Thursday, September 16, 2010

சய்லேன்ஸ் - 1

சய்லேன்ஸ் - 1

கட்டியங்காரன்

குறிஞ்சி

சலாம் பா! வணக்குமோங்கம்மோய்!
கும்புட்டுக்கிறேன் வாத்யாரே!
வணக்கம் வந்தனம் நமஷ்கார் நமோஷ்கா...

நான்தாம்பா கட்டியங்காரன்...
தெருக்கூத்து தொடங்கரச்சே முன்னாடி வந்து
பேசுற பபூன்.. ங்க சாமீ!
நம்ம கண்ணு முன்னாடி எம்மாம் பெரிய
கூத்தெல்லாம் நடக்குது!
பாத்துகிட்டு சும்மாத்தானக் கீறோம்!
என்னவே நாஞ்சொல்றது...?

ஓய்! உன்டிங்கிறீரா... இல்லங்கீறீரா...
ஏதாவது ஒரு பக்கம் தலைய ஆட்டுமேன்!
இந்தப் பகுதியிலே நாம் காணப் போவது யாதெனில்
படித்த நூல், ரசித்த கவிதை, அறிந்த படைப்பாளி,
நிகழ்வு, திரைப்படம், சமூக விமர்சனம்,இப்படியாகத்
தானேத் தொடரப் போகிறது...நம் உறவு
எதப் பத்தி வேணும்னாலும் இந்தப் பத்திலப்
பேசலாங்க...

வாங்க பழகுவோம்!

முல்லை

ஒரு நூல் வெளியீட்டுக்கு பிரம்மாண்டமானக்
கூட்டமொன்றை கூட்டமுடியுமா...?
நல்ல நட்பும் தூயத் தோழமையும் சாத்தியமெனில்
கூடுவதும் சாத்தியந்தான்!

பிப்ரவரி 2010ல் கவிஞர் தமிழச்சி
தங்கபாண்டியனின் மூன்றாவது கவிதை நூலான
'மஞ்சணத்தி' உயிர்மை வெளியீடாக, துணை
முதல்வர் வெளியிட கவிஞன் அன்புத் தாயார்
பெற்றுக் கொண்டார். அவ்வ்வ்வளவு பெரீய
அரங்கமும் நிரம்பி வழிய அரசியல், இலக்கிய
முகங்களின் புன்னகைப் பளிச் கள்! இது செய்தில்லை!

நவீனக் கவிதைகளை, பரதம், பாடல்
குறும்படம், நவீனநாடகம் என வேறுவேறுத் தளங்களில்
மடைமாற்றியதில் கவிதைக்கும், ரசிகருக்கும் புதிய
பரிமாணம் கிடைத்தது.

குறிப்பாக 'மஞ்சணத்தி' என்கிற
கவிதையை பரதநாட்டியத்தில் சொன்ன முறை,
அடடாவோ அடடா!

தமிழச்சியின் கவிதைகளை இசையமைத்து பாடிய
கவிஞர் ரவி சுப்ரமணியனின் குரல் வந்திருந்தவர்களை
கட்டிப்போட்டது.

குறும்படமும், நவீன நாடக முயற்சிகளும் வரவேற்புக்
குள்ளாயின!

எளிமையானக் கவிதைகளின் விலை தான்
நிகழ்ச்சி போலவே பிரம்மாண்டம் - அதிகமில்லை
ஜென்டில்மேன்! 190 ரூவாதான்!

கூட்டத்திலிருந்த ஒருவர் முணுமுணுத்தார்.
காலச்சுவடுக்கு கனிமொழி ... உயிர்மைக்கு
தமிழச்சி...

எப்படிப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ...?

மருதம்

'பழமலய்' கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா...?
கவிதையும் உரையும் கலந்து நெய்த
உத்தியில் பழமலய் தந்த 'கணங்களின் கதை'
தமிழ்க் கவிதை இயக்கத்தை உலுக்கியது.

கவிஞர் பழமலய், தன்னைத் தனக்கும் தன்
மக்களை அவர்களுக்கும் தன் கவிதைகள் மூலமாக
உணர்த்துபவர்...

இழிவுகளுக்கானக் காரணங்களைக் கண்டு போராட
வந்தும் உக்கிரக் கவிதைகளைத் தந்தவர்

தனது படைப்புகளாலும் உணர்வுள்ள செயல்பாடுகளாலும்
பல படைப்பாளிகளைச் செதுக்கி வரும் கவிச்சிற்பி

அதிசயமாய் .. அற்புதமாய்... ஆதிமூலந்தேடி துழாவும்
புதூஉ எழுத்துப் படைப்பாளியின்

ஒட்டுமொத்த படைப்புகளும் காவ்யா வெளியீட்டில்
ஒரே நூலாக வெளி வந்துள்ளது (ரூ.500!)

நெய்தல்

உதயக்கண்ணன் வெளியீடாக வந்துள்ள
'இருவாட்சி' பொங்கல் மலர், ஓர் இலக்கியப் பொக்கிஷம்!
சிறுகதை, கவிதை, குறுநாவல், நூல் விமர்சனம்
எனக் கதம்ப மாலையாக கோர்த்து தந்திருக்கிறார்
நம்ம ஷங்கண்ணா! (எவ். சங்கரநாராயணன்)
மிகச்சிறந்த வடிவமைப்பு, திகட்டாத கோட்டோவியங்கள்
வாசிக்கிறவர்களை வசீகரிக்கும் பல்வேறு
படைப்பாளிகளின் எழுத்தோவியங்கள் எல்லாமும்
சேர்த்து ரூ.100! தான்

நூல் வாங்க - உதயக்கண்ணன், 10 கல்யாண சுந்தரம் தெரு
பெரம்பூர், சென்னை - 600 011. பேசி -9444 64 0986

சாகுபடி

பாலை

கொப்பளித்து துப்புகிறாய் துவேஷத்தை
வழித்து விசிறுகையில்
தெளிக்கிறதுன் மேல் என் எதிர்ப்புணர்வு

வேப்பங்காயில் தோய்த்த சொற்களைப் பூச
துடைத்து வீசுகையில்
வழிகிறதுன் மேலிருந்து
கருங்கசப்பின் திட அழுக்கு

அதிகாரம் சுமந்த ஆயுதங்களை
பிரயோகிக்குமுன் வன்முறையை
சமாளிக்குமென் வியூகத்துக்கு விருதளிக்கிறாய்
தீவிரவாதி (அ) பயங்கரவாதியென

கபடப் புன்னகைக்குள் மறைந்திருந்த
துரோகத்தின் முகம் அதி அருவருப்பானது
குரூரமும் குரோதமுங் கூடியது

ப்ரியங்களை என்னுள் விதைத்திருந்தாய்
வியாபித்து விரிந்திருக்குமே
நேச விருட்சம்

நம்பிக்கையைப் பரிசாக அளிக்குமுனக்கு
நம்பகத்தையும் நன்றியையும்
தர இயலுமென்னால் வால்குழைத்து

தாய்மையின் பாசத்தோடும்
துணைவியின் பொறுப்புங் கூடிய
காதலைத் தெளி என்மேல்
கூந்தலை வருடி பதிக்குமென் குளிர்முத்தத்தில்
உணர்வாய்
தூய அன்பின் சுகந்தந்தை

கட்டியங்காரன் கவிதை நல்லா இருக்கா...?

தொடரும்...

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

ஆதவன்

தமிழ் ஸ்டுடியோ.காம்-ன் 24வது குறும்பட வட்டம் 11.09.2010 அன்று சென்னை இக்சா மையத்தில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் அரிகரன் இயக்குனர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் ஸ்டுடியோ அருண் வரவேற்புரை வழங்கினார்.

குறும்பட வழிக்காட்டல்

இம்மாத குறும்பட வழிக்காட்டல் பகுதியில் இயக்குனர் அரிகரன் சிறப்புரையாற்றினார்.

இயக்குனர் அரிகரன்

குறும்படம் எடுத்து பிழைப்பு நடத்தமுடியாது. இங்கு குறும்படம் என்றவுடன் பெரும்பாலானோர் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். வரதட்சணை, குடி, விபத்து, குழந்தை தொழிலாளர், சுற்றுச்சூழல், புகைப்பிடித்தல் என ஏதாவது ஒரு கருத்துக்கு குறும்படம் எடுக்கின்றனர். இந்த பிரச்சினைகள் பற்றி குறும்பட எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தாண்டி சினிமா கலையை புரிந்து கொண்டு குறும்படங்கள் எடுக்க வேண்டும். சிலர் சினிமா மூலம் சமூகத்தை மாற்ற முனைகின்றனர். ஆனால் சினிமா மூலம் சமூக மாற்றம் சாத்தியமில்லை.

ஈரான் மிகவும் மதக்கட்டுப்பாடு மிக்க நாடு. அங்கு ஆண், பெண் சந்தித்து பேசுவது போன்று படம் எடுப்பது கடினம். அதனால் தான் குழந்தைகளை வைத்து படம் எடுக்கின்றனர். ஈரான் படங்களை ஐரோப்பிய திரைப்பட விழா குழுவினர் பாராட்டியதினால் அது உலக கவனம் பெறுகிறது.

இந்தியாவில் பல நல்ல இயக்குனர்கள் இருக்கின்றனர். அவர்களின் படங்களை ஐரோப்பியர்கள் பாராட்டவில்லை. அதனால் அவர்களின் படங்கள் உலக கவனம் பெறவில்லை. நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். இந்திய இயக்குனர்கள் கதாநாயகர்களுக்காக படம் செய்ததை கைவிடவேண்டும். கதாநாயகர்களின் தேவைகள் தீர்ந்துவிட்டன. மாறி வரும் சமூக மாற்றத்தை உள்ள வாங்கி படம் பண்ண வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் இன்னும் டிஜிட்டல் சினிமா வரவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எல்லா திரைப்படங்களும் 3டி-ல்தான் வெளிவரும். அதற்கு ஐந்து வருடங்களுக்கு பிறகு ஹாலோ கிராபிக் சினிமா-தான் வரும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் லேப் எல்லாம் மூட வேண்டிய காலம் வரும். எவ்வளவு விஞ்ஞான மாற்றம் நிகழ்ந்தாலும் கலாப்பூர்வமான படைப்புகள்தான் வெற்றிப்பெறும்.

நான் இயக்கிய முதல் படம் ஏழாவது மனிதன். முதலில் இந்த படம் எடுக்கும் திட்டம் இல்லை. 1981 ஆண்டு பாரதி நூற்றாண்டு அதனை முன்னிட்டு பாரதிப்பற்றி படம் எடுக்க பாளை சண்முகம் விரும்பினார். முதலில் பாரதி பாடல்களை பதிவு செய்தோம். பிறகு பாரதிப்பற்றிய ஆராய்ச்சியில் பாரதிப் பற்றிய பல விசயங்கள் பொது வெளியில் சொல்ல முடியாததாக இருந்தது. பாரதி ஒரு மென்டல் சேலஞ் பேர்சன்.

பாரதி பற்றிய உண்மைகளை புறம் தள்ளி விட்டு படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை. பாரதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற படம் வெளிவர வேண்டாம் என முடிவு செய்தோம்.

பிறகு பாளை சண்முகம் ஒரு போராட்ட குறிப்புகளை கொடுத்து படிக்க சொன்னார். அது இண்டியா சிமெண்ட் கம்பெனிக்கு எதிராக சுற்றுச்சூழல் சார்ந்தது. பாளை சண்முகம் போராடியதன் குறிப்புகள். இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டம் அது அதிலிருந்து உருவானதுதான் ஏதாவது மனிதன் திரைப்படம்.

வெகுசன சினிமா எனக்கு ஒத்துவராது. எனக்கு ஒரு படத்தை ஒரே ஷெட்யூலில் அது 25 நாட்களாக இருந்தாலும் சரி, 35 நாட்களாக இருந்தாலும் சரி தொடர்ந்து படம் பிடிக்க வேண்டும். அப்போது தான் அதே உணர்ச்சியுடன் அந்த படத்தை எடுக்க முடியும் என நம்பினேன். அது சரியானது என சொல்ல முடியாது. ஆனாலும் என்னுடைய எட்டு படங்களையும் அப்படிதான் படப்பதிவு செய்திருக்கிறேன்.

படம் எடுக்க விரும்புகிறவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். நாம் நிறைய வாசிக்க வாசிக்க நம்மை அறியாமலேயே ஒரு நல்ல படைப்பை உருவாக்குவோம்.

குறும்பட திரையிடல்

இம்மாத குறும்பட திரையிடல் பகுதியில் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவை பின்வருமாறு.

1. பெல் அடிச்சாச்சு - எஸ்.யு. அருண்
2. செந்தாழை - பிரசன்னா சுப்ரமணியம்
3. கம்மாயில கல்லு - சுரேஷ் குமார்

இம்மூன்று குறும்படங்களையும் இயக்குனர் மதுமிதா திறனாய்வு செய்தார்.

இயக்குனர் மதுமிதா

எல்லா இயக்குனர்களுக்கும் முதல்படி குறும்படம்தான். நானும் குறும்படம் எடுத்திருக்கிறேன்.

முதல் குறும்படம் சிறப்பாக உள்ளது. யாரை கதை மாந்தராக எடுத்துக் கொள்கிறோம். எதைப் பற்றி பேச போகிறோம். எப்படி சொல்லபோகிறோம் என்பதனை சரியாக உணர்ந்து மிக குறுகிய நேரத்திலேயே தான் சொல்ல நினைத்த செய்தியை சிறப்பாக சொல்லி உள்ளார்.

இரண்டாவது குறும்படத்தில் நல்ல ஷாட்-கள் உள்ளன. படத் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பு என்பது படக்காட்சிகளை வெட்டி ஒட்டுவதுமட்டுமல்ல. அது ஒரு படைப்பாக வேலையும்கூட பட கால அளவை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

மூன்றாவது குறும்படம் நகைச்சுவையாக உள்ளது. குறும்படம் என்றால் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

திரைத்துறையில் நிறைய பேர் சினிமா என்பது பணம் சம்பாதிப்பதுக்கு என நினைக்கின்றனர். Cinema is not money making machine

மருத்துவர், பொறியாளர் எப்படி தன் தொழிலுக்காக 4, 5 வருடம் படித்துவிட்டு வருகிறார்களோ அதுபோல்தான் நானும் சினிமாவுக்காக ஆறு வருடங்கள் படித்துள்ளேன். ஆனால் திரைத்துறையில் நிறைய பேர் ஒரு பெண்ணால இந்த வேலையை செய்ய முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

பல துறைகளிலும் பெண்கள் சாதித்த பிறகு இந்த 2010ல் என்னைப் பார்த்து ஒருவர் சொல்கிறார் பொண்ணுனா சமையல் வேல பாத்துக்கிட்டு வீட்டோ இருக்கணும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது தொடர்ந்து பெண் இயக்குனர்கள் வந்துக் கொண்டுள்ளனர். இது நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்த நிலை மாறும்.

மூன்று குறும்பட இயக்குனர்களும் தங்கள் படங்கள் குறித்து பேசினார். பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/24#

Tuesday, September 14, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)

நிகழ்வின் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.co.in/thamizhstudio/UiFGbG


வேலூர் நூலாறு புத்தக கண்காட்சியில் - தமிழ் ஸ்டுடியோ.காம் நிகழ்த்திய குறும்படத் திரையிடல்.
வேலூரில் (கோட்டை மைதானம்) ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களாக தமிழ் ஸ்டுடியோ சார்பில் குறும்பட ஆவணப்படங்கள் திரையிடல் (ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை) நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் காலை 11.30 மணியளவில் அகிரா குரசோவாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் ஒரு சிறப்பு விருந்தினரின் தலைமையில் திரையிடல் நடைபெற்று படங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

விபரம்:

ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: குறும்பட /ஆவணப்பட வரலாறு குறித்தான அறிமுக உரை அருண் (தமிழ் ஸ்டுடியோ)
வகைப்பாடு: குறும்பட /ஆவணப்பட வரலாற்றை விளக்கும் படங்கள் திரையிடப்பட்டன.

சிறப்பு விருந்தினர்: பீ.லெனின் திரைப்பட தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் அழகிய பெரியவன்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. நாக் அவுட் – பீ.லெனின்
2. மறைபொருள் - பொன்.சுதா
3. உப்புக்காத்து - ஹரி

ஆகஸ்ட் 29, 2010, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: குறும்படங்களில் சிறுகதைகள் குறித்து உரை.
வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர். சிவக்குமார்.

திரையிடப்பட்ட படங்கள்:
1. நடந்த கதை - பொன்.சுதா
2. திற - பிரின்ஸ் என்னாரசு பெரியார்
3. செவ்ளி - அறிவழகன்
4. கர்ணமோட்சம் - முரளி மனோகர்
5. கழுவேற்றம் – ராஜா

ஆகஸ்ட் 30, 2010, திங்கள்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: பொது குறும்படங்கள் குறித்து உரை
சிறப்பு விருந்தினர்: சி. ஜே. ராஜ்குமார்
வகைப்பாடு: பொது குறும்படங்கள் திரையிடல்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. கோத்தி - முத்துக்குமார்
2. எரிபொருள் - முத்துக்குமார்
3. குண்டன் - முரளி
4. அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் - ஸ்ரீராம்
5. விளையாட மறந்ததென்ன? - ஜெய் வினோ

ஆகஸ்ட் 31, 2010, செவ்வாக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: ஆவணப்படங்கள் குறித்து உரை
சிறப்பு விருந்தினர்: ஆர். ஆர். சீனிவாசன்

வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்

திரையிடப்பட்ட படங்கள்:
1. The Most Beautiful - அகிரா குரசோவா
2.என் பெயர் பாலாறு - ஆர். ஆர். சீனிவாசன்
3.நீருண்டு நிலமுண்டு - கைலாசம் பாலச்சந்தர்

செப்டம்பர் 01, 2010, புதன்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: பிறமொழி குறும்படங்கள் குறித்து உரை

சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் அழகிய பெரியவன்

வகைப்பாடு: பிறமொழி குறும்படங்கள் திரையிடல்.

திரையிடப்பட்ட படங்கள்:
1. The Lower Depths - அகிரா குரசோவா
2. White Gold - Bijan Lamanpire
3. Ashes and snow - Amite
4. Doodlebug UK=1997-3min-16mm - Christopher Nolan
5. Ali & the ball - Camilla Ah Kim
6. Kosi Kada – Jerna Anurac Singh

செப்டம்பர் 02, 2010, வியாழக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: வேலூரும் அதன் வரலாற்று சிறப்பும்.

வகைப்பாடு: வேலூர் ஆர்வலர்கள் எடுத்த குறும்படங்கள்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. Sanshiro Sugata II - அகிரா குரசோவா
2. நடந்த கதை - பொன்.சுதா
3. திருகாணி - பெ. அமுதா
4. மறதியின் வரலாறு (ஆவணப்படம்) - சமதர்மன்

செப்டம்பர் 03, 2010, வெள்ளிகிழமை நடைபெற்றவை.
பேச்சு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் குறித்து.

வகைப்பாடு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள்

திரையிடப்பட்ட படங்கள்:
1. One Wonderful Sunday - அகிரா குரசோவா
2. ஜெயகாந்தன் - இரவி சுப்பிரமணியம்
3. கி.ரா - புதுவை இளவேனில்
4. இந்திரா பார்த்தசாரதி - இரவி சுப்பிரமணியம்

செப்டம்பர் 04, 2010, சனிக்கிழமை நடைபெற்றவை.
சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் குறித்து உரை - யாழ் நிலவன் (புதுச்சேரி)

வகைப்பாடு: : சமூக விழிப்புணர்வு தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்

திரையிடப்பட்ட படங்கள்:

1. Rashomon - அகிரா குரசோவா
2. வாக்குமூலம் - சுப்பு
3. செத்தாழை - பிரசன்னா சுப்பிரமணியன்
4. பெல் அடிச்சாச்சு - எஸ்.வி. அருண் குமார்
5. மக்கப் மங்கம்மா – பாவல் நவகீதன்

செப்டம்பர் 05, 2010, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றவை.
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர். கு. ஞானசம்பந்தம்


மேலும் படிக்க:

http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_2.php



கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...

கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...
...எழுத்தாளுமையுடன் ஓர் உரையாடல்

கூடு இணையதளத்தின் மாதந்திர நிகழ்ச்சியாக ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதம் நான்காம் சனிக்கிழமையும் கொஞ்சம் தேநீர்...கொஞ்சம் அரட்டை என்கிற நிகழ்ச்சி நடைபெறும்.

இது புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் ஒரு மாலை நேரத்தில் தேநீர் விருந்தோடு கலந்துரையாடும் நிகழ்வாகும்.

கையில் ஒரு கோப்பை தேநீரோடு, நாம் நேசிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரரான எழுத்தாளருடன் அவர் எழுத்து பற்றியும், அவரின் பிற ஆர்வங்கள் பற்றியும், அவரின் புகழ் பெற்ற புத்தகங்கள் பற்றியும், தற்கால இலக்கிய உலகின் போக்கு குறித்தும் கலந்துரையாடலாம். இந்நிகழ்வில் பங்கு பெற பத்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முதலில் முன்பதிவு செய்யப்படும் பத்து நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

மிக முக்கியமான விதிமுறை.. இதில் பங்குபெற விரும்புவோர் அந்த மாதம் நாம் சந்திக்க இருக்கும் எழுத்தாளரின் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அவரின் புத்தகங்கள் குறித்து நேர்மையான கருத்துகள் கொண்டிருக்க வேண்டும். பங்குபெற விரும்பும் நண்பர்களின் முன்பதிவுக்கேற்ப மூன்றாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் அந்த எழுத்தாளர் புத்தகங்களை படித்துள்ள நண்பர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

நிகழ்வு அருமையான கலாச்சார சூழல் நிறைந்த இடத்திலோ, எழுத்தாளரின் வீட்டிலோ, அல்லது ஒரு அருமையான தேநீர்க் கடையிலோ நடைபெறும்.

முதல் மாதம்.... இந்நிகழ்வில் பங்கேற்கும் எழுத்தாளர் கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. கி. இராஜநாராயணன் அவர்கள். நிகழ்வு புதுச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

முன்பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 20, 2010... நிகழ்வு நடைபெறும் நாள்: செப்டம்பர், 25, 2010 மாலை மூன்று மணியளவில்..
இடம் புதுச்சேரி..