Thursday, June 23, 2011

முகவரி - கலாப்ரியாமுகவரி

http://koodu.thamizhstudio.com/thodargal_7_24.php


கலாப்ரியா

கல்யாணி அண்ணன் வீட்டில் உட்கார்ந்து எல்லோரும் 88 சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று யாருக்கோ அது போரடிக்க, கேரம் விளையாட முடிவெடுத்தார்கள்.எனக்கு கேரமும், கோலிக்காயும் சுத்தமாக வராது.மற்றதெல்லாமும் நன்றாக வரும் என்று அரத்தமில்லை. கேரம் விளையாடுவதைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களார்களில் ஒருவனாக இருந்தேன். திடீரென்று வண்ணதாசனின் அண்ணன் கணபதியண்ணன் சட்டை போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். அவர் எங்கள் விளையாட்டுக்களில் எல்லாம் கலந்து கொள்வதில்லை. அப்போது அவர் பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். “என்னாப்பா, ஒன்னைய ஆட்டைக்கி சேக்கலையா..” என்றார். நான் எழுந்து நின்று “எனக்கு கேரம் தெரியாது” என்று அசடு வழிந்தேன்..” எங்கூட வாரியா என்றார்கள்.சரி என்று கிளம்பினேன், “ வீட்டுக்குப் போய் சட்டை போட்டுட்டு வா” என்றார்கள். “யாரை, சின்னப்பயலையா கூட்டீட்டுப் போறீங்க.....” என்று யாரோ கிணடலடித்தார்கள்.நான் டிராயர் மட்டுமே போட்டிருந்ததேன். ஆறாம் வகுப்பு முழுப்பரீட்சை லீவு. என் வீடு ஏழு வீ டு தள்ளி யிருந்தது. அவரது வீடான அன்பகம். 21. E. என்றால் எங்கள் வீடு, குமரன் அகம் 28.வீட்டுக்குப் போகிற இடைவெளியில் அண்ணன் சொன்னார்கள்,” கீழ ரத வீதியில் தி.மு.க அலுவலகம் என்றிருக்கிறதாமே, அதன் கீழ்த்தான் ஒருவரைப் பார்க்கப் போகிறோம், அவர் ’தினமலர்’ நாளிதழ் ஓவியர் அருணா என்றார்.

” ஆமா, வீரன் வேலுத்தம்பி சித்திரக்கதைக்கெல்லாம் படம் எல்லாம் போடுறாரே அவரா என்றேன். ஆமா அவரேதான். என்றார். அவர் கார்ட்டுனும் போடுவார். தினமலர் அப்போது தென் மாவட்டங்களில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கை. தினத்தந்தி மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்தது, அதில் கன்னித்தீவு கிடத்தட்ட எண்ணூறு “அத்தியாயம்” வந்திருந்தது. தினமலரில் தளவாய் வேலுத்தம்பி கதையான வீரன் வேலுத்தம்பி வந்து கொண்டிருந்தது.அதற்கு ஓவியர் அருணா.”ஏதோ இன்று பெரிய மனுஷ தரிசனம் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குப்போய் சட்டையை மாட்டியபடியே வெளியே வந்தேன். அக்காவோ யாரோ “தொரை எங்க இன்னேரத்தில சட்டையை மாட்டீட்டிக் கிளம்புதாரு... என்றார்கள். “நான் கழக அலுவலகம் வரைக்கும் போய்விட்டு வாரேன்..” என்று நகர்ந்தேன்.அப்பா “ ஏல...” என்று சத்தமிடுவது தெருவில் இறங்கி விட்ட பின் கேட்டது.

கீழரதவீதியில் அப்பர் கிளாப்டன் ஸ்கூலுக்கு அடுத்து வடபுறம் ”திராவிட முன்ன்ற்றக்கழக அலுவலகம்” என்று மாடியில் ஒரு போர்டு தொங்கும். உண்மையில் அங்கு எதுவும் அலுவலகம் இயங்கியதா என்றெல்லாம் தெரியாது.அதற்குக் கீழே ஒரு பழைய இரும்புக் கடை. உண்டு. ஒரு வேளை அவர் கட்சிக்காரராக இருந்திருக்கலாம். அங்கே போனதும் கணபதியண்ணன், ”போ, போய்க் கேளு, ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா என்று” என்றார். நான் ஒருவரிடம் போய் “ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா...” என்று கேட்டேன்.” நாந்தான் அருணா.. நீ யாருய்யா.. ”என்று அவர் கேட்கவும்.,அதே நேரத்தில் “ அவர்தான் அருணா..”என்று அண்ணான் சொல்லவும் சரியாய் இருந்தது.அதில் “ஏய் என்னத்தையும் அதிகப் பிரசிங்கித்தனமா சொல்லிராதப்பா..” என்ற ஜாக்கிரதை தொனித்தது. நான் அப்போதெல்லாம் (இப்பவும்தான்) அப்படி “அ.பி’’ தான்.அண்ணன் தன்னிடமுள்ள அவர் வரைந்த ஓவியங்களைக் கண்பித்துக் கொண்டிருந்தார். அவர்,சேவியர் கல்லூரி மேகசீனில் வரைந்திருந்த சரஸ்வதி கோட்டோவியமும் ஒன்று.அருணாஅதை வெகுவாகப் பாராட்டினார்.அதைத் தான் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார்.கணபதியண்ணன் மகிழ்ச்சியோடு சம்மத்தித்தார்.

அதில் ஒரு பாரதிதாசன் ஓவியமும் இருந்த நினைவு. அதையே நான் கோணல் மாணலாக வரைந்து ஸ்கூல் மேக்சீனுக்கு, பிற்காலத்தில்க் கொடுத்தேன்.ஸ்கூல் மேகசீனில் பாரதிதாசன் படத்தையெல்லாம் போடாத காலம் அது. இல்லையென்றாலும் போடக்கூடிய அளவு கொஞ்சங்கூட நன்றாகவும் இல்லை.அவர்கள் இருவரும் படத்தை ‘ப்ளாக்” எடுப்பது எப்படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.” நீங்க இண்டியன் இங்கில் எதை வரைந்து எப்படிக் கசக்கிக் கொடுத்தாலும் அதை என்ன சைசில் வேண்டுமானாலும் ப்லாக் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார்.

நீங்கள் எந்த அளவிலிம் வரையலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.மறுநாள் நான் முதல் வேலையாக எட்டணாவுக்கு இண்டியன் இங்க் என்கிற ப்ளாக் இங்க் பாட்டில் ஒன்றும் தொட்டு எழுதுகிற ’நிப்’ பேனாக்கட்டையொன்றும் வாங்கினேன். அன்பகத்தில் ப்ளாக் இங்க் கேக்கும் உண்டு. கணபதியண்ணனும். கல்யாணியண்ணனும் ப்ரஷ்ஷை தண்ணீரில் முக்கி அதில்த் தோய்த்து அருமையாக வரைவார்கள். எனக்கு ஒரு நாளும் ப்ரஷ்ஷால் வரையவோ எழுதவோ வந்ததே இல்லை.அந்த வருட சரஸ்வதி பூஜையன்று வந்த தினமலரில் அருணா ஒரு ‘கருத்துப்படம்’ போட்டிருந்தார். ஒரு சரஸ்வதி படம் போட்டு. கிழே “இன்று நாடெங்கும் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்”, என்ற “கருத்தையும்” போட்டிருந்தார்கள்.அது அப்படியே கணபதியண்ணன் வரைந்த படம்.

அவர்கள் வீட்டில் நான் கற்றுக் கொண்டவை எவ்வளவோ உண்டு. கணபதியண்ணன் மேஜைக்குள்ளும் சரி, கண்ணாடி ஸ்டாண்டிலும் சரி சாக்பீஸ் துண்டுகளுக்குப் பஞ்சமே இருக்காது. மாடியின் செங்கல் தரையிலும், முன் வெராந்தாவின் சிமெண்டுத்தரையிலும் கணப்தியண்ணன், விகடன், குமுதம் இதழ்களில் வருகிற படங்கள் வரைந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அங்கே வாராத பத்திரிக்கைகளே கிடையாது.கண்ணன் என்றொரு பத்திரிக்கை, அதில் சுப்பு, ரமணி என்று ஒருவரே வரையும் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வாண்டுமாமா, ’ஆர்.வி’ ஆகியோரின் சித்திரக்கதைகள், எல்லோருக்குமே, ரொம்பப் பிடிக்கும். விகடனில் அப்போது இதயனின் நடைபாதை என்றொரு தொடர் வந்து கொண்டிருந்தது.அதில் வருகிற கோபுலுவின் படங்களை அவர் அப்படியே எந்தச் சிரமுமில்லாமல் வரைவார். அவருக்கு குமுதத்தில் வருகிற ‘வர்ணம்’ என்பவரின் வாஷ் டிராயிங் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவருக்கு பாராட்டுக் கடிதங்கள் எழுதி பதிலெல்லாம் வரும். ஒரு போஸ்ட் கார்டில் வர்ணம் ஒரு பெண்ணின் தோள்ப்பட்டை வரையிலான படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். கணபதி என்கிற தன் பெயரைக்கூட அவர், ‘ ’வர்ணம்’, என்ன ஸ்டைலில் கையெழுத்துப் போடுவாரோ அதே போல், தன் படங்களின் கீழ்ப் போடுவார்.அவருக்கு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று பெரிய கனவு.ஏனோ அதை அவர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை. லயோலாவில் எம்.ஏ சேர்ந்து படித்தார். அவருக்கு பி.பி ஸ்ரீனிவாஸ் குரலின் மீது அப்படியொரு காதல். “அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா....” பாட்டு, எதிர் வீட்டு வானொலியில் ஒலி பரப்பினால் மாடியின் வெளிப்புறத்திற்கு வந்து நின்று கேட்பார்.பாட்டு முடியும் வரை பேசவும் மாட்டார். பேச அனுமதிக்கவும் மாட்டார்.பாசமலர் படத்தில் வருகிற “யார் யார் அவள் யாரோ.. “ பாட்டுக்காக என்னிடம் ஒரு அணா (ஆறு நயாபைசா) தந்து பாசமலர் பாட்டுப்புத்தகம் வாங்கி வரச் சொன்னார்.அப்போது பாடல்களில் ஹம்மிங் பிரபலமாகியிருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொற்காலம்.ஓவியம் என்றில்லை அருமையான மரபுக் கவிஞர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜிப்ரானை மொழி பெயர்த்திருக்கிறார்.சமீபத்தில் குறுந்தொகைப் பாடல்களை எளிமையான கவி வடிவத்தில் தந்திருக்கிறார்

அவருடன் லயோலாவில் படித்த நாக வேணுகோபாலன் என்றொரு நண்பரை சமீபத்தில் டில்லி தமிழ்ச்சங்க கருத்தரங்கு ஒன்றில் சந்தித்தேன். இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒருவர் அவராகவே வந்து, ”உங்களின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை அந்திமழை ப்லாக்கில் படிக்கிறேன், ரொம்ப நன்றாக இருக்கிறது”, என்றார். ஒரு ரசிகரைச் சந்திக்கிற வழக்கமான கூச்சம் கலந்த சந்தோஷ ஆர்வத்துடன் மட்டுமே அவரை எதிர்கொண்டேன்.மிக ஒல்லியான உருவம். என்னை விட எட்டு வயது அதிகமிருக்கும்.ஃபுல் ஸூட்டிலிருந்தார்.”ரொம்ப நன்றி....” என்று கொஞ்சம் மட்டுமே பேசினேன். அவர் என்னை விடுவதாயில்லை.”அது சரி, கலாப்ரியா,என்னை யார் என்று கேட்கமாட்டீர்களா....” என்று பதிலுக்குக் கூட காத்திராமல்,” நான் உங்க கணபதியண்ணனோட கிளாஸ்மேட், லயோலாவில் நாங்க இரண்டு ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சோம், இந்தாங்க, நேற்று உங்களைப் பார்த்ததுமே ஒரு வேலை செஞ்சேன், அண்ணன், காலேஜ் மேகசீனில் எழுதிய ஒரு கட்டுரையின் நகலை ஜெராக்ஸ் பண்ணிக் கொண்டாந்திருக்கேன்”, என்று ஒரு ஜெராக்ஸ் பிரதியையும் ஒரு ஃபோட்டோவின் ஜெராக்ஸையும் தந்தார். “ நீங்க எப்ப கணப்தியண்ணனைப் பார்ப்பீங்களோ, அப்ப கொடுங்க” என்றார்.அதைக் கொடுத்து விட்டு என்னைத்தன் சின்ன உருவத்தால் கட்டிப் பிடித்துக் கொண்டார். புகைப்படத்தில் அவர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் போல உயரமான கணபதியண்ணனின் அருகே நின்று கொண்டிருந்தார். ’ஆளுக்கொரு வீடு’ படத்தின் அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா.....’பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு, ஓவியம், கவிதை என்று நிறையப் பேசிக் கொண்டிருந்தார்.அவர் மீதான மரியாதையை அதிகப் படுத்திக் கொண்டே இருந்தார். ஊருக்குப் போன பின் முதல் வேலையாக இதைக் கணபதியண்ணனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.டில்லிக் குளிர் விட்டவுடன் அந்த யோசனையும் மறைந்து போயிற்று.

சென்ற வாரம் இன்னொரு பயணத்திற்காக, டில்லிக்கு கொண்டு சென்ற பெரிய சூட் கேஸை எடுத்த போது அதிலேயே தங்கி விட்ட அந்த ஜெராக்ஸ்`நகல் கண்ணில் பட்டது. பயணம் கிளம்புகிற அவசரம். இரண்டு வரி நலம் விசாரித்து, ஒரு கடிதம் எழுதி,ஜெராக்ஸை இணைத்து, நினைவில் இருந்த அவரது ஆதம்பாக்க முகவரியையும் வீட்டு ஃபோன் நம்பரையும் எழுதி, ஒரு நண்பரிடம் கொடுத்து “ எப்பா இதை ஒட்டி கூரியரில் சேர்த்து விடு..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.முந்தா நாள் கணபதியண்ணனிடமிருந்து கடிதம் வந்தது. ”வேணு தந்தவைகளை அனுப்பி வைத்தற்கு ரொம்ப சந்தோஷம். அந்தக் கட்டுரை என்னிடம் கூட இல்லை. நீ முகவரி சரியாக எழுதவில்லை, ஃபோனில் விசாரித்து, கொண்டு வந்து தந்தார்கள் அவர்களுக்குப் புண்ணியம் சேரட்டும்...”. என்று வழக்கம் போல இன்லண்ட் லெட்டரின் ஒரு இடத்தைக் கூட மிச்சம் வைக்காமல், எழுதி, ஒரு ஓரத்தில் வீட்டின் தெளிவான முழு முகவரியையும், செல் பேசி எண்ணையும், ஈ மெயில் முகவரியும் எழுதி இருந்தார்கள். தமிழ் பேசும் எந்த மூலையிலும் என் முகவரியைத் தெரிந்த ஒன்றிரண்டு பேராவது இருக்கிறார்கள்...என்றால் அதற்கு கணபதியண்ணன்தான் காரணம்.. அவருக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஒத்தி வைப்பதில் நாம்தான் கில்லாடிகளாயிற்றே... ஆனால் காலக்கணக்கன் எதையும் ஒத்தி வைப்பதேயில்லை.

நேற்று மதியம் ஒரு ஃபோன்,. ”கணபதியண்ணன் மாரடைப்பில் திடீரென காலமானான், கோபால்..முக்கால் மணி நேரமாச்சாம்.... ” என்று கட்டுப்படுத்த முடியாத அழுகையுடனான குரலில் வண்ணதாசனிடமிருந்து.


http://koodu.thamizhstudio.com/thodargal_7_24.php

Monday, June 20, 2011

வலது புறம் செல்லவும் - 13 - இயக்குனர் அகத்தியன்வலது புறம் செல்லவும் - 13


இயக்குனர் அகத்தியன்20-06-2011, 09:50 PM

தாவீதின் குமாரன் சாலமோன் நீதி சொன்ன மண்ணிலே ஓர் குரல் ஒலித்தது.

கடவுளின் கட்டளைக்கு எதிராக செயல்பட்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்ன ஜக்காரியாவை கல்லெறிந்து கொன்ற ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்தக் குரல் ஒலித்தது.

கொள்ளையடிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த அந்த ஆலயம் அன்றைய தினம் சதுசேயர்களாலும் பரிசேயர்களாலும் வியாபாரத் தலமாக மாற்றப்பட்டிருந்தது.

அவர் பேசினார்:

"என் மக்களே துரோகத்துக்குப் பெயர்போன ஜெருசலேம் இது. எத்தனையோ தீர்க்கதரிசிகளுக்குத் துரோகம் செய்திருக்கிறது.

உங்கள் கண்ணெதிரிலேயே யோவானைக் கொன்று புதைத்திருக்கிறது. ரோமானிய ஆட்சி, ஏரோதுவின் திறமையின்மை இவற்றைப் பயன்படுத்தி மதகுருமார்களும் பரிசேயர்களும் உங்களை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட அங்கிகளையும் அதன் மேல் அழகிய வேலைப்பாடுகள் மிக்க மேலாடைகளையும் அணிந்துகொண்டு, வேதங்கள் எழுதப்பட்ட துணிகளை தலையிலும் கைளிலும் சுற்றிக்கொண்டு, ஆடம்பரமான விருந்துகளிலே முதலிடம் பிடித்துக்கொண்டு, கோவிலில் இவர்களுக்காக தனியிடம் ஒதுக்கிக்கொண்டு செல்வச் செழிப்பில் கொழிக்கிறார்கள்.

ஆலயத்துக்குள்ளே வியாபாரம். காணிக்கைப் பொருட்களை மக்கள் வெளியிலிருந்து கொண்டு வரக் கூடாது. ஆலயத்துக்குள்ளேதான் வாங்க வேண்டும். ஏன்? இதிலே அவர்கள் ஆதாயம் பார்க்கிறார்கள்.

கோவிலினுள் மக்கள் பயன்படுத்தும் நாணயம் செல்லாது. சீசரின் நாணயம் மட்டுமே செல்லும். காரணம் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நாணயம் மாற்றுவதிலும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக.

கோவிலுக்குப் பத்தில் ஒரு பங்கு என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மட்டும் சட்டப்படி வாங்கி விடுகிறார்கள். ஆனால், அதில் சொல்லப்பட்ட நீதி, நேர்மை, இரக்கம், முதலானவற்றைக் கடைபிடிக்கவே மாட்டார்கள்.

அவர்கள் போதிப்பார்கள். அதன்படி நடக்க மாட்டார்கள். அவர்கள் கடவுளை வணங்குவது உங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக.

எங்களை குரு என்று அழை, தந்தை என்று அழை என்று மதத்தின் பெயரால் உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

அப்படி அவர்களை அழைக்காதீர்கள். உங்கள் குருவும் தந்தையும் வானகத்தில் இருக்கும் இறைவன் மட்டுமே.

வெளித் தோற்றத்திலே அழகாக உடையுடுத்தி இருக்கும் அவர்களின் மனதிலே சுயநலமும், வன்முறையும் நிறைந்திருக்கின்றன.

உள்ளே எலும்புகளாகவும் வெளியே அழகாகவும் இருக்கின்ற வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைதான் அவர்கள்.

இவ்வாறு நான் பேசுவதால் நான் சட்டங்களை அழிக்க வந்தவன் என்று நினைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றவே வந்தேன். நீங்கள் சட்டம் சொல்வதை நிறைவேற்றுங்கள். ஆனால் அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை மேற்கொள்ளாதீர்கள். அது சட்டத்திற்கு புறம்பானது.

தீர்க்கதரிசிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் வாரிசுகள் நாங்கள் என்று பெருமையடித்துக் கொள்ளும் கூட்டம் அது.

அவர்களுக்குச் சொல்கிறேன். இந்த ஜெருசலேமில் இருந்து கொண்டு, இந்த ஆலயத்தின் பேரால் பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல. இந்த ஆலயத்துக்கும்தான். உங்கள் பாவங்களினால் இந்த திருக்கோவில் இடிந்து விழுந்து ஒரு கல் கூட அதனிடத்தில் இல்லாமல் போகும்.

இந்த உலகத்தைப் பாவங்களிலிருந்து விடுதலை செய்யவே நான் வந்திருக்கிறேன்.

நான் இந்த உலகத்திற்கு ஓர் ஒளியாய் வந்திருக்கிறேன்.

என்னை நம்பாதவர்களின் வாழ்க்கை இருளாகவே இருக்கும்.

உங்களில் யாராவது என் வார்த்தைகளைக் கேட்டு நடக்காவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

நான் உங்களுக்குத் தண்டனை கொடுக்க வரவில்லை. விடுதலை கொடுக்கவே வந்திருக்கிறேன்.

நீங்கள் ஒளியைக் கையில் வைத்துக் கொண்டு இருளில் நடக்கிறீர்கள்.

உங்கள் ஒளி அணையாத ஒளி என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.

என்றும் அணையாத ஒளியாகிய கடவுளின் குழந்தைகள் நீங்கள்.

ஒருவருக்கொருவர் உண்மையாயிருங்கள். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வையுங்கள். ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்துங்கள். இந்த மூன்றிலும் அன்பே உயர்ந்தது".

புத்தர் அன்பைப் போதித்த சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு... ஒலித்த குரல் இது.

பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்திலே அந்த ஒளி பிறந்தது. அந்த ஒளியின் பெயர் இயேசு.

"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு"

சகிப்புத் தன்மைக்கு இதைவிட அதிகமான வார்த்தை இன்று வரை பூமியில் இல்லை.

"உன்னைப் போல் பிறரையும் நேசி"

நாம் நம்மளை எப்படிப் பார்த்துப் பார்த்து நேசிக்கிறோம். நல்ல உடை, நல்ல சாப்பாடு, நல்ல பெர்ஃபியூம், நல்ல வண்டி, நல்ல அழகான சிவப்பான மனைவி வேண்டும். இப்படி நீ உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதுமாதிரி அடுத்தவனையும் நேசி. அன்பு காட்டுவதற்கு இதைவிட அதிகமான விளக்கம் இல்லை. இதற்கு அடுத்த நிலையில் உள்ளதுதான்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"

"உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல்லை அவள் மேல் எறியட்டும்"

இதற்கு இணையான தீர்ப்பு இன்றுவரை இல்லை.

"கடவுளே இவங்க பண்றது பாவம்னு கூடத் தெரியல. இவங்களை மன்னிச்சுடு"

சகிப்புத் தன்மைக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு உண்டா?

காலங்காலமாக அடக்கு முறைக்கு ஆளான இனம் யூத இனம். எகிப்தை விட்டு வெளியேறி இடம் தேடி அலைந்து, அரசு கண்டு, அடக்கு முறைகளைச் சந்தித்து, நசுக்கப்பட்டு, இறுதியில் ரோமானியர்களின் ஆட்சியில் ஏரோது மன்னனின் அடக்கு முறையில் தங்களை மீட்டெடுக்க ஒரு தேவதூதன் வருவான் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த ஒளி பூமியில் பிறந்தது.

தங்களைக் காக்க ஒருவன் கையில் ஆயுதம் ஏந்தி குதிரையில் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த இனத்திற்கு ஒரு ஏழையின் வீட்டில் தச்சுத் தொழிலாளி மகனாகப் பிறந்து அன்பை ஆயுதமாக்கிய இயேசுவை அடையாளம் தெரியவில்லை. அதனால்தான் வழக்குகளைச் சந்தித்து, நாள் முழுவதும் சவுக்கடி வாங்கி, ஏளனப்படுத்தப்பட்டு, அவமானம் செய்யப்பட்டு, முற்களைத் தலையில் வைத்து அடித்து, சிலுவை சுமக்க வைத்து அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. நீ கடவுளின் குமாரன் என்றால் சிலுவையை விட்டு இறங்கி வா என்று கேலி பேசியது.

மக்களுக்காகப் பேசுகிறான். மக்களாட்சி என்கிறான். யூதக் கொள்கையை எதிர்க்கிறான் என்று பயந்த அரசும், ஆலயக் கூட்டமும் யூதக் கொள்கைகளை எதிர்க்க இனி ஒருவன் பிறக்கவே கூடாது என்று வெறி கொண்டு அடித்தது.

சவுக்கு வேறு. கசை வேறு. ஒரு கைப்பிடியின் கீழ் பத்து சிறு சிறு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு அதில் முழுவதிலும் தாறுமாறாக வெட்டப்பட்ட தகரத் துண்டுகள் இணைக்கப்பட்டது கசை. அந்தக் கசையால் வெறி கொண்டு அடித்தார்கள்.


இயேசுவின் "இறுதிப் பன்னிரெண்டு மணி நேரம்" என்ற நோக்கில் "Passion of Christ" என்ற படம் வந்தது. மெல்கிப்சன் இயக்கியது. பார்த்தால் பல இரவுகள் தூக்கம் கெடும். மெல்கிப்சனிடம் மீடியா கேட்டது. "இப்படியெல்லாமா அடித்திருப்பார்கள்?"

"நான் காட்டியது 50%. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த யூத ராஜாக்களின் தண்டனையை அணு அணுவாக ஆராய்ந்த பின்னேதான் அதில் 50% எடுத்தேன்" என்றார்.

யூதரில் பிறந்த ஒருவன் யூத அஸ்திவாரத்தையே அசைக்கிறான் என்ற வெறியில் கொடுக்கப்பட்ட தண்டனை என்றார் அந்த இயக்குனர்.

இயேசுவைப் பற்றிய செய்திகளை விவிலியத்தில்தான் தேட வேண்டி இருக்கிறது. எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை.

பன்னிரெண்டு வயதுவரை வாழ்ந்த ஒரு சிறுவன் யூதேயாவிலேயோ, அந்த வட்டாரங்களிலேயோ எங்குமே இல்லாமல் போய் மக்களால் மறக்கப்பட்டு, பின் திடீரென்று தோன்றி, மாபெரும் புரட்சிகள் செய்து, பகுத்தறிவு பேசி, மறுபடியும் மறைந்து போன மனிதனை அன்றைய வரலாற்று ஆசிரியர்கள் சட்டை செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அந்த புரட்சிக்காரன் கடவுளாக்கப்பட்டது, கடவுளின் விளையாட்டா, காலத்தின் தேவையா என்பதை நாம் அலசப் போவதில்லை.

ஆனால் 12 வயதில் அறிவும் ஞானமும் ஊற்றெடுத்து ஆலயத்தின் நடுவே நின்று கொண்டு பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் திகைக்கத் திகைக்கப் பதில் சொல்லி விட்டு, எங்கேயோ சுற்றி மீண்டும் வந்து, இரண்டு வருடங்களை அதிர வைத்து இஸ்ரவேலர் பூமியை இவனை அடக்காவிட்டால் சாம்ராஜ்யம் வீழ்ந்து போகும் என்று பயப்பட வைத்து, ஏரோது மன்னனையும் அவனது சகாக்களையும் உடனடியாக இயேசுவை தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்து, இயேசுவுக்கும், அவரின் இயக்கத் தோழர்களுக்கும் வலைவிரிக்க வைத்து, சிலுவை மரணத்தை சந்தித்து, பூமிப்படி உயிர்த்தெழுந்து, அவர்கள் சாம்ராஜ்யத்தில் இயேசு முடிந்து போனார்.

ஆனால் இயேசுவை மக்களிடம் கொண்டு போனவர். St. Paul. அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் பிரச்சாரம். ஒரே ஒரு பால் ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களையும் தன்பால் இழுத்தார்.

சீடர்கள் அதாவது தோழர்கள் பதினோரு பேரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். தோமா இந்தியாவுக்கு வந்து விட்டார். மற்றவர்கள் அண்டை நாடுகளுக்கெல்லாம் தோழனைப் பரப்பச் சென்று விட்டார்கள்.

பால், புனிதப்பால் உயிரோடு இருக்கும் வரை வீதி வீதியாகச் சென்றார். உங்களுக்காக, நீங்கள் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காக, நீங்கள் நோயோடு போராடக் கூடாது என்பதற்காக, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவன் உயிர் நீத்தான்.

பால் எடுத்துக் கொண்டது மூன்று விஷயங்கள்.

எப்படியெல்லாம் பிச்சை எடுத்தீர்கள்?

எப்படியெல்லாம் பிச்சை எடுக்குறீர்கள்?

எப்படியெல்லாம் பிச்சை எடுக்கப் போகிறீர்கள்?

பாமர ஜனங்களின் மனதை அசைத்தார். பேசினார். அறிவுப் பூர்வமாகப் பேசினார். நோயோடு போராடுகிறீர்கள். வறுமையோடு போராடுகிறீர்கள். இரட்சிப்பு யார் தருவார்? ஏன் தருவார்? யார் தந்தார்? எதற்காகத் தந்தார்?

மீடியாக்கள் இல்லை. வாய்வழியாகப் பரப்புவதைத் தவிர வேறு ஊடகங்கள் இல்லை. ஆனால் அந்த வாய்வழிச் செய்திகள் கிரீக் வரை பரவி எதிரொலித்தது. மாபெரும் கிரேக்க மனிதர்கள் எல்லாம் வாழ்ந்த ஒரு மனிதனை - சற்று முன்பே வாழ்ந்த ஒரு மனிதனை - தீர்க்கதரிசி என்றும் இரட்சகன் என்றும் ஏற்று அவரைக் கடவுள் ஆக்கினார்கள். ஒரு புரட்சிக்காரன் செயின்ட் பாலால் கடவுள் ஆக்கப்பட்டார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாமனிதன் புரட்சிகரமாக சிந்தித்திருக்கிறான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் விவிலியம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.

ஒரு பரிசேயன் "நாங்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதா? அரசாங்கத்திற்கு வரி கொடுப்பதா?" என்று கேட்டபோது இயேசு, "இறைவனுக்குரியதை இறைவனுக்கும் அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் கொடு" என்கிறார். ஒரு புரட்சிக்காரன் இறைவனுக்குரியது என்று சொன்னதை காணிக்கையாகவோ பலியாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓரிடத்தில் "விசுவாசம் உள்ளவன் பாக்கியவான். பரலோக ராஜ்ஜியம் அவனுக்குரியது" என்கிறார். கடவுளை நம்பு, உண்மையாயிரு, அன்பு செய் அது போதும். ஆனால் அரசு செயல்பட வரி கொடு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு முக்கியமான விஷயம். இயேசு எதையுமே அவர் சொன்ன ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. கூடவே இருந்த சீடர்கள் கூட எந்த வார்த்தையையும் எழுதி வைக்கவில்லை.

லூக், மார்க், மாத்யூ, ஜான், எபேசியர், எபிரேயர், கொரீந்தியர் போன்ற, அவருடன் முற்றிலும் தொடர்பில்லாத ஆசிரியர்களே விவிலியத்தை எழுதி இருக்கிறார்கள். ஒரு பார்வைக்காக நாம் சில யூகங்களுக்குள் போகலாம். புத்தருக்கு அரண்மனையின் ஆடம்பரம் மக்களைப் பற்றி யோசிக்க வைத்தது என்றால் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்திருக்கும்.

குழந்தை இயேசுவின் தந்தை யோசேப் தச்சுத் தொழிலாளி. தச்சர்கள் பரம்பரையில் வந்த நேர்த்தியான ஒரு தச்சர். பல கிருத்துவ மதக் காலண்டர்களில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். தந்தையும் பாலகன் இயேசுவும் ஒரு வெட்டிய மரத்தை இருபுறமும் பிடித்து இழைத்துக் கொண்டிருப்பார்கள்.

நவீனத் தொழில்கள் அறிமுகம் இல்லாத அந்தக் காலத்தில், பாடசாலைகள் இல்லாத அந்த காலத்தில், மீனவன் மகனாகப் பிறந்தால் தோணியில் ஏற்றிக்கொண்டு தொழிலுக்குப் பழக்குவார்கள். அப்போதெல்லாம் படிப்பு என்பது யூத மதத்தின் வேதங்கள்தான். அதுவும் யூதக் கோவில்களில். தச்சுத் தொழிலும் அப்போது அப்படித்தான். ஏழு வயது முதலே சிறுவர்களை குலத் தொழிலில் ஈடுபடுத்துவது அக்கால வழக்கம். என் நினைவுக்கெட்டிய செய்தி ஒன்று. ராஜாஜி முதல்வராக இருந்த போது அரை நாள் குலத் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் வந்து பின் எதிர்ப்புகளால் திரும்பப் பெறப்பட்டது என நினைக்கிறேன்.

இப்போதும் நீங்கள் ஒரு காட்சியைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு பெண் சமையல் வேலை செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். எப்போதாவது விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களையோ சிறுமியையோ அழைத்து வருவார். அப்போது அந்தக் குழந்தை என்ன செய்யும்? அந்த வீட்டில் L.C.D, Digital T.V இருந்தால் அது ஆச்சர்யமாகப் பார்க்கும். கூடவே ஒரு ஏக்கம் பிறக்கும். கட்டில், மெத்தை, பொமரேனியன் நாய்க்குட்டி, ஊஞ்சல், உயர்ரக துணிமணிகள், என்று ஆச்சரியமும் ஏக்கமும் அந்தக் குழந்தைக்குப் பிறக்கும். அப்படியே சற்று பின்னோக்கிப் போகலாம்.

சுவர்களின் மேலே மூங்கில்களைப் பிணைத்து ஓலைகள் வேய்ந்து வீடுகள் கட்டுவது ஒருமுறை. கான்கிரீட் அல்லது தச்சு வேலை என்பது பணக்காரர்கள் இல்லங்கள் அமைக்கும் போதுதான் அக்காலங்களில் இடம் பெற்ற ஒன்று. தந்தையோடு கைவேலைக்குச் சென்ற இயேசு, மாளிகையின் படாடோபத்தையும் இழைத்து இழைத்து அமைக்கும் அலங்கார வேலைகளையும், அறை எங்கும் நிறைந்த தேக்குப் பொருட்களையும், சீனத்துக் களிமண் ஜாடிகளையும், பெல்ஜியம் கண்ணாடிப் பொருட்களையும் தங்கம் வெள்ளியால் இழைக்கப்பட்ட உள் வேலைகளையும் பார்த்து ஆச்சரியமும் ஏக்கமும் கூடவே வருத்தமும் அடைந்திருக்க வேண்டும். அந்தப் பாலகனுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களும் மழைக்காலங்களில் ஆலயங்களுக்குள் அல்லவா தஞ்சம் அடைய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். தச்சு வேலைக்குச் செல்லும்போது களியோ, ரொட்டியோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டே அறுசுவை உணவுகளை மாட மாளிகை வாசிகள் உண்டிருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளுக்குக் கூட உயர்ந்த ரக உணவுகளை பரிசேயர்கள் கொடுத்திருக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் பாலகன் ஏசுவை சங்கடப்படுத்தி சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஒருபுறம் உழைப்பும் வறுமையும் பசியும் மறுபுறம் அதற்கு நேர்மேறாக உழைப்பைப் பெறுபவர்களின் ஆடம்பர வாழ்க்கை. ஏன் அந்தப் பாலகனை உறுத்தி இருக்கக் கூடாது?

அமெரிக்க மக்களிடையே விவிலியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விவிலியம் வானொலி நாடகமாக 1947 ல் "The greatest story ever told" என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்டது. பின் புத்தகமாகவும், திரைப்படமாகவும், வந்தது. அந்தப் புத்தகத்தில் அதன் ஆசிரியர் Fulton Oursler விவரிக்கும் ஒரு காட்சி.

இயேசு தனது 12 வயதில் ஆலயத்தில் நின்று கேள்விகள் கேட்டதாக விவிலியம் பதிவு செய்திருக்கிறது. நாசரேத்திலிருந்து ஜெருசலேம் செல்லும் அந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் பார்த்த காட்சிகளை அவர் விவரிக்கிறார்.

ஒருபுறம் மாடமாளிகைகள், அரண்மனைப் படாடோபங்கள் மறுபுறம் ஏழைக் குடிசைகள். ஆலயங்களுக்குள் சீசரின் உருவம் பொறித்த நாணயங்கள் மட்டுமே செல்லும். ஏழை மக்களிடம் இருந்து அவர்கள் பணத்துக்கு பாதி மதிப்பான சீசரின் நாணயங்களைக் கொடுத்து ஆலயவாசிகள் வளமாக மாறி இருந்தனர்.

கடவுளை வணங்கச் செல்லும் மக்களுக்கு ஆலயத்துக்குள் எதற்குப் பணம். கடவுளுக்கு பலியிடும் புறாக்களையும், ஆட்டுக் குட்டிகளையும் மக்கள் ஆலயத்துக்குள் விற்பவர்களிடம்தான் வாங்க வேண்டும். அதுவும் 5 மடங்கு அதிக விலை கொடுத்து.

ஆலயத்தில் எங்கு பார்த்தாலும் குருமார்கள். கிட்டத்தட்ட 20000 பேர். அனைவரும் கடவுளின் பேரால் ஏழைகளை ஏமாற்றி வசதியாக வாழ்ந்தனர்.

இன்றும் நிறையக் காட்சிகள். அந்த 12 வயதுச் சிறுவனுக்கு மனதில் கேள்விகள் பிறந்தன.

ஏன் உயிர்களைப் பலியிடுகிறார்கள்? இரத்தத்தினாலும் நறுமணப் புகையாலும்தான் இறைவன் மகிழ்ச்சியடைவார் என்று ஏன் எண்ணுகிறார்கள்?

எதற்காக குருமார்களிடம் இருந்தே அவைகளை வாங்க வேண்டும்? அந்தப் பணத்தை குருமார்கள் என்ன செய்கிறார்கள்? இது கடவுளுக்கு எதிரான செயல் இல்லையா?

இயேசுவுக்கு தான் கற்ற வேதத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.

கடவுள் சொல்கிறார். "நான் உங்கள் மதத்தின் விழாக்களை வெறுக்கிறேன். என்னால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் கொடுக்கும் பலிகளையும், தானியங்களையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கூச்சலிடும் உங்கள் பாடல்களை நிறுத்துங்கள். உங்கள் வாத்தியங்களை இசைக்காதீர்கள். இவற்றுக்குப் பதிலாக நீதியையும், நேர்மையையும் வற்றாத ஜீவநதியாய் ஓடவிடுங்கள்"

இப்படியெல்லாம் இயேசு சிந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு யூகத்தையும் பார்த்து விடுவோம். 12 வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட இயேசுவின் பணிக் காலத்தைப் பதிவு செய்கிறது விவிலியம். பதினெட்டு வருடங்கள் இயேசுவைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை.

12 வது வயதில் சிறுவன் இயேசு எங்கே போனான். வீட்டைவிட்டு தானாகச் சென்றானா? நோக்கத்தின் அடிப்படையில் யாராவது அழைத்துச் சென்றார்களா? அல்லது கடத்திச் சென்றார்களா? அப்படி என்றால் அழைத்தோ அல்லது கடத்தியோ எங்கு கூட்டிச் சென்றார்கள்?

அக்காலத்தில் 12 வயதில் வெகுதூரம் தனியே பயணிப்பதெல்லாம் 98 சதவிகிதம் சாத்தியம் இல்லாத விஷயம். இயலாத காரியம். நவீன போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை. Transport என்ற அமைப்பே இல்லை. கடல் வழித் தடங்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. நில மார்க்கமாகச் சென்றாலும் 12 வயதுச் சிறுவன் எந்த இலக்குமின்றி எங்குதான் எவ்வளவு நாள் பயணிக்க முடியும்?

இங்கு ஒரு கேள்வி முளைக்கிறது. இயேசு பிறந்தபோது வானத்து நட்சத்திரம் வழிகாட்ட மூன்று பேர் குதிரைகளில் வந்து அந்த ஒளிக்கு பரிசளித்ததாக விவிலியம் பதிவு செய்திருக்கிறதே. அவர்கள் கீழ்த்திசை நாட்டிலிருந்து வந்ததாக செய்தி இருக்கிறதே.

அவர்கள் மீண்டும் வந்து அழைத்துச் சென்றிருப்போர்களோ?

அந்த 18 வருடங்கள் எங்கு எப்படிக் கழிந்தது?

நாமும் பயணிப்போம் இயேசுவுடன்.

வானுலகத்தை வணங்கி
அகத்தியன்.
Tuesday, June 14, 2011

பரபரப்பே தூரிகையாய்..... - ஓவியர் ஜீவா


பரபரப்பே தூரிகையாய்.....

http://koodu.thamizhstudio.com/katturaigal_22.php


ஓவியர் ஜீவா


உசைன் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடனேயே, கொஞ்ச நாட்களாக நின்றிருந்த சர்ச்சைகள் மீண்டும் கிளம்பிவிட்டன. பெரும்பாலும் அவர் வரைந்த நிர்வாண கடவுள்களின் ஓவியங்களும், அவர் மீதான எதிர்ப்புக்களுமே, அவர் மறைவின் முக்கிய தலைப்புக்களாக அலசப்பட்டன. அவர் ஓவியங்களின் தன்மை குறித்தோ, தரம் குறித்தோ, பாணி குறித்தோ எவரும் பேசியதாக பார்க்கவில்லை! தலைப்பு செய்திகளில் நம் நாட்டில் ஒரு கலைஞன் இடம் பெற வேண்டுமானால் சர்ச்சைகளுக்குள்ளாக வேண்டும் என்ற நியதியிலிருந்து தப்பவில்லை உசைன்! சர்ச்சைகளை உருவாக்கியதே புகழுக்கும் ஓவியங்களுக்கான பெரு விலைக்கும் இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்கு வருவதுண்டு.

உசைனிடம் எனக்கு உள்ள ஒரு நெருக்கமான விஷயம், அவர் திரைப்பட பேனர் கட் அவுட் ஓவியராக வாழ்க்கையை தொடங்கினார் ; நானும் அவ்வாறே என்பதுதான்! பேனர்களில் பெரிதாக வரையும்போது தூரிகை தீற்றல்கள் வேகமாகவும் வலிமையாகவும் வெளிவரும் என்பது ஓவியர்கள் உணர்ந்த உண்மை! கடைசிவரை உசைனின் ஓவியங்களில் இந்த தன்மை இடம் பெற்றது. திரைப்பட பேனர்களின் பளிச்சிடும் கடும் வண்ணக்கலவை எப்போதும் அவரது ஓவியங்களில் இடம் பெற்றன. உசைனின் பயணம் நேர்த்தியாக திட்டமிட்டது போல் இயல்பாக ஆரம்பித்து தொடர்ந்தது. இலக்கியம், நாடகம், திரைப்பட சூழல்களில் முற்போக்கு கலைஞர்கள் இணைந்து சங்கம் அமைத்து பணியாற்றியதை போல ஓவியர்களும் அமைத்த முற்போக்கு ஓவியர் இயக்கத்தில் 1947ல் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். இந்தியத் தன்மை மிகுதியாக இருந்த புகழ் பெற்ற வங்க ஓவிய பாணியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நவீன பாணியில் இயங்க ஆவல் கொண்டிருந்த ஓவியர்களுடன் உசைனும் இணைந்து பணியாற்ற தொடங்கினார். முற்றிலும் அரூபம் சார்ந்த பாணியில் பயணிக்காமல், உருவங்களை அழகுறச் சிதைத்து , இந்தியத்தன்மையும் மாறாமல் உருப்பெறத் தொடங்கின உசைனின் ஓவியங்கள்! தன் முதல் தனி ஓவியக் காட்சியை இந்தியாவில் கூட அமைக்காமல் ஜூரிச் நகரில் காட்சிக்கு வைத்தார். ஐரோப்பிய நாடுகளிலும் உசைனின் பெயர் பரவத் தொடங்கியது. ஓவியங்களின் விலையிலும் உசைன் மேல்நோக்கிய பயணம் மேற்கொண்டார். சமீப காலங்களில் கோடிகளில் விலை போயின அவரது ஓவியங்கள். ஒரு வருடம் முழுவதும் தினமும் ஒரு ஓவியம் வரைந்து கொடுக்க ஒரு தனியார் கலை அரங்கத்திற்கு ஒப்பந்தம் ஆனது என்று ஒரு செய்தி வெளியானது...ஒவ்வொரு ஓவியமும் ஒரு கோடி ரூபாய்க்கு!

உசைனின் ஓவியங்களில் அடிக்கடி தெரியும் வாய் பிளந்து பாயும் குதிரை வடிவங்கள்...அன்னை தெரசாவும், காப்பிய காட்சிகளும் அடிக்கடி காணக் கிடைக்கும். விநாயகரும் துர்கைகளும் கடவுளர்களும் கூட ஓவியங்களாய் இடம் பெறுவர். 'மாசே சாப்' என்ற அருந்ததிராய் கதாநாயகியாய் நடித்த படத்திற்கு, உசைன் போஸ்டர் டிசைன் கூட செய்திருக்கிறார். விளம்பர வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் எனபதில் உசைன் மிகவும் கவனமாக இருப்பார். மாதுரி தீட்சித் கதாநாயகியை நடித்த 'ஹம் ஆப்கே ஹை கவுன்' பெருவெற்றியை அடைந்தபோது, அவர் தன்னை மாதுரியின் தீவிர ரசிகராய் வெளிப்படுத்திக்கொண்டார். உசைன் இந்த படத்தை இத்தனை தடவை பார்த்தார், மாதுரியை இத்தனை ஓவியங்களாக படைத்தார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. பிறகு தபுவின் ரசிகராக கூட மாறினார் என்பது கேள்விப்பட்ட செய்தி! திரைப்படங்களின் மீது அவருக்கு அளவு கடந்த ரசனை. 'ஒரு ஓவியனின் பார்வையிலிருந்து' என்ற அவரது குறும்படம் திரைப்பட் விழாக்களில் விருதுகளை குவித்தது. மாதுரி மீது கொண்ட பற்று அவரை வைத்து 'கஜகாமினி' திரைப்படத்தை இயக்க தூண்டியது. அடுத்து தபு கதாநாயகியாக நடித்த 'மீனாக்ஷி - மூன்று நகரங்களின் கதை' வெளியானது...முதல் நாளே சில இஸ்லாமிய அமைப்பினர்...ஒரு பாடலில் குரானின் வசனங்கள் அப்படியே இடம் பெற்றன என்று சொல்லி ஆட்சேபிக்க, ஒரே நாளில் தியேட்டரை விட்டே தூக்கிவிட்டார் உசைன். பரபரப்புக்கும் உசைனுக்கும் உள்ள தொடர்பு சும்மாவா! அவரது உடை, தோற்றம், அனைத்தும் புகழ் பாதைக்கேற்ப வடித்துக்கொண்டார். செருப்பு அணியாமல் நடந்து 'வெறுங்கால் ஓவியர்' என்ற பட்டமும் கிடைத்தது.

கடவுள் வடிவங்களை நிர்வாணமாக வரைந்தார் என்ற பரபரப்புக்கு முன்பே அவருடைய புகழ் பெற்ற செயல் இந்திரா காந்தியை 'துர்கா'வாக வரைந்ததுதான். நாடே அவசர நிலையின் கொடுங்கோல் ஆட்சியில் பொருமிக்கொண்டிருந்தபோது...அனைவரும் இந்திரா காந்தியை சபித்துக்கொண்டிருந்தபோது, பிற கலைஞர்கள் அமைதி காத்துக்கொண்டிருந்தபோது, உசைன் கொடிய சர்வாதிகாரியை வீரக் கடவுளாக உருவகப்படுத்தி போற்றி பாடினார்! பரபரப்பின் உச்ச கட்டம் அவர் இந்து கடவுளர்களையும் பாரத தாயையும் ஆடையின்றி வரைந்தபோது கிளம்பியது. குறிப்பாக இந்து அமைப்பினர் கடும் கோபமுற்றனர். அவரது கண்காட்சிகள் தாக்கப்பட்டன. ஓவியங்கள் கிழித்தெறியப்பட்டன. நாடெங்கும் கலை சுதந்திரம் பற்றிய விவாதங்கள் கடுமையாக கிளம்பின. கலைஞர்களே இரு பிரிவாக மாறி கலை சுதந்திரம் பற்றிய விவாதங்களில் கடுமையாக விவாதித்தனர்.சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமாவுக்கும் , டேனிஷ் கார்ட்டூன் கலைஞர்களுக்கும் நேர்ந்த கதி இப்போது உசைனுக்கு நேர்ந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அவர் தன் கடவுள்களை அப்படி வரைவாரா என்று கோபக்குரல்கள் கிளம்பின. நாடெங்கும் நூற்றுக்கணக்கான வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. வெளிநாட்டுக்கு சென்ற அவர் இந்தியா திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தொண்ணூறு வயது கடந்த நிலையில் வெளிநாட்டிலேயே மறைந்து அங்கேயே புதைந்தும் போனார் இந்த மகத்தான கலைஞர்! அவரை பற்றி விவாதிப்பவர்கள் அவருடைய பிற ஓவியங்களை பார்த்திருப்பார்களா, ரசித்திருப்பார்களா என்ற வினா எப்போதும் எனக்குண்டு.

....காத்திருப்போம் மீண்டும் ஒரு உசைன் பிறப்பதற்கு!!!!

- ஓவியர் ஜீவா

http://koodu.thamizhstudio.com/katturaigal_22.php


தமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழிஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 14


http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.php
தமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழி

குட்டி ரேவதி

தலைப்பின் பொருளை ஒற்றை அர்த்தத்தில் விளங்கிக்கொள்ளவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே! அல்லது அதன் பொருளை இயன்றவரை முழுமையும் விளக்க விரும்பும் என்னுடன் பயணிக்க வரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்! தமிழ்நதி எனும் கவிஞரை முன்வைத்து, அகதியாயும் நாடோடியாயும் வாழப்பணிக்கப்படும் எழுத்துப்பெண்ணைப் புரிந்து கொள்வது தான் இங்கே நமது பணியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.

2007 – ல் முதன் முறையாக ‘இன்றொரு நாள் எனினும்’ என்ற தமிழ்நதியின் கவிதையில் மேற்குறிப்பிட்ட கவிதைப் பத்தியை வாசித்தது முதல் இன்றும் அது, புதியதோர் உணர்ச்சியின் தொனியாய் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. அவ்வரிகள், வெறுமனே அம்மாவிடம் கேட்கும் அனுமதியாக மட்டுமே இல்லை, பாருங்கள்! பிடிவாதமான, ஆனால் தான் செய்யப்போகும், இதுவரை யாரும் செய்திராத புதியதொரு செயலைத் தான் செய்யப்போவதன் அறிவிப்பாகவும் இவ்வரிகள் இருக்கின்றன. இது ஓர் அபூர்வமான தொனி தான்! இம்மாதிரியான தொனிகள் முழுதும் சுயத்திலிருந்தும், தன் ஆளுமையிலிருந்தும் எழும்புபவை. இன்னொரு கவிதைகளில் இருந்து சுடமுடியாதவை! மேலும், இவ்வரிகளில் குறிப்பிடப்படும், ‘சிலீரென்றெழும் ஓசை’, அவ்வோசை யொத்த பிற ஓசைகளை நினைவுப்படுத்துவதுடன், அவ்வோசையை யுத்தநிலத்தில் கேட்ட ஓசையுடன் இணைத்து, களவுபோன உறக்கத்தையும் குழந்தைமையையும் அவர் நேரடியாகச்சொல்லாமல் சொல்வது இக்கவிதை வரிகளின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. எனக்குப் பிடித்தமான இக்கவிதைத்தொனியைப் பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் என்னுள்ளிருந்து பத்திரமாகக் கண்டெடுக்கமுடிந்தது.

கவிதைகள் சார்ந்து நான் எப்பொழுதுமே வலியுறுத்துவது, வேறுபட்ட கருப்பொருள்களுக்கு ஏற்ற, வேறுபட்ட தொனிகளை உள்ளே வைத்திருக்கும் கவிதைகள் தாம் இதயத்தில் நுழையும். நுழைந்த வேகத்தில் வெளியேறாமல் உள்ளேயே கிடந்து, உள்ளத்தின் குகையில் இருட்டிலும் வெளிச்சத்திலும் உழன்று என்னென்னவோ செய்யும். பின், அத்தொனியை, அவரவர் வாழ்வில் கண்டடைவதற்கான வாயில்களை எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திறந்து கொண்டே இருக்கும். நல்ல கவிதை என்பதன் செயல்பாடு இதுவாக இருக்கும்!

தமிழ்நதியின் இரண்டு கவிதைத்தொகுப்புகளுமே வேறுபட்ட இரண்டு உலகைச் சித்திரிப்பனவாக இருக்கின்றன. முதல் தொகுப்பு, ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்று மனிதர்களற்ற நிலப்பிரதேசத்தில், அப்பகலைத் தனியே கடக்கவேண்டிய சூரியனின் நிலைக்கு அழுத்தம் கொடுக்கும் தொகுப்பென்றாலும், அகதியாக நாடோடிப் பெண்ணாக, அஞ்ஞாதவாசம் இருக்கும் பெண்ணின் தனி மனித உறவுகளையும் அதுவும் பால்நிலை மையமிட்ட இடத்திலிருந்து நோக்கி, அவதானித்துச் சொல்லும் கவிதைகளாக இருக்கின்றன. எனக்கு இவர் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்த இடத்து, ‘மொழி’ என்பது ஓர் ஆதிக்கக்குறியின் வடிவில் எழும்பி நிற்பதையும், அதைச் சிதைக்க சொற்களைத் தேடிய சுயப்பயணத்தில் இவரின் எழுத்து வேட்டை இருப்பதையும் உணரமுடிந்தது.

பல சமயங்களில் மொழியென்பது, நிலத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிறைய பேரரசுகளுக்கு உதவியிருக்கிறது. ஈழத்தைப் பொறுத்தவரை, மொழி கொண்டிருந்த நுண்ணரசியலைப் பேச இவ்வெளியும் காலமும் போதாது. என்றாலும், அம்மொழியின் வழியாகத் தான் விடுதலை என்பதை பெண்கள் விளக்கமுடியும் என்பதை தமிழ்நதியின் எழுத்து தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான ஈரத்தையும், நெகிழ்ச்சியையும், தொடர்ப்பாய்ச்சலையும் கொண்டிருப்பதால், அந்நிலத்தின் தீயை தன் சொற்களால் விளக்குவதாகவும் இருக்கிறது.

ஆண்மை

ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப்பிராணியாகிச்
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்
ஓடும் பேருந்தில்
திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர்பிடுங்க
கால்நடுவில் துருத்தியது
பிறிதொரு நாள்
வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடைமிருகமென வாலுரசிப்போனது
பின்கழுத்தை நெருங்கி சுடுமூச்செறியும் போதில்
ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த
உன் கண்களை நினைத்தபடி
‘குறி’ தவறாது சுடுகிறேன்
இதழ்க்கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள்
என் சின்னஞ்சிறுமியே!

ஆண்மையின் சுடுமூச்சு தன் உடலைத் தொடர்ந்து வரும் வேறுபட்ட தருணங்களை இக்கவிதையில் முன்வைத்திருக்கிறார். இதில், ’குறி’ தவறாது அவ்வாதிக்கக் குறியைச் சுடும் ஒரு தருணத்தை தனக்கானதாகவும் ஆக்கிக்கொள்கிறார். ஆணாதிக்க வேட்கைகள், பெண்கள் மீது திணிக்கப்படுவதினும் அது தொடர்ந்து வழங்கப்படுவதும், கைக்கெட்டுவதாய்க் காட்சிப்படுத்துவதுமென பொதுவெளியில் துருத்திக்கொண்டே தான் இருக்கிறது. வேறு எந்த விடுதலையானதொரு வாய்ப்பினையும் பெறமுடியாத நிலையில், தன் இதழ்க்கடையில் முளைக்கும் பற்களால் தனக்குள் இருக்கும் சின்னஞ்சிறுமிக்குத் தனக்குத்தானே துணிவேற்றிக் கொள்கிறார்!

பாலை நிலப்பெண்ணைப் போல வெப்ப மூச்செறியும் தனிமையைத் தன் பல கவிதைகளில் தமிழ்நதி முன்வைத்துக்கொண்டே இருக்கிறார். நமது சமூகத்தில், தனிமை என்பது கூட்டத்தின் மத்தியிலும், குடும்பத்தின் மத்தியிலும் இருக்கும் பெண்ணுக்குக் கூட அனுபவிக்கத் திணிக்கப்பட்டது. என்றாலும், பொதுவெளிக்கு வரும் பெண்களுக்கு, தனிமை என்பது அங்கங்கள் எல்லாம் முறையாக மறைக்கப்பட்டும், அவசியங்கள் குறித்த அங்கங்கள் வெளிக்காட்டப்பட்டும் அவள் எப்பொழுதுமே அணிந்திருக்க வேண்டிய, ஓர் ஆடையாகத் தான் மாறியிருக்கிறது. இத்தனிமையை, எழுத்துப் பெண்கள் சொற்களால் நிரப்ப இயன்றவர்கள். வேறெந்த இரத்த உறவையும் விட சொற்களின் மீது நம்பிக்கையும் ஈர்ப்பும் கொண்டவர்கள்.

இச்சொற்கள், ஏற்கெனவே அகராதியில் கொடுக்கப்பட்ட அர்த்தங்களிலேயே இவர்களிடம் பொருள்பெறுவதில்லை. இவ்விவ்விடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொடூரமான விதிகளைப் பொருட்படுத்துவதில்லை. புதிய சொற்களுக்குக் கண்கள் திறக்கும் வேலையை இப்பெண்கள் தங்கள் தனிமைகளில் செய்து கொண்டிருக்கின்றனர். குவிக்கப்பட்ட சொற்களுக்கிடையே, தேடி ஏதும் கிடைக்காத தங்களுக்கான சொற்களை, தன் உடலுடன் கொள்ள வாய்த்த தொடர் உரையாடலில் கண்டடைகின்றனர். பின், அவற்றை அடுக்கியும் கலைத்தும் போட்டு தன் விடுதலையைப் பாடுகின்றனர்.

பெரும்பாலும் தமிழ்நதியின் கவிதைகள், கவித்துவம் நிறைந்த பாடல்களாகத்தான் தோன்றுகின்றன. நவீனக் கவிதையின் இறுக்கங்களைத் தளர்த்திக்கொண்ட, ஆனால், தரத்திலும் செறிவிலும் கொஞ்சமும் குன்றாத ஓர் உடல் மொழியின் கூக்குரல்களாகின்றன. தோன்றிய வரியிலிருந்து, பாடலைப் போலவே சீரான வேகத்தில் தொலைவிடம் சேரும் பறவையைப் போலவே சொற்களும் சிறகசைக்கும்.

சொற்களுடனான உறவு

அறைக்கதவைப்பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன

செப்புக்களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்துவருகிறது
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்
கனவும் நினைவுமான
காதல்வரிகள்
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞரின் உளறல்கள்
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்

வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு

வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் தவிக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை

---------------------------------------------------------------------------
உடலின் விழிப்பு

சொற்களின் உடுக்கடிப்பில்
உடல் பூக்கிறது சணற்காடாய்
காலம் திரும்பிவருகிறது
கனவின் சுவடுகளில்

முன்னேற்பாடாய்
விலங்கின் கூரியபற்களைப்
பறவைகளின் சிறகுகளுக்குள் பதுக்குகிறோம்
அவரவர் மேன்மைகளைக் காட்சிப்படுத்துகிறோம்
மேலும் தாவர உண்ணிகளாய்
இயற்கை எழில் மற்றும் பிரமிள்
‘சக்கரவாளத்தை’யும்
பேசித்தொலைக்கிறோம்

வலித்து இமை சாத்தியபடி
நடக்குமெல்லையில்
மிகுபசிகொண்ட உடல்கள் விழித்திருக்கின்றன

கரைந்தொரு வெளியில் தொலைந்து
ஈதின்பம் என நீலச்சுடர் கண்டு
முயங்கித் தெளியுமொரு காலை
நீயெழுந்து யன்னல் வழி வெறிப்பாய்

சொற்கள் தீர்ந்துவிட்ட அப்பொழுதில்
காலம் தனதிடம் மீள்கிறது
காதல் காலிடுக்கில் வழிகிறது அன்பே

பெண்ணுக்கு மட்டும் காதல் என்பது, வரையறைகளால் சுட்டமுடியாத உறவு தான். பாலுறவைத் தன் உடலுக்குத் தந்து விட்டாலே, அதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டாலே அது காதல் என்று ஆகிவிடாது. அது ஒரு மிகுபசி! யோனியின் வாயிலை மூடியும் திறந்தும் செயல்படுத்தும் உறவின் வெளிப்பாடு இல்லவே இல்லை அது! உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும், சொற்களைக் கண்டடையும் தீராத பயணம் தான் அது! யோனி என்பது அதற்கு ஒரு விளைநிலமாக மட்டுமே இருக்கமுடியும்! அல்லது சொற்களை உற்பத்தி செய்யும் ஓர் உலைக்களனாக இருக்கமுடியும்!

உடலை விழிப்புறச் செய்து, அதை ஒரு மிகுபசி கொண்ட உடலாய் ஆக்கிக்கொள்ளும் வேலையை பெண்கள் தமக்குத்தாமே தான் ஆற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம், பெண்கள் உடலைச் சவப்படுத்தி உறைந்துபோகும் நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து திணிக்கும் போது, தன் உடலை விழிப்புறச் செய்வதற்குத் தேவையான உந்துதலை, முடக்கப்பட்ட இவ்வுடலிலுருந்து தானே பெறவேண்டும். அத்தகைய மிகுபசி, அவர் கவிதைகளெங்கும் கனன்று சொற்களை இரையாகப் புசிக்கும் உணர்வைத்தான் நாம் அடைகிறோம். ‘நரிக் கவிதை’ என்ற கவிதையில், இந்த உடல் விழிப்பு என்பது பெண்ணுடலை ஓர் அரசியல் ஆயுதமாக மாற்றும் பரிணாமத்தைச் செய்வதை மிக எளிமையாகவும் நேரடியாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்குறிப்பிட்ட, ’உடலின் விழிப்பு’ கவிதையும், கீழே தொடரும், ‘நரிக்கவிதையும்’ பெண்ணுடலை, தன்னுடலை அரசியல்படுத்த முயலும் ஒரு நாடோடிப் பெண்ணின் உணர்ச்சி நிலையையும், சொற்தெறிப்பையும் கொண்டிருக்கின்றன!

நரிக் கவிதை

நீங்கள் என்னிடம் ஒரு கவிதை கேட்டிருந்தீர்கள்

எழுதப்படாத அது
அரூபமாய் கழிப்பறையிலும் உடனிருந்தது.

கடந்தமாதம் எழுதியிருந்தால்
புணர்ந்து தீராத உடலின் ஞாபகத்தை
காதலின் வலியாய் உருமாற்றியிருக்கலாம்.
கடந்த வாரமெனில்
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் தேவதையின்
உதிர்ந்து போன சிறகினைப்பற்றி
ஒப்பாரி பாடியிருப்பேன்
சிலமாதங்கள் முன்புவரை
குருதியலை அடிக்கும் கடல்களை…
பசித்தழும் குழந்தைகளை..
எமது பெண்களின்
இறைச்சியைப் பங்குபோட்டவர்களைக்
குறித்து எழுதும் எண்ணமிருந்தது.

களைத்துப் போய்த் திரும்பி வந்த
இந்த மாலையிலிருந்து
புலிவேஷம் கட்டிய நரியொன்று
என்னுள் ஏறியமர்ந்திருக்கிறது

இந்த நரியைத் தரையிறக்காமல்
எழுதிவிட முடியுமா
ஒரு கவிதையை?

சமீப காலமாக, நிலத்துடனான பெண்களின் உறவு குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் எனக்குப் பெண்கள், தாம் காலூன்றும் நிலமாகக் கண்டறியும் வெளி எது எதுவென்று துருவித்துருவித் தேடுகின்றேன். பல பெண்களுக்கு, எழுதும் பெண்களுக்கே கூட உடல் ஒரு பிரதேசமாக மாறாமலேயே படபடப்புப் பெறுகின்றது. இன்னும் சிலருக்கு, யோனியின் உழப்பட்ட நிலத்தைக் குத்தகைக்கு அளிக்காத தீயாய் எரியும் வேட்கை!. சிலருக்கு, தேசம் என்ற தன் குடும்பம், சுற்றம் அவருடனான தன் உறவு, பால்யம், நினைவு வெளி என இதில் இடம்பெற்ற பெளதீக வெளிகளைத் தேடித்தேடித் திரியும் காற்றாடி மனம். இந்நிலையில், வேரறுக்கப்பட்ட தன் நிலத்தை எப்படி தனக்குள் வருவித்துக்கொள்வாள் என்பதற்குத் தான் அற்றைத்திங்கள் கவிதை பதிலளிக்கிறது.

தன் உணர்வைக் கூர்மைப்படுத்தி, செம்மையாக்கி வழங்கும் போதெல்லாம் அதற்கு நேர்மையாக இருக்க அத்தனை சிரமங்களையும் எடுக்கும் போதெல்லாம் உருவாகும் கவிதை என்பது தனிமனிதருக்காகவன்றி, பொதுவான உடைமையாகிறது. இப்படித்தான், தமிழ்நதி தன் நிலத்து மக்களுக்கான பொதுக்குரலாகிறார். இது, ஓர் அசாதாரண நிலையே. தன் நிலத்தில் வாழ அனுமதிக்கப்படாத மக்களுக்காகவெல்லாம் தன் குரல் எழும்பி நிற்க, அவர் என்றுமே தயங்காத படிமங்களும் நிகழ்வுகளும் இவர் கவிதைகளில் சூழ்ந்திருக்கின்றன! ’அடையாளமற்ற நிலை’ என்பது அடையாளங்களைத் தனக்குள் உருவேற்றிக்கொண்டோர் மத்தியில் எந்த அளவுக்கு அதிகாரமும் உரிமையுமற்ற நிலையாக இருக்கிறது என்பதை இக்கவிதையில் உணரமுடியும். காலங்காலமாகப் பெண்கள் நிராதராவாக தன் நிலத்தைப் பார்த்து ஏங்கி நின்று கண்ணீர் கசியும் நிலையையும், ‘அற்றைத் திங்கள்’ எனும் அடைமொழியால் அளிக்கிறார். எந்த ஒரு குடும்பத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமையை நிறைவேற்றாமல், முழுதுமாய் வேரைப்பிடுங்கி, வேறு தொட்டியிலோ, அல்லது வெட்டவெளியிலோ நடுவதால், அவர்கள் தங்கள் உடலுக்கும் மனதுக்கும் கொஞ்சமும் ஒவ்வாத தட்பவெப்பநிலையை அனுபவிக்க நேர்கிறது. இதே நிலை தான் தாய்நாட்டைப் பிரியநேர்ந்தவருக்கும்!

அற்றைத் திங்கள்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப்புன்னகையுமற்றுக்
கடந்து போகிற மனிதர்கள் வாழும்
அந்நியத்தெருக்களில்
அடையாளமற்றவளாகச் சபிக்கப்பட்டுள்ளேன்
என்னைக்குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை
உனது சிகரங்களிலிருந்த படி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல் பரத்திக்கிடக்கிறது

தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு
என் போலவே நாடோடியாய் அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
இப்படியா கசிந்தழுதீர் தோழியரே

இரவுகளில் பொழியும் துயரப்பனி

துயரப்பனி பொழியும் இரவுகளில்
எழுத்தின் மெழுகுவர்த்தியை
அறைக்குள் ஏற்றி வைக்கிறேன்
நிலையற்ற இருப்பினை நினைவுறுத்தியபடி
அலைகிறது சுடர்

வேரறுதலின் வலி குறித்த
வார்த்தைகள் தோய்ந்தன
பிறகு தீர்ந்தன

ஈரமற்ற காலம்
ஆண்டுகளை விழுங்கி
ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
திருவெம்பாவாய் எங்குற்றாய்?
இரத்தம் கோலமிடும்
தெருக்களில் இன்னும் மாற்றமில்லை

காத்திருக்கிறோம்…

ஒரு வயலினில் குழைந்து பிறந்து
குரல்கள் இணைந்து இழையத் தொடர்ந்து
சற்றைக்கெல்லாம்
முரசினில் முழங்கி
நரம்புகளில் நடந்து செல்லவிருக்கும்
அந்தப்பாடலுக்காக…

காத்திருக்கிறோம்

சிவந்த நிறத்திலான கொடி
தன்செருக்கில் கிறங்கிக் கிறங்கி
காற்றினில் அலைவுற…
விடுவிக்கப்பட்ட தெருக்களில்
மிதந்து செல்ல…

காத்திருக்கிறோம்

அஞ்ஞாதவாசத்தில் எழுதிய கவிதைகளை
உயிரைச் சலவை செய்யும்
பின்னிரா நிலவில்
மெட்டமைத்துப்பாட…

காத்திருக்கிறோம்

இந்த இரவு
அதிசயமாக விடிந்துவிடலாம்
அதற்கிடையில்
துயரப்பனி கவிந்த இவ்வீட்டில்
அநாதையாய் இறக்காதிருப்பேனாக!

இரவு, பகல் குழம்பியதைப் போன்ற ஒரு மனநிலையை அகதியாய் இருக்கும் ஒரு பெண் பெறுவதாக உணர்கிறேன். தமிழ்நதி, ஈழ விடுதலையின் பெண்குரலாய்த் தன்னை சீர்மைப்படுத்திக்கொண்டவர். விடுதலை இயக்கங்களின் பெண் குரலாய் அதிலும், தீர்க்கமான அரசியல் தெளிவுடனும், செயல்பாட்டுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மிகச்சிலரே. அதற்குக் காரணம், எப்பொழுதுமே பெண்கள் தொடர்ந்த களப்பணியிலும் அதற்குண்டான அரசியல் பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பைத் தமக்குத்தாமே வழங்கிக் கொள்வதுமில்லை. அல்லது, அத்தகையதான தெளிவுமிக்க சொற்களால் தன் அரசியல் நிலைப்பாட்டை முன்வைப்பது இல்லை. தமிழ்நதி, இந்தக் குறைபாடுகளை தமிழ்த்தளத்தில் முழுமையும் நீக்கியவர். தொடர்ந்து மக்கள் விடுதலைக்கான சொற்களை அரசியல் திறனுடன் வழங்குபவர். தேசம் கடந்து தேசம் போகும் அவரது நாடோடி மனம், அவருக்கு அளப்பறியா துணிவையும் அரசியல் கூர்மையையும் உடல் என்ற தேசத்தின் எல்லைகளைக் கடக்கும் சிறகுகளையும் தந்திருப்பதாக உணர்கிறேன்.

ஆதிரை என்றொரு அகதி

ஐந்து வயதான ஆதிரைக்கு
ஆழ்கடல் புதிது
எனினும்
புதிதாக மெளனம் பழகியிருந்தாள்
குற்றவாளிகளாய் படகேறிய கரையில்
கிளிஞ்சல்களினிடையில் கிடக்கலாம் கேள்விகள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டியிலும்
படகினின்று உயிர் தளம்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
‘கடல் ஒரு நீர்க்கல்லறை’ என்பதன்றி.

கழிப்பறை வரிசை…
கல் அரிசி….
சேலைத்திரை மறைவில்
புரியாத அசைவுகள்…
காவல் அதட்டல்..
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழ்நகரை ஒத்திருந்தாள்

சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?

என் சின்ன மயில் குஞ்சே!

போரோய்ந்து திரும்புமொருநாளில்
பூர்வீகம் பிரிய மறுத்து
தனியே தங்கிவிட்ட
என் தாய் மடியில் இளகக்கூடும்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்

“அம்மம்மா! அவையவள் ஏன் என்னை
‘அகதிப்பொண்ணு’ எண்டு கூப்பிட்டவை?”

பெருமூச்செறியும் தொனிகளுடன் விரியும் தமிழ்நதியின் கவிதைகள் நேரடியான அரசியல் பார்வைகளை நெகிழ்ச்சியான மொழியால் வனைந்து தருபவை என்பதால் ஈரம் கசியும் வரிகளை எந்த நேரமும் அவர்கவிதைகளில் நீங்கள் தாண்ட வேண்டியிருக்கலாம்! ஆனால், அந்த ஈரத்திற்காகத் துணிவை இழந்த ஒரு கோழை மனநிலையை நீங்கள் அடையாளம் காணவே முடியாது. ஏனென்றால், அது கீழே உள்ள அதே பிரகடனத்தோடு உங்கள் கண்முன் எந்தவொரு கணமும் தோன்றி நிற்கலாம்!

அம்மா! மண்டையிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே
சிலீரென்றெழும் ஓசையால்
உறக்கமும் குழந்தைமையும்
கலைக்கப்பட்ட
அவ்விரவுகளையும் மீட்டெடுக்க.

----------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சென்ற கட்டுரையில், தம் கருத்துகளைப் பதிவு செய்த கருணாநிதி, செல்வம் இருவரின் கருத்துகளையும் வாசித்தப்பின் உண்மையிலேயே குற்றவுணர்வில் தாக்குற்றேன். இயன்றவரை இனி இந்த இடறல் நேராதபடிக்குப் பார்த்துக் கொள்கிறேன், நண்பர்களே! மற்ற கருத்துரையாளர்களுக்கும் என் அன்பையும், மகிழ்ச்சியையும், நன்றியையும் இக்கட்டுரையின் வழியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. இவர், ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (2007) மற்றும் ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (2009) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகளை வழங்கியுள்ளார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கனடாவிலும் தமிழ்நாட்டிலும் மாறி மாறி வசிக்கிறார். கவிதை தவிர, பிற இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_15.phpMonday, June 13, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 17வது பௌர்ணமி இரவுதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 17வது பௌர்ணமி இரவு

(16th Full Moon Day Film Screening)

17-05-2011

புதன்கிழமை, 15-06-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகத் திரைப்படம்: Jafar Panahiஇயக்கிய "Offside"

இந்த திரைப்படம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0499537/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


கதை சொல்லி - ஜீ. முருகன்
கதை சொல்லி - ஜீ. முருகன்

லிவிமலை உச்சியின் மீதேறி நின்றோ மிக உயர்ந்த கட்டிடங்களின் மீதேறி நின்றோ அகன்ற பள்ளத்தாக்குகளையும் தூர நிற்கும் நிலபரப்புகளையும் காண்கிற போது, மனதால் பலமுறை கீழே விழுந்திருப்போம். கைகள் இரண்டையும் விரித்து கீழே குதித்திடும் கணங்களை கண்களை மூடியேனும் கற்பனை செய்திருப்போம். விட்டு விலகி நிற்கும் வெளியை குதிக்கும் கணத்தில் உணர்ந்து நிர‌ப்பும் போது சூன்யத்தை ஒரு வித உணர்வால் கடந்திருப்போம். மீண்டும் மீண்டும் குதித்து ஒரு வித அரூப உணர்வை மனம் பழக்கப் படுத்திக் கொள்ளும். அதிலிருக்கும் ஒரு தவிப்பு, பயம், மிரட்சி, லயிப்பு, அனுபவம் உணர்வால் அன்றி விளக்குவது கடினம். ஒவ்வொரு எழுத்தாளனையும் சந்திக்கச் செல்வதான அனுபவம் மிகச் சாதாரணமான தல்ல. எழுத்தில் மட்டுமே பார்த்தவனை நேரடியாக சதையும் நகமுமாக சந்திக்கின்ற தருணங்கள் அவை. ஜீ.முருகனைப் போல் மிக இயல்பாக இருக்கும் மனிதனை பார்ப்பது கடினம். தன் தலையின் மேல் ஒளி வட்டங்களைச் சூழ விடாத மனிதர் ஜீ.முருகன்.

"கதைகளை பருண்மையாக சொல்வதில் என‌க்கு உடன் பாடில்லை. மிகச் சாதாரண துன்பங்களைத் தாண்டிய மிகப் பெரிய துயரங்களை படைப்பு முன் வைக்க வேண்டும். இதைத் தான் லியோ டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி போன்றவர்களின் படைப்புகளில் பார்க்கலாம்" என்றார் தன் கதைகள் பற்றிய பேச்சொன்றில். ஒரு நாளில் சில மணி நேரங்கள் கதைப் பதிவு என்பதைத் தாண்டி இரண்டு நாட்கள் ஜீ.முருகனுடனே தங்கி கதைப் பதிவு நடந்தது. வேலூருக்குச் செல்கின்ற வழியில் தென்படும் பாறைகள் நிறைந்த மொட்டை மலைகளை பார்க்கிற போது தமிழ் நிலப்பரப்பின் பாலை நிலம் இதுவாகத் தான் இருக்குமென எண்ணிக் கொண்டேன். மீசை தாடி முழுதாக மழிக்கப்பட்ட முகம். இள நரை கண்டு ஜீ.முருகனுக்கு தலை மயிர்கள் எல்லாம் நரைத்திருந்தன. எந்த நேரத்திலும் சிரிக்க சிரிக்க பேசும் குரலும், புன்னகை முகமும். ஒரு நிமிடத்திற்கு எழுபது நொடிகள் அவர் முகத்தில் சிரிப்பிருக்கும். தான் என்கிற தன்னிலை ஆணவம் அற்றவர்கள் மட்டும் தான் அவ்வாறிருக்க இயலும் போலும். புதிதாகச் சந்திக்கும் ஒரு மனிதனிடம் இருக்கும் இடைவெளியை எளிதாக அகற்றி விடும் குணம் கொண்டவை அந்தச் சிரிப்பு. கதைப் பதிவின் போது சிரிப்பு உதிர்ந்து அவர் கண்கள் கலங்கும் சில கணங்களும் காணக் கிடைத்தது என‌க்கு. எத்தகைய எளிதாக கிழிபட்டு விடும் மெலிதான‌வொரு காகிதத்தை போன்ற மனம் கொண்டவரென உணர முடிந்த‌து.

ஜீ.முருகனுடைய வாழ்க்கை மிக சுவாரசியமானது. தொழிற்கல்வி பயிற்சி முடித்து சில வருடங்கள் சர்வீஸ் இன்ஜினியராக சில வருடங்கள் வேலை செய்திருக்கிறார். பின்னர் ஐந்து வருடங்கள் விவசாயம் செய்திருக்கிறார். அடுத்த கட்டமாக DTP, நகல்கள் எடுக்கும் சென்டர் நடத்தியிருகிறார். அதே கால‌த்தில் ஜீவா என்னும் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியிருக்கிறார். இறுதியாக இப்போது தினமணி பத்திரிக்கையில் துணை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

கதை பதிவின் போது ஏற்படும் இறுக்கங்களுடன் அவரால் கதைகளைச் சொல்ல இயலவில்லை. தன் இயல்பினால், முனைப்பினால் மட்டுமே அவரால் கதைகளைச் சொல்ல முடிந்தது. கதை பதிவிற்கு முன்னர் அவர் தயாரிப்புகளுக்காக அவர் கணினியில் குறிப்புகளை எடுத்துக் கொண்டார். பல வருடங்களுக்கு முன் அவருடைய நேர்காணல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதின் பதிவை காண நேர்ந்தது. ஒல்லியான உருவம், தலை முழுதும் நரைக்காமல் மெலிதான நீண்ட மீசையென அடையாளம் முற்றும் மாறிவராகத் தெரிந்தார். பல கேள்விகளுக்கு நடுவில் தொகுப்பாளினி 'உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு தமிழ‌கத்தில் ப‌ரவலான அலையை ஏற்படுத்தியது....'. ஜீ.முருகன் சிரித்துக்கொண்டே ஒரு அலையையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

முதல் கதையை மட்டும் பதிவு செய்து முடித்திருந்தோம். 'மலைக்குச் செல்லலாமா?' என்றார். அவருடைய பழைய யமாக லிபெராவில்(YAMAHA LIBERO) எங்கள் பயணம் தொடங்கியது. என்னால் 'த மோட்டார் சைக்கிள் டியரிஸ் (THE MOTORCYCLE DIARIES) எழுத இயலாவிட்டாலும், கதை சொல்லிக்கான கட்டுரை கிட்டும் என்றது ஏழாம் அறிவு.

வழியெங்கும் அங்கங்கே கொன்றை மரங்கள் பூத்து சிலிர்த்து நிலத்திலும் வானத்திலும் அதன் இதழ்களால் சிவப்பு நிறத்தை தெளித்திருந்த‌து. இன்னும் விரியாத கொன்றை பூக்களின் மொட்டுகள் பச்சை நிறத்தால் மூடிய இதழ்களுடன் நிலத்தில் கிடந்த‌து. அதன் பச்சை மொக்குகளை விரித்தால் உள்ளே தலையில் மகர‌ந்தத்துடன் கொக்கி போன்ற சிறிய மென்னையான நரம்பிருக்கும். சிறுவயதில் இருவர் அதை எடுத்துக் கொண்டு இரு கொக்கிகளையும் கோர்த்து விட்டு இழுப்போம். யார் கொக்கியில் உள்ள மகரந்தம் விழுந்ததோ அவர் தோற்றவர். மற்றவர் வென்றவர். இப்படி தொடர்ந்து கொண்டே செல்லும் எங்கள் விளையாட்டு. வழியில் இருந்த ஆரக் கொன்றை மரம் ஒன்று மஞ்சள் நிறத்தால் புடை சூழ நின்றது. கண்ணை பறித்து நிற்கும் அந்த மஞ்சள் நிறம் வண்ணப் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள் பென்சிலைப் போலிருந்த‌து.

மொட்டை மலைகள் என்ற நினைப்பு மலையின் அருகே செல்லச் செல்ல விலகியது. மலை முழுவதும் மஞ்சள் புற்களால் நிரம்பியிருந்தது. மஞ்சள் புற்களால் வீடுகளின் கூரைகளை வேய்வார்களாம். கோடையிலும் வெப்பத்தை உள்விடாமல் தடுத்துக் கொள்ளும்.மஞ்சள் புற்கள் பார்ப்பதற்கு கொத்து கொத்தாக இடைவெளி விட்டு நாத்து நடுவது போல யாரோ மலையெங்கும் விதைத்தது போலிருக்கும். கல் குவாரிகளாக முன்பிருந் த‌து பிளவுபட்டு பள்ளமாகிய இடங்களில் நீர் தேங்கியிருந்தது. இன்று கல் குவாரிகளைக் காண இயலவில்லை. கிட்டத்திலும் தூரத்திலுமாக தென்படும் நம் தமிழ் தேசிய மரங்களான பனை மரங்கள். மிக செங்குத்தான வழிப்பாதைகளும் ஊசிமுனை வளைவுகளும் இல்லாமலும் பாதை சீராக வளைவுகளுடன் மேலேறிச் சென்றது. சிறிது நேர பயணத்திற்குப் பிறகு அடை காக்கும் பூதத்தின் புதையல் தெரிந்தது. ஒரு கோப்பையை போல் இரு கைகளயும் சேர்த்து பிடித்தால் உள்ளங்கைகளால் மறைத்து வைக்கப் பட்டிருப்பது போல் மலைகள் கைகளாகி மறைத்து பொத்தி பாதுகாத்து வரும் இடம் செங்காநந்தம் என்னும் அழகிய ஊர். செங்காநந்தம் மிக பசுமையாக இருந்த‌து.

இரு பெரிய‌ ஆல‌ம‌ர‌ங்க‌ளுட‌ன் கோயில் போல் தென்ப‌டும் இடத்தில் வ‌ண்டியை நிறுத்தினோம். கோவிலே தான். மூல‌வ‌ராக‌ பிள்ளையார் இருந்தார். அவ‌ருக்கு பாதுகாவ‌ல‌ர்க‌ள் போல் ஒரு ப‌க்க‌ம் புல்லாங்குழ‌ல் தாங்கிய‌ க‌ண்ண‌ன் ம‌றுப‌க்க‌ம் ஆஞ்சிநேயர். எதிரில் ச‌ற்று த‌ள்ளி சிறிய‌ அம்ம‌ன் போன்ற‌ சிறு தெய்வ‌ கோவில் ஒன்று இருந்த‌து. அவ‌ருக்கு ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌ குவாட்ட‌ர் பாட்டிலை யாரோ காலி செய்து விட்டிருந்தார்க‌ள். ஆல‌ம‌ர‌க் கோவிலை ஒட்டியொரு ஆசிர‌ம‌ம் இருந்த‌து. சாமியார்க‌ளுக்கான‌ சடைமுடிக் கொண்டை, வெற்று மேலுட‌ம்பு, கையிலொரு செல்போனுடன் நவீன சாமியாரகவே இருந்தார். ஆசிரமத்தின் வழியாக செல்பவர்களெல்லாம் சாமியாருக்கு வணக்கம் வைத்துச் சென்றனர்.

அவரும் ஒவ்வொருவருக்காகவும் புன்னகை செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் நம்மைப் பார்த்து சிறு புன்னகை செய்வார். ஜீ.முருகன் அவரை சட்டை செய்யவில்லை. கோயிலைச் சுற்றி சிமெண்ட் தரையும் உட்காருவதற்கு ஏற்றதாக திண்டைப் போலவும் அமைத்திருந்தார்கள். அதில் உட்கார்ந்து கொண்டு மற்ற கதைகளின் பதிவைத் தொடங்கினோம்.

மான் கதையும் காண்டாமிருகம் கதையும் பதிவு செய்யத் தொடங்கினோம். அதில் 'அவர் விவரிக்கும் கதையின் வெளி, உள்ளீடாக செயல்படும் உணர்வுத் தளங்கள், மறைபொருளாக இருக்கும் இன்னோர் உலகம், கதைகளின் தன்மைகளால் சூழப்பட்ட மயான அமைதி'என‌ காலம் கடந்த நிலத்திற்குள் பயணப்படும் வசியத்திற்குள்ளானேன்.

மான் கதையை அவரிடம் கேட்டபின் தான் வாசித்தேன். கேட்கப்படும் போது உண்டாகும் கிளர்ச்சி வாசிப்பதையும் தாண்டியது என்று புரிந்த‌து. உங்கள் எதிரே கதாசிரியன் தன் கதையின் நிலப்பர‌ப்பையும் கதாப்பாத்திரங்களையும் விவரிக்கத் தொடங்கும் போதே அவனுடன் சேர்ந்து கொள்வீர்கள். உங்களை குழந்தையாக்கிவிட்டு உங்களுக்கு கதை சொல்லும்படி நிர்பந்திக்கப்படுகிறான். தன் மனதால் மட்டுமே அந்த கதையைக் கூற இயலும். தான் சொல்கிற‌ பொழுது தன் அறிவுசார் நுட்பத்தை தொலைத்தாக வேண்டும். எழுதும்போது கையாளப்படும் உத்திகள் அங்கு சாத்தியமில்லை. வாசிப்பது ஒரு புலனென்றால் கேட்பது மற்றொரு புலனாக உருமாறுவதாலான உணர்வாகவும் இருக்கலாம்.

முதலில் கதைகளும் அதன் பின் அவர் கதைகளில் வெளிப்படும் குறியீடுகளையும் கதைகளை முடித்துவிட்டுச் சொல்கிற தன்மையால், கதைகளின் தளம் வேறோர் களத்தின் முன் நிறுத்தியது. சினிமா குறித்த விமர்சனங்களும் ஜீ.முருகன் எழுதி வருகிறார். தர்கோவ்ஸ்கியின் திரைப்படங்களில் ஒன்றான ஆந்த்ரோ ரூப்ளேவின் கதையை பதிவில் இல்லாமல் சொல்லத் தொடங்கினார்.

ஆந்த்ரோ ரூப்ளே மடத்தில் தங்கி இருக்கும் பாதிரியார்.அவர் நன்றாக ஓவியம் வரைபவர். இவர் ஓவியம் வரைவதற்காக வெள்ளை அடிக்கப் பட்டு தேவாலயமொன்று தயார் நிலையில் இருக்கிறது. இவர் பயணப்பட்டு போகிற வழியில் சந்திக்கும் நிகழ்வுகளால் ஒவியம் வரையாமல் திரும்புகிறார். மிகுந்த மனச் சோர்வுக்கு உள்ளாகிறார்.இவர் மடலாயத்தில் இருக்கும் மணி பழுதடைந்து விடுகிறது. மணி என்றால் ஆளுயர இருப்பது போன்ற மிகப் பெரிய மணி. புது மணி கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் வழக்கமாக மணி செய்யும் ஆசாரி இறந்து விடவே வேறொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமென முடிவு செய்கிறார்கள். ஆசாரியின் மகனான சிறுவன் தன்னால் மணி செய்ய முடியுமென சொல்லிறான். தான் மணி செய்வதாகச் சொல்லி எல்லோரையும் சம்மதிக்க வைக்கிறான்.அதற்காக வேண்டி மணியின் செய்முறைக்கான அத்தனை வேலைகளையும் செய்யத் தொடங்குகிறான். இதையெல்லாம் ஆந்த்ரோ ரூப்ளே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பல கடின உழைப்புக்குப் பிறகு மணியை செய்து முடிக்கிறான் சிறுவன். இறுதியாக கோயில் மணியை ஏற்றி அடிக்கத் தொடங்குகிறார்கள். தான் எதிர்ப்பார்த்த மணி சத்தம் இதுவல்ல என்று சிறுவன் கவலையுறத் தொடங்குகிறான். இதைப் பார்த்த ரூப்ளேவுக்கு விளங்குகிறது கலைஞனின் பணி தன் படைப்பை வழங்குவது மட்டுமே. ஆலமரக் காற்றும் அற்புத கதைகளுமாக மாலை
வேளை நெருங்கிக் கொண்டிருந்தது.

கதைகளை நிகழ்ந்த சம்பவங்களை வைத்து எழுதுவதொரு முறையென்றால், நிகழ்ந்த சம்பவங்களிடன் ஊடே புனைவாக கதாப்பாத்திரங்களை உருவாக்கி கதைகளை எழுதுவது மற்றொரு முறை. ஜீ.முருகனுடைய‌ கதை '' வரும் தந்தை புனைவாகத் தாமாக உருவாக்கி கதையாக எழுதியவை. கதையை சொல்லி முடித்தவுடன் அவர் கண்களில் நீர் தழுப்பிக் கொண்டிருந்தது. வேறெதும் அவரால் சொல்ல இயலவில்லை. அமைதியான கணங்களாக சில நிமிடங்கள் சென்றது. இடையிடையே தலையே திருப்பி வேறெங்கும் பார்க்கும் போது சாமியாரிடம் பார்வை எதேச்சையாக நிலை பெற்றுவிடும். அப்பொழுதும் புன்னகை செய்து கொண்டிருந்தார்.

ஜீ.முருகனின் மனைவி வீட்டில் இல்லாததால். சமையல் எல்லாம் அவருடைய பாடு. மதியம் சாம்பார் வைத்தார் .இரவு கோழி சமைத்தார்.அவர் சமையல் செய்வதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். சில மணி நேரங்களில் இன்ன பிற பான‌ங்களுடன் இரவு இனிதே கழிந்தது. காலை எழுந்து பிறகு மற்ற கதைகளை பதிவு செய்யத் தொடங்கினோம். "பியானோ" கதையை கேட்டுக் கொண்டே காலை கொஞ்சம் கொஞ்சமாக புலர்ந்து கொண்டிருந்தது. பின்னர் அவர் எழுதிய குழந்தைக் கதையான 'சர்க்கஸ்' பதிவு செய்து கொண்டோம்.அனைத்து கதைகளயும் பதிவு செய்து முடிக்க சரியாக மதியத்தை தாண்டியது. விடைபெற்றுக் கிளம்பினேன். இரண்டு நாட்களில் அனுபவங்கள் நிரம்பித் தழும்பிய நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டுக் கொண்டிருந்தேன். இரக்கமில்லாமல் பேருந்து வேலூரிலிருந்து சென்னைக்கு முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)


http://koodu.thamizhstudio.com/kadhaisolli_23.php


Thursday, June 9, 2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (11-06-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.

சார்லி திரைப்பட நடிகராக இருந்தாலும், இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு இருக்காய் இல்லையென்றால் தரையில் உட்கார்ந்து நிகழ்வை ரசிக்கும் மனநிலை கொண்டவர்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரைப்பட இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்படுகிறது. எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் எழுதி சாகித்ய அகடமி விருது பெற்ற "விசாரணைக் கமிசன்" நாவலை வசந்த் அவர்கள் குறும்படமாக இயக்கியுள்ளார்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

விசாரணைக் கமிசன்

வசந்த்

01 மணி / 15 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் வசந்த், எழுத்தாளர் சா. கந்தசாமி, இக்குறும்படத்தில் நடித்த, தேனீ முருகன், லட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


http://thamizhstudio.com/shortfilm_guidance_kv_33.php


Monday, June 6, 2011

வலது புறம் செல்லவும் - 11
வலது புறம் செல்லவும் - 11


இயக்குனர் அகத்தியன்07-06-2011, 07:10 AM

1980களின் ஆரம்பத்தில் மலையாளத்தில் சாரம் என்றொரு படம் வந்தது. பி.ஏ. பக்கர் (B. A. Backer) இயக்கியது. மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்.

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை வலியோடும் வேதனையோடும் சொன்னபடம் அது. மேற்கத்திய கலாச்சாரம் நேரடியாக ஒவ்வொரு பெண்ணையும் மாற்றத் துவங்கியிருந்த நேரம். உதாரணத்துக்கு ஒன்று பெண்கள் ஜீன்சும் டி.சர்ட்டும் அணிந்து சகஜமாக உலாவர ஆரம்பித்திருந்தனர். அப்போதுதான் மதுவும் போதை மருந்துகளும் பல்வேறு வடிவங்களில் கல்லூரி மாணவ மாணவியருக்கு அறிமுகமாக ஆரம்பித்திருந்தன.

எந்த நேரத்திலும் வழக்குகளில் மூழ்கிக்கிடக்கும் வழக்கறிஞர். (பிரேம் நசீர் நடித்திருப்பார்). அவரது மகள் கல்லூரிப் பெண். அம்மா இல்லை. தனிமையை உணருகிறார். அப்பா அவளுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. மெல்ல போதைக்கு அடிமையாகிறாள். ஒருநாள் அவளைக் காணவில்லை.

மழைநாளில் குடைபிடித்துக் கொண்டு தன் மகளை பிரேம்நசீர் தேடும் காட்சிகள் மனதை நெருடும். இறுதியாக அவள் ஒரு பையனுடன் பழகினாள். அவன் அவளை மும்பைக்கு அழைத்துச் சென்று விட்டான் என்ற தகவல் கிடைக்கும். மும்பை செல்கிறார்.

கடல் போன்ற மும்பையில் எங்கு தேடுவது. எந்த ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு புத்தக்கடையில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும்போது பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு மட்டரகமான வாரப் பத்திரிகையின் அட்டையில் அவர் மகளின் படம் அரை நிர்வாணமாக இடம் பெற்றிருக்கும் பதறியபடி அதை வாங்கி அதைப் பிரசுரிக்கும் முகவரிக்கு போவார்.

அங்கேயிருந்து அவர் அந்தப் பத்திரிக்கை அச்சிடும் இடத்திற்கு அனுப்பப்படுவார். அவன் ஒரு போட்டோகிராபரின் முகவரி தருவான். அங்கே போக அவன் அவளை அறிமுகப்படுத்தியவன் முகவரி தருவான். அவனைக் கண்டுபிடிப்பார். அவன்தான் அந்தப்பெண்ணை அழைத்து வந்த காதலன். மித மிஞ்சிய போதையில் இருப்பான்.

அவளை அழைத்து வந்தேன். கையில் காசு இல்லை. தங்கியிருந்த ஓட்டலிலேயே விட்டுவிட்டேன் என்பான். ஓட்டல் போய் விசாரித்தால் அவளை நான்கைந்து நாட்கள் வைத்திருந்து கணக்குத் தீர்த்துக் கொண்டு சிவப்பு விளக்குப் பகுதியில் விற்று விட்டதாகக் கூறிவிட சிவப்பு விளக்குப் பகுதியில் மகளைத் தேட ஆரம்பிப்பார்.

மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி ஒரு பரந்து விரிந்த சாம்ராஜ்யம். தசரதனின் அந்தப்புரத்தை விட ஆயிரம் மடங்கு பெரியது. எங்கு தேடுவது. எந்நேரமும் மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது கூடும் கூட்டம் அங்கே நீந்தக் காத்திருக்கும்.

ஒரு வீட்டிற்குப் போவார். பணம் கொடுத்து விட்டு கட்டிலில் அமருவார். ஒரு பெண் வந்து அமர்ந்து தன் ஜாக்கெட்டைக் கழட்ட அது ஒண்ணும் வேணாம் என்பார். தன் பாக்கெட்டில் இருக்கும் தன் மகளின் படத்தை எடுத்துக் காட்டி இந்தப் பெண்ணை எங்காவது பார்த்திருக்கிறாயா? என்பார். நீங்கள் யார் என்ற கேள்விக்கு நான் இவளின் அப்பா என்பார்.

அந்தப் பெண் சொல்வார். இங்கே தான் ஏதோ ஒரு இடத்தில் என் தந்தையோ சகோதரனோ என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இங்கு உங்களால் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடித்தாலும் அவளை அழைத்துக் கொண்டு போக முடியாது போய் விடுங்கள் என்பார்.

அங்கே உள்ள ஒரு தாதாவின் பழக்கம் கிடைக்கும். வெகு சிரமத்திற்குப் பின் தன் மகளை மீட்பார். ஒரு இரவில் யாரும் அறியாமல் ஒரு பாலியல் தொழிற் கூடத்திலிருந்து கசங்கிப் போன துணியாய் வெளியே வருவார். அன்றலர்ந்த மலர்போல் ஆரம்பக் காட்சிகளில் தோன்றிய பெண் இறுதிக்காட்சியில் இதயத்தை உடைய வைப்பார்.

வந்து டாக்சியில் அமர.. ஆங்காங்கே விளக்குகள் எரிய நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று கேலியாகச் சிரிக்க, டாக்சி போய்க் கொண்டிருக்க அந்தப் படம் முடியும்.

அந்தச் சிரிப்பு அனுமதிக்கப்பட்ட விபச்சார உலகில் இருந்து ஒரு பெண்ணை அவளை விபச்சாரியாக்கிய உலகத்துக்கே மீண்டும் அழைத்து போகிறாயே என்பதுபோல் இருக்கும்.

படம் முழுக்க முழுக்க சிவப்பு விளக்குப் பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. சென்னை அலங்கார் தியேட்டரில் இந்தப் படத்திற்கு சிவப்பு விளக்கு சிங்காரிகளின் கதை என்று தலைப்பிட்டு வெளியிட்டார்கள். மூன்று நாள் ஓடியது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைதான் அந்தப் படத்துக்கும் ஏற்பட்டது.

காணாமல் போனபோது தேடச் செலவழித்த நேரத்தை அந்த தந்தை ஆரம்பித்திலேயே செலவழித்திருக்கலாம். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது தவிர்க்கப்பட்டிருக்கும்.

1980ல் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் இருந்த ஒரு நண்பனின் அழைப்பில்தான் நான் மும்பையை முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடங்களில் சிவப்பு விளக்கு பகுதியும் ஒன்று. அந்தப் பெண்டிபஜாரின் தெருக்களில் இருபுறமும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கொண்டு, ரூபாய் நோட்டை சுருட்டி பிதுங்கி நிற்கும் மார்பகங்களுக்கு இடையே சொருகிக் கொண்டு, ஒரு கையில் மதுவோடும், இன்னொரு கையில் சிகரெட்டோடும், சகிக்க முடியாத பவுடர் பூச்சோடும் அருவருப்பான ஒப்பனைகளோடும் நிற்கும் பெண்களைப் பார்க்கும்போது,

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா"
என்ற கவிமணியின் வார்த்தைகளில் எந்த உண்மையும் இல்லை என்றுதான் தோன்றும்.

அந்தக் காட்சியைப் பார்த்தபின்பு நண்பரிடம் கேட்டேன். இதற்கு எதிர்மறையான காட்சியை எங்கு பார்க்கலாம் என்று. ஏர் இந்தியா அலுவலகம் அழைத்து போனார்.

உடைகளை அழகாய் உடுத்திய பெண்கள், குறைவான உதட்டுச் சாயம். அதிகப்பிளவு வெளியே தெரியாத மார்பகங்கள் அளவான ஒப்பனை. தனிமையில் புகைத்து இரவில் குடிக்கும் நாகரீகம். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, கைகோர்த்து அமர்ந்திருக்கும் காட்சிகள், கால்களும் இடுப்பும் இங்கேயும் தெரிந்தன.

ஒன்று மட்டும் தெரிந்தது. அது வசதியற்றவர்களின் வெளிப்பாடு. இது வசதியானவர்களின் மேம்பாடு.

ஆணாதிக்கச் சமுதாயம் என்று சொன்னாலும் பெண்களின் விடுதலைக்காக ஆண்களே அதிகம் போராடி இருக்கின்றனர். வரலாற்றில் பெண் ஆணால் மறைக்கப்பட்டிருக்கிறாள். அதே ஆணால் உயர்த்தப்பட்டிருக்கிறாள்.

நாமறிந்த வரலாறுகளில் உடன்கட்டை ஏறுவதை ஒழிக்கப் போராடிய ராஜாராம் மோகன்ராய் முதல், ஈ.வெ.ரா பெரியார் வரை பெண்களுக்காகப் போராடிய எத்தனையோ ஆண் போராளிகளை அறிந்திருக்கிறோம்.

பெண் கல்வி என்பதே மறுக்கப்பட்ட காலம். பெண், கல்வி கற்க வேண்டும் என்பதில் ஆண்களே முனைப்பாய் இருந்தனர். எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும் ஒன்றை மட்டுமாவது இங்கு குறிப்பிடுவது ஆண்களுக்கான அவசியமாகிறது.

வீட்டின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கான அறிவுக்காக மட்டுமே அந்தப் பெண்குழந்தை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். 1890ல் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது அந்த சிறுமியின் வயது நான்கு. அந்தப் பெண் குழந்தையின் நினைவாற்றலும் புத்திசாலித்தனமும் ஆசிரியர்களைக் கவர்ந்தது.

ஆங்கிலக் கல்வி அந்த நாட்களில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்று, எனவே ரகசியமாகவே அந்தக் குழந்தைக்கு ஆங்கிலம் போதிக்கப்பட்டது.

ஆறாம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற போது வயது 11. அக்கால வழக்கப்படி பெண்ணின் திருமண வயது 11ல் ஆரம்பித்து விடும். அந்தக் குழந்தையின் அம்மாவும் பெண்ணுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்றுதான் முடிவெடுத்தார்,

ஒரு ஆசிரியர் வற்புறுத்தியதால் மேலே படிக்க அனுமதித்தனர். 8ம் வகுப்பு படிக்கும்போது பூப்பெய்திவிட மறுபடியும் படிப்புக்குத் தடை, பள்ளிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்காக அவரின் தந்தை மனமிரங்கினார். சம்பளத்திற்கு ஆசிரியர் அமர்த்தப்பட்டு வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

மெட்ரிக்குலேசன் தேர்வு எழுதினார். தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றார். அடுத்துக் கல்லூரிப் படிப்பிற்கு என்ன செய்வது? அவர் வசித்ததோ புதுக்கோட்டை.

பெண்களுக்கான கல்லூரி என்பது ஆண்களுடனே சேர்ந்த படிக்க வேண்டும் என்பதுதான். விடுதி வசதி இல்லை.

புதுக்கோட்டை அப்போது சமஸ்தானம். மன்னர் கல்லூரியில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தப் பெண்ணின் தந்தை கல்லூரி விதிமுறைகளில் விலக்கு அளித்து தன் மகளைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுமாறு மன்னரிடம் வேண்டினார். நிபந்தனைகள் விதித்து அனுமதி அளிக்கப்பட்டது. வகுப்பில் ஒரு திரை போடப்பட்டு அந்தத் திரைக்குள் அமர்ந்து பாடங்களைக் கற்றார்.

இண்டர்மீடியட் முடித்து மருத்துவப்படிப்பு. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண். விடுதி வசதி இல்லை. குடும்பம் அவருக்காக சென்னை வந்தது.

பொருளாதார நெருக்கடிகளினூடே, தனி மேஜை தனி வகுப்பு என்ற கல்லூரியின் நடைமுறைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்தியாவில் மருத்துவர் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,

இந்த அன்னை பெண்குலத்திற்கு செய்த மாபெரும் கடமை தமிழ்நாட்டில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டது.

உங்களுக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்துப் பெண்களை தேவதாசிகளாக அனுப்ப உடன் படுவீர்களா? என்று 1929ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவையில் உறுப்பினராக இருந்தபோது கேள்வி எழுப்பி தந்தைப் பெரியார், திரு வி க போன்றோரின் ஆதரவுக் குரல்களுடன் அந்தப் பெண்ணினத்தை விடுததை அடையச் செய்தார், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

ஒரு பெண் கற்பது எவ்வளவு சிரமமான சூழ்நிலையில் இருந்தது என்பதை விளக்கவே மேல சொன்னது. தந்தையும் ஆசிரியர்களும்தான் அந்த வெற்றிக்காரணம். இன்றையக் காலக்கட்டத்தோடு சற்று ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற்கான ஆண்களின் முயற்சியும், பெண்களின் வளர்ச்சியும் தனித்தனியே காணக்கிடைக்கிறதே தவிர ஒரு வரலாற்றுப் பதிவாகப் பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். (இருந்தால் தெரிவிக்கவும்)

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி,பி, ராஜலெட்சுமி, படம் காளிதாஸ். அவர் பாடி, ஆடி, பதிவு செய்யப்பட்ட முதல் பாடல்

"மன்மத பாணமடா
மாரினில் பாயுதடா"

உணர்ச்சியைத் தூண்டும் பாடலாக அது அன்று இருந்தது. தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி வியாபார நோக்கில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இவரே தமிழ் சினிமாவில் கதை, வசனம். பாடல்கள், இயக்கம். தயாரிப்பு என்று ஈடுபட்ட முதல் பெண். 1939ல் இவர் இயக்கிய ஒரு படத்திற்கு இவர் எழுதிய பாடல்.

"ஆசை வச்சேன் உம்மேலநான்
ஆளானேன் மாசிமாசம்"

ஆனால் இதற்கு சில வருடங்களுக்கு முன்னால் இவர் நடித்த யசோதை படத்தில் யசோதை ஜாக்கெட் அணியக் கூடாது. கச்சைதான் அணிய வேண்டும் என்றபோது மறுத்தவர். முரண்பாடுகளுக்கு பெண்கள் விதிவிலக்கல்ல.

தமிழ் சினிமாவின் நெடுகிலும் பெண்கள்தான். நளாயினி, சீதா போன்ற புராணகாலப் பெண் பாத்திரங்களை வைத்துத்தான் ஆரம்பித்தில் சினிமா ஜீவித்து வந்திருக்கிறது.

தமிழின் முதல் சமூகப்படமான மேனகாவில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் துரோகம் செய்கிறாள். 1937ல் இலங்கையில் இருந்து வந்த தவமணி நீச்சல் உடையில் கவர்ச்சிப்படம் கொடுக்கிறார். அதேகாலக் கட்டத்தில்தான் ராஜலட்சுமி சக்கை அணிய மறுக்கிறார்.

பெண்கள் நடிகையாவது பற்றி அந்தக் காலப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று. நடிகையின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

சுற்றி வந்து ஜனங்களெல்லாம்
எட்டி எட்டிப் பாக்கணும்
சொல்லப்போனால் ரசிகரெல்லாம்
ஆட்டோகிராப் கேக்கணும்
பத்திரிகை எடிட்டரெல்லாம்
வாசலிலே காக்கணும்
என்கிறது.

நான் ஆட்டமாடி நடிப்பதைக் கண்டால்
மக்கள் ஆரவாரத்தோடு சேரவேணுமே
நம் நாட்டின் சரித்திரத்தின் ஏட்டிலே
நமக்கு நாலேடாவது ஒதுக்கவேணுமே

என்று அந்தப் பெண் தனது ஏக்கத்தை கனவைப் பதிவு செய்கிறார். ஒரு ஆண் எழுதிய பாடல்தான் இது. சினிமாவிலும் பெண்கள் கவர்ச்சிக்குரியவர்களாகவே ஆக்கப்பட்டனர்.

80கள் வரையிலும் அதாவது பெண்ணின் மேல் ஆடையில் துணி மறைப்பு இடம் பெறாத வரையில் அதாவது ஜீன்ஸ் டி. சர்ட் அணியாதவரையில் மார்பகத்தின் ஒரு பகுதி வெளியே தெரியும்படி சேலை ஒதுக்கிவிடப்படவேண்டும் என்ற எழுதப்படாத விதி சினிமாவில் இருந்தது. நான் உதவி இயக்குனராக ஒவ்வொரு ஷாட் ஆரம்பத்திலும் அந்தப் பணியை செவ்வனே பெண் கதாபாத்திரத்துக்கு ஞாபக மூட்டி செய்து வந்திருக்கிறேன்.

தாசி அபரஞ்சி, மணாளனே மங்கையின் பாக்கியம், கற்புக்கரசி, பூலோக ரம்பை, இப்படி பெண்களை மையப்படுத்திய தலைப்புகளில் அதிக சதவீதத்தில் படங்கள் அமைந்திருந்தன.

இந்தியாவில் பெண்ணுக்குக் கல்வி தடையின்றி கிடைக்கப் பெற்று வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபோது ஆணின் மனநிலையை அவன் ஈகோவை சூரியகாந்தி என்ற படம் சொன்னது.

ஒரு பாலியல் தொழிலாளி திருமணம் செய்து கொண்டு சமூகத்தில் வாழ முற்படும்போது நேரும் அவலங்களை அவளும் பெண்தானே என்ற திரைப்படம் பேசியது.

கலாச்சாரத் தாக்குதலால் கணவனாலேயே சங்கடங்களைச் சந்திக்கும் பெண்ணைப் பற்றி அவள் என்ற திரைப்படம் சித்தரித்தது.

ஸ்ரீதரின் அலைகள் ஒரு பெண் சமுதாயத்தில் வாழ அவள் படும் சிரமங்களைப் பட்டியல் இட்டது.

அரங்கேற்றமும் அவள் அப்படித்தானும் பசியும் புதுமைப்பெண்ணும் பெண்ணை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டிய படங்கள். அவள் ஒரு தொடர்கதை ஆண்களின் பொறுப்பின்மையால் பெண் பொறுப்புக்களை சுமந்து வாழ்வதை உணர்த்தியது.

இப்படித் திரைப்படங்கள் பெண்களைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பாத்திரங்களில் நடித்தவர்கள் இளமையாக இருக்கும் வரையே கதாநாயர்களுக்கும் ரசிகர்களுக்கும் கனவுக் கன்னிகளாக இருந்தனர். நடிகர்கள் வயதான பின்பும் இளமையான பெண்களை கதாநாயகிகள் ஆக்கினர். வயதான கதாநாயகிகள் அதே நடிகர்களுக்கு அம்மா ஆயினர்.

காதலியாக கட்டிப்பிடிக்கப்பட்டவள் அம்மாவாக அணைத்துக் கொள்ளப்பட்டாள், முன்னதற்கு கிளர்ந்த கூட்டம் பின்னால் அவளையே அம்மாவாகப் பார்த்து கண்ணீர் வடித்தனர். குடும்ப அமைப்பிலும், சமுதாய அமைப்பிலும் இளமை பொருந்திய பெண் வயதான ஆணிடம் வசப்படுவது போலவே திரையிலும் திரையைப் பார்த்தும் வசப்பட்டுப் போனாள். வயதான பெண்கள் இளம் கதாநாயகர்களை மகனாகப் பார்ப்பதும் வழக்கமாகிப் போனது.

மின்னும் நட்சத்திரம், மயக்கும் மோகினி, கனவுக் கன்னி என்றெல்லாம் சமூகத்தால் கொண்டாடப்படும் பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும் அவலமாகவே இருக்கிறது.

தன்னைத் துரத்திய அவதூறுச் செய்திகளால் விஜயஸ்ரீ என்ற நடிகை தற்கொலை செய்து கொண்டார். திருமணம் என்றால் சேர்த்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனியே வரவேண்டிய நிலைதான் பெண்களுக்கு நேர்கிறது. அதுவும் பெரும்பாலும் அம்மா என்ற பெண்ணாலேயே நேருகிறது. கணவனும் அவளை ஏடிஎம் மெஷினாகவே பார்க்கிறான். ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் பெண்ணுக்கு தற்கொலைதான் முடிவாகிறது.

ஒரு வர்க்கம் என்ற வகையில் ஆண்கள் விசுவாசம் இல்லாத இனத்தவர்.
ஷோபா தனது மரணக்குறிப்பில் குறிப்பிட்டது இது.

நடிகையர் திலகம் சாவித்திரி இறுதிக் காலத்தில் அனுதாபத்துக்குரிய முறையில் இறந்து போனார்.

ஃபடாபட் ஜெயலட்சுமி, திவ்யபாரதி, சில்க்ஸ்மிதா என்று இன்று வரை பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஒரு துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேன். எல்லா நிலைகளிலும் துறைகளிலும் இவற்றை நீங்கள் பொருத்திப் பார்க்கலாம்.

அன்றாட வாழ்வில் பெண்கள் மேல் மரியாதை கொண்ட நிறைய ஆண்களைச் சந்தித்திருக்கிறேன். பேராவூரணியில் ஆர்.எஸ். வாத்தியாருக்குப் பெண் பார்க்கும்போது அவர் வீட்டில் சொன்னார் நான் வந்து பார்க்கும் முதல் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படியே அவர் பார்த்த முதல் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

என் அசோசியேட் சுரேஷ்குரு தன் மனைவியை வாங்க போங்க என்றுதான் அழைப்பார். காதல் கோட்டை படம் பார்த்துவிட்டு என்னை அழைத்து நட்பு பாராட்டிய சென்னை நண்பர் நெடுஞ்சேரன் இன்று வரை மனைவிக்கு மறைத்து எந்தக் காரியமும் செய்ததில்லை. மனைவியைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுத்ததில்லை. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வீடு என்பதற்கும் இல்லம் என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. வீடு கட்டப்படலாம். வாடகைக்கு விடப்படலாம். இல்லம் அமைவுறும். சொந்தமாகும். அதாவது ஒரு வீடு பெண்ணால் மங்களம் பெறும்போது இல்லமாகிவிடும். உள்ளே நுழையும்போதே இது வீடா? இல்லமா? என மனம் யோசிக்கும். இல்லங்கள் இனம் புரியாத அதிர்வலைகளை எனக்குள் ஏற்படுத்தி இருக்கின்றன. ஒற்றுமையான ஆண் பெண்ணின் அதிர்வலைகள் இல்லங்களில் நிரம்பி இருக்கும். கடவுளின் ஒளிவட்டம்போல, அப்படிப்பட்ட சில இல்லங்களுக்கு நானே விரும்பிச் சென்று அமர்ந்து விட்டு வருவேன்.

ஒரு ஆணும் பெண்ணும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இல்லம் அமைந்துவிடாது. ஆணும் பெண்ணும் உண்மையாக வாழும்போதே இல்லம் அமையும். இல்லாள்களின் எண்ணிக்கை அளவிற்கு இல்லங்கள் இல்லாமல் போனது துரதிஷ்டம் தான்.

இல்லாள் தாயாகும்போது இல்லம் கோவிலாகிறது. தாய் தெய்வமாகிறாள். ஒரு வீட்டை இல்லமாக்கி அதையே கோவிலாக்கி தெய்வமாகிற பாக்கியம் ஏதோ சில பெண்களுக்கு மட்டுமே பூமியில் கிடைக்கிறது.

அந்த அன்னை தன் அக்காள் கணவரோடு இரண்டாவது மனைவியாக தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். இவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இவர் தமக்கை ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு இறந்துவிட இரண்டு குழந்தைகளும் பாலூட்டிய அன்னை. சித்தி கொடுமை சொல்லும் சமூகத்தில் சித்தி பெருமை சொல்லும் தாயானார்.

அந்த அன்னை வீட்டை இல்லமாக மாற்றி அமைத்தவர். அந்த இல்லத்தில் அவரின் மூத்த மகன். வளர்ந்து படித்து வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். புழுதிபடிந்த தெருக்களில் நடக்கும் தான் தான் பின்னாளில் தமிழ் சினிமாவைத் தேரேற்றி ராஜபாட்டையில் அழைத்து போகப் போகிற மாபெரும் கலைஞன் என்பது அவருக்குத் தெரியாது. தமிழ்ச் சினிமாவின் விடிவெள்ளி தாயிடம் போய் அழுதது. தாயிடம் இருந்து சுவாசிக்க ஆரம்பித்து தன் மண்ணை சுவாசித்து, தமிழ் மண்ணை தன் மண்ணை சுவாசிக்க வைக்கப் போகிறான் இவன் என்பது அந்த தாய்க்கும் தெரியாது.

எல்லாரும் நல்ல வேலை பாக்குறாங்கப்பா, நீ என்ன சினிமாவுக்குப் போறேங்கிறே. தாய் கேட்டபோது, அழுது பைத்தியக்காரன்போல் நடித்து, பொருட்களை உடைத்து மனம் சிதறியவனைப் போல் காட்சி தந்த அந்த மகனைப் புரிந்து கொண்டு கடன் வாங்கி நகைவிற்று இந்தாடா மகனே என்று சென்னைக்கு அனுப்பிய அந்தத்தாய் கருத்தம்மா.

பின்னாளில் அன்னையின் பேரிலேயே ஒரு படம் எடுத்தார். அந்த மகன் பாரதிராஜா. எப்பொழுது பேசினாலும் ஐந்து நிமிடம் அம்மாவைப் பற்றிப்பேசாத சமயம் இருக்காது. நாம் ஏன் அந்த அன்னையின் வயிற்றில் பிறக்கவில்லை என்ற பொறாமைப் பட வைப்பார்.

சென்னை வந்து உழைத்து உயர்ந்து அம்மாவின் பெயரிலேயே படம் எடுதது அம்மாவை அழைத்துபோய் டெல்லி விஞ்ஞான் பவனில் ஜாக்கெட் போடாத அந்த கிராமத்து அன்னையை ஜனாதிபதி முன் நிறுத்தி புரோட்டோகால் என்பதையும் மீற வைத்து, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியபோது.

தந்தை மகற்காற்றும் உதவி..
இவன் தந்தை எந்நோற்றான் கொல்…
என்ற வள்ளுவனே தவறாகிப் போன தருணம் அது.

பின்னாளில் என் அன்னை நோய்வாய்பட்டபோது என்னைக் குழந்தையாக குளிப்பாட்டிய அன்னையை நான் குழந்தையாகக் குளிப்பாட்டினேன். சொல்லும் போதெல்லாம் அவர் கண்கள் குளிக்கும்.

தன் அலுவலக அறையில் அன்னையுடன் தானே தங்கி, தூங்கி தான் குழந்தையாய் இருந்தபோது நடமாடும் வரை கூடவே இருந்த அன்னைக்கு எழுந்து நடமாட முடியாத நிலையில் கூடவே இருந்த அம்மதான் பாரதிராஜா. அம்மாவுக்கு அம்மாவாக இருக்க முடியுமா? முடியும் என்று நிருபித்த ஆண். தாயுமானவன்.

ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்கள் பெண்களை உயர்த்தவும் அவர்கள் நலனுக்கு பாடுபடவும், தந்தையாய் மகனாய், சமயங்களில் கணவனாய் அவர்கள் நிலை உயரவும் பாடுபட்டே வந்திருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் ஆதாரமா? பெண்ணுக்கு ஆண் ஆதாரமா? சக்திபாதி சிவன் பாதி என்பதுதான் வாழ்வியலா?

வழக்கம்போல் எனக்கும் பெண்களுக்குமான உறவு. 100 பக்கங்கள் கூட எழுதலாம். அதெல்லாம் எனக்கு முக்கியம். உங்களுக்கு முக்கியமானது எது?

அந்தப் பெண்ணை முதல் முதல் பார்த்தபோதே மனம் சொன்னது இவள் உன் மனைவி என்று. அறிவு சொன்னது உனக்கு ஏற்கனவே மணமாகிக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று.

நான் நெருங்கி, விலகிக்போய்,, என்னதான் முயன்றாலும் சூழ்நிலை மீண்டும் மீண்டும் என்னை அந்தப் பெண்ணருகே கொண்டு போய் நிறுத்தியது.

நான் உதவி இயக்குனராக சிரமப்படும் நேரங்களில் சின்னச்சின்ன உதவிகளை அவர் செய்யும்போது மனம் அவரை வணங்கும்.

அவருடன் நெருக்கம் அதிகமாகி சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்போது என் நெருக்கம் யாருக்கும் மறைக்கப்படவில்லை. மற்றவர்களால் மறுக்கப்பட முடியாததாகவும் இருந்தது.

நான் வெற்றிபெற்ற பின் அந்தப் பெண் கேட்டார். இனி என் எதிர்காலம் எப்படி என்று?

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நான் அவரை அங்கீகரித்தேன்.

ஓரிரு வருடங்கள் கடந்தபோது நெருடியது. இடித்துக் கொண்ட கல்லை யாராவது திட்டுவார்களா?

அன்று மும்பையிலிருந்து திரும்பி இருந்தேன். புரொடெக்ஷன் மேனேஜர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். (அந்தப் பெண் மூலமாக எனக்கு அறிமுகமானவர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு நான் உதவி செய்திருந்தேன்) சந்தித்தேன்.

உங்களைக் கொல்ல முயற்சி நடக்கிறது என்றார்.
யார் என்றேன்
அந்தப் பெண்ணைக் குறிப்பிட்டார்.
காரணம்?
தெரியாது. கூப்பிட்டார்கள். கொல்லவேண்டும் என்றார்கள். ரூ 40,000 பேசி முடிவாகிவிட்டது. நாளை காலை ரூ.10,000 முன் பணம் தருவதாக ஏற்பாடு என்றார்.

எப்படி நம்புவது?

ஒரு டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து தருகிறேன். இரவு வீடு செல்லவில்லை. மறுநாள் சனிக்கிழமை. காலையில் போனேன். ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். யாரோ என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்றேன். கால்களைப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதார். நீங்கள் போய் விட்டால் நான் என்ன செய்வேன் என்றார். கிளம்பும்போது அவசரத்தேவை ரூ.10,000 வேண்டும் என்றார். கொடுத்தேன்.

அந்த நண்பரைச் சந்தித்து மைக்ரோ டேப் ரிக்கார்டர் கொடுத்தேன். திரு சிவசக்தி பாண்டியனுக்கு கதை சொல்லப் போனேன். திரும்பி வந்து அந்த நண்பரைச் சந்தித்தேன். காலையில் நான் அந்தப் பெண்ணிடம் கொடுத்த ரூ.10,000 த்தை கொடுத்தார். பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவையும் கொடுத்தார்.

நானும் என் அசோசியேட் ஸ்டான்லியும் மௌரியா ஓட்டல் ரெஸ்டாரென்டில் அமர்ந்து கேட்டோம். கொடுமையாக இருந்தது.

அந்த நண்பர் கேட்கிறார் சரி. ஆட்டோ ஏத்திக்கொன்னுடுவோம். செத்துப்போயிட்டா போயி பாப்பீங்களா?

தாயும் மகளும் சொல்கிறார்கள். ஐயோ ராசா போயிட்டியேடானு போய் விழுந்து புரண்டு நடிச்சிரமாட்டோம். மிகையில்லை. இன்னும் அந்த ஒலி நாடா எனது ப்ரீப்கேஸ்சில் பத்திரமாக இருக்கிறது. நம்ப முடியாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்கலாம்.

மறுநாள் அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் அதை ஒலி பரப்பினேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெளியேறினேன். சில மாதங்கள் கழித்து காவல்துறையில் என்மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்கள். அங்கு அந்த ஒலி நாடாவை ஓடவிட்டேன்.

இன்னும் சில மாதங்கள் கழித்து அந்தப் பெண் மிகவும் உடல் நலம் குன்றி மோசமான நிலையில் இருப்பதாக நண்பர் கென்னடி சொன்னார். அவர் மூலமாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தேன்.

மருத்துவமனை கவுன்சிலிங்குக்கு அழைத்தார்கள். போய் எல்லாவற்றையும் விளக்கி அவர் என்மேல் கொடுத்த புகார் காவல்நிலையத்தில் இருக்கிறது. இதை மனிதாபிமான அடிப்படையில் செய்கிறேன். அவர்கள் குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுங்கள் என்றேன்.

டிஸ்சார்ஜ் செய்து காரில் அழைத்து வந்தேன். அன்று பிரசாத் ஸ்டுடியோவில் என் படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு நடைபெற்றது. உணவுக் கூடத்தில் அமர வைத்து தவறுக்கு மேல் தவறு செய்யாதீர்கள் என்று மட்டும் சொன்னேன். இப்போதெல்லாம் எங்காவது ஓரிருமுறை அவரை நான் கடந்து செல்லும்போது பார்ப்பதுண்டு.

டிசைனர் திரு பாண்டியன் அலுவலகத்தில் ஓர்நாள் ஒரு பெண் வந்தார். நான் அவரைக் கண்டு ஒதுங்கினேன். ஏன்சார்? என்று கேட்டார். பெண்கள் என்றாலே பயமாக இருக்கிறது என்றேன். நல்ல பெண்களையே வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டீர்கள் என்றார்.

மறுபடியும் திருச்சி தேசியக் கல்லூரி, பறவைகள் இல்ல நினைவுகள்தான். அந்தப் பெண்ணை அந்த தங்கையைச் சந்தித்த அதே இடத்தில்தான் சந்தித்தேன். அவர் முகம் ஏதோ ஒரு சோகத்தையும் வெறுமையையும் வெளிப்படுத்தியது. தினம் மதியம் 3 மணிக்கு கே கே நகரிலிருந்து வந்து பொன்மலைப் பட்டிக்கு பஸ் பிடிப்பார். அறிமுகமான மூன்றாவது நாள் கேட்டேன், மருத்துவமனையில் கணவர் நலமாக இருக்கிறாரா என்று வியப்பால் விழிகள் விரிய எப்படித் தெரியும் என்றார். தினமும் சமைத்து எடுத்துக் கொண்டு நேரம் தவறாமல் போகிறீர்களே அது சொன்னது என்றேன். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது யாரோ ஒரு பெண் ஒரு குழந்தையை கைபிடித்து தூக்கிக் கொண்டு பஸ்ஸூக்கு ஓடினார். இவர் பதைபதைத்தார்.

ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று அவரிடம் கேட்டேன். எப்படித் தெரியும் என்றார். அந்தக் காட்சி தாய்க்கும் சேய்க்குமான உறவு. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றேன்.

மு, மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் புத்தகம் வாங்கி தாங்க முடியாத மனச்சுமைகள் ஏற்படும்போது தாலிப்பாலங்கள் கூட தகர்ந்து போகின்றன

என்ற வரிகளை அடிக்கோடிட்டுக் கொடுத்தேன். படித்தார். கண்கலங்கினார். முறையாக சங்கீதம் கற்றுக்கொண்ட பெண், மிகப்பெரிய பாடகியாக வரவேண்டும் என்று கனவு கண்டவர். பஸ் நிறுத்தத்தில் அவர் பாடிய பாட்டுக்கள் இன்னும் என் நினைவு நாடாக்களை சுழலவிட்டுக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு சிறைப்பறவை. கணவன் ஒரு விபத்தில் மருத்துவமனையில் இருக்கும்போது பறவை சிறகு விரித்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.

40 பக்க நோட்டு வாங்கி கவிதைகளால் நிறைத்து அவரிடம் கொடுத்தேன். அதில் நான் கடைசியாக எழுதி இருந்தது.

நான் உயரே போகிறேன்.

மேலிருந்து என்னால் உன்னைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ உன்னால் என்னைப் பார்க்க முடியும்.

ஒரு நாள் சொன்னார். உங்களைவிட நான் வயதில் மூத்தவள். எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களோடு வந்துவிடவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நிறைய சாதிக்க வேண்டும். இந்த உங்களின் 20 வயதில் நான் உங்களுக்கு தேவைப்படலாம். நீங்கள் எனக்கு உண்மையாகவும் இருக்கலாம். உங்கள் 40 வயதில் நீங்கள் வாலிபத்தோடு இருப்பீர்கள். நான் வயது முதிர்ந்தவளாக இருப்பேன். உங்களுக்கு சங்கடம் விளைவிப்பேன்.

நன்றாகப் படியுங்கள். உயர்ந்த இடத்திற்கு வாருங்கள். ஞாபகங்களுடன் இருப்பேன். உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று தோன்றியது என்னால் முடிந்தது இதுதான்.

இன்னும் நான் மனதுக்குள் வணங்கும் பெண் இவர். இப்படி எத்தனையோ நல்ல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். இருப்பினும் பெண்களுடனான உறவு கண்ணாமூச்சிதான் எல்லாவிதமான உறவுகளிலும்.

என்னதான் இறைவன் என் கண்ணைக் கட்டினாலும் எனக்கு மூன்று கண்கள் பார்ப்பதற்கு.

என் மூத்த பெண் கார்த்திகா வலது கண்
விஜயலட்சுமி இடது கண்
நிரஞ்சனி நெற்றிக்கண்

இரண்டு வருடங்களாக என் தனிமையை பயனுள்ளதாக்குவதே ஒரு பெண் தான். என் மகள் கார்த்திகா பெற்றுக் கொடுத்த பெண். அவர்களுக்கு தியா.

நான் அழைப்பது ஜீவனா..
எல்லாப் பெண்களும் ஜீவனானவர்கள்..
ஜீவனாக்கள்...

அன்னையர்களை வணங்கி ..
அகத்தியன்.


http://koodu.thamizhstudio.com/thodargal_16_11.php