Showing posts with label valaipadhivar virudhu. Show all posts
Showing posts with label valaipadhivar virudhu. Show all posts

Friday, July 3, 2009

நர்சிம் மற்றும் முரளிக் கண்ணனுக்கு ஒரு தன்னிலை விளக்கம்.



(நண்பர் நர்சிம்முக்கு பின்னூட்டமிட விரும்பினேன். ஆனால் அதிகமான வார்த்தைகள் சேர்ந்துவிட்டால் பின்னூட்டத்தில் இணைக்க வில்லை. அதனை இங்கே கொடுத்துள்ளோம்)

நன்றி நர்சிம்... ஆனால் நாங்கள் இதுப் போன்ற பதிவுகளை எதிர்பார்த்து நாங்கள் விருது கொடுப்பது இல்லை. நண்பர் முரளிக் கண்ணன் சொன்னது போல் எங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவோ, காப்பாற்றிக் கொள்ளவோ நாங்கள் இது போன்ற விருதுகள் கொடுப்பதில்லை.. நண்பர் முரளிக் கண்ணன் ஒரு முறையாவது தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் பார்த்து இருப்பாரா என்பது எனக்கு தெரியாது.


எங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள நாங்க ஒன்றும் மிட்டாய்க் கடை வியாபாரிகள் இல்லை. குறும்படத் துறைக்கு ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், இலக்கியம் என்றாலே ஒரு சிலருக்குத்தான் சொந்தம் என்று இருக்கும் நிலையை மாற்றி இலக்கியம் பற்றி கிராமத்து மக்களும், சேரி வாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துக் கொண்டு நல் வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், இன்னும் பல.. (இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் முரளிக் கண்ணன்) நோக்கத்திற்காகவும் தான் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கப்பட்டது.


அதற்கான பணிகளை செய்வதில்தான் நாங்க முழு ஆர்வம் காட்டி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த நாங்கள் ஒன்றும் இனைய வியாபாரி அல்ல. இதுவரை நாங்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தேவை இருப்பவர்கள் எங்கள் இணையதளத்தை தானாகவே நாடி வரட்டும் என்றுதான் விட்டுவிட்டோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.


பதிவர்களுக்கு இதுவரை யாரும் இது போன்ற விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டப் பின்னர் தான் இந்த பதிவர் விருதை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். காரணம் புதிதாய் எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தானே தவிர எங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள அல்ல. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. .. தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு இலாப நோக்கம் அற்ற இணையத்தளம். பிறகு ஏன் நாங்கள் எங்கள் தளத்தை காப்பாற்றிக் கொள்ள பதிவர்களை நாட வேண்டும். ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்றுதான் இந்த விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கினோம்.


ஆனால் அதற்கு பதிவர்களில் ஒரு சிலர் கொடுத்த வரவேற்பு எங்களை புளங்காகிதம் அடைய செய்து விட்டது. நாங்கள் இன்னும் பரவலாக அறியப்படாதவர்கள் தான். ஆனால் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் யாவும் இதுவரை யாரும் மேற்கொள்ளாதவை. எங்களின் முழு நேரப் பணி இது அல்ல. நர்சிம் போன்று வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இந்த சமூதாயத்திற்கு எங்களால் முடிந்த நல்லதை செய்யவே விரும்புகிறோம். எனவே இது போன்ற வார்த்தைகளை உதிர்க்கும் முன்னர் யாரைப் பற்றிக் கூறுகிறீர்களோ அவர்களை பற்றி முழுதும் தெரிந்துக் கொள்ளுங்கள். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.


நர்சிம் விருதை வாங்கி கொள்ள வராத சூழல் பற்றி நான் நன்கறிவேன். அதில் பிழை ஏதும் இல்லை. எல்லோருக்கும் இது போன்ற சூழல்கள் ஏற்படுவது உண்டு. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்து இருபது நாட்கள் கழித்தும் நர்சிம் ஒரு கூட முறை என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. சாதரணமாக ஒரு நண்பனைப் போல் பேசி இருக்கலாமே. காரணம் இந்த நிகழ்ச்சியை நாங்கள் மிகுந்த நட்டத்திற்கு இடையில் தான் நடத்தி வருகிறோம். மேலும் ஒவ்வொரும் மாதமும் அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விசயங்களில் எங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது போன்ற பொறுப்பான தொலைப்பேசி அழைப்பு மருந்தாக அமையும். அதைத்தான் நண்பர் தண்டோரா விடம் சொல்லிக்கொண்டிருந்தோம். அவர் அந்த நிலைக் கண்டு உங்களிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் நர்சிமுக்கும், தண்டோராவுகும் நடந்த உரையாடல்க பற்றி நான் முழுதும் அறியிலேன்.


நாங்கள் வளர்ந்து வரும் அமைப்பை சார்ந்தவர்கள். எனவே எல்லோரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம். தவிர்த்து இதுப் போன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. தயவு செய்து இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்துக் கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தண்டோராவோ, அல்லது வேறு பதிவரோ, அல்லது நானோ நர்சிம்மை காயப் படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


செடியாய் இருக்கும் நாங்கள் மரமாய் வளர யாரும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஆனால் வெந்நீர் ஊற்றி எங்களை காயப்படுத்தாதீர்கள். நண்பர் முரளிக் கண்ணன் பதிவர் விருது கொடுக்கும் வழிமுறை பற்றி தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளத்தில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் எங்களை சார்ந்த பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்து விவாதம் செய்யாதீர்கள். என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள். நாங்கள் சர்ச்சைகளை விருபுவதில்லை. அனைவரின் புரிதலுக்கும் நன்றி.


(குறிப்பு: விருதுக்கான பதிவரை தெரிவு செய்வது முழுக்க முழுக்க தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகம் மட்டுமே. (நிர்வாகம் என்பது நான் மற்றும் நண்பன் குணா) எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எங்களை தொடர்பு கொண்டு பேசுங்கள். தவிர்த்து நீங்களாகவே உங்களுக்குள் பேசிக் கொள்ளாதீர்கள்.)


Saturday, April 4, 2009

தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலைப்பதிவர் விருது

நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: காலை 10 முதல் இரவு  7 வரை 


10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம் 

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ.http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் 

திரைப்படங்களில் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரியும் திரு. மாணிக்கம் அவர்கள் இம்மாதம் குறும்படங்களுக்கான "ஸ்டோரி போர்ட்" உருவாக்கம் குறித்து வழிகாட்ட உள்ளார். மேலும் இவர் பல படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ கமலஹாசனின் பல படங்களுக்கு இவர்தான் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். விருமாண்டி, வெளிவராத மருதநாயகம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். எனவே வாசகர்கள் அது குறித்த தங்களது ஐயங்களை திரு. மாணிக்கம் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம். இந்நிகழ்வு முழுக்க முழுக்க ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகும். 

மூன்றாம் பகுதி:  (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

தி. நீலகண்டன் அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்வோம்"திரு. விஜிக்குமார்அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்", திரு. சக்தி பாரதி அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்..." ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும். 

மேலும் இம்மாதம் முதல் புதிதாக, குறும்படங்களை காண்பதற்கு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார். குறும்படங்கள் திரையிடப்பட்டு, கலந்துரையாடல் முடிந்த பின்னர் இந்த சிறப்பு விருந்தினர் அக்குறும்படங்கள் குறித்தான தனது பார்வையை வெளிப்படுத்துவார். 

இம்மாதம் இயக்குனர் திரு, ஜெயபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கிய "குருஷத்ரம்" திரைப்படம் இந்திய பாகிஸ்தான் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு இயக்கிய"நண்பா நண்பா" திரைப்படத்தில் நடித்ததற்காக திரு. சந்திரசேகர் அவர்கள் நடுவண் அரசின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.

சிறந்த வலைப்பதிவருக்கு சிறிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268