Friday, November 26, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (11)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (11)

வெங்கட் சுவாமிநாதன்

கடைசியில் எந்திரன் படத்தை வைத்துக்கொண்டு நாம் பெருமைப் பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. என் கேள்வி, கவனிக்கவும். நான் எந்திரன் படத்தை ஒரு சினிமாவாக இல்லை, ஒரு வியாபாரப் பொருளாகவே எடுத்துக்கொண்டு தான் பேசுகிறேன். சினிமாவாகப் பேச தமிழில் படங்கள் நமது சினிமாவின் 80 வருட வரலாற்றில் ஏதோ ஒன்றிரண்டு தேரலாமோ என்னவோ.

திரும்பவும் சொல்கிறேன். சினிமாவாகப் பேசத் தான். பெருமைகொள்ள அல்ல. இதை நான் முன்னரே அவசியம் நேரும் போதெல்லாம் இத் தொடரிலேயே பல முறை சொல்லியே வந்திருக்கிறேன். கலாநிதி மாறன் சார் ரஜனி ஸார், சங்கர் சார், ரஹ்மான் சார் ஆக இந்த சார்கள் எல்லாம் தவிர அலகு குத்திக்கொண்ட, பாலாபிஷேகம் செய்த, மொட்டை அடித்துக் கொண்ட, யாகம் செய்த ரசிகர் எல்லோருமே ஒத்துக்கொண்ட, “இது வியாபாரம்” “சினிமாவே எடுப்பதே 150 கோடி ரூபாய் முதல் போட்டதே மக்கள் விரும்புவதைக் கொடுத்து லாபம் சம்பாதிக்கத்தான்” போன்ற பொன்மொழிகளை நினைவில் கொண்டு அதை வைத்துக்கொண்டு சில கேள்விகளைக் கேட்கலாம் கேட்க வேண்டும். சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோள் இருப்பதன் காரணமாகத் தான், தாத்தா கொள்கை என்னவாக இருந்தாலும் மாமிகள் கதைகள் தான் தொடராகும், ஜோஸ்யம், ராசி பலன், கர்நாடக சங்கீதம், தெய்வ தரிசனம், அருணாசல கார்த்திகை தீபம் எல்லாம் சன் டிவியில் காட்ட வேண்டியிருக்கிறது. தமிழினத் தலைவர் தமிழ் பெயருக்கு வரி விலக்கு கொடுத்தாலும், தமிழ் நாட்டில் அது சன் டிவி தான். கேடிவி தான்.

மற்ற இடங்களில் அது சூர்யாவாகும், உதயாவாகும், அங்கெல்லாம் சன் டிவி பெயர் செல்லுபடியாகாது தமிழினத் தலைவரும்/.தாத்தாவும் இந்த சந்தை நியாயங்களை, தர்மங்களைப் புரிந்து கொள்வார். கண்டு கொள்ளமாட்டார்.

எந்திரன் படத்தில் நாம் பார்த்து வாய்பிளந்த விஷயங்கள் எதையும் காட்டி நாம் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சமீப காலத்தில் நாம் அதிகம் பெருமைப் பட்டுக் கொள்வது நம் சினிமா சம்பந்தப்பட்ட வரையிலான தொழில் நுட்ப வளர்ச்சி. எனக்கு நம்ம தமிழ் சினிமாக் காரர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும், இந்த தொழில் நுட்ப சமாசாரங்கள் எதுவும் அதிகம் புரிந்ததில்லை. படிகளின் உச்சியில் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் ரஜனி சார் தன் வலது காலை இடது கால் மேல் போட்டால் ரம்பம் அறுக்கற மாதிரி ஒரு சபதம் வரும். அந்த சபதம் தன் ஆள்காட்டி விரலை அசைத்தாலே கூட வரும். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டாலும் வரும். அந்த சபதம் வந்தால், சூப்பர் ஸடார் ஏதோ எதிரியை வீழ்த்துவதற்கு தன் பட்டாக்கத்தியை உருவி விட்டார் என்று ரசிகப் பெருமக்களுக்குச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அந்த ரம்பம் அறுக்கும் சப்தம் தான் வாளை உருவி காற்றில் வீசும் சப்தம் என்று சொல்லப்படுகிறதோ என்னவோ.

இந்த ஒலிப்பதிவு நான் வேறு எங்கும் காணாத புதுமை தான். . நம்ம தமிழ் சினிமாவில் யாரும் ரயிலேறினால் ரயில் நிலையத்தில் நம்ம காதலனையும் காதலியையும் விட்டால் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். நம்ம ஊர் காதலி பிரயாணம் செய்யும் 21 கோச்சுகள் கொண்ட ரயிலில் தனியாகத்தான் இருப்பாள். அந்தக் கோச்சில் இன்னும் இரண்டு பேர் ஒப்புக்கு இருப்பார்கள். மற்றபடி ரயில் நிலையம் காலியாகத் தான் இருக்கும். அப்பத்தான் கமலஹாஸன் கிளம்பிவிட்ட ரயிலில் இருக்கும் ஸ்ரீதேவியை நோக்கி கதறிக்கொண்டும் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டும் வர சௌகரியமாக இருக்கும். இப்படி எத்தனையோ சமாசாரங்கள் தொழில் நுட்பங்கள் எனக்குப் புரிந்ததில்லை.

ஆர்ட் டைரக்டர் என்றால் கதை நடக்கும் இடமும் நம்பகமாக தோற்றம் தர உதவுகிறவர் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நம்ம சினிமாவில் டான்ஸ் பண்ணுவதற்கு பிரம்மாண்டமான மாயாஜாலங்கள் நிறைந்த செட் போடுகிறவர் என்று அர்த்தப் படுகிறவர். இதற்கு தோட்டா தரணியும், கிருஷ்ணமூர்த்தியும் போன்றவர்களை பயன்படுத்துவது மிகவும் கேவலப்படுத்தும் விஷ்யம். அவர்களை[ப் போன்ற ஓவியக் கலைஞர்களை மட்டுமல்ல, ஆர்ட் டைரக்ஷன் என்ற ஒரு கலைத் துறையையே கேவலப்படுத்துவதும் ஆகும். ஆனால் நம் சினிமாக் காரர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அவர்களுக்குத் தெரிந்தது வியாபாரம். கொள்ளையாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை.

மளிகை, ஜவுளிக்கடை வியாபாரம் போல, சினிமாவும் ஒரு வியாபாரம் என்பது தான் அவர்கள் புத்தியில் பட்டிருப்பது. அது தான் அவர்கள் பேணும் மரபும். Last Emperor படம் எடுக்க வந்தவர்களுக்கு பெய்ஜிங்கில் இருக்கும் அரண்மனையை வெளிப்புறத்தில் இருந்து கூட படம் எடுக்க சீன அரசு மறுத்து விட்டது. பின்னர் அந்த மாளிகை ஒரு செட்டில் வேறு நாட்டில் உருவாக்கப்பட்டது.அந்த செட் 40 பேருடன் ரஜனி சாரோ கமல் சாரோ டான்ஸ் பண்ணுவதற்கல்ல சைனாவின் கடைசி வாரிசுவின் கதை, புரட்சியில் அல்லாடும் கதையைச் சொல்ல பெய்ஜிங் அரண்மனை தேவைப் பட்டது. யாருக்காவது படம் பார்த்தவர் களுக்கு அது உருவாக்கப்பட்ட செட் என்பது தெரிந்ததா? அதில் அதை உருவாக்கிய கலைஞனும், இப்படிச் செயல்படும் ஒரு நாட்டின் கலைஉணர்வும், பண்பாடும், பெருமைப் படத்தக்க ஒன்று. சிவாஜி படத்துக்கும் யந்திரன் படத்துக்கும் போட்ட செட் கலையும் இல்லை. அதை வேண்டிய தயாரிப்பாளரோ, இயக்குனரோ அல்லது அதைப் பார்த்து வாய்பிளக்கும் சமூகமோ,சினிமா சம்பந்தப்பட்டவர்கள் இல்லை.

திமுக மாநாடுகளுக்கு பிரம்மாண்ட அரண்மனைத் தோற்றம் தரும் செட் உருவாக்குகிறவர்களுக்கும் தோட்டா தரணிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. இங்கு தோட்டா தரணி ஒரு கலைஞராக இல்லை, தச்சு வேலை, செங்கல் கட்டிட வேலை செய்யும் மேஸ்திரியாகத் தான் கீழிறங்கியிருக்கிறார். இங்கு மட்டுமல்ல தமிழ் சினிமா இந்தமாதிரியான கலைஞர்களை எங்கெல்லாம் டான்ஸ் ஆடுவதற்கு செட் போட அமர்த்தி வருகிறார்களோ அந்த வரலாறு முழுதுமே ஒரு கேவலப்பட்ட வரலாறு தான். ஆர்ட் டைரக்டருக்கு தயாரிப்பாளர் இயக்குனர் சொன்னதைச் செய்தால் பணம் கிடைக்கிறது என்பது வேறு விஷயம். வெற்றிகரமான வியாபாரம் என்பதும் வேறுவிஷயம்,. ஆனால் இதெல்லாம் சினிமா சம்பந்தப் பட்ட சமாசாரங்கள் இல்லை. பணக் கொழுப்பில் வளர்ந்த டம்பங்கள்.

இது போலத்தான் எந்திரன் படம் சம்பந்தப்பட்டவர்களும் நம் சமூகமும் பெருமைப்பட்டுக்கொள்ளும் எதுவும். சங்கருக்கு வித்தியாசமான கற்பனைகள் தோன்றுவது வழ்க்கம். அது அவர் பிராண்ட் மேதமை. சரி. தான் உருவாக்கிய ஒரு மனித யந்திரம் தன் பிரதிமை போன்ற ஒன்று தனக்கே எதிரியானால்…. சரி சுவாரஸ்யமான கற்பனை தான். இந்த சமாசாரத்தை நாம் ஏற்கனவே இந்த தொழில் நுட்ப பிரம்மாண்ட கற்பனை என்னும் டம்பங்கள் எல்லாம் தலைகாட்டாத காலத்தில் ஜெமினி ஸ்டுடியோஸின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் பார்த்து விட்டோம். அதுவும் ஒரு வியாபாரச் சூழலில் வள்ர்ந்த எஸ் எஸ் வாசன் என்ற மனிதர் தந்தது தான். ஏதும் கலை அது இது என்று டம்ப புண்ணாக்குகள் பண்ணாத ஆனால் பொதுப் புத்திக்கு ஏற்கும் ஒரு கதையாக, படமாக நமக்குத் தந்திருந்தார். சுவாரஸ்யமான கதை சொல்லல். அதுவே அலெக்ஸாண்டர் டூமாஸின் கார்ஸிகன் ப்ரதர்ஸ் என்ற நாவலின் தழுவல் தான்.

ஆனால் நம் சாதாரண பொதுப் புத்திக்கும், நடிகர்களின் திறமைக்கும் ஏற்ற ஒன்றாக இருந்தது. அதை இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில், பாட்மான், சூப்பர்மேன், டெர்மினேட்டர் எல்லாம் பார்த்து தன்னை நவீனப் படுத்திக்கொண்ட 2010-ன் சங்கர் பதிப்பாக மேம்படுத்த நினைத்தால் அதையும் ஒரு அளவிற்கு நாம் ஒத்துக்கொள்ள முயலலாம். ஆனால் சங்கர் சாதாரண மனிதர் இல்லை. அவர் கால்கள் தமிழ் மண்ணில் பதிய மறுப்பவை. தமிழ் என்ன, இந்த மண்ணிலேயே பதிய கட்டாயம் மறுப்பவை. அவருடைய ரோபோ ரஜனி மாதிரியே உருவாகும். அந்தக் காலத்தில் ரஞ்சன் இரட்டை வேடத்தில் செய்ததை, இங்கு ரஜனி ரூபம் கொண்ட ரோபோ செய்யவேண்டும். ரஜனியே இரட்டை வேடம் போடலாமே. ரசிகர்கள் அடையும் பரவசம் சொல்லமுடியாதே. பாலாபிஷேகம் என்ன, தேனாபிஷேகமே செய்வார்களே கட் அவுட்டுக்கு. ஆனால் அது சங்கர் பிராண்ட் சிந்தனைக்கும் இயக்குனர் ஆளுமைக்கும் சரிப்பட்டு வராத சமாசாரம். . அவரது தனி ரக கற்பனை இதோடு நிற்பதில்லை.

ரஜனி என்கிற விஞ்ஞானி தன் காதலியோடு மாத்திரமில்லை இன்னும் நாற்பது பேரோடு பிரபு தேவா சொல்லிக்கொடுத்த டான்ஸாக இருக்கவேண்டும். அது ஆட வேண்டும். அந்த டான்ஸ் ஆட பெருநாட்டுக்கு அதுவும் மச்சு பிச்சுக்குத் தான் போயாக வேண்டும். இல்லையானால் ப்ரேஸிலிலோ அங்கு வேறு எங்கேயோ ஒரு பாலைவனத்தில் தான் டான்ஸ் பண்ணுவார், அதுவும் அந்த விஞ்ஞானி, மேரி ஈ. வோட் என்ற பெயர் கொண்ட ஒரு அயல் நாட்டுப் பெண்மணி தயாரித்த உடை அணிந்து கொண்டால் தான் மச்சு பிச்சுவில் ஐஸ்வர்யா ராயோடு ஆட முடியும். அந்த புதிய டிஸைன் ஆடைகளும் சங்கர் மாதிரி கற்பனை கொண்ட பெண்மணியாகத் தான் இருக்க வேண்டும். நம்ம ஊரில் ஊசி விற்கிறவர்களும், பகல் வேஷக் காரர்களும், தெருவில் மாஜிக் காட்டுகிறவர்களும் பாப் ம்யூஸிக் காரர்களும், வித விதமான கோமாளி உடைகளில் வருவார்கள். அந்த மாதிரி ஏகப்பட்ட டிசைன்களில். உடைகள் அணிந்துவ் வருவார் நம்ம சூப்பர் ஸ்டார். இது நம் தமிழ் சினிமா எல்லா ஹீரோ ஹீரோயின்களுக்குமான மரபு. ஒவ்வொரு டான்ஸிலும் 10 வித உடையலங்காரங்கள். இது இன்றைய விதி. 20 வருடங்களுக்கு முன் நல்ல குரலில் ரம்மியமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஹரிஹரன் இப்போது மாசத்துக்கு ஒரு ஸ்டைலில் உடை உடுத்திக்கொள்கிறார். மீசை, தலை முடி, கிருதா எல்லாம் மாற்றிக்கொள்கிறார். இல்லையா? எல்லாம் நாம் வாழும் காலத்தின் கோலமோ அலங்கோலமோ. சினிமா கலாசாரம்.

நம் டான்ஸும் பாட்டும், உடைகளும் எல்விஸ் பெஸ்லியும் மைக்கேல் ஜாக்ஸனும் பாட்டிலும் கால் கைகளை வலித்துக் கொள்வதிலும் உடையிலும் செய்த கோமாளித்தனங்கள் அத்தனையையும் செய்தால் தான் அது பாட்டும் டான்ஸும் ஆகும் என்ற நினைப்பில் உருவாகிறவை கடந்த இருபது ஆண்டுகளாக. பெஸ்லியையும் ஜாக்ஸனையும் மீறி விட்டவர்கள் நம் சங்கர் சார் போன்ற இயக்குன மேதைகள். அவர்கள் பொது மேடைகளில், ஸ்டுடியோக்களில் தான் ஆடினார்கள் பாடினார்கள். டோரண்டோ போகிறேன், மச்சு பிச்சு போகிறேன் என்று கிளம்ப வில்லை..



No comments:

Post a Comment