Tuesday, June 14, 2011

பரபரப்பே தூரிகையாய்..... - ஓவியர் ஜீவா


பரபரப்பே தூரிகையாய்.....

http://koodu.thamizhstudio.com/katturaigal_22.php


ஓவியர் ஜீவா


உசைன் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடனேயே, கொஞ்ச நாட்களாக நின்றிருந்த சர்ச்சைகள் மீண்டும் கிளம்பிவிட்டன. பெரும்பாலும் அவர் வரைந்த நிர்வாண கடவுள்களின் ஓவியங்களும், அவர் மீதான எதிர்ப்புக்களுமே, அவர் மறைவின் முக்கிய தலைப்புக்களாக அலசப்பட்டன. அவர் ஓவியங்களின் தன்மை குறித்தோ, தரம் குறித்தோ, பாணி குறித்தோ எவரும் பேசியதாக பார்க்கவில்லை! தலைப்பு செய்திகளில் நம் நாட்டில் ஒரு கலைஞன் இடம் பெற வேண்டுமானால் சர்ச்சைகளுக்குள்ளாக வேண்டும் என்ற நியதியிலிருந்து தப்பவில்லை உசைன்! சர்ச்சைகளை உருவாக்கியதே புகழுக்கும் ஓவியங்களுக்கான பெரு விலைக்கும் இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்கு வருவதுண்டு.

உசைனிடம் எனக்கு உள்ள ஒரு நெருக்கமான விஷயம், அவர் திரைப்பட பேனர் கட் அவுட் ஓவியராக வாழ்க்கையை தொடங்கினார் ; நானும் அவ்வாறே என்பதுதான்! பேனர்களில் பெரிதாக வரையும்போது தூரிகை தீற்றல்கள் வேகமாகவும் வலிமையாகவும் வெளிவரும் என்பது ஓவியர்கள் உணர்ந்த உண்மை! கடைசிவரை உசைனின் ஓவியங்களில் இந்த தன்மை இடம் பெற்றது. திரைப்பட பேனர்களின் பளிச்சிடும் கடும் வண்ணக்கலவை எப்போதும் அவரது ஓவியங்களில் இடம் பெற்றன. உசைனின் பயணம் நேர்த்தியாக திட்டமிட்டது போல் இயல்பாக ஆரம்பித்து தொடர்ந்தது. இலக்கியம், நாடகம், திரைப்பட சூழல்களில் முற்போக்கு கலைஞர்கள் இணைந்து சங்கம் அமைத்து பணியாற்றியதை போல ஓவியர்களும் அமைத்த முற்போக்கு ஓவியர் இயக்கத்தில் 1947ல் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். இந்தியத் தன்மை மிகுதியாக இருந்த புகழ் பெற்ற வங்க ஓவிய பாணியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நவீன பாணியில் இயங்க ஆவல் கொண்டிருந்த ஓவியர்களுடன் உசைனும் இணைந்து பணியாற்ற தொடங்கினார். முற்றிலும் அரூபம் சார்ந்த பாணியில் பயணிக்காமல், உருவங்களை அழகுறச் சிதைத்து , இந்தியத்தன்மையும் மாறாமல் உருப்பெறத் தொடங்கின உசைனின் ஓவியங்கள்! தன் முதல் தனி ஓவியக் காட்சியை இந்தியாவில் கூட அமைக்காமல் ஜூரிச் நகரில் காட்சிக்கு வைத்தார். ஐரோப்பிய நாடுகளிலும் உசைனின் பெயர் பரவத் தொடங்கியது. ஓவியங்களின் விலையிலும் உசைன் மேல்நோக்கிய பயணம் மேற்கொண்டார். சமீப காலங்களில் கோடிகளில் விலை போயின அவரது ஓவியங்கள். ஒரு வருடம் முழுவதும் தினமும் ஒரு ஓவியம் வரைந்து கொடுக்க ஒரு தனியார் கலை அரங்கத்திற்கு ஒப்பந்தம் ஆனது என்று ஒரு செய்தி வெளியானது...ஒவ்வொரு ஓவியமும் ஒரு கோடி ரூபாய்க்கு!

உசைனின் ஓவியங்களில் அடிக்கடி தெரியும் வாய் பிளந்து பாயும் குதிரை வடிவங்கள்...அன்னை தெரசாவும், காப்பிய காட்சிகளும் அடிக்கடி காணக் கிடைக்கும். விநாயகரும் துர்கைகளும் கடவுளர்களும் கூட ஓவியங்களாய் இடம் பெறுவர். 'மாசே சாப்' என்ற அருந்ததிராய் கதாநாயகியாய் நடித்த படத்திற்கு, உசைன் போஸ்டர் டிசைன் கூட செய்திருக்கிறார். விளம்பர வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் எனபதில் உசைன் மிகவும் கவனமாக இருப்பார். மாதுரி தீட்சித் கதாநாயகியை நடித்த 'ஹம் ஆப்கே ஹை கவுன்' பெருவெற்றியை அடைந்தபோது, அவர் தன்னை மாதுரியின் தீவிர ரசிகராய் வெளிப்படுத்திக்கொண்டார். உசைன் இந்த படத்தை இத்தனை தடவை பார்த்தார், மாதுரியை இத்தனை ஓவியங்களாக படைத்தார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. பிறகு தபுவின் ரசிகராக கூட மாறினார் என்பது கேள்விப்பட்ட செய்தி! திரைப்படங்களின் மீது அவருக்கு அளவு கடந்த ரசனை. 'ஒரு ஓவியனின் பார்வையிலிருந்து' என்ற அவரது குறும்படம் திரைப்பட் விழாக்களில் விருதுகளை குவித்தது. மாதுரி மீது கொண்ட பற்று அவரை வைத்து 'கஜகாமினி' திரைப்படத்தை இயக்க தூண்டியது. அடுத்து தபு கதாநாயகியாக நடித்த 'மீனாக்ஷி - மூன்று நகரங்களின் கதை' வெளியானது...முதல் நாளே சில இஸ்லாமிய அமைப்பினர்...ஒரு பாடலில் குரானின் வசனங்கள் அப்படியே இடம் பெற்றன என்று சொல்லி ஆட்சேபிக்க, ஒரே நாளில் தியேட்டரை விட்டே தூக்கிவிட்டார் உசைன். பரபரப்புக்கும் உசைனுக்கும் உள்ள தொடர்பு சும்மாவா! அவரது உடை, தோற்றம், அனைத்தும் புகழ் பாதைக்கேற்ப வடித்துக்கொண்டார். செருப்பு அணியாமல் நடந்து 'வெறுங்கால் ஓவியர்' என்ற பட்டமும் கிடைத்தது.

கடவுள் வடிவங்களை நிர்வாணமாக வரைந்தார் என்ற பரபரப்புக்கு முன்பே அவருடைய புகழ் பெற்ற செயல் இந்திரா காந்தியை 'துர்கா'வாக வரைந்ததுதான். நாடே அவசர நிலையின் கொடுங்கோல் ஆட்சியில் பொருமிக்கொண்டிருந்தபோது...அனைவரும் இந்திரா காந்தியை சபித்துக்கொண்டிருந்தபோது, பிற கலைஞர்கள் அமைதி காத்துக்கொண்டிருந்தபோது, உசைன் கொடிய சர்வாதிகாரியை வீரக் கடவுளாக உருவகப்படுத்தி போற்றி பாடினார்! பரபரப்பின் உச்ச கட்டம் அவர் இந்து கடவுளர்களையும் பாரத தாயையும் ஆடையின்றி வரைந்தபோது கிளம்பியது. குறிப்பாக இந்து அமைப்பினர் கடும் கோபமுற்றனர். அவரது கண்காட்சிகள் தாக்கப்பட்டன. ஓவியங்கள் கிழித்தெறியப்பட்டன. நாடெங்கும் கலை சுதந்திரம் பற்றிய விவாதங்கள் கடுமையாக கிளம்பின. கலைஞர்களே இரு பிரிவாக மாறி கலை சுதந்திரம் பற்றிய விவாதங்களில் கடுமையாக விவாதித்தனர்.சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமாவுக்கும் , டேனிஷ் கார்ட்டூன் கலைஞர்களுக்கும் நேர்ந்த கதி இப்போது உசைனுக்கு நேர்ந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அவர் தன் கடவுள்களை அப்படி வரைவாரா என்று கோபக்குரல்கள் கிளம்பின. நாடெங்கும் நூற்றுக்கணக்கான வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. வெளிநாட்டுக்கு சென்ற அவர் இந்தியா திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தொண்ணூறு வயது கடந்த நிலையில் வெளிநாட்டிலேயே மறைந்து அங்கேயே புதைந்தும் போனார் இந்த மகத்தான கலைஞர்! அவரை பற்றி விவாதிப்பவர்கள் அவருடைய பிற ஓவியங்களை பார்த்திருப்பார்களா, ரசித்திருப்பார்களா என்ற வினா எப்போதும் எனக்குண்டு.

....காத்திருப்போம் மீண்டும் ஒரு உசைன் பிறப்பதற்கு!!!!

- ஓவியர் ஜீவா

http://koodu.thamizhstudio.com/katturaigal_22.php


No comments:

Post a Comment