Thursday, December 2, 2010

ஊரே கேளு நாடே கேளு - எஸ். இலட்சுமணப் பெருமாள் கொட்டகை அனுபவங்கள்




எஸ். இலட்சுமணப்பெருமாள்

எஸ். இலட்சுமணப்பெருமாள்

எஸ். இலட்சுமணப்பெருமாள் முன்னுரை

சினிமா கொட்டகை அனுபவத்துல எங்க ஊருக்குன்னு தனிப் பாரம்பரியமே உண்டு. ஊரே கேளு நாடே கேளுன்னு சினிமாவும் புவியும் வதக்கழிஞ்சி போய்க் கிடக்கையிலெ இன்னுங்கூட எங்க ஊர்ல சினிமா டிவி பாக்காத ஆளுகள் உண்டு அப்படி ஓரு ஊரான்னு நீங்க அதிசயிக்கலாம்.

ஒரு தடவை பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரா இருக்கும்போது எங்க ஊருக்கு வந்திருந்தார். ஊரு மந்தையிலெ சனங்களெல்லாம் கூடி நின்னாங்க ஆளுகளோட ஆளா அவரும் நின்னுக்கிட்டு, ‘ஏன்யா இந்த ஊர்ல காலரா கீலரா வந்திருக்கா’ அப்படீன்னு கேட்டார்.

ஒரு பெரிய மனுசர் எழுந்திரிச்சி கையைக் கட்டி ‘ஐயா நாஞ்சொல்றேன்னு சடைக்கப்படாது. பக்கத்து சம்சாரி ஊர்களில் தெருலைட்டு, தண்ணிடாங்கி, வாறுகாலு- ன்னு என்னென்னமோ வந்திருச்சி, இந்த ஊருக்குன்னு ஒண்ணும் இது வரைக்கும் வந்தபாடில்லை. காலரா மட்டும் இங்கெ எப்படி முன்னக்கூடி வந்திரும் மகாராசா!' அப்படீன்னார்.

அவரு காலரான்னா ஏதோ அரசு நலத்திட்டம்ன்னு நெனச்சிட்டார். அப்பேர்கொத்த அன்னாடுகாய்ச்சிக இருக்கிற ஊரு. போக்குவரத்துக நாகரீகம் சினிமாங்கிறவுல்லாம் சன்னஞ்சன்னமாத்தான் வந்து சேந்தது.

அப்பொவெல்லாம் பக்கத்து டவுனான சாத்தூருக்கு வருசத்துக்கு ரெண்டு வாட்டிதான் சனங்க போய்வருவாங்க. தீபாவளி, தைப்பொங்க, அந்த ரெண்டு நாளுக்குத்தான் அரிசிச்சோறு. அந்த அரிசி பருப்பு எண்ணை புண்ணை வாங்க அஞ்சு கல் தொலைவு நடந்தே போய் நடந்தே வருவாங்க.

சாமான்கள் வாங்கி திரும்பும்போது அஞ்சாறு பேரு சேந்தாத்தான் நடந்து வருவாங்க ரப்பட்டுல நேரங்கெட்டநேரத்துல வழிப்பறிகாரங்களுக்கு பயந்து ஒண்ணுரெண்டு பேருன்னா மால்ல படுத்திருந்துட்டு காலையில ‘பள்’ ஜன்னு விடியவும்தான் கிளம்பி வருவாங்க..

இப்படி சமயத்துலதான் சாத்தூர்ல ரெயில்வே லயனுக்கும் பக்கமா மொதமொத சினிமாக் கொட்டாயி வந்திச்சு. அப்பொ ரெண்டு பேரு சாமான்க வாங்க வந்தாங்க மாலுக்கு ஏம்போவானே சினிமா சினிமாங்கிறாங்களே அதையும் என்னான்னு சித்த பாத்திட்டு வருவோம்ன்னு போயிருக்காங்க.

சினிமாவுல ஒரு கட்டத்துல ‘ஹோ’ன்னு சத்தங்கொடுத்த மட்டுல ரெயிறு கிஜீகிஜீன்னு வந்திருக்கு. கொட்டாய்க்கி பின்னாடி ரெயில்வே லைன் இருக்கா. ஆஹா ரயிலுதடம் விலகி கொட்டாய்க்குள்ள புகுந்திருச்சின்னு இந்த ரெண்டு பேரும் ஓடுறா ஓடுறான்னு விழுந்தடிச்சி வெளியே ஓடியாந்துட்டாங்க.

வெளியே வந்து கொட்டாய திரும்பிப் பாத்து ‘நல்ல வேளடா தப்பிச்சோம். உள்ளே பூராம் நசுங்கி செத்துக்கிடக்காங்கடா. போலீசு கேஸுன்னு ஆகுமுன்னே அரம்படாம ஊருக்கு நடந்திருவோம்ன்னு வந்துட்டாங்க. அவங்க தவங்குற காலம் வணக்கும் விசயத்தை வெளியே விடலை.

வெள்ளக்காரன் போலீசு எத்தனையோ கொலை பாதங்களை மறைச்சமாதிரி இதையும் போட்டு மூடிருச்சின்னு ரொம்ப வேண்டிய ஆளுக்கிட்டெ சொல்லியிருக்காங்க செவலக்குடும்பணும் குருசாமித்தேவரும் ரொம்ப சிநேகிதகாரங்க. ஒருத்தர் பெரிய பண்ண வீட்டுலயும் ஒருத்தர் சின்னப்பண்ணெ வீட்டுலயும் சேந்த மட்டுல வேலை செய்றாங்க. வேல தீந்த நேரம் ரெண்டு பேரும் ஒண்ணாவே திரியுவாங்க. அதும் ரப்படல சாத்தூருக்குப் போயி டவுன்ல வேடிக்கை பாக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்.

அங்கே டீக்கடையில தலைக்குமேல கையைத்தூக்கி டீ ஆத்துறதும். ஓட்டல்கள்ல பெரிய தோசைக்கில்லுல விளக்குமாறுவச்சி தொடச்சி வளைய வளையழா கல்தோசை போடுறது வேடிக்கையா இருக்கும்.

சைக்கிள்ல ஒருத்தன் இவங்களை கடந்து போகும்போது ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. ‘யோவ் தேவரே இங்கே பாரும் அரிசியத்த! அந்த விசையை (சைக்கிள்) ரெண்டு காலுக்கு உடே கவுட்டுக்குள்ளே வச்சிப்போகும்போதே இந்தப் போக்கு போறானே! அதைத்தூக்கி தலையில வச்சிக்கிட்டுப் போனா இன்னும கதி போக்காவில்லெ போவாம் போலுக்கு’.

‘அதுமட்டுமா சுவஞ் சோத்தங்கைப் பக்கம் ஒண்ணு ஆளுகளை விலகச் சொல்லி லவ லவன்னு குலைக்கிறதப்பாரு.

களத்துல மிளகாய்ப்பழம் காயப்போட்டிருந்தாங்க. ரெண்டு பண்ணைகளும் ஆளுக்கு ஒரு ஏக்கர் நீள அகலத்துக்கு பரப்பி விட்டு ஒரு வாரமா வெயில்ல காய்ஞ்சதுல பழம் வத்தலாகி நாளைக்கு வியாபாரியை வரச்சொல்லி களத்துலேயே எடைபோட்டு மருகு போட்டிருவாங்க. இன்னும் ஒருநா காய்ச்சதான்.

அங்கெ ஒரு வாரமா காவலிருந்த செவலைக்குரும்பனும் குருசாமித்தேவரும் சாத்தூருக்கு போகாம ரப்பட்டு காவலிருந்தது கிறுக்குப்பிடிச்ச மாதிரி ஆகிப்போச்சி.

‘ஏம்ப்பா செவலை! அப்படியே டவுனுக்கு போலி ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு வருவோம். இத்தன நாள் வராத கள்ளனா இன்னக்கி வரப்போறான் அப்படீன்னதும் அவரும் எப்படான்னு காத்திருந்த மாதிரி ‘ம்போவோம்’ ன்னு கிளம்பிட்டாங்க. ஆள்படுத்திருந்த மாதிரி தட்டை முடியில போர்வையைப் போட்டு மூடிவச்சிட்டு செம கொட்டாய்க்கு வந்து «ச்நதுட்டாங்க.

படத்துல ஒரு கட்டம்போல காத்தும் மழையும்ன்னா சொல்லி முடியாது. இடியும் மின்னலும் ரவ்வாளி போட்டு குமுறுது. மழைக்கு பெரிய பெரிய மரங்களெல்லாம் தூரோடு சாயுது. எங்கெ பாத்தாலும் தண்ணிக்காடு, மழை விட்டபாடில்லை. நேரமாக ஆக மேகங்க கரேர்ன்னு கவிந்து மழை குஞ்சு பொரிச்சுக்கிட்டு நாலா திசையும் அடைச்சி ‘ஜோ’ன்னு பெய்ஞ்சி தள்ளிட்டிருந்தது.

திடீர்ன்னு குருசாமித்தேவரு தடபுடலா எழுந்திரிச்சி பெரீசா அவயம்போட்டு, ‘ஐயையோ ஏம்ப்பா செவலை ஏய் நல்லா வேடிக்கை பாத்தே களத்துல வத்தல கிடக்கிறதை மறந்துட்டம்ல்லா’.

‘அட நாசமாப்போக. அயத்தே போச்சே... ஒரு வார காய்ச்சல்ல கிடந்த வத்தலு. என்னைத்துக்காகும்.. நானும் மெம்மறந்து போனேனே... அடக்கடவுளே! ரெண்டு பேரும் அங்கெ பிடிச்ச ஓட்டந்தான். அஞ்சுகல் தொலவு இருட்டுல மேடு பள்ளம் தெரியாம கீழே மேல விழுந்து ஓடு ஓடுன்னு ஓடிவந்து கேஸ§மூளிரன்னு இளைச்ச மட்டுல களத்துல வந்து நின்னாங்க. செங்கடல் மாதிரி வந்தல் விரிப்பு அப்படியே கிடந்தது.

‘’அடச்சே... சினிமவுல தான்யா மழை பெய்ஞ்சிருக்கு அடக்கிறுக்கெழவே எம்புட்டு ஓட்டமய்யா...’’ பைத்தாரத்தனமாகிப்போச்சே... சேய்’’

கண்டியார்க்கிழவி கொட்டகிக்கி அன்னைக்குத்தான் வந்திருக்கா. மருமகா கூப்பிடுதாளேன்னு நண்டுஞ்சிண்டுமா நாலஞ்சு பேரம் பேத்திகளோட சினிமாப் பாக்க வந்திருந்தா. திக்கெட் எடுத்து உள்ளெ நொழஞ்சதுதான் தாம்சம் கிழவிக்கி தண்ணி தாகம் எடுத்தது. சினிமாவுக்கு போகணும்ன்னு காலையிலிருந்து சின்னதுக்கை குளிப்பாட்ட மருமகளுக்கு வெந்நி போட சோறு பொங்கன்னு வேலை சரீயா இருந்தது. இந்தப்பரப்புல தண்ணி குடிக்கக் கூட தேறமில்லை.

மருமகதான் தண்ணி டிரம்மிருக்கிற இடத்தைக் காட்டுனா, அதால குழாய் போட்டி- ருந்தது. நாலஞ்சு பொண்ணுக வரிசையில நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க. ஒரு ஈயத் தம்ளரை நாய்ச்சங்கிலியில போட்டு கட்டி வச்சிருந்தாங்க. இருந்தாலும் குழாயில கையை ஏந்தி வாயால உறிஞ்சிக் குடிச்சிக்கிட்டிருந்தாங்க. ஒவ்வொருத்தரும் குடிச்சிட்டு அடுத்தாளு பின்னாடி நிக்கிறதால குழாயை அடைக்காம அப்படியே விட்டுட்டுப் போக அடுத்தாளு குனிஞ்சு தண்ணி குடிச்சாங்க.

கண்டியார் பாட்டி முறை வந்தது. தண்ணியை வயித்துக்கு குடிச்சதும் போதும்ன்னு தலைய தலைய ஆட்டுனா. குழாயிலிருந்து தண்ணி வந்துக்குட்டேயிருந்தது. இவா போதும் போதும்ங்கிற சாடையில தலையை பலம்மா பலம்மா ஆட்டுனா. நல்லியை திருகி நிறுத்தணும்னு அவளுக்குத் தெரியல பாவம்...

ஊர்ல இவளத்த பொம்பளைங்க காட்டு வேலைக்கு போயிட்டு கையோட முதலாளி வீட்டுக்கு வந்து கூலி வாங்க வருவாங்க. அப்பொ தண்ணி ரொம்ப தவையா இருக்கும். ‘அம்மா தாயி கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்கன்னு கேட்டா மொதலாளியம்மா செம்புல தண்ணி கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே நிறுத்தி கையை ஏந்தச் சொல்லி தண்ணியை ஊத்தும். இவளுக்கு வயிறு நிறைஞ்சி தாகம் அடங்குவதும் போதும்ங்கிறதுக்கு அடையாளமா தலைய தலைய ஆட்டுவா அந்த அம்மா ஊத்துறதை நிறுத்திக்கிடும். அந்த நெனப்புலத்தான் பைப்புக்கு முன்னாடி தலைய தலைய ஆட்டுனா

நல்ல வேளை அந்நேரம் ஒரு பொண்ணு வந்து நல்லியை திருகி அடைச்சாள் கண்டியார்க்கிழவி நிழுந்து ‘அடி சக்கைக்னானா’ இதுல சூச்சாம் இருக்காக்கும் தாயி அப்படீன்னு கொமட்டுல கைய வச்சி அதிசயமா பாத்தா.

நிறைய தண்ணி குடிச்சதுல இவளுக்கு மோலணும் போல இருந்தது. ‘அம்மா தாயி எங்கெ மூத்திரம் பெய்றதுன்னு கேட்டா. ‘அந்தா அந்த கக்கூஸுக்கு போ பாட்டின்னு அந்தப் பொண்ணு போயிட்டா. இவளுக்கு கக்கூஸுன்னா என்ன எழவு தெரியும். அங்கெ போய்ப் பாத்தா. பாத்து பதறிப்போய் ஓடியாந்துட்டா.

நாசமாய் போறவா அடுப்படியப்பாத்து கையக் காட்டீட்டு போறாளேன்னு மொணங்கிக்குட்டெ வந்தா, அவளுக்கு கக்கூறைப்பாத்தா மூணுகல்லு வச்சி அடுப்புக்கூட்டுன மாதிரி தெரிஞ்சது. எப்படி வெளேர்ன்னு பளிச்சின்னு இருக்கே வெள்ளைக்காரன் அடுப்பு மிதமாவா இருக்கும். நல்லவேளை நா ஒரு பைத்தியகாரி போயி நின்னு சேலையை திறைச்சிட்டேன். குனிஞ்சு பாத்தாத்தான் தெரியுது. அடுப்பாங்கரைன்னு

யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நல்ல பிள்ளை மாதிரி அங்குக்கு இங்குட்டு திரும்பாம வந்து தரையில உக்காந்து எல்லோரோடையும் படம் பகித்தாள். ஆட்டம் நடந்திட்டிருக்கும்போது யானை ஒண்ணு ஓடியாந்தது. அதுக்குப் பின்னாடி ஒருத்தன் ஓடியாந்தமட்டுல ‘எல்லோரும் ஓடுங்கள் எல்லாரும் ஓடுங்கள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அப்படீன்னு எச்சரிக்கை பண்ணிக்கிட்டே ஓடியாந்தாம்.

‘ஐயையோ நா என்னாம்பேன் பிள்ளைக் மூலைக்கொன்னா படுத்திருக்கே... மதம் பிடிச்ச யானைங்காகளே அடியேய் பிள்ளைகளை தூக்கிற. இந்த ஓட்டம் ஓடியாருதே.. இப்படி வந்து இக்கல மாட்டிக்கிட்டமே... ரெண்டு கையில ரெண்டு பிள்ளைகளை தூக்கிக்கிட்டு இருட்டுல ஆளுகளை நலுக்கு நலுக்குன்னு மிதிச்சிக்கிட்டு இழுபறியா ஓடுனா. இவா படத்தை மறைக்கிறதனால எல்லாரும்
‘ஒன்னு கத்துனாக. இவரொம்பவும் கலவரி ஆகிட்டா. எல்லாரும் பதறி கூக்காடு போடுறதா அவக்குத்தவக்குன்னு வெளியே வந்தா. மருமகளை திரும்பி அடியே அசமந்தம் பிடிச்சவளே அடியேய்ன்னு அவயம்போட

என்னம்மோ ஏதோன்னு வாட்ச்மேன் ஓடியாந்து ‘ஏய்... உக்காரும்மா ஏ.. பெரிய மனுஷி! உக்கார்றியா இல்லையான்னு கம்பை ஓங்குனான். அந்த இடத்திலேயே உக்காந்து பழையபடிக்கும் படத்தை திரும்பிப்பாத்தா அதுலெ நாலஞ்சு காவலாளி கள் கத்தி ஆயுதங்களோட குதிரையில ‘ஓ’ ன்னு அவயம்போட்ட படிக்கு யானையை விரட்டிப் போனதை கிழவி பாத்து சலசலசன்னு சேலையை நனைச்சிட்டா.

எங்க ஊரு எமிச்சியாரு தாத்தாவை பாத்தவுடனேயே சிரிப்பு வந்திடும். ஆளு தட்டக் குச்சியா இருப்பாரு. கூனு வளசலு. நடக்கும்போது அவரு தலையும் உடம்பும் இட வலிமா ஆடிக்கிட்டே வரும்.

வெறும் மண்ணு வச்சி வீடு கட்ட அவரு மாதிரி யாராலயும் முடியாது. ஊர்ல இருக்கிய முக்கலே மூணுவிசம் வீடுகள் அவரு கட்டுனதுதான். அவருக்கு எம் ஜி ஆர்ன்னா கொள்ளாப்பிரியம். அவரோட ஐயா கூழத்தாத்தாவும் அப்படித்தான்னு சொல்லுவாக. அப்பொ எமிச்சியாருக்கு ஒண்றனா வயசு. சம்சாரம் மொக்கப்பேச்சியோட சினிமாவுக்கு போயிட்டு வந்தார். வரும்போதே பாதை நெடூக எம்ஜிஆர் மாதிரியே சிலா வரிசை போடுறதும் பாட்டுப்பாடுறதுமா ரொம்ப குஷியா வந்தார். சாமம் இருக்கும் வீட்டுக்கு வந்து எமிச்சியாரை தொட்டில்ல போட்டு தூங்க வச்சதும் சாப்படக்கூட பொறாம சினிமாவுல எம்.ஜி.ஆர் காதலியை கட்டில்ல தள்ளிவிட்டு ஓடியே வந்து பாய்ஞ்சி மேலே விழுந்து கொஞசோ கொஞ்சுண்ணு கொஞ்சுவார். அதுமாதிரி வீட்டுலயிருந்த கயித்துக்கட்டில்ல மொக்கப்பேச்சியை தள்ளிவிட்டதும் இவரு பின்னடிச்சிப்போயி திடுதிடுன்னு ஓடிவந்து அந்த அம்மா மேல பொத்துன்னு விழுக கட்டிலு மடார்ன்னு ஒடிஞ்சு கீழே மொந்துன்னு விழுந்து மொக்கப் பேச்சிக்கு கிண்ணி இறங்கிருச்சி. ஐயையோ ஐயையோன்னு அன்னைக்குப் போட்ட கூப்பிடு கடைசி வரைக்கும் நிக்கலை. குறுக்சகெலும்பும் ஒண்ணு சேரவே இல்லை. கடைசி காலம் வரைக்கும் அந்த அம்மாவுக்கு சகல சேவுகமும் இவருதான் பண்ண வேண்டியதாகிப் போச்சி.

காலையில காலையில இவரு ‘வெளிக்கி’ போகும்போது ‘அந்த’ ஓலைக் கொட்டானையும் சுமந்துகிட்டுப் போவாரு. ‘ஏ கூழ! கொட்டானை கொண்டு போய் தள்ளி போடப்பா. ஓடையில கொண்டு போய்போடு.. காலையில எதிர்த்து வர்றவனொல்லாம் அங்கே போடு தூரமாப்போடுன்னு தினோமும் லச்சைகேடுதான்.

இதனாலயோ என்னவோ எமிச்சியாருக்கு யாரும் பொண்ணு கொடுக்கலை எமிச்சியார் தாத்தாவும் லேசுப்பட்ட ஆளு இல்லை.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தை நூறுதரம் பாத்திருப்பார் ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் மொதல்ல பார்க்கிற மாதிரியே பாப்பாரு படத்துல கோழை எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால அடிப்பார். அந்தக்
கட்டம் வந்ததும் மனுசன் எழுந்திரிச்சி குத்துக்கால் வச்சி உட்காந்துக்கிடுவார்.

‘அடிரா டேய் ஙொப்பனோலி அடி.. ஒங்க ஆத்தா புருசன் கொஞ்ச நேரத்துல ஒஞ் சொட்டெலும்பை ஒடிக்க வருவான்டோய்.. தாயோலி.. அடி... வந்து ஒம் முதுகுத்தோலை உரிக்கலையாக்கும்... பிறகு பார்ரா!’

பக்கத்திலிருக்கிற ஆளைத்திரும்பி கையால ஒரு இடி இடிச்சி ‘அடிக்கான்ல்ல அடுது இருக்கு இவனுக்கு வேடிக்கை!’ அந்த ஆள் இவரை சட்டை பண்ணாட்டாலும் ஒரு திருப்தியில் பழையபடி திரையைப் பார்த்து. ‘டேய்...வக்காள வாத்தாளி... வரும்டா உனக்கு வட்டியும் மொதலுமா...’

அடுத்து கொஞ்ச நேரத்துல ஆள்மாறாட்டமாகி கேனைபு எம்ஜிஆர் அங்கே போயி வீர எம்ஜீஆர் இங்கே வந்திடுவார். நம்பியார் வழக்கம்போல கோழை எம்ஜீஅர்தான்னு சவுக்கை எடுத்து வீச அதை லாவகமா பிடுங்குனதும் அடிப்பர் திருப்பி வீர எம்ஜிஆர்.

அவ்வளதான் எமிச்சியாரு சுதாரிச்சி எந்திரிச்சது ‘அப்படி அடி.. போடு .. கொளு அர்ரெ ஙொப்பந் தொண்ணய .. தாட்சண்யம் பாக்காத...’

சுத்தி உட்காந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் அடி... உதை மிதி. இவ்வளவும் செய்துட்டு அவங்ககிட்டெயே ‘எப்படி கிடைக்குது பூசை’ இவனுக்கு இப்பொ விடிஞ்சுபோச்சா இன்னும் இருக்கு வேடிக்கை.

இதனாலதான் எமிச்சியாரு கூட யாரும் சினிமாவுக்கு போறதில்லே போனாலும் பக்கத்துல உக்கார்றதில்லை

பிறகொருநாள் ஒரு நரிக்குறவர் சினிமாவுக்கு வந்திருந்தார். அப்பொவெல்லாம் அவங்களுக்கு துப்பாக்கி வச்சிக்கிடுற உரிமை இருந்தது. அதனால துப்பாக்கியோட வந்து மணலை கூட்டிவச்சி முன்னடியில உட்கார்ந்துக்கிட்டாரு. அது எம்ஜிஆர் நடிச்ச சரித்திரப்படம் கடைசிக்கட்டம். வழக்கம்போல கதாநாயகியை தூக்கி தோள்ல போட்ட மட்டுல நம்பியார் கோஷ்டிகளோட ரொம்ப மும்முரமா வாள்ச்சண்டை
போட்டுகிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட சுழட்டி சுழட்டி அவ்வளவேரையும் விழுத்தாட்டிட்டாரு. கிளம்பிப்போகும்போது ஒரு மூலையிலிருந்து நம்பியார் கத்தியால எம்ஜிஆருக்கு கணக்கா குறிவச்சாரு. நம்ம நரிக்குறவரு துப்பாக்கியெடுத்து நம்பியாருக்கு குறிவச்சிட்டாரு. இமை தட்டுற நேரந்தான் டுமீல்ன்னு குண்டு நம்பியார் மேல பாய்ஞ்சதுதான் தாம்சம்.

வெள்ளத்திரை குபிர்ன்னு தீப்பிடிச்சது. ஜனங்க ஆணும் பெண்ணும் கந்தல்குலமா ஓடுறாங்க. நரிக்குறவர் சொல்றார்.

பிறகென்ன சாமி நானும் நாப்பது அம்பது படம் வரைக்கும் பாக்கேன் சாமே இதே வேலையா பாவம் அந்த மனுசன் இப்பொதான் செத்துப்பொடிச்சி வந்திருக்கார் சாமே(எம்ஆர்ராதா துப்பாக்கியால் சுட்டநேரம்) எவ்வளவுதான் சாமி நானும் பொறுத்து பொறுத்து போறது சாமே போலீஸென்ன சாமி போலீஸு மிலிட்டிரியை வரட்டும் சாமே என்னய அந்த மனுசர் வந்து காப்பாத்திருவாரு சாமோ...

இப்பொ குடிசைகளெல்லாம் கொட்டகையாகிப்போச்சு. பெரிய வீடுகள் பூராம் தியேட்டராகிப் போச்சி. பட்டி தொட்டிகளெல்லாம் டிவிபெட்டிக்குள்ளே அடக்கமாகிப்போச்சி. கோலங்களின்னு ஒரு தொடர் வந்திட்டிருந்த நேரம் ஒரு நா காலையில ரெண்டு பொம்பளைக வாசல் தெளிக்க சாணிக் சட்டியோட எதிர்த்தெதிர்த்து நின்னுக்கிட்டு பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன பேசுவாங்க பட்டி தொட்டி பொம்பளைக எங்கே நடுகைக்கு போகலாம் எங்கே களைக்குப் போகலாம் கடலைபிடுங்க நெத்துப் பெறக்கன்னு பாடுபங்கைத்தவிர வேற பேசுறதுக்கு என்ன இருக்குன்னு கவனிச்சுக் கேட்டேன்.

‘யக்கா ஊருக்குள்ள பன்னிக்காய்ச்ச வருதுங்கிறாங் பறவைக்காய்ச்ச வருதூங்கிறாங்க இந்த ஆதிக்கி ஒரு பேதி வரமாட்டேங்குதேக்கா.

http://thamizhstudio.com/others_tt_6.php


No comments:

Post a Comment