Tuesday, April 26, 2011

கதை சொல்லி - பாமா (Bama)


கதை சொல்லி - பாமா (Bama)

லிவி"பாரச்சிலுவையை
சுமக்கவும் வேண்டும்
கல்லிலும் முள்ளிலும்
இடறல் படவும் வேண்டும்
முகம் குப்புற விழ‌வும் வேண்டும்
கசையடி படவும் வேண்டும்
பனிமலையுச்சிக்கு நடக்கவும் வேண்டும்
இவையனைத்தும் தாண்டுதல்
அறையப்படுவதற்காகவே "

- பானுபாரதி.

எழுத்தாளர்களை சந்திப்பதற்காக செல்லும் முன் அவர்களுடைய புத்தகங்களை படித்துவிட்டு செல்வதுவென் வழக்கமாக இருந்ததில்லை. அவர்களுடைய புத்தகங்களை ஏற்கனவே படித்திருப்பேன் அல்லது அவருடைய ஆளுமையை பற்றி முழு அறிதல் எனக்குள் இருக்கும். என்னுடைய புத்தககட்டுகளில் தேடியபோது சிறிய புத்தகம் ஒன்று தட்டுப்பட்டது. அது பாமாவின் கருக்கு நாவல். புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கியவனுடன் கோடை மழையின் தூரல் கேட்டுக்கொண்டிருந்தது. மழையைகேட்டுக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன். அற்புதமான இந்த மழையைப் போல் இருக்கவில்லை பலர் வாழ்க்கை. இன்னும் சாதியத்தின் துயர் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

சாதியென்பதை எதிர்த்து இலக்கியத்தில் வலிகளின் பதிவும், அதை எதிர்கொள்ள ஏற்றுக்கொண்ட துணிவும் முன்னெடுத்த பாதைகளுமே நாளைய வரலாற்றை மாற்றி அமைக்கும். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட தலித்துகளின் வாழ்க்கை பதிவை அவர்கள் போல் காத்திரமாக யாராலும் முன்வைக்க இயலாது என்பதை உணர்த்தியது கருக்கு. மதம் சக மனிதனை நேசிக்கச் சொல்லித்தந்தாலும், எந்த சாதி சார்ந்த மனிதனிடம் அன்பு செலுத்துவது என்பதையும் அதன் நிறுவனம் உட்புகுத்திச் சொல்லித் தரும் என்பதை தெளிவாக்கியது அவர் கன்னியாஸ்திரியாக பூண்ட துறவறம்.

பாமாவை சந்திககச் செல்லும் காலை கருமேகங்களால் நிறைந்திருந்தன. காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் என்னும் ஊரில் அவரை கதை சொல்லிக்காக சந்திக்கப் புறப்பட்டேன். பேருந்து நிறுத்தத்தில் தேங்கிய மழை நீரும், சேறும் சகதியுமாக மழையின் இன்னொரு முகம் அனாயசத்தை வரவழைத்துக் கொண்டிருந்தது. அங்கங்கே கவனித்தும் கால்களை காந்தம் போல் ஒட்டிக் கொண்டது சேறு. புதிதாக கடைகளில் தென்பட்ட மாம்பழங்கள் மாம்பழ சீசனை சொல்லிக் கொண்டிருந்தது. அவர்வீட்டுக்கு தாமதமாகவே செல்ல நேர்ந்தது. மதியத்தை தாண்டிவிட்டிருந்ததால் கதை பதிவின் நடுவே உணவு பரிமாறினார்.

பாமாவின் மூத்த சகோதரர் ராஜ் கௌதமன். அவர் தேர்ந்த விமர்சகராக அறியப்படுபவர். சிலுவை ராஜ்சரித்திரம் அவரின் புகழ் பெற்ற நாவல். கருக்கு நாவலில் அவரை கல்வி கற்க ஊக்கப்படுத்தும் அதே அண்ணன் தான். தமையனிடம் இருந்து தான் எழுத்தைப் பெற்றுக் கொண்டீர்களா எனக் கேட்டவுடன்உடனே மறுதலித்தவர் தன் தந்தையிடம் இருந்து தான் எழுதும் திறன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார். "என் தகப்பனார் அறியப்படாவிட்டாலும் நாடகங்கள் எழுதுவார், பாடல்கள் இயற்றுவார். எழுத்துத்திறன் ஜீனில் வந்திருக்க வேண்டும் " என்றார்.

பாமாவின் எழுத்து அவரின் கிராமத்தில் உள்ள மனிதர்களின் வாழ்வியலை அவ்வாறே பதிவு செய்வ‌து. அவர் நாவல் எழுதுவது என்று திட்டமிட்ட வடிவுடன் எழுதாததால் பெயர்களையும் மாற்றாமல் நிகழ்காலத்தில் அழைக்கும் பெயர்களுடனே கருக்கு நாவலிலும் குறிப்பிடிருக்கிறார்.

நான் சென்னையிலுள்ள மேன்சனில் தங்கியிருந்த நாட்களில் 'ஆழி சூழ் உலகு' எழுதிய ஜே.டி.குருஷின் நண்பர் ஒருவரும் தங்கியிருந்தார். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் சுவாரசியமானவை. ஜே.டி.குருஷ் ஆழி சூழ் உலகில் தான் பார்த்த மனிதர்களையே பதிவுசெய்துள்ளார். நாவலைப் பற்றி அறிந்து கொண்ட அங்குள்ள மனிதர்கள் கோபமைடையவே அவர்களைப்பற்றி எப்படி எழுதலாமென அவரை ஊருக்குள் நுழைய தடை விதித்து விட்டார்கள். அவருடைய கிறிஸ்தவ தேவாலயத்திலும் புத்தகத்தை எரிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இதுவல்லவா இயேசுவின் மறுகன்னத்தை காட்டுவது.

அதைப் போலவே பாமாவும் தான் எழுதிய கருக்கு நாவலால் ஒரு வருடம் பாண்டிச்சேரியில் தன்னுடைய தமயன் வீட்டில் வனவாசம் இருந்திருக்கிறார். அதிகம் படிக்க தெரியாத மக்கள் பிறர் மேலோட்டமாக படித்துச் சொன்னதை அப்படியே கேட்டுவிட்டு ஆத்திரத்தில் கொதித்திருக்கிறார்கள். அந்த நாட்களில் பாமாவின் ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவர் பாமாக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அவரை கொஞ்ச நாட்கள் ஊர் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருக்கும் மக்களை கூட்டாமாகச் சேர்த்து நாவலை வாசித்துக் காட்டியிருக்கிறார். அவர்களின் பட்டப்பெயர்கள் இன்ன இன்ன இடத்தில் தான் உபயோகித்திருக்கிறார். எதையும் அவர் தவறாக எழுதவில்லை என்பதை விளங்கப் படுத்தியிருக்கிறார். அதன் பின்னரே அம்மக்களும் சமாதானம் அடைந்திருக்கின்றனர்.

பாமாவின் ஊரில் திறக்கப்பட்ட 'அம்பேத்கர்' சிலைக்கு அவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். இன்று 'கருக்கு பாமா' எனவே அவர்களால் அறியப்படுகிறார். பாமா இருப்பது அவர்களுக்கு பெருமிதமும் கூட. 'இப்பொழுதெல்லாம் அவர்களே என்னிடம் வந்து கதைகளைக் கூறி இந்த கதையை எழுது என்று உரிமையுடன் சொல்கிற நிலைக்கு வந்துவிட்டது' என்றார். 'இப்பொழுது சுதாகரித்து விட்டேன் பெயரைமாற்றியே எழுதுகிறேன்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

பாமா கதைகளை சொல்வதற்கு பெரிய ஆயத்தம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. கதைகள்அவருக்குள்ளே இருந்தது. கதைகளைச் சொல்லும் போதே இடையிடையே எடுத்துக் கொள்ளும் மௌனத்துடன் கதை விவரிப்பு அழகாக கடந்து சென்று கொண்டிருந்தது. கதைகளை விவரிக்கையில் சில இடங்களில் அவராலேயே சிரிப்பை அடக்க இயலவில்லை. கதைகளை லயித்து லயித்துச் சொன்னார். பன்றியும் குரங்கும் வரும் கதையில் ஆச்சியத்துடன் எழும் அவர் குரலில் இருக்கும் பூரிப்பை நேரில் கண்டேன். ஒவ்வொரு கதைக்கும் இடையில் அவர் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உடனே தொடங்கி மழமழவென விவரிக்கத் தொடங்கிவிடுவார். கதைகள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம் போல என‌ நினைத்துக்கொண்டேன்.

அவர் சொன்ன கதைகளில் 'ஏணி ஏற்ற இடம்' போலவே இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமையைச் சொன்னார். ஒன்பதாவது வகுப்பு மாணவன் ஒருவன் தாழ்த்தப்பட்ட என்று சொல்லப்படுகிற சமுதாயத்தைச் சார்ந்தவன் என்பதால் அவனால் பரிமாறப்பட்ட உணவை வேண்டாம் என்று சொன்ன அசிங்கம் பிடித்த பிற சாதித் திமிரின் நிகழ்வு ஒன்றைப் பற்றியும் சொன்னார். 1925ல் எழுதிய கதை 2011லும் பொருந்துகிறது.

கதைகளில் பதிவை தாண்டியும் தேனீருடன் அவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஆச்சிரியத்தில் ஆழ்த்துபவை. பாமா கலந்து கொண்ட சிறுகதை பட்டறைக்கு அழகிய பெரியவனும், ஆத‌வன் தீட்சண்யாகவும் பயிற்சி பெற வந்திருக்கின்றனர். அவர்களை பட்டறை முடியும் போதே கதைகள் எழுதச் சொன்னோம். நன்றாகவே எழுதினார்கள் என்றார். இன்று இருவரும் தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கறிந்த ஆளுமைகளாக இருக்கின்றனர்.

பாமா ப‌ள்ளி ஆசிரியையாக‌ வேலை செய்து கொண்டிருக்கிறார். தமிழ‌க‌ அரசாங்க‌ம் ந‌டைமுறைப்ப‌டுத்தியுள்ள‌ 'செய‌ல் வ‌ழி க‌ல்வி'யில் உள்ள‌ ந‌டைமுறைச் சிக்க‌லை ப‌கிர்ந்தார். செய‌ல் வ‌ழி க‌ல்வி சிற‌ப்பான‌தாக‌ இருந்தாலும் ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல் இல்லாத‌தால் ஐந்தாம் வ‌குப்பு மாண‌வ‌ர்க‌ளால் த‌மிழைக்கூட‌ வாசிக்க‌ இய‌லாத‌ நிலையில் இருக்கிறார்க‌ள் என்று வ‌ருத்த‌ங்கொண்டார்.

கதை 5 மற்றும் 6 ஆகியவை குழந்தைகளுக்கான கதைகள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)

கதைகளைக் கேட்க

http://koodu.thamizhstudio.com/kadhaisolli_21.php


Monday, April 25, 2011

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 10

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்

குட்டி ரேவதிபெண்ணின், ‘பாலின்பப் பரவசநிலை’யை வெளிப்படுத்த இயலாததே ஓர் ஒடுக்கு முறைவடிவமாக மேற்கத்திய நாடுகளில் பெரும் விவாதமாக்கப்பட்டு, அதன் பல்வேறு திசைகள் ஆய்வுப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பெண்கள், ஆணுடன் புணர்ந்து, பிள்ளைகள் பெற்று அவர்கள் பருவம் எய்தும் வரை வளர்க்கும் சுமையைப் பெற்றிருந்தாலும், இப்புணர்ச்சியின் விழிப்பையோ, பரவசத்தையோ உணர்ந்ததே இல்லை. இது ஓர் இயந்திரத்தனமான அனுபவமாகவே பெண்களுக்கு வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குள் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான பாலுறவும், போர்ச்சூழலில் இராணுவத்தினர் பெண்கள் மீது செலுத்தும் பாலியல் வன்முறையும் இயக்கநிலையில் ஒரே மாதிரியானவை தான். அதற்காக, பெண்கள் இப்பால்நிலைப் புணர்ச்சியில் பரவசநிலையை எய்துவதை நோக்கிய விழிப்புநிலை அடைந்து விட்டாலோ, அல்லது அதற்கான வேட்கையை அடைந்து விட்டாலோ மட்டுமே பாலியல் உரிமையை அடைந்துவிட்டதாக ஆகாது. அந்த நிலையை அடைவது என்பதே, ஆண், பெண் இருபாலாருக்கும் தன் உடல் பற்றிய அறிவு, தான் சார்ந்த குடும்பத்தின் வழியாகத் திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு மொழிகள், தன் சமூகம் மற்றும் வணிக ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றின் வழியாகப் பழகி, நுகர்ந்து வந்த பாலியல் நம்பிக்கைகள், மேற்குறிப்பிட்ட பாலியல் உரிமைக்குப் போதுமானவையாக இல்லை என்பதை நாம் அறிந்துகொள்வதிலிருந்தே தோன்றுகிறது.

‘உடல் அரசியல்’ என்ற பெண்ணிய படைப்பிலக்கிய விவாதம் தொடங்கிய நோக்கத்திலிருந்து பல முறைகள் திசை திரும்பியிருக்கிறது. உடல் உறுப்புகள் பற்றிய குறிப்பிடலையோ அல்லது தன் பால்நிலை மற்றும் பாலுறவு பற்றிய மேம்போக்கான வாதங்களையோ, வாக்குமூலங்களையோ கூட ‘பெண்ணிய படைப்பிலக்கியம்’ என்று கூக்குரலிட்ட அரசியல் சிதறல்களும் நடந்தேறியிருக்கின்றன. ‘சென்னை பல்லாவரத்தைத் தாண்டி இவ்விலக்கியங்களை மக்கள் அறிந்திருக்கவில்லை. கல்லூரிகளில், இப்பெண்ணிலக்கியம் பற்றிப் பேசிவிடாதீர்கள்’ என்ற முறையீட்டுடன் ஓர் ஆண் எழுத்தாளர் நான் கலந்து கொண்டதொரு கருத்தரங்கத்தில் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், இப்பெண்ணிலக்கியங்களின் நோக்கங்கள், சென்னை பல்லாவரம் மேம்பாலத்தை எம்பித் தாண்டுவது மட்டும்தானா? இலக்கியப் பரப்பில், சொற்களின் அரசியல் செயல்பாட்டை பெண்ணிலக்கியங்கள் விரிவுபடுத்தியிருக்கின்றன. கருத்தரங்குகளில், பெயருக்கு ஒரு பெண் எழுத்தாளரைப் பேச அழைப்பது போய், கருத்தரங்கத்தின் விவாதப் பொருளில் பெண்ணியத்தளம் ஒருமுகப்பட்டிருக்கிறது. சிந்தனைகள் கருத்துவேறுபாடும் முரண்பாடும் கொள்ளலாம். ஆனால், நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெருங்குரலைப் பெண்ணிய இலக்கியம் எய்திருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, மொழி, தன் சொற்களில் படிந்துள்ள அடக்குமுறைப் புழுதியை நாம் பொருட்படுத்துவதே இல்லை. அப்புழுதியும் அழுக்கும், மனிதன் தன் சொற்புழக்கத்தில் புதுப்பிக்கத் தவறியதால் வந்து அடர்ந்தவை. மொழி, மனிதனின் உளக்கிடக்கையையும் தேவையையும் வெளிப்படுத்தப் பயன்படவேண்டுமே அன்றி, அது ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதற்கான கருவியாகவும், கண்காணிப்பதற்கான கருவியாகவும் இருக்கக் கூடாது. நம் இலக்கிய அரசியலை, ‘உடலரசியல்’ எனும் இலக்கியப் போக்கு மாற்றியிருக்கிறது. வெறுமனே, வசைச் சொற்களாகவும், உடல் உறுப்புகளின் பெயர்ச்சொற்களாகவும் இருந்த சொற்களுக்கு நிறைய இயக்கங்களைப் பெண்ணிலக்கியம் செய்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மதப் பின்னணியிலிருந்து, அதிலும், சுல்பிகா, சல்மா, பஹீமா, அனார் போன்றோர் தமது மதச்சூழலிருந்தும் தமது அந்தரங்கச் சூழலிலிருந்தும் படைப்பிலக்கியத்தில் தன்னை வலுவாக ஈடுபடுத்திக்கொண்டதின் விளைவாக இலக்கியத்தின் பால்நிலை விளக்கங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். இதை, ஓர் அசாதாரணச் செயல்பாடாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தேசியத்தின் பேரால் ஒரு யோனி, பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று, பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று, சுயநலத்தின் சூறையில் இன்னொன்று’ எனும் வரிகளால் சுல்பிகா, யோனிகள் சூறையாடப்படும் அத்தனை சமூகக்காரணங்களையும் ஓரிடத்தில் கொணர்ந்திருக்கிறார். மனிதர்களின் மூளைகளை தத்துவச் சிந்தனைகள் பழக்கத்தாலும் நிர்ப்பந்தத்தாலும் பீடித்திருக்கும் நிலையிலிருந்து விழிப்புறும் போது தான் கவிதை பிறக்கிறது என்பதை உணர்த்த இவர்கள் தங்கள் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

ஒப்பந்தம்

ஒவ்வொரு முறையும்
அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்
படுக்கையறையின்
தவறுகளெல்லாம்
என்னுடையதென

தினமும் படுக்கையறையில்
எதிர்கொள்ளும் முதல் பேச்சு
‘இன்றைக்கு என்ன?’
அநேகமாக
இறுதிப்பேச்சும்
இதுவாகவே இருக்கும்

வேசைத்தனத்தினைச் சுட்டும் விரல்
ஒளிரும் கோடி நட்சத்திரங்களிலிருந்து நீள
நடுங்கும் இரவுகளில்
மிதக்கும் அறிவுரைகள்

குட்டிக்கு உணவூட்ட
இயலாப் பூனையின்
தேம்பியழும் குழந்தைக்குரல்
கவ்விப்பிடிக்கிறது ஈரலை

உனக்கும் கூடப்
புகார்கள் இருக்கலாம்
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது

உன்னிடமிருந்து
கலங்கானதே எனினும்
சிறிது அன்பைப்பெற

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி.

இக்கவிதை சல்மாவின் மிகவும் பிரபலமான கவிதை. அதிகாரத்தைத் துல்லியமாகப் பண்டமாற்றுச் சரக்காக மாற்றிக் கொள்ளும் இடத்தின் வழியாக தன் இருப்பை நிலைநிறுத்த முடிந்ததை இறுமாப்புடன் சொல்லும் கவிதை. சல்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஏன் அத்தனைக்கவிதைகளுமே கூட, மனித மனத்தின் உளவியல் வெளியையும், அரசியல் செயல்பாட்டையும் அறிந்த நிலையில் தான் உருவாகியிருக்கின்றன. இதை அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மையாகக் கொள்ளலாம். அவர் கவிதைகள் உள்ளே செல்லும் போதே, அவரே இதை அடிக்கடி ஆமோதிப்பதைக் காணலாம். தன்னை அணுகும் ஒவ்வொருவரின் மனநிலையையும், ‘ஆமாம்! நான் அதை அறிவேன்’ என்ற அகக்குரல் ஒலிக்க, கவிதை முடிகிறது. அதே சமயம், தன்னைச் சுற்றி உள்ள எல்லா சடப்பொருட்களும், பருவகாலங்களும், தட்பவெப்ப நிலைகளும் கூட தன்னைக் கட்டுப்படுத்துவதான மிகையான நிலையைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கிறார். ‘மின்விசிறி / நான் காற்றைத் தேடி ஓடிவிடாதவாறு கட்டுப்படுத்தும் தந்திரம் கொண்டது’ என்றும், ‘எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும் ஒரு மனிதனோடும் தொடரவியலா வாழ்க்கை தொடர்கிறது அதே அறையில்’ என்றும் சடப்பொருட்கள் உயிர்த்தன்மை பெற்ற நிலையைக் கவிதை கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் அந்த சட உலகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உபாயம் தான். உமா மகேஸ்வரியின் கவிதைகளிலும் இத்தன்மையைக் காணலாம்.

இரண்டாம் ஜாமத்துக்கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மை தான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும் கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்


நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்து தானே தொடங்குகிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில் தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மேற்கண்ட கவிதையில், விவாதம் பெறும் பிரசவம் அடிப்படையிலான பெண், ஆண் உடல்கள், கழிவிரக்கத்தின் பாற்சாய்ந்து நலிவுற்றுப் போகிறது. பெரிய அளவில் பெண், ஆண் உடலின் புற வேறுபாடுகள் விமர்சிக்கப்பட்டு விட்டன. விவாதிக்கப்பட்டுவிட்டன. என்றாலும், இயற்கையின் சாபம் போல தன்னுடலைத் தானே, தோல்வியின் குறியீடாய்ப் பார்ப்பது, வாசிப்பவரையும் அதே பாதையில் சாய்க்கும் என்பதால், புரியும்பொருட்டு இதை விரிவாக விளக்கவேண்டியிருக்கிறது. ஆணின் குறி மீதான பொறாமையுணர்வு, எப்பொழுதும் பெண்ணின் மனதில் இயங்கிக் கொண்டே இருப்பதான பழைமையான மரபார்ந்த விவாதம் போன்றது தான் இதுவும். ஆனால், இனப்பெருக்க ஆற்றலும், உயிருடலை வளர்த்துப் பிரசவிக்கும் ஆற்றலும் பெண்ணுக்கேயான பிரத்தியேக அம்சமாய்ப் பார்க்கும் சமூகப் பார்வை சமீப காலங்களில் உறுதிப்பெற்றிருக்கிறது. தளும்புகள், புற வடிவ அலகுகளால் அழகை அளவிடுவது என்பது ஆணாதிக்கப்பார்வை. ஆணின் காம நுகர்ச்சிக்கு, ஏற்றவாறு பெண்ணின் உடலைத் திருகிக்கொள்வது என்பதே ஆதிக்கச் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வது என்பது தான். இக்கவிதையை பெண்ணிய வாசிப்புக்குட்படுத்தும் போது, அதனுள் மறைமுகமாக இருக்கும், தன் இருப்பை ஆணின் அங்கீகாரத்தின் வழியாகத் தேடும், கோரும் மனநிலையை அங்கீகரிக்கமுடியவில்லை. ஆனால், இச்சிக்கலை, அவரே தனது இன்னொரு கவிதையான, ‘விடுபடல்’ வழியாக எளிதாக அவிழ்க்கிறார்.

விடுபடல்

ஒட்டு விளிம்பில்
தழும்பிச் சரிகிற வயிற்றோடு
தலை சொறிகிற குரங்கிற்கு
ஒரு சலனமுமில்லை
தன் உணவைத்
தானே தேடுவது குறித்து

தன் அடி வயிற்றுக் கனத்தின்
பாதுகாப்புக் குறித்து
மேலும்
யாருடைய கரு இதுவெனவும்

உழைப்பதில் ஈடுபடுவது, கருவுறுவது, அது எவருடைய கரு என்பவை குறித்த சலனமின்மை எனும் தனது அரசியலை இயல்பான கவிதையாக்கி இருக்கிறார். ஒடுக்குமுறையை படைப்பிலக்கிய மொழியால் வெல்லுவது தான் பெண்களுக்கு உற்ற வழிகளில் ஒன்று. உலகில் ஒவ்வொரு மதமும் கடவுள் எனும் கண்டுபிடிப்பாலும் அதிகாரத்தினாலும் பிறந்தது. கடவுள் எனும் கண்டுபிடிப்பு ஆண்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்கவேண்டும். ஒற்றை அதிகாரத்தூணுக்கு வசதியாகப் பெண்களிடம் சுமைகளைச் சுமத்துதற்கு ஏதுவாக, மதம் பற்றிய ஒழுங்குமுறைகளும் கடவுள் குறித்த பயமும், பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை, மற்ற மதங்களை விட இறுக்கமானவை, அவர்களின் உடையில் கூடுதலான ஒரு பர்தாவைப் போலவே. பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், சுமையும் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற அர்த்தத்தில் என்னவோ பெண்களின் நலனுக்காகவே ஆண்கள் அவ்வாறு நடந்துகொள்வதாகத் தம் நியாயத்தை முன்வைக்கிறார்கள். பதிலாக, ஆண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. இன்னும், விளக்கமாகச் சொல்வதென்றால், பெண்களின் பொருளாதார, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்கள் காட்டும் அக்கறையை விட பெண்களின் யோனித் தூய்மையின் வழியாகப் பாராட்டும் அன்றாடச்செயல்பாடுகளின் ஒடுக்குமுறை வரை ஆண்கள் தம் கண்காணிப்பையும் அடக்குமுறையையும் அக்கறை என்ற பேரில் செலுத்திவருகின்றனர்.

ஆனால், பெண்ணுக்குத் தன்னளவில் யோனி என்பது என்ன என்பதை பல கவிஞர்கள் பலதிசைகளிலிருந்து பொருள்விளக்கம் தந்திருந்தாலும் சல்மாவின், ‘என் பூர்வீக வீடு’ கவிதை சமகால பெண் தன் யோனியை இழக்க வேண்டியிருக்கும் நிலை பற்றிய பரிவைப் பதிவு செய்கிறது. ‘கருப்பையை உடலிலிருந்து பிரித்தெடுத்தல்’ நவீன வாழ்க்கையில் இன்றியமையாத நிகழ்வாகி விட்டது பெண்களுக்கு. மறுக்கமுடியாததொரு படிமமும் ஆகிவிட்டது.

என் பூர்வீக வீடு 2

முன்கூட்டிக் குறிக்கப்பட்ட
காலமொன்றில்

உலர்ந்த திராட்சையென
சுருங்கிய சருமத்தோடு
நினைவு தப்பிச் சரிந்திருந்த
அவளிடமிருந்து கருப்பையை
மருத்துவர்கள் பிரித்தெடுக்கின்றனர்
சலனமற்ற கவனத்துடன்

தண்ணீர் நிரம்பிய
பாத்திரத்தின் மெளன வெளியெங்கும்
கனத்த ஈரல் துண்டெனத்
தளும்பும் அது
துலங்கிய தன் மர்மத்தோடு

எனதுயிர் ஒடுங்கியிருந்த
அச்சதைத் துண்டை நோக்கி
இதயத்தின் மத்தியிலிருந்து
பீரிட்டெழும் கிளர்ச்சி
பின் பெரும் துக்கமாய் மாறும்

எத்தனைமுறை
உயிர் சுமந்திருந்தாலென்ன
கழிப்பறையில் உருவாகித்
தகிக்கும் வெப்பமெனச்
சபிக்கப்பட்டதாகத்தானே இருந்திருக்கும்
அவ்வுறுப்பு அவளுக்கும்

தொடர்ச்சியான வேட்டையாடலுக்குப்பின்
சக்கையாய் மாறிய அதன் ஆன்மா
இனியேனும் அமைதி பெறக்கூடும்

குறிக்கப்பட்ட நேரத்திற்குச்
சற்று முன் தனதறைக்கு வெளியே
வலைப் பின்னலின் கீழே
ஒளி நொறுங்கிக் கிடப்பதை
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்து விட்டுப்
பயமற்ற குரலில் சொன்னாள்

‘நான் இனிப் பாதி மனுஷி’
அவ்வார்த்தைகளில் கனன்றிருந்த
இழப்புணர்வின் வன்மம்
பிறகு என்னை
அமைதி கொள்ளவிடவேயில்லை

நவீன வாழ்வின் உளைச்சலும், வேதியியல் பொருட்கள் கலந்த உணவும், பெண்ணின் கருப்பையைத் தான் அதிகமாய்த் தாக்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால், அத்தகைய கருப்பையைத் தன் பூர்வீக வீடாக்கியும், அதை இழந்தபோது, இழப்புக்குள்ளானவள், தன்னை பாதி மனுஷியாகச் சொல்லுமிடத்திலும் எத்தகைய ஆற்றல் உறுப்பாய் அது பெண்ணுக்கு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். அது குழந்தையை ஈன்றெடுக்கும் உறுப்பு மட்டுமே அன்று. பெண்ணுக்கு, பெண்ணுடலுக்குத் தேவையான அத்தனை பால்நிலை அம்சங்களையும் வழங்கக்கூடியது என்பதாலும் அந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், சல்மா, எங்கோ வலிந்து தன்னை விடுதலையின் வாயிலிலிருந்து விலக்கி வைத்திருக்கும் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. விடுதலையை அனுபவிக்காத பாவமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் ‘ஒப்பந்தம் செய்து கொண்டதன் பேரில் வழங்க வேண்டிய புன்னகைகள்’ தொடர்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாய் இருக்கின்றன. சில சமயங்களில் வரிகளின் அமைப்பில் கொண்ட அசிரத்தையும் அர்த்தப்பிழையைத் தருகிறது. எல்லா கவிதைகளிலும் தொடர்க் கருப்பொருளாக உடலும் அதன் உணர்வுகளும் இடம்பெற்ற போதிலும், அவை எதிர்மறையான சிந்தனைகளால் ஊக்குவிக்கப்பட்ட உடலாகவே இருக்கிறது. நேர்மறையான சிந்தனைகளும் கலந்திருப்பின் அந்த உடலைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையை நோக்கியும் நம் வாசிப்பையும் கவனத்தையும் திருப்ப வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரே விதமான தொனியில் எல்லா கவிதைகளும் ஒலிப்பதால் ஒரே கோரிக்கைக்காக அவை இறைஞ்சுவதாகவும் ஆகிவிடுகின்றன.

வீடும் வெளியும்

சற்று முன்
தெருவைக் கடந்தது
தேர்.

என் வரையறுக்கப்பட்ட
புலன்களை
வந்தடைகின்றன
பாடல் வரிகளோடு
அரூப விழாக்காட்சிகள்.

இன்னும் வாய்க்கவில்லை
ஒரு திருவிழா நாள்.
திருவிழா முகங்கள்
திருவிழா இடங்கள்
திருவிழா குழந்தைகள்
என் திருவிழா அனுமானங்களுக்கு
என்றும் குறைவில்லை.

அனுமானங்களில் கரைந்த
என் காதலைப் போல
தொன்மையான
செவிவழிக் கதைகளால்
நிரப்பப்பட்ட மூளையில்
ஒலிக்குறிகளாய் மாறிய
காட்சிகள் நிரம்பி வழிகின்றன.

ஏதேனும் ஒரு குரல்
என்னுள் பதிவு செய்கிறது
எண்ணற்ற முகங்களை
அவற்றின் உணர்வு ரேகைகளோடு.

நுட்பமும் விஸ்தீரணமும் இழைய
ஒரு தற்செயலான பொழுது
கனவுகளின் புதிரிலிருந்து விலக்கி
காட்சியை விரிக்கும்போது
ஒட்ட இயலா மனம்
தப்பியோடும்
தன் விசித்திர சுயக்காட்சிகளுக்கு.

வீடும் வெளியும் என்ற இக்கவிதை சொல்லவந்ததை மீறி ஒலிக்கும் அதிர்வுகளுடன் துலங்குகின்றதால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. கவிதையின் கட்டமைப்புகளைப் புரிந்த ஒரு தருணத்தால் சொற்கள் விரிந்து, அர்த்தம் பெருகுகின்றது. அதுமட்டுமன்றி, காட்சி, மனதின் கருப்பொருளில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதன் விளைவுகள் பற்றிய புதிய பார்வை என்பதாலும், இக்கவிதை அவரது மற்ற கவிதைகளிலிருந்தும் விலகிய ஒன்றாய் இருக்கிறது. இதுபோலவே, ‘கோணம்’ என்ற கவிதையும் மெல்ல நகைப்பை ஊட்டியதொரு கவிதையாகவும், மேலே விவரித்திருக்கும் அத்தனை பார்வைகளுக்கும் தன் பக்கநியாயத்தை வரைவதாகவும் இருக்கிறது. அவரது சொற்களுடனான தொடர்ச் சஞ்சரிப்பில் இறுக்கமும் வெறுமையும் தனிமையும் வெக்கையும் வீசும் ஓரிடத்திற்கு வந்து நிற்பதைப்போல உணர்கிறேன். ஒரு வெளவாலைப் போலவே!

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப்
பாலூட்டுவதை
தலைகீழாகப் புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வெளவால்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா. ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (2000), பச்சைத் தேவதை(2003) என்ற இரு கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_10.php

Sunday, April 24, 2011

கா - சிறுகதை - ஆதவன்


எறும்புகள் நகர்ந்து செல்லும் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் பறவைகள் வீரிட்டுக் கத்தின. கழுகின் ஏரார்ந்த பார்வையில் சாலையிலிருந்து வனப்பகுதிக்கு ஊர்ந்து செல்லும் பாம்புகள் தென்பட்டன. சாலையின் ஓரங்களில் இருந்த மரத்தின்னைகள் ஒன்றையொன்று விளித்து கதைத்துக் கொண்டிருந்தன. பனித்துளிகள் புற்களை சேர்த்து அனைத்துக் கொண்டு அதிகாலை காமத்திலிருந்து இன்னும் விடுபடாததாய் கிடந்தன. நேரம் செல்ல செல்ல அவை தின்னமிழந்து ஒழுகி நீர்த்துப் போகும் தருணத்தில் புற்களின் நுனிகள் கதிரைத் தேடிக் கொண்டிருந்தன. மரங்களின் மீது மயில்கள் பூங்கழுத்தை திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் மான்கள் மெல்லடி எடுத்து வைத்து கண்கள் சிமிட்டி, அக்கம் பக்கம் பார்த்து அளவளாவிக் கொண்டன. இயற்கை தனக்குள் தன்னையே தேடிக் கொண்டிருக்கும் பரிசுத்தமான அமைதி தவழ்ந்த நேரம், அடுத்த நொடியில் சர்ரென, செவிகளை கிழிக்கும் வேகத்தில் ஓர் கார் கடந்து சென்றது. பனித்துளிகளின் ரத்தம் அருகில் இருந்த மான் மீதும், பறந்து கொண்டிருந்த பறவைகளின் மீது தெளித்து சாலையில் சிதறிக் கிடந்தன. ஊர்ந்து சென்ற பாம்பு நின்று திரும்பி பார்த்தது. கணப் பொழுதில் நகர்ந்து சென்ற காரை யாரும் காணவில்லை. ஏதோ இயற்கையின் மாயை என்று நினைத்து அனைத்தும் மௌனமாகி விட்டன.

"சூப்பர் டாடி".. காருக்குள் இருந்த சிறுவன், தன் தந்தையை இறுக அனைத்து கன்னத்தில் தன் எச்சில் படும்படி அழுத்து முத்தமிட்டான். உதடு முத்தமிட்டு திரும்புகையில் அவன் எச்சில் கன்னத்தில் இருந்து பிரிந்து விழுந்தது. 'கா'வின் மனம் முழுவதும், ஏதோ ஒருவித சோகம் வியாபித்திருந்தது.

கா, எப்போதும் மிக அதிகமான வேகத்தில் காரோட்டி செல்பவன். வாழ்க்கையின் தத்துவங்களையும், அது தரும் அனுமானங்களையும் அதன் அருகில் சென்று பருகி வருபவன். உலகில் தான் பிறந்ததே படித்து இன்புறத்தான் என்ற எண்ணத்தில் மிதப்பவன். ஜெர்மானியத் தத்துவவாதியான ஆர்தர் ஷோப்பன் ஹேவரின் "எல்லோருக்கும் பழக்கப்ட்ட சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி யாருக்கும் பழக்கமற்ற அசாதாரண விசயங்களைத் தெரிவியுங்கள்" என்கிற கருத்தின் அடிப்படையில் உருவான "காப்காவின்" விசாரணை நாவலில் வரும் மையப்பாதிரத்தின் பெயரான "கா"வையே தன்னுடைய பெயராக வைத்துக் கொண்டவன். தனி மனிதனானவன் தன் சுதந்திரத்தைக் காக்க வேண்டுமெனில் புறக் கோரிக்கைகளை மறுத்து சமுதாய அமைப்புகளிலிருந்து விலகி தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும் தனித்தனி அணுக்களாக மாறிவிடுவதே சிறந்தது என்கிற "ழான்பால் சார்த்தரின்" வாக்கியங்களை எவ்வித தர்க்கங்களுக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டவன். அவனுக்காகவே பிறந்தவளாய் அவன் வாழ்வில் செப்படி எடுத்து வைத்தாள் வானதி. கா என்கிற அவனின் பெயரைக் கண்டே அவன் இலக்கிய தாகத்தை முகர்ந்து அவன் பின் எறும்பாய் தொடர்ந்தவள். இலக்கியம் இருவரையும் இல்லறத்தில் பிணைத்தது. பாப்லோ நெருதா, நீட்சே என அவர்களின் நீட்சியாய் தங்களை நெட்டுரு செய்துக் கொண்டனர் இருவரும். அவளுக்கு அவன் கார் ஓட்டும் அழகு மிகவும் பிடிக்கும். மிக அனாயசமாக ஒற்றை கையில் ஸ்டீரிங்கை பிடித்துக் கொண்டு ஒரு கையில் ஜான் பெயசின் இசைத் தட்டுகளை தேடி எடுத்து ஓடவிடும் ரசனை அவளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

வேகம் என்றால் காரும், அது செல்லும் சாலையின் ஸ்த்திரத்தன்மையும் சேர்ந்தே கதிகலங்கிப் போகும் வேகம். அப்படி ஒரு வேகத்தை யாரும் கண்களால் பார்த்து விட முடியாது. காட்சிப் பிழையென கணத்தினும் மெல்லிய நானோ நொடியில் கார் அந்த இடத்தில் இருந்து மறைந்து விடும். அவன் கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு அவன் தோல் மீது சாய்ந்து நகுலனின் கவிதைகளை அவள் கொஞ்சம் சொல்லி நிறுத்த, அவன் முடித்து வைப்பான். அவன் குரலின் வலிமையில், கார் ஓட்டும் ஆண்மையில், இலக்கிய அறிவில் அவள் எப்போதும் தன்னை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பாள்.

அன்று பிரெட்ரிக் நீட்சேவின் Once more, ere I move on தலைப்பில் தொடங்கும்


And send my glance forward,
Lonely, I raise my hands
To you, to whom I flee,
To whom I, in the deepest depths of my heart,
Have solemnly consecrated altars,
So that, at all times,
His voice would summon me again.

கவிதையை அவள் கூற, அவன்

I want to know you, unknown one,
You who have reached deep within my soul,
Wandering through my life like a storm,
You incomprehensible one, akin to me!
I want to know you, even serve you.

என முடித்து வைத்தான்.

முடித்துவிட்டு கண் சிமிட்டி அவளைப் பார்த்தான். ஜான் பெயஸ் இசை மாறி, யானியின் வயலின் இசைத்துக் கொண்டிருந்தது. அந்த இசை சூழல், கவிதையின் செறிவு, 'கா'வின் கவிதைத் திறன் என அனைத்தும் சேர்ந்து அவளை தன்னிலை மறக்க செய்தது. வளைவில் கூட வேகம் குறையாமல் ஸ்டீரிங்கை ஒடித்து காரை அவன் திருப்பும் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவள் தன் முத்தங்களை அவனுக்கு பரிசாகக் கொடுத்தாள். அவன் கண்ணங்களில் ஒட்டிய அவள் இதழின் ஈரம் வறண்டு போக வெகு நேரம் ஆயிற்று. அவன் இடுப்பின் இருபுறமும் தன் கைகளை கோர்த்து, அவன் தோள்களில் மெல்ல சாய்ந்துக் கொண்டாள். அவன் அகன்ற தோளை தன் பால் பற்களால் கடித்தாள். கைகளின் இறுக்கம் அதிகாமானது. அவள் கன்னத்தில் முத்தமிட அவன் திரும்பினான்.

ஸ்ரர்ர்ர்ரர்ர்ர்....க்ரீச்ச்ச்ச்சச்...சாலையில் கார்களின் சக்கரங்கள் தேய்த்து தீப்பொறி பறந்தது. மலையின் விளிம்பில் அசுர வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் நிலைத் தடுமாறி பள்ளத்தில் விழுந்தது.
"டாடி.. என்ன ஆச்சு உங்களுக்கு".. தன் நிலை திரும்பி மகனைப் பார்த்து லேசாய் சிரித்து விட்டு மீண்டும் காரை வேகமாக செலுத்தினான். அவளின் மரணம் அவனின் மனக்குரளியில் இருந்துக் கொண்டு அவன் இருத்தலை கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தது. இந்த உலகின் இருண்மையை அகற்றும் இலக்கியம் அவ்வப்போது அவனுக்கு இருத்தலின் நியாயத்தை உணர்த்தியது. அவள் விட்டு சென்ற எச்சமாய் அவன் மகன். அவளைப் போன்றே தந்தையின் இலக்கியம், வேகம் என அனைத்தையும் சிலாகிக்கும் பக்குவத்துடன் இருப்பது அவனுக்கு ஆறுதலாய் அமைந்துவிட்டது.

எங்கே தன் மகனும் இந்த கார் ஒட்டு வேகத்தால் தன்னை விட்டுப் பிரிந்துப் போய் விடுவானோ என்கிற பயம் அவனுக்குள் இருந்தாலும், தன் மகன் அதைத்தான் விரும்புகிறான் என்பதால் அவனுக்கு மாற்று தெரியவில்லை. அவனுக்கு அழகுறை சொல்லவும் அவன் தயாரில்லை.

மலையின் சரிவில், காரை ஒடித்து அவன் திரும்பும்போது அவன் மகன் கொள்ளும் பரவசம் அலாதியானது. "மார்வெலஸ் டாடி" என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையின் முகத்தைப் பார்த்து பின்னீட்டீங்க என்று சொல்லும் அழகில் 'கா' சொக்கித்தான் போவான். எப்போதும் தந்தை கார் ஓட்டும் அழகைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் நகுலனுக்கு தெரியும் தன் பிறத்தி அதனால்தான் இறந்தாள் என்று.

"எப்படி, டாடி நீங்க இவ்வளவு வேகமா கார் ஓட்டக் கத்துக்கிட்டீங்க.. நம்மக் கார் மட்டும்தான் இவ்ளோ வேகத்துல போகுமா? இல்லனா எல்லாக் காரும் இப்படிதான் போகுமா? ஹ்ம்ம்.. நீங்கள் ஓட்டுற கார் மட்டுந்தான் இப்படி போகும் கரெக்டா? அவன் பேச்சு முழுவதும், காரின் வேகம் பற்றியதாகவே இருக்கும். சரிவுகளில் காரை இறக்கும்போதும், மேடுகளில், காரை செறிவாய் செலுத்தும்போதும், 'கா'வின் கம்பீரம் நகுலனை வெகுவாய் ஈர்த்திருந்தது. எப்போது நான் வளர்வேன்.. எனக்கு எப்போது கார் ஓட்ட சொல்லித் தருவீர்கள் என்று தந்தையை ஓயாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பான்.

கார் ஓட்டும்போது எப்படி அமர வேண்டும், வலது கால், இடது கால் எங்கே வைக்க வேண்டும். எப்படி காரின் திசையை அறிவது, கண்ணாடியை ஏன் பார்க்க வேண்டும், இதெல்லாம் அவன் கேட்கும் உப கேள்விகள்.

தந்தையின் கால்கள் ஆக்சிலேட்டரை லாவகமாக மிதிப்பதை கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான் நகுலன். "கா" கொஞ்சம் மெதுவாக காரை செலுத்துக் கொண்டிருந்தான். சர்ர்ர்ரர்ர்ர்ரர்.உஸ்ச்ச்ச்சச்ச்ச்ஸ்.... அவர்கள் காரை இன்னொரு கார் முந்திக் கொண்டு சென்றது..

"டாடி" என்ன டாடி.. போங்க.. சீக்கிரம் அந்த கார பிடிங்க டாடி.. இது எனக்கு பெரிய அவமானம் டாடி", மறுத்து பேசாமல் கார் வேகமெடுத்தது.

சர்ர்ரர்ர்ர்ர்... உச்ச்சச்ச்ச்ஸ்... கீச்ச்ச்ச்சக்...இரண்டு கார்களும், ஒன்றை ஒன்று முந்திக் கொண்டிருந்தது. அந்தக் காரில் இருந்து நகுலன் வயதுடைய பெண்ணொருத்தி, மிகுந்த பயத்துடனான கண்களுடன் எட்டிப் பார்த்தாள். அவள் வேகத்தை பயத்தின் வழியாக வெளியேற்றி விட நினைத்திருந்தாள். ஆனால் அவளது தந்தை "கா"வுடன் போட்டி போட்டுக் கொண்டே இருந்தார். நகுலன் அந்த பெண்ணின் கண்களைப் பார்த்துவிட்டு, "டாடி.. விடுங்க டாடி.. அவங்க போகட்டும்.. என்று தலையை சாய்த்து, கண்கள் சிமிட்டி புன்னகைத்தான். அந்தக் காரில் இருந்த பெண் எட்டிப் பார்த்தாள். அவளின் பயம் புன்னகையாய் உருமாறி இருந்தது. அவர்களின் கார் பறந்தது.

நகுலன் கொஞ்சம் களைத்துப் போய் இருந்தான். "டாடி அம்மா வாசிச்ச கவிதைய போடுங்க டாடி என்றான். அவள் நீட்சே, நகுலன், பிரமிள், ஆத்மாராம், நெருதா போன்றவர்களின் கவிதையை வாசித்து பதிவு செய்து தினமும் காரில் கேட்டுக் கொண்டே செல்வது வழக்கம். கார் முழுவதும், மங்கிய வெளிச்சத்தில், அவளின் மெல்லிய குரலில் கவிதைகள் இசைக்கத் தொடங்கின. நகுலன் உறக்கத்தைத் தேடிக் கொண்டிருந்தான். "கா" அவளை தேடிக் கொண்டிருந்தான். அந்தக் கவிதைகள் முழுவதும் ஒரு வித மௌனம் ஆட்கொண்டிருந்தது. அவனையறியாமல் கண்கள் பனிக்க ஆரம்பித்தது.

அவள் நினைவுகள் அவனுக்குள் நங்கூரமிட்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தது. அவள் கண்ணக்குழிக்குள் அவன் தன் வாழ்தலின் அர்த்தத்தை அது தரும் மாய சுகத்தை உணர்ந்துக் கொண்டிருந்தான். இன்று அவள் இல்லை. அவனும் இல்லை. தன் நினைவுகளால் மட்டுமே இன்னும் அவன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அவன் கரங்கள் வழுவிழப்பதை அவன் எங்கோ ஒரு புள்ளியில் உணர தொடங்கினான். அவள் நினைவுகளின் வலிமை அவனை வழுவிழக்க செய்துக் கொண்டிருந்தது.

அடுத்த நொடியில் மலையே அதிரும் வண்ணம் ஒரு கார் "காவின்" காரை முந்திக் கொண்டு சென்றது. அந்த அதிர்வில் நகுலன் சட்டென்று முழித்துக் கொண்டான். நகுலனைப் பார்த்த கா அவனின் சோகம் புரிந்து காரை வேகப்படுத்தினான். ஆனால் அவன் இப்போது தன் வழுவை இழந்து ஒரு பொதிமாடாய் ஓய்ந்துப் போய் இருந்தான். இருந்தாலும் முடிந்த வரை காரை வேகமாக செலுத்தினான். நகுலன் ஜன்னல் வழியே அடிக்கடி எட்டிப் பார்த்தான். ஒரு கார் வேகமாய் துரத்துவதையும், சிறுவன் எட்டி எட்டிப் பார்ப்பதையும் முன்னே சென்றுக் கொண்டிருந்த காரின் ஓட்டுனர் பார்த்துக் கொண்டே இருந்தார். ஏதோ புரிந்தனவாய் தனது காரின் வேகத்தை கொஞ்சமாய் கட்டுப்படுத்தினான். காவின் கார் முந்தியது. ஆனால் "கா"விற்கு புரிந்துப் போனது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தான். அந்த காரை செலுத்தியவன் வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டி சிரித்தான்.

எதிரே வந்த கண ஊர்தி அடித்து நொறுக்கி எங்கு வீசி எரிந்தது என்று தெரியவில்லை. பின்னால் வந்த காரை செலுத்தியவன் மனமுடைந்துப் போனான். காவும் நகுலனும், மலைச் சரிவில் உருண்டு கொண்டிருப்பதை ஆங்காங்கே சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறென்ன செய்து விட முடியும் என்கிற தொனியில்.

கார் வெடித்துடைக்கும் சில மணித் துளிகளுக்கு முன்னர் காரில் வானதியின் குரலில் நகுலனின் கவிதை ஒலித்துக் கொண்டிருந்தது கர கர குரலில்..

"எனக்காக யாரும் இல்லை,

ஏன்

நான் கூட இல்லை"

- ஆதவன்

Tuesday, April 19, 2011

ராஜாங்கத்தின் முடிவு - குறும்பட விமர்சனம்


ராஜாங்கத்தின் முடிவு - குறும்பட விமர்சனம்

ஸ்ரீகணேஷ்

திரைக்கதை : ஆறு.அண்ணல்
ஒளிப்பதிவு : விஜய் திருமூலம்
இசை : லக்ஷ்மி நாராயணன்
இயக்கம்: அருள் எழிலன்குறும்படங்களின் ஆளுமை தற்போதைய சூழலில், சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களிடையே தற்போது குறும்படங்கள் மிகவும் பிரபலம். அது வெகுஜன மக்களைக் கவரத் துவங்கி விட்டதால் தானோ நிறைய கமர்ஷியல் கதைகளும் குறும்படங்களில் வரத் துவங்கிவிட்டன. 'டேய் அவன போட்றா', 'அவ ரொம்ப அழகு' போன்ற வசனங்களை தற்போது குறும்படங்களிலும் கேட்டு பிறவிப் பயனடைகிறோம். கூடிய விரைவில் குத்துப் பட்டும் வரலாம்.

குறும்படங்களைப் பற்றி அதிகம் தெரியாத, பெரிதாய் பேசப்படாத பத்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான குறும்படம் "ராஜாங்கத்தின் முடிவு". இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் திரு. அருள் எழிலன். இவர் ஒரு முழுநேர பத்திரிகையாளர். விகடனில் முதன்மை நிருபராய் நீண்ட நாட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் விகடனில் எழுதிய பல கட்டுரைகள் மிகவும் பிரபலம். நல்ல ஆழமும், மனிதமும் நிறைந்த எழுத்து இவரின் சிறப்பு.

இனி படத்தைப் பற்றி பாப்போம். இப்படம் முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனும், ஒரு தொலைபேசியும், ஒரு பெண்ணின் குரலுமே இப்படத்தில் வரும் பாத்திரங்கள். ஒரு மனிதனின் தனிமையே இப்படத்தின் கரு. அதை காட்சி மூலமும், நிறைய வசனங்கள் மூலமும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர்.

ரவிக்குமார் என்பவன் வேலைகள் ஏதுமற்ற, அன்பு காட்டவும் ஆளில்லாத ஒருவன். அவனுக்கென்று சொந்தமாக பொருட்களோ, தங்கும் இடமோ கூட இல்லை. சாலை ஓரங்களில் தங்கிக் கொண்டு, கிடைத்த இடத்தில சாப்பிட்டுக் கொண்டு வாழ்கையை ஓட்டுகிறவன். ஆயினும், வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுபவன். தன் மேல் துளி கூட கழிவிரக்கம் இல்லாதவன். எதையும் எளிதாக, மகிழ்ச்சியாகவே பார்க்கிறவன்.

துன்பங்கள் அவனை பாதிப்பதில்லை. எல்லாமே அவனைக் கடந்து செல்கின்றன.

அவனுடைய நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், தன் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ரவியிடம் ஒப்படைக்கிறார். அவன் சில நாட்கள் அங்கேயே தங்கிக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு நாள் ஒரு பெண் ராங் நம்பராய் இவனுக்கு போன் பண்ணி விடுகிறாள். தவறுதலாய் பேசும் அந்த ஃபோன் காலிலிருந்து இவர்கள் நட்பு துவங்குகிறது. பின்பு இருவரும் அடிக்கடி பேசத் துவங்குகிறார்கள்.

ஆரம்பத்தில் இருவருமே அந்த ஃபோன் காலை பேச விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது. பின்பு மெல்ல மெல்ல அவர்களின் உரையாடல் சுவாரசியம் அடைவதையும், இருவருக்கும் இடையே ஒரு இழை ஓடிக் கொண்டே இருப்பதையும் நம்மால் மெலிதாய் சிரித்துக் கொண்டே உணர முடிகிறது. எதுவும் என்னை பாதிக்காது என அசால்டாய் திரியும் ரவி, மெல்ல மெல்ல அவனையறியாது அப்பெண்ணின் குரலுக்கு அடிமையாவதும், தனக்குள் இருக்கும் காதலை உணர்வதும் நல்ல தருணங்கள். அப்பெண்ணின் குரல் மட்டுமே நமக்குக் கேட்டாலும், நம்மை மிகவும் கவர்ந்து விடுகிறாள். இதற்கு மேல் இப்படத்தின் கதையை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். பார்த்து அனுபவியுங்கள்.

சரத் ஹசன் மாண்டோவின் சிறுகதையைத் தழுவி இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இக்குறும்படம் நம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அருள் எழிலன் இக்கதையை படித்த உடனேயே இதைப் படமாக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். நிறைய நல்ல படைப்பாளிகள் இலக்கிய படைப்புக்களை திரைப்படுத்த முனைவது நல்ல விஷயம். இது இன்னும் தொடர வேண்டும்.

படத்தை இயக்கி தானே நடிக்கவும் செய்திருக்கிறார் அருள் எழிலன். முழுக்க முழுக்க mono acting வகையிலான நடிப்பில் நன்றாகவே செய்திருக்கிறார். படத்தில் வரும் பெண்ணின் குரல் திரு.ஜெயா மாதவனுடையது. நல்ல ஆழமான குரல். படத்தில் வரும் தொலைபேசி கூட ஒரு பாத்திரம் தான். இப்படத்தின் மிகப் பெரும் பலம் அதன் வசனங்கள். சின்ன சின்ன ஷார்ப்பான வசனங்கள். கேலியும் கிண்டலும் பல இடங்களில் மின்னுகின்றன. அவை மட்டும் இல்லா விட்டால் இப்படம் போர் அடித்திருக்கும்.

'சாப்பிட போலாம்னு நெனச்சேன்.. உங்க ஃபோனுக்காக தான் காத்திருந்தேன்..'
'அய்யோ சரி சாப்பிடப் போங்க..'
'முடியாதே. சும்மா தான் நெனச்சேன். கைல காசு இல்ல.'

'இந்த புத்தகத்தையே 3 , 4 வாட்டி படிச்சிருப்பேன். இன்னும் சுவாரசியம் போகல..'
'எப்படி? போர் அடிக்காதா..'
'இதில் தான் கடைசி பக்கம் கிழிஞ்சுடுச்சே .. அதனால் இன்னும் முடிவு தெரில'

இவை சின்ன சாம்பிள் தான். படத்தில் இன்னும் நிறைய உள்ளது. கதையை குறும்பட வடிவில் தர இயக்குனர் நன்கு உழைத்திருக்கிறார் எனத் தெரிகிறது. திரைக்கதை அமைத்த ஆறு.அண்ணல் அவர்களும் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவு விஜய் திருமூலம். இசை லக்ஷ்மி நாராயணன்.

படத்தில் சிறு குறைகளும் இருக்கவே செய்கின்றன. தொழில்நுட்ப விஷயங்களில் இப்படத்தை விமர்சித்தல் சரியல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த வசதிகளை வைத்துக் கொண்டு நன்றாகவே செய்திருகிறார்கள். படத்தின் கதையில் தான் சில நெருடல்கள். ரவிக்கும் அந்த பெண்ணுக்குமான உறவு சரியாக register செய்யப் படவில்லையோ எனத் தோன்றுகிறது. அதற்கு குறும்படத்தின் கால அளவும் காரணமாக இருக்கலாம். அந்த பெண் பாடும் பாடல் ஒன்று படத்தில் வருகிறது. அப்பாடல் தேவையா என விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், வைத்த பாடலின் இசையாவது நன்றாக இருந்திருக்கலாம். அப்பாடல் கொஞ்சம் அயர்ச்சியே தருகிறது. 20 நிமிடம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு கடைசி காட்சியில் பெரிதாக உடைந்து விடுகிறது. ரவி பழைய தமிழ் சினிமா பாணியில் 'என் ராஜாங்கம் இன்றுடன் முடிகிறது' என படத்தின் தலைப்பை சொல்வது தேவையற்றது. மேலும் அந்த சோகமான முடிவே திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல குறும்படம் இப்படிப்பட்ட குறைகளால் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் போகிறது.

இம்மாதிரி கதைகள் சினிமா படிப்பவர்களுக்கும், புத்தி ஜீவிகளுக்கும் மிகவும் பிடிக்கலாம். எளிய மக்களை இப்படம் சுவாரசியமான குறும்படம் என்ற அளவிலே கடந்து சென்று விடும். இன்னும் கொஞ்சம் கதையை செதுக்கி இருந்தால் இக்குறும்படம் தனிமையை சிறப்பாய் பேசிய குறும்படமாயிருக்கும். அருள் எழிலன் என்னும் நல்ல படைப்பாளி இதை நிச்சயம் ஒத்துக் கொள்வார்.

-ஸ்ரீகணேஷ்


http://thamizhstudio.com/shortfilm_review_19.php

படிமை மாணவர்களுடன் ஒரு பயணம்


படிமை மாணவர்களுடன் ஒரு பயணம்

மணிவில்லன்

`திரு அண்ணாமலை என்றவுடன் கார்த்திகை தீபம், கிரிவலம், ரமணர் ஆசிரமம்’ எல்லாம் நினைவுக்கு வரும். அதே சமயம், இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு பவா செல்லதுரை, கலை இலக்கிய இரவு, முற்றம், வம்சி புக்ஸ் ஆகியவை எல்லாம் நினைவுக்கு வரும். இந்த இரு முனைகளை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

மாற்று சினிமாவை உருவாக்கும் நோக்கில் தமிழ் ஸ்டியோ.காம் படிமை மூலம் பத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. படிமை மாணவர்களின் பயிற்சியின் ஒரு அங்கமாக ஏப்ரல் 2,3 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை சென்று வந்தார்கள்.

ஏப்ரல் முதல் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டோம். மறுநாள் காலை ஏழு மணியளவில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்தோம். அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் சிறு பேருந்தில் பயணம் செய்தோம். பிறகு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து அடி அண்ணாமலையை அடைந்தோம். வேடியப்பனூர் பாதையில் அமைந்திருக்கும் பெயரில்லாத ஆசிரமத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரமம் மிகவும் எளிமையானது. மூங்கில் கொண்டு குடில் அமைத்து மேலை தென்னோலை வேயப்பட்டது, சமைப்பதற்கு சாப்பிடுவதற்கு, பூசை செய்வதற்கு, படுப்பதற்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு என தனித்தனி குடில்கள், நாங்கள் சென்ற வேலையில் வேறு சாமியார்கள் யாருமில்லை.

ஆசிரமத்தின் பொறுப்பாளர் பெயர் மாணிக்கவாசகம். எந்த மத அடையாளங்களும் இல்லை, முதலில் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

நாங்கள் மொத்தம் பனிமூன்று பேர் சென்றிருந்தோம். அதில் ஒருவர் பெண். எல்லோரும் உற்சாகமாக குளிக்க தயாரானார்கள். முதலில் குளித்து முடித்த குணாவும் நானும் பக்கத்தில் சிறு நடைப்பயணம் மேற்கொண்டோம்.

திருவண்ணாமலையை மிக அருகில் இருந்து பார்க்கும்போது மலையில் பசுமை ஏதுமில்லை. மரம், செடி, கொடி மிக குறைவாக இருப்பதை காண முடிந்தது. வேடியப்பனூர் செல்லும் பாiயில் நடக்க தொடங்கினோம். பாதையில் இருமருங்கிலும் பெயர் தெரியாத மரங்கள், பறவையினங்களின் குரலோசைகள். நகரத்து பரபரப்பு இல்லாமல் பாதை அமைதியாக இருந்தது. ஒரு வயலில் பசுமையாக நெற்பயிர்கள். மற்றொரு வயலில் கேழ்வரகு விளைந்து கதிர்கள் சாய்ந்து கிடந்தன. பக்கத்திலேயே தரிசு நிலமாக வறண்ட பூமி. விளைநிலங்களை அழித்து சிறு சிறு நவீன சொகுசுவீடுகள் கட்டப்பட்டிருந்தன. செங்கல் சூளையில் ஆட்கள் வேலை செய்கிறார்கள். எதிர்புறம் நிலகடலை சாகுபடி நடந்து கொண்டிருந்தது. நெல்லு, வெங்காயம், எள்ளு, மல்லி என பல வகையான பயிர்களின் விளைச்சல் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

வயதான பெரியவர் ஒருவரை சந்தித்து உரையாடினோம். நகரத்தில் நேரம் கேட்டால் கூட நின்று பதில் சொல்ல நேரமில்லாமல் ஓடும் அவசர மனிதர்கள் போல் அல்லாமல் அப்பெரியவர் எங்களோடு உரையாடுவதில் பெரும் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

கிரிவல பாதையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி உள்ளே இரண்டு கிராமங்கள் உள்ளன. அங்கு சுகாதார நிலையம் ஏதுமில்லை. ஏதாவது ஆத்திரம் அவசரம் என்றால் அடி அண்ணாமலையை நோக்கித்தான் ஓடி வரவேண்டுமாம். விவசாயத்துடன் கறவை மாடுகளின் வளர்ப்பும் நடைபெறுகிறதாம்.

நெல் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல், இயந்திரம் கொண்டு தான் (அந்த சிறுகிராமத்திலும்) அறுவடை செய்கிறார்களாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கிடைத்ததாம். இந்த சட்டமன்ற தேர்தலுக்கும் பணம் வருமென எதிர்பார்த்து அப்பெரியவர் நம்பிக்கையோடு கூறினார். அதற்குள் ஆசிரமத்திலிருந்து நண்பர்களின் அழைப்பு வந்ததினால் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டோம். இன்றைய காலை நல்ல துவக்கமாக இருந்ததாக உணர்ந்தேன்.

காலை உணவு முடிந்த பிறகு சிலர் பந்து விளையாடினர். சிலர் புத்தகம் படித்தனர். மற்றும் சிலர் இன்று நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை இறுதி போட்டி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். மதியம் பன்னிரெண்டு மணியளவில் ஆசிரம பொறுப்பாளர் மாணிக்க வாசகத்தோடு ஆன்மீகம் சார்ந்த உரையாடல்களுக்காக பூசைக்கான குடிலில் ஒன்று கூடினோம். ஆனால் உரையாடல் அவரை நேர்காணல் காணுவது போல் அமைந்துவிட்டது.

எனக்கு அரிப்பு வந்தது சொறிஞ்சிக்கிட்டன் இப்படித்தான் ஆன்மீகம் பற்றிய அவரது உரையாடல் தொடங்கியது. எப்படி ஆன்மீகத்துக்கு வந்தீங்க என நாங்கள் கேட்டதற்கு மேற்கண்ட பதிலை ஜென்தத்துவ கதைகளில் வருவது போல் நறுக்கென பதில் கூறினார். அதை தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் கூறினார். என்னால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. சிலர் புரிந்து கொண்டது போல் தெரிந்தது. இன்னும் சிலர் எதையும் வெளிக்காட்டாமல் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தனர். இதுதான் ஆன்மீகம் என நிறுவுவதற்கோ அல்லது தர்க்கத்திற்கோ அல்லது விவாதத்திற்கோ தான் தயாரில்லை என மாணிக்கவாசகம் ஆரம்பத்திலேயே கூறிவிட்டார்.

படங்கள் எல்லாம் வைத்து பூ வைத்து, பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி பூசை செய்துள்ளீர்களே, இதெல்லாம் தேவையா என கேட்டால், அவசியமில்லை நேற்று ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார், பூசை செய்ய வேண்டுமென கேட்டார் செய்தேன். அவ்வளவுதான். சில நாட்கள் பூசை இருக்கும். பல நாட்கள் இல்லாமலும் இருக்கும். இது ஒன்றும் கட்டாயம் கிடையாது. ஒரு நாத்திகவாதியின் குரல் போலவே சில நேரம் அவரது குரல் ஒலித்தது.

நீங்கள் ஏன் தாடி மீசை வளர்க்கவில்லை, காவி உடுத்தவில்லை.

அவசியமில்லை. அப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கட்டாயமில்லை என்றார். நீட்டலும் மழித்தலும் வேண்டா என வள்ளுவரின் சிந்தனையும் மாணிக்க வாசகம் பிரதிபலிக்கிறார்.

"உங்கள் நாங்கள் எப்படி அழைப்பது?"
"என் பெயர் சொல்லி அழைத்தாலே போதும்."
"பிரபல சாமியார்கள் போல் நீங்களும் மாறுவீர்களா?"
"அது என் கையில் இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். செருப்படி படணும் என்று இருந்தா பட்டுதான் ஆகணும்."

ஒரு நிலையில் ஆன்மீக தேடல் உள்ளவர் போலவும், மற்றொரு நிலையில் எதையும் தேடி செல்லாமல் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு எந்த முறையீடும் அற்ற வாழ்க்கையை வாழும் மாணிக்க வாசகத்தை, தேடினால் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கும் எங்களால் அவரை புரிந்து கொள்ள முடியவில்லை.

மாணிக்க வாசகம் இருபது வருடங்களுக்கு முன்பே கட்டடவியல் (B.E) படித்துள்ளார். கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே ரமணர் மீது ஈடுபாடு கொண்டுள்ளார். படிப்பு முடிந்து டெல்லியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது வேலை இதுவல்ல என தோன்றிய தருணத்தில் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

ரமணர் ஈடுபாடு காரணமாக திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். முதலில் ரமணர் ஆசிரம விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் விட்ட வேலையை மறுபடியும் ஆசிரமத்திலும் செய்ய விரும்பாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறியுள்ளார். சில காலம் பிச்சை எடுத்து வாழ்ந்ததாகவும் கூறினார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத்தான் இந்த ஆசிரமத்தில் இருக்கிறாராம். இன்னும் ஆறுமாதத்தில் இங்கிருந்து வெளியேற வேண்டுமாம். அதற்கு பிறகான வாழ்க்கைக்கு திட்டங்கள் ஏதுமில்லை. எல்லாம் அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார் என கூறுகிறார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுபற்றி கேட்டால் முப்பது வயதுக்குள் இருக்கும்போது ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்வேன் என்றோ (அ) திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்றோ கூறினார் அர்த்தமுள்ளதாக இருக்கும், முப்பது வயதை கடந்தவன் எதை கூறினாலும் நகைப்புக்கு இடமாகும் என மாணிக்கவாசகம் கூறினார்.

ஒருவருக்கு எது பிடிக்கிறதோ அதுதான் அவருக்கான ஆன்மீகம். இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் என்பதுதான் அவரது மனபோக்காக உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்த உரையாடல் (அ) நேர்காணல் சுமுகமான முடிவுக்கு வந்தது. மதிய உணவுக்கு தயாரானோம். சாப்பாடு, சாம்பார், கோசு பொறியல், மோர் என சுவையான மதிய உணவு எங்களுக்க பரிமாறப்பட்டது. மதிய உணவுக்கு பிறகு அனைவரும் உலகக் கோப்பை (கிரிக்கெட்) இறுதி ஆட்டத்தை பார்க்க ஆயத்தமானார்கள். ஆசிரமத்தில் தொலைக்காட்சி பெட்டி இருந்தது. ஒரு மாணவன் தங்கி படிக்கிறான். ஒரு அம்மா சமையலுக்காக வந்து போகிறார்.

மாலை நான்கு மணிக்கு ரமணர் ஆசிரமத்திற்கு பயணமானோம். ஆசிரமம் செல்வதற்கு பேருந்து வசதி ஏதுமில்லை. அதனால் நடந்தே சென்றோம். கிரிவல பாதையின் இருமருங்கிலும் புளியமரங்கள் காய்ந்து தொங்கின. சில நண்பர்கள் புளியம்பழம் ருசி பார்த்தார்கள். எங்களை கடந்து பல தாடி வைத்த சாமியார்கள், சடைமுடி வளர்ந்து கழுத்தெல்லாம் மணிமாலை சூடிய சாமிகள், காவியுடை உடுத்திய சாமிகள் என விதவிதமான மனிதர்கள் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் பிச்சை கேட்கவும் செய்தனர்.

நாங்கள் மூன்று குழுக்களாக பிரிந்து அவர் அவருக்கு பிடித்தமான விசயங்களோடு உரையாடியபடியே சென்றோம். சாலையின் இருமருங்கிலும் சிறு சிறு கோயில்கள், பாறை வெட்டி உண்டாக்கிய குளங்கள் கூட இருந்தன. நாங்கள் சென்ற பாதையில் நித்தியானந்தாவின் ஆசிரமும் இருந்தது. ஆசிர வளாகத்தினுள் மக்கள் நடமாட்டமில்லை. ஆனால் விரைவில அந்த இடத்தில் மக்கள் கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை காண முடிந்தது.

உள்ளே என்னதான் இருக்கிறது பார்த்து வரலாம் என நாங்கள் உள்ளே சென்றோம். வாயிலின் இடபுறம் ஒரு பெரிய குடில் பழைய விசயங்களின் எச்ச சொச்சங்களை தாங்கியபடி இருந்தது. அதற்கு எதிர்புறம் கட்டட வேலை நடைபெறுகிறது. பெரிய மைதானமாக காட்சியளிக்கும் ஆசிரமத்தில் சில சீடர்கள் நடமாடியபதை காண முடிந்தது. ஒரு சீடர் எங்களுக்கு பிடாதிபதியின் மகிமைகளை சொல்லி எங்களையும் பங்கேற்க அழைத்தார். நடந்த தவறுகள் அனைத்தும் உண்மையல்ல என்பதை விளக்கும் நோட்டீசை எல்லாம் கொடுத்தார். அவரின் செயல்பாடுகள் ஒரு சாவி கொடுத்த பொம்மையின் செயல்பாடுகளை ஒத்திருந்தது. மக்களின் மறதியை ஆதராமாக வைத்து செயல்படுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. உடன் வந்த நண்பர்களில் யாருக்கும் சீடரின் கருத்துகளின் மேல் நல்ல அபிப்ராயம் ஏதுமில்லை.

சாலையோர தேநீர் கடைகளில் தொலைக்காட்சியில் உலகக்கோப்பை போட்டியை சன்னியாசிகளும் கண்டு ரசித்தபடி நின்றதை காண முடிந்தது. நண்பர்களில் சிலரும் அவர்களோடு அவ்வப்போது ஒன்றிபோயினர். பகல் கரைந்துவிட்டிருந்தது. சுமார் ஏழு மணி அளவில் ரமணர் ஆசிரமத்தை சென்றடைந்தோம்.

ரமணர் ஆசிரமம் வளமையோடு காட்சியளித்தது. அங்கு நடமாடு மனிதர்களும் பெரும்பாலும் வனப்போடுதான் காணப்பட்டனர். நிறைய வெளிநாட்டு மனிதர்கள் சூழ்ந்த தியானத்தில் இருக்கும் புறதோற்றத்தில் காணப்பட்டனர். நாங்கள் சென்றபோது கூட்டு தியானம் அல்லது கூட்டு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. எல்லா இடங்களும் தூய்மையாக இருந்தது. ஏழு கிலோ மீட்டர் நடந்த களைபுப் தீர வாசற்படியில் அமர்ந்து மனிதர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். எங்களை சுற்றிலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஏதோ ஒரு பரவசநிலையோடு நடமாடுவதை காண முடிந்தது. நாங்கள் பேசிக்கொண்டிருந்த தருணத்திலேயே கூட்டு தியானம் முடிவடைந்து மனிதர்கள் வெளியேற தொடங்கினர். நாங்களும் ஆசிரமத்திற்கு வந்தோம் என்ற அடையாளத்தோடு வெளியேறினோம்.

ஆசிரமத்திற்கு எதிரே இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தினோம். அங்கு பல வெளிதேச மனிதர்கள் சாவகாசமாக அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தனர். சாலையோரம் வண்டியில் வேர்கடலை விற்பவனிடம் வேர்கடலை வாங்கி கொறித்தபடியே நாங்கள் தங்கியிருந்த ஆசிரமம் நோக்கி நடக்க தொடங்கினோம். சாலையோரங்களில் ஆங்காங்கே சன்னியாசிகள் கூட்டமாகவும், தனியாகவும் படுத்து கிடந்தனர். அவர்களின் பெரும்பான்மையினர் ஆண்களே. பெண்களுக்கு ஆன்மீக தேடல்கள் இல்லையா என எனக்குள் ஓர் எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இருளும், ஒளியும் மிகுந்த அந்த சாலை பயணம் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு தெம்பாக இருந்தது. உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? வெல்லாதா என்ற ஐயப்பாடுகளுடன் நண்பர்கள் தொலைபேசியின் உதவியை நாடினர். சாலையில் உலகக்கோப்பை பற்றி பேசிக்கொண்டு வரும்போது சாலையோரம் படுத்திருந்த சன்னியாசி ஒருவர் இந்தியாவின் நிலை என்ன என்பதை மிக ஆவலோடு கேட்டு தெரிந்து கொண்டார்.

இரவு ஒன்பதரை மணிக்கு ஆசிரம் வந்தடைந்தோம். எல்லோரும் கிரிக்கெட் பார்க்க அமர்ந்து விட்டனர். இந்தியா உலகக்கோப்பை வென்றதை பார்த்த பிறகுதான் அனைவரும் இரவு உணவு உண்டோம்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/padimai.thamizhstudio/rxRFLC#

http://thamizhstudio.com/others_article_13.php


Monday, April 18, 2011

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -9


ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -9

சுல்பிகா – கெழுத்தி முட்களைப் பிரவசிக்கும் நாரைகள்

குட்டி ரேவதிஒரு பெண்ணோ ஆணோ பிறக்கும்போதே இன்னின்ன பால்நிலை, சாதி, மதம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துப் பிறப்பதில்லை. வாய்ப்பின் அடிப்படையில் பிறந்ததும் அவர் அந்த நிலையின் எல்லா அரசியல் நிலைப்பாடுகளுக்கும் எல்லா வகையிலும் பொறுப்பேற்பவராக இருக்கிறார். ஏனெனில், அச்சமூகத்தில் தான் அவரது இருப்பு நிலைநிறுத்தப்படுகிறது. அந்தச் சமூகத்திடமிருந்து பண்பாடு, சூழல், அன்றாட உணவு, இருப்பிடம் எல்லாவற்றையும் கேட்டுப் பெறுபவராயும் தன்னிலையிலிருந்து சமூகத்திற்கு அளிப்பவராகவும் இருக்கிறார். ஆகவே, அச்சமூகத்தின் மீது சுமத்தப்படும் எல்லா வகையான அரசியல் சிக்கல்களுக்கும் நிவாரணம் தரவும் முயலவேண்டியது அவரது பொறுப்பு. எனக்கென்ன என்று அவர் இருந்துவிடமுடியாது. அப்படி இருக்கும்பட்சத்தில், அவர் தான் சார்ந்த சமூகத்திற்குத் துரோகம் இழைத்தவராகவே இருக்கிறார்.

அம்பேத்கர் தன் கருத்து நிலைப்பாடுகளில் தொடர்ந்து இதை முன்வைக்கிறார். அதாவது, ஆதிக்க இனம், அவ்வினத்தால் ஒடுக்கப்பட்ட இனம் என இரண்டு வகையினம் தாம் இருக்க முடியும். ஆதிக்க இனம், ஒடுக்கப்பட்ட இனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு வசதியாக, ஒடுக்கப்பட்ட இனத்தைப் பலக் குழுக்களாகப் பிரித்து அவற்றை ஒன்றோடொன்று மோதச் செய்து, குளிர்காய்வதில் முனையும். இம்மாதிரி வெவ்வேறு காலக்கட்டங்களில் தொடர்ந்து பெரும்பான்மையினம் ஒடுக்குமுறையின் வடிவமைப்பால் சிதறடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. முஸ்லீம் இனமும் அவ்வாறாக வேற்று மதத்தின் பெயரால் அர்த்தப்படுத்தப்பட்ட ஓர் ஒடுக்கப்பட்ட இனமே. விடுதலை இயக்கத்தை ஆதரிப்பவர், விடுதலை இயக்கத்தை ஆதரிக்காதவர் இவை இரண்டும் தாண்டி, ’இந்த இரண்டு வகையையுமே சாராதவர் என்ற மூன்றாவது வகை நான்!’ என சிலர் என்னிடம் தன்னை அடையாளப்படுத்துக் கொள்கின்றனர். இம்மூன்றாவது வகையினமே கூட, ஒரு வகையில் பொறுப்பிலிருந்தும், போராட்டத்தின் நுண்வடிவத்தை உணரும் முயற்சியிலிருந்தும் தப்பிக்கும் ஆதிக்க இனத்தைத்தான் சுட்டுவதாய்த் தோன்றுகிறது.

பெண்களுக்குத்தாம் விடுதலைக்கான இயக்கம் முதன்மையாகத் தேவைப்படுகிறது. ஆனால், அவை அதிகார ஆதாயங்களால் அரசியல் அடையாளம் பெறும் போது, தன் உடல், தன் கருப்பை, தன் குழந்தை, தன் அம்மா மற்றும் பாட்டி என பெண்ணுடல்களைப் பாதிக்கும் பெண்ணியச் சிந்தனை அல்லது பெண்ணினம் என்னவாகிறது என்ற அக்கறையற்ற இடத்தில் தான் போரைக் கடுமையாக எதிர்த்தனர். விடுதலை இயக்கங்களில் போராடிய பெண் போராளிகளும் இச்சிந்தனையையே கொண்டிருந்தனர். தன் இனத்தின் மீது நிகழ்த்திய கடுமையான ஒடுக்குமுறையை போரின் பெயரால் நிகழ்த்திய ஆணாதிக்கச் சிந்தனை வடிவப் போரைக் கடுமையாக எதிர்த்தனர். அதற்காகக் களம் சென்று நின்று போராடினர். கிராமங்களிலும் நகரங்களிலும் என தன் நாட்டில் குழந்தைகளையும் முதிய பெண்களையும் காத்து நின்ற ஒற்றைப் பெண்களுக்காகப் போராடினர். போராட்டத்தில் நின்று போராடிய பெண்களுடன், சென்று போராடாதவர்களும் கவிதைகள் எழுதினர். ஆணும் பெண்ணும் ஒரே மொழியைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் வேறு வேறு அர்த்தங்களில் அவை புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதன் எதிர்ப்பாய்க் கவிதைகள் எழுதினர். தாய் மொழியின் சொற்கள் ஆணதிகாரமயப்பட்டிருப்பதைச் சிதைப்பதன் முதன்மையான உத்தியாகப் பெண்கள் கவிதை எழுதுகின்றனர்.

கவிதையின் கட்டமைப்பில் பெண்கள் தீவிரமாக ஈடுபடலாயினர். கவிதைப் பாரம்பரியத்தின் உயரம் என்று சொல்லப்பட்டு வந்ததை தம் மொழியாலும் கவிதை சொல்லல் முறையாலும் எட்டிக் குதித்தனர். இலங்கும் கவிதை வடிவ முறைகளைக் கற்காமல் அவற்றைக் குலைக்கவும் முடியாது என்பதால், புத்தெழுச்சியுடன் மொழியின் வித்தைகளை ஆண்டனர். முஸ்லீம் பெண்கள் கவிதை எழுத வந்ததும், இதன் அடிப்படையில் தான். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பட்டம் வென்று கவிதை எழுத வந்த முஸ்லீம் பெண்ணான சுல்பிகாவின் படைப்புப்பணியை இவரைத் தொடர்ந்து எழுத வந்த பஹீமா ஜகான் மற்றும் அனார் இருவருடனும் தொடர்ப்புப்படுத்திப் பார்க்கிறேன். இன்று பஹீமாவும், அனாரும் தமிழ் மொழியை, அதிகார நசிவிற்கு உட்படுத்திய குழைவுடன் ஆளும் வல்லமை மிக்கவர்களாய் இருந்தாலும் இப்பயணம் சுல்பிகாவிடமிருந்து தொடங்குகிறது என்பதற்கான எழுச்சிகளை சுல்பிகாவின் சில கவிதைகளில் காண நேர்ந்தது.

தனது முதல் தொகுப்பான, ‘விலங்கிடப்பட்ட மானுடம்’ பெரும்பாலும் உணர்ச்சியான பிரகடனங்களாகவே இருக்கின்றன. தன் பெண்ணிய கருத்தை அழகும் வடிவமும் இன்றி முறையிடும் வாக்குமூலங்களாகவோ அல்லது பிரச்சாரங்களாகவோ பதிவு செய்து விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுவதுடன், மனதில் ஒரு துண்டிப்பு நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது.

சேற்றில் செழித்த,
செங்கமல அரும்புபோல
மென்மஞ்சள் நிறமுலைகள்,
வெண்ணய்யில் செதுக்கிய
உடல் வண்ணம்,
மென்மையான
பெண்மையின் அங்கங்கள்.
இவை மட்டுமா கொண்டு
இப்பூதம் உருவாகியுள்ளது?

செறிந்த பொருள்சேர்
சிந்தனைத் திறமையும்
அரியதிறன் மிகு
கொள்கையும்,
நெஞ்சுரமும்,
எம்மில் புதைந்துள்ளன.

பாலியல் உணர்வு
மட்டுமா எம்மில் கலந்துள்ளது?
பார்த்தல், கேட்டல்
ருசித்தல் மணத்தல்
உணர்தல் இவற்றுடன்
பகுத்தறிதல் என்பனவும்
எமக்கு உண்டு.

கண்களும், மூக்கும்
செவிகளும், நாவும்
உணர்மிகக் கொண்ட தோல்முடியும்
எம்மைக் காவலிட்டுள்ளன.
இவற்றினுள்ளே,
இப்பிரபஞ்சத்தின் உயிர்ப்பே
உறைந்து கிடக்கின்றது.

மேற்கண்ட கவிதையை, உரைநடையாக்கி வாக்கிய அமைப்புகளுக்குள் கொண்டு வந்தாலும் அவை, படிந்து நிற்கின்றன. கவித்துவம் அடையும் முன் கருத்தைப் பதிவுசெய்யும் அவசரமாகவும் கொள்ளலாம்.

இதயராகம்

நீலவானில் நிலா
வைகறைப் பொழுதில் எழுந்திருக்கின்றது.
மேகத்தின் மெல்லிய திரை அதனைச் சுற்றி
மோகன வட்டமிட்டுள்ளது.

அதன் மருங்குகளில்
வானவில்லின் வர்ணங்கள் ஒளிர்கின்றன.
அமைதி எங்கும் ஆட்கொண்டுள்ளது
மெல்ல செவிமடுத்துக் கேள்,

எங்கிருந்தோ பாடும் அவளது
இதய ராகம் காற்றோடு கலந்து வருகின்றது
ஆக்காண்டிப் பறவை அவள் குரலை
எங்கும் எடுத்துச் செல்கின்றது

இளம் தென்றல் அவள் மென்மணத்தை
எங்கும் தூவிச் செல்கின்றது
அவளது வரவை உன்னால்
உணர முடிகின்றதா?

இதோ அழகிய நட்சத்திரங்கள்
அவள் கண்ணிலிருந்து ஒளிபெற்று
மின்னுகின்றன.
கடலும் தொடுவானமும் அவள் வண்ணம்
கொண்டு மிளிர்கின்றன.
அதே ஒலி...
அதே ராகம்...
மீண்டும் மீண்டும் தொடர்கின்றது.

நன்றாகச் செவிமடுத்துக் கேள்-
அவள் இதயத்தின் ஒலிக்கூடாக
உன் பெயர் உச்சரிக்கப்படுகின்றது.
உதடுகளால் அவள் அதை உச்சரிப்பதில்லை.

காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது
ஆயினும்,
உதடுகளுக்கு இல்லாத சக்தியை
அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள்.

அதனால் தானோ என்னவோ,
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும்
அவளது ராகம் ஒலிக்கின்றது.
முடிந்தால் அதற்கப்பாலும் சென்று
செவிமடுத்துக் கேள்.

காற்று;
அதனால் அவளது
இதயத்தினுள் புக முடியாது.

அது; அவளது ராகத்தைத்
தடுக்க முடியாது தவிக்கட்டும்.
அவள் கண்களில் மினுங்கும்
சோகக் கதிர்களை
உன் மனத்திரை பதிவு செய்யக்கூடும்.

நீ பெற்றுக் கொண்ட
துலங்கலைக் கூட
அவள் கண்கள்
மீளவும் பெறவும் கூடும்.

எனினும்,
அவளது இதயராகம்
உண்மைக் கவிஞனின்
பேனா முனையினால் கூட
இதுவரை எழுதப்படாதவை
அவளைச் சுற்றி
எத்தனை வேலிகள்.

இவைகளைத் தாண்டி,
உன் மனத்திரையை அடையும்படி
அவள் இசைத்துக் கொண்டேயிருக்கிறாள்.
விடியற் காலையில் அவள் ராகத்தை
உன் செவிகள் கேட்கக்கூடும்.
யாருமே அறியாதபடி
அவள் இதயராகம் மீட்டப்படுகின்றது.
இப்போது உன்னால் மிகத்
தெளிவாகக் கேட்க முடிகிறதா?

உடன் பதிவு செய்து கொள்,
இந்தப் பொல்லாத காற்று,
அதனைக் கூட அள்ளிச் செல்லக்கூடும்.

ஆழ்மனக் காதல் கொண்டதொரு பெண்ணின் கவிதை. காற்று எதிரியின் உருவில் வருகிறது. காற்று அவள் உதடுகளை மூடச்செய்துள்ளது. ஆயினும், உதடுகளுக்கு இல்லாத சக்தியை அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள் என்ற வரிகளால் காதலின் வல்லமையைப் பதிவு செய்கிறார். ஈழக்கவிதைகள், தமிழ்க்கவிதைகளில் இல்லாத அளவிற்கு அகம் புறம் என்ற இரு நிலைகள் கவிதையின் தளத்தை ஆண்டிருக்கின்றன. நிரப்பியிருக்கின்றன. போர் என்பது காலம், நிலம் இரண்டின் பகுதிகளையும் சூறையாடிக் கொண்டபோதும், காதலும் மறமும் அதை ஆற்றிக்கொள்ளும் அருமருந்துகளாக, சொற்களால் ஆன மூலிகைச் சாறாகக் கவிதைகளில் வழிகின்றது. இக்கவிதை முழுமையும் காதல்ரசம் பொழியும் கவிதை.

சபதம்

சருகுகள் ஓதுங்கிகிடக்கும்
சகதிக்குள் தடையின்றி ஓடுகின்றது நீர்

சாக்கடையின் சகதிக்குள்
சிக்குண்டிருந்தது உனது சடலம்

நேற்றுக் காலை நீ கணவனுடன்
கரையில் உலவியதாய்
காற்றுடன் கலந்து செய்திகள் வந்தன

உடல் சுற்றிய ஒரு துணித்துண்டேனும்
உன் மீதில்லை
மனித தர்மங்களும் தார்மீக மதங்களும்
தரிப்பிடம் தேடி அலைந்து திரிந்தன.

தேசியத்தின் பேரால் ஒரு யோனி
பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று
பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று
சுயநலத்தின் சூறையில் பிறிதொன்று

எத்தனை யோனிகள் எத்தனை உடல்கள்
இன்னும் அழிய உள்ளன

தோற்று விட்டதா மனித தர்மங்கள்
மனித உயர் விழுமியங்கள்
உயிர்த்தெழும் வரை
எமது யோனிகள்
எமது உடல்கள் மற்றொரு காமுகனைப்
பெற்றுப் போடாதிருக்கட்டும்.

போர் எனும் வடிவில் விடுதலை இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் தேவைப்பட்ட மனித இனங்களும் பூமியில் உண்டு. ஆனால், பெண்கள் அதை வேறு வடிவில் அணுகுகின்றனர். எதிர்ப்பை வன்முறைக்குறியீடுகள் அல்லாத வகையில் பதிவு செய்கின்றனர். ’எமது உடல்கள் மற்றொரு காமுகனைப் பெற்றுப் போடாதிருக்கட்டும்’ என்னும் வரியில் கருவிருக்கும் இடம் சென்று, காமுகனைக் கருவறுக்கும் வரை எதிர்ப்பு வலுப்பெற்றப் பெண்ணாகிறாள். இங்கு தாய்மை என்பதன் அர்த்தங்களும் வரையறைகளும் நொறுங்கிப் போகின்றன. பெண்ணின் எதிர்ப்புகள் எல்லாமே வன்முறையை வலுவிழக்கச் செய்யும் குறியீடுகள் ஆகும் கட்டத்தில், ஆண்களின் எதிர்ப்புகள் எல்லாமே வன்முறையைச் செயல்படுத்தும் குறியீடுகள் ஆகின்றன. போர் அத்தகைய வன்முறை ஆயுதங்களையும் உத்திகளையும் உள்ளடக்கிய அடக்குமுறைக் குறியீடு. மேற்கண்ட கவிதையில்,

தேசியத்தின் பேரால் ஒரு யோனி


moe: http://koodu.thamizhstudio.com/thodargal_14_9.phpவலது புறம் செல்லவும் - 4வலது புறம் செல்லவும் - 4


இயக்குனர் அகத்தியன்18-04-2011, 23:58 PM

இந்த முறை கடவுள் ஒரு அன்னையை அனுப்பியிருந்தார். எழுந்து வணங்கினேன். அடையாளம் தெரியாமல் குழம்பினேன். ``நிவேதிதா’’ என்றார். பேச ஆரம்பித்தார்.

எனக்கு வந்த இடத்தில் விவேகானந்தரின் தோற்றமே முதலில் கவர்ந்து விட்டது. காவியிலேயே தூய்மையாக, ஒரு சிறு கறை கூட இன்றி, அந்த அசத்தலான தலைப்பாகையோடு, அவரைக் காண்பதே ஆரோக்யமாக இருந்தது. இருக்கும் உடையை மற்றவர்கள் மதிக்கும் வண்ணம் அணிந்து கொள்வார். அடுத்து அவரின் செயல்பாடுகள்.

பசிக்கிறது என்றால் கூட லேசாக மேலே பார்த்து ஏதோ விண்ணப்பம் வைப்பார். காலை, மதியம், இரவு மெல்ல மேலே நோக்குகிறார் என்றால் உணவு தேவை என்று அர்த்தம்.

ஏற்கனவே ஆஜானபாகுவான தோற்றம், மிரட்டி விடும் பார்வை. ஒளி என்பது அந்த மகானின் கண்களிலும் உடலிலும் நிரம்பிக் கிடந்தது.

எவ்வளவு பசியாக இருந்தாலும் வாழ்ந்த காலத்தில் அந்த மாமனிதன் பசியோடு இருந்தது தான் அதிகம். என்ன பசியாக இருந்தாலும் அவரின் உணவுப் பழக்கம் மிக வித்தியாசமாக இருக்கும் விள்ளல் என்று சொல்வார்களே, அளவாக வாங்கி, விண்டு, சாப்பிட்டு எழுந்துபோய் விடுவார்.

``ஏன்?’’ என்றால், ``ஏன்?’’ பதிலுக்கு அவர் கேட்பது!.

``அளவான உணவுப் பழக்கமே உணவின் மேல் உள்ள பற்றை மழுங்கடிக்கும். எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் இவ்வளவுதான் எனக்கு என்று முடிவு கட்டிக் கொண்டால் அந்த உணவு கிடைக்காதபோது எண்ணம் தேடாது. என்றாவது ஒருநாள் கிடைக்கும்போது ஆவலுடன் எண்ணம் அதை உண்ணாது’’.

எண்ணம் உண்கிறதா?

உள்ளே சமைக்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது என்றால் உன் நாவிற்கு முன்பே எண்ணம் அதை சுவைத்து விட்டது என்று அர்த்தம். இது அசைவம், இது சைவம், இது காய்கறி, இது பழம் எனப் பிரித்துப்பார்த்து உன் வயிற்றுக்குள் அனுப்புவது எண்ணம்தான் என்பார்.

ஆட்டிறைச்சி, மானிறைச்சி, மீனிறைச்சி எந்த இறைச்சியாக இருந்தாலும் அது சதையே, ஒவ்வொரு சதையும் வேறு வேறு போல் இருக்கும் என்பதும் எண்ணமே. மீன் இறைச்சியைத் தவிர சொல்லாமல் சமைத்து வைக்கும் பல இறைச்சி உணவுகளை யார் முன் வைத்தாலும் பெரிதாக வித்யாசம் காண்பது இயலாது. பிய்த்து சமைக்கப்பட்ட மீன்களுக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.

ஒரு உணவுக்கு அந்த மகான் அளிக்கும் விளக்கத்தைக் கேட்டு விட்டால் உடனடியாக உணவின் மேல் உள்ள பற்று யாருக்கும் போய்விடும். எங்கோ சமைக்கும்போது நாவில் உமிழ்நீர் ஊறுவது கூட நமக்கு அவமானமாகத் தோன்றும். ``அய்யோ. எண்ணம் உண்கிறது’’ என்று.

இப்படி இதுபோல் பொருட்களின் மேல் உள்ள அவா ஆகட்டும், நில நீச்சங்களில் உண்டான பற்று ஆகட்டும், ஒரு ஐந்து நிமிடம் அந்த மகான் பேசுவதைக் கேட்டாலே போதும்.

அதுமட்டுமில்லை அவர் பேசும் சில சபைகளில் அறுபது வயதுப் பெரியவர்கள் அதிகமாக இருந்தால் அன்று இரவு அவர் வருந்திக் கொண்டிருப்பார். ``ஏன் சுவாமி’’ என்று கேட்டால், இவர்கள் போகும்போது புண்ணியம் தேடிக் கொள்ளும் ஆசையில் வந்திருக்கிறார்கள். மாலை நேரங்களில் இவர்களின் பொழுது போயாக வேண்டும், ஒரு இரண்டு மணி நேரம், மருத்துவர்கள் சொன்னது போல், மதுவை மறக்க வேண்டும், திண்ணைகளில் அமர்ந்து எனது பேச்சுக்கள் பற்றி அவர்களது அறிவை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், ``விழலுக்கு இறைத்த நீர்’’ என்பார்.

``நான் பேசுவது இளம் ரத்தங்களுக்கு உரித்தானது. இளம் ரத்தங்கள் உலகை மாற்றும் சக்தி கொண்டவை’’. நிறைந்த கூட்டமாய் இருக்கும் சபைகளில் அவர் பார்வை மகாராஜாவே அமர்ந்து இருந்தாலும் இளைஞர்களைத்தான் தேடும். என்று சொல்லி

``உன் பார்வையும் இளைஞர்கள் மீது இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டுப் புன்னகையுடன் புறப்பட்டார் அன்னை..

நண்பர்களே..

நிறைய நட்புக்களைப் பார்த்திருப்பீர்கள். நண்பனைத் தேடி இருப்பீர்கள். நண்பனாய் இருந்திருப்பீர்கள். ``அக நக’’ நட்பும், ``இடுக்கண் களைகிற நட்பும்’’ கண்டு ``நவில்தொறும் நூல்நயம்’’ உணர்ந்திருப்பீர்கள். நட்பு (Friendship) நட்பாராய்தல் (Choosing) பழமை (Old Friends) தீ நட்பு (Bad Friends) கூடா நட்பு (False Friends) என்று நட்பைப் பற்றி ஐந்து அதிகாரங்களில் பேசுகிறது வள்ளுவம்.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்புதான் எனக்குக் காதல்கோட்டை கதை கொடுத்தது. கோகுலத்தில் சீதையும் நான் சந்தித்த நட்பின் கதைதான். ஆனால் நான் சந்தித்த, மிகச் சிறந்த, உயர்ந்த, கதைகளிலோ, எடுக்கவோ கோர்க்கவோ என்ற மனநிலையிலோ, செஞ்சோற்றுக் கடன் தீர்த்த சூழ்நிலையிலோ காணக் கிடைக்காத நட்பைப் பற்றி நான் இப்போது பேசப் போகிறேன்.

அது எனது பள்ளிப் பருவம். உயர்நிலைப் பள்ளி மாணவன் நான். என் முதல் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை, பள்ளி நேரம் போக மீதி நேரம் கழிந்தது எனது அத்தானின் முடிதிருத்தும் கடையில் (Saloon), அங்கு நான் சந்தித்தவர்களே இதுவரை என்னை சிந்திக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாள் பள்ளி முடிந்து திரும்பிய மாலைவேளை, கூட்டம் இல்லாத நேரம், பக்கத்து கிராமத்தில் இருந்து ஒருவர் வந்தார். நான் கடையின் மூலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். தனது முன் நெற்றி வழுக்கை விழாத் தலையில் ஒரு சுடப்படாத அப்பளத்தின் பாதிபோல், முடியை அகற்றி வழுக்கை ஏற்படுத்தி இருந்தார். இரண்டு மூன்று நாட்கள் தாடிபோல் அந்த அரை அப்பள முன் மண்டையில் முடி முளைத்து நின்றது. கடைக்குள் வந்து அமர்ந்து முண்டாசு அவிழ்த்தபோதுதான் அது தெரிந்தது. அங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கு அந்தக் காட்சி கேள்விகளை எழுப்பியது. நானோ பதில்களுக்காக காத்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த அரை அப்பள முன்மண்டைக்கு அவரது கிராமத்தில் நிறைய நண்பர்கள். ஒரு மாலை வேளை. ஏரிக்கரையோரம், செடிகள் மறைவில், காலையில் கழிக்க முடியாத கடனை மாலையில் கழித்துக் கொண்டிருந்தார்.

இவரின் நண்பர்கள் இருவர். ஒருவருக்கு ஒரு பெண் மேல் காதல், கிராமத்தில் காதல் என்பது காமம் சார்ந்தது. வைக்கோல் போரில் முட்டை ஒளித்து வைத்து காதலனின் உடல் தேற்றும். பத்துப் பேருக்கு மத்தியில் பெண்ணின் கையிலிருக்கும் குழந்தையை வாங்கும்போதே அவள் ஜாக்கெட்டுக்குள் பணம் சொருகும். யாருமில்லா நேரத்தில் வயல்காட்டில் புல் அறுத்துக் கட்டிய அந்தப் பெண்ணின் தலையில் புல்லுக்கட்டை தூக்கி வைத்து பட்டென்று தள்ளிவிட்டு கட்டிப்பிடித்துக் கொள்ளும். வெட்ட வெளியில் வினாடிகளில் ஆடையுயர்த்தி.. கால் பரப்பி காமம் தணிந்து கோழியாகும். எல்லாம் முடிந்து. யாருக்கும் தெரியாமல் பப்பாளிக்காய் தின்று, உதிரம் கக்கி, கன்னிமை காப்பாற்றி ஒரு நாள் மாங்கல்யம் வாங்கி அடுத்த ஊர் போகும்.

அரை வழுக்கை செடிக்குள். கரையில் இரண்டு நண்பர்கள்.

ஒருவன் சொன்னான் இரவுகளில் நான் என் காதலியை தேடிப் போவேன். கதவு திறந்திருக்கும். கதவருகே படுத்திருப்பாள். தொடுவேன். என் முன் நெற்றி வழுக்கையைத் தடவுவாள். அனுமதிப்பாள்.. இணைவேன்.. (இணைவோம் இல்லை) பிரிவேன்.’’

செடிக்குள் அவன் கேட்டுக் கொண்டிருந்தான். உடல் மலம் கழுவி, மனமலம் சேர்த்து வெளியே வந்தான். பேச்சுக் கொடுத்தான். பேச்சு விவாதம் ஆகியது. அந்தப் பெண் பொருளானாள். செடிக்குள் இருந்த நண்பன் சவால் விட்டான். ஒரு மாலைப்பொழுதில் அவள் அணிந்திருக்கும் ஜாக்கெட்டை இருவரும் பார்வையிடுவோம். அன்று இரவு அதைக் கழட்டிக் கொண்டு வந்து நான் காட்டுகிறேன் என்று.

ஒரு மாலைப்பொழுது கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த அந்த ஜாக்கெட் இருவரின் பார்வைகளில் பதிவு செய்யப்பட்டது. இரவு வந்தது. வழுக்கைத் தலையனின் வழுக்கைபோல சவால்விட்டவன் ஒரு சலூனில் அமர்ந்து அப்பளத்தின் அரை வட்டவடிவமாக தன் முன் மண்டையில் இருந்த முடிநீக்கினான். இரவில் சென்று தான் செடிமறைவில் ஒளிந்து கேட்டதுபோல் அடிநீக்கினான். மடி நீக்கினான். அவள் நெற்றி தொட்டாள். வழுக்கையை வழுக்கிக் கொண்டாள். ஜாக்கெட்டை திருடி, நண்பனிடம், உடுக்கை எடுத்தவன் என்றான்.

``உடுக்கை எடுத்தவன் கையாலே ஆங்கே
இடுக்கண் விளைத்ததாம் நட்பு’’

இந்த உயர்ந்த நட்பை இன்று நினைத்தாலும் நண்பன் என்பவன் ஜாக்கெட் கழட்டுபவனோ என்று எனக்குத் தோன்றும்.

இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே தர்மபுரி பெண்ணாகரம் தாண்டி ஏரியூர் என்னும் இடத்தில் இருந்து நண்பர் விஜயன் ``நண்பா.. எப்படி இருக்கீங்க’’ என்று அழைத்தார். காலையில் பேசுகிறேன் என்று கைபேசியை துண்டித்தேன்.

``நண்பன் ’’ என்பது பற்றியும் ``தோழி’’ என்பது பற்றியும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. கிட்டதட்ட பனியுகம் (Ice Age) முடிய ஆரம்பித்து மனித இனம் விதைக்கப்பட்டது. சந்ததி பெருகியது.

பெண் தலைமையேற்றாள். வேட்டையாடினாள். உணவு கொணர்ந்தாள். மனித இனம் ஆங்காங்கே சந்ததியைப் பெருக்கியது. கொடுமையான மிருகங்களின் தொல்லை. ஜந்துக்களின் தொல்லை. மழை, பனி போன்ற சீற்றங்களின் தொல்லை. பனி என்றால் நடுநடுங்க வைக்கும் குளிர்.

மனிதர் குழுக்களாக ஆயினர். அந்தந்தக் குழுவைத் தவிர எந்தக் குழுவும் வேறு எந்த குழுவோடும் பழகாது. தங்களின் கூட்டத்திலேயே இரண்டு குழந்தைகள் மேலும் பெருகிவிட்டால் பங்கு போட இரண்டு வந்து விட்டதே என்று அஞ்சுவார்கள். சில குழுக்களில் தலைவி வேட்டையாடிக் கிளம்பி திரும்பி வருவதற்குள் குழந்தைகள் கொன்று வீசப்பட்டன.

அதீத அவாவோடு அதிக மாமிசம் தின்னும் ஒருவன் கூட்டத்தில் இருந்தான். தலைவி எல்லோருக்கும் போதுமான அளவு கொடுத்து அவனைத் தனியாக மண்டிபோட வைத்து மீதம் இருப்பதைக் கொடுப்பாள். நாளடைவில் அளவு தீனிக்கு அவன் பழகிக் கொள்வான். பழக இயலாதவன் தனியே பிரிந்து செல்வான். எங்காவது ஒரு தனிப்பெண் கிடைப்பாளா! (வேட்டை ஆடி உணவு தர) எந்தக் குழுவாவது தன்னைச் சேர்த்துக் கொள்ளாதா?

பசியிலும், பனியிலும் விறைத்து எங்கோ ஒரு குழுவைப் பார்த்துவிட்டால் பசிகூட இரண்டாம பட்சம்தான், எரியும் நெருப்புக்கு அருகில் இடம் கொடுக்க மாட்டார்களா?

கொடுக்கவே மாட்டார்கள். ஊர்ப்பிடாரியை விரட்டி விடும் என்பதற்காக.

எல்லோரும் தின்ற களைப்பில் தூங்கும்போது ஆப்பிரிக்காவில் (மனித இனம் தோன்றிய முதல் இடம்) அந்த அடர்ந்த காட்டில் ஒரே ஒரு மூர்க்கன் நெருப்பில் காய, பரிதாபமாக தூரத்தில் நின்ற அந்த நாடோடியைப் பார்த்து, என்ன தோன்றியதோ சைகையில் அழைத்து நெருப்புக்கு அருகில் இடம் கொடுத்தான். மொழியறியா காலத்தில் வாய்க்கு வந்த ஒலி எழுப்பும் மன நிலையில் நெருப்பில் இடம் கொடுத்தவனைப் பார்த்து இடம் பெற்றவன் ``நம்பெ’’ என்றான்..

வாய்க்கு வந்த ஒலி அது. முதல் நட்பு தோன்றியது. நம்பெ அந்த நாடோடியைப் பகலில் தன் கூட்டத்தின் கண்களில் மறைத்து, ஒளித்து வைத்தான். உணவு கொடுத்தான். இருவரும் காடு சுற்றினார்கள். பசி வெறி அதிகமுள்ள அந்த நாடோடி மிகத் திறமையாக கல்லால் எறிந்து விலங்குகளை வீழ்த்துவதில் வல்லவன். வீழ்த்தி, நெருப்புக் கங்குகளைத் திருடி `நம்பெ’க்கு கொடுத்தான். நம்பெ கூடவே சுற்றும் அந்தப் பெண்ணுக்கும் கொடுத்தான்.

நம்பெ நாடோடிக்கு தன்னுடன் சுற்றும் பெண்ணைக் கொடுத்தான். அவள் ஒத்துழைத்தாள். அந்த நாடோடி வீழ்த்திய விலங்குகளை நம்பெ தன் கூட்டத்துக்கு கொடுத்தான். பின் அவனைத் தன் கூட்டத்தில் சேர்த்தான். வெகு காலம் கழித்து நாடோடி தன் உறவுகளைப் பார்க்கும்போது நம்பெயை தன் குழுவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். நட்பு காரணமாக உலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு குழுக்கள் இணைந்தன.

பெண்களும், ஆண்களும் தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். உறவுகள் தோன்றியது நட்பில்தான். இந்த உறவுகளில் விரிசல் ஏற்படுவதும் அதே நட்பால் தான்.

மனிதன் தோன்றிய புதிதில் அவனுக்கு நிறைய எதிரிகள் சுற்றிச் சுற்றி வந்தனர். உதாரணமாக கூட்டமாக வரும் விஷத்தேனிக்கள் எதிர்பாரா நேரத்தில் நூறுபேர் கொண்ட குழுவை நொடியில் சாகடித்துக் கொன்றுவிடும். இப்படி நிறைய இருப்பினும் பெண்ணுக்குப் பெண் எதிரி என்பதுதான் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து நியதியாய் இருந்திருக்கிறது. காரணம் வேட்டையாடுவதும், உழைப்பதும், காப்பதும் தாய்களின் கையில் இருந்திருக்கிறது.

வானம் பார்த்து, பருவம் பார்த்து, சப்தம் பார்த்து, இரைச்சல் பார்த்து, வீசும் காற்று பார்த்து, கதிரவனின் நிறம் பார்த்து, இந்த இடத்தில் இதை சுலபமாகத் தட்டலாம் என்று கல் ஆயுதத்தோடு கிளம்பும்போது அதையெல்லாம் பார்த்த இன்னொரு தாய் மிக எளிதாக இரையை வீழ்த்தி இருப்பாள். இவளின் குடும்பம் பல நாள் பட்டினி கிடக்கும். ஆக எங்காவது இருகுழுப் பெண்கள் வேட்டையில் சந்தித்து விட்டால் கொலைவெறித் தாக்குதல் கூட நடக்கும்.

``பசி’’ பசியே முதன் முதலில் பெண்ணைப் பெண்ணுக்கு எதிரியாக்கியது. பத்தாவது மாதத்தில் பிரசவ வலியால் காடுகளில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு குழுவில் உள்ள இன்னொரு பெண் பார்த்தால் போய்க்கொண்டே இருப்பாள். அவளும் எங்கோ துடித்துக் கொண்டிருந்தவள்தான். கடந்து போகிறவள் சிசுவை சுமந்து கொண்டிருந்தாலும் துடிப்பவளுக்கு கருணை செய்ய மாட்டாள்.

அப்படி ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் பார்த்தாள். இருவருமே ஓரிரு முறை மோதிக் கொண்டவர்கள். என்ன தோன்றியதோ அருகே சென்று இளநீரைப் பிளந்து அவள் வாயில் ஊற்றி, இடுப்பில் மிதித்து குழந்தை வெளியே வர உதவினாள்.

சில காலம் கழித்து ஒரு இரைக்காக இருவரும் சந்தித்துக் கொண்டபோது தான் வீழ்த்திய இரையை எடுத்துக் கொண்டு போகச் சொன்னாள் வலியால் துடித்தவள். முதன் முதலில் அங்கு நட்பு அரும்பியது. உதவிய பெண்ணை வாய்க்கு வந்தபடி அழைத்த பெயர் "தொலி".

ஒருவருக்கொருவர் உதவினால் பெண்கள் நட்பாகிக் கொள்ளலாம் என்பதும் அங்கு தோன்றியது.

ஓரு ஆழிப்பேரலையில் அந்தப் பகுதி ஆப்பிரிக்காவில் இருந்து பிய்த்துக் கொண்டு வந்து ஆசியாவில் மோதியது. இந்தியா ஆனது. அந்த ``நம்பெ’’யும் ``தொலி’’யும் அந்த நிலப்பரப்பின் தெற்கே வாழ.. அது தமிழகம் ஆனது."நண்பன்".. "தோழி".. என்றானது.

நட்பைத் தொடருவோம்.
அகத்தியன்.


http://koodu.thamizhstudio.com/thodargal_16_4.php


Friday, April 15, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 15வது பௌர்ணமி இரவுதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 15வது பௌர்ணமி இரவு

(15th Full Moon Day Film Screening)

17-04-2011

ஞாயிற்றுக் கிழமை, 17-04-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் இதுவரை ஒரு தமிழ் குறும்படம், அல்லது ஆவணப்படம் போன்றவை முதலாம் பகுதியிலும், ஒரு உலகத் திரைப்படம் இரண்டாம் பகுதியிலும் திரையிடப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல் பௌர்ணமி இரவு முழுவதும், ஒரு அயல் நாட்டு குறும்படம், ஒரு அயல்நாட்டு திரைப்படம் (உலகத் திரைப்படம்) மட்டுமே திரையிடப்படும். ஆவணப்படங்கள் திரையிடுவதற்காக அடுத்த மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று தமிழ் ஸ்டுடியோவின் அலுவலக மொட்டை மாடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகத் திரைப்படம்: Jessie Nelson இயக்கிய "I am Sam"

இந்த திரைப்படம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0277027/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268Monday, April 11, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (21)மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (21)

வெங்கட் சுவாமிநாதன்

இதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.

தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும் பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா?” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள், பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா? என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குரல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மி, கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீட்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு.

இரண்டாவது வகையினர் இன்னொரு வேடிக்கையும் பரிதாபமுமான கற்பனை வாதம் ஒன்றை முன் வைக்கிறார்கள். நாளெல்லாம் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து உழைத்துத் திரும்புகிறவன் தன் கஷ்டங்களையெல்லாம் மறந்து ஜாலியாக இருக்க விரும்புகிறவன் எதிர்பார்ப்பதைத் தருகிறது அவனுக்கு அன்று ஒரு ஜெயமாலினி, இல்லை ஜோதி லட்சுமி, இன்று ஒரு நமீதாவாவது டான்ஸ் பண்ண வேண்டும். அதைப் பார்த்து மகிழ்ந்து நன்றாகத் தூங்கி நாளைக்கு மறுபடியும் வேர்த்து விறுவிறுக்கத் தயாராவான். இந்த மாதிரியான ஒரு சினிமா கலைத் தத்துவம் தமிழ் மன்ணுக்கே உரியது.. இது போல ஒரு பொய்யும் நேர்மையற்றதுமான ஒரு வாதம், இன்னொரு பெயரில் இளிச்சவாய்த்தனமான வாதம், இருக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனாலும் கொள்ளையடிக்கவே வந்திருப்பவர்கள், அதற்கு ஏதாவது கவர்ச்சியான ஜனநாயகப் பூச்சு பூசி மக்களை ஆபாசத்துக்குத் தள்ளுகிறவர்கள் இன்னும் மோசமான பொருளைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டி வரும்போது, இன்னமும் நேர்மை கெட்ட, இன்னமும் மோசடி நிறைந்த பொய்யை, மக்களுக்காகப்பேசுவதாக நினைத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்காகத் தயார் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை

முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன் புராணப் படங்கள் கோலோச்சிய காலத்தில் இந்திரனோ, எவனாவது மன்னனோ சபைக்கு வந்து அமர்ந்ததும் “ஏழு கன்னிகைகள் வந்து நடனமாடுவார்கள்.” பின்னர் அடுத்த தலைமுறையில் ஒரு கல்யாணமோ, இல்லை பெரிய மனிதருக்கு வரவேற்போ என்று காரணம் காட்டி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு காண எல்லோரும் தியேட்டருக்குப் போவார்கள். அங்கு காதல் மலரும்.

இந்த மாற்றம் எந்த ஊர் தொழிலாளிகள் எல்லாம் தாம் சிந்திய வியர்வையைக் காட்டி எங்களுக்கெல்லாம் எங்கள் உடல் சிரமத்தைக் குறைத்து ஒத்தடம் கொடுத்து எங்கள் முகத்தில் சிரிப்பையும் இறைவனையும் வரவழைக்க சிலுக்கு சிமிதா நாட்டியம் காட்டுங்கள் என்று ஜாயிண்ட் பெட்டிஷன் போட்டார்களா, இல்லை ஏழு கோடி தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி கோடம்பாக்கம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொது மனு கொடுத்தார்களா என்பது தெரியாது. ஒரு வேளை அந்த செய்தி வந்த அன்று என் ஏரியாவில் பவர் கட் இருந்திருக்கலாம். இதற்கு அடுத்து எப்போது இந்த மாதிரி ஒரு பொது மனு, “இனி உதகை பார்க், ஏற்காடு, வைகை அணையெல்லாம் பார்த்து அலுத்து விட்டது, இனி ஸ்விட்சர்லாந்துக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, டோரண்டோவுக்கோ போய் கமல ஹாசனும், சிம்புவும் நயன்தாராவோடு ஒரு நாற்பது பேர் கூட்டத்தோடு டான்ஸ் பண்ணினால் தான் எங்கள் அலுப்பு தீரும்போல இருக்கு. இப்பல்லாம் பார்ங்க உடம்புலே கொட்டுற வியர்வை நிறையவே கூடிப்போச்சு உதகை பார்க் டான்ஸெல்லாம் இந்த வியர்வைக்குப் பத்தாது என்று மறுபடியும் கொடுத்தார்கள் என்ற செய்தியும் என் பார்வையிலிருந்து தப்பி விட்டது. அடிக்கடி வரும் பவர் கட்டினால் வரும் விபத்து இது. . .

எனக்கென்னவோ இந்த ஆபாசங்கள் எல்லாம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் டிமாண்டு தானே ஒழிய அப்பாவி தமிழ் மக்கள் அல்ல. அந்த வியர்வை கொட்ட அதைக் காய வைக்க எந்த அப்பாவி தமிழ் உழைப்பாளியும் 300 ரூபாயும் 500 ரூபாயும் கொடுத்து டிக்கட் வாங்க மத்தியானம் ரண்டு மணி வெயிலில் க்யூவில் நிற்கமாட்டான். அந்த பைத்தியக் காரத் தனம் செய்யும் தமிழ் ரகங்களே வேறே தான். கோடிக் கணக்கில் வசூலிக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணம் தேடுகிற வியாபாரக் கூட்டம், ஒரு கட்டத்தில் கருணாநிதி வசனம், சிவாஜி முக அவஸ்தைகள், சிலுக்கு ஸ்மிதா நடனம், கமலஹாசனின் மேக்கப் அவதாரங்கள், ரஜனி காந்தின் அங்க சேஷடைகள் என்று தம் நுண்மாண் நுழைபுல ஆராய்ச்சியில் கண்டு பிடித்து தம் அடுத்த படத்தில் அந்தச் சரக்கை இன்னும் ஒன்றிரண்டு பெக் கூடச் சேர்த்துக் கலந்த காக்டெயிலை சந்தைக்குக் கொண்டு வரும் பேராசைக் கனவுகளுக்கு என்னமோ உழைக்கும் வர்க்கம், சொட்டும் வியர்வை, மக்கள் ரசனை என்று கோஷிப்பதையே தம் கண்டு பிடிப்பு போலத் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கிறார்கள், இந்த ஆபாசங்களும் தரக்கேடுகளும் தமக்கும் பிடித்துப் போக அதற்கு நியாயம் கற்பிக்கும் நம் அறிவு ஜீவிகள். தமிழ் சினிமா கலா ரசிகர்கள்.

ஒரு ஆபாசத்தை நிலை நிறுத்த, தொடர்ந்து நடைமுறைப் படுத்த என்னென்ன வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. “இலவச தொலைக்காட்சி தருவதற்கு என்ன உயரிய நோக்கம் சொல்லப் பட்டது? குடிசை வாசிகளும் உலக அறிவு பெற வேண்டும், கலை ரசனை பெருக வேண்டும் என்ற மகத்தான லக்ஷியம் தான் காரணம் என்று. கடைசியில் சன் டிவிக்குப் போட்டியாக அதிலிருந்தும் கீழிறங்கி “மானாட மயிலாட” கண்டு பிடிக்கப்பட்டது. எதற்கு?. உடன் பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் உலக அறிவு பெற,. கலைகள் கண்டு களித்திட.

ஒவ்வொரு தரக்கேடும், ஒவ்வொரு ஆபாசமும் தனியே வருவதில்லை. உடன் அதற்கான லக்ஷிய கோஷங்களோடு தான் சந்தைக்கு வருகிறது.

மூன்றாவதாக, தமிழ் சினிமா முன்னேறிக்கொண்டு தான் வருகிறது. மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன என்று சொல்கிறவர்கள், மிஷ்கின், ..


read more: http://thamizhstudio.com/serial_4_21.php