Sunday, August 1, 2010

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (5)

வெங்கட் சுவாமிநாதன்

தமிழ் சினிமாவின் சுமார் 80 வருட சரித்திரத்தில், அது தந்துள்ள சினிமா குப்பை குவியலில் சினிமா என்று சொல்லக்கூடியது ஒன்று கூட இல்லை யென்றும், ஐம்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்த பழைய படங்களின் சில காட்சிகளைச் சுட்டிக் காட்டி, இம்மாதிரியான காட்சிகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழ்ந்த போதிலும், அவற்றுடனே நாம் வாழ்ந்து வந்த போதிலும், அத்தகைய காட்சிகளை நம் தமிழ் சினிமாவில் காண்பதற்கில்லை என்று நான் சொன்னதும், அன்பர்கள் சிலருக்கு வருத்தமும், சிலருக்கு கோபமும், இன்னம் சிலருக்கு ஏதோ நான் தமிழனை, தமிழ் சினிமாவைத் தாழ்த்திக் கேவலப் படுத்துவதற்கே எழுதுவது போலும், அவர்கள் தமிழ் ரத்தம் கொதிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் ரசனைக்கேற்ற படங்கள் தான் என்று அவர்கள் உரத்துச் சொல்கிறார்கள். வேறொரு இணையத்தில் ஒரு பட்டியலையே கொடுத்து இவையெல்லாம் சிறந்த படங்கள் என்று என் முன் வைத்திருக்கிறார்கள். அந்தப் பட்டியல் இதோ:

சந்தியா ராகம்
வீடு
உன்னைப் போல் ஒருவன்
உதிரிப் பூக்கள்
முள்ளும் மலரும்
உச்சி வெயில்
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
அவள் அப்படித்தான்
அழியாத கோலங்கள்
கண் சிவந்தால் மண் சிவக்கும்
மெட்டி
ராஜ பார்வை
மகா நதி
குணா
அந்த நாள்
முதல் மரியாதை
ஹே ராம்
ஒருத்தி
நாயகன்
மொழி
சுப்பிரமணியபுரம்
சென்னை 28
ஆயுத எழுத்து
வெயில்
புதுப்பேட்டை
பருத்திவீரன்
அஞ்சாதே
நண்பா நண்பா
இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்
சங்க நாதம்
அக்ரஹாரத்தில் கழுதை
விருமாண்டி


இவையெல்லாம் நல்ல தமிழ் படங்கள் இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளன. இந்த படங்களின் பட்டியல், 32 Best Tamil Movies – Best Arthouse films – 10 Hot – ல் கொடுக்கப்பட்டுள்ளது போக இன்னும் சில சேர்க்கப்பட்டுள்ளன, அன்பர்களால்.

கேட்க வேண்டிய கேள்விதான். இந்தப் பட்டியலும் சர்ச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று தான். இப்பட்டியலுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தே ஆகவேண்டும்.

முதலில் எனக்குத் தோன்றுவது கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை இயக்கிய ஞான ராஜசேகரனின் படங்களோ, கிராமத்து மண் வாசனையைத் தன் படங்களில் கொணர்ந்தவராக, ஸ்டுடியோவை விட்டு கிராமத்துக்குக் காமிராவை எடுத்துச் சென்ற பெருமை படைத்தவராகப் பாராட்டப்படும் பாரதி ராஜாவின் படங்களோ (ஒன்றைத் தவிர) ஏன் இடம் பெறவில்லை என்று எனக்கு யோசிக்கத் தோன்றுகிறது. இவர்களை ஒதுக்கும் என் காரணங்களும் பார்வையும் வேறு. ஆனால் மேற்கண்ட பட்டியலைத் தயாரிக்க ஐம்பது வருடங்கள், உன்னைப் போல் ஒருவனைத் தொட (1963 அல்லது 1964 என்று நினைக்கிறேன்) பின்னோக்கிச் சென்றவருக்கு ஞான ராஜ சேகரனையும் பாரதி ராஜாவையும் சேர்க்கத் தோன்றவில்லையே, ஏன்?

இப்பட்டியலில் காணும் பல படங்கள் வித்தியாசமானவை, வழக்கமான தமிழ்ப் படங்களிலிருந்து விலகி வேறு தடத்தில் பயணிக்கவேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் காணும் படங்கள் தான் என்பது எனக்குத் தெரியும். அனேகம் படங்கள் வேறு தடத்தில் பயணிப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் செயல்பாடுமே கொண்ட படங்களும் உண்டு. உதாரணமாக, கமல ஹாஸனின் படங்கள் அத்தனையும். இனி வரப் போவனவற்றையும் சேர்த்து. அவரது ஆளுமை தன் படங்களில் தானே மையமாகவும் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குவதாகவும் காட்டிக்கொள்ளும் ஆசை கொண்ட ஆளுமை அவரது. ஒவ்வொரு படமும் முந்தையதிலிருந்து வித்தியாசமாக முயற்சிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்ளலாம். காட்டிக்கொள்ளலாம் தான். அவ்வளவே.. மையம், அவரே தான். இதெல்லாம் போக, ஒரு படம் அசாதாரண வெற்றி பெற என்னென்ன மசாலாக்கள் இருக்கவேண்டும் என்பது சினிமா உலகில் இப்போதைய கால கட்டத்தில் தீர்மானமாகியுள்ளதோ அவையெல்லாம் கொண்ட ஒரு தயாரிப்பைத் தான் அவரது வித்தியாசமான படங்களும் தரும். இதையே மணிரத்தினத்திற்கும் சொல்ல வேண்டும். இவையெல்லாம் சினிமாவே அல்ல. இவை எதுவும் சினிமா என்ற கலை சார்ந்தவை அல்ல. சினிமா என்ற சூதாட்டமாகிப்போன வியாபாரம் சார்ந்தவை.

கமலஹாஸன் நல்ல நடிப்புத் திறமையுள்ளவர் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவரிடம் திறமை மட்டுமே உண்டு. அந்தத் திறமையை அவர் என்றும் ஒரு கலையாக பரிணமிக்க விட்டதில்லை. அவரது திறமையெல்லாம் தன்னைப் பூதாகாரமாக முன்னிறுத்திக்கொள்வதற்கும், அதை முதலீடாக வைத்து, சந்தைக்கான மசாலாக்களையும் சேர்த்து வியாபாரம் செய்யும் வணிகர் தான் அவர். லாவகமாக உடல் வளைத்து ஆடத் தெரிந்தால், ரிக்கார்ட் டான்ஸ் ஆட தேர்ந்துகொள்வது போன்றதே, கமலஹாஸனின் நடிப்புத் திறமை பெற்ற வடிகால். இந்த வணிகத்தில் அவர் கணக்குகள் தவறாகி நஷ்டம் ஏற்பட்டால் அது ஒரு கலைஞனின் புதிய பாதைத் தேர்வில் எதிர்ப்படும் தோல்வி அல்ல. பங்குச் சந்தைக்காரனின் கணக்குகள் தோற்கும் சமாசாரமே அது. இது அவருக்கு மட்டுமலல, சினிமா வர்த்தகம் ஒரு சூதாட்டமாகி இதில் தம் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க வந்தவர்கள் எல்லோருக்கும் நேர்வது தான். மணி ரத்னத்துக்கும், ரஜனி காந்துக்கும், சங்கருக்கும், நேர்வது தான். எஸ். எஸ். வாசனுக்கும் நேர்ந்தது தான். இயக்குனர் சிகரத்துக்கும் நேர்ந்தது தான். இது கலைத் தோல்வி அல்ல. பங்குச் சந்தையில் சூதாடிக் கிடைத்த தோல்வி. இதில் சாமர்த்தியமாக தான் தப்பித்துக் கொண்டு தயாரிப்பாளர் தலையில் விழச் செய்வதில் தான் நம் உலக நாயகர்கள சூப்பர் ஸ்டார்கள, இளைய தளபதிகள் இத்யாதிகள கவனமாக இருப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே இந்த வணிகப் பாதையின் சூதாட்டத்திலிருந்து விலகிசீரிய முயற்சிகள் சில செய்து பார்க்கவேண்டும் என்று துணிந்தவர்கள் என முதலில் ஜெயகாந்தனைச் சொல்வேன். பின் அதைத் தொடர்ந்தவர்கள் என பாலு மகேந்திராவையும், மகேந்திரனையும், ஞான ராஜசேகரனையும் சொல்வேன். இவர்களைப் பற்றி பேசலாம்.


மேலும் படிக்க : http://thamizhstudio.com/others_article_5.php



No comments:

Post a Comment