Thursday, September 16, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

ஆதவன்

தமிழ் ஸ்டுடியோ.காம்-ன் 24வது குறும்பட வட்டம் 11.09.2010 அன்று சென்னை இக்சா மையத்தில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் அரிகரன் இயக்குனர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் ஸ்டுடியோ அருண் வரவேற்புரை வழங்கினார்.

குறும்பட வழிக்காட்டல்

இம்மாத குறும்பட வழிக்காட்டல் பகுதியில் இயக்குனர் அரிகரன் சிறப்புரையாற்றினார்.

இயக்குனர் அரிகரன்

குறும்படம் எடுத்து பிழைப்பு நடத்தமுடியாது. இங்கு குறும்படம் என்றவுடன் பெரும்பாலானோர் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். வரதட்சணை, குடி, விபத்து, குழந்தை தொழிலாளர், சுற்றுச்சூழல், புகைப்பிடித்தல் என ஏதாவது ஒரு கருத்துக்கு குறும்படம் எடுக்கின்றனர். இந்த பிரச்சினைகள் பற்றி குறும்பட எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தாண்டி சினிமா கலையை புரிந்து கொண்டு குறும்படங்கள் எடுக்க வேண்டும். சிலர் சினிமா மூலம் சமூகத்தை மாற்ற முனைகின்றனர். ஆனால் சினிமா மூலம் சமூக மாற்றம் சாத்தியமில்லை.

ஈரான் மிகவும் மதக்கட்டுப்பாடு மிக்க நாடு. அங்கு ஆண், பெண் சந்தித்து பேசுவது போன்று படம் எடுப்பது கடினம். அதனால் தான் குழந்தைகளை வைத்து படம் எடுக்கின்றனர். ஈரான் படங்களை ஐரோப்பிய திரைப்பட விழா குழுவினர் பாராட்டியதினால் அது உலக கவனம் பெறுகிறது.

இந்தியாவில் பல நல்ல இயக்குனர்கள் இருக்கின்றனர். அவர்களின் படங்களை ஐரோப்பியர்கள் பாராட்டவில்லை. அதனால் அவர்களின் படங்கள் உலக கவனம் பெறவில்லை. நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். இந்திய இயக்குனர்கள் கதாநாயகர்களுக்காக படம் செய்ததை கைவிடவேண்டும். கதாநாயகர்களின் தேவைகள் தீர்ந்துவிட்டன. மாறி வரும் சமூக மாற்றத்தை உள்ள வாங்கி படம் பண்ண வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் இன்னும் டிஜிட்டல் சினிமா வரவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எல்லா திரைப்படங்களும் 3டி-ல்தான் வெளிவரும். அதற்கு ஐந்து வருடங்களுக்கு பிறகு ஹாலோ கிராபிக் சினிமா-தான் வரும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் லேப் எல்லாம் மூட வேண்டிய காலம் வரும். எவ்வளவு விஞ்ஞான மாற்றம் நிகழ்ந்தாலும் கலாப்பூர்வமான படைப்புகள்தான் வெற்றிப்பெறும்.

நான் இயக்கிய முதல் படம் ஏழாவது மனிதன். முதலில் இந்த படம் எடுக்கும் திட்டம் இல்லை. 1981 ஆண்டு பாரதி நூற்றாண்டு அதனை முன்னிட்டு பாரதிப்பற்றி படம் எடுக்க பாளை சண்முகம் விரும்பினார். முதலில் பாரதி பாடல்களை பதிவு செய்தோம். பிறகு பாரதிப்பற்றிய ஆராய்ச்சியில் பாரதிப் பற்றிய பல விசயங்கள் பொது வெளியில் சொல்ல முடியாததாக இருந்தது. பாரதி ஒரு மென்டல் சேலஞ் பேர்சன்.

பாரதி பற்றிய உண்மைகளை புறம் தள்ளி விட்டு படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை. பாரதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற படம் வெளிவர வேண்டாம் என முடிவு செய்தோம்.

பிறகு பாளை சண்முகம் ஒரு போராட்ட குறிப்புகளை கொடுத்து படிக்க சொன்னார். அது இண்டியா சிமெண்ட் கம்பெனிக்கு எதிராக சுற்றுச்சூழல் சார்ந்தது. பாளை சண்முகம் போராடியதன் குறிப்புகள். இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டம் அது அதிலிருந்து உருவானதுதான் ஏதாவது மனிதன் திரைப்படம்.

வெகுசன சினிமா எனக்கு ஒத்துவராது. எனக்கு ஒரு படத்தை ஒரே ஷெட்யூலில் அது 25 நாட்களாக இருந்தாலும் சரி, 35 நாட்களாக இருந்தாலும் சரி தொடர்ந்து படம் பிடிக்க வேண்டும். அப்போது தான் அதே உணர்ச்சியுடன் அந்த படத்தை எடுக்க முடியும் என நம்பினேன். அது சரியானது என சொல்ல முடியாது. ஆனாலும் என்னுடைய எட்டு படங்களையும் அப்படிதான் படப்பதிவு செய்திருக்கிறேன்.

படம் எடுக்க விரும்புகிறவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். நாம் நிறைய வாசிக்க வாசிக்க நம்மை அறியாமலேயே ஒரு நல்ல படைப்பை உருவாக்குவோம்.

குறும்பட திரையிடல்

இம்மாத குறும்பட திரையிடல் பகுதியில் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவை பின்வருமாறு.

1. பெல் அடிச்சாச்சு - எஸ்.யு. அருண்
2. செந்தாழை - பிரசன்னா சுப்ரமணியம்
3. கம்மாயில கல்லு - சுரேஷ் குமார்

இம்மூன்று குறும்படங்களையும் இயக்குனர் மதுமிதா திறனாய்வு செய்தார்.

இயக்குனர் மதுமிதா

எல்லா இயக்குனர்களுக்கும் முதல்படி குறும்படம்தான். நானும் குறும்படம் எடுத்திருக்கிறேன்.

முதல் குறும்படம் சிறப்பாக உள்ளது. யாரை கதை மாந்தராக எடுத்துக் கொள்கிறோம். எதைப் பற்றி பேச போகிறோம். எப்படி சொல்லபோகிறோம் என்பதனை சரியாக உணர்ந்து மிக குறுகிய நேரத்திலேயே தான் சொல்ல நினைத்த செய்தியை சிறப்பாக சொல்லி உள்ளார்.

இரண்டாவது குறும்படத்தில் நல்ல ஷாட்-கள் உள்ளன. படத் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பு என்பது படக்காட்சிகளை வெட்டி ஒட்டுவதுமட்டுமல்ல. அது ஒரு படைப்பாக வேலையும்கூட பட கால அளவை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

மூன்றாவது குறும்படம் நகைச்சுவையாக உள்ளது. குறும்படம் என்றால் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

திரைத்துறையில் நிறைய பேர் சினிமா என்பது பணம் சம்பாதிப்பதுக்கு என நினைக்கின்றனர். Cinema is not money making machine

மருத்துவர், பொறியாளர் எப்படி தன் தொழிலுக்காக 4, 5 வருடம் படித்துவிட்டு வருகிறார்களோ அதுபோல்தான் நானும் சினிமாவுக்காக ஆறு வருடங்கள் படித்துள்ளேன். ஆனால் திரைத்துறையில் நிறைய பேர் ஒரு பெண்ணால இந்த வேலையை செய்ய முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

பல துறைகளிலும் பெண்கள் சாதித்த பிறகு இந்த 2010ல் என்னைப் பார்த்து ஒருவர் சொல்கிறார் பொண்ணுனா சமையல் வேல பாத்துக்கிட்டு வீட்டோ இருக்கணும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது தொடர்ந்து பெண் இயக்குனர்கள் வந்துக் கொண்டுள்ளனர். இது நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்த நிலை மாறும்.

மூன்று குறும்பட இயக்குனர்களும் தங்கள் படங்கள் குறித்து பேசினார். பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/24#

No comments:

Post a Comment