Saturday, January 15, 2011

கற்பனை+கனா=நிதர்சனம்

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்


ஊசியாய் குத்தும் மார்கழிப் பனி. பொழுது முளைத்து ஒரு பனைமர உயரம் வரும் வரைக்கும் குளிரும் பனியும். குட்டிபோட்ட பூனையாட்டம் கூடவே சுத்திக்கிட்டிருக்கும். வயதானவர்களுக்கு மட்டுமல்ல. இளந்தாரிப் பயல்களுக்கும் இந்த இளங்காலை மார்கழியில் பேசும்போது வாய் தந்தி அடிக்கும். குயில் என்று நினைத்து காக்கைகளைப் கன்னி வைத்து பிடிப்போம். எப்போதும் ஒயாமல் ஒடிக்கொண்டிருக்கும் கொய்யாமரத்து அணில்கள்கூட கொஞ்சம் அமைதியாகவே மரக்கிளையில் படுத்துக்கிடக்கும். கூரைமேல் ஏற்றிவிட்ட சுரையும், பந்தக்கொடியில் படர்ந்துக்கிடக்கிற அவரையும், தரைமீது கிடக்கிற பறங்கியும் ஏகத்துக்குப் பிஞ்சுவிடும். தைமாதம் பிறக்கப்போகிற தைரியத்தில், தைநெல் அறுத்துக் கொடுத்துவிடலாம் என எண்ணி கடன்வாங்கி புதுவண்டி மாடிகள் வாங்குவதும், இந்த மார்கழியில்தான் நடக்கும். வட்டிச்செட்டி கூட யோசிக்காமல் கடன் கொடுத்து மகிழ்வதும் இந்த மார்கழியில்தான். காலப்போக்கில் மார்கழியில் வாங்குவதை மனிதர்கள் நிறுத்தியதும் சிலர் மட்டும் வாழவேண்டும் என்ற சூழ்ச்சிதான் (அக்‌ஷ்யதிதி பிறந்த காரணமும் அதுதான்), பனியிறங்கும் இந்த மார்கழியை பழிக்கு ஆளாக்கி பீடைமாதம் எனக் கதிபுனைந்து விட்டுட்டாங்க.

இதோ இன்னும் ஒருவாரம்தானிருக்கு தைமாதம் பிறப்பதற்கு. காணுமிடமெல்லாம் நெல்லறிந்த வயல்கள். செழித்தோங்கி வளர்ந்துக்கிடக்கிற செங்கரும்பு, மஞ்சள்கிழங்கு, வாழைன்னு மக்கள் முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூத்துக்கிடக்கிற தைமாதம். தை என்பது தமிழனின் அடையாளம். கன்னிப் பெண்களுக்கு தையில் பரிசம் போடுவது ஒரு வழக்கமாக இருந்தது. களஞ்சியங்கள் நிறைவதும் இந்த தை மாதத்தில். கிராமங்களின் உயிர்த்தொழிலே உழவுதான். அதனால்தான் வள்ளுவன் சொன்னான் “சுழன்றும் ஏர்பின்னுது உலகு” என. உழவு இல்லையேல் உலகு இல்லை. அந்த உழவுக்கு உறுதுணையாய் இருந்தது மாடுகள்தான். மனிதனின் உறவு.

இதோ இன்று தை மாதம் பிறந்துவிட்டது. ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் முதன்மையான, செழிப்பான மாதம் . அதனால்தான் பழந்தமிழர்கள் தை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். மீண்டும் அந்தப் பழமையின் பெருமையில் நாம் தை முதல் நாளை தைத்திருநாளாகவும், தரைப்பொங்கல் நாள் எனவும், சூரியனை வழிபடும் திருநாளாகவும் கொண்டாடுகிறோம். காலம்காலமாக கற்சிலைகளை வழிபட்டவர்களின்றும் மாறுபட்டு முதன்முதலான இயற்கையை வணங்கி மகிழும் தமிழன் பகலை விழுங்கியபோது சூரியன் அஸ்தமமிட செவ்வானம் அதைமுத்தமிட, நெல்லடிக்கும் களத்தில் தலைத்தரையைவெட்டி செம்மண்ணெடுத்து குழைத்து மூன்று மண்உருண்டைகளை முப்புள்ளிகளாய் (ஆயுத எழுத்தைப்போல) அடுப்பு கூட்டி வைத்தபோது.

குறைந்த ஒளியுள்ள இரவும் வந்து,விழித்தே உறங்கி. உருண்டு புரண்டு படுக்கையறையில் பழந்துணிகள் கசங்கி விடியலை எதிர்நோக்கும் வேளையில். குயில் கூவ, சேவல் கொக்கரிக்க, சிட்டுக்குருவி ஸ்லோகம் சொல்ல, இரவை விழுங்கி பகல் பொங்க மூடுபனிக்குள் மரங்கள் கார்கினியின் ஒவியங்களாய் காட்சிதர, ஆயுத எழுத்தாகிய அடுப்பின் ஈரப்பதம் இரவின் கதகதப்பில் காய்ந்து இருக்க, அதன் அருகே வைத்திருந்த புத்தரிசி, வெல்லம், ஏலம், பால் கலந்து புதுமண்பானையை அடுப்பின்மேல் வைத்து சர்க்கரைப் பொங்கலிட்டு, சூரியன் உதயமாகும்போது இறக்கி. சூரியனை வழிபடும்போது பட்டும், பருத்தி ஆடைகள் அணிந்து, பொன் நகைகள் மின்ன புன்னகைத்துத் திரிவோம், நாம் . அடுத்தநாள் வரும் மாட்டுப்பொங்கலை மனிதனுக்கென உலகில் தோன்றிய இந்த மாடுகள் பெற்ற தாய்க்கு ஒப்பானவை. மனிதனுக்கு பாலூட்டியும், உணவுவிளைய உழைப்பையும் தருபவை மாடுகள்.

மாடுகளுக்கென தனியே தொழுவங்களை அமைக்காமல், வீடுகளுக்குள்ளேயே மாட்டுப்பட்டிகளை அமைத்து அதனுடன் படுத்துறங்கியவர்கள் நாம். ஆண்டு முழுவதும் தனக்கென உழைத்த மாடுகளை வணங்கிட மாட்டுப்பொங்கலன்று ஆளாளுக்கு மாடுகளை ஓட்டிச்சென்று அதனை கழுவி குங்குமம் இட்டு கொம்புகளுக்கு வண்ணம்தீட்டீ கழுத்தில் மணியும் ,சங்கும் கட்டி பாசிமாலைகளை அணிவித்து. கொம்பின் நுனியில் கொப்பியும் வெண்டையும் (சிலம்பம்போல் உள்ளே மணிகள் கல கல என ஆடும்) அணிவித்து. அன்று மட்டுமே நமது அடக்குமுறையை அதனிடம் காட்டாமல்.அதனிடம் நிறைய பசும்புல்லைப்போட்டு அது ரசிச்சு உண்ணும் அழகை பார்த்து. மாலைநேரமும் மயங்கும். பச்சரிசிவெந்து புதுபானைவாய் வழியே வெளியே குதிக்க இறக்கி வைத்த பானையின் கழுத்தில் மா, கரும்பு, ஆவாரம்பு, புதுமஞ்சல் ,கன்னிப்பூ ,பச்சை ஈச்சைசெடி கயிற்றால் மாலையாக தயாரித்து புது பானை கழுத்தில் கட்டியபின் தங்களின் நிலங்களில் விலைந்த காய்கறிகள், கீரைகள் முதலியவைகளை சமைத்து படையலிட்டு உழவுக்கு பயன்படுத்திய ஏர் கலப்பை, பறி, நுகத்தடி, மண்வெட்டிகள், கருக்கருவாக்கள், உரல் உலக்கை, பரம்பு, அம்மிகுழவி, ஆட்டுக்கல்லு, முதயலியவற்றை வணங்குவதற்கு உரியப் பொருள்களாகவும், தட்டுகளில் பழம், பூ, தேங்காய், புத்தாடைகளையும், வைத்து இல்லத்தின் மூப்பர் தலைவாழை இலையில் படையலிட்டு கற்பூரம் ஏற்றி மாடுகளை கடவுளாக வழிபட்டு. பின்பு முதல் படையல் சோற்றை சர்க்கரை பொங்கலுடன் வெண்பொங்கலையும் சேர்த்து. மாடுகளின் வாயை வெண்கல செம்பில் இருந்த தண்ணீரை எடுத்து .கழுவி ஊட்டிவிட்டு முன்பே அணிவித்த மணிமாலையுடன், (செங்கரும்பு கன்னிப்பூ மாஇலை. கரட்டான்செடியின் நடுவடம். ஈச்சங்கயுறு) இயற்கையாய் தயாரித்த மாலையை அதன்கழுத்திலிட்டு, அதன்பின் மாடுகளை சுற்றி வரும் வேளையில், மூப்பர்முதல், முளைப்பால்குடிக்கும் குழந்தைவரைபொங்கலோ.... பொங்கல்... என்று மகிழ்ச்சியுடன் குரல்யெழுப்புகையில் மாடுகளும் மகிழ்ச்சியுன் தலையாட்டிக் கொண்டுருக்கும் வேலையில்.

அதன் கழுத்தில் கட்டியிருக்கும் மணிகள் ஒலிக்க,சலைங்கைகள் சப்தமிட, அது உண்ணுகிற அந்த காட்சியை காண கண்கோடி வேண்டும், அழகிய கிராமத்தில் எனது சிறுவயதில் நான் பார்த்து மகிழ்ந்த சூரிய பொங்கலையும், மாட்டுப்பொங்கலையும்,கன்னிப்பொங்கலையும், என் நினைவுக்குள் நான் லயித்தபோது சுளீர் என்று வலி, இருபதுவருட நினைவை கொசு கடித்து குலைத்தது, நான்காவது மாடியின் சன்னலோரம் அமர்ந்து சாலையின் எதிர்திசையை பார்த்த எனக்கு, அடுக்குமாடி குடியுருப்பில் வாசல்கள் இன்றி, கோலமின்றி, நான் பார்த்து மகிழ்ந்த ஆடு, மாடுகளை காணோம், மண்குழைத்து கட்டும் அடுப்புகளை காணோம், அம்மா உரலில் குத்தியெடுத்த குத்தரிசியை காணோம், ஆடு, மாடு, கழனி, காடு, அற்றுபோய், கருங்குயிலின் கூவலுக்கு பதிலாக கார்கள் ஓலமும், பனிமூட்டத்துக்கு பதிலாக, வாகனங்கள் உமிழ்த்த புகைமூட்டம், நாளாவதுமாடியில் உள்ள எனது கண்களை எரிச்சல் ஏற்படுத்தியது, இந்த பட்டணத்தில் சிட்டுக்குருவிகள் இன்றி, மணிக்காக்கைள் ஒழிந்து, அதிகாலையில் ஒவ்வாமை இருமளுடன், அடுக்குமாடிகுடியிருப்புகள் புறாக்கூடுகளாய். ஓரளவு உயிர் வாழ எல்லாம் இருந்தும், பட்டணம் பாடாய்படுத்துகிறதே என்று? (இதைத்தேடித்தானே பட்டணம் வந்தேன்) நான் சன்னலின் கதவடைத்தேன், அந்த சமயத்தில் காதுகேளாத செவிடனாய் இருந்தேன் ,காட்சிகள் அனைத்தும் அழகாகதான் காட்சிகொண்டன,என் மனைவியின் குரல் ஏங்க ரொம்ப நேரமா காக்காய் எதுவும் காணோம். வாங்க சாமி கும்பிடலாம் என்றாள்,வீட்டின் முற்றத்தில் வெண்களபானையில் ஸ்டவ்வின் அனலில் சர்க்கரை பொங்கல் வெந்து இருந்தது, நான் சூரிய ஒளியை பார்த்து நமஸ்கரித்தேன், கைப்பேசி மணிஒலி என் நமஸ்காரத்தை கலைத்தன. (தெலுங்கில்) ரெண்டுகண்டலுக்கு மீக்கு பிளைட்டு. ஏர்போர்ட்டுக்கு. மீறு எல்றதுக்கு மீ பிளாட்டுகிந்த பண்டி உன்னாயண்டி என்றனர்.

அவசர அவசரமாக சர்க்கரை பொங்கலை உண்டேன். நான் பார்த்த என் மனைவி கேட்டாள், பொங்கல் எப்படிங்க என் வாய் நிறைய பொங்கல் வேற ம்....ம்..ம் என்றேன், ம்...னா.. நீ டெய்லி சினிமா கம்பனி சாப்பாடு சாப்பிட்டு ஒநாக்கு செத்துப்போச்சு என்றாள். நான் எனக்குள்ள நாக்கு இழந்தது சுவை மட்டுமா....மா.....மா....சொல், வாக்குறுதி, உண்மை, உணர்வு அவையெல்லாம் சேர்த்தும் அல்லவா. சினிமாக்காரங்களால செத்துபோச்சு என்றது என் நினைவுகள். மீண்டும் என் மனைவி என்னங்க உங்க வாய்க்குள்ளே பேசிக்கிறீங்க...நான் அதுஒன்னுமில்ல என்பொண்டாட்டி சமைத்த எனக்கு பிடித்த உணவை. நான் பிடிபடாம சாப்பிடுறேன் .. பிடிக்காத வேலையை உங்களுக்காக பிடித்துக்கொண்டு செய்யுறேன், என்று கூறிக்கொண்டே நாடோடி பெட்டி,படுக்கையை கைகளில் சுமந்து செல்ல,என் குழந்தைகள் இருகன்னங்களில் முத்தமிட, என் மனைவி நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்புகையில் எனது சுகமான நிகழ்வுகள் இவைகள் மட்டுமே. கன்னத்தில் இட்ட முத்தத்தின் ஈரம் காய நான் காசிதியேட்டரை தாண்டி ட்ராபிக் ஜாம் மெதுவாக ஊர்ந்தவேளையில் வெளியே எட்டிப்பார்த்தால் கூவம். என் கிராமத்தின் நினைவு. பத்துவருடம் கழித்து கிராமத்துக்கு போனால் கிராமம் கரைந்து போயிருந்தன.

நான் சிறுவயதில் பார்த்து மகிழ்ந்த தோப்பும், தொரவு தொலைந்துகெடந்தன. ஆறு,குளங்கள் வற்றிக்கொண்டு கந்தல் துணிபோல் ஆங்....ஆங்கே குண்டும், குழிகளில் தண்ணீர் ஒட்டிக்கிடந்தன. பனை, தென்னை, நெல், கரும்பு, தினை மரங்கள் காட்சிகயெல்லாம் அழிந்து கட்டங்கள் சாட்சியாய் நிமிர்ந்து தெரிந்தன, கட்டுத்தெரியில் மாடுகள் வாழ்ந்த அடையாளம் அழிந்து அறிவிப்பின்றி இருந்தன. வழிதெரியாம பட்டணபோயி. வழி அறிந்து கிராமத்துக்கு வந்தா? அடச்...சீ என்று போனவேகத்திலே ஊருக்கு வெளியே வந்தேன். என் பின்னால் உருமி என்னைமுந்திகொண்டு சென்ற லாரியின்மீது மாடுகள். அடுக்கங்களாய் கட்டப்பட்டு மாடுகளுக்கு தனிதனியே நம்பர் இடப்பட்டு இருந்தது. மாடுகளின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்கள் வழிந்தோடின சென்றுகொண்டுயிருந்த லாரியின் புகையின் எரிச்சலால் எனது கண்களை மூடினேன். மூடிய கண்களை திறந்து பார்த்த போது .

லாரி கெளப்பிச்சென்ற புழுதியில் அந்த மாடுகள் அனைத்தும் என்னை விட்டு மறைந்து போயிருந்தன. ஊரை திரும்பிப்பார்த்தேன் ஒருவன் கைநிறைய கத்தை கத்தையான பணநோட்டுகளை எண்ணிக்கொண்டு என்னை கடக்கையில் ஏன்,,,ன்,,, னா. அந்த மாடுகள் எல்லாம் எங்கபோகுது என்றேன்.அவன் என்னை திரும்பி பார்க்கமலே வேறெங்க கேரளாவுக்கு அறுப்புக்குதான் என்றான். நான் வெட்கிப்போனேன். மனிதனுக்கு உழைத்துகொடுத்து தானும் உண்டு, தாய்க்கு நிகராக பாலும் தந்த மாடுகளை தனக்கே இறைச்சிக்காக கொல்லும் மனிதர்களே உங்களை ஏன் படைத்தான்? ஜீவகாருண்ய இயக்கம் என்பது வெறும்அரசியல் பண்ணமட்டும்தானா.?என்று யாரிடம் முறையிட..? என்று எண்ணிய என்னை என் மனசாட்சி பிடரியை தட்டியது. ரொம்ப யோசிக்காதே ஆட்டதின்னு, மாட்டதின்னு. மனிதனை மனிதன் சாப்பிட போறாங்கடா... போ... என்றது. சார் ஏர்போர்ட் வந்தாச்சு இறங்குங்க என்றான் காரோட்டி.

விமான இருக்கையில் இருந்த செய்திதாளை நான் வாசிக்கையில் நம்மில்பிறந்து லண்டன்வாழ் தமிழன் சமீபத்தில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு விழா உரையில் “நான் இந்த விழாவில் நாற்பத்திஐந்து நிமிடங்கள் செலவழித்தேன். அதில் முற்பது நிமிடங்கள் சால்வைகளும், மாலைகளும் வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பேச முடிந்தது என்பது அவரின் வருத்தம் (அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு அர்த்தமுள்ளது என்று உணர்த்தியது). நேரங்கள் எவ்வாறு வீணாகிபோகிறது என்பதை உணர்த்தப்பட்டு எனது கையில் இருந்த பையை துழாவியபோது திலீபனின் அந்த கடைசி 12 நாட்களை பற்றி படிக்க தொடங்குகிறேன். புத்தகம் படித்து முடித்தபோது ஹைதராபாத்தும் வந்துவிட்டது. நான் உண்ட சர்க்கரை பொங்கல் எனக்குள் செறிக்க மறுத்து உடல் முழுவதும் கம்பளி புழுவாய் ஊர்ந்தது. உண்ணா விரதமிருந்து உயிர்விட்ட அந்த மாவீரனின் நினைவு என்னை வாட்டியது. காந்தியின் அகிம்சை வெள்ளையனை இறங்க வைத்தது. அதே காந்திய வழியில் போராடிய நம் தொப்பில்கொடி உறவு திலீபனை அன்று நாம் அனைவரும் போராடி காப்பாற்றி இருந்தால். ஈழமும் வீழ்ந்திருக்காது. உயிர்விட்டுக் கொண்டிருக்கின்ற உறவினர்கள் இடம்,உணவு, உடை,உடமை, அங்கிகாரம் இழந்து தவிக்கும் தமிழர்கள் அனாதையாய் இருந்திருக்கமாட்டார்கள். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பின் புலத்தால் இன்று நம் மீனவர்கள் படும் அவதி. நாளை நம் தமிழ்நாட்டுக்கும் வந்துவிடுமோ?

அறம் தரம் இனி
வெறும் பணத்துக்குமட்டும்தானா...?No comments:

Post a Comment