Tuesday, February 8, 2011

கதை சொல்லி - அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)



கதை சொல்லி - அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)

லிவி



‘புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்’
-மாக்ஸிம் கார்க்கி.

சாதி என்ற காட்டுமிராண்டிப் பழக்கத்தை இன்னும் இறுக பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தொன்று தொற்று காப்பாற்றி வரும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அழகிய சமூகம் தமிழ்ச் சமூகம். இந்த கலாச்சாரம் உடைந்தால்தான் சாதி உடையுமென்றால் இந்த புண்ணாக்கு கலாச்சாரத்தை உடைப்பதில் தவறில்லை. மனித விடுதலையைத் தவிர்த்து இங்கு எதுவும் உயர்ந்ததல்ல. தன்னளவில் சாதிப் பெயரைக் கேட்பதும் சொல்வதும் அசிங்கம் என்னும் நிலை வராமல் மாற்றம் வந்து விட இயலாது. பார்ப்பானுக்கு அடிமையாக இருந்தும் இந்த உயர்சாதி என்று சொல்லித் திரியும் சில்லரைகளின் இம்சை தாங்க முடியவில்லை. குட்டக் குட்டக் குனியும் சமூகம் திருப்பி அடிக்கத் தொடங்கி நாட்கள் ஆகிவிட்டது. அழகிய பெரியவனின் கதையான "குறடு" என்பதை கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் " நடந்த கதை" அதில் ஒன்று. தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் அழகிய பெரியவன்.

வெயில் வெம்மை நிறம் உடைத்து என்பதை வேலூரிருந்து பேர்ணாம்பட்டு செல்லும் பேருந்திலிருந்து உணர்ந்து கொண்டேன். வெப்பத்தில் ஊரையே யாரோ துடைத்து சுத்தம் செய்து விட்டது போல் தெளிவாக துலங்கியது. அவ்வளவு ஸ்படிகம் போன்ற இடத்தைப் பார்த்ததில்லை என்பது போல் கொழுத்திக் கொண்டிருந்தது மதிய வெயில். அங்கங்கே மரங்கள் அதிகம் அடர்ந்து இல்லாத மலை முகடுகள். அடிக்கடி தென்படும் இஸ்லாமியர்கள். தமிழ் நாட்டின் தேசிய மரம் போன்ற முள்ளுச் செடிகள். இதை காமராசர் ஆட்சியில் ராமநாதரபுரம் போன்ற வறட்சியான இடங்களில் முளைப்பதற்கு ஏற்றதான செடிகளை ஆப்ரிக்காவில் இருந்து வாங்கி வந்து தூவியாதாக செவி வழிச் செய்து ஒன்று இருக்கிறது. இன்று வனமென்று தமிழ்நாட்டில் இருந்தால் இந்த செடிகளைத் தவிர அதிகம் வேறு எதையும் பார்க்க இயலாது. அண்டை மாகாணங்களான கேரளாவிலும் கர்நாடகத்திலும் நான் இதைக் கண்டதில்லை. முதன்முதல் வேலூர்ப் பயணம் ஆதலால் அலுக்காமல் சன்னலோரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.

பங்களாமேடு, என்னும் அழகிய பெரியவன் வசிக்கும் கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது பேருந்து. அருகில் வந்து அமர்ந்த பெண்ணிடம் சரியான இடத்தில் இறங்க வேண்டும் என்பதற்காக பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். நட்போடு அவரும் பேசத் தொடங்கவே அவரவர் பற்றிய விசாரிப்புகள் வரத் தொடங்கின. என்னுடைய அறிமுகம் முடிந்த பின் தானொரு காவல்துறையில் வேலை செய்யும் பெண் என்றார். அண்ட சராசரங்களும் ஒரு கணம் ஆடி அடங்கியது. 'நான் எந்த தப்பும் செய்யலீங்க' என்ற முதல் வரியை வாயினுள்ளாகவே தின்று செறித்தேன். 'ஆனா இதுவரைக்கும் எந்த குற்றவாளியையும் பிடித்ததில்லை' என்றார் சிரித்துக் கொண்டே. நானும் சமாளித்துக் கொண்டு இதுவெல்லாம் எனக்கு சாதாரணம் என்ற தொனியுடன் பேசத் தொடங்கினேன். அவரைச் பற்றிச் சொன்ன விடயங்கள் சுவாரசியமானவை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதற்கு முன் பணியில் இருந்திருக்கிறார். 'அங்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது பத்து கொலைகளாவது நடக்கும்' என்றார். எச்சிலை ஒருமுறை முழுங்கி விட்டுக் கொண்டேன். விபத்து நடந்தாலே அருகில் சென்று பார்க்க திராணி இல்லாத தைரியசாலி நான். 'கொலை நடந்த இடத்திற்கு ஒரு மாத காலம் அல்லது இரண்டு மாத காலம் காவலாக போட்டு விடுவார்கள். தங்குவதற்கும் சரியான இடத்தை ஒழுங்கு செய்து தர மாட்டார்கள். நரக வேதனையாக இருக்கும்' என்றார். கீழ் நிலைக் காவலராக இருப்பதால் தேர்வு எழுதி மேல் மட்டம் செல்லலாம். ஆனால் தேர்வாகிய பின் போவதற்கும் எட்டு அல்லது ஒன்பது 'ல'னாக்கள் கொடுக்க வேண்டும். இப்போது முன்பு போல் பென்சனும் கிடையாது' என்றார் கவலையுடன். வாழ்கவென் தேசத்தின் குற்றத்தைத் தடுக்கும் கணவான்கள்.

பங்களாமேடு வந்துதும் விட்டு பிரியாவிடை பெற்றுக் கொண்டோம். ஒரு சிறு மளிகைக் கடை, கொஞ்சம் தள்ளியொரு தேனீர் விடுதி , உணவுவிடுதி எதுவும் இல்லாத ஊர் அது. அம்பேத்கர் சிலை கடந்து செல்லும் வீதியில் அழகிய பெரியவனின் வீடு இருந்தது. வாசலில் நின்று வீட்டின் அடையாளம் காட்டி வரவேற்றார் அழகிய பெரியவன். ஆரஞ்சு நிற வண்ணமும் முற்றத்தில் பயிரிடப்பட்ட சிறு தோட்டமுமென அழாகாக இருந்தது வீடு. நீண்ட தூர பயணமென்பதால் சாப்டீங்களா என்று கேட்டு விட்டு உணவு பறிமாறினார். அழகிய பெரியவன் இடை நிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியர். தமிழ் சொல்லித் தருவாரென்று நினைத்தால், அவர் கற்பிப்பது அறிவியலும் ஆங்கிலமும். 'முரன் என்பதில் தானே வாழ்வின் சுவையும் அடங்கியிருக்கிறது' என்றார் சிரித்துக்கொண்டு.

அழகிய பெரியவனின் எழுத்துக்கள் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியது. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கதைகள் அவை. அழகியலோடு அவர் கதைகளை முன்வைக்கையில் இலக்கியம் அதன் உச்சத்தில் செயல்படுகிறது. சிறுவயதில் இருந்தே தன் சுயத்தால் இலக்கியத்தை விரும்பியிருக்கிறார். 'வாழ்வில் அவர் எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்கள், நெருக்கடிகள், சமூக புறக்கணிப்புகள் இவை யாவும் சேர்ந்து தன்னை அனுபவங்களின் வழி தேர்ந்த எழுத்தாளன் ஆக்கியிருக்கிறது'. ஒரு எழுத்தாளனுக்கு அனுபவங்களைத் தவிர என்ன கொடை வாய்த்து விடப் போகிறது. வாழ்வில் இருக்கும் வலியை, சுகத்தை, உன்னதத்தை அன்பை, அவனை விட யாரால் சொல்லிவிட இயலும். தன்னுடைய கல்லூரி காலத்தில் வலம்புரிஜான் ந‌டத்திய பத்திரிகை ஒன்றில் லா.சா.ரா எழுதிய 'சிந்தா நதி' என்னும் தொடர் தீவிர இலக்கியத்தினை அவர் தேடி அடைய வைத்திருக்கிறது.

கதை சொல்லுவதற்கான தயாரிப்புகளோடு காத்திருந்தார் அழகிய பெரியவன். கதை மாந்தர்களின் பெயர்களை ஒரு தாளில் குறிப்பு எடுத்து வைத்திருந்தார். அதனாலே அவர் கதைகளை சொல்லும் போது கதை மாந்தர்களின் பெயரும் கதைக்கான‌ சுவையை கூட்டிக் கொண்டே சென்றது. கதைகளில் வரும் பெயர்களும் ஒரு கதையை அழகானதாக‌ மாற்றும் ரசவாதத்தை அழகிய பெரியவனின் கதைகளில் உணர்ந்தேன். கதைகளின் வேட்டை ஆரம்பமாகியதும் கதைகளின் வனாந்திரத்திலிருத்து மிகக் கொழுத்த காட்டின் வனப்பை தனக்குள்ளே வைத்திருக்கும் மிருகங்களையொத்த செழுமை நிறைந்த கதைகளைச் சொன்னார் அழகிய பெரியவன். அவர் சொன்ன கதைகளில் எந்த கதையும் எந்த இடங்களிலும் வீரியம் இழக்கவில்லை.

ஒரு எழுத்தாளன் என்கிற அடையாளத்தோடு அழகிய பெரியவன் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. அவர் குரல் தேர்ந்த கதை சொல்லிக்கான குரலாக மாற்றம் அடைந்திருக்கிறது. குரலின் இனிமையை அவரிடம் சாதாரணமாக கதைத்துக் கொண்டிருக்கும் போதே ரசிக்கலாம். உலக எழுத்தாளர்களின் சிறுகதை ஒன்று (எத்தாலோ கால்வினோ), இந்திய எழுத்தாளர்கள் சிறுகதை மூன்று (பால் சக்கிரியா, மஹாஸ்வதே தேவி, தேவனூர் மகாதேவா), தமிழ் எழுத்தாளர் சிறுகதை இரண்டு, தனது கதைகள் இரண்டென மொத்தம் எட்டு கதைகளையும் அலுக்காமல் சொன்னார் அழகிய பெரியவன். கதை சொல்வதற்கு இடையில் பல்லிகளின் அழைத்தலும், பொழுதாக தொடங்கியவுடன் கோழியின் கூவலுமாக கதை சொல்லும் இடமும் ரம்மியமாக மாறி ஒருவித மனக் கிளர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது.

அழகிய பெரியவன் கதைகளைச் சொல்லும் போது ஒரு தீவிர மன‌ நிலையுடன் சொன்னார். கதைகளின் காத்திரம் எங்கும் சருகவுமில்லை. குறையவுமில்லை. அவர் கூறிய‌ கதைகளை வாசிக்கும் போது இத்தனை ஆனந்தமும் மனவெழுச்சியும் நிகழுமாவென சந்தேகத்தை ஏற்படுத்தினார். கதைகளை மிகச் செறிவாக தான் கதை சொல்லும்போது கொண்டுவந்தார். அழகிய பெரியவன் சொன்ன கதைகளில் வலியிருந்தாலும், கதைகளை நகர்த்துவது வாழ்வின் அற்புதமான கணங்களும் அதன் ஊடாடும் நகைச்சுவைகளும். 'மஹாஸ்வதே தேவி'யின் 'விதை' கதையில் வரும் துலனின் இறுதி வரிகளில் அழகிய பெரியவன் உடைந்துவிட்டார். குரல் கம்மி அவரால் சிறிது நேரம் பேச இயலவில்லை. சிறிது நேரங்களில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கதையை முடித்தார். கதைகளுக்குள் தன்னை இழந்து கரையாமல், அந்த கணம் நிகழ்ந்துவிடாது.

கதை சொல்லி முடித்து நாட்கள் ஆகியும் துஷ்யந்தன், துலன் என்னும் பெயர்கள் மீண்டும் மீண்டும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த கதைகளும் குரலும் என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. அக்கதைகளில் இருந்து மீள இன்னும் சில நாட்களாவது ஆகும்.

அழ‌கிய‌ பெரிய‌வ‌னின் க‌தைக‌ளைக் கேட்க‌ கீழே உள்ள‌ ப்ளே ஐக்கானைத் த‌ட்டுங்க‌ள்.

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)


கதைகள் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_16.php



No comments:

Post a Comment