Wednesday, December 22, 2010

சய்லேன்ஸ் - 5 - கட்டியங்காரன்


‘ஒற்றன்’ - நாவலும் தயிர்வடை எழுத்துக்களும்

அசோகமித்ரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்தது ஓர் தண்டனை யென்றே சொல்லவேண்டும். அசோகமித்ரனை அயோவா பல்கலைக்கழகம் அழைத்ததும், அங்கு நிகழ்ந்த சர்வதேச எழுத்தாளர்
சந்திப்புமே கதைக்களம்.

பயணக் கட்டுரையும் புனைகதையும் கலந்து செய்த கலவையாக படிக்கும்போது, பரோட்டாவுக்கு
சாம்பார் தொட்டு கொண்டு சாப்பிடுவதைப் போன்ற உணர்வு,

நாவலின் (!) பல்வேறு பகுதிகளிலும் சைவ உணவு கிடைக்காத அவஸ்தையை பக்கம் பக்கமாக பாலும் ரொட்டியும் கலந்து எழுதுகிறவர். எதற்காக அடுத்த நாட்டுக் காரர் சாப்பிடும் அசைவ உணவுகள் மேல்
துவேஷம் பாராட்டுகிறார் என்றேத் தெரியவில்லை.

மோர் சாதமும் மாவடுவும் போதுமெனில் ஏதோ ஓர் அக்கிர(ம)காரத்திலேயே இருந்து கொள்ள வேண்டியது தானே. ஏன் அனாவசியத்துக்கு அசைவ உணவுகளையும், அசைவம் உண்பவர்களையும் நிந்திக்க வேண்டும்?

ஓர் வெளிநாட்டு எழுத்தாளர், ‘டகரஜானை’ (அச்சோகமித்ரனின் இயற்பெயர் தியாகராஜன்) சாப்பிட அழைக்கிறார். அதற்கு டகரஜானின் பதிலிது:

‘சாப்பிடுகிறேன். ஆனால் நீ எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் உன் சமையல் அசைவமாயிருக்கும் பட்சத்தில் சாப்பிட மாட்டேன்’

‘மாயவரம்’ என்கிற ஹைபுன் தொகுதியிலை படித்த கவிதை நினைவுக்கு வருகிறது-

‘சைவமென்பதில்
அப்படியென்ன பெருமிதமுனக்கு
அசைவம் வெறுக்கத்தக்கதல்ல

மச்சமும் வராகமும் அவதாரங்களல்லவோ
சேவலோ குமரன்கொடி
ரிஷப வாகனத்தின் சக்தியை அறிவாய் நீ
வறட்சியின் வறுமையில் விவசாயிகள் பசிதீர்க்கும்
எலிகளும் ப்ரியவாகனமன்றோ பிள்ளையாருக்கு
தாவரங்களுக்கும் உயிர் உண்டு -
நிரூபித்து விருது பெற்றான் ஜகதீஷ் சந்திரபோஸ்...

- பிள்ளைக்கறி தின்ற ஈசனை அறிவோம் நாம்
குகன் தந்த மீனையும் தேனையும் அங்கீகரித்து
தோழமை பூண்டான் புருஷோத்தமன்

கன்றுக்கான, பாலை, தயிராய், நெய்யாய்
வெண்ணெயாய்த் தின்றால கொழுப்புதான் சேரும்!
வாய்க்கொழுப்பு!
சாருநிவேதிதா அடிக்கடி எழுதுவார்-

‘தமிழில் எழுதும் பலரும் தயிர்வடை எழுத்தாளர்கள்’ என ஒற்றனைப் படித்ததும் அந்த
உண்மை புரிந்தது.

தயிர்வடையிலும், காராபூந்தி கூட தூவாத தயிர்ர்ர் வடை....!

வர்ர கோவத்துல தில்லக்கேணி சீலார்ட் ஓட்டல்ல, ஆப்பம் பாயா வாங்கி ‘லெக் பீஸை’ உறிஞ்சனும் போல இருக்கு!

2. இன்றைக்கும் பொருந்துகிற மிருகங்கள் பண்ணை (ANIMAL FARM)

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ANIMAL FARM ‘மிருகங்கள் பண்ணை’ என்ற தலைப்பில் க.நா.சு. வினால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பண்ணைச் சொந்தகாரானான ஜோன்ஸை அடித்து துரத்திவிட்டு மிருகங்களும் பறவைகளும் பண்ணையாட்சியைப் பிடிப்பது தான் கதை! ஆனால் பாருங்க!

அங்கேயும் பன்றிகளே(!) அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றன!

ஆட்சிக்கு வந்தவுடன் ஏழு முக்கிய விதிகள் உருவாக்கப் படுகின்றன.

1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்

2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும்
நமது நண்பர்கள்

3. மிருகம் எதுவும் துணிகள் அணியக் கூடாது.

4. மிருகம் எதுவும் படுக்கையில படுத்து உறங்கக் கூடாது.

5. மிருகம் எதுவும் மது அருந்தாக் கூடாது.

6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக் கூடாது.

7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.

ஆனால் அதிகாரம் கைக்கு கிடைத்தவுடன் நாற்காலி சுவையை ருசித்தவுடன் பதவியின் சக்தி எப்படி மாற்றி விடுகிறது என்பதை ருசிகரமாய் சொல்கிற புதினத்தை வாசிக்கையில் சமகால அரசியல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

1946-ல் மிருகங்கள் பண்ணையை உருவாக்கிய ஜார்ஜ் ஆர்வெல் நிச்சயமாய் தீர்க்கதரிசிதான்!

கூடு வாசகர்கள் கண்டிப்பாக இந்நூலை வாசிக்க வேண்டும். ஆனால் வாசிக்கும்போது நினைவில் கொள்ளக் கூடாத ஏழு விதிகள் இதோ-

1. தேசிய நீரோட்டம்

2. அண்ணாயிசம்

3. ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே

4. அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர பகைவனுமில்லை

5. புரட்சி ஓங்குக!

6. மதச் சார்பற்ற இயக்கம்

7. ஜனநாயக சோசலிசக் குடியரசு.

3. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....

கோவையில் கூடிய செம்மொழி மாநாட்டில் தமிழின் கவியரசுகளும், கவிபேரரசுகளும் கவிச் சக்ரவர்த்திகளும், கவிதை வரிகளால் ஆள்பவர் முதுகு சொறியும் முக்கியப் பண்யாற்ற தமிழக் கவிதை உலகில் சுரணையுள்ள கவிஞனும் இருக்கிறான் என்பதை நிரூபித்து இருக்கிறார் ந. முத்து

‘மணல்வீடு’ அக் 2010 இதழில் வெளிவந்துள்ள முத்து-வின் கவிதை, ஆள்பவரின் பொய் முகத்தை அம்பலப்படுத்துகிறது.

உண்மை புரியாத உடன்பிறப்புகள் தமிழின் பெயரால் நடக்கும் தகிடுதத்தங்களை உணர்ந்தால் நல்லது, இல்லையென்றாலும் இருக்கவே இருக்கு பாரதியின் வரிகள் -

‘வாழிய செந்தமிழ்
வாழிய தமிழர்
வாழிய பாரதமணித்திருநாடு’

சுரணையிருக்கும் மீதித்தமிழருக்காய் ந. முத்துவின் கவிதை.

‘அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர்தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி

நாடாலும் அமைச்சருக்கும்
அவர்தம் அன்னைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இனிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப் பணி அலுவலர்களுக்கும்
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள் பூத்திருக்கும்
வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....

தொடரும்...



No comments:

Post a Comment