Monday, January 24, 2011

சிறுகதை உலகம்தமிழ்மகன்


தமிழ் ஸ்டூடியோ டாட் காம் நடத்தும் படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தில் சிறுகதை குறித்த இரண்டு நாள் வகுப்பெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சுவாரஸ்யமமான அனுபவம். இரண்டு நாளும் காலை முதல் மாலை வரை நான் படித்த சிறுகதைகள் குறித்து பேசிக் கொண்டே இருந்தேன். ஐந்து நிமிடங்களுக்குப் பேசுவதே சிரமம் என்ற எண்ணத்தில்தான் போனேன். பேசுவதற்கு விஷயங்கள் இருப்பதை அறிந்தேன். படித்தவற்றை நினைவூட்டும் விதமாக இருந்தது. பேசுவதற்காக நான் கையில் குறிப்பெடுத்துச் சென்றேன். அந்தக் குறிப்பு இதுதான்:

தமிழ் மொழியில் இலக்கியம் என்பவை செய்யுள் இலக்கியமாகத்தான் இருந்தன. சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி கண்ணகி, கோவலன் கதை, ராமன் சீதை கதை எல்லாமே நமக்கு செய்யுளாகத்தான் கிடைத்தன. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான் எப்படி பேசிக் கொள்கிறோமோ அதே பாணியில் எழுதுவதும் இலக்கியம்தான் என்ற முடிவுக்கு வந்தோம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவலை எழுதினார். பிரதாப முதலியார் சரித்திரம் என்று அந்த நாவலுக்குப் பெயர். வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை தமிழின் முதல் சிறுகதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரோ அதற்கு சம காலத்திலோ ஆ.மாதவையா, மகாகவி பாரதி போன்றோர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்திருந்தாலும் வடிவம் கூடிவரப் பெற்றது குளத்தங்கரை அரசமரம்தான். இதை ஆமோதிக்கிறார் மணிக்கொடி எழுத்தாளர் சி.சு. செல்லப்பா.

நாம் இன்று எத்தனையோ நாவலாசிரியர்களையும் சிறுகதையாசிரியர்களையும் பெற்றிருக்கிறோம்.

மணிக்கொடி இதழ் நமக்கு அரிய சிறுகதையாசிரியர்களைத் தந்தது. புதுமைப்பித்தன், கு.பா.ரா., மௌனி, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., லா.ச.ரா., போன்ற பலர் அதில் இருந்து புறப்பட்டவர்கள்தான். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சுஜாதா, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற பல முக்கிய எழுத்தாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றனர்.

இவ்வளவு பேரும் எதற்காக எழுதினார்கள் என்பது எவ்வளவு நியாயமான கேள்வியாக இருந்தாலும் எத்தனையோ ஆயிரம் பேர் இவர்களை வாசித்தார்கள் என்பதே அதற்கு நியாயமான பதிலாக இருக்கிறது. படிக்கிற ஆர்வம் மிக இயல்பான மனப்போக்காக இருக்கிறது. இசை மீது ஆர்வம் கொள்கிறவர்களும் ஓவியத்தின் மீது ஆர்வம் கொள்வபவர்களும் போலவே எழுத்தின் மீது ஆர்வம் கொள்பவர்களும் உருவாகிறார்கள். ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளான ஆர்.கே. நாராயண் எழுத்தாளராகவும் ஆர்.கே. லஷ்மண் ஓவியராகவும் தீர்மானமானது அவர்களின் எத்தனையாவது பிராயத்தில்.. அதில் எந்த தருணத்தில் என்பது புதிர் நிறைந்த கேள்வியாகத்தான் இருக்கிறது.

நீங்கள் கதைகள் பற்றி தெரிந்து கொள்ள குழுமியிருப்பதும் அத்தகைய ஒரு புதிர்தான். நீங்கள் ஏன் ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேலையோ, கார் டீலராகவோ இல்லாமல் புத்தகம் படிப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள விரும்பியிருக்கிறீர்கள்?

சினிமா இசையில் உங்களுக்கு இளையராஜாவையோ, ரஹ்மானையோ பிடிக்கலாம். தேவாவையோ சங்கர் கணேஷையோ பிடிக்கும் என்று கூறுபவர்கள் குறைவு. நாம் பல தரப்பட்ட ரசனை கொண்டவர்களாக இருந்தாலும் தனித்தன்மை இல்லாதவர்களைப் பின் தொடர்வதில்லை.

பாடகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பெரும்பாலும் டி.எம்.எஸ்., பி.பி. சீனிவாசுலு, எஸ்.பி.பி., ஜேசுதாஸ் பெயரைச் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தனித்தன்மை இருந்தது. இவர்களைப் போல பாடுகிறவர்கள் சிலர் வந்தார்கள் அவர்கள் எடுபடாமல் போனார்கள். எந்தத் துறையிலும் தனித் தன்மை தேவை. பத்திரிகை ஓவியங்களை எடுத்துக் கொண்டால் சிலருக்கு ம.செ., சிலருக்கு மாருதி, சிலருக்கு ஜெயராஜ், சிலருக்கு கோபுலு சிலருக்கு அரஸ், சிலருக்கு ஷ்யாம்.. இப்படி ரசனை மாறுகிறது.
எழுத்துலகில் அது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சிலருக்கு கல்கி பிடிக்கும். சிலருக்கோ அவரை ப் பிடிக்கவே பிடிக்காது. சுந்தர ராமசாமிதான் சிறந்த எழுத்தாளர் என்பார்கள். சிலருக்கோ சுஜாதாதான் படிக்கப் பிடிக்கும். ஜெயமோகனைப் பிடிப்பவர்களுக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காமல் இருக்கும். ரசனை மாறுபாடு இருப்பது வாடிக்கை. எம்.ஜி.ஆருக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது போலவே சிவாஜிக்கு ஒரு ரசிகக் கூட்டம் இருந்தது அல்லவா?.

மொத்தத்தில் ரசனைகள் மாறுவது இயல்பு. ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமானால் உலகில் ஒரே ஒரு நடிகரும் ஒரே ஒரு நூலும் ஒரே ஒரு இசைக் கலைஞருமாகத்தான் இருக்க முடியும். அது சாத்தியமில்லை; அது சரியுமில்லை.

கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் அதிசய பொக்கிஷமாக கலைகள் இருக்கின்றன. மனிதனின் அரிய கண்டுபிடிப்பாக கலை இருக்கிறது. குகையில் வாழ்ந்த நாளில் சுவரில் கிறுக்கிய நாளில் உருவான படைப்பாற்றல். விலங்குகளிடமிருந்து மனிதனைப் பிரித்தது அவனுடைய உழைப்பும் கலையும். மனிதன் வேட்டையாட ஆரம்பித்தான். அதற்கான கருவிகள் கண்டுபிடித்தான். அதோடு நிற்கவில்லை. அதை சுவையாக சமைக்கவும் கற்றான். புலியும் வேட்டையாடுகிறது. அது ஒரு போதும் மானை வேட்டையாடி மான் பிரியாணி செய்யப் போவதில்லை. மனிதனின் உழைப்பும் கலையும் ஒன்றாக வளர்ந்தவை.

படைப்பிலக்கியத்தில் இத்தனை வகைகள் இருக்கின்றன. அல்லது இத்தனைவிதமாக எழுதுகிறார்கள் நான் யாரைப் பின்பற்றுவது, யாரைப்படிப்பது என்ற கேள்வி எழலாம். எப்படி டி.எம்.எஸ்.ஸýக்கோ, சிவாஜிக்கோ, ரஹ்மானுக்கோ ரசிகர் ஆனீர்களோ அதுபோலத்தான் இதுவும். உங்கள் மன இயல்புக்கும் உங்கள் அனுபவத்துக்கும் உங்கள் சுபாவத்துக்கும் நெருக்கமான படைப்புகள் உங்களைத் தொடும். அப்போதுதான் அதை உங்களுக்கான இலக்கியமாக ஏற்றுக் கொள்கிறீர்கள். அட, நாம் நினைத்தது போலவே இருக்கிறதே என்றோ, இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பட்ட அனுபவம்போலவே இருக்கிறது என்றோ, இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றோ ஒரு இலக்கியத்தைப் படிக்கும்போது நாம் நினைக்கிறோம்.
எந்த நூலைப் பற்றியும் உங்கள் அபிப்ராயம் மாறுபடலாம். அதற்கு உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்த அபிப்ராயம் உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். இன்னொருத்தரின் அபிப்ராயத்தை பிரதிபலிக்காதீர்கள்.

மணிக்கொடி காலத்தில் தழைக்கத் தொடங்கிய சிறுகதை உலகம் தமிழில் தானே ஒரு தடத்தைப் போட்டு அதில் முன்னேறத் தொடங்கியது. மனிதர்களின் அவலங்களை, சந்தோஷங்களை, இயலாமையை, முயற்சியை அவை சொல்ல ஆரம்பித்தன. புதுமைப்பித்தனின் கிண்டல் தொனிக்கும் நடை, கு. அழகிரிசாமியின் கரிசனமான நடை, கு.பா.ரா.வின் மனித சபலங்களைச் சொல்லும் உளவியல் நடை என வாசகர்களின் பல்வேறு மனநிலைகள் அலசப்பட்டன. ந.பிச்சமூர்த்தி, மெüனி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜானகிராமன் என வாசகர்களைச் சுழற்றிப் போட்ட எழுத்தாளர்கள் வரிசையாக உருவாகினர். தமிழ் சிறுகதை உலகின் பொற்காலம் அது.

பெரும்பாலும் கல்கி, நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோரின் கதைகளில் வரும் லட்சிய நாயகர்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. பலருடைய வீட்டில் கதாபாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த லட்சியக் கதைகள் எதார்த்தமான உலகத்தைப் படைப்பதில் தவறு செய்தது. அது உருவாக்கப்பட்ட புதிய சூழ்நிலையில் புதிய லட்சியத்தோடு செயல்படுபவர்களைக் காட்டியது. சுதந்திரம் வாங்கிய கையோடு அதற்கு காந்திய சமூக சீர்திருந்த தேவையிருந்தது. அவர்கள் உண்மை பேசினார்கள். தியாகம் செய்தார்கள். குற்ற உணர்வு கொண்டு வருந்தினார்கள். அவையெல்லாம் மிகையாக இருந்தன. தேசியம் பேசிய இவர்களுக்குப் போட்டியாக தமிழ் தேசியம் பேசிய அல்லது திராவிடம் பேசிய சிறுகதைகள் உருவாகின. அண்ணா, கருணாநிதி, எஸ்.எஸ். தென்னரசு, டி.கே. சீனிவாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, முரசொலி மாறன் போன்ற பலர் அவற்றைச் செய்தனர். தமிழ் தேசிய லட்சிய வாதம், பகுத்தறிவு வாதம், மிராசுதார் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு போன்றவை இக் கதைகளின் அடி நாதமாக இருந்தன. இன்னொரு பக்கம் டி.செல்வராஜ், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்ப பாரதி, ஜெயகாந்தன், பொன்னீலன் போன்றவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை வலியுறுத்தும் கதைகளோடு வந்தனர். இவர்களில் ஜெயகாந்தன் தன் தனித்துவமான கருத்துப் போக்கினால் அவர்களில் இருந்து விலகியே இருந்தார். அவருடைய கதைகள் அடித்தட்டு மக்கள் பிரச்சினையை பேசுவதில் தொடங்கி, மேல்தட்டு மக்களின் பிரச்சினைக்குக் கைமாறியது. பாரிஸýக்குப் போ, பிரம்மோபதேசம், சிலநேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள், ஜெயஜெய சங்கர என்று திசைமாறலின் உச்சத்துக்குப் போனார்.

இந்த சமயத்தில்தான் சுஜாதாவின் வருகை. ஏறத்தாழ இந்தக் காலத்தில்தான் நான் படிக்க ஆரம்பித்தேன். மேற் சொன்ன எல்லோரையும்விட அடுத்து வந்த இவரின் ஆதிக்கம் எனக்குள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ அவருடைய எல்லா நூலையும் நான் வாசித்தேன். விஞ்ஞானம், புதுமை, எள்ளல், துறுதுறுப்பு, சுறுசுறுப்பு எல்லாம் இருந்தது இவருடைய கதைகளில். அவரை ஒரு சங்குக்குள் அடக்கமுடியவில்லை. புலனாய்வு கதைகள் எழுதுவார், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று காதல் கதைக்குத் தாவுவார், தலைமைச் செயலகம் என மூளை இயக்கம் பற்றி எழுதுவார், ஆழ்வார் பாசுரம் பற்றி எழுதுவார், சினிமா விமர்சனம் எழுதுவார், விஞ்ஞான கதைகள் எழுதுவார், வரலாற்றுக் கதை எழுதுவார்... மருத்துவம், காபி கொட்டை, சினிமா, இசைக் கச்சேரி, கவிதை எல்லாவற்றையும் எழுதினார். சுமார் 40 ஆண்டுகாலம் தமிழில் அவருடைய ஆட்சி நடைபெற்றது. இப்போதும் அவருடைய பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத எழுத்தாளர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நிறைய வெளிநாட்டு நடப்புகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர், தமிழில் புதிதாக} தரமாக எழுதுபவர்களை இனம் கண்டு அறிவித்தவர் அவர்.
பிறகு தலித் இலக்கியம் என்ற பிரிவில் பாமா, சிவகாமி, ஆதவன் தீட்சன்யா போன்ற பலரது கதைகள் தமிழில் புதிய பாட்டையை ஏற்படுத்தின.

சுந்தரராமசாமியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன், சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், யூமா.வாசுகி, பாவண்ணன், பெருமாள்முருகன், எஸ்.சங்கரநாராயணன் போன்ற பலர் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் யாரையும் நீங்கள் படிக்கலாம். யாரைப் பற்றியும் அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். முன்னரே சொன்னது போல அது உங்கள் சொந்த அபிப்ராயமாக இருக்க வேண்டும். ஒருவர் ஆதரிக்கிறார் என்பதற்காக யாரையும் நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கக் கூடாது.

எல்லோரையும் படியுங்கள். அது ஒரு பரவசமான அனுபவம். நீங்கள் கவனித்த அல்லது கவனிக்கத் தவறிய தருணங்களைப் படைப்பிலக்கியங்கள் உங்களுக்கு ஓர் உயரிய தரிசனத்தோடு தட்டில் வைத்துத் தருகிறது.

படைப்பிலக்கியங்கள் ஒரு காலத்தின் கண்ணாடியாக இருக்கின்றன. அ. மாதவய்யாவின் குசிகர் குட்டிக் கதைகளையோ, புதுமைப்பித்தனையோ படிக்கும்போது நாம் அந்தக் காலத்தைத் தரிசிக்கிறோம். அப்போதைய சமூகச் சூழல், சமூகப் பழக்க வழக்கம், பேச்சுமுறை எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அவை சரித்திர சம்பவங்கள் இல்லை. புனைவுகள்.

சமஸ்கிருதம் கலந்த தமிழ் நடை அப்போதைய வழக்கமாக இருந்தது. முதல் சிறுகதையான குளத்தங்கரை அரசமரமாகட்டும் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரமாகட்டும் அதில் மணிப்பரவாளம் இருந்தது. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் தமிழின் போக்கை மாற்றின. பாரதிதாசன் தனித்தமிழில் கவிதை எழுதும் மரபை உருவாக்கினார்.
எதற்காக மனிதன் எழுதவும் படிக்கவும் ஆரம்பித்தான் என்று சிந்திக்கலாம்?

மனிதன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தோடுதான் குகைச் சுவற்றில் கிறுக்க ஆரம்பித்தான். விதம் விதமாக ஒலி எழுப்ப ஆரம்பித்தான். அவனுடைய கிறுக்கல்தான் இப்போது படைப்பிலக்கியமாகவும் ஓவியமாகவும் மாறியிருக்கிறது. விதம்விதமான ஒலிகளின் உருமாற்றம்தான் இன்றைக்கு இசையாகியிருக்கிறது. அனைத்துக்கும் மூல நாயகன் குகைச் சுவற்றில் முதன் முதலில் கிறுக்கிய அந்த மேதைதான்.

நெருப்பை உருவாக்கியவன் விஞ்ஞானியாகவும் குகையில் கிறுக்கியவன் கலைஞனாகவும் வளர்ந்தான்.

தான் அறிந்ததை, உணர்ந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனிதன் நினைத்தான். கூவி கத்தி அழைத்து தகவல்களைச் சொன்னான். புகையை உருவாக்கித் தகவல்களைச் சொன்னான். அது நிரந்தரமாகவும் இன்னும் நீண்ட தூரத்துக்குச் செல்லவும் முடியாததை உணர்ந்து ஓலை அனுப்ப ஆரம்பித்தான். கடிதம் முதல் படைப்பிலக்கியம். கடித இலக்கியம் என்று கி.ராஜநாராயணன், டி.கே.சி. போன்றவர்களின் எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களையும் கலைஞர் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதங்களையும் இங்கே கவனிக்கலாம். கடிதங்கள் ஆச்சர்யங்களை, சோகங்களை, சந்தோஷங்களைச் சுமந்துவருபவை. என்னுடைய இளம் பிராயத்தில் வீட்டுக்குக் கடிதம் வந்தால் அதை யார் முதலில் ஓடிச் சென்று வாங்குவது என்பதில் தொடங்கி அதை யார் முதலில் படிப்பது என்பதவரை ஏகப் போட்டியிருக்கும். கடிதங்கள் சுவாரஸ்யமான தகவல்களைத் தாங்கி வருவதாக மனதில் பதிந்திருந்தது. இப்போது அது எஸ்.எம்.எஸ். ஆக சுருங்கிப் போய்விட்டது. இருந்தாலும் கடிதங்கள்தான் சிறுகதைகளின் ஆரம்பம். அதில்தான் மிகச் சில சம்பவங்களையும் சொன்னார்கள். ஒரு நபருக்கு இன்னொரு நபர் தெரிவிக்கும் செய்தி கடிதம். காலப்போக்கில் ஒரு செய்தியைப் பலருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அவையே இலக்கியமாகின. ஹோமர் இலியட் எழுதினார். வியாசர் பாரதம் எழுதினார். மு.மேத்தா கண்ணீர் பூக்கள் எழுதினார். நாஞ்சில் நாடன் எட்டுத் திக்கும் மதயானை எழுதினார். ஒவியங்கள் டாவின்ஸியாகவும் டாலியாகவும் வான்காவாகவும் பரிணமித்தன.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆரம்பத்தில் 25 பக்கங்களுக்கு இருக்க வேண்டும் என்றார்கள். பத்து பக்கமாகவும் ஐந்து பக்கமாகவும் சிறுகதை சுருங்கிவிட்டது. கதாபாத்திரங்களும் சம்பவமும் படிப்பவர் மனதில் இடம்பிடிக்க தோராயமாக சுமார் 5 பக்கத்திலிருந்து பத்து பக்க விவரணை வரை தேவைப்படுகிறது. ஒரு பக்கக் கதை, இரண்டு பக்கக் கதை என்பவை திடுக்கிட வைக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே முன் வைக்கின்றன. அதற்கு நம்மை பழகிக் கொள்வது பிற தரமான கதைகளைப் படிப்பதற்குத் தடையாக மாறிவிடும் அபாயம் உண்டு.
இறுதியாக... படித்தால் மூளை குழம்பிவிடும் என்ற கருத்து தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமே உண்டு. இறைநூல்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கருதி பல நூலகங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம். புத்தகங்களுக்கும் மத அமைப்புகளுக்கும் பல வேளைகளில் ஏழாம் பொருத்தம்தான்.

ஆனால் மக்களுக்கு ஒரு பைபிளோ, ஒரு குரானோ, வேதங்களோ மட்டும் போதுமானதாக இல்லை. ஒரு நம்பிக்கை சார்ந்து அவற்றைப் பாதுகாப்பதோடு சமூக வளர்ச்சியைப் பின்தொடர, தொடர்ந்து பல அறிவுச் செல்வங்களைத் தேட வேண்டியிருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சியைவிட அறிவைத் தேடுவதற்கு புத்தகங்கள்தான் இன்றும் முன்னணியில் இருக்கின்றன.

ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மொழிகள் இப்போது உலகில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்துவடிவம் கிடையாது. பல மொழிகளைப் பேசுவதற்கு ஆட்கள் கிடையாது. அதாவது அந்த மொழி பேசுகிறவர்கள் சிதறி வாழ்வதனாலோ, ஆட்சிமொழியாக வேறொரு மொழி அமைந்திருப்பதனாலோ வேறு மொழியைத் தொடர்ந்து பேச வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏசு பேசிய மொழியோ, புத்தர் பேசிய மொழியோ, சாக்ரடீஸ் பேசிய மொழியோ இன்று உலகில் இல்லை. ஆனால் வள்ளுவன் பேசிய மொழி இப்போதும் இருக்கிறது. அதுதான் பெருமை. அதனால் ஒரு நூலை தமிழில் எழுத வேண்டியதும் தமிழில் படித்திட வேண்டியதும் முக்கியம் என்பதை உணர வேண்டும். தமிழும் வேறு மொழியும் தெரிந்தவர்கள் தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கிற கடமையைச் செய்ய வேண்டும்.1 comment:

மதுரை சரவணன் said...

//தமிழும் வேறு மொழியும் தெரிந்தவர்கள் தமிழிலிருந்து வேறு மொழிக்கும் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கிற கடமையைச் செய்ய வேண்டும்.//

அருமை. வாழ்த்துக்கள்

Post a Comment