Showing posts with label indhira parthasarathi. Show all posts
Showing posts with label indhira parthasarathi. Show all posts

Sunday, November 21, 2010

கதை சொல்லி - இந்திரா பார்த்தசாரதி (Indhira Parthasarathi)


கதை சொல்லி - இந்திரா பார்த்தசாரதி (Indhira Parthasarathi)

ஆதவன்

சென்னையில் மழை என்பது மிக அசாதாரமான ஒன்று. உலகில் உள்ள எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மழையை ரசிக்க, சென்னை வாசிகள் மட்டும் தன் நெஞ்சாங்கூட்டில் அந்த ரசனையை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, எப்போதும் வெயிலை வசைப்பாடிக் கொண்டு ஆனால் அந்த வெயிலையே நிதமும் எதிர்பார்த்துக் கொண்டும் வாழும் ஒரு முரணான சமூகம். எங்க கிராமத்துல ஐப்பசி மாசத்துல மழை பெய்யும் பாரு.. அடேங்கப்பா.. என்று எப்போதும் சென்னையில் வாழும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் சொந்த இருப்பிடங்களைப் பற்றி உயர்த்திப் பேசிக்கொண்டே இருப்பர். ஆனால் அதே மழை சென்னையை தழுவி சென்றால் அவர்கள் அந்த ரசனையில் இருந்து நழுவி செல்வதே வாடிக்கை.

அப்படி யாரும் எதிர்பாராத ஒரு மழைக்கால மாலை நேரத்தில் மிக ரம்மியமான பொழுதில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் வீடு நோக்கி விரைந்தேன். காலையில் பேசும்போதே ஒரே மழையா இருக்கே.. உனக்கு பரவா இல்லையா? ரொம்ப சிரமப்படாதே? என்று என் மேலான தன் அக்கறையை வெளிப்படுத்தினார். ஆனால் பரவா இல்லை சார்..நான் இன்னைக்கே வந்துடுறேன் என்று சொல்லி, மாலையில் சாரல் மழையில் புறப்படலானேன். அடையார் எல்.பி. சாலையும், மந்தைவெளி ஆர். கே. மடம் சாலையும் நான் பார்த்த வரையில் சென்னையின் சாபக்கேடுகள். மழைக் காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டியம் கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம். இப்படிப்பட்ட நிலையில் சாரல் மழையை எங்கே ரசிப்பது?

ஒரு வழியாக இந்திரா பார்த்தசாரதி வீட்டை அடைந்தேன். ஏற்கனவே பலமுறை அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் இந்த சாரல் மழையில் அம்புஜம்பால் சாலையின் அழகை என்னவென்று சொல்வது? இருபுறமும் அடர்ந்த மரங்கள், கற்பனையைக் குழைத்து தூரிகை தெளித்து கட்டப்பட்ட வீடுகள்.. ஐந்து நொடியில் கடந்து விடக்கூடிய சாலை என்றாலும், அதன் அழகு பல வருடங்கள் மனதை விட்டு நீங்காது. அஸ்வரூடா அடுக்கு மாடிக் குடியிருப்பில் கதை சொல்லிப் பகுதிக்காக இந்திரா பார்த்தசாரதி அவர்களை சந்தித்தேன்.

நான்கைந்து மாதங்களாக தொடர்ந்து அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் நான் கதை சொல்லி இல்லப்பா.. என்ன விட்டுடேன்.. என்று மறுத்து வந்தார். ஆனால் விடாது கருப்பாக அவரை தொடர்ந்தேன். இறுதியில் "இவ்ளோப் பெரிய எழுத்தாளன் னு சொல்றாங்க.. இவனுக்கு ஒரு கதை கூட சொல்லத் தெரியலியே.. னு எல்லாம் ஏளனம் பேசுவாங்க" னு முன்னர் மறுத்ததை ஆமோதித்தார். ஆனால் "நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள். நல்ல வரலே னு சொன்னா நான் அதப் பயன்படுத்தாம விட்டுடுறேன்" என்று வாக்குக் கொடுத்தப் பின்னர் சம்மதித்தார். ஆனால் அவர் கதை சொல்லும் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுதியக் கதைகளை கொஞ்சம் கூட அட்சரம் பிசகாமல் எங்கேயும் வார்த்தைகளை நிறுத்தி யோசிக்காமல் அடைமழை என அடித்து தீர்த்தார். "அற்றது பெற்றதெனில்" கதையை கூறும்போது இடையில் அது சார்ந்த பல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார். அந்தக் கதை எப்படி உருவானது, ஏன் அந்த முடிவை அப்படி வைத்தார், கதை மாந்தர்களின் பெயர்களை எப்படி உருவாக்கினார் என்பது உள்ளிட்ட பல விடயங்களை அது சார்ந்து கூறும்போது இப்படி ஒரு கதை சொல்லியா கதை சொல்ல மறுத்தார் என வியந்துதான் போனேன்.

இரண்டு கதைகளையும் சொல்லி முடித்தப் பின்னர் பொது விடயங்களைப் பேசலானார். தமிழ் இலக்கிய சூழல் தன்னுடைய ஆதங்கங்களை பகிர்ந்துக் கொண்டார். ஒரு முறை எட்டயபுரம் சென்று பாரதி வீட்டின் முன்னர் நின்றுக் கொண்டு அது தெரியாமல் அங்கே இருந்தவர்களை பாரதியின் வீடு எங்கே என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அதுதான் பாரதியின் வீடு என்பதற்கு அடையாளம் கூட அங்கே ஏதுமில்லை. மேலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர்தான் பாரதியின் வீட்டை வந்துப் பார்த்து விட்டுப் போவதாக வருத்தப்பட்டார். மகாகவி என்று கொடாடப்பட்ட பாரதிக்கே அந்த நிலை என்றால் இங்கே மற்ற படைப்பாளிகளுக்கு எந்த விதமான மரியாதை இருக்கும் என்றார். ஆனால் இதே போன்று வெளிநாடுகளில் இல்லை என்றும் அங்கே நடந்த சில சம்பவங்களை உதாரணமாக கூறி விளக்கினார். மார்க் ட்வெயின் எனும் அமெரிக்காவின் முதல் அங்கத எழுத்தாளர் (இத்தனைக்கும் அமெரிக்காவில் அப்போது எழுத்தாளர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்த காலக்கட்டம்). ஆனால் பின்னர் அவர் மரித்துப் போனபின்னர், அவரை அமெரிக்க சமூதாயம் கொண்டாடிய விதம் நம்மை எல்லாம் பார்த்து கைக்கொட்டி சிரிப்பது போல் தோன்றும். மார்க் ட்வெயின் தேநீர் குடித்த கடை முதற்கொண்டு அவர் வாழ்ந்த வீடுகள், அவர் புகைப்பிடித்த இடங்கள் என எல்லாவற்றிலும் அவரின் பெரிய உருவப்படங்கள் மாட்டி அந்த இடத்தில் தொடர்ந்து இலக்கியங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.


மேலும், சோபன் (Chopan) என்கிற போலாந்தை சேர்ந்த பியானோ இசைக் கலைஞரை (இந்திரா பார்த்தசாரதி போலாந்தில் பேராசிரியராக பணியாற்றியவர்) அந்த சமூகம் எப்படி கொண்டாடியது என்பதையும் பகிர்ந்துக் கொண்டார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அந்த நாட்டு பள்ளிக்குழந்தைகள் அவர் பியானோ வாசிக்கும்போது அங்கே ஆஜராக வேண்டும், இது ஒரு கட்டளையாக இல்லாமல் அந்தக் குழந்தைகளே விருப்பத்தோடு வந்து பியானோ இசைத்தலை கேட்டு மகிழ்கின்றனர். இதன் மூலம் அந்தக் குழந்தைகள் அந்த நாட்டின் இசைப் பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள முடிகிறது.

அதற்கு மாறாக இங்கே எழுத்தாளர்களை எப்படி எல்லாம் அவமானப்படுத்தலாமோ அப்படியெல்லாம் அவமானப்படுத்துகிறார்கள். ஒரு முறை கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இறந்து விட்டதாக ஏதோ ஒரு இதழில் செய்தி வெளிவர, மறுநாள் அந்த இதழுக்கு "மன்னிக்கணும், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்" என்று பதில் எழுதினாராம் கல்கி. அதே போல் ல.ச. ரா. இறந்தபோது ஒரு இதழ் அவரது புகைப்படத்திற்கு பதில் ல.சு. ரங்கராஜன் அவர்களின் (காந்தி புத்தக ஆசிரியர், தி ஹிந்து) புகைப்படத்தை போட்டுவிட்டனர் என்றும் கூறிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் நான் அவரை போல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பேச்சு கொஞ்சம் அரசியல் பக்க திரும்பவே, மொர்ராஜி தேசாய் அவர்கள் எப்போதும் அரசியல் தலைவர்கள் இறந்தால் அதற்காக அரசாங்க விடுமுறை விடுவதை விரும்பாதவர். ஆனால் அவரது தொன்னூறு சொச்சம் வயதில் அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளிவர அப்போது இருந்த பிரதமர் இரண்டு நாட்கள் அரசாங்க விடுமுறை அறிவித்தார். ஆனால் அது தவறான செய்தி என்று பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் அதற்கடுத்த இரண்டு நாட்கள் அரசாங்க விடுமுறை.. மூன்றாவது நாள் உணமையாகவே தேசாய் இறந்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் மீண்டும் அரசாங்க விடுமுறை.. இப்படியாக தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் அரசாங்க விடுமுறையாகிப் போனது.. விடுமுறையை விரும்பாத தேசாய்க்கு ஒரு வாரம் விடுமுறை என்பது எவ்வளவு முரணான செய்தி என்று முதித்துக் கொண்டார்.

என்பத்தியாறு வயதில் கொஞ்சம் கூட கோபப்படாமல், ஒலிப்பதிவில் எவ்வித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்று மிகுந்த சிரமத்திற்கிடையில் கதை சொல்லிப் பகுதியை இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மிக சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் பல.

இனி அவரது கதைகளை கொஞ்சம் கேளுங்கள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்)



கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_7.php