Friday, January 23, 2009

வினா விடை - 1

1.) குறும்படங்களுக்கு எதிர்காலம் உண்டா? (மகேஷ், சென்னை)

உறுதியாக. இன்று எப்படி நெடுந்தொடர்கள் தொலைக்காட்சியை ஆக்கிரமித்து உள்ளனவோ அதுபோல் ஒருநாள் குறும்படங்கள் தொலைக்காட்சியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். அதற்கான முதல் விதை நடப்போவது யார் என்று மட்டும் பொறுத்திருந்து பார்போம்.


2.) சத்ய ஜித் ரே தன்னுடைய எந்தத் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கினார்? (கண்ணன், சென்னை)
சத்ய ஜித் ரே வின் ஒட்டுமொத்த கலைச் சேவையையும் பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அவருடைய எந்த திரைப்படத்திற்கும் குறிப்பாக வழங்கப்படவில்லை.


3.) இளையராஜா எத்தனை முறை தேசிய விருது வாங்கியுள்ளார்? (மீனா, சேலம்)

இளையராஜா இதுவரை மொத்தம் மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார். அதுவும் தமிழில் ஒரே ஒரு படத்திற்க்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மாற்ற இரண்டும் தெலுங்கு படங்களாகும். தமிழில் விருதுப் பெற்றுத் தந்தப் படம் "சிந்து பைரவி". இசைஞானிக்கு விருது முக்கியமல்ல, இளையராஜாவின் இசை அற்புதம் பற்றி சில குறிப்புகள் படியுங்கள்:

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்... என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது. என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா. ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம். உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள். இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.

மேலும் படிக்க:

Thursday, January 22, 2009

இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச் சொல்வான். அவனது இந்த திகைப்பூட்டும் இந்த உலகம் அவனது நண்பர்களாலும், அவர்களின் உதவியாலும்,கொஞ்சம் புத்தகங்களாலும் நிரம்பியிருக்கிறது. சென்னையின் நடைபாதை வாசி. வானத்தைக் கூரையாகக் கொண்டு நட்சத்திரங்களின் வண்ணங்களை ரசித்தபடி இரவுகளைக் கரைப்பவன்.

உலகின் அழகான விசயங்களை ஆராதிக்கவேண்டும் எல்லாவற்றையும் தன் கமராக்கண்களால் புகைப்படத்தின் சட்டகங்களிற்கள் இறுக்கிவிடவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அவனுக்கு இதுவரை வாய்த்தேயிராதது காதல். காதல் மட்டுமே. பெண்களை அறியாத அழகின் ஆராதகன். இது வரைக்கும் அவன் யாரையும் காதலிக்கவும் இல்லை காதலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால் உள்ளுக்குள்ளே யாராலாவது தான் காதலிக்கப்பட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டும் இருக்கிறான்.

வெளியூர் போகிற நண்பனின் அலுவலக அறையைப் பார்த்துக்கொள்கிற வேலை இந்த வேலைகளை வெறுப்பவனுக்கு வருகிறது. இந்த நடைபாதை வாசிக்கு கொஞ்சநாளைக்கு மின்விசிறியின் கீழ் தூங்க ஒரும் இடம் கிடைக்கிறது. தலைக்கு மேல் ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழ் அவன் மறுபடி மறுபடி கடைசி நான்கு பக்கங்களும்
இல்லாத ஓரே புத்தகத்தை வாசித்துக்கிடக்கிறான். அவனையும் அவன் படுத்துக்கொண்டிருக்கும் மேசையையும் கதிரையையும் தவிர ஒரு தொலைபேசி கிடக்கிறது வெறுமனே. படம் தொடங்குகையில் அது ஒரு ஆர்ப்பாட்டமில்லாத குழந்தையைப்போல் தூங்கிக்கிடக்கும்.இப்போது தொலைபேசியினால் அந்த ஊமை அறையின் அமைதி குலைகிறது. ஒரு அழைப்பு அது அங்கே வந்திருக்க வேண்டிய அழைப்பே அல்ல.
பிறகு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு மறுபடியும் அழைக்கிறது. இப்போது எதிர்முனையில் ஒருத்தி. எதிர்க்குரல் யாராயிருக்கிறது என்பது குறித்த கவலைகளற்று உரையாடும் ஒருத்தி. ஆக அவள் இப்போது அழைத்திருப்பது வெறுமனே எதிர்முனையில் ஒரு குரலுக்காகத்தான். இப்படித்தான் நகரத்தின் அநேக அநாமதேய அழைப்புக்கள் நிகழ்கின்றன. யாரெனத் தெரியாத ஒருமுகத்துடன் ரகசியங்கள் திறக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
எங்களை நன்கறிந்தவர்களிடத்தில் மாய்ந்து மாய்ந்து எங்கள் வழமையான இயல்புகளை ஒழித்துக்கொண்டே அலைகிற நாங்கள் யாரேனும் நமக்கு அறிமுகமில்லா மனிதர்களெதிரில் எம் சுயம் திறக்க தயங்குவதேயில்லை. அது தான் இங்கேயும் நடக்கிறது எதிர்முனையில் குரல்தவிர்த்து வேறதுவும் அறியா அவளும் இவனும் பேசத்தொடங்குகின்றனர் விதவிதமான தொலைபேசி உரையாடல்கள் அவர்களை பிணைத்துக்கொண்டேயிருக்கிறது. அவள் அழகாககச் சிரிப்பதாக அவன் ஒரு நாள் அவளிடம் சொல்கிறாள். அவளோ அப்படி என்னிடம் சொல்லாதே என்கிறாள். இவன் அப்படி மனசில் பட்டதை சொல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்கிறான். அவள் தனக்கு நீ இப்படி எனக்கு விருப்பமில்லாததை பேசுகிற போது மனசுக்கு வருத்தமாயிருக்கிறது என்கிறாள்.
அவனோ யாருடைய மனசும் வருந்துவதைப்பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு கிடையாது என்னால் மனசில் பட்டதைச்சொல்லாமல் இருக்கமுடியாது என்கிறான் தீர்மானமாக. இப்போது அவள் அவனது இந்த முரண்நிலையை ரசிக்கதொடங்குகிறாள். எதிர்முனை பெண்ணாயிருத்தலே போதுமென்றிருக்கிற ஆண்களிடத்தில் இவன் வித்தியாசமானவன்தான் என்று சொல்கிறாள் அவள். அவன் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்குமென்றும் தன்னிடம் ஒரு கமரா இல்லையென்றும் இவளிடம் சொல்கிறான். தன்னிடம் பணம் வருகிறபோது தான் ஒரு மினோல்ட்டா கமரா வாங்க வேண்டும் என்கிற ஆசையையும் சொல்கிறான்.அவனும் மின்விசிறியும் இதர பொருட்களாலும் ஆன அந்த அறை. இப்போது அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது.
எப்போதாவது இவன் வெளியே அலைந்துவிட்டு திரும்புகையில் தொலைபேசி குழந்தையைப்போல் வீரிட்டுக்கொண்டேயிருக்கிறது. இவன் நமட்டுச்சிரிப்புடன் மேலும் மேலும் அதனை அழவிட்டு பிறகு தூக்குவான். அந்த அழைப்பு அவளுடையதுதான் என்பதை அவன் அறிவான். அது ஒரு வகையான ஊடல். அவளது குரலில் கொஞ்சம் கோபிக்கமுடியாத பதட்டம் இருக்கும். இப்போது அவன் ஏதாவது சாட்டுச்சொல்லுவான், அவளது அழைப்புகளுக்காக தான் காத்திருக்கவில்லை என்பது போன்ற பாவனையில் பேசுவான். அதற்கு அடுத்த நாள் தொலைபேசி அழைக்காது. அந்த அறை வெறுமையால் நிரம்பும்.
அவன் தாங்க முடியாமல் பொறுமையின்றி இருக்கையில் நெளிவான். அவளது அழைப்புகளிற்குப்பதிலாக சிகரட் புகையினால் அந்த அறையை நிரப்புவான். கடைசி சிகரட்டின் நுனி புகைந்து கொண்டிருக்கையில் தனது மௌனத்தை கலைக்கிறது தொலைபேசி இவன் வேட்டையைத்தாக்கும் மிருகம்போலப் பாய்ந்து எடுக்கிறான் தொலைபேசியை.அவள்தான் காத்திருப்பின் வெறுமையும், தான் ஒருத்தியின் அழைப்புக்காக ஏங்குகிறோமே என்கிற அவனது வெட்கமும் கோபமாக மாற அவளிடம் சீறுவான். "என்னால் உனக்காக காத்திருக்க முடியாது. அது மிகவும் தொந்தரவாகவும் என்னைச் சிதைப்பதாகவும் இருக்கிறது" என்கிறான் அவன். அவள் தான் இனிமேல் தினமும் அழைப்பதாகச் சமாதானம் சொல்லுவாள்.பிறிதொரு அழைப்பில் அவள் தான் ஒரு பாடல் பாடட்டுமா என்று இவனிடம் கேட்கிறாள்.
சம்மதிக்க பாடுகிறாள்… இவன் அந்தப்பாடலில் கரைந்து போகிறான். இவனுக்குள் உறங்கிக்கிடந்த ஏக்கங்கள் இவனைப்பிசையத்தொடங்குகின்றன. இவன் தாளமாட்டாமல் அழைப்பைத் துண்டித்து விடுகிறான். பிறகொரு அழைப்பில் இவனே மறுபடியும் அந்தப்பாடலைப்பாடச்சொல்லி கரைந்து அழுவான். ஒரு குழந்தையைப்போலவும், அவனது துயரங்களையெல்லாம் கண்ணீராய் அந்தப்பாடல் கரைப்பதைப்போலவும் அவன் அழுவான் அவளிடம் பேசமுடியாமல் தான் பிறகு பேசுவதாக இணைப்பைத்துண்டிப்பான்.இவன் இப்போது ஒரு புதிய உலகத்துக்குள் தன்னை இழந்து விட்டவன்.
விட்டேத்தியாய் பற்றுகள் எதுவும் அற்று அலைந்து கொண்டிருக்கிற ஒருவன் இப்போது அவளது அழைப்புகளைப் பற்றிக்கொண்டுவிட்டான். அவற்றை நேசிக்கவும் செய்கிறான். அவளது அழைப்புகள் இல்லாத நாட்கள் இருக்கும் என்பதை அவன் இப்போது ஏற்கவும் சகித்துக்கொள்ளவும் மாட்டான். அந்த நண்பனின் இரவல் அறையில் அவனது கனவுலகம் மின்விசிறியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறது. வெளியூருக்கு போன நண்பன் மறுபடியும் நான்கு நாட்களில் வந்து விடுவதாக இவனிடம் சொல்கிறான்.
இவனுக்குள் இருக்கிற கனவுலகம் விரிசல் காண்பதை இவன் உணர்கிறான். அந்த உலகம் இரவல், அதன் நிரந்தரமின்மை இப்போது அவனுக்கு உறுத்துகிறது. அவனது இந்த ராஜாங்கத்தில் குரலால் மட்டுமே அவளைக்கொண்டுள்ளான் அவன். அவளது குரல் தவிர்ந்த வேறெதையும் அவன் அறியான். அவள் "ஏன் என் பெயரைக் கேட்க மாட்டீர்களா" என்றதற்கு "உனது குரல்தான் உன் பெயர்" என்கிறான். இப்போது அந்த குரல் ராஜாங்கம் மூழ்கப்போவதை அவன் அறிகிறான். இந்த இரவல் ராஜாங்கத்தின் காலம் முடிவடைந்து கொண்டிருப்பதை அவன் அவளிடம் சொல்கிறான். அவளோ உங்களின் இந்த ராஜாங்கம் முடிகிற அன்றைக்கு எனது தொலைபேசி இலக்கத்தை தருவேன் என்கிறாள்.
இவனோ இன்னும் ஒரு படிமேலே போய் நான் உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்கிறான். அவள் சம்மதிக்கிறாள். அவன் தன்னைப்பார்க்கிறபோது தான் அவனுக்கு ஒரு மினோல்டா கமராவைப்பரிசளிப்பதாக கூறுகிறாள். அவனுக்குள் அவனது ராஜாங்கம் காப்பாற்றப்படும் என்பதான நம்பிக்கைகள் வருகிறது. அப்போது அவள் தான் இரண்டு நாட்கள் அழைக்கமாட்டேன் குடும்பத்தோடு வெளியூர் போகிறேன் என்கிறாள். அவன் மௌனிக்கிறான், அந்த அறையும் மௌனிக்கிறது. அவளது அழைப்புகளில்லாத இரண்டு நாட்களின் மௌனத்தை அவனால் ஒருபோதும் தாங்கிக்கொள்ளமுடியாது. அவன் அறையின் சூன்யம் முகத்திலறைய அவளது குரலுக்கும் அழைப்புக்கும் ஏங்கி உழல்கிறான்.தொலைபேசி அழைக்கவேயில்லை ஒரு சவத்தைப்போல, கொடும்பிராணியைப்போல அவனது துயரங்களை விழுங்கிக்கொண்டு ஆனந்தித்துக்கிடக்கிறது. அவன் மனசு அவளது அழைப்புகளைப் பிரார்த்தித்துக் கிடக்கிறது. மனசு முழுவதையும் அவளது அழைப்புக்களின் சங்கீதம் நிறைக்கிறது. அவன் அந்த அழைப்புக்களின் போதையில் மூழ்கிவிடவிரும்புகிறான். அவளது அழைப்புகளற்ற இந்த சூன்யத்தில் இருந்து தப்பிஓடிவிட முயற்சித்து முயற்சித்து இறுதியில் இயலாதவனாய் இயக்கமற்று அவளது அழைப்புகளைத் தவிர வேறnதையும் அறியாதவனாய் ஏங்கிக்கிடந்தான்.
மனசுக்குள் அவளது அழைப்புக்களின் மணி இப்போது கர்ணகடுரமாய் கொடும்இம்சையயாய் காலத்தின் கெக்கட்டமாய் ஒலிக்கத்தொடங்குகிறது. அவன் அந்த நினைவுகளைப் புறந்தள்ளப்பார்க்கிறான். மனம் அந்தப்புள்ளியில் அவனை அறைந்து இம்சிக்கிறது. தொலைபேசியின் அழைப்பின் ஒலி அவனது மனசை உலுக்கி இம்சித்து இம்சித்து உடலெங்கும் வியாபித்து உடலெங்கும் துயரத்தை நிரப்புகிறது. மனசே உடலாக அவன் தாங்கவொண்ணாமல் புரள்கிறான். அந்த அழைப்புகளின் இம்சை ஒலியினின்றும் தப்பிக்கும் முயற்சிகளில் தோற்று உருக்குலைந்து போகிறான். அந்த அறையின் தொலைபேசி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தது. எதையும் அவனுக்குச்சொல்லும் வழிகளெதுவும் அதனிடம் இருக்கவில்லை. அவன் தளர்ந்தான். இயலாமல் எழுந்து தீர்ந்து போய்விட்டிருக்கும் நீர்க்குவளையில் இருந்து துளிநீரைப்பருகுகிறான். இப்போது அவன் போரில் தோற்றுப்போன ஒரு ராஜாவைப் போலாகிவிட்டான்.இப்போது மேஜைத்தொலைபேசி தன் மௌனத்தை உடைக்கிறது. அது அவள்தான். ஆனால் ஏற்கனவே குற்றுயிராய்க் கிடக்கும் அந்த அறையை உயிர்ப்பிக்க அவளது அந்த அழைப்பால் முடியவில்லை. எங்கோ குரல்களற்றவெளியில் பதுங்கிக்கொண்டு விட்ட பாடலைப்போல ஆகிவிட்டன அந்த அறையின் ஓசைகள். அவளது அழைப்பால் எதனையும் உயிர்ப்பூட்டமுடியவில்லை. அவன் அழைப்பை எடுக்கிறான் அவள் பதட்டமாய் ஏன் குரல் ஒரு மாதிரியாய் இருக்கிறது என்கிறாள் அவன் துயரச்சிரிப்பொன்றை உதிர்க்கிறான் ஏனெனில் குரல்தான் அவன் அதுதான்; அவனது உயிர். அவன் தனது ராஜாங்கம் முடிவடைந்து விட்டதாக அவளிடம் சொல்கிறான் தேய்ந்து உடைகிறது குரல். அவள் தனது தொலைபேசி இலக்கத்தை குறித்துக்கொள்சசொல்கிறாள். அவனது குரல் செத்துவிட்டது. அவளது குரல் தொலைபேசி இலக்கங்களை வெறுமனே காற்றில் இறைத்தது. அவன் தொலைபேசியை வைக்கிறான் உடல் மேசையில் சரிகிறது… அவனது குரல்ராஜாங்கம் முடிகிறது. அறை அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. வெளியேறிவிட்ட எதையோ நிரப்பும் முயற்சியாய்…….
02.இது வெறுமனே தொலைபேசிக்கலாச்சாரத்தைப்பற்றிய படம் கிடையாது. இங்கே தொலைபேசி ஒருபாத்திரம். அது ஒரு நாகரீக நகர்சார்ந்த வளர்ச்சியின் அடையாளம். நகரம் எப்படி தனியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உறவுகளின் பிணைப்புகளினின்றும் உதிர்ந்த ஒருவனை விழுங்கிக்கொண்டு நகரம் அவனிடம் எவற்றை நிரப்புகிறது. நகரில் அலைந்து கொண்டிருக்கும் நபர்களிடத்தில். ஏழ்மையின் துயர்விழுங்க அலையும் இளைஞர்களைப் பற்றி நிச்சயமாய் இந்தப்படம் பேசுகிறது. இதன் கதாநாயகன் நிச்சயமாய் ஒரு விதிவிலக்கல்ல என்று எனக்கு தோன்றியது. வெறுமை அறையும் தனியறையில் கடத்திய எனது நாட்களை நான் அவனது நாட்களோடு பிரதியீடு செய்து கொள்ள முடிகிறது. அவன் வேலைகளெதையும் செய்யவிரும்பவில்லை என்பதும் சமூகத்தின் மீதான கோபமே. வாழ்வின் இல்லாமைகள் அழுத்தும் வாழக்கையை நகரத்தில் எதிர்கொள்கிற ஒருவன். எல்லாவற்றையும் புறக்கணிக்கிறான். காதல், கோபம் ,வேலை இப்படி தனது இயல்பின் கைகளை முறித்து அதனைவீசியெறிந்து நடக்கிறான். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிற நகரத்தின் அல்லது சமூகத்திடமிருந்து இவன் எதிர்பார்ப்பதையே புறக்கணிக்கிறான். அவனது உலகமும் கனவுகளால் ஆனது அவை தூங்கிக்கிடக்கும் கனவுகள் ஒரு வறட்டுத்தனத்தில் நேசத்துக்காககவும் கவனிப்பிற்காகவும் ஏங்குகிற ஒரு தனியனின் கனவுகள். அப்படி அலைகிற ஒரு தனியனின் சிறுகனவின் வலிசொல்கிறது இராஜாங்கத்தின் முடிவு என்கிற இந்தக்குறும்படம்.எப்போதும் மனித மனம் அன்புசெய்யப்படுவதற்காக காத்திருக்கிறது. யாரையும் நேசிக்காத அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கிற மனிதனின் ஆழ்மனசில் யாரலாவது தான் நேசிக்கப்படமாட்டோமா! என்கிற நினைப்பு சதா உருண்டுகொண்டேயிருக்கிறது. ரவியும் அப்படிப்பட்ட ஒருவன்தான். இந்த நகரங்களில் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஒருபிம்பம் ரவி. தனிமை ஒருவனை செதுக்குகிறது. யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத துயரங்களை மனசுக்கள் இறுக்கியபடியே இருக்கிறது. துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரமில்லாததாய் ஆகிவிட்டிருக்கிறது வாழ்க்கை.ரவிக்குத்தெரியும் இந்த உலகம் துயரங்களால் நிரம்பியதென்று. அது ஏதிலிகளிற்கு எதையும் தருவதுமில்லை அவர்களை ஏற்றுக்கொள்வதமில்லை.
அவன் போட்டுக்கொண்டிருப்பது வேசம். எதனையும் புறக்கணிக்கிறவேசம். சாதிக்கவேண்டும் என்று எல்லாவற்றின் மீதும் இருக்கிற ஆசையை புறக்கணிப்பு என்கிற போர்வையால் போர்த்திக்கொண்டிருக்கிற வேசம். எதனைப்பற்றியும் எனக்கு கவலைகள் கிடையாதெனச்சொல்வது தப்பிக்கும் அவனது வழிகளில் ஒன்று. உண்மையில் ரவி பற்றிக்கொள்ள எதையாவது தேடுகிறான் அவன் மனம்விரும்பியபடி ஆனால் கிடைப்பதென்னவோ வெறுமைதான். எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைந்ததுதான் அவனது வாழ்க்கையும் எல்லாரையும் போலவே நமக்குள்ளும் நிறையரவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரச்சூழலில் தனித்துவசிக்கிற மனங்களின் கண்ணாடி அருள்எழிலன் இயக்கிஇருக்கிற இந்தப்படம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தமிகச்சிறந்த உருது மொழி கலைஞன் சதத் ஹசன் மண்டோவின் சிறுகதையை தழுவிஎடுக்கப்பட்டிருக்கிறது.தனது கனவுகளை அடையும் வழிகள் ஏற்கனவே இந்த நியாயமற்ற மனசற்ற சமூகத்தின் கரங்களால் அறைந்து சாத்தப்பட்டிருபதை தாங்கமுடியாமல் உங்ளுக்குள் புழுங்கிக்கிடக்கிற ஒருவனது வலிமிகஅற்புதமாக வெளிப்படுகிறது. அந்த புழுக்கம்தான் அவனது புறக்கணிப்பு. அவன் தனக்கு ஒரு காதலிகிடைத்தால் தனதுவாழ்க்கையே மாறிவிடும் என்கிறான்.இந்த சமூகத்தின் எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு ஐக்கியமாகிவிட அவன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் காதலைக்கூட அவளிடம் தான் சொல்ல மாட்டேன் அவளாகவே வந்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுக்கு பயம் தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் ஏற்பட்ட பயம். மேலும் மேலும் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளை சம்பாதித்து விட அவனுக்கு விருப்பம் கிடையாது அதனால் அவன் எதையும் நெருங்குவதுமில்லை. எல்லாவற்றினின்றும் ஒதுங்கியிருக்கிறாள். இப்படித்தான் நிறையப்பேர் துவண்டு போயிருக்கிறார்கள். நகரத்தின் அன்பற்ற பெரும்சிக்கி தூக்கிஎறியப்பட்டவனின் மனோநிலை இது. புறவாழ்வு சுயங்களைச்சாப்பிட்டுவிட வெறும் கூடாகிய நிலை. அப்படிப்பட்ட பாத்திரம் தான் ரவி அவனுக்கு பற்றிக்கொள்ள கிடைக்கிற ஒரு வாய்ப்பில் அவன் உடைந்து போய்விடுகிறான் அவன் ஏங்கியது அவனுக்கு கிடைக்கிறபோது அவன் அதை இறுகப்பற்றிக்கொள்கிற மனோநிலைக்கு வருகிறான். சிறு பரிவும் அவனை உருக்குலைத்து சிதைத்து அவனைத் தின்றுவிடுகிறது. இது ரவிக்கு மட்டுமல்ல நிறையப்பேருக்கு நிகழ்கிறது. அன்றாடம் புறவிழிகளுக்கு புலப்படாத நிறைய ரவிகளின் ராஜாங்கம் முடிவடைந்துகொண்டேயிருக்கிறது.
குறைந்த வசனங்களாலும். அளவான நடிப்பாலும் (ஒருசில இடங்களைத்தவிர) இந்த குறும்படத்தை நடித்து இயக்கி செதுக்கியிருக்கிறார் இயக்குனர் டி.அருள்எழிலன். ஒரு பத்ததிரிகையாளரான அருள்எழிலன் ஒரு தேர்ந்த இயக்குனராகவும் நடிகராகவும் நிச்சயமாக ஒரு அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார். சுயவாழ்வின் கண்ணாடியாய் நம்பிம்பங்கள் தெரியும் தமிழின் சிறந்த குறும்படங்களில் ஒன்று, அருள்எழிலன் இயக்கிய இராஜாங்கத்தின் முடிவு.

இயக்குனர் பற்றி அடிப்படையில் ஒரு பத்திரிகைக்காரரான இக்குறும்படத்தின் இயக்குனர் அருள்எழிலன். ஆனந்தவிகடன் வார இதழில் பணியாற்றுகிறார். அவர் தனது படைப்பு குறித்து இப்படிச்சொல்கிறார். "ம‌னித‌னின் பிற‌ப்பிற்கு எவ்வித‌ கார‌ண‌ங்க‌ளும் எப்ப‌டி இல்லையோ அப்ப‌டித்தான் ம‌ர‌ண‌மும் அதுவும் கார‌ண‌ங்க‌ள‌ற்ற‌து. நக‌ர‌ம் எப்போதும் இசைக்கும் மாய‌ப்புல்லாங்குழ‌லின் இசையில் க‌ன‌வுக்கும் வாழ்வுக்கும் இடையில் ந‌ட‌க்கும் போராட்ட‌ம‌ல்ல‌ அனுப‌வ‌மே இந்த‌ ப‌டைப்பு..
எழுதியவர்
த.அகிலன்

Wednesday, January 21, 2009

பெர்லின் விழாவின் போட்டி பிரிவில் பங்கேற்கும் முதல் தமிழ் படம்

குறும்படங்களின் அடுத்தக் கட்டமாக ஒரு தமிழ்ப் படம் முதன் முதலாக பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரு. பிரதீபன் அவர்கள் இயக்கி, திரு. ராஜ்குமார் அவர்கள் ஒளிப்பதிவு செய்த "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" எனும் குறும்படம் இப்பெருமையை பெறுகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை அதன் வீரியம் குறையாமல் ஆனால் வன்முறை ஏதும் இன்றி எந்த தரப்பிற்கும் ஆதராவாக இல்லாமல் நடுநிலை தன்மையோடு விளக்கும் இப்படம் 2009 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது.

இயக்கம்: பிரதீபன்
ஒளிப்பதிவு: C. J. ராஜ்குமார்
கலை: P. கிருஷ்ணமூர்த்தி
படத்தொகுப்பு: ராகவா S. அர்ஸ்
இணை இயக்கம்: சுதாகர்

திரைக்களஞ்சியம்

சட்டகம் (Frame)
திரையில் காட்டப்படும் ஒரு தனியான பிம்பம்; படச்சுருளிலும் பின்னர் திரையிலும் தெரியும் பிம்பத்தின் அளவு மற்றும் வடிவம். மேலும் சட்டகம் என்பது திரைப்படத்தின் அமைப்பு ரீதியான ஒரு யூனிட் ஆகும்.

காட்சி (Scene)
சினிமாவின் கதையோட்டத்தில் காட்சி என்பது ஒரு முழுமையான யூனிட் ஆகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் ஒரு நிகழ்ச்சியைக் காட்டும் பல்வேறு ஷாட்டுக்களின் தொகுப்பு. இது ஒரே ஷாட்டாகவும் இருக்கலாம்.

துண்டு (Shot)
ஒரு தனித்த துண்டு படம்; இடையே எந்த வெட்டும் இல்லாமல் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட ஒரு படமாகும்; அது எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஷாட் என்பது சினிமா காட்சியின் அடிப்படை யூனிட் ஆகும். இயக்குனர் ஸ்டார்ட் சொன்னதிலிருந்து கட் சொல்வது வரை ஷாட் என்று எளிமையாக சொல்லலாம்.

அங்கம் (Sequence)
ஒரு நாவலில் பல அத்தியாயங்கள் இருப்பது போல் படக்கதயையும் பல அத்தியாயங்கள் அல்லது அங்கங்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அங்கத்தையும் பல காட்சிகளாகப் பிரிப்பர். இதனை அங்கங்கள் என்கிறோம்.

மேலும் படிக்க...

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் நான்காவது குறும்பட வட்டம்

நான்காவது குறும்பட வட்டம்: சனிக்கிழமை (31-01-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி:

இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விரிவான விவாதம் நடைபெற உள்ளது. இறுதியில் அக்குறும்படங்களின் இயக்குனர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள்.

இரண்டாம் பகுதி:

தமிழில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு, அதனை ஆர்வலர்கள் படிக்க, இலக்கியத் துறை சார்ந்த ஒருவர் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களை எப்படி திரைக்குள் கொண்டு வருவது, மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மூன்றாம் பகுதி:

ஒரு குறும்பட இயக்குனர் அல்லது அந்தத் துறையின் அனுபவம் வாய்ந்த ஒருவர் தலைமைத் தாங்க குறும்பட வாசகர்கள் தங்களுக்குள் கருத்துகளை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இதில் குறும்படங்களை எப்படி விற்பனை செய்வது, குறும்படங்களை எப்படி குறைந்த செலவில் படமாக்குவது போன்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நடைபெறும் அரங்க வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த மாதம் முதல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

வரவேற்கிறோம். (www.thamizhstudio.com)

தமிழ்ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம். தமிழில் ஒரு மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதே இந்தத் தளம். குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. எந்த செயலை செய்தாலும் அதை புதிதாக, புதிய கோணத்தில் செய்யும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.

தமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படியாக குறும்படத் துறையை / அது சார்ந்த ஆர்வலர்களை ஊக்குவிக்கும் செயலை தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். இலக்கியங்கள், புகழ் பெற்ற சிறுகதைகள், உலகில் உள்ள மாற்ற நாட்டு இலக்கியங்கள், அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள், மொழி, கலாச்சாராம் சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டு ஆவணங்கள், போன்றவற்றை குறும்படங்களாக / ஆவணப்படங்களாக எடுத்து அவற்றை மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

மேலும் அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் போன்றவை உலகத்தரத்தில், புதிய தொழில்நுட்பங்களோடு எடுக்கப்படவேண்டும் என்கிற அக்கறையும் இங்கு கவனிக்கப்படும். புதிதாக குறும்படத்துறையில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும் அது பற்றிய முழுமையான ஒரு புரிதலை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்படுத்தும். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்துக் கொடுக்கும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகிறோம். ஆர்வமும் முயற்சியும், துடிப்பும், படைப்புத்திறனும், எதையும் புதுமையாக சிந்திக்கும் ஆர்வமும் உள்ளவரா நீங்கள்? எனில் உங்களுக்கான களம் அமைத்துக்கொடுக்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்ளும்.

மேலும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காகவும் ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தளத்தை பார்வையிடும் உங்களுக்கும் எழுதும் ஆர்வமோ, ஒளிப்படம் எடுக்கும் ஆர்வமோ, அல்லது ஏதோ ஒருத் துறையில் (அறிவியல், சமூகம், வானவியல் போன்ற துறைகளையும் சேர்த்து) உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும்.இங்கு யாரும் தலைவன் அல்ல..ஆனால் சமூகத்தின் சிறந்த படைப்பாளிகள் மற்றும் குறும்படத் துறையை சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்களும் எழுதும் இடத்தில் நீங்கள் உங்கள் தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும். உங்களுக்குள் போட்டி வேண்டும்.

இது முழுக்க முழுக்க வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்குபெற்று பயன்பெறவே ஏற்படுத்தப்பட்ட தளம். இனி உங்களை நீங்களே அடையாளம் காணுங்கள். "உன்னையே நீ அறிவாய்" - சாக்ரடிஸ்

மேலும், தமிழ் ஸ்டுடியோ.காம் முழுக்க முழுக்க எளிய தமிழில் உங்களை வந்தடையும். இங்கு குறும்படப் பிரிவு, இலக்கியப் பிரிவு, மொழிப் பிரிவு, வரலாற்றுப் பிரிவு, இசைப் பிரிவு, மேலும் பல பிரிவுகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுகின்றன. (தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழரின் கலாச்சாரம் போன்றவற்றின் தகவல்களை தொகுத்து, உலகின் இன்ன பிற மக்கள் அறிந்துக்கொள்ளவும், மேலும் உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களின் மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றை நாம் தெரிந்துக் கொள்ளவும் மட்டுமே இத்தகவல்களை திரட்டுகிறோம். அதனை தவிர்த்து மொழி, இன, கலாச்சார வெறியகள் அல்ல யாம் என்பதை இங்கு தெரிவுப் படுத்த விரும்புகிறோம்.) தற்போது அனைத்துப் பிரிவும் ஒன்றாக தொகுப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விரைவில் வெளிவரும். மாற்று ஊடகம், மொழி, கலாச்சாரம், வரலாறு, போன்றவற்றில் உங்களுக்கு தேவைப்படும் விபரங்களையும் ஓர் இடத்தில் திரட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் எங்களுக்கு நீங்கள் செய்ய வேண்டியது.

1. உங்கள் பாராட்டுதல்களை தவிர்த்துவிட்டு, எங்களிடம் இருக்கும் குறைகளையும், அல்லது சமூகத்தில் கவனிக்கப்படாமல் இருக்கும் வேறு சில துறைகளை பற்றியத் தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
2. அல்லது தமிழ் ஸ்டுடியோ.காமில் இன்னும் வேறென்ன பகுதிகள் சேர்க்கப்படலாம் என்றும் எங்களுக்கு வழிகாட்டுங்கள்.

3. மாற்று ஊடகம் அமைக்க உங்களக்கு தெரிந்த வழிமுறைகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
4. உங்களிடம் இருக்கும் அரிதான தகவல்களை, அல்லது அரிதான ஒளிப்படங்களை, அரிதான ஆவணங்களை எங்களுக்குக் கொடுத்து உதவுங்கள். (நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் அரிதான ஆவணங்கள், ஒளிப்படங்கள், தகவல்கள் அனைத்திற்கும் தக்க சன்மானம் வழங்கப்படும் (நீங்கள் விரும்பினால் இலவசமாகக் கொடுத்து உதவலாம்).
5. தமிழ் மொழி, இனம் கலாச்சாரம், உலக இசை, உலக மொழிகள், உலகக் கலாச்சாரங்கள் போன்றவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்த தகல்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
6. நாட்டுப்புறக் கலைகள், அழிந்து வரும் விளையாட்டுகள், அழிந்து வரும் வாழ்க்கை முறைகள் பற்றியும் உங்களிடம் ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
7. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் ஸ்டுடியோ.காம் மேலும் சிறக்க உங்களின் ஆலோசனைகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

தளத்தை பார்வையிடும் ஒவ்வொருவரும் சில நிமிடங்கள் செலவழித்து எங்களுக்கான ஆலோசனைகளை எழுதி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.(குறிப்பு: தளத்தின் ஒரு சில பகுதிகள் வாரம் ஒருமுறையும், மாற்ற பகுதிகள் இருவாரம் ஒருமுறையும், வேறு சில பகுதிகள் மாதம் ஒருமுறையும், மேலும் ஒரு சில பகுதிகள் தினமும் புதுபிக்கப்படும். எனவே வாசகர்கள் தினமும் தளத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவும்).உங்கள் அனைத்து விதமான கேள்விகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு:
thamizhstudio@gmail.com