Tuesday, December 29, 2009

குறும்பட ஆலோசனை


உங்கள் குறும்படங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தயாரிப்பு செலவு, உபகரணங்கள் (கேமரா, லைட்டிங், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து தேவையை தெரிவிக்க, மேலும் சந்தைப்படுத்துதல் போன்ற குறும்படங்கள் சார்ந்த உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட முகவரியில் ஆலோசனை பெறலாம். (முன் அனுமதி பெற்று சந்திக்கவும்)

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை

இச்சேவை முற்றிலும் இலவசம்

எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

தொலைபேசி: 9840698236, 9894422268


Wednesday, September 16, 2009

தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்

தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்

A Film by
Year --
Run time : --


“துடிக்கிற ஆட்டத்தை திரையிலே பார்த்திருக்கேன்,
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையிலே ஆடிருக்கேன்”
- இளையராஜா “ நாயகனில்

திரைப்படங்களை திரையரங்குகளில் தான் மக்கள் காலகாலமாய் கண்டு களித்து வந்திருக்கின்றனர். இப்போது அந்த அனுபவமே ஒரு பழங்கதையாய் மாறிவிட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு வீடு வந்துவிட்ட சின்னத்திரை, திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. திரைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், திரையில் பாய்ந்து வந்த புகைவண்டியை கண்டு பயந்து ரசிகர்கள் வெளியே ஓடினார்களாம். மௌனப்பட காலத்தில் ஒவ்வொரு ரீல் மாற்றும்போதும், நாட்டிய நிகழ்ச்சிகளும் மாஜிக் நிகழ்ச்சிகளும், திரைக்கதையை விளக்கிக் கூறும் கலைஞர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனவாம்.

பின்னர் பேசும் படங்கள் வந்தபோது பெற்ற அனுபவங்கள் வேறு வகையானவை. சினிமாஸ்கோப், 70 எம் எம், 3டி, சினிரமா, ஸ்டீரியோபோனிக் ஒலி என்று புதுப்புது கண்டுபிடிப்புகள், ரசிகர்களை எப்போதும் வியப்பிலாழ்த்தி வந்திருக்கின்றன. தந்திரக்காட்சிகளும், இரட்டை வேடக்காட்சிகளும் இப்போது காணக்கிடைக்கும் டிஜிடல் சாகசங்களும் எப்போதும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துக்கொண்டேதான் இருக்கும்.

சின்னத்திரையின் ஆதிக்கத்திற்கு முன்னிருந்த அந்தக்காலத்தை நினைத்துப் பார்ப்போம். இப்போதைய கறுப்பு மார்க்கெட்டில் டிக்கட் விற்று காசு பார்க்கும் ரசிகர் மன்றங்கள் அப்போது இல்லை. முழு ஈடுபாட்டோடு கைக்காசை செலவழித்து தோரணம் கட்டி விழா எடுத்து அப்போதைய கதாநாயகர்களின் நிலையை உயர வைத்த அப்பாவிகள்தான் அப்போது இருந்தனர். பின்னர் அரசியல் உள்ளே புகுந்து ரசிகர் மன்றங்களை அதிகார பீட ஏணிகளாக மாற்றியது அனைவரும் அறிந்த கதைதான். இப்போது கூட, அரசியலில் நுழைய இருக்கும் ஒரு நடிகருக்கு, தினமும் ஒரு “நற்பணி மன்றம்” ஏற்படுத்திக் கொண்டுருக்கும், அரசியல் கனவில் திளைக்கும் புத்திசாலி இளைஞர்களை உங்களைச் சுற்றிலும் பார்க்கலாம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற அரசியல் காஸ்ட்டியூமில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர்களை, மாலை முரசிலோ, மலரிலோ கட்டாயம் பார்த்திருக்கலாம். அப்போது புதுத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கிற்கு வெளியே முதல் நாளிரவே நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கும். கோவைப் பகுதியில் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவே இருந்தது. பாட்டுப் புத்தகங்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும். கைகளால் வரையப்பட்ட பேனர்களையும், கட் அவுட்களையும் ஓவியக்கூடத்திற்கே சென்று பார்த்து மகிழ்ந்தினர் ரசிகர்கள். நிரம்பி வழியும் தியேட்டரில் படம் பார்ப்பதே உற்சாக அனுபவம். அதுவும் தரை டிக்கெட் என்று அழைக்கப்பட்ட கீழ் வகுப்பில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கொடி கட்டிப் பறக்கும். முதலாளிகளே பிளாக்கில் டிக்ககெட் விற்கும் ஈனப்பிழைப்பும், டெலிபோன் புக்கிங் என்ற பெயரில் டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் கூட்டி விற்கும் கொள்ளையும் இருந்ததில்லை. சுத்தம் செய்யப்படாத கழிவறைகளும், காண்டீன் கொள்ளைகளும் உடைந்த நாற்காலிகளும், பழைய கார்பனில் மங்கலாக படம் காட்டும் தொழில் நுட்பமும் இருந்ததேயில்லை.

நல்ல, மற்றும் பிறமொழிப்படங்களை காட்டுவதற்காக சனி, ஞாயிறுகளில் காலைக்காட்சிகளும் இருந்தன. சில சமயம் குறைந்த கட்டண காட்சிகளும் இருந்தன. அப்போது தினசரி மூன்று காட்சிகள் தானே. சாந்தாராம், ராஜ்கபூர் படங்களையெல்லாம் இந்த காலைக்காட்சிகளில் தான் நிறைய ரசிகர்கள் பார்த்தனர். எழுபதுகளில் மாணவப் பருவத்தில் சத்யஜித்ராய் படங்களை காலைக்காட்சிகளில் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரிலும், கலைவாணர் அரங்கிலும் நிறைய பார்த்திருக்கிறேன்.

கோவை ஸ்ரீபதி தியேட்டரிலும் சில மாதங்கள் தினமும் இன்டர் ஷோ என்ற பெயரில் இரவு 8 மணிக்கு ஐரோப்பிய திரைப்படங்களை திரையிட்டு த்ரூபோ, ஃபாஸ்பைண்டர், ஜானுஸ்ஸி, போன்ற மேதைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

ஃபிலிம் சொசைட்டிகள் என்று அழைக்கப்பட்ட திரைப்படக் கழகங்களை நிறைய நகரங்களில் அறிவு ஜீவிகள் உருவாக்கி நல்ல திரைப்படங்களை சிறய குழுக்களுக்கு திரையிட்டு விவாதங்களையும் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாயினர். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் பரவலாக சினிமா ரசனையை உயர்த்திய இந்தக் குழுக்கள் பின்னர் தமிழகத்திலும் பரவினர். திரையரங்குகளில் திரையிட வசதியற்ற 16 எம் எம் படச்சுருளைக் கொண்டு தான் திரையிடல்கள் நடைபெறும். பெரும் பாலும் ஒரு சிறிய அறையிலோ, அரங்கிலோதான் இந்நிகழ்ச்சி நடைபெறும். காற்றோட்டமில்லாத அறைகள், அமர வசதியற்ற நாற்காலிகள், சப் டைட்டிலை மறைக்கும் முன்னால் அமர்த்திருக்கும் சக ஜீவிகளின் தலைகள், என்று இப்படியும் அரங்குகளை, தேடித் தேடி திரைப்படங்களை திரையிட்டனர். ஆனால் பொருளாதார ஆதரவற்றதனால் நிறைய கழகங்கள் காணமல் போயின. ஆனாலும் மறக்க இயலா அனுபவத்தையும் திரைப்பட...

To read more please click.. www.thamizhstudio.com


பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )


பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )


திருத்தரைப்பூண்டியை சேர்ந்த பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 க்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

ஐந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு படத்துக்கும் ஐயாயிரம் வீதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1. குறும்படங்கள் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆவணப்படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.

2. குறும்படங்கள் முப்பது (30) நிமிடத்திற்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.

3. குறும்படத்தின் இரண்டு சி.டி. க்களை அனுப்ப வேண்டும்.

4. போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டும்.

5. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009)

7. குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
லயன் உத்தமசோழன்
மாவட்டத் தலைவர் - கலை இலக்கியம்
525, சத்யா இல்லம், மடப்புரம் - 614715
திருத்தரைப்பூண்டி
தொலைபேசி: 04369 223292
அலைப்பேசி: 9443343292

(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதோனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)Sunday, September 6, 2009

ஈழம் தொடர்பான குறும்படங்கள் தேவை.பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் சிலர் ஒன்றாக இணைந்து Save-Tamils movement என்ற அமைப்பின் மூலமாக கடந்த 10 மாதங்களாக செயல்பட்டு வருகிறோம். ஈழப் பிரச்சனையை எங்கள் துறையை சார்ந்தவர்களிடமும் மற்றும் வெகுஜன மக்களிடமும் எடுத்து செல்ல சில நிகழ்வுகளை நடத்தி இருக்கிறோம். எங்களின் அடுத்த நிகழ்வாக “மனித உரிமை மீறல்கள்” என்ற தலைப்பில் ஒரு குறும்பட திரையிடல் நடை பெற இருக்கிறது. இதற்காக மனித உரிமை மீறல்கள் மற்றும் முக்கியமாக ஈழம் தொடர்பான குறும்படங்களை சேகரித்து வருகிறோம். உங்களில் யாராவது தங்களிடம் உள்ள ஈழம் சார்ந்த குறும்படங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம். கண்டிப்பாக எந்த ஒரு வியாபார நோக்கோடும் எங்கள் செயல்கள் இருக்காது என்று உறுதி அளிக்கின்றோம்.
நன்றி,

தொடர்புக்கு

சரவணகுமார்
43/6, பஜார் வீதி,
நெசபாக்கம், கே.கே நகர்.
சென்னை 600 078
செல் பேசி: (91) 98400 90898
மின்னஞ்சல்: savetamil@gmail.com

எங்களின் முந்தைய நிகழ்வுகள்
www.save-tamils.blogspot.com


Wednesday, September 2, 2009

தீபிகா சமூகத் தொடர்பு கல்வி மையம் நடத்தும் விழிப்புணர்வு விளம்பரப் படப் போட்டி (இறுதித் தேதி: 12-09-09 மாலை 5 மணிக்குள்.)சென்னையை சேர்ந்த தீபிகா சமூகத் தொடர்பு கல்வி மையம் நடத்தும் விழிப்புணர்வு விளம்பரப் படப் போட்டிக்கான விளம்பரப்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள்:

முதல் பரிசு: ரூபாய் 5000
இரண்டாம் பரிசு: ரூபாய் 3000
மூன்றாம் பரிசு: ரூபாய் 2000


போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் எத்தனை விளம்பரப் படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் போட்டிக்காக ஒன்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.

2. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.

3. விளம்பர கால அளவு 60 வினாடிகள் மட்டுமே (பெயர், மற்ற விபரங்கள் உட்பட).

4. சிறந்த மூன்று விளம்பரப் படங்களுக்கு மேற்கண்ட மூன்று பரிசுத் தொகையும், போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் தீபிகாவின் சான்றிதல்களும் வழங்கப்படும்.

4. போட்டியில் கலந்துக் கொண்ட சிறந்தப் படைப்புகளை 19-09-09 அன்று தீபிகா அரங்கில் திரைட்டு, படைப்பாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும். பரிசுத் தொகைகளும் அன்றே வழங்கப்படும்.

5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

6. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் திருப்பி அனுப்ப இயலாது.

7. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விளம்பரப் படங்களை சமூக நலன் கருதி, திரையரங்கு, தொலைகாட்சி ஆகியவற்றில் படைப்பாளியின் பெயர் மற்றும் விபரங்களுடன் ஒலிபரப்பு செய்ய முயற்சிகளின் மேற்கொள்ளப்படும்.

அனுப்ப வேண்டியவை:

1. படைப்பாளிகளின் பெயர் உள்ளிட்ட முழு விபரம், தொடர்பு முகவரி மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய DBICA முகவரிக்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.

2. படைப்புகளை DVD யாக அனுப்பி வைக்க வேண்டும்.

3. படைப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அதன் படைப்பாளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதி மொழிக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

4. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 12-09-09 மாலை 5 மணிக்குள்.

* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர் - தீபிகா
45, லேண்டன்ஸ் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை 600010
தொலைபேசி: ௦044 - 26423930 / 26651435

for more competition visit: www.thamizhstudio.comWednesday, August 12, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் சிறப்பு குறும்பட வட்டம் - சிவகாசி


நாள்: சனிக்கிழமை (15-08-09)
இடம் : ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

சிறப்பு விருந்தினர்:

எழுத்தாளர் திரு. முருகேசப் பாண்டியன், என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.

திரையிடப்படும் குறும்படங்கள்:

நானும் என் விக்கியும்
குண்டன்
கோத்தி
மேலும் சில உலகப் புகழ் பெற்ற குறும்படங்களும் திரையிடப்படும்.

திரையிடப்படும் உலகப்படம்.

ரஷோமான்

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


Monday, August 10, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.

கடந்த சனிக்கிழமை (08-08-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. விழா வழக்கம் போல் காலை பத்து மணிக்கே தொடங்கியது. இந்த மாதம் அரங்க நிர்வாகிகள் செய்த ஒரு சில தவறினால் காலை நிகழ்வில் உலகத் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

பிறகு ஒருவாறு நண்பகல் ஒரு மணியளவில் சரி செய்யப்பட்டு இருந்த குறுகிய இடைவெளியில்இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய, "தக்கையின் மீது நான்கு கண்கள்" குறும்படம் திரையிடப்பட்டது. இது ச. கந்தசாமி அவர்களின் சிறுகதையிலிருந்து உருவாக்கப்பட்ட குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் குறும்பட வட்டம் வழக்கம் போல் சரியாக மூன்று மணியளவில் தொடங்கக்கபட்டது. இந்த மாதம் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

முதல் பகுதி:

இலக்கியம் பகுதி நடைபெறாது என்று சென்ற மாதம் அறிவித்த போதிலும் பெரும்பாலான ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாதமும் இலக்கியம் பகுதி நடைபெற்றது. இதில்பேராசிரியர் திரு. பெரியார்தாசன் அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பொதுவாக இலக்கியம், திரைப்படங்கள் என தனது பேச்சை தொடங்கினார்.

அதில் இருந்து சில துளிகள்:

அது பச்சையப்பாக் கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். கேள்வி இதுதான். அசோக வனத்தில் சீதா நிலையை விளக்குக? (கேள்வி சரியாக நினைவில் இல்லை. தவறு இருப்பின் வாசகர்கள் மன்னிக்கவும்) இதற்கு அனைவரும் அமைதியாக தேர்வு எழுதிக் கொண்டிக்க ஒரு மாணவன் மட்டுமே அமைதியாக இருந்தான். நான் இருமுறை சென்று அவனிடம் எழுது தம்பி என்று கூறிவிட்டு

வந்தேன். அவன் அப்போதும் அமைதியாக இருந்தான். மூன்றாவது முறை நான் சென்று அவன் தாளை வாங்கிப் பார்த்தேன். அதில் எழுதி இருந்தான். வனத்தில் அனைத்து மலர்களும் சிரித்துக் கொண்டிருந்தன. ஒரு மலரை தவிர. என்று. அந்த மலர் சீதா. இதை எழுதியது இன்றையக் கவிப் பேரரசு வைரமுத்து. என்று முடித்தபோது அரங்கில் கரவொலி எழுந்தது.

அந்தக் காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே நல்ல கவிஞனாக வந்தான். ஆனால் இன்று தடுக்கி விழுபவன் எல்லோருமே கவிஞனாக இருக்கிறான் என்று பெருமைப் பொங்க சொன்னார்.

சேசாச்சலம் என்கிற தன்னுடைய இயற்பெயர் எப்படி பெரியார்தாசன் என்று மாறியது என்பதையும் சுவைபடக் கூறினார். மேலும் இந்தக் காலத்தில் ஒருத் துறையில் வளர்ந்த ஒருவன் மற்ற யாரையும் அந்த துறையில் வளர விடுவது இல்லை என்று வருத்தப்பட்டார். மேலும் பல உண்மைகளையும் போட்டு உடைத்தார். அது சார்ந்த நம் பலரும் இணையதளத்தை படிப்பதால் அதனைத் தவிர்த்து விடுவோம்.

தொடர்ந்து நகைச்சுவைத் தெறிக்க பேசிய பெரியார்தாசன் அவர்கள் அரங்கில் இருந்த அனைவரையும் மெய்மறக்க செய்தார். முடிவில் தன்னிலை மறந்து ஒரு சிலர் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. அரங்கில் இருந்த ஒருவர் சிரித்து சிரித்து, இறுதியில் சிரிக்க முடியாமல் அழுதே விட்டார்.

பின்னர் இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கப்பட்டது. இந்த மாதம் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை கோவையை சேர்ந்த உளவியல் பேராசிரியர் திரு. செல்வராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். தன்னுடைய வலைப்பதிவில் பல்வேறு விடயங்கள் குறித்து எழுதும் இவர் உளவியல் குறித்து எழுதிய ஒரு சிலக் கட்டுரைகள், மற்றும் புரட்சியாளர்கள் புத்தக அறிமுகம் யாவும்

படிக்க படிக்க திகட்டாதவை. விருதைப் பெற்றுக் கொண்ட செல்வராஜ் அவர்கள் சில நிமிடங்கள் தன்னுடைய வலைப்பதிவு குறித்தும், கட்டுரைகள் குறித்தும் பேசி சென்றார். இவர் வலைப்பூ முகவரி: gestaltselvaraj.blogspot.com/

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதிக்கு சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறை பேராசிரியர் திரு. அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நடிப்பு துறையில் பல நுணுக்கங்கள் பற்றி ஆர்வலர்களுக்கு விரிவாக சொல்லிக் கொடுத்தார். மேலும் திரைப்படங்களில் நடிப்பது குறித்தும், நடிகர்கள் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

அதில் இருந்து சில துளிகள்:

நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது.

வீதி நாடகம், மேடை நாடகம், தெருக்கூத்து என்று பல இருந்தது. இன்றும் அதன் நவீன வடிவமான சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என்று பலவித நடிப்புகள் வந்து விட்டன.

ஒவ்வொரு ஊடக நடிப்பும் வெவ்வோறு வகையில் வேறுபடும். உதாரணமாக மேடை நாடகத்தில் முதல் சில வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு நடிகரின் நடிப்பு சரியாக சென்றடையும். ஆனால் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவன் அதனை வேறுவிதமாக புரிந்துக் கொள்வான். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்பதை மேடையில் வசனமாக சொல்லும்போது முன் வரிசை ஆர்வலர்கள் சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். ஆனால் கடைசி வரிசை ரசிகனையும் சென்றடைய நடிப்பை வேறு விதமாக பயன்படுத்த வேண்டும். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று குரலை உயர்த்தி, உடல் மொழியால் நடித்துக் காட்ட வேண்டும்.

இந்தக் காலத்தில் ஒரு படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த நடிகர்தான் மனதில் நிற்பாறேத் தவிர, அந்தக் கதாப்பாத்திரம் நம் மனதில் நிற்காது. ஆனால் அதில் யார் நடிக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அது எண்ணக் கதாப்பாத்திரம் என்பதுதான் நம் மனதில் பதிய வேண்டும். அதனை யார் பதிய வைக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த நடிகர்கள். என்று நடிப்பு பற்றி தனது சுவையான பேச்சைத் தொடர்ந்தார்.

மேலும், சிவாஜி கணேசன் மிக சிறந்த நடிகர்தான். அவர் செய்வது ஓவர் ஆக்ட் என்று யாராவது சொன்னால் அது பொய். ஒரு நடிகனிடமிருந்து போதுமான நடிப்பை வாங்க வேண்டியது ஒரு இயக்குனரின் பொறுப்பே தவிர இவ்வளவுதான் நடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது ஒரு நடிகனின் வேலையல்ல. என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.

நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது.

நடிப்பு பற்றி ஒரு பயிற்சி வகுப்பையே நடத்திய அவர் இறுதியாக சில காட்சிகளை நடித்தும் காட்டினார். அதிலும் தன தாய் இறந்துக் கிடப்பதைக் கவனிக்காத ஒரு மகன் பின்னர் அதனைக் கவனிக்குபோது அவனுக்குள் ஏற்படும் உணர்வுகளை மிக தத்ரூபமாக நடித்துக் காட்டினார். மேடையில் அவர் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் அழ, அரங்கில் அமர்ந்திருந்த சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்களில் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு சிலர் எழுந்து சென்று வெளியில் அழுதே விட்டனர்.

பின்னர் வாசகர்கள் கேள்விகள் கேட்க அதற்கு அருணாச்சலம் விடையளித்தார். தொடர்ந்து பத்து மாதங்களாக நடைபெற்ற குறும்பட வட்டங்களில் ஆர்வலர்களை கேள்விகள் கேட்க சொன்னால், உங்கள் முதல் படம் எது? நீங்கள் ஏன் இந்து துறைக்கு வந்தீர்கள் என ஒரு நடிகையை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி எடுப்பது போல் கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து பத்து மாதங்களாக, தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளைக் கேளுங்கள், உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் உதவும் வகையில் கேள்விகளைக் கேளுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம். அதன் பலனை இந்த மாதம் அனுபவித்தோம். கேள்வி கேட்ட அனைவரும் கண்களில் ஒத்திக் கொள்வதுப் போல் கேள்விகள் கேட்டனர். மிக சிறந்த விவாத மேடையாக இந்த மாதம் அமைந்தது. நாங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சியை பல இடையூறுகளுக்கிடையில் நடத்துகிறோமோ, அதன் பலனை அனுபவித்தது போல் இருந்தது.

மூன்றாம் பகுதி

இந்த மாதம் குறும்படத் திரையிடல் பகுதிக்கு திரைப்படக் கல்லூரியில் இயக்கத் துறை தலைவராக இருக்கும் திரு. ரவிராஜ்அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நான் விளம்பர இயக்கம் பிரிவில் பட்டயப் படிப்பு படிக்கும்போது எனக்கு பேராசிரியராக இருந்தவர் திரு. ரவிராஜ் அவர்கள். எனவே அவர்கள் இந்த மாதம் எங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த மாதம் திரையிடல் பகுதியில் முதலாவதாக திரு. ராஜ்குமார் இயக்கிய "எனது நூலகத்தின் கதை" குறும்படமும் அடுத்ததாக திரு. ஸ்ரீராம் இயக்கிய "அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில்" குறும்படமும், மூன்றாவதாக திரு. சி.ஜெ. முத்துக்குமார் இயக்கிய "கோத்தி" குறும்படமும் திரையிடப்பட்டது.

இதில் எனது நூலகத்தின் கதை குறும்படம் நூல்கள் மேல் காதலாக இருக்கும் ஒருவனது உணர்வுகளை கவிதைகளாக படம் பிடித்திருக்கும் படம். அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் குறும்படம், நடத்திக் கேட்ட மனைவிக்கு கிடைக்கும் தண்டனையை கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்லி இருக்கும் படம். கோத்தி குறும்படம் அரவாணிகளின் துயரங்களை பதிவு செய்திருக்கும் படம்.

மூன்று படங்களின் நிறை குறைகள் பற்றி அதன் இயக்குனர்களுக்கு சுட்டிக்காட்டிய திரு. ரவிராஜ் அவர்கள், ஆர்வலர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மூன்றுக் குறும்பட இயக்குனர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த மாதம் பேராசிரியர்கள் மாதமாகவே அமைந்து விட்டது. மூன்று சிறப்பு விருந்தினர்கள், சிறந்த வலைப்பதிவர் பெற்ற திரு. செல்வராஜ் என அனைவரும் பேராசிரியர்களாகவே இந்த மாதம் அமைந்து விட்டனர்.

தொடர்ந்து பதினோரு மாதங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்ற குறும்பட வட்டம் அடுத்த மாதம் முறையாக தொடங்கப்படும். அதற்கான விழா அடுத்த மாதம் செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி காலையில் நடைபெறும். மாலை மூன்று மணியளவில் வழக்கம்போல் குறும்பட வட்டம் நடைபெறும்.

விருதுடன் ஸ்ரீராம்


விருதுடன் முத்துக்குமார்


Tuesday, August 4, 2009

CITIZEN KANE

உலகப்படங்கள் -CITIZEN KANE - ஓவியர் ஜீவா


"The motion- picture medium has an extraordinary range of expression. It has in common with the plastic arts the fact that it is a visual composition projected on a two- dimensional surface; with dance, that it can deal in the arrangement of movement; With theatre, it can create a dramatic intensity of events; With music, that it can compose in the rhythms and phrases of time and can be attended by song and instrument; With poetry that it can juxtapose images; With literature generally, that it can encompass in its sound track the abstractions available only to language."
- MAYA DERAN

இயக்குனர்களை நடிகர்களாகவும் பார்க்கும் வாய்ப்பு நமக்கு நிறைய கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஹிட்ச்காக் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரே ஒரு ஷாட்டில் தோன்றுவதை உத்தியாக கொண்டிருந்தார். ஒரு படத்தில் அவரை ரசிகர்கள் தேடிக்கொண்டேயிருந்தனர். ஒரு காட்சியில் ஒரு கசங்கிய காதிதத்தை காமிரா உற்று நோக்க, காணவில்லை விளம்பரத்தில் காட்சியளியப்பார் ஹிட்ச்காக். மேலைநாடுகளில் புகழ் பெற்ற நடிகர்கள் இயக்குனர்களாவதும், இயக்குனர்கள் நடிகர்களாவதும் சகஜமான நிகழ்வுகள். ஆர்சன் வெல்ஸ், ஜான் ஹஸ்டன், சார்லி சாப்ளின் போன்றவர்கள் தாங்களே இயக்கி நடித்தவர்கள். புரூஸ் லீ, ட்ரூபோ, ஜாக்கி சான், சிட்னி

லூமட், மார்ட்டின் ஸ்கார்சீஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். ஹாலிவுட் நடிகர்களில் நிறைய பேர் ஒரே ஒரு திரைப்படத்தையாவது இயக்குவதில் ஆர்வம் காட்டுவதுண்டு.

நமது நாட்டை பொருத்தவரை நிறைய இயக்குனர்கள் தங்கள் ஆரம்ப கால படங்களிலேயே நடிகர்களாகவும் அறிமுகமாகியுள்ளனர். ராஜ்கபூர், குருதத், ஹிமான்சு ராய், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், இவ்வகையினர். சில இயக்குனர்கள் காலத்தின் கட்டாயத்தில் அரிதாரம் பூசியதுண்டு. சாந்தாராம், கே.விஸ்வநாத், பாரதிராஜா, கிரீஷ் கர்நாடு போன்றவர்கள் இப்படி காமிராவுக்கு முன் வந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்களை” “சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் தங்கர் பச்சான் இயக்க முனைந்த போது, கதாநாயகனாக நடிக்கப்போது யார் என்று வினவினோம். இயக்குனர் சேரன் என்றார்.

ஆச்சரியப்பட்டோம். பின்னர் சேரன் “ஆட்டோகிராப்” போன்ற படங்களை இயக்கி நடித்து, பெரும் வெற்றியை பெற்று விட்டார். இனி அவர் வேறு நடிகர்களை வைத்து படங்களை இயக்குவாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி நம் முன் நிற்கிறது. இப்போது முழுநேர நடிகர்களாகவே மாறிப்போன சில இயக்குனர்கள் கோமாளிகளாகவும், வில்லன்களாகவும் தோன்றி திரைகளை நிரப்பி விடுகின்றனர். மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன், அனுமோகன், ராஜ்கபூர், மலையாள லால், கே. வாசு, சந்தானபாரதி, ஜி.எம்.குமார், மனோபாலா… முழுக்க இயக்குனர்களே நடித்து சமீபத்தில் வந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.

அடேயப்பா, இவர்கள் ஒரு காலத்தில் வெற்றிப்பட இயக்குனர்கள் என்பதை இவர்களே மறந்திருக்கக்கூடும். நடிகர்களாக இருந்தும் திரைப்படங்களை இயக்கும் வேட்கை கொண்டவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள். திரைப்படத்தின் தலைமைசிற்பி இயக்குனர்தான் என்று உணர்ந்தவர்கள். எம்.ஜி.இராமச்சந்திரன், தேவ் ஆனந்த், அமோல் பாலேகர், ராகுல் ராய், ஸ்ரீநிவாசன், கமல்ஹாசன், நாசர், ரேவதி, ஆமிர்கான்… இவர்களையெல்லாம் தூண்டியது இயக்குனர் என்ற மந்திரச்சொல்தான்.

ஒவ்வோரு இயக்குனரின் முதல் திரைப்படம்தான் அவரது சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. பிறகு வருவதெல்லாம் புகழ்போதையின் மிச்சங்கள் அல்லது அன்றாடக் கடமை என்று ஆவதுண்டு. சில விதிவிலக்குகள் எதற்கும் உண்டு. உலக திரைப்பட வரலாற்றில் மகத்தான முதல் அறிமுகப்படம் என்று பெயர் பெற்ற படைப்பு - “சிட்டிஸன் கேன்” சரியாக 63 வருடங்களுக்கு முன் “சிட்டிஸன் கேன்” வெளியானபோது, அதன் இயக்குனருக்கு வயது 26 தான் என்பதை நம்புவதே சிரமமாயிருக்கும்.

கதாநாயகனின் நீண்ட வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறது திரைப்படம். “ரோஸ்பட்”(ரோஜாமொட்டு) என்று தன் இறுதி வார்த்தையை உதிர்த்துவிட்டு உயிரை விடுகிறார் சார்லஸ் பாஸ்டர் கேன். இந்த இறுதி வார்த்தையின் அர்த்தம் தேடி ஒரு நிருபர், கதாநாயகனுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பேட்டி காண, பிளாஷ்பேக் வாயிலாக திரைக்கதை தொடர்கிறது. கேனுக்கு 8 வயதாகும்போது, போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அவனுடைய காப்பாளர் தாட்சர் ஒரு பந்தா பேர்வழி; அரசியல் பிரமுகரும் கூட. தன் இருபது வயதுகளில் கேன் ஒரு செய்தித்தாள் பதிப்பாளராக வாழ்க்கையை தொடங்குகிறார். தன் இரு சகாக்களுடன், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை காக்கவும், அதிகார பீடங்களின் ஊழல் திரையை கிழிக்கவும், தன்னை அர்ப்பணிக்கிறார். தன் பணியின் பொற்காலத்தில், அமெரிக்க அதிபன் உறவுக்காரப் பெண் எமிலி நார்ட்டனை மணம் புரிகிறார். காலம் மாற மாற, திருமண பந்தம் சுவாரசியம் இழந்து கசக்கிறது. நடுத்தர வயதில் கேன், சூசன் அலெக்சாண்டர் என்ற அழகான முட்டாள்த்தனமான, பாடகியாக விரும்பும் லட்சியம் கொண்ட பெண்ணை ஆசைநாயகியாக வரித்துக்கொள்கிறார்.

புகழின் வளர்ச்சி, கேனை நியூயார்க் கவர்னர் தேர்தலுக்கு போட்டியிடத்தூண்டுகிறது. போட்டி வேட்பாளர், கேனின் திருமணத் தோல்வி மற்றும் கள்ள உறவு விஷயங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க போட்டியில் இருந்து விலகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகிறான். தன் புகழ், திருமண வாழ்க்கை, மனைவி, மகன் உறவு அனைத்தும் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் சவாலை

எதிர்கொள்கிறார். தேர்தல் தோல்வியின் பலனாக, நண்பன் லேலண்டின் மரியாதையை இழக்கிறார். மணமுறிவு பெற்று, மனைவியோ மகனுடன் பிரிந்து செல்கிறாள்.

சூசன் புது மனைவியாகிறாள். திறமையற்ற அவளை ஒரு ஆபெரா பாடகியாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார் கேன். பாவம் இசையாசிரியர். படாத பாடு பட்டும் பலனில்லை. அவளுக்கும் விருப்பம் குறைந்துவிட, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அபிப்ராயமும் அவளுக்கு எதிராக திரும்ப, தற்கொலைப் பாதையின் நுனிக்கு சென்றுவிடுகிறாள் சூசன். கேன் தன் முயற்சிகளை கைவிட வேண்டி வருகிறது. மாறாக, ஜானாடு என்ற தனிமையான அரண்மனையை உருவாக்குகிறார். அங்கு சூசனுடன் தனிமைச்சூழலில் வாழ்வைத் தொடருகிறார். வருடங்கள் கடந்து, சோர்வுரும் சூசன் பொங்கியெழுந்து வெளியேறுகிறாள். தனிமை வாட்ட, புண்பட்டுக்கிடக்கும் முதியவர் கேன், ஜானாடுவின் வெற்றுப் பிரம்மாண்டத்தின் நடுவே இறந்து போகிறார். “ரோஜா மொட்டு” என்ற வார்த்தை கதை சொல்வதற்க்கான ஒரு உத்தி மட்டுமே என்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு.

உலகத்தின் தலைசிறந்த படங்களில் அதுவும் ஒன்று என்று எப்படி பெயர் பெற்றது? பொதுவாக இந்தத்தொடரில் இடம் பெறும் திரைப்பட வரிசை, எங்கும் காணக்கிடைக்காத ஈரான், ஆப்ரிக்க, ஆப்கானிய திரைப்படங்களின் தொகுப்பு அல்ல. குறுந்தகட்டில் சுலபமாக கிடைக்கப்பெரும் படங்களில் ஒன்றுதான் “சிட்டிஸன் கேன்” திரையில் காணும்போதுதன் இதன் மகத்துவம் புலப்படுகிறது. 21 வயதிலேயே “டைம்” இதழின் முகப்பில் இடம் பெற்ற ஆர்சன் வெல்ஸ் ஒரு பரபரப்பான ரேடியோ கலைஞர். பின்னர் பிராட்வே நாடக இயக்குனர். 26 வயதில் இத் திரைப்படம் வெளியானபோது அவரும் புதுமுகம், உடன் நடித்தவர்கள் அனைவருமே புதியவர்கள். ஒளிப்பதிவாளர் கிரெக் டோலண்ட் மட்டுமே அனுபவஸ்தர். ஆகவே இயக்குனரின் எண்ணம் முழுவதையுமே, அற்புதமாக அவரால் செலுலாய்டில் பதிவு செய்ய முடிந்தது. அப்போதைய சராசரி அமெரிக்க திரைப்படங்களை விட “கேன்” மிகவும் வித்தியாசப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இதில் பரிசோதிக்கப்பட்டிருந்த, ஆழ்ந்த போகஸ், இருளுடன் கூடிய ஒளியமைப்பு, செம்மையான பரப்புகள், வித்தியாசமான கட்டமைப்பு, பின்புலத்திற்கும் முன்புலத்திற்கும் இலக்கணம் மீறிய வித்தியாசங்கள், பின்புற பக்கவாட்டு ஒளியமைப்புகள், கேமிரா கோணத்திலும் தெரியக்கூடிய உட்கூறையமைப்புகள், சரிவான கோணங்கள், ஆழ்ந்த க்ளோஸ்-அப்கள் விரவி நிற்கும் காவிய நிகர் தூரக்காட்சிகள், வியக்க வைக்கும் க்ரேன் ஷாட்டுகள், எதுவும் திரைக்கு புதிதல்ல. ஆனால் இத்தனையையும் பயன்படுத்தி பல அடுக்குகள் கொண்ட கேக்கை அலங்கரிப்பதைப்போல் இத்திரைப்படத்தை உருவாக்கினர் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.

ஒரு இறுதி வார்த்தையின் புதிரை விடுவிப்பது போல, மலர்ந்து விரியும் திரைக்கதை ஒரு ஜிக் ஜாக் புதிர் போல் கலைந்தும் இணைந்தும் வருவதும், கதாநாயகன் லட்சியவாதியாயிருந்து பின்னர் சுயநலமும் முதலாளித்துவமும் பிடிவாதமும் கொண்டவனாக மாறி வருவதையும் ஒளிப்பதிவின் துணை கொண்டு வெற்றிகரமாக காட்சிப் படிமங்களாக்கினார் வெலஸ். ஒரு புதிரின் சாயலை படம் நெடுக கொண்டு வருவதில் எடிட்டர் ராபர்ட் வைஸ் பெரும் பங்கு கொண்டார். பின்னர் பெரும்புகழ் பெற்ற “சவுண்ட் ஆப் மியூசிக்” போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனராக இவர் திகழ்ந்தார். மாண்டேஜ் காட்சிகளாகவே தம்பதியின் பிணக்கம் அதிகரிப்பதை சொன்ன முறை, ஒரு சோற்றுப் பதம். திரைக்கதை அமைப்பில் ஒரு நபரைப் பற்றி பல்வேறு கதாபாத்திரங்கள் சொல்வது போல் அமையும் காட்சிகளில், துல்லியமான மேதைத்தனம் மிளிரும்.

பின்னர் “சைக்கோ”, “வெர்டிகோ” போன்ற திரைப்படங்களின் இசையை அளித்த பெர்னார்ட் ஹெர்தனுக்கும் இது முதல் படம். வெல்ஸின் காட்சியமைப்புக்கு ஈடு கொடுத்தது பிண்னணி இசை. செட் அமைப்புகளும் மிகவும் அற்புதமாக அமைந்து போயின. ஜானாடுவின் பிரம்மாண்டமான உள் அமைப்புகளின் முன் கதாபாத்திரங்கள் குறுகிச் சிறுத்தும்,

அவர்களிடையே அமைக்கப்பட்ட இடைவெளிகளும் கதைமாந்தர்களின் மனவெளியை சித்தரித்தன. பெரும்பாலான காட்சிகள் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உபயோகித்து இரு காட்சிகளின் கலவையாகவும், இருட்பகுதிகளை அதிகரித்தும், பார்வையாளனுக்கு பிரம்மாண்டத்தை அளித்தது.

இன்று நம் கண் முன்னே, நிறைய நடிகர்கள் எப்படி ஒப்பனையில் புதுமை புரிந்தார்கள், எப்படி கதாபாத்திரமாகவே மாறினார்கள் என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுப்பதை பார்க்கிறோம். ஆனால் 1941ல், 26 வயது ஆர்சன் வெல்ஸ், தானே இயக்கி, தானே நடித்த முதல் படத்திலேயே புரிந்த ஒப்பனைப் புரட்சியை பார்க்கவேண்டும். துள்ளலும் துடிப்புமான இளம் பதிப்பாளராகவும்,(கோட்டும் ஜாக்கட்டும் ஒரு சுமை போல அவிழ்த்தெறிந்து விட்டே நடப்பார், ஒடுவார்) பின்னர் வயது முதிர்ந்து, முகமெல்லாம் சுருக்கம் பாய்ந்து, தாடை வீங்கி, கண் இரப்பைகள் தொங்கி, மெதுநடை நடக்கும் கிழட்டு கோடீஸ்வரனாகவும் அவரைப் பார்க்கும்போது பிராட்வே சாயல் இல்லாத தூய சினிமா பாணி நடிப்பைக் காணலாம். பின்னர் “காட்பாதரில்” பிராண்டோவின் நடிப்பை காணும்போது வெல்ஸ் நினைவுக்கு வருவார் எனபதில் ஐயமில்லை. ஜோசப் காட்டன் போன்ற சக நடிகர்களும், நடிகைகளும் இது தங்கள் முதல் படம் என்ற சாயல் சிறிதும் தோன்றாமல் வெகு இயல்பான நடிப்பைத் தந்தார்கள்.

“சிட்டிஸன் கேன்” கதை, அப்போதைய பிரபல பத்திகை அதிபரான ஹார்ஸ்ட்டின் வாழ்க்கையைத் தழுவியது என்ற சர்ச்சை எழுந்தது.. நெகடிவை அழிக்க பெரும் பேரங்கள் நடத்தன. வெல்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், கட்டாய ராணுவப் பயிற்சியிலிருந்து நழுவிய கோழை என்றும் குற்றசாட்டுகள் எழுந்தன. திரையிட கடும் தடைகளை எதிரிகள் ஏற்படுத்தினர். ஒரு வழியாக திரைக்கு வந்தது. 1941ல் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு “நியூ யார்க் திரைப்பட விமர்சகர் விருது” வழங்கப்பட்டது. 9 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், பரிசளிப்பு விழாவின்போது ஒவ்வொரு முறையும் “சிட்டிஸன் கேன்” பெயர் உச்சரிக்கப்பட்டபோது கேலிக்கூச்சல்கள் எழுந்தன. ஆஸ்கர் அரசியலில் திரைக்கதைக்கென்று ஒரே ஒரு விருதுதான் இதற்கு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் கேன் ஒரு தோல்விப் படம்தான்.

ஆனாலும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குமிடையே நடைபெறும் அனைத்துலக திரைப்பட விமர்சகர் விருது ஒட்டெடுப்பில், உலகின் சிறந்த 10 படங்களில் முதல் இடத்தை இன்றும் பெற்று வருவது “சிட்டிசன் கேன்” தான். அதே போல் “திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த இயக்குனர்” ஒட்டெடுப்பில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் ஆர்சன் வெல்ஸ்தான்.

---------------------------------------------------------------------------------------------

Monday, August 3, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பதினோராவது குறும்பட வட்டம்.

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பதினோராவது குறும்பட வட்டம்.

நாள்: சனிக்கிழமை (08-08-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல் இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் "பாட்டில் ஷிப் ஆப் பொட்டம்கின்" (Battleship of Potomkin)" திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம் - வட்டார வழக்கு

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் பேராசிரியர் திரு. பெரியார்தாசன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். இலக்கியம் பற்றியும் வட்டார வழக்கு பற்றியும் மிக விரிவாக பேச உள்ளார்.

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சென்னைத் திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறைபேராசிரியர் திரு. அருணாச்சலம் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். நடிப்பு பற்றிய நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் நடிப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரையிடப்படும் குறும்படங்கள்:

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
எனது நூலகத்தின் கதைராஜ்குமார்29 நிமிடங்கள்
அதிர்ஷ்டம் 5 கி. மீ. ல்ஸ்ரீராம்12 நிமி.
கோத்திசி.ஜெ. முத்துக்குமார்30 நிமி.

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: இந்தப் பகுதிக்கு இந்த மாதம் சென்னைத் திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் இயக்கத் துறை தலைவராக இருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவமும் பெற்றவர்.

மடல் போட்டி:

மடல்கள் பெருமளவில் வராத காரணத்தினால் இந்த மாதம் சிறந்த மடலுக்கான பரிசு வழங்கும் பிரிவு நடைபெறாது. இதே நிலை நீடிக்குமானால் அடுத்த மாதம் முதல் மடல் எழுதும் போட்டி நிறுத்தப்படும்.

குறும்பட உதவி:

இந்தப் பகுதிக்கும் தேவையான கதைகள் போட்டிக்கு வராததால் இந்த மாதம் இலவச கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி பிரிவு நடைபெறாது.


6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

சந்தாத் தொகை முப்பது ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

Saturday, August 1, 2009

V.R.P Academy of Arts நடத்தும் திரைப்பட பயிலரங்கம்.


நாள்: 09-08-2009 முதல் 16-08-2009 வரை. (எட்டு நாட்கள்)
இடம்: சிவகாசி
கட்டணம்: 2500/- (உணவு, தங்குமிடம் உட்பட)
1800/- ( உணவு, இருப்பிடம் தவிர்த்து)

மாணவர்களுக்கு:

கட்டணம்: 1800/- (உணவு, தங்குமிடம் உட்பட)
1000/- ( உணவு, இருப்பிடம் தவிர்த்து)


இடம்: ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.

சிவகாசியை சேர்ந்த V.R.P Academy of Arts என்கிற திரைப்பட கல்வி நிறுவனம் நடத்தும் திரைப்பட பயிலரங்கம் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

கதை, திரைக்கதை அமைத்தல், இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து துறைகளும் மிக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படும். இறுதி நாளன்று மாணவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அவர்களே ஒரு குறும்படம் எடுத்து அதை முழுமையான படமாக மாற்றி திரையிட வேண்டும். இதில் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகளும், பரிசுப் பொருட்களும் உண்டு. மேலும்,

இதன் சிறப்பம்சங்கள்:

1. நாள்தோறும் சிறந்த எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் உரையுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

2. ஒவ்வொரு நாளும் இரவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அடுத்த நாள் காலை அதுபற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.

3. இதுமட்டுமின்றி இந்த எட்டு நாள் நிகழ்வில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்களும்ம திரைப்பட நடிகர்கள், தொலைகாட்சி நடிகர்கள் என பலவாறு துறை கலைஞர்களும் வந்து அவர்கள் சார்ந்த துறை பற்றி உரையாற்றுவார்கள். மேலும் அவர்களின் அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

4. தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) நடத்தும் குறும்பட வட்டமும் இந்நிகழ்வில் நடைபெறும்.

5. அனைத்து பங்கேற்பாளர்களும் உறுதியாக ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். அவர்களிடம் கேமரா இல்லையென்றால் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்துக் கொடுக்கப்படும். மேலும் கணிப்பொறி உள்ளிட்ட படத்தொகுப்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டு படத்தொகுப்பும் செய்து ஒரு முழுமையான படமாக கொண்டு வரவேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு பரிசுகள் உண்டு.

6. கதை, திரைக்கதை, வசனம் எழுதுதல், இயக்கம் உள்ளிட்ட துறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

7. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ், நினைவுக் கோப்பை, பரிசுப் பொருட்களும் வழங்கப்படும்.

8. சுவையான சைவ, அசைவ உணவுகள் நாள்தோறும் பரிமாறப்படும்.

9. தனியாக தங்குமிடம் வேண்டுபவர்களுக்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்துத் தரப்படும்.

10. பேருந்து, ரயில் டிக்கெட் போன்றவையும் தேவைப்படுபவர்களுக்கு எடுத்துத் தரப்படும். (இதற்கு தேவையான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்)

11. ஆண்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்திலேயே தங்குமிடம் தயார் செய்துக் கொடுக்கப்படும். பெண்களுக்கு வேறொரு இடத்தில் தனியாக தங்குமிடம் தயார் செய்துக் கொடுக்கப்படும்.

12. எட்டு நாட்களுக்கு கட்டணம்: 3,300/- (உணவு, தங்குமிடம் உட்பட)

13. பெண்களுடன் யாரேனும் துணைக்கு வந்தால் அவர்களுக்கும் அறை ஏற்பாடு செய்துத் தரப்படும். அதற்கான கட்டணம்: 1500/-

பணம் செலுத்தும் முறை:

V.R.P. Manohar என்கிற பெயரில் சிவகாசியில் மாற்றத்தக்க வகையில் D.D. எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரில் வந்தும் கட்டணம் செலுத்தலாம். காசோலை அனுமதிக்கப்படா.

முகவரி:

V.R.P. MANOHAR,
1503, GNANAGIRI ROAD,
KAMARAJAPURAM COLONY,
SIVAKASI - 626189.

பங்கேற்பாளர்கள் ICICI வங்கிக்கணக்கு வழியாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம். அல்லது ஏதேனும் ஒரு ICICI வங்கியில் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கு எண்ணில் பணம் செலுத்தலாம். ஆனால் இவர்கள் பயிற்சிக் கட்டணத்துடன், ருபாய் 165/- சேர்த்து செலுத்த வேண்டும்.

பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு எண்: A/c No.617201503422

பெயர்: V.R.P. MANOHAR,

* பங்கேற்பாளர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரவேண்டும்.

* பங்கேற்பாளர்கள் இதற்கு முன்னர் குறும்படங்கள், ஆவணப்படங்கள் எடுத்திருந்தால் அதனையும் தங்களுடன் கொண்டு வரலாம். அக்குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விவாதங்கள் நடத்தப்படும்.

பங்கேற்கும் திரை உலக பிரபலங்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்,
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி,
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.

இயக்குனர் கே. ரங்கராஜ் (உதய கீதம்),
இயக்குனர் அனந்த நாராயணன் (வால்மீகி)
இயக்குனர் கௌரி மனோகர் (தென்றல் வரும் தெரு),
வி.ஆர்.பி. மனோகர் (குறும்பட இயக்குனர்)

கே. குணா (வசனகர்த்தா - மௌனம் சம்மதம், ஏர்போர்ட்)
பழனியப்பன், தம்பு - ஒளிப்பதிவாளர்கள்
பூபதி - நிகழ்ச்சி தலைமை (எஸ்.எஸ். மியூசிக்)
ராஜம் - நிர்வாக இயக்குனர் (மீடியா பிளானெட் - Next Generation Cinema, Chennai)

சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள், விருதுகள் உட்பட ரூபாய் 500 மதிப்புள்ள பரிசுப் பொருளும் வழங்கப்படும்.


* மேலும் விபரங்களுக்கு: 99524 24292


Thursday, July 23, 2009

Samsara - துறவைத் துறந்தவன்


ஓவியர் ஜீவா


“Marriage has many pains, but celibacy has no pleasures”
-Samuel Johnson

திபெத்தியர்கள் அதிகம் பேர் நீலகிரியில் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். கம்பளி ஸ்வெட்டர் போன்றவை விற்பது இவர்களது தொழில். சமீபத்தில் இந்திய சீன எல்லை நிர்ணய குழு ஊட்டி வந்தபோது, அவர்களுக்கு எதிர்ப்பு தெவித்து இவர்கள் கடையடைப்பு கூட நடத்தினர். திபெத்தில் சீன ஆக்ரமிப்பை எதிர்த்து எப்போதும் இவர்கள் குரல் கொடுப்பவர்கள். திபெத் பின்னணியில் ஏதாவது திரைப்படம் காணக்கிடைக்குமா என்ற தேடலில் கிடைத்தது 'சம்சாரா' என்ற திரைப்படம். பான் நளின் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட நளின்குமார் பாண்டியா என்ற குஜராத்தி இளைஞனின் முதல் முழுநீள திரைப்படம் 'சம்சாரா'.திபெத்/லடாக்கி மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்தது.

உலக அளவில் புதிதாக அறிமுகமான இயக்குனர்களில் சிறந்த 30 பேரில் இவரும் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

லாமாக்களின் பூமியான திபெத்தில் வாழும் புத்த பிட்சுக்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புதிய அத்தியாயம் 'சம்சாரா'. கழுகு ஒன்று தரையிலிருந்து ஒரு கல்லை கவ்விச்சென்று வானிலிருந்து கீழே ஒரு ஆட்டு மந்தையின் மீது நழுவ விடுகிறது. கபாலத்தை கல் தாக்க, உயிரற்று விழுகிறது ஆடு. அவ்வழியே கடந்து செல்லும் பிட்சுக்கள் குழு ஒன்று இறந்த ஆட்டை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்துவிட்டு, பாழடைந்து நிற்கும் குகைக் கோவிலை நோக்கிச் செல்கிறது. மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் என்று அன்ன ஆகாரமின்றி கடுந்தவத்தில் இருக்கும் தஷியை, மடாலயத்திற்கு திரும்ப அழைத்து வரத்தான் செல்கிறது இந்தக்குழு. கடுந்தவத்தால் உறைந்து போயிருக்கிறான் தஷி. நீண்ட தாடி, அழுக்கடைந்து வற்றிப்போன உடல், வளைந்த நகங்கள், மூடிய கண்கள் என காலங்களை கடந்த தவத்தால் இறுகிக்கிடந்தவனை வெளியே எடுத்துச்சென்று நதியில் நீராட்டி, சவரம் செய்து அழைத்துச்செல்கின்றனர். வழியில் ஒரு கோவில் சுவர்கள் மீது அடுக்கப்பட்டிருக்கும் கற்கள் மீது சில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று இவனை கவர்கிறது – 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?' குதிரை சேணத்தின் மீது பலவீனமாக சுருண்டு கிடக்கிறான் தஷி. நடமாடவே சில காலம் பிடிக்கிறது. மெல்ல இயல்பு, அதாவது புத்த பிட்சுக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறான் இளந்துறவி. குழந்தைப்பருவத்திலேயே இவனைப்போல லாமா ஆக வந்தவர்கள்தான் அவனை சுற்றியுள்ள அனைவரும். ஆரோக்கியம் திரும்பியவுடன் தூங்கிக்கொண்டிருக்கும் இவனை பார்க்கும் மற்றொரு சக லாமாவுக்கு போர்வைக்குள் கூடாரம் கட்டியிருக்கும் இவனது இளமைக்குறி வடிவம் புலப்படுகிறது. பிறிதொருநாள் ஸ்கலிதம் வெளியேறி ஈரமான போர்வையை காண்கிறான். புத்த பிட்சுக்களின் முகமூடியணிந்த குழு நடனம் ஒரு நாள் பொதுமக்களின் முன்பு நடக்கிறது. குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒரு தாயின் திறந்த மார்பகம், ஆடிக்கொண்டிருக்கும் தஷியின் சிந்தையை குலைத்து விடுகிறது.

ஒரு முறை ஒரு கிராமத்திற்கு அனைவரும் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தின் அறுவடை காலத்தை ஆசீர்வதிக்க இந்தப்பயணம். அங்குதான் விளக்கு வெளிச்சத்தில் ஒரு விபத்தைப் போல் அருகாமையில் பேமாவின் எழில் மிகுந்த முகத்தை காண நேர்கிறது. இரவில் அமைதியின்றி புரண்டு படுத்துக்கொண்டிருக்கும் அவனை அவள் மெல்ல ஆதுரத்துடன்

தடவிக்கொடுக்கிறாள். இது நிஜமா கனவா என்று அறியாமலே தூங்கிப்போகிறான் தஷி. இவனது இளமைக்குழப்பங்கள் மடாலயத்தின் மூத்த பிட்சுவின் கவனத்தை கவர்கிறது. ஒரு தூரப்பயணத்திற்கு அவனை அனுப்புகிறார். செல்ல நாய் காலா பின் தொடர, குதிரையின் மீது ஒரு அற்புதப்பயணம். அவன் சந்திக்கச் சென்றது ஒரு பழுத்த பழமான லாமாவை. குகையில் தனியாக வாழும் அவர், அவனுக்கு சில கோட்டோவியங்களை காண்பதற்கு கொடுக்கிறார். அத்தனையும் ஆண் பெண் சம்போகத்தையும் அதன் பல நிலைகளையும் குறிக்கும் காட்சிகள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு பிரத்யேக கோணத்தில் காணும்போது, அந்தச் சித்திரங்களில் தனியான உத்தியை கொண்டு வரையப்பட்ட வேறு கோடுகளும் தெரிகின்றன. அவை உருவங்களின் எலும்புக்கூடுகளையும் எக்ஸ்ரே போல காட்டுகின்றன. எல்லாமே காயமே இது பொய்யடா தத்துவங்களை சுட்டிக்காட்டுகின்றன. திரும்பி வருகிறான் தஷி. பல குழப்பங்கள் அவனை வாட்டுகின்றன. இது என்ன வகையான துறவறம்? 29 வருடங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத்தான் துறவுக்கோலம் பூண்டான் சித்தார்த்தன். 5வயதிலிருந்தே தனக்கு ஏன் இந்த வாழ்க்கை முறை? என்ன இருக்கிறது துறப்பதற்கு? ஒரு நாள் வெளியேறுகிறான் தஷி. தன் துறவி ஆடைகளை துறந்து விட்டு சாதாரண ஆடைகளை அணிந்து கொண்டு பேமாவின் கிராமத்திற்கே செல்கிறான். இளம் லாமாவாக அவனை ஏற்கனவே பார்த்தவர்கள் திகைத்துப்போகின்றனர். பேமா இவனை புரிந்து கொள்கிறாள். ஊருக்கு வெளியே அவனை சந்திக்கிறாள். துறவியாய் இருந்தவன் ஆண்மகனாகிறான். உடல்கலவியில் வெட்டவெளியில் திளைக்கிறார்கள் இருவரும். அவளுக்கு எற்கனவே ஜமாயங்குடன் நிச்சயம் நடந்திருக்கிறது. முறைப்பையன் விட்டுக்கொடுத்துவிட தஷி பேமாவை மணக்கிறான்..

துறவியாய் இருந்தவனுக்கு புது வாழ்வு. காமத்தில் திளைக்கிறார்கள் தம்பதியினர். மகனும் பிறக்கிறான் கர்மா என்று அழகான பெயர் வைக்கிறார்கள். விவசாயத்தில் தஷிக்கு ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இடைத்தரகு வியாபாரியின் மோசடியை மற்றவர்களுக்கு உணர்த்தி, தன் அறுவடையை லாரி பிடித்து நகரத்திற்கு சென்று நல்ல விலைக்கு விற்கிறான். வியாபாரியின் பகையையும் சம்பாதிக்கிறான்.

மெல்ல மெல்ல தஷி சாதாரண மனிதனாக மாறுகிறான். பேராசையும் நகர்ப்புற மோகமும் தலை தூக்குகிறது. அடுத்த அறுவடையின்போது சேகரிக்கப்பட்ட பயிரும் தானியங்களும் ஒரு இரவு பற்றி எரிகின்றன. வியாபாரி தவாவை சந்தேகித்து, நேராக குதிரை மீதமர்ந்து நகரத்துக்கு சென்று அவனுடன் மோதுகிறான். உதை பட்டு திரும்புகிறான். மீதியான தானியங்களை பேமாவே நகரத்திற்கு எடுத்துச்செல்கிறாள். அறுவடை காலங்களில் வேலைக்கு வந்து போகும் சுஜாதா மீதும் இவனது காமப்பார்வை படர்கிறது. யாருமற்ற தனிமையில் அவளுடன் புது வகை காமப் பயிற்சியில் ஈடுபட நேர்கிறது.

ஒரு முறை இவனது பழைய மடாலயத்தோழன், இவனைத் தேடி வருகிறான். அவன் சென்ற பிறகு, இவனுக்கு லௌகீக வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது. மனம் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடுகிறது. வீட்டை விட்டு வெளியேறுகிறான். பாதிப்பயணத்தில் வாசகங்கள் அடங்கிய கற்கள் பதித்த சுவர்களை உடைய கோவிலின் அருகே பேமா குறுக்கிடுகிறாள்.

'யசோதராவைத் தெரியுமா உனக்கு' என்று கேட்கிறாள் கணவனிடம். சித்தார்த்தன் மகன் ராகுலையும் அவளையும் விட்டு விட்டு போனபின் அவள் நிலைமை என்ன, மனநிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்விகளை கேட்டு விட்டு அகலுகிறாள். தள்ளாடி நிற்கும் தஷி பழைய கல்லை புரட்டிப் பார்க்கிறான். கேள்விக்கு விடை அங்கு இருக்கிறது-

'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!'

சம்சாரா துறவறம், இல்லறம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக தானே துறவறம் மேற்கொள்ளாமல் குழந்தைப்பருவத்திலேயே மடங்களில் விடப்படும் குழந்தைகளின் நிலையை பற்றிய கேள்விகள். படத்தின் ஆரம்பத்தில் தஷியின் மடாலயத்தில் வளரும் ஒரு குழந்தைத்துறவியை காண்கிறோம். எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது, இது மட்டும் அங்குமிங்கும் ஓடியாடுவதும், அடிக்கடி வீட்டுக்கு போகவேண்டும் என்று அழுவதும், இது என்ன வகை துறவறம் என்று தவிப்பு ஏற்படுகிறது. ஒரு திரைப்படம் என்ற முறையில் இது ஒரு அழகான படைப்பு. பான் நளினின் முதல் படைப்பு என்று நம்ப இயலாத நிலை. மிகவும் குறைந்த வசனங்கள். படம் நெடுக மௌனமே பெரும்பாலும் மொழியாக இயங்குகிறது. நடிகர்களின் முக பாவங்களும், கண்களுமே நிறைய விஷயங்களை சொல்கின்றன, காமத்தின் முத்திரைகளையும் சேர்த்து. ஒளிப்பதிவு இந்தப்படத்தின் இன்னொரு பெரும் சிறப்பு. திபெத்தின் பனிமலை சார்ந்த அழகு படம் முழுவதும் ததும்பி நிற்கிறது. கருநீல வானமும் வெண்பனி படர்ந்த மலைகளும் ஒன்றுக்கொன்று எதிரான பிம்பங்களை தருவது கூடுதல் அழகு. இதமான வெயிலின் தாக்கத்தில் பரந்து நிற்கும் வெட்டவெளிகளும், குன்றுகளின் மீது படர்ந்து நிற்கும் மடாலயங்களும் பின்னணியில் பரவி நிற்கும் மௌனமும் அற்புத அனுபவம்.Tuesday, July 21, 2009

ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )ஆகஸ்ட் மாத மடல் போட்டி. (கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009. )

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.

முதல் மாத மடல் போட்டி இனிதே நடந்து முடிந்தது. அடுத்து ஆகஸ்ட் மாத மடல் போட்டி நடைபெற உள்ளது. எனவே இதிலும் ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், முதல் மாதம் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு சிலக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

அவை:

* மடல் எழுதுவதற்கு தலைப்பை நீங்களே தெரிவு செய்துக் கொள்ளலாம்.
* பக்க கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம்.
* மடல்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஆகஸ்ட் 2, 2009.

மற்ற அணைத்து நிபந்தனைகளும் எல்லா மாதங்களுக்கும் பொருந்தும். மடல் அனுப்பும் முன்னர் அறிவிப்பு பகுதியில் உள்ள எல்லா நிபந்தனைகளையும் படித்து பார்க்கவும்.

மடலை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம். தாய், தந்தை, சகோதரன், சகோதரி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்கள், என யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் மடல் எழுதலாம். சமூதாயப் பிரச்சனை, உணர்வுகள் சார்ந்த பிரச்சனை என்று எந்தத் தலைப்பிலும் நீங்கள் மடல் எழுதலாம்.


மேலும்:http://thamizhstudio.com/ezhuthungal_madal.htm


Thursday, July 9, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.நாள்: சனிக்கிழமை (11-07-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் 'லு சுவான்' இயக்கிய "மௌன்டைன் பெடரோல் (Mountain Patrol)" திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் "இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்" என்கிறத் தலைப்பில் இலக்கியம் குறித்தான தனது விரிவான பார்வையை பதிவு செய்வார். இதில் மக்கள் நல் வாழ்வு வாழ இலக்கியம் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

இவரைப் பற்றி:

தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்ற எழுத்தாளரான திரு. பிரபஞ்சன் இதுவரை ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: "வானம் வசப்படும், மானுடம் வெல்லும், எனக்குள் இருப்பவள், ஜீவநதி, பொன்முடிப்பு, நேற்று மனிதர்கள், இன்பக்கேணி, காகித மனிதர்கள், வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்".

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. லெனின்பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். படத்தொகுப்பு நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் படத்தொகுப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவரைப் பற்றி:

தமிழில் புகழ்பெற்ற படத்தொகுப்பாளரான இவர் "ஊருக்கு நூறு பேர்" என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இவரும், வி.டி. விஜயனும் சேர்ந்து பணிபுரிந்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிப் படங்கள்தான். தமிழில் பல முக்கியப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த திரு. லெனின் அவர்கள்தான் தமிழ் குறும்பட உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரையிடப்படும் குறும்படங்கள்:

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
நிலமெல்லாம் இரத்தமமனோகர்24 நிமிடங்கள்
விபத்துசங்கர் நாராயணன்15 நிமி. / 30 நொடிகள்
குண்டன்முரளி13 நிமி. / 10 நொடிகள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. அனந்த நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவரைப் பற்றி:

இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அண்மையில் வெளிவந்திருக்கும்"வால்மீகி" திரைப்படத்தின் இயக்குனர்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

மேலும் இந்த வாரம் முதல் இரண்டுப் புதிய பகுதிகள் குறும்பட வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

குறும்படங்களுக்கான உதவி:

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அதற்கு ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து தரும் என்கிற அறிவிப்பு ஏற்கனவே தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ஆகிய அறிவிப்புகளும் இடம் பெற உள்ளன.

மடல் போட்டி:

மடல் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தால் அறிவிக்கப்பட்ட மடல் போட்டியில் பரிசு வென்ற மடல் மற்றும் போட்டியாளர் ஆகியோரும் அறிவிக்கப்படுவர்.


6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

இந்த மாதம் சந்தாத் தொகை முப்பது ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

Friday, July 3, 2009

நர்சிம் மற்றும் முரளிக் கண்ணனுக்கு ஒரு தன்னிலை விளக்கம்.(நண்பர் நர்சிம்முக்கு பின்னூட்டமிட விரும்பினேன். ஆனால் அதிகமான வார்த்தைகள் சேர்ந்துவிட்டால் பின்னூட்டத்தில் இணைக்க வில்லை. அதனை இங்கே கொடுத்துள்ளோம்)

நன்றி நர்சிம்... ஆனால் நாங்கள் இதுப் போன்ற பதிவுகளை எதிர்பார்த்து நாங்கள் விருது கொடுப்பது இல்லை. நண்பர் முரளிக் கண்ணன் சொன்னது போல் எங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவோ, காப்பாற்றிக் கொள்ளவோ நாங்கள் இது போன்ற விருதுகள் கொடுப்பதில்லை.. நண்பர் முரளிக் கண்ணன் ஒரு முறையாவது தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் பார்த்து இருப்பாரா என்பது எனக்கு தெரியாது.


எங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள நாங்க ஒன்றும் மிட்டாய்க் கடை வியாபாரிகள் இல்லை. குறும்படத் துறைக்கு ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், இலக்கியம் என்றாலே ஒரு சிலருக்குத்தான் சொந்தம் என்று இருக்கும் நிலையை மாற்றி இலக்கியம் பற்றி கிராமத்து மக்களும், சேரி வாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துக் கொண்டு நல் வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், இன்னும் பல.. (இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் முரளிக் கண்ணன்) நோக்கத்திற்காகவும் தான் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கப்பட்டது.


அதற்கான பணிகளை செய்வதில்தான் நாங்க முழு ஆர்வம் காட்டி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த நாங்கள் ஒன்றும் இனைய வியாபாரி அல்ல. இதுவரை நாங்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தேவை இருப்பவர்கள் எங்கள் இணையதளத்தை தானாகவே நாடி வரட்டும் என்றுதான் விட்டுவிட்டோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.


பதிவர்களுக்கு இதுவரை யாரும் இது போன்ற விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டப் பின்னர் தான் இந்த பதிவர் விருதை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். காரணம் புதிதாய் எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தானே தவிர எங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள அல்ல. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. .. தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு இலாப நோக்கம் அற்ற இணையத்தளம். பிறகு ஏன் நாங்கள் எங்கள் தளத்தை காப்பாற்றிக் கொள்ள பதிவர்களை நாட வேண்டும். ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்றுதான் இந்த விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கினோம்.


ஆனால் அதற்கு பதிவர்களில் ஒரு சிலர் கொடுத்த வரவேற்பு எங்களை புளங்காகிதம் அடைய செய்து விட்டது. நாங்கள் இன்னும் பரவலாக அறியப்படாதவர்கள் தான். ஆனால் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் யாவும் இதுவரை யாரும் மேற்கொள்ளாதவை. எங்களின் முழு நேரப் பணி இது அல்ல. நர்சிம் போன்று வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இந்த சமூதாயத்திற்கு எங்களால் முடிந்த நல்லதை செய்யவே விரும்புகிறோம். எனவே இது போன்ற வார்த்தைகளை உதிர்க்கும் முன்னர் யாரைப் பற்றிக் கூறுகிறீர்களோ அவர்களை பற்றி முழுதும் தெரிந்துக் கொள்ளுங்கள். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.


நர்சிம் விருதை வாங்கி கொள்ள வராத சூழல் பற்றி நான் நன்கறிவேன். அதில் பிழை ஏதும் இல்லை. எல்லோருக்கும் இது போன்ற சூழல்கள் ஏற்படுவது உண்டு. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்து இருபது நாட்கள் கழித்தும் நர்சிம் ஒரு கூட முறை என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. சாதரணமாக ஒரு நண்பனைப் போல் பேசி இருக்கலாமே. காரணம் இந்த நிகழ்ச்சியை நாங்கள் மிகுந்த நட்டத்திற்கு இடையில் தான் நடத்தி வருகிறோம். மேலும் ஒவ்வொரும் மாதமும் அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விசயங்களில் எங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது போன்ற பொறுப்பான தொலைப்பேசி அழைப்பு மருந்தாக அமையும். அதைத்தான் நண்பர் தண்டோரா விடம் சொல்லிக்கொண்டிருந்தோம். அவர் அந்த நிலைக் கண்டு உங்களிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் நர்சிமுக்கும், தண்டோராவுகும் நடந்த உரையாடல்க பற்றி நான் முழுதும் அறியிலேன்.


நாங்கள் வளர்ந்து வரும் அமைப்பை சார்ந்தவர்கள். எனவே எல்லோரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம். தவிர்த்து இதுப் போன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. தயவு செய்து இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்துக் கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தண்டோராவோ, அல்லது வேறு பதிவரோ, அல்லது நானோ நர்சிம்மை காயப் படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


செடியாய் இருக்கும் நாங்கள் மரமாய் வளர யாரும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஆனால் வெந்நீர் ஊற்றி எங்களை காயப்படுத்தாதீர்கள். நண்பர் முரளிக் கண்ணன் பதிவர் விருது கொடுக்கும் வழிமுறை பற்றி தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளத்தில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் எங்களை சார்ந்த பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்து விவாதம் செய்யாதீர்கள். என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள். நாங்கள் சர்ச்சைகளை விருபுவதில்லை. அனைவரின் புரிதலுக்கும் நன்றி.


(குறிப்பு: விருதுக்கான பதிவரை தெரிவு செய்வது முழுக்க முழுக்க தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகம் மட்டுமே. (நிர்வாகம் என்பது நான் மற்றும் நண்பன் குணா) எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எங்களை தொடர்பு கொண்டு பேசுங்கள். தவிர்த்து நீங்களாகவே உங்களுக்குள் பேசிக் கொள்ளாதீர்கள்.)


Tuesday, June 30, 2009

கேளுங்கள் கொடுக்கப்படும்.

தமிழ் ஸ்டுடியோ.காமில் முதலில் வெளிவந்துக் கொண்டிருந்த வினா விடை பகுதி சற்றே பொலிவூட்டப்பட்டு "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்கிற பகுதியாக வெளிவருகிறது. உங்களுக்கு இலக்கியம் மற்றும் குறும்படம் சார்ந்து ஏற்படும் அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் அந்த அந்தத் துறை சார்ந்த வல்லுனர்கள் பதிலளிப்பார்கள். தமிழில் முதல் நாவல் எது? தமிழில் முதல் குறும்படம் எது? அதிகமாக மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட தமிழ் நூல் எது? போன்ற எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

கேமரா எங்கே குறைந்த விலையில் கிடைக்கும்? எந்த ஸ்டுடியோவில் குறைந்த செலவில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலை செய்து தருவார்கள்? குறும்படத்திற்கு தேவையான இசைக்கோர்ப்பு பணியை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் யார் செய்து தருவார்கள் என்பது போன்ற உங்கள் எல்லா ஐயங்களுக்கும் அந்த அந்த துறை சார்ந்த வல்லுனர்கள் விடையளிப்பார்கள். தொழில்நுட்ப ரீதியாகவும் நீங்கள் கேள்வி கேட்கலாம். எந்த இடத்தில் ஜூம் இன் ஷாட் பயன்படுத்த வேண்டும்? எந்த இடத்தில் பான் ஷாட் பயன்படுத்த வேண்டும்? திரைக்கதை எழுதும்போது முக்கியமாக எதை கருத்தில் கொள்ள வேண்டும்? என்பது போன்ற உங்கள் ஐயங்கள் எதுவாக இருப்பினும் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

உங்கள் சந்தேகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

thamizhstudio@gmail.com

அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலும் உங்கள் ஐயங்களை கேட்கலாம். ஆனால் அதற்கான விடை தமிழ் ஸ்டுடியோ. காம் தளத்தில்தான் வெளியிடப்படும்.

9840698236, 9894422268


Monday, June 22, 2009

மடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.

(மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.)

"உள்ளங்கைக்குள் உலகம்" என்று சுருங்கிப்போன இவ்வுலகில் மனித உறவுகளின் மாண்பு அழிந்துப் போவது இயல்பே. மனிதன் தன உணர்வுகளை இழந்து நடைப்பிணமாக, சதைப் பிண்டமாகத் திரியும் இந்த அவசர உலகில் யாருக்கும் சக உறவு மீதோ, சக மனிதன் மீதோ பற்றுகள் இருப்பதில்லை.

நமது உணர்வு வெளிப்பாட்டின் மற்றொரு பரிமாணமாக இருந்த மடல் (கடிதம்) எழுதும் (கடிதம் என்பது வடமொழி சொல். மடல் என்பதே நல்லத தமிழ் சொல். எனவே வாசகர்கள் இனி மடல் என்கிற சொல்லை பயன்படுத்துங்கள்.) முறையை நாம் இன்று தொலைத்துவிட்டோம். அல்லது தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் அஞ்சலகங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு போட்டியாக தனியார் நிறுவங்களும் அஞ்சல் சேவையில் (சேவை???) ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்று வரும் கடிதங்கள் எதை தாங்கி வருகின்றன என்பதே நம் மனதில் எழும் வினா. (கேள்வி என்பதும் பதில் என்பதும் கூட வடமொழி சொல். எனவே வினா, விடை என்றே பயன்படுத்துங்கள். முடிந்தால்) ஒரு காலத்தில் மனித உறவுகளின் மாண்புகளை சுமந்து வந்த மடல்கள் இன்று அலுவலகப் பணி, வங்கிப்பணி, தொலைப்பேசிக் கட்டணம், விவாகரத்து பிரச்சனைகள், கடன் அட்டை விபரங்கள் போன்ற பிரச்சனைகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே தாங்கி வருகின்றன.

ஒருகாலத்தில் கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு வந்து படிக்கும் தன் மகனுக்கு யாரோ ஒருவர் மூலம் அவள் தாய், தன்னுடைய ஏக்கங்களையும், பாசத்தையும், மகனைப் பற்றியக் கவலைகளையும் வார்த்தைகளாக மாற்றி மடலாக எழுதி அனுப்புவாள். இன்று அந்த வாய்ப்பு எத்துனை தாய்மார்களுக்கு கிடைக்கிறது. அல்லது யார் அதை விரும்புகிறார்கள்.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்களால் வெறும் உணர்வுகளை பரிமாற்றம் செய்ய இயலாது. அவை வார்த்தைகளை ஒலியாக மாற்றி அனுப்பும் பணியை மட்டுமே மேற்கொள்கின்றன. மடல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏதோ ஒருவித மவுனம் இருக்கும். ஆனால் இன்றைய அலைப்பேசிகளில் வெறும் இரைச்சல் மட்டுமே இருக்கும். வார்த்தைகளின் அழகே சில இடங்களில் அது மவுனமாக இருப்பதுதான்.

மடல் எழுதுவது என்பதே ஒரு சுகம். முதல் முறையாக மடல் எழுதும்போது உறவுகளை எப்படி விளிக்க வேண்டும், பெரியோர்களையும், மற்றவர்களையும் எவ்வாறு அழைக்க வேண்டும் என்கிறத் தடுமாற்றம் இருக்கும். "மதிப்பிற்குரிய அம்மா" என்று எழுதிவிட்டு பின்னர், அதை அடித்துவிட்டு, அன்பிற்குரிய அம்மாவிற்கு" என்று எழுதிய நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

மடல் எழுதும்போது அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்காது. இந்த அடித்தாலும், திருத்தலும்தான், அந்த மடலுக்கே அழகு. நம்மை சார்ந்தவர்கள் மீதும், மனித உறவுகள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பின், ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த அடித்தாலும் திருத்தலும்தான்.

வாட்டி வதைக்கும் தனிமையை போக்கும் அருமருந்து இந்த மடல்கள். எங்கோ ஒரு மூலையில் பணிபுரியும் தன் மகன் ஒரு நாள் எழுதும் மடலுக்காக அந்த மாதம் முழுதும் தனிமையை ஏற்றுக் கிடக்கும் அந்தத் தாய்க்கு அவன் எழுதும் ஒரு மடல்தான் மிகச் சிறந்த நிவாரணி.

மடல்களின் சிறப்பை தமிழின் சங்கக் கால இலக்கியங்களும் மிக சிறப்பாக வலியுறுத்தி இருக்கின்றன. "நாரை விடுத் தூது", "பனை விடுத் தூது", "புறா விடுத் தூது" என மடல் இலக்கியங்கள் தமிழில் அதிகம்.

இதோ இறுதியாக அழிந்துக் கொண்டிருக்கும் மடல் எழுதும் முறையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக தமிழ் ஸ்டுடியோ.காம் மேற்கொள்ளும் முதல் முயற்சி. "மடல் எழுதுங்கள்...பரிசை வெல்லுங்கள்".

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.

பரிசுகள்:

* முதல் சிறந்த மடலுக்கு 500 ருபாய் பரிசு.

* முதல் மூன்று சிறந்த மடல்களை எழுதியவர்களுக்கு தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேநீர் சந்திப்பில் கலந்துரையாடும் வாய்ப்பு.


நிபந்தனைகள்:

1. மடல்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதத் தலைப்பு:ஏமாத்திட்டீங்களே தாத்தா!

2. தாளில் எழுதி அனுப்புவோர் எட்டுப் பக்கங்களுக்கு (A4 தாளில்) மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். மடல்கள் தாளில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். (மின்னஞ்சல் போன்ற கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடாது. உங்கள் கையெழுத்தால் மட்டுமே எழுத்தின் அனுப்ப வேண்டும்).

3. ஒருவரே எத்தனை மடல்கள் வேண்டுமானாலும் எழுத்தின் அனுப்பலாம்.

4. ஒவ்வொரு மாதம் ஐந்து சிறந்த மடல்கள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்வில் அந்த ஐந்து மடல்களையும் அதனை எழுதியவரே படித்துக் காட்ட வேண்டும். இதன் அடிப்படையில் முதல் சிறந்த மூன்று மடல்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் சிறந்த முதல் மடலுக்கு ஐந்நூறு ருபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். மற்ற இரண்டு மடல்கள் எழுதிய இருவர் மற்றும் முதல் பரிசு பெற்ற மடல் எழுதியவர் ஆகிய மூவரும் சிறப்பு தேநீர் சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

5. ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மடல்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். அதற்கான இசைவையும் மடல் எழுதுபவர்கள் இணைத்தே அனுப்ப வேண்டும்.

6. போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவருக்கும் குறும்பட வட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்படும். அங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மடல்களும் அறிவிக்கப்படும். பின்னர் படிக்க வைத்து மூன்று மடல்களும் தேர்ந்தெடுக்கப்படும். எனவே போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவரும் குறும்பட வட்டத்தில் பங்கு பெற்றே ஆக வேண்டும். குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்.

7. போட்டியில் பங்குபெற நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.

8. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

9. வெளியூர், வெளிநாடு ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் சார்பில் யாராவது ஒருவர் உறுதியாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும்.

10. மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.

மடல்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:

M. அருண்
349, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை 600 096.

மேலும் உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236, 9894422268