Monday, February 28, 2011

பின்நவீனத்துவம்-2



யாயும் ஞாயும் யாரா கியரோ- 6

பின்நவீனத்துவம்-2

தமிழவன்

பின்நவீனத்துவம் பலவிதமான விளக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. அதில் முக்கியமானதாக லையோத்தாரின் கருத்துக்கள் அமைகின்றன என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.. இவர் கருத்துக்கள் இதுவரை உண்மை என்று கருதப்பட்ட பல விசயங்களை மறுக்கினறன. அதனால் தான் பின்நவீனத்துவம் என்ற சொல் தமிழில் ஒரு சிலரின் கையில் அகப்பட்டு அவஸ்தைப்படும் சொல்லாகியுள்ளது.

பின்நவீனத்துவம் பற்றிச் சொல்லும் லையோத்தார் அறிவியல் பற்றிய புதிய கருத்துக்களைக் கவனத்தில் கொள்கிறார். அறிவியல் பற்றிய பழைய கருத்துகள் உலகம் உருவாவதற்கு அடிப்படையாக உள்ள பொருளை அளக்கமுடியும் என்றும் அப்பொருள்களை சோதனைசெய்து நிரூபிக்கமுடியும் என்றும் அப்பொருள் மனிதனிலிருந்து பிரிந்து தன்னிச்சையாக இருக்கமுடியும் என்றும் கருதின. ஆனால் இக்கருத்துக்கள் சமீபத்திய அறிவியலில் ஏற்கப்படுவதில்லை. இதன்மூலம் பழமரபுக் கருத்துக்களும் இன்றைய அறிவியலும் ஒத்த கருத்துக்களைத்தான் கொண்டிருக்கின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. லையோத்தார் இங்குதான் நாட்டுப்புறக் கதைகளைத் தன் கவனத்தில் கொண்டார்.

சமிபத்தில் தமிழில் ஒரு நல்ல நூல் வந்துள்ளது. அதன் ஆசிரியர் ஏ.எஸ்.டி. பிள்ளை. இவர் "கல்வி, கலாச்சாரம், இலக்கியம் இன்றைய நிலவரம்" என்னும் தலைப்பில் எழுதியுள்ள சிறுநூல் முக்கியமானது.
இவர் லையோத்தாரை மிக எளிமையாகப் புரிய வைக்கிறார்.

தொழில் நுட்பம் சார்ந்து உலகம் ஒருகாலத்தில் வளர்ந்தது. இன்று அப்படியில்லை. உலகம் அறிவுத்தொழில் நுட்பம் சார்ந்து வளர ஆரம்பித்துவிட்டது. கணினித்தொழில்நுட்பம் இந்த புதிய உலக உண்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இதனால் ஒரு புதிய உற்பத்தியானது உலகில் தோன்றியுள்ளது. இவ்விசயம் பற்றி அறிய பிள்ளை அவர்களின் நூலைப் படிக்கலாம்.

உலகத்தில் புதிய விசயங்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பதையும் மார்க்ஸ் போன்றவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே கூற ஆரம்பித்தார்கள். மார்க்ஸ், உலகில் மாறாதது ஒன்றுண்டு, அது எல்லாம் மாறும் என்ற வாக்கியம் தான் என்றார். தத்துவாதிகள் உலகம் பொருளால் ஆனதா அல்லது கருத்தால் ஆனதா என்று சண்டையிட்டுகொண்டு இருந்தபோது மார்க்ஸ் உலகம் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது என்றார். அதில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் முரண்பட்ட உறவே இருக்கமுடியும் என்றார். ஏனெனில் தொழிற்சாலையும் தொழில் செய்யும் இடமும் தொழில்செய்ய ஒரு உற்பத்திப் பொருளும் வேண்டும். இவை முரண்பாடான உறவின் தன்மை கொண்டவை என்றார்.

கணினி இன்று முதலாளி-தொழிலாளி உறவையும் தொழிற்சாலை, அது இருக்கும் இடம், உற்பத்திப் பொருள் போன்றவற்றை மாற்றிவிட்டது. உற்பத்தி செய்யப்படுவது ஒரு மென்பொருளாகிறது. கையில் தொட்டுப் பார்க்கத்தக்க நட்டும் போல்ட்டும் போன்றதல்ல மென்பொருள். சமீபத்தில் எங்கும் பரவியுள்ள மென்பொருள் என்ற ஒன்று மரபான தத்துவத்தில் இருந்த கருத்து/பொருள் என்ற முரண்பாட்டை அகற்றிவிட்டது. இதை அன்றே கம்யுனிஸ்டுகள் அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் கம்யூட்டரை அன்று எதிர்த்தனர். கம்யூட்டரை எந்திரமாக பார்த்தனர்.
கம்யூட்டர் எந்திரமல்ல என்கிறது பின்நவீன்த்துவம்.

இதுதான் உலகத்தில் இன்று ஏற்பட்ட அறிவுப்புரட்சிக்கு அடிப்படை. பின்நவீனத்துவத்தின் தோற்றத்திற்கான தேவை இங்குத்தான் ஏற்பட்டது. இதனைப் புரிந்துகொள்ளும் போது உலகம் புதுமுறையில் இயங்குவது ஓரளவு விளங்குகிறது.

மார்க்ஸியம் பற்றிக் கொஞ்சம் தெரிந்தால் தான் உலகம் மாறும் விதத்தையும் அந்தமாற்றத்தில் பொருளாதாரம் வகிக்குமிடத்தையும் பற்றி நாம் அறியமுடியும். நாம் நம்மைப் பற்றியும் நாம் வாழும் சமூகத்தைப் பற்றியும் தெரிந்துகொண்டுள்ளோம். தெர்ந்துகொள்ளவில்லையென்று அர்த்தமல்ல. ஆனால் அந்த அறிவு நாம் வாழும்போது நம்மையறியாமல் நமக்குக் கிடைத்தது. சமுகவியலைப் படித்து நாம் நம் சமூகத்தைப் பற்றி அறியவில்லை. பொருளாதாரத்தைப் படித்துவிட்டு சந்தைக்குப் போவதில்லை. ஆனால் கொஞ்சம் படிப்பு இருந்தால் நல்லது. அதனால் தான் இலக்கியம் படைக்கவும் படைக்கப் பட்ட இலக்கியத்தைப் படிக்கவும் உலகம் இயங்கும் விதம் பற்றித்தெரிந்து கொள்வது நல்லது. சிலர் பின்நவீனத்துவம் தெரிந்தால்தான் நாவல் எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பதில் இருக்கிறது என்று நினைக்கிறேன். எதையும் அறிந்துகொள்வது தான் அறிவு. ஒருவன் நல்ல குடிமகனாக இருக்கத் தான் வாழும் தேசம் பற்றித்தெரிந்து கொள்வது போன்றது இது. ஒரு சமூகத்தில் அறிவு பரவப் பரவ அத்தேசத்தில் வாழும் எழுத்தாளர்களும் அதிக திறமையுடன் எழுதுவார்கள். நாற்பது சதமானம் படிப்பறிவற்றவர்கள் வாழும் தமிழகத்தில் இன்றைய அரசியல்வாதிதான் நம் தலைவன், அதுபோல் இன்று ஒருசில வலைப்பூ எழுத்தாளர்கள் தான் எழுத்தாளர்கள். அவர்களின் அறிவுப் பின்னணி பற்றித் தெரிந்து கொண்டால் நமக்கு உண்மை விளங்கும். அவர்களுக்குச் சம்மந்தமில்லாத விசயங்களைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இது இரண்டாம் கிளாஸ் படித்த ஒரு நடிகர் கட்சி அரம்பித்தவுடன் அவருக்குச் சம்பந்தமில்லாத அணு உலைநுட்பம் பற்றிப் பேசுவது போன்றது. எனவே பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொண்டால் குறைந்தபட்சம் சிலரிடம் ஏமாறாமலாவது இருப்போம்.

இதுபோல் திரைப்பட அறிவும் கூட பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்துகொண்டால் மிகும். இன்று தமிழில் திரைப்பட விமரிசனம் ஒரு ஏமாற்று வேலையாக உள்ளது.

இப்போது தமிழில் எழுதுபவர்களின் நாவலின் தரம் உலகத்தரமானது என்று உங்களில் சிலர் அந்த எழுத்தாளர்களுக்குப் புகழ்ந்து எழுதுகிறீர்கள். அது எந்த அளவு சரியானது என்று இப்போது உங்களுக்குப் புரியும். அந்த எழுத்தாளர் உங்களிடம் தொடர்பு வைத்துத் தான் ஒரு தமிழ்ப் பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று கூறுகிறார். செக்ஸ் எழுத்து என்று நீங்கள் நினைக்கும் எழுத்தை அவர் இது கூட உனக்குத் தெரியவில்லையா, இதுதான் பின்நவீனத்துவம் என்று கூறுகிறார். அவர் உங்களை ஏமாற்றவில்லையென்று உறுதியாக உங்களுக்குத் தெரியுமா?

இன்று இந்திய அரசு அறிவு கமிஷன் (Knowledge Commission) என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவு என்பது நவீன உலகை உருவாக்குகிறது என்ற பின் நவீனத்துவ அடிப்படைச் சிந்தனையிலிருந்து தான் இந்தக் காரியம் நடைபெறுகிறது. பல்கலைக் கழகங்களை இந்த குழுவினர் அணுகுகின்றனர். இந்தியாவுக்கு இன்னும் பல பல்கலைக் கழகங்கள் வேண்டும். ஏனெனில் அறிவு உற்பத்தி பல்கலைக் கழகங்களை நம்பித்தான் இருக்கிறது. இதுவரை பொருள் இருந்தால் உலகை வசப்படுத்தல்லாம் என்று கருதி் பொருளால் ஆன உலகம் வேண்டும் என்றனர். இதற்கு மாற்றாய் மதவாதிகள் ஆன்மீகத்தால் ஆன உலகம் வேண்டும் என்கின்றனர். பின்நவீனத்துவம் அறிவால் ஆன உலகம் தான் உண்மை என்கிறது.

இந்த அறிவு என்பது முன்பு அறிவியல் என்று அழைக்கப்பட்ட விஞ்ஞானத்தில் இருந்தது. என்றைக்கு அறிவியலும் பரம்பரையாகக் கூறப்படும் கதையும் ஒன்றுபோன்றவைதான் என்று லையோத்தார் கூறினாரோ அன்றிலிருந்து அறிவு என்பது என்ன என்ற கேள்வி வந்தது. இந்த இடத்தில் நாம் அறிவியலுக்கும் நாட்டுப்புறக் கதைக்கும் உள்ள வித்தியாசம் பற்றியும் அவை இரண்டும் ஒரே அடிப்படைகளைக் கொண்டவை என்று ஏன் லையோத்தார் கூறினார் என்றும் பார்க்கவேண்டும்.

ஒரு கதையை ஒருவன் சொல்லும்போது அக்கதையின் உலகத்துக்குள் கதைசொல்பவனும் கதை கேட்பவனும் வருகிறார்கள். எப்படியென்றால் கதைசொல்பவன் மேற்கொள்ளும் நியாயத்தையே (Legitemacy) கதையைக் கேட்பவனும் மேற்கொள்கிறான். இந்த சுயநியாயம் தான் இங்கு முக்கியமாகிறது. இதுபோல் தான் விஞ்ஞானமும் செயல்படுகிறது என்று இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இரண்டுபேர் அல்லது கொஞ்சம் பேர் நியாயம் இருக்கிறது இந்தக் கண்டுபிடிப்பில் என்று பேசுவதுதான் அறிவியல். தொமஸ் குன் (Thomas Kuhn) மற்றும் பாயர்பென்ட் (Feyerabend) போன்ற அறிஞர்கள் இதைக் கூறி விளக்கியுள்ளார்கள். வேறொன்றும் இல்லை. இப்படிப் பார்த்தால் கதையாடலும் அறிவியலும் ஒன்றுபோல் செயல்படுகின்றன.அமைப்பியலும் இத்தகைய கருத்துக்களைக் கூறின.
எனவே அறிவைப்பெருக்குபவன் வல்லாவனாகிறான்.

இதனால் கல்வி முக்கியமாகியுள்ளது. தமிழத்தைப் பொறுத்தவரையில் கல்வி பின் தள்ளபட்டுள்ளது. இலக்கியத்துறையிலும் திரைப்படத்துறையிலும் அரசியலிலும் கல்வி தமிழகத்தில் பின் தள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்நிலை மாறும். தமிழகம் கல்விக்கான முக்கியத்துவத்தைக் கண்டுள்ளது. எனவே தான் தமிழகத்தில் இந்த பின்நவீனத்துவச் சர்ச்சை வந்துள்ளது.

பொதுவாக விளக்கவேண்டுமென்றால் என் "பின்நவீனத்துவ அரசியல் "(வெளியீடு, பரிசல், சென்னை-94) என்ற நூலின் ஒரு வாக்கியத்தை இங்குத் தரலாம்: லையோத்தார் அழகியலை பொருளாதாரத்தோடும் வரலாற்றோடும் இணைத்தார். பிரட்ரிக் ஜேம்சன் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் அழகியலாக்கினார்.

இவ்விளக்கங்கள் ஓரளவு பின்நவீனத்துவம் பற்றி அறிய துணைபுரியலாம்.

அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com


from:

http://koodu.thamizhstudio.com/thodargal_13_6.php




No comments:

Post a Comment