Wednesday, April 6, 2011

தீர்த்த யாத்திரை..தீர்த்த யாத்திரை..

கலாப்ரியா

அது என்ன ராசியோ தெரியவில்லை. முதலில் என்னுடன் பழகுபவர்கள்.. கலகலப்பும் கிண்டலுமாகப் பழகுவார்கள். ஏதோ ஒரு நெருக்கம் பிறக்க ஆரம்பிக்கும் போது அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். நானும் என் அழுமூஞ்சித் தனத்தை காட்டிக் கொண்டு விடுவேன் போலிருக்கிறது. அதனால் அவர்களுடன் ஒரு அசாதாரமான இனஞ்சேரல் வாய்த்து விடும். ரொம்ப ஓவராக எப்போதும் சோகத்தைக் காண்பிக்கிறவர்களைப் பொதுவாக அந்தப் பருவத்தில் யாருக்கும் அவ்வளவாய்ப் பிடிக்காது என்பதும் ஒரு உண்மைதானே. யாராவது “புலம்ப’’ ஆரம்பித்தால் நான் கொஞ்சம் காது கொடுப்பேன், மற்றவர்கள் நைசாகக் கழண்டு விடுவார்கள். ஏனெனில் பாலிய பருவம் என்பது ஒருவகை தித்திப்பான பருவம். கண்ணதாசன் சொல்லுகிற மாதிரி,

”வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே...”

என்கிற பருவம். ஆனால், அப்போது நான் ஒரு ரெண்டுங்கெட்டான் வாழ்க்கையில் இருந்தேன். வேலையும் பார்த்துவந்தேன், அது தற்காலிகமான வேலை என்ற சிலுவையைச் சுமந்தபடியும், கோட்டை விட்ட தேர்வுகளுக்கு படித்த படியும், அல்லது படிக்கிறேன் என்று பேர் பண்னிக் கொண்டு... பொழுதை வீணடித்துக் கொண்டும் இருந்தேன். சத்திய வாசகன் அப்போது எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். கொண்டிருந்தார் என்று சொல்லவேண்டும். தினசரி மதியம் கேண்டீனில் சாப்பிடுகிற நேரத்திற்கு சந்திப்போம். ஒரு ஆராய்ச்சி மாணவரும் எங்களுடன் இருப்பார். நான், டவுணில் ஆராய்ச்சி மாணவருடன் அவரது அறையில்தான் தங்கியிருந்தேன். அப்புறம் அவருக்கு ஹாஸ்டலில் இடம் கிடைத்த போது நானும் அவருடன் ஒட்டிக் கொண்டே ஹாஸ்டலுக்கு வந்தேன். அப்புறம் ஹாஸ்டல் சாப்பாடு. சத்தியவாசகனுக்கும் என்னைப்போல சாரதா படங்கள் என்றால் உயிர், துலாபாரம், தீர்த்த யாத்திரை, ஸ்த்ரீ, கிராஸ்பெல்ட், என்று மலையாளப் படங்களைப் பற்றி அடிக்கடி பகிர்ந்து கொள்வோம்.

கேண்டீனில் மதியச் சாப்பாடு 90 பைசா. சாப்பாடு ஒரே மாதிரி இருக்கும். சாப்பிடும் போது, கேண்டீன் பரபரப்பும், வெக்கையும், அலுமினிய டோக்கன்களை வாங்குகிற கொடுக்கிற நழுவவிடுகிற சத்தமும், பரிமாறுகிற சேட்டனின் இறுக்கமான முகமும், நாம் எப்போ இடத்தைக் காலி பண்ணுவோம், தான் அமரலாம் என்று பின்னால் காத்திருக்கிற அதே ஆட்களும் (அநேகமாக எனக்குப் பின்னால் எப்போதும் எங்கள் கல்லூரி ஆசிரியர், எம் .ஃபில் படிப்பவர் வந்து நின்று கொள்வார், அவருக்குப் பின்னால் குறைந்தது மூன்று பேராவது தயாராய் நிற்பார்கள், அவர் சாப்பிடுவது வேடிக்கையாய் இருக்கும். ஒரு கட்டி சோற்றையும், இலையில் விரித்துப் பரத்தி விடுவார். நடுவில் குழி. சேட்டன், சாம்பார் வாளியைக் கவிழ்க்காத குறையாய் ஊற்றுவார்.தினமும் வைக்கிற உருளைக் கிழங்கு பொடிமாஸ்,இரண்டு மூன்று கரண்டி முதலிலேயே “வையுங்க, வையுங்க” என்று கேட்டு வாங்கிக்கொள்ளுவார். அவ்வளவுதான் உருட்டி நாலு வாயில் விழுங்கி விட்டு, எழுந்து விடுவார். ரசத்தைக் கொண்டா, மோரைக் கொண்டா... என்றெல்லாம் கேட்கவே மாடார். சேட்டன் அவரைப் பார்த்தால் மட்டுமே கொஞ்சம் சிரித்த முகமாய் இருப்பார்.) எல்லாமே நாள் தவறாமல் ஒரே மாதிரி நடக்கும். எனக்கு காலம் நகராமல் அப்படியே தினமும், அந்த உச்சிப் பொழுதிலேயே உறைந்து நிற்பது போல இருக்கும். சத்தியவாசகன் என்னருகே அநேகமாக இருப்பார். அவர் தினமும் பத்துப்பைசாவை மிச்சம் வாங்குவதில் சற்றே கண்டிப்புடன் இருப்பார், அல்லது அதற்கான டோக்கனை வாங்கிக் கொள்ளுவார். நாங்கள் அதற்கு ஒரு வடை வாங்கிக் கொள்ளுவோம். இல்லையென்றால் வாங்கவே மாட்டோம். கேண்டீன் மணி கணக்கு வைத்துக் கொள்ளுவான்.

அவனொரு அற்புதமான மனுஷன். மதியம் மூன்றரை வாக்கில்போனால் புதுப்பாலில் காஃபி போட்டுத் தருவான், அந்தப் பத்துப்பைசாவில். அருமையான காஃபியாய் இருக்கும். நன்றாக இருக்கிறதென்று சொல்லிவிட்டால், இந்தாங்க இன்னொரு அரை கிளாஸ் என்று தருவான். வேண்டாம் என்றாலும் விட மாட்டான். ”சார் காபிக்கு கணக்கு கேட்க முடியாது சார், இது என்ன வடையா.. எண்ணி வைத்துக் கொள்ள. லாஸ்ட் ட்ரிப் ஸ்டாஃப் பஸ் போகிறவரை காஃபி இருக்கணும் அவ்வளவுதான்,” என்பான். ஒரு மத்தியானம் சாப்பிடவந்த போது கொஞ்ச நேரம் எங்களைக் காத்திருக்கச் சொன்னான். கேண்டீன் ஊழியர்கள் சாப்பிட சமையலறையில் ஒரு மேஜை உண்டு அதற்கு அழைத்துப் போய், அருமையான கோழிக் குழம்பை விட்டுச் சாப்பாடு போட்டான். ”இது ஏது மணி” என்றார் சத்தியவாசகன். “காலையிலே, தெருவில மேஞ்சுக்கிட்டு இருந்த, வீட்டுக்கோழி, ”நாடார் காலேஜ்’ பஸ்ஸுக்குள்ள பாஞ்சுட்டு, அவ்வளவுதான், டிரைவர் நம்ம ஆளு என்ன செய்ய, இந்தா, கொண்ணாப்பாவம் திண்ணாப் போச்சு....” என்றான் சிரித்துக்கொண்டே. என் முகத்தில் ஏதோ மாறுதலைப் பார்த்து...”உடனே கொறை உயிரைப் போக்கி, சுத்தம் பண்ணி சமைச்சாச்சு சார், ” என்றான். கோழி ருசியாயாகவே இருந்தது. அதைவிட காலம் சற்று நகர்ந்த மாதிரி இருந்தது, திருப்தியாய் இருந்தது. சத்திய வாசகன் அனுபவித்துச் சாப்பிட்டார், என் இலையில் இருந்த கொஞ்சம் மீதச் சோற்றை, உங்களுக்கு வேண்டாம்ல்லா....” என்று எடுத்துக் கொண்டு அதையும் கோழிக்குழம்பு விட்டுச் சாப்பிட்டார்

மாலையில்தான் மணி சொன்னான். ”பாவம், உங்க ஃப்ரெண்டு ’பத்துப் பைசாவிற்கு’ நல்ல பசி... காலையில் நாஸ்டா கிடையாதுல்லா, மதியம் இங்க வந்துதான சாப்பிடுகிறார்...”என்றான். பாவம் கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம்...இவர் படிச்சு முடிக்கத்தான் காத்திருக்கு...எப்படி சார்,. உடனே வேலை கிடைச்சுருமா... நீங்க.. ரிஜிஸ்ட்ரார்ட்ட சொன்னா நடக்கும்.. ”என்றான். நான், ”அடப்பாவி என் கதையே அந்தரத்தில் இருக்கு.. இதுல இது வேறயா..” என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம்தான் புரிந்தது, காலையில், பஸ்ஸ்டாப்பில் எவ்வளவு கட்டாயப்படுத்தி நீட்டினாலும்...சிகரெட்டைத் தொடமாட்டார். ஆனால் மத்தியானம் கேட்டால் ஒன்றை எடுத்துப் புகைப்பார். மணியிடம், ”என்னப்பா, இவ்வளவு தெரிஞ்சும், அவருக்கு பத்துப் பைசான்னு பேர் வச்சுருக்கீங்க, அவர் பேர் சத்தியன்” என்றேன். ”சார் உங்ககிட்ட மட்டும்தான் சொல்லறேன், கேண்டீனில் நிறைய பேருக்கு இதே பெயரை வச்சுருக்காங்க...... அவருக்கும்....சாரி சார்” என்றான்.

தேர்வெல்லாம் அநேகமாக முடிந்து விட்டது. சத்தியனிடம் நெருங்கி இருந்தேன். அவனுடைய கதைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. மாமா ஒருவரின் உதவியில் குடும்பம் நடக்கிறது. அவர் திருநெல்வேலியில் இருக்கிறார். அப்பா, திருப்பரங்குன்ற மலையில் சாமியாராக இருக்கிறார். எங்கேயோ போய்விட்டார் என்று தேடிச் சலித்தபின் யாரோ சொன்னார்களாம். அதையும் யாரும் போய்ப் பார்க்கவில்லை. அவரைத் தேடிப்போகக் கூடாது என்று மாமா தடுத்துவிட்டாராம். சிலர் அதெல்லாம் இல்லை அவர் வடக்கே எங்கோ போய் வேலை பார்க்கிறார் என்றார்கள்.நான் அவனிடம் அதைப் பற்றிக் கேட்கவுமில்லை அவனும் எளிதில் சொல்லுகிற ஆளில்லை.ஆனால் தன் கஷ்டங்களைக் கொஞ்சம் சிரிப்புடன் பகிர்ந்து கொள்ளுவான். சத்தியனைத் திடீரென்று கேண்டீனில் பார்த்தேன். “காஷன் டெபாசிட் பணமெல்லாம் தர்ரேன்னாங்க, அதுக்காக வந்தேன்.. இன்னக்கி டவுணுக்கு வாங்க, சினிப்ரியாவில்” ஏணிப்படிகள்” போட்டிருக்கான்,” என்றார். நானே நினைத்துக் கொண்டிருந்தேன். தகழியின் நாவல். சாரதா, மது நடித்தது.. போகலாமே என்று. ஆனால் சினிப்ரியா போய்த் திரும்புவதற்குள், இங்கே வருகிற செக்காணூரணி கடைசி பஸ்ஸைப் பிடிக்க முடியாதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியவாசகனுடன் அமர்ந்து சாரதா நடித்த மலையாளப்படம் பார்ப்பது நல்ல அனுபவம். அவருக்கு ஓரளவு மலையாளம் தெரியும். அதனால் அவரே கூப்பிடும்போது சரி என்று சொல்லிவிட்டு தியேட்டருக்கு வந்து விடுகிறேன் என்றேன்.

அவருடன் ”சுயம்வரம்”, “வீண்டும் பிரபாதம்” எல்லாம் எங்கெங்கோ பஸ்ஸே அதிகம் செல்லாத தியேட்டர்களுக்கு எல்லாம் போய்ப் பார்த்த நினைவுடன் போனேன்.சரியாக தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்தார். தியேட்டர் புதியது. அதிலும் மதுரையில் இரண்டு தியேட்டரை உள்ளடக்கிய முதல் காம்ப்ளெக்ஸ்.அதனால் கூட்டம் அதிகமிருந்தது.அவர் ஏற்கெனவே டிக்கெட் எடுத்திருந்தார்.படம் போய்க் கொண்டே இருந்தது... ...சாரதா...கேரக்டர் படத்தில் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.....சத்தியன் அவ்வளவு உற்சாகமாய் இல்லை... எனக்கு நேரம் பற்றிய பயம் வேறு.பஸ் கிடைக்குமா....என்று சந்தேகம். ஒரே ஒரு வார்த்தை, கடைசிவரை இருப்போம் என்று மட்டும் சொன்னார்.

நினைத்தது போலவே பஸ் போய் விட்டிருந்தது.பசி வேறு.. எங்கே போய் தங்குவது தெரியவில்லை. பழைய மேன்ஷனில் போய் தங்கலாம் என்றால்...அங்கே யார் இருப்பார்கள் என்று தெரியாது.நாகமலை புதுக்கோட்டை வரை பஸ் கிடைக்கும். அங்கிருந்து நடக்கமுடியாது. ரொம்பத் தொலைவு.துணையும் இல்லை. ஒரு முறை அப்படியும் போனோம். அப்பொழுது துணைக்கு ஆள் இருந்தது.சத்யன் சற்று தயக்கமாக எங்க வீட்டில தங்கிக்கங்க. தார்சாலில் படுத்துக் கொள்ளலாம்.....என்றார். முருகன் இட்லிக்கடையில் சாப்பிட்டுவிட்டு, அப்படியே அவர் வீட்டுக்குப் போனோம் தினமணி டாக்கீஸ் பக்கம் இருந்தது வீடு.. கால் அசந்து விட்டது.....பத்து வீடுகள் ஒன்றையொன்று ஒட்டி வரிசையாய் இருந்தன.அநேகமாக எல்லாவீட்டிலும் விளக்குகள் அணைந்திருந்தன. கிட்டத்தட்ட வரிசையின் நடுவில் இருந்த வீட்டின் முன் நின்று கதவைத் தட்டினான். ஏற்கெனவே தெருவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது.கையில் ஒரு சிமினி விளக்குடன் அவனது அம்மா கதவைத் திறந்தாள்.அவன் மட்டும் உள்ளே போனான்.நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வீடுகளின் முன்புற நடைபாதை அதிகம் போனால் நான்கு அடி இருக்கும்.அதிலும் அவனது வீட்டின் முன்னால் பாத் ரூம் போல ஒன்றிரண்டு இருந்தது.கண்கள் இருட்டுக்குப் பழகிய பின்னரே இதெல்லாம் பிடிபட்டது. அதற்குள் கொசு காலை கடிக்கத் தொடங்கியிருந்தது. ரீகலில் ஏதாவது இங்கிலீஷ் படம் பார்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டில் காத்திருந்திருந்திருக்கலாமோ என்று தோன்றியது.வீட்டு முன்னாலுள்ள தார்சாலில் ஒருவர் வேண்டுமானால்


more: http://koodu.thamizhstudio.com/thodargal_7_19.phpNo comments:

Post a Comment