Thursday, July 23, 2009

Samsara - துறவைத் துறந்தவன்


ஓவியர் ஜீவா


“Marriage has many pains, but celibacy has no pleasures”
-Samuel Johnson

திபெத்தியர்கள் அதிகம் பேர் நீலகிரியில் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். கம்பளி ஸ்வெட்டர் போன்றவை விற்பது இவர்களது தொழில். சமீபத்தில் இந்திய சீன எல்லை நிர்ணய குழு ஊட்டி வந்தபோது, அவர்களுக்கு எதிர்ப்பு தெவித்து இவர்கள் கடையடைப்பு கூட நடத்தினர். திபெத்தில் சீன ஆக்ரமிப்பை எதிர்த்து எப்போதும் இவர்கள் குரல் கொடுப்பவர்கள். திபெத் பின்னணியில் ஏதாவது திரைப்படம் காணக்கிடைக்குமா என்ற தேடலில் கிடைத்தது 'சம்சாரா' என்ற திரைப்படம். பான் நளின் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட நளின்குமார் பாண்டியா என்ற குஜராத்தி இளைஞனின் முதல் முழுநீள திரைப்படம் 'சம்சாரா'.திபெத்/லடாக்கி மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்தது.

உலக அளவில் புதிதாக அறிமுகமான இயக்குனர்களில் சிறந்த 30 பேரில் இவரும் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

லாமாக்களின் பூமியான திபெத்தில் வாழும் புத்த பிட்சுக்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புதிய அத்தியாயம் 'சம்சாரா'. கழுகு ஒன்று தரையிலிருந்து ஒரு கல்லை கவ்விச்சென்று வானிலிருந்து கீழே ஒரு ஆட்டு மந்தையின் மீது நழுவ விடுகிறது. கபாலத்தை கல் தாக்க, உயிரற்று விழுகிறது ஆடு. அவ்வழியே கடந்து செல்லும் பிட்சுக்கள் குழு ஒன்று இறந்த ஆட்டை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்துவிட்டு, பாழடைந்து நிற்கும் குகைக் கோவிலை நோக்கிச் செல்கிறது. மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் என்று அன்ன ஆகாரமின்றி கடுந்தவத்தில் இருக்கும் தஷியை, மடாலயத்திற்கு திரும்ப அழைத்து வரத்தான் செல்கிறது இந்தக்குழு. கடுந்தவத்தால் உறைந்து போயிருக்கிறான் தஷி. நீண்ட தாடி, அழுக்கடைந்து வற்றிப்போன உடல், வளைந்த நகங்கள், மூடிய கண்கள் என காலங்களை கடந்த தவத்தால் இறுகிக்கிடந்தவனை வெளியே எடுத்துச்சென்று நதியில் நீராட்டி, சவரம் செய்து அழைத்துச்செல்கின்றனர். வழியில் ஒரு கோவில் சுவர்கள் மீது அடுக்கப்பட்டிருக்கும் கற்கள் மீது சில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று இவனை கவர்கிறது – 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?' குதிரை சேணத்தின் மீது பலவீனமாக சுருண்டு கிடக்கிறான் தஷி. நடமாடவே சில காலம் பிடிக்கிறது. மெல்ல இயல்பு, அதாவது புத்த பிட்சுக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறான் இளந்துறவி. குழந்தைப்பருவத்திலேயே இவனைப்போல லாமா ஆக வந்தவர்கள்தான் அவனை சுற்றியுள்ள அனைவரும். ஆரோக்கியம் திரும்பியவுடன் தூங்கிக்கொண்டிருக்கும் இவனை பார்க்கும் மற்றொரு சக லாமாவுக்கு போர்வைக்குள் கூடாரம் கட்டியிருக்கும் இவனது இளமைக்குறி வடிவம் புலப்படுகிறது. பிறிதொருநாள் ஸ்கலிதம் வெளியேறி ஈரமான போர்வையை காண்கிறான். புத்த பிட்சுக்களின் முகமூடியணிந்த குழு நடனம் ஒரு நாள் பொதுமக்களின் முன்பு நடக்கிறது. குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒரு தாயின் திறந்த மார்பகம், ஆடிக்கொண்டிருக்கும் தஷியின் சிந்தையை குலைத்து விடுகிறது.

ஒரு முறை ஒரு கிராமத்திற்கு அனைவரும் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தின் அறுவடை காலத்தை ஆசீர்வதிக்க இந்தப்பயணம். அங்குதான் விளக்கு வெளிச்சத்தில் ஒரு விபத்தைப் போல் அருகாமையில் பேமாவின் எழில் மிகுந்த முகத்தை காண நேர்கிறது. இரவில் அமைதியின்றி புரண்டு படுத்துக்கொண்டிருக்கும் அவனை அவள் மெல்ல ஆதுரத்துடன்

தடவிக்கொடுக்கிறாள். இது நிஜமா கனவா என்று அறியாமலே தூங்கிப்போகிறான் தஷி. இவனது இளமைக்குழப்பங்கள் மடாலயத்தின் மூத்த பிட்சுவின் கவனத்தை கவர்கிறது. ஒரு தூரப்பயணத்திற்கு அவனை அனுப்புகிறார். செல்ல நாய் காலா பின் தொடர, குதிரையின் மீது ஒரு அற்புதப்பயணம். அவன் சந்திக்கச் சென்றது ஒரு பழுத்த பழமான லாமாவை. குகையில் தனியாக வாழும் அவர், அவனுக்கு சில கோட்டோவியங்களை காண்பதற்கு கொடுக்கிறார். அத்தனையும் ஆண் பெண் சம்போகத்தையும் அதன் பல நிலைகளையும் குறிக்கும் காட்சிகள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு பிரத்யேக கோணத்தில் காணும்போது, அந்தச் சித்திரங்களில் தனியான உத்தியை கொண்டு வரையப்பட்ட வேறு கோடுகளும் தெரிகின்றன. அவை உருவங்களின் எலும்புக்கூடுகளையும் எக்ஸ்ரே போல காட்டுகின்றன. எல்லாமே காயமே இது பொய்யடா தத்துவங்களை சுட்டிக்காட்டுகின்றன. திரும்பி வருகிறான் தஷி. பல குழப்பங்கள் அவனை வாட்டுகின்றன. இது என்ன வகையான துறவறம்? 29 வருடங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத்தான் துறவுக்கோலம் பூண்டான் சித்தார்த்தன். 5வயதிலிருந்தே தனக்கு ஏன் இந்த வாழ்க்கை முறை? என்ன இருக்கிறது துறப்பதற்கு? ஒரு நாள் வெளியேறுகிறான் தஷி. தன் துறவி ஆடைகளை துறந்து விட்டு சாதாரண ஆடைகளை அணிந்து கொண்டு பேமாவின் கிராமத்திற்கே செல்கிறான். இளம் லாமாவாக அவனை ஏற்கனவே பார்த்தவர்கள் திகைத்துப்போகின்றனர். பேமா இவனை புரிந்து கொள்கிறாள். ஊருக்கு வெளியே அவனை சந்திக்கிறாள். துறவியாய் இருந்தவன் ஆண்மகனாகிறான். உடல்கலவியில் வெட்டவெளியில் திளைக்கிறார்கள் இருவரும். அவளுக்கு எற்கனவே ஜமாயங்குடன் நிச்சயம் நடந்திருக்கிறது. முறைப்பையன் விட்டுக்கொடுத்துவிட தஷி பேமாவை மணக்கிறான்..

துறவியாய் இருந்தவனுக்கு புது வாழ்வு. காமத்தில் திளைக்கிறார்கள் தம்பதியினர். மகனும் பிறக்கிறான் கர்மா என்று அழகான பெயர் வைக்கிறார்கள். விவசாயத்தில் தஷிக்கு ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இடைத்தரகு வியாபாரியின் மோசடியை மற்றவர்களுக்கு உணர்த்தி, தன் அறுவடையை லாரி பிடித்து நகரத்திற்கு சென்று நல்ல விலைக்கு விற்கிறான். வியாபாரியின் பகையையும் சம்பாதிக்கிறான்.

மெல்ல மெல்ல தஷி சாதாரண மனிதனாக மாறுகிறான். பேராசையும் நகர்ப்புற மோகமும் தலை தூக்குகிறது. அடுத்த அறுவடையின்போது சேகரிக்கப்பட்ட பயிரும் தானியங்களும் ஒரு இரவு பற்றி எரிகின்றன. வியாபாரி தவாவை சந்தேகித்து, நேராக குதிரை மீதமர்ந்து நகரத்துக்கு சென்று அவனுடன் மோதுகிறான். உதை பட்டு திரும்புகிறான். மீதியான தானியங்களை பேமாவே நகரத்திற்கு எடுத்துச்செல்கிறாள். அறுவடை காலங்களில் வேலைக்கு வந்து போகும் சுஜாதா மீதும் இவனது காமப்பார்வை படர்கிறது. யாருமற்ற தனிமையில் அவளுடன் புது வகை காமப் பயிற்சியில் ஈடுபட நேர்கிறது.

ஒரு முறை இவனது பழைய மடாலயத்தோழன், இவனைத் தேடி வருகிறான். அவன் சென்ற பிறகு, இவனுக்கு லௌகீக வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது. மனம் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடுகிறது. வீட்டை விட்டு வெளியேறுகிறான். பாதிப்பயணத்தில் வாசகங்கள் அடங்கிய கற்கள் பதித்த சுவர்களை உடைய கோவிலின் அருகே பேமா குறுக்கிடுகிறாள்.

'யசோதராவைத் தெரியுமா உனக்கு' என்று கேட்கிறாள் கணவனிடம். சித்தார்த்தன் மகன் ராகுலையும் அவளையும் விட்டு விட்டு போனபின் அவள் நிலைமை என்ன, மனநிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்விகளை கேட்டு விட்டு அகலுகிறாள். தள்ளாடி நிற்கும் தஷி பழைய கல்லை புரட்டிப் பார்க்கிறான். கேள்விக்கு விடை அங்கு இருக்கிறது-

'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!'

சம்சாரா துறவறம், இல்லறம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக தானே துறவறம் மேற்கொள்ளாமல் குழந்தைப்பருவத்திலேயே மடங்களில் விடப்படும் குழந்தைகளின் நிலையை பற்றிய கேள்விகள். படத்தின் ஆரம்பத்தில் தஷியின் மடாலயத்தில் வளரும் ஒரு குழந்தைத்துறவியை காண்கிறோம். எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது, இது மட்டும் அங்குமிங்கும் ஓடியாடுவதும், அடிக்கடி வீட்டுக்கு போகவேண்டும் என்று அழுவதும், இது என்ன வகை துறவறம் என்று தவிப்பு ஏற்படுகிறது. ஒரு திரைப்படம் என்ற முறையில் இது ஒரு அழகான படைப்பு. பான் நளினின் முதல் படைப்பு என்று நம்ப இயலாத நிலை. மிகவும் குறைந்த வசனங்கள். படம் நெடுக மௌனமே பெரும்பாலும் மொழியாக இயங்குகிறது. நடிகர்களின் முக பாவங்களும், கண்களுமே நிறைய விஷயங்களை சொல்கின்றன, காமத்தின் முத்திரைகளையும் சேர்த்து. ஒளிப்பதிவு இந்தப்படத்தின் இன்னொரு பெரும் சிறப்பு. திபெத்தின் பனிமலை சார்ந்த அழகு படம் முழுவதும் ததும்பி நிற்கிறது. கருநீல வானமும் வெண்பனி படர்ந்த மலைகளும் ஒன்றுக்கொன்று எதிரான பிம்பங்களை தருவது கூடுதல் அழகு. இதமான வெயிலின் தாக்கத்தில் பரந்து நிற்கும் வெட்டவெளிகளும், குன்றுகளின் மீது படர்ந்து நிற்கும் மடாலயங்களும் பின்னணியில் பரவி நிற்கும் மௌனமும் அற்புத அனுபவம்.



Tuesday, July 21, 2009

ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )



ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.

முதல் மாத மடல் போட்டி இனிதே நடந்து முடிந்தது. அடுத்து ஆகஸ்ட் மாத மடல் போட்டி நடைபெற உள்ளது. எனவே இதிலும் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், முதல் மாதம் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சிலக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

அவை:

* மடல் எழுதுவதற்கு தலைப்பை நீங்களே தெரிவு செய்துக் கொள்ளலாம்.
* பக்க கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம்.
* மடல்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009.

மற்ற அணைத்து நிபந்தனைகளும் எல்லா மாதங்களுக்கும் பொருந்தும். மடல் அனுப்பும் முன்னர் அறிவிப்பு பகுதியில் உள்ள எல்லா நிபந்தனைகளையும் படித்து பார்க்கவும்.

மடலை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்கள், என யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் மடல் எழுதலாம். சமூதாயப் பிரச்சனை, உணர்வுகள் சார்ந்த பிரச்சனை என்று எந்தத் தலைப்பிலும் நீங்கள் மடல் எழுதலாம்.


மேலும்:http://thamizhstudio.com/ezhuthungal_madal.htm


Thursday, July 9, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.



நாள்: சனிக்கிழமை (11-07-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் 'லு சுவான்' இயக்கிய "மௌன்டைன் பெடரோல் (Mountain Patrol)" திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் "இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்" என்கிறத் தலைப்பில் இலக்கியம் குறித்தான தனது விரிவான பார்வையை பதிவு செய்வார். இதில் மக்கள் நல் வாழ்வு வாழ இலக்கியம் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

இவரைப் பற்றி:

தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்ற எழுத்தாளரான திரு. பிரபஞ்சன் இதுவரை ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: "வானம் வசப்படும், மானுடம் வெல்லும், எனக்குள் இருப்பவள், ஜீவநதி, பொன்முடிப்பு, நேற்று மனிதர்கள், இன்பக்கேணி, காகித மனிதர்கள், வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்".

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. லெனின்பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். படத்தொகுப்பு நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் படத்தொகுப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவரைப் பற்றி:

தமிழில் புகழ்பெற்ற படத்தொகுப்பாளரான இவர் "ஊருக்கு நூறு பேர்" என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இவரும், வி.டி. விஜயனும் சேர்ந்து பணிபுரிந்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிப் படங்கள்தான். தமிழில் பல முக்கியப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த திரு. லெனின் அவர்கள்தான் தமிழ் குறும்பட உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரையிடப்படும் குறும்படங்கள்:

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
நிலமெல்லாம் இரத்தமமனோகர்24 நிமிடங்கள்
விபத்துசங்கர் நாராயணன்15 நிமி. / 30 நொடிகள்
குண்டன்முரளி13 நிமி. / 10 நொடிகள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. அனந்த நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவரைப் பற்றி:

இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அண்மையில் வெளிவந்திருக்கும்"வால்மீகி" திரைப்படத்தின் இயக்குனர்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

மேலும் இந்த வாரம் முதல் இரண்டுப் புதிய பகுதிகள் குறும்பட வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

குறும்படங்களுக்கான உதவி:

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அதற்கு ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து தரும் என்கிற அறிவிப்பு ஏற்கனவே தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ஆகிய அறிவிப்புகளும் இடம் பெற உள்ளன.

மடல் போட்டி:

மடல் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தால் அறிவிக்கப்பட்ட மடல் போட்டியில் பரிசு வென்ற மடல் மற்றும் போட்டியாளர் ஆகியோரும் அறிவிக்கப்படுவர்.


6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

இந்த மாதம் சந்தாத் தொகை முப்பது ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

Friday, July 3, 2009

நர்சிம் மற்றும் முரளிக் கண்ணனுக்கு ஒரு தன்னிலை விளக்கம்.



(நண்பர் நர்சிம்முக்கு பின்னூட்டமிட விரும்பினேன். ஆனால் அதிகமான வார்த்தைகள் சேர்ந்துவிட்டால் பின்னூட்டத்தில் இணைக்க வில்லை. அதனை இங்கே கொடுத்துள்ளோம்)

நன்றி நர்சிம்... ஆனால் நாங்கள் இதுப் போன்ற பதிவுகளை எதிர்பார்த்து நாங்கள் விருது கொடுப்பது இல்லை. நண்பர் முரளிக் கண்ணன் சொன்னது போல் எங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவோ, காப்பாற்றிக் கொள்ளவோ நாங்கள் இது போன்ற விருதுகள் கொடுப்பதில்லை.. நண்பர் முரளிக் கண்ணன் ஒரு முறையாவது தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் பார்த்து இருப்பாரா என்பது எனக்கு தெரியாது.


எங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள நாங்க ஒன்றும் மிட்டாய்க் கடை வியாபாரிகள் இல்லை. குறும்படத் துறைக்கு ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், இலக்கியம் என்றாலே ஒரு சிலருக்குத்தான் சொந்தம் என்று இருக்கும் நிலையை மாற்றி இலக்கியம் பற்றி கிராமத்து மக்களும், சேரி வாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துக் கொண்டு நல் வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், இன்னும் பல.. (இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் முரளிக் கண்ணன்) நோக்கத்திற்காகவும் தான் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கப்பட்டது.


அதற்கான பணிகளை செய்வதில்தான் நாங்க முழு ஆர்வம் காட்டி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த நாங்கள் ஒன்றும் இனைய வியாபாரி அல்ல. இதுவரை நாங்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தேவை இருப்பவர்கள் எங்கள் இணையதளத்தை தானாகவே நாடி வரட்டும் என்றுதான் விட்டுவிட்டோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.


பதிவர்களுக்கு இதுவரை யாரும் இது போன்ற விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டப் பின்னர் தான் இந்த பதிவர் விருதை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். காரணம் புதிதாய் எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தானே தவிர எங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள அல்ல. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. .. தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு இலாப நோக்கம் அற்ற இணையத்தளம். பிறகு ஏன் நாங்கள் எங்கள் தளத்தை காப்பாற்றிக் கொள்ள பதிவர்களை நாட வேண்டும். ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்றுதான் இந்த விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கினோம்.


ஆனால் அதற்கு பதிவர்களில் ஒரு சிலர் கொடுத்த வரவேற்பு எங்களை புளங்காகிதம் அடைய செய்து விட்டது. நாங்கள் இன்னும் பரவலாக அறியப்படாதவர்கள் தான். ஆனால் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் யாவும் இதுவரை யாரும் மேற்கொள்ளாதவை. எங்களின் முழு நேரப் பணி இது அல்ல. நர்சிம் போன்று வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இந்த சமூதாயத்திற்கு எங்களால் முடிந்த நல்லதை செய்யவே விரும்புகிறோம். எனவே இது போன்ற வார்த்தைகளை உதிர்க்கும் முன்னர் யாரைப் பற்றிக் கூறுகிறீர்களோ அவர்களை பற்றி முழுதும் தெரிந்துக் கொள்ளுங்கள். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.


நர்சிம் விருதை வாங்கி கொள்ள வராத சூழல் பற்றி நான் நன்கறிவேன். அதில் பிழை ஏதும் இல்லை. எல்லோருக்கும் இது போன்ற சூழல்கள் ஏற்படுவது உண்டு. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்து இருபது நாட்கள் கழித்தும் நர்சிம் ஒரு கூட முறை என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. சாதரணமாக ஒரு நண்பனைப் போல் பேசி இருக்கலாமே. காரணம் இந்த நிகழ்ச்சியை நாங்கள் மிகுந்த நட்டத்திற்கு இடையில் தான் நடத்தி வருகிறோம். மேலும் ஒவ்வொரும் மாதமும் அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விசயங்களில் எங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது போன்ற பொறுப்பான தொலைப்பேசி அழைப்பு மருந்தாக அமையும். அதைத்தான் நண்பர் தண்டோரா விடம் சொல்லிக்கொண்டிருந்தோம். அவர் அந்த நிலைக் கண்டு உங்களிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் நர்சிமுக்கும், தண்டோராவுகும் நடந்த உரையாடல்க பற்றி நான் முழுதும் அறியிலேன்.


நாங்கள் வளர்ந்து வரும் அமைப்பை சார்ந்தவர்கள். எனவே எல்லோரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம். தவிர்த்து இதுப் போன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. தயவு செய்து இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்துக் கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தண்டோராவோ, அல்லது வேறு பதிவரோ, அல்லது நானோ நர்சிம்மை காயப் படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


செடியாய் இருக்கும் நாங்கள் மரமாய் வளர யாரும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஆனால் வெந்நீர் ஊற்றி எங்களை காயப்படுத்தாதீர்கள். நண்பர் முரளிக் கண்ணன் பதிவர் விருது கொடுக்கும் வழிமுறை பற்றி தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளத்தில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் எங்களை சார்ந்த பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்து விவாதம் செய்யாதீர்கள். என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள். நாங்கள் சர்ச்சைகளை விருபுவதில்லை. அனைவரின் புரிதலுக்கும் நன்றி.


(குறிப்பு: விருதுக்கான பதிவரை தெரிவு செய்வது முழுக்க முழுக்க தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகம் மட்டுமே. (நிர்வாகம் என்பது நான் மற்றும் நண்பன் குணா) எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எங்களை தொடர்பு கொண்டு பேசுங்கள். தவிர்த்து நீங்களாகவே உங்களுக்குள் பேசிக் கொள்ளாதீர்கள்.)