Monday, February 14, 2011

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (17)மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (17)

வெங்கட் சுவாமிநாதன்

தமிழ் சினிமாவில் பரவலாக அதன் தொடக்கத்திலிருந்தே காணும் பல அவலங்களை, அதன் குணத்தையே தொடர்ந்து நிர்ணயித்து வரும் அவலங்களைக் கண்டாலும் அவை பற்றி நினைத்தாலும் நான் மிகவும் சுருங்கிப் போகிறேன். மனத்தளவிலும் நினைப்பளவிலும். இது எனக்கு நேர்ந்துள்ள, எனக்கே நேர்ந்துள்ள மனவியாதி அல்ல. இன்னமும் தமிழ் சினிமாவும் அரசியலும் பாதிக்காது மன ஆரோக்கியமோ உடல் ஆரோக்கியத்தையமோ க்ஷீணித்துப் போகாது பார்த்துக்கொள்ளும் ஜீவன்கள் யாரும் மனம் சுருங்கி உடல் குறுகித் தான் போவார்கள். கூவத்தின் கரையில் வாழ்வதற்கும் உடல், மனப் பயிற்சி வேண்டும் தானே.. அது டிவி செட்டும், வோட்டுப் போட ஆயிரங்கள் சிலவும், கிடைத்துவிட்டால் அது அந்த பயிற்சி பெற்றதற்கான பரிசு என்று தான் சொல்லவேண்டும். தமிழ் சினிமா பற்றியோ, அரசியல் பற்றியோ பேசும்போது இந்த மொழியில், படிமங்களில் தான் நான் பேசத் தள்ளப்படுகிறேன். ஆனால் இந்த சாக்கடையில் உழன்று சுகம் காணும் ஜீவன்கள் அவரவர் ஆளுமைக்கும் பிராபல்யத்துக்கும் ஏற்ப இந்த சமூகத்தையும் ஆபாசப்படுத்தி வருகிறார்கள். வோட்டுக்களும் பிராபல்யமும் நம் ஜனநாயகத்தைத் தீர்மானிப்பதால், சினிமாவின் அவலங்கள் அரசியலுக்கும் அரசியலின் அவலங்கள் சினிமாவுக்கும் பரவி ஒரு மட்டத்தில் இது சினிமாவா இல்லை அரசியலா என்று இனங்காட்டி பிரிக்க முடியாதவாறு ஒன்று கலந்து விட்டதையும் பார்க்கிறோம். பராசக்தி படத்தை இன்றும் ஒரு மைல்கல்லாக, ஒரு க்ளாசிக் என்று தான் மதிப்பிடுகிறார்கள். அந்தப் படம், கோர்ட்டில் சிவாஜி கணேசனின் உரத்த வாக்குமூலம் சினிமாவா, அரசியலா? அதை எழுதிய போது கருணாநிதி அரசியல் வாதியாக தன்னை எண்ணிக்கொண்டாரா, இல்லை சினிமா கதையாசிரியராகவா?

இன்று காலை தற்செயலாக விவேக் ஒரு படத்தில் அந்த கோர்ட் பிரசங்கத்தை ஒட்டி மூச்சு விடாமல் 15 நிமிஷம் கதறித் தள்ளிய காட்சியைப் பார்த்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. அது நகைச்சுவைக் காட்சிகளையே கொண்ட ஒளிபரப்புப் பகுதி. சாதாரணமாக விவேக்கின் காமெடி எனக்குப்பிடிக்காது ஆனால் அவர் திறமை இந்தக் காட்சியில் எனக்குப் பிடித்ததாக இருந்தது.. அதே உரத்த குரல், அதே கேள்விகள், அதே பதில்கள் அதே அடுக்கு மொழிகள். நகைச்சுவைப் பகுதியாதலால் அது கிண்டல் என்று எனக்கு மாத்திரம் அல்ல, தொலைக்காட்சிக்காரர்களுக்கும் அது கிண்டல் வகையைச் சார்ந்ததாகத் தான் பட்டிருக்க வேண்டும். அது கிண்டல் தான் என்றால், அந்தக் கிண்டல், சிவாஜி கணேசனின் நடிப்பைக் கிண்டல் செய்ததா. இல்லை, அந்த புகழ்பெற்ற அறைகூவலைக் கிண்டல் செய்தாரா, இல்லை பாராட்டுதலாகத்தான் காப்பி அடித்தாரா? அது சினிமாவா? இல்லை, அரசியலா? அதைப் பாராட்டு என்று நினைத்துத்தான் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கு உரியவரானாரா? உலக நாயகன் பராசக்தி வசனத்திலிருந்து தான், தான் சினிமா நுணுக்கங்களையும் தமிழையும் கற்றதாகச் சொல்லும் போது, அது அரசியலா, இல்லை சினிமா ரசனையா? முதல் அமைச்சர் நினைத்த போதெல்லாம் சினிமாக் காரர்களுக்கு சலுகைகளாக வாரி வழங்கிக்கொண்டு வருகிறாரே, அந்த ஒவ்வொரு சலுகை அறிவிப்பும் அவருக்கு சினிமாககாரர்கள் தரும் பிரம்மாண்ட பாராட்டு விழாவில் முடிகிறதே, அந்த ஒவ்வொரு பாராட்டு விழாவும் அனேகமாக நாள் முழுதும் நீடிக்கும் குத்தாட்ட விழாவாகவே முடிகிறதே, அது சினிமா ரசனையா?, இல்லை அரசியலா? இல்லை நாள் முழுதும் குத்தாட்டம் பார்க்கக் கிடைத்த ஒரு வாய்ப்பா? இல்லை அது குத்தாட்ட அழகிகள் தமிழக அரசியலுக்குத் தரும் பங்களிப்பா? தமிழகத்தில் இலக்கியம் மாத்திரம் அல்ல, சினிமா, அரசியல், பாராட்டுவிழா, குத்தாட்டம் எல்லாமே பன்முக பரிமாணம் பெற்றுத் திகழ ஆரம்பித்துவிட்டனவே, இதுவே தமிழ்க் கலை வாழ்க்கையில் எல்லோரும் எப்போதும் சொல்லிப் பெருமைகொள்ளும் பொற்காலத்தில் வாழ்கிறோமோ ஒருவேளை?

கடந்த பகுதியில் நான் உலக நாயகனையும் சூப்பர் ஸ்டாரையும் மாத்திரம் எடுத்துக்கொண்டு சில அபிப்ராயங்களைச் சொன்னேன். அவர்களை இரண்டு பெரும் பிரிவுகளுக்கு பாரிய உதாரணங்களாகத் தான் எடுத்துக்கொண்டேன். இடைப்பட்ட பல புள்ளிகளும் உண்டு. அவர்களைப் பற்றி நான் பேசாததால், அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று அர்த்த மில்லை. ஒவ்வொருவரிடமும் உலக நாயகனின் தன் மிதப்பும், உண்டு. சுப்பர் ஸ்டாரின் சாகஸக்காட்சிகளும் கொஞ்சம் கூட குறைய உண்டு. யாரையும் நடிகர் என்று சொல்ல லாயக்கில்லை

ரசிகர்களின் கனவுலகப் பிரமைகளுக்கும், மூடை மூடையாக பணம் பண்ண வந்த தயாரிப்பாளர்களின் கயிற்றசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைகள் தான். தயாரிப்பாளர்களும் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற உலக நாயகன், சூப்பர் ஸ்டார் ஆகிய இரண்டு பெரும் மாடலகளின் லீலைகளை வசதிக்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து உபயோகப் படுத்திக்கொள்வார்கள். ஆக, இதைச் சொல்ல ஒவ்வொருவரையும் பற்றி விளாவாரியாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு பலர் பின்னோட்டமாக எழுதும் அபிப்ராயங்களைப் படிக்கும் போது, நான் எழுதுவதை அவர்கள் எதிர்கொள்வதே இல்லை என்று தெரிகிறது. சூப்பர் ஸ்டாரை, நான் தனிமனிதராக மதிக்கிறேன் என்று சொல்லி விட்டதில் அவர்கள் புளங்காகிதமடைந்து விடுகிறதைப் பார்க்கிறேன். அவர்களுடைய பாலாபிஷேக மூலமூர்த்தியைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை சொல்லி விட்டேனே, அது போதும் அவர்களுக்கு. சூப்பர் ஸ்டாரை யாரும் முக்கியமாக மதிக்க வேண்டியது அவரிடம் இருந்திருக்க வேண்டிய, ஆனால் இல்லாது போய்விட்ட அவரது நடிப்பாற்றலுக்காகத்தான்., அவர் தன் சினிமாக்களில் முன் வைத்திருக்க வேண்டிய சமூக மதிப்புகள் சார்ந்த பார்வைக்காக. வாழ்க்கை விமர்சனத்துக்காகத்தான்.

கலை சார்ந்த இந்த குணங்களுக்காகத்தான், எந்தக் கலைஞனும் பாராட்டப்பட வேண்டியவனாகிறான், அவன் எந்தக் கலைத்துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி. அப்போது தான் அவன் கலைஞனாகிறான். இதே போலத்தான் உலகநாயகனின் பக்த கோடிகளும், கமலிடம் நடிப்புத் திறமையைக் காண்கிறேன் என்று சொல்லிவிட்டேன். உடனே, கமலைப்பாராட்டி விட்டேன் என்று ஆற்றில் மிதக்கிறவனுக்கு பற்றிக்கொண்டு மிதக்கவாவது ஏதோ கிடைத்துவிட்ட பரவசத்தில் காவடி எடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவரது நடிப்புத் திறன் சுயமோகத்தில் தன் கலையையும் இழந்து, முதலும் முடிவுமாக தன் மனிதத்துவத்தையும் இழந்து ஒரு அருவருக்கத் தக்க ஆபாச கலாசாரத்தில் தானும் மூழ்கி தமிழ் சமுகத்தையும் மூழ்க அடித்துவிட்டதாக நான் குற்றம் சாட்டியதை இவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதைத் தான் மிக ஆபாசமான சினிமா, அரசியல் கலாசாரம் என்று சொல்கிறேன்.

இப்படி தன் ஆபாசத்தைப் பற்றி ஏதாவது ஒரு நல்ல வார்த்தையாவது கிடைக்காதா என்ற தவிப்பு தான் இவர்களை தமிழ் சினிமா மாத்திரமா இப்படி?, இதே ஃபார்முலா தானே ஹிந்தி சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் என்று கேட்கும் பரிதாபம் நேர்கிறது. வாஸ்தவம். தெலுங்கு சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வேளை இன்னம் மோசமாகக் கூட இருக்கும் என்கிற சாத்தியத்தையும் நான் மறுக்கவில்லை. கன்னட சினிமாவிலும் தமிழ் சினிமாவின் கூறுகள் உண்டு. அதன் வெகுஜன சினிமாவும் தமிழ் சினிமாவைப் போல் தான். அங்கும் ஒரு ராஜ் குமார் உண்டுதான். நடிகர் திலகங்களும் சூப்பர் ஸ்டார்களும் நம் தமிழ் நாட்டுக்கே தரப்பட்ட ஏக போக குத்தகை அல்லர். ஆந்திரா என்.. டி ராமராவுக்கு கோவில் கட்டிய கலாசாரம் தான் தமிழ் நாட்டு சினிமா கலாசாரம் முழுதுமாக வெகுஜன கவர்ச்சி பெற்ற இடம் தான் அது. தமிழ் நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் சினிமா இன்னும் பல விஷயங்களில் கொடுக்கல் வாங்கல் நிறையவே இருக்கின்றன, இது ஆந்திரா, இது தமிழ் நாட்டு சமாசாரம் என்று பிரித்தறிய முடியாதவாறு. ஆனால் அங்கு ஒரு குக்குனூரையும் காணலாம். அவருடைய ஹைதரபாத் ப்ளூஸ், இக்பால், ஆஷாயே(ன்) போன்ற படங்கள் தமிழ் சினிமா போன்ற ஒரு அருவருக்கத்தக்க ஆபாச கலாசாரத்திலிருந்து மீண்டு இங்கு வித்தியாசமாக சிந்திப்பவர்களும் உண்டு, சூழலை மாற்ற வேண்டும் என்ற ஆசையில் தன் எளிய ஆரம்ப முயற்சிகளை இந்த படங்களில் காணலாம். அங்கு ஒரு ராம் கோபால் வர்மாவையும் காணலாம். அவர் ஹிந்தி சினிமாவின் ஃபார்முலாவை முழுமையாக ஸ்வீகரிக்காமல், முற்றாகவும் விலக்காமல், அதே சமயம் வித்தியாசமான கதைகளையும், வித்தியாசமான கதை சொல்லும் பாணியையும் கையாண்டு, ஃபார்முலாவுக்குப் பழக்கப் பட்டவர்களை சினிமா தியேட்டருக்குள் அழைத்து வித்தியாசமான சினிமா அனுபவத்தை ஒரு இரண்டும் கெட்ட நிலையில் சினிமா கலாசாரத்தை நகர்த்திக்கொண்டு செல்கிறார்.

அது அவரால் ஹிந்தி சினிமாவில் செய்ய முடிகிறது என்றால்; அதற்குக் காரணம், ஹிந்தி சினிமாவின் ஒரு சத விகித பார்வையாளர்கள் இதற்குப் பழக்கப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதற்கு அவர்களைத் தயார் செய்தது, ஆரம்ப காலத்தில் ஜோகன் பற்றிச் சொன்னேனே, அதைத் தொடர்ந்து பிமல் ராய், கமால் அம்ரோஹி போன்றவர்கள் தமக்கென ஒரு சாத்தியப்பட்ட வித்தியாசமான ரசிகர் கூட்டத்தை உருவாக்க முயற்சி செய்ததும் அவர்களைத் தொடர்ந்து, ஷ்யாம் பெனெகல் போன்றோ ஒரு இடைப்பட்ட சினிமா கலாசாரத்தை உருவாக்கியதும் தான். ஒரு சினிமா கலாசாரத்தில் எல்லா தயாரிப்பாளர்களும், 150 கோடி ரூபாய் முதலீடு செய்து 300 கோடி சம்பாதிக்கவேண்டும் என்றும் ஒவ்வொரு சினிமா நடிகரும் தனக்கு 10 கோடி 25 கோடி சம்பாத்தியம் தரும் சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்றும், தன் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும், மொட்டை அடித்துக்கொண்டும் காவடி எடுத்துக்கொண்டும் தன் பட ரிலீஸ் கொண்டாடப்பட வேண்டும் போன்ற கனவுகளுடன் தமிழ் சினிமா ரசிகர்களை அதல பாதாள சாக்கடைக்குள் தள்ளிக்கொண்டே இருப்பார்களானால், அதுவே நம் சினிமா கலாசாரமும்.

ஆனால், ஒரு ராம் கோபால் வர்மாவையோ, குக்குனோரையோ நாம் நம் தமிழ் சினிமாவில் காண இயலாது. தெலுங்கில் இல்லையா?, ஹிந்தி சினிமாவில் என்ன வாழ்ந்தது? என்று கேள்விகள் எழுப்புகிறவர்கள் எல்லாம் ஏன் வங்காளத்தையோ, மலயாளத்தையோ, கர்நாடகாவையோ குறிப்பிடவில்லை. இந்தியா முழுதிலும் ஒவ்வொரு இடத்துக்கும் உரிய ஃபார்முலாக்கள் உண்டு தான். இதையும் ஒரு பெரிய சூதாட்ட வியாபாரமாக சரக்கு உற்பத்திக்களமாக ஆக்குகிறவர்கள் உண்டு தான். வங்காள சினிமா முழுதுமே சத்யஜித் ரேயும், ரித்விக் காடக்கும், அபர்ணாசென்னும், ரிதுபுர்ணோவும் மிருணால் சென்னுமாக நிறைந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு வங்காளியும் பேசுவது பெருமை கொள்வது, உலக அரங்கில் தன்னது என்று முன் வைப்பது இவர்களைத் தான். அந்த ஊரிலேயும் சிம்புவும், பீம்சிங்குகளும், சரோஜா தேவிகளும், உண்டு தான். அவர்கள் தேவகி போஸும் ரித்விக் காடக்கும் வாழ்ந்த இடத்தில் தம் கடை பரப்பக் காரணம், ராஜ்கபூர், தேவ் ஆனந்து, ராஜேஷ் கன்னாக்களும் கல்கத்தா தியேட்டர்களுக்கு நுழையவே அவர்களுக்கான மார்க்கெட்டும் அங்கு உருவாயிற்று. அவர்கள் நுழைந்ததும் அந்த ரக சரக்குகளைத் தவிர வேறு எதையும் சந்தைக்குள் நுழைய விடாது வங்க சினிமா கலாசாரமே ராஜேஷ்கன்னா, மும்தாஜ் கலாசாரமாகிவிடவில்லை. இப்போதும் சத்யஜித் ரேயும் மிருணால் சென்னும் உருவாக்கிய சினிமா ஒரு வாழும் மரபாக, வளமான மரபாகத் தொடர்கிறது. இன்றும் அங்கு ஒரு ரிதுபூர்ண கோஷைக் காணலாம்.

இப்படித்தான் ராஜ் குமார் வகையறாக்கள் சூப்பர் ஸ்டார் ஆன போதிலும், ராஜ் குமார் பெயர் சொன்ன மாத்திரத்தில் கன்னட சினிமாவே வெறிபிடித்து சாமியாடத் தொடங்கினாலும், அங்கு ஒரு கிரீஷ் காஸரவல்லியும் உண்டு. அவர் போல கர்னாட், பி.வி. காரந்து என்று ஒரு சிறிய கூட்டம் உண்டு. ராஜ் குமார் பக்த கோடிகள் வேறு யாரையும் வாழவிடாது செய்துவிடவில்லை.

மலையாள சினிமாவைப் பற்றி கமல் சாரின், ரஜினி சாரின் பக்த கோடிகள் பேச்சு எடுக்கவில்லை. வங்க சினிமாவைக் கெடுத்த ஹிந்தி சினிமா பற்றிச் சொன்னேன். அது போலத்தான், மலையாள சினிமாவைக் கெடுத்ததும் தமிழ் சினிமா கலாசாரம் தான். அங்கும் குத்தாட்டங்களும், ஸ்டண்ட் காட்சிகளும் மலையாள வெகு ஜன சினிமா கலாசாரமாகிவிட்டது தான். ஆனால், அங்கு ஒரு தனி உலகம் உண்டு தான். அந்தத் தனி உலகத்துக்கும் மலையாள சந்தையில் இடம் உண்டு. அது இன்னமும் தன்னை தமிழ் சினிமா ஆபாசத்துக்கு முற்றிலுமாக இழந்து விடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், மம்மூட்டியும், மோகன்லாலும் தமிழ்ப் படங்களிலும் நடித்தாலும், தமிழ்ப் படங்களில் எப்படி மிகையாக நடிப்பதும், தமிழ் சினிமாக் கதைகளே எல்லாம் கார்ட்டூன்களாக மிகைகளாகத் தானே. சீரழிந்துள்ளன. அவற்றில் இயல்பான வாழ்க்கையின் அழகும், உயிர்ப்பும் ஏது? சிவாஜி கணேசன், தமிழ் சினிமா ரசிகர்களைக் குஷிப் படுத்தி, குஷிப்படுத்தி தன் வாழ் நாளில் பெரும்பகுதியைக் கழித்த காரணத்தால், அந்த அபத்த மிகை நாடகத் தனம் அவரை நடிகர் திலகமாகவும் ஆக்கிவிட்ட கள் மயக்கத்தில், சினிமா ஷூட்டிங்குக்கு வெளியே உள்ள உலகத்திலும், சாதாரண வாழ்க்கையிலும் சினிமாவில் நடிப்பது போன்ற நாடக பாவனையில்தான் நடப்பார், பேசுவார் முக பாவனைகளோடு கைகால்களை அபிநயிப்பார் என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். இந்த சமாசாரம் வெளியே நிறைய பரவியிருப்பது, ஹிந்தி சினிமா நக்ஷத்திரம் ஒருவர் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் இதைப் பற்றிச் சொன்னபோது தெரிந்தது. இந்த கண்றாவியை நம் சினிமா ரசிகர் பட்டாளம் கேட்டால் என்ன செய்வார்கள்? மெய் சிலிர்த்துப் போவார்கள். ஆகா, நம் நடிகர் திலகம் பிறவிக் கலைஞர் அல்லவா? வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நடித்துக்கொண்டே இருக்கிறார். அதுவல்லவோ கலை வாழ்க்கை. கலைக்குச் சேவை. அவர் என்ன பணத்துக்காகவா சினிமாவில் நடிக்கிறார்? என்று மாய்ந்து போவார்கள்.

அப்படி அல்ல. மோகன் லாலும் மம்மூட்டியும் தமக்குள் சிரித்துக் கொள்வார்கள், தமிழ் சினிமாவில் நடிக்கும் போது என்று தான் நினைக்கிறேன். ”இந்த பாண்டிக்காரனுகளே ஒரு மாதிரிதான், கேட்டியா சேட்டா? என்று தமக்குள் பரிமாறிக்கொண்டால் அது நாம் ஆச்சரியப்படவேண்டிய விஷயமாக இராது. மலையாள சினிமாவில் கதை என்றால், நடிப்பு என்றால் அவர்கள் கொள்ளும் அர்த்தம் முற்றிலும் வேறாகத்தான் இருக்கும். அங்கும் தமிழ் சினிமாவின் வெகுஜன குணத்தின் தாக்கம் உண்டு தான். அதற்காக அவர்கள் தம் கலை பிரக்ஞையை இழந்து விடவில்லை. வைக்கோலுக்கும் சேமியாவுக்கும் வித்தியாசம் அவர்களுக்குத் தெரியும். வெகுஜன பாமர ரசனைக்கும் தீனி போட வேண்டும் தான். பாமர ரசிகர்களுக்கும் அவர்களது இப்போதைய ரசனைக்கு ஏற்ப சந்தோஷிக்க சரக்குகள் வேண்டும் தான். அதற்காக அதைத் தவிர வேறு எதுவும் உலகத்தில் இருக்கக் கூடாது என்ற தமிழ் சினிமா கலாசாரம் அங்கு இல்லை.

தமிழ் சினிமாவுக்கு ஏற்ப அவர்கள் தம்மை தமிழ் ரசனைக்கு மாற்றிக்கொண்டாலும், மலையாள சினிமாவில் அவர்கள் தம் இயல்பில் தான் இருக்கிறார்கள். மலையாளத்தில் உருவான படங்களைத் தமிழில் எடுக்கும் போது அதைத் தமிழ் சினிமாத்தனத்துக்கு மாற்ற வேண்டியிருக்கிறது. சிவாஜி, சந்திர முகி போன்ற படங்கள் அவற்றின் மலயாள மூலத்தில் உள்ள குணத்திற்கும் தமிழில் நம்ம சூப்பர் ஸ்டாரின் இமேஜைக் காப்பாற்ற, அவர் தம் பக்த கோடிகளான ரசிகர்ளையும் குஷிப்படுத்த செய்த மாற்றங்களை மனதில் கொள்ளலாம். எதாக இருந்தாலும், நம் ஊருக்குக் கொண்டு வந்தால் அதை நம் ரசனைக்கேற்ப மாற்றித் தான் ஆகவேண்டும். நமக்கு வேண்டிய நமக்கு ஏற்ற தீவனத்தைத் தானே நமக்குக்கொடுப்பார்கள்.

பாலு மகேந்திராவும் கூட நம் சினிமாவில் ஒரு மாற்றத்தைக் கொணர விரும்பினார். அவரால் சில மாற்றங்களை, சினிமாவுக்கு ஏற்ற கதை சொல்லும் முறைகளை, நம் வாழ்க்கையை ஒட்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர முயன்றார் தான். கன்னடத்தில் கிரீஷ் காஸரவல்லியும் மலையாளத்தில் அரவிந்தன், ஏன் தெலுங்கில் கூட குக்குனூர் போன்றோர் முயன்றது தான். ஆனால் இன்று பாலு மகேந்திராவைக் கொண்டாடுவாரும் இல்லை. வரவேற்பாரும் இல்லை. அவர் பெயரைச் சொல்வாரும் இல்லை. அவர் போன இடம் தெரியவில்லை. பாலு மகேந்திரா மலையாளத்தில் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதில் அவர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைத் தமிழில் அவரால் எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

from: www.thamizhstudio.com


No comments:

Post a Comment