Tuesday, March 1, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (18)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (18)

வெங்கட் சுவாமிநாதன்

இது வரை நான் எழுதி வந்ததைப் படித்து அதற்கு அவ்வப்போது எதிர்வினை காட்டி வரும் அன்பர்கள் பெரும்பாலோர் சுமார் நாற்பது வருடங்களாக அவர்கள் பழக்கப்பட்டுள்ள ரசனையையும் சிந்தனைப் போக்கையும் மீறிய எந்த கருத்தையும், அனுபவத்தையும், எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்றே தோன்றுகிறது. நான் ஏதும் புரட்சிகரமான கருத்துக்களையோ, அவர்கள் அன்றாட நிதர்சன அனுபவ உலகத்துக்கு மீறிய விஷயங்களையோ, அல்லது நம் தமிழ்ப் பண்டிதர்கள் சொல்வார்களே, ‘நுண் மாண் நுழைபுலம் என்று, அப்படி ஏதும் கிடைக்க அரிதான தேவைகளையோ முன் வைக்க வில்லை. இருப்பினும், நான் சொல்லும் சாதாரணம், பொதுப் புத்திக்கும் புலப்படும் விஷயங்களைக் கூட அவர்கள் தங்கள் பழக்கப்பட்ட சினிமா அனுபவங்களை உதறி, சாதாரண மனிதர்களாக சிந்திக்க மறுக்கிறார்கள்.

நான் எழுதத் தொடங்கிய சமயத்தில் அவர்கள் கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள் என்றால், இங்கு சொல்லப்படுவது எதையும் எதிர்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்றே சொல்ல வேண்டும்.

முதலில் ஏதோ ஒரு காட்சியை எடுத்துக்கொள்ளலாம். அக்காட்சியில் சிலர் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்தக் காட்சியும் அவர்கள் பேசும் விஷயமும், அவர்கள் பேச்சும் தமிழ் சினிமாவிலேதான் காணக் கிடைக்கும் சமாசாரங்கள் தான். வாழ்க்கையில் அவர்கள் சினிமாவில் காணும் விதத்தில் நின்று கொண்டிருக்கமாட்டார்கள், பேச மாட்டார்கள். பேசும் மொழியும் வார்த்தைகளும் அதுவாக இராது. வாழ்க்கையில். அவ்வளவும் செயற்கையாக, நம்பகத் தன்மையை இழந்த வெற்று நாடகமாக இருக்கும். முற்றிலும் பொய்யான, ஒரு உலகத்தை அவர்கள் சிருஷ்டித்துக்கொள்கிறார்கள். அது ரசிக்கத் தக்க ஒன்று அல்ல. ஆனால் இப்படியே ஆரம்ப காலத்திலிருந்து செய்து வந்திருப்பதால், அதை நாம் ஒரு மரபாக இப்படித்தான் இருக்க வேண்டும் போல என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அந்த அபத்த அஸ்திவாரத்தின் மேல் மிகப்பெரிய கட்டுமானத்தையும் எழுப்பியிருக்கிறோம். அது அவ்வளவையும் நிராகரிப்பது என்பது இப்போது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நிராகரிப்பது என்பது, முதலில் இது ஒரு அபத்தமான கட்டுமானம் என்று நினைப்பு தோன்ற வேண்டுமே நம் ரசனையில் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இது இந்த நிராகரிப்பு என்ற எண்ணமும், நிராகரிப்பிற்கான முயற்சியும் தோன்றப் போவதில்லை.

நல்ல படம் எது சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். இது வரை கண்டதெல்லாம் பிதற்றலாக இருக்கிறதே, இதையே நாம் ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருவது மட்டுமல்ல. அந்த விஷச் செடியையே இப்போது ஒரு பிரம்மாண்டமான விருக்ஷமாக வளர்த்திருக்கிறோமே என்ற நினைப்பே தோன்றாது கேட்கப்படும் கேள்வி இது.

இது ஒரு பிரச்சினை என்றால், இன்னொன்று மொழி பற்றியது. சினிமாவையும் சினிமா அல்லாதவற்றையும் பிரித்துக் காண வேண்டிய அவசியமும் இருக்கிறது. சினிமாவை தமிழில் திரைப்படம் என்று சொல்லுகிறோம். வம்பற்ற பாடு. திரையில் ஓடும், படம். சினிமா என்பது புதிதாகக் கிடைத்துள்ள ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்குரிய பெயர். அதற்கும் முன்னால் ஃபில்ம் என்ற வார்த்தை வந்துவிட்டது. அதற்குப் பின் வந்த வளர்ச்சி, கலையாகப் பரிணமித்த வளர்ச்சியை சினிமா என்று சொல்கிறோம். ஃபில்ம் என்பது ஒரு தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட சாதனம். அந்தத் தொழில் நுட்பம் கலையாகும் போது தான் அது சினிமா என்று பெயர் சொல்லப்படவேண்டும். இது காறும் சுமார் 80 வருடங்களுக்கு மேலாக நாம் வளர்த்துள்ளதை தமிழ்த் திரைப்படங்கள் என்று சொல்லலாம் தான். தவறில்லை. தமிழ் ஃபில்ம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த 80 வருடங்களில் நாம் தயாரித்து வெளியிட்டுள்ள லக்ஷக்கணக்கான திரைப்படங்களில் சினிமா என்று சொல்லத் தக்கதற்கான முயற்சிகளை நாம் ஒரு சிலவற்றில் பார்க்கலாம். முன்னரே சொன்னேன் பாலு மகேந்திராவின் வீடு படத்தை. அது சினிமா. ஏனெனில் காட்சி பூர்வமாகவே அது ஒரு வாழ்க்கைத் துணுக்கை, தமிழ் வாழ்க்கைத் துணுக்கை நம் முன்னே விரித்து நிகழ்வித்தது.

அதைப் பார்த்தாலே தெரியும் அவர்கள் யாரும் .நடிப்பவர்களாகவோ, ஒரு செட்டில் இயக்குனர் சொல்வதைச் செய்பவர்களாகவோ தோன்றாது. வாழ்க்கையில் எங்கோ ஒரு வீட்டில், தெருவில், ஹோட்டலில் நடப்பதை அவர்கள் அறியாது நமக்குப் பார்க்கக் கிடைப்பதான உணர்வில் தான் நாம் இருப்போம். விஷயம் இது தான். நடிப்பது என்று தெரியாது, இது உருவாக்கப்பட்ட கதை என்பது தெரியாது, இது தயாரிக்கப்பட்ட செட் என்பது நமக்குப் புலப்படாதவாறு, இது ஒரு இயக்குனர் சொல்லிச் செய்வது என்று தோன்றாதவாறு எது நமக்குக் காணத் தரப்படுகிறதோ அது தான் தொழில் நுட்பம். அது தொழில் நுட்பம் தான். அதுவே கலையாகி விடாது. கலைக் கான உபகரணங்கள். இங்கு சொல்லப்பட்டனவெல்லாம் நிகழ்ந்து, இவை அனைத்தும் இவற்றின் கூட்டுறவில், ஒருமித்து ஒன்றாகி, சொல்லப்பட்டதுக்கும் மேல் சொல்லப்படாத, நமக்குத் தெரியாது ஒன்று நமக்கு உணர்விக்கப்பட்டால் அது தான் கலையாகும்.. நமக்குப் பழக்கப்பட்டதும், நம் சினிமாக்களில் ஒரு மீறப்படக்கூடாத மரபாகத் தொடர்வதும் இது நடிப்பு, இது செட், இது எழுதித் தரப்பட்டு நெட்டுருப் படுத்தப்பட்ட வசனம் என்று நமக்கு தலையிலடித்துச் சொல்வது போலத்தான் எல்லாம் உரக்கக் கத்திப் பேசி, பஞ்ச் டயலாக்குள் யோசித்துப் புகுத்தி, மிகையான அபிநயங்களும் பாவங்களும் காட்டி, உடலை வருத்திச் செய்வதெல்லாம் நேற்று வரை பேணப்பட்ட அவஸ்தைகள். இன்று அதையும் மீறி, தெருவில் 40 பேர் ஆடும் குத்தாட்டம் இல்லையென்றால் அது படமல்ல. அது விஜயோ, உலக நாயகனோ, சூப்பர் ஸ்டாரோ யாராக இருந்தாலும் சரி என்பதல்ல,

என்னமோ உலகத்தரப் படங்களையெல்லாம் பார்த்து அவற்றால் இன்ஸ்பையராகி யுள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் மிஷ்கினாக இருந்தாலும் சரித்தான். கலை தானே தன்னை ஸ்தாபித்துக்கொல்ளும். அது தான் அதன் நிரூபணமே. அது ஒன்றும் மேள தாளங்களோடு, படைகள் அனைத்தும் முன் செல்ல பின்னால் கட்டியம் கூறிக்கொண்டு பராக் பராக் என்று எட்டு குதிரைகள் பூட்டிய ரதத்தில் அது நகர் வலம் வராது. அமெரிக்க ஜனாதிபதியோ, ஜெர்மன் சான்ஸ்லரோ ஏகே 47 –ஐக் கையிலேந்தி நான்கு கருப்புப் பூணைப் படை சூழ்ந்திருக்க 16 அம்பாஸடார் கார் முன்னும் பின்னும் வருவது தன் அந்தஸ்தை பறை சாற்றும் என்று ஊர்வலம் வரும் இன்றைய அரசியல் பிரமுகர்களின் கோமாளித்தனம் போன்றது தான், இதோ பார் நான் என்னென்னவெல்லாம் செய்து காட்டுகிறேன் பார், நான் என்னென்ன படமெல்லாம் பார்த்திருக்கிறேன் பார் என்று பாவனை செய்பவர் தான் மிஸ்கின். அவர் இதற்காகப்படும் அவஸ்தையெல்லாம் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கிறது. அடிப்பது காபி ஆனால் சொல்லிக் கொள்வது இன்ஸ்பைரேஷன். இதற்கெல்லாம் அதிக தூரம் போக வேண்டியதில்லை. அதிகம் அவரது படங்களை ஏதும் அலசி ஆராயவேண்டியதில்லை. சங்கீதம் தெரிந்தவனா, இல்லை தானும் ஒரு பாட்டுக்காரன் தான் என்று நம்மிடம் பீத்திக் கொள்ள வந்திருக்கிறானா என்பது ஒருவனது குரல் எழுந்தவுடனேயே தெரிய வந்துவிடும். அவனிடம் ”செர்டிபிகேட்டைக் காட்டுய்யா முதல்லே” என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை ஏதும். மிகச் சாதாரண விஷயம். மிஷ்கினின் நந்தலாலா தொடங்கியவுடனேயே அது பல்லிலிளிக்கத் தொடங்கி விடுகிறது. படம் ஆரம்பிக்கத் தொடங்கியதுமே நாம் பார்க்கும் முதல் காட்சி, அந்தச் சிறுவன் முகம் மாத்திரம் தலை குனிந்த வாறே நிற்கும் காட்சிதான். அவன் எதற்காக அவ்வளவு நேரம் அப்படி தலை குனிந்தவாறே நமக்குக் காட்சி தருகிறான். மிஷ்கின் சொல்ல வந்தது என்ன?


ஒரு தொழிற்சாலையில் ஒரு லேத்தின் முன் ஒரு நாற்பத்தைந்து வயது பெண் உட்கார்ந்திருக்கிறாள். அவள் தயாரிப்பது வெறும் நட். ஒவ்வொன்றாகத் தயாராகும் நட் ஒவ்வொன்றையும் எடுத்து ஒரு இரும்புத் தட்டில் போட்டுக்கொண்டே இருக்கிறாள். அது அவள் வேலை. இதைச் சொல்ல எவ்வளவு நேரம் அந்தக் காட்சியைக் காட்டுவது? குறைந்தது மூன்று நான்கு நிமிஷம் அந்தக் காட்சி தொடர்கிறது. காமிரா அசைவதில்லை இந்தச் செய்தியைச் சொல்ல எவ்வளவு நேரம் அந்தக் காட்சி நம் முன் காணப்படவேண்டும். பத்து செகண்ட், தாங்காது அதற்கு மேல். என் ஞாபகத்தில் அந்தக் காட்சி சுமார் மூன்று அல்லது நான்கு நிமிட நேரம் காட்டப்படுகிறது. நமக்கு அலுப்புத் தட்டி வெறுப்பு ஏற்படும் வரை. அவள் நட்டு தயாரிக்கும் வேலையில் இருக்கிறாள் என்பதல்ல செய்தி. தினம் எட்டு மணி நேரம் அவள் இருந்த இடத்தை விட்டு அசையாது அந்த வேலையைச் செய்கிறாள். மாதம் முப்பது நாளும். வருடம் 12 மாதங்களும். இது காறும் 20 வருடங்கள் அந்தக் காரியத்தைச் செய்து வந்திருக்கிறாள். இன்னும் இருபது வருடங்களோ என்னவோ அவள் இதே காரியத்தைத் தான் செய்யப் போகிறாள். நமக்கு அதைப் 10 செகண்டுக்கு மேல் பார்க்க போரடிக்கிறது. இது தான் அவள் வாழ்க்கை. இதில் தான் அவள் குழ்ந்தைகள் குடும்பம் உயிர் பிழைத்திருக்கிறது. அவள் வாழ்நாள் முழுதும் இப்படித் தான் கழிந்து வருகிறது. இனியும் இறுதி மூச்சு வரை இப்படித் தான் கழியப் போகிறது. இந்த கொடுமையை அந்தப் படம் நமக்கு மூன்று நிமிடம் வெறுப்பூட்டும் அலுப்பில் சொல்லி விடுகிறது. 10 செகண்ட் காண்பித்தால் இந்த செய்தி நமக்கு சொல்லப்பட்டிராது. சொல்லப்பட்டது அவள் நட் செய்யும்லேத்தில் வேலை செய்கிறாள் எனபது. சொல்லப்படாது உணர்த்தப் படுவது அவள் வாழ்க்கை பூராவும். இப்படிப் பட்ட ஒரு கொடுமையில் பாழாவது இன்றைய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத ஒரு அம்சம் எனபது.அப்படியே சலனமற்று நிற்பது என்னமோ கலைப்படம் என்று நம்மூரில் சொல்கிறார்களே, அந்த மாதிரி ஒரு கலைப் படத்தின் ஓர் அம்சம் என்று நினைத்து விட்டாரோ. “உங்களுக்கெல்லாம் இது சட்டுனு புரியாதாக்கும். இதிலே தான் ரொம்ப விஷயம் அடங்கிக் கிடக்கு” என்று நமக்குச் சொல்ல நினைத்துவிட்டாரோ என்னவோ. நமக்கு எதையும் கொச்சையாகப் புரிந்து கொள்ளவும் கொச்சைப் படுத்தவும் தான் தெரிகிறது.

நாம் என்ன செய்திருப்போம். அவளும் அவள் சகாக்களும் இந்த அவசர வாழ்வைச் சொல்லும் ஒரு விஜய் பாட்டுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஒரு குத்தாட்டம் அந்த தொழிற்சாலையில் காட்டப்பட்டிருக்கும். இதிலே நாங்க ஒரு நல்ல மெஸேஜ் சொல்லியிருக்கோம் என்று அந்த இயக்குனர் நம்ம சுஹாசினியிடம் சொல்லிக்கொண்டிருப்பார் ஒரு ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில். . . .


from:





No comments:

Post a Comment