Monday, April 25, 2011

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 10

சல்மா – ஒப்பந்தப் புன்னகைகள்

குட்டி ரேவதிபெண்ணின், ‘பாலின்பப் பரவசநிலை’யை வெளிப்படுத்த இயலாததே ஓர் ஒடுக்கு முறைவடிவமாக மேற்கத்திய நாடுகளில் பெரும் விவாதமாக்கப்பட்டு, அதன் பல்வேறு திசைகள் ஆய்வுப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பெண்கள், ஆணுடன் புணர்ந்து, பிள்ளைகள் பெற்று அவர்கள் பருவம் எய்தும் வரை வளர்க்கும் சுமையைப் பெற்றிருந்தாலும், இப்புணர்ச்சியின் விழிப்பையோ, பரவசத்தையோ உணர்ந்ததே இல்லை. இது ஓர் இயந்திரத்தனமான அனுபவமாகவே பெண்களுக்கு வழங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. திருமணத்திற்குள் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான பாலுறவும், போர்ச்சூழலில் இராணுவத்தினர் பெண்கள் மீது செலுத்தும் பாலியல் வன்முறையும் இயக்கநிலையில் ஒரே மாதிரியானவை தான். அதற்காக, பெண்கள் இப்பால்நிலைப் புணர்ச்சியில் பரவசநிலையை எய்துவதை நோக்கிய விழிப்புநிலை அடைந்து விட்டாலோ, அல்லது அதற்கான வேட்கையை அடைந்து விட்டாலோ மட்டுமே பாலியல் உரிமையை அடைந்துவிட்டதாக ஆகாது. அந்த நிலையை அடைவது என்பதே, ஆண், பெண் இருபாலாருக்கும் தன் உடல் பற்றிய அறிவு, தான் சார்ந்த குடும்பத்தின் வழியாகத் திணிக்கப்பட்டிருக்கும் பண்பாட்டு மொழிகள், தன் சமூகம் மற்றும் வணிக ஊடகங்களான தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றின் வழியாகப் பழகி, நுகர்ந்து வந்த பாலியல் நம்பிக்கைகள், மேற்குறிப்பிட்ட பாலியல் உரிமைக்குப் போதுமானவையாக இல்லை என்பதை நாம் அறிந்துகொள்வதிலிருந்தே தோன்றுகிறது.

‘உடல் அரசியல்’ என்ற பெண்ணிய படைப்பிலக்கிய விவாதம் தொடங்கிய நோக்கத்திலிருந்து பல முறைகள் திசை திரும்பியிருக்கிறது. உடல் உறுப்புகள் பற்றிய குறிப்பிடலையோ அல்லது தன் பால்நிலை மற்றும் பாலுறவு பற்றிய மேம்போக்கான வாதங்களையோ, வாக்குமூலங்களையோ கூட ‘பெண்ணிய படைப்பிலக்கியம்’ என்று கூக்குரலிட்ட அரசியல் சிதறல்களும் நடந்தேறியிருக்கின்றன. ‘சென்னை பல்லாவரத்தைத் தாண்டி இவ்விலக்கியங்களை மக்கள் அறிந்திருக்கவில்லை. கல்லூரிகளில், இப்பெண்ணிலக்கியம் பற்றிப் பேசிவிடாதீர்கள்’ என்ற முறையீட்டுடன் ஓர் ஆண் எழுத்தாளர் நான் கலந்து கொண்டதொரு கருத்தரங்கத்தில் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால், இப்பெண்ணிலக்கியங்களின் நோக்கங்கள், சென்னை பல்லாவரம் மேம்பாலத்தை எம்பித் தாண்டுவது மட்டும்தானா? இலக்கியப் பரப்பில், சொற்களின் அரசியல் செயல்பாட்டை பெண்ணிலக்கியங்கள் விரிவுபடுத்தியிருக்கின்றன. கருத்தரங்குகளில், பெயருக்கு ஒரு பெண் எழுத்தாளரைப் பேச அழைப்பது போய், கருத்தரங்கத்தின் விவாதப் பொருளில் பெண்ணியத்தளம் ஒருமுகப்பட்டிருக்கிறது. சிந்தனைகள் கருத்துவேறுபாடும் முரண்பாடும் கொள்ளலாம். ஆனால், நிராகரிக்கப்பட முடியாத ஒரு பெருங்குரலைப் பெண்ணிய இலக்கியம் எய்திருக்கிறது.

எல்லாவற்றையும் தாண்டி, மொழி, தன் சொற்களில் படிந்துள்ள அடக்குமுறைப் புழுதியை நாம் பொருட்படுத்துவதே இல்லை. அப்புழுதியும் அழுக்கும், மனிதன் தன் சொற்புழக்கத்தில் புதுப்பிக்கத் தவறியதால் வந்து அடர்ந்தவை. மொழி, மனிதனின் உளக்கிடக்கையையும் தேவையையும் வெளிப்படுத்தப் பயன்படவேண்டுமே அன்றி, அது ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதற்கான கருவியாகவும், கண்காணிப்பதற்கான கருவியாகவும் இருக்கக் கூடாது. நம் இலக்கிய அரசியலை, ‘உடலரசியல்’ எனும் இலக்கியப் போக்கு மாற்றியிருக்கிறது. வெறுமனே, வசைச் சொற்களாகவும், உடல் உறுப்புகளின் பெயர்ச்சொற்களாகவும் இருந்த சொற்களுக்கு நிறைய இயக்கங்களைப் பெண்ணிலக்கியம் செய்திருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மதப் பின்னணியிலிருந்து, அதிலும், சுல்பிகா, சல்மா, பஹீமா, அனார் போன்றோர் தமது மதச்சூழலிருந்தும் தமது அந்தரங்கச் சூழலிலிருந்தும் படைப்பிலக்கியத்தில் தன்னை வலுவாக ஈடுபடுத்திக்கொண்டதின் விளைவாக இலக்கியத்தின் பால்நிலை விளக்கங்களை மாற்றியமைத்திருக்கின்றனர். இதை, ஓர் அசாதாரணச் செயல்பாடாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தேசியத்தின் பேரால் ஒரு யோனி, பயங்கரவாதத்தின் பெயரால் மற்றொன்று, பலவந்தத்தின் பிடியில் இன்னுமொன்று, சுயநலத்தின் சூறையில் இன்னொன்று’ எனும் வரிகளால் சுல்பிகா, யோனிகள் சூறையாடப்படும் அத்தனை சமூகக்காரணங்களையும் ஓரிடத்தில் கொணர்ந்திருக்கிறார். மனிதர்களின் மூளைகளை தத்துவச் சிந்தனைகள் பழக்கத்தாலும் நிர்ப்பந்தத்தாலும் பீடித்திருக்கும் நிலையிலிருந்து விழிப்புறும் போது தான் கவிதை பிறக்கிறது என்பதை உணர்த்த இவர்கள் தங்கள் இலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

ஒப்பந்தம்

ஒவ்வொரு முறையும்
அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்
படுக்கையறையின்
தவறுகளெல்லாம்
என்னுடையதென

தினமும் படுக்கையறையில்
எதிர்கொள்ளும் முதல் பேச்சு
‘இன்றைக்கு என்ன?’
அநேகமாக
இறுதிப்பேச்சும்
இதுவாகவே இருக்கும்

வேசைத்தனத்தினைச் சுட்டும் விரல்
ஒளிரும் கோடி நட்சத்திரங்களிலிருந்து நீள
நடுங்கும் இரவுகளில்
மிதக்கும் அறிவுரைகள்

குட்டிக்கு உணவூட்ட
இயலாப் பூனையின்
தேம்பியழும் குழந்தைக்குரல்
கவ்விப்பிடிக்கிறது ஈரலை

உனக்கும் கூடப்
புகார்கள் இருக்கலாம்
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது

உன்னிடமிருந்து
கலங்கானதே எனினும்
சிறிது அன்பைப்பெற

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி.

இக்கவிதை சல்மாவின் மிகவும் பிரபலமான கவிதை. அதிகாரத்தைத் துல்லியமாகப் பண்டமாற்றுச் சரக்காக மாற்றிக் கொள்ளும் இடத்தின் வழியாக தன் இருப்பை நிலைநிறுத்த முடிந்ததை இறுமாப்புடன் சொல்லும் கவிதை. சல்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஏன் அத்தனைக்கவிதைகளுமே கூட, மனித மனத்தின் உளவியல் வெளியையும், அரசியல் செயல்பாட்டையும் அறிந்த நிலையில் தான் உருவாகியிருக்கின்றன. இதை அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மையாகக் கொள்ளலாம். அவர் கவிதைகள் உள்ளே செல்லும் போதே, அவரே இதை அடிக்கடி ஆமோதிப்பதைக் காணலாம். தன்னை அணுகும் ஒவ்வொருவரின் மனநிலையையும், ‘ஆமாம்! நான் அதை அறிவேன்’ என்ற அகக்குரல் ஒலிக்க, கவிதை முடிகிறது. அதே சமயம், தன்னைச் சுற்றி உள்ள எல்லா சடப்பொருட்களும், பருவகாலங்களும், தட்பவெப்ப நிலைகளும் கூட தன்னைக் கட்டுப்படுத்துவதான மிகையான நிலையைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கிறார். ‘மின்விசிறி / நான் காற்றைத் தேடி ஓடிவிடாதவாறு கட்டுப்படுத்தும் தந்திரம் கொண்டது’ என்றும், ‘எண்ணற்ற ஜடப்பொருட்களுடனும் ஒரு மனிதனோடும் தொடரவியலா வாழ்க்கை தொடர்கிறது அதே அறையில்’ என்றும் சடப்பொருட்கள் உயிர்த்தன்மை பெற்ற நிலையைக் கவிதை கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் அந்த சட உலகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் உபாயம் தான். உமா மகேஸ்வரியின் கவிதைகளிலும் இத்தன்மையைக் காணலாம்.

இரண்டாம் ஜாமத்துக்கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மை தான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும் கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்


நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்து தானே தொடங்குகிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில் தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மேற்கண்ட கவிதையில், விவாதம் பெறும் பிரசவம் அடிப்படையிலான பெண், ஆண் உடல்கள், கழிவிரக்கத்தின் பாற்சாய்ந்து நலிவுற்றுப் போகிறது. பெரிய அளவில் பெண், ஆண் உடலின் புற வேறுபாடுகள் விமர்சிக்கப்பட்டு விட்டன. விவாதிக்கப்பட்டுவிட்டன. என்றாலும், இயற்கையின் சாபம் போல தன்னுடலைத் தானே, தோல்வியின் குறியீடாய்ப் பார்ப்பது, வாசிப்பவரையும் அதே பாதையில் சாய்க்கும் என்பதால், புரியும்பொருட்டு இதை விரிவாக விளக்கவேண்டியிருக்கிறது. ஆணின் குறி மீதான பொறாமையுணர்வு, எப்பொழுதும் பெண்ணின் மனதில் இயங்கிக் கொண்டே இருப்பதான பழைமையான மரபார்ந்த விவாதம் போன்றது தான் இதுவும். ஆனால், இனப்பெருக்க ஆற்றலும், உயிருடலை வளர்த்துப் பிரசவிக்கும் ஆற்றலும் பெண்ணுக்கேயான பிரத்தியேக அம்சமாய்ப் பார்க்கும் சமூகப் பார்வை சமீப காலங்களில் உறுதிப்பெற்றிருக்கிறது. தளும்புகள், புற வடிவ அலகுகளால் அழகை அளவிடுவது என்பது ஆணாதிக்கப்பார்வை. ஆணின் காம நுகர்ச்சிக்கு, ஏற்றவாறு பெண்ணின் உடலைத் திருகிக்கொள்வது என்பதே ஆதிக்கச் சிந்தனையை உள்வாங்கிக் கொள்வது என்பது தான். இக்கவிதையை பெண்ணிய வாசிப்புக்குட்படுத்தும் போது, அதனுள் மறைமுகமாக இருக்கும், தன் இருப்பை ஆணின் அங்கீகாரத்தின் வழியாகத் தேடும், கோரும் மனநிலையை அங்கீகரிக்கமுடியவில்லை. ஆனால், இச்சிக்கலை, அவரே தனது இன்னொரு கவிதையான, ‘விடுபடல்’ வழியாக எளிதாக அவிழ்க்கிறார்.

விடுபடல்

ஒட்டு விளிம்பில்
தழும்பிச் சரிகிற வயிற்றோடு
தலை சொறிகிற குரங்கிற்கு
ஒரு சலனமுமில்லை
தன் உணவைத்
தானே தேடுவது குறித்து

தன் அடி வயிற்றுக் கனத்தின்
பாதுகாப்புக் குறித்து
மேலும்
யாருடைய கரு இதுவெனவும்

உழைப்பதில் ஈடுபடுவது, கருவுறுவது, அது எவருடைய கரு என்பவை குறித்த சலனமின்மை எனும் தனது அரசியலை இயல்பான கவிதையாக்கி இருக்கிறார். ஒடுக்குமுறையை படைப்பிலக்கிய மொழியால் வெல்லுவது தான் பெண்களுக்கு உற்ற வழிகளில் ஒன்று. உலகில் ஒவ்வொரு மதமும் கடவுள் எனும் கண்டுபிடிப்பாலும் அதிகாரத்தினாலும் பிறந்தது. கடவுள் எனும் கண்டுபிடிப்பு ஆண்களின் கண்டுபிடிப்பாகத் தான் இருக்கவேண்டும். ஒற்றை அதிகாரத்தூணுக்கு வசதியாகப் பெண்களிடம் சுமைகளைச் சுமத்துதற்கு ஏதுவாக, மதம் பற்றிய ஒழுங்குமுறைகளும் கடவுள் குறித்த பயமும், பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை, மற்ற மதங்களை விட இறுக்கமானவை, அவர்களின் உடையில் கூடுதலான ஒரு பர்தாவைப் போலவே. பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பும், சுமையும் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்ற அர்த்தத்தில் என்னவோ பெண்களின் நலனுக்காகவே ஆண்கள் அவ்வாறு நடந்துகொள்வதாகத் தம் நியாயத்தை முன்வைக்கிறார்கள். பதிலாக, ஆண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. இன்னும், விளக்கமாகச் சொல்வதென்றால், பெண்களின் பொருளாதார, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்கள் காட்டும் அக்கறையை விட பெண்களின் யோனித் தூய்மையின் வழியாகப் பாராட்டும் அன்றாடச்செயல்பாடுகளின் ஒடுக்குமுறை வரை ஆண்கள் தம் கண்காணிப்பையும் அடக்குமுறையையும் அக்கறை என்ற பேரில் செலுத்திவருகின்றனர்.

ஆனால், பெண்ணுக்குத் தன்னளவில் யோனி என்பது என்ன என்பதை பல கவிஞர்கள் பலதிசைகளிலிருந்து பொருள்விளக்கம் தந்திருந்தாலும் சல்மாவின், ‘என் பூர்வீக வீடு’ கவிதை சமகால பெண் தன் யோனியை இழக்க வேண்டியிருக்கும் நிலை பற்றிய பரிவைப் பதிவு செய்கிறது. ‘கருப்பையை உடலிலிருந்து பிரித்தெடுத்தல்’ நவீன வாழ்க்கையில் இன்றியமையாத நிகழ்வாகி விட்டது பெண்களுக்கு. மறுக்கமுடியாததொரு படிமமும் ஆகிவிட்டது.

என் பூர்வீக வீடு 2

முன்கூட்டிக் குறிக்கப்பட்ட
காலமொன்றில்

உலர்ந்த திராட்சையென
சுருங்கிய சருமத்தோடு
நினைவு தப்பிச் சரிந்திருந்த
அவளிடமிருந்து கருப்பையை
மருத்துவர்கள் பிரித்தெடுக்கின்றனர்
சலனமற்ற கவனத்துடன்

தண்ணீர் நிரம்பிய
பாத்திரத்தின் மெளன வெளியெங்கும்
கனத்த ஈரல் துண்டெனத்
தளும்பும் அது
துலங்கிய தன் மர்மத்தோடு

எனதுயிர் ஒடுங்கியிருந்த
அச்சதைத் துண்டை நோக்கி
இதயத்தின் மத்தியிலிருந்து
பீரிட்டெழும் கிளர்ச்சி
பின் பெரும் துக்கமாய் மாறும்

எத்தனைமுறை
உயிர் சுமந்திருந்தாலென்ன
கழிப்பறையில் உருவாகித்
தகிக்கும் வெப்பமெனச்
சபிக்கப்பட்டதாகத்தானே இருந்திருக்கும்
அவ்வுறுப்பு அவளுக்கும்

தொடர்ச்சியான வேட்டையாடலுக்குப்பின்
சக்கையாய் மாறிய அதன் ஆன்மா
இனியேனும் அமைதி பெறக்கூடும்

குறிக்கப்பட்ட நேரத்திற்குச்
சற்று முன் தனதறைக்கு வெளியே
வலைப் பின்னலின் கீழே
ஒளி நொறுங்கிக் கிடப்பதை
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்து விட்டுப்
பயமற்ற குரலில் சொன்னாள்

‘நான் இனிப் பாதி மனுஷி’
அவ்வார்த்தைகளில் கனன்றிருந்த
இழப்புணர்வின் வன்மம்
பிறகு என்னை
அமைதி கொள்ளவிடவேயில்லை

நவீன வாழ்வின் உளைச்சலும், வேதியியல் பொருட்கள் கலந்த உணவும், பெண்ணின் கருப்பையைத் தான் அதிகமாய்த் தாக்கியிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால், அத்தகைய கருப்பையைத் தன் பூர்வீக வீடாக்கியும், அதை இழந்தபோது, இழப்புக்குள்ளானவள், தன்னை பாதி மனுஷியாகச் சொல்லுமிடத்திலும் எத்தகைய ஆற்றல் உறுப்பாய் அது பெண்ணுக்கு இருந்திருக்கிறது என்பதை அறியலாம். அது குழந்தையை ஈன்றெடுக்கும் உறுப்பு மட்டுமே அன்று. பெண்ணுக்கு, பெண்ணுடலுக்குத் தேவையான அத்தனை பால்நிலை அம்சங்களையும் வழங்கக்கூடியது என்பதாலும் அந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், சல்மா, எங்கோ வலிந்து தன்னை விடுதலையின் வாயிலிலிருந்து விலக்கி வைத்திருக்கும் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. விடுதலையை அனுபவிக்காத பாவமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான கவிதைகள் ‘ஒப்பந்தம் செய்து கொண்டதன் பேரில் வழங்க வேண்டிய புன்னகைகள்’ தொடர்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாய் இருக்கின்றன. சில சமயங்களில் வரிகளின் அமைப்பில் கொண்ட அசிரத்தையும் அர்த்தப்பிழையைத் தருகிறது. எல்லா கவிதைகளிலும் தொடர்க் கருப்பொருளாக உடலும் அதன் உணர்வுகளும் இடம்பெற்ற போதிலும், அவை எதிர்மறையான சிந்தனைகளால் ஊக்குவிக்கப்பட்ட உடலாகவே இருக்கிறது. நேர்மறையான சிந்தனைகளும் கலந்திருப்பின் அந்த உடலைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையை நோக்கியும் நம் வாசிப்பையும் கவனத்தையும் திருப்ப வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரே விதமான தொனியில் எல்லா கவிதைகளும் ஒலிப்பதால் ஒரே கோரிக்கைக்காக அவை இறைஞ்சுவதாகவும் ஆகிவிடுகின்றன.

வீடும் வெளியும்

சற்று முன்
தெருவைக் கடந்தது
தேர்.

என் வரையறுக்கப்பட்ட
புலன்களை
வந்தடைகின்றன
பாடல் வரிகளோடு
அரூப விழாக்காட்சிகள்.

இன்னும் வாய்க்கவில்லை
ஒரு திருவிழா நாள்.
திருவிழா முகங்கள்
திருவிழா இடங்கள்
திருவிழா குழந்தைகள்
என் திருவிழா அனுமானங்களுக்கு
என்றும் குறைவில்லை.

அனுமானங்களில் கரைந்த
என் காதலைப் போல
தொன்மையான
செவிவழிக் கதைகளால்
நிரப்பப்பட்ட மூளையில்
ஒலிக்குறிகளாய் மாறிய
காட்சிகள் நிரம்பி வழிகின்றன.

ஏதேனும் ஒரு குரல்
என்னுள் பதிவு செய்கிறது
எண்ணற்ற முகங்களை
அவற்றின் உணர்வு ரேகைகளோடு.

நுட்பமும் விஸ்தீரணமும் இழைய
ஒரு தற்செயலான பொழுது
கனவுகளின் புதிரிலிருந்து விலக்கி
காட்சியை விரிக்கும்போது
ஒட்ட இயலா மனம்
தப்பியோடும்
தன் விசித்திர சுயக்காட்சிகளுக்கு.

வீடும் வெளியும் என்ற இக்கவிதை சொல்லவந்ததை மீறி ஒலிக்கும் அதிர்வுகளுடன் துலங்குகின்றதால் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. கவிதையின் கட்டமைப்புகளைப் புரிந்த ஒரு தருணத்தால் சொற்கள் விரிந்து, அர்த்தம் பெருகுகின்றது. அதுமட்டுமன்றி, காட்சி, மனதின் கருப்பொருளில் ஏற்படுத்தும் தாக்கங்கள், அதன் விளைவுகள் பற்றிய புதிய பார்வை என்பதாலும், இக்கவிதை அவரது மற்ற கவிதைகளிலிருந்தும் விலகிய ஒன்றாய் இருக்கிறது. இதுபோலவே, ‘கோணம்’ என்ற கவிதையும் மெல்ல நகைப்பை ஊட்டியதொரு கவிதையாகவும், மேலே விவரித்திருக்கும் அத்தனை பார்வைகளுக்கும் தன் பக்கநியாயத்தை வரைவதாகவும் இருக்கிறது. அவரது சொற்களுடனான தொடர்ச் சஞ்சரிப்பில் இறுக்கமும் வெறுமையும் தனிமையும் வெக்கையும் வீசும் ஓரிடத்திற்கு வந்து நிற்பதைப்போல உணர்கிறேன். ஒரு வெளவாலைப் போலவே!

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப்
பாலூட்டுவதை
தலைகீழாகப் புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வெளவால்.

----------------------------------------------------------------------------------------------

சிறு குறிப்பு: சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா. ஒரு மாலையும் இன்னொரு மாலையும் (2000), பச்சைத் தேவதை(2003) என்ற இரு கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். கவிதை தவிர சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர்.


http://koodu.thamizhstudio.com/thodargal_14_10.php

No comments:

Post a Comment