Tuesday, April 19, 2011

ராஜாங்கத்தின் முடிவு - குறும்பட விமர்சனம்


ராஜாங்கத்தின் முடிவு - குறும்பட விமர்சனம்

ஸ்ரீகணேஷ்

திரைக்கதை : ஆறு.அண்ணல்
ஒளிப்பதிவு : விஜய் திருமூலம்
இசை : லக்ஷ்மி நாராயணன்
இயக்கம்: அருள் எழிலன்



குறும்படங்களின் ஆளுமை தற்போதைய சூழலில், சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களிடையே தற்போது குறும்படங்கள் மிகவும் பிரபலம். அது வெகுஜன மக்களைக் கவரத் துவங்கி விட்டதால் தானோ நிறைய கமர்ஷியல் கதைகளும் குறும்படங்களில் வரத் துவங்கிவிட்டன. 'டேய் அவன போட்றா', 'அவ ரொம்ப அழகு' போன்ற வசனங்களை தற்போது குறும்படங்களிலும் கேட்டு பிறவிப் பயனடைகிறோம். கூடிய விரைவில் குத்துப் பட்டும் வரலாம்.

குறும்படங்களைப் பற்றி அதிகம் தெரியாத, பெரிதாய் பேசப்படாத பத்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான குறும்படம் "ராஜாங்கத்தின் முடிவு". இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் திரு. அருள் எழிலன். இவர் ஒரு முழுநேர பத்திரிகையாளர். விகடனில் முதன்மை நிருபராய் நீண்ட நாட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் விகடனில் எழுதிய பல கட்டுரைகள் மிகவும் பிரபலம். நல்ல ஆழமும், மனிதமும் நிறைந்த எழுத்து இவரின் சிறப்பு.

இனி படத்தைப் பற்றி பாப்போம். இப்படம் முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள்ளேயே படமாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனும், ஒரு தொலைபேசியும், ஒரு பெண்ணின் குரலுமே இப்படத்தில் வரும் பாத்திரங்கள். ஒரு மனிதனின் தனிமையே இப்படத்தின் கரு. அதை காட்சி மூலமும், நிறைய வசனங்கள் மூலமும் பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் இயக்குனர்.

ரவிக்குமார் என்பவன் வேலைகள் ஏதுமற்ற, அன்பு காட்டவும் ஆளில்லாத ஒருவன். அவனுக்கென்று சொந்தமாக பொருட்களோ, தங்கும் இடமோ கூட இல்லை. சாலை ஓரங்களில் தங்கிக் கொண்டு, கிடைத்த இடத்தில சாப்பிட்டுக் கொண்டு வாழ்கையை ஓட்டுகிறவன். ஆயினும், வாழ்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுபவன். தன் மேல் துளி கூட கழிவிரக்கம் இல்லாதவன். எதையும் எளிதாக, மகிழ்ச்சியாகவே பார்க்கிறவன்.

துன்பங்கள் அவனை பாதிப்பதில்லை. எல்லாமே அவனைக் கடந்து செல்கின்றன.

அவனுடைய நண்பர் ஒருவர் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், தன் அலுவலகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ரவியிடம் ஒப்படைக்கிறார். அவன் சில நாட்கள் அங்கேயே தங்கிக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது ஒரு நாள் ஒரு பெண் ராங் நம்பராய் இவனுக்கு போன் பண்ணி விடுகிறாள். தவறுதலாய் பேசும் அந்த ஃபோன் காலிலிருந்து இவர்கள் நட்பு துவங்குகிறது. பின்பு இருவரும் அடிக்கடி பேசத் துவங்குகிறார்கள்.

ஆரம்பத்தில் இருவருமே அந்த ஃபோன் காலை பேச விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது. பின்பு மெல்ல மெல்ல அவர்களின் உரையாடல் சுவாரசியம் அடைவதையும், இருவருக்கும் இடையே ஒரு இழை ஓடிக் கொண்டே இருப்பதையும் நம்மால் மெலிதாய் சிரித்துக் கொண்டே உணர முடிகிறது. எதுவும் என்னை பாதிக்காது என அசால்டாய் திரியும் ரவி, மெல்ல மெல்ல அவனையறியாது அப்பெண்ணின் குரலுக்கு அடிமையாவதும், தனக்குள் இருக்கும் காதலை உணர்வதும் நல்ல தருணங்கள். அப்பெண்ணின் குரல் மட்டுமே நமக்குக் கேட்டாலும், நம்மை மிகவும் கவர்ந்து விடுகிறாள். இதற்கு மேல் இப்படத்தின் கதையை சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும். பார்த்து அனுபவியுங்கள்.

சரத் ஹசன் மாண்டோவின் சிறுகதையைத் தழுவி இக்குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இக்குறும்படம் நம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அருள் எழிலன் இக்கதையை படித்த உடனேயே இதைப் படமாக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். நிறைய நல்ல படைப்பாளிகள் இலக்கிய படைப்புக்களை திரைப்படுத்த முனைவது நல்ல விஷயம். இது இன்னும் தொடர வேண்டும்.

படத்தை இயக்கி தானே நடிக்கவும் செய்திருக்கிறார் அருள் எழிலன். முழுக்க முழுக்க mono acting வகையிலான நடிப்பில் நன்றாகவே செய்திருக்கிறார். படத்தில் வரும் பெண்ணின் குரல் திரு.ஜெயா மாதவனுடையது. நல்ல ஆழமான குரல். படத்தில் வரும் தொலைபேசி கூட ஒரு பாத்திரம் தான். இப்படத்தின் மிகப் பெரும் பலம் அதன் வசனங்கள். சின்ன சின்ன ஷார்ப்பான வசனங்கள். கேலியும் கிண்டலும் பல இடங்களில் மின்னுகின்றன. அவை மட்டும் இல்லா விட்டால் இப்படம் போர் அடித்திருக்கும்.

'சாப்பிட போலாம்னு நெனச்சேன்.. உங்க ஃபோனுக்காக தான் காத்திருந்தேன்..'
'அய்யோ சரி சாப்பிடப் போங்க..'
'முடியாதே. சும்மா தான் நெனச்சேன். கைல காசு இல்ல.'

'இந்த புத்தகத்தையே 3 , 4 வாட்டி படிச்சிருப்பேன். இன்னும் சுவாரசியம் போகல..'
'எப்படி? போர் அடிக்காதா..'
'இதில் தான் கடைசி பக்கம் கிழிஞ்சுடுச்சே .. அதனால் இன்னும் முடிவு தெரில'

இவை சின்ன சாம்பிள் தான். படத்தில் இன்னும் நிறைய உள்ளது. கதையை குறும்பட வடிவில் தர இயக்குனர் நன்கு உழைத்திருக்கிறார் எனத் தெரிகிறது. திரைக்கதை அமைத்த ஆறு.அண்ணல் அவர்களும் பாராட்டுக்குரியவர். ஒளிப்பதிவு விஜய் திருமூலம். இசை லக்ஷ்மி நாராயணன்.

படத்தில் சிறு குறைகளும் இருக்கவே செய்கின்றன. தொழில்நுட்ப விஷயங்களில் இப்படத்தை விமர்சித்தல் சரியல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த வசதிகளை வைத்துக் கொண்டு நன்றாகவே செய்திருகிறார்கள். படத்தின் கதையில் தான் சில நெருடல்கள். ரவிக்கும் அந்த பெண்ணுக்குமான உறவு சரியாக register செய்யப் படவில்லையோ எனத் தோன்றுகிறது. அதற்கு குறும்படத்தின் கால அளவும் காரணமாக இருக்கலாம். அந்த பெண் பாடும் பாடல் ஒன்று படத்தில் வருகிறது. அப்பாடல் தேவையா என விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், வைத்த பாடலின் இசையாவது நன்றாக இருந்திருக்கலாம். அப்பாடல் கொஞ்சம் அயர்ச்சியே தருகிறது. 20 நிமிடம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு கடைசி காட்சியில் பெரிதாக உடைந்து விடுகிறது. ரவி பழைய தமிழ் சினிமா பாணியில் 'என் ராஜாங்கம் இன்றுடன் முடிகிறது' என படத்தின் தலைப்பை சொல்வது தேவையற்றது. மேலும் அந்த சோகமான முடிவே திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல குறும்படம் இப்படிப்பட்ட குறைகளால் முழுமையான பாதிப்பை ஏற்படுத்தாமல் போகிறது.

இம்மாதிரி கதைகள் சினிமா படிப்பவர்களுக்கும், புத்தி ஜீவிகளுக்கும் மிகவும் பிடிக்கலாம். எளிய மக்களை இப்படம் சுவாரசியமான குறும்படம் என்ற அளவிலே கடந்து சென்று விடும். இன்னும் கொஞ்சம் கதையை செதுக்கி இருந்தால் இக்குறும்படம் தனிமையை சிறப்பாய் பேசிய குறும்படமாயிருக்கும். அருள் எழிலன் என்னும் நல்ல படைப்பாளி இதை நிச்சயம் ஒத்துக் கொள்வார்.

-ஸ்ரீகணேஷ்


http://thamizhstudio.com/shortfilm_review_19.php





No comments:

Post a Comment