Sunday, January 30, 2011

ஆன்டன் செகாவ் - 150 ஆண்டுகள்ஆன்டன் செகாவ் - 150 ஆண்டுகள்

(திரு. எஸ். ராமகிருஷ்ணன் உரையின் எழுத்து வடிவம்)

கமலாலயன்


21-01-2011 அன்று சென்னை LLA சிற்றரங்கத்தில் 'கூட்டாஞ்சோறு - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம் - நான்காவது அரங்கு நடத்திய ஆன்டன் செகாவ்-151வது பிறந்த நாள் விழாவில் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளுள் முன்வரிசைக்காரரான திரு, எஸ்,ராமகிருஷ்ணன் ஆற்றிய உரை :-

ஆன்டன் செகாவைப் பற்றிப் பேசுவதற்கு நான் இந்த ஆண்டு பிறந்தது முதலே காத்துக் கொண்டிருந்தேன், இது. செகாவ் பற்றி நான் பேசுகிற நான்காவது கூட்டம், செகாவ் மீது பனி பெய்கிறது என்ற எனது புத்தகத்தை மாஸ்கோ நகர மேயர் வெளியிட்டிருக்கிறார், 150 ஆண்டுகளுக்கு முன்பு. ஜனவரி 29-ம் தேதி பிறந்து 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவரான ஆன்டன் செகாவைப் பற்றி இன்றைக்கு நாம் ஏன் பேச வேண்டும்? அவருக்கு எதற்காகப் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்? என்னைக் கூட ஒருவர் கேட்டார் : நீங்கள் ஏன் செகாவிற்கு விழா எடுக்கிறீர்கள்? இங்கே நமது புதுமைப்பித்தனுக்கு விழா எடுக்கலாமே? என்று, நாம் புதுமைப்பித்தன் உட்பட முக்கியமான எல்லா எழுத்தாளர்களுக்குமே விழா எடுத்திருக்கிறோம், செகாவைக் கொண்டாடுவது என்பதே புதுமைப்பித்தனைக் கொண்டாடுவது போல்தான், இவரைப் போலவே அவரும் நையாண்டியாக (satire) எழுதுவதில் தேர்ந்தவர், நகைச்சுவை உணர்வு அவருடைய எல்லா எழுத்துக்களிலும் ததும்பி நிற்கும்.

செகாவ் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து தொடங்குகிறேன், அவர் எழுதிய ஒரு குறிப்பு இது :

தினமும் அவர் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காட்சி - காரில் வருகிற செல்வந்தர் ஒருவர். பல்கலைக்கழகத்தின் வாயிலில் சாலையோரமாகக் காரை நிறுத்தச் சொல்ல. கண்ணாடியை இறக்கி விட்டு 'த்தூ' என்று பல்கலைக்கழகத்துப் பக்கமாகப் பார்த்து துப்பிவிட்டு உடனே மறுபடி கண்ணாடியை ஏற்றியபடி போய்விடுவாராம், வேறு ஒரு வார்த்தைக் கூடப் பேசுவது கிடையாது, காரோட்டிக்கு. அந்த இடம் வந்ததுமே தன்னிச்சையாகக் காரை நிறுத்தி விடுகிற அளவுக்கு இது பழக்கமாகி விட்டது, இதை செகாவ் பதிவு செய்திருக்கிறார், எதற்காக அந்தச் செல்வந்தர், தினமும் சரிலிக்காமல் இப்படிச் செய்ய வேண்டும்? பல்கலைக்கழகத்தின் மீது அவருக்கு அப்படி என்ன கோபம்? அவரது கோபம் ஆசிரியர்கள் மீதா,, கல்வித் திட்டத்தின் மீதா,, பல்கலைக்கழகப் பாடங்களின் மீதா,,? ஏதோ ஒன்றின் மீது அவரது கோபம் இப்படி வெளிப்படுகிறது, இதை ஏன் செகாவ் பதிவு செய்ய வேண்டும்?

ஒரு பையன். அவனுடைய தேர்வுத்தாளை மாலையில் அவன் வீடு திரும்பியதும் வாங்கிப் பார்க்கிறார் தந்தை, 5 மதிப்பெண் வாங்கி வந்திருக்கிறான் பையன், தந்தைக்குக் கண்மண் தெரியாத கோபம், பையனைப் போட்டு அடிஅடி என்று அடிக்கிறார், அவன் பரீட்சைப் பேப்பரைக் காட்டி ஏதோ சொல்ல வருகிறான், ஆனால் அப்பா கேட்பதாக இல்லை, வெளுத்து வாங்கி விட்ட பிறகுதான் ஓய்கிறார், மறுநாள் காலை - பையனை இழுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகிறார், தலைமை ஆசிரியரைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்கிறார் : என்ன பாடம் நடத்தறீங்க நீங்க? என் பையன் 5 மார்க் வாங்கிக் கொண்டு வருகிறான், இதுதான் நீங்க சொல்லித்தரும் லட்சணமா - அதுவா,, இதுவா,,? என்று திட்டும் அப்பாவிடம். தலைமையாசிரியர் அமைதியாகச் சொல்லுகிறார் : ஐயா. உங்கள் பையன் 5க்கு 5 மார்க் வாங்கியிருக்கிறான், அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? - தந்தை திடுக்கிட்டுப் போய்த் தன் கையிலுள்ள பேப்பரைப் பார்க்கிறார், பையன் 5க்கு 5 மார்க்தான் வாங்கியிருக்கிறான்.

இதை ஏன் நீ நேற்று சொல்லவில்லை,,? என்று பையன் மீது பாய்கிறார், அதைச் சொல்வதற்குத் தானே அப்பா நான் பலமுறை முயற்சி செய்தேன், நீங்கள் காது கொடுத்துக் கேட்காமலே அடித்தீர்கள்,,, என்கிறான், தந்தைக்கு அப்போதும் தான் செய்த தவறு புரியவில்லை, அவருக்கு அதுபற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லை.

இது செகாவ் எழுதிய ஒரு கதை, இதில் வருகிற பையன் செகாவ்தான், சிறு வயதில் இப்படி அப்பாவிடம் தினமும் எடுத்ததற்கெல்லாம் அடிவாங்கி வளர்ந்தவர்தான் அவர்.

செகாவ். எந்த ஓர் ஆசிரியரைப் பார்த்தாலும் உடனே தலைகவிழ்ந்து கொள்கிறார், அவமானமும். குற்ற உணர்வும் அவரை ஆட்கொண்டு விடும், ஆசிரியரின் முகத்தையோ - கண்களையோ நேராகப் பார்ப்பதே கிடையாது, காரணம். அன்றைக்கு ஆசிரியர் என்பவர் மதிக்கத்தக்கவராக - ஓர் ஆசிரியருக்குரிய பண்பு நலன்கள் உடையவராக இருந்ததில்லை, ஆசிரியரின் தோற்றம். நடத்தை. அவரது அணுகுமுறை பற்றி. அன்றைக்கு நிலவிய கல்வி முறை பற்றி. சமூகத்தைப் பற்றி - சூழ்ந்துள்ள பல விஷயங்களைப் பற்றி செகாவ் தீவிரமான விமர்சனங்களுடன் இருந்தவர், சமூகத்தின் குரலாக ஒலித்தவர், மாற்றுக் கல்வி பற்றி எழுதியதுடன் தானே ஒரு பள்ளியையும் நடத்தியவர், இந்த வகையில் செகாவ் - டால்ஸ்டாய் இருவரும் நமது மகாத்மா காந்திக்கு முன்னோடிகள், காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய பள்ளிக்கு......


more: http://koodu.thamizhstudio.com/katturaigal_16.phpThursday, January 27, 2011

வம்சி இரண்டு புத்தகங்கள் வெளியீடு (29-01-2011)

வம்சி இரண்டு புத்தகங்கள் வெளியீடு (29-01-2011)


Tuesday, January 25, 2011

கதை சொல்லி - சா. கந்தசாமி (Sa. Kandasami)கதை சொல்லி - சா. கந்தசாமி (Sa. Kandasami)

லிவிஞாயிறு காலை சீக்கிரமாகவே விழிப்பு தட்டி விட்டது. அன்று கதை சொல்லிக்காக எழுத்தாளர் சா.கந்தசாமி அழைத்திருந்தார். வெளிக்கிடுவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. பால்கனியில் வந்தமர்ந்தவன் தனிமையாலும் கதை சொல்லிக்கான என் தேடலும் குறித்த யோசனைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தேன். காலம் என்கிற மறைபொருள் நம்மிடம் மறைப்பவைகள் ஏராளம். என் அப்பப்பா ஒரு கதை சொல்லி.

அவர் காலத்தில் சுருட்டு வியாபாரம் செய்து வந்தார். வீட்டிற்கு பெண்கள் வந்து சுருட்டு சுற்றுவார்கள். ரேடியோ இல்லாத காலம் அது. பெண்கள் சுருட்டு சுற்றும்போது அவர்களுக்கு அலுக்காமல் இருப்பதற்கும் பொழுது போவதற்கும் ராமாயாண‌க் கதைகளையும் மகாபாரதக் கதைகளையும் சொல்லுவார். ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் அவருக்கு கதைகள் உபகதைகள் அனைத்தும் அத்துப்படி.'மனுசன் அவ்வளவு அருமையா கதை சொல்வார், நான் குமரி பெண்ணாக இருக்கும் போது அவர் வீட்டிற்கு சென்று கதை கேட்பேன்' என்று ஒருமுறை சொன்னாள் அம்மா. என் அம்மா சிறுபெண்ணாக அப்பப்பாவிடம் கதை கேட்பதை கற்பனை செய்ய ஒருவித புன்னகை மனதுள் நுழைகிறது. நான் பிறப்பதற்கு முன்பே அப்பப்பா இறந்து விட்டார்.

என் அம்மா எனக்கு அதிகம் கதைகள் சொல்லியதில்லை. அவளிடம் சிறுவயதில் உறங்கச் செல்லும்போது கதை சொல்லக் கேட்கும் பொழுது ஒரு கதையை மட்டும் அடிக்கடி சொல்வாள். எல்லோருக்கும் தெரிந்த கதை தான் அது. ஒரு தாயும் மகனும் வசித்து வந்தார்கள். அவனுக்கு தகப்பன் இல்லை ஆதாலால் மகனைச் செல்லமாக வளர்த்து வந்தாள். ஒரு முறை பக்கத்து வீட்டில் இருந்து விறகு திருடி வந்துவிட்டான். அவன் அம்மா அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மற்றொருமுறை பள்ளியில் இருந்து பென்சில் திருடி வந்து அம்மாவிடம் காட்டுவான். அதற்கும் அவள் அவனைக் கண்டிக்கவில்லை.சிறு தவறுகள் பெரிதாக வளர்ந்து அந்த ஊரிலேயே மிகப் பிரபலமான கொள்ளைக்காரனாக மாறிவிடுகிறான். அவன் திருடாத வீடே இல்லை என்ற நிலமை. ஒருமுறை ஒரு பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவளுடைய தங்க தாலியை பறிக்க முயற்சி செய்வான். அப்பொழுது அவள் விழித்துக்கொண்டு கத்தத் தொடங்குவாள். உடனே அவன் தன் கத்தியால் குத்தி அவளை கொலை செய்துவிட்டு தப்பித்துவிடுவான்.

அவன் விரைவில் கைதாகிறான். நீதிமன்றத்தில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. தூக்குமேடையில் தன் கடைசி ஆசையாக‌ அவன் தன் தாயை பார்க்க வேண்டும் என்கிறான். இறுதியாக அவளுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறான்.கொலைகாரனாக இருந்தாலும் அவன் தாய்ப் பாசத்தை எண்ணி ஊரே மெச்சுகிறது. தூக்கிலிடுவதற்கு முன் தன் தாயை கட்டி அணைத்து "அம்மா! நீ என் சிறு வயதில் தவறுகளை தண்டித்திருந்தாள் நான் இன்று கொள்ளைக்காரனாகவும் கொலைகாரனாகவும் மாறியிருக்க மாட்டேனே. இதற்கெல்லாம் நீதானே காரணம் என சொல்லி தன் தாயின் மூக்கை கடித்து கொலை செய்வான். இந்த கதையென் அம்மா மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். செய்யும் சிறு தவறுக்கெல்லாம் அவளின் தண்டனை அதிகமாகவே இருந்தது. கதைகள் ஒவ்வொன்றும் வெறும் கதைகளாக நம்மை கடந்து விடுவதில்லை. ஆழ்மனங்களின் அதன் வேர்கள் கிளை விட்டிருக்கிறக்கிறது.

எழுத்தாளர் சா.கந்தசாமியின் வீடு சென்னையில் அடையார் கேட் நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள கனரா வங்கியின் பக்கத்தில் உள் நோக்கிச் செல்லும் சாலையின் சிறிது தூரத்தில் இருக்கிறது. ஒரு புன்னகையோடு வரவேற்று அமரச் சொன்னார். அந்த நடுக்கூடத்தில் இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள். 'இன்னும் நிறைய புத்தகங்கள் உள்ளே இருக்கிறது, என்ன ஒன்று ஏதோ ஒரு புத்தகத்தை தேடும் போது தான் கஷ்டமாக இருக்கும் கிடைக்கவில்லை என்றால் புது புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்வேன்' என்றார். சா.கந்தசாமி 'சாயாவனம்' நாவலை எழுதிய போது அவருக்கு வயது இருபத்தைந்து. சாயவனம் நாவல் படித்துக் கொண்டிருந்த போது அதில் குறிப்பிடப் படும் செடி கொடிகளின் பெயர்கள், வனத்தை அழிப்பதன் போராட்டம், கதை நிகழும் இடத்தின் கதாப்பாத்திரங்களின் உறவு இவையாவும் சேர்த்து அவர் ஒரு விவசாயப் பின்னணி கொண்டவர் என அனுமானித்திருந்தேன். என் அனுமானங்கள் யாவைற்றையும் அவருடனான உரையாடல்கள் உடைத்தெறிந்தன.

"அடப் போப்பா! என்னை விட மிகச் சிறிய வயதில் எத்தனையோ எழுதியவர்கள் ஏராளம். நான் என்ன பெரிதாக எழுதிவிட்டேன்" என்றார் அலட்டிக் கொள்ளாமல். அவர் பின்புலம் தான் இன்னும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. "நான் பதினாலு பதினைந்து வயதில் சென்னை வந்துவிட்டேன். என் வீட்டிற்கு அருகில் ஒரு நூலகம் ஏற்படுத்தி விட்டார்கள். வெவ்வேறு வகையான புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். என் வீட்டிற்கு எந்த புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்து வரலாம். ஆசிரயர்களுக்கு கொடுத்த சலுகை அன்று எனக்கும் கொடுக்கப்பட்டது. அப்படியே எழுதத் தொடங்கிவிட்டேன். என் குடும்பம் விவசாயம் சார்ந்தது என்றாலும் என் அப்பா விவசாயம் செய்ததில்லை. எழுதும் போது அந்த மரங்களினுடைய பெயருடன் எழுதுவேன். சாயாவனம் எழுதுகிற பொழுது நினவில் இருப்பவை தானாக வந்து சேர்ந்து கொண்டது" என்றார்.

ஒருவருடன் மிகச் சிறந்த உரையாடல்கள் எப்பொழுதும் சாத்தியப்படுவதில்லை. நம்மோடு கதைப்பவர் திறந்த மனதுடன் இருக்கும் போதே அது வாய்க்கும். சா.கந்தசாமியிடம் அந்த மனம் இலகுவாக இருந்தது. இதுதானென சுருக்கிக் கொள்ளாமல் அவருடனான பேச்சுக்கள் பரந்து பட்டிருந்தது. கதைகள் தொடங்குவதற்கு முன் கதைத்தோம், கதைகள் பதிவிற்கிடையில் கதைத்தோம் ,கதைகளை முடித்தும் கதைத்தோம். அவர் கூறிய முதல் சிறுகதை " எதிர்வினை" யில் ஒரு பிரபஞ்ச ஒர்மை இருந்தது. எக்காலத்திலும் எந்த இடத்திலும் அதை பொருத்திப் பார்க்கலாம். ரஷ்ய இலக்கியங்களின் ஓர்மையே நம்மை இன்றும் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. நிகழும் காலமும் இடமும் மனிதர்களும் வேறுபட்டிருந்தாலும் கதைகளின் சாரம் என்றும் குறையவில்லை. அவர் முதல் கதையை முடித்ததும் முதல் கேள்வி அவர் கதைகளுக்கான ஆதாரப் புள்ளி எங்கிருக்கிறது என்பதே. ஒரு எழுத்தாளனுடைய கதைகளுக்கான அகத் தூண்டுதலை எங்கிருந்து பெறுகிறார் அதன் ஊற்றுக்கண் எங்கே இருக்கும்.

"ஒரு கதையில் பல மனிதர்களைக் கொண்டே ஒரு கதாப்பாத்திரம் இருக்கும். ஒரு மனிதனை வெளியில் இருந்து சொல்லி விட முடியது. அவனை உள் சென்று பார்க்க வேண்டும். அது தவிரவும் மனம் மனிதர்களை கவனித்துக் கொண்டிருக்கும். அது எழுதும் பொழுது தானாக வந்துவிடும். கண்கள் காமிராவைப் போல் பதிவு செய்து மூளைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது. ஒன்றை தவிர்த்தாலும் இன்னொன்று சென்று கெண்டே இருக்கிறது. இது பிரக்ஞையுடன் செய்யும் காரியம் அல்ல. அது இயல்பாகவே நடந்துவிடுகிறது. அந்த கதையில் வரும் டிரில் மாஸ்டர் என்னுடைய ஆசிரியர் கிடையாது. அவனுக்கென்று ஒரு சட்டம் வைத்துக்கொண்டு அப்படியே வாழ்கிறான். அதில் வரும் சம்பவங்களே கதைகள் அனைத்தும்" என்றார் சா.கந்தசாமி.

சா.க‌ந்த‌சாமியிட‌னான‌ உரையாட‌ல் பெரும்பாலும் அவர் மொழி சார்ந்த‌தும் வாழ்வு சார்ந்த‌துமாகிய எண்ணங்களைப் பற்றி இருந்தது. அத‌ன் முழுப்ப‌திவும் ஒரு க‌ட்டுரையில் சாத்திய‌மில்லை.

க‌தைக‌ளுக்கு ப‌ஞ்ச‌மில்லா மனித‌ர் சா.க‌ந்த‌சாமி. என்ன‌ க‌தை சொல்லாமென‌ ஒரு சில‌ வினாடிக‌ள் ம‌ட்டும் யோசித்தார். த‌ட‌ங்க‌ல்க‌ள் இல்லாம‌ல் க‌தைக‌ள் வ‌ந்து கொண்டிருந்த‌து. க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்து சாலையில் ந‌ட‌க்கும் பொழுது அவ‌ர் வீட்டின் எதிரில் இருந்த‌ பால‌ வினாய‌க‌ர் கோவில் ம‌ணி அடித்துக் கொண்டிருந்த‌து. அந்த‌ இனிமையைப் போல‌வே அவ‌ர் க‌தைக‌ளும் இருந்த‌ன‌ என‌ ம‌ன‌துக்குள் நினைத்துக் கொண்டேன்.

சா.க‌ந்த‌சாமியின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானைத் த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)Monday, January 24, 2011

சிறுகதை உலகம்தமிழ்மகன்


தமிழ் ஸ்டூடியோ டாட் காம் நடத்தும் படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தில் சிறுகதை குறித்த இரண்டு நாள் வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுவாரஸ்யமமான அனுபவம். இரண்டு நாளும் காலை முதல் மாலை வரை நான் படித்த சிறுகதைகள் குறித்து பேசிக் கொண்டே இருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குப் பேசுவதே சிரமம் என்ற எண்ணத்தில்தான் போனேன். பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதை அறிந்தேன். படித்தவற்றை நினைவூட்டும் விதமாக இருந்தது. பேசுவதற்காக நான் கையில் குறிப்பெடுத்துச் சென்றேன். அந்தக் குறிப்பு இதுதான்:

தமிழ் மொழியில் இலக்கியம் என்பவை செய்யுள் இலக்கியமாகத்தான் இருந்தன. சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி கண்ணகி, கோவலன் கதை, ராமன் சீதை கதை எல்லாமே நமக்கு செய்யுளாகத்தான் கிடைத்தன. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான் எப்படி பேசிக் கொள்கிறோமோ அதே பாணியில் எழுதுவதும் இலக்கியம்தான் என்ற முடிவுக்கு வந்தோம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலை எழுதினார். பிரதாப முதலியார் சரித்திரம் என்று அந்த நாவலுக்குப் பெயர். வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரோ அதற்கு சம காலத்திலோ ஆ.மாதவையா, மகாகவி பாரதி போன்றோர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தாலும் வடிவம் கூடிவரப் பெற்றது குளத்தங்கரை அரசமரம்தான். இதை ஆமோதிக்கிறார் மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா.

நாம் இன்று எத்தனையோ நாவலாசிரியர்களையும் சிறுகதையாசிரியர்களையும் பெற்றிருக்கிறோம்.

மணிக்கொடி இதழ் நமக்கு அரிய சிறுகதையாசிரியர்களைத் தந்தது. புதுமைப்பித்தன், கு.பா.ரா., மௌனி, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., லா.ச.ரா., போன்ற பலர் அதில் இருந்து புறப்பட்டவர்கள்தான். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சுஜாதா, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றனர்.

இவ்வளவு பேரும் எதற்காக எழுதினார்கள் என்பது எவ்வளவு நியாயமான கேள்வியாக இருந்தாலும் எத்தனையோ ஆயிரம் பேர் இவர்களை வாசித்தார்கள் என்பதே அதற்கு நியாயமான பதிலாக இருக்கிறது. படிக்கிற ஆர்வம் மிக இயல்பான மனப்போக்காக இருக்கிறது. இசை மீது ஆர்வம் கொள்கிறவர்களும் ஓவியத்தின் மீது ஆர்வம் கொள்வபவர்களும் போலவே எழுத்தின் மீது ஆர்வம் கொள்பவர்களும் உருவாகிறார்கள். ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளான ஆர்.கே. நாராயண் எழுத்தாளராகவும் ஆர்.கே. லஷ்மண் ஓவியராகவும் தீர்மானமானது அவர்களின் எத்தனையாவது பிராயத்தில்.. அதில் எந்த தருணத்தில் என்பது புதிர் நிறைந்த கேள்வியாகத்தான் இருக்கிறது.

நீங்கள் கதைகள் பற்றி தெரிந்து கொள்ள குழுமியிருப்பதும் அத்தகைய ஒரு புதிர்தான். நீங்கள் ஏன் ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேலையோ, கார் டீலராகவோ இல்லாமல் புத்தகம் படிப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறீர்கள்?

சினிமா இசையில் உங்களுக்கு இளையராஜாவையோ, ரஹ்மானையோ பிடிக்கலாம். தேவாவையோ சங்கர் கணேஷையோ பிடிக்கும் என்று கூறுபவர்கள் குறைவு. நாம் பல தரப்பட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தாலும் தனித்தன்மை இல்லாதவர்களைப் பின் தொடர்வதில்லை.

பாடகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பெரும்பாலும் டி.எம்.எஸ்., பி.பி. சீனிவாசுலு, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் பெயரைச் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தனித்தன்மை இருந்தது. இவர்களைப் போல பாடுகிறவர்கள் சிலர் வந்தார்கள் அவர்கள் எடுபடாமல் போனார்கள். எந்தத் துறையிலும் தனித் தன்மை தேவை. பத்திரிகை ஓவியங்களை எடுத்துக் கொண்டால் சிலருக்கு ம.செ., சிலருக்கு மாருதி, சிலருக்கு ஜெயராஜ், சிலருக்கு கோபுலு சிலருக்கு அரஸ், சிலருக்கு ஷ்யாம்.. இப்படி ரசனை மாறுகிறது.
எழுத்துலகில் அது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சிலருக்கு கல்கி பிடிக்கும். சிலருக்கோ அவரை ப் பிடிக்கவே பிடிக்காது. சுந்தர ராமசாமிதான் சிறந்த எழுத்தாளர் என்பார்கள். சிலருக்கோ சுஜாதாதான் படிக்கப் பிடிக்கும். ஜெயமோகனைப் பிடிப்பவர்களுக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காமல் இருக்கும். ரசனை மாறுபாடு இருப்பது வாடிக்கை. எம்.ஜி.ஆருக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது போலவே சிவாஜிக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது அல்லவா?.

மொத்தத்தில் ரசனைகள் மாறுவது இயல்பு. ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமானால் உலகில் ஒரே ஒரு நடிகரும் ஒரே ஒரு நூலும் ஒரே ஒரு இசைக் கலைஞருமாகத்தான் இருக்க முடியும். அது சாத்தியமில்லை; அது சரியுமில்லை.

கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் அதிசய பொக்கிஷமாக கலைகள் இருக்கின்றன. மனிதனின் அரிய கண்டுபிடிப்பாக கலை இருக்கிறது. குகையில் வாழ்ந்த நாளில் சுவரில் கிறுக்கிய நாளில் உருவான படைப்பாற்றல். விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரித்தது அவனுடைய உழைப்பும் கலையும். மனிதன் வேட்டையாட ஆரம்பித்தான். அதற்கான கருவிகள் கண்டுபிடித்தான். அதோடு நிற்கவில்லை. அதை சுவையாக சமைக்கவும் கற்றான். புலியும் வேட்டையாடுகிறது. அது ஒரு போதும் மானை வேட்டையாடி மான் பிரியாணி செய்யப் போவதில்லை. மனிதனின் உழைப்பும் கலையும் ஒன்றாக வளர்ந்தவை.

படைப்பிலக்கியத்தில் இத்தனை வகைகள் இருக்கின்றன. அல்லது இத்தனைவிதமாக எழுதுகிறார்கள் நான் யாரைப் பின்பற்றுவது, யாரைப்படிப்பது என்ற கேள்வி எழலாம். எப்படி டி.எம்.எஸ்.ஸýக்கோ, சிவாஜிக்கோ, ரஹ்மானுக்கோ ரசிகர் ஆனீர்களோ அதுபோலத்தான் இதுவும். உங்கள் மன இயல்புக்கும் உங்கள் அனுபவத்துக்கும் உங்கள் சுபாவத்துக்கும் நெருக்கமான படைப்புகள் உங்களைத் தொடும். அப்போதுதான் அதை உங்களுக்கான இலக்கியமாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அட, நாம் நினைத்தது போலவே இருக்கிறதே என்றோ, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பட்ட அனுபவம்போலவே இருக்கிறது என்றோ, இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றோ ஒரு இலக்கியத்தைப் படிக்கும்போது நாம் நினைக்கிறோம்.
எந்த நூலைப் பற்றியும் உங்கள் அபிப்ராயம் மாறுபடலாம். அதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த அபிப்ராயம் உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். இன்னொருத்தரின் அபிப்ராயத்தை பிரதிபலிக்காதீர்கள்.

மணிக்கொடி காலத்தில் தழைக்கத் தொடங்கிய சிறுகதை உலகம் தமிழில் தானே ஒரு தடத்தைப் போட்டு அதில் முன்னேறத் தொடங்கியது. மனிதர்களின் அவலங்களை, சந்தோஷங்களை, இயலாமையை, முயற்சியை அவை சொல்ல ஆரம்பித்தன. புதுமைப்பித்தனின் கிண்டல் தொனிக்கும் நடை, கு. அழகிரிசாமியின் கரிசனமான நடை, கு.பா.ரா.வின் மனித சபலங்களைச் சொல்லும் உளவியல் நடை என வாசகர்களின் பல்வேறு மனநிலைகள் அலசப்பட்டன. ந.பிச்சமூர்த்தி, மெüனி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜானகிராமன் என வாசகர்களைச் சுழற்றிப் போட்ட எழுத்தாளர்கள் வரிசையாக உருவாகினர். தமிழ் சிறுகதை உலகின் பொற்காலம் அது.

பெரும்பாலும் கல்கி, நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோரின் கதைகளில் வரும் லட்சிய நாயகர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பலருடைய வீட்டில் கதாபாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த லட்சியக் கதைகள் எதார்த்தமான உலகத்தைப் படைப்பதில் தவறு செய்தது. அது உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலையில் புதிய லட்சியத்தோடு செயல்படுபவர்களைக் காட்டியது. சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்கு காந்திய சமூக சீர்திருந்த தேவையிருந்தது. அவர்கள் உண்மை பேசினார்கள். தியாகம் செய்தார்கள். குற்ற உணர்வு கொண்டு வருந்தினார்கள். அவையெல்லாம் மிகையாக இருந்தன. தேசியம் பேசிய இவர்களுக்குப் போட்டியாக தமிழ் தேசியம் பேசிய அல்லது திராவிடம் பேசிய சிறுகதைகள் உருவாகின. அண்ணா, கருணாநிதி, எஸ்.எஸ். தென்னரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன் போன்ற பலர் அவற்றைச் செய்தனர். தமிழ் தேசிய லட்சிய வாதம், பகுத்தறிவு வாதம், மிராசுதார் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு போன்றவை இக் கதைகளின் அடி நாதமாக இருந்தன. இன்னொரு பக்கம் டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை வலியுறுத்தும் கதைகளோடு வந்தனர். இவர்களில் ஜெயகாந்தன் தன் தனித்துவமான கருத்துப் போக்கினால் அவர்களில் இருந்து விலகியே இருந்தார். அவருடைய கதைகள் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை பேசுவதில் தொடங்கி, மேல்தட்டு மக்களின் பிரச்சினைக்குக் கைமாறியது. பாரிஸýக்குப் போ, பிரம்மோபதேசம், சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், ஜெயஜெய சங்கர என்று திசைமாறலின் உச்சத்துக்குப் போனார்.

இந்த சமயத்தில்தான் சுஜாதாவின் வருகை. ஏறத்தாழ இந்தக் காலத்தில்தான் நான் படிக்க ஆரம்பித்தேன். மேற் சொன்ன எல்லோரையும்விட அடுத்து வந்த இவரின் ஆதிக்கம் எனக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ அவருடைய எல்லா நூலையும் நான் வாசித்தேன். விஞ்ஞானம், புதுமை, எள்ளல், துறுதுறுப்பு, சுறுசுறுப்பு எல்லாம் இருந்தது இவருடைய கதைகளில். அவரை ஒரு சங்குக்குள் அடக்கமுடியவில்லை. புலனாய்வு கதைகள் எழுதுவார், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று காதல் கதைக்குத் தாவுவார், தலைமைச் செயலகம் என மூளை இயக்கம் பற்றி எழுதுவார், ஆழ்வார் பாசுரம் பற்றி எழுதுவார், சினிமா விமர்சனம் எழுதுவார், விஞ்ஞான கதைகள் எழுதுவார், வரலாற்றுக் கதை எழுதுவார்... மருத்துவம், காபி கொட்டை, சினிமா, இசைக் கச்சேரி, கவிதை எல்லாவற்றையும் எழுதினார். சுமார் 40 ஆண்டுகாலம் தமிழில் அவருடைய ஆட்சி நடைபெற்றது. இப்போதும் அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நிறைய வெளிநாட்டு நடப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், தமிழில் புதிதாக} தரமாக எழுதுபவர்களை இனம் கண்டு அறிவித்தவர் அவர்.
பிறகு தலித் இலக்கியம் என்ற பிரிவில் பாமா, சிவகாமி, ஆதவன் தீட்சன்யா போன்ற பலரது கதைகள் தமிழில் புதிய பாட்டையை ஏற்படுத்தின.

சுந்தரராமசாமியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா.வாசுகி, பாவண்ணன், பெருமாள்முருகன், எஸ்.சங்கரநாராயணன் போன்ற பலர் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் யாரையும் நீங்கள் படிக்கலாம். யாரைப் பற்றியும் அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்னரே சொன்னது போல அது உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக யாரையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாது.

எல்லோரையும் படியுங்கள். அது ஒரு பரவசமான அனுபவம். நீங்கள் கவனித்த அல்லது கவனிக்கத் தவறிய தருணங்களைப் படைப்பிலக்கியங்கள் உங்களுக்கு ஓர் உயரிய தரிசனத்தோடு தட்டில் வைத்துத் தருகிறது.

படைப்பிலக்கியங்கள் ஒரு காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றன. அ. மாதவய்யாவின் குசிகர் குட்டிக் கதைகளையோ, புதுமைப்பித்தனையோ படிக்கும்போது நாம் அந்தக் காலத்தைத் தரிசிக்கிறோம். அப்போதைய சமூகச் சூழல், சமூகப் பழக்க வழக்கம், பேச்சுமுறை எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அவை சரித்திர சம்பவங்கள் இல்லை. புனைவுகள்.

சமஸ்கிருதம் கலந்த தமிழ் நடை அப்போதைய வழக்கமாக இருந்தது. முதல் சிறுகதையான குளத்தங்கரை அரசமரமாகட்டும் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமாகட்டும் அதில் மணிப்பரவாளம் இருந்தது. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் தமிழின் போக்கை மாற்றின. பாரதிதாசன் தனித்தமிழில் கவிதை எழுதும் மரபை உருவாக்கினார்.
எதற்காக மனிதன் எழுதவும் படிக்கவும் ஆரம்பித்தான் என்று சிந்திக்கலாம்?

மனிதன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தோடுதான் குகைச் சுவற்றில் கிறுக்க ஆரம்பித்தான். விதம் விதமாக ஒலி எழுப்ப ஆரம்பித்தான். அவனுடைய கிறுக்கல்தான் இப்போது படைப்பிலக்கியமாகவும் ஓவியமாகவும் மாறியிருக்கிறது. விதம்விதமான ஒலிகளின் உருமாற்றம்தான் இன்றைக்கு இசையாகியிருக்கிறது. அனைத்துக்கும் மூல நாயகன் குகைச் சுவற்றில் முதன் முதலில் கிறுக்கிய அந்த மேதைதான்.

நெருப்பை உருவாக்கியவன் விஞ்ஞானியாகவும் குகையில் கிறுக்கியவன் கலைஞனாகவும் வளர்ந்தான்.

தான் அறிந்ததை, உணர்ந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனிதன் நினைத்தான். கூவி கத்தி அழைத்து தகவல்களைச் சொன்னான். புகையை உருவாக்கித் தகவல்களைச் சொன்னான். அது நிரந்தரமாகவும் இன்னும் நீண்ட தூரத்துக்குச் செல்லவும் முடியாததை உணர்ந்து ஓலை அனுப்ப ஆரம்பித்தான். கடிதம் முதல் படைப்பிலக்கியம். கடித இலக்கியம் என்று கி.ராஜநாராயணன், டி.கே.சி. போன்றவர்களின் எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களையும் கலைஞர் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதங்களையும் இங்கே கவனிக்கலாம். கடிதங்கள் ஆச்சர்யங்களை, சோகங்களை, சந்தோஷங்களைச் சுமந்துவருபவை. என்னுடைய இளம் பிராயத்தில் வீட்டுக்குக் கடிதம் வந்தால் அதை யார் முதலில் ஓடிச் சென்று வாங்குவது என்பதில் தொடங்கி அதை யார் முதலில் படிப்பது என்பதவரை ஏகப் போட்டியிருக்கும். கடிதங்கள் சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வருவதாக மனதில் பதிந்திருந்தது. இப்போது அது எஸ்.எம்.எஸ். ஆக சுருங்கிப் போய்விட்டது. இருந்தாலும் கடிதங்கள்தான் சிறுகதைகளின் ஆரம்பம். அதில்தான் மிகச் சில சம்பவங்களையும் சொன்னார்கள். ஒரு நபருக்கு இன்னொரு நபர் தெரிவிக்கும் செய்தி கடிதம். காலப்போக்கில் ஒரு செய்தியைப் பலருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அவையே இலக்கியமாகின. ஹோமர் இலியட் எழுதினார். வியாசர் பாரதம் எழுதினார். மு.மேத்தா கண்ணீர் பூக்கள் எழுதினார். நாஞ்சில் நாடன் எட்டுத் திக்கும் மதயானை எழுதினார். ஒவியங்கள் டாவின்ஸியாகவும் டாலியாகவும் வான்காவாகவும் பரிணமித்தன.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் 25 பக்கங்களுக்கு இருக்க வேண்டும் என்றார்கள். பத்து பக்கமாகவும் ஐந்து பக்கமாகவும் சிறுகதை சுருங்கிவிட்டது. கதாபாத்திரங்களும் சம்பவமும் படிப்பவர் மனதில் இடம்பிடிக்க தோராயமாக சுமார் 5 பக்கத்திலிருந்து பத்து பக்க விவரணை வரை தேவைப்படுகிறது. ஒரு பக்கக் கதை, இரண்டு பக்கக் கதை என்பவை திடுக்கிட வைக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே முன் வைக்கின்றன. அதற்கு நம்மை பழகிக் கொள்வது பிற தரமான கதைகளைப் படிப்பதற்குத் தடையாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இறுதியாக... படித்தால் மூளை குழம்பிவிடும் என்ற கருத்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உண்டு. இறைநூல்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கருதி பல நூலகங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம். புத்தகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் பல வேளைகளில் ஏழாம் பொருத்தம்தான்.

ஆனால் மக்களுக்கு ஒரு பைபிளோ, ஒரு குரானோ, வேதங்களோ மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நம்பிக்கை சார்ந்து அவற்றைப் பாதுகாப்பதோடு சமூக வளர்ச்சியைப் பின்தொடர, தொடர்ந்து பல அறிவுச் செல்வங்களைத் தேட வேண்டியிருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சியைவிட அறிவைத் தேடுவதற்கு புத்தகங்கள்தான் இன்றும் முன்னணியில் இருக்கின்றன.

ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மொழிகள் இப்போது உலகில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் கிடையாது. பல மொழிகளைப் பேசுவதற்கு ஆட்கள் கிடையாது. அதாவது அந்த மொழி பேசுகிறவர்கள் சிதறி வாழ்வதனாலோ, ஆட்சிமொழியாக வேறொரு மொழி அமைந்திருப்பதனாலோ வேறு மொழியைத் தொடர்ந்து பேச வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏசு பேசிய மொழியோ, புத்தர் பேசிய மொழியோ, சாக்ரடீஸ் பேசிய மொழியோ இன்று உலகில் இல்லை. ஆனால் வள்ளுவன் பேசிய மொழி இப்போதும் இருக்கிறது. அதுதான் பெருமை. அதனால் ஒரு நூலை தமிழில் எழுத வேண்டியதும் தமிழில் படித்திட வேண்டியதும் முக்கியம் என்பதை உணர வேண்டும். தமிழும் வேறு மொழியும் தெரிந்தவர்கள் தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கிற கடமையைச் செய்ய வேண்டும்.இரா. மீனாட்சி: ஒவ்வோர் இறகும் ஒவ்வோர் பறவை


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -1

இரா. மீனாட்சி: ஒவ்வோர் இறகும் ஒவ்வோர் பறவை

குட்டி ரேவதி

சுவரையே முட்டிக்கொண்டிராமல் சுவர்களுக்கு வெளியேயான இயல்பான சூழலுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் குரலாகக் கவிதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள் சிலரே. இயற்கையின் கருப்பொருள் எதுவும் இவர்கள் கவிதையில் கவித்துவம் பெற்று, வரிகளுக்கு இடையே அர்த்தம் பெறும். அம்மாதிரியான மொழியுறவை இவர்கள் தக்கவைத்துக் கொள்வதுடன், ஏனைய உறவு போன்றே இவ்வுறவையும் பேணி சிறப்பு அம்சங்களுடையதாக வளர்க்கின்றனர். அவ்வகையில், கவிதையைத் தன் அகக்குரலாக மாற்றிக்கொண்ட பெண்ணின் மொழி இரா.மீனாட்சியினுடையது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதில் தன் முதல் தொகுப்பைப் பதிவு செய்திருக்கும் இரா.மீனாட்சியின் எழுத்தைப் பற்றி விவாதிப்பதில் இரு முக்கியமான விடயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது சமகாலத்தில் உத்வேகமெடுத்திருந்த, ‘எழுத்து’ இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்ட முதல் பெண் கவிஞர், முதலாவது! எழுபதில் எழுதத்தொடங்கி தனியாக இயங்கி, இன்று நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இயங்கும் காலத்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது என்பது, இரண்டாமவது! அவர் எழுத்தில் இன்றைய பேசுபொருளாக்கியிருக்கும் உடல், பாலியல், பாலிமை போன்றவற்றை ஆய்ந்தறிவதற்கான வாய்ப்பை நான் இங்கு எடுத்துக் கொள்கிறேன். எம்மாதிரியான பெண்ணுடலை அவர் வரித்திருந்தார் என்பதைக் கண்டறியும் போது அக்காலமொட்டிய சில தெறிப்புகளும் நமக்கு வாய்க்கக்கூடும்.

முதலில் பெண்ணெழுத்து இப்படித்தான் உருவாகிறது. பெண்மையை தனது ஒரு பலமாக மாற்றிக்கொள்வது, அதனை உடலுக்குள் திடமான ஒரு பண்பாகக் கட்டமைத்துக் கொள்வது, பெண்மை என்று தான் நம்பும் சில குணநலன்களின் அதாவது, நளினம், மென்மை, அடக்கம், அச்சம், மடமை, பயிர்ப்பு போன்ற சில குணத்தொகுதிகளையேனும் உடலுக்குள் தொகுத்து வைத்துக்கொள்வது! அரவாணிகள் தம் உடல்களை அப்படித்தானே திருத்தியெழுதிக்கொள்கிறார்கள்! இதன் வழியாக உடலுக்கு ஒரு புதிய பாலியல் வெளியைப் பயிற்றுவிக்க முயல்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவ்வெளிக்குள் பயணிக்க விரும்புகிறார்கள். இப்படித்தான், ஆரம்பக்கட்ட பெண்நிலை வாதம் நமது புவியியல் சூழலில் தொடங்கியது. இதை சட்டை உரிக்கும் நிகழ்வாக, புற வளர்ச்சிக்கான ஓர் அடையாள நிகழ்வாகப்பார்க்கலாம்.

ஆனால், இது வெளிப்படையான பாலிமையை எங்குமே பேசத்துணியவில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலக்கியத்துறையில் காலூன்றும் தனது முயற்சியில் சக ஆண் படைப்பாளிகளுக்கு இணையாகத் தானும் வெல்லவேண்டும் என்பதாய் இருக்கலாம். குடும்பம் பின்புலமாக எழுத்தை முன்வைக்கும்போது பாலிமை என்பதை ஒரு பேசு பொருளாக்கினால், அது முதலில் குலைப்பது அவரவர் குடும்பத்தையும் மண உறவையும் தாம். இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். ஆகவே, சுய தணிக்கை செய்து கொண்டே இருப்பதும், மொழி வழியாக ஊக்கம் பெறும் போதெல்லாம் முளை விடும் இறக்கைகளைக் கத்தரித்து விடும் அவலமாகவும் இருக்கலாம். ஆனால், இலை மறை காய் மறையாக உடலின் வேட்கையை வார்த்தைகளில் ஒளித்து வைத்துப் பேச அவர்கள் தயங்கவே இல்லை. மேலும், ஒரு பொருளில் பெண் பயன்படுத்தும் சொல்லை அதே பொருளில் உள்வாங்கிக்கொள்ளும் உணர்வுக்கொம்புகளை இன்னும் ஆண்கள் வளர்த்துக்கொள்ளவில்லை தானே?

இவ்வாறு தான் முதன்முதலாக எழுத வந்த பெண் கவிஞர்களும் பெண்மை என்ற வரையறைக்குள்ளிருந்து முதலில் மொழியை வெளிப்படுத்திக்கொண்டார்கள். பின்பு தான், மொழியின் உடைப்பும் உடலின் தகர்ப்பும் நிகழ்ந்தன என்று சொல்லவேண்டும். இவ்விடத்தில், இரா.மீனாட்சியின் கவிதை செய்ததை விவாதிப்பது பொருத்தமான கருவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயற்கையுடனான தன் கலப்பையும், மானுட உறவையும் ஓயாது பேசிவரும் மீனாட்சியின் கவிதைகள், பெண்மையின் வீறு கொண்ட கவிதைகளாக உருவாகியிருக்கின்றன.

‘எழுத்து’ இலக்கிய இயக்கத்தினுடனும், ‘சி.சு.செல்லப்பா’ போன்ற நவீன இலக்கிய முன்னணியினருடனும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற இரா.மீனாட்சி, நவீன இலக்கியப் பெண்ணெழுத்தின் தொடக்கமாகிறார். அப்பொழுது உருவாகியிருந்த நவீன கவிதையின் உத்வேகத்தைத் தானும் பயன்படுத்திக் கொள்கிறார். இன்று வரை ஓயாது கவிதையை தன் அகக்குரலுக்கான வடிவமாகத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

2002 –ம் ஆண்டு கவிஞர்கள் க்ருஷாங்கினியுடனும் மாலதி மைத்ரியுடனும் சென்று கவிஞர் இரா.மீனாட்சியைச் சந்தித்தேன். அவரது கவிதைகளை ஒரு மருங்கிலிருந்து மறு மறுங்கு வரை வாசிக்கும் அனுபவம் அதற்குப் பிறகு இக்கட்டுரை எழுதுவதற்காகவும் கிடைத்திருக்கிறது. தனது மொழியின் உள்ளீடாக இவருக்கேயான அழகியலும் நடைலயமும் உக்கிரம் நோக்கி நகரும் வாக்கிய மடிப்புகளும் கொண்டு எழுத்தில் இயங்குகிறார். கடந்த நான்காயிரம் வருட உலகக்கவிதை இயங்குதலைத் தொகுக்கும் முகமாக, அமெரிக்காவிலிருந்து வெளி வந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதை இவருடையது.

உலகச்சந்தையில் விற்பனைக்குப் போகும் பிற மலர்களுடன் அத்தகுதியைப் பெறாத நெருஞ்சி மலரைத் தன் முதல் தொகுப்பிற்குத் தலைப்பாக்கி இரா. மீனாட்சியின் கவிதைகள் பகிரங்கமாக வெளிவந்தன. நவீனப்பெண்ணிய இலக்கியத்தில் இரா.மீனாட்சிக்கு இருக்கும் பங்கு முதன்மையானதாக இருக்கிறது. அதாவது, அவர் வழியாகத் தான் தமிழ்ப்பெண் கவிதையின் தடம் உயிர்ப்பெறுகிறது. அதுவரை, தமிழ்ப் பேராசிரியர்களின் கைகளில் மண்டிக்கிடந்த மரபுக்கவிதைகளிலிருந்து நவீனத்தை நோக்கி ஒட்டுமொத்தமுமாக பெண்கவிதைக்குத் திசை திருப்பித்தந்த பங்கு இவருக்கு உண்டு. என்றாலும், மரபுக்கவிதையின் நடை, சந்தம், சொல்லாட்சிகளிலிருந்து விடுபடாத தொகுப்பாகவே நெருஞ்சி உருவாகியிருக்கிறது. என்றாலும், கருப்பொருள் அளவில் மரபார்ந்த சிந்தனை அடுக்குகளிலிருந்தும் அழுத்தங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் இரா. மீனாட்சி எடுத்துக்கொண்டார்.

சுடுபூக்கள் கவிதைத்தொகுப்பில், இப்படியான வரிகளுடைய காற்றோ காற்று எனும் கவிதை

’ஒவ்வோர் இறகும்
ஒவ்வோர் பறவை’

சங்கொலிப் பாதையில்
நான் ஒரு அற்பப் புழு
ஆகாசக்கைகள் என்னைத் தொட்டன.
நீவிய கையின் மந்திரமோ?
எனக்கும் சிறகுகள் முளைத்தன.
அலகால் அரிசியைக் கொத்தி
பாலையும் குடித்தேன்.
பம் பம் பம்பம்…
சங்கொலிப்பாதையில்
சங்கிலி உடைத்துப் பறக்கிறேன்
நானும் பறக்கிறேன்

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)

சங்கொலிப்பாதியில் கவிதை தன் உடலுக்குள்ளிருந்து சிறகு விரிக்கும் அனுபவத்தை, உட்பொருளாக்கியிருக்கிறது. உடலுக்குள்ளிருந்து தீவிரமாக வெளியேறும் முனைப்பும் விட்டு விடுதலையாதலும் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய தன் முனைப்பை கூர்மையான மொழியாக்கவும் அனுபவமாக்கவும் முடியாமல் தவிக்கும் குரலையும் அவரே பதிவு செய்கிறார்.

எழினி

அவள் தானே வெளியேற
அவளே தடையாகி,
அவலத்துடிப்பு.
மென்குரலில் வெளியழைப்பு.
அவளுக்கோ அவலத்துடிப்பு
கழுத்து முடிச்சு பற்றுக்கோடா?
தடையுத்தரவு.
முள்வேலி.
கம்பிக்கயிறு கட்டுமானம்.

பூச்சிலை நெளிகிறது.
திரையாகி அலைகிறது.
துருப்பிடித்த
சன்னலுக்குத் தெரியுமா
சீலையின் தவிப்பு?

(நெருஞ்சி கவிதைத்தொகுப்பு -1970)

‘அக விடுதலை’யைத் தீவிரமாக முன் வைக்கும் கவிதை இயக்கம் சந்தித்த பிரச்சனைகளில் முதன்மையானது பற்றுக்கோடின்றி அலையும் அதன் கவித்துவ வேகம். அதாவது, சிந்தனைச் செழுமையுறாது என்ன தான், தீவிரமான இயக்கத்திற்குள் நம்மை உட்படுத்திக்கொண்டாலும் அது அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி வடிவம் பெறாது துவண்டு விழுந்திருக்கின்றது. இதை ஆண் எழுத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தோமானால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அகவிடுதலைத் தத்துவத்தை இன்று வரை தம் எழுத்துகளில் சீரியதாக முன்வைத்துக்கொண்டிருக்கும் ஆண் படைப்பாளிகள், ‘இயற்கை’, ‘தத்துவம்’, ‘ஆன்மீகம்’, ‘அகவிடுதலை’ போன்றவை அடிப்படையான எந்தச் சிந்தனையையும் உட்வாங்கிக்கொண்டவையாக இல்லை. சித்தாந்தம் எதையும் தனக்குள் தக்க வைத்துக்கொள்ளாத இத்தகைய எழுச்சிகள் வெறுமனே உணர்வெழுச்சிகளாக ஓய்ந்துப் போகின்றன. உடலை வெறுங்கூடு என்று நோக்கும் அடிப்படையான மனோபாவம் தான் இயற்கையின் மூலமாகவும் தீரமான அடையாளமாகவும் உடலைப் பார்க்க இயலாத பலவீனமும் எந்த விடுதலையையும் சாத்தியப்படுத்தாமல் போகின்றன. குப்பையைக் கிளறுவதை அடிப்படைப் பணியாகக் கொண்டிருக்கும் கோழி, இறக்கைகள் தேவைப்படும் வானத்தை வேட்கையுடன் பார்ப்பது போலத்தான்!

ஆனால், மீனாட்சி இதற்கான சுவடுகளை, சங்கொலிப்பாதையில் கவிதையிலேயே, தனது முந்தைய கவிதையிலேயே வைத்திருப்பதையும் பாருங்கள்!. நீவிய கையின் மந்திரமோ? என்ற வரியே உள்ளீடற்ற அர்த்தத்துடன் ஏற்கெனவே பதிவாகி இருப்பதை இங்கு மீண்டும் இணைத்துப் புரிந்து கொள்வோம்.

எங்கும் வெளி
பெரிய வெளியில்
சிறிய வெளி என் வீடு
வீட்டிற்குள் என் உடம்பு
அங்கும் வெளிதான்.
வெளியில்
பரவச ஒளியின்
எல்லையில்லாத நாட்டியம்

(மறு பயணம் கவிதைத்தொகுப்பு, 1998)

இக்கவிதையிலும் விடுதலை என்பதை உடலுக்குள் வைத்துப் பேசும் சுயம் தொனிக்கிறது. வெட்டவெளி என்பதைத் தனக்கான ஆன்மீக வெளி என்று நோக்கினாலும், அதை அடைவதற்கான சிந்தனைத்தடமற்று கவிதைகள் தொடர்கின்றன. ஆனால், இவையெல்லாமே ஆண்களின் பேசுபொருளாக மட்டுமே இருந்திருக்கின்றன என்னும் கட்டத்தில் மீனாட்சிக்கும் இவ்வெளிக்குள் நுழைந்து பார்க்கும் தன் விழைவை முயன்றுபார்க்கும் மொழியாகத் தான் இக்கவிதையைப் பார்க்கிறேன்.

இராமர், கண்ணன், சீதை, இராவணன் போன்ற இதிகாசக் கதாபாத்திரங்களைத் தன் நிலையிலிருந்து தகர்த்துக்கொண்டே வருகிறார். புராணக்கதை மாந்தர்களை விமர்சிப்பதை ஆதிக்கப் பின்னணிப் பெண்கள், தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர். கவிதையில் மட்டுமன்றி, இந்தியாவின் எத்திசையில் படைப்பாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எந்த ஒரு பெண்ணும் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதன் காரணம், அவர்களின் உடலும் விடுதலையும் எழுச்சியும் இக்கதை மாந்தர்கள் தம் கதாபாத்திரங்களுக்கு உள்ளிருந்து பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை தான்! இவர்கள் தாம் இப்பெண்களை, தந்தையராகவும், கணவராகவும், சகோதரர்களாகவும், மகன்களாகவும் தொடர்ந்து வதைக்கின்றனர். இவ்வதையிலிருந்து வெளியேற இக்கதைமாந்தர்களாக மெய்மையில் தங்களை உருமாற்றிக்கொண்ட ஆண்களின் சிறைகளிலிருந்து வெளியேற விரும்பினர். தங்கள் நினைவுகளுக்குப் புகட்டப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கத் தொடங்கினர். ஆகவே, தம் சிந்தனையைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் இக்கதைகளால் கட்டிப்போடப்பட்டிருக்கும் உடலை விடுவிக்க வேண்டியிருக்கிறது. பின், இம்மாதிரியான ஆண் பிம்பங்களையும், அவர்களுக்கு உடன்பட்ட பெண் பிம்பங்களையும் இவர்கள் தகர்க்க வேண்டியிருந்தது, இந்த அளவிற்கேனும் விடுதலையைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

பிற ஒடுக்கப்பட்ட பெண்களின் நினைவுகளில் இத்தகைய ஒடுக்குமுறைக்கான பிம்பங்கள் பதிவாவதில்லை. அவர்களின் பிம்பங்கள் ஆதிக்க மனிதர்களால் உருவானவை என்பதால், சீதை, இராமன், கண்ணன் போன்றவை எல்லாம் ஆதிக்க சாதி, இனப் பெண்களால் தாம் தகர்க்கப்படவேண்டும். நினைவை மொய்க்கும் இப்பிம்பங்களால் அவர்கள் உடல், கட்டுப்படுத்தப்படுவதை, சிதைக்கப்படுவதை அவர்களும் உணர்ந்திருக்கக்கூடும் இல்லையா?

மேற்கொண்ட பொருளில் உளைவுக்குள்ளாகும் மனநிலையைச் சொல்லும், மிகவும் புகழ்பெற்ற மீனாட்சியின் கவிதை,

மதுரை நாயகியே!

மதுரை நாயகியே!
மீனாட்சித்தாயே!
படியேறி
நடை தாண்டி
குளம் சுற்றி
கிளி பார்த்து
உன்னருகே ஓடிவரும்
உன்மகளை
உன்மகனே ஏ
வழிவம்பு செய்கின்றான்
கோயிலிலும் காப்பில்லை
உன் காலத்தில்-
அழகி நீ!
எப்படி உலாப்போனாய்?

(சுடு பூக்கள் கவிதைத்தொகுப்பு, 1978) இல் வெளியான இக்கவிதையும், அதே தொகுப்பில் இடம்பெற்ற ‘நாங்கள் நகரத்துக்குப்போகும் சின்னப்பெண்கள்’ எனும் சமூக யதார்த்தம் தொனிக்கும் கவிதையும் ஒரே மனநிலையில் இயங்குகின்றன. பெண்ணுடல் மீது இயங்கும் புற தாக்குதல்களை மையமிட்ட கவிதைகள் இவை.
………………………………………………………………………

உள்ளே பார்த்தோம்.

எங்கள் மேலாடைகளைக் கிழித்து
தோல் பூச்சைத் துளைக்கின்ற
பூனைப் பார்வைகளை

பார்வைகளையே கைகளாக்கிக்
கைகளையே கொடுக்குகளாய்ச்
சக பிரயாணிகள் சுமந்திருப்பதைக்
காலங் கடந்தே
நாங்கள் பார்த்தோம்.

தொடக்கத்தில், பெண்கள் எழுத வந்த போது நேரடியான அவர்களின் வெளிப்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாயின. நாட்குறிப்புகள் தாம் பதிவு பெறுகின்றன என்றும் படைப்பூக்கம் இல்லா எழுத்துகள் என்றும் விமர்சனத்திற்குள்ளாயின. இவை ஆண், பெண் என இரு தரப்பினரிடமும் தாம் காணப்பட்டன என்றாலும், இதைச் சொல்லும் அதிகாரம் ஆண் படைப்பாளிகளிடம் தான் இருந்தன. இரா. மீனாட்சி, இந்த அரசியலையும் கையாளவேண்டியிருந்திருக்கும். இடது சாரி அரசியலுடன் வந்த படைப்பாளிகளையும், வானம்பாடி போன்ற இயக்கங்களையும் எதிர்கொள்வதற்கான அரசியல் பார்வையை அவர் முன்வைக்கவோ விவாதமாக்கவோ இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசியல் வெளிப்பாட்டை தன் கவிதைகளில் அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலும் கூர்மைப்படாத ஒன்றாகவே இருந்தது.

……………………………………………………
இவர்களுக்காக

நீங்கள் தேன் வடிக்காமல்
செந்நீர் உகுத்தீர்கள்
அழவும் தெரியாமல்
அசுர விதைகளுக்கு மடி தந்தீர்கள்

புலிப் பொருளியலில்
போகப் பொருளானவர்களே!
உணர்ச்சி ஊர்களின்
மடைத் திறப்புகளே!
என்றைக்கு உடைத்தெறியப் போகிறீர்கள்
இந்த மானவேலிகளை?

பெண்களே
இவர்களுக்காக இன்னொரு முறை
அழாதீர்கள்

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)
………………………………………………………………………………………..


இக்கவிதையில் அசுர விதைகளுக்கு மடிதந்தீர்கள் என்று மறைபொருளாகச்சாடுகிறார் மீனாட்சி. இம்மாதிரியான நேரடியான பிரச்சாரக்கவிதைகளில் இருக்கும் பிரச்சனைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பொழுதும் பிரச்சனை எனப்படுவதன் ஆழத்திற்குக் கூட்டிச்செல்வதில்லை. ஆற்றின் மீதான பாலத்தில் நடக்கும் வசதியுடனும் கவனத்துடனும் இம்மாதிரியான கவிதைகளை எழுதுவதில் ஒரு சுகம் இருக்கிறது. அரசியல் அடையாளம் பெறுவதை, ஓர் அங்கீகாரமாக எண்ணிக்கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால், இம்மாதிரியான கவிதைகளால், எந்தப்பிரச்சனையும் மேலெழுந்த வாரியாகப் பேசப்படுகிறதே அன்றி அக எழுச்சியை ஏற்படுத்துவதில்லை. சமூக அழுத்தம் பெற்ற விஷயங்களைப் புரட்டிப் போடுவதே இல்லை. இதற்கு ஓர் உதாரணமாய் ஒரு கவிதை:

நிழலாய் இருக்க விடு

உச்சி வெயில் போதில்
நிழல் பொருளுள் ஒடுக்கம்
நீ அந்த வெயில்
நிழல் நான்

வாழ்க்கைக் காலையில்
என்னை முன் நடத்து
சாயும் வேளையில்
பின் நிற்கிறேன்.

ஒளிக்காலத்தில்
நிழல் நிகழும்
இருட்டெனில் கருகும்.

உன் வழியில்
பகலைப் பார்க்க
எனக்கோர் ஆசை!

சுடுபூக்கள் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கவிதையில், மேற்சொல்லியிருக்கும் அதே மாதிரியான ஆன்மீக, தத்துவத் தேய்மானங்களைக் காணலாம். அதாவது, இக்கவிதையில் முன்னிலை பெறும் நீ என்பது பேசப்பட்டிருக்கும் பொருள் சார்ந்து ஓர் ஆணாகவோ, கடவுளாகவோ இருக்கலாம். அதற்குள் தன்னை ஒடுக்கிக் கொள்ளும் தீவிர இச்சையைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது, இக்கவிதை. ஆனால், அத்தகைய ஆன்மீக, தத்துவச் சிந்தனையே எவ்வளவு போலியானதும் வெறுமையானதும் என்பது உண்மையான தத்துவப் பின்புலங்களிலிருந்தும் நெடிய ஆய்வுகளிலிருந்தும் வருபவர்களுக்குப் புரியும். இந்தப் பயணம் படைப்பவரையும் வாசகரையும் எங்குமே கொண்டு சேர்க்காத ஒரு வண்டியில் ஏற்றியது போன்றது இல்லையா? இது வைதீக சிந்தனையின் வேர்கள் நம் அடி மன ஆழங்களில் மண்டிக்கிடக்கும் விழிப்பு அற்று இருப்பதன் பிரதிபலிப்பு தான்!

ஆனால், எனக்குப் பிடித்த தொனியில் அணுகப்பட்ட சில கவிதைகளையும் மீனாட்சியின் கவிதைத்திசைகளில் கண்டெடுத்தேன். இவை பெண் மனவெளியில் சிக்கல் உள்ள பகுதிக்குத் துல்லியமாகச்சென்று, அதன் இழைகளை மொழிக்கு இழுத்து வருகிறது. பொதுவாக, நவீனப் பெண்மனம் இந்த அணுகுமுறைக்கு எளிதானது இல்லை. பல சமரசங்களையும் மீறித் தன் சுயத்தையும் கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில், அவள் அதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது, அதில் ஏற்படும் சங்கடங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கவிதைக்கான நுண்ணிய மொழியில் கொண்டு வருவது என்பது சாத்தியம் தான் என இக்கவிதைகளை வாசிக்கும் போது உற்சாகமானேன். மீனாட்சியின் சில கவிதைகளில் மட்டுமே வாய்க்கும் நவீன உணர்வுகளை, அவரே தக்கவைத்துக் கொள்ளாமல் போய்விட்டாரே என்று என்னும் அளவில் அதற்குப் பின்பான கவிதைகள் வசனங்களாகி இருக்கின்றன. அதனாலேயே ஆழமான கருக்களங்களுக்குள் நுழைய முடியாத மனப்பிரமையும் அப்பிக்கொள்கிறது

பார்பரா என் தோழியே!

நீலக் கண்களில் நீளக்குறும்பு
கூரிய மூக்கில் கேலிப்புன்னகை
செம்பொன் முடியோ காற்றில் அலையும்
விரல்களில் அவசரம்
நடைதனில் கம்பீரம்
உன் பேச்சில் லாஸர் கற்றை.

நீ எப்போது தவித்தாய் தெரியுமா
பெண்ணே!
ஒரே ஒரு முறை
உன் முதல் காதல் அனுபவத்தை
முற்றிய நாளில் சொல்ல முயன்று
அளக்க நினைத்துத்
தோற்றாயே முன்னுரையில்!
பார்பாரா என் தோழியே!
தவிப்புமா தொற்று வியாதி?

(தீபாவளிப்பகல் கவிதைத் தொகுப்பு, 1983)


...................................................

இதோ இன்னுமொரு கவிதையின் குறும்பகுதி:

அந்தரங்கவெளி

நீர் குடிக்கத் தவிக்கின்ற சிறுபடகும்
கறையான் அரித்த துடுப்புகளும்
உப்புக்கரைசலில் எரியுண்ணும்
காயங்களும் தான் இங்கே துணை.
இவற்றோடு பயணப்படுகின்றேன்.
துக்கச் சுமைகளைத் தூக்கிவர
கூலி யாருமில்லை.

......................................................

மாலை மலர் விரிவது போல்
மெல்ல நடந்தாலும்...
கனவுகளுக்குள் இறங்கும்போது
கதவிடுக்கில் எட்டிப்பார்த்தாலும்....

பல்லாயிரர் கூடும் தேர்த்திருநாள் நெரிசலில்
ஒரு கணமேனும் ஊடுருவும்
பார்வை பட்டாலும்...
என்னை அறிந்து கொள்ளும் அந்த நீயா...

வயிற்றுக்கிரை இல்லாத
வீதி நாளில்
கதை சொல்லி வீரமுட்டி
விழிவியர்வை மாற்றினாயே


.................................................................

எல்லாம் போனபின்
உள்ளீடற்ற பின்னம்
நிழல் சின்னம்
மீதி நான்.

சோப்புக் குமிழிகளை ஊதுகிறேன்
வால் சேர்ந்த வஜ்ரப் பட்டங்களைப்
பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கண்ணாடித் தொட்டியில்
ஓயாது அலைகின்ற
உறங்காத
இளஞ்சிவப்பு மீன்களைப்
பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

வாசல் வேப்பமரம் உதிர்க்கின்ற
பொன்பூக்களின்
சின்ன மழையில் நனைந்து கிடக்கின்றேன்.

கான்கிரீட் சுவர் குழைக்க
குவித்திருக்கும் மணல் முகட்டில்
வீடு கட்டக் கரண்டி பிடிக்கின்றேன்.

என்னைக் கடக்கின்ற நரைமேகங்களின்
விசித்திரச் தோற்றங்களை
மாற்றிச் சிவப்பாக்கித்
தூரிகையை கங்கையில் அலசுகின்றேன்.
மாடி மீது ஏறினாலும்
என்னைக் குனிந்து பார்த்துக் கெக்கலிக்கும்
தென்னங் கீற்றுகளைக் கிழிப்பதற்கு
கத்தியைச் சாணைப் பிடிக்கின்றேன்.

இப்போது
புதிதாக முன்னால் நட்டிருக்கும்
இரும்பு வேலிகளை வளைப்பதற்குப்
பழகிக்கொண்டிருக்கிறேன்.

இடது கண்ணில் வலது கண்ணை
அப்பி விட்டேன்.
இதயத்தைத் தனியே கயிற்றில்
கோர்த்துவிட்டேன்.

நம்பு
இன்னும் நான் சாகவில்லை
இருக்கின்றேன் உயிரோடு!

மற்றுமொரு கவிதையும்:

வித்யா

குளத்து நீரில் மீன்பிடிப்பவர்களே
ஆற்றங்கரைக் கொக்குகளே
நான் வித்தியாசமானவள்.

கணந்தொறும் கணந்தொறும்
கடலின் பாய்ச்சல்
மரத்தொட்டிலை
அலைக்கழிக்கும் வேகத்தில்
வலை போடவே விரும்புகிறேன்
நீங்கள் காத்திருத்தலையே
விரும்புகிறீர்கள்.

நான் புயலுக்குள் புயலாய்ப் போய்
மையத்தைத் தொட்டுப்பார்க்கிறேன்
நானொரு வித்யா.இரா.மீனாட்சியின் உள்நோக்கமும் அவர் கொள்ள விரும்பும் நெடும்பயணத்தையும் சொல்லும், ‘உன்னை எதிர்கொள்ளும் முன்’ கவிதை அவரை வாசிக்கும் எவரையும் ஊக்கப்படுத்துவது. எதிரே வரும் அனுபவங்களுக்குத் தன்னைத் திறந்து கொடுப்பது. குறிப்பாக, ஒரு மனிதருக்கு தன் சமுத்திரத்தைத் திறந்து கொடுக்கும் அனுபவம் ஆணுக்கான ஒன்றாக மட்டுமே வகுக்கப்பட்டிருக்கும் சமூகச்சூழலில், ஒரு பெண் இதை முன்மொழிவதும், அம்மாதிரியான பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தன்னைத் தயார்செய்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது. உடல் வழியாக மட்டுமே அனுபவங்கள் சாத்தியம்!

உன்னை எதிர்கொள்ளும் முன்

வேற்றூரின் புன்னகைக்கு
மறுமொழி தந்து
சிப்பியும், மீன்முள்ளும்
காலிக்குப்பிகளும்
இடறிவிட்ட வீதிகளில்
‘மாப்சா’ சந்தைகளின்
அபூர்வ சேகரிப்பில்
திளைத்ததைப் போல்
உன்னை எதிர்கொள்ளுமுன்…
அன்பே!
பயணத்தில் இருக்கின்றேன்.
நீயே அனுபவமாய்
எதிர்கொள்ள வருகின்றேன்.

---------------------------------------------------XXXXXXXXXX------------------------------------------------------

இரா.மீனாட்சி பற்றிய சிறுகுறிப்பு: 1970 –ல் எழுதத் தொடங்கிய இவர், நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு ஆகிய கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். கிராம முன்னேற்றம், ஆசிரியப்பணி ஆகியவை இவரது பிற ஆளுமைகள்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_1.php
Sunday, January 23, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (15)மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (15)

வெங்கட் சுவாமிநாதன்

தமிழ் சினிமாவில் நான் காணும் பாமரத்தனமும் அருவருக்கத் தக்கதுமான விஷயங்களே தமிழ் சினிமாவின் குணத்தை நிர்ணயிக்கும் அளவு முழுமையாக ஆக்கிரமித்துள்ளதால், அந்த பாமரத்தனத்துக்கும் அருவருப்புக்கும் உருவம் தந்து உலவும் சில பெரிய தலைகளைப் பற்றிப் பேசவேண்டும். இப்படிச் சிலரை மாத்திரம் தனித்துச் சொல்லி, அதுவே தமிழ் சினிமா மொத்தத்தையும் சொல்வதாகும் என்று சொல்வது நியாயமற்ற காரியமாகத் தெரியலாம். ஆனால், இந்த பெரிய தலைகள் என்ன செய்கின்றனவோ அதைத்தான் மற்றவர் அனைவரும் தம் இயல்புக்கும், பலத்துக்கும் ஏற்ப செய்துவருகிறார்கள். அவர்களின் ஒட்டு மொத்த செயல்பாடும் ஆளுமையும் தான் தமிழ் சினிமாவின் குணமாகின்றது. ஆனால் இந்த குணத்திற்கு உதாரணமாக அதைப் பெருமளவில் தன்னுள் கொண்டுள்ள அந்த பெரிய தலைகளைப் பற்றித் தான் பேசமுடியும். தமிழ் சினிமாவில் இந்த வகையில் உள்ள ஆயிரக்கணக்கான நடிகர்கள்/நடிகைகளை, இயக்குனர்களை, தொழில் நுட்பம் சார்ந்தவர்களை ஒவ்வொருவராக எடுத்துப் பேசிக்கொண்டிருப்பது சாத்தியமல்ல.

முதலில் உலக நாயகன். முதலில் ஒன்றை மறு பேச்சுக்கிடமில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டும். இது வரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்த பெரிய பெரிய நக்ஷத்திரங்கள் அனைவரிலும், நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்தவர், அத்திறன் கைவரப் பெற்றவர் கமலஹாஸன் தான். சந்தேகமே இல்லை. இதை நான் அனேக தருணங்களில் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். கவனிக்கவும். தருணங்கள் என்று சொன்னேன். படங்கள் என்று சொல்லவில்லை. அவருக்கு ஈடான மற்றொரு திறனை நான் கண்டதில்லை. இருக்கக் கூடும் தான். ஆனால் அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக, தேவயானி, பாரதி படத்தில் செல்லம்மாளாக நடித்திருந்தது. தன் கனவுக் கன்னி இமேஜை முன்னிருத்தாது, மிக அமைதியாக பயந்து ஒடுங்கும், ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக செல்லம்மாளை நம் முன்னிருத்தியது, நம் சினிமா ஒரு கலைசார்ந்த மரபாக இருந்திருக்குமானால், தேவயானி, பாரதிக்கு முன்னும் பின்னும் டான்ஸ் ஆடி, கவர்ச்சிக்கன்னியாகவே தன் சினிமா வாழ்வை முடித்திருக்க மாட்டார். இது போல் தான் அர்ச்சனாவா, பாலு மகேந்திராவின் வீடு படத்தில் நடித்திருந்தது?

இப்படி தேவயானி, அர்ச்சனா பற்றி ஒரு முழு படத்தையும் அவர்கள் நடித்து உயிர் கொடுத்து உலாவ வைத்த பாத்திரங்கள் பற்றியும் பேசமுடிகிறதே, அப்படி நான் சிறந்த நடிப்புத் திறன் கைவரப் பெற்ற கமலஹாஸனின் ஒரு படத்தைக் கூட, ஒரு பாத்திரத்தைக் கூட என்னால் உதாரணத்துக்குக் கூட முன் வைக்க முடியவில்லை. அனேக படங்களில் அவரை முழுமையாக ஒதுக்கிவிட முடிகிறது. அனேகமாக அவை யெல்லாம் அவர் மற்றவர்களுக்காக நடித்துக் கொடுத்தது அவையெல்லவற்றிலும் அவர் ஒரு சினிமா காதலன். சினிமா காதலன் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்னவெல்லாம் பேசவேண்டும் என்னென்ன ஸ்டைலெல்லாம் காட்டவேண்டுமோ அதெல்லாம் காட்டவேண்டும். இது எல்லா தமிழ் சினிமா நடிகர்களுக்கும் பொருந்தும் சமாசாரம். ஆனால் கமலஹாஸனே தனக்கென தன்னை மையப்படுத்தி உருவாக்கிக் கொள்கிறாரே, தான் உலக நாயகனாக பவனி வருவதற்கு வேண்டிய கதை, கதை சம்பவங்கள், சுற்றித் தன்னை வலம் வர குட்டி தேவதைகளை உபரிகளை எல்லாம் யோசித்து யோசித்து கதையும் வசனமும் உட்கார்ந்து எழுதி தானே உருவாக்கிக் கொள்கிறாரே அம்மாதிரியான படங்களில், சில சம்பவத் துணுக்குகளில் சில சம்பாஷணைகளில், அந்தச் சில நிமிஷங்களில், அவரது நடிப்புத் திறனைக் காணமுடிகிறது. இத்துண்டுக் காட்சிகளோடு நம் பாராட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். முழு படத்தையும் நாம் மறந்துவிடவேண்டும். அவற்றையெல்லாம் நாம் நினைவு படுத்திக் கொண்டால், உலக நாயகனாகும் ஆசையில் அந்த மயக்கத்தில் ஒரு மனிதன் என்னென்ன கூத்தாட்டமெல்லாம் ஆடுகிறான், என்ற பரிதாபமும் பித்தலாட்டமும் நிறைந்த ஒரு உலகுக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.

படம் முழுதும் ஒரு பாத்திரம் வியாபித்திருக்கும் கதைகளும் இருக்கக் கூடும் தான். ஆனால், அந்த மாதிரி பாத்திரங்களில், தானே எங்கும் நிறைந்த நாயகனாக இருக்கும் ஆசை கொண்ட உலக நாயகன் நடிக்க விரும்புவாரா என்பது கேள்வி. மாட்டார். ஏனெனெனில் அந்த பாத்திரமாகும் விருப்பத்தை உடையவரல்ல நமது கமலஹாஸன். அவரை மாத்திரம் குறை கூறிப் பயனில்லை. தமிழ் சினிமாவின் எந்த ஹீரோவும் ஒரு பாத்திரத்தில் தன்னை அழித்துக்கொள்வது என்பது நினைத்தும் பார்க்க இயலாத ஒன்று. எல்லாவற்றிலும் தன் ரசிகர்கள் தன்னைக் காணவேண்டும், தானே உலக அழகனாக, உலக சாகஸவீரனாக, அதே சமயம் தானுமாக (அதாவது சிம்புவாக, சரத்குமாராக, சூர்யாவாக) ரசிகர்கள் அடையாளம் காண வேண்டும். அந்த இமேஜை, எல்லாக் கதைகளிலும் எல்லா சம்பவங்களிலும், எல்லா பாத்திரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும். என்பது தமிழ் சினிமாவின் கல்லில் பொறிக்கப் பட்ட விதி. அதை யாரும் மீறுவது கிடையாது. அப்படியிருக்க, ஒரு சிம்பு அப்படி நினைக்கும்போது உலக நாயகன் கமலஹாஸன் ஏன் நினைக்க மாட்டார். உண்மையில் இன்று வந்த சிம்புக்கள் இந்த விதியைக் கற்றுக்கொண்டது, உலக நாயகனிடமிருந்தும் சூப்பர் ஸ்டாரிடமிருந்தும் அதற்கு முன்னால் மக்கள் திலகம் சிவாஜியிடமிருந்தும் தானே. இந்த விதி வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக பேணப்படும் விதி. ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதில் கமல் ஸாரின் தனித்துவம் அவர் புரட்சி செய்த காரியம் பத்து வேடங்களைச் சுமப்பது. தானே எல்லாவற்றிலும் வியாபித்திருக்க வேண்டும் என்ற ஆசை. இது கலை சார்ந்த சிந்தனை அல்ல. ஒரு திறனும் (CRAFT வெற்று CRAFT) வியாபாரமும், சுயமோகமும் எல்லாம் சேர்ந்த கலவை.

இதற்கு ஹிந்தி சினிமாவிலிருந்து ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு படத்தில் திலீப் குமாரும் நஸ்ருதீன் ஷாவும் சேர்ந்து நடிக்கிறார்கள். அதில் ஒரு இடத்தில் இருவரும் வாக்கு வாதத்தில் மோதிக்கொள்ளும் காட்சி ஒன்று. திலீப் குமார் இயக்குனரிடம் சொன்னாராம். முதலில் நஸ்ருதீன் ஷாவை வைத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமெடுத்து வாருங்கள். அதைப் பார்த்து நான் சம்பந்தப் பட்ட பகுதியை நடிக்கிறேன். நீங்கள் படமெடுத்துக்கொள்ளலாம். முதலில் நஸ்ருதீன் ஷாவிடம் போங்கள்“ என்றாராம். இதில் விளையாடியிருப்பது திலீப் குமாரின் (Ego) இந்தக் காட்சியில் நஸ்ருதீன் ஷா தன்னை மீறி நடித்துவிடக்கூடாது என்ற எண்ணம் தான் செயல் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அவசியமே இல்லை. நஸ்ருதீன் ஷா திலீப் குமாரை தன் முந்திய தலைமுறையின் மிகச் சிறந்த நடிகர் என்று எப்பவும் ஒப்புக்கொள்வார். தன் ஓய்ந்த காலத்தில் இந்தக் கவலைகள் அவருக்கு அவசியமில்லை. இந்த சம்பவத்தில் உயர்ந்து நிற்பது என்னவோ நஸ்ருதீன் ஷா தான்.

வேடிக்கை என்னவென்றால், உலக நாயகனான கமல் ஸார், திலிப் குமாரை சிறந்த நடிகர் என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருக்கிறார். இங்கு தான் சிக்கல்கள் எல்லாம் பிறக்கின்றன. திலீப் குமார் சிறந்த நடிகர் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளும்போது, அது உண்மையானால், அத்தோடு வித்தியாசமான பார்வைகளும், ரசனைகளும், மதிப்பீடுகளும் கொண்ட ஒர் உலகத்தை கேட்பவர் முன் வைத்தாய் விட்டது. அந்த உலகத்துக்கும், கலைஞரின் முன்னோக்கிய சினிமா கலைத்துவம் பராசக்தி வசனத்தில் தான் பார்த்து இப்போதும் வியப்பதாகச் சொல்வதும், இயக்குனர் சிகரத்தைப் போற்றுவதும், ரஜனி சார்” ”சினிமாவில் இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது”, என்று சொல்வதும், தான் நடிக்க பத்து வேடங்களை வலிய உருவாக்கிக் கதை எழுதிப் பெருமைப்படுவதும், மொத்தத்தில் தான் உலக நாயகனான தமிழ் சினிமாவுமே முற்றிலும் வேறு உலகத்தைச் சேர்ந்தது தான். இரண்டையும் ஒரு மனிதனின் சிந்தனையில் இருக்க முடியாது. சேமியாவைத் தரம் பார்த்து வாங்குகிறவன், வைக்கோல் போரை மாங்கு மாங்கு என்று தின்றுகொண்டிருக்க முடியாது இல்லையா? இரண்டையும் ஒரே இடத்தில் ரசனையில் பார்க்க முடியுமோ?.

உலகத்தின் சிறந்த கலைப் படங்களையெல்லாம் பார்க்கும் ஆசை கொண்ட ஒரு சினிமா நடிகன் இருப்பது சந்தோஷமான விஷயம். அது கலைப் பசியின் காரணமா இல்லை, காபி அடித்து இங்கு தன் மூக்கை ஆகாயத்துக்கு உயர்த்திக்காட்டவா என்பதைப் பிறகு ஆராயலாம். இப்போதைக்கு அது கலைப் பசி என்றே கொள்வோம். அந்தக் கலைப் பசி கொண்டவன் திலீப் குமாரை சிறந்த நடிகனாகக் கண்டால் அது புரிகிறது. ஆனால் அந்த


more: http://thamizhstudio.com/serial_4_15.php


Friday, January 21, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 12வது பௌர்ணமி இரவுதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 12வது பௌர்ணமி இரவு

(12th Full Moon Day Film Screening)


அடலேறு19-01-2011


பால்ய வயது நியாபங்கள் எப்போதுமே மனதை லயிப்பிற்குள்ளாக்குபவை. நகரத்தின் இத்தனை சுகங்களை அனுபவித்து விட்டாலும் கிராமம் இன்னும் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் வீதம்பட்டி. அங்கே நடக்கும் கோயில் திருவிழா பிரசித்தமானது. திருவிழாவின் போது நடத்தும் தெருக்கூத்து, நாட்டியம் இவைகளுக்காகவே திருவிழா சென்ற நாட்கள் அவை.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய நடக்கும், புழுதி படிந்த கால்களுடன் அவர்கள் ஆடிய நடனமும், வண்ண விளக்குகளால் நிறைந்த அந்த மைதானமும் இன்னமும் கண்முன்னாடியே இருக்கிறது. பள்ளி தோழிகளை பள்ளியை தவிர வெளியே காண்பது திருவிழாக்களில் மட்டும் தான்.இரவில் ஒளிரும் பல்பு வெளிச்சத்தில் அவர்கள் காட்டும் நமுட்டுச்சிரிப்பு அத்தனை வசீகரமானது.

இரவு முழுக்க கூத்து,கரகாட்டம் என‌ பாத்துவிட்டு நடந்தே ஊர் வந்து சேருவோம். அங்கு நடனம் ஆடிய பெண்கள் தான் எங்களை பொருத்தவரை ஆகச்சிறந்த அழகு . அதில் நடனமாடிய ஒருவரை மையில்கல் என்ற ஊரில் ஐந்து வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். எங்கள் கிராமம், கோயிலின் பெயர், அமைப்பு என அனைத்தையும் சொல்லி நியாபகப்படித்தினேன்.

மிக சந்தோஷத்துடன் டீ குடிக்கிறயா என்றார். அவரால் என்னை நம்பவே முடியவில்லை உண்மையிலேயே தன்னை அடையாளம் தெரிந்ததா என்றார். தான் எப்படி ஆடினேன், எல்லோரும் என்ன சொன்னார்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் ஆடியது ஐந்து வருடத்திற்கு முன்பு, சிலவற்றை மட்டுமே என்னால் நியாபகப்படுத்த முடிந்தது. வேட்டியில் வைத்திருந்த ஒரு கசங்கிய பத்து ருபாய் நோட்டை டீகாரனிடம் கொடுத்தார். தலையை குனிந்து கொண்டு நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். நான் அவரின் உதடுகளையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். அவைகள் ஏதோ முணுமுணுத்தபடி இருந்தன‌. சிறிது நேரம் கழித்து இப்போதெல்லாம் கூத்திற்கு யாரும் கூப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டார். "கிருஷ்ணா காலேஜ் கட்டறாங்கல்ல அங்க தான் வேலைக்கு இருக்க" என்றார்.சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவர், என்னிடம் எதுமே சொல்லிக்கொள்ளாமல் வீதியில் இறங்கி நடந்து போய்விட்டார்.

கூடு தமிழ்ஸ்டுடியோ நடத்திய பெளர்ணமி இரவு நிகழ்ச்சியில் நேற்றிரவு கலந்து கொண்டேன். அமைதியான மொட்டை மாடி, நடுவில் புல் தரை சுற்றிலும் பூக்கள் செடிகள் என அழகாக இருந்தது. பவா செல்லத்துரை எழுதிய ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கதையை மையமாக வைத்து இயக்குனர் கருணாவால் எடுக்கப்பட்ட குறும்படம் தான் இந்த ஏழுமலை ஜமா.

அவர் அன்று சொல்லிக்கொள்ளாமல் சென்றதன் வலியை இந்த குறும்படம் பார்த்த பின் தான் உணர்ந்தேன். சிறு வயதில் நான் பார்த்த கூத்து அதன் பின்னாடி எத்தனை மனிதர்கள் , எத்தனை வாழ்வியல் கூறுபாடுகள் இருந்திருக்கும் என நினைக்க வைத்தது.கூத்தும், கரகாட்டமும், புழுதி படிந்த கால்கள் த‌ந்த சந்தோஷ மனநிலை அதன் பிறகு கிட்டவே இல்லை.

தெருக்கூத்து க‌லைஞ‌ர்க‌ளின் அகஉல‌க‌ம், வாழ‌விய‌ல்,ஆளுமை, வாழ‌க்கைமுறை ஆகியவைகளை பற்றிய ஒரு நுண்ணிய ஆவனம் இந்த “எழுமலை ஜமா” குறும்படம். சினிமா என்ற மாற்று ஊடகத்தால் தெருக்கூத்தின் அழிவையும் அதன் பின்னான கலைஞர்களின் வாழக்கையையும் இந்த குறும்படம் மிக தெளிவாக காட்சிப்படுத்துகிறது.

”தனக்தாஹ் தனக்தாஹ்” என ஒரு பாடல் பின்னனியாக வந்து கொண்டே இருந்தது. மனதை என்னமோ செய்தது அதன் இசையும் அதன் பின்னான சொல்லப்படாத வலியும். ஆரம்ப காட்சியில் இருந்தே மிக இனக்காமன படத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்தேன். அதில் இடம்பெற்ற கூத்து எத்தனை நாட்கள் படமாக்க பட்டிருக்கும் என நினைத்துக்கொண்டேன். மிக நுண்ணியமாக காட்சியமைப்பு, பின்னனி இசை , கலைஞர்கள் என அத்தனையிலும் தமிழரின் ஆதிக்கலையை அழகாக காட்டியிருந்தார்கள்.

தெருக்கூத்து ஆடுபவர்களின் தலைவனை வாத்தியாரே என்று கூப்பிடுகிறார்கள். முதல் காட்சி வாத்தியார் பெங்களூர் ரயில் நிலையம் வருவதிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. அதன் பின் அவர் வருவதற்கான காரணம், தெருக்கூத்தின் அழகு,நிராகரிக்கப்படுதலின் வலி என நுட்பமாக காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.

ம‌ன‌திற்கு நெருக்க‌மான‌ ப‌டங்களை பார்க்கும் தருணங்கள் அழகானது. கூத்தும், அத‌ன் பின்னான‌ ந‌ம் வ‌ர‌லாறும், வாழ்க்கையையும் அழ‌காக‌ ப‌ட‌ம் பிடித்துள்ளார்க‌ள். வார்த்தைக‌ள‌ற்ற‌ உண‌ர்ச்சி வெளிப்பாடுக‌ளை காட்டும் போது அனைவரின் மத்தியிலும் க‌ண‌த்த‌ மெள‌ன‌ம் நில‌விய‌து.

நாற்பது நிமிடம் ஓடக்கூடிய இந்த படம் முடிவடைந்ததும் கலந்துரையாடல். ப‌ட‌த்தில் இருக்கும் குறைக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே நான் பேசுவேன் என‌ எழுந்த‌ ஒருவர் படத்தை பற்றி அதன் அழகுணர்ச்சி பற்றியும் சிலாகித்தார். குறைகளை கடந்து ரசிக்க வேண்டிய குறும்படம் இது. தெருக்கூத்தினை ஆவனப்படுத்துவதில் இந்த குறும்படம் ஒரு முக்கிய இடத்தை பெரும். எந்த வித சலனமும் இல்லாமல் நூற்றாண்டின் கலையை தொலைத்துவிட்டு அமைதியாக இருக்கிறோம் என்ற வலி இருந்துகொண்டே இருந்தது.

படத்தை பற்றி நான், பாத்தீமாபாபு, மற்றும் நான்கு நண்பர்கள் பேசினோம்.கலந்துரையாடலில் பாத்தீமா பாபு “ ஒரு நிமிடம் கூட கண்ணை இமைக்க முடியாமல் கட்டிப்போட்ட படம்” என்றார். நான் படத்தின் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் பற்றி குறிப்பிட்டேன், பின்னாடி வந்த நண்பர் ஆவணப்படுத்தப்படுதலின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். அதன் பின் வந்தவர் உணர்ச்சிவயப்பட்டவராக கதையை பற்றி சொல்லி சென்றார்.

கலந்துரையாடல் முடிந்த பிற‌கு நிலாச்சோறு. பெளர்ணமி நிலாவை பார்த்துக்கொண்டே மொட்டைமாடியில் வட்டமாய் அமர்ந்து உணவருந்தினோம். நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். மனதிற்கு பிடித்த படம், மொட்டை மாடி,நெருக்கமான நண்பர்கள், உணவு, புல்தரை என‌ சென்னையின் இரவும் மிக அழகானதாக இருந்தது.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/1219012011#Monday, January 17, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 12வது பௌர்ணமி இரவுதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 12வது பௌர்ணமி இரவு

(12th Full Moon Day Film Screening)


19-01-2011


புதன், 19-01-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ஏழுமலை ஜமா (பவா செல்லத்துரை அவர்களின் சிறுகதை ஏழுமலை ஜமாவாக திருவண்ணாமலையை சேர்ந்த கருணா என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது).

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்:லெமன் ட்ரீ (Lemon Tree)

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt1172963/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268நவீனத்துவம் என்றால் என்ன?யாயும் ஞாயும் யாரா கியரோ- 3

நவீனத்துவம் என்றால் என்ன?

தமிழவன்

தமிழில் கல்வி நிறுவனங்களுக்குள் இலக்கியக் கல்வி தரப்படவில்லை.

அதனால் இலக்கியம் பற்றிய ஆரம்பப் பாடம் கூட இல்லாத தமிழ்ப் படிப்பே நம் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.சினிமா பாட்டைக் கவிதை என்று நினைக்கும் மாணவர்களே அதிகம் உள்ளனர். இது தமிழின் சாபக் கேடு.இந்தச்சாபக் கேட்டால் உருவானவர்களே தமிழ்த் துறையினரும் நம் முதலமைச்சர் போன்றவர்களும். சினிமா பாட்டுக்கும் இலக்கியத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரிதாபம்.

கன்னடத்தில் மிக பிரபலமான சினிமா பாடலாசிரியர் ஒரு முறை பெங்களூர் பல்கலைக் கழகக் கன்னடத் துறைக்கு வந்தார். ஆனால் எந்த மாணவரும் அவரைப் பார்க்க ஓடிவந்து குவியவில்லை. கேட்டபோது சினிமா பாடலாசிரியர்களைப் பெரிய இலக்கிய ஆளுமைகளாகத் தாங்கள் கருதுவதில்லை என்றனர் மாணவர்கள்.ஆனால் நம் நிலை?பல தமிழ்ப் பேராசிரியர்களுக்கே சினிமா பாட்டுக்கும் சரியான கவிதைக்கும் உள்ள தாரதம்மியம் தெரியாது.

இந்த வித்தியாசமே தெரியாத ஒரு சூழலில் நவீனத்திற்கும் பின்-நவீனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் எப்படித் தெரியும்?

மூன்றாம் வகுப்பு படித்த ஒரு நடிகன் நடித்த எல்லாபடங்களையும் பற்றி இன்று பொது அறிவுப் போட்டி வைக்காத பள்ளிக்கூடமோ டி. வி. சானலோ உண்டா? அரசியலும் சினிமாவும் இணைந்து தமிழத்தைப் படாத பாடு படுத்துகின்றன.

என்போன்றவர்கள் தமிழகத்தை விட்டுவிட்டு எழுபதுகளில் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டதாலும் பிறமொழிகளில் என்ன நடக்கிறது என்று கவனித்ததாலும் தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் எழுத்துக்களால் கவரப்பட்டுச் சிறுபத்திரிகைகளுக்குப் போய்விட்டோம். என்னைப் பொறுத்தவரை நான் கர்னாடகத்துக்கு எழுபதுகளில் வந்தபோது இங்கே நவீனத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்தது.எங்குப் பார்த்தாலும் புதுக்கவிதைத் தொகுப்புக்கள் காட்சிதந்தன.நவீனத்துவம் என்ற பேச்சாகவே இருந்தது.அப்போது இங்கு பின்- நவீனத்துவம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

பின்-நவீனத்துவம் பற்றித் தமிழில் தான் முதலில் பேசினார்கள்.அமைப்பியல் தமிழில்தான் முதன் முதலில் பேசப்பட்டது கன்னடத்தில் பின்னால் வந்தது. ஃபூக்கோ பற்றித்தான் முதலில் கன்னடத்தில் பேச்சு வந்தது.தப்பும் தவறுமாக ஒரு ஃபாஷன் போல் பேசினார்கள்.

எல்லோரும் பின் -நவீனத்துவத்துடன் நவீனத்துவத்தையும் இன்று சேர்த்துப் பேசுகிறார்கள். இவ்விரண்டு சொற்கள் சமீபத்தில் மீண்டும் முக்கியமாகி்யுள்ளன. இந்தச் சொற்கள் இன்று இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஒருவகை எதிர் பதங்களாகப் பயன் படுத்தப் படுகின்றன.ஆனால் இப்படிப் பயன்படுத்துவது, அதாவது பின் நவீனத்துவத்துக்கு எதிரானது நவீனத்துவம் என்று நினைப்பது ஓரளவுதான் சரி. இன்னொருவகையில் தப்பு.

இன்று வலைப்பூவில் எழுதும் பலரும் இந்தப் சொற்களைத் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அதனால் இப்பதங்களை ஒவ்வொன்றாக முதலில் விளக்கவேண்டும்.

நவீனத்துவம் என்றால் என்ன?

நவீனத்துவம் வேறு; புதுமை வேறு. நவீனத்துவம் என்ற சொல் முதல் உலகப் போர் நடந்த காலத்தில் உருவான இலக்கிய, கலை, மற்றும் ஓவிய போக்கு ஒன்றின் பெயர்; புதியதெல்லாம் நவீனத்துவம் கொண்டதல்ல. புதியதை ஆங்கிலத்தில் Modern என்றும் நவீனத்துவத்தை ஆங்கிலத்தில் Modernism என்றும் அழைப்பார்கள்.

இலக்கியத்திலும் ஓவியத்திலும் இந்த இரண்டு சொற்களையும் தொடர்பில்லாததாய் கருதுகிறார்கள். சினிமாவிலும் அப்படித்தான்..பிரஞ்சு சினிமா இயக்குனர்களான Godard, Trouffault போன்றோர் நவீனத்துவ சினிமாவைக் கண்டுபிடித்தவர்களாகக் கருதப் பட்டவர்கள். புதிய சினிமாவைக் கண்டுபிடித்தவர்கள் அல்ல. எனவே "நவீனத்துவம்" என்பதன் அர்த்தம் வேறு; "புதிய " என்ற சொல்லின் அர்த்தம் வேறு.

அப்படியென்றால் நவீனத்துவம் எதைக்குறிக்கிறது?

ஆங்கிலத்தில் டி.எஸ். எலியட் கவிதைகள் நவீனத்துவக் கவிதைகள். தமிழில் நகுலன் ஒரு நவீனத்துவ எழுத்தாளர் ஆவார்.அவருடைய நாவல்கள்,சிறுகதைகள், கவிதைகள் நவீனத்துவ படைப்புக்கள் ஆகும். தனிமையும் நோய்மையும் பீடிக்கப் பட்ட பாத்திரங்களை இவர் எழுத்துகளில் காணலாம்.இதற்கு நினைவுப் பாதை என்ற இவர் நாவலை உதாரணமாகக் கூறலாம். தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாம் ஒரு நவீனத்துவக் கவிஞர். இவர்களை எல்லாம் கேள்விப்ட்டிருக்கிறீர்களா? இவர்கள் படைப்புக்களில் அகத்தேடலும் பயமும் சுயஇரக்கமும் எதிர்கால நம்பிக்கையின்மையும் சாவின் நினைப்பால் விரட்டப் படுபவர்களின் சித்தரிப்பையயும் காணலாம்.

தமிழில் நவீனத்துவ சினிமா இன்றுவரை எடுக்கப் பெறவில்லை. மலையாளத்திலும் இந்தியிலும் கன்னடத்திலும் நவீனத்துவ சினிமா வந்துள்ளது. மலையாள எழுத்தாளர் சேது எழுதிய நாவல் பாண்டவபுரம். அதே பெயரில் வந்த பாண்டவபுரம் என்ற சினிமாவைப் பார்த்தவர்களுக்கு நவீன்த்துவ சினிமா புரியும்.கோடாரின்( GODARD) பிரஞ்சு சினிமா BREATHLESS ஒரு கிளாசிக். சிலர் பார்த்திருபீர்கள். எதிலும் நிச்சயமில்லாமல் இருக்கும் கதைத்தலைவனின் குணத்தைக் காட்ட காமராவை இடதுபுறமும் வலது புறமும் அசைத்து அதை ஊசலாடும் படிவிட்டு படத்தை எடுத்திருப்பார் கோடார். கதாபாத்திரத்தின் ஊசலாட்டமும் கையற்ற நிலையும் மாடர்னிசத்தின் கூறுகள்.தவிர்க்க இயலாமல் சாவை விரும்பும் பாத்திரங்கள் நவீனத்துவப் படைப்புக்களில் வரும். உயர்ந்த படைப்புக்கள் ஒருவித தத்துவச் சாயலைக் கொண்டிருக்கும்.நவீனத்துவப் படைப்புக்கள் எக்சிஸ்டென்ஷியலிசத்தத்துவத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும்.( எக்சிஸ்டென்ஷியலிசம் பற்றியும் பின்னால் பார்க்கலாம்.)

ஓவியத்தில் பிக்காசோவைக் கூறலாம். சிதைந்த உருவங்கள் நவீனத்துவத்தின் கூறுகள்.பிக்காசோவின் கூர்னிக்கா என்ற ஓவியத்தைப் பற்றிக் கொஞசம் சொல்லலாம்.கூர்னிக்கா ஓவியம் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் கொடூரம் பற்றிக் கூறுகிறது.ஆனால் ஒரு பல்ப் ஓவியத்தின் நடுவில் தொங்குவது தவிர எந்த கோரமும் ஓவியத்தில் இல்லை.ஓவியம் முழுதும் ஒரு குதிரைத் தென்படுகிறது.இப்படி குறியீடுகள் வழி செய்தியை அறிவிப்பது நவீனத்துவ பாணியாகும்.

தமிழில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் நகுலனின் இந்தக் கவிதையைக் கூறலாம்.
நவீன விருக்சம் என்ற இதழில் வந்த கவிதை இது.இவ்வளவுதான் கவிதை:

நில்
போ
வா

வா
போ
நில்

போ
வா
நில்

நில் போ வா?

கவிதை இங்கே முடிகிறது.இதைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வீர்களா? மனிதனின் அதீத வெறுமையைக் கூறவும் எந்தப் பேச்சிலும் அர்த்தமில்லை என்று் கூறவும் மனிதன் நஷ்டமாகிப்போனான் என்பதைக் கூறவும் யாரும் யாருடனும் உரையாட முடியவில்லை என்பதைக் கூறவும் இக்கவிதை முயல்கிறது.நில் என்பதும் வா என்பதும் போ என்பதும் ஒன்றே என்று இக்கவிதை சொல்ல முயல்கிறது.மனிதன் தொடர்புறுத்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டான் என்பதை இக்கவிதை கூறுகிறது.இன்னொரு கவிதையைப் பாருங்கள்.ஞானக்கூத்தனுடையது இது.

விழிக்கிறான்
காலொன்று
காணலை

இதுபோல் இன்னொரு ஞானகூத்தன் கவிதையும் உள்ளது.அதுவும் Fragmentation என்னும் உத்தியைக் கொண்டதாகும்.

வள்ளிக் கிழங்கின்
பதமாக
வெந்துபோன
அவள் உடம்பை
பிட்டுத்தின்னத்
தொடங்கிற்று

எனக் கவிதை போகிறது. பிள்ளைகள் தாயின் உடலைத்தின்னுகின்றன.தமிழில் இரண்டாயிரமாண்டுகளில் இப்படிக் கவிதை எழுதப்பட்டதில்லை. இதுபோல் பெங்களூரில் வைத்துத் தற்கொலை செய்த ஆத்மானாம் கவிதைகளும் தீவிர வெறுமையைக் காட்டுகின்றன.

ஒன்றுமில்லை
சும்மாதான்
வேறு ஒன்றுமில்லை
ஆரம்பமே ஒன்றுமில்லை
பின் எப்படி இவ்வளவும்
இவை யாவும் ஒன்றுமில்லை........


இப்படித் தொடர்கிறது. அதாவது வாழ்க்கையைச் சிக்கும் சிடுக்குமாக காட்டுவது மாடர்னிசம் என்னும் நவீனத்துவம்.

இவை பற்றி முதன்முதலாக படிப்பவர்களுக்கு இது போல் சித்தர்களும் பாடியுள்ளார்களே என்று ஐயம் தோன்றும். சித்தர்கள் காயமே இது பொய்யடா என்று பாடியது வேறு; அது ஒரு நம்பிக்கை, தத்துவம், பார்வை. எப்போதும் உலகம் இப்படித்தான் என்ற எண்ணம் சித்தர்களிடம் இருந்தது. நவீனத்துவம் அப்படி சொல்லவில்லை. இது இரண்டாம் உலப் போரால் விளைந்த ஓர் மனநிலை.

அமைப்பியல் போல இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை.அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.இவ்வளவும் எளிமைப் படுத்தப் பட்ட அறிமுகம். இத்தகைய போக்குள்ள எழுதாளர்களை நீங்களும் வாசிக்கும் போது அடையாளம் காணலாம்.அது உங்களுக்கு ஓர் படைப்பை சரியாக வாசிக்க உதவும்.

தமிழில் இச்சிந்தனைமூலம் எழுதியவர்கள் ந. முத்துசாமி, ஞானக் கூத்தன், நகுலன்,பாரவி, ஓரளவு சுந்தர ராமசாமி ,மௌனி, அசோகமித்திரன் போன்றவர்கள். (பின்- நவீனத்துவம் அடுத்த கட்டுரையில்)

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com

தமிழவன் கட்டுரை மாதமிருமுறை (15 நாட்களுக்கு ஒருமுறை) பதிவேற்றப்படும்Saturday, January 15, 2011

கற்பனை+கனா=நிதர்சனம்

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்


ஊசியாய் குத்தும் மார்கழிப் பனி. பொழுது முளைத்து ஒரு பனைமர உயரம் வரும் வரைக்கும் குளிரும் பனியும். குட்டிபோட்ட பூனையாட்டம் கூடவே சுத்திக்கிட்டிருக்கும். வயதானவர்களுக்கு மட்டுமல்ல. இளந்தாரிப் பயல்களுக்கும் இந்த இளங்காலை மார்கழியில் பேசும்போது வாய் தந்தி அடிக்கும். குயில் என்று நினைத்து காக்கைகளைப் கன்னி வைத்து பிடிப்போம். எப்போதும் ஒயாமல் ஒடிக்கொண்டிருக்கும் கொய்யாமரத்து அணில்கள்கூட கொஞ்சம் அமைதியாகவே மரக்கிளையில் படுத்துக்கிடக்கும். கூரைமேல் ஏற்றிவிட்ட சுரையும், பந்தக்கொடியில் படர்ந்துக்கிடக்கிற அவரையும், தரைமீது கிடக்கிற பறங்கியும் ஏகத்துக்குப் பிஞ்சுவிடும். தைமாதம் பிறக்கப்போகிற தைரியத்தில், தைநெல் அறுத்துக் கொடுத்துவிடலாம் என எண்ணி கடன்வாங்கி புதுவண்டி மாடிகள் வாங்குவதும், இந்த மார்கழியில்தான் நடக்கும். வட்டிச்செட்டி கூட யோசிக்காமல் கடன் கொடுத்து மகிழ்வதும் இந்த மார்கழியில்தான். காலப்போக்கில் மார்கழியில் வாங்குவதை மனிதர்கள் நிறுத்தியதும் சிலர் மட்டும் வாழவேண்டும் என்ற சூழ்ச்சிதான் (அக்‌ஷ்யதிதி பிறந்த காரணமும் அதுதான்), பனியிறங்கும் இந்த மார்கழியை பழிக்கு ஆளாக்கி பீடைமாதம் எனக் கதிபுனைந்து விட்டுட்டாங்க.

இதோ இன்னும் ஒருவாரம்தானிருக்கு தைமாதம் பிறப்பதற்கு. காணுமிடமெல்லாம் நெல்லறிந்த வயல்கள். செழித்தோங்கி வளர்ந்துக்கிடக்கிற செங்கரும்பு, மஞ்சள்கிழங்கு, வாழைன்னு மக்கள் முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூத்துக்கிடக்கிற தைமாதம். தை என்பது தமிழனின் அடையாளம். கன்னிப் பெண்களுக்கு தையில் பரிசம் போடுவது ஒரு வழக்கமாக இருந்தது. களஞ்சியங்கள் நிறைவதும் இந்த தை மாதத்தில். கிராமங்களின் உயிர்த்தொழிலே உழவுதான். அதனால்தான் வள்ளுவன் சொன்னான் “சுழன்றும் ஏர்பின்னுது உலகு” என. உழவு இல்லையேல் உலகு இல்லை. அந்த உழவுக்கு உறுதுணையாய் இருந்தது மாடுகள்தான். மனிதனின் உறவு.

இதோ இன்று தை மாதம் பிறந்துவிட்டது. ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் முதன்மையான, செழிப்பான மாதம் . அதனால்தான் பழந்தமிழர்கள் தை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். மீண்டும் அந்தப் பழமையின் பெருமையில் நாம் தை முதல் நாளை தைத்திருநாளாகவும், தரைப்பொங்கல் நாள் எனவும், சூரியனை வழிபடும் திருநாளாகவும் கொண்டாடுகிறோம். காலம்காலமாக கற்சிலைகளை வழிபட்டவர்களின்றும் மாறுபட்டு முதன்முதலான இயற்கையை வணங்கி மகிழும் தமிழன் பகலை விழுங்கியபோது சூரியன் அஸ்தமமிட செவ்வானம் அதைமுத்தமிட, நெல்லடிக்கும் களத்தில் தலைத்தரையைவெட்டி செம்மண்ணெடுத்து குழைத்து மூன்று மண்உருண்டைகளை முப்புள்ளிகளாய் (ஆயுத எழுத்தைப்போல) அடுப்பு கூட்டி வைத்தபோது.

குறைந்த ஒளியுள்ள இரவும் வந்து,விழித்தே உறங்கி. உருண்டு புரண்டு படுக்கையறையில் பழந்துணிகள் கசங்கி விடியலை எதிர்நோக்கும் வேளையில். குயில் கூவ, சேவல் கொக்கரிக்க, சிட்டுக்குருவி ஸ்லோகம் சொல்ல, இரவை விழுங்கி பகல் பொங்க மூடுபனிக்குள் மரங்கள் கார்கினியின் ஒவியங்களாய் காட்சிதர, ஆயுத எழுத்தாகிய அடுப்பின் ஈரப்பதம் இரவின் கதகதப்பில் காய்ந்து இருக்க, அதன் அருகே வைத்திருந்த புத்தரிசி, வெல்லம், ஏலம், பால் கலந்து புதுமண்பானையை அடுப்பின்மேல் வைத்து சர்க்கரைப் பொங்கலிட்டு, சூரியன் உதயமாகும்போது இறக்கி. சூரியனை வழிபடும்போது பட்டும், பருத்தி ஆடைகள் அணிந்து, பொன் நகைகள் மின்ன புன்னகைத்துத் திரிவோம், நாம் . அடுத்தநாள் வரும் மாட்டுப்பொங்கலை மனிதனுக்கென உலகில் தோன்றிய இந்த மாடுகள் பெற்ற தாய்க்கு ஒப்பானவை. மனிதனுக்கு பாலூட்டியும், உணவுவிளைய உழைப்பையும் தருபவை மாடுகள்.

மாடுகளுக்கென தனியே தொழுவங்களை அமைக்காமல், வீடுகளுக்குள்ளேயே மாட்டுப்பட்டிகளை அமைத்து அதனுடன் படுத்துறங்கியவர்கள் நாம். ஆண்டு முழுவதும் தனக்கென உழைத்த மாடுகளை வணங்கிட மாட்டுப்பொங்கலன்று ஆளாளுக்கு மாடுகளை ஓட்டிச்சென்று அதனை கழுவி குங்குமம் இட்டு கொம்புகளுக்கு வண்ணம்தீட்டீ கழுத்தில் மணியும் ,சங்கும் கட்டி பாசிமாலைகளை அணிவித்து. கொம்பின் நுனியில் கொப்பியும் வெண்டையும் (சிலம்பம்போல் உள்ளே மணிகள் கல கல என ஆடும்) அணிவித்து. அன்று மட்டுமே நமது அடக்குமுறையை அதனிடம் காட்டாமல்.அதனிடம் நிறைய பசும்புல்லைப்போட்டு அது ரசிச்சு உண்ணும் அழகை பார்த்து. மாலைநேரமும் மயங்கும். பச்சரிசிவெந்து புதுபானைவாய் வழியே வெளியே குதிக்க இறக்கி வைத்த பானையின் கழுத்தில் மா, கரும்பு, ஆவாரம்பு, புதுமஞ்சல் ,கன்னிப்பூ ,பச்சை ஈச்சைசெடி கயிற்றால் மாலையாக தயாரித்து புது பானை கழுத்தில் கட்டியபின் தங்களின் நிலங்களில் விலைந்த காய்கறிகள், கீரைகள் முதலியவைகளை சமைத்து படையலிட்டு உழவுக்கு பயன்படுத்திய ஏர் கலப்பை, பறி, நுகத்தடி, மண்வெட்டிகள், கருக்கருவாக்கள், உரல் உலக்கை, பரம்பு, அம்மிகுழவி, ஆட்டுக்கல்லு, முதயலியவற்றை வணங்குவதற்கு உரியப் பொருள்களாகவும், தட்டுகளில் பழம், பூ, தேங்காய், புத்தாடைகளையும், வைத்து இல்லத்தின் மூப்பர் தலைவாழை இலையில் படையலிட்டு கற்பூரம் ஏற்றி மாடுகளை கடவுளாக வழிபட்டு. பின்பு முதல் படையல் சோற்றை சர்க்கரை பொங்கலுடன் வெண்பொங்கலையும் சேர்த்து. மாடுகளின் வாயை வெண்கல செம்பில் இருந்த தண்ணீரை எடுத்து .கழுவி ஊட்டிவிட்டு முன்பே அணிவித்த மணிமாலையுடன், (செங்கரும்பு கன்னிப்பூ மாஇலை. கரட்டான்செடியின் நடுவடம். ஈச்சங்கயுறு) இயற்கையாய் தயாரித்த மாலையை அதன்கழுத்திலிட்டு, அதன்பின் மாடுகளை சுற்றி வரும் வேளையில், மூப்பர்முதல், முளைப்பால்குடிக்கும் குழந்தைவரைபொங்கலோ.... பொங்கல்... என்று மகிழ்ச்சியுடன் குரல்யெழுப்புகையில் மாடுகளும் மகிழ்ச்சியுன் தலையாட்டிக் கொண்டுருக்கும் வேலையில்.

அதன் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகள் ஒலிக்க,சலைங்கைகள் சப்தமிட, அது உண்ணுகிற அந்த காட்சியை காண கண்கோடி வேண்டும், அழகிய கிராமத்தில் எனது சிறுவயதில் நான் பார்த்து மகிழ்ந்த சூரிய பொங்கலையும், மாட்டுப்பொங்கலையும்,கன்னிப்பொங்கலையும், என் நினைவுக்குள் நான் லயித்தபோது சுளீர் என்று வலி, இருபதுவருட நினைவை கொசு கடித்து குலைத்தது, நான்காவது மாடியின் சன்னலோரம் அமர்ந்து சாலையின் எதிர்திசையை பார்த்த எனக்கு, அடுக்குமாடி குடியுருப்பில் வாசல்கள் இன்றி, கோலமின்றி, நான் பார்த்து மகிழ்ந்த ஆடு, மாடுகளை காணோம், மண்குழைத்து கட்டும் அடுப்புகளை காணோம், அம்மா உரலில் குத்தியெடுத்த குத்தரிசியை காணோம், ஆடு, மாடு, கழனி, காடு, அற்றுபோய், கருங்குயிலின் கூவலுக்கு பதிலாக கார்கள் ஓலமும், பனிமூட்டத்துக்கு பதிலாக, வாகனங்கள் உமிழ்த்த புகைமூட்டம், நாளாவதுமாடியில் உள்ள எனது கண்களை எரிச்சல் ஏற்படுத்தியது, இந்த பட்டணத்தில் சிட்டுக்குருவிகள் இன்றி, மணிக்காக்கைள் ஒழிந்து, அதிகாலையில் ஒவ்வாமை இருமளுடன், அடுக்குமாடிகுடியிருப்புகள் புறாக்கூடுகளாய். ஓரளவு உயிர் வாழ எல்லாம் இருந்தும், பட்டணம் பாடாய்படுத்துகிறதே என்று? (இதைத்தேடித்தானே பட்டணம் வந்தேன்) நான் சன்னலின் கதவடைத்தேன், அந்த சமயத்தில் காதுகேளாத செவிடனாய் இருந்தேன் ,காட்சிகள் அனைத்தும் அழகாகதான் காட்சிகொண்டன,என் மனைவியின் குரல் ஏங்க ரொம்ப நேரமா காக்காய் எதுவும் காணோம். வாங்க சாமி கும்பிடலாம் என்றாள்,வீட்டின் முற்றத்தில் வெண்களபானையில் ஸ்டவ்வின் அனலில் சர்க்கரை பொங்கல் வெந்து இருந்தது, நான் சூரிய ஒளியை பார்த்து நமஸ்கரித்தேன், கைப்பேசி மணிஒலி என் நமஸ்காரத்தை கலைத்தன. (தெலுங்கில்) ரெண்டுகண்டலுக்கு மீக்கு பிளைட்டு. ஏர்போர்ட்டுக்கு. மீறு எல்றதுக்கு மீ பிளாட்டுகிந்த பண்டி உன்னாயண்டி என்றனர்.

அவசர அவசரமாக சர்க்கரை பொங்கலை உண்டேன். நான் பார்த்த என் மனைவி கேட்டாள், பொங்கல் எப்படிங்க என் வாய் நிறைய பொங்கல் வேற ம்....ம்..ம் என்றேன், ம்...னா.. நீ டெய்லி சினிமா கம்பனி சாப்பாடு சாப்பிட்டு ஒநாக்கு செத்துப்போச்சு என்றாள். நான் எனக்குள்ள நாக்கு இழந்தது சுவை மட்டுமா....மா.....மா....சொல், வாக்குறுதி, உண்மை, உணர்வு அவையெல்லாம் சேர்த்தும் அல்லவா. சினிமாக்காரங்களால செத்துபோச்சு என்றது என் நினைவுகள். மீண்டும் என் மனைவி என்னங்க உங்க வாய்க்குள்ளே பேசிக்கிறீங்க...நான் அதுஒன்னுமில்ல என்பொண்டாட்டி சமைத்த எனக்கு பிடித்த உணவை. நான் பிடிபடாம சாப்பிடுறேன் .. பிடிக்காத வேலையை உங்களுக்காக பிடித்துக்கொண்டு செய்யுறேன், என்று கூறிக்கொண்டே நாடோடி பெட்டி,படுக்கையை கைகளில் சுமந்து செல்ல,என் குழந்தைகள் இருகன்னங்களில் முத்தமிட, என் மனைவி நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்புகையில் எனது சுகமான நிகழ்வுகள் இவைகள் மட்டுமே. கன்னத்தில் இட்ட முத்தத்தின் ஈரம் காய நான் காசிதியேட்டரை தாண்டி ட்ராபிக் ஜாம் மெதுவாக ஊர்ந்தவேளையில் வெளியே எட்டிப்பார்த்தால் கூவம். என் கிராமத்தின் நினைவு. பத்துவருடம் கழித்து கிராமத்துக்கு போனால் கிராமம் கரைந்து போயிருந்தன.

நான் சிறுவயதில் பார்த்து மகிழ்ந்த தோப்பும், தொரவு தொலைந்துகெடந்தன. ஆறு,குளங்கள் வற்றிக்கொண்டு கந்தல் துணிபோல் ஆங்....ஆங்கே குண்டும், குழிகளில் தண்ணீர் ஒட்டிக்கிடந்தன. பனை, தென்னை, நெல், கரும்பு, தினை மரங்கள் காட்சிகயெல்லாம் அழிந்து கட்டங்கள் சாட்சியாய் நிமிர்ந்து தெரிந்தன, கட்டுத்தெரியில் மாடுகள் வாழ்ந்த அடையாளம் அழிந்து அறிவிப்பின்றி இருந்தன. வழிதெரியாம பட்டணபோயி. வழி அறிந்து கிராமத்துக்கு வந்தா? அடச்...சீ என்று போனவேகத்திலே ஊருக்கு வெளியே வந்தேன். என் பின்னால் உருமி என்னைமுந்திகொண்டு சென்ற லாரியின்மீது மாடுகள். அடுக்கங்களாய் கட்டப்பட்டு மாடுகளுக்கு தனிதனியே நம்பர் இடப்பட்டு இருந்தது. மாடுகளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்கள் வழிந்தோடின சென்றுகொண்டுயிருந்த லாரியின் புகையின் எரிச்சலால் எனது கண்களை மூடினேன். மூடிய கண்களை திறந்து பார்த்த போது .

லாரி கெளப்பிச்சென்ற புழுதியில் அந்த மாடுகள் அனைத்தும் என்னை விட்டு மறைந்து போயிருந்தன. ஊரை திரும்பிப்பார்த்தேன் ஒருவன் கைநிறைய கத்தை கத்தையான பணநோட்டுகளை எண்ணிக்கொண்டு என்னை கடக்கையில் ஏன்,,,ன்,,, னா. அந்த மாடுகள் எல்லாம் எங்கபோகுது என்றேன்.அவன் என்னை திரும்பி பார்க்கமலே வேறெங்க கேரளாவுக்கு அறுப்புக்குதான் என்றான். நான் வெட்கிப்போனேன். மனிதனுக்கு உழைத்துகொடுத்து தானும் உண்டு, தாய்க்கு நிகராக பாலும் தந்த மாடுகளை தனக்கே இறைச்சிக்காக கொல்லும் மனிதர்களே உங்களை ஏன் படைத்தான்? ஜீவகாருண்ய இயக்கம் என்பது வெறும்அரசியல் பண்ணமட்டும்தானா.?என்று யாரிடம் முறையிட..? என்று எண்ணிய என்னை என் மனசாட்சி பிடரியை தட்டியது. ரொம்ப யோசிக்காதே ஆட்டதின்னு, மாட்டதின்னு. மனிதனை மனிதன் சாப்பிட போறாங்கடா... போ... என்றது. சார் ஏர்போர்ட் வந்தாச்சு இறங்குங்க என்றான் காரோட்டி.

விமான இருக்கையில் இருந்த செய்திதாளை நான் வாசிக்கையில் நம்மில்பிறந்து லண்டன்வாழ் தமிழன் சமீபத்தில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு விழா உரையில் “நான் இந்த விழாவில் நாற்பத்திஐந்து நிமிடங்கள் செலவழித்தேன். அதில் முற்பது நிமிடங்கள் சால்வைகளும், மாலைகளும் வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பேச முடிந்தது என்பது அவரின் வருத்தம் (அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு அர்த்தமுள்ளது என்று உணர்த்தியது). நேரங்கள் எவ்வாறு வீணாகிபோகிறது என்பதை உணர்த்தப்பட்டு எனது கையில் இருந்த பையை துழாவியபோது திலீபனின் அந்த கடைசி 12 நாட்களை பற்றி படிக்க தொடங்குகிறேன். புத்தகம் படித்து முடித்தபோது ஹைதராபாத்தும் வந்துவிட்டது. நான் உண்ட சர்க்கரை பொங்கல் எனக்குள் செறிக்க மறுத்து உடல் முழுவதும் கம்பளி புழுவாய் ஊர்ந்தது. உண்ணா விரதமிருந்து உயிர்விட்ட அந்த மாவீரனின் நினைவு என்னை வாட்டியது. காந்தியின் அகிம்சை வெள்ளையனை இறங்க வைத்தது. அதே காந்திய வழியில் போராடிய நம் தொப்பில்கொடி உறவு திலீபனை அன்று நாம் அனைவரும் போராடி காப்பாற்றி இருந்தால். ஈழமும் வீழ்ந்திருக்காது. உயிர்விட்டுக் கொண்டிருக்கின்ற உறவினர்கள் இடம்,உணவு, உடை,உடமை, அங்கிகாரம் இழந்து தவிக்கும் தமிழர்கள் அனாதையாய் இருந்திருக்கமாட்டார்கள். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பின் புலத்தால் இன்று நம் மீனவர்கள் படும் அவதி. நாளை நம் தமிழ்நாட்டுக்கும் வந்துவிடுமோ?

அறம் தரம் இனி
வெறும் பணத்துக்குமட்டும்தானா...?Wednesday, January 12, 2011

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)

குட்டி ரேவதி

பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.

இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.

ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.

பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.

ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.

மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.

மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!

ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.

பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!

தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.

அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.

இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.

ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.

மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.

மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக் கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!