Monday, January 17, 2011

நவீனத்துவம் என்றால் என்ன?யாயும் ஞாயும் யாரா கியரோ- 3

நவீனத்துவம் என்றால் என்ன?

தமிழவன்

தமிழில் கல்வி நிறுவனங்களுக்குள் இலக்கியக் கல்வி தரப்படவில்லை.

அதனால் இலக்கியம் பற்றிய ஆரம்பப் பாடம் கூட இல்லாத தமிழ்ப் படிப்பே நம் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.சினிமா பாட்டைக் கவிதை என்று நினைக்கும் மாணவர்களே அதிகம் உள்ளனர். இது தமிழின் சாபக் கேடு.இந்தச்சாபக் கேட்டால் உருவானவர்களே தமிழ்த் துறையினரும் நம் முதலமைச்சர் போன்றவர்களும். சினிமா பாட்டுக்கும் இலக்கியத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரிதாபம்.

கன்னடத்தில் மிக பிரபலமான சினிமா பாடலாசிரியர் ஒரு முறை பெங்களூர் பல்கலைக் கழகக் கன்னடத் துறைக்கு வந்தார். ஆனால் எந்த மாணவரும் அவரைப் பார்க்க ஓடிவந்து குவியவில்லை. கேட்டபோது சினிமா பாடலாசிரியர்களைப் பெரிய இலக்கிய ஆளுமைகளாகத் தாங்கள் கருதுவதில்லை என்றனர் மாணவர்கள்.ஆனால் நம் நிலை?பல தமிழ்ப் பேராசிரியர்களுக்கே சினிமா பாட்டுக்கும் சரியான கவிதைக்கும் உள்ள தாரதம்மியம் தெரியாது.

இந்த வித்தியாசமே தெரியாத ஒரு சூழலில் நவீனத்திற்கும் பின்-நவீனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் எப்படித் தெரியும்?

மூன்றாம் வகுப்பு படித்த ஒரு நடிகன் நடித்த எல்லாபடங்களையும் பற்றி இன்று பொது அறிவுப் போட்டி வைக்காத பள்ளிக்கூடமோ டி. வி. சானலோ உண்டா? அரசியலும் சினிமாவும் இணைந்து தமிழத்தைப் படாத பாடு படுத்துகின்றன.

என்போன்றவர்கள் தமிழகத்தை விட்டுவிட்டு எழுபதுகளில் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டதாலும் பிறமொழிகளில் என்ன நடக்கிறது என்று கவனித்ததாலும் தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் எழுத்துக்களால் கவரப்பட்டுச் சிறுபத்திரிகைகளுக்குப் போய்விட்டோம். என்னைப் பொறுத்தவரை நான் கர்னாடகத்துக்கு எழுபதுகளில் வந்தபோது இங்கே நவீனத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்தது.எங்குப் பார்த்தாலும் புதுக்கவிதைத் தொகுப்புக்கள் காட்சிதந்தன.நவீனத்துவம் என்ற பேச்சாகவே இருந்தது.அப்போது இங்கு பின்- நவீனத்துவம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

பின்-நவீனத்துவம் பற்றித் தமிழில் தான் முதலில் பேசினார்கள்.அமைப்பியல் தமிழில்தான் முதன் முதலில் பேசப்பட்டது கன்னடத்தில் பின்னால் வந்தது. ஃபூக்கோ பற்றித்தான் முதலில் கன்னடத்தில் பேச்சு வந்தது.தப்பும் தவறுமாக ஒரு ஃபாஷன் போல் பேசினார்கள்.

எல்லோரும் பின் -நவீனத்துவத்துடன் நவீனத்துவத்தையும் இன்று சேர்த்துப் பேசுகிறார்கள். இவ்விரண்டு சொற்கள் சமீபத்தில் மீண்டும் முக்கியமாகி்யுள்ளன. இந்தச் சொற்கள் இன்று இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஒருவகை எதிர் பதங்களாகப் பயன் படுத்தப் படுகின்றன.ஆனால் இப்படிப் பயன்படுத்துவது, அதாவது பின் நவீனத்துவத்துக்கு எதிரானது நவீனத்துவம் என்று நினைப்பது ஓரளவுதான் சரி. இன்னொருவகையில் தப்பு.

இன்று வலைப்பூவில் எழுதும் பலரும் இந்தப் சொற்களைத் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அதனால் இப்பதங்களை ஒவ்வொன்றாக முதலில் விளக்கவேண்டும்.

நவீனத்துவம் என்றால் என்ன?

நவீனத்துவம் வேறு; புதுமை வேறு. நவீனத்துவம் என்ற சொல் முதல் உலகப் போர் நடந்த காலத்தில் உருவான இலக்கிய, கலை, மற்றும் ஓவிய போக்கு ஒன்றின் பெயர்; புதியதெல்லாம் நவீனத்துவம் கொண்டதல்ல. புதியதை ஆங்கிலத்தில் Modern என்றும் நவீனத்துவத்தை ஆங்கிலத்தில் Modernism என்றும் அழைப்பார்கள்.

இலக்கியத்திலும் ஓவியத்திலும் இந்த இரண்டு சொற்களையும் தொடர்பில்லாததாய் கருதுகிறார்கள். சினிமாவிலும் அப்படித்தான்..பிரஞ்சு சினிமா இயக்குனர்களான Godard, Trouffault போன்றோர் நவீனத்துவ சினிமாவைக் கண்டுபிடித்தவர்களாகக் கருதப் பட்டவர்கள். புதிய சினிமாவைக் கண்டுபிடித்தவர்கள் அல்ல. எனவே "நவீனத்துவம்" என்பதன் அர்த்தம் வேறு; "புதிய " என்ற சொல்லின் அர்த்தம் வேறு.

அப்படியென்றால் நவீனத்துவம் எதைக்குறிக்கிறது?

ஆங்கிலத்தில் டி.எஸ். எலியட் கவிதைகள் நவீனத்துவக் கவிதைகள். தமிழில் நகுலன் ஒரு நவீனத்துவ எழுத்தாளர் ஆவார்.அவருடைய நாவல்கள்,சிறுகதைகள், கவிதைகள் நவீனத்துவ படைப்புக்கள் ஆகும். தனிமையும் நோய்மையும் பீடிக்கப் பட்ட பாத்திரங்களை இவர் எழுத்துகளில் காணலாம்.இதற்கு நினைவுப் பாதை என்ற இவர் நாவலை உதாரணமாகக் கூறலாம். தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாம் ஒரு நவீனத்துவக் கவிஞர். இவர்களை எல்லாம் கேள்விப்ட்டிருக்கிறீர்களா? இவர்கள் படைப்புக்களில் அகத்தேடலும் பயமும் சுயஇரக்கமும் எதிர்கால நம்பிக்கையின்மையும் சாவின் நினைப்பால் விரட்டப் படுபவர்களின் சித்தரிப்பையயும் காணலாம்.

தமிழில் நவீனத்துவ சினிமா இன்றுவரை எடுக்கப் பெறவில்லை. மலையாளத்திலும் இந்தியிலும் கன்னடத்திலும் நவீனத்துவ சினிமா வந்துள்ளது. மலையாள எழுத்தாளர் சேது எழுதிய நாவல் பாண்டவபுரம். அதே பெயரில் வந்த பாண்டவபுரம் என்ற சினிமாவைப் பார்த்தவர்களுக்கு நவீன்த்துவ சினிமா புரியும்.கோடாரின்( GODARD) பிரஞ்சு சினிமா BREATHLESS ஒரு கிளாசிக். சிலர் பார்த்திருபீர்கள். எதிலும் நிச்சயமில்லாமல் இருக்கும் கதைத்தலைவனின் குணத்தைக் காட்ட காமராவை இடதுபுறமும் வலது புறமும் அசைத்து அதை ஊசலாடும் படிவிட்டு படத்தை எடுத்திருப்பார் கோடார். கதாபாத்திரத்தின் ஊசலாட்டமும் கையற்ற நிலையும் மாடர்னிசத்தின் கூறுகள்.தவிர்க்க இயலாமல் சாவை விரும்பும் பாத்திரங்கள் நவீனத்துவப் படைப்புக்களில் வரும். உயர்ந்த படைப்புக்கள் ஒருவித தத்துவச் சாயலைக் கொண்டிருக்கும்.நவீனத்துவப் படைப்புக்கள் எக்சிஸ்டென்ஷியலிசத்தத்துவத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும்.( எக்சிஸ்டென்ஷியலிசம் பற்றியும் பின்னால் பார்க்கலாம்.)

ஓவியத்தில் பிக்காசோவைக் கூறலாம். சிதைந்த உருவங்கள் நவீனத்துவத்தின் கூறுகள்.பிக்காசோவின் கூர்னிக்கா என்ற ஓவியத்தைப் பற்றிக் கொஞசம் சொல்லலாம்.கூர்னிக்கா ஓவியம் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் கொடூரம் பற்றிக் கூறுகிறது.ஆனால் ஒரு பல்ப் ஓவியத்தின் நடுவில் தொங்குவது தவிர எந்த கோரமும் ஓவியத்தில் இல்லை.ஓவியம் முழுதும் ஒரு குதிரைத் தென்படுகிறது.இப்படி குறியீடுகள் வழி செய்தியை அறிவிப்பது நவீனத்துவ பாணியாகும்.

தமிழில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் நகுலனின் இந்தக் கவிதையைக் கூறலாம்.
நவீன விருக்சம் என்ற இதழில் வந்த கவிதை இது.இவ்வளவுதான் கவிதை:

நில்
போ
வா

வா
போ
நில்

போ
வா
நில்

நில் போ வா?

கவிதை இங்கே முடிகிறது.இதைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வீர்களா? மனிதனின் அதீத வெறுமையைக் கூறவும் எந்தப் பேச்சிலும் அர்த்தமில்லை என்று் கூறவும் மனிதன் நஷ்டமாகிப்போனான் என்பதைக் கூறவும் யாரும் யாருடனும் உரையாட முடியவில்லை என்பதைக் கூறவும் இக்கவிதை முயல்கிறது.நில் என்பதும் வா என்பதும் போ என்பதும் ஒன்றே என்று இக்கவிதை சொல்ல முயல்கிறது.மனிதன் தொடர்புறுத்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டான் என்பதை இக்கவிதை கூறுகிறது.இன்னொரு கவிதையைப் பாருங்கள்.ஞானக்கூத்தனுடையது இது.

விழிக்கிறான்
காலொன்று
காணலை

இதுபோல் இன்னொரு ஞானகூத்தன் கவிதையும் உள்ளது.அதுவும் Fragmentation என்னும் உத்தியைக் கொண்டதாகும்.

வள்ளிக் கிழங்கின்
பதமாக
வெந்துபோன
அவள் உடம்பை
பிட்டுத்தின்னத்
தொடங்கிற்று

எனக் கவிதை போகிறது. பிள்ளைகள் தாயின் உடலைத்தின்னுகின்றன.தமிழில் இரண்டாயிரமாண்டுகளில் இப்படிக் கவிதை எழுதப்பட்டதில்லை. இதுபோல் பெங்களூரில் வைத்துத் தற்கொலை செய்த ஆத்மானாம் கவிதைகளும் தீவிர வெறுமையைக் காட்டுகின்றன.

ஒன்றுமில்லை
சும்மாதான்
வேறு ஒன்றுமில்லை
ஆரம்பமே ஒன்றுமில்லை
பின் எப்படி இவ்வளவும்
இவை யாவும் ஒன்றுமில்லை........


இப்படித் தொடர்கிறது. அதாவது வாழ்க்கையைச் சிக்கும் சிடுக்குமாக காட்டுவது மாடர்னிசம் என்னும் நவீனத்துவம்.

இவை பற்றி முதன்முதலாக படிப்பவர்களுக்கு இது போல் சித்தர்களும் பாடியுள்ளார்களே என்று ஐயம் தோன்றும். சித்தர்கள் காயமே இது பொய்யடா என்று பாடியது வேறு; அது ஒரு நம்பிக்கை, தத்துவம், பார்வை. எப்போதும் உலகம் இப்படித்தான் என்ற எண்ணம் சித்தர்களிடம் இருந்தது. நவீனத்துவம் அப்படி சொல்லவில்லை. இது இரண்டாம் உலப் போரால் விளைந்த ஓர் மனநிலை.

அமைப்பியல் போல இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை.அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.இவ்வளவும் எளிமைப் படுத்தப் பட்ட அறிமுகம். இத்தகைய போக்குள்ள எழுதாளர்களை நீங்களும் வாசிக்கும் போது அடையாளம் காணலாம்.அது உங்களுக்கு ஓர் படைப்பை சரியாக வாசிக்க உதவும்.

தமிழில் இச்சிந்தனைமூலம் எழுதியவர்கள் ந. முத்துசாமி, ஞானக் கூத்தன், நகுலன்,பாரவி, ஓரளவு சுந்தர ராமசாமி ,மௌனி, அசோகமித்திரன் போன்றவர்கள். (பின்- நவீனத்துவம் அடுத்த கட்டுரையில்)

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com

தமிழவன் கட்டுரை மாதமிருமுறை (15 நாட்களுக்கு ஒருமுறை) பதிவேற்றப்படும்No comments:

Post a Comment