Tuesday, February 15, 2011

சொல்லின் வனப்பே வனப்பு - 1சொல்லின் வனப்பே வனப்பு - 1

கவிஞர் சுகுமாரன்

தி.ஜானகிராமன் 'எழுதுவது எப்படி?' தொகுப்பு நூலின் முதல் பாகத்தில் சிறுகதை எழுதுவதைக் குறித்த கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 'யாராவது சிறுகதை எழுதும்படிச் சொன்னால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதுபோல ஆகிவிடுகிறது.' இந்த வரிகளை எழுதிய தருணத்தில் அவர் தன்னுடைய மிகச் சிறந்த சிறுகதைகளை எழுதி முடித்திருந்தார். தமிழில் மிக முக்கியமான சிறுகதையாளர்களில் ஒருவராகப் பாராட்டுப் பெற்றிருந்தார்.அவரது வயிற்றுக் கலக்கத்துக்குக் காரணம், தனது ஊடகத்தின் இலக்கணம் புரியாதது அல்ல; பொதுவாக படைப்பாளிக்கு நேரும் மனச்சிக்கல்தான் அந்த வரிகளுக்குப் பின்னாலிருப்பது. ஒரு நல்ல படைப்பை உருவாக்கிய எழுத்தாளனிடம்/ கவிஞனால் அந்தப் படைப்புக்கு ஆதாரமாக இருந்த உணர்வெழுச்சியையும் பின்புலத்தையும் அது உருவான விதத்தையும் பற்றிப் பேச முடிகிறது. ஆனால்,அது எப்படி நல்ல படைப்பு என்ற கேள்விக்கு எல்லாரும் ஏற்கும்படியான விடையைக் கண்டுபிடிப்பது கடினம். என்னுடைய மிகச் சிறந்த கவிதையை இன்னும் கண்டடையாத நிலையில் கவிதையைப் பற்றிப் பேசும்போது எனக்கும் இந்த மனக் கலக்கம் இருக்கிறது.

எது கவிதை? என்று விளக்குவது எளிதல்ல என்று எண்ணுகிறேன். வேறு எந்த இலக்கியப் பிரிவை விடவும் கவிதைக்குத்தான் ஏராளமான அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை ஒவ்வொன்றும் அந்தந்தக் கவிஞனின் எதிர்பார்ப்பைச் சார்ந்தது. (பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்' - பாரதி), அவனுடைய ஊடகப் புரிதலைச் சார்ந்தது ('என்னை அழிக்க யாருண்டு/ எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்' - சுந்தர ராமசாமி).அவனுடைய நோக்கங்களைச் சார்ந்தது (சிந்தனை/தெளிவு/ சிக்கனம்/ஆனந்தம்/கவிதை - ஞானக்கூத்தன்) சமயங்களில் அவனுடைய மிகையுணர்வைச் சார்ந்தது ('இந்த பூமி உருண்டையைப் புரட்டி விடக் கூடிய நெம்புகோல் கவிதை' - மு.மேத்தா). இவ்வளவு வகைப்பாடுகளை முன்வைப்பதை விட எது கவிதையல்ல என்று சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால் அந்த விளக்கமும் தற்சார்பானது.

பத்திரிகையாளனாக இருந்த நாட்களில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தன்னைப் பற்றி எழுதக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். அவருடைய விசித்திரமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எழுத வேண்டும். அவருடைய அன்றாட உணவு கல்லும் மண்ணும் சவரத் தகடுகளும். நம்மைப் பொறுத்து அவையெல்லாம் உணவே அல்ல. ஆனால் அவருடைய உணவுப் பழக்கத்தைக் குறைகூற நம்மால் முடியாது. அதை விசித்திரமான பழக்கம் என்று விலக்கி வைக்கிறோம். உணவுப் பழக்கம் பற்றிய பேச்சில் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை.மாறாக மனிதர்கள் உண்ணும் உணவைக் குறித்தே நாம் பேசுகிறோம். இலக்கியத்துக்கும் குறிப்பாகக் கவிதைக்கும் ஓர் இலக்கியப் பொது மரபு இருக்கிறது. விவாதங்கள் அதையொட்டியே அமைகின்றன. இந்த மரபு சமூக நகர்வுகளையும் மொழியில் ஏற்படும் மாறுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இதிலிருந்துதான் கவிதைக்கான மொழி - கவிதை மொழி (Poetic Idiom) உருவாகிறது. இதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஒரு புதிய வாசகன் கவிதையை அதன் புற வடிவம் சார்ந்தே அணுகுகிறான். அவனுக்குத் தகவல்கள் தரும் ஒரு வடிவத்திலிருந்து வேறுபட்ட ஒன்றையே அவன் கவிதையாகக் காண்கிறான். 'டாலிஸ்மான்' என்ற ஆங்கிலச் சிறு பத்திரிகையின் சமீபத்திய இதழில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. அதன் மொழிபெயர்ப்புப் பின் வருமாறு:

ஒன்று இரண்டு மூன்று
நான்கு ஐந்து ஆறு
ஏழு எட்டு ஒன்பது
பத்து பதினொன்று.

இதைச் சட்டென்று பார்க்கும்போது தென்படும் புற வடிவம் கவிதை என்று சந்தேகம் கொள்ளச் செய்கிறது.அப்படிச் சந்தேகப்படும் பிராணியே கவிதைக்கான வாசகன்.

கவிதையில் உருவம் உள்ளடக்கம் என்று பேசப்படுபவை இந்தப் புறவடிவம் சார்ந்ததல்ல. இது பற்றிய மயக்கம் கவிதை எழுதுபவர்களுக்கும் கவிதையை ஆய்வு செய்பவர்களுக்குமே இருக்கிறது.

தமிழில் புதுக் கவிதை அறிமுகமானபோது நிகழ்ந்த விவாதங்கள் அனைத்தும் இந்தப் புற வடிவம் சார்ந்ததாகவே இருந்தது என்று இப்போது தோன்றுகிறது. புதுக்கவிதை மரபுக்கு எதிரானது என்று பண்டிதர்களும் கவிதைக்கு மரபு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நவீனர்களும் முட்டிக் கொண்டனர். இருதரப்பினரும் செய்யுள் என்ற புற வடிவத்தையே முன்வைத்துச் சர்ச்சையில் ஈடுபட்டார்கள் என்று இப்போதைய சிந்தனையில் புலனாகிறது. இருதரப்பினரும் அவரவர் பக்கத்து வாதங்களை வைத்தனர். புலமையாளர்கள் நவீனர்களை இலக்கிய விலக்குச் செய்தனர். புலமையாளர்கள் சொல்வதில் பொருள் பொதிந்த ஏதாவது இருக்கலாமோ என்ற சந்தேகம் கொண்ட நவீனர்களில் சிலர் 'எங்களுக்கும் யாப்பிலக்கணம் தெரியுமாக்கும்' என்று நிரூபிப்பதற்காக மரபு வடிவில் எழுதவும் முயன்றார்கள். புதுக்கவிதை முன்னோடியான ந.பிச்சமூர்த்தி ''குயிலின் சுருதி' என்ற செய்யுள் தொகுப்பையே வெளியிட்டார். இந்த விவாதத்தில் கவனம் கொள்ள வேண்டிய அம்சங்கள் இரண்டு. ஒன்று: கவிதை என்பது வடிவம் சார்ந்தது மட்டுமல்ல. அது சிந்தனையும் உணர்வும் சார்ந்தது. இரண்டு: ஒவ்வொரு காலப் பகுதியிலும் எந்த இலக்கிய நடைமுறை பரவலாக இருக்கிறதோ அதில்தான் படைப்புகள் உருவாகும். நவீன காலத்தின் நடைமுறை உரைநடையைச் சார்ந்தது. எனவே கவிதை உரைநடையில் எழுதப்படுவதே பொருத்தம். தவிர தமிழில் இதுவரை எழுதப்பட்டிருக்கும் இலக்கணம் செய்யுளுக்கானது. அதில் புதிய நடைமுறையைப் பொருத்திப் பார்ப்பது வியர்த்தம். இந்த நுட்பம் புரியாமல் போனதன் மூலமே வரிகளை மடக்கிப் போட்டால் அது புதிய கவிதை என்ற நம்பிக்கையும் அவநம்பிக்கையும் உருவானது.

ஆனால் கவிதை இதைக் கடந்தது. ஒரு மொழியின் உள்ளார்ந்த மரபு எப்போதும் புதுமையையே வேண்டி நிற்கும். வடிவத்திலும் சிந்தனையிலும் புதியவற்றுக்கே இடம் கொடுக்கும். அவையே படைப்பு என்று அறியப்படும். இது மொழியியல்பு. ஒரு மனிதன் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபட்டவனாக அறியப்படவும் அறிவிக்கவுமே விரும்புவான. இது மனித இயல்பு. இவைதாம் கவிதையைத் தூண்டும் கூறுகள்.

மரபான செய்யுள் வடிவம் அளித்ததை விட உரைநடை வடிவம் இலக்கணம் பயின்றிராத ஆர்வலனுக்குத் தன்னுடைய சிந்தனையை, உணர்வைக் கவிதையில் எழுதும் சுதந்திரத்தைத் தந்தது. இந்த அர்த்தத்தில் புதிய கவிதை ஜனநாயகத்தன்மை கொண்டது. அந்த ஜனநாயகத்தன்மையே கோளாறுகளையும் கொண்டு வந்தது. எல்லாரும் அரசியலில் ஈடுபடலாம் என்பது சுதந்திரம். சமூக நோக்குள்ளவர்கள் ஈடுபட வேண்டும் என்பது பொறுப்பு. சமூகத்தைச் சுரண்டுபவர்களும் ஈடுபடலாம் என்பது குறைபாடு. எல்லாரும் கவிதை எழுதலாம். ஆனால் அதிலும் கவிதையும் கவிதைப் போலிகளும் உள்ளன. அதை இனங்காண முடிகிற ஆர்வலனே கவிதையை வாழச் செய்கிறான். சரி, ஒரு கவிதையை இனங்காண்பது எப்படி?

தந்தையே,
நீங்கள் கொடுத்து சென்றது
அட்சயபாத்திரம்
எங்கள் கையில் இருப்பதோ
பிச்சைப்பாத்திரம்.

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்

என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல்தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒருபிடி நிலம்.

மேலுள்ள இரண்டு பகுதிகளில் எதைக் கவிதை என்பீர்கள்?


from :

No comments:

Post a Comment