Wednesday, February 15, 2012

தமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்

http://thamizhstudio.com/screening_7.php

இந்த அறையில் 70 பேர் வரை மட்டுமே அமர முடியும். எனவே முதலில் வருபவர்களுக்கு இருக்கையில் முதலிடம். படங்கள் குறித்த நேரத்தில் சரியாக திரையிடப்படும்.


தமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்

நிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்

ஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்

நாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை

நேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
அலுவலக வரைபடம் ( படத்தின் மீது சொடுக்கி பெரிதாக பார்க்கவும் )




நிகழ்ச்சி நிரல்:

நாள் ஒன்று: 18-02-2012, சனிக்கிழமை

காலை, 10.15 : ம. சிவக்குமார் உரை

10.35: படத்தொகுப்பாளர் லெனின் உரை.

11.00 : தி ஹெல்ப் - (2/26/34) : மணி/நிமிடம்/வினாடி
1.30 - உணவு இடைவேளை.

2.00 : தி ஆர்ட்டிஸ்ட் - 1/36/01 : மணி/நிமிடம்/வினாடி

3.40 : இடைவேளை

4.00 : மணிபால் (Moneyball) - 2/07/44 : மணி/நிமிடம்/வினாடி

6.10 - இடைவேளை

6.15 : வார் ஹார்ஸ் - 2/26/28 : மணி/நிமிடம்/வினாடி

8.45 : நாள் ஒன்று நிறைவு.

நாள் இரண்டு: 19-02-2012, ஞாயிற்றுக்கிழமை

காலை: 10.15 : தி டிசென்டன்ஸ் - 1/54 : மணி/நிமிடம்

12.05 : தி ட்‌‌ரீ ஆஃப் லைஃப் - 1/11/52 : மணி/நிமிடம்/வினாடி

1.30 - உணவு இடைவேளை

2.00 - ஹியூகோ - 2/00/52 : மணி/நிமிடம்/வினாடி

4.00 - இடைவேளை

4.10 : மிட்நைட் இன் பா‌ரிஸ் - 1/30/06 : மணி/நிமிடம்/வினாடி

6.00 - இடைவேளை

6.15 - எக்ஸ்ட்‌‌ரீ‌‌ம்லி லௌட் அண்ட் இன்க்ரெடிப்ளி குளோஸ் - 2/ 09 / 30 - மணி/நிமிடம்/வினாடி

8.30 : நிகழ்ச்சி நிறைவு.

திரையிடப்படும் படங்கள்: (பரிந்துரைக்கப்பட்ட படங்கள் இவை. விருது பெற்றவை அல்ல)
தி ஆர்ட்டிஸ்ட்!

பிரெஞ்ச் இயக்குனர் Michel Hazanavicius இயக்கியிருக்கும் இந்தப் படம் மௌனப்பட காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவ‌ரின் கதையை சொல்கிறது. இதனால் மௌனப் படமாகவே இப்படத்தை - கறுப்பு வெள்ளையில் - மைக்கேல் எடுத்துள்ளார். சினிமா பேசத் தொடங்கிய பின் ஹீரோவுக்கு ஏற்பட்ட ச‌ரிவும் படத்தில் இடம் பெறுகிறது. ஜனவ‌ரி இறுதியில் அமெ‌ரிக்காவில் வெளியான இப்படம் இதுவரை 52 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறது. சிறந்த படம் உள்பட 10 ஆஸ்கர் விருதுகளுக்கு இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் அற்புதங்களில் ஒன்று Ludovic Bource-ன் மயக்கும் இசை. எந்த வகையிலும் தவறவிடக் கூடாத படம்.
தி ட்‌‌ரீ ஆஃப் லைஃப்!

Terrance Mallick இயக்கியிருக்கும் படம். வெகுஜனங்களை எ‌ண்டர்டெயின் பண்ண எந்த முயற்சியும் எடுக்காதவர் என்பதால் இவரது முந்தையப் படமான தி நியூ வேர்ல்ட் பாக்ஸ் ஆஃபிஸில் சோபிக்கவில்லை. அதற்கு முந்தையப் படமான தி தின் ரெட் லைன் ஓர் அற்புதம். இரண்டாவது உலகப் போர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் போரைவிட போ‌ரில் ஈடுபடும் வீரர்களின் மனநிலையே முக்கியம் பெற்றிருக்கும். ஆஸ்க‌ரில் இதனுடன் மோதியது ஸ்பீல்பெர்க்கின் சேவிங் பிரைவெட் ரேயான். இதனால் போட்டியிட்ட 7 பி‌ரிவுகளிலும் இப்படம் தோல்வியை தழுவியது. சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத மகத்தான தோல்வி அது. வழக்கம் போல் எந்த விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் தி ட்‌‌ரீ ஆஃப் லைஃபை எடுத்துள்ளார். ஐம்பதுகளில் நடக்கும் கதை. மூன்று சகோதரர்களின் வாழ்க்கை - முக்கியமாக குழந்தைப் பருவம் பிரதானமாக வருகிறது. குப்‌ரிக்கின் 2001 ஸ்பேஸ் ஒடிசியை ஒத்த திரைக்கதை என்பதால் இதனைப் பார்த்துவிட்டு டெரன்ஸை ரசிப்பது நலம். மூன்று பி‌ரிவுகளில் விருதுக்குப் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மிட்நைட் இன் பா‌ரிஸ்!

இயக்குனர் Woody Allen உலக சினிமா ரசிகர்களின் ஆதர்ஷங்களில் ஒருவர். பேன்டஸி வகை திரைப்படமான இதில் ஹீரோ Owen Wilson ஓர் எழுத்தாளராக வருகிறார். இவர் தனது வருங்கால மனைவி மற்றும் அவளது பெற்றோருடன் பா‌ரிஸுக்கு பயணிக்கிறார். பா‌ரிஸ் கலைஞர்களின் சொர்க்கபு‌ரி. ஒரு கலைஞனாக ஹீரோவுக்கு இருக்கும் மன எழுச்சி பற்றி அவருடன் வரும் வருங்கால மனைவிக்கோ, அவளின் பெற்றோருக்கோ எதுவும் தெ‌ரிவதில்லை. ஒரு நாள் ஹெமிங்வே, சல்வடோர் டாலி, பிக்காஸோ என்று மிகப் பெ‌ரிய கலைஞர்களை ஹீரோ சந்திக்கிறான் என்று போகிறது கதை. போரடிக்காத ஒரு புதிய அனுபவத்துக்கு இப்படம் கியாரண்டி. நான்கு விருதுகளுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தி டிசென்டன்ஸ்!

இயக்குனர் Alexandar Payne இயக்கத்தில் வந்த சைடுவே படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? சுஜாதா இந்தப் படம் குறித்து சிலாகித்து எழுதியிருக்கிறார். 2004ல் வெளிவந்த இந்தப் படத்திற்குப் பிறகு 2011ல் வெளிவந்திருக்கிறது பெய்னின் தி டிசென்டன்ஸ். வேலையில் நேரத்தை செலவிடும் குடும்பத் தலைவன், அவனுடன் ஒட்டாத குடும்பத் தலைவி, 17 மற்றும் 10 வயதில் இரு பெண் குழந்தைகள், விபத்தில் கோமோவுக்கு சென்றுவிடும் குடும்பத் தலைவி, சூழ்நிலை காரணமாக அதிகம் நெருக்கத்தை காட்டாத மகள்களுடன் நெருங்கிப் பழக வேண்டிய குடும்பத் தலைவனின் கட்டாயம்... சந்தேகமில்லாமல் ஒரு குடும்ப மெலோ டிராமாதான் இப்படம். ஜார்‌ஜ் க்ளூனிதான் ஹீரோ. மனிதன் எந்த வேடத்தையும் தனது ஸ்கி‌‌ரீன் பிரசன்ஸில் பிச்சு உதறிவிடுகிறார். ஹவாயின் இயற்கை அழகு பார்ப்பவரை மயக்கிவிடும். ஐந்து பி‌ரிவுகளில் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவும் இதில் அடக்கம்.

வார் ஹார்ஸ்!

ஒரு மெகா பட்ஜெட் படத்துக்கான வாய்ப்பு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கதை முதலாம் உலகப் போர் நேரத்தில் நடப்பது. நீங்கள் எந்த மாதி‌ரி கதையை உருவாக்குவீர்கள்? டாங்கிகள் வெடிக்க, துப்பாக்கிகள் சீற ஒரு ரணகள கதைதான் உருவாக்கத் தோன்றும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தேர்வு செய்தது ஒரு குழந்தைகள் நாவல். பி‌ரிட்டிஷ் எழுத்தாளர் Michael Morpurgo எழுதி 1982ல் வெளிவந்த வார் ஹார்ஸ் நாவலை அதே பெய‌ரில் ஸ்பீல்பெர்க் படமாக்கியிருக்கிறார். ஒரு இளைஞனுக்கும் அவனது குதிரைக்கும் இடையிலான நட்பை சொல்லும் இந்தப் படம் ஸ்பீல்பெர்க்கின் இன்னொரு மாஸ்டர் பீஸ். ஆறு பி‌ரிவுகளில் இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்‌‌ரீ‌‌ம்லி லௌட் அண்ட் இன்க்ரெடிப்ளி குளோஸ்!

பைபிளை அடிப்படையாக வைத்து தயா‌ரிக்கப்பட்ட படங்கள்தான் உலகில் அதிகமாம். அமெ‌ரிக்கர்கள் இப்படியே போனால் பைபிளை டுவின் டவர் இடிப்பு சம்பவம் பின்னுக்கு தள்ளிவிட வாய்ப்புள்ளது. ஆம், இதுவும் டுவின் டவர் சோகத்தை பின்னணியாகக் கொண்ட வித்தியாசமான படம். டாம் ஹங்க்ஸ் டுவின் டவ‌ரின் 105வது மாடியில் இருக்கையில் தீவிரவாதிகள் விமானத்தை மோதி அதனை தரைமட்டமாக்குகிறார்கள். டாம் இறந்து போகிறார். அவரது மறைவுக்குப் பின் அவரது சாவி ஒன்று அவரது பத்து வயது மகனுக்கு கிடைக்கிறது. அது எதற்கான சாவி என்ற தேடல் கதையை நகர்த்திச் செல்கிறது. 2008ல் கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்த தி ‌ரீடர் படத்தின் இயக்குனர் Stephen Daldry இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இரு ஆஸ்கர் விருதுகளுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஹியூகோ!

மார்ட்டின் ஸ்கார்சிஸ் இயக்கியிருக்கும் 3டி படம் ஹியூகோ. இந்த வருடம் அதிக பி‌ரிவுகளுக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் படம். மொத்தம் பதினொன்று. எழுத்தாளர் Brian Selznick எழுதிய குழந்தைகள் நாவலான தி இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ கேப்ரெட்டை தழுவி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரான இந்த விஷுவல் ட்‌‌ரீட் மிகக் குறைவாகவே வசூலித்துள்ளது. மார்ச் மாதம் இந்தியாவில் இப்படம் வெளியாகிறது.
தி ஹெல்ப்!

Tate Taylor இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. கறுப்பினப் பெண்களின் வலியை வலியில்லாத காமெடியுடன் சொல்லியிருக்கிறார். இதுவும் கேத்த‌ரின் ஸ்டாக்கெட் எழுதிய நாவலை‌த் தழுவியே எடுக்கப்பட்டிருக்கிறது. 1960ல் மிசிசிபியில் உள்ள கறுப்பின வேலைக்காரப் பெண்கள் எதிர்கொள்ளும் இன துவேஷத்தின் பதிவு இது. படத்தின் முக்கியமான அம்சம் அசத்தலான நடிப்பு. நான்கு ஆஸ்கர் ப‌ரிந்துரைகளில் மூன்று சிறந்த நடிகைக்கானது - ஒரு சிறந்த நடிகை, இரண்டு சிறந்த துணை நடிகை - என்பது முக்கியமானது.
மணிபால்!

2003ல் அமெ‌ரிக்காவில் பேஸ்பால் சார்ந்து பரபரப்பை கிளப்பிய மைக்கேல் லிவிஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மணிபாலை இயக்குனர் பென்னட் மில்லர் இயக்கியுள்ளார். பிராட்பிட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆறு ஆஸ்கர் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.

படங்கள் சிறுகுறிப்பு நன்றி: : தமிழ் வெப்துனியா

நிகழ்வில் உறுதுணை: டாக்டர். சிவபாத சுந்தரம்

http://thamizhstudio.com/screening_7.php

Monday, February 6, 2012

கதைசொல்லி - அ.முத்துலிங்கம்

கதைசொல்லி பகுதி முத்துலிங்கம் அவர்களிடம் பேசிய சில நாட்களில் தானே இருபது கதைகளை பதிவு செய்து அனுப்பி இருந்தார். எப்போது நேரில் சென்று எழுத்தாளர்களை சந்தித்து அவர்களை கதை சொல்ல வைத்து பதிவு செய்து வருவதே வழக்கம். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் கனடாவில் வசிப்பதால் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவரது குரலில் கதைகளை கேட்பது புதியதொரு அனுபவத்தை வாசகர்களுக்கு தருமென்று நினைக்கிறேன். கதைசொல்லியை இப்படியும் இசையோடு சேர்த்து கொடுக்கலாம் என்று எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்திருக்க்றார் முத்துலிங்கம். அவர்களுக்கு எனது விசேச நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைகளில் ஆங்காங்கே மிக சிறப்பாக தன்னுடைய குரலில் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி, தேவையான இடங்களில் இன்னொருவரையும் கதையில் இணைத்து கதை சொல்ல வைத்த பாங்கு சிறப்பு. இப்படியான அர்ப்பணிப்பு உணர்வே முத்துலிங்கம் அவர்களின் வளர்ச்சிக்கும், அவரது சிறந்த எழுத்துக்கும் காரணம் என்று நினைக்கிறேன். இன்னமும் கூட அவரது கதைகளில் இருந்தா என்னால் விடுபட முடியவில்லை. இந்த அறிய சந்தர்ப்பத்தை வாசகர்களாகிய உங்களுக்கு அளிப்பதில் தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்கிறது.

இருபது கதைகளில் மற்ற பத்துக் கதைகளும் விரைவில் பதிவேற்றப்படும்.

கதைகளை கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_27.php

Wednesday, February 1, 2012

சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_31.php

சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்

குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்.
சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.

அணு சக்தியும் அணு ஆயுதங்களும் வேறு வேறு அல்ல

இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.

1988 லிருந்து துவங்கப்பட்ட கூடங்குளம் இரட்டை அணுவுலைகளுக்கெதிரான போராட்டம் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அணுசக்தித் துறையின் போராட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், மக்களை சாதி ரீதியில் பிரித்து போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் அரசாங்க உத்திகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் இப்போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளனர். அணுக்கொள்கையில் அரசாங்கத்தின் பிடிவாதமும், இந்திய பிரதமர் ரஷ்யா சென்று அணு வுலைகள் தொடர்பாக செய்த அறிவிப்பும் மேலும் இப்போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ள இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து வருபவர் சுப. உதயகுமார். தொடர்ந்து அணுசக்தியும், அணு ஆயுதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்துவரும் சுப. உதயகுமார் காந்திய வழியில் போராடி வருபவர். காந்தியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். நாகர்கோவிலுள்ள இசங்கன்விளை என்னும் ஊரைச் சார்ந்த உதயகுமாரை குமுதம் தீராநதீ நேர்காணலுக்காக, 02.12.2011 அன்று இடிந்தகரையில் சந்தித்துப் பதிவு செய்த உரையாடல் இது.

தீராநதி: உங்களுடைய இளம்பிராயம் பற்றிச் சொல்லுங்கள்?

உதயகுமார்: நான் பிறந்தது நாகர்கோவில்ல கோட்டார் பகுதியில் உளள இசங்கன்விளையில். அப்பா திகவிலும் பின் தி.மு.க. விலும் தீவிரமாக தீவிரமாக இருந்தவர். அப்பாவின் பெயர் பராமார்த்த லிங்கம். அப்பா எங்க ஊர் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் கோட்டையில் அப்பா பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் பேசக்கூடியவர். பொதுக்கூட்டங்கள் நடத்துவாங்க. பெரும்பாலான கூட்டங்கள் அப்போது வன்முறையில்தான் முடியும். அப்பாவை அடிக்க வருவாங்க. அப்போ நானும் தங்கச்சிகளும் கூட நின்று பாதுகாப்போம். அப்படி இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.

அம்மா கல்லுப்பட்டியில் காந்திய ஆஸ்ரமத்தில் படிச்சாங்க. அவங்களுக்குச் சொந்த ஊர் நாகர்கோவில், ராமன்புதூர் காந்தியத்தில் ஆழமான பிடிப்பு அம்மாவுக்கு உண்டு. எஸ்பொன்மணி அம்மாவின் பெயர். அம்மா ஒரு காமராஜர் பக்தை. காங்கிரஸீக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க ஆதரிப்பாங்க நேர் எதிர்நிலையில் அப்பா திராவிட சிந்தனை கொண்டவர். ஆனால் வீட்டுக்குள்ள எல்லாம் ஐனநாயக முறைப்படித்தான் நடக்கும். அப்பா யாருக்கும் ஓட்டுப்போடச் சொல்ல மாட்டாங்க. அம்மாவும் சொல்ல மாட்டாங்க. வீட்டுக்கு முன்பு பெயிர காமராஜர் படம் இருக்கும். அப்பா பெரியார், அண்ணா படங்களை வீட்டில் வைத்திருப்பாங்க. எனினும் ஒரு ஐனநாயகச் சூழலில் தான் நாங்க எல்லோரும் வளர்ந்தோம். அம்மா, அப்பா இரண்டுபேரும் பொது வாழ்க்கையில் ரொம்ப ஆர்வமாக இருந்தாங்க. அம்மா சமூக நலத்துறையில் பணிபுரிந்ததால் இந்தக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக பால்வாடி மற்ற பிற இடங்களிலிருந்து கிறிஸ்துவப் பெண்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் அவர்கள் பிரார்த்தனை செய்வாங்க. என்னையும் செய்யச் சொல்வாங்க அதன் மூலமாக சிறு வயதிலிருந்தே கிறிஸ்துவ மதத்தின் மீது மரியாதை இருந்தது. ஆனால் நடைமுறையில் பழக்கவழக்கத்தில் நாங்கள் இந்துவாக இருந்தோம். சுடலை மாடசாமி கோயிலிருந்து இசக்கியம்மன் கோயில் வரை ஒரு கோயிலையும் அம்மா விடமாட்டாங்க. எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுடலைமாடன் கோயில, முத்தாராம்மன் கோயில் எல்லாம் உண்டு. கொடைவிழாக்களுக்கு அந்தக் கோயில்களுக்கு வரிகொடுத்து வந்தோம். அப்பா தி.கங்கறதுனால அவருக்கு இவற்றில் பிடிப்பில்லை. இவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார். ஆனாலும் அம்மாவோடும் எங்களோடும் அவர் கூட வருவார். அப்பா விபூதி, சந்தனம் எதுவும் பூசமாட்டாங்க. பூஜையில் பங்கெடுக்கமாட்டாங்க.


தீராநதி: முறைசார்ந்த கல்வி, முறைசாராத கல்வி பற்றிக் கூறுங்கள்?

உதயகுமார்: எதிரும் புதிருமாக இருந்தாலும் சேர்ந்து வாழணுங்கற நிலைப்பாடும் எங்களுக்கு காந்தியத்தின் மீதான நம்பிக்கையும் எல்லாமே அம்மாவிடமிருந்து வந்ததுதான். துவக்க கல்விக்குப்பின் நாகர்கோவில் டி.விடி. மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தமிழ் மீடியம் படிச்சாலும் எனக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடு உண்டு. சுவாமிதாஸ்னு ஆங்கில ஆசிரியர் இருந்தார். அவரிடம் ஆங்கில டியூஷன் போவேன். கல்லூரிப் படிப்பு பயோனியர் குமாரசுவாமி கல்லூரி பொறியியல் படிக்க வேண்டுமென அப்பா ரொம்ப விரும்பினாங்க. எனக்கு கடுகளவும் அதில் விருப்பமில்லை. எபனேசர் பால்ராஜ்ன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். குமாரசுவாமி கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியர். அவங்க இன்ஜினீயரிங் உனக்கு ஒத்து வராதுன்னு சொன்னாங்க. அது சரிதான். அவர்தான் எனக்கு குறிக்கோள் ஊட்டினார். நீ சமூக அறிவியல் படின்னு சொல்வாங்க. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முயற்சி செய்யும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எத்தியோப்பியால பள்ளி ஆசிரியர் வேலைக்கு விளம்பரம் வந்தது. வேலைக்குப் போனேன். அப்போ கம்யூனிஸ சித்தாந்தத்தில ஈடுபாடு இருந்தது. வீட்டுல அப்பா நிறைய புத்தகங்கள் வச்சிருப்பார். லெனிபைப் பற்றி, மார்க்ஸ் பற்றி, மூலதனம் பற்றி அப்பாகிட்ட அது தொடர்பா கேள்விகள் கேட்டிருக்கிறேன். அப்பாவும் தி.க. பெரியாரிய, கம்யூனிஸ சிந்தனை உள்ளவங்கங்கறதுனால நிறைய விவாதித்திருக்கிறோம்.

எத்தியோப்பியாவுக்குப் போன பின்னர் தான் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதைப் படித்தேன், பார்த்தேன். மெங்கிஸ்ட் ஹெலமெரியம் என்கிற ஒருத்தர்தான் எத்தியோப்பியால ஆட்சியாளரா இருந்தார். ராணுவ ஆட்சியாளர் படுபயங்கரமான இரும்புக்கரத்தோட அந்த நாட்டை ஆட்சி செய்தார். தனி மனித சுதந்திரம் அங்கு சுத்தமாகக் கிடையாது. ரொம்ப இறுக்கமாக ஒருங்கிணைந்து மக்கள் மூச்சுவிடமுடியாத அளவுக்கு நெருக்கி வச்சிருந்தாங்க. அப்ப சோவியத் யூனியனின் நெருங்கிய நாடாக எத்தியோப்பியா இருந்தது. கம்யூனிஸம் அமல் ஆனா இப்படித்தான் இருக்கும் என்பதை அங்குதான் பார்த்தேன். அப்ப சோவியத்தில் பிரஷ்நேவ் ஆட்சியாளர். இது எண்பத்தொன்று எண்பத்தேழுகளிலிருந்த நிலை. ஹெலமெரியம் எல்லா சோசலிஸ்ட் நாடுகளுக்கும் போவாரு. அந்த நாட்டுத் தலைவர்கள் இங்க வருவாங்க. அந்த நாடுகளிலிருந்து நிறைய உதவிகள் கொடுப்பாங்க. இவையெல்லாம் எனக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் பற்றிய கல்வியாக இருந்தது. கம்யூனிஸ அரசாங்கம் என்பது நாம் நினைக்கிற மாதிரி சுதந்திரமான அதிகார மையமாக இருக்காது. ஒரு குழு பிறரை ஒடுக்கக்கூடிய மற்றொரு அதியார மையமாகத்தானிருக்கும் அப்படின்னு தெரிந்தது. 81, 87 வரையில் அங்கிருந்தேன். அங்க ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இருந்தபோது யுனெஸ்கோ கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்தேன். அகில உலக புரிதலைக் கொண்டு செல்வதற்காக அதுவொரு உலகளாவிய இயக்கம். அரசாங்கத்துக்கு இந்த இயக்கம் தர்ம சங்கடமாக இருந்தது. நடத்தாதன்னு சொல்ல முடியல. யுனெஸ்கோ கூரியர் இந்த இயக்கம் நடத்திய இதழ்தான். உலகம் முழுவதும் சமாதானம் சுற்றுப்புறச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளை அது உலகம் முழுக்கக் கொண்டு சென்றது.

தீராநதி: இளமையிலேயே எப்படி இயக்கத்திற்கான தூண்டுதல் ஏற்பட்டது?

உதயகுமார்: கல்லூரி வாழ்க்கையின்போது மாணவர் அமைப்பை வைத்திருந்தோம். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் கூட்டங்களுக்குச் சென்று வந்தோம். ஆனால் அவங்க பேசியது எதையுமே எங்களுக்குப் புரிஞ்சுக்க முடியல. அவங்க அவ்வளவு உயர் தமிழிலி பேசினாங்க நாங்க எறும்புகள்னு ஒரு அமைப்பை ஆரம்பித்தோம். நானும் அகம்மது ஹமீர் ஒரு இஸ்லாமிய நண்பர், இளங்கடை ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து வாரந்தோறும் கூட்டம் போடுவோம். இலக்கியக் கூட்டங்கள்தான். அப்போது எங்க பேரைக் கூட எறும்புகள்னுதான் போடுவோம். எறும்புகள் உதயகுமார், எறும்புகள் ஜெயக்குமார் இப்படி காகங்களில் எங்களைச் சேர்க்க முடியல. எங்களால சேர்ந்துக்க முடியல என்பது உண்மை.

பிறகு இயக்கம் ஒன்றை நாங்க ஆரம்பித்தோம். அப்ப இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் கப்பற்படைகள் எல்லாம் நிலைகொண்டிருந்தன. இப்படியிருந்தா நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்னு அந்நியப் படைகள் வேளியேற வேண்டுமென்று குரல் கொடுத்தோம். அப்பகுதியில் இவங்களுக்குள்ள ஒரு அணு ஆயுத யுத்தம் வந்தால் நாமெல்லாம் அழிந்து போவோம். இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய கப்பற்படைகள் நிற்கக்கூhது அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்பில் தீர்மானம் போட்டோம். வித்தியசமான ஒரு குழு எங்கள் குழு உலகளாவிய விஷயங்களில் ஆர்வம் காட்டினோம். அது முக்கியமான காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் முதன்முதலாக நாங்கள் அணுசக்தி பற்றிப் பேச ஆரம்பித்தோம். அணுசக்தியும் அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டவை என்பதை இணைத்துப் பேசினோம்.

தீராநதி: உங்களுடைய அரசியல் சார்பு நிலை கட்சிகள் சார்ந்து இருந்ததா?

உதயகுமார்: எதுவும் கிடையாது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். உறுப்பினரெல்லாம் இல்லை. ஈடுபாடு இருந்தது. யுனெஸ்கோ அமைப்பை எத்தியோப்பியாவில் ஆரம்பித்ததை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசியல் கல்வியை அங்க பாடத்திட்டத்திலேயே சொல்லிக் கொடுப்பாங்க. அவற்றில் மேற்கத்திய நாடுகளில் எதுவும் கிடையாதுங்கிற மாதிரி பாடங்கள் இருக்கும். அரசியல் கல்வியை நானும் அந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறேன்.

அங்கே என்னுடைய சம்பளத்தையே யுனெஸ்கோ தான் கொடுத்தது. யுனெஸ்கோ கிளப்பில் மாணவர்களைத்தான் தலைவராய் நியமிப்போம். செயலாளர், பொருளாளர் எல்லாம் மாணவர்கள்தான். ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடத்துவோம். பிற தூதரகங்களுக்குக் கடிதம் எழுதி தகவல்கள் வாங்கி அதனை வெளியிடுவோம். தொடர்ந்து மாணவர் இதழ் ஒன்றை கையெழுத்துப் பிரதியாகக் கொண்டு வந்தோம்.

இந்த நடவடிக்கைகள் எத்தியோப்பிய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியது. அரசாங்கம் எங்களைக் கண்காணிக்க மாணவ ஒற்றர்களை நியமித்திருந்தது. அவர்கள் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரா பேசுறோம் என்கிற செய்தி பரவி, அரசாங்கம் சந்தேகப்பட்டது. மீண்டும் அடுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் எத்தியோப்பியாவில் ஆசிரியர் வேலையிலிருந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிரவம் என்கிற நிலைமை. அதனால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் திரும்பி வந்துவிட்டேன்.

தொடர்ந்து யுனிவர்சிட்டி ஆஃப் நோட்டர் டேம்ல சமாதானத்திற்கான ஆய்வு பற்றிப் படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்தது. என்னைப் பரிந்துரை செய்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பெண்மணி. அவர்களை 1986-ல் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கில் கட்டுரை படிக்கும் போது சந்தித்தேன். உன்னைப் பரிந்துரை செய்திருக்கிறேன். அட்மிஷன் கிடைத்து உனக்கு விருப்பமும் இருந்தால் போ என எழுதியிருந்தார்கள். நானும் அந்தக் காலகட்டத்தில் குழப்பத்திலிருந்தேன். தங்கை ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பெரிய தங்கைக்குத் திருமணத்தில் சில பிரச்னைகள் இருந்தன. அப்போ எனக்கு ஊரில் இவற்றைத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை. 89ன் பிற்பகுதியில் பிரச்சினைகள் ஓரளவு சரியான பின் ஆஸ்திரேலிய அழைப்பை ஏற்று அங்க போயி எம்ஏ பண்ணினேன். பயணச் செலவு, படிப்புச் செலவு உணவுச் செலவு, தங்கும் செலவு எல்லாம் அவங்க கொடுத்தாங்க. அதோடு கைச் செலவுக்கு 100 டாலர் கொடுத்தாங்க. பதினைந்து நாடுகளிலுள்ள பதிமூன்று ஆண்களும் பெண்களும் ஒரே கட்டடத்தில் தனித்தனியறையில் தங்கியிருந்து படித்தோம். அந்த இடத்தின் பெயரே பீஸ் அவுஸ். அப்போ என்னுடைய பேராசிரியர் ஒருவர் யுனிவர்சிட்டி அவாய்ல வேலை பெற்றுத் தந்தார். ஒரு பேராசிரியருக்கு ஆய்வு உதவியாளராக வேலை செய்தேன். பின்னர், அங்கு தான் பிரசின்டிங் த பாஸ்ட் என்கிற என்னுடைய பி.எச்.டி ஆய்வுப் படிப்பையும் முடித்தேன்.

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_31.php