வுக்கு போய் கொண்டிருக்கிறேன் என்றான். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யோகா முதுகலை. "உங்க சுதந்திரம் என்பது என் மூக்கு நுனி வரைக்கும்தான். மூக்கை தொடுறது இல்லை". அவன் அடிக்கடி மற்றவர்களிடம் சொல்லும் வசனம். காதல் கோட்டையில் அஜீத் பேசுவார்.

இங்கே என்னை வியப்பில் ஆழ்த்திய இன்னொரு நண்பன் பகவதி. விடுதிவாசலில் நின்று கொண்டிருந்தேன். ஒருவன் என்னைக் கடந்து போனான். "மச்சான் எப்படிடா இருக்கே". என்றான். "நல்லாருக்கேன். உன் தங்கச்சி எப்படி இருக்காடா". என்றேன். "எனக்கு தங்கச்சி இல்ல. அதுனாலதாண்டா நீ என் மச்சான்" என்றான். அருகே வந்து "ஐ ஆம் பகவதி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

முதல் நாள் அவன் என்னிடம் அடித்த கூத்துதான் காதல் கோட்டையில் இரவில் பாண்டு குளித்துவிட்டு உடைமாற்றி படுத்து அழகான பெண்கள் கனவில் வருவார்கள் என்று அஜீத்திடம் சொல்லும் காட்சி.

ஒரு பெண்ணைப் பார்த்தால் மச்சான் உன் தங்கச்சியா என் தங்கச்சியா என்பான். சாராயக் கடைக்குள் உள்ளே நுழையும்போதே போதையில் தடுமாறுவான். 40 பக்க நோட்டு வாங்கி மாணவர்மன்றம் என்று எழுதி காசு வசூலித்து சாராயம் குடிக்க கூட்டிப்போவான். விடுமுறையில் ஊருக்குப் போகும் போது எல்லா மாணவர்களிடமும் பகவதி, பகவதிதெரு, கீரமங்கலம் என்று எழுதி ஒரு தபால் அட்டை கொடுத்து அவர்கள் ஊரில் போஸ்ட் பண்ணச் சொல்வான். தன் வீடு இருந்த தெருவை அப்போதே பகவதி தெரு என்று மாற்றியவன் அவன்.

நான் படிப்பைத் தவிர எதிலும் நல்ல பெயர் வாங்காத காலம் அது. 1800 மாணவர்களின் நலம் கருதி என்னைக் கல்லூரியிலிருந்து நீக்கியது நிர்வாகம்.

இரண்டாம் ஆண்டு மதுரை யாதவர் கல்லூரி. கல்லூரியில் சேர்ந்து விடுதிக்குப் போனேன். விடுதிக் காப்பாளர் அழகப்பர் கல்லூரியை விட்டதற்கான காரணம் கேட்டார். சாப்பாடு பிடிக்கவில்லை என்றேன். சிரித்துக்கொண்டே "நான் ஆறு வருடம் அங்கே மாணவன்" என்றார். உண்மை சொன்னேன். சேர்த்துக் கொண்டார். இன்று வரை என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மிகச்சிறந்த மனிதர். தற்போது அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.

முதல் நாள் கல்லூரியில் நான் அமர்ந்த வரிசையில் யாரும் அமரவில்லை. என்னை விமர்சித்து பெஞ்ச் மேல் ஏறி நிற்கச் சொன்னார்கள். விடுதியில் யாரும் அவர்கள் அறையில் தங்க அனுமதிக்கவில்லை. அழகு சுந்தரமும், வெங்கடாசலமும் அறையில் இடம் தந்தனர். நல்ல நண்பர்கள் ஆனோம்.

மூன்றாம் ஆண்டு எனக்கு விடுதி மறுக்கப்பட்டது. மிகுந்த பிரச்சனைகளைச் சந்தித்துவிட்டு கல்வியாண்டின் மத்தியில் விடுதியில் போராடிச் சேர்ந்தேன். கோவிந்தராஜூவும், ராஜேந்திரனும் இடம் கொடுத்தார்கள்.

திருச்சியில் முதுகலை. நான் மூன்று பேரை மட்டும் நண்பர்களாக ஆக்கிக்கொண்டேன். ரெங்கநாதன், முருகன், மருதுதரை. அங்கும் பிரச்சினை. என்னைப் போடா என்று திட்டிய துறைத்தலைவரை போடா என்று நான் திட்டக் கிளம்பியபோது என்னைக் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வந்து என் படிப்பைக் காப்பாற்றியவன் முருகன். கொஞ்சம் ஒத்து போனீங்கன்னா இன்டெர்னல்ல பெயிலாக்க மாட்டாங்க. உங்க ஒ கிரேட் ஏ யாகவோ, பி யாகவோ மாறாது என்று வருத்தப்பட்டவர் ரங்கநாதன். தமிழ் படிப்பதால் தன் எதிர்காலம் குறித்து கவலை கொண்டவர் மருதுதுரை.

முதுகலை முடிய அவர்களுக்கு நான் காணாமல் போனேன். திருச்சியில் பறவைகள் இல்லத்தில் தங்கியிருந்தபோது தங்கவேலு. மகேந்திரன், முகமது ரஃபி முக்கியமானவர்கள்.

முகம்மது ரஃபி மிகவும் ஒழுக்கமான மாணவன். முப்பது நாட்களில் உருது புத்தகம் வாங்கி வந்து உருது கற்றுக் கொண்டவர். நானும் ரஃபியும் அப்போது ஒரு கவிதைத் தொகுப்புப்போட முயற்சித்தோம். ஏனே முடியவில்லை.

இந்தக் கட்டுரையில் இவர்கள் அனைவரையும் மறுபடியும் சந்திக்கத்தான் போகிறோம்.. அதற்காகவே இந்த அறிமுகம்.

என் பேராவூரணி நட்புக்களைப் பற்றிக் கொஞ்சம். அன்பழகன், பன்னீர், ராமமூர்த்தி, அசோக்குமார், மகேந்திரன் (மேலே சொல்லப்பட்டவர்) அழ. மூர்த்தி, ஜானகிராமன், விஜயன் என்று பட்டியல் நீளும்.

பன்னீரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. எந்தப் பிரச்சினையையும் எதிர்நோக்கத் தயங்காதவர். நாளைக்கு பத்துமணிக்கு 100 ரூபாய் வேணும் பன்னீர். "நாளைக்குத்தானே. இப்ப ஏன் கவலைப்படுறீங்க". அடுத்த நாள் 10 மணி. "விடுங்க கருணாநிதி. பிரச்சினைய பேஸ் பண்ணுவோம்". பன்னீர் ரொம்ப பிராக்டிக்கல்.

சினிமா ஆசை எனக்கு ஆரம்பப் பள்ளியிலேயே வந்துவிட்டது. என்ன ஆகப் போகிறோம் என்று தெரியாது. ஆனால் திரையில் பெயர் வரவேண்டும. முதுகலை முடித்து ஒரு நாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் அருகே பன்னீரிடம் சொன்னேன். "நான் சினிமாவுக்குப் போகப்போகிறேன்". "சொல்றவன் செய்யமாட்டான் கருணாநிதி. சொல்லாதீங்க செய்ங்க"..

மறுநாள் சென்னையில் இருந்தேன்.

ஒரு முறை அவரிடம் சொன்னேன். ஒரே பெண்ணுடன் வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் பன்னீர் என்று.

சிரித்தபடி சொன்னார். எதையும் நீங்களா முடிவு பண்ணாதீங்க. வாழ்க்கை முடிவு பண்ணும். எதிர்த்து நீந்தாதீங்க. எதிர்த்து நீந்தி தோற்றுப்போய் அதன்போக்கில் நீந்திக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை முடிவெடுத்ததை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பன்னீரின் அந்த வார்த்தைகளில் எவ்வளவு உண்மை.

அன்பழகன் இன்னும் என்னை அழைப்பது "டேய் கிறுக்கா". சொல்வது, "இன்னும் கிறுக்கனா இருக்கியேடா. டேய் கிறுக்கா நீ நெனைக்கிறமாதிரியெல்லாம் யாரும் இல்லேடா. பொழைக்கிற வழியப்பாரு".

நான் சென்னைக்கு வந்து முதலில் தங்கிய இடம் ஸ்டான்லி மருத்துவமனை விடுதி. பேராவூரணி நண்பர் மாஸ்கோ அங்கு மாணவர். இளங்கோ (தற்போது திண்டுக்கல்லில் நரம்பியல் நிபுணர்) கஜேந்திரன் (தற்போது சென்னையில் தனியே கண் மருத்துவமனை) மூவரும் அறைத் தோழர்கள். அங்கு தங்கி இருந்தபோதுதான் நான் கடந்து வந்த கல்லூரிப் பாதையில் சந்தித்த ஒரு பெண்ணை மறுபடியும் சந்தித்தேன். வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். மூன்றுபேரும் கேட்டார்கள். இந்த வயதில் உங்களுக்கு ஒரு பெண் தேவை. அதற்கான ஏற்பாடா? மறுத்தேன்.

எது நடந்தாலும் கடைசிவரை அந்தப் பெண்ணை கைவிட மாட்டேன் என்று உறுதி கூறினால் வந்து ரிஜிஸ்டர் ஆபிசில் கையெழுத்துப் போடுகிறோம்.

நட்பின் பெயரால் சத்தியம் செய்தேன். நட்பையும் சத்தியத்தையும் இன்று வரை காப்பாற்றுகிறேன்.

நான் சென்னை வாழ்க்கையை ஆரம்பித்த பிறகு என் வறுமையும், போராட்டமும் என் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்று முற்றிலும் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கல்லூரி, சொந்த ஊர் நண்பர்களுக்கு நான் நினைவுகளில் தங்கியவன் ஆனேன். பின் அகத்தியனாக மாறிப்போனதால் இன்னும் தூரம்.

சினிமாவில் மும்முரமாக வாய்ப்புத் தேடும் காலத்தில் நட்பு மட்டும் அமையவே இல்லை. ஒரு உதவி இயக்குனர் நண்பரானார். சேர்ந்து முயற்சிப்போம் என்றார். பின்னால் அவர் ஒரு ஒட்டுண்ணி எனத் தெரிந்தது. நேரடியாக மிக மோசமாகத் திட்டினேன். கோபப்படுவார். எதிர்த்து சவால் விடுவார் என்று எதிர்பார்த்தேன். என் காலருகே வந்தமர்ந்து கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். கோபம் வந்தது. எனக்கு என்மேல். தன்மானமும் சுயமரியாதையும் இல்லாத மனிதனோடு நட்பு வைத்திருந்ததற்காக. அன்றே அந்த நட்பை முறித்தேன்.

பின்னாளில் இன்னும் ஒரு ஒட்டுண்ணி நண்பன் ஆனான். எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாதென்று முடிவெடுத்தேன். முதன் முறையாக அவனிடம்தான் வன்முறையைப் பிரயோகித்தேன். ஓடிப்போனான். ஆறுமாதம் கழித்து என் வீட்டருகே இருந்த காவல் நிலையத்தில் இருந்து எனக்கு அழைப்பு,

போனேன். உள்ளே அழைத்துப் போய் சோதனை இட்டார் காவலர். "ஏன் சோதனை"? என்றேன்.

"பாக்கெட்டில் வைத்திருக்கிற கத்தியைக் கொடுத்துவீடு".

"கத்தி வைத்திருக்கிறேன் என்று யார் சொன்னது".

"அவன் தான் சொன்னான்".

"நான் காவல்நிலையம் வரும்போது கத்தியோடு வருவேன் என்று நினைக்கும் ஒருவன் எப்படிப்பட்ட காரியத்தை எனக்கு செய்திருக்க வேண்டும்".

காவலர் முகம் நோக்கினார். அமரச்சொன்னார். ஆய்வாளரிடம் அனுப்பப்பட்டேன்.

"அடிச்சியா?"

"ஆமாம் சார் அடிச்சேன்".

என் காவல்நிலையத்தில் அடித்தேன் என்று ஒத்துக் கொண்ட முதல் மனிதன் நீ என்றார். சட்டத்தைக் கையிலெடுக்காதே, சங்கடங்கள் வந்தால் என்னை வந்து பார். உதவுகிறேன் என்றார். வாழ்வில் காவல்நிலையமே போகக் கூடாது என்று முடிவெடுத்திருந்தவன் நான்.. நட்பு என்ற பெயரில் ஒரு அசிங்கத்தை மிதித்துவிட்டு கழுவிக் கொண்டேன்.

காதல் கோட்டை வெற்றிக்குப்பிறகு அன்பழகனைச் சந்தித்தபோது "நீ ஜெயிச்சாத்தான் நாங்க உனக்கு பிரண்ட்ஸ்சாடா". என்றார். பன்னீர், "என்ன கருணாநிதி என்ன இருந்தாலும் நீங்க இப்படி பண்ணிருக்கக் கூடாது. நாங்கள்லாம் இல்லையா?" என்றார்.

ராமமூர்த்தி "ச்சீ போடா" என்றான்.

அழ மூர்த்தி "மறந்துட்டீங்களே" என்றார்.

அசோக் குமார் "சந்தோசம் .. இன்னும் நல்லா வாங்க "என்றார். மகேந்திரன் வெளிநாட்டில் இருந்தார். என் முகவரி தெரியாமல் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு என் பெயரிட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். ஆனந்தவிகடன் என்னிடம் அதைச் சேர்த்தது. கம்பராமாயணம் யுத்த காண்டத்தின் கடைசிப் பக்கத்தில் அதை பாதுகாத்து வைத்திருக்கிறேன். "ஏன்?" சொல்கிறேன்.

எல்லா நண்பர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும என்ற அடங்கா ஆவல் பிறந்தது.

ஒரு நள்ளிரவு இரண்டு மணிக்கு சேத்தியாதோப்பு அருகில் உள்ள வெள்ளியங்குடியில் காந்தியை சந்தித்தேன்.

அழகு சுந்தரம் அதே யாதவர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். வெங்கடாசலத்தை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு கொடைக்கானல் போகும் வழியில் தாண்டிக்குடியில் பிடித்தேன். ஸ்கூல் நடத்திக் கொண்டிருந்தான்.

ராசேந்திரன் பாண்டிச்சேரியில் ஒரு பேக்டரிக்கு சொந்தக்காரராக இருந்தார். பலமுறை கும்பகோணம் செல்லும்போதெல்லாம் முயற்சித்தும் கோவிந்தராசுவை சந்திக்கவே முடியவில்லை.

ஒரு நண்பரின் திருமணத்துக்கு காரைக்குடி போகும்போது பொன்னமராவதி அருகில் உள்ள குழிபிறை சென்று தங்கமணி. அழகேந்திரனைப் பற்றி விசாரித்தேன். தங்கமணி நெய்வேலியில் இருந்தார். இரவு 11 மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன். வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன். அவருக்கு நான் அகத்தியன் ஆகி விட்டேன் என்று தெரியவில்லை. கிளம்பும்போது என்னுடன் வந்திருந்த கேமிரா மேன் ராஜேஷ் யாதவ் என்னைப் பற்றிச் சொல்ல. "அடப்போடா நாயே" என்றார். அழகேந்திரன் சென்னையில் இருந்தார்.

கோவை வேளாண் கல்லூரியில் ராமசாமி இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். போய்க் காத்திருந்தேன். ஒரு கருத்தரங்கில் இருந்தார். வந்தார். வேளாண் துறையில் பி.ஹெச். டி வாங்கியிருந்தார். அளவிட முடியா சந்தோசம் அன்று. தற்போது கலவையில் கல்லூரி முதல்வர். சேலம் கல்யாணத்துக்கு போனபோது திருச்சி விடுதி நண்பர் தங்கவேலுவைச் சந்தித்தேன். தலைமை ஆசிரியராக இருந்தார்.

திருச்சி நண்பர் முகமது ரஃபி. கல்லூரியில் ஆங்கில துறையில். நாடறிந்த எழுத்தாளர் நாகூர் ரூமியாக மாறி இருந்தார். சமீபத்தில் அவர் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதும்போது கர்வப்பட்டேன்.

விஜயனை மட்டும் எங்கு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கண்ணாமூச்சிதான். கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால் பெண்ணாகரம் அருகில் உள்ள ஏரியூரில் கண்டுபிடித்தேன். கிட்டதட்ட எல்லோரையும் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். இன்னும் சிலரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் நான் முயற்சி செய்த காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் நண்பர்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கதையாசிரியனாக என்னை அங்கீகரித்து சினிமா உலகில் வலம் வர விட்டவர்கள் அம்மா கிரியேசன்ஸ் சிவா வெங்கட்.

கவிஞர் காளிதாசனையும் இசையமைப்பாளர் தேவாவையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மனசுக்கேத்த மகாராசா என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினேன். திருதேவா இசையமைப்பாளராக அறிமுகம். காளிதாசன் பாடல் எழுதினார். அங்கு ஆரம்பித்த நட்பு இன்னும் தொடர்கிறது. என் முதல் படத்திற்கு மிக மிகக்குறைவான ஊதியத்தில் தேவா நட்புக்காக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிஞர் காளிதாசனுக்கு நான் உதவியாளன் என்றே சொல்லலாம். பிரபலமான இயக்குனரான பிறகும் கூட அவருக்காகப் போய் பாடல்களைப் பிரதி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். நான் பாடல் எழுதுவதில் அவரிடம் பெற்ற பயிற்சியும் ஒரு பங்கு வகிக்கிறது.

தங்கர்பச்சான் இனிய நண்பர். எனது நான்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் பேசினால் வலிக்கும். எனக்கு அவர் பேச்சு பிடிக்கும்.

அடுத்து நண்பர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் வெள்ளத்திரை விஜியும், தயா செந்திலும்தான். தொழில் செய்யும்போது நண்பர்களாய் இருப்பவர்கள் நிறைய. நிரந்தர நண்பர்களைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிடுகிறேன்.

சினிமாவில் நான் சந்தித்த முக்கியமான மறக்க முடியாத நண்பன் பிரகாஷ்ராஜ். எப்போது அவர் ஞாபகம் வந்தாலும் அந்த நட்புக்கு மனம் நன்றி சொல்லும். சமீபத்தில் திரு பார்த்திபன் நான் நெருங்கிப் புரிந்து கொண்ட நல்ல நண்பர். இயக்குனர்கள் பிரபு சாலமன், சாண்டில்யன், அறிவுமணி இயக்கிய எம்.ஏ. கென்னடி, டேவிட், சுரேஷ்குரு புதிதாய் வந்த சாணக்யா, கணேஷ், பெங்களூர் பிரேம் இவர்களையெல்லாம் என் நண்பர்கள் என்று சொல்வதைவிட என் குடும்பம் என்றுசொல்வதுதான் எனக்குப் பிடிக்கும்.

அப்போதும் சரி இப்போதும் சரி என் பேராவூரணி நண்பர்கள் பெண்களைப் பற்றிப் பேசியதோ விமர்சனம் செய்ததோ கிடையாது. எங்கள் அமர்வில் யாராவது ஒருவர் புதிதாய் வந்து பெண்கள் பற்றிப் பேசினால் ஆர்.எஸ் வாத்தியார் சொன்னதை நான் அவர்களுக்குச் சொல்வேன்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா என்று ஒருவர் அவரிடம் கேட்டார்.

அடுத்தவன் பொண்டாட்டியப் பத்தி நாம ஏன் பேசணும். வா உன் பெண்டாட்டி கற்பில் சிறந்தவளா? எம் பொண்டாட்டி கற்பில் சிறந்தவளானு பேசலாம். என்றார். வாழ்க்கை முழுதும் இதுதான் நான் கடைபிடிப்பது.

ஆர்.எஸ் நிறையப் படிப்பவர். அப்போதெல்லாம் பேராவூரணியில் ரயில்வே ஸ்டேசனில் நண்பர்கள் கூடுவோம். ஆர் எஸ்., மாஸ்கோ. குணசேகரன், ராமகிருஷ்ணன் எல்லோருமே படித்த புத்தகங்கள், பார்த்த சினிமாக்கள், அரசியல் என்றே பேசுவார்கள். இப்போதும் நானும் என்னைச் சந்திக்கும் நண்பர்களிடம் எஸ். ராமகிருஷ்ணனின் துயில், வைகோவின் ஈரோட்டுப் புத்தகவிழாப் பேச்சு. சிவக்குமாரின் கம்பராமாயண உரை, அண்ணன் அறிவு மதியின் மழைப்பேச்சு என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய இளைஞர்கள் நட்பின் பெயரால் கூடும்போது இது நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

பெண்களுடனான என் நட்பு குறித்து நான் நிறையப் பேச வேண்டும். அதை இங்கே திணிக்க விரும்பவில்லை. வலதுபுறம் செல்லுங்களில் வேறொரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம். எனினும் மரியாதைக்குரிய ஒரு தோழியை மட்டும் குறிப்பிட்டு விடுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு பணி நிமித்தமாய் அழைக்கப்பட்டேன். எனக்கு வணக்கத்துக்குரிய ஒரு தோழி கிடைத்தார். தமிழ்த்துறையில் பொறுப்பு. எப்போதாவது பேசுவோம். எனக்கு ஏதாவது இலக்கியம் சம்பந்தமான சந்தேகம் என்றால் தெளிவுபடுத்துவார். போகும்போது சந்திப்பேன். அவர்தான் நான் சந்திக்கத் தேடிக் கொண்டிருந்த, முதுகலை பயிலும்போது பழகிய நண்பர்களைக் கண்டு பிடித்துச் சொன்னார். முருகன் ஈரோட்டில் தமிழாசிரியர். மருதுதுரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையில். ரெங்கநாதன் கும்பகோணம் அரசினர் கல்லூரி தமிழ்த்துறையில்.

இப்போதெல்லாம் கைபேசியில் உடனுக்குடன் நண்பர்களுடன் உரையாட முடிகிறது. நான் யாருக்கும் குறுச்செய்தி வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. பண்டிகை நாட்கள் மறக்காமல் என் நண்பர்களுடன் நான் பேசும் நாட்கள்.

பொருளாதாரம் நட்பில் முக்கியம் என்று கருதுபவன்நான். வெற்றிபெறும் வரை நான் யாரிடமும் போய் நின்றதில்லை. சிலர் என் நிலையறிந்து உதவினர். திணையளவை பனையளவாக மதித்து திருப்பிக் கொடுத்திருக்கிறேன். எந்த நண்பருக்கும் அவரது தேவைக்கு கடன் என்று கொடுத்ததில்லை. இயன்றால் கொடுத்துவிட்டு எதிர்பார்க்கமாட்டேன். இயலாது என்றால் மன்னிக்கவும் என்பேன்.

ஒரு நண்பர் நான் சிரமப்பட்ட காலங்களில் உதவினார். அவரை நம்பி வாடகை சைக்கிள் எடுத்து வைத்திருப்பேன். செருப்பு வாங்கித்தருவார். நான் வெற்றி பெற்றபோது அவர் சிரமத்தில் இருந்தார். இரண்டு லட்ச ரூபாய் கேட்டார். கடனை அடைத்துவிட்டு என்ன செய்வீர்கள் என்றேன். வேலைக்கு முயற்சிப்பேன் என்றார். தொழில் தொடங்கச் சொன்னேன். பத்து லட்சம் முதலீடு. ஒரு வருடத்தில் நட்டம் என்றார். விட்டு விடுங்கள் என்று மறந்துவிட்டேன். எப்போதாவது மற்ற நண்பர்கள் என்னைத் திட்டும்போது அன்பழகன் சொல்வார். "அவனே கவலைப்படலே. உங்களுக்கு ஏன்டா தேவையில்லாத கவலை". என்று.

செல்வம் என்று ஒரு நண்பர் அறிமுகம் ஆனார். நான் ஒருமுறை இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது தானாக ஒரு பெரும் தொகை கொடுத்து உதவினார். திருப்பிக் கொடுத்தேன். பணத்தை மீறி நட்பு வளர்ந்தது. புத்தகப்பிரியர். படித்ததைப் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பர் கிடைத்தார். அவ்வப்போது கொடுக்கல் வாங்கல் தொடர்ந்தது. ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. என் சூழ்நிலைக்கு அவரை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று நானே ஒதுங்கிக் கொண்டேன். வார்த்தைகள் இல்லா வருத்தங்களுடன் அந்த நட்பில் இடைவெளி விழுந்தது. அந்த நட்பை மீட்கும் காலம் அருகாமையில் இருக்கிறது. மற்றபடி பொருளாதார அடிப்படையில் நட்பை நான் வெகு கவனமாகவே அணுகியிருக்கிறேன்.

எப்போதும் எந்த நேரத்திலும் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ள என் மூன்று பெண்களும் எனக்கு நல்ல தோழிகளே. மூத்தமகள் கார்த்திகாவின் கணவர் தீராத விளையாட்டுப் பிள்ளை இயக்குனர் திரு எனது நல்ல நண்பர். இதுதான் குடும்ப அமைப்பில் நான் கடைபிடிக்கும் நட்புமுறை.

நான் சந்தித்த நட்புகளில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் உயர்ந்த நட்புகளே. சொல்லிலும் செயலிலும் இன்று வரை உயர்ந்தே நிற்கிறார்கள். நான் நட்புகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன். இதுவரை என் எல்லா நட்புகளும் எனக்கு மகிழ்ச்சியையே பந்தியிட்டிருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு நட்பு மட்டும் என்னை சோகமாக்கியது.

பேராவூரணியில் மகேந்திரன் எனக்குத் தாமதமாகத்தான் நண்பரானார். "அவனைச் சேக்காதீங்கடா" என்று மற்ற நண்பர்களிடம் சொன்னவர். அன்பழகனும், பன்னீரும் ராமமூர்த்தியும் சொல்லி என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவர். இரக்க குணம் என்றால் மகேந்திரன் என்று சொல்லலாம். திருச்சியில் படிக்கும்போது பறவைகள் இல்லத்தில் அந்த நட்பு மேலும் மேன்மையுற்றது. நன்றாகப் பாடுவார். பெண்மை கலந்த நளினம் குரல் வளம் சேர்க்கும். படிக்கும்போது ஒரு இந்தி திரைப்படப் பாடலைக் கொடுத்து முதன் முதலில் தமிழில் பாடல் எழுத வைத்த நண்பன். நிறையச் சொல்லலாம் இப்படி. நான் சென்னை வந்தபிறகு அவர் வெளிநாடு போய்விட்டார். ஆனந்தவிகடன் மூலமாகக் கடிதம் அனுப்பினார். மீண்டும் தாய்நாடு வந்தார். நான் சென்னையில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னைச் சந்தித்தார். மும்பை போகவேண்டும் மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன் என்றார். முதல்முறையாக அவருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் தந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு காதல் கோட்டை இந்திப் பதிப்பின் படப்பிடிப்பில் மும்பையில் இருந்தேன். அன்பழகன் என்னைக் கைபேசியில் அழைத்தார். மகேந்திரன் மருத்துவமனையில் இருக்கிறான். போய்ப்பார் என்றார். போனேன். தலை மழித்து கோமாவில் தூங்கிக்கொண்டிருந்தான் நண்பன். துணைக்கு இருந்த நண்பர்களிடம் பேசி விட்டுத்திரும்பினேன். அன்று அவன் குடும்பத்தார் வருவதாக சொன்னார்கள்.

அன்றிரவு படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வந்து படுத்தேன். எழுந்து பகல் 12 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பினேன். நகரிலிருந்து 40 கிலோ மீட்டரில் படப்பிடிப்பு. போய்ச்சேர்ந்தோம். மகேந்திரன் இறந்துவிட்டான் என்ற செய்தி. அப்போது தான் கவனித்தேன். போனில் சார்ஜ் ஒரே ஒரு புள்ளி ஒட்டிக் கொண்டிருக்கிறது. இரவில் சார்ஜ் போட மறந்துவிட்டேன். இப்போதோ அப்போதோ என்று அது உயிர்விடும் நிலை. மீண்டு ஓட்டல் அறைக்குத் திரும்பி சார்ஜ்ஜர் எடுக்க இயலாத சூழ்நிலை. நான் வைத்திருந்த போன் சார்ஜ்ஜர் யாரிடமும் இல்லை. ஒரு சிலரிடம் போன் இரவல் கேட்டால் காரணம் சொல்கிறார்கள். இறைவனை நோக்கிப் பிரார்த்தித்தேன். "இது அணைந்து விட்டால் என் நண்பனுக்கு உதவப் பயந்து ஓடி ஒளிந்த நண்பனாக நான் ஆகி விடுவேன். என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று இறைவா".

ஊரில் இருநது அவன் குடும்பத்தார் பொருளாதாரம் கருதி அங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் என்றனர். மனம் ஒப்பவில்லை. மகேந்தரனின் துணைக்கு இருந்த நண்பர்களிடம் பேசினேன். வந்து சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் செய்தியை மறைக்கச் சொன்னேன். எல்லோருக்கும் விமானத்தில் டிக்கெட் போட்டு, மகேந்திரனை மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்து பெட்டிக்குள் அடைத்து, அவனுக்கும் டிக்கெட் போட்டு எல்லாம் முடிந்துவிட்டு என் செல்போன் முடிந்தது என ஒலியெழுப்பி ஓய்ந்தது.

அதிகாலை வந்து, மகேந்திரனை அனுப்பும் அந்த நிறுவனத்திற்குப் போய், பெட்டி திறந்து, ஒரு மாலை போட்டு ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்று அந்தப் பெட்டியில் எழுதிவிட்டு.. மெல்லக் கேட்டேன்.

"நீ எனக்குச் செய்த உதவிகளை இப்படியா நீ திருப்பிச் செய்ய வைப்பது?"

மகேந்திரன் எப்போதும்போல மௌனமாகவே இருந்தான்.

அந்த சிரிப்பு மட்டும் இல்லை.

நட்புடன்
அகத்தியன்.

http://koodu.thamizhstudio.com/thodargal_16_7.php