Tuesday, March 29, 2011

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -6


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -7

ஆழியாள் – 'என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி'

குட்டி ரேவதி

மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும் பயன்படுத்தும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது தான் பெண்ணினத்தின் வெற்றிகளில் இன்று வரை முதன்மையானது. அதை முழுமையான இலக்கிய வடிவத்திற்கு உட்படும் தேர்ச்சியில் வெற்றியடைந்ததன் வழியாக, மொழியை ஒரு சாணைத் தீட்டப்பட்டக் கத்தியாகவும் ஆக்கினர். இனி, அம்மொழியின் இலக்குகளிலிருந்து தப்பவே முடியாது என்பதையும் உறுதிப்படுத்தினர். அந்த இலக்கிய வடிவங்கள், ஆணின் இலக்கிய நாற்காலிகள் முன்மொழிந்த தகுதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்ததுடன் அவற்றிற்கெதிரான வேறு தகுதிகளுடனும், அவற்றையும் மிஞ்சிய திறன்களுடனும் எழும்பி வந்தன. ஆண், கவிதை என்று சொல்லி வந்ததைப் புறம் தள்ளி, புத்துயிர்ப்பு உடைய மொழியால் ஆன கவிதையைப் படைத்ததில் இலக்கிய வரலாறு என்பது தலைகீழாகத்தான் ஆகிப்போனது.

கடந்த நூற்றாண்டில், ஈழத்துப் பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அரசியல் வன்முறைகள் அவர்களின் மொழியை இன்னும் இன்னும் கூரடைந்த ஆயுதமாய் ஆக்கியது. அதன் தாக்கமும், புழக்கமும் தமிழகத்தில் ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருந்தவர்களின் மொழியைக் கூடப் புதுப்பித்தது. தமிழகத்தில் நவீனப்பெண்கள், அரசியல் சிந்தனைகளிலிருந்தும் சித்தாந்தங்களிலிருந்தும் தங்களை விலக்கி வைத்துக் கொண்டவர்களாகவோ, அல்லது அவ்வாறு தங்களை அவ்விடம் நிறுத்திக் கொண்டவர்கள் மலிவான சித்தாந்தங்களை முன்மொழிந்தவர்களாகவோ அல்லது தனைத் தவிர்த்தப் பெண்கள் பற்றிய அரசியல் இருப்பு பற்றிய அக்கறைகள் அற்றவர்களாகவோ இருந்தனர். ஆனால், ஈழப் பெண்கவிதை மொழி, இப்பணிகளையெல்லாம் முழுவீச்சில் செயல்படுத்தும் தூண்டுகோலாகவே இன்று வரை இருந்திருக்கிறது. அரசியல் விளைவுகளை நேரடியாக அனுபவிக்க நேர்ந்ததின் அவலம், மொழி வழியானதொரு தீவிரமான இலக்கிய வகைமையாக ஈழப்பெண் கவிதை இன்று வரை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. அதை, ‘ஈழப் பெண் கவிதை’ எனும் சொற்தொகுதியால் ஆக்கும் போது அதன் அரசியல் வெளிச்சம் இன்னும் அதிகமாய் வாசிக்கும் எவரையும் கண்கூசச் செய்யக் கூடியதே!

2000 – ஆண்டில் வெளியான, ஆழியாளின் ‘உரத்துப் பேச’, கவிதைத் தொகுப்பு மேற்கண்ட அரசியல் முன்னெடுப்பை தனது தனித்ததொரு மொழியாகவும் குரலாகவும் பதிவு செய்தது. எதிர்ப்பின் குரலும், மானுட அவதானிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தும் குரலும் அப்படித்தான் உரத்துப் பேசும் என்பதையும் அவரின் முழு தொகுப்பிலிருந்தும் நம்மால் உணரமுடியும். சொற்களுக்குப் புதிய அரசியல் வெளிப்பாடுகளை கொடுத்தவர்களுள் இன்று வரை ஈழத்தமிழ்ப் பெண் கவிஞர்களே முதன்மையாக நிற்கின்றனர் என்பதை இவர் கவிதைகளிலிருந்தும் நாம் உணரக்கூடும். ஆழியாளின் மொழியில், ‘மன்னம் பேரிகள்’ கவிதை மிகவும் நேரடியான பாலியல் அரசியல் உடையது. அக்கவிதை சொல்லிய சேதியை மீள் பிரதியாக்கியே கவிஞர்களாகியவர்களையும் இவ்விடம் நான் நினைவூட்டக்கூடும். இதுவும் ஆரோக்கியமான விஷயமே!

மன்னம்பேரிகள்

காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத்தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்*
அவள் கோணேஸ்வரிக்கும்**
புரிந்த வன்மொழியாகத் தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.

* மன்னம்பேரி (22) 1971 ஜே.வி.பி.கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவள். 1971 ஏப்ரல் 16 – இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.

** கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ம் காலனியைக் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு, இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.

ஆண்களின் பாலியல் வன்முறையை, பாலியல் அரசியலாக்குவதில் அதிலும் அத்தகைய இலக்கியமாக்குவதில் இன்றும் பல பெண்கள் தோற்றுப் போகின்றனர். அது அவரவர் உணர்வின் நேர்மையையும், தன் இனப்பெண்கள் சார்ந்த ஒருமையையும் பொறுத்தது. ஆழியாள், ‘என்னை உற்றுக் கிடக்கும் அம்மிருகம் துயின்று நாட்கள் பலவாகியிருக்கும்’ என்ற வரியால் அதன் வழியாகச் சொல்லும் பாலியல் நுட்பத்தால் அந்த அரசியல் நிலைப்பாட்டின் அடுத்த நிலைக்குக் கடந்து செல்கிறார். அம்மொழியின் உருவாக்கம் வீரியம் பெறுவதற்கான தெளிவான சித்திரங்களை தன் ஒவ்வொரு கவிதையிலும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஆழியாளின் பலம். கவிதையை தான் நுகர்ந்த வெறும் சுகானுபவமாக மட்டுமே பதிவு செய்யாமல், இலங்கும் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான கருத்தாக்க அமைவுகளைத்தாம் கவிதைகளாக்குகிறார். முழுமையான அதிகாரக் கட்டமைப்பைத் தகர்க்கும் பலமிருந்தாலன்றி இது சாத்தியமில்லை. நுண்மையான கருத்தாக்கச் சித்திரங்களை ஒவ்வொரு கவிதையிலும் வரைந்து கொண்டே இருக்கிறார். அவ்வகையில் பாலியல் நுண்ணுணர் திறனை முழுமையும் கொண்ட ஒரு பெண்ணியக் கவிஞராக அடையாளம் பெறுகிறார்.

பதில்

என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது.

அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங்கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.

என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறி கொட்டும்.

தனித்து,

அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.

அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என் மொழி.

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு.

‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். அரசு, யுத்தம், குடும்பம், தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்றவை இந்தியா உட்பட்ட நாடுகளிலும் பெண்ணுக்கு எதிரான அதிகாரக்கட்டமைப்புகளுடன் தாம் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. ஆணாதிக்கத்தின் விளைச்சல்களாகவே அவை அடையாளமும் பெற்றிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அத்தனை விடுதலைப் போராட்டங்களும், மக்களை ஒடுக்கும் பேரதிகார அடையாளங்களுடனேயே நாளடைவில் இணக்கம் பெற்று, பெண்களை முற்றிலுமாக ஆண்களிடமிருந்து விலக்கிவைத்து நோக்கும் போக்கையே கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கவிதை இயக்கச் செயல்பாடு என்பது சமீபத்திய காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் பங்கெடுப்பைக் கொண்டுடிருக்கிறது. அரசின் சுவர்களுடன் நேரடியான மோதுதலை நிகழ்த்தும், படைப்பூக்கத்தை விரயமாக்கும் பணியை ஆழியாள் போன்றவர்கள் ஆற்றவில்லை. மாறாக, அரசு எனும் அதிகாரக் கட்டமைப்பின் ஆதிக்கச் சுவர்கள் சதுரமாக, செவ்வகமாக, முக்கோணமாக என வெளியைக் குறுக்கும் திடமான தன்மைகளுடன் செறிவடைந்து இருப்பதைக் கலைக்கும் வேலையைத் தமிழில் பெண் கவிதை தான் செய்துள்ளது. அரசுடன் மோதுவது வெவ்வேறு முகமூடிகளுடன் வரும் மனிதர்களையெல்லாம் மூடியைக் களைந்து அடையாளம் காணும் நோக்கத்தின்பாலது. எத்தனைக் கோடி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டிருப்போம், நாம். ஆக, நிஜமான போலியகன்ற முகங்களை உருவாக்குவதில் தம் நேர்மையான உழைப்பைக் கடந்த இரு பத்தாண்டுகளாகக்..


more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_7.php


Monday, March 28, 2011

வலது புறம் செல்லவும் - 1

வலது புறம் செல்லவும் - 1


இயக்குனர் அகத்தியன்28-03-2011, 08.00 PM


கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாகவே அனைத்தையும் படைத்து விட்டீர்கள். அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு கெட்டதையும் அவர்களுக்காக படைத்து விடுங்கள் என்றனர். கெட்டதை அவர்களே படைத்துக் கொள்வார்கள். கீழே எட்டிப் பாருங்கள் என்றார் கடவுள். கீழே எட்டிப்பார்த்தனர்.

"மனிதர்கள் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்’’.

செய்முறை மட்டும் தான் நாம். மூலப்பொருட்கள் எல்லாம் கடவுள்தான். இதற்காகத்தான் இந்த மூலப்பொருள் என்று கடவுள் படைக்கவில்லை. ஆனால் இது இதற்குப் பயன்படும் என்று கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம்.

நிலையாக ஓரிடத்தில் மனிதன் தங்கிவாழ ஆரம்பித்த பின் தேவைக்காக சேமிக்க ஆரம்பித்தான். பழ உணவுகளைப் பானையில் இட்டு எதிரிக்குப் பயந்து பூமியில் புதைத்து வைத்தான். அடையாள மிட்டான். திடீரென எதிரிகளின் தாக்குதல் நிகழ இடம் பெயர்ந்தான். மீண்டும் தன் இருப்பிடம் வந்து அடையாளம் வைத்ததைத் தோண்ட மது உருவானது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. இங்கே மனிதனின் புத்திசாலித்தனம் என்று மேலே சொன்னதை மறுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலே சொன்ன "கடவுள் படைப்பில் எல்லாம் நல்லது’’ என்பதும் தவறுதான். எல்லா நன்மைக்குள்ளும் தீமை வைத்துதான் கடவுள் படைத்திருக்கிறார்.

இங்கிலாந்து, பிரான்ஸ் , போர்ச்சுகீசிய நாடுகள், ரோம சாம்ராஜ்யம், மெசபெடோமியா பகுதிகள் இங்கெல்லாம் முறையாக ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் போதையும் கலந்தார்கள். அது ராஜரீக பானம் என்றழைக்கப்பட்டது.

அரண்மனை விருந்துகளின் வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே இந்த "ராஜரீக’’ பானம் பரிமாறப்பட்டது. பின்பெரும் வணிகர்கள் அயல்நாட்டுத் தூதர்கள் என அது சற்று தன் எல்லையை விரித்துக் கொண்டது. தயாரித்தவன் அதைக் குடித்தாலும் தலை சீவப்பட்டது. அரண்மனையில் அதைக் கண்டுபிடித்தவனோ தயாரித்தவனோ வயதாகி ஓய்வு பெறும்போது அவர்கள் உயிரோடு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். பிரான்சில் ஓய்வு கொடுத்து அனுப்பும்போது நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் மது ஒரு கௌரவம் மிக்க பானமாகக் கருதப்பட்டது.

எல்லைகளில் குளிரில் காவல் காக்கும் வீரர்களுக்காக சாராயம் தயாரிக்கப்பட்டது. அதை பீப்பாய்களில் ஊற்றி, முத்திரை பதித்து ஒருவருக்கு இத்தனை அவுன்ஸ் என்று அளந்து கொடுத்தார்கள்.

மரபுகளை மீறுபவன்தான் மனிதன். அதைப்பிடித்து இதைப்பிடித்து காக்காய் பிடித்து தயாரிப்பு ரகசியத்தைக் கண்டறிந்தான் ஒருவன். கும்பலாக காட்டுக்குள் சென்று, காய்ச்சி, மாதக்கணக்கில் உருண்டு கிடந்து கை கால் தளர்ந்ததும் இல்லம் திரும்பினார்கள். உழைக்க மனித சக்தி இல்லையென்றதும் யோசித்த அரச வம்சம் முத்திரையோடு அலுமினியக் குழாய்களில் சரக்கை அடைத்து தானியமோ, பட்டுப்புழுக்களோ, துணியோ கொடுத்து இரவுகளில் வந்து வாங்கிச் செல்லலாம் என்றது. பட்டுப்புழுக்கள் கொடுப்பவருக்கு அளவின்றி குழாய்கள் கிடைத்தன. பட்டுப்புழுக்களுக்காகவும் பருத்திக்காகவும் மனிதர்கள் அலைய ஆரம்பித்தனர். உழைப்புக்கு ஊதியம் சாராயம் என்றானது.

முழுமையான நாகரீகம் தோன்றியதும் எல்லா விருந்துகளிலும் மது அனுமதிக்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண்டு வரை கிடைத்தற்கரிய பொருள் மது என்பதால் அதற்கு கௌரவம் கொடுத்து குடித்தார்கள். அப்படியே அனுபவித்தார்கள். விழாக் காலங்களில் மதுவிருந்து கொண்டாடினார்கள். மீண்டும் விழாக் காலத்தை எதிர்நோக்கினார்கள்.

நாமறிந்த வரலாறுகளில் வெள்ளையர்களின் விருந்து என்றால் மது பிரதானம். இப்படி கௌரவத்தின் அடையாளமாக இருந்த மது மாறத் துவங்கியது மொகலாயர்களால். ஓபியம் கிடைத்தாலும் சரி சாராயம் கிடைத்தாலும் சரி முழுநேர உணவாக ஆகிப்போனது அவர்களுக்கு. குடிப்பதும் தின்பதும் மட்டுமே அரசலட்சணம். இப்போது அது புருஷலட்சணம். அறுபதுகள் வரை புருஷலட்சணத்திற்கு பர்மிட் என்ற ஒன்று தேவைப்பட்டது. ரேசனில் குடிக்கும்போது ஆசை இருந்தாலும் அளவாய்க் குடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

மறப்போர் புரியும் வீரர்களுக்கு போர்க்காலங்களில் பசியைப் பொருட்படுத்தாமல் வெறிகொண்டு எதிரியைத் தாக்க மது கட்டாயமாகப் பரிமாறப்பட்டது. பின்னாளில் அதே மறவர்கள் ஜாதிக் கலவரங்களில் குடியை பிரயோகித்தனர். ஒரே ஊருக்குள் பிரிந்து சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட இருதரப்பும் குடித்தனர். குடித்தால் வீரம் வரும் என்று விதைக்கப்பட்டது.

இன்னும் பின்னால் பர்மிட் எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு கடையில் வாங்கலாம் பாரில் குடிக்கலாம் என்றானபோது குடிப்பவக்ளின் எல்லை விரிந்தது. வயது வித்தியாசமின்றி குடிப்பழக்கம் தொற்றியது.

வானொலி இல்லாக் கிராமங்களில் வேலை இல்லாதோர் சாராயம் குடித்து விட்டு பகல் இரவு என்று சீட்டாடினார்கள். நகரங்களில் வருமானம் இல்லாதோர் அதற்காகக் கவலைப்பட்டுக் குடிக்க ஆரம்பித்தனர். வசதி உள்ளவர்கள் குடித்துவிட்டு "கிளப்’’ புகளில் சீட்டாடுவதை வேலையாக மாற்றிக்கொண்டனர்.

அரசின் உறவினர்கள் காய்ச்ச, அரசு அதை விற்க ஒரு பழக்கம் உருவானபோது மதுக்கடை இருக்கும் இடத்தில் திருவிழாக் கூட்டம் தோன்றியது. முகவரி கேட்பவருக்கு அடையாளமாக இருந்த கோவிலும், பள்ளிக்கூடமும், சைக்கிள் கடையும் மாறிப்போய் மதுக்கடை என்றானது. மதுக்கடைகளில் குடிக்கும் போதெல்லாம் வெட்டிப்பேச்சும், தகராறும் என்றாகிப்போனது. ரோட்டில் விழுந்து கிடப்பதும் காலையில் எழுந்து தள்ளாடி வீடு போவதும் சராசரிகளின் சராசரியானது. காலை ஆறுமணிக்கு குடிப்பவர்களுக்காக தெருவோரங்களில் அரசியல்வாதிகளால் மதுவிற்பனை அமோகமானது.

குடிப்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். விற்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். குடிப்பவனைத் திட்டினாள், விற்பவனை வாழ்த்தினாள். குடிப்பவன் குழந்தைகள் பட்டினி கிடந்தனர். வேலைக்கு சென்றனர், விற்பவன் குழந்தைகள் கறிச்சோறு தின்றனர். கான்வென்ட் சென்றனர். அரசு எழுபத்தைந்து ரூபாய்க்கு குவாட்டரை ஒருவனுக்கு விற்று ஒரு ரூபாய்க்கு அவனுக்கு அரிசி கொடுத்தது. ஸ்டார் ஓட்டல்களில் காக்டெய்ல் பார்ட்டி வைத்து விழாக்களுக்கு படித்தவர்களை அழைத்தார்கள். மாநாடுகளுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து அரசியல்வாதிகள் மக்களை அழைத்தார்கள். ரேசன் கடைகளிலும் பொது இடங்களிலும் போராட்டம் நடத்த மது லஞ்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. திருமணங்களுக்கும் மரண நிகழ்வுகளுக்கும் குடிப்பதற்காக ஒரு கூட்டம் வந்தது. ஒரு குவாட்டர் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனது. ராஜரீக பானம் தனது ராஜபாட்டையில் தேரேறி வந்து, இறங்கி, நடந்து, தடுமாறி, லஞ்சமாக மாறி அழுக்காகி ரோட்டில் விழுந்து கிடக்கிறது.

more: http://koodu.thamizhstudio.com/thodargal_16_1.php



Sunday, March 27, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (20)



வெங்கட் சுவாமிநாதன்

மீண்டும் நான் சொல்ல விரும்புகிறேன். மிஷ்கினை மாத்திரம் பலியாடாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. இதைவிட மகா பாமரத்தனமான, அசிங்கமுமான சமாசாரங்களையெல்லாம் திணித்து சந்தைப் பொருளாக்கி அதே சமயம் ஏதோ தான் பெரிதாக ஒரு சாதனை செய்துவிட்டதாக மயக்கத்தில் மிதந்து கொண்டிருக்கும் அனேகர், - (இவர்கள் தான் நம் திரைப்படத் துறையில் நிறைந்திருக்கின்றனர், இவர்கள் தான் பட்டங்களும் விருதுகளும் பெற்று கொள்ளையாகச் சம்பாதித்து சமூகத்தில் பெரிய மனிதர்களாகின்றனர். அதிகார பீடங்கள் முன்னிலையில் இவர்கள் குழைவும் பல்லிளிப்பும் மகா கோரமானவை. அசிங்கமானவை. தமிழ்நாட்டின் நாகரீகத்தையும் பண்பாட்டையும் சீர்குலைத்தவை. எந்த அதிகார பீடங்களுக்கு முன் குழைகிறார்களோ அவர்களாலேயே “வெறும் காக்காக் கூட்டம்” என்று இழிந்து நகையாடப்பட்டவர்கள். இந்த காக்காக் கூட்டத்தை தேர்தலின் போது தமக்கு பிரசாரம் செய்ய வேண்டுபவர்கள். இந்தக் காக்காக் கூட்டமும் யார் அதிகாரத்திலிருக்கிறார்களோ அவர்கள் கட்டளைக்கு வளையும்.

இந்த விஷ வட்டத்திலிருந்து வெளியே ஒருவர் செயல் படுவது என்பது எழுபது வருட காலமாக நாம் வளர்த்து செழித்து இருக்கும் நிலையில் சாத்தியமில்லை. ஏனெனில் இந்த செயல் பாடுகளுக்கு ஒரே அளவு கோல் இன்னும் அதிக வருமானம், இன்னும் அதிக மக்களை எட்டுதல். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வருமானத்தையும் மக்கள் தொகையையும் வேண்டுகிறோமே அவ்வளவுக்கு நாம் தாழ்ந்து தான் போக வேண்டும். அது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை ஏனெனில் எவ்வளவு தாழ்ந்தாலும் அது வெற்றிப் படமாகிவிட்டால், அதோடு சமூக அந்தஸ்து, பணம், புகழ், அதிகார மையங்களின் நெருக்கம் எல்லாம் கிட்டி விடுகின்றன.

பாலசந்தரும், கமலஹாஸனும் தான் என்னவோ உலகத்தரமான படங்களைப் பார்ப்பதாகவும் தமிழ்த் திரைப்பட உலகில் இவர்கள் பெரிய மாற்றங்களையும், புரட்சியையும் சாதித்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டாலும் அதை இந்த தமிழ் சமூகமும் அங்கீகரித்து விட்டாலும், அவர்கள் தமிழ் சினிமாவை சினிமாவாக மாற்றிவிடவில்லை. இன்னமும் அவர்களுக்கு அது சந்தைப் பொருள் தான். சந்தைக்கேற்ப தயாரிக்கும், தயாரிக்கப் படும் பொருள் தான். சந்தைக்காகத் தயாரிப்பது வேறு. தான் நினைத்ததைத் தயாரித்து அதைச் சந்தைக்கு எடுத்துச் செல்வது வேறு. இது வார்த்தைகளில் விளையாடும் சமாசாரமில்லை. இரண்டும் வேறு வேறு குணத்தவை. வேறு வேறு உலகைச் சார்ந்தவை.

இதைப் புரியவைப்பது கடினம். அவரவர்களாக தாமே புரிந்து கொண்டால் தான் உண்டு. நிஜமும் பாவனைகளும் ஒன்றே போலத் தான் தோன்றும். சார்ஜ் உள்ள பாட்டரியும் சார்ஜ் தீர்ந்த பாட்டரியும் ஒன்று மாதிரித்தானே இருக்கும். ஒன்றில் உயிர் இருக்கும். மற்றது அதை இழந்தது. கவிதையும் அப்படித்தான். கவிதை போலவே இருக்கும் செய்யுளும். ஒன்று உணர்வுள்ளது. மற்றது வார்த்தைகளின் கூட்டம். பொய்யான சிரிப்புக்கும் ஆத்மார்த்தமாக மனம் மலர்வதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். அதை நிரூபிக்க இயலாது. எல்லாம் ஒன்றே போல இருக்கும். சிவாஜி கணேசன் சினிமாவுக்கு வந்த போதே ஒரு அசிங்கமான, வார்த்தை வாந்தி பேதியுடன் தான் வந்தார். அதற்கேற்ற முக பாவங்களுடன். அது கலையல்ல. ஆபாசம் என்பது இன்று வரை புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் தோன்றுகிறது. அதன் ஆட்சி இரண்டு தலைமுறைக்கு நீண்டு விட்டது. அந்த வார்த்தை வாந்தி பேதியும் அதோடு வந்த இது பேதி தான் என்று சொல்லும் முக பவனையும் லட்சியமாயிற்று. சிகரமாயிற்று. அவர் திலகமும் ஆனார். இன்று அந்த புள்ளியிலிருந்து தள்ளி நகர்ந்து வந்துவிட்டாலும், அந்த திலகத்துக்கு ஆராதனையும் அபிஷேகங்களும் நிற்கவில்லை. இது சொல்வது என்ன? சிவாஜி மறைந்து விட்டாலும் அவரைப் பிரநிதிதத்துவப்படுத்திய உலகம் மாறவேயில்லை. அதெல்லாம் பிதற்றல் என்று சொல்லும் ஒரு ஜீவனை இன்றைய சினிமா உலகத்தில் காணமுடியாது. அந்த பீடத்திற்கு மலர் மாலை சார்த்துவது தொடர்கிறது.

இந்த ஒரு அசிங்கம், ஒரு பிதற்றலைப் பற்றியது இல்லை. வெவ்வேறு வித பிதற்றல்கள், அசிங்கங்கள் காலத்துக்கேற்ப சந்தையின் தேவைகளுக்கேற்ப கண்டுபிடிக்கப்பட்டு அவையே விதிகளாகின்றன. அன்று சிவாஜி டான்ஸ் ஆட வைகை அணையோ உதகையோ போதுமானதாக இருந்தது. இன்று மச்சுபிச்சுவுக்குப் போகவேண்டியிருக்கிறது. சில விதிகள் மீறப் படாதவை. சினிமாவுக்காக கதைகள் தயாரிக்கப்படுகின்றன. கதைகளில் மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. மிஷ்கினையே எடுத்துக் கொள்ளலாம். அவரது யுத்தம் செய் ஒரு தயாரிப்பு கதை. சொந்தமாகத் தயாரித்தாரா, இல்லை கோகோ கோலா, பெப்சி போல வெளிநாட்டு லைசன்ஸ் வாங்கி உள்ளூர் தண்ணி சேர்த்து தயாரிக்கப்பட்டதா என்று தெரியாது. அதில் வரும் எத்தனை திருப்பங்கள், எத்தனை வன்முறைக்காகக் கற்பிக்கப்பட்ட சம்பவங்கள், எந்த திருப்பத்தையாவது, எந்த பாத்திரத்தையாவது நாம் ஒரு தர்க்க ரீதியில் சிந்திக்க முடிகிறதா, அல்லது ஏற்க முடிகிறதா? எல்லாம் தயாரிப்பு. மனித மனம் இப்படியெல்லாம் திடீர் மாற்றங்கள் பெறுமா, பெறுமென்றால் அதற்கான பின்னணி இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாது, அர்த்தமற்ற திடீர் திருப்பங்களும், திடீர் மனித மாற்றங்களும், வலிந்து புகுத்தப்படும் சம்பவங்களும், அந்தசம்பவங்களின் கோரமும், ஏதோ ஒரு எஃபெக்ட்டுக்காக தயாரிக்கப்பட்டவையாகவே தோன்றுகின்றன. டாப் ஆங்கிள் ஷாட் மாதிரி. சிலையாக நெடு நேரம் நிற்பது மாதிரி.

யுத்தம் செய் படத்தில் தெருக்காட்சிகள் சில வருகின்றன. ஒரு தெருக்காட்சி கூட அதன் இயல்பில் நாம் நம்பத்தகுந்த வகையில் இருக்கவில்லை. நாலைந்து பேரை ”நீ இந்தக் கோடியிலிருந்து அந்த முனைக்கு நடந்து போ. அங்கேயிருந்து இந்த முனைக்கு மூணு பேர் நடந்து போகட்டும்,” என்று சொல்லி நடக்க வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஒரு ஜீவன் கூட, ஒருத்தர் நடை கூட இயல்பாக, இல்லை. எல்லாம் சொல்லி நடக்க வைத்தது மாதிரி தான். சேரன் தலையைக் குனிந்து கொண்டு விரைப்பாக நிற்கிறாரே, அதுவும் மிஷ்கினின் புகழ் பெற்ற இயக்கம் போலத் தான் தெருக்காட்சிகளும். அந்தக் காலத்தில் முப்பது நாட்பது களில் இப்படித்தான் ஸ்டுடியோக்குள் அமைத்திருக்கு தெருக் காட்சியில் எதிரும் புதிருமாக சிலரை நடக்க வைப்பார்கள். அதிலிருந்து கொஞ்சம் கூட இயக்குனர்களின் தொழில் திறன் வளரவில்லை. தெருவில் நடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும். மனதில் என்னவோ ஒடிக்கொண்டிருக்கும். அவரது உடை வேறுபட்டிருக்கும். நடை ஒவ்வொருவருக்கும் அவரவர்து அவசரத்தை மன நிலையைப் பொறுத்து மாறும். ஒவ்வொருவரும் தனித் தனி ஜீவன்கள். அவரவர் கவலைகள். சிந்தனைகள். உத்பல் தத்தின் நாடக மேடையில் கூட மனிதர்கள் கூட்டமாகக் காணும் காட்சிகள் ஒவ்வொரு மனிதனையும் தனித் தனி தோற்றங்களில் தனித் தனி பாவனைகளில் காணாமுடிந்திருக்கிறது. முப்பது பேர் முப்பது விதமாக இருப்பார்கள் முப்பது பாவனைகளிள் செயல் தோற்றங்களில் இருப்பார்கள். நாடக மேடையில் பார்வையாளர்களுக்கு கூட்டம் தான் தெரிய வேண்டுமே ஒழிய முப்பது தனி மனிதர்களை அல்ல என்று உத்பல் தத் நினைப்பதில்லை. பார்வையாளர்கள் கவனிக்கிறார்களோ இல்லையோ, நடப்பு வாழ்க்கையில்...


more: http://thamizhstudio.com/serial_4_20.php



Thursday, March 24, 2011

தக்கையின் மீது நான்கு கண்கள் - வசந்த்

சா. கந்தசாமி அவர்களின் சிறுகதையை இயக்குனர் வசந்த் அவர்கள் குறும்படமாக்கியுள்ளார். குறும்படத்தைக் காண:

தக்கையின் மீது நான்கு கண்கள் - வசந்த்


Wednesday, March 23, 2011

ஒரு குறும்படத்திற்கான கதையும் திரைக்கதையும்.


ஒரு குறும்படத்திற்கான கதையும் திரைக்கதையும்.

more: http://thamizhstudio.com/shortfilm_guidance_script_2.php




அஜயன் பாலா

ஒரு கதை திரைக்கதையாக உருமாறுவது என்பது ஒவ்வொரு படைப்பாளனுக்கும் ஒவ்வொரு வழிமாதிரிகளைக் கொண்டது, திரைக்கதை என்பது கதையின் சாராம்சத்தை உட்கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, இங்கே மாதிரிக்கு ஒரு சிறுகதையும், குறும்படத்திற்கான திரைக்கதையும் அதன் வெவ்வேறு வடிவாக்க அசாத்தியங்களுடன் வாசகர்களின் ஆய்வுக்காக தரப்பட்டிருக்கிறது,

மயில்வாகனன் மற்றும் சிறுகதைகள்

மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை

அவன் இறந்துவிட்டதாகக் கூறிக்கொண்டு சொரெலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான், அடைக்கமாட்டாத தன் தவிப்பின் காரணமாக மீண்டுமொருமுறை பெரும் குரலெடுத்து அந்தமரணச் செய்தியை அறிவித்தவனுக்கு அதன்பிரதியுத்தமாக எவரது முகமேனும் அதிர்ச்சியுறுவதைக் காணுமாவல் மிக்க இருந்தது, இனி அற்ப நிமிடங்கள் மட்டுமே தன்னால் காரியம் ஆற்ற முடியுமென்பதால் கிடைத்த கால அவகாசமும் பதட்டமுமாய் அறைக்குள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தான்,
யாருமற்ற அந்த அறையில் அவன் நிகழ்த்தும் காரியங்கள் காரணமற்றதாகவும் ஒரு சிலருக்குப் பயமூட்டக்கூடியதாகவும் சிலருக்குப் பெரும் துயரத்தை உண்டுபண்ணக் கூடியதாகவுமிருக்கிறது, மிகவும் களைத்துப்போய் காற்றில் அலையும் தன் ஆடைகளையே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தன் கட்டுப்பாட்டை மீறி வேறு எவற்றையோ உணர்த்தும் அதன் பீதியூட்டும் தன்மை குறித்து அதிர்ச்சியுற்றான், இழந்த ஒன்றை இனி ஒருபோதும் மீண்டும் பெறவியலாத ஆற்றமை அவனது மைய இருப்பை அரித்து அரித்து தின்று தீர்க்கின்றது, தாளமாட்டாத வலியின் காரணமாகத் தனக்குத்தானே பலம் கொண்ட மட்டும் நெஞ்சில் குத்திக்கொண்டவன் ஒரு கட்டத்தில் பெரும் குரலெடுத்துக் கதறத் துவங்கினேன், சப்தமற்ற அவனது கதறலொலி காற்றை கிழித்தூடுருவி அறையின் எல்லா ஜடப்பொருட்களையும் அசைத்துக் கீழேவிழத்தட்டுவதாயிருக்கிறது, யாருமற்ற அறையில் பொருட்கள் மட்டும் தடதடத்து விழுந்து கொண்டிருந்தது, வெளியே யாரோ இருவர் பேசிக்கொண்டு வரும் சப்தமும் தொடர்ந்தாற்போல் அந்த அறைக் கதவின் பூட்டை திறக்கும் ஓசையும் கேட்க அவன் சட்டென தன் அழுகையை நிறுத்திக் கொண்டான், தானிருப்பதை அவர்கள் பார்த்து விடுவார்களோ என்கிற காரணமற்ற பயத்துடன் அங்குமிங்குமாய் மறைவிடம் தேடி ஓரிரு நிமிடங்கள் அலைந்த பிறகுதான் தன் காரியத்திலிருக்கும் அபத்தத்தை உணர்ந்தவனாகத் தன்னைத்தானே நொந்துக் கொண்டு சமாதானமாகிப்போனான், இன்னும் அவர்கள் தகவல் அறியப்படாதவர் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே கண்டுகொண்டவன் அவர்களுக்கு அந்த தகவலைச் சொல்லிவிட பெரும் வியத்தம் மேற்கொண்டான், மீண்டும் இரண்டொரு பொருட்கள் திடும்மென கீழே விழுந்ததைத் தவிர அவனால் காரியம் வேறெதுவும் நிகழ்த்திவிட முடியவில்லை, அணிச்சையாகக் கீழே விழும் பொருட்களைப் பார்த்து நண்பர்கள் இருவரும் தங்களுடன் இன்னுமொருவனும் அந்த அறையில் இருப்பதை உணரவில்லை, தன் பிறந்த நாளான இன்று அவளிடம் எப்படியும் தன் காதலை ஒப்புக்கொடுக்கப் போவதாக தம்மிடம் சூளுரைத்து விட்டுப் போன நம் மூன்றாவது அறை நண்பன் குறித்து தகவலேதும் உண்டா என சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டிக் கொண்டிருந்தவன் மற்றவனிடம் கேட்டான், மற்றவனோ இவனது கேள்வியால் வெறுப்புற்றவன் போல சற்றொரு நிமிடம் எதுவும் பேசாமல் லுங்கியிலிருந்து உள்ளாடையை உருவிக்கொடியில் போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்தவனை நோக்கினான், பின் இன்று காலையில் தங்களது நண்பனை அவனது காதலியுடன் கல்லூரி வளாகத்தில் பின்புறம் தைலமரக் காடுகளுக்கிடையே நடந்து சென்றபோது பார்த்ததாகவும்.

இருவருக்குமிடையே இடைவெளி சற்று பார்க்கும்போது அவனது கையில் கடிதம் இருந்ததாகவும் அவளது கையில் ஒரு கத்தி இருந்ததாகவும் ஆனால் அது தன் பார்வைக்குப்படவில்லை என்றும் ஒருவேளை சேலைத் தலைப்புக்குள் அவள் மறைத்து வைத்திருப்பாள் என்பது தன் அனுமானம் என்றும் கூறினான், தான் கூற வந்தது நிஜக்கத்தியல்ல என்றும் அதனை இங்கே வேறுமாதிரியாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்றும் தன் நண்பனிடம் விண்ணப்பித்துக் கொண்டான், மேலும் அவன் வேறு சில சந்தர்ப்பங்களில் அப்பெண் தன்னிடமும் சில ரகசியப் புன்னகையைச் சமர்ப்பித்துள்ளதாகவும் அதனால் தாங்கள் நினைப்பதற்கோ எதிரான சாத்தியங்கள்தான் அவர்களிடம் அதிகம் இருப்பதாகவும் கூறினான், இதன் பொருட்டாகப் பாதிப்பிற்குள்ளாகப் போவது தங்களது நண்பன் மட்டுமே எனக் கூறியபடி அருகிலிருந்த பானையிலிருந்த நீரையெடுத்துப் பருகைக் கொண்டான், அதுவரை இவர்களது சம்பாஷ்னையைக் பருகிக் கொண்டிருந்த (மூன்றாவது அறை நண்பனான) இவனுக்குத் திடுக்கென்றிருந்தது, மற்ற எல்லாமும்கூட தன் சக அறைவாசிகளிடம் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தன்னை நோக்கி அவள் புன்னகைத்ததாகக் கூறியதைத்தான் அவனால் ஜீரணிக்க முடியவில்லை, ஒருவேளை அவள் நிஜத்தில் புன்னகைத்திருப்பாளோ என நினைத்து மறுநொடியில் தன் கன்னத்தை பளாரென தானே அறைந்து எண்ணத்தை மாற்றிக் கொண்டான், இரண்டுமுறை தலையை இடம்வலமாக அசைத்துக் கொண்டவன் தன் காதலின் உன்னதம் மாற்றிக் கொண்டான், கீழ்த்தரமான இத்தகைய மனிதர்களிடமிருந்து தப்பித்துச் செல்லத் தனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த தன் காதலியின் மறுதலிப்பு குறித்தும் தொடர்ந்த சம்பவங்கள் குறித்தும் சற்றே ஆசுவாசப்பட்டவன் மறுநொடியில் மீண்டும் தன் துயரத்தில் சிக்கி பரிதவித்தான், வேறு யாரிடமும் சொல்லி அழமாட்டாத தன் துயரத்தை அவள் முன்பாக மண்டியிட்டு கோர இன்னும் நெடு நாட்கள் காத்திருக்க வேண்டிய கால அவசியம் வேறு அவனது ஆற்றாமையை இன்னும் அதிகப்படுத்தியது, சட்டென செவிகளைக் கூர்மையாக்கி கேட்டவன் எங்கோ காற்றலைகளோடு தன்னை நோக்கி வரும் கொலுசுச் சத்தம் கேட்டு ஒரு நிமிடம் துணுக்குற்றான், மரணத்தை முன்னறிவிக்கும் பெரும் மணிச்சத்தமாகத் தன்னால் முன்கூட்டி உணரமுடியாது போன குறித்தகால இடைவெளியிலான அந்தக் கொலுசின் ஓசை மேலும் தன் அறையை நோக்கி நெருங்கி வர பதட்டமடைந்தான், தட்டும் ஓசை கேட்டு நண்பர்கள் திறந்த கதவின் எதிரே அவன் எதிரபார்த்தார்ப்போல் அவள், தன் விழி முன் பெரும் கடலென பொங்கிவிட்ட நீரினூடே மங்கலாகத் தெரிந்த அவள் தகவலறிந்து ஊர்ஜிதம் செய்து கொள்ளத்தான் வந்திருக்கிறாளோ என எண்ணிக் கொண்டான், கதவைத் திறந்து விக்கித்து நின்ற நண்பர்களிடம் ஏதும் பேசமாட்டாமல் தலைகுனிந்து நிற்கும் அவளது நிதானத்தில் இன்னும் அவளுக்குத் தகவலறிவிக்கப்படவில்லை என்பதை மட்டும் அப்போதைக்கு அவன் உணர்ந்து கொண்டான், தங்கள் மூன்றாவது அறை நண்பன் இன்னும் வரவில்லை என்றும் உள்ளே வந்து சற்றுநேரம் காத்திருக்கும் படியும் அவர்கள் பதட்டத்துடன் அழைப்பு விடுத்தனர், நாற்காலியில் அமராமல் கதவில் சாய்ந்து கொண்டவள் பெரும் தவறிழைத்துவிட்டவள் போலப் பதட்டத்துடன் பேசத் துவங்கினாள், இன்று காலையில் நாங்கள் இருவரும் தைலமரக் காடுகளினூடே நடந்து சென்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், உங்களில் ஒருவர் அந்த வழியாக கடந்து சென்றதையும் ஒரு மரத்தின் பின்னிருந்து எங்களைத் தொடர்ந்து கவனிக்க முற்படுவதையும் நானறிவேன், இப்படி பௌதீகச் சூட்சுமங்களை அறியவல்ல என் புலனுணர்வுகள் அபௌதீகமான உங்களின் மூன்றாவது அறை நண்பனின் மனதோட்டத்தைச் சற்று நிதானித்து அறிய மறுத்துவிட்டன, என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுத்தலிக்க வேண்டியதாகப் போனது, மாற்றாக நயமான வார்த்தைகளின் மூலம் உங்களின் மூன்றாவது அறை நண்பனுக்கு அதை உணர்த்தியிருக்க முடியும், ஆனால் கணப் பொழுதுகளில் சந்தர்ப்பம் சிறிதளவே கிட்டினாலும் தன் பரிகசத்தைக் கோலோச்சிவிடும் அகம்பாவமாந்து குறித்தும் பிற்பாடு மிகவும் வருத்தமுற்றேன், உதாசீனம் எத்தனை வலிய குற்றமென. என்னவென்றறிய முடியாத ஒரு வினோதச் சமிக்ஞை மூலம் இன்று சாயங்காலம் உணர்ந்து கொண்டேன், மேலும் இன்றுதான் உங்களது மூன்றாவது அறை நண்பனின் பிறந்தநாளென எனக்கு தோழியின் மூலமாகத் தெரிய வந்ததும் நீரூற்றைப் போல என்னுள் எழுந்த வினோத உணர்வு உடனே உங்களின் மூன்றாவது அறை நண்பனைப் பார்க்க இங்கே எனை துரத்தியுள்ளது, அவன் முன் நான் மண்டியிட்டாக வேண்டிய சந்தர்ப்பத்தை எனக்கு உருவாக்கித் தந்த அந்தவினோதச் சமிக்ஞைக்கு நான் நன்றி கூறுகிறேன், மூன்றாவது அறை நண்பன் எப்போது வருவான் என்பதைக் கூறி என் உணர்வுகளுக்கு தாங்கள் அனுமதியளிக்க வேண்டும், அவள் இதைச் சொல்லியதும் கணப்பிசகில் தான் எடுத்த அபத்த முடிவு குறித்து இவன் அதிர்ச்சியுற்றான், பெரும் ஆவேசத்துடன் பௌதீகமாய் ரூபம் கொண்டிருந்த அனைத்துப் பொருட்களிடமும் தனது ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ள முயன்று தோற்றுப் போனான், அபத்தமாக முடிவுற்ற தன் காதலை எண்ணி வேதனை கொண்டவன்.

தனை யாரோ பழிவாங்கிவிட்டதாக தலையிலடித்துக் கதறினான், பின் சட்டெனத் திரும்பி அவளது காலடியில் காற்றிலாடும் அவளது ஆடையை தொட முயன்று தோற்றுப்போய் பின் சொரேலென அவ்வறையை விட்டு வெளியேறி மழை ஓய்ந்த இருளடர்ந்த வயல்வெளிகளில் ஒடியவனை மூன்று கருப்பு நாய்கள் குரைத்தபடித் துரத்திக் கொண்டோடின,

ராஸ்கல்
(A SHORT FILM ABOUT LOVE)


தன் காதல் மறுதலிக்கப்பட்ட காரணத்தினால் பிறந்த நாளன்று சாயந்திரமே ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான் இளைஞனொருவன், தான் இறந்த தகவலை தானே அறிவிக்கும் பொருட்டு தன் அறைக்கு ஓடிச் செல்கிறான், தொடர்ந்து அறையில் நடக்கும் சம்பவங்கள் திரைக்கதையாக வடிவம் பெற்றுள்ளன,

RASKAL
BLACK SCREEN
TITLE FADE OUT
*BREATHING EFFECT*
BANG

*TRAIN HORN*
க்ளோசப்பில் வேகமாக ஓடும் ரயிலின் சக்கரம்

CUT TO
விலகி செல்லும் ரயிலின் கார்டு பெட்டியை பார்த்தபடி கேமரா

CUT TO
ரயில்வே டிராக்கில் ரத்தத் துளிகள், துளிகளை பாலோ செய்தபடி கேமரா ZIGZAG ஆக நகர்ந்து தண்டவாளத்தில் ஓடுவது

CUT TO

SHOT 2
LEG SHOT
C/S
BREATHING EFFECT

ரயில்வே டிராக்கில் ரத்தம் வழியும் கால்கள் ஓடிக் கொண்டிருப்பது,

இப்போது கால்கள் சூளைக்கல். வயல்வெளி. வாய்க்கால் என பல இடங்களில் ஓடுவது,

CUT TO

LONG SHOT
இரண்டு பக்கமும் மரங்களடர்ந்த சாலையில் தூரத்தில் அவன் ஓடிவருவது,

C/S அவன் முகம் OUT OF F0CUS –லிருந்து FOCUS ஆவது

CUT
LEFT SHOT C/S
மழையில் நனைந்த செடி கொடிகள் காற்றில் வேகமாய் ஆடுவது கறுப்பு நாய் குறைப்பது

CUT
L/S பாழடைந்த வீடு பூட்டி கிடக்கிறது,

CUT

வாசற்படியில் வந்து விழும் அவன் எழுந்து கையால் பூட்டிய கதவை குத்துகிறான், குத்தும் சத்தம் ரயில் தட தடத்து செல்லும் ஓசையோடு

FUSE ஆவது

ZOOM IN
DISSOLVE
ZOOM BACK

அவன் கை இப்போது ஒரு அறையின் சுவற்றை குத்திக் கொண்டிருக்கிறது, அவன் அழுகிறான்,

CUT TO

சீலிங் பேன் வேகமாக சுற்றுகிறது, காற்றில் ஆடும் ஜன்னல் திரைச்சீலை
அவனை தொட முயற்சிக்கிறது, சடென அழுகையை நிறுத்தியவன்

more: http://thamizhstudio.com/shortfilm_guidance_script_2.php



தழும்பு... - கலாப்ரியா



தழும்பு...

கலாப்ரியா

வல்லிக்கண்ணன் சொல்வது போல, ரொம்ப நாள் கழித்துப் பார்க்கையில் சொந்த ஊரும் தெருக்களும் இன்னும் சுருங்கி இருந்தது. இந்தப் பகுதிக்கு வந்து எவ்வளவோ காலம் ஆகி விட்டது. பரப்பான சாலை அது. எதிர் எதிராக இரண்டு தெருக்கள் சாலையிலிருந்து பிரிகின்றன. சாலையில் தாருக்கு மேல் தார் விரித்து விரித்து, நல்ல உயரமாகி இருந்தது. தெருக்கள் தாழ்ந்திருந்தன. ஒரு தெருவின் முனையில் நாங்கள் படித்த ஆரம்பப் பாடசாலை. எதிர்த் தெருவின் முனையில் இருந்த பூடம், அதன் மேல் போகும் வரும் வாகனங்கள் இறைக்கும் தூசி, அதன் மேல் எண்ணெய், மறுபடி தூசி என்று படிந்து படிந்து அது என்ன உருவம் என்று தெரியாமல் கழுக் மொழுக்கென்றிருந்தது. அந்தப் பூடமும் அதைச் சுற்றிய சிறு காலி இடமும் அப்படியே இருப்பதால் அந்தப் பகுதி மட்டும் பழைய அகலத்துடன் இருப்பது போலிருந்தது.

பூடத்தையே பார்த்து, அது என்ன பூடம் என்று நினைவு படுத்திக் கொண்டே வந்தவன், நாய் குரைப்பதையே கவனிக்கவில்லை. நாய் எதிர்த்தாற் போலிருந்த சற்றே உயரமான படிகள் கொண்ட வீட்டிலிருந்து குரைத்துக் கொண்டிருந்தது. நல்ல பெரிய அல்சேஷன் வகை. அந்தப் பூடத்தின் அருகேயிருந்த பெட்டிக் கடையில்தான் பள்ளிக்கூடம் இடைவேளை விடும்போது ஓடி வந்து ஏதாவது பண்டம் வாங்குவது, காலணா அரையணாவுக்கு தாய்க்குப்பின் தாரம் எம்.ஜி.ஆர்-பானுமதி, நேரு மாமா-குருஷ்சேவ், படங்கள் வாங்குவது (ரவி அன் கோ படங்கள்), அந்நேரம் கடை பரபரப்பாக இயங்குவது என எல்லாவற்றையும் மனதில் ’ரீவைண்ட்’ பண்ணிப் பார்த்துக் கொண்டேயிருக்க என்னை அறியாமலேயே, நான் அந்தப்படிக்கட்டின் அருகே போயிருந்திருக்கிறேன். அது கத்திக் களேபாரம் பண்ணியதில் வீட்டின் வெராந்தாவில் இருந்த பூந்தொட்டிகள் உருண்ட சத்தம் கேட்டு, “யார் அங்கே” என்று கேட்டபடியே ஒரு பெண் உள்ளேயிருந்து வந்தாள்.....நல்ல வெண்மையான சேலையும் முழங்கை வரை நீண்ட உடலைப் பிடித்த ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தலை பின்னப்படாமல், முடி முகத்தை ஒட்டி வழிந்து, இரண்டு தோளிலும் ஏகத்திற்கு பரந்து கிடந்தது.. கொஞ்சம் ஆண் தன்மையுள்ள முகம். பொட்டு இல்லாதது நெற்றியின் அகலத்தை இன்னும் அதிகமாக்கிக் காட்டியது. எல்லாம் ஒரு வினாடியில் மனதில் பதிவாகிவிட்டது....”ஆகா இது பெர்னி அக்கா மாதிரி இருக்கே..... “ என்று தோன்றியது...மனக்குறளி சட்டென்று ”அக்காவா....!” என்று தன்னையறியாமலே கேட்டுக் கொண்டது.

பெர்னியின் பெயர் ’பெர்னாடின்’ என்பதன் சுருக்கம் என்பார்கள். அப்போது அர்த்தமெல்லாம் தெரியாது.என்னவோ. பெயருக்கேத்த தைர்யசாலி என்பார்கள்

கல்லூரி என்.சி.சியில் எல்லாம் அவள் உண்டு. பஸ்ஸ்டாண்டில் அவள் நிற்கிறாள் என்றால்...கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்..இல்லேன்னா அவள் வாயில் விழ முடியாது என்பார்கள். நல்ல வேளை அவள் எங்களை விட மூத்த செட். அநேகமாக எங்கள் புறாக்கள் முதலாண்டோ இரண்டாமாண்டோ படிக்கிற காலத்தில் அவள் இறுதியாண்டை முடித்து விட்டாள்.எப்போதும் சேலை கட்டியிருப்பாள். அப்போதெல்லாம் லோஹிப் சாரி தமிழ் சினிமாவை லேசாக எட்டிப் பார்த்திருந்த நேரம். அந்நேரத் தமிழ் நடிகைகள், லோஹிப் கட்டினால் இடுப்பின் கருப்புத் தழும்பு மேக்கப்பை மீறித் தெரியும்.. ராஜ்யஸ்ரீ போன்ற இந்தி நடிகைகளை லோஹிப்பில் பார்க்கவே, ’ஷெனாய்’, ’பிரம்மச்சாரி,’ போன்ற படங்களை விரும்பிப் பார்ப்போம்.ராஜ்யஸ்ரீ மேல் அப்படியொரு பைத்தியம். அற்புதமான நடிகையும் கூட. அவர் பிரபல டைரக்டர் வி.சாந்தாராமின் மகள். ‘கீத் கயா பத்தரோன் நே’ (கற்கள் கவி பாடின-என்று தலைப்பை சரியாக மொழிபெயர்த்து குமுதத்தில் பிரமாதமான விமர்சனம் எழுதியிருந்தார்கள். குமுதத்தில் சிறப்பாக எழுதுவதென்பது அந்தக்காலத்தில் ரொம்ப அபூர்வம்.)

http://video.easybranches.com/video/4INDBRQVtuM/Geet-Gaya-Pattharon-Ne-from-Geet-Gaya-Pattharon-Ne-1964.html

ராஜ்யஸ்ரீ ஒரு அமெரிக்க மாப்பிள்ளையை –கிரிகோரி சப்மென் என்று நினைவு-மணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப் போட்டதற்கு தென்கோடியில் நாங்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து, துக்கம் அனுஷ்டிக்காத குறைதான்.அந்த திருமணமும் ரொம்ப நாள் நிலைக்கவில்லை என்பதற்கு அதிக சோகம் கொண்டோம், ”ஏன் நாமெல்லாம் இல்லையா”, என்கிற மாதிரி. பெர்னிக்கு ரஜ்யஸ்ரீயின் சாயல் என்று ஞானையா சொல்லுவான். அவன் அவளது வீட்டுப்பக்கம். அது அவ்வளவு உண்மையில்லை என்றாலும் பெர்னியின் உடல் ஒரு சிற்பம்தான். சேலையும் .... இடுப்பை விட்டு இறங்கட்டுமா என்று கேட்பது போல் அழகாகக் கட்டியிருப்பாள்.

பெர்னியின் அப்பா அருமையாக வயலினும், ஆர்கனும் வாசிப்பார். கொஞ்சம் ஹிட்லர் மீசையுடன் சற்றே கனமான நாகேஷ் போல இருப்பார். நாங்கள் “ஏலே, காக்கும் கரங்கள் நாகேஷ்...” என்று ஞானையாவிடம் கேலி செய்வோம்.. காக்கும் கரங்கள் படத்தில் ”திருநாள் வந்தது தேர்வந்தது..ஊர்வலம் போகின்ற நாள் வந்தது.. ஓட முடியாமல் தேர் நின்றது.....” என்று பி.சுசிலாவின் பிரமாதமான பாட்டு வரும் அதில் நாகேஷ் வயலின் வாசிப்பது போலவும் வரும்... ஞானையா, .”போடா அவர் சர்ச்சுல் வாசிச்சு நீங்க கேட்கணும்”, என்பான். நாங்கள் அதற்கும் கேலி செய்வோம். யாரிடம் என்ன பந்தயம் கட்டியிருந்தாளோ., பெர்னி ஒரு நாள் பஸ்ஸ்டாப்பில் வைத்து ஜம்மென்று தம் அடித்துக் கொண்டிருந்தாளாம்.. இதைக் கேள்விப்பட்டு பஸ்டாண்டிற்கு ஓடிப் போய்ப் பார்க்கப்போனோம்... அதற்குள் பஸ்ஸே போயிருந்தது.... அவள், அப்பாவுக்கு வளர்ப்புப் பிள்ளைதான்.இதைக் கேள்விப்பட்டு அவள் அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் என்றும் அவர், இரவு நெடுநேரம், எதுவும் பேசாமல் வயலின் வாசிக்க அவள் மண்டியிட்டு மன்னிப்புக் கோரினாள் என்றும் மறுநாள் வந்து ஞானையா சொன்னான். அப்போதும் நாங்கள் “ யாரு, காக்கும் கரங்கள் நாகேஷா, நீ தானலே சிகரெட்டே வாங்கிக் கொடுத்தியாம் ”என்று கேலி செய்து சிரித்தோம். ஞானையாவுக்கு கோபமே வராது. ஆனால் ஒரு நண்பனின் கல்யாண வரவேற்பிற்கு-அவனுக்குத்தான் எங்கள் குழுவிலேயே முதலில் திருமணம் நடந்தது, அப்பாவும் மகளும் வயலின் பெட்டியுடன் வந்திருந்தார்கள்.அவர் மணமக்களுக்கு கல்யாணப் பரிசாக அரை மணி நேரம் வயலின் வாசித்தார்.... அன்று பிரபலமான கிளாரினெட் கச்சேரி வேறு இருந்தது. கிளாரினெட் வாசிப்பவருடன் இணைந்தும் அவர் வாசித்தார், ஜுகல் பந்தி போல. வாசித்து முடித்துப் போகையில் நான் கவனித்தேன், கிளாரினெட்காரரின் கண்ணில் துளிர்த்த லேசான கண்ணீரை..ஆறு ஏழு வருட இடைவெளியில் நாங்கள் சற்று எங்கள் கேலிகளைக் குறைத்திருந்தோம். உண்மையிலேயே அற்புதமான வாசிப்பில் நெகிழ்ந்து போயிருந்தோம்.. நெகிழ்ச்சியை இரவில் எப்படிக் கொண்டாடினோம் புது மாப்பிள்ளை செலவில் என்பது சொல்லாமாலே தெரிந்திருக்கும்.

பெர்னியைத் திடீரென்று பார்த்ததும் ஆச்சரியத்தில் பேசாமல் நின்றேன். அவளும், “ ஏய் நீங்க...நீ... ஸ்டீபன் ஞானையா சேக்காளியில்லா... “ என்றாள். தெருவில் ஒன்றிரண்டு பேர் நின்று இதைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். நாய், குரைப்பை நிறுத்தியிருந்தாலும், இன்னும் அடங்கியபாடில்லை. அதை அடக்கியவாறே தெருவில் நின்றவர்களை “ என்ன ...?” என்று பார்வையாலே கேட்பது போல் பார்த்து விட்டு, ” வா உள்ளே” என்றாள். நான் எங்களது வீட்டின் மாடிக் கூரைக்கு பனங்கம்புகள் வாங்குவதற்காக அந்தத் தெருவில் ஒருவரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தேன். ஓடு போட்ட பழைய மாடி வீடு, அதன் பனங்கைகள் இற்று விழ ஆரம்பித்திருந்தன....”ஒன்று அதை மாற்ற வேண்டும் அல்லது ஓட்டுக் கூரையைத் தட்டி விட்டு செண்ட்ரிங் போடு” என்று அதை மேற்பார்க்கும் உறவினர்கள் வற்புறுத்தியதாலேயே கிடைக்காத லீவை எடுத்துக் கொண்டு வந்திருந்தேன்.

இன்னும் அதே துணிச்சலான தொனியும் ’அசால்ட்டான’ நடையும் போகவில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே நேரமாகிறதே என்கிற மாதிரியில் தயங்கி நின்றேன். அவள் ”என்ன...? “ என்று மறுபடி அதிகாரமான தொனியில் கேட்டதும்...கால்கள் மரியாதையாக உள்ளே சென்றன. இல்லையென்றல், ”போகிறாயா.. போ...”என்று கதவைச் சாற்றினாலும் சாற்றி விடுவாள். .நாய் சற்று அடங்கி வாலை ஆட்டியது,. “பார் ’டார்லின்’ சமாதானமாகி விட்டான்....நீ தாராளமாய் வரலாம் என்கிறான்... வா...” என்று சொல்லியபடியே அதை அவிழ்த்து விட்டாள். வீட்டினுள் சென்றாள்.அந்த வீடு ஏற்கெனவே எங்களுக்குப் பழக்கமான வீடுதான். நல்ல பெரிய வீடு. முன் வெராந்தாவில் உயரமான இரண்டு தூண்கள் மட்டும் இருக்கும்.இப்போது அது உயரத்திற்கு பெரிய மூங்கில் அழி அடித்து க்ரீப்பர்கள் எல்லாம் படர்ந்திருந்தது. நிறைய சிமெண்ட் தொட்டிகளில், க்ரோட்டன்ஸ், பின்சார்வெல்ஸ், பெரணீ, ரோஜா என்று செடிகளாக இருந்தன.ஆனால் அவையெல்லாம் சமீபமாகப் பராமரிக்காமல் இருப்பது போலிருந்தது.

பூபாலனின் ஆச்சி வீடு அது. அவனது ஆச்சி மட்டும் அவ்வளவு பெரிய வீட்டில் தனியே இருந்தாள். கூடமாட ஒத்தாசைக்கு பண்டாரம் பிள்ளை என்கிற தவசுப்பிள்ளை மற்றும் மேனேஜர். எல்லா வரவு செலவுகளும் அவர்தான். காலணா திருட மாட்டார். கல்யாணமும் பண்ணிக் கொள்ளவில்லை. அவருக்கு நான் அறியவே முப்பது வயதுக்கு மேலிருக்கும். அதாவது என்னையும் பூபாலனையும் விட இருபது வயதாவது கூட இருக்கும். ஆனால் எல்லோரும் அவரை நீ, வா, போ என்று ஒருமையில்தான் கூப்பிடுவார்கள். ஆச்சி கூப்பிடும் பழக்கம். அவரும் ஒன்றும் சொல்ல மாட்டார். எங்கே போனாலும் மடித்துக் கட்டிய எட்டு முழ வேட்டி மட்டும்தான். சட்டை மேல்த்துண்டு எதுவும் கிடையாது. கல்யாண வீட்டிற்கு போகும்போது மட்டும், போனால் போகிறதென்று ஒரு கதர்ச் சட்டை போட்டுக் கொள்வார்.அதையும் எப்படா கழட்டுவோம் என்கிற மாதிரி ஒரு தவிப்பு தெரியும். சில பெரியவர்கள், ”வே பண்டாரம் பிள்ளை, என்ன இன்னும் சட்டையோட அலையுதீரு, கல்யாணம் முடிஞ்சு மாப்பிள்ளை பொண்ணுக்கு நாலாம் நீர் சடங்கு நடக்கே..” என்று கேலி செய்வார்கள்.” எங்கெ ஐயா இன்னும் பொம்பளை பந்தியே முடியலையெ..நீங்க அதுக்குள்ளேயே ராத்திரி ஆன மாதிரி பேசுதீங்களே” என்று சிரிப்பார்.

பட்டாசல் இப்பொழுது டிராயிங் ரூம் ஆகி இருந்தது. நடுவில் சோஃபா செட், டீப்பாய், அழகான கண்ணாடித்தட்டில் கொஞ்சம் பழங்கள், டீப்பாய்க்கு கீழே பழைய ஆங்கில தினசரிகள், ஒரு ஆஷ்ட்ரே, என்று ஜாடை மாறி இருந்தது.முன்பு ரேடியோ கிராம் இருந்த இடத்தில் இப்பொழுது ஒரு டி.வி. பூபாலன் அம்மா வீடு அதற்கு இரண்டு தெரு தள்ளி இருந்தது.. பூபாலன், அதாவது பூரண பாலசுப்ரமணியன் ஆள் நல்ல வளர்த்தி, வீட்டில் அம்மாச்சி செல்லம். யாருக்கும் அடங்க மாட்டான். அவனது ஆச்சி பெரிய பண்ணையார் வீட்டு வாரிசு.எல்லாமே அவள் சொத்து என்பார்கள். அவன் ஆச்சி வீட்டிலேயேதான் இருப்பான். பத்து படிக்கும் போதே ஆச்சி அவனுக்கு, புல்லட் பைக் வாங்கித் தந்து விட்டாள். அவன் கேட்டானென்று குதிரை வாங்குவதற்கு பண்டாரத்திடம் சொல்லி அனுப்ப, அவர், விவரம் தெரியாமல், பாலனின் அப்பாவிடம் போய் நின்றிருக்கிறார். அவர் நேரே ஆச்சியிடம் வந்து, ”செல்லம் கொடுக்கதுக்கும் அளவில்லையா..... அத்தையம்மா” என்று சத்தம் போட்டுவிட்டுப் போய் விட்டார். அவர், வராதவர் வந்ததும், முகம் பார்த்துப் பேசாதவர் பேசியதும் ஆச்சி சற்று ஆடிப் போய்விட்டாளாம். ”ஏய், பண்டாரம் பட படங்கு, பானைச்சட்டி குடுகுடுங்குன்ன மாதிரி அவுக கிட்டயா போய் சொல்லுவே....அவுகளும்தான் எதுக்கு இப்படிக் குதிக்காக, ஏன் எங்க வீட்டில குதிரையும் சாரட்டும் இருந்ததில்லையாமா...” என்று அங்கலாய்க்க ஆரம்பித்திருக்கிறாள். எல்லா விஷயமும் கேள்விப்பட்டு பாலனின் அம்மா தன் அம்மாவை சமாதானப் படுத்த, போட்டதை போட்ட மாதிரி கைச் சோலி எல்லாம் விட்டுவிட்டு ஓடியே வந்து விட்டாளாம்.எல்லாமே பாலன் சொல்லிச் சிரிக்கிற, பெருமையடித்துக் கொள்கிற கதைகளில் ஒன்று.

நான் பெர்னியை நிமிர்ந்து பார்க்காமல், குனிந்தே பார்த்துக் கொண்டிருந்தேன். பேசவேயில்லை. அவளாகத்தான் ஆரம்பித்தாள் “ ஏய், அம்பிகாபதி, உங்க ஆளு அதாம்ப்பா உங்க அமராவதி கொஞ்ச நாள் இந்தா எதிர் வீட்டிலதான் குடியிருந்தா தெரியுமா.....””ஆமா இப்ப பத்திரிக்கைகளிலெல்லாம் எழுதறியாமே.. நீ நோட்டில் எழுதி வச்சிருப்பியே அந்த மாதிரி, நீளமான கூந்தலுக்கே காவியம் உண்டுன்னு அது மாதிரி அவ சுருள் சுருளான தலை முடிதான் உன்னை கிறுக்கனா அலையவிட்டிருக்கு, ஒரு நாள் குற்றாலத்தில பார்த்தேன் ஐந்தருவில வச்சு, எல்லா அருவிகள்ளையும் குளிச்சுட்டு பிசாசு மாதிரி தலை விரிஞ்சு கிடக்க ஐந்தருவிக்கு வந்தா பாக்கணும்....., எனக்குத் தெரியும் நீயும் அங்கதான் எங்கேயாவது இருந்திருப்பேன்னு.. . ஆனால் தேட முடியலை, அன்னக்கி பாலன் ஏகமா குடிச்சுட்டு காரிலிருந்து இறங்கவே கஷ்டப்பட்டான்......” சொல்லும்போதே குரல் கம்மத்தொடங்கியது. வலது கையிலிருந்த பிறை நிலா வடிவத் தழும்பை இடது கையால் தடவ ஆரம்பித்தாள். அவளுக்கு இடுப்பிலும் இதே போல் ஒரு தழும்பு உண்டு.

ஞானையா ஒரு ப்ளஸ் டூ பிள்ளையை டாவடித்துக் கொண்டிருந்தான். அதை எப்படி கணக்குப் பண்ணினான் என்றே புரியவில்லை. என்னையும் அழைத்துக் கொண்டு அவள் வீடு இருக்கும் ஒரு தெருவில் ராத்திரி எட்டுமணி சுமாருக்கு கிழக்கும் மேற்குமாக அலைந்து கொண்டிருந்தான். அந்த தெருவின் முடிவில் ஒரு வாய்க்கால். ஸ்டாப் பெயரே வாய்க்கால்ப்பால ஸ்டாப்தான். இரண்டு தடவை அலைந்தாயிற்று. மூன்றாம் முறை போனால் “ஏல யாராவது கட்டி வச்சிராமலே...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வீட்டிலிருந்து அந்தப் பெண் வெளியே வந்து உங்களுக்கு யாரைப் பார்க்கணும் என்று கேட்டது. அவளுக்கருகே ஒரு சேக்காளி .” இல்லை.... என் தங்கை.. குளோரின் ஒரு நோட்டு வாங்கி வரச் சொன்னாள்.....மனோ வீடு எது” என்று கேட்டான்..இதுதான் என்றது சேக்காளிப் பெண்.அதற்குள் அவளது சித்தி வெளியே வந்தாள். “ யாரப்பா தம்பி என்ன விஷயம்...” என்றதும் ஞானையா அதே கதையச் சொன்னான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு தொடை நடுங்கிக் கொண்டிருந்தது....”சரி கொடுத்து அனுப்பிட்டு வா என்றாள் சித்தி. அவள் ஒரு நோட்டைக் கொடுத்தாள்.”ஞாவகமா நாளைக்கி நோட்டைக் கொண்டு வரச் சொல்லிருங்க...”என்று சத்தமான சிரிப்புக்கிடையே சேக்காளிப் பெண் சொன்னது.

இரண்டு பேருக்குமே வெலவெலத்துப் போனது.நோட்டுக்குள் காதல் கடிதம் வேறு. நான் படிக்கிற முதல் காதல்க் கடிதம் அதுதான் என்று நினைக்கிறேன்.” இயற்கையெனும் இளைய கன்னி (மனோ), ஏங்குகிறாள் துணையை (ஸ்டீபன்) எண்ணி ....”என்று ஆரம்பித்து புகுந்து விளையாடி இருந்தது பெண். சித்தியின் கொடுமை பற்றி அங்கலாய்ப்பு வேறு. ஞானையாவுக்கு நோட்டை எப்படி திரும்பக் கொடுப்பது என்று ஒரே யோசனை. மறுநாள் அவனே எப்படியோ கொடுத்து விட்டான். இதில் வேடிக்கை, அந்தப் பெண்ணுக்குப் பதில் எழுத என்னிடம் கவிதைகள் கேட்டிருந்தான். நான் என் கவிதை நோட்டைக் கொடுத்து விட்டு, ஏங்கிக் கொண்டிருந்தேன். என் நோட்டைத்தான் பெர்னியிடமும் காட்டியிருக்கிறான், ஸ்டீபன். அவள் என்னை அழைத்து வா, பார்ப்போம் என்றாளாம்.”ஏய் யார் இந்தக் காதலன், வார்த்தையிலேயே தாஜ்மகால் கட்டியிருக்கிறான், ஆளைக் கொஞ்சம் காண்பி பார்ப்போம்“ என்றாளாம்.சொன்னதோடு சரி, நானும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்தேன். அவளைச் சந்திக்க தைரியமில்லை. ஆனால் ஓரிரு முறை சந்தித்தேன். பெர்னியின் கண்ணில் கண்ணீர் துளிர்த்திருந்தது. அப்போதுதான் என் கண்ணில் பட்டது பூபாலனின் மாலையிட்ட படம். ஆகா, யாரோ சொன்னார்களே அவன் இறந்து போனதாக என்று நினைவு வந்தது.பக்கென்றிருந்தது வயிற்றுக்குள். பெர்னி இன்னும் தழும்பையே வருடிக் கொண்டிருந்தாள். அதில் தனக்குத்தானே அவள் எதையோ கண்டு கொண்டது போலிருந்தது. வருடுவதை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். எல்லாம் பழங்கதை என்பது போல சோகமான முறுவல் ஒன்று உதட்டில் நெளிந்தது. பழங்கதை என் நினைவில் ஆடியது அன்று திடீரென்றுதான் திருச்செந்தூர் போகலாம் என்று முடிவெடுத்தோம். பூபாலன் கார் எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தான். அநேகமாக எல்லோரும் வேலை தேடுகிற வேலையைத்தான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தோம்.அவனுக்கு வேலை பற்றியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை.நன்றாகத்தான் பழகுவான். ஆனாலும் ஏனோ ஒரு ஒட்டுதல் இருக்காது. எப்போதும் ஒரு பெட்டிக்கடை முன் நின்று அரட்டை நடக்கும். திடீரென்று வருவான். பைக்கில் அமர்ந்தபடியே, யாரிடமாவது, ”ப்ரதர் என் கணக்கில் ஒரு சிகரெட் வாங்குங்க” என்பான், ”அப்படியே உங்களுக்கும் வாங்கிங்க” என்பான். அதைக் கேட்கும்போது எனக்கெல்லாம் எரிச்சலாயிருக்கும். அவனே இறங்கி வாங்கிக் கொண்டாலென்ன என்றிருக்கும். அவன் நடவடிக்கை, கதையாடல் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.

பொதுவாக நான் அவனிடமிருந்து சற்று விலகியே இருப்பேன். காரை இன்னொருவன் எடுத்து வந்தான். நிறையப்பேர் சேர்ந்து விட்டதால், சிலரைக் கழிக்க வேண்டியதாயிற்று.சிலர் பஸ்ஸில் வருவதாகச் சொன்னார்கள் நானும் பஸ்ஸில் போகவே பிரியப்பட்டேன்.ஆனால் என்னைச் சிலர் காரில் வரச் சொல்லி கட்டாயப் படுத்தினார்கள்.சில அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் கேட்டுக் கொண்டே போகலாம் என்றோ என்னவோ. காரில் போகையில்தான் சொன்னார்கள், பாலன் பைக்கில் வரப்போவதாகவும் அவனுடன் யார் வரப்போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்றும். எங்களில் சிலருக்கு பராபரியாக காதில் விழுந்திருந்த செய்திதான், பூபாலனும் பெர்னியும் நெருக்கமாயிருக்கிறார்கள் என்று. பெர்னியுடன் இரண்டு மூன்று பேரை நெருக்கமாக்கி பேச்சு அடிபட்டு அது மறைந்துவிட்டது. ஸ்டீபன், நாணிக் கோணி சமர்ப்பித்த ‘வேட்புமனு’வை நிராகரித்து....”எதற்கு எனக்கு, தலை மாட்டில் உட்கார்ந்து கதைப் புஸ்தகம் படிக்கப்போறியா...” என்று கிண்டலடித்து அனுப்பியதாக பாலனே சொல்வான்.

நாங்கள் பின் சீட்டில் அமர்ந்து கதை பேசிக் கொண்டு வந்தோம். பாதி வழியில் திடீரென்று பைக் ஒன்று எங்களை முந்தியது.பாலனும் அவளும்.. பாலனை இடுப்பைச் சுற்றிக்கட்டிப் பிடித்திருந்தாள். அப்போது பார்க்கையில் பாலனை விட சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். திடீரென்று கார் அவர்களை முந்தியது. மறுபடி பாலன் முந்துவதற்கு முயற்சித்தான். கொஞ்ச நேரம் இந்த தொட்டுப்பிடி விளையாட்டு நடந்தது. சற்று நேரம் கழித்தே பார்த்தேன் திடீரென்று பாலன் காரை இடது கையால் தட்டியபடி கத்திக் கொண்டே வந்தான். யாருக்கும் புரியவில்லை.. இங்கே காருக்குள் சிகரெட் பற்றவைக்கும் முயற்சியில் எல்லோரும் தோற்றுக் கொண்டிருந்தார்கள்.என்ன நடந்தது என்று நிதானிக்கும் முன் அவளை அவன் கீழே தள்ளினான். அவன் காரோடு இழுபட்டுக் கொண்டே பைக்கை ஓட்டி வந்தான். அவனுடைய பம்பர் காரின் பம்பரில் சிக்கிக் கொண்டது போலிருக்கிறது. எங்கள் கூக்குரலைக் கேட்டுக் கார் ஒருவழியாய் நின்றது. குறைந்தது ஒரு கிலோ மீட்டராவது வந்த பாதையிலேயே ஓடி இருப்போம் நானும் இன்னும் இரண்டு பேரும். பெர்னி சாலையோரம் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தாள்., நல்ல மத்தியான வேளை, அதனால் பெரிய போக்கு வரத்து ஒன்றுமில்லை.பெர்னி எழுந்து நின்றாள். அப்பாடா என்றிருந்தது. அதற்குள் கார், பின்னால் வந்தது. பாலனுக்கு நல்ல அடி, காருக்குள்ளிருக்கிறான் என்றார்கள்.

அவள் தன் வீட்டுக்குப் போகத் தயங்கினாள். வீட்டில் என்ன சொல்லிவிட்டு வந்திருந்தாளோ. பெர்னியை, ஆச்சி வீட்டில் கொண்டு சேர்ப்பது என்று பாலனின் யோசனையின் பேரில் முடிவாகி, அது என் பொறுப்பாயிற்று..ஏனென்றால் பாலனின் ஆச்சியை எனக்குத்தான் கொஞ்சம் தெரியும். ஒரு வகையில் தூரத்து உறவு. ஆச்சிக்கு இது பிடித்தமில்லை, என்னை யாரென்று விசாரித்துக் கொண்டிருந்தாள் எனக்கு உறவு வழிகளைச் சொல்லத் தெரியவில்லை, விரும்பவுமில்லை.. நான் ஆச்சியிடம் உறவையும் காரண காரியங்களையும் விளக்கும் முன்பாகவே பாலன் வந்து விட்டான். நிறையக் கட்டுப் போட்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஆச்சியின் கோபமெல்லாம் போய் அழுகை வந்து விட்டது. நான் நழுவி விட்டேன்.

இந்த சங்காத்தமெல்லாம் ஓய்ந்து முடிந்தது. அவ்வப்போது அவர்கள் கதை சபைக்கு வரும். பாலனை விட அவளுக்கு நான்கு வயதாவது அதிகம் இருக்கும். அவன் ‘மாட்டிக்கொண்டான்’ என்றே எல்லோரும் பேசினார்கள். ஸ்டீபன் மிலிட்டரியிலிருந்து லீவில் வந்திருந்தான். ஒரு நாள் மதியம் போல ஸ்டீபன் வீட்டு மாடியிலிருந்து அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். அன்று அவன் வீட்டில் பிரியாணி என்று சாப்பிடக் கூப்பிட்டிருந்தான். ஒரு வித்தியாசமான முகப்பவுடர் மணம் மாடிப்படியேறி வந்தது. ரொம்ப ஸ்ட்ராங்கான மணம். யார் என்று பார்த்தால் பெர்னி..நான் ஒரு மேஜையின் ஒருபுறம் உட்கார்ந்திருந்தேன். எதிர் முனையில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவள் உட்கார்ந்தாள். ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் சாவகாசமாகப் பார்ப்பது அதுதான் முதல் முறை. திடீரென்று என்னிடம், ”ஹேய், நீங்கதான் ஸ்டீபன் சொன்னதா... ஆமா யார் அது. உங்கள் கவிதைக்காதலி என்று நேராகக் கேட்டாள். ஹி ஹி என்று தயங்கிக் கொண்டே சொன்னேன். ”ஓ... அதுவா... அது நல்ல பெண்ணாயிற்றே... அவளும் உண்டா...” என்றாள்...” இல்லை இல்லை என்று அவசரமாக மறுத்தேன். ஸ்டீபன் உன் கவிதை நோட்டுகளை வைத்திருந்தான்.. நானும் பார்த்தேன்..என்றாள்.”நீளமான கூந்தலுக்கே காவியம் உண்டு என்று முதல்ப்பக்கம் எழுதியிருந்ததைப் படித்தேன்......அது என்ன, இதுவா நீளமான முடி..”என்று அவள் முடியைக் காண்பித்தாள். ”இல்லை, அது கண்ணதாசன் பாட்டு... ”என்றேன். ஸ்டீபன் அவள் ரொம்ப சங்கோஜமில்லாத டைப், பட் பட்டென்று மனதைப் படம் பிடித்துவிடுவாள் என்று சொல்லியிருக்கிறான், என்றாலும் என்னவோ போலிருந்தது.

அவன் மேஜையில் தி.ஜா வின் இரண்டு நாவல்கள் இருந்தன. ’மலர் மஞ்சம்’, ’அன்பே ஆரமுதே’. பலத்த தேடலுக்குப்பின் ஒரு லைப்ரரியிலிருந்து நான் எடுத்து வந்திருந்தேன். அதை எடுத்துப் பார்த்தாள். “மோக முள்’ இருக்கா என்றாள். இவள் என்ன மாதிரியான பெண், உண்மையில் இதையெல்லாம் படிக்கிற நம்முடைய ஜாதியா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.”எங்க ப்ரொஃபஸர் சொல்லுவார்..அது ரொம்ப நல்ல நாவலாமே...காதல் எல்லாம் சும்மா, வெறும் உடம்பு மட்டும்தான் எல்லாமுமே என்று சொல்லியிருப்பாராமே...”என்றாள். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.அவள் வலது கையில் தழும்பு நல்ல தடிப்பாய் பிறை மாதிரி இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இது அன்றைய விபத்தில் ஏற்பட்டது. இதோ இடுப்பில் இன்னும் பெரிதாய்க் கிழித்து விட்டது” என்று எழுந்து நின்று இடது வயிற்றைக் காட்டினாள்.வயிற்றின் சரிவில் சேலையை ஒட்டி.....தழும்பு நீளமாய் உள்ளிறங்கியது. ”அவன் இதைத்தான் எப்போதும் தடவிக் கொண்டேயிருப்பான்” என்றாள் திடீரென்று. நான் மச்சு வெக்கையில் சட்டை வேறு போட்டிருக்கவில்லை. அதனால் ரொம்ப நெளிந்து கொண்டிருந்தேன் ”அவன் என்னை இப்போதெல்லாம் ரொம்பத் தவிர்க்கிறான்...சொல்லி வை, என் குணம் எல்லோருக்கும் தெரியுமில்லையா...” என்றாள். “நீங்கள் இதை ஸ்டீபனிடம் சொல்லுங்களேன் அவன்தான் அவனுக்கு நெருக்கம்., உங்களுக்கும் சொந்தம்” என்றேன். “அவனுக்கு என்ன தெரியும், எங்களுக்கு மிலிட்டரியிலிருந்து ரம் வாங்கிவந்து தருவான், வேறு என்ன செய்வான்” என்றாள்.

என் மௌனத்தைப் பார்த்தோ என்னவோ. ”சரி நான் போகிறேன், சும்மா காதல் கத்திரிக்காய் எல்லாம் விட்டு விடு....இப்போ நான் சம்மதிச்சா என்னை தொட்டுப்பார்க்க மாட்டியா” என்றாள்.. வெறுமே எச்சிலை விழுங்கிக் கொண்டேன்.”நானே பார்க்கிறேன் அவனை. முடிஞ்சா சொல்லு” என்று மிரட்டுகிற தொனியில் சொல்லி விட்டு இறங்கிப் போனாள். நான் சாயுங்காலம் இதை சபையில் சொன்னபோது “போடா நீ தான் கடைசி ஆள். அவ..............

more: http://koodu.thamizhstudio.com/thodargal_7_18.php




வெட்கத்திலான காதல் - அய்யப்ப மாதவன்


வெட்கத்திலான காதல்

அய்யப்ப மாதவன்

மல்லிகை சரத்தினைச் சூடிக்கொள்ளும் காட்சியிலிருந்து
முறிந்திருந்த அவள் காதலை மீட்கிறேன்
வெட்கத்தில் அலர்ந்தவளிடம் என் முழு உடலை
அன்பளிப்பாக்க முடிவுசெய்கிறேன்
ஈரச்சேலையுடன் மேலாடை அணியாமல்
குளியலறையிலிருந்து என்னைக் கடந்து செல்கிறாள்
நீள்கிற கற்பனையில் அடங்க மறுத்த உடலை
குளிர்விக்கப் பார்க்கிறேன்
மென்மேலும் அரைநிர்வாணத்தினழகில் கடக்கும் அவளின்
நினைவில் அவள் மீதான பற்றில் இறுகுகிறேன்
என் முன் குவியும் உதடுகளால்
சொர்க்கத்தின் அதீத சுகத்தை வழங்குகிறாள்
விதி பூட்டிய இரும்புச் சங்கிலியில்
ஒரு பைத்தியமென அவளற்ற அறையில்
வேறொரு பெண்ணுடன் பிதற்றுகிறேன்
விரும்பிய போதையோ பெண்ணோ கிடைக்காத
அபாக்யத்தில் காலம் நரைத்துக்கொண்டிருக்கிறது
புனைவு செய்கிற ஆற்றலில்லாத மனிதனாயிருந்திருந்தால்
எப்போதோ நான் தற்கொலை செய்திருக்கக்கூடும்
கசப்பேறிய வாழ்வைக் கடக்க என் புனைவுருவாக்கத்தில்
என் காதலியுடனான பழைய ஞாபகங்களை மீட்டு
ஆயுளை நீட்டித்துக்கொள்கிறேன்
இக்கணம் அவளின் கன்னங்களில்
என்னை எழுதுகிறேன்
அவள் உடலை காகிதங்களாக்கி எண்ணற்ற
கற்பனைகளை வரையுறுமாறு பணிக்கிறாள்
அக்கூடாரத்தினிடையே கலவியின் கூக்குரல்
என் பித்தேறிய காதலின் சாட்சியாகிறது
நான் பகலினூடே அகத்தில்
புரண்டோடும் நதிபோல அவளைச் சுமந்து
நகரினூடே அன்றாட வலியுடன் கரைகிறேன்
அவளின் நாணத்துடனான சிரிப்பு
என்னை உயிர்ப்பித்தவாறு தினமுமிருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------

சுடுநீர் பச்சை நீர்

தாமதமாய்ப் பிடிக்கும் நித்திரையில்
அழுத்தி நசுக்கும் வாழ்வின் இடர்கள்
கனவுகளாகும் சமயம் அரண்டு எழுந்திருக்கிறாள்
வழக்கமாய் விரைந்தோடும் குருதியினுள் ஓடி
அலுவலகத்தைச் சபித்துக்கொண்டு
பேருந்தில் ஒடுங்கி மறைகிறாள்
எனக்காய் இரவின் மீந்தவற்றை
காலை மதியம் உணவாக்கிக் கொள்ளுமாறு
கேட்டுச் சென்றிருந்தாள்
நளபாகனாயில்லாத நான் அவளுக்காய் தினமும்
காப்பிமட்டும் போட்டுத்தந்துகொண்டிருக்கிறேன்
அப்புறம் பாத்திரங்களைக் கழுவித் தந்துக்கொண்டிருக்கிறேன்
நீர் அடித்துக்கொடுப்பேன்
குளியலுக்கான சுடுநீர் பாத்திரத்தை
பச்சைநீரோடு கலந்துகொடுக்கிறேன்
நேரம் ஆக ஆக என் ஒப்பேறாத வாழ்வினைக் குடைய
நான் அவளுக்கு அளித்த சுடுநீர் பாத்திரம்போலாவேன்
நாழிகைக்கு பின் அப்பாத்திரம்போல் குளிர்ந்துதான் போவேன்
பலசரக்கு வாங்கி வைக்க பட்டியல் தந்திருப்பாள்
அவளுக்கான விஸ்பரையும்
காகிதம் சுற்றி வாங்கிக்கொள்வேன்
மீதமாகும் காசுகளைக் கொடுத்து
நாணயஸ்தன் என்ற பெயர் எடுத்துவிட்டேன்
மாலைப்பொழுதின் வரவில் இரவின் குளிர்ச்சியுடன்
அலுவலகம் முடித்த திருப்தியுடன் வருவாள்
பால் காய்ச்சி சுடச்சுட காப்பி தருவேன்
காப்பிக்கிடையே அவளின் அலுவலகத்தின் வேதனைகளை
என் கபாலத்தினுள் அள்ளி எறிவாள்

more: http://koodu.thamizhstudio.com/ep_kavithaigal_3.php



Monday, March 21, 2011

வலது புறம் செல்லவும் - இயக்குனர் அகத்தியன்





இயக்குனர் அகத்தியன்21-03-2011, 11.45 PM

வணக்கம்

உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி, சுஜாதா சார் ஒரு சிறுகதை எழுதியிருக்காரு, ஒரு பொண்ணு பாண்டிபஜார்ல பஸ்சை விட்டு இறங்குவா, பின்னால வந்தவன் செருப்பை மிதிச்சு அறுத்துருவான், செருப்பு வாங்கிக் கொடுப்பான், ஆறுமாசத்தில வயித்துல ஒரு கொழுந்தையோட தற்கொலை பண்ணிக்கப்போவா, மேலே இருந்து ஒரு தேவதூதன் வருவான், தற்கொலையை நிறுத்துவான், என்ன வரம் வேணும் கேளும்பான், ஆறுமாசத்துக்கு முன்னால இருந்த மாதிரி ஆகணும்பா, அப்படியே ஆயிடுவா.

அதுசரி, இங்க, இப்ப, இந்தக் கதை எதுக்கு?

எனக்கும் ஒரு ஆசை, மேலே இருந்து ஒரு தேவ தூதன் வரவேண்டும், என்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க வேண்டும், எல்லோரும் நல்லவர்களாக மாற வேண்டும், உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கேட்க வேண்டும், அது கிடைக்க வேண்டும்,

“அப்படி ஒண்ணு கெடைச்சுட்டா அதை வச்சிகிட்டு என்ன பண்ணப் போறீங்க”,

“அப்படி ஒண்ணு கெடைச்சிருச்சுனு வைச்சுக்குங்களேன். இந்த நிமிஷத்துலேர்ந்து உலகத்துல இருக்குற எல்லோரும் நல்லவங்க ஆயிடுவாங்க, உண்மையை மட்டுந்தான் பேசுவாங்க”,

“மாறிட்டா?”
“ஆமாம்,,”
“சரி சொல்லுங்க”

ஆடு திருடிய வழக்கில் கைதான ராசா மட்டன் பிரியாணி யார் யார் சாப்பிட்டாங்கனு சொல்லிடுவாரு (நன்றி: kolaaru@twitter.com)

சுப்ரமணிய சாமி நான் பேசுனா , என்னனு சொல்லிடுவாரு,

63 நாயன்மார்களை எப்படி நாத்திகம் ஒத்துக்குச்சுனு நாட்டுக்குத் தெரிஞ்சிடும், அதவிடுங்க, போனவாரம் போன் பண்ணி இன்னும் பத்து நாள்ல குடும்பத்தோட ஊருக்கு வர்றேன் மாமானு சொன்ன பொண்ணு. “மாமா எலக்ஷன் வருது. ஆறு ஓட்டு, ரெண்டு பக்கமும் ஆறுரெண்டு பன்னிரெண்டு, எலக்ஷன் முடிஞ்சு வர்றேன்”னு சொல்லிருச்சு, நான் சொன்ன மாதிரி வரம் கெடைச்சா,

“மாமா நேர்மையாயிட்டேன், நாளைக்கே வர்றேன்,

“நாளைக்கு எப்படி வருவே, ஆறுபேரு, டிக்கெட் கிடைக்கணுமே”

“எல்லோரும் நல்லவங்க ஆயிட்டாங்க மாமா,”

“ஏஜெண்டெல்லாம் புக்கிங்கை கேன்சல் பண்ணிட்டாங்க கவுண்டர்லயே டிக்கெட் கெடைக்குது,,,”

கொஞ்சம் கண்மூடிப் பாருங்கள், எத்தனையோ நிர்வாணமான பெண்கள் சேதப்படுத்தப்படாமல் உடைகள் அணிந்து கொள்கிறார்கள், அதில் நமக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கலாம்,

“சத்தியமா நான் உன்னை ஏமாத்தத்தான் காதலிச்சேன் என்னை மன்னிச்சிடு”

“நான் உன்னைக் காதலிக்கும்போதே அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுடா”,

“அய்யோ,,, நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேங்க,"

“போன வாரம் நான் இதுமாதிரி நல்லவனா மாறி இருக்கக் கூடாதா, உன் தங்கச்சியையும் என்னையும் மன்னிச்சிடு,,,,”

காதுகளில் மன்னிப்புகளின் மணி அடித்துக் கொண்டே இருக்கும்,

பெரியோர்களே, தாய்மார்களே,

“இதுவரை அரசியல் வாழ்க்கையில் நான்செய்த கற்பழிப்புகள். கொலைகள். மோசடிகள். ஏமாற்றுக்கள். சம்பாதித்த பணம் இப்படி எல்லாவற்றையும் இந்த மக்கள் மன்றத்தில் சொல்லி உங்கள் மன்னிப்பைக் கோர வந்திருக்கிறேன்”,

ஒரு அரசியல் மேடையில் இப்படியும் கேட்கலாம்,

சிக்னலை மீறாத போக்குவரத்து. சிக்னலை விட்டு தள்ளி மறைந்து நின்று வாகனங்களை புலிபோல் பாய்ந்து மடக்கி பணம் பறிக்காத போக்குவரத்துத்துறை, காவல்நிலையத்தில் உண்மை பேசும் குற்றவாளி, குற்றவாளியை அவனது அம்மாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்காத காவலர், இப்படி எல்லா இடங்களிலும் ஒழுக்கம். உண்மை. நேர்மை, யோசிக்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னவோ இடிக்கிறது,

“எல்லோருமே நல்லவங்க ஆயிட்டா அப்புறம் எதுக்கு காவல்துறை - நீதிமன்றம்?”

அப்துல்கலாமுக்கு அரெஸ்ட் வாரண்டும். குஷ்புவுக்கு Community Certificate-ம் வாங்கி அப்புறம் மீடியா எப்பிடி பொழப்பு நடத்துறது, தினத்தந்தியில கள்ளக்காதல் வராது, சதக் சதக் வராது, அது இல்லாம யாரு படிப்பாங்க? வனிதாவும் விஜயகுமாரும் சண்டை போட்டுக்கிட்டாதானே News, சமாதானம் ஆயிட்டா Loss இல்லீங்களா? N.D.T.V., CNNIBN, Times Now, Headlines Today எல்லாத்தையும் இழுத்து மூடிடணும், தினமும் 9 மணி Debated க்கு எந்த விஷயமும் கெடைக்காது, அப்பறம் கத்திக்கத்தி எப்படிப் பேசுறது,

தாடி வச்சுகிட்டு பக்கத்துல அமர்ந்து பயணிக்கிற முஸ்லிம் நண்பனை தீவிரவாதியோ என சந்தேகிக்க முடியாது, நற்செய்திக் கூட்டங்களில் முடவர்கள் நடக்க மாட்டார்கள், குருடர்கள் பார்க்க மாட்டார்கள், வாயும் பேசாது, காதும் கேளாது, தேவன் யாருக்காகவும் 12B பஸ்-ஐ 5 நிமிடம் தாமதப்படுத்திய காட்சி இருக்காது. முஸ்லிம் நாட்டில் முஸ்லிமைப் பிடிக்காமல் முஸ்லிமே குண்டுவைக்க மாட்டான், ராமஜென்ம பூமியும் ராமர்பாலமும் உண்மையைச் சொல்லி விடுதலை அடையும், இந்திய சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமிப்பதும் இல்லை என்ற ஆணவம் மறைந்துபோகும்,

நீதிமன்றங்களை மூடி விடலாம், காவல்நிலையங்களை மூடிவிடலாம், முதல்வர் பேருந்தில் பயணிப்பார், இலவசங்கள் இல்லாமல்போகும், நேரடி. மறைமுக பிச்சைக்காரர்கள் மறைந்து போவார்கள், உலக நாடுகள் ஆயுதச் செலவை ஒழிக்கும், ஒபாமா குனிந்து இன்னொரு முறை எந்தப் பெண்ணின் பின்னழகையும் ரசிக்க மாட்டார்,

2600 வருடங்களாக புத்தரை இறுக்கி கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பது நாம் தவறாக இருப்பதால்தான், நல்லவர்கள் ஆனதும் புத்தரைத் தூக்கிப்போட்டு விடலாம், இயேசு தேவைப்படமாட்டார், நபிகள் நாயகம், ம்ஹும்... வேண்டவே வேண்டாம், காந்தி, எதுக்குங்க அவரெல்லாம் நாம ஒவ்வொருவருமே ஒரு சத்தியசோதனை எழுதுவோம், அவ்வளவு உண்மை, நித்யானந்தா கூட கல்யாணம் செய்து கொள்வார், யாரை என்பது கேள்வியாக இருக்காது, எத்தனை பேரை என்பதுதான் கேள்வியாக இருக்கும், ஒன்றுமட்டும் உண்மை, உலகம் காவி கட்டாத சாமியாராகி விடும், “நித்யானந்தா சாமியார் இல்ல, இமயமலை சாமியார்”,

“என்னங்க உலகம் சாமியாராயிட்டா போரடிக்காதா”,

“கண்டிப்பா,” நம்பியார் இல்லாத எம்ஜிஆர் சினிமா மாதிரி போரடிக்கும்,

பைபிளே பொய்யிலயும் கொலையிலயும் தான் ஆரம்பிக்குது, கண்ணன் அர்ச்சுனனைக் கூப்பிட்டு கொலை பண்ணச் சொல்றான், நபிகள் வாளேந்தித்தான் இஸ்லாத்தை வாழவச்சாரு,

ராமன் வந்தது ராவணனைக் கொல்றதுக்கு, ஆனா புத்தர் வந்தது கொல்லாமையை போதிக்கிறதுக்கு, பாண்டவர்கள் அஞ்சு ஊரோ அஞ்சு வீடோதான் கேட்டாங்க, கொடுத்திருக்கலாம், நூறு அண்ணன் தம்பிக்கும் ஆசை - பேராசை, ஆசையே துன்பத்துக்கு காரணம்னு அப்ப புத்தர் வந்து ஏன் சொல்லலை?

சரி, நமக்கு எதுக்குங்க அதெல்லாம் எல்லோரும் நல்லவங்க ஆயிட்டா உலகம் இமயமலை சாமியாரா ஆயிடும், நம்பியார் இல்லாத எம்,ஜி,ஆர், படம் மாதிரி போரடிக்கும்,

அப்பறம், அரசாங்கமே குற்றம் செய்தால் பரிசுனு அறிவிக்கும், மஞ்சள்கோட்டை தாண்டினால் 50 ரூபாய் பரிசு, கற்பழித்தால் தங்கமெடல்,

அப்பத்தானே இயக்கம் இருக்கும், எதிர்விசை இல்லா இயக்கம் எப்படி சாத்தியம், கர்த்தருக்கும் சாத்தானுக்கும் தானே உடன்படிக்கை,

அப்பிடின்னா "சரி” மட்டும் இருந்தா போதாது, “தவறும்” இருக்கணும், அப்பத்தான் இயக்கம், புத்தர். ஏசு. நபிகள் பேச்சைக் கேட்டு எல்லோரும் திருந்திட்டா பூமி போரடிச்சிடும்,

நல்லதுங்கிறது உதாரணத்துக்கு கெட்டதுங்கிறது உபயோகத்துக்கு, 'கோட்சே'ங்கிற கெட்டதுனால காந்திங்கிற நல்லது உதாரணமா இருக்கு, கோட்சே மட்டும் சுடலைனா காந்தி ரொம்ப நாள் இருந்து நெறைய வம்புல மாட்டி இருப்பாரு,

ஆஸ்வால்ட் கென்னடியை சுடலைன்னா பில்கிளிண்டன் ரேஞ்சுக்கு காணாம போயிருப்பாரு, இப்ப மோனிகா லெவின்ஸ்கினா அப்ப மர்லின் மன்றோவா இருந்திருக்கும், அப்ப யார் யாருக்கெல்லாம் கெட்டது நடந்துச்சோ,

அதனோட உபயோகமா நல்லது உதாரணம் ஆயிடுச்சு, பைபிள்ல யோவான்ல இருந்து - நம்ம அன்னை இந்திரா காந்தி உட்பட,

ஐ.கே. குஜ்ரால். தேவகௌடா. நரசிம்மராவ். மொரார்ஜிதேசாய். வாஜ்பாய் இவங்களை எல்லாம் யாருனு ஞாபகம் இருக்கா?

ஆக “கெட்டது” என்பதும் வாழ்க்கையோட ஒருபகுதி, ஒருவனை மற்றவன் அடித்ததனால்தான் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற அகிம்சையை ஏசுவால் போதிக்க முடிந்தது,

ஒருத்தி பாலியல் தொழிலாளியாக இருந்த காரணத்தினால்தான் உங்களில் பாவம் செய்யாதவர் முதல் கல்லை எறியட்டும் என்ற உன்னதமான தீர்ப்பினை வழங்க முடிந்தது,

மனிதாபிமானமற்ற சமூகம் இருந்ததினால்தான் உன்னைப் போல் பிறரை நேசி என்ற மனிதவளச் சிந்தனை ஏசுவுக்கு தோன்றியது,

ஆசைப்பட்டதினால்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னார்,

“நாம தப்பு பண்ணுனாத்தான் மகான்களுக்கே பூமியில வேலை, இல்லேனா நாமளே மகான்கள் ஆயிடுவோம்”,

சரி! இவர்களை மகான்கள் ஆக்குவதற்கு நாம் செய்கின்ற தப்பை ஒழுங்காச் செய்கிறோமா? கூட்டிக் கழித்துப் பார்த்தால் “இல்லை” (லா,சா,ரா, வுடையது)

“பண்ற தப்பை எப்படி ஒழுங்கா பண்றது?”

வணக்கம்..

உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி, பண்ற தப்பை எப்படி ஒழுங்காப் பண்றதுனு நாம கொஞ்சம் பேசப் போறோம், இந்த இரண்டாவது வணக்கம் இதைத்தொடர்ந்து படிப்பவர்களுக்காக.

அந்தக் கதையில - அதாங்க சுஜாதா சார் கதையில வரம் கெடைச்ச உடனே அந்தப் பொண்ணு அவ கேட்டபடி ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி அதாவது பழைய மாதிரி ஆயிடுவா, அப்பறம்?, மறுபடியும் அவ பாண்டிபஜார்லேர்ந்து பஸ்ஸ விட்டு இறங்குவா.

“அப்படினா நடக்கணும்னு இருக்குறது நடந்தே தீருமா?”

“அதப்பத்தியெல்லாம் நாம இப்ப பேச வேணாம்”

“சரிங்க”

“நீங்க குடிப்பீங்களா?”

“ம், குடிப்பேன்”

“அது தப்புனு நெனைக்கிறீங்களா?” எல்லோரும் சொல்றாங்க, அதுனால நானும் அப்படித்தான் நெனைக்கிறேன்.

அப்ப ஜீசஸ் ஒயின் குடிச்சாரு, கல்யாணத்துல ஒயின் பத்தலைன உடனே தயாரிச்சாரு, அவருகிட்டே கேட்டிருந்தா இப்பிடித்தான் பதில் சொல்லியிருப்பாரா?

ஆனா Contrast பாருங்க, நபிகள் குடிக்கிறது தப்புனு சொன்னாரு,

காந்தி நபிகளை follow பண்ணுனாரு, பக்கத்துல இருந்த ஜின்னா ஜீசஸ் follow பண்ணுனாரு, குடிக்கிற விஷயத்துல மட்டும் விஸ்கிக்கும் மூன்றெழுத்து - ஜின்னாவுக்கும் மூன்றெழுத்துனு யாராவது கவிதை கூட எழுதலாம்,

நம்ம ஊரு ஐயனாரு சாராயம் குடிக்கிறாரு, இப்ப கொஞ்சம் Brandy, Whiskey வரைக்கும் வந்திருக்காரு, டெல்லியில காளிமாதா Brandy குடிக்கிறாங்க, எல்லா சாமியுமே சோம பானம். சுராபானம் குடிச்சவங்கதான்.

எனவே தோழர்களே பெரியர்கள் எல்லாம் குடித்த ஒன்றைத்தான் நாமும் குடிக்கிறோம், (விருப்பமுள்ள தோழியர்கள் தோழர்களுக்குப் பக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம்,)

ஆனா ஒரு பிரச்சனை, அவங்க குடிச்சா வரலாறு ஆகுது, நாம குடிச்சா வாந்தி ஆகுது,

ஆக பண்ற தப்பை நமக்கு ஒழுங்காப் பண்ணத் தெரியலை,

ரொம்பப் பேசிட்டேன்..

இந்த வாரம் வரைக்கும் இதுவரையில குடிச்ச மாதிரியே குடிங்க..

அடுத்தவாரம் மாத்திக்கலாம்..

அன்புடன்
அகத்தியன்.


கொற்றவை : வரலாற்றுக்கு முந்தைய தமிழகத்தின் சரித்திரம்...!




தமிழ்மகன்

வாசகனுக்கு வாசிப்பில் பயிற்சி தேவை என்று வெகு காலமாகவே வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் மொழியை எப்படி லாகவமாகக் கையாள்கிறான் என்பதை அப்போதுதான் வாசகனால் முழுதாகச் சிலாகிக்க முடியும்; அதன் மூலம் ஒரு அனுபவத்தை வாசகன் அடையமுடியும். வாசிப்பது என்பது எழுத்துக்களின் மீது கண்களை மேயவிடுவது என்பதல்ல. பயிற்சியுள்ள எழுத்தாளனை பயிற்சியுள்ள வாசகன் சுலபமாக அணுகுகிறான். ரஷ்ய நாவல்களை பலர் அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களுக்காகவும் ஊர்களின் பெயர்களுக்காகவுமே ஒதுக்கி விடுவதை அறிவேன். அந் நாவல்களைப் படிப்பது கை வரும்போது ரஸ்கோல்னிகோவும் மாஸ்லவாவும் மிஸ்கினும் நாஸ்தென்காவும் நம்மில் ஒருவராகி பீட்டர்ஸ்பெர்க் நகரமே நம்ம ஊராக மாறிவிடும் ஒரு தருணம் கைக்கூடும். அப்புறம் நடை, பிரயோகம், கதை வெளிப்படுத்தும் தரிசனம், மெல்லிய இழையாக உடன் வரும் பிரசாரம் எல்லாமே இருட்டுக்குள் நுழைந்தவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்றாகத் தட்டுப்படுவதுபோல தெரிய ஆரம்பிக்கும்.

கொற்றவை பற்றிச் சொல்லும் முன் இந்த பீடிகை அவசியமாகிறது.

இதன் கதை என்ன என்று கேட்டால் அத்தனை சுலபமாக சொல்ல முடியாது. கண்ணகியின் கதை என்று சொன்னால் அதுதான் தெரியுமே அதை ஏன் இவர் மறுபடியும் அறுநூறு பக்கத்துக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற கேள்வி வரும்.

இதில் மனித குல வரலாறு சொல்லப்படுகிறது. ஆயினும் இது வால்காவில் இருந்து கங்கை வரை மாதிரியான ஒரு நூலும் அல்ல. இதில் வரலாற்றுக்கு முந்தைய தமிழ் சமூகம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ராகுல சாங்கிருத்தியாயன் வட ஆசியாவில் ஆரம்பித்து இந்தியா நோக்கி வருவார். இது தென் இந்தியாவில் ஆரம்பிக்கிறது.. அதாவது இப்போது வரைபடத்தில் இருக்கிற தென்னிந்தியா அல்ல. கடல் கொண்டுவிட்ட தென்னிந்தியா.... தமிழகம். தமிழகத்திலேயே முடிந்துவிடுகிறது. தமிழகத்தில் ஆரம்பித்து தமிழகத்தில் முடிகிறது.
கபாடபுரம் தமிழகத்தின் தலைநகராக இருந்து கடலில் மூழ்கிப் போனது என்று சிலவரி தகவல்களாகப் படித்த சம்பவங்கள் அசாதாரண கற்பனையின் சிறகடிப்பாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆதி மனிதன் தான் பிரமித்த ஒவ்வொன்றுக்கும் எப்படி பெயரிட்டான் என்று சொல்கிறார். வரலாற்றுக்கு முந்தைய அனுமானங்களை கற்பனையில் ஓட்டிப் பார்க்கிற மகத்தான பக்குவம் எழுதியவருக்குத் தேவைப்பட்டது போலவே வாசிப்பவருக்கும் தேவைப்படுகிறது. நிலவியல் அமைப்புகள், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், செவிவழிக் கதைகள், இளங்கோவடிகள் சொன்னது.. அவர் சொல்லாமல் விட்டதை இவர் இட்டு நிரப்பியது என்று பிரம்மாண்டமான ஒரு உலகம் இந்த 600 பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் அதிலிருந்து நாகங்களையும் வினோத சடங்குகளையும் ஊழியின் பெரும் காட்டாட்டத்தையும் மனக்கண்ணால் கிரகித்துக் கொண்டே போகிறோம்.

நிரம்பியிருந்ததால் அதை நீர் என்கிறோம். கடந்தமையால் அதை கடல் என்றோம். என வார்த்தைகளின் உருவாக்கத்தை, சொல்லின் வேரை சொல்லிய வண்ணம் இருக்கிறார். கடல் ஊழியில் இருந்து தப்பி வந்த பண்டைய மனிதனை பண்டையோன் என்கிறார்கள். அதுவே பாண்டியனாகிறது. கபாட புரத்தில் இருந்து வெளியேறி கோழிய நாட்டை உருவாக்கியவர்கள், கோழியர்களாகவும் சோழியர்களாகவும் சோழர்களாகவும் பெயர்கள் மருவிக்கொண்டே போகின்றன. கடல் ஓரத்தில் ஆமைக் குஞ்சுகளை உண்ண சூழ்கின்றன மயில்கள். அது மயில்துறை யாகிறது. பின்னர் மயிலாடுதுறை ஊழிக்குப் பின் சிலர் குமரி மலைத் தொடரின் மேற்கே சென்று நாகர் இன மக்களோடு சேர்கிறார்கள். அது நாகர் கோவிலாவதை உணர முடிகிறது. உழும் கருவியான நாஞ்சில் பயன்படுத்தப்பட்ட இடம் நாஞ்சில் நாடு. கபாடபுரத்தில் இருந்து கடல் கொள்ளும் முன் புறப்படும் பாண்டிய மன்னனின் கனவில் தோன்றும் மீன் விழி அன்னை தனக்கு ஒரு கோவில் எழுப்புமாறு கேட்கிறாள். அதுவே பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோவிலாகிறது. கன்னியாகுமரி அன்னை கடலின் எல்லையில் காவல் காக்கும் கதை, அகத்திய முனியின் கமண்டலத்திலிருந்து காவிரி தோன்றிய கதை, புத்தமதம் செழித்தோங்கிய வரலாறு, கவுந்தி என்ற பெண் பாத்திரம் புத்தமதத்தில் எப்படி இடம்பெற்றார். பெண்கள் புத்த மதத்தில் இடம் பெற்ற கதை.. என கொற்றவையை வாசிக்க நிறைய வரலாறுகளும் மொழியின் சிறப்பும் கற்பனையும் தேவைப்படுகிறது.

நாவல்கள் என்பதைப் பற்றி தமிழில் நமக்கு சில உதாரணங்கள்.. அறிமுகங்கள் உண்டு.

புயலிலே ஒரு தோணி, காதுகள், புத்தம் வீடு, பசித்த மானுடம், புளியமரத்தின் கதை, கரைந்த நிழல்கள் போன்ற விதம்விதமான முயற்சிகள் தொடங்கி பொன்னியின் செல்வன், நடுப்பகல் மரணம் பெரும்பான்மையினரை குறி வைத்து எழுதப்பட்ட நாவல் வரை தமிழில் கவனம் கொள்ளத் தக்க நாவல்கள் பல உண்டு.

இப்படியான பரீட்சார்த்தங்கள் நடைபெறும்போது சில சமயங்களில் சில நாவல்கள் நாவல் இலக்கணத்துக்கு வெளியே போய்விட்டதாக கருத்துகளும் எழுந்ததுண்டு. உதாரணம் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம். சுந்தர ராமசாமி இதை நாவலாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இது நாவல் இல்லையென்றால் இதற்கு வேறு பெயர் இடுங்கள் என்ரார் கி.ரா.

மகாபாரதத்தை புதிய கற்பனைகளோடு வேறு கதை அடுக்குகளோடு எஸ்.ராமகிருஷ்ணன் உப பாண்டவம் படைத்தபோது இது நாவல்தானா என்றனர் சிலர். மகாபாரதத்தை மீள் உருவாக்கம் செய்வது நாவலா என்பது கேள்வியாக இருந்தது. கண்ணகியின் கதையைக் கொற்றவையாக்கும்போதும் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. வழக்கமான நாவல் உத்திகளில் இருந்து விலகி, புதிய பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தும்போது இது, அது போல இல்லையே என்று ஒப்பிடுவது இயல்புதான். நாவல் தளத்தில் வைக்க முடியவில்லையென்றால் தாவல் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெயரில் என்ன இருக்கிறது. வாசிப்பு தரும் பரவசம்தான் முக்கியம். நல்லவேளையாக ஜெயமோகன் இதைப் புதுக்காப்பியம் என்றுதான் அறிவிக்கிறார்.

வரலாற்று சம்பவங்கள், வரலாற்றுக்கு முந்திய ஆதாரங்கள், ஆதாரங்களையொட்டிய யூகங்கள், அமானுஷ்யமான செவி வழிக் கதைகள், மொழி வரலாறு என அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார். பெரும்பாலும் கடந்த காலத்தைக் குறிக்கும் நடையாகவே முழு கதையும் செல்கிறது. அதாவது சரித்திர நூல் போன்றே வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நூலில் இடம் பெற்ற சில வாக்கியங்கள்...

கடல் கொண்ட குமரிக் கோட்டுக்குத் தெற்கே வாழ்ந்த பழங்குடிகளில் எஞ்சியவை சிலவே...
அங்கே சம்பர்களின் எட்டுத் தலைமுறையினர் மன்னர்களாக ஆண்டனர். உலோகமாபதன் என்ற மன்னன் ஆண்டபோது மாரி பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.... பெருவாயிற்புரத்து வேளாண் குடிகள் குமரிமலை ஏறி மறுபக்கம் நாகர் நிலத்தில் பஃறுளியின் கரையில் குடியேறி மண் திருத்தி வயல் கண்டன....

பரதவர் வாழும் சிற்றூராக இருந்த பூம்புனற்கரை மரக்கல வணிகர் மொழியில் பூம்புகார் என்று அழைக்கப்பட்டது...

இது நூலுக்கு அணி செய்யும் நடை. காலத்தை தரிசிக்க வைக்கும் காட்சிகளாக ஓடுகின்றது இதன் வாக்கிய அமைப்பு. நூல் முழுக்கவே சிரத்தையாக இதைக் கையாண்டிருக்கிறார். வாசிப்புப் பயிற்சியுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் இது. காலமெல்லாம் பெண் தெய்வங்கள் தமிழ் மரபில் போற்றப்பட்டு வந்ததின் தொடர்ச்சியாக கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் அற்புதமான நாவல்... அல்லது புதுக்காப்பியம் இது.

கொற்றவை
ஜெயமோகன்,
தமிழினி
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை-14.
ரூ. 280



Sunday, March 20, 2011

கதை சொல்லி - அ. வெண்ணிலா (A. Vennila)



கதை சொல்லி - அ. வெண்ணிலா (A. Vennila)

றெமியதாஸ்



"என் உடலை விதைத்திருக்கிறார்கள்
என் மார்புக் காம்புகள் நீரூற்ற‌
பூச்செடிகளும் மரங்களும்
துளிர் வி ட்டு வளர்ந்து
விருட்சமாயிருந்தன.
விளையாட
சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
போட்டியிட்டன.

உழுதார்கள் விதைத்தார்கள்
அறுவடை செய்தார்கள்.
காலாதீதத்தில்
என் உடல்
நல்ல விளைநிலமாயிருந்தது.
வண்ணத்துப் பூச்சிகளும்
தேடி வரும் ஆவலில்
பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
அதிக தேவையிருந்ததால்
என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.

என் பால் வாசம் நுகர்ந்து
வேலி வரை வந்து
உள் நுழைய முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
தட்டான்களுக்காகவும்
என் உடலை சுருட்டிக் கொண்டு
தொட்டிச் செடி பூவாக்கி
காத்திருக்கிறேன்.
சூரிய‌னுக்கு வெகு கீழே."

- அ.வெண்ணிலா.

கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். 'ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்'என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நான‌ற்ற‌ நிலையில் சிந்திப்ப‌த‌ற்கும் காட்சி வெளி தேவையாக‌ இருக்கிற‌து

சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.

வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.

அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். 'மலம்' கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது 'அவ்வளவு பட்டாம்பூச்சி' என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.


"காக்கா க‌தை
குட்டி இள‌வர‌சி க‌தை
தேவதை க‌தை என‌
சொல்லி ம‌கிழ்ந்த‌
பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
இர‌வொன்றில்
ந‌ம்மால்
குழ‌ந்தைக‌ளைப் போல்
க‌ட்டிய‌ணைத்து
உற‌ங்க‌ முடிந்த‌து"

- அ.வெண்ணிலா

அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் க‌ற்ப‌னையும் அத‌ன் உன்ன‌த‌ நிலையில் செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் அது. நிறைய‌ க‌தைக‌ளைத் த‌ம‌க்குள் வைத்துக்கொண்டிருந்தார்க‌ள். முல்லாக் க‌தைக‌ள் தொட‌ங்கி அவ‌ர்க‌ளுள் நிறைந்திருந்த‌ க‌தைக‌ள் ஏராள‌ம். க‌தைக‌ள் சொல்ல‌ அவ‌ர்க‌ள் எந்த‌ த‌ய‌க்க‌மும் காட்ட‌வில்லை. க‌தைக‌ளை ஆர‌ம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்க‌ள்.

க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்தேன் . இருட்டிய‌ வானில் அரை நில‌வோடு வெள்ளிக‌ள் மிக‌ப்பிர‌காச‌மாக் மின்னிக் கொண்டிருந்த‌ன‌. குதுகாலிக்கும் ம‌ன‌நிலையை என்னுள் கிள‌றி விட்ட‌து. 'க‌ப்ப‌ல் பார்க்க‌ விட்ட‌ சேவ‌க‌ன் என்ன‌ செய்திருப்பான்' என‌ சிறுவ‌ய‌து முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த‌ சேவ‌க‌ன் க‌தைக‌ளோடு க‌தைக‌ளின் வாச‌னையோடு த‌ன்னை இழ‌ந்து திரும்புகிறான்.

அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.


http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php


Thursday, March 17, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு

(14th Full Moon Day Film Screening)


19-03-2011


சனிக்கிழமை, 19-03-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

இந்த மாதம் திரையிடப்படும் படங்கள். இந்த மாதம் சேகர் தத்தாத்ரே இயக்கிய "புலிகளின் ரகசியங்கள்" ஆவணப்படமும், ஆண்டோ இயக்கிய "புலி யாருக்கு" ஆவணப்படமும், அஜய் இயக்கிய பினாயக் சென் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும்.

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


http://thamizhstudio.com/shortfilm_guidance_fmd_14.php




Tuesday, March 15, 2011

நெற்றிக்கண் தொலைத்த கவிதை


நெற்றிக்கண் தொலைத்த கவிதை

சமயவேல்

சிறு தூறலாகப் பெய்யும் மழையால்
கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்
அசுர ஆட்டோக்கள் கக்கிய
கேஸோலின் வாசம்
நான் ஒரு காலைப் பொழுதில்
வைகைக் கரையில் நிற்கிறேன்.

கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்
ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்
சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது
ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்
மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்
பதின்பருவ பையன்களின் கால்கள்;
உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்
பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது

பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்
முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்
கழிவுகளைக் கொட்டுகிறான்
குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்

கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்
ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது
கழுத்தில் டைகள் ஆடும்
கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்
ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்

மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்
மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்
குட்கா மெல்லும் கள்ளழகர்

புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்
கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்
எச்சில் இலைகளைக் கவனித்தபடி
தியானத்தில் இருக்கிறார்

நமக்கென்ன என்னும் பாவனையோடு
காறித் துப்புகிறான்
நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.
----------------------------------------------------------------------------------------------

மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்

மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்
ஆயினும் நன்றி நன்றி என்கிறார்
யன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்தமைக்காக
மற்றும் மற்றும் என்று இருமினார்
ஒலித்த அலைபேசியைத் திறக்கிறார்
லட்சுமி லட்சுமி
லட்சுமி பஸ் ஏறிட்டேன்டா காலை பத்து பத்தரைக்கு
வந்திருவேன்டா... இருமுகிறார்
அலைபேசியை அணைத்து பைக்குள் போடுகிறார்
முழுப் பேருந்தும் கவனிக்கிற மாதிரி தொடர் இருமல்
ஏதேனும் சிரப், மருந்து எடுத்துக்கக் கூடாதா என்றேன்
மருந்தென்ன, பெரிய மருந்தே சாப்பிட்டுட்டேன்
மூணு நாளா சாப்டுட்டே இருக்கேன்
சரி டிபன் எதுவும் சாப்பிட்டாச்சா
கையிலிருந்த மில்க்பிகீஸ் பாக்கெட்டைக் காண்பித்தார்
இது தான் சோறு இட்லி தோசை பூரி பொங்கல் எல்லாம்
பிஸ்கட் தவிர வேற எதுவும் ஆகாது
எல்லாமே டாக்டர்கள் உலகம்
இவ்வளவு கனிவு காட்டும் நீங்கள் ஒரு பிஸ்கட்
எடுத்துக் கொள்ளுங்களேன் என்று பாக்கெட்டை எறிந்தார்
மீண்டும் அலைபேசி அழைப்பு
ஆமாமா டாக்டர் இனிமே வரவேண்டாம்னுட்டார்
சவத்த விடு
அழைப்பைத் துண்டித்து பேசியை பைக்குள் எறிந்தார்
சார் என்ன பிஸ்கட் பிடிக்காதா என்றவர்
இருமத் தொடங்கினார்
தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறார் மணிவண்ணன்.

----------------------------------------------------------------------------------------------

பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்
அதிகக் குளிரெடுத்து
போர்வையை மேலும்
இறுக்கிக் கொள்கிறபோது
உணர்கிறேன்
நான் ஒரு
துணிப்பொட்டலம் என்று.

மருத்துவச்சி ஏந்திக் காட்டிய
நிர்வாணப் பொட்டலம் கண்டு
வலியுடனும் குதூகலித்த
அம்மா
இன்றில்லை.

இது பற்றி மேலும்
யோசிக்க முடியாமல்
உருண்டு புரண்டு
தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து
ஷேவ் செய்து தலைவாரி
பவ்டர் பூசி
ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்
தெருவில் நடந்தேன்.

----------------------------------------------------------------------------------------------

மலையை விழுங்கும் மலைகள்

நண்பன் வீட்டு மாடியிலிருந்தபடி
இரவுப் பயணத்திற்குப் பிறகான அதிகாலையில்
வெண் பனிக்குள் மூழ்கிய மலையைப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்
நிம்மதியின் நிலம் அது என்று உணர்ந்த என்னை
மலை பருகிக் கொண்டே இருந்தது

ஆனால் இரவில் கனவுக்குள் நுழைந்த
ஒரு பெரும் மலைப் பிரதேசம்
பயங்கரம் பூசிய வெயிலில் தகதகத்தது
செம்பழுப்புப் பாறைகள் செதிள் செதிளாக வெடித்து
உயர உயரப் போய்க்கொண்டே இருந்தது
தலை சுழற்றும் பள்ளத்தாக்குகளில்
வீழ்த்திவிடும் அபாயச் சரிவுகளில்
நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தேன்

ஒரு மலை முடிந்ததும் பல மலைகள்
அடுக்கடுக்காய் முளைத்துக்கொண்டே வந்தன
எனக்குக் கீழே பாளம் பாளமாய் மின்னிய
ஈட்டிப் பாறைகளைக் கண்டு நடுக்கமுற்றேன்

பெரும் மலைகளுக்கு நடுவில் இருந்த
பள்ளத்தாக்கில் நீரும் இல்லை நிலமும் இல்லை
மேலும் கீழும் ஆகயமொவென அச்சமுற்றேன்
எதன் மேல் எது நிற்கிறது என வியந்தபோது
எல்லா மலைகளும் மறைந்து போயின

இப்பொழுது நான்
அந்த அதிகாலைப் பனிமலையின்
கதகதப்பினுள் நுழைந்து கொண்டிருக்கிறேன்.

நண்பன் ஸ்ரீ நேசனுக்கு

from: http://koodu.thamizhstudio.com/ep_kavithaigal_2.php



Monday, March 14, 2011

யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!



யாமம்- ஒரு நாவலுக்குள் ஐந்து நாவல்கள்!

தமிழ்மகன்




பகலை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகிறது இரவு. விழித்துக் கொண்டிருந்த மனிதர்கள் தூங்குகிறார்கள்.. இது வெளிப்படையான வித்தியாசம்.

இரவை உரித்துக் கொண்டே போகலாம். நல்லவர்களாக இருந்த பலர் கெட்டவர்களாக உருமாறுவார்கள். ஒழுக்கம் சற்றே வழுக்கும். நெறிமுறைகள் நகர்ந்து கொள்ளும். சபலங்கள் கண்விழிக்கும்... இரவு மனதின் விருப்பத்துக்கு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உடையதாக இருக்கிறது. வெளிச்சம் குறைவது பலருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது.

ஞானிகளுக்கோ அதுதான் தத்துவார்த்த சிந்தனையைச் செதுக்கும் நேரமாக இருக்கிறது.

நாவலில் அப்துல் கரீமின் கனவில் வந்து பக்கீர் சொல்கிறார்.. ""கரீமே... சொல்லின் வழியாக இரவை அறிந்து கொள்ள முடியாது. பகலும் இரவும் ஒன்றுக்கொன்று எதிரானதும் அல்ல, உறவானதும் அல்ல. பகல் தீட்டும் சித்திரங்கள் யாவையும் இரவின் கரங்கள் அழித்து மறுஉருவாக்கம் செய்கின்றன.''

எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவமான நடையில் நாவல் நகர்கிறது. மானிடர் என்ற மாபெரும் கூட்டத்தின் நறுக்குகளாக சிலபிரதிநிதிகளை நாவலின் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஐந்து நாவல்களை கலைத்துப் போட்டுச் சேர்த்தது மாதிரியான உத்தியொன்று நாவலில் கையாளப்பட்டிருக்கிறது. அதாவது ஐந்து நாவல்கûளை எடுத்துக் கொண்டு, முதல் நாவலில் இருந்து ஒரு முதல் அத்தியாயம், இரண்டாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், மூன்றாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், நான்காவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம், ஐந்தாவது நாவலில் இருந்து முதல் அத்தியாயம் என்று அடுக்க வேண்டும். அப்படியே அந்த நாவல்களின் இரண்டாவது அத்தியாயங்கள். அப்படியே மூன்றாவது நான்காவது அத்தியாயங்கள்... இந்த நாவல்களின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த நாவல் அத்தியாயத்தின் கதாபாத்திரங்களோடு ஒருபோது கலப்பதில்லை. முழுநாவலிலும் மறந்தும்கூட அது நடந்ததாகத் தெரியவில்லை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரயில் தடம்போல போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இதை ஒரு நாவலாக மாற்றுவது இரவு... யாமம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் இரவின் தரிசனமான காமம்.

கதை ஒன்று...

பனி பொழியும் குளிர். இரவு கிழட்டு குதிரை போல அலைந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். அது பதினேழாம் நூற்றாண்டின் மையம். கம்பெனியார் இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பிரான்சிஸ் டே இந்தியாவில் தம் கோட்டையை அமைக்க இடம் தேடுகிறான். இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அவனுக்குப் பிடித்துப் போகிறது. கிளாரிந்தா என்ற வேசை அவனுக்குப் பரிச்சயமாகிறாள். இது வரலாறும் கற்பனையும் கைகோர்க்கும் இடமாக இருக்கலாம்.

கிளாரிந்தா நோய்வாய்ப்படுகிறாள். அவளைக்காக்க இந்திய மருத்துவமுறையை நாடுகிறார்கள். வைத்தியமும் நோயின் தீவிரமும் போட்டி போடுகின்றன. இது சென்னையில் பிரிட்டீஷார் காலூன்ற கதையை ஆரம்பித்து வைக்கிறது.

இன்னொரு கதை...

அப்துல் கரீம் அத்தர் யாமம் என்ற சென்ட் தயாரித்து விற்பவர். ஆண் வாரிசு இருந்தால்தான் அதைத் தொடர்ந்து தயாரித்து அளிக்க முடியும் என்பது பக்கீரின் வாக்கு. அவருக்கு மூன்று மனைவிகள். ரஹ்மானி, ஹபீசா, சுரையா. இரவும் பகலும் அவருக்கு காமம் சாத்தியப்படுகிறது. வாசனை திரவியத்தோடு சம்போகிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே ஆண் வாரிசு வாய்க்கவில்லை. அவர் குதிரை ரேஸ் பிரியாகி சொத்து சுகத்தையெல்லாம் இழந்து திடீரென்று காணாமல் போகிறார். மனைவிமார்கள் மீன் வியாபாரம் செய்கிறார்கள். பிஸ்கட் கடையில் வேலை செய்கிறார்கள். சென்னையில் காலரா காலத்தில் அவதியுறுகிறார்கள்.

கதை மூன்று...

கிருஷ்ணப்ப கரையாளர் பெரும் தனவந்தர். கூடவே சொத்து பிரச்சனை. சென்னை இம்பாலா ஹோட்டலில் தங்கியிருந்து வழக்கு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். எலிசபெத் என்ற வேசையுடன் தன் தனிமைக்குத் தீர்வு காண்கிறார். தமக்குச் சொந்தமான மேல்மலைக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அடர் காடு. விதம்விதமான தாவரங்கள். இயற்கை. விலங்குகள்... அவர் இயற்கையால் வசீகரிக்கப்பட்டு, தன் சொத்துக்கள் அனைத்தையும் எலிசபெத்துக்கே எழுதி வைத்துவிடுகிறார். அவள் பிரிட்டனுக்குப் போய் வருவதாகக் கிளம்பிச் செல்கிறாள். பின்னாளில் அந்த மலைப் பகுதி தேயிலைத் தோட்டங்களாக மாறப்போவதை அவள் அப்போது யோசித்து வைத்திருக்கவில்லை.

நான்காம் கதை...

பத்ரகிரி விசாலா, திருச்சிற்றம்பலம் தையல் கதையிது. பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும் சகோதரர்கள். திருச்சிற்றம்பலம் கணித மேதை. லண்டனுக்குச் சென்று ஆய்வுப்படிப்பைத் தொடர்கிறான். அவனுடைய மனைவி பத்ரகிரியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். பத்ரகிரிக்கும் தையலுக்கும் காமம் பற்றிக் கொள்கிறது. குடும்பம் சிதைகிறது. தம்பி படிப்பை முடித்துவிட்டு வரும்போது தையல் மனச்சிதைவுக்கு ஆளாகி இருக்கிறாள்.

ஐந்தாம் கதை...

சதாசிவ பண்டாரம் ஒரே மகனாகப் பிறந்து ஆன்மிகத் தேடலில் வீழ்ந்தவன். அவனை ஒரு நாய் வழி நடத்துகிறது. அது செல்லும் இடம் தோறும் செல்கிறான். அது தங்குகிற இடத்தில் தங்குகிறான். அது மலையோர கிராமம் ஒன்றில் தனித்திருக்கும் கனகாவின் வீட்டின் முன் தங்குகிறது. எடுபிடி வேலைகள் செய்து கொண்டு அங்கே தங்கியிருக்கிறான் பண்டாரம். ஒருநாள் இரவு கனகா அவனருகில் வந்து படுத்துக் கொள்கிறாள். உறவு கொள்கிறார்கள். அவளிடம் மரிக் கொழுந்து வாசனை வீசுவதை அறிகிறான். கர்ப்பம் தரிக்கிறாள். குழந்தை பிறக்கும் நேரத்தில் நாய் அங்கிருந்து புறப்பட்டுவிடுகிறது. வள்ளலார் போல ஒரு அறைக்குள் பூட்டிக் கொள்கிறான். அவன் காற்றில் கரைந்து போய்விட்டதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த ஐந்து கதைகளும் காமமெனும் மெல்லிய கண்ணுக்குத் தெரியாத இழையால் கட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இவற்றை ஒரு நாவலாக்குவது அதுதான்.

இந்த ஐந்து கதைகளிலும் வாரிசு தேவைக்காக, தனிமையை நிரப்புவதற்காக, இச்சைக்காக, பரிதாபத்துக்காக என்று காமம் வெவ்வேறு மனச்சித்திரமாக இந்த நாவல் முழுதும் உணர்த்தப்பட்டிருக்கிறது. பல நேரத்தில் காமத்தை ஒரு வாசனையின் அடையாளமாக சொல்லியிருப்பதும்கூட ஐந்தையும் இணைக்கும் ஆதாரமாக கருத வேண்டியிருக்கிறது. ராமகிருஷ்ணன் இப்படி உத்தேசிக்காமலேயேகூட இதை எழுதியிருக்கலாம். அதை வாசகன் வியாக்யானத்தால் கண்டெடுக்கிற சுவை அம்சமாக இருந்தாலும் மகிழ்ச்சிதானே?

மீ புனைவைப்போல அப்துல் ஹகிமின் கனவில் பக்கிர் பேசுவதாக ஆரம்பமாகும் நாவல், அடுத்து லண்டன் மாநகரில் இந்தியாவில் வர்த்தக உரிமை வேண்டி மகாராணியின் அரண்மனையின் முன் நிற்கும் இங்கிலாந்து வணிகர்களின் கோரிக்கையோடு வரலாற்றுச் சூட்டை ஏற்றிக் கொள்கிறது.

நாவலில் அதன் கவித்தனத்தோடு ஆங்காங்கே தரப்பட்டிருக்கும் சரித்திர ஆதாரங்கள் பிரமிப்பானவை. இங்கிலாந்தின் 17 ஆம் குளிர் இரவையும் தெருக்களையும் கற்பனை செய்வது அபாரம். அது முழுக்கவே கற்பனையால் மட்டுமே சாத்தியமாக்க வேண்டிய கட்டாயம். அதற்கு இதே போன்ற காலகட்டத்தை காட்டும் ஒவியங்களும் சினிமாக்களும் நூல்களும் பக்கபலமாக இருந்தாலும் ராமகிருஷ்ணன் தீட்டும் காலச் சித்திரம் மலைக்கவைக்கிறது.

தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் சென்னையில் நடைபெறுவது அதில் தையல் காணால் போய் பத்ரிகரி தேடிக் கண்டுபிடிப்பது, பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான நிலத்தில் குத்தகையெடுத்துதான் சர்க்கஸ் நடைபெற்றதாக கூறுவது போன்ற பல்வேறு தகவல்கள் நாவலின் சம்பவங்களுக்கும் சரித்திரத்தைப் பின்னணியை விளக்குவதற்கும் பொருந்தி வந்திருக்கிறது. பத்ரகிரி நிலவியல் வரைபடம் தயாரிக்கும் பணியாளனாக இருப்பதால் பரங்கி மலையிலிருந்த ஆரம்பமாகும் பணியின் ஆரம்பக்கட்ட வேலைகளை அழகாக விவரிக்கிறார். சூரத்தில் வந்து இறங்கும் நில அளவீடு செய்வதற்கான தியோலைட் கருவி... அதை ஏற்று நடத்தும் லாம்டன் துரை. இம்பாலா ஓட்டலில் இருந்த இரண்டு பûனைமரங்கள், பாப்பாத்தி கிணறு, மதராச பட்டணம் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமாக பிரிந்து கிடந்த வரலாறு, காலரா வியாதி, சென்னையில் ஏற்பட்ட பஞ்சம் என நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன சென்னையின் வளர்ச்சியைச் சொல்லும் தகவல்கள்.

ஓவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்துவது ரசனையின் உச்சம். சாப்பாட்டு பித்துப் பித்துப் பிடித்த சுரையா, எதைக் கொடுத்தாகிலும் மகிழ்ச்சியை அடையத் துடிக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஆடம்பரப் பிரியனாக இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் சற்குணம், வெளிநாட்டில் இருக்கும் கணவனைப் பிரிந்து வாழும் தையல், தன்னைவிட்டுப் பிரிந்துவிடக்கூடாது என்று ஆரம்பத்தில் பொஸஸிவாக இருந்து பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் விசாலா.. என ஒவ்வொரு பாத்திரத்தின் பல்வேறு உளவியலின் வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது.

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களின் திருப்திக்காக ஒவ்வொரு அம்சங்களை பணயம் வைக்கிறார்கள். தையல் கற்பை பணயமாக்குகிறாள். கிருஷ்ணப்ப காரையாளர் சொத்தை, சதாசிவ பண்டாரம் பந்தத்தை, திருச்சிற்றம்பலம் தன் சுகத்தை என ஒன்றை அடைய ஒன்றை இழந்து.. அந்தச் சுழல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நாவல் முடிந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் உணர்வாக அது நம்மிடம் தங்கிவிடுகிறது.

எல்லோருடைய கணக்கிலும் ஆரம்பத்திலோ, முடிவிலோ ஒரு பிழை ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. மனித திட்டங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிற எதார்த்தத்தை அழகான பின்னலாக வெளிப்படுத்தும் நாவல்.

யாமம்
எஸ்.ராமகிருஷ்ணன்,
உயிர்மை வெளியீடு,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை}18
தொ.பே: 24993448.
மின்னஞ்ஞல்:: uyirmmai@gmail.com


http://koodu.thamizhstudio.com/nool_thiranaaivu_24.php