Tuesday, March 15, 2011

நெற்றிக்கண் தொலைத்த கவிதை


நெற்றிக்கண் தொலைத்த கவிதை

சமயவேல்

சிறு தூறலாகப் பெய்யும் மழையால்
கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்
அசுர ஆட்டோக்கள் கக்கிய
கேஸோலின் வாசம்
நான் ஒரு காலைப் பொழுதில்
வைகைக் கரையில் நிற்கிறேன்.

கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்
ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்
சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது
ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்
மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்
பதின்பருவ பையன்களின் கால்கள்;
உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்
பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது

பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்
முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்
கழிவுகளைக் கொட்டுகிறான்
குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்

கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்
ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது
கழுத்தில் டைகள் ஆடும்
கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்
ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்

மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்
மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்
குட்கா மெல்லும் கள்ளழகர்

புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்
கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்
எச்சில் இலைகளைக் கவனித்தபடி
தியானத்தில் இருக்கிறார்

நமக்கென்ன என்னும் பாவனையோடு
காறித் துப்புகிறான்
நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.
----------------------------------------------------------------------------------------------

மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்

மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்
ஆயினும் நன்றி நன்றி என்கிறார்
யன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்தமைக்காக
மற்றும் மற்றும் என்று இருமினார்
ஒலித்த அலைபேசியைத் திறக்கிறார்
லட்சுமி லட்சுமி
லட்சுமி பஸ் ஏறிட்டேன்டா காலை பத்து பத்தரைக்கு
வந்திருவேன்டா... இருமுகிறார்
அலைபேசியை அணைத்து பைக்குள் போடுகிறார்
முழுப் பேருந்தும் கவனிக்கிற மாதிரி தொடர் இருமல்
ஏதேனும் சிரப், மருந்து எடுத்துக்கக் கூடாதா என்றேன்
மருந்தென்ன, பெரிய மருந்தே சாப்பிட்டுட்டேன்
மூணு நாளா சாப்டுட்டே இருக்கேன்
சரி டிபன் எதுவும் சாப்பிட்டாச்சா
கையிலிருந்த மில்க்பிகீஸ் பாக்கெட்டைக் காண்பித்தார்
இது தான் சோறு இட்லி தோசை பூரி பொங்கல் எல்லாம்
பிஸ்கட் தவிர வேற எதுவும் ஆகாது
எல்லாமே டாக்டர்கள் உலகம்
இவ்வளவு கனிவு காட்டும் நீங்கள் ஒரு பிஸ்கட்
எடுத்துக் கொள்ளுங்களேன் என்று பாக்கெட்டை எறிந்தார்
மீண்டும் அலைபேசி அழைப்பு
ஆமாமா டாக்டர் இனிமே வரவேண்டாம்னுட்டார்
சவத்த விடு
அழைப்பைத் துண்டித்து பேசியை பைக்குள் எறிந்தார்
சார் என்ன பிஸ்கட் பிடிக்காதா என்றவர்
இருமத் தொடங்கினார்
தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறார் மணிவண்ணன்.

----------------------------------------------------------------------------------------------

பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்
அதிகக் குளிரெடுத்து
போர்வையை மேலும்
இறுக்கிக் கொள்கிறபோது
உணர்கிறேன்
நான் ஒரு
துணிப்பொட்டலம் என்று.

மருத்துவச்சி ஏந்திக் காட்டிய
நிர்வாணப் பொட்டலம் கண்டு
வலியுடனும் குதூகலித்த
அம்மா
இன்றில்லை.

இது பற்றி மேலும்
யோசிக்க முடியாமல்
உருண்டு புரண்டு
தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து
ஷேவ் செய்து தலைவாரி
பவ்டர் பூசி
ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்
தெருவில் நடந்தேன்.

----------------------------------------------------------------------------------------------

மலையை விழுங்கும் மலைகள்

நண்பன் வீட்டு மாடியிலிருந்தபடி
இரவுப் பயணத்திற்குப் பிறகான அதிகாலையில்
வெண் பனிக்குள் மூழ்கிய மலையைப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்
நிம்மதியின் நிலம் அது என்று உணர்ந்த என்னை
மலை பருகிக் கொண்டே இருந்தது

ஆனால் இரவில் கனவுக்குள் நுழைந்த
ஒரு பெரும் மலைப் பிரதேசம்
பயங்கரம் பூசிய வெயிலில் தகதகத்தது
செம்பழுப்புப் பாறைகள் செதிள் செதிளாக வெடித்து
உயர உயரப் போய்க்கொண்டே இருந்தது
தலை சுழற்றும் பள்ளத்தாக்குகளில்
வீழ்த்திவிடும் அபாயச் சரிவுகளில்
நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தேன்

ஒரு மலை முடிந்ததும் பல மலைகள்
அடுக்கடுக்காய் முளைத்துக்கொண்டே வந்தன
எனக்குக் கீழே பாளம் பாளமாய் மின்னிய
ஈட்டிப் பாறைகளைக் கண்டு நடுக்கமுற்றேன்

பெரும் மலைகளுக்கு நடுவில் இருந்த
பள்ளத்தாக்கில் நீரும் இல்லை நிலமும் இல்லை
மேலும் கீழும் ஆகயமொவென அச்சமுற்றேன்
எதன் மேல் எது நிற்கிறது என வியந்தபோது
எல்லா மலைகளும் மறைந்து போயின

இப்பொழுது நான்
அந்த அதிகாலைப் பனிமலையின்
கதகதப்பினுள் நுழைந்து கொண்டிருக்கிறேன்.

நண்பன் ஸ்ரீ நேசனுக்கு

from: http://koodu.thamizhstudio.com/ep_kavithaigal_2.php



1 comment:

Post a Comment