Tuesday, May 10, 2011

வலது புறம் செல்லவும் - 7



வலது புறம் செல்லவும் - 7


இயக்குனர் அகத்தியன்09-05-2011, 23:58 PM

ஒவ்வொரு வாரமும் உங்களிடம் முற்றிலும் உண்மை பேச வேண்டும் என்பதே என் ஆசை. இதுவரை நிகழ்வுகளில் ஒரு பொய்கூட கலக்கவில்லை. சில உண்மைகளை தவிர்த்திருக்கிறேன். சிலரைக் காயப்படுத்த வேண்டாமே என்பதற்காக.

1997ல் ஒரு வாரப் பத்திரிக்கை என்னை அணுகியது. ஒரு தொடர் எழுத சம்மதித்தேன். மனம் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்த நேரம் அது. முன்னுரை எழுதி அனுப்பினேன். பிரசுரித்தார்கள். இயக்குனர் திரு எஸ்.ஏ.சந்திரசேகர் அதைப் படித்துவிட்டு "வேண்டாமே அகத்தியன் இப்போது இது உங்களுக்கு" என்றார். அவர் சொன்னது யோசிக்க வைத்தது. அதற்குள் முதல் தொடரை அந்த பத்திரிகைக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த வாரம் என் தொடரைத் தேடினேன். அகத்தியனின் தொடர் சில காரணங்களால் நிறுத்தப்படுகிறது என்ற அறிவிப்பு இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் என் கோபம் முற்றிலும் தணிந்து போனது. அது அவர்கள். இது நாம். ஏன் காயப்படுத்த வேண்டும் என்ற மனநிலை இப்போது. சில உண்மைகளை தவிர்த்து விட்டுத்தான் இப்போதும் எழுதுகிறேன். பொய் மட்டும் கலக்கவே இல்லை.

என்னைப் பொறுத்த அளவு எந்த இலக்கணத்தையும் வகுத்துக் கொண்டு நான் நட்பை அணுகியதே இல்லை. அந்த நேரம் என் மனம் எதைச் சொல்கிறதோ அதைக் கேட்டு நான் எப்படி செயல்படுகிறனோ அதுவே நட்புக்கான இலக்கணமாக எனக்கு ஆகிப்போனது.

கல்லூரிக் காலத்தில் என் நேசிப்புக்குட்பட்ட ஒரு நண்பனோடு பாலியல் தேவைக்காக ஒரு விடுதிக்குப் போனேன். ஒரே ஒரு பெண் இருந்தார். நண்பனை அனுப்பி வைத்தேன். வெளியே வந்து 'நீ'? என்றான். "வேண்டாம்... உன்னோடு இல்லறம் கண்ட பெண்ணை என்னால் தொட முடியாது. நீ என் நண்பன்" என்றேன்.

சராசரி மனிதனுக்குள்ள எல்லா அழுக்குகளும் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்குள் ஒரு நேர்மை இருந்தது.

என்னை நேசித்த ஆதரித்த ஒருவரின் இல்லத்தில் தங்கியிருந்தேன். வீட்டில் எல்லோரும் இரவுக் காட்சிக்கு போய் விட்டனர். அந்த இல்லத் தலைவி மட்டும் இருந்தார். என் மீது ஒரு பல்லி விழுந்தது. அலறிவிட்டேன். என்ன என்று அந்தப் பெண் கேட்டார். இடது தோளில் பல்லி விழுந்து விட்டது என்றேன். அதற்கு ஸ்திரிபோகம் கிடைக்கும் என்றார். என் மனைவி சென்னையில் இருக்கிறாள் என்றேன். நீங்கள் நினைத்தால் இங்கேயே கிடைக்கும் என்றார். வெளியேறி அனைவரும் இரவுக் காட்சி முடிந்து வரும் வரை எதிரே இருந்த டீக் கடையில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அந்தக் காட்சி கண்முன் விரிந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு தோழி என்னைக் கெஞ்சினார். நான் பெண்ணாய் உங்களுக்குத் தோன்றவில்லையா என்றார். தவிர்த்தேன். உன்னை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது வேண்டாம் என்றேன். தேவையில்லை, வாழ்வோம் என்றார். என்றாவது ஒரு நாள் உனக்குத் திருமணம் நடக்கும். கணவனோடு முதல் இல்லறம் துவங்கும்போது என் நினைவு வரும். குற்ற உணர்வில் மனசு சிதறும் என்றேன். ஒரு நாள் திருமணம் முடிந்தது. போனில் அழைத்துச் சொன்னார். நன்றி "நிம்மதியாக உறங்கினேன்" என்று.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் தேவைக்காக நட்பை நான் பயன்படுத்தியதே இல்லை. எனக்கு தேவைகள் இருந்தன. அவை தம் தேவைகளைத் தேடியபோது நட்புக்களைக் காயப்படுத்தாமல் நதிகளைத் தேடிக் குளித்தன. குளித்து கரையேறி துவட்டும்போது நதியும் நானும் நண்பர்களாக மாறி இருப்போம்.

ஒரு நதியில் குளித்து கரை ஏறியபோது நதி என்னைக் கேட்டது "உங்களை மாதிரி ஒரு குழந்தை வேணும்".

எத்தனையோ அழுக்குக்களை கழுவிய நதி என் அழுக்கு கழுவி என்னை மட்டும் ஏன் நேசிக்க வேண்டும். நான் நதியில் குளிப்பதில்லை. நதியை நேசிப்பேன். நதி என்னைக் குளிப்பாட்டும். கரையேறித் துவட்டும்போது இதுதான் நட்பு என்று மனம் சொல்லும்.

"என் உயிர் நண்பன்" என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தை வெளிப்பாடு. என் உயர்ந்த நண்பன் என்பதே நண்பனுக்கு நான் சொல்லும் அடைமொழி. உயர்வு என்பது ஒரு சொல்லில், ஒரு செயலில் கூட இருக்கும்.

அந்த நண்பன் எனக்கு நெருக்கமானவன். ஆரம்பப் பள்ளி தொடங்கி, உயர்நிலைப் பள்ளி முடிந்து, தொடர்ந்து கொண்டே இருந்த நட்பு. நான் முதலாண்டு படிக்கும்போது அவனுக்கு திருமணம். திருமணம். முடிந்து வீடு வந்து சேர்ந்த அந்த இரவு வேளையில் வீட்டிற்கு பின்னால் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதேன். என் நட்பு பறிபோய் விட்டதே என்ற ஆதங்கத்துடன். "எங்கேடா போயிட்டேன் கருணாநிதி" என்று அவன் தேற்றியது இப்போதும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

அந்தக் காலக் கட்டத்தில்தான் அவளும் பெண் தானே, அவள் ஒரு தொடர்கதை படங்கள் வெளியான நேரம். பெண் தவறை ஒத்துக் கொள்ளும்போது அவளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் ஆமோதித்தான். மனைவியிடம் அதே கருத்தை அவன் சொல்ல, நீங்கள் அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக் கொள்வீர்களா? என்று அந்தப் பெண் கேட்டார். அவன் நிச்சயமாக என்றான், அவர் தன் கடந்த கால தவறுகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார். அவரை விவாகரத்து செய்தான்.

அந்த விவாகரத்துக்கு அவன் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்த முறைகளை விளக்கியபோது ஒரு த்ரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி வேண்டினேன். மறுத்தான், நாமே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொள்ளலாமா என்ற வெறிகூட வந்தது. முதன் முறையாக நட்பில் பயம் வந்தது.

நட்பு தொடர்ந்தது. நான் இயக்குனரான பிறகு ஊருக்குப் போயிருந்தேன். தொலைபேசியில் அழைத்து நான் வந்திருக்கிறேன். உடனே கிளம்புகிறேன் உன்னைப் பார்த்து விட்டுப் போக வேண்டும் என்றேன். ஒரு முக்கியமான ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். மூன்று மணி நேரம் கழித்து வா என்றான். சந்திக்காமலே சென்னை திரும்பினேன்.

என் மூத்த மகள் கார்த்திகாவின் திருமணப் பத்திரிகையோடுதான் அவனை அடுத்து சந்தித்தேன். பத்திரிக்கை வாங்கி தேதி பார்த்தான். டைரி எடுத்துப் புரட்டினான். இந்த தேதியில் எனக்கு வேறு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. முன்பே சொல்லியிருக்கக்கூடாதா? என்றான்.

கட்டிப்பிடித்து அழுதபோது எங்கேடா போயிடப்போறன் கருணாநிதி என்றவன் எங்கேயோ போய் விட்டான். நட்பு தோற்பது காதலைவிட வலி தரும் விஷயம்.

சுமார் ஐந்து வயது வரை மலேசியாவில். பிடுங்கி நடப்பட்ட நாற்றாக ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். அக்காவும் நானும் பள்ளியில் சேர்க்கப்பட்டோம். குட்டைப் பாவாடையும் காலில் செருப்பும் அணிந்து கொள்வார் அக்கா. நானும் அழகாக உடை உடுத்தி செருப்புப் போட்டுக் கொண்டு அக்காவின் கை பிடித்து பள்ளிக்குச் செல்லும்போது அந்தக் கிராமத்து சிறுவர்களுக்கு நாங்கள் காட்சிப் பொருட்கள். வேலிகளில் ஒளிந்து கொண்டு "டேய் புருஷன் பொண்டாட்டிடா" என்று கல்லெறிவார்கள். எங்கள் வீட்டின் பக்கத்தில் இருந்தான் ரெங்கசாமி. ஒரு நாள் அப்படித் திட்டி கல்லெறிந்த ஒருவனை அடித்துப் புரட்டிப் போட்டான். நான் சந்தித்த முதல் எம்.ஜி.ஆர் ஆகிப்போனோன் எனக்கு. ஏனோ அவன் படிப்பைத் தொடரவில்லை.

நான்காம் வகுப்பில் சீதாலெட்சுமி டீச்சர் மாற்றலாகிப் போகும்போது அவருக்கு பரிசு வாங்கிக் கொடுக்க காசு சேர்த்தோம். ஆறுமுகம் என்ற நண்பன் காசுக்குப் பொறுப்பாளன். காசை ஏமாற்றினான். நட்பு ஏமாற்றும் என்று முதலில் சொல்லிக் கொடுத்தவன் அவன்.

உயர்நிலைப் பள்ளியில் எல்லோரும் எல்லோருக்கும் நண்பர்கள் தான். ராமசாமி மட்டும் விதிவிலக்கு. என்னை 'வா' 'போ' என்று அழைப்பார். நான் 'வாங்க' 'போங்க' என்று அழைப்பேன். ராமசாமி வகுப்பில் முதல் மாணவன். தினமும் அறிவுரை சொல்லும் ராமசாமியைப் பார்க்கும் போதெல்லாம் இவர் எதிர்காலத்தில் ஆசிரியராக வருவார் என்று எனக்குத் தோன்றும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் சீக்கிரமே புறப்பட்டு வந்து வகுப்பறையில் அமர்ந்து எதைப் பற்றியோ கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். உள்ளே நுழைந்த ராமசாமி ஏன் கருணாநிதி தனிமையில் இருக்கிறாய்? என்றார். எனக்கு தனிமை பிடிக்கிறது என்றேன்.

தனிமை தவறானது. மனதைக் கொல்லும். தனிமையைத் தேர்ந்தெடுக்காதே என்றார். அப்போது எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. பின் தனிமை என்னைத் தத்தெடுத்துக் கொண்டபோது ராமசாமி மனசுக்குள் வந்து சொன்னேனே என்பார். உயர்நிலைப் பள்ளி முடிந்த பின் அவரைச் சந்திக்கவே முடியவில்லை.

பள்ளி முடிந்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பியுசி. தங்கமணி, அழகேந்திரன், செல்லையா என்று நண்பர்கள் எல்லோரும் எனக்கு சீனியர்கள். நான் அழைப்பது அண்ணா. தங்கமணிக்கு என்னை மிகவும் பிடிக்கும். என் எல்லாத் தவறுகளுக்காகவும் அவர் வருந்துவார். தன்னை வருத்திக் கொள்வார். அழகேந்திரனும் நானும் கவிதைப் பைத்தியங்கள். செல்லையா அறை நண்பர். செல்லையா ஒரு பெண்ணைக் காதலித்தார். நாங்கள் தங்கியிருந்தது தனியார் விடுதி. அந்தப் பெண் அவர் அம்மாவோடு நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து அவரைப் பார்த்துவிட்டுப் போவார். ஒரு நாள் கல்லூரி முடிந்து வந்தபோது செல்லையா அழுது கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கு நாளை கல்யாணம். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றார். நானும் மாரிமுத்து என்பவரும் சைக்கிள் எடுத்துக் கொண்டு 15 கிலோ மீட்டர் உள்ள அந்த கிராமத்துக்குச் சென்றோம். மிகுந்த சிரமங்களுக்கிடையே அந்தப் பெண்ணை சந்தித்தோம். இரவு 12 மணிக்கு தயாராக இருக்கிறேன். காரோடு வந்து விடுங்கள் என்றார்.

இரவு 9 மணிக்கு விடுதி திரும்பினோம். செல்லையா அறையில் இல்லை. சினிமாவுக்கு போயிருந்தார். திரையரங்கில் தேடிக் கண்டுபிடித்தோம். அவர் அண்ணனும் கூட இருந்தார். செல்லையா என்னிடம், "அண்ணன் அந்தப் பொண்ணை மறந்துரு". வேற பொண்ணு பாத்துக்கலாம்னாரு. மறந்துட்டேன். என்றார். "அண்ணன் என்னிடம் கேட்டார். யாரு பொண்ணு கூப்பிடப்போனது?" நான், "நாந்தான்".

"அப்ப நீயே கலியாணம் பண்ணிக்க".

முகத்தில் காறித்துப்ப வேண்டும் போல் இருந்தது. கண்ணாடிக்கு முன்னால் நின்று காறித்துப்பினேன். பின்னாளில் அது கோகுலத்தில் சீதை ஆனது. செல்லையன் ஐ.சி. மோகன் ஆனார். கரண் நடித்தார். மேலே சொன்ன உரையாடலை அப்படி பயன்படுத்தினேன். கார்த்திகிடம் கோகுல கிருஷ்ணா பேசினார்.

பி.யு.சி.யுடன் தங்கமணியும் அழகேந்திரனும் செல்லையனும் வாழ்க்கையில் விடைபெற்றார்கள்.

காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பி.ஏ. முதலாண்டு தமிழிலக்கியம். விடுதிக்குள் நுழையும்போதே அறிவுரை. காந்தி என்பவனுடன் சேராதே. முதலில் நான் பழகியது அவனோடு. அவன் முந்தைய ஆண்டும் அதே கல்லூரி மாணவன். வேறு துறையில். குடிப்பது, கஞ்சா அடிப்பது, இரவுகளில் நிர்வாணமாக விடுதியைச் சுற்றி வருவது என்று அவனே அவனைப் பற்றி பட்டியல் இட்டான்.

"சரி வா போய்க் குடிக்கலாம் என்றேன்". "நிறுத்திவிட்டேன்" என்றான். "சிகரெட்?" அதுவும்தான். ஒருவருஷம் ஜாலியா இருக்கணும்னு ஆசப்பட்டேன். செஞ்சேன். இனி வேற வாழ்க்கை என்றான்.

இன்று வரை ஒழுக்கமான மனிதன். குடிப்பதில்லை. எந்த கெட்டபழக்கமும் இல்லை. பின்னாளில் கராத்தே மாஸ்டர். ஹோமியோபதி டாக்டர். சமீபத்தில் அவனைக் கைபேசியில் அழைத்தபோது தேர்வுக்கு போய் கொண்டிருக்கிறேன் என்றான். இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யோகா முதுகலை. "உங்க சுதந்திரம் என்பது என் மூக்கு நுனி வரைக்கும்தான். மூக்கை தொடுறது இல்லை". அவன் அடிக்கடி மற்றவர்களிடம் சொல்லும் வசனம். காதல் கோட்டையில் அஜீத் பேசுவார்.

இங்கே என்னை வியப்பில் ஆழ்த்திய இன்னொரு நண்பன் பகவதி. விடுதிவாசலில் நின்று கொண்டிருந்தேன். ஒருவன் என்னைக் கடந்து போனான். "மச்சான் எப்படிடா இருக்கே". என்றான். "நல்லாருக்கேன். உன் தங்கச்சி எப்படி இருக்காடா". என்றேன். "எனக்கு தங்கச்சி இல்ல. அதுனாலதாண்டா நீ என் மச்சான்" என்றான். அருகே வந்து "ஐ ஆம் பகவதி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

முதல் நாள் அவன் என்னிடம் அடித்த கூத்துதான் காதல் கோட்டையில் இரவில் பாண்டு குளித்துவிட்டு உடைமாற்றி படுத்து அழகான பெண்கள் கனவில் வருவார்கள் என்று அஜீத்திடம் சொல்லும் காட்சி.

ஒரு பெண்ணைப் பார்த்தால் மச்சான் உன் தங்கச்சியா என் தங்கச்சியா என்பான். சாராயக் கடைக்குள் உள்ளே நுழையும்போதே போதையில் தடுமாறுவான். 40 பக்க நோட்டு வாங்கி மாணவர்மன்றம் என்று எழுதி காசு வசூலித்து சாராயம் குடிக்க கூட்டிப்போவான். விடுமுறையில் ஊருக்குப் போகும் போது எல்லா மாணவர்களிடமும் பகவதி, பகவதிதெரு, கீரமங்கலம் என்று எழுதி ஒரு தபால் அட்டை கொடுத்து அவர்கள் ஊரில் போஸ்ட் பண்ணச் சொல்வான். தன் வீடு இருந்த தெருவை அப்போதே பகவதி தெரு என்று மாற்றியவன் அவன்.

நான் படிப்பைத் தவிர எதிலும் நல்ல பெயர் வாங்காத காலம் அது. 1800 மாணவர்களின் நலம் கருதி என்னைக் கல்லூரியிலிருந்து நீக்கியது நிர்வாகம்.

இரண்டாம் ஆண்டு மதுரை யாதவர் கல்லூரி. கல்லூரியில் சேர்ந்து விடுதிக்குப் போனேன். விடுதிக் காப்பாளர் அழகப்பர் கல்லூரியை விட்டதற்கான காரணம் கேட்டார். சாப்பாடு பிடிக்கவில்லை என்றேன். சிரித்துக்கொண்டே "நான் ஆறு வருடம் அங்கே மாணவன்" என்றார். உண்மை சொன்னேன். சேர்த்துக் கொண்டார். இன்று வரை என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மிகச்சிறந்த மனிதர். தற்போது அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.

முதல் நாள் கல்லூரியில் நான் அமர்ந்த வரிசையில் யாரும் அமரவில்லை. என்னை விமர்சித்து பெஞ்ச் மேல் ஏறி நிற்கச் சொன்னார்கள். விடுதியில் யாரும் அவர்கள் அறையில் தங்க அனுமதிக்கவில்லை. அழகு சுந்தரமும், வெங்கடாசலமும் அறையில் இடம் தந்தனர். நல்ல நண்பர்கள் ஆனோம்.

மூன்றாம் ஆண்டு எனக்கு விடுதி மறுக்கப்பட்டது. மிகுந்த பிரச்சனைகளைச் சந்தித்துவிட்டு கல்வியாண்டின் மத்தியில் விடுதியில் போராடிச் சேர்ந்தேன். கோவிந்தராஜூவும், ராஜேந்திரனும் இடம் கொடுத்தார்கள்.

திருச்சியில் முதுகலை. நான் மூன்று பேரை மட்டும் நண்பர்களாக ஆக்கிக்கொண்டேன். ரெங்கநாதன், முருகன், மருதுதரை. அங்கும் பிரச்சினை. என்னைப் போடா என்று திட்டிய துறைத்தலைவரை போடா என்று நான் திட்டக் கிளம்பியபோது என்னைக் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வந்து என் படிப்பைக் காப்பாற்றியவன் முருகன். கொஞ்சம் ஒத்து போனீங்கன்னா இன்டெர்னல்ல பெயிலாக்க மாட்டாங்க. உங்க ஒ கிரேட் ஏ யாகவோ, பி யாகவோ மாறாது என்று வருத்தப்பட்டவர் ரங்கநாதன். தமிழ் படிப்பதால் தன் எதிர்காலம் குறித்து கவலை கொண்டவர் மருதுதுரை.

முதுகலை முடிய அவர்களுக்கு நான் காணாமல் போனேன். திருச்சியில் பறவைகள் இல்லத்தில் தங்கியிருந்தபோது தங்கவேலு. மகேந்திரன், முகமது ரஃபி முக்கியமானவர்கள்.

முகம்மது ரஃபி மிகவும் ஒழுக்கமான மாணவன். முப்பது நாட்களில் உருது புத்தகம் வாங்கி வந்து உருது கற்றுக் கொண்டவர். நானும் ரஃபியும் அப்போது ஒரு கவிதைத் தொகுப்புப்போட முயற்சித்தோம். ஏனே முடியவில்லை.

இந்தக் கட்டுரையில் இவர்கள் அனைவரையும் மறுபடியும் சந்திக்கத்தான் போகிறோம்.. அதற்காகவே இந்த அறிமுகம்.

என் பேராவூரணி நட்புக்களைப் பற்றிக் கொஞ்சம். அன்பழகன், பன்னீர், ராமமூர்த்தி, அசோக்குமார், மகேந்திரன் (மேலே சொல்லப்பட்டவர்) அழ. மூர்த்தி, ஜானகிராமன், விஜயன் என்று பட்டியல் நீளும்.

பன்னீரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய. எந்தப் பிரச்சினையையும் எதிர்நோக்கத் தயங்காதவர். நாளைக்கு பத்துமணிக்கு 100 ரூபாய் வேணும் பன்னீர். "நாளைக்குத்தானே. இப்ப ஏன் கவலைப்படுறீங்க". அடுத்த நாள் 10 மணி. "விடுங்க கருணாநிதி. பிரச்சினைய பேஸ் பண்ணுவோம்". பன்னீர் ரொம்ப பிராக்டிக்கல்.

சினிமா ஆசை எனக்கு ஆரம்பப் பள்ளியிலேயே வந்துவிட்டது. என்ன ஆகப் போகிறோம் என்று தெரியாது. ஆனால் திரையில் பெயர் வரவேண்டும. முதுகலை முடித்து ஒரு நாள் எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் அருகே பன்னீரிடம் சொன்னேன். "நான் சினிமாவுக்குப் போகப்போகிறேன்". "சொல்றவன் செய்யமாட்டான் கருணாநிதி. சொல்லாதீங்க செய்ங்க"..

மறுநாள் சென்னையில் இருந்தேன்.

ஒரு முறை அவரிடம் சொன்னேன். ஒரே பெண்ணுடன் வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன் பன்னீர் என்று.

சிரித்தபடி சொன்னார். எதையும் நீங்களா முடிவு பண்ணாதீங்க. வாழ்க்கை முடிவு பண்ணும். எதிர்த்து நீந்தாதீங்க. எதிர்த்து நீந்தி தோற்றுப்போய் அதன்போக்கில் நீந்திக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை முடிவெடுத்ததை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பன்னீரின் அந்த வார்த்தைகளில் எவ்வளவு உண்மை.

அன்பழகன் இன்னும் என்னை அழைப்பது "டேய் கிறுக்கா". சொல்வது, "இன்னும் கிறுக்கனா இருக்கியேடா. டேய் கிறுக்கா நீ நெனைக்கிறமாதிரியெல்லாம் யாரும் இல்லேடா. பொழைக்கிற வழியப்பாரு".

நான் சென்னைக்கு வந்து முதலில் தங்கிய இடம் ஸ்டான்லி மருத்துவமனை விடுதி. பேராவூரணி நண்பர் மாஸ்கோ அங்கு மாணவர். இளங்கோ (தற்போது திண்டுக்கல்லில் நரம்பியல் நிபுணர்) கஜேந்திரன் (தற்போது சென்னையில் தனியே கண் மருத்துவமனை) மூவரும் அறைத் தோழர்கள். அங்கு தங்கி இருந்தபோதுதான் நான் கடந்து வந்த கல்லூரிப் பாதையில் சந்தித்த ஒரு பெண்ணை மறுபடியும் சந்தித்தேன். வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன். மூன்றுபேரும் கேட்டார்கள். இந்த வயதில் உங்களுக்கு ஒரு பெண் தேவை. அதற்கான ஏற்பாடா? மறுத்தேன்.

எது நடந்தாலும் கடைசிவரை அந்தப் பெண்ணை கைவிட மாட்டேன் என்று உறுதி கூறினால் வந்து ரிஜிஸ்டர் ஆபிசில் கையெழுத்துப் போடுகிறோம்.

நட்பின் பெயரால் சத்தியம் செய்தேன். நட்பையும் சத்தியத்தையும் இன்று வரை காப்பாற்றுகிறேன்.

நான் சென்னை வாழ்க்கையை ஆரம்பித்த பிறகு என் வறுமையும், போராட்டமும் என் நண்பர்களுக்கு தெரியக்கூடாது என்று முற்றிலும் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கல்லூரி, சொந்த ஊர் நண்பர்களுக்கு நான் நினைவுகளில் தங்கியவன் ஆனேன். பின் அகத்தியனாக மாறிப்போனதால் இன்னும் தூரம்.

சினிமாவில் மும்முரமாக வாய்ப்புத் தேடும் காலத்தில் நட்பு மட்டும் அமையவே இல்லை. ஒரு உதவி இயக்குனர் நண்பரானார். சேர்ந்து முயற்சிப்போம் என்றார். பின்னால் அவர் ஒரு ஒட்டுண்ணி எனத் தெரிந்தது. நேரடியாக மிக மோசமாகத் திட்டினேன். கோபப்படுவார். எதிர்த்து சவால் விடுவார் என்று எதிர்பார்த்தேன். என் காலருகே வந்தமர்ந்து கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். கோபம் வந்தது. எனக்கு என்மேல். தன்மானமும் சுயமரியாதையும் இல்லாத மனிதனோடு நட்பு வைத்திருந்ததற்காக. அன்றே அந்த நட்பை முறித்தேன்.

பின்னாளில் இன்னும் ஒரு ஒட்டுண்ணி நண்பன் ஆனான். எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாதென்று முடிவெடுத்தேன். முதன் முறையாக அவனிடம்தான் வன்முறையைப் பிரயோகித்தேன். ஓடிப்போனான். ஆறுமாதம் கழித்து என் வீட்டருகே இருந்த காவல் நிலையத்தில் இருந்து எனக்கு அழைப்பு,

போனேன். உள்ளே அழைத்துப் போய் சோதனை இட்டார் காவலர். "ஏன் சோதனை"? என்றேன்.

"பாக்கெட்டில் வைத்திருக்கிற கத்தியைக் கொடுத்துவீடு".

"கத்தி வைத்திருக்கிறேன் என்று யார் சொன்னது".

"அவன் தான் சொன்னான்".

"நான் காவல்நிலையம் வரும்போது கத்தியோடு வருவேன் என்று நினைக்கும் ஒருவன் எப்படிப்பட்ட காரியத்தை எனக்கு செய்திருக்க வேண்டும்".

காவலர் முகம் நோக்கினார். அமரச்சொன்னார். ஆய்வாளரிடம் அனுப்பப்பட்டேன்.

"அடிச்சியா?"

"ஆமாம் சார் அடிச்சேன்".

என் காவல்நிலையத்தில் அடித்தேன் என்று ஒத்துக் கொண்ட முதல் மனிதன் நீ என்றார். சட்டத்தைக் கையிலெடுக்காதே, சங்கடங்கள் வந்தால் என்னை வந்து பார். உதவுகிறேன் என்றார். வாழ்வில் காவல்நிலையமே போகக் கூடாது என்று முடிவெடுத்திருந்தவன் நான்.. நட்பு என்ற பெயரில் ஒரு அசிங்கத்தை மிதித்துவிட்டு கழுவிக் கொண்டேன்.

காதல் கோட்டை வெற்றிக்குப்பிறகு அன்பழகனைச் சந்தித்தபோது "நீ ஜெயிச்சாத்தான் நாங்க உனக்கு பிரண்ட்ஸ்சாடா". என்றார். பன்னீர், "என்ன கருணாநிதி என்ன இருந்தாலும் நீங்க இப்படி பண்ணிருக்கக் கூடாது. நாங்கள்லாம் இல்லையா?" என்றார்.

ராமமூர்த்தி "ச்சீ போடா" என்றான்.

அழ மூர்த்தி "மறந்துட்டீங்களே" என்றார்.

அசோக் குமார் "சந்தோசம் .. இன்னும் நல்லா வாங்க "என்றார். மகேந்திரன் வெளிநாட்டில் இருந்தார். என் முகவரி தெரியாமல் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு என் பெயரிட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். ஆனந்தவிகடன் என்னிடம் அதைச் சேர்த்தது. கம்பராமாயணம் யுத்த காண்டத்தின் கடைசிப் பக்கத்தில் அதை பாதுகாத்து வைத்திருக்கிறேன். "ஏன்?" சொல்கிறேன்.

எல்லா நண்பர்களையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும என்ற அடங்கா ஆவல் பிறந்தது.

ஒரு நள்ளிரவு இரண்டு மணிக்கு சேத்தியாதோப்பு அருகில் உள்ள வெள்ளியங்குடியில் காந்தியை சந்தித்தேன்.

அழகு சுந்தரம் அதே யாதவர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். வெங்கடாசலத்தை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு கொடைக்கானல் போகும் வழியில் தாண்டிக்குடியில் பிடித்தேன். ஸ்கூல் நடத்திக் கொண்டிருந்தான்.

ராசேந்திரன் பாண்டிச்சேரியில் ஒரு பேக்டரிக்கு சொந்தக்காரராக இருந்தார். பலமுறை கும்பகோணம் செல்லும்போதெல்லாம் முயற்சித்தும் கோவிந்தராசுவை சந்திக்கவே முடியவில்லை.

ஒரு நண்பரின் திருமணத்துக்கு காரைக்குடி போகும்போது பொன்னமராவதி அருகில் உள்ள குழிபிறை சென்று தங்கமணி. அழகேந்திரனைப் பற்றி விசாரித்தேன். தங்கமணி நெய்வேலியில் இருந்தார். இரவு 11 மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன். வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன். அவருக்கு நான் அகத்தியன் ஆகி விட்டேன் என்று தெரியவில்லை. கிளம்பும்போது என்னுடன் வந்திருந்த கேமிரா மேன் ராஜேஷ் யாதவ் என்னைப் பற்றிச் சொல்ல. "அடப்போடா நாயே" என்றார். அழகேந்திரன் சென்னையில் இருந்தார்.

கோவை வேளாண் கல்லூரியில் ராமசாமி இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். போய்க் காத்திருந்தேன். ஒரு கருத்தரங்கில் இருந்தார். வந்தார். வேளாண் துறையில் பி.ஹெச். டி வாங்கியிருந்தார். அளவிட முடியா சந்தோசம் அன்று. தற்போது கலவையில் கல்லூரி முதல்வர். சேலம் கல்யாணத்துக்கு போனபோது திருச்சி விடுதி நண்பர் தங்கவேலுவைச் சந்தித்தேன். தலைமை ஆசிரியராக இருந்தார்.

திருச்சி நண்பர் முகமது ரஃபி. கல்லூரியில் ஆங்கில துறையில். நாடறிந்த எழுத்தாளர் நாகூர் ரூமியாக மாறி இருந்தார். சமீபத்தில் அவர் புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதும்போது கர்வப்பட்டேன்.

விஜயனை மட்டும் எங்கு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கண்ணாமூச்சிதான். கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால் பெண்ணாகரம் அருகில் உள்ள ஏரியூரில் கண்டுபிடித்தேன். கிட்டதட்ட எல்லோரையும் தேடிக் கண்டு பிடித்துவிட்டேன். இன்னும் சிலரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் நான் முயற்சி செய்த காலத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் நண்பர்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கதையாசிரியனாக என்னை அங்கீகரித்து சினிமா உலகில் வலம் வர விட்டவர்கள் அம்மா கிரியேசன்ஸ் சிவா வெங்கட்.

கவிஞர் காளிதாசனையும் இசையமைப்பாளர் தேவாவையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். மனசுக்கேத்த மகாராசா என்ற படத்திற்கு கதை வசனம் எழுதினேன். திருதேவா இசையமைப்பாளராக அறிமுகம். காளிதாசன் பாடல் எழுதினார். அங்கு ஆரம்பித்த நட்பு இன்னும் தொடர்கிறது. என் முதல் படத்திற்கு மிக மிகக்குறைவான ஊதியத்தில் தேவா நட்புக்காக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். கவிஞர் காளிதாசனுக்கு நான் உதவியாளன் என்றே சொல்லலாம். பிரபலமான இயக்குனரான பிறகும் கூட அவருக்காகப் போய் பாடல்களைப் பிரதி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். நான் பாடல் எழுதுவதில் அவரிடம் பெற்ற பயிற்சியும் ஒரு பங்கு வகிக்கிறது.

தங்கர்பச்சான் இனிய நண்பர். எனது நான்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் பேசினால் வலிக்கும். எனக்கு அவர் பேச்சு பிடிக்கும்.

அடுத்து நண்பர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் வெள்ளத்திரை விஜியும், தயா செந்திலும்தான். தொழில் செய்யும்போது நண்பர்களாய் இருப்பவர்கள் நிறைய. நிரந்தர நண்பர்களைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிடுகிறேன்.

சினிமாவில் நான் சந்தித்த முக்கியமான மறக்க முடியாத நண்பன் பிரகாஷ்ராஜ். எப்போது அவர் ஞாபகம் வந்தாலும் அந்த நட்புக்கு மனம் நன்றி சொல்லும். சமீபத்தில் திரு பார்த்திபன் நான் நெருங்கிப் புரிந்து கொண்ட நல்ல நண்பர். இயக்குனர்கள் பிரபு சாலமன், சாண்டில்யன், அறிவுமணி இயக்கிய எம்.ஏ. கென்னடி, டேவிட், சுரேஷ்குரு புதிதாய் வந்த சாணக்யா, கணேஷ், பெங்களூர் பிரேம் இவர்களையெல்லாம் என் நண்பர்கள் என்று சொல்வதைவிட என் குடும்பம் என்றுசொல்வதுதான் எனக்குப் பிடிக்கும்.

அப்போதும் சரி இப்போதும் சரி என் பேராவூரணி நண்பர்கள் பெண்களைப் பற்றிப் பேசியதோ விமர்சனம் செய்ததோ கிடையாது. எங்கள் அமர்வில் யாராவது ஒருவர் புதிதாய் வந்து பெண்கள் பற்றிப் பேசினால் ஆர்.எஸ் வாத்தியார் சொன்னதை நான் அவர்களுக்குச் சொல்வேன்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா என்று ஒருவர் அவரிடம் கேட்டார்.

அடுத்தவன் பொண்டாட்டியப் பத்தி நாம ஏன் பேசணும். வா உன் பெண்டாட்டி கற்பில் சிறந்தவளா? எம் பொண்டாட்டி கற்பில் சிறந்தவளானு பேசலாம். என்றார். வாழ்க்கை முழுதும் இதுதான் நான் கடைபிடிப்பது.

ஆர்.எஸ் நிறையப் படிப்பவர். அப்போதெல்லாம் பேராவூரணியில் ரயில்வே ஸ்டேசனில் நண்பர்கள் கூடுவோம். ஆர் எஸ்., மாஸ்கோ. குணசேகரன், ராமகிருஷ்ணன் எல்லோருமே படித்த புத்தகங்கள், பார்த்த சினிமாக்கள், அரசியல் என்றே பேசுவார்கள். இப்போதும் நானும் என்னைச் சந்திக்கும் நண்பர்களிடம் எஸ். ராமகிருஷ்ணனின் துயில், வைகோவின் ஈரோட்டுப் புத்தகவிழாப் பேச்சு. சிவக்குமாரின் கம்பராமாயண உரை, அண்ணன் அறிவு மதியின் மழைப்பேச்சு என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றைய இளைஞர்கள் நட்பின் பெயரால் கூடும்போது இது நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.

பெண்களுடனான என் நட்பு குறித்து நான் நிறையப் பேச வேண்டும். அதை இங்கே திணிக்க விரும்பவில்லை. வலதுபுறம் செல்லுங்களில் வேறொரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம். எனினும் மரியாதைக்குரிய ஒரு தோழியை மட்டும் குறிப்பிட்டு விடுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துக்கு பணி நிமித்தமாய் அழைக்கப்பட்டேன். எனக்கு வணக்கத்துக்குரிய ஒரு தோழி கிடைத்தார். தமிழ்த்துறையில் பொறுப்பு. எப்போதாவது பேசுவோம். எனக்கு ஏதாவது இலக்கியம் சம்பந்தமான சந்தேகம் என்றால் தெளிவுபடுத்துவார். போகும்போது சந்திப்பேன். அவர்தான் நான் சந்திக்கத் தேடிக் கொண்டிருந்த, முதுகலை பயிலும்போது பழகிய நண்பர்களைக் கண்டு பிடித்துச் சொன்னார். முருகன் ஈரோட்டில் தமிழாசிரியர். மருதுதுரை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையில். ரெங்கநாதன் கும்பகோணம் அரசினர் கல்லூரி தமிழ்த்துறையில்.

இப்போதெல்லாம் கைபேசியில் உடனுக்குடன் நண்பர்களுடன் உரையாட முடிகிறது. நான் யாருக்கும் குறுச்செய்தி வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. பண்டிகை நாட்கள் மறக்காமல் என் நண்பர்களுடன் நான் பேசும் நாட்கள்.

பொருளாதாரம் நட்பில் முக்கியம் என்று கருதுபவன்நான். வெற்றிபெறும் வரை நான் யாரிடமும் போய் நின்றதில்லை. சிலர் என் நிலையறிந்து உதவினர். திணையளவை பனையளவாக மதித்து திருப்பிக் கொடுத்திருக்கிறேன். எந்த நண்பருக்கும் அவரது தேவைக்கு கடன் என்று கொடுத்ததில்லை. இயன்றால் கொடுத்துவிட்டு எதிர்பார்க்கமாட்டேன். இயலாது என்றால் மன்னிக்கவும் என்பேன்.

ஒரு நண்பர் நான் சிரமப்பட்ட காலங்களில் உதவினார். அவரை நம்பி வாடகை சைக்கிள் எடுத்து வைத்திருப்பேன். செருப்பு வாங்கித்தருவார். நான் வெற்றி பெற்றபோது அவர் சிரமத்தில் இருந்தார். இரண்டு லட்ச ரூபாய் கேட்டார். கடனை அடைத்துவிட்டு என்ன செய்வீர்கள் என்றேன். வேலைக்கு முயற்சிப்பேன் என்றார். தொழில் தொடங்கச் சொன்னேன். பத்து லட்சம் முதலீடு. ஒரு வருடத்தில் நட்டம் என்றார். விட்டு விடுங்கள் என்று மறந்துவிட்டேன். எப்போதாவது மற்ற நண்பர்கள் என்னைத் திட்டும்போது அன்பழகன் சொல்வார். "அவனே கவலைப்படலே. உங்களுக்கு ஏன்டா தேவையில்லாத கவலை". என்று.

செல்வம் என்று ஒரு நண்பர் அறிமுகம் ஆனார். நான் ஒருமுறை இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது தானாக ஒரு பெரும் தொகை கொடுத்து உதவினார். திருப்பிக் கொடுத்தேன். பணத்தை மீறி நட்பு வளர்ந்தது. புத்தகப்பிரியர். படித்ததைப் பகிர்ந்து கொள்ள ஒரு நண்பர் கிடைத்தார். அவ்வப்போது கொடுக்கல் வாங்கல் தொடர்ந்தது. ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. என் சூழ்நிலைக்கு அவரை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்று நானே ஒதுங்கிக் கொண்டேன். வார்த்தைகள் இல்லா வருத்தங்களுடன் அந்த நட்பில் இடைவெளி விழுந்தது. அந்த நட்பை மீட்கும் காலம் அருகாமையில் இருக்கிறது. மற்றபடி பொருளாதார அடிப்படையில் நட்பை நான் வெகு கவனமாகவே அணுகியிருக்கிறேன்.

எப்போதும் எந்த நேரத்திலும் தோன்றுவதைப் பகிர்ந்து கொள்ள என் மூன்று பெண்களும் எனக்கு நல்ல தோழிகளே. மூத்தமகள் கார்த்திகாவின் கணவர் தீராத விளையாட்டுப் பிள்ளை இயக்குனர் திரு எனது நல்ல நண்பர். இதுதான் குடும்ப அமைப்பில் நான் கடைபிடிக்கும் நட்புமுறை.

நான் சந்தித்த நட்புகளில் ஒன்றிரண்டைத் தவிர அத்தனையும் உயர்ந்த நட்புகளே. சொல்லிலும் செயலிலும் இன்று வரை உயர்ந்தே நிற்கிறார்கள். நான் நட்புகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன். இதுவரை என் எல்லா நட்புகளும் எனக்கு மகிழ்ச்சியையே பந்தியிட்டிருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு நட்பு மட்டும் என்னை சோகமாக்கியது.

பேராவூரணியில் மகேந்திரன் எனக்குத் தாமதமாகத்தான் நண்பரானார். "அவனைச் சேக்காதீங்கடா" என்று மற்ற நண்பர்களிடம் சொன்னவர். அன்பழகனும், பன்னீரும் ராமமூர்த்தியும் சொல்லி என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டவர். இரக்க குணம் என்றால் மகேந்திரன் என்று சொல்லலாம். திருச்சியில் படிக்கும்போது பறவைகள் இல்லத்தில் அந்த நட்பு மேலும் மேன்மையுற்றது. நன்றாகப் பாடுவார். பெண்மை கலந்த நளினம் குரல் வளம் சேர்க்கும். படிக்கும்போது ஒரு இந்தி திரைப்படப் பாடலைக் கொடுத்து முதன் முதலில் தமிழில் பாடல் எழுத வைத்த நண்பன். நிறையச் சொல்லலாம் இப்படி. நான் சென்னை வந்தபிறகு அவர் வெளிநாடு போய்விட்டார். ஆனந்தவிகடன் மூலமாகக் கடிதம் அனுப்பினார். மீண்டும் தாய்நாடு வந்தார். நான் சென்னையில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னைச் சந்தித்தார். மும்பை போகவேண்டும் மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன் என்றார். முதல்முறையாக அவருக்கு உதவ ஒரு சந்தர்ப்பம் தந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு காதல் கோட்டை இந்திப் பதிப்பின் படப்பிடிப்பில் மும்பையில் இருந்தேன். அன்பழகன் என்னைக் கைபேசியில் அழைத்தார். மகேந்திரன் மருத்துவமனையில் இருக்கிறான். போய்ப்பார் என்றார். போனேன். தலை மழித்து கோமாவில் தூங்கிக்கொண்டிருந்தான் நண்பன். துணைக்கு இருந்த நண்பர்களிடம் பேசி விட்டுத்திரும்பினேன். அன்று அவன் குடும்பத்தார் வருவதாக சொன்னார்கள்.

அன்றிரவு படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வந்து படுத்தேன். எழுந்து பகல் 12 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பினேன். நகரிலிருந்து 40 கிலோ மீட்டரில் படப்பிடிப்பு. போய்ச்சேர்ந்தோம். மகேந்திரன் இறந்துவிட்டான் என்ற செய்தி. அப்போது தான் கவனித்தேன். போனில் சார்ஜ் ஒரே ஒரு புள்ளி ஒட்டிக் கொண்டிருக்கிறது. இரவில் சார்ஜ் போட மறந்துவிட்டேன். இப்போதோ அப்போதோ என்று அது உயிர்விடும் நிலை. மீண்டு ஓட்டல் அறைக்குத் திரும்பி சார்ஜ்ஜர் எடுக்க இயலாத சூழ்நிலை. நான் வைத்திருந்த போன் சார்ஜ்ஜர் யாரிடமும் இல்லை. ஒரு சிலரிடம் போன் இரவல் கேட்டால் காரணம் சொல்கிறார்கள். இறைவனை நோக்கிப் பிரார்த்தித்தேன். "இது அணைந்து விட்டால் என் நண்பனுக்கு உதவப் பயந்து ஓடி ஒளிந்த நண்பனாக நான் ஆகி விடுவேன். என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று இறைவா".

ஊரில் இருநது அவன் குடும்பத்தார் பொருளாதாரம் கருதி அங்கேயே அடக்கம் செய்து விடுங்கள் என்றனர். மனம் ஒப்பவில்லை. மகேந்தரனின் துணைக்கு இருந்த நண்பர்களிடம் பேசினேன். வந்து சேர்ந்த குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் செய்தியை மறைக்கச் சொன்னேன். எல்லோருக்கும் விமானத்தில் டிக்கெட் போட்டு, மகேந்திரனை மருத்துவமனையில் இருந்து தூக்கி வந்து பெட்டிக்குள் அடைத்து, அவனுக்கும் டிக்கெட் போட்டு எல்லாம் முடிந்துவிட்டு என் செல்போன் முடிந்தது என ஒலியெழுப்பி ஓய்ந்தது.

அதிகாலை வந்து, மகேந்திரனை அனுப்பும் அந்த நிறுவனத்திற்குப் போய், பெட்டி திறந்து, ஒரு மாலை போட்டு ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்று அந்தப் பெட்டியில் எழுதிவிட்டு.. மெல்லக் கேட்டேன்.

"நீ எனக்குச் செய்த உதவிகளை இப்படியா நீ திருப்பிச் செய்ய வைப்பது?"

மகேந்திரன் எப்போதும்போல மௌனமாகவே இருந்தான்.

அந்த சிரிப்பு மட்டும் இல்லை.

நட்புடன்
அகத்தியன்.

http://koodu.thamizhstudio.com/thodargal_16_7.php

No comments:

Post a Comment