Monday, June 6, 2011

வலது புறம் செல்லவும் - 11
வலது புறம் செல்லவும் - 11


இயக்குனர் அகத்தியன்07-06-2011, 07:10 AM

1980களின் ஆரம்பத்தில் மலையாளத்தில் சாரம் என்றொரு படம் வந்தது. பி.ஏ. பக்கர் (B. A. Backer) இயக்கியது. மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்.

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பதை வலியோடும் வேதனையோடும் சொன்னபடம் அது. மேற்கத்திய கலாச்சாரம் நேரடியாக ஒவ்வொரு பெண்ணையும் மாற்றத் துவங்கியிருந்த நேரம். உதாரணத்துக்கு ஒன்று பெண்கள் ஜீன்சும் டி.சர்ட்டும் அணிந்து சகஜமாக உலாவர ஆரம்பித்திருந்தனர். அப்போதுதான் மதுவும் போதை மருந்துகளும் பல்வேறு வடிவங்களில் கல்லூரி மாணவ மாணவியருக்கு அறிமுகமாக ஆரம்பித்திருந்தன.

எந்த நேரத்திலும் வழக்குகளில் மூழ்கிக்கிடக்கும் வழக்கறிஞர். (பிரேம் நசீர் நடித்திருப்பார்). அவரது மகள் கல்லூரிப் பெண். அம்மா இல்லை. தனிமையை உணருகிறார். அப்பா அவளுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. மெல்ல போதைக்கு அடிமையாகிறாள். ஒருநாள் அவளைக் காணவில்லை.

மழைநாளில் குடைபிடித்துக் கொண்டு தன் மகளை பிரேம்நசீர் தேடும் காட்சிகள் மனதை நெருடும். இறுதியாக அவள் ஒரு பையனுடன் பழகினாள். அவன் அவளை மும்பைக்கு அழைத்துச் சென்று விட்டான் என்ற தகவல் கிடைக்கும். மும்பை செல்கிறார்.

கடல் போன்ற மும்பையில் எங்கு தேடுவது. எந்த ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து ஒரு புத்தக்கடையில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும்போது பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒரு மட்டரகமான வாரப் பத்திரிகையின் அட்டையில் அவர் மகளின் படம் அரை நிர்வாணமாக இடம் பெற்றிருக்கும் பதறியபடி அதை வாங்கி அதைப் பிரசுரிக்கும் முகவரிக்கு போவார்.

அங்கேயிருந்து அவர் அந்தப் பத்திரிக்கை அச்சிடும் இடத்திற்கு அனுப்பப்படுவார். அவன் ஒரு போட்டோகிராபரின் முகவரி தருவான். அங்கே போக அவன் அவளை அறிமுகப்படுத்தியவன் முகவரி தருவான். அவனைக் கண்டுபிடிப்பார். அவன்தான் அந்தப்பெண்ணை அழைத்து வந்த காதலன். மித மிஞ்சிய போதையில் இருப்பான்.

அவளை அழைத்து வந்தேன். கையில் காசு இல்லை. தங்கியிருந்த ஓட்டலிலேயே விட்டுவிட்டேன் என்பான். ஓட்டல் போய் விசாரித்தால் அவளை நான்கைந்து நாட்கள் வைத்திருந்து கணக்குத் தீர்த்துக் கொண்டு சிவப்பு விளக்குப் பகுதியில் விற்று விட்டதாகக் கூறிவிட சிவப்பு விளக்குப் பகுதியில் மகளைத் தேட ஆரம்பிப்பார்.

மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி ஒரு பரந்து விரிந்த சாம்ராஜ்யம். தசரதனின் அந்தப்புரத்தை விட ஆயிரம் மடங்கு பெரியது. எங்கு தேடுவது. எந்நேரமும் மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது கூடும் கூட்டம் அங்கே நீந்தக் காத்திருக்கும்.

ஒரு வீட்டிற்குப் போவார். பணம் கொடுத்து விட்டு கட்டிலில் அமருவார். ஒரு பெண் வந்து அமர்ந்து தன் ஜாக்கெட்டைக் கழட்ட அது ஒண்ணும் வேணாம் என்பார். தன் பாக்கெட்டில் இருக்கும் தன் மகளின் படத்தை எடுத்துக் காட்டி இந்தப் பெண்ணை எங்காவது பார்த்திருக்கிறாயா? என்பார். நீங்கள் யார் என்ற கேள்விக்கு நான் இவளின் அப்பா என்பார்.

அந்தப் பெண் சொல்வார். இங்கே தான் ஏதோ ஒரு இடத்தில் என் தந்தையோ சகோதரனோ என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். இங்கு உங்களால் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடித்தாலும் அவளை அழைத்துக் கொண்டு போக முடியாது போய் விடுங்கள் என்பார்.

அங்கே உள்ள ஒரு தாதாவின் பழக்கம் கிடைக்கும். வெகு சிரமத்திற்குப் பின் தன் மகளை மீட்பார். ஒரு இரவில் யாரும் அறியாமல் ஒரு பாலியல் தொழிற் கூடத்திலிருந்து கசங்கிப் போன துணியாய் வெளியே வருவார். அன்றலர்ந்த மலர்போல் ஆரம்பக் காட்சிகளில் தோன்றிய பெண் இறுதிக்காட்சியில் இதயத்தை உடைய வைப்பார்.

வந்து டாக்சியில் அமர.. ஆங்காங்கே விளக்குகள் எரிய நூற்றுக்கணக்கான பெண்கள் வரிசையாக நின்று கேலியாகச் சிரிக்க, டாக்சி போய்க் கொண்டிருக்க அந்தப் படம் முடியும்.

அந்தச் சிரிப்பு அனுமதிக்கப்பட்ட விபச்சார உலகில் இருந்து ஒரு பெண்ணை அவளை விபச்சாரியாக்கிய உலகத்துக்கே மீண்டும் அழைத்து போகிறாயே என்பதுபோல் இருக்கும்.

படம் முழுக்க முழுக்க சிவப்பு விளக்குப் பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. சென்னை அலங்கார் தியேட்டரில் இந்தப் படத்திற்கு சிவப்பு விளக்கு சிங்காரிகளின் கதை என்று தலைப்பிட்டு வெளியிட்டார்கள். மூன்று நாள் ஓடியது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலைதான் அந்தப் படத்துக்கும் ஏற்பட்டது.

காணாமல் போனபோது தேடச் செலவழித்த நேரத்தை அந்த தந்தை ஆரம்பித்திலேயே செலவழித்திருக்கலாம். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது தவிர்க்கப்பட்டிருக்கும்.

1980ல் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் இருந்த ஒரு நண்பனின் அழைப்பில்தான் நான் மும்பையை முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இடங்களில் சிவப்பு விளக்கு பகுதியும் ஒன்று. அந்தப் பெண்டிபஜாரின் தெருக்களில் இருபுறமும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கொண்டு, ரூபாய் நோட்டை சுருட்டி பிதுங்கி நிற்கும் மார்பகங்களுக்கு இடையே சொருகிக் கொண்டு, ஒரு கையில் மதுவோடும், இன்னொரு கையில் சிகரெட்டோடும், சகிக்க முடியாத பவுடர் பூச்சோடும் அருவருப்பான ஒப்பனைகளோடும் நிற்கும் பெண்களைப் பார்க்கும்போது,

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா"
என்ற கவிமணியின் வார்த்தைகளில் எந்த உண்மையும் இல்லை என்றுதான் தோன்றும்.

அந்தக் காட்சியைப் பார்த்தபின்பு நண்பரிடம் கேட்டேன். இதற்கு எதிர்மறையான காட்சியை எங்கு பார்க்கலாம் என்று. ஏர் இந்தியா அலுவலகம் அழைத்து போனார்.

உடைகளை அழகாய் உடுத்திய பெண்கள், குறைவான உதட்டுச் சாயம். அதிகப்பிளவு வெளியே தெரியாத மார்பகங்கள் அளவான ஒப்பனை. தனிமையில் புகைத்து இரவில் குடிக்கும் நாகரீகம். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து, கைகோர்த்து அமர்ந்திருக்கும் காட்சிகள், கால்களும் இடுப்பும் இங்கேயும் தெரிந்தன.

ஒன்று மட்டும் தெரிந்தது. அது வசதியற்றவர்களின் வெளிப்பாடு. இது வசதியானவர்களின் மேம்பாடு.

ஆணாதிக்கச் சமுதாயம் என்று சொன்னாலும் பெண்களின் விடுதலைக்காக ஆண்களே அதிகம் போராடி இருக்கின்றனர். வரலாற்றில் பெண் ஆணால் மறைக்கப்பட்டிருக்கிறாள். அதே ஆணால் உயர்த்தப்பட்டிருக்கிறாள்.

நாமறிந்த வரலாறுகளில் உடன்கட்டை ஏறுவதை ஒழிக்கப் போராடிய ராஜாராம் மோகன்ராய் முதல், ஈ.வெ.ரா பெரியார் வரை பெண்களுக்காகப் போராடிய எத்தனையோ ஆண் போராளிகளை அறிந்திருக்கிறோம்.

பெண் கல்வி என்பதே மறுக்கப்பட்ட காலம். பெண், கல்வி கற்க வேண்டும் என்பதில் ஆண்களே முனைப்பாய் இருந்தனர். எத்தனையோ உதாரணங்கள் இருந்தாலும் ஒன்றை மட்டுமாவது இங்கு குறிப்பிடுவது ஆண்களுக்கான அவசியமாகிறது.

வீட்டின் கணக்கு வழக்குகளை பார்ப்பதற்கான அறிவுக்காக மட்டுமே அந்தப் பெண்குழந்தை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். 1890ல் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது அந்த சிறுமியின் வயது நான்கு. அந்தப் பெண் குழந்தையின் நினைவாற்றலும் புத்திசாலித்தனமும் ஆசிரியர்களைக் கவர்ந்தது.

ஆங்கிலக் கல்வி அந்த நாட்களில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்று, எனவே ரகசியமாகவே அந்தக் குழந்தைக்கு ஆங்கிலம் போதிக்கப்பட்டது.

ஆறாம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற போது வயது 11. அக்கால வழக்கப்படி பெண்ணின் திருமண வயது 11ல் ஆரம்பித்து விடும். அந்தக் குழந்தையின் அம்மாவும் பெண்ணுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்றுதான் முடிவெடுத்தார்,

ஒரு ஆசிரியர் வற்புறுத்தியதால் மேலே படிக்க அனுமதித்தனர். 8ம் வகுப்பு படிக்கும்போது பூப்பெய்திவிட மறுபடியும் படிப்புக்குத் தடை, பள்ளிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்ணுக்காக அவரின் தந்தை மனமிரங்கினார். சம்பளத்திற்கு ஆசிரியர் அமர்த்தப்பட்டு வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது.

மெட்ரிக்குலேசன் தேர்வு எழுதினார். தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றார். அடுத்துக் கல்லூரிப் படிப்பிற்கு என்ன செய்வது? அவர் வசித்ததோ புதுக்கோட்டை.

பெண்களுக்கான கல்லூரி என்பது ஆண்களுடனே சேர்ந்த படிக்க வேண்டும் என்பதுதான். விடுதி வசதி இல்லை.

புதுக்கோட்டை அப்போது சமஸ்தானம். மன்னர் கல்லூரியில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்தப் பெண்ணின் தந்தை கல்லூரி விதிமுறைகளில் விலக்கு அளித்து தன் மகளைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுமாறு மன்னரிடம் வேண்டினார். நிபந்தனைகள் விதித்து அனுமதி அளிக்கப்பட்டது. வகுப்பில் ஒரு திரை போடப்பட்டு அந்தத் திரைக்குள் அமர்ந்து பாடங்களைக் கற்றார்.

இண்டர்மீடியட் முடித்து மருத்துவப்படிப்பு. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண். விடுதி வசதி இல்லை. குடும்பம் அவருக்காக சென்னை வந்தது.

பொருளாதார நெருக்கடிகளினூடே, தனி மேஜை தனி வகுப்பு என்ற கல்லூரியின் நடைமுறைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்தியாவில் மருத்துவர் பட்டம் பெற்ற முதல் பெண் ஆனார். அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,

இந்த அன்னை பெண்குலத்திற்கு செய்த மாபெரும் கடமை தமிழ்நாட்டில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டது.

உங்களுக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்துப் பெண்களை தேவதாசிகளாக அனுப்ப உடன் படுவீர்களா? என்று 1929ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவையில் உறுப்பினராக இருந்தபோது கேள்வி எழுப்பி தந்தைப் பெரியார், திரு வி க போன்றோரின் ஆதரவுக் குரல்களுடன் அந்தப் பெண்ணினத்தை விடுததை அடையச் செய்தார், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

ஒரு பெண் கற்பது எவ்வளவு சிரமமான சூழ்நிலையில் இருந்தது என்பதை விளக்கவே மேல சொன்னது. தந்தையும் ஆசிரியர்களும்தான் அந்த வெற்றிக்காரணம். இன்றையக் காலக்கட்டத்தோடு சற்று ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெண்களின் முன்னேற்றத்திற்கான ஆண்களின் முயற்சியும், பெண்களின் வளர்ச்சியும் தனித்தனியே காணக்கிடைக்கிறதே தவிர ஒரு வரலாற்றுப் பதிவாகப் பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். (இருந்தால் தெரிவிக்கவும்)

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி,பி, ராஜலெட்சுமி, படம் காளிதாஸ். அவர் பாடி, ஆடி, பதிவு செய்யப்பட்ட முதல் பாடல்

"மன்மத பாணமடா
மாரினில் பாயுதடா"

உணர்ச்சியைத் தூண்டும் பாடலாக அது அன்று இருந்தது. தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி வியாபார நோக்கில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இவரே தமிழ் சினிமாவில் கதை, வசனம். பாடல்கள், இயக்கம். தயாரிப்பு என்று ஈடுபட்ட முதல் பெண். 1939ல் இவர் இயக்கிய ஒரு படத்திற்கு இவர் எழுதிய பாடல்.

"ஆசை வச்சேன் உம்மேலநான்
ஆளானேன் மாசிமாசம்"

ஆனால் இதற்கு சில வருடங்களுக்கு முன்னால் இவர் நடித்த யசோதை படத்தில் யசோதை ஜாக்கெட் அணியக் கூடாது. கச்சைதான் அணிய வேண்டும் என்றபோது மறுத்தவர். முரண்பாடுகளுக்கு பெண்கள் விதிவிலக்கல்ல.

தமிழ் சினிமாவின் நெடுகிலும் பெண்கள்தான். நளாயினி, சீதா போன்ற புராணகாலப் பெண் பாத்திரங்களை வைத்துத்தான் ஆரம்பித்தில் சினிமா ஜீவித்து வந்திருக்கிறது.

தமிழின் முதல் சமூகப்படமான மேனகாவில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்குத் துரோகம் செய்கிறாள். 1937ல் இலங்கையில் இருந்து வந்த தவமணி நீச்சல் உடையில் கவர்ச்சிப்படம் கொடுக்கிறார். அதேகாலக் கட்டத்தில்தான் ராஜலட்சுமி சக்கை அணிய மறுக்கிறார்.

பெண்கள் நடிகையாவது பற்றி அந்தக் காலப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று. நடிகையின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

சுற்றி வந்து ஜனங்களெல்லாம்
எட்டி எட்டிப் பாக்கணும்
சொல்லப்போனால் ரசிகரெல்லாம்
ஆட்டோகிராப் கேக்கணும்
பத்திரிகை எடிட்டரெல்லாம்
வாசலிலே காக்கணும்
என்கிறது.

நான் ஆட்டமாடி நடிப்பதைக் கண்டால்
மக்கள் ஆரவாரத்தோடு சேரவேணுமே
நம் நாட்டின் சரித்திரத்தின் ஏட்டிலே
நமக்கு நாலேடாவது ஒதுக்கவேணுமே

என்று அந்தப் பெண் தனது ஏக்கத்தை கனவைப் பதிவு செய்கிறார். ஒரு ஆண் எழுதிய பாடல்தான் இது. சினிமாவிலும் பெண்கள் கவர்ச்சிக்குரியவர்களாகவே ஆக்கப்பட்டனர்.

80கள் வரையிலும் அதாவது பெண்ணின் மேல் ஆடையில் துணி மறைப்பு இடம் பெறாத வரையில் அதாவது ஜீன்ஸ் டி. சர்ட் அணியாதவரையில் மார்பகத்தின் ஒரு பகுதி வெளியே தெரியும்படி சேலை ஒதுக்கிவிடப்படவேண்டும் என்ற எழுதப்படாத விதி சினிமாவில் இருந்தது. நான் உதவி இயக்குனராக ஒவ்வொரு ஷாட் ஆரம்பத்திலும் அந்தப் பணியை செவ்வனே பெண் கதாபாத்திரத்துக்கு ஞாபக மூட்டி செய்து வந்திருக்கிறேன்.

தாசி அபரஞ்சி, மணாளனே மங்கையின் பாக்கியம், கற்புக்கரசி, பூலோக ரம்பை, இப்படி பெண்களை மையப்படுத்திய தலைப்புகளில் அதிக சதவீதத்தில் படங்கள் அமைந்திருந்தன.

இந்தியாவில் பெண்ணுக்குக் கல்வி தடையின்றி கிடைக்கப் பெற்று வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபோது ஆணின் மனநிலையை அவன் ஈகோவை சூரியகாந்தி என்ற படம் சொன்னது.

ஒரு பாலியல் தொழிலாளி திருமணம் செய்து கொண்டு சமூகத்தில் வாழ முற்படும்போது நேரும் அவலங்களை அவளும் பெண்தானே என்ற திரைப்படம் பேசியது.

கலாச்சாரத் தாக்குதலால் கணவனாலேயே சங்கடங்களைச் சந்திக்கும் பெண்ணைப் பற்றி அவள் என்ற திரைப்படம் சித்தரித்தது.

ஸ்ரீதரின் அலைகள் ஒரு பெண் சமுதாயத்தில் வாழ அவள் படும் சிரமங்களைப் பட்டியல் இட்டது.

அரங்கேற்றமும் அவள் அப்படித்தானும் பசியும் புதுமைப்பெண்ணும் பெண்ணை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டிய படங்கள். அவள் ஒரு தொடர்கதை ஆண்களின் பொறுப்பின்மையால் பெண் பொறுப்புக்களை சுமந்து வாழ்வதை உணர்த்தியது.

இப்படித் திரைப்படங்கள் பெண்களைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பாத்திரங்களில் நடித்தவர்கள் இளமையாக இருக்கும் வரையே கதாநாயர்களுக்கும் ரசிகர்களுக்கும் கனவுக் கன்னிகளாக இருந்தனர். நடிகர்கள் வயதான பின்பும் இளமையான பெண்களை கதாநாயகிகள் ஆக்கினர். வயதான கதாநாயகிகள் அதே நடிகர்களுக்கு அம்மா ஆயினர்.

காதலியாக கட்டிப்பிடிக்கப்பட்டவள் அம்மாவாக அணைத்துக் கொள்ளப்பட்டாள், முன்னதற்கு கிளர்ந்த கூட்டம் பின்னால் அவளையே அம்மாவாகப் பார்த்து கண்ணீர் வடித்தனர். குடும்ப அமைப்பிலும், சமுதாய அமைப்பிலும் இளமை பொருந்திய பெண் வயதான ஆணிடம் வசப்படுவது போலவே திரையிலும் திரையைப் பார்த்தும் வசப்பட்டுப் போனாள். வயதான பெண்கள் இளம் கதாநாயகர்களை மகனாகப் பார்ப்பதும் வழக்கமாகிப் போனது.

மின்னும் நட்சத்திரம், மயக்கும் மோகினி, கனவுக் கன்னி என்றெல்லாம் சமூகத்தால் கொண்டாடப்படும் பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும் அவலமாகவே இருக்கிறது.

தன்னைத் துரத்திய அவதூறுச் செய்திகளால் விஜயஸ்ரீ என்ற நடிகை தற்கொலை செய்து கொண்டார். திருமணம் என்றால் சேர்த்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனியே வரவேண்டிய நிலைதான் பெண்களுக்கு நேர்கிறது. அதுவும் பெரும்பாலும் அம்மா என்ற பெண்ணாலேயே நேருகிறது. கணவனும் அவளை ஏடிஎம் மெஷினாகவே பார்க்கிறான். ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் பெண்ணுக்கு தற்கொலைதான் முடிவாகிறது.

ஒரு வர்க்கம் என்ற வகையில் ஆண்கள் விசுவாசம் இல்லாத இனத்தவர்.
ஷோபா தனது மரணக்குறிப்பில் குறிப்பிட்டது இது.

நடிகையர் திலகம் சாவித்திரி இறுதிக் காலத்தில் அனுதாபத்துக்குரிய முறையில் இறந்து போனார்.

ஃபடாபட் ஜெயலட்சுமி, திவ்யபாரதி, சில்க்ஸ்மிதா என்று இன்று வரை பட்டியல் நீண்டு கொண்டுதான் இருக்கிறது.

இந்த ஒரு துறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேன். எல்லா நிலைகளிலும் துறைகளிலும் இவற்றை நீங்கள் பொருத்திப் பார்க்கலாம்.

அன்றாட வாழ்வில் பெண்கள் மேல் மரியாதை கொண்ட நிறைய ஆண்களைச் சந்தித்திருக்கிறேன். பேராவூரணியில் ஆர்.எஸ். வாத்தியாருக்குப் பெண் பார்க்கும்போது அவர் வீட்டில் சொன்னார் நான் வந்து பார்க்கும் முதல் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். அதன்படியே அவர் பார்த்த முதல் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

என் அசோசியேட் சுரேஷ்குரு தன் மனைவியை வாங்க போங்க என்றுதான் அழைப்பார். காதல் கோட்டை படம் பார்த்துவிட்டு என்னை அழைத்து நட்பு பாராட்டிய சென்னை நண்பர் நெடுஞ்சேரன் இன்று வரை மனைவிக்கு மறைத்து எந்தக் காரியமும் செய்ததில்லை. மனைவியைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுத்ததில்லை. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வீடு என்பதற்கும் இல்லம் என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. வீடு கட்டப்படலாம். வாடகைக்கு விடப்படலாம். இல்லம் அமைவுறும். சொந்தமாகும். அதாவது ஒரு வீடு பெண்ணால் மங்களம் பெறும்போது இல்லமாகிவிடும். உள்ளே நுழையும்போதே இது வீடா? இல்லமா? என மனம் யோசிக்கும். இல்லங்கள் இனம் புரியாத அதிர்வலைகளை எனக்குள் ஏற்படுத்தி இருக்கின்றன. ஒற்றுமையான ஆண் பெண்ணின் அதிர்வலைகள் இல்லங்களில் நிரம்பி இருக்கும். கடவுளின் ஒளிவட்டம்போல, அப்படிப்பட்ட சில இல்லங்களுக்கு நானே விரும்பிச் சென்று அமர்ந்து விட்டு வருவேன்.

ஒரு ஆணும் பெண்ணும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இல்லம் அமைந்துவிடாது. ஆணும் பெண்ணும் உண்மையாக வாழும்போதே இல்லம் அமையும். இல்லாள்களின் எண்ணிக்கை அளவிற்கு இல்லங்கள் இல்லாமல் போனது துரதிஷ்டம் தான்.

இல்லாள் தாயாகும்போது இல்லம் கோவிலாகிறது. தாய் தெய்வமாகிறாள். ஒரு வீட்டை இல்லமாக்கி அதையே கோவிலாக்கி தெய்வமாகிற பாக்கியம் ஏதோ சில பெண்களுக்கு மட்டுமே பூமியில் கிடைக்கிறது.

அந்த அன்னை தன் அக்காள் கணவரோடு இரண்டாவது மனைவியாக தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். இவருக்கும் குழந்தைகள் பிறந்தன. இவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இவர் தமக்கை ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு இறந்துவிட இரண்டு குழந்தைகளும் பாலூட்டிய அன்னை. சித்தி கொடுமை சொல்லும் சமூகத்தில் சித்தி பெருமை சொல்லும் தாயானார்.

அந்த அன்னை வீட்டை இல்லமாக மாற்றி அமைத்தவர். அந்த இல்லத்தில் அவரின் மூத்த மகன். வளர்ந்து படித்து வேலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார். புழுதிபடிந்த தெருக்களில் நடக்கும் தான் தான் பின்னாளில் தமிழ் சினிமாவைத் தேரேற்றி ராஜபாட்டையில் அழைத்து போகப் போகிற மாபெரும் கலைஞன் என்பது அவருக்குத் தெரியாது. தமிழ்ச் சினிமாவின் விடிவெள்ளி தாயிடம் போய் அழுதது. தாயிடம் இருந்து சுவாசிக்க ஆரம்பித்து தன் மண்ணை சுவாசித்து, தமிழ் மண்ணை தன் மண்ணை சுவாசிக்க வைக்கப் போகிறான் இவன் என்பது அந்த தாய்க்கும் தெரியாது.

எல்லாரும் நல்ல வேலை பாக்குறாங்கப்பா, நீ என்ன சினிமாவுக்குப் போறேங்கிறே. தாய் கேட்டபோது, அழுது பைத்தியக்காரன்போல் நடித்து, பொருட்களை உடைத்து மனம் சிதறியவனைப் போல் காட்சி தந்த அந்த மகனைப் புரிந்து கொண்டு கடன் வாங்கி நகைவிற்று இந்தாடா மகனே என்று சென்னைக்கு அனுப்பிய அந்தத்தாய் கருத்தம்மா.

பின்னாளில் அன்னையின் பேரிலேயே ஒரு படம் எடுத்தார். அந்த மகன் பாரதிராஜா. எப்பொழுது பேசினாலும் ஐந்து நிமிடம் அம்மாவைப் பற்றிப்பேசாத சமயம் இருக்காது. நாம் ஏன் அந்த அன்னையின் வயிற்றில் பிறக்கவில்லை என்ற பொறாமைப் பட வைப்பார்.

சென்னை வந்து உழைத்து உயர்ந்து அம்மாவின் பெயரிலேயே படம் எடுதது அம்மாவை அழைத்துபோய் டெல்லி விஞ்ஞான் பவனில் ஜாக்கெட் போடாத அந்த கிராமத்து அன்னையை ஜனாதிபதி முன் நிறுத்தி புரோட்டோகால் என்பதையும் மீற வைத்து, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியபோது.

தந்தை மகற்காற்றும் உதவி..
இவன் தந்தை எந்நோற்றான் கொல்…
என்ற வள்ளுவனே தவறாகிப் போன தருணம் அது.

பின்னாளில் என் அன்னை நோய்வாய்பட்டபோது என்னைக் குழந்தையாக குளிப்பாட்டிய அன்னையை நான் குழந்தையாகக் குளிப்பாட்டினேன். சொல்லும் போதெல்லாம் அவர் கண்கள் குளிக்கும்.

தன் அலுவலக அறையில் அன்னையுடன் தானே தங்கி, தூங்கி தான் குழந்தையாய் இருந்தபோது நடமாடும் வரை கூடவே இருந்த அன்னைக்கு எழுந்து நடமாட முடியாத நிலையில் கூடவே இருந்த அம்மதான் பாரதிராஜா. அம்மாவுக்கு அம்மாவாக இருக்க முடியுமா? முடியும் என்று நிருபித்த ஆண். தாயுமானவன்.

ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்கள் பெண்களை உயர்த்தவும் அவர்கள் நலனுக்கு பாடுபடவும், தந்தையாய் மகனாய், சமயங்களில் கணவனாய் அவர்கள் நிலை உயரவும் பாடுபட்டே வந்திருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் ஆதாரமா? பெண்ணுக்கு ஆண் ஆதாரமா? சக்திபாதி சிவன் பாதி என்பதுதான் வாழ்வியலா?

வழக்கம்போல் எனக்கும் பெண்களுக்குமான உறவு. 100 பக்கங்கள் கூட எழுதலாம். அதெல்லாம் எனக்கு முக்கியம். உங்களுக்கு முக்கியமானது எது?

அந்தப் பெண்ணை முதல் முதல் பார்த்தபோதே மனம் சொன்னது இவள் உன் மனைவி என்று. அறிவு சொன்னது உனக்கு ஏற்கனவே மணமாகிக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று.

நான் நெருங்கி, விலகிக்போய்,, என்னதான் முயன்றாலும் சூழ்நிலை மீண்டும் மீண்டும் என்னை அந்தப் பெண்ணருகே கொண்டு போய் நிறுத்தியது.

நான் உதவி இயக்குனராக சிரமப்படும் நேரங்களில் சின்னச்சின்ன உதவிகளை அவர் செய்யும்போது மனம் அவரை வணங்கும்.

அவருடன் நெருக்கம் அதிகமாகி சேர்ந்து வாழ ஆரம்பிக்கும்போது என் நெருக்கம் யாருக்கும் மறைக்கப்படவில்லை. மற்றவர்களால் மறுக்கப்பட முடியாததாகவும் இருந்தது.

நான் வெற்றிபெற்ற பின் அந்தப் பெண் கேட்டார். இனி என் எதிர்காலம் எப்படி என்று?

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நான் அவரை அங்கீகரித்தேன்.

ஓரிரு வருடங்கள் கடந்தபோது நெருடியது. இடித்துக் கொண்ட கல்லை யாராவது திட்டுவார்களா?

அன்று மும்பையிலிருந்து திரும்பி இருந்தேன். புரொடெக்ஷன் மேனேஜர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். (அந்தப் பெண் மூலமாக எனக்கு அறிமுகமானவர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு நான் உதவி செய்திருந்தேன்) சந்தித்தேன்.

உங்களைக் கொல்ல முயற்சி நடக்கிறது என்றார்.
யார் என்றேன்
அந்தப் பெண்ணைக் குறிப்பிட்டார்.
காரணம்?
தெரியாது. கூப்பிட்டார்கள். கொல்லவேண்டும் என்றார்கள். ரூ 40,000 பேசி முடிவாகிவிட்டது. நாளை காலை ரூ.10,000 முன் பணம் தருவதாக ஏற்பாடு என்றார்.

எப்படி நம்புவது?

ஒரு டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து தருகிறேன். இரவு வீடு செல்லவில்லை. மறுநாள் சனிக்கிழமை. காலையில் போனேன். ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார். யாரோ என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என்றேன். கால்களைப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதார். நீங்கள் போய் விட்டால் நான் என்ன செய்வேன் என்றார். கிளம்பும்போது அவசரத்தேவை ரூ.10,000 வேண்டும் என்றார். கொடுத்தேன்.

அந்த நண்பரைச் சந்தித்து மைக்ரோ டேப் ரிக்கார்டர் கொடுத்தேன். திரு சிவசக்தி பாண்டியனுக்கு கதை சொல்லப் போனேன். திரும்பி வந்து அந்த நண்பரைச் சந்தித்தேன். காலையில் நான் அந்தப் பெண்ணிடம் கொடுத்த ரூ.10,000 த்தை கொடுத்தார். பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாவையும் கொடுத்தார்.

நானும் என் அசோசியேட் ஸ்டான்லியும் மௌரியா ஓட்டல் ரெஸ்டாரென்டில் அமர்ந்து கேட்டோம். கொடுமையாக இருந்தது.

அந்த நண்பர் கேட்கிறார் சரி. ஆட்டோ ஏத்திக்கொன்னுடுவோம். செத்துப்போயிட்டா போயி பாப்பீங்களா?

தாயும் மகளும் சொல்கிறார்கள். ஐயோ ராசா போயிட்டியேடானு போய் விழுந்து புரண்டு நடிச்சிரமாட்டோம். மிகையில்லை. இன்னும் அந்த ஒலி நாடா எனது ப்ரீப்கேஸ்சில் பத்திரமாக இருக்கிறது. நம்ப முடியாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்கலாம்.

மறுநாள் அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் அதை ஒலி பரப்பினேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெளியேறினேன். சில மாதங்கள் கழித்து காவல்துறையில் என்மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்கள். அங்கு அந்த ஒலி நாடாவை ஓடவிட்டேன்.

இன்னும் சில மாதங்கள் கழித்து அந்தப் பெண் மிகவும் உடல் நலம் குன்றி மோசமான நிலையில் இருப்பதாக நண்பர் கென்னடி சொன்னார். அவர் மூலமாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தேன்.

மருத்துவமனை கவுன்சிலிங்குக்கு அழைத்தார்கள். போய் எல்லாவற்றையும் விளக்கி அவர் என்மேல் கொடுத்த புகார் காவல்நிலையத்தில் இருக்கிறது. இதை மனிதாபிமான அடிப்படையில் செய்கிறேன். அவர்கள் குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுங்கள் என்றேன்.

டிஸ்சார்ஜ் செய்து காரில் அழைத்து வந்தேன். அன்று பிரசாத் ஸ்டுடியோவில் என் படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு நடைபெற்றது. உணவுக் கூடத்தில் அமர வைத்து தவறுக்கு மேல் தவறு செய்யாதீர்கள் என்று மட்டும் சொன்னேன். இப்போதெல்லாம் எங்காவது ஓரிருமுறை அவரை நான் கடந்து செல்லும்போது பார்ப்பதுண்டு.

டிசைனர் திரு பாண்டியன் அலுவலகத்தில் ஓர்நாள் ஒரு பெண் வந்தார். நான் அவரைக் கண்டு ஒதுங்கினேன். ஏன்சார்? என்று கேட்டார். பெண்கள் என்றாலே பயமாக இருக்கிறது என்றேன். நல்ல பெண்களையே வாழ்க்கையில் சந்தித்திருக்க மாட்டீர்கள் என்றார்.

மறுபடியும் திருச்சி தேசியக் கல்லூரி, பறவைகள் இல்ல நினைவுகள்தான். அந்தப் பெண்ணை அந்த தங்கையைச் சந்தித்த அதே இடத்தில்தான் சந்தித்தேன். அவர் முகம் ஏதோ ஒரு சோகத்தையும் வெறுமையையும் வெளிப்படுத்தியது. தினம் மதியம் 3 மணிக்கு கே கே நகரிலிருந்து வந்து பொன்மலைப் பட்டிக்கு பஸ் பிடிப்பார். அறிமுகமான மூன்றாவது நாள் கேட்டேன், மருத்துவமனையில் கணவர் நலமாக இருக்கிறாரா என்று வியப்பால் விழிகள் விரிய எப்படித் தெரியும் என்றார். தினமும் சமைத்து எடுத்துக் கொண்டு நேரம் தவறாமல் போகிறீர்களே அது சொன்னது என்றேன். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும்போது யாரோ ஒரு பெண் ஒரு குழந்தையை கைபிடித்து தூக்கிக் கொண்டு பஸ்ஸூக்கு ஓடினார். இவர் பதைபதைத்தார்.

ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று அவரிடம் கேட்டேன். எப்படித் தெரியும் என்றார். அந்தக் காட்சி தாய்க்கும் சேய்க்குமான உறவு. அதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றேன்.

மு, மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் புத்தகம் வாங்கி தாங்க முடியாத மனச்சுமைகள் ஏற்படும்போது தாலிப்பாலங்கள் கூட தகர்ந்து போகின்றன

என்ற வரிகளை அடிக்கோடிட்டுக் கொடுத்தேன். படித்தார். கண்கலங்கினார். முறையாக சங்கீதம் கற்றுக்கொண்ட பெண், மிகப்பெரிய பாடகியாக வரவேண்டும் என்று கனவு கண்டவர். பஸ் நிறுத்தத்தில் அவர் பாடிய பாட்டுக்கள் இன்னும் என் நினைவு நாடாக்களை சுழலவிட்டுக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு சிறைப்பறவை. கணவன் ஒரு விபத்தில் மருத்துவமனையில் இருக்கும்போது பறவை சிறகு விரித்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.

40 பக்க நோட்டு வாங்கி கவிதைகளால் நிறைத்து அவரிடம் கொடுத்தேன். அதில் நான் கடைசியாக எழுதி இருந்தது.

நான் உயரே போகிறேன்.

மேலிருந்து என்னால் உன்னைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ உன்னால் என்னைப் பார்க்க முடியும்.

ஒரு நாள் சொன்னார். உங்களைவிட நான் வயதில் மூத்தவள். எல்லாவற்றையும் விட்டு விட்டு உங்களோடு வந்துவிடவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நிறைய சாதிக்க வேண்டும். இந்த உங்களின் 20 வயதில் நான் உங்களுக்கு தேவைப்படலாம். நீங்கள் எனக்கு உண்மையாகவும் இருக்கலாம். உங்கள் 40 வயதில் நீங்கள் வாலிபத்தோடு இருப்பீர்கள். நான் வயது முதிர்ந்தவளாக இருப்பேன். உங்களுக்கு சங்கடம் விளைவிப்பேன்.

நன்றாகப் படியுங்கள். உயர்ந்த இடத்திற்கு வாருங்கள். ஞாபகங்களுடன் இருப்பேன். உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று தோன்றியது என்னால் முடிந்தது இதுதான்.

இன்னும் நான் மனதுக்குள் வணங்கும் பெண் இவர். இப்படி எத்தனையோ நல்ல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். இருப்பினும் பெண்களுடனான உறவு கண்ணாமூச்சிதான் எல்லாவிதமான உறவுகளிலும்.

என்னதான் இறைவன் என் கண்ணைக் கட்டினாலும் எனக்கு மூன்று கண்கள் பார்ப்பதற்கு.

என் மூத்த பெண் கார்த்திகா வலது கண்
விஜயலட்சுமி இடது கண்
நிரஞ்சனி நெற்றிக்கண்

இரண்டு வருடங்களாக என் தனிமையை பயனுள்ளதாக்குவதே ஒரு பெண் தான். என் மகள் கார்த்திகா பெற்றுக் கொடுத்த பெண். அவர்களுக்கு தியா.

நான் அழைப்பது ஜீவனா..
எல்லாப் பெண்களும் ஜீவனானவர்கள்..
ஜீவனாக்கள்...

அன்னையர்களை வணங்கி ..
அகத்தியன்.


http://koodu.thamizhstudio.com/thodargal_16_11.php
No comments:

Post a Comment