Monday, March 14, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (19)
வெங்கட் சுவாமிநாதன்

மிஷ்கின் வித்தியாசமான ஒன்றை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வித்தியாசமான ஒன்று அவருள்ளிருந்து தான் வருகிறதா என்று பார்க்கவேண்டும். இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வித்தியாசமாக, தனக்கென ஒரு தனிப்பாதையில் செல்ல எங்கே அவர் சொல்லும் இன்ஸ்பைரேஷன் கிடைக்கும் என்று வெளி நாட்டுத் திரைப்படங்களையெல்லாம் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். அவர் தனக்குள் அந்தத் தேடலைத் தொடங்கவேண்டும். அங்கிருந்து தான் சிறந்த கலை எதுவுமே தோற்றம் கொள்கிறது. நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் நகல் என்றார்கள். வெளி நாட்டுப் படங்கள் பார்க்கும் வசதி இப்போது நிறைய வந்துவிட்டன. பர்மா பஜார் போகவேண்டாம்.

தெருக்கோடியில் உள்ள முனைக்கடையில் வேண்டிய டிவிடி கிடைத்துவிடுகிறது. இல்லையெனில் எத்தனை ஃபில்ம் சானல்கள் நமக்குக் கிடைத்துவிடுகின்றன. எல்லோருமே தமிழ் நாட்டில் சினிமா பைத்தியங்கள் தான். சினிமாவின் தயவு இல்லாது இங்கு அரசியல் தலைவர்கள் கூட வாழ முடியாது. பைத்தியக்கார படங்களில் பைத்தியக்கார பாட்டுப் பாடி, பைத்தியக்கார வசனம் பேசி, பைத்தியகக்கார டான்ஸ் ஒன்றை டோரண்டோவோ மச்சுப் பிச்சுவோ போய் ஆடி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தயார் செய்துகொண்டு தலைவராகும் கனவுகள் காணத் தொடங்கிவிடுகிறார்கள். ரெடிமேட் ரசிகர் பட்டாளம் சாதியைச் சார்ந்தும் கிடைத்துவிடுகிறது. இந்த மாதிரி ஒரு நாட்டில், சினிமாவே இன்றைய கலாசாரத்தின் குணங்களை நிர்ணயித்துவிடும் போது, 90 சதவிகிதம் தசாவதாரத்தையும், ரோபோவையும் முதல்நாள் முதல் ஆட்டத்தைப் பார்க்கவேண்டும் என்று அலையும் கூட்டமாகவே அந்த ஒரு ஆட்டவெறிக்கு முன்னூறோ ஐந்நூறோ செலவழிக்கத் தயங்குவதில்லை தான். ஆனால் இந்த ஏழு கோடி மக்களின் மந்தைக் கலாசாரத்திலும் தமிழ் நாட்டில் ஒரு சில ஆயிரமாவது World Movies–ம் Lumiere movies – ம் ஆர்வத்தோடு பார்க்கிறவர்கள் இருப்பார்கள் தானே. அவர்களிடமிருந்து இது ஜப்பானியப் படத்தின் காபி என்றோ சரி, உங்கள் இஷ்டப்படியே ‘’இன்ஸ்பைரேஷன்’ என்றோ வைத்துக்கொள்ளலாமே, தெரியாமலா போய்விடும். அந்தக் காலத்தில் என்றால், தமிழில் கதைகள் படிக்கத் தொடங்கிய காலம் கல்கி லியனார்ட் மெர்ரிக்கிலிருந்து பிரதி எடுத்தாரா இல்லை வேறு எங்கிருந்து என்பது ஒரு க.நா .சுப்பிரமணியத்துக்குத் தான் தெரிந்திருந்தது. அது ஒரு காலம். ஜாக் லண்டனிடமிருந்தும் தைரியமாக காபி அடிக்கலாம் என்று பின்னாலும் சிலர் நினைத்தார்கள். அதுவும் தெரிந்திருக்க ஒரு சிலர் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்களா? ஆங்கிலம் தானே. மூலம் என்ன அராபிய மொழியிலா இல்லை ஸ்பானிய மொழியிலா? ஆனால் சினிமாவில் காபி அடிப்பது என்பது மரியாதைக்குரியதாக்கிய இயக்குனர் திலகங்கள், இயக்குனர் சிகரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இன்றும் ஏதோ பெரிய சகாப்த புருஷர்களாக போற்றித் துதிக்கப்படுகிறார்கள். இதுவும் நான் முன் சொன்ன மந்தைக் கலாசாரத்தின் விகார முகங்கள் தான். ஆக, நிலைமை நாவல் சிறுகதை மாதிரி இல்லை. நகல் எடுத்தாலும் தமிழுக்கான மசாலா சேர்த்தால் எதாவது சிகரம், திலகம் என்று தமிழில் பட்டம் வேறு கிடைத்துவிடும் பாக்கியம் இருக்கிறதே.

சரி உண்மையில் ’இன்ஸ்பைரேஷன்’ என்றால் அது பார்த்ததையே திரும்பச் செய்ததாக இராது அது தன்னுள் ஒரு பயணத்தை மேற்கொள்ளத் தூண்டும். சுற்றித் தமிழ் நாட்டு வாழ்க்கையை, தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் அனுபவங்களை அசை போடச் சொல்லும். நான் ஜப்பானிய மூலப் படத்தைப் பார்த்ததில்லை. நந்தலாலாவில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி ஆரம்பத்திலேயே சில நிமிடங்களில் வந்து விடுகிறது. பையனும் பாட்டியும் வீட்டில் தனியே இருக்கிறார்கள். அம்மா இல்லை. “அம்மா எப்போ வருவார்?” என்று கேட்கிறான். பாட்டி தெரியாது என்கிறாள். சற்றுக் கழித்து பாட்டியை கை பிடித்து கழிவறைக்கு அழைத்துச் செல்கிறான். காத்திருந்து பின் அங்கிருந்து திரும்ப பாட்டியை அழைத்து வருகிறான். தனித்து விடப்பட்ட பையனுக்கு பொறுப்பு தெரிகிறது. நல்ல காட்சி. தமிழ்ப் படங்களில் வரும் சிறுவர்களைப் போல பெரியவர்களுக்கான நீண்ட புத்திசாலித்தனமான வஜனம் ஏதும் பேசுவதில்லை.. ஆனால் ஏன் அந்தப் பையன் தலையைக் குனிந்து கொண்டே அவ்வலவு நேரம் நிற்கிறான் என்ற குடைச்சலுக்கு பதில் அடுத்த படத்தில் யுத்தம் செய் படத்தில் கிடைத்து விடுகிறது. அதில் ரொம்பவும் புத்திசாலியும் சுறுசுறுப்பும் திறமைசாலியும் மேலதிகாரிகள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு புலன்விசாரணை செய்யும் அதிகாரியாக வரும் சேரன் ஏன் எப்போதும் என்னமோ தப்புப் பண்ணி தலை நிமிர வெட்கமும் பயமும் கொண்டவர் மாதிரி தலை குனிந்தவாரே இருக்கிறார்.? அவர் என்ன போலீஸ் அதிகாரியா, இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்ட பிக் பாக்கெட் கேஸா? படம் முழுதும் மிஷ்கினின் ப்ரோடகனிஸ்ட்கள் எல்லாம், தலை குனிந்தே இருக்க வேண்டிய அவசியம் என்ன? நந்தலாலாவில் அந்த சின்ன பையன் இங்கு யுத்தம் செய் படத்தில் சேரன். இதுதான் மிஷ்கினுடைய இயக்கத்தைக் காட்டும் முத்திரையோ. இது தான் மற்ற தமிழ் சினிமாக்காரர்களிடமிருந்து அவரைத் தனித்துக்காட்டும் பிரயத்தனமோ என்னவோ. ரஜினி ரம்பம் அறுக்கும் சத்தத்தோடு விரலை அசைக்கும் சமாசாரம் போல.. சேரன் ஸ்வபாவத்தில் இந்த ஸ்டைலில் நிற்பவர் இல்லையே.

மறுபடியும் எனக்கு மிஷ்கினுக்கு இன்ஸ்பைரேஷன் தந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தது கிடையாது. நந்தலாலா நகல் தான் என்பதை அந்தப்படத்தின் பெரும்பகுதி எனக்குச் சொன்னது

வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறும் சிறுவன் என்கிற சம்பவம் எந்த நாட்டிலும் நடக்கக் கூடியது தான். உண்மையில் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும் தான். சிலர் ஒப்புக்கொள்ளலாம் சிலர் வெட்கப்படலாம். நானே என் சிறு வயதில் ஒரு நாள் இரவு வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன். அதைப் பற்றி எழுதியுமிருக்கிறேன். நந்தலாலா பையன் தாயைத் தேடிப் போகிறான். இது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு மகத்தான விஷயம்! வீட்டில் பெரியவர்களின் பாதுகாப்பை விட்டு மீறி ஒரு புத்தி பிறழ்ந்த முன்பின் அறியாத பெரியவருடன் வெளியேறுகிறான். அவன் மனதுக்குள் இது ஒரு பெரிய சாகஸப் பயணம். ஆச்சரியங்களும், பயங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஒரு சாகஸப் பயணம். அவன் மனதுக்குள் என்னெவெல்லாம் நடந்து கொண்டிருக்கும்!! ஒரு பெரிய உலகமே ஆச்சரியத்துடன் விரிந்துகொண்டிருக்கும். அது எதுவும் இந்தப் படத்தில் இல்லை. புத்தி பிறழ்ந்த ஒரு பெரியவருடன் கூடப் போகிறான். அவ்வளவு தான். அவன் மனதுக்குள் விரியும் உலகம் எதுவம் நமக்குத் தெரியவில்லை. காரணம் மிஷ்கினுக்கே அது பற்றிய சிந்தனை ஏதும் இல்லை. போகும் வழியில் அந்த இருவருக்கும் நடக்கும் அடுக்கடுக்கான சம்பவங்கள் தான் படத்தில் விரிகின்றன. அதில் ஒரு கற்பழிப்பும் உண்டு. மசாலா ஐட்டமான சண்டையும் உண்டு.

இதெல்லாம் இல்லாது, அந்தச் சிறுவனின் மன உலகம் விரிந்திருக்குமானால் அது தமிழ்க் கதையாகியிருக்கும். ஏன், ஜப்பானில் தான் சின்ன பையன் வீட்டை விட்டு ஓடுவானா என்று மிஷ்கின் வெகு தைரியமாக தன்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம். படம் முழுதும் மூளை வளர்ச்சியடையாத அந்த பெரிய மனிதனையே மையமாகக் கொண்டுள்ளது. தொடங்குவதும் முடிவதும் அந்த சிறு பையனை வைத்து என்றாலும் மிஷ்கின் பார்வையாளர் முன் நிறுத்துவது பையனை அல்ல. இதற்கும் முன்னும் பின்னும் அவர் சில படங்களைத் தந்திருக்கிறார். முன்னது பற்றி அவரும் வேறு யாரும் அதிகம் பேசுவதில்லை. நந்தலாலா தான் அவருக்குப் பேர் சொல்லும் படைப்பு என்று முன் வைக்கப்படுகிறது. அடுத்த படம் யுத்தம் செய் என்ன சொல்ல வருகிறது என்றே தெரியவில்லை. ஒரே இருட்டும் ரத்தமும் வன்முறையும் கொலைகளும் பழிவாங்கலுமாகவே கதை உருவாக்கப் பட்டிருக்கிறது. இல்லை, தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா? இதில் அவருக்கே முத்திரையாகிப்போன டாப் ஆங்கிள் ஷாட் (சொல்லத் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். யுத்தம் செய் படத்திலும் பார்க்கிறேன்.

ஆனால் இது எதற்கு என்று தெரியவில்லை. என்ன சொல்ல வருகின்றன இந்த ஷாட் தேர்வுகள் என்பது தெரியவில்லை. அந்தக் காலத்தில் வின்சென்ட் என்று ஒரு காமிராமேன் இருந்தார். ஸ்ரீதர் என்னும் ஒரு இயக்குனரோடு. இருவருமே தம்மைப் புதிய சகாப்த புருஷர்களாக நினைத்துக்கொண்டார்கள். ஸ்ரீதர் புது வகை கதை, புது வகை வசனத்துக்கு பாராட்டப்பட்டார். ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினாள்” ரக வசன ஆட்சி நடந்த காலத்தில் ஸ்ரீதர் வசனம் வேறுபட்டதாக இருந்தது. தினமும் பறங்கிக்காயையே குழம்பில் போட்டு ஹிம்சை படுத்திக் கொண்டிருந்த ஹோட்டல் ஒரு நாள் கத்தரிக்காயை குழம்பில் போட்டால் ஒரு பரவச புத்துணர்ச்சி பரவும் இல்லையா?. அது போகட்டும். இந்த ஸ்ரீதருக்கு பிரியமான வின்சென்ட், ‘பார்வையாளர் மத்தியில் பெரும் பரவச அலையைப் பெருக்கியவர். “மன்னன் தான்யா இந்த ஆளு, வின்செண்டு. என்னமா காமிராவை வச்சிக்கிட்டு பூந்து வெள்ளாட்றான் பாருய்யா” என்று ஆரவார கரகோஷம் வாங்கியவர். அவர் செய்த புதுமை சாவித்துவாரம் வழியாக காட்சி அமைப்பது. மேஜைக்குக் கீழே காமிராவை வைத்து படமெடுப்பது என்று. அது எதற்கு இந்த மாதிரி சர்க்கஸ் வித்தையெல்லாம் என்பதை வின்சென்ட்டும் சொல்லவில்லை. பார்வையாளரும் வாயைப் பிளந்தே வைத்திருந்ததால் கேட்கவும் வாய்ப்பில்லாமல் போயிற்று. உலகிற்கே காமெரா தரும் ஜப்பானில் யோஷிஜிரோ ஓஷூ என்றொரு சினிமா இயக்குனர் இருக்கிறார். அகிரா குரஸவாவுக்கு இணையாகப் பேசப்படுபவர். அவர் திடுக்கிடும் புதுமைகள் ஏதும் செய்வதில்லை. ரொம்ப அமைதியான, சம்பிரதாயங்கள் வழுவிய மனிதர். அவர் படங்கள் எதிலும் காமிரா இருந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. நடிப்பிடத்திற்கு எதிரே ட்ரைபாடில் காமிராவை வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து பின் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வரும் வழ்க்கமோ என்று தோன்றும். காமிர நகரவே நகராது. ஆனால் அவர் சொல்ல வந்த கதை முழுதும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டு விடும். காமிரா நகரவே இல்லை என்பது பற்றிய பிரக்ஞையே நமக்கு வராது. நான் முன்னாலேயே சொன்னபடி நமக்கு காமிரா, நடிப்பு, செட்டிங் பற்றியெல்லாம் நினைப்பே வராதவாறு கதையைச் சொல்லிவிடும் திறன் தான் திறன். மற்றதெல்லாம் கோமாளித்தனமான பாவனைகள் தான். புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் சமாசாரம் தான்.

என்னென்னமோ உலகத் தரமான படங்களையெல்லாம் பார்த்து தானும் உலகத் தரமான படம் பண்ணுகிறேனாக்கும் என்று கிளம்பியவர் என்ன உலகத் தரத்திற்க்காக ஒரு குத்துப் பாட்டை புகுத்தியிருக்கிறார். அதுவும் மகா கடைத்தரமான ஒரு பாட்டு, ஒரு டான்ஸ். ”கட்டுமரத் துடுப்புப் போல இடுப்பை ஆட்டுறா” இதில் என்ன உலகத் தரம் இருக்கிறது என்று மிஷ்கின் நினைக்கிறார்? குடித்துக் கொம்மாளம் போடுகிற தரங்கெட்ட கூட்டம் இரவுக் கேளிக்கை விடுதிக்குப் போகும். இல்லை அது கிராமத்துக் கூட்டம் என்றால் ரெகார்டு டான்ஸ் பாக்கப் போகும். அதுதான் தமிழ் வாழ்க்கையின் கோரமான அங்கங்கள் என்றால், அதைத்தான் நான் காட்ட வந்தேன் என்றால், நேர்மையுடன் அதைக் காட்டட்டும். தமிழ் வாழ்க்கையின் ஒரு கோர பகுதி இதுதான் என்றால் அந்த ரிகாட் டான்ஸோ, இல்லை கேளிக்கை விடுதி ஆட்டமோ, ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு மேல் அது நீளாது. மேலும் காமிராவின் குவிமையம் அந்த டான்ஸாக இராது. அந்த சூழல்தான் காட்டப்படும். அது தான் ஒரு சீரிய கலை நோக்கம் கொண்ட ஒரு இயக்குனரின் அணுகலாக இருக்கமுடியும். இந்த "கட்டுமரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா" டான்ஸ், மசாலாவாகச் சேர்க்கப்பட்ட சமாசாரம் தான்.

சில பெரிய இயக்குனர்களின் சில படங்களிலும் டான்ஸும் பாட்டும் இடம்பெற்றிருக்கின்றன தான். ஷாம் பெனெகல், பூமிகா என்ற படத்தில் கடந்த காலத்திய ஹம்ஸா வாடேகர் என்ற ஒரு மராத்தி நடிகையின் வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார். அதில் அந்நடிகை நடித்த காலத்திய பாணி சினிமா பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றிருக்கும். முழுதும் அல்ல. துணுக்குகளாக. லதாமங்கேஷ்கர் / ஆஷா போன்ஸ்லே யை மாதிரியாகக் கொண்டு இரண்டு சகோதரிகளின் கதையை ஒரு படத்தில் சொல்லியிருப்பார். அதிலும் பாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர் என்ற படத்தில் ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதக் கச்சேரியே நடக்கும். கச்சேரிக்காக அல்ல. அழிந்து வரும் பிரபுத்துவ வாழ்க்கைச் சூழலைச் சொல்வதற்காக. மாறிய காலச் சூழலில், கடந்த கால பிரபுத்துவ எச்சமாக வாழும் ஒரு பிரபுவின் வாழ்க்கையில் பண்பும் நாகரீகமும், பண்பட்ட கலை வாழ்வும் இருந்தது. அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள புதுப் பணக்காரனின் பாமரத்தனத்தையும் பணத்திமிரையும் அங்கு நாம் காண்போம்.

இன்னொரு ரேயின் படத்தில் ரவீந்திரரின் சங்கீதம் ஒன்று காலை வணக்கமாக தனிமையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஸ்த்ரீ பாடிக் கொண்டிருப்பாள். காட்சி தான் நினைவில் இருக்கிறது. படத்தின் பெயரல்ல.

ரேயின் படத்தில் டான்ஸ் இருக்கே பாட்டு இருக்கே, ஷ்யாம் பெனிகல் படத்தில் பாட்டும் டான்ஸும் இருக்கே என்று வாதிடக் கூடும் தமிழ் சினிமா பெரும்புள்ளிகள் இருக்கக் கூடும். அவர்களின் பாமரத்தனம் அவர்களது வாழ்வுரிமை. ரேயும், ஷ்யாம் பெனிகலும் கட்டுமரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா என்று ஒரு குத்தாட்டத்தை அங்கீகரிப்பவர்கள் இல்லை..

மிஷ்கினைப் பற்றி இவ்வளவு எழுதக் காரணம் அவரை மாத்திரம் ஸ்பெஷலாகக் குறிப்பிட்டு அவர் படத்தை பாத்தீங்களா என்று சொன்னதால் தான். மகா மட்டமான படங்களும், இயக்குனர்களும் நடிகர் கூட்டமும் மிஷ்கினைவிட பல மடங்கு அதிக கண்டனத்துக்கு உரியவர்கள் தான். ஆனால் அவர்கள் அக்கறைகளும் வாதமும் வசூலை மாத்திரம் பற்றியது. முடிந்தால் பின்னர் கலை என்றும் அவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். உலகத் தரம் என்றால் பேசமாட்டார்கள்.

(தொடரும்)


from:
http://thamizhstudio.com/serial_4_19.php


No comments:

Post a Comment