Wednesday, August 12, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் சிறப்பு குறும்பட வட்டம் - சிவகாசி


நாள்: சனிக்கிழமை (15-08-09)
இடம் : ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

சிறப்பு விருந்தினர்:

எழுத்தாளர் திரு. முருகேசப் பாண்டியன், என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.

திரையிடப்படும் குறும்படங்கள்:

நானும் என் விக்கியும்
குண்டன்
கோத்தி
மேலும் சில உலகப் புகழ் பெற்ற குறும்படங்களும் திரையிடப்படும்.

திரையிடப்படும் உலகப்படம்.

ரஷோமான்

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


Monday, August 10, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.

கடந்த சனிக்கிழமை (08-08-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. விழா வழக்கம் போல் காலை பத்து மணிக்கே தொடங்கியது. இந்த மாதம் அரங்க நிர்வாகிகள் செய்த ஒரு சில தவறினால் காலை நிகழ்வில் உலகத் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

பிறகு ஒருவாறு நண்பகல் ஒரு மணியளவில் சரி செய்யப்பட்டு இருந்த குறுகிய இடைவெளியில்இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய, "தக்கையின் மீது நான்கு கண்கள்" குறும்படம் திரையிடப்பட்டது. இது ச. கந்தசாமி அவர்களின் சிறுகதையிலிருந்து உருவாக்கப்பட்ட குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் குறும்பட வட்டம் வழக்கம் போல் சரியாக மூன்று மணியளவில் தொடங்கக்கபட்டது. இந்த மாதம் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

முதல் பகுதி:

இலக்கியம் பகுதி நடைபெறாது என்று சென்ற மாதம் அறிவித்த போதிலும் பெரும்பாலான ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாதமும் இலக்கியம் பகுதி நடைபெற்றது. இதில்பேராசிரியர் திரு. பெரியார்தாசன் அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பொதுவாக இலக்கியம், திரைப்படங்கள் என தனது பேச்சை தொடங்கினார்.

அதில் இருந்து சில துளிகள்:

அது பச்சையப்பாக் கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். கேள்வி இதுதான். அசோக வனத்தில் சீதா நிலையை விளக்குக? (கேள்வி சரியாக நினைவில் இல்லை. தவறு இருப்பின் வாசகர்கள் மன்னிக்கவும்) இதற்கு அனைவரும் அமைதியாக தேர்வு எழுதிக் கொண்டிக்க ஒரு மாணவன் மட்டுமே அமைதியாக இருந்தான். நான் இருமுறை சென்று அவனிடம் எழுது தம்பி என்று கூறிவிட்டு

வந்தேன். அவன் அப்போதும் அமைதியாக இருந்தான். மூன்றாவது முறை நான் சென்று அவன் தாளை வாங்கிப் பார்த்தேன். அதில் எழுதி இருந்தான். வனத்தில் அனைத்து மலர்களும் சிரித்துக் கொண்டிருந்தன. ஒரு மலரை தவிர. என்று. அந்த மலர் சீதா. இதை எழுதியது இன்றையக் கவிப் பேரரசு வைரமுத்து. என்று முடித்தபோது அரங்கில் கரவொலி எழுந்தது.

அந்தக் காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே நல்ல கவிஞனாக வந்தான். ஆனால் இன்று தடுக்கி விழுபவன் எல்லோருமே கவிஞனாக இருக்கிறான் என்று பெருமைப் பொங்க சொன்னார்.

சேசாச்சலம் என்கிற தன்னுடைய இயற்பெயர் எப்படி பெரியார்தாசன் என்று மாறியது என்பதையும் சுவைபடக் கூறினார். மேலும் இந்தக் காலத்தில் ஒருத் துறையில் வளர்ந்த ஒருவன் மற்ற யாரையும் அந்த துறையில் வளர விடுவது இல்லை என்று வருத்தப்பட்டார். மேலும் பல உண்மைகளையும் போட்டு உடைத்தார். அது சார்ந்த நம் பலரும் இணையதளத்தை படிப்பதால் அதனைத் தவிர்த்து விடுவோம்.

தொடர்ந்து நகைச்சுவைத் தெறிக்க பேசிய பெரியார்தாசன் அவர்கள் அரங்கில் இருந்த அனைவரையும் மெய்மறக்க செய்தார். முடிவில் தன்னிலை மறந்து ஒரு சிலர் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. அரங்கில் இருந்த ஒருவர் சிரித்து சிரித்து, இறுதியில் சிரிக்க முடியாமல் அழுதே விட்டார்.

பின்னர் இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கப்பட்டது. இந்த மாதம் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை கோவையை சேர்ந்த உளவியல் பேராசிரியர் திரு. செல்வராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். தன்னுடைய வலைப்பதிவில் பல்வேறு விடயங்கள் குறித்து எழுதும் இவர் உளவியல் குறித்து எழுதிய ஒரு சிலக் கட்டுரைகள், மற்றும் புரட்சியாளர்கள் புத்தக அறிமுகம் யாவும்

படிக்க படிக்க திகட்டாதவை. விருதைப் பெற்றுக் கொண்ட செல்வராஜ் அவர்கள் சில நிமிடங்கள் தன்னுடைய வலைப்பதிவு குறித்தும், கட்டுரைகள் குறித்தும் பேசி சென்றார். இவர் வலைப்பூ முகவரி: gestaltselvaraj.blogspot.com/

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதிக்கு சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறை பேராசிரியர் திரு. அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நடிப்பு துறையில் பல நுணுக்கங்கள் பற்றி ஆர்வலர்களுக்கு விரிவாக சொல்லிக் கொடுத்தார். மேலும் திரைப்படங்களில் நடிப்பது குறித்தும், நடிகர்கள் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

அதில் இருந்து சில துளிகள்:

நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது.

வீதி நாடகம், மேடை நாடகம், தெருக்கூத்து என்று பல இருந்தது. இன்றும் அதன் நவீன வடிவமான சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என்று பலவித நடிப்புகள் வந்து விட்டன.

ஒவ்வொரு ஊடக நடிப்பும் வெவ்வோறு வகையில் வேறுபடும். உதாரணமாக மேடை நாடகத்தில் முதல் சில வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு நடிகரின் நடிப்பு சரியாக சென்றடையும். ஆனால் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவன் அதனை வேறுவிதமாக புரிந்துக் கொள்வான். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்பதை மேடையில் வசனமாக சொல்லும்போது முன் வரிசை ஆர்வலர்கள் சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். ஆனால் கடைசி வரிசை ரசிகனையும் சென்றடைய நடிப்பை வேறு விதமாக பயன்படுத்த வேண்டும். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று குரலை உயர்த்தி, உடல் மொழியால் நடித்துக் காட்ட வேண்டும்.

இந்தக் காலத்தில் ஒரு படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த நடிகர்தான் மனதில் நிற்பாறேத் தவிர, அந்தக் கதாப்பாத்திரம் நம் மனதில் நிற்காது. ஆனால் அதில் யார் நடிக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அது எண்ணக் கதாப்பாத்திரம் என்பதுதான் நம் மனதில் பதிய வேண்டும். அதனை யார் பதிய வைக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த நடிகர்கள். என்று நடிப்பு பற்றி தனது சுவையான பேச்சைத் தொடர்ந்தார்.

மேலும், சிவாஜி கணேசன் மிக சிறந்த நடிகர்தான். அவர் செய்வது ஓவர் ஆக்ட் என்று யாராவது சொன்னால் அது பொய். ஒரு நடிகனிடமிருந்து போதுமான நடிப்பை வாங்க வேண்டியது ஒரு இயக்குனரின் பொறுப்பே தவிர இவ்வளவுதான் நடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது ஒரு நடிகனின் வேலையல்ல. என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.

நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது.

நடிப்பு பற்றி ஒரு பயிற்சி வகுப்பையே நடத்திய அவர் இறுதியாக சில காட்சிகளை நடித்தும் காட்டினார். அதிலும் தன தாய் இறந்துக் கிடப்பதைக் கவனிக்காத ஒரு மகன் பின்னர் அதனைக் கவனிக்குபோது அவனுக்குள் ஏற்படும் உணர்வுகளை மிக தத்ரூபமாக நடித்துக் காட்டினார். மேடையில் அவர் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் அழ, அரங்கில் அமர்ந்திருந்த சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்களில் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு சிலர் எழுந்து சென்று வெளியில் அழுதே விட்டனர்.

பின்னர் வாசகர்கள் கேள்விகள் கேட்க அதற்கு அருணாச்சலம் விடையளித்தார். தொடர்ந்து பத்து மாதங்களாக நடைபெற்ற குறும்பட வட்டங்களில் ஆர்வலர்களை கேள்விகள் கேட்க சொன்னால், உங்கள் முதல் படம் எது? நீங்கள் ஏன் இந்து துறைக்கு வந்தீர்கள் என ஒரு நடிகையை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி எடுப்பது போல் கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து பத்து மாதங்களாக, தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளைக் கேளுங்கள், உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் உதவும் வகையில் கேள்விகளைக் கேளுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம். அதன் பலனை இந்த மாதம் அனுபவித்தோம். கேள்வி கேட்ட அனைவரும் கண்களில் ஒத்திக் கொள்வதுப் போல் கேள்விகள் கேட்டனர். மிக சிறந்த விவாத மேடையாக இந்த மாதம் அமைந்தது. நாங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சியை பல இடையூறுகளுக்கிடையில் நடத்துகிறோமோ, அதன் பலனை அனுபவித்தது போல் இருந்தது.

மூன்றாம் பகுதி

இந்த மாதம் குறும்படத் திரையிடல் பகுதிக்கு திரைப்படக் கல்லூரியில் இயக்கத் துறை தலைவராக இருக்கும் திரு. ரவிராஜ்அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நான் விளம்பர இயக்கம் பிரிவில் பட்டயப் படிப்பு படிக்கும்போது எனக்கு பேராசிரியராக இருந்தவர் திரு. ரவிராஜ் அவர்கள். எனவே அவர்கள் இந்த மாதம் எங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்த மாதம் திரையிடல் பகுதியில் முதலாவதாக திரு. ராஜ்குமார் இயக்கிய "எனது நூலகத்தின் கதை" குறும்படமும் அடுத்ததாக திரு. ஸ்ரீராம் இயக்கிய "அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில்" குறும்படமும், மூன்றாவதாக திரு. சி.ஜெ. முத்துக்குமார் இயக்கிய "கோத்தி" குறும்படமும் திரையிடப்பட்டது.

இதில் எனது நூலகத்தின் கதை குறும்படம் நூல்கள் மேல் காதலாக இருக்கும் ஒருவனது உணர்வுகளை கவிதைகளாக படம் பிடித்திருக்கும் படம். அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் குறும்படம், நடத்திக் கேட்ட மனைவிக்கு கிடைக்கும் தண்டனையை கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்லி இருக்கும் படம். கோத்தி குறும்படம் அரவாணிகளின் துயரங்களை பதிவு செய்திருக்கும் படம்.

மூன்று படங்களின் நிறை குறைகள் பற்றி அதன் இயக்குனர்களுக்கு சுட்டிக்காட்டிய திரு. ரவிராஜ் அவர்கள், ஆர்வலர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மூன்றுக் குறும்பட இயக்குனர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்த மாதம் பேராசிரியர்கள் மாதமாகவே அமைந்து விட்டது. மூன்று சிறப்பு விருந்தினர்கள், சிறந்த வலைப்பதிவர் பெற்ற திரு. செல்வராஜ் என அனைவரும் பேராசிரியர்களாகவே இந்த மாதம் அமைந்து விட்டனர்.

தொடர்ந்து பதினோரு மாதங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்ற குறும்பட வட்டம் அடுத்த மாதம் முறையாக தொடங்கப்படும். அதற்கான விழா அடுத்த மாதம் செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி காலையில் நடைபெறும். மாலை மூன்று மணியளவில் வழக்கம்போல் குறும்பட வட்டம் நடைபெறும்.

விருதுடன் ஸ்ரீராம்


விருதுடன் முத்துக்குமார்


Tuesday, August 4, 2009

CITIZEN KANE

உலகப்படங்கள் -CITIZEN KANE - ஓவியர் ஜீவா


"The motion- picture medium has an extraordinary range of expression. It has in common with the plastic arts the fact that it is a visual composition projected on a two- dimensional surface; with dance, that it can deal in the arrangement of movement; With theatre, it can create a dramatic intensity of events; With music, that it can compose in the rhythms and phrases of time and can be attended by song and instrument; With poetry that it can juxtapose images; With literature generally, that it can encompass in its sound track the abstractions available only to language."
- MAYA DERAN

இயக்குனர்களை நடிகர்களாகவும் பார்க்கும் வாய்ப்பு நமக்கு நிறைய கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஹிட்ச்காக் தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரே ஒரு ஷாட்டில் தோன்றுவதை உத்தியாக கொண்டிருந்தார். ஒரு படத்தில் அவரை ரசிகர்கள் தேடிக்கொண்டேயிருந்தனர். ஒரு காட்சியில் ஒரு கசங்கிய காதிதத்தை காமிரா உற்று நோக்க, காணவில்லை விளம்பரத்தில் காட்சியளியப்பார் ஹிட்ச்காக். மேலைநாடுகளில் புகழ் பெற்ற நடிகர்கள் இயக்குனர்களாவதும், இயக்குனர்கள் நடிகர்களாவதும் சகஜமான நிகழ்வுகள். ஆர்சன் வெல்ஸ், ஜான் ஹஸ்டன், சார்லி சாப்ளின் போன்றவர்கள் தாங்களே இயக்கி நடித்தவர்கள். புரூஸ் லீ, ட்ரூபோ, ஜாக்கி சான், சிட்னி

லூமட், மார்ட்டின் ஸ்கார்சீஸ் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம். ஹாலிவுட் நடிகர்களில் நிறைய பேர் ஒரே ஒரு திரைப்படத்தையாவது இயக்குவதில் ஆர்வம் காட்டுவதுண்டு.

நமது நாட்டை பொருத்தவரை நிறைய இயக்குனர்கள் தங்கள் ஆரம்ப கால படங்களிலேயே நடிகர்களாகவும் அறிமுகமாகியுள்ளனர். ராஜ்கபூர், குருதத், ஹிமான்சு ராய், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், இவ்வகையினர். சில இயக்குனர்கள் காலத்தின் கட்டாயத்தில் அரிதாரம் பூசியதுண்டு. சாந்தாராம், கே.விஸ்வநாத், பாரதிராஜா, கிரீஷ் கர்நாடு போன்றவர்கள் இப்படி காமிராவுக்கு முன் வந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்களை” “சொல்ல மறந்த கதை” என்ற பெயரில் தங்கர் பச்சான் இயக்க முனைந்த போது, கதாநாயகனாக நடிக்கப்போது யார் என்று வினவினோம். இயக்குனர் சேரன் என்றார்.

ஆச்சரியப்பட்டோம். பின்னர் சேரன் “ஆட்டோகிராப்” போன்ற படங்களை இயக்கி நடித்து, பெரும் வெற்றியை பெற்று விட்டார். இனி அவர் வேறு நடிகர்களை வைத்து படங்களை இயக்குவாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி நம் முன் நிற்கிறது. இப்போது முழுநேர நடிகர்களாகவே மாறிப்போன சில இயக்குனர்கள் கோமாளிகளாகவும், வில்லன்களாகவும் தோன்றி திரைகளை நிரப்பி விடுகின்றனர். மணிவண்ணன், ஆர். சுந்தர்ராஜன், அனுமோகன், ராஜ்கபூர், மலையாள லால், கே. வாசு, சந்தானபாரதி, ஜி.எம்.குமார், மனோபாலா… முழுக்க இயக்குனர்களே நடித்து சமீபத்தில் வந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்'.

அடேயப்பா, இவர்கள் ஒரு காலத்தில் வெற்றிப்பட இயக்குனர்கள் என்பதை இவர்களே மறந்திருக்கக்கூடும். நடிகர்களாக இருந்தும் திரைப்படங்களை இயக்கும் வேட்கை கொண்டவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர்கள். திரைப்படத்தின் தலைமைசிற்பி இயக்குனர்தான் என்று உணர்ந்தவர்கள். எம்.ஜி.இராமச்சந்திரன், தேவ் ஆனந்த், அமோல் பாலேகர், ராகுல் ராய், ஸ்ரீநிவாசன், கமல்ஹாசன், நாசர், ரேவதி, ஆமிர்கான்… இவர்களையெல்லாம் தூண்டியது இயக்குனர் என்ற மந்திரச்சொல்தான்.

ஒவ்வோரு இயக்குனரின் முதல் திரைப்படம்தான் அவரது சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. பிறகு வருவதெல்லாம் புகழ்போதையின் மிச்சங்கள் அல்லது அன்றாடக் கடமை என்று ஆவதுண்டு. சில விதிவிலக்குகள் எதற்கும் உண்டு. உலக திரைப்பட வரலாற்றில் மகத்தான முதல் அறிமுகப்படம் என்று பெயர் பெற்ற படைப்பு - “சிட்டிஸன் கேன்” சரியாக 63 வருடங்களுக்கு முன் “சிட்டிஸன் கேன்” வெளியானபோது, அதன் இயக்குனருக்கு வயது 26 தான் என்பதை நம்புவதே சிரமமாயிருக்கும்.

கதாநாயகனின் நீண்ட வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்துகிறது திரைப்படம். “ரோஸ்பட்”(ரோஜாமொட்டு) என்று தன் இறுதி வார்த்தையை உதிர்த்துவிட்டு உயிரை விடுகிறார் சார்லஸ் பாஸ்டர் கேன். இந்த இறுதி வார்த்தையின் அர்த்தம் தேடி ஒரு நிருபர், கதாநாயகனுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பேட்டி காண, பிளாஷ்பேக் வாயிலாக திரைக்கதை தொடர்கிறது. கேனுக்கு 8 வயதாகும்போது, போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அவனுடைய காப்பாளர் தாட்சர் ஒரு பந்தா பேர்வழி; அரசியல் பிரமுகரும் கூட. தன் இருபது வயதுகளில் கேன் ஒரு செய்தித்தாள் பதிப்பாளராக வாழ்க்கையை தொடங்குகிறார். தன் இரு சகாக்களுடன், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை காக்கவும், அதிகார பீடங்களின் ஊழல் திரையை கிழிக்கவும், தன்னை அர்ப்பணிக்கிறார். தன் பணியின் பொற்காலத்தில், அமெரிக்க அதிபன் உறவுக்காரப் பெண் எமிலி நார்ட்டனை மணம் புரிகிறார். காலம் மாற மாற, திருமண பந்தம் சுவாரசியம் இழந்து கசக்கிறது. நடுத்தர வயதில் கேன், சூசன் அலெக்சாண்டர் என்ற அழகான முட்டாள்த்தனமான, பாடகியாக விரும்பும் லட்சியம் கொண்ட பெண்ணை ஆசைநாயகியாக வரித்துக்கொள்கிறார்.

புகழின் வளர்ச்சி, கேனை நியூயார்க் கவர்னர் தேர்தலுக்கு போட்டியிடத்தூண்டுகிறது. போட்டி வேட்பாளர், கேனின் திருமணத் தோல்வி மற்றும் கள்ள உறவு விஷயங்களை பகிரங்கப்படுத்தாமல் இருக்க போட்டியில் இருந்து விலகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்துகிறான். தன் புகழ், திருமண வாழ்க்கை, மனைவி, மகன் உறவு அனைத்தும் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் சவாலை

எதிர்கொள்கிறார். தேர்தல் தோல்வியின் பலனாக, நண்பன் லேலண்டின் மரியாதையை இழக்கிறார். மணமுறிவு பெற்று, மனைவியோ மகனுடன் பிரிந்து செல்கிறாள்.

சூசன் புது மனைவியாகிறாள். திறமையற்ற அவளை ஒரு ஆபெரா பாடகியாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார் கேன். பாவம் இசையாசிரியர். படாத பாடு பட்டும் பலனில்லை. அவளுக்கும் விருப்பம் குறைந்துவிட, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அபிப்ராயமும் அவளுக்கு எதிராக திரும்ப, தற்கொலைப் பாதையின் நுனிக்கு சென்றுவிடுகிறாள் சூசன். கேன் தன் முயற்சிகளை கைவிட வேண்டி வருகிறது. மாறாக, ஜானாடு என்ற தனிமையான அரண்மனையை உருவாக்குகிறார். அங்கு சூசனுடன் தனிமைச்சூழலில் வாழ்வைத் தொடருகிறார். வருடங்கள் கடந்து, சோர்வுரும் சூசன் பொங்கியெழுந்து வெளியேறுகிறாள். தனிமை வாட்ட, புண்பட்டுக்கிடக்கும் முதியவர் கேன், ஜானாடுவின் வெற்றுப் பிரம்மாண்டத்தின் நடுவே இறந்து போகிறார். “ரோஜா மொட்டு” என்ற வார்த்தை கதை சொல்வதற்க்கான ஒரு உத்தி மட்டுமே என்பதுதான் இத்திரைப்படத்தின் சிறப்பு.

உலகத்தின் தலைசிறந்த படங்களில் அதுவும் ஒன்று என்று எப்படி பெயர் பெற்றது? பொதுவாக இந்தத்தொடரில் இடம் பெறும் திரைப்பட வரிசை, எங்கும் காணக்கிடைக்காத ஈரான், ஆப்ரிக்க, ஆப்கானிய திரைப்படங்களின் தொகுப்பு அல்ல. குறுந்தகட்டில் சுலபமாக கிடைக்கப்பெரும் படங்களில் ஒன்றுதான் “சிட்டிஸன் கேன்” திரையில் காணும்போதுதன் இதன் மகத்துவம் புலப்படுகிறது. 21 வயதிலேயே “டைம்” இதழின் முகப்பில் இடம் பெற்ற ஆர்சன் வெல்ஸ் ஒரு பரபரப்பான ரேடியோ கலைஞர். பின்னர் பிராட்வே நாடக இயக்குனர். 26 வயதில் இத் திரைப்படம் வெளியானபோது அவரும் புதுமுகம், உடன் நடித்தவர்கள் அனைவருமே புதியவர்கள். ஒளிப்பதிவாளர் கிரெக் டோலண்ட் மட்டுமே அனுபவஸ்தர். ஆகவே இயக்குனரின் எண்ணம் முழுவதையுமே, அற்புதமாக அவரால் செலுலாய்டில் பதிவு செய்ய முடிந்தது. அப்போதைய சராசரி அமெரிக்க திரைப்படங்களை விட “கேன்” மிகவும் வித்தியாசப்பட்டிருந்தது. இத்தனைக்கும் இதில் பரிசோதிக்கப்பட்டிருந்த, ஆழ்ந்த போகஸ், இருளுடன் கூடிய ஒளியமைப்பு, செம்மையான பரப்புகள், வித்தியாசமான கட்டமைப்பு, பின்புலத்திற்கும் முன்புலத்திற்கும் இலக்கணம் மீறிய வித்தியாசங்கள், பின்புற பக்கவாட்டு ஒளியமைப்புகள், கேமிரா கோணத்திலும் தெரியக்கூடிய உட்கூறையமைப்புகள், சரிவான கோணங்கள், ஆழ்ந்த க்ளோஸ்-அப்கள் விரவி நிற்கும் காவிய நிகர் தூரக்காட்சிகள், வியக்க வைக்கும் க்ரேன் ஷாட்டுகள், எதுவும் திரைக்கு புதிதல்ல. ஆனால் இத்தனையையும் பயன்படுத்தி பல அடுக்குகள் கொண்ட கேக்கை அலங்கரிப்பதைப்போல் இத்திரைப்படத்தை உருவாக்கினர் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்.

ஒரு இறுதி வார்த்தையின் புதிரை விடுவிப்பது போல, மலர்ந்து விரியும் திரைக்கதை ஒரு ஜிக் ஜாக் புதிர் போல் கலைந்தும் இணைந்தும் வருவதும், கதாநாயகன் லட்சியவாதியாயிருந்து பின்னர் சுயநலமும் முதலாளித்துவமும் பிடிவாதமும் கொண்டவனாக மாறி வருவதையும் ஒளிப்பதிவின் துணை கொண்டு வெற்றிகரமாக காட்சிப் படிமங்களாக்கினார் வெலஸ். ஒரு புதிரின் சாயலை படம் நெடுக கொண்டு வருவதில் எடிட்டர் ராபர்ட் வைஸ் பெரும் பங்கு கொண்டார். பின்னர் பெரும்புகழ் பெற்ற “சவுண்ட் ஆப் மியூசிக்” போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனராக இவர் திகழ்ந்தார். மாண்டேஜ் காட்சிகளாகவே தம்பதியின் பிணக்கம் அதிகரிப்பதை சொன்ன முறை, ஒரு சோற்றுப் பதம். திரைக்கதை அமைப்பில் ஒரு நபரைப் பற்றி பல்வேறு கதாபாத்திரங்கள் சொல்வது போல் அமையும் காட்சிகளில், துல்லியமான மேதைத்தனம் மிளிரும்.

பின்னர் “சைக்கோ”, “வெர்டிகோ” போன்ற திரைப்படங்களின் இசையை அளித்த பெர்னார்ட் ஹெர்தனுக்கும் இது முதல் படம். வெல்ஸின் காட்சியமைப்புக்கு ஈடு கொடுத்தது பிண்னணி இசை. செட் அமைப்புகளும் மிகவும் அற்புதமாக அமைந்து போயின. ஜானாடுவின் பிரம்மாண்டமான உள் அமைப்புகளின் முன் கதாபாத்திரங்கள் குறுகிச் சிறுத்தும்,

அவர்களிடையே அமைக்கப்பட்ட இடைவெளிகளும் கதைமாந்தர்களின் மனவெளியை சித்தரித்தன. பெரும்பாலான காட்சிகள் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் உபயோகித்து இரு காட்சிகளின் கலவையாகவும், இருட்பகுதிகளை அதிகரித்தும், பார்வையாளனுக்கு பிரம்மாண்டத்தை அளித்தது.

இன்று நம் கண் முன்னே, நிறைய நடிகர்கள் எப்படி ஒப்பனையில் புதுமை புரிந்தார்கள், எப்படி கதாபாத்திரமாகவே மாறினார்கள் என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுப்பதை பார்க்கிறோம். ஆனால் 1941ல், 26 வயது ஆர்சன் வெல்ஸ், தானே இயக்கி, தானே நடித்த முதல் படத்திலேயே புரிந்த ஒப்பனைப் புரட்சியை பார்க்கவேண்டும். துள்ளலும் துடிப்புமான இளம் பதிப்பாளராகவும்,(கோட்டும் ஜாக்கட்டும் ஒரு சுமை போல அவிழ்த்தெறிந்து விட்டே நடப்பார், ஒடுவார்) பின்னர் வயது முதிர்ந்து, முகமெல்லாம் சுருக்கம் பாய்ந்து, தாடை வீங்கி, கண் இரப்பைகள் தொங்கி, மெதுநடை நடக்கும் கிழட்டு கோடீஸ்வரனாகவும் அவரைப் பார்க்கும்போது பிராட்வே சாயல் இல்லாத தூய சினிமா பாணி நடிப்பைக் காணலாம். பின்னர் “காட்பாதரில்” பிராண்டோவின் நடிப்பை காணும்போது வெல்ஸ் நினைவுக்கு வருவார் எனபதில் ஐயமில்லை. ஜோசப் காட்டன் போன்ற சக நடிகர்களும், நடிகைகளும் இது தங்கள் முதல் படம் என்ற சாயல் சிறிதும் தோன்றாமல் வெகு இயல்பான நடிப்பைத் தந்தார்கள்.

“சிட்டிஸன் கேன்” கதை, அப்போதைய பிரபல பத்திகை அதிபரான ஹார்ஸ்ட்டின் வாழ்க்கையைத் தழுவியது என்ற சர்ச்சை எழுந்தது.. நெகடிவை அழிக்க பெரும் பேரங்கள் நடத்தன. வெல்ஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், கட்டாய ராணுவப் பயிற்சியிலிருந்து நழுவிய கோழை என்றும் குற்றசாட்டுகள் எழுந்தன. திரையிட கடும் தடைகளை எதிரிகள் ஏற்படுத்தினர். ஒரு வழியாக திரைக்கு வந்தது. 1941ல் சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு “நியூ யார்க் திரைப்பட விமர்சகர் விருது” வழங்கப்பட்டது. 9 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், பரிசளிப்பு விழாவின்போது ஒவ்வொரு முறையும் “சிட்டிஸன் கேன்” பெயர் உச்சரிக்கப்பட்டபோது கேலிக்கூச்சல்கள் எழுந்தன. ஆஸ்கர் அரசியலில் திரைக்கதைக்கென்று ஒரே ஒரு விருதுதான் இதற்கு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் கேன் ஒரு தோல்விப் படம்தான்.

ஆனாலும் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குமிடையே நடைபெறும் அனைத்துலக திரைப்பட விமர்சகர் விருது ஒட்டெடுப்பில், உலகின் சிறந்த 10 படங்களில் முதல் இடத்தை இன்றும் பெற்று வருவது “சிட்டிசன் கேன்” தான். அதே போல் “திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த இயக்குனர்” ஒட்டெடுப்பில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் ஆர்சன் வெல்ஸ்தான்.

---------------------------------------------------------------------------------------------

Monday, August 3, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பதினோராவது குறும்பட வட்டம்.

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பதினோராவது குறும்பட வட்டம்.

நாள்: சனிக்கிழமை (08-08-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல் இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் "பாட்டில் ஷிப் ஆப் பொட்டம்கின்" (Battleship of Potomkin)" திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம் - வட்டார வழக்கு

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் பேராசிரியர் திரு. பெரியார்தாசன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். இலக்கியம் பற்றியும் வட்டார வழக்கு பற்றியும் மிக விரிவாக பேச உள்ளார்.

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சென்னைத் திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறைபேராசிரியர் திரு. அருணாச்சலம் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். நடிப்பு பற்றிய நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் நடிப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரையிடப்படும் குறும்படங்கள்:

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
எனது நூலகத்தின் கதைராஜ்குமார்29 நிமிடங்கள்
அதிர்ஷ்டம் 5 கி. மீ. ல்ஸ்ரீராம்12 நிமி.
கோத்திசி.ஜெ. முத்துக்குமார்30 நிமி.

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: இந்தப் பகுதிக்கு இந்த மாதம் சென்னைத் திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் இயக்கத் துறை தலைவராக இருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்துள்ள அனுபவமும் பெற்றவர்.

மடல் போட்டி:

மடல்கள் பெருமளவில் வராத காரணத்தினால் இந்த மாதம் சிறந்த மடலுக்கான பரிசு வழங்கும் பிரிவு நடைபெறாது. இதே நிலை நீடிக்குமானால் அடுத்த மாதம் முதல் மடல் எழுதும் போட்டி நிறுத்தப்படும்.

குறும்பட உதவி:

இந்தப் பகுதிக்கும் தேவையான கதைகள் போட்டிக்கு வராததால் இந்த மாதம் இலவச கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி பிரிவு நடைபெறாது.


6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

சந்தாத் தொகை முப்பது ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

Saturday, August 1, 2009

V.R.P Academy of Arts நடத்தும் திரைப்பட பயிலரங்கம்.


நாள்: 09-08-2009 முதல் 16-08-2009 வரை. (எட்டு நாட்கள்)
இடம்: சிவகாசி
கட்டணம்: 2500/- (உணவு, தங்குமிடம் உட்பட)
1800/- ( உணவு, இருப்பிடம் தவிர்த்து)

மாணவர்களுக்கு:

கட்டணம்: 1800/- (உணவு, தங்குமிடம் உட்பட)
1000/- ( உணவு, இருப்பிடம் தவிர்த்து)


இடம்: ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.

சிவகாசியை சேர்ந்த V.R.P Academy of Arts என்கிற திரைப்பட கல்வி நிறுவனம் நடத்தும் திரைப்பட பயிலரங்கம் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

கதை, திரைக்கதை அமைத்தல், இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து துறைகளும் மிக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படும். இறுதி நாளன்று மாணவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு அவர்களே ஒரு குறும்படம் எடுத்து அதை முழுமையான படமாக மாற்றி திரையிட வேண்டும். இதில் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகளும், பரிசுப் பொருட்களும் உண்டு. மேலும்,

இதன் சிறப்பம்சங்கள்:

1. நாள்தோறும் சிறந்த எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரின் உரையுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

2. ஒவ்வொரு நாளும் இரவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அடுத்த நாள் காலை அதுபற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.

3. இதுமட்டுமின்றி இந்த எட்டு நாள் நிகழ்வில் பல்வேறு சிறப்பு அழைப்பாளர்களும்ம திரைப்பட நடிகர்கள், தொலைகாட்சி நடிகர்கள் என பலவாறு துறை கலைஞர்களும் வந்து அவர்கள் சார்ந்த துறை பற்றி உரையாற்றுவார்கள். மேலும் அவர்களின் அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

4. தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) நடத்தும் குறும்பட வட்டமும் இந்நிகழ்வில் நடைபெறும்.

5. அனைத்து பங்கேற்பாளர்களும் உறுதியாக ஒரு குறும்படம் எடுக்க வேண்டும். அவர்களிடம் கேமரா இல்லையென்றால் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்துக் கொடுக்கப்படும். மேலும் கணிப்பொறி உள்ளிட்ட படத்தொகுப்பு சாதனங்கள் கொடுக்கப்பட்டு படத்தொகுப்பும் செய்து ஒரு முழுமையான படமாக கொண்டு வரவேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு பரிசுகள் உண்டு.

6. கதை, திரைக்கதை, வசனம் எழுதுதல், இயக்கம் உள்ளிட்ட துறைகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

7. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ், நினைவுக் கோப்பை, பரிசுப் பொருட்களும் வழங்கப்படும்.

8. சுவையான சைவ, அசைவ உணவுகள் நாள்தோறும் பரிமாறப்படும்.

9. தனியாக தங்குமிடம் வேண்டுபவர்களுக்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்துத் தரப்படும்.

10. பேருந்து, ரயில் டிக்கெட் போன்றவையும் தேவைப்படுபவர்களுக்கு எடுத்துத் தரப்படும். (இதற்கு தேவையான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்)

11. ஆண்களுக்கு பயிற்சி நடைபெறும் இடத்திலேயே தங்குமிடம் தயார் செய்துக் கொடுக்கப்படும். பெண்களுக்கு வேறொரு இடத்தில் தனியாக தங்குமிடம் தயார் செய்துக் கொடுக்கப்படும்.

12. எட்டு நாட்களுக்கு கட்டணம்: 3,300/- (உணவு, தங்குமிடம் உட்பட)

13. பெண்களுடன் யாரேனும் துணைக்கு வந்தால் அவர்களுக்கும் அறை ஏற்பாடு செய்துத் தரப்படும். அதற்கான கட்டணம்: 1500/-

பணம் செலுத்தும் முறை:

V.R.P. Manohar என்கிற பெயரில் சிவகாசியில் மாற்றத்தக்க வகையில் D.D. எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரில் வந்தும் கட்டணம் செலுத்தலாம். காசோலை அனுமதிக்கப்படா.

முகவரி:

V.R.P. MANOHAR,
1503, GNANAGIRI ROAD,
KAMARAJAPURAM COLONY,
SIVAKASI - 626189.

பங்கேற்பாளர்கள் ICICI வங்கிக்கணக்கு வழியாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம். அல்லது ஏதேனும் ஒரு ICICI வங்கியில் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கு எண்ணில் பணம் செலுத்தலாம். ஆனால் இவர்கள் பயிற்சிக் கட்டணத்துடன், ருபாய் 165/- சேர்த்து செலுத்த வேண்டும்.

பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு எண்: A/c No.617201503422

பெயர்: V.R.P. MANOHAR,

* பங்கேற்பாளர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரவேண்டும்.

* பங்கேற்பாளர்கள் இதற்கு முன்னர் குறும்படங்கள், ஆவணப்படங்கள் எடுத்திருந்தால் அதனையும் தங்களுடன் கொண்டு வரலாம். அக்குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விவாதங்கள் நடத்தப்படும்.

பங்கேற்கும் திரை உலக பிரபலங்கள்:

எழுத்தாளர் பிரபஞ்சன்,
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி,
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.

இயக்குனர் கே. ரங்கராஜ் (உதய கீதம்),
இயக்குனர் அனந்த நாராயணன் (வால்மீகி)
இயக்குனர் கௌரி மனோகர் (தென்றல் வரும் தெரு),
வி.ஆர்.பி. மனோகர் (குறும்பட இயக்குனர்)

கே. குணா (வசனகர்த்தா - மௌனம் சம்மதம், ஏர்போர்ட்)
பழனியப்பன், தம்பு - ஒளிப்பதிவாளர்கள்
பூபதி - நிகழ்ச்சி தலைமை (எஸ்.எஸ். மியூசிக்)
ராஜம் - நிர்வாக இயக்குனர் (மீடியா பிளானெட் - Next Generation Cinema, Chennai)

சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகள், விருதுகள் உட்பட ரூபாய் 500 மதிப்புள்ள பரிசுப் பொருளும் வழங்கப்படும்.


* மேலும் விபரங்களுக்கு: 99524 24292