Thursday, September 29, 2011

எழுத்தாளர் சுந்தர ராமசாமி பங்கேற்றமுற்றம் இலக்கிய சந்திப்பு


எழுத்தாளர் சுந்தர ராமசாமி பங்கேற்றமுற்றம் இலக்கிய சந்திப்பு

நன்றி : பவா செல்லதுரை


ஒலி வடிவில் கேட்க:http://koodu.thamizhstudio.com/mutram_1.php


திருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.

முதல் பதிவாக, முற்றம் நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பேச்சு (ஒலி வடிவில்) இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பல ஆளுமைகளின் பேச்சு இங்கே பதிவேற்றப்படும். இந்த அரிய பணியை என்னை நம்பி ஒப்படைத்த பவா செல்லதுரைக்கும், சிறப்பாக கொண்டு வர உதவி செய்த நண்பர் தவநெறி செல்வன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒலி வடிவில் கேட்க:http://koodu.thamizhstudio.com/mutram_1.php

Wednesday, September 28, 2011

ஐந்திணை - கலைப், பண்பாட்டிற்கான களம்.

http://thamizhstudio.com/aindhinai_announce.php

ஐந்திணை - கலைப், பண்பாட்டிற்கான களம்.


வணக்கம் நண்பர்களே....

தமிழ் ஸ்டுடியோவின் ஐந்திணை மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருகிறது.

திரைப்படம் பார்ப்பதையே ஒரு கலையாக மாற்றும் முயற்சியாக ஐந்திணை செயல்படவிருக்கிறது. மேலும் திரைப்படம் சார்ந்து நுணுக்கங்கள், திரைப்படம் இலக்கியம் இரண்டிற்கும் இடையேயான தொடர்பு, வெகுவாகக் குறைந்து வரும் மனித உறவு போன்றவற்றை உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் களமாக இந்த ஐந்திணை செயல்படவிருக்கிறது.

ஐந்தினையில் இலக்கிய கூட்டமும், குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலகத் திரைப்படங்கள், ஆகியவை திரையிடப்பட்டு கலந்துரையாடல் நடைபெறும். மேலும் திரைப்படம் சார்ந்த நுணுக்கங்களும் கற்றுக் கொடுக்கப்படும். இவை அனைத்தையும் ஏதோ ஒரு மூடிய அறைக்குள், காதுக் கேட்காத நான்கு சுவர்களுக்குள், மின் விசிறிகளின் கிரீச் சப்தத்தில் நாங்கள் செய்யப்போவதில்லை. மேலும் திரையிடலுக்கு வந்து படங்களை பார்த்துவிட்டு அடுத்த கணமே மாயமாய் போகும் நண்பர்களுக்கும் இங்கே இடமில்லை.

ஐந்திணை முழுக்க முழுக்க வேறொரு வடிவத்தில் உங்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

குன்றத்தூர் அருகில் உள்ள பறந்து விரிந்த தோட்டத்தில், இயற்கை முறையில் விளையும் பழ வகைகள் அமைந்துள்ள நிலப்பரப்பில், நல்லக் காற்றை சுழற்றி அடிக்கும் மரங்களுக்கு இடையில், பறவைகளின் ரீங்கார இசைக்கு மத்தியில் ஒரு இலக்கியக் கூட்டம், தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையுடன் வாசகர்கள் கலந்துரையாடும் நிகழ்வு, பின்னர் அடர்ந்த இருட்டில் அதே இயற்கை காற்றில் ஒரு குறும்படம், ஒரு ஆவணப்படம், ஒரு உலகத் திரைப்படம் பார்த்துவிட்டு, இதற்கிடையில் அங்கேயே சமைக்கப்படும் உணவு வகைகளை ருசிப் பார்த்துவிட்டு (சைவம் & அசைவம் இரண்டும்) அந்த இயற்கை சூழலிலேயே இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலை எழுந்து அருகில் உள்ள செம்பரம்பாக்கம் அணை, அல்லது அதே இடத்தில் உள்ள பம்ப் செட்டில் குளித்துவிட்டு வீடு நோக்கி நகர வேண்டியதுதான்.

இதில் முக்கியமானது இரவு முழுக்க படங்களைப் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் திரைப்படம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் விவாதித்திக்கொண்டு, நமது பார்வையிலேயே சமைக்கப்பட்ட இயற்கை உணவுகளை ருசித்துக் கொண்டும் இருப்பது என்பது கலையின் மீதான காதலுக்கு நிச்சயம் உத்திரவாதம்.

நகர இரைச்சலை விடுத்து, அமைதியான, மனதுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுடன் நமக்குப் பிடித்த இலக்கிய, திரைப்பட ஆளுமைகளுடன் விவாதித்துவிட்டு இயற்கையை ஆராதிக்கும் இந்த நிகழ்விற்கு மாதம் ஒரு நாளை ஒதுக்க நம்மால் இயலவில்லை என்றால் நாம் இழக்கப் போவது ஏராளம். எனவே நண்பர்களே நீங்கள் திரைப்படங்களை நேசிப்பவராக இருந்தால், இலக்கிய ஆர்வலராய் இருந்தால், புதிய நண்பர்களை தேடித் திரிபவர்களை இருந்தால் நிச்சயம் ஐந்தினையில் உறுப்பினராகி இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுங்கள்.

இதுவரை ஆர்வலர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ எவ்வித சந்தாத் தொகையும் விதித்ததில்லை. தமிழ் ஸ்டுடியோவின் எல்லா நிகழ்ச்சிகளும் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டன. ஆனால் இந்த நிகழ்வில் நீங்கள் கலந்துக் கொள்ள வருட சந்தா ரூபாய் 1500/- கட்ட வேண்டும். இரவு உணவு (சைவம் & அசைவம்) நான்கு திரைப்படங்கள், இலக்கிய நிகழ்ச்சி, திரைப்பட தொழில்நுட்பம் என எல்லாவற்றிற்கும், மாதத்திற்கு நீங்கள் செலவு செய்யும் தொகை நூறு (100/-) சொச்சம் மட்டுமே.. வருடத்திற்கு ரூபாய் 1500/- மட்டுமே.. ஐந்திணை குறைந்த பட்சம் ஐம்பது உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் தொடங்கப்படும். ஐந்திணை இந்த சமூகத்தின் கலை பிடிப்பையும், ரசனை ஏற்றத்தையும் அளவிடும் என்பதில் ஐயமில்லை.

1500/- ரூபாய் சந்தாக் கட்டுபவர்கள் தமிழ் ஸ்டுடியோவின் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளலாம்.

ஐந்தினையில் உறுப்பினராக தொடர்பு கொள்ளுங்கள்.

அருண் மோ. 9840698236

Tuesday, September 20, 2011

இங்கே எழுதப்படுவது ஹைக்கூ அல்ல பொய்க்கூ - கவிஞர் அய்யப்ப மாதவனுடன் ஒரு நேர்காணல்இங்கே எழுதப்படுவது ஹைக்கூ அல்ல பொய்க்கூ - கவிஞர் அய்யப்ப மாதவனுடன் ஒரு நேர்காணல்

ஆனந்த், செந்தூரன், உதவி: கதிர்வேல் : படங்கள்: சோமசுந்தரம்


சக மனிதர்களிடையே பரிமாறப்படவேண்டிய மனித நேயத்தையும் அதன்பொருட்டு கிடைத்திடும் அத்தனை ரசங்களையும் கவிதைகளாக படைப்பவர் கவிஞர் அய்யப்பமாதவன். எதையும் சார்ந்திராத பற்றற்ற மனநிலையையே உணர்த்தும் இவரின் கவிதைகள் அனுபவ வெளியிலிருந்து உருமாற்றம் கண்டவை. சிலர் அழகியலோடு தத்துவார்த்தமாக, கவிதை நயத்தோடு எழுதுவார்கள். ஆனால் நேரில் ஒரு இறுக்கமான நிலைகாட்டி முரணுணர வைப்பார்கள். எத்தனையோ எதிர்மறை அனுபவங்களைக் கண்டபின்னும் பழகிய அடுத்த நொடியே நெருக்கமுணர்த்தி நெகிழ்வுண்டாக்குகிறார். உலகம் அன்புமயமாக வாழ்வாங்கு வாழவேண்டும் என்று மனதார விழையும் மனிதர். மனிதர்க்கு விளைந்திடும் அத்தனை உணர்வுகளுக்குள்ளும் காற்றைப் போல் நிறைந்து கவிதைகளாக வெளிப்படுகிறது அய்யப்பமாதவனின் நல்மனது. தீரா ஆவலுடன் கவிதைகளாகவும், கதைகளாகவும் திரைத்துறை சார்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். "கவிதை எழுதும்போது சாமானியனின் வாழ்வை விட்டு நீங்கிவிடுகிறேன்" என்று சொல்லும் கவிஞர் அய்யப்பமாதவனிடம் ஒரு நேர்காணல் :

நீங்கள் இலக்கியத்துக்குள் பிரவேசித்தது எப்படி?

சிவகங்கைச் சீமையிலிருக்கும் நாட்டரசன்கோட்டைதான் நான் பிறந்த ஊர். பிரபலமாக இருக்கும் ஒளிப்பதிவாளர் செழியன் பால்ய காலத்திலிருந்தே நண்பர். அவரைப் பார்க்க அடிக்கடி சிவகங்கைக்குச் செல்வேன். கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்துக்கு செழியன் அழைத்துச் செல்வார். அங்குதான் தமிழிலக்கியத்தின் ஆளுமைகளை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. மீராவின் மகன் கதிர் நூல்களைப் படிக்ககொடுத்தார் காசில்லாமல் இறுக்கமாயிருந்த நட்பின் அடிப்படையில். நாங்கள் மூவரும் இலக்கியம் பற்றி விவாதிக்க, விவாதிக்க எனக்குள் சிந்தனையும், பேரார்வமும் என்னை செதுக்கிக் கொண்டிருந்தன. அப்போது ஜப்பானிய மொழியிலிருந்து பேராசிரியர் வீ.உண்ணாமலை அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. எளிமையான வடிவமும் வலிமையான பொருளும் ஒருங்கேயமைந்த ஹைக்கூ என்னை ஈர்த்தது. அத்தகைய கவிதைகளை வாசிக்க, வாசிக்க நாமும் எழுத வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. மூன்று வரிகளில் எழுதினால் போதுமென்ற ஹைக்கூவின் இலக்கணம் எனக்கு வசதியாகயிருந்தது. ஆனால் ஹைக்கூவின் மற்ற இலக்கணங்களைத் தூக்கியெறிந்துவிட்டேன். வெறும் மூன்றுவரிக் கவிதைகள்தான் அவை. ஹைக்கூவே அல்லயென்பதையும் பொய்க்கூ என்பதையும் புரிந்துகொண்டேன். இங்கு எழுதப்படுபவை ஹைக்கூ என்ற போர்வையில் எழுதப்படும் கவிதைகளேயன்றி ஹைக்கூ கவிதைகளல்ல என்பது உலகமறிந்த விசயம்.

கண்களுக்கு தூண்டிலிட்டேன்
மாட்டிக்கொண்டது
இதயம்.

இதுதான் நான் எழுதிய முதல் கவிதை. பல நண்பர்களிடம் வாசித்துக் காட்டினேன். ஆனால் செழியன் மட்டும்தான் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அவரின் அந்த வழிகாட்டுதல்தான் அப்போதைய ஆகப்பெரிய உந்துசக்தி. இப்பொழுது இதுமாதிரி கவிதைகளை எழுதமாட்டேன். ஹைக்கூ கவிதைக்கென்று இலக்கணம் இருக்கிறது. முதல் வரியில் ஐந்து அசைகளும், இரண்டாவது வரியில் ஏழு அசைகளும் மூன்றாவது வரியில் ஐந்து அசைகளும் இருப்பதுதான் 'ஹைக்கூ' கவிதைக்கான இலக்கணம்.

கவிதை எழுத ஆரம்பித்த பிறகு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. அத்தருணங்களில் "இதயகீதா" எனும் புனைப்பெயரில் வார இதழ்களுக்கு கேள்வி பதில் அழுதி அனுப்பிக்கொண்டிருந்தேன். கேள்வி தேர்வானால் பத்து ரூபாய் அனுப்புவார்கள். இதயகீதா என்று இதுவரைக்கும் யாருக்கும் பெயர் கிடையாது. இதயத்தின் கீதம்தான் கவிதை எனும் பொருளில் அப்பெயரை வைத்துக்கொண்டேன். அமரர் வலம்புரிஜான் அவர்கள் நடத்திய "தாய்" வாரப் பத்திரிக்கையில் என் முதல் கவிதை பிரசுரமாகியது. முதன் முதலாக என் படைப்பை அச்சில் பார்த்த தருணத்தில் பொங்கி பிரவாகமெடுத்த பரவசத்தைச் சொல்லிலடக்க இயலாது. ஊரில் நண்பர்கள் குழுவாக இயங்கி நாடகங்கள் போடுவோம். கதைகளுக்கான விடயங்களைச் செழியன் பார்த்துக்கொள்வார். ஆனால் எங்களின் முதல் நாடகத்துக்கு இயக்குனர் பேரரசுதான் கதை எழுதினார். அவரும் அவர் தம்பி முத்துவடுகுவும் எங்கள் நண்பர் குழுவிலிருந்தனர். சொன்னால் நம்புங்கள், பேரரசும், முத்துவடுகுவும் ஆரம்பத்தில் கவிதை தளத்தில் இயங்கியவர்கள். என் முதல் கவிதைத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. அதற்காக கைக்கடிகாரத்தையும், மோதிரத்தையும் அடகு வைத்தேன். இதுவரை என்னுடைய நான்கு புத்தகங்களை அன்னம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது . ஒரு சமயம் ஜூனியர் விகடன் நடத்திய ஹைக்கூ போட்டியில் என் கவிதையும், நண்பன் ஆதவன் கவிதையும் தேர்வாகியிருந்தது. ஒரு கிராமத்தில் இரண்டு பேரின் கவிதைகள் தேர்வாகியிருந்தது எங்களுக்கு கொண்டாட்டத்திற்குரிய விடயமாகிப்போனது. அந்த போட்டிக்கு நான் எழுதிய கவிதையை எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்கள் மாற்றியிருந்தார்.

எது நிரந்தரம்?
மழையில் கரையும்
சமாதி..

என்று நான் எழுதி அனுப்பியிருந்தேன். ஹைக்கூ கவிதையில் வினா விடையாக வரக்கூடாது.
எனவே சுஜாதா இப்படி மாற்றம் செய்திருந்தார்.

மண்ணால் அமைத்த சமாதி
மழையில்
கரைகிறது


வெகுவாக கவிதைகள் புனைய ஆரம்பித்த பிறகு திரைத்துறை மீது என் கவனம் குவிந்தது. நானும் செழியனும் சென்னை வந்து மிகவும் கஷ்டப்பட்டோம். பேரரசுவிடம் திரைப்படம் சார்ந்து அலைவரிசை ஒத்துப்போகவில்லை. செழியன் இன்று வரை நெருங்கிய நட்புடனிருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு பிறகு கவிதை ஆர்வம் "ஹைக்கூ"விலிருந்து புதுக்கவிதைக்கு மாறியது.

இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்து உங்கள் இலக்கு என்ன?

முழுமையான கவிதையை நான் எழுதிவிட்டேனா? அல்லது எழுதிவிடுவேனா? என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான முயற்சிதான் என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு கவிஞனாக வாழ்வதில் பெருமையும், சந்தோஷமும், கர்வமும் அடைகிறேன். சக மனிதர்களிடமிருந்து நான் எப்போதுமே வேறுபடுகிறேன். வேலை, சாப்பாடு, தூக்கமென்று சதவிகித அடிப்படையில் சராசரியாக என்னால் இயங்கமுடியாது. இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

உங்களை சந்தித்ததும், உரையாடிக் கொண்டிருப்பதும் கூட ஆச்சர்யம்தான். காற்றிலசையும் ஓர் இலை துளிர்த்து மரமாவதும், உதிர்ந்து உரமாவதும் வியப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும் அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் அள்ளித் தந்துகொண்டேயிருக்கிறது. இப்படியான ஒரு வியத்தல் நிலையிலிருந்தே என் கவிதைகள் முளைவிடுகின்றன. கண்டதை படிப்பவர் பண்டிதர் ஆவாரென்பார்கள். நான் கண்டதையும் படிப்பதில்லை, பண்டிதராகவும் விரும்பவில்லை. மிகக் குறைவாக தேர்ந்தெடுத்தே வாசிக்கிறேன். அதுவும் மிக நிதானமாக. என்னுடைய மிகப்பெரிய கனவே திரைப்படம் இயக்க வேண்டுமென்பதுதான். இன்றைய சூழலில் திரைப்படத்துறை வியாபாரமாகிவிட்டது. வலிமை மிக்க ஊடகம் கேளிக்கைக்கான ஊடகமாக மட்டுமே தோற்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்னால் உலக கிளாசிக் வரிசை படத்தைக் கொடுக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு அரிது. எனவே என்னுடைய முதல் படம் பெரிய பரீட்சார்த்த முயற்சிகள் இல்லாமல்தான் இருக்கும். பொருளாதர வெற்றி மிக முக்கியம் நண்பரே. ஆக்சன் கதை ஒன்று தயராக இருக்கிறது. அது நிச்சயம் கமர்சியலுக்கு வேறு வண்ணம் கொடுக்கும். திரைத்துறையில் இது குறுகிய கால இலக்கு. இலக்கியத்தில் ஒரே இலக்குதான். அங்கு சமரசத்துக்கு சிறிதும் இடமேயில்லை.

உங்களுக்கு பிடித்தமான கவிஞர்கள் யார்?

தமிழில் எனக்கு பிடித்தமான கவிஞர் ஆத்மநாம். அவரின் கவிதைகளில் வெளிப்படும் இருண்மையும், உண்மையும் எனக்கு மிகவும் நெருக்கமாகவும், ஈர்க்கக் கூடியதாகவும், இயக்கக் கூடியதாகவும் இருக்கிறது. நகுலன், பிரமிள் போன்ற பெரிய ஆளுமைகளின் கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன். ஆனால் அவை என் மனவெளியிலிருந்து எங்கோ தொலைவில் இருக்கின்றன. இப்பொழுது எழுதும் செல்மா ப்ரியதர்ஸன், யவனிகாஸ்ரீராம், கண்டராதித்தன், பாலை நிலவன், லட்சுமி மணிவண்ணன், சங்கர் ராமசுப்பிரமணியன். ஸ்ரீநேசன், ராணிதிலக், பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, தென்றல், உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, போன்றோரின் கவிதைகள் மிக அருமையாக இருக்கின்றன. புதிதாக நிறைய கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களில் இசை, இளங்கோ கிருஷ்ணன், நரன், வெயில், மண்குதிரை, ஊர்சுலா, நிலா ரசிகன், விஸ்வநாதன் கணேசன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையப் பேர் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கின்றனர்.

என்ன மாதிரியான கவிதைளை விரும்பி படிக்கிறீர்கள்?

எனக்கு எப்போதும் விருப்பமானவை "ஹைக்கூ" கவிதைகள்தான். அதன் எளிமையான வடிவமும், ஆழ்ந்த அர்த்தங்களும் என்னை வியக்கச் செய்கின்றன. அதை ஒரு துளி சமுத்திரம் அல்லது அணு எனலாம். நீண்ட இடைவெளிக்குபின் ஹைக்கூவின் சரியான இலக்கணங்களுடன் ஹைக்கூக்களை எழுதிப் பார்த்து குவளைக் கைப்பிடியில் குளிர்காலம் என்ற ஹைக்கூ கவிதை நூலை தமிழ்வனம் வெளியீடாக கொண்டுவந்தேன். ஹைக்கூ கவிதையினை ஒரு போதும் ஜப்பானியர்கள்போல நம்மால் எழுதிவிட முடியாதென்பதைப் புரிந்துகொண்டேன்.

பிரம்மராஜன் மொழிபெயத்த உலகக் கவிதைகளை அவ்வப்போது எடுத்து வாசித்து என்னை உற்சாகப்படுத்திக்கொள்வேன். அதில் குறிப்பிடும்படியான கவிஞர்கள் நிறைய இருக்கின்றனர். கவிஞர் ஆத்மநாமின் கவிதை நூலை பைபிள் போல வாசித்துக் கொண்டேயிருக்கப் பிடிக்கும். அதே போல் பிரெஞ்சுக் கவிஞர் லாக் பிரவரின் கவிதைகளையும் விரும்பி வாசிப்பேன். வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸின் கவிதைகளும், போர்ஹஸ்ஸின் கவிதைகளையும், ரைமண்ட் கார்வரின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பேன். முக்கிய விசயம் என்னவெனில் தமிழிலும் உலகக் கவிதைகளுக்கிணையான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்களேன் இந்த தளத்தை விடுத்து வைரமுத்து, பா.விஜய் போல் செயல்படக்கூடாது?

நான் கவிதையின் வடிவத்தை தேர்ந்தெடுப்பதில்லை. எழுத ஆரம்பித்ததும் என் கவிதையே அதற்கான வடிவத்தை அனிச்சையாக அமைத்துக் கொள்கிறது. எனக்கு அவர்களைப் போல கவிதை எழுதத் தோன்றவில்லை. எழுத விரும்பவுமில்லை. வானம்பாடிக் கவிஞர்களில் மீராவின் கவிதைகள் பிடித்தமானவை. சினிமாவில் பாட்டெழுதுபவர்களின் கவிதைகள் என்னைப் போன்றவர்களை அதிகம் ஈர்க்கவில்லை. அதில் உணர்ச்சியிருக்காது. உரைநடைகளை மடக்கி, மடக்கி எழுதிவிட்டு கவிதையென்றால் அது உரைநடைக்கும் அவமானம், கவிதைக்கும் அவமானம். என்னுடைய இயல்பிலிருந்துதான் கவிதைகளை எழுதுகிறேன். எளிமையாக்குகிறேனென்று வலிந்து எழுதி வீரியமிழக்கச் செய்வதில்லை.

புரிந்தால் மட்டுமே கவிதையாகிவிடாது. கவிதை புரியவில்லையென்றால், புரிந்துகொள்வதற்கான மனநிலையை வாசகர்கள்தான் வளர்த்துக் கொள்ளவேண்டும். என் கவிதைகள் கரடு முரடானவை அல்ல. மறுவாசிப்பிலேயே புரிந்துவிடும். எளிமைப்படுத்துங்கள் என்றால் மாட்டேன். என் எண்ணம் குவிமையமாகும் பொழுது உருவாகும் உணர்ச்சிகளுக்கு சொற்களால் உருவம் கொடுக்கிறேன். உதாரணத்திற்கு குரங்கை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு பிச்சையெடுத்த ஒரு பெண்மணியைக் கண்டபோது அக்காட்சிக்குள்ளிருக்கும் வலியும், வேதனையும் மனிதாபிமானமும் என்னை ஒரு கவிதையை எழுதத் தூண்டியது. இப்படி உலகினிடையே நடக்கும் அபூர்வக்காட்சிகளிடையே நான் வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிகிறேன். அதையேதான் என்னால் கவிதையாகவும் வடிக்கமுடிகிறது.

உங்களுக்காக அந்தக் கவிதை:


மேலும் படிக்க:


Wednesday, September 7, 2011

குறும்பட வட்டம் - தொடக்கமும் முடிவும்
குறும்பட வட்டம் - தொடக்கமும் முடிவும்

தமிழ் ஸ்டுடியோ அருண்

வணக்கம் நண்பர்களே,

குறும்பட வட்டம் தொடர்ந்து 34 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு புதுப் பகுதி, புதிய எண்ணம், புதிய முயற்சி என போய்க் கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே இடம், அதே நாள், அதே நேரம் என கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்கிறது. தவிர்த்து தமிழ் ஸ்டுடியோவில் இருந்து ஒரு மாதத்திற்கு நான்கைந்து நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. குறும்பட வட்டம், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், ஆவணப் படங்கள் திரையிடல், இலக்கிய நிகழ்வுகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

எவ்வித இலாப நோக்கமின்றி தொடர்ந்து மூன்று வருடங்கள் மாதத்திற்கு ஐந்து நிகழ்ச்சிகள் என நடத்துவது கொஞ்சம் அதிகம்தான். இது ஒரு வகைப் பேராசையும் கூட. ஆனால் தமிழ் ஸ்டுடியோ தொடங்கிய காலத்தில் இது தேவைப்பட்டது. இப்போது நிறைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைப் பெற்றுக் கொண்டிருப்பதால், மேலும் தமிழ் ஸ்டுடியோவை நிர்வகிப்பதும், தொடர்ந்து ஐந்து நிகழ்ச்சிகள் நடத்துவதும் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்கு குறைந்த பட்ச செலவு ஐயாயிரம் என்று வைத்துக் கொண்டால் கூட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மாதம் 25 தேவைப்படுகிறது. தவிர்த்து தமிழ் ஸ்டுடியோ இணையத்தை நிர்வகிப்பதற்கு செலவு, படிமை, நல்லதோர் வீணை செய்து, பதிற்றுப் பத்து, அலுவலக செலவுகள், குறும்படம் எடுக்க உதவி செய்யும் வகையில் ஏற்படும் செலவு என ஒரு மாதம் எப்படியும் 30-40 ஆயிரங்கள் செலவாகிக் கொண்டிருக்கின்றன.

முழுக்க நானும், நண்பன் குணாவும் மட்டுமே இதற்காக செலவு செய்து வந்தோம். சமீபத்தில் நான்கு மாதங்களாக நண்பர் தயாளன் மாதம் ஒரு தொகை கொடுத்து சுமையை கொஞ்சம் குறைத்து வருகிறார். இருந்தாலும், தொடர்ந்து இவ்வளவு செலவு செய்வது எளிதல்ல. நான்கு லட்சம் கடன் தவிர தமிழ் ஸ்டுடியோவிற்கு எவ்வித சொத்துக்களும் இல்லை. தொடர்ந்து கிடைக்கும் நண்பர்களைத் தவிர வேறு எவ்வித வரவும் இல்லை.

இதற்காக யாரிடமும் நாங்கள் ஒரு போதும் கையேந்தி நின்றதில்லை. நிற்கப் போவதுமில்லை. இதுவரை நடந்து வந்த ஐந்து நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து "ஐந்திணை" என்கிற பெயரில் புதிய நிகழ்வாக தொடங்க இருக்கிறோம். இதன் படி மாதம் இரண்டு நிகழ்வுகள் மட்டுமே. ஒன்று, ஐந்திணை, மற்றொன்று குறுந்திரைப் பயணம். மேலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக இல்லாமல் குறும்பட துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும் விதமாக குறும்பட / ஆவணப்படங்களுக்காக ஒரு சிறிய திரையரங்கம் அமைக்கும் முயற்சி, புதுச்சேரியில் ஒரு சர்வதேச குறும்பட / ஆவணப்பட திருவிழா, லெனின் விருதின் பரிசுத் தொகை அதிகரிக்க செய்வது என வேறு தளங்களில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து செயல்பட இருக்கிறது.

"ஐந்திணை" இந்த மாதம் முதலே தொடங்குவதாக இருந்தது. ஆனால் எப்போதும் வித்தியாசமாகவே சிந்திக்கும் மூளை இம்முறையும் அதையே செய்தது. விளைவு இன்னும் மெருகேற்றப்பட்டு "ஐந்திணை" அடுத்த மாதம் முதல் தொடங்கும். இந்த மாதம் எவ்வித பெயருமில்லாமல் குறும்படங்கள் திரையிடல் மட்டுமே நடைபெறும்.

அதன் விபரம்:

நாள்: சனிக்கிழமை (10-09-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)


ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்தப் பகுதியில் இந்த மாதம் தியேட்டர் லேப் நிறுவனர் ஜெயராவ் நடிப்பு தொடர்பாக பயிற்சியளிக்க உள்ளார். ஒரு நடிகனுக்கு தேவையான குணங்கள், கதாப்பாத்திரத்தை உள்வாங்குவது எப்படி, ஓவர் ஆக்ட் எப்போது வெளிப்படுகிறது என்பது போன்ற பல விடயங்களுக்கு விடைகான இந்தப் பகுதி பயனுள்ளதாக இருக்கும்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மூன்று குறும்படங்களையும் பார்த்து அதன் நிறை / குறைகளை பற்றி பேசஎழுத்தாளர் சா. கந்தசாமியும், இயக்குனர் அருண் மொழியும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

துவந்த யுத்தம்

அசோக் குமார்

15 நிமிடங்கள்

காதலுக்காக

கோகுலக்ருஷ்ணன்

08 நிமிடங்கள்
பேப்பர்

சிவபாத சுந்தரம்

05 நிமிடங்கள்

------------------------------------------------------------------------------

இந்த மாதம் முதல் தமிழ் ஸ்டுடியோவின் படிமை மாணவர்கள் குறும்பட வட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இந்த மாதம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவிருக்கும் படிமை மாணவர்: ஆர்ம்ஸ்ட்ராங் பிரவின்

திருநெல்வேலியை சேர்ந்த இவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர். மாற்று ஊடகத்தின் மீது பேரார்வம் கொண்டவர். பயன்கள் இவருக்கும் பிடிக்கும். தன கடன் பணி செய்து கிடப்பதே என்றிருப்பவர்.


குறிப்பு: இதுவரை நடைபெற்று வந்த பௌர்ணமி இரவு, ஆவணப்படங்கள் திரையிடல் இனி நடைபெறாது. இவை எல்லாம் " ஐந்திணையில்" இணைக்கப்பட்டுள்ளது. இனி நிலாச்சோறு இல்லை. நிலவின் ஒளியில் படங்களும் இல்லை. ஆனால் முற்றிலும் வேறு ஒரு அனுபவத்துக்கு தயாராகுங்கள்.


அடுத்த மாதம் முதல் தொடங்கும் "ஐந்திணை" உங்கள் ரசனைக்கு விருந்தாக அமையும் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை. ஒரே ஒரு ரசனை: ஐந்து திணைகளில் மக்கள் ஆதிகாலத்தில் உண்ட உணவுகள் உங்கள் நாவை வந்தடைய காத்திருக்கிறது. மற்ற ரசனைகளை அடுத்த மாதம் பாருங்கள்.


மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


http://thamizhstudio.com/shortfilm_guidance_kv_end.php
Tuesday, September 6, 2011

தூங்கா நகரம் மதுரை - ந. முருகேசபாண்டியன்தூங்கா நகரம் மதுரை - ந. முருகேசபாண்டியன்

ந. முருகேசபாண்டியன்


இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான மதுரை, கால வெள்ளத்தில் தாக்குப் பிடித்து நிலைத்திருப்பது பெரிய விஷயம் தான். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு அரசியல் பின்புலங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் மதுரையின் முகமானது பன்முகத்தன்மையுடையது. ஒரு நகரம் என்பது வெறுமனே கட்டடங்ளும் தெருக்களும் நிரம்பிய இடமும் வெளியும் சார்ந்தது மட்டுமல்ல. ஆறு தன் பாதையை மாற்றிக் கொள்வது போல, மதுரை போன்ற பழமையான நகரமும், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றியிருந்திருக்க வாய்ப்புண்டு. பழம் பெருமையை மட்டும் முன்னிறுத்திக் கொண்டு புறத்திலிருந்து வரும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொள்வது என்பது அந்நகரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். கி.பி. 1333 – இல் மதுரை நகரில் டில்லி சுல்தானிய அரசு ஏற்பட்டது என்ற தகவல் பரிசீலனக்குரியது.அன்றைய காலகட்டத்திலிருந்து பல்வேறு அரசியல் மோதல்கள், போர்கள் மதுரையை மையமாக வைத்துத் தொடர்ந்தது. இஸ்லாமியர்கள், நாயகர்கள், ஆங்கிலேயர்கள் என வேற்று மொழியினரின் அதிகாரத்தின் கீழ், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மதுரைக்காரர்கள் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்தது. மதுரையில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நிலவிய போது, துணி நெசவினுக்காகக் குஜராத் பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிர மொழி பேசும் மக்கள் இன்று மதுரையெங்கும் பரவியுள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகச் சௌராஷ்டிரர் ஒருவர் தான் கடந்த பத்தாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது வரலாற்று விநோதம்தான். ஒப்பீட்டளவில் பல்வேறு மாற்றங்களுடன் நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கும் மதுரை நகரின் ஆன்மா தனித்துவமானது.

இன்றைய உலகமயமாக்கும் காலகட்டத்தில் எல்லாவிதமான பண்பாட்டு அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, வேகவேகமாக ஒற்றைத் தன்மைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை நகரம் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. எனினும் 1360 முதல் 1380 வரை நவீனத்துவத்தின் ஆளுமை படராத மதுரை நகரானது, வெள்ளந்தியான பெரிய கிராமமாகச் சோம்பிக் கிடந்த நிலையைப் பதிவாக்கிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கையில் மக்கள் எப்படி வாழ்ந்தனர் என்ற பரிவு எதிர்காலத்தில் சமூக வரலாறாகி விடும். அவ்வகையில் 1960 உள் தொடங்கி மதுரை நகரத்தின் இயல்புகளை என் சொந்த அனுபவத்தின் மூலம் பதிவு செய்ய முயன்றுள்ளேன்.

மதுரை நகரின் மையமாக உள்ள மீனாட்சி அம்மன் கோவிலை முன்வைத்துச் சதுர வடிவில் விரிந்து செல்லும் தெருக்கள் நெரிசலாகவும் இறுக்கமாகவும் இன்றளவும் உள்ளன. மாடுகளை வளர்த்துப் பால் வியாபாரம் செய்யும் கோனார் சாதியினர் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பெருமளவில் குடியிலிருந்து இன்றும் தொடர்கின்றது. மீனாட்சி அம்மன் கோவிலும், அங்கு ஆண்டு முழுக்க நடைபெறும் பல்வேறு திருவிழாக்களும் பெரிய அளவில் சாதாரண மக்களை ஈர்க்காத காலகட்டம் இருந்தது. 1930 களில் கூட பிறப்பினால் தாழ்த்தப்பட்டவங்களும் நாடார் சாதியினரும் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று வைதீக சிந்து சமயம் தடை விதித்திருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் பெரிய அளவில் தொடர்பில்லை. வடக்குக் கோபுரத்துக்கு வெளியே இருக்கும் முனியாண்டி சாமியை வழிபடும் மக்களில் பலர், பிரமாண்டமான கோவிலுக்குள் நுழைவதில் ஆர்வமற்று இருந்தனர். மதிய வேளையில் கோவில் நடை சாத்தப்பட்டவுடன், வெளிப் பிரகாரத்தில் ஜிலுஜிலுவென வீசும் காற்றில் வயதான ஆண்கள் பலர் படுத்து உறங்கினர். ஒண்டுக் குடித்தன வீடுகளில் பகல் வேளையில் உறங்க வாய்ப்பற்ற முதியவர்களுக்குப் பொழுதைப் போக்கிடவும் உறங்குவதற்கான இடமாகவும் கோவில் விளங்கியது.

மதுரை என்றால் சித்திரை திருவிழா பலருக்கும் நினைவுக்கு வந்த காலகட்டம் இருந்தது. சித்திரை மாதம் முழுமதி நாளில், மதுரையைச் சுற்றி 25 மைல் தொலைவில் வசிக்கும் மக்களில் பலர் மதுரைக்கு நடந்தும், மாட்டுவண்டிகளிலும் வருவது வழக்கமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் மதுரைக்கு வந்தவர்களின் நோக்கம், ஆற்றில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகரைத் தரிசிப்பது மட்டுமல்ல. ஒரு வகையில் கொண்டாட்டம் தான். வருடம் முழுக்க வயல்வெளியில் கடுமையாக உழைத்த கிராமத்தினர், அரிசி, கிடாய், சேவல், விறகு, பாத்திரம் என வண்டிகளில் எடுத்துக் கொண்டு உறவினர்களுடன் மதுரை நகரின் திறந்த வெளித் திடல்களில் தங்கி, சமைத்துச் சாப்பிடுவதில் உற்சாகமடைந்தனர். விடலைப் பருவத்தினர் மதுரை நகரத்துத் திரையரங்களில் தவமிருந்து ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அப்புறம் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி சுற்றிப் பார்க்கவும், பொருட்களை வழங்கவும் ஊக்கமளித்தது.

அனுபவங்களில் வட வைகை ஆறு மணல் படுகையுடன் மதுரை நகருக்குள் அழகாகக் காட்சியளித்தது. கடும் கோடைக்காலத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர். ஆற்றில் ஒரமாகச் சென்று கொண்டிருக்கும். ஆற்றின் நடுவில் பல்வேறு அமைப்புகள், வணிக நிறுவனங்கள் தென்னங்கீற்றினால் பெரிய பந்தல்கள் போட்டிருப்பார்கள். வி.எஸ். செல்வம் சோப், சைபால் களிம்பு, கோபால் பல்பொடி, பூச்சி பாக்கு ஆர்.எஸ். பதி மருந்து, தென்னை மரக்குடி எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தாருடன், தனிப்பட்ட அமைப்புகளும் ஆறு முழுக்கக் கொட்டகைகள் போட்டிருந்தன. அழகர் ஆற்றில் இறங்கிய நாளில் இரவில் பத்து விதமான அலங்காரத்தில் காட்சி தருவார். அதனைக் காண மதுரை நகரத்து மக்கள் புளியோதரை மற்றும் தின் பண்டங்களுடன் இரவு முழுக்கக் குழுமியிருப்பார்கள். ஓடி விளையாடிய குழந்தைகள் கொட்டகைக்குள் ஆனந்தமாக உறங்குவார்கள்.

வைகை ஆற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் பெருகியோடுவது செய்தியாக மாறாத காலகட்டமிருந்தது. ஒரு மாதம் கூட ஆள் இறங்க முடியாத அளவுக்குச் சீறாய் பாய்ந்து வெள்ளம் கழித்தோடியது. வெள்ளம் வற்றிய பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளிப்பதும் துணி துவைப்பதும் என மதுரை மக்கள் வாழ்க்கை முழுக்க ஆற்றைச் சார்ந்திருந்தது. புலவர் நாவில் பொருந்திய வையை என்னும் பொய்யாக் குலக்கொடி எனப் பரிப்பாடலில் போற்றப்படும் வையை பண்பாட்டின் அடையாளமாக மதுரை நகர மக்களுடன் பின்னிப் பிணைந்திருந்த காலகட்டம் இருந்தது என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது,

மதுரை நகரத்து மக்களுக்கு இயல்பிலே தெனாவிட்டு அதிகம். பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் நகரத்தில் தொடர்ந்து தலைமுறைகளாக வாழ்ந்து வருவதானல், எது குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ளாத மனப்பாங்கு பலருக்கும் உள்ளது. இதனால் எல்லாவற்றையும் பகடி செய்வது சாதாரணமாக நடைபெறுகிறது. சுமை தூக்கும் தொழிலாளி, ரிக்ஷாகாரர், பேருந்து நடந்துநர் எனத் தொடங்கி யார் யாரை வேண்டுமானாலும கேலி, கிண்டல், வந்து செய்தாலும் யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கேலிக்குள்ளாரும் நபரும் மெல்லச் சிரித்துக் கொள்வார்.

நாங்க எல்லாம் ஊருக்குள்ளே ரொம்பப் பேருக்கு யோசனை சொல்றவங்க என்று சொல்லும் திரைப்பட நடிகர் வடிவேலு சித்தரிக்க முயலும் உதார் பேர்வழி, மதுரையின் அடிமட்டத்துக் கச்சா ஆள். ஏய் எங்ககிட்டயே உன் வேலையைக் காட்டுறீயா? நாங்க எல்லாம் அரிவாளை எடுத்தோம் …. .. யே யாருன்னு தெரியாமலே பேசீட்டுப் போறியே . …. .. என்னா நீ பாட்டுக்குப் போறே . . மாமா நிக்கிறேன் இல்லே . .. மாமாவைக் கவனிச்சிட்ல் போ மாப்பிள்ளை நாம விட்ட உதாரில் ஆள் டர்ராயிட்டான், . .. அவன் பண்ணின வேலைக்குச் சங்கைக் கடிச்சத் துப்பினால் . . . இப்படியான மதுரை நகரத் தெருப் பேச்சுகள் கட்டமைக்கும் புனைவுகள் அளவற்றவை. நாங்க, எங்க என்ற சொற்கள் மூலம் சலம்புகிறவர் உணர்த்த விரும்புவது, தான் ஒரு பெரிய கும்பலின் ஆள் என்று. தெருபோரத்தில் அமர்ந்து இதுபோன்று வீம்பு பேசும் பேச்சுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு காலகட்டத்தில் மதுரை நகரில் ரௌடிகள் வெவ்வேறு பகுதிகளில் உதார் காட்டிக் கொண்டிருந்தனர். பாண்டி என்ற சொல்லுக்கு முன்னால் ஏதோ ஒரு ஒட்டுடன் வலம் வந்த ரௌடிகள் காலப் போக்கில் மறைந்து போயினர். சிலர் மதுரை நகரத் தெருவோரத்தில் குத்துப் பட்டுச் செத்துக் கிடந்தனர். மக்களைப் பயறுத்தி வாழும் ரௌடிகளின் காலம் என்பது மிகக்கொடியது. வெறுமனே ரௌடி என்ற லேபிளுடன் வாழ்ந்த ரௌடிகள், இன்று அரசியல் வேஷம் பூசிக் கொண்டு அண்ணன் ஆதரவில் மதுரை மக்களுக்குத் தந்து கொண்டிருக்கும் தொந்தரவுகள் அளவற்றவை.

இரவு முழுக்க மதுரை நகரத் தெருக்களில் வழிப்பறி பற்றிய பயமில்லாமல் நடந்து செல்லாம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் முதலாகச் சிம்மக்கல், முனிச் சாலை, காளவாசல், தத்தனேரி என நகரமெங்கும் இரவுக் கடைகள் விழித்திருக்கும். எந்தப் பொருளையும் நள்ளிரவு நேரத்திலும் வாங்கலாம். இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை எந்த நகரப் பேருந்தும், புறநகர்ப் பேருந்தும் இயங்காத காலகட்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திரையரங்குகளில் இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு கிளம்பியவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்கள். எழுபதுகளில் கவிஞர் சமயவேல், புதிய ஜீவா, காமராஜ், முருகேசன் போன்ற பல நண்பர்களுடன் இரவு முழுக்க மதுரைத் தெருக்களில் நடந்தவாறு பேசிக் கொண்டு, பொழுது புலர்ந்தவுடன் கிளம்புவது எனது வழக்கம். எங்களைப் போன்று பல்வேறு குழுவினர் தெருக்களில் நடந்து கொண்டிருந்தனர். தேநீர், புகைத்தல் எனப் பேச்சுகளும் மறு பேச்சுகளும் காற்றில் மிதக்கும். இராப் பறவை என்ற சொல்லுக்கான அர்த்தத்தை மதுரைக்காரர்கள் புரிந்து வைத்திருந்தனர். கம்பப்பயல் தான் ராத்திரியில் தூங்குவான் என்று மூத்த எழுத்தாளர் கரிச்சாள் குஞ்சு எழுதியிருப்பது தற்செயலானது அல்ல ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாகும்.

எண்பதுகளின் முற்பகுதியில் நாவலாசிரியர் ப. சிங்காரத்துடன் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார், மதுரை மாதிரி ஒரு ஊர் வராதுங்க. ராத்திரி எந்த நேரமானலும் எது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம், என்ன வேணும்னாலும் வாங்கலாம் என்று. இரவு என்பது மனித உயிர்கள் உறங்குவதற்காக என்ற கருத்தினைப் புரட்டிப் போட்டு இருளின் வழியாகத் தங்கள் இருப்பினைத் தேடிய மதுரைக் காரர்களில் உலகம் வேறுவிதமானது.

அந்தி வேளையானால் அசைவ உணவு என்ற வாசங்களுடன் எழுபதுகளில் மதுரையில் பிரபலமான மிலிடரி ஓட்டல் அல்லது காக்கைக் கடை இன்று தமிழகமெங்கும் கேரளாவிலும் பரவி விட்டது. பரோட்டா, ஆட்டிறைச்சி, உணவு வகைகளுடன் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும் உணவகங்களுக்கெனத் தனிப்பட்ட வாடிக்கையாளர் இருந்தனர். அதிலும் கீழ்வாசல், விளக்குத்தூள், முனிச்சாலை, தெற்கு வெளி வீதி, தெற்கு வாசல் போன்ற பகுதிகள்ல இரவு நேர உணவகங்கள் இன்றும் விஷேசம் தான். மதுரை கீழவாசல். முனிச்சாலை பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் தெருவோரம் சௌராஷடிரார்களால் தொடங்கப்பட்ட இட்லி, தோசை கடைகளில் வழங்கப்பட்ட உணவுகள் வீட்டுத் தயாரிப்புகள் போலிருந்தன. வகைவகையான சட்டினிகள் சுவையாகப் பலரையும் கவர்ந்தன. பொங்கல், புளியோதரை, தக்காளிச் சாதம் போன்ற உணவு வகைகள் சுவையுடன் சௌராஷ்டிரார் தொடங்கிய அன்னபூரணி பொங்கல் கடை இன்றும் பிரசித்தமாக உள்ளது. பருத்திப் பால், ஜிகிர் தண்டா போன்ற பானங்கள் பல்லாண்டுகாளகப் பிரபலமாக உள்ளன. தென்னை மரத்தின் குருத்தினை மெல்லிய சீவில்களாகச் சீவி விற்கிறவரும் அதை வாங்கி விருப்பத்துடன் உண்கிறவர்களும் நிரம்ப உள்ளனர். இரவு வேளையில் 2 மணிக்கு கண் விழிக்கும் போது, பசியெடுத்தால் சாப்பிடுவதற்குத் தெருவோரத்தில் கடைகள் உண்டு என்பது அற்புதமான விஷயம் தானே.

மதுரை போன்ற பழைய நகரத்தின் முகம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம் உணவகங்கள் தான். நெல்பேட்டை சோயா ஹோட்டல், டி.எம். கோர்ட் மெட்ராஸ் ஹோட்டல், டவுன் ஹால் ரோடு சுல்த்தாணியா ஹோட்டல், ரயில் நிலையம் எதிரில் அன்னபூரணி ஹோட்டல், காலேஜ் ஹவுஸ் ஹோட்டல், ஸ்ரீராம் மெஸ் விளக்குத் தூண் அருளானந்தம் ஹோட்டல், சித்திராக்காரத் தெரு தேனியப்பன் ஹோட்டல், நேதாஜிரோடு மாடர்ன் ரெஸ்டாரண்ட் . .. என நகராமெங்கும் பரவியிருந்த உணவகங்களில் சில இன்று மறைந்து விட்டன. இஸ்லாமியர் நடத்திய உணவங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்கப்படுவதாகப் பேச்சு நிலவினாலும, அந்த உணவங்களுக்கு விருப்பத்துடன் போகின்றவர் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. டி.எம். கோர்ட் என அழைக்கப்படும் இடத்தில் இன்றைய தெற்கு மாஜி வீராயும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடம் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் நான்கு பேர் சேர்ந்து சாப்பிடும் வகையில் சிறிய அறைகள் தள்ளு கதவுடன் இருந்தன. கல்லுரி மாணவர்கள், இளைஞர்கள் சம்சாவைப் புதினா சட்டினியைத் தொட்டுத் தின்று, தேநீர் குடித்தனர். பன் பட்டர் ஜாம், சமோசா போன்ற உணவுகள் அந்த உணவகத்தில் பிரபலம். தேநீரைக் குடித்து விட்டு ஒரு மணி நேரம் கூட அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். உணவக உரிமையாளர் எதுவும் சொல்லமாட்டார். போரடித்தால் இன்னொரு செட் சம்சா. தேநீர் எனப் பேச்சு நீளும். வித்தியாசமான உணவு, பேச்சு என இடமளித்த மெட்ராஸ் ஹோட்டல் மறைந்து போனது

to read more: http://koodu.thamizhstudio.com/katturaigal_25.php