Thursday, July 23, 2009

Samsara - துறவைத் துறந்தவன்


ஓவியர் ஜீவா


“Marriage has many pains, but celibacy has no pleasures”
-Samuel Johnson

திபெத்தியர்கள் அதிகம் பேர் நீலகிரியில் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். கம்பளி ஸ்வெட்டர் போன்றவை விற்பது இவர்களது தொழில். சமீபத்தில் இந்திய சீன எல்லை நிர்ணய குழு ஊட்டி வந்தபோது, அவர்களுக்கு எதிர்ப்பு தெவித்து இவர்கள் கடையடைப்பு கூட நடத்தினர். திபெத்தில் சீன ஆக்ரமிப்பை எதிர்த்து எப்போதும் இவர்கள் குரல் கொடுப்பவர்கள். திபெத் பின்னணியில் ஏதாவது திரைப்படம் காணக்கிடைக்குமா என்ற தேடலில் கிடைத்தது 'சம்சாரா' என்ற திரைப்படம். பான் நளின் என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட நளின்குமார் பாண்டியா என்ற குஜராத்தி இளைஞனின் முதல் முழுநீள திரைப்படம் 'சம்சாரா'.திபெத்/லடாக்கி மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்தது.

உலக அளவில் புதிதாக அறிமுகமான இயக்குனர்களில் சிறந்த 30 பேரில் இவரும் ஒருவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

லாமாக்களின் பூமியான திபெத்தில் வாழும் புத்த பிட்சுக்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புதிய அத்தியாயம் 'சம்சாரா'. கழுகு ஒன்று தரையிலிருந்து ஒரு கல்லை கவ்விச்சென்று வானிலிருந்து கீழே ஒரு ஆட்டு மந்தையின் மீது நழுவ விடுகிறது. கபாலத்தை கல் தாக்க, உயிரற்று விழுகிறது ஆடு. அவ்வழியே கடந்து செல்லும் பிட்சுக்கள் குழு ஒன்று இறந்த ஆட்டை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்துவிட்டு, பாழடைந்து நிற்கும் குகைக் கோவிலை நோக்கிச் செல்கிறது. மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று வாரங்கள், மூன்று நாட்கள் என்று அன்ன ஆகாரமின்றி கடுந்தவத்தில் இருக்கும் தஷியை, மடாலயத்திற்கு திரும்ப அழைத்து வரத்தான் செல்கிறது இந்தக்குழு. கடுந்தவத்தால் உறைந்து போயிருக்கிறான் தஷி. நீண்ட தாடி, அழுக்கடைந்து வற்றிப்போன உடல், வளைந்த நகங்கள், மூடிய கண்கள் என காலங்களை கடந்த தவத்தால் இறுகிக்கிடந்தவனை வெளியே எடுத்துச்சென்று நதியில் நீராட்டி, சவரம் செய்து அழைத்துச்செல்கின்றனர். வழியில் ஒரு கோவில் சுவர்கள் மீது அடுக்கப்பட்டிருக்கும் கற்கள் மீது சில வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று இவனை கவர்கிறது – 'ஒரு சொட்டு நீரை காய்ந்து போகாமல் எப்படி தடுக்க முடியும்?' குதிரை சேணத்தின் மீது பலவீனமாக சுருண்டு கிடக்கிறான் தஷி. நடமாடவே சில காலம் பிடிக்கிறது. மெல்ல இயல்பு, அதாவது புத்த பிட்சுக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறான் இளந்துறவி. குழந்தைப்பருவத்திலேயே இவனைப்போல லாமா ஆக வந்தவர்கள்தான் அவனை சுற்றியுள்ள அனைவரும். ஆரோக்கியம் திரும்பியவுடன் தூங்கிக்கொண்டிருக்கும் இவனை பார்க்கும் மற்றொரு சக லாமாவுக்கு போர்வைக்குள் கூடாரம் கட்டியிருக்கும் இவனது இளமைக்குறி வடிவம் புலப்படுகிறது. பிறிதொருநாள் ஸ்கலிதம் வெளியேறி ஈரமான போர்வையை காண்கிறான். புத்த பிட்சுக்களின் முகமூடியணிந்த குழு நடனம் ஒரு நாள் பொதுமக்களின் முன்பு நடக்கிறது. குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒரு தாயின் திறந்த மார்பகம், ஆடிக்கொண்டிருக்கும் தஷியின் சிந்தையை குலைத்து விடுகிறது.

ஒரு முறை ஒரு கிராமத்திற்கு அனைவரும் செல்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தின் அறுவடை காலத்தை ஆசீர்வதிக்க இந்தப்பயணம். அங்குதான் விளக்கு வெளிச்சத்தில் ஒரு விபத்தைப் போல் அருகாமையில் பேமாவின் எழில் மிகுந்த முகத்தை காண நேர்கிறது. இரவில் அமைதியின்றி புரண்டு படுத்துக்கொண்டிருக்கும் அவனை அவள் மெல்ல ஆதுரத்துடன்

தடவிக்கொடுக்கிறாள். இது நிஜமா கனவா என்று அறியாமலே தூங்கிப்போகிறான் தஷி. இவனது இளமைக்குழப்பங்கள் மடாலயத்தின் மூத்த பிட்சுவின் கவனத்தை கவர்கிறது. ஒரு தூரப்பயணத்திற்கு அவனை அனுப்புகிறார். செல்ல நாய் காலா பின் தொடர, குதிரையின் மீது ஒரு அற்புதப்பயணம். அவன் சந்திக்கச் சென்றது ஒரு பழுத்த பழமான லாமாவை. குகையில் தனியாக வாழும் அவர், அவனுக்கு சில கோட்டோவியங்களை காண்பதற்கு கொடுக்கிறார். அத்தனையும் ஆண் பெண் சம்போகத்தையும் அதன் பல நிலைகளையும் குறிக்கும் காட்சிகள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு பிரத்யேக கோணத்தில் காணும்போது, அந்தச் சித்திரங்களில் தனியான உத்தியை கொண்டு வரையப்பட்ட வேறு கோடுகளும் தெரிகின்றன. அவை உருவங்களின் எலும்புக்கூடுகளையும் எக்ஸ்ரே போல காட்டுகின்றன. எல்லாமே காயமே இது பொய்யடா தத்துவங்களை சுட்டிக்காட்டுகின்றன. திரும்பி வருகிறான் தஷி. பல குழப்பங்கள் அவனை வாட்டுகின்றன. இது என்ன வகையான துறவறம்? 29 வருடங்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத்தான் துறவுக்கோலம் பூண்டான் சித்தார்த்தன். 5வயதிலிருந்தே தனக்கு ஏன் இந்த வாழ்க்கை முறை? என்ன இருக்கிறது துறப்பதற்கு? ஒரு நாள் வெளியேறுகிறான் தஷி. தன் துறவி ஆடைகளை துறந்து விட்டு சாதாரண ஆடைகளை அணிந்து கொண்டு பேமாவின் கிராமத்திற்கே செல்கிறான். இளம் லாமாவாக அவனை ஏற்கனவே பார்த்தவர்கள் திகைத்துப்போகின்றனர். பேமா இவனை புரிந்து கொள்கிறாள். ஊருக்கு வெளியே அவனை சந்திக்கிறாள். துறவியாய் இருந்தவன் ஆண்மகனாகிறான். உடல்கலவியில் வெட்டவெளியில் திளைக்கிறார்கள் இருவரும். அவளுக்கு எற்கனவே ஜமாயங்குடன் நிச்சயம் நடந்திருக்கிறது. முறைப்பையன் விட்டுக்கொடுத்துவிட தஷி பேமாவை மணக்கிறான்..

துறவியாய் இருந்தவனுக்கு புது வாழ்வு. காமத்தில் திளைக்கிறார்கள் தம்பதியினர். மகனும் பிறக்கிறான் கர்மா என்று அழகான பெயர் வைக்கிறார்கள். விவசாயத்தில் தஷிக்கு ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இடைத்தரகு வியாபாரியின் மோசடியை மற்றவர்களுக்கு உணர்த்தி, தன் அறுவடையை லாரி பிடித்து நகரத்திற்கு சென்று நல்ல விலைக்கு விற்கிறான். வியாபாரியின் பகையையும் சம்பாதிக்கிறான்.

மெல்ல மெல்ல தஷி சாதாரண மனிதனாக மாறுகிறான். பேராசையும் நகர்ப்புற மோகமும் தலை தூக்குகிறது. அடுத்த அறுவடையின்போது சேகரிக்கப்பட்ட பயிரும் தானியங்களும் ஒரு இரவு பற்றி எரிகின்றன. வியாபாரி தவாவை சந்தேகித்து, நேராக குதிரை மீதமர்ந்து நகரத்துக்கு சென்று அவனுடன் மோதுகிறான். உதை பட்டு திரும்புகிறான். மீதியான தானியங்களை பேமாவே நகரத்திற்கு எடுத்துச்செல்கிறாள். அறுவடை காலங்களில் வேலைக்கு வந்து போகும் சுஜாதா மீதும் இவனது காமப்பார்வை படர்கிறது. யாருமற்ற தனிமையில் அவளுடன் புது வகை காமப் பயிற்சியில் ஈடுபட நேர்கிறது.

ஒரு முறை இவனது பழைய மடாலயத்தோழன், இவனைத் தேடி வருகிறான். அவன் சென்ற பிறகு, இவனுக்கு லௌகீக வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது. மனம் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடுகிறது. வீட்டை விட்டு வெளியேறுகிறான். பாதிப்பயணத்தில் வாசகங்கள் அடங்கிய கற்கள் பதித்த சுவர்களை உடைய கோவிலின் அருகே பேமா குறுக்கிடுகிறாள்.

'யசோதராவைத் தெரியுமா உனக்கு' என்று கேட்கிறாள் கணவனிடம். சித்தார்த்தன் மகன் ராகுலையும் அவளையும் விட்டு விட்டு போனபின் அவள் நிலைமை என்ன, மனநிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்விகளை கேட்டு விட்டு அகலுகிறாள். தள்ளாடி நிற்கும் தஷி பழைய கல்லை புரட்டிப் பார்க்கிறான். கேள்விக்கு விடை அங்கு இருக்கிறது-

'சொட்டு நீர் காய்ந்து போகாமல் இருக்க, அதனை கடலில் எறியுங்கள்!'

சம்சாரா துறவறம், இல்லறம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக தானே துறவறம் மேற்கொள்ளாமல் குழந்தைப்பருவத்திலேயே மடங்களில் விடப்படும் குழந்தைகளின் நிலையை பற்றிய கேள்விகள். படத்தின் ஆரம்பத்தில் தஷியின் மடாலயத்தில் வளரும் ஒரு குழந்தைத்துறவியை காண்கிறோம். எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது, இது மட்டும் அங்குமிங்கும் ஓடியாடுவதும், அடிக்கடி வீட்டுக்கு போகவேண்டும் என்று அழுவதும், இது என்ன வகை துறவறம் என்று தவிப்பு ஏற்படுகிறது. ஒரு திரைப்படம் என்ற முறையில் இது ஒரு அழகான படைப்பு. பான் நளினின் முதல் படைப்பு என்று நம்ப இயலாத நிலை. மிகவும் குறைந்த வசனங்கள். படம் நெடுக மௌனமே பெரும்பாலும் மொழியாக இயங்குகிறது. நடிகர்களின் முக பாவங்களும், கண்களுமே நிறைய விஷயங்களை சொல்கின்றன, காமத்தின் முத்திரைகளையும் சேர்த்து. ஒளிப்பதிவு இந்தப்படத்தின் இன்னொரு பெரும் சிறப்பு. திபெத்தின் பனிமலை சார்ந்த அழகு படம் முழுவதும் ததும்பி நிற்கிறது. கருநீல வானமும் வெண்பனி படர்ந்த மலைகளும் ஒன்றுக்கொன்று எதிரான பிம்பங்களை தருவது கூடுதல் அழகு. இதமான வெயிலின் தாக்கத்தில் பரந்து நிற்கும் வெட்டவெளிகளும், குன்றுகளின் மீது படர்ந்து நிற்கும் மடாலயங்களும் பின்னணியில் பரவி நிற்கும் மௌனமும் அற்புத அனுபவம்.2 comments:

வண்ணத்துபூச்சியார் said...

அற்புத அனுபவம். அருமை.

வாழ்த்துகள்...

Raj said...

நானும் பார்த்தேன்...நல்ல படம்...மிக அழகாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்

Post a Comment