Tuesday, February 8, 2011

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -3ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -3

செல்வியும் சிவரமணியும் – சொற்களால் நிலம் கவர்ந்தவர்கள்

குட்டி ரேவதி

செல்வி

ஆதிக்க சமூகத்தினுடைய இலக்கியங்கள் தாம் இன்றுவரை உயிர்வாழும் தகுதியைப் பெற்றிருக்கின்றன. இது, சங்க இலக்கியங்களுக்கும் பொருந்தும். காலந்தோறும் அரசு மற்றும் இதர சமூக நிறுவனங்களின் அதிகார நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடுகளுக்கும் தக்கபடி தமது கருப்பொருட்களையும் வடிவ உத்திகளையும் கையாண்ட இலக்கியங்கள் தாம் வாழும் தகவமைப்பைப் பெறக்கூடிய வாய்ப்பையும் பெற்றிருக்கின்றன. சமகாலத்திலும் கூட அதிகார அரசின் சமர்ப்பணங்களுக்கு உள்ளாகிய படைப்புகளையும் நாம் அடையாளம் காட்டமுடியும். இத்தகைய சமரசங்களுக்கு ஆளாகாமல், அதே சமயம் சமூகத்தின் புண்களையும் சொறிந்து கொடுக்காமல் படைப்பாக்கம் பெறும் மொழியின் பயன்பாடுகள் முற்றிலும் வேறானவை. ஒடுக்கப்பட்ட உயிரினமாய் இருக்கும் பெண்ணின் மொழி சமூகத்தில் பெறும் பயன்பாட்டிலும் செயல்பாட்டிலும் முக்கியமான ஒன்றாய், நான் இங்கே குறிப்பிட விரும்புவது, மொழியின் வழியாக, அதிலும் தாங்கள் கூர்மைப்படுத்தி வழங்கும் சொற்கள் வழியாக அவர்கள் தங்களுக்கான மண்ணைத்தான் முதலில் உடைமையாக்க விரும்புகிறார்கள். விட்டு விடுதலையாகித் தெறிக்கும் சொற்களினும் பெரிய, தீவிரமான இயக்க நடவடிக்கை ஏதுமில்லை.

இத்தகையதொரு சித்தாந்தத்தை தம் உடல் வழியாக உள்வாங்கி, தம் சொற்கள் வழியாக பெருங்குரலெடுக்கச் செய்தவர்கள் தாம் செல்வியும் சிவரமணியும். இவர்கள் இருவருக்கும் இடையே இலங்கும் ஒற்றுமை என்பது ஈழத்தில் தோன்றிய கவிஞர்கள் என்பது மட்டிலுமே. மற்றபடி, படைப்பின் அகன்ற வெளியிலும் ஆளுமையிலும் தங்களுக்குள் செழுமையாக்கி வைத்திருந்த கருத்தாக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

1996-ல் வெளிவந்த செல்வி சிவரமணி கவிதைகள் எனும் நூல் தமிழ்ச்சமூகத்தில் மிகத்தொடர்ச்சியான, அதே சமயம் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை உருவாக்கின. செல்வியின் எட்டு கவிதைகளும் சிவரமணியின் இருபத்தியிரண்டு கவிதைகளும் அடங்கிய சிறு தொகுப்பு அது. அவர்கள் இருவரையும் ஒரு சேர நான் இங்கே முன்வைப்பதற்கு காரணம் அந்நூலின் வழியாக அவர்கள் தமிழ்ப் பெண்கவிதையின் மீது நிகழ்த்திய தாக்கமும் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பமுடியாத சிதைப்பும் தாம்.

இராமனே இராவணனாய்

…………………………………………………………..

அசோக வனங்கள் அழிந்து போய்விடவில்லை
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல. இராமனே தான்.

இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையில் முதுகுப்புறமாய்
முகமூடிகளை மாற்றிக்கொண்டதை
பார்க்க நேர்ந்த கண்கள்…
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.

…………………………………………………………………………………………….

எனக்குள்ளே…….

…………………………………….

பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
எனது மனமும் கொதிக்கும்; குமுறும்
பார்; நீ – ஒரு நாள்
வாமனன் நானென நினைக்கும் உமது
எண்ணங்கள் யாவையும் பொடிப் பொடியாக்குவேன்

வானமெங்கும் அதற்கப்பாலும்
நீண்டு நீண்டு விரிக்கும் என் கைகள்
பாதாளத்துக்கும் அதற்கும் ஆழமாய்
எனது கால்கள் அழுந்திப் புதையும்
பூமிக்குள் குழம்பெனக் கொதிக்கும் தழல்போல்
சீறியெழுந்து எரிமலையாவேன்

அன்றேயுமது சாத்திரம் தகரும்;
அன்றேயுங்கள் சடங்குகள் மாளும்
இன்னதின்னதாய் இருப்பீரென நீர்
எழுதிய இலக்கியம் நெருப்பினில் கருகும்.
வானம் பொழியும்; எரிமலைக் குழம்பிலே

ஆறுபாயும்-
அதில் நான் நீந்துவேன்-
சமவெளிகள், காடுகள், மலைகள் எங்கும்
தனித்தே சுற்றுவேன்
இனிய மாலை, எழில் மிகு காலை – எல்லாம்
எனது மூச்சிலே உயிர்க்கும்.

இக்கவிதையின் வீச்சு இதுவெளியான காலத்தில் மட்டுமன்று இன்றும் புத்துயிர்ப்புடன் இருக்கிறது. வீட்டின் சுவர்களையும் வேலிகளையும் உடைத்து முறிக்கும் பெண்களுக்கு இடையே, நிலத்தின் எல்லைகளையும் அதன் வரையறைகளையும் கிழித்துப் போடும் ஆவேசமான மூச்சுடன் இவ்வெழுத்துக்கள் எழுதப்பட்டன. இவை இங்கு எழுதிக்கொண்டிருந்த பெண்களிடமும் எழுத வந்த பெண்களிடமும் தம் ‘மண்’, ‘இனம்’ என்ற கருத்தாக்கத்தை எப்படி அணுகுவது, எப்படிச் சிதைப்பது, எப்படி மீண்டும் எழுதுவது அல்லது எப்படி அவர்களின் நினைவுகளுக்குப் பயிலப்பட்டிருக்கிறது என்பதை அறிமுகப்படுத்தியது. இவை தனக்கான நிலத்தைக் கோரும் கவிதைகள்!

இன்றும் தந்தையின் நிலத்தில் பங்கு கேட்கும் உரிமையும் சட்டமும் பெண்களுக்கு இருந்தும் சமூகத்தின் அதிகாரத்தினால் அதை மறுக்கும் புறக்கணிக்கும் நோக்கமும் இருக்கிறது. இது பெண்ணை நிலத்துடன் கால் பதிய விடாமல் எப்பொழுதும் அவளை அந்தரத்தில் இருக்கச் செய்து, பேரம் செய்யும் தந்திரம் தான். இனவொடுக்கு முறையிலும் முதலில் நிலத்திலிருந்து வேரோடு பெயர்க்கப்படுவது பெண்கள் தாம். இதை உணர்ந்த ஈழத்துக் கவிப்பெண்கள் தங்கள் சொற்களாலேயே உறுதியாக நிலம் பற்றிக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொண்டவர்கள்.

விடை பெற்ற நண்பனுக்கு

----------------------------------------------

மின் குமிழ்கள் ஒளியுமிழ
நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்
விரைவில் வருவதாய்
உனது நண்பனுடன் விடைபெற்றாய்.

உன்னிடம் பகிர
எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன
முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்பா.

செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து
வசந்தம் பாடிய குயில்களும்
நீயும் நானும் பார்த்து இரசித்த
கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது
தலையை அசைத்தும்
எனது செய்தியை உனக்குச் செல்லும்.

பருந்தும், வல்லூறும் வானவெளியை மறைப்பதாக
இறக்கையை வலிந்து விரித்தன நண்பா
கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன;
கூடவே சில கோழிகளும்…

இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க
எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.

நடந்து நடந்து வலித்துப் போகும்
கால்களின் மீது படியும் என்
மண்ணின் புழுதியை
முகர்ந்து
வீதியிலன்றி வீட்டினுள்ளும்
முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி
குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு –
இறையைத் தேட,
இறக்கையைக் கிழிக்க-

வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த
கொடுமைகட்கெதிராய்க் கோபம் மிகுந்து
குமுறும் உனது குரலுடன்
குழந்தைச் சிரிப்புடன் விரைந்துவா
நண்பா!

அடர்ந்த மெளனத்தை தனது உணர்வாக்கிக்கொண்டு எழும்பும் இவருடைய ஒவ்வொரு கவிதையிலுமே இம்மெளனமே மொழியாவதை உணரமுடியும். இந்த மெளனம் என்பது அவர்கள் பிறந்த நிலத்தைப் பொறுத்தவரை இன்னொரு தாய்மொழி. இம்மொழியைச் சுமந்தும் இதன் வழியாக தங்கள் உணர்ச்சிகளைச் செரித்துக்கொண்டும் வாழ நேர்ந்த தருணங்களை மொழி வழியாகக் கடக்கும் போதெல்லாம் கண்டிக்கப்பட்டிருக்கின்றனர். தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மெளனம் நாவறுந்த ஒரு பெரிய வெண்கல மணியைப் போல மிகவும் கனமான அந்தகாரம் மிக்கது. போர் மற்றும் அதிகாரத்திற்கான நேரடியான சொல்லாட்சிகள் ஈழத்தில் துலக்கம் பெறும் இக்காலத்திற்கு முன்பே சொற்களே படிமங்களாகவும் குறியீடுகளாகவும் கவிதைகளுக்குள் பேணப்பட்டன. முட்டைகளை அடைகாப்பதற்கான தகிப்பையும் அச்சொற்களுக்கு வழங்கியிருந்தனர். அக்கவிதைகள் ஒவ்வொரு முறையும் வாசிப்புக்காகத் திறக்கப்படும் போதெல்லாம் அடுக்கடுக்காய் அர்த்தங்களுடனும் உணர்வெழுச்சிகளுடனும் மன அறையை நிறைக்கின்றன. அரசியல் ஊக்கத்துடன் இயங்க வைக்கின்றன.

செல்வியின் கலக மனம் வெறும் மேம்போக்கானது அன்று. சொற்களை அலட்சியமாய் கற்களைப் போல தூக்கியெறியும் இலகுவான செய்கையும் அன்று. சொற்களைத் தீட்டித் தீட்டி அதிக பட்ச வெப்பங்களோடு தோல் தீய்க்கும் கங்குகளாக்குவது! அதுமட்டுமன்றி, இவருடைய கவிதைகள் எங்குமே கவித்துவச் செம்மை குலையாமல் கருப்பொருள் மீது கண்வைத்தே நகரும்.

கோடை

………………………………………………..

வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச்செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்
ஒதுங்கிப் போன கல்
ஏளனமாய் இளிக்கும்

இதயத்தின் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடிதுயர்ந்த
கூழா மரத்தின் பசுமையும்

நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப்பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப் போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதை அழுத்தும்.

செல்வியின் சுயசரிதை மிகவும் சுருக்கமானது. 1991 – கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட இவருக்கு, 1992 ஆம் ஆண்டு International PEN என்ற சர்வதேச கவிஞர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு சிறப்புப்பரிசு அறிவித்தது. 1994- ஆம் ஆண்டுக்கான Poetry International விருதும் இவருக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விரண்டு பரிசுகளுமே இவரால் பெறப்படவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------

சிவரமணி

தனது எழுத்தையெல்லாம் எரித்துவிட்டு,
“எனது கைக்கெட்டியவரை
எனது அடையாளங்கள் யாவற்றையும்
அழித்துவிட்டேன்”

என்று இறுதி நேரக்குறிப்பாக எழுதியும் வைத்திருந்தார், சிவரமணி. ஈன்ற பாம்பே தன் குட்டிகளை உண்ணுவது போல! 1991 – ஆம் ஆண்டில் தனது இருபத்திமூன்றாவது வயதில் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவ்வாறு அவர் எரிக்காமல் மிஞ்சிய இருபத்தியிரண்டு கவிதைகள் தாம் இன்று சிவரமணியினுடையதாக அடையாளம் பெறுகின்றன.

சென்ற நூற்றாண்டின் எண்பதுகள் ஈழத்தின் பெண்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான பருவம். பெண்ணியக் கருத்தாக்கங்கள் எல்லாம் செயலூக்கம் பெற்று கலை இலக்கியங்களாக மலர்ந்த காலம். பெண்கள் அரசியல் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் நேரடியாகத் தங்களை இணைத்துக்கொண்டு பிரச்சாரக் குரல்களாகவும் கருத்தாளர்களாகவும் மாறியிருந்தனர். இது தமிழகத்தில் நிகழ்ந்ததினும் வீரியமிக்கதாயும் மொழி-நிலம் தொடர்பான பெண்ணிய அரசியலை சீரமைக்க முனைவதாயும் இருந்தது. விடுதலைப் போராட்டங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் தங்கள் அரசியல் தெளிச்சியை வெளிப்படுத்த முடிந்தது, என்றாலும் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் வேறானது என்ற அக்கறையும் இருந்தது.

சிவரமணியின் பெரும்பாலான கவிதைகள் பிரச்சாரக்குரலாகவே எழுந்துள்ளன. இதனால் கவித்துவ அழுத்தம் பெறாமல் வெறுமனே வாக்குமூலங்களாக சரேலென்று முடிந்து போகின்றன. கவித்துவ எழுச்சிக்கான பயிற்சியை ஒருவர் தனக்குத்தானே அளித்துக்கொள்ளாமல், வார்த்தைகள், நீச்சல் குளத்தின் மேலுச்சியில் உள்ள அசைப்பலகையிலிருந்து சடேலென்று நீர் நிலையில் குதித்து நீந்த வேண்டும் என்று ஒருவர் விழைவதால், குதித்தல் என்பதில் தான் கவனம் இருக்குமேயொழிய நீச்சல் பற்றிய அனுபவத்திற்கான தயாரிப்பு இருக்காது. அப்படியான கவிதைகள் பலவற்றை எழுதிய சிவரமணி, தனக்குத்தானே ஊட்டிக்கொண்ட படைப்பூக்கத்தினால் சிறகசைப்பினாலும், அவரது மொழியும் அரசியல் பார்வையும் வலிமையுற்று வீர்யமெடுத்ததையும், இன்று வரை பெண்ணிய அரசியல் ஏட்டின் சமன்பாடுகளாய் மாறி நிற்பதையும் காண முடியும். இதை அவரது இரு முக்கியமான, பிரபலமான கவிதைகளைக் கொண்டு நிறுவலாம். அவை, ‘யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்’ மற்றும் ’அவமானப்படுத்தப்பட்டவள்.

யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்

--------------------------------------------------------------------

யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.

ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்,
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.

நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கிச் சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைக் கதைகளினதும் அர்த்தத்தை
இல்லா தொழித்தது.

எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமங் கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போனார்கள்.

அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
மெளனமாயிருக்கவும்
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.

தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.

யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்” ஆயினர். (1989)

அவமானப்படுத்தப்பட்டவள்

----------------------------------------------------

உங்களுடைய வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ளமுடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்துவரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்.

என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக்கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்.

இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான் பிரசன்னமாயுள்ளேன்.

என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஓர் அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துக்களை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப்பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

என் கடந்தகால இலக்கியப்பயணத்தில் எத்தனையோ முறைகள், பல வேறுபட்ட தொகுப்புகளுக்காகவும் ஆய்வின் பொருட்டும் இவ்விரண்டு கவிதைகளையும் பலமுறை கடந்து சென்றிருக்கின்றேன். ஓர் அகழியை எப்படித் தாண்டுவது? கடந்து தானே செல்லவேண்டும். அம்மாதிரியான ஒரு நிராகரிக்கமுடியாத அனுபவத்திற்கு, வாசிக்கும் எந்தவொரு பெண்ணையும் இழுத்துச்செல்பவை. இவ்விரண்டு கவிதைகளே சிவரமணியின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அகப்பெருவெளியையும் நமக்கு எந்தவித சிரமுமின்றி வெளிப்படுத்தக் கூடியவை. ‘யுத்தகால இரவு’ என்பதில் வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் அதிமுக்கியமான கவலையும், அது அகண்ட உருவம் கொள்ளும் அரசியல் சிக்கலையும் கவிதையாக்கியிருக்கிறார். இம்மாதிரியான அசாதாரண தருணங்களையும் அதற்கான நெகிழ்ச்சிகளையும் சொற்களால் முன்வைப்பதில் பெண்களுக்கு நிகர் எவரும் இல்லை என்று எழுதிக்கொள்வதன் வழியாக, சிவரமணியின் இக்கவிதையை எம்மெல்லோருக்குமான வாயில் ஆக்கிக்கொள்கிறேன்.

இன ஒடுக்குமுறையின் தொடர்துயர்களுக்கு ஆளான இப்பெண்களின் கவிதைகள் வழியாகத் தாம் தமிழகத்திற்குள்ளும் பெண் கவிதை தனது அழுத்தமான பாதங்களை எடுத்துவைத்திருக்கவேண்டும். ‘இனியுமென்ன தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான் பிரசன்னமாயுள்ளேன்’ எனும் ஒற்றை வரி, பெண்ணிலைவாதத்தை முன்னெடுப்பவர் எல்லோருக்கும் அவர் நெஞ்சத்தின் கூரையின் மீது அசைந்து பறக்கும் கொடியைப் போன்ற பொலிவு மிக்கது. இன்னும் சொல்லப்போனால், இக்கவிதையில் அவர் நிறைத்திருக்கும் நெஞ்சுரம் மிக்க அழுத்தமான நிலைநிறுத்தலையும் இருப்பையும் ஒவ்வொரு பெண்ணும் தன்னிலையிலிருந்து மீண்டும் மீண்டும் பிரதியெடுப்பதும் பதிவுசெய்வதும் தாம் நம் பெண்ணிலைவாதமாக இருக்கமுடியும்.

எழுத வரும் எந்த ஒரு பெண்ணும் எந்த ஒரு வரலாற்று ஆசிரியனாலும் எழுதவே முடியாத ‘தன் வரலாற்றைத்’ தாம் எழுதிச் செல்கின்றனர்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:

செல்வநிதி தியாகராஜ என்ற இயற்பெயருடைய கவிஞர் செல்வி வவுனியாவில் உள்ள சேமமடுவில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில், ‘நாடகமும் அரங்கியலும்’ துறையில் சிறப்புப் பட்டம் பெற்றிருந்தார். ‘தோழி’ என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.

கவிஞர் சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றைக் கற்றார். இறுதிப்பரீட்சைக்குச் செல்லும் முன்னரே தற்கொலை செய்து கொண்டார். இலக்கியத்தில் மட்டுமன்றி ஓவியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.No comments:

Post a Comment