Tuesday, March 1, 2011

க்ருஷாங்கினி – சட்டகங்களால் அடைபட்ட சொற்கள்


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -5

க்ருஷாங்கினி – சட்டகங்களால் அடைபட்ட சொற்கள்

குட்டி ரேவதி

மீண்டும் ஒரு முறை எழுதிக்கொள்கிறேன். ‘ஆண்குறி மையவாதப் புனைவைச் சிதைத்தப் பிரதிகள்’ எனும் இத்தொடரில், சில பெண் கவிஞர்கள் முன்வைத்த ‘உடலரசியலை’ மட்டுமே எழுதுதல் என் நோக்கமன்று. எனில், வெகுசில கவிஞர்களை மட்டுமே எழுத வேண்டியிருக்கும். அதிலும், தங்கள் கவிதைகளில் பெண்ணுடலின் உடற்கூறுகளை வெறுமனே அடையாளப்படுத்தாமல், அவற்றின் அடியில் புரண்டெழும் அர்த்தங்களையும் அடுக்கடுக்கான அரசியல்களையும் அர்த்தப்படுத்தி நேர்மையாகவும் சுடும்படியாகவும் எழுதியவர்கள் ஒரு சிலரே. இந்நிலையில், ஆண் மையவாத எழுத்தைச் சிதைத்தவர்கள் என்னும் பதம், தங்கள் குடும்பம், தன் சூழல், தன் சுற்றம் இவற்றிற்கு மத்தியில் தன் இருப்பை முதன்மையாக்கும்போது, எழும் சிக்கல்களை எழுதிய பெண்களையும் தாம் அர்த்தப்படுத்தும். தன் இருப்பு என்பதே பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இருந்த காலக்கட்டத்தில், தன்முனைப்பை மொழி வழியாக, அதிலும் இலக்கிய வகைமையின் செழுமையான வடிவமான கவிதையை ஆண்டவர்கள் வழியாக நாம் அறிந்து கொள்வதும், அவர்கள் எந்த கருத்துருவாக்கத்தை தம் எழுத்தில் சுயமாகக் கட்டியெழுப்பினார்கள் என்பதை அறிவதும், அவற்றை அவர்கள் கவிதைகள் வழியாகவே ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதும் தாம் இத்தொடரின் நோக்கம். இத்தொடரில் விடுபடும் கவிஞர்கள், மேற்கண்ட தலைப்பில் அடங்காத கவிஞர்கள் என்னும் பொருளில் மட்டுமே.

க்ருஷாங்கினி, 1998-ல், ‘கானல் சதுரம்’ என்ற தொகுப்பின் வழியாகக் கவிதைப் பரப்பிற்குள் நுழைந்த மூத்த கவி. இவரது கவிதைகள் அடிப்படையில், வடிவொழுங்கு உடைய உருவமைப்புகளை சொற்களாகவோ, கவிதையின் கருக்களமாகவோ அல்லது படிமமாகவோ வைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு, அத்தகைய வடிவியத்தன்மைகளால் அலைக்கழிப்புக்குள்ளான கவிஞராகவே இருக்கிறார், இவர். மனித இயக்கங்கள் எல்லாமே வரையறுக்கப்பட்ட சட்டகங்களில் அடைக்கப்பட்டதாக இருக்கும் வாழ்வியலை, நவீன வாழ்வாகக் காட்சிப்படுத்த முயற்சித்துக்கொண்டே இருக்கும் இவரது தொடர் முயற்சியே, கவிதைகளாகப் பதிவாகியிருக்கின்றன. விளிம்பு, பரப்பு, கூம்பு மேடு, பள்ளம், பெருவெளி, நீளம், நடு, கோணல், குறுக்கு, கோடு என வடிவம் பெற்றுக்கொண்டேயும் இருக்கின்றன சொற்கள்!

ஓட்டுக்குள் பாதுகாப்பாக
பிசுபிசுத்த திரவத்தின் மத்தியில்
அதிராமல் நான்.
சுற்றிலுமுள்ள அனைத்துச் சத்தங்களும்
வடிகட்டி, நிறமற்ற வெளிர்நிலையில்

மிதமாக வந்தடைகின்றன
என்னிடம்.
எங்கோ ஓர் நீள் சதுரம்
துண்டாடப்பட்டு அடுக்கடுக்காக

விரிசல்களையும் உடனிருத்தி
சிறு சதுரங்கள் ஆவதை
மரங்களின் ஊடாகக்
காண்கிறேன்.
------------------------------

வாழ்க்கை

பரந்த மைதானத்தில்
பிடுங்கி எறியப்பட்ட
காம்புகளற்ற தனிப் பூக்கள்.
ரத்தத்தில் தோய்ந்ததால்
கூம்பு வடிவமாகக்
குத்திட்டு நிற்கும் மயிர் முட்கள்.
பிணமுகத்திலும் படிந்துவிட்ட பயம்
மொத்தமாக எரியவைக்க
முதலில் சில விறகு
அதன் மேல் ஓர் அடுக்கு உடல்
அப்புறம் மரம்
அப்புறம் உடல்கள்
அடுக்கப்பட வேண்டியவற்றில்
இன்னமும் பாக்கி உள்ளவை
உடல்களே!

ஒரு தச்சனைப் போல பெளதீக வடிவங்களை ஓயாது ஆராயும் கண்களுடைய இக்கவிஞர், அதன் எல்லைகளைத் தாண்ட முடியாமல் அதன் வளையத்திலேயே சிக்கிப் போகும் சமயங்களும் உண்டு. இம்மாதிரியான பெளதீக ஈர்ப்பை மட்டுமே தனது திறனாகக் கொண்டு, ஓர் ஓவியன் வரையத்தொடங்கினாலும் இச்சிக்கலைத் தான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதாவது, அப்பெளதீக, பொருண்மை சார்ந்த நோக்கம், ஏன் அவ்வாறு தான் ஈர்க்கப்பட்டோம் என்று ஆராய்ந்து தெளிந்த சித்தாந்தத்திலிருந்து உருவானதாக இருக்கும் பட்சத்தில் தான் புத்துயிர்ப்பு பெறும். இல்லையெனில், பிளாஸ்டிக் போன்ற உயிரற்ற கவர்ச்சியுடன் உருவாக்கப்படுவதாய் இருக்கும். ஆனால், இத்தகைய சிரமங்களை, கருக்கொண்டுள்ள உட்பொருள் தரும் வாய்ப்புகளால், கடந்து செல்ல முடிகிறது இவரால்.

மனித சமூகத்தில், எல்லா உறவுகளும் வாழ்வியலும் கட்டங்களுக்குள் கட்டமாக சதுரமான பரப்புகளுக்குள் அடைக்கப்பட்டதாக இருக்கிறது. எண்ணங்களும் அவ்வாறே! பெண்ணுக்கான எல்லைகள், வீடு, கழிவறை, தனி அறை என ஒன்றுக்குள் ஒன்றாகக் குறுகிக் கொண்டே இருக்கும் பரப்பின் சித்திரம் கண்டு இவர் கவிதைகள் இப்படி உருக்கொண்டிருக்கலாம். எல்லா சதுரங்களுமே சட்டகமாக ஆக்கி அடித்து இறுக்கப்படுவதும், அதில் பெண்ணின் இருப்பு நிர்ப்பந்திக்கப்படுவதும் என உடல் பூர்வமான அதே சமயம் சடப்பூர்வமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

உறவு II

வெளிக்கதவு பூட்டியிருந்தால்
சிறிதே திறந்திருக்கும் உள் கதவு.
அதுவும் பூட்டியிருந்தால்
விரிந்திருக்கும் முன் கதவு
இருளை உணரும் போது
எல்லாமே அடைத்திருக்கும்
உள்ளது வெளியேயும்
வெளியது உள்ளேயும்
பிரவேசிக்கத் தடை.

இக்கவிதை ஒடுக்குமுறை என்னும் நடைமுறைச்செயல்பாட்டில், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், அது ஒன்றோடு ஒன்று கொண்டிருக்கும் உறவையும் எதிர்வினையையும் விளக்குவது. செம்மையாகச் சிக்கனமான சொற்களால் சொல்லியிருக்கிறார். இதிலும் இயக்கம் என்பது வெளி, உள், கதவு, இருள், முன் என பெளதீகச் சட்டகங்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, ஒடுக்குமுறையை இயக்கும் மனதின் சட்டதிட்டங்களையும் எழுதிவைக்கிறார். சென்ற கவிதையின் தொடர்ச்சியைப் போன்றதொரு அவரது இன்னொரு கவிதையைக் கண்டெடுத்தேன்.

பெண்

அறைக்குக் கதவு தேவை
சுய உபயோகத்திற்கெனினும்
பொது உபயோகத்திற்கெனினும்
அறைக்குக் கதவு அவசியம்
உள்நுழைய உத்திரவு
கதவா தர வேண்டும்?
உந்தித் தள்ளியும்
மெதுவாகத் திறந்தேனும்
உள் நுழைதல் மட்டுமே எல்லை
எனினும் கதவு வேண்டும்.
சுய உபயோகத்திற்கு மட்டுமெனில்
பாதுகாக்க, பத்திரப்படுத்த
அறைக்குக்
கதவோடு பூட்டும் தேவை.
அழுந்த நுழைந்தும்
அவசரமாய் வெளியேறியும்
கதியின் இயக்கத்தில்
கக்கலும், கரைசலும், கரைத்தலும்
பிண்டமும். முழுதுமான
பலப்பலப் பண்டங்கள்
வெளியேற்றம் –
அடைத்தலும், திறத்தலும்
உத்திரவு அவசியமற்ற
கதவின் வேலையானது.


இக்கவிதையின் வரியான, ‘அடைத்தலும் திறத்தலும் உத்திரவு அவசியமற்ற கதவின் வேலையானது’ என்பது பெண்நிலைவாதத்தைக் கூர்மைப்படுத்தும் வரியாகும். இங்கு கதவு என்பது, வெறும் பெளதிகச்சட்டமாக மாறி நிற்கும், ஒடுக்குமுறையைச் செயல்படுத்தும் ஆதிக்க மனநிலையை, ஆணின் மனநிலையை உருவகப்படுத்துகிறது. அந்த வேலையைப் பகிர்ந்து கொண்ட கதவைக் குறிப்பது. உத்திரவு அவசியமற்ற சேவகனைப் போல பணிவிடை செய்யக்கூடியது.

செயற்கை சதுரம்

நீண்ட நெடும் பயனம்
இரை தேடியும் இருக்க இடம் தேடியும்
வம்ச விருத்திக்காவுமாக,
நெளி விளிம்பு
ஒழுங்கற்ற நீர்
கடலின் நீலப்பரப்பு

சட்டமிட்டு திட்டமிடப்பட்ட
பச்சைகள் கடந்து
மணற்துகள் பறக்கும்
பாலையையும் தாண்டி

மேடுகளையும்
இடைவெளிப்பள்ளங்களையும்
அதன் பிறகான
மஞ்சள் பூக்கள் மலர்ந்து விரிந்த
அடர்ந்த மஞ்சள் பெருவெளி நோக்கி
நீண்ட நெடும் பயணம்
வம்ச விருத்திக்காய்
மணலின் நடுவே
சிறு சதுர மஞ்சள்

பெருவெளியென நம்பி
மென் சிறகுகள் கொண்ட
வண்ணத்துப் பூச்சி
கீழிறங்கித் துணைதேட-

ஸ்டாண்டு இட்டு
நட்டு நிறுத்திய தட்டில்
பிசுபிசுத்த ஈரவர்ணம்
மென் இறகை அப்பிக்கொள்ள

இறகை அடித்து அடித்து வெளியேற
உடல் கனத்தால்
பின்னும் பின்னும் உள் அமிழும்.

சிலசமயங்களில் இத்தகைய கோடுகள், வரைவுருவங்கள், வளை வடிவங்கள் அவரிடம் கருக்கொண்ட கருப்பொருளுடன் இயைந்து குறியீடாக மாறிவிடும். இங்கும் அப்படித்தான்! ஈரவர்ணத்தில் சிக்கிக்கொண்ட மென்னிறகு வண்னத்துப் பூச்சி! பெருவெளியென நம்பி பிசுபிசுப்பில் சிக்கிக்கொண்ட இறகுகள் மேன்மேலும் அமிழும் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட இடத்து விடுதலையை நோக்கிப் பறத்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது ஒரு குறியீடாக உருப்பெறுகிறது.

இவ்வாறு இயல்பான குறியீடுகளாகவும் சட்டகங்களாகவும் மாறி இயங்கிய இவரது சொற்கள் பின்னாளில் வந்த இவருடைய, ’கவிதைகள் கையெழுத்தில்..’ தொகுப்பில் உருண்டு கலைந்து ஓடத்தொடங்கியிருக்கின்றன. வார்த்தைகளைத்தொடுத்திருந்த கயிற்றை உருவிவிட்டது போல உதிர்ந்து சிதறியும், சமூக அக்கறைகளை முன்வைக்கும் அவசரப் பொறுப்பால் உரைநடையாகியும் நடை நயம் தளர்ந்தும் காணப்படுகின்றன. இயற்கையின் மீது அக்கறையும் கவனமும் கொண்ட இக்கவிதைகள் மண்ணோடு பிணைந்து நிற்கும் மரங்களைப் போலன்று, பாக்கெட்டுகளில் வேர் அடைக்கப்பட்ட செடிகளாய் ஒட்டாமல் இருக்கின்றன. என்றாலும் FRONT LOADING MACHINE என்ற கவிதையின் வழி, நவீனத்தை எட்டிப்பிடிக்கும் முயற்சியை அவர் செய்துதான் இருக்கிறார்!

FRONT LOADING MACHINE

அடைத்து உள்செலுத்து – கதவை
அழுத்தி மூடியிட்ட பின்
நீரும் நிழலும் அதற்குள்ளேயே
திரவத்தில் மிதக்கும், உருளும், புரளும்;
உரிய நேரம் வரும்வரை
சுழன்று சுழன்று மேலெழும்பும்.
அறைக்குள் சிறைவாசம்.

சிறு துளை வழியே உள்நீர் வெளிவழிய
உச்சக்கட்ட அலறலுக்குப் பின்
கையிரண்டு இழுத்துப்போட
சுற்றிய கொடியும் ஈரமணமுமாக
ஏந்திய பாத்திரத்தில்
இறங்கிக் கீழே விழும்

பெண்ணுடலை FRONT LOADING MACHINE – ஆகப் பார்க்கும் இப்பார்வையும் அதில் ஆளப்பட்டிருக்கும் பூடகமும், இவரது மற்ற கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

இக்கவிதையைப்பற்றி, ‘எல்லோராலும் எப்போதும் தன் உடல் அடையாளம் சுமந்து கொண்டு திரிய முடியாது. உயிர் சுமந்து திரியலாம். ஆனால் அடையாளம் அவமானப்படும் போதும், உடல் மட்டுமாகவே பார்க்கப்படும் தருணங்களில் என்னால் எழுதப்பட்ட கவிதைகளில் சில. பெரும் கூட்டத்தை சாதகமாக்கிக்கொண்டு, கை வீசி நடப்பது போன்ற பாவனையில் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணின் பின் புறத்தையும், தட்டிச் செல்லும் மனிதனின் மனத்தில் பெண் எப்படிப் பதிவாகி இருப்பாள்? மறு உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட உடல் இணைப்பு, உல்லாசமாகிப் போனது மனிதர்களுக்கு மட்டும் தான், விலங்குகளுக்குக் கிடையாது. எனவே, மனிதனுக்கு எப்போதும் தேவைப்படுகின்றன பெண் உடல்கள். ‘பிரண்ட் லோட்ங் மெஷின்) சிலேடையில் சொல்லப்பட்ட கவிதை; எட்டேகால் லட்சணமே என்ற அவ்வையின் பாணியில். இப்போது நான் பெண்ணாகிறேன்’ என்று குறிப்பிடுகிறார், க்ருஷாங்கினி.

ஒரு கவிஞரின் ஆளுமையை, கவித்துவத்தை நம்முள் உருவேற்றிக்கொள்ள அவரது ஒன்றிரண்டு கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. முழு நூலையும் வாசிக்கக் கிடைக்கும் வாய்ப்பிற்குப் பின் தான், அக்கவிஞர் தன்னுள் சாணையேற்றி வைத்திருக்கும் கவித்துவம் நம்முள்ளும் பாய்ந்து சிராய்ப்புகளையேனும் ஏற்படுத்தமுடியும் என்று நம்புகிறேன். ஒற்றையொற்றைக் கவிதைகள் வழியாக, அக்கவிஞரை நூல் பிடித்துப் போகலாம் என்றாலும் ஒட்டுமொத்த கவிதைத்தொகுப்பு கொடுக்கும் பெருவெளி அனுபவம் தான் மெய்மையானது.

-----------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: க்ருஷாங்கினியின் முஹ்டல் நூல், ‘கானல் சதுரம்’ கவிதைத்தொகுப்பு 1998 - ல் வெளியானது. ‘கவிதைகள் கையெழுத்தில்…’ என்ற கவிதைத் தொகுப்பு 2007 – ல் வெளியானது. கவிதை தவிர சிறுகதைகளையும் எழுதிவருகிறார். ’பறத்தல் அதன் சுதந்திரம்’ (இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்பெண் கவிதைகள்) என்ற நூலை 2001 –ம் ஆண்டு கவிஞர் மாலதி மைத்ரியுடன் இணைந்து தொகுத்தார்.


from:
http://koodu.thamizhstudio.com/thodargal_14_5.php


No comments:

Post a Comment