Tuesday, March 29, 2011

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -6


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -7

ஆழியாள் – 'என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி'

குட்டி ரேவதி

மண்ணில் பல நூறு வருடங்களாக ஆணின் அதிகாரத்திற்கும் வசதிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த மொழியை, தன் விடுதலைக்கும் படைப்பூக்கத்திற்கும் பயன்படுத்தும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது தான் பெண்ணினத்தின் வெற்றிகளில் இன்று வரை முதன்மையானது. அதை முழுமையான இலக்கிய வடிவத்திற்கு உட்படும் தேர்ச்சியில் வெற்றியடைந்ததன் வழியாக, மொழியை ஒரு சாணைத் தீட்டப்பட்டக் கத்தியாகவும் ஆக்கினர். இனி, அம்மொழியின் இலக்குகளிலிருந்து தப்பவே முடியாது என்பதையும் உறுதிப்படுத்தினர். அந்த இலக்கிய வடிவங்கள், ஆணின் இலக்கிய நாற்காலிகள் முன்மொழிந்த தகுதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்ததுடன் அவற்றிற்கெதிரான வேறு தகுதிகளுடனும், அவற்றையும் மிஞ்சிய திறன்களுடனும் எழும்பி வந்தன. ஆண், கவிதை என்று சொல்லி வந்ததைப் புறம் தள்ளி, புத்துயிர்ப்பு உடைய மொழியால் ஆன கவிதையைப் படைத்ததில் இலக்கிய வரலாறு என்பது தலைகீழாகத்தான் ஆகிப்போனது.

கடந்த நூற்றாண்டில், ஈழத்துப் பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அரசியல் வன்முறைகள் அவர்களின் மொழியை இன்னும் இன்னும் கூரடைந்த ஆயுதமாய் ஆக்கியது. அதன் தாக்கமும், புழக்கமும் தமிழகத்தில் ‘பெண்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருந்தவர்களின் மொழியைக் கூடப் புதுப்பித்தது. தமிழகத்தில் நவீனப்பெண்கள், அரசியல் சிந்தனைகளிலிருந்தும் சித்தாந்தங்களிலிருந்தும் தங்களை விலக்கி வைத்துக் கொண்டவர்களாகவோ, அல்லது அவ்வாறு தங்களை அவ்விடம் நிறுத்திக் கொண்டவர்கள் மலிவான சித்தாந்தங்களை முன்மொழிந்தவர்களாகவோ அல்லது தனைத் தவிர்த்தப் பெண்கள் பற்றிய அரசியல் இருப்பு பற்றிய அக்கறைகள் அற்றவர்களாகவோ இருந்தனர். ஆனால், ஈழப் பெண்கவிதை மொழி, இப்பணிகளையெல்லாம் முழுவீச்சில் செயல்படுத்தும் தூண்டுகோலாகவே இன்று வரை இருந்திருக்கிறது. அரசியல் விளைவுகளை நேரடியாக அனுபவிக்க நேர்ந்ததின் அவலம், மொழி வழியானதொரு தீவிரமான இலக்கிய வகைமையாக ஈழப்பெண் கவிதை இன்று வரை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. அதை, ‘ஈழப் பெண் கவிதை’ எனும் சொற்தொகுதியால் ஆக்கும் போது அதன் அரசியல் வெளிச்சம் இன்னும் அதிகமாய் வாசிக்கும் எவரையும் கண்கூசச் செய்யக் கூடியதே!

2000 – ஆண்டில் வெளியான, ஆழியாளின் ‘உரத்துப் பேச’, கவிதைத் தொகுப்பு மேற்கண்ட அரசியல் முன்னெடுப்பை தனது தனித்ததொரு மொழியாகவும் குரலாகவும் பதிவு செய்தது. எதிர்ப்பின் குரலும், மானுட அவதானிப்பைத் தொடர்ந்து நிகழ்த்தும் குரலும் அப்படித்தான் உரத்துப் பேசும் என்பதையும் அவரின் முழு தொகுப்பிலிருந்தும் நம்மால் உணரமுடியும். சொற்களுக்குப் புதிய அரசியல் வெளிப்பாடுகளை கொடுத்தவர்களுள் இன்று வரை ஈழத்தமிழ்ப் பெண் கவிஞர்களே முதன்மையாக நிற்கின்றனர் என்பதை இவர் கவிதைகளிலிருந்தும் நாம் உணரக்கூடும். ஆழியாளின் மொழியில், ‘மன்னம் பேரிகள்’ கவிதை மிகவும் நேரடியான பாலியல் அரசியல் உடையது. அக்கவிதை சொல்லிய சேதியை மீள் பிரதியாக்கியே கவிஞர்களாகியவர்களையும் இவ்விடம் நான் நினைவூட்டக்கூடும். இதுவும் ஆரோக்கியமான விஷயமே!

மன்னம்பேரிகள்

காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.

நாய் கரடி ஓநாய்
கழுகு பூனை எருதாய்ப்
பல வடிவங்கள் அதற்குண்டு.
தந்திக் கம்பத்தருகே
கால் தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்.

அதன் கண்கள்
நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை
எனக்குள் உணர்த்திற்று.

அழகி மன்னம்பேரிக்கும்*
அவள் கோணேஸ்வரிக்கும்**
புரிந்த வன்மொழியாகத் தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் – நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்.

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்.

* மன்னம்பேரி (22) 1971 ஜே.வி.பி.கிளர்ச்சியில் பங்கு கொண்டவள். பெண்கள் அணிக்குத் தலைமை தாங்கியவள். 1971 ஏப்ரல் 16 – இல் மன்னம்பேரி படையினரால் கைது செய்யப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.

** கோணேஸ்வரி (33) அம்பாறை சென்ட்ரல் கேம்ப் 1ம் காலனியைக் சேர்ந்தவள். 1997 மே 17 இரவு, இவரது வீட்டுக்குச் சென்ற படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் அவளின் யோனியில் கிரனெட் வைத்து வெடிக்கச் செய்து சிதறடித்துச் சென்றனர்.

ஆண்களின் பாலியல் வன்முறையை, பாலியல் அரசியலாக்குவதில் அதிலும் அத்தகைய இலக்கியமாக்குவதில் இன்றும் பல பெண்கள் தோற்றுப் போகின்றனர். அது அவரவர் உணர்வின் நேர்மையையும், தன் இனப்பெண்கள் சார்ந்த ஒருமையையும் பொறுத்தது. ஆழியாள், ‘என்னை உற்றுக் கிடக்கும் அம்மிருகம் துயின்று நாட்கள் பலவாகியிருக்கும்’ என்ற வரியால் அதன் வழியாகச் சொல்லும் பாலியல் நுட்பத்தால் அந்த அரசியல் நிலைப்பாட்டின் அடுத்த நிலைக்குக் கடந்து செல்கிறார். அம்மொழியின் உருவாக்கம் வீரியம் பெறுவதற்கான தெளிவான சித்திரங்களை தன் ஒவ்வொரு கவிதையிலும் தொடர்ந்து கொண்டே இருப்பது ஆழியாளின் பலம். கவிதையை தான் நுகர்ந்த வெறும் சுகானுபவமாக மட்டுமே பதிவு செய்யாமல், இலங்கும் அதிகாரக் கட்டமைப்புகளுக்கு எதிரான கருத்தாக்க அமைவுகளைத்தாம் கவிதைகளாக்குகிறார். முழுமையான அதிகாரக் கட்டமைப்பைத் தகர்க்கும் பலமிருந்தாலன்றி இது சாத்தியமில்லை. நுண்மையான கருத்தாக்கச் சித்திரங்களை ஒவ்வொரு கவிதையிலும் வரைந்து கொண்டே இருக்கிறார். அவ்வகையில் பாலியல் நுண்ணுணர் திறனை முழுமையும் கொண்ட ஒரு பெண்ணியக் கவிஞராக அடையாளம் பெறுகிறார்.

பதில்

என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட
திருக்கைச் சவுக்கடி
நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும்
தழும்பாய் தேமலாய்
படர்ந்து கிடக்கிறது.

அடையாளத்தை
உணரும் போதெல்லாம்
வீரியங்கொண்ட
ஊழிச்சவுக்கின் ஒலி
மீளவும் என்னை
வலிக்கப் பண்ணும்.

என்னைப் பிளந்து
ரத்த உடுக்கள்
வெடித்துப் பறந்து
தனித்துச் சிதறி கொட்டும்.

தனித்து,

அவை ஒவ்வொன்றும்
கிரகங்கள் என
உருப்பெறும்.
தன்னிச்சையாய்ச் சுற்றி வரும்
தாள லயத்துடன்.

அங்கு
எனக்கென
ஓர் பிரபஞ்சம் உருவாகும்
அப்போது உயிர் பெறும்
எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய
என் மொழி.

அதன் பின்
தேமல் படர்ந்த எவனாயினும்
என்னோடு உரையாடட்டும்
அப்போது கூறுகிறேன்
பதிலை,
என் மொழியில்;
என் ஆதித்தாயின்
பெண் மொழியில்.

அதுவரை நீ காத்திரு.

‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். அரசு, யுத்தம், குடும்பம், தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்றவை இந்தியா உட்பட்ட நாடுகளிலும் பெண்ணுக்கு எதிரான அதிகாரக்கட்டமைப்புகளுடன் தாம் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. ஆணாதிக்கத்தின் விளைச்சல்களாகவே அவை அடையாளமும் பெற்றிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அத்தனை விடுதலைப் போராட்டங்களும், மக்களை ஒடுக்கும் பேரதிகார அடையாளங்களுடனேயே நாளடைவில் இணக்கம் பெற்று, பெண்களை முற்றிலுமாக ஆண்களிடமிருந்து விலக்கிவைத்து நோக்கும் போக்கையே கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கவிதை இயக்கச் செயல்பாடு என்பது சமீபத்திய காலத்தில் ஒரு முக்கியமான அரசியல் பங்கெடுப்பைக் கொண்டுடிருக்கிறது. அரசின் சுவர்களுடன் நேரடியான மோதுதலை நிகழ்த்தும், படைப்பூக்கத்தை விரயமாக்கும் பணியை ஆழியாள் போன்றவர்கள் ஆற்றவில்லை. மாறாக, அரசு எனும் அதிகாரக் கட்டமைப்பின் ஆதிக்கச் சுவர்கள் சதுரமாக, செவ்வகமாக, முக்கோணமாக என வெளியைக் குறுக்கும் திடமான தன்மைகளுடன் செறிவடைந்து இருப்பதைக் கலைக்கும் வேலையைத் தமிழில் பெண் கவிதை தான் செய்துள்ளது. அரசுடன் மோதுவது வெவ்வேறு முகமூடிகளுடன் வரும் மனிதர்களையெல்லாம் மூடியைக் களைந்து அடையாளம் காணும் நோக்கத்தின்பாலது. எத்தனைக் கோடி முகமூடிகளைக் கிழித்துக் கொண்டிருப்போம், நாம். ஆக, நிஜமான போலியகன்ற முகங்களை உருவாக்குவதில் தம் நேர்மையான உழைப்பைக் கடந்த இரு பத்தாண்டுகளாகக்..


more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_7.php


1 comment:

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், ஈழத்துப் பெண் கவிதையின் வளர்ச்சிப் போக்குப் பற்றிய அலசல் தமிழக்த்து மேடைகளில் இடம் பெற்றிருக்கிறது எனும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

//‘பெண்ணிலை வாதம்’ தமிழின் ஓர் அறிவுப்புலமாக முழுமையும் நிலைப்பட்டதற்கு ஈழப்பெண் கவிஞர்கள் அதிலும், தொண்ணூறுகளின் நிறைவில் தம் கவித்துவ மொழி வழியாகச் சாத்தியப்படுத்திய ஆழியாள் போன்றவர்களே காரணம். //

இக் கூற்றினை நான் நிராகரிக்கிறேன். ஆழியாளுக்கு முன்பதாகவே 1986களின் இறுதிக் காலங்களில் சங்கரி எனும் பெண் கவிஞர் ஈழத்துப் பெண்ணியக் கவிதை மொழி வளர்ச்சியில் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருந்தார் என்பதே சரியானது.

இதற்கு எடுத்துக் காட்டாக 1987 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” எனும் தொகுப்பில் “அ.சங்கரி” முதலான பல பெண் கவிஞர்களின் தொகுப்புக்கள் இடம் பெற்றுள்ளன,


அவர்கள் பார்வையில்
எனக்கு
முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவுமில்லை.

அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.

சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமையாகும்.

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கு
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரை
இதுவே வழக்கம்.
இது சங்கரியின் கவிதை.

Post a Comment