Thursday, December 16, 2010

தி போஸ்ட்மேன் - குறும்பட விமர்சனம்

ஆதிரை

இயக்கம்: மனோகர்
தயாரிப்பு: L.V. பிரசாத் டி.வி. அண்ட் பிலிம் அகாடெமி
ஒளிப்பதிவு: அபிநந்தன்
படத்தொகுப்பு: லோயெஸ்வரன்



வாழ்வின் யதார்த்தங்களை தாண்டி, ஒரு மாயயை உருவாக்கும் கூறுகளைத்தான் திரைப்படம் முதலில் முன்னெடுத்து சென்றது. ஆனால் எத்துனை காலம்தான் மேகத் திரள்கள் சூரியனை மறைத்து விடமுடியும். மாயத் திரைகள் விலகி திரைப்படம் யதார்த்தவாதத்தை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கியது. இந்த பரிணாம வளர்ச்சி ஏனோ தமிழ் சினிமாவை மட்டும் எட்டாமல் போனது. அல்லது எட்டவிடாமல் செய்யப்பட்டது.

இயல்பாக நடக்க வேண்டிய சில விடயங்கள் சில நேரங்களில், மிகப்படுத்தப்படுவது அதன் வீரியம் சரியாய்ப் போய் சேரவே.. ஆனால் மிகைப்படுத்தப்படுவதால் அதன் வீரியம் குறையும் என்றால் பின் மிகைப்படுத்தப்படுவதன் அவசியம் என்ன என்பதை தமிழ் சமூகம் ஏனோ உணரவில்லை.

திரைப்படங்களை தாண்டி தற்போது, அதற்கு மாற்றாக குறும்படங்கள் அதற்கான சாத்தியங்களை உருவாக்கி வருவது கவனிக்கத்தக்க ஒன்று. அந்த வகையில் யதார்த்தவாதத்தை முன்னெடுத்து செல்லும் தமிழின் மற்றுமொரு குறும்படம் போஸ்ட்மேன்.

தமிழ் இலக்கியங்களிலும், தமிழ் திரைப்படங்களிலும் பதிவு செய்யப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை விட, அப்படியான ஒரு செயல் இங்கே இன்னும் தொடங்கவே இல்லை என்பதுதான் உண்மை. பாலா போன்றோர் தங்கள் படங்களில் காட்டும் விளிம்பு நிலை மனிதர்கள் கூட உண்மையின் பக்கம் வராத கொஞ்சம் மெருகேற்றப்பட்ட, கற்பனை புகுத்தப்பட்ட கதாப்பாத்திரங்கள் தான். அதேபோல் மனோகர் இயக்கி இருக்கும் இந்த குறும்படத்தில் போஸ்ட்மேனாக வருபவரும் கொஞ்சம் இயல்பு தன்மையை மீறி வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த மீறல் எடுத்துக் கொண்ட களத்திற்கு நியாயம் கற்பிப்பதாகவே உள்ளது. கடிதம் எழுதும் பழக்கம் அறவே அழிந்து வரும் இந்த சூழலில் இதுப் போன்ற படங்கள் கொஞ்சமாவது அதன் தேவையை உயிர்த்து இருக்க செய்யும்.

ஊரில் போஸ்ட்மேனாக பணிபுரிபவர் தன் பணியை சுய விருப்போடு, அதற்கான தேவையோடு, தனிமையின் கிறக்கத்தை கொஞ்சம் தள்ளி வைக்கும் முயற்சியோடு செய்யும்போது, விஞ்ஞான வளர்ச்சியாக உள்ளே நுழையும் தொலைபேசியால் யாருக்கும் கடிதம் வராமல் போவதால், அல்லது வருகின்ற கடிதங்கள் கூட தொலைபேசி பில்லாக வருவதால் அவன் மனம் பித்துப் பிடித்து அலைகிறது. ஒரு போஸ்ட்மேனாக பணிபுரிபவர் அந்த கிரமாத்தின் ஒட்டுமொத்த மனிதர்களிடத்திலும் அன்பு செய்பவராக இருக்கும் பட்சத்தில் ஏற்படும் பிணைப்புகள் மிக சுவாரசியமானவை. அப்படியாக பேரனை பிரிந்து வாழும் பாட்டிக்கு இவனே கடிதம் எழுதி அதை வாசித்துக் காட்டி பாட்டியின் சிரிப்பில் ஆனந்தம் கொள்ளும் இடங்கள் பல படங்களில் பார்த்து இருந்தாலும், இங்கேயும் அதன் நேரத்தின் நம்மை வாயடைக்க செய்கிறது. கொஞ்சம் ரசிக்கவும் செய்கிறது. தான் விரும்பும் பெண் தனக்கே தன்னுடைய திருமண அழைப்பிதழை கொடுக்கும்போது, அவளுக்காக இவன் எழுதி வைத்திருந்த கடிதத்தை பாட்டிக்காக அவள் பேரன் எழுதியது போன்று மாற்றி படிக்கும் தருணங்கள் இனிமையானவை.

இறுதிக் காட்சி கொஞ்சம் கனமாகவே இருந்தாலும், தொடர்ந்து இந்த துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் சராசரிக்கும் மேற்பட்ட பார்வையாளனுக்கு முடிவு தெரிந்து விடுவதால் படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் ஏற்படுத்தி இருக்க வேண்டிய பாதிப்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் இக்குறும்படத்தின் குறியீடுகள் பல நம்மை சிந்திக்க வைக்கிறது. ஒரு காட்சியில் உடைந்துப் போன கண்ணாடியை மாற்றி புதுக்கன்னாடியை வைத்துவிட்டு அவன் சிரித்துக் கொண்டே நகரும் காட்சி, அடுத்து நிகழவிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியை இவன் அதே புன்னகையுடன் ஏற்றுக் கொள்வானா என்கிற கேள்வியை முன்வைத்து நகர்கிறது. அழகியல் சார்ந்து மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம், அதன் கதாப்பாத்திர தேர்வில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. போஸ்ட்மேனாக நடித்தயுர்ப்பவருக்கு நடிப்பு ஆங்காங்கே பல்லைக் காட்டிக் கொண்டு வருவேனா என்கிறது. தான் விரும்பும் ஒருத்தி தன்னிடமே அவளின் திருமண அழைப்பிதழை கொடுக்கும்போது ஏற்பட்டிருக்க வேண்டிய இயல்பான ஏக்கம், துடிப்பு எதுவுமே இல்லாமல் தேமே என விளிப்பதை கொஞ்சமாவது தவிர்த்து இருக்கலாம். அல்லது சேரனை போல் கைகளால் கண்ணை மறைத்துக் கொண்டு அழுவது போல் உள்ளுக்குள் சிரித்து இருக்கலாம். (மீடியாக்கள் முன்னிலையில் கூட சேரன் நன்றாக அழுகிறார்.. படங்களில் ஏனோ அவருக்கு அழத் தெரிவதில்லை).

இக்குறும்படத்தில் கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்ட இசை தான் என்றாலும், அதன் ஓசை நமது ஜீவ நாடியை கொஞ்சமாவது வருடிப் பார்க்கிறது. ஒட்டு மொத்தமாக படத்தின் பின்னணி இசையால் சிலக் காட்சி பிழைகளைக் கூட கவனிக்க விடாமல் செய்து விட்டது இசை கோர்த்தவரின் திறமை. ஏதோ ஒரு கிலுகிலுப்பை, கிளர்ச்சியை இந்த இசை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல..

படத்தொகுப்பு கச்சிதம் தான். படத்தொகுப்பு நடந்திருக்கிறது என்கிற உணவேர் இல்லாமல் அந்த வேலையை செய்வது தேர்ந்த கலைஞனுக்கு மட்டுமே கை வரும் கலை. அந்த வகையில் லோயெஸ்வரன் கவனிக்கப்பட வேண்டியவரே..

படத்தின் இயக்குனரை விட மிக அதிகமாக பாராட்டப்பட வேண்டியவர் இப்படத்தின் ஒளி ஓவியர். நேர்த்தியான ஷாட்டுகள், அழகான காட்சியமைப்புகள், காட்சிகளுக்கு தேவையான ஒளி அளவு என மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். சில நேரங்களில் கேமெரா பயணிப்பதை விட நாமே அந்தக் காட்சிகளுடன் பயணித்து விடுகிறோம். ஒரு ஒளிப்பதிவாளரின் ஆக சிறந்த வெற்றி இதுதான். கண்களை ஒளியால் நிரப்பும் அபிநந்தன் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களில் நிச்சயம் பிரகாமாய் ஒளிரப்போகும் சூரியன்தான்.

இயக்குனர் மிக சரியான களத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு தேவையான நியாயங்களை செய்திருக்கிறார் (கதாபாத்திர தேர்வைத் தவிர). இதுப் போன்ற படங்களுக்கு தேவையான இடங்களை (Location) தெரிவு செய்ததிலிருந்தே படத்தின் வெற்றிக்கான படிகள் தொடங்கி விட்டன. ஒரு நல்லக் களத்தை கையாண்ட குறும்படம் என்றாலும், தேசிய விருது பெருமளவுக்கு இப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. ஒளிப்பதிவுக்காக வேண்டுமானால் அந்த ஆச்சர்யம் நடந்திருக்கலாம்.

இருந்தாலும் குறும்படம் என்கிற பெயரில் நிறைய அபத்தங்கள் நடந்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், கையில் கேமெரா எடுத்தவரெல்லாம் இயக்குனர் என்று உரக்கக் கூவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதுப் போன்ற படங்கள் குறும்பட துறையை கொஞ்சமாவது புத்துணர்ச்சியூட்டும் வகையில் வெளிவர வேண்டுமென்பதே நமது விருப்பம். அந்த வகையில் இயக்குனர் மனோகருக்குகையில் ஒரு பூங்கொத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதில் தவறேதும் இருக்க வாய்ப்பில்லை, தேசிய விருதே கையில் கிடைத்திருக்கும்போது.!


http://thamizhstudio.com/shortfilm_review_17.php



ஆதிரை



No comments:

Post a Comment