Tuesday, January 25, 2011

கதை சொல்லி - சா. கந்தசாமி (Sa. Kandasami)



கதை சொல்லி - சா. கந்தசாமி (Sa. Kandasami)

லிவி



ஞாயிறு காலை சீக்கிரமாகவே விழிப்பு தட்டி விட்டது. அன்று கதை சொல்லிக்காக எழுத்தாளர் சா.கந்தசாமி அழைத்திருந்தார். வெளிக்கிடுவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. பால்கனியில் வந்தமர்ந்தவன் தனிமையாலும் கதை சொல்லிக்கான என் தேடலும் குறித்த யோசனைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தேன். காலம் என்கிற மறைபொருள் நம்மிடம் மறைப்பவைகள் ஏராளம். என் அப்பப்பா ஒரு கதை சொல்லி.

அவர் காலத்தில் சுருட்டு வியாபாரம் செய்து வந்தார். வீட்டிற்கு பெண்கள் வந்து சுருட்டு சுற்றுவார்கள். ரேடியோ இல்லாத காலம் அது. பெண்கள் சுருட்டு சுற்றும்போது அவர்களுக்கு அலுக்காமல் இருப்பதற்கும் பொழுது போவதற்கும் ராமாயாண‌க் கதைகளையும் மகாபாரதக் கதைகளையும் சொல்லுவார். ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் அவருக்கு கதைகள் உபகதைகள் அனைத்தும் அத்துப்படி.'மனுசன் அவ்வளவு அருமையா கதை சொல்வார், நான் குமரி பெண்ணாக இருக்கும் போது அவர் வீட்டிற்கு சென்று கதை கேட்பேன்' என்று ஒருமுறை சொன்னாள் அம்மா. என் அம்மா சிறுபெண்ணாக அப்பப்பாவிடம் கதை கேட்பதை கற்பனை செய்ய ஒருவித புன்னகை மனதுள் நுழைகிறது. நான் பிறப்பதற்கு முன்பே அப்பப்பா இறந்து விட்டார்.

என் அம்மா எனக்கு அதிகம் கதைகள் சொல்லியதில்லை. அவளிடம் சிறுவயதில் உறங்கச் செல்லும்போது கதை சொல்லக் கேட்கும் பொழுது ஒரு கதையை மட்டும் அடிக்கடி சொல்வாள். எல்லோருக்கும் தெரிந்த கதை தான் அது. ஒரு தாயும் மகனும் வசித்து வந்தார்கள். அவனுக்கு தகப்பன் இல்லை ஆதாலால் மகனைச் செல்லமாக வளர்த்து வந்தாள். ஒரு முறை பக்கத்து வீட்டில் இருந்து விறகு திருடி வந்துவிட்டான். அவன் அம்மா அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. மற்றொருமுறை பள்ளியில் இருந்து பென்சில் திருடி வந்து அம்மாவிடம் காட்டுவான். அதற்கும் அவள் அவனைக் கண்டிக்கவில்லை.சிறு தவறுகள் பெரிதாக வளர்ந்து அந்த ஊரிலேயே மிகப் பிரபலமான கொள்ளைக்காரனாக மாறிவிடுகிறான். அவன் திருடாத வீடே இல்லை என்ற நிலமை. ஒருமுறை ஒரு பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவளுடைய தங்க தாலியை பறிக்க முயற்சி செய்வான். அப்பொழுது அவள் விழித்துக்கொண்டு கத்தத் தொடங்குவாள். உடனே அவன் தன் கத்தியால் குத்தி அவளை கொலை செய்துவிட்டு தப்பித்துவிடுவான்.

அவன் விரைவில் கைதாகிறான். நீதிமன்றத்தில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. தூக்குமேடையில் தன் கடைசி ஆசையாக‌ அவன் தன் தாயை பார்க்க வேண்டும் என்கிறான். இறுதியாக அவளுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறான்.கொலைகாரனாக இருந்தாலும் அவன் தாய்ப் பாசத்தை எண்ணி ஊரே மெச்சுகிறது. தூக்கிலிடுவதற்கு முன் தன் தாயை கட்டி அணைத்து "அம்மா! நீ என் சிறு வயதில் தவறுகளை தண்டித்திருந்தாள் நான் இன்று கொள்ளைக்காரனாகவும் கொலைகாரனாகவும் மாறியிருக்க மாட்டேனே. இதற்கெல்லாம் நீதானே காரணம் என சொல்லி தன் தாயின் மூக்கை கடித்து கொலை செய்வான். இந்த கதையென் அம்மா மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். செய்யும் சிறு தவறுக்கெல்லாம் அவளின் தண்டனை அதிகமாகவே இருந்தது. கதைகள் ஒவ்வொன்றும் வெறும் கதைகளாக நம்மை கடந்து விடுவதில்லை. ஆழ்மனங்களின் அதன் வேர்கள் கிளை விட்டிருக்கிறக்கிறது.

எழுத்தாளர் சா.கந்தசாமியின் வீடு சென்னையில் அடையார் கேட் நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள கனரா வங்கியின் பக்கத்தில் உள் நோக்கிச் செல்லும் சாலையின் சிறிது தூரத்தில் இருக்கிறது. ஒரு புன்னகையோடு வரவேற்று அமரச் சொன்னார். அந்த நடுக்கூடத்தில் இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள். 'இன்னும் நிறைய புத்தகங்கள் உள்ளே இருக்கிறது, என்ன ஒன்று ஏதோ ஒரு புத்தகத்தை தேடும் போது தான் கஷ்டமாக இருக்கும் கிடைக்கவில்லை என்றால் புது புத்தகம் ஒன்றை வாங்கிக் கொள்வேன்' என்றார். சா.கந்தசாமி 'சாயாவனம்' நாவலை எழுதிய போது அவருக்கு வயது இருபத்தைந்து. சாயவனம் நாவல் படித்துக் கொண்டிருந்த போது அதில் குறிப்பிடப் படும் செடி கொடிகளின் பெயர்கள், வனத்தை அழிப்பதன் போராட்டம், கதை நிகழும் இடத்தின் கதாப்பாத்திரங்களின் உறவு இவையாவும் சேர்த்து அவர் ஒரு விவசாயப் பின்னணி கொண்டவர் என அனுமானித்திருந்தேன். என் அனுமானங்கள் யாவைற்றையும் அவருடனான உரையாடல்கள் உடைத்தெறிந்தன.

"அடப் போப்பா! என்னை விட மிகச் சிறிய வயதில் எத்தனையோ எழுதியவர்கள் ஏராளம். நான் என்ன பெரிதாக எழுதிவிட்டேன்" என்றார் அலட்டிக் கொள்ளாமல். அவர் பின்புலம் தான் இன்னும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. "நான் பதினாலு பதினைந்து வயதில் சென்னை வந்துவிட்டேன். என் வீட்டிற்கு அருகில் ஒரு நூலகம் ஏற்படுத்தி விட்டார்கள். வெவ்வேறு வகையான புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். என் வீட்டிற்கு எந்த புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்து வரலாம். ஆசிரயர்களுக்கு கொடுத்த சலுகை அன்று எனக்கும் கொடுக்கப்பட்டது. அப்படியே எழுதத் தொடங்கிவிட்டேன். என் குடும்பம் விவசாயம் சார்ந்தது என்றாலும் என் அப்பா விவசாயம் செய்ததில்லை. எழுதும் போது அந்த மரங்களினுடைய பெயருடன் எழுதுவேன். சாயாவனம் எழுதுகிற பொழுது நினவில் இருப்பவை தானாக வந்து சேர்ந்து கொண்டது" என்றார்.

ஒருவருடன் மிகச் சிறந்த உரையாடல்கள் எப்பொழுதும் சாத்தியப்படுவதில்லை. நம்மோடு கதைப்பவர் திறந்த மனதுடன் இருக்கும் போதே அது வாய்க்கும். சா.கந்தசாமியிடம் அந்த மனம் இலகுவாக இருந்தது. இதுதானென சுருக்கிக் கொள்ளாமல் அவருடனான பேச்சுக்கள் பரந்து பட்டிருந்தது. கதைகள் தொடங்குவதற்கு முன் கதைத்தோம், கதைகள் பதிவிற்கிடையில் கதைத்தோம் ,கதைகளை முடித்தும் கதைத்தோம். அவர் கூறிய முதல் சிறுகதை " எதிர்வினை" யில் ஒரு பிரபஞ்ச ஒர்மை இருந்தது. எக்காலத்திலும் எந்த இடத்திலும் அதை பொருத்திப் பார்க்கலாம். ரஷ்ய இலக்கியங்களின் ஓர்மையே நம்மை இன்றும் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. நிகழும் காலமும் இடமும் மனிதர்களும் வேறுபட்டிருந்தாலும் கதைகளின் சாரம் என்றும் குறையவில்லை. அவர் முதல் கதையை முடித்ததும் முதல் கேள்வி அவர் கதைகளுக்கான ஆதாரப் புள்ளி எங்கிருக்கிறது என்பதே. ஒரு எழுத்தாளனுடைய கதைகளுக்கான அகத் தூண்டுதலை எங்கிருந்து பெறுகிறார் அதன் ஊற்றுக்கண் எங்கே இருக்கும்.

"ஒரு கதையில் பல மனிதர்களைக் கொண்டே ஒரு கதாப்பாத்திரம் இருக்கும். ஒரு மனிதனை வெளியில் இருந்து சொல்லி விட முடியது. அவனை உள் சென்று பார்க்க வேண்டும். அது தவிரவும் மனம் மனிதர்களை கவனித்துக் கொண்டிருக்கும். அது எழுதும் பொழுது தானாக வந்துவிடும். கண்கள் காமிராவைப் போல் பதிவு செய்து மூளைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறது. ஒன்றை தவிர்த்தாலும் இன்னொன்று சென்று கெண்டே இருக்கிறது. இது பிரக்ஞையுடன் செய்யும் காரியம் அல்ல. அது இயல்பாகவே நடந்துவிடுகிறது. அந்த கதையில் வரும் டிரில் மாஸ்டர் என்னுடைய ஆசிரியர் கிடையாது. அவனுக்கென்று ஒரு சட்டம் வைத்துக்கொண்டு அப்படியே வாழ்கிறான். அதில் வரும் சம்பவங்களே கதைகள் அனைத்தும்" என்றார் சா.கந்தசாமி.

சா.க‌ந்த‌சாமியிட‌னான‌ உரையாட‌ல் பெரும்பாலும் அவர் மொழி சார்ந்த‌தும் வாழ்வு சார்ந்த‌துமாகிய எண்ணங்களைப் பற்றி இருந்தது. அத‌ன் முழுப்ப‌திவும் ஒரு க‌ட்டுரையில் சாத்திய‌மில்லை.

க‌தைக‌ளுக்கு ப‌ஞ்ச‌மில்லா மனித‌ர் சா.க‌ந்த‌சாமி. என்ன‌ க‌தை சொல்லாமென‌ ஒரு சில‌ வினாடிக‌ள் ம‌ட்டும் யோசித்தார். த‌ட‌ங்க‌ல்க‌ள் இல்லாம‌ல் க‌தைக‌ள் வ‌ந்து கொண்டிருந்த‌து. க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்து சாலையில் ந‌ட‌க்கும் பொழுது அவ‌ர் வீட்டின் எதிரில் இருந்த‌ பால‌ வினாய‌க‌ர் கோவில் ம‌ணி அடித்துக் கொண்டிருந்த‌து. அந்த‌ இனிமையைப் போல‌வே அவ‌ர் க‌தைக‌ளும் இருந்த‌ன‌ என‌ ம‌ன‌துக்குள் நினைத்துக் கொண்டேன்.

சா.க‌ந்த‌சாமியின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானைத் த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)



No comments:

Post a Comment