Friday, July 23, 2010

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு.


தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு.


ஆதவன்26-06-2010


ஞாயிற்றுக்கிழமை, 25-07-2010

இரவு 08.30 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 01.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்:

முதலாவதாக சிட்டுக்குருவி என்கிற ஆவணப்படம் திரையிடப்படும்.
சிட்டுக்குருவியின் அழிவைப் பற்றி அக்கறையுடன் பேசும் படம்.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: பதேர் பாஞ்சாலி
இயக்கம்: சத்ய ஜித் ரே

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:

http://www.imdb.com/title/tt0048473/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

Tuesday, July 20, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறுந்திரைப் பயணம் (17-07-2010)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறுந்திரைப் பயணம் (17-07-2010)
ஆதவன்


தமிழ் ஸ்டுடியோ.காம் தனது பரப்பை விரிவுப் படுத்தவும், பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறும்படங்களை வணிக ரீதியாக வெற்றியடைய செய்யவும் ஏற்படுத்தப்பட்டதே தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணம். இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும் குறும்படங்கள் திரையிடப்பட்டு, அது சார்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பொது மக்களையும் பங்கேற்க செய்து, அவர்களுக்கு குறும்படங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பின்னர் படிப்படியாக அந்த கிராமத்தில் உள்ள சிறு திரையரங்கில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அதில் கிடைக்கும் வருவாயை அதன் தயாரிப்பாளருக்கு கொடுப்பதே இந்தப் பயணத்தின் முதல் குறிக்கோள். நிகழ்வின் முடிவில் அந்த கிராமத்தில் தமிழ் ஸ்டுடியோவின் கிளை ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும், இரண்டாம் சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும். அந்தப் பகுதியில் இருந்து அதிக அளவில் குறும்பட இயக்குனர்களை வெளிக்கொணரவும் இத்திட்டம் உதவி புரியும்.

இந்த வரிசையில் தமிழ் ஸ்டுடியோவின் முதல் குறுந்திரைப் பயணம் திண்டிவனம் அருகிலுள்ள புலியனூர் கிராமத்தில் கடந்த (17-07-2010) சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

நண்பர் சிவக்குமாரின் வேண்டுகோளின்படி புலியனூர் கிராமத்தில் குறும்படங்கள் திரையிடுவது என்று முடிவானது. பின்னர் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதில், இதயா, பத்மநாபன், விஜயக்குமார், சதாசிவம், ஐந்தாவது தூண் அமைப்பை சேர்ந்த ஜெய் செல்வா மற்றும் தமிழ் ஸ்டுடியோ நிறுவனர்கள் அருண் & குணா உள்ளிட்ட நண்பர்கள் புறப்படலானோம். நண்பர் பத்மநாபன் தனது மகிழுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுக் கூற அதன் படி அனைவரும் அவரது மகிழுந்தில் பயணப்பட்டோம். சனிக்கிழமை அன்று நாங்கள் புறப்பட்ட நேரம், முதல் காதலியை முத்தமிடும் காதலன் தயங்கி தயங்கி நிற்பது போல், மண்ணை முத்தமிடலாமா வேண்டாமா என மழை தயங்கி தயங்கி நின்றது. பின்னர் சத்தில்லாத முத்தமாக சிறு சிறு தூறல்களை சிந்திக் கொண்டிருந்தது. அச்சிறுப்பாக்கம் தாண்டியது கொஞ்சம் கனமழைப் பொழிய ஆரம்பித்தது. மகிழுந்தை சாலையோரமாக நிறுத்தி ஒரு தேநீர்க் கடையில் அனைவரும் தேநீர்ப் பருகினோம். கிராமம் தானே எப்படியும் தேநீர் சுவையாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு விழுந்தது பேரிடி. பச்சைத் தண்ணீரில் செங்கல் தூள் கலந்தது போல இருந்து தேநீர். இருந்தாலும் மழைக் கொடுத்த குளிரில் சூட்டை அணைத்தவாறே தேநீர் பருகிவிட்டு புலியனூர் நோக்கி புறப்படலானோம்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புலியனூர் நோக்கி பிரிந்த சாலையில் மகிழுந்து தன் பாதையை அமைத்துக் கொண்டது. மிகக் குறுகலான சாலைகள், சாலையின் இரு பக்கமும் வயல்வெளிகள், அடர்ந்த மரங்கள், என அந்தப் பாதை மிக ரம்மியமானதாக இருந்தது. சிறு வயதில் மிகவும் ரசித்து சாப்பிட்ட ஈச்ச்சம்பலங்கள் நிறைந்த ஈச்சமரங்கள் மிக அதிகமாக இந்த சாலைகளில் காணப்பட்டது மனதை கொஞ்சம் மயக்கத்தான் செய்தது. தூக்கணாங்குருவிகள் கட்டிய மிக ஆச்சரியமான கூடுகள் அதிக அளவில் தொங்கிக் கொண்டிருந்த பனை மரங்கள் பாதை எங்கும் பதநீர் தெளித்து எங்களை வரவேற்றது தூக்கனாங்குருவிகளின் இசைக் கச்சேரியோடு.

மாலை ஆறுமணியளவில் புலியனூர் கிராமத்தை சென்றடைந்தோம். புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் திரையிடலுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருந்தார் நண்பர் சிவக்குமார்.

கல்யாண வீட்டில் ஓயாமல் இழவுக் கொட்டிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நாடகங்கள் இன்னும் இந்த கிராமத்தை முழுமையாக ஆக்கிரமிக்கவில்லை. பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியே இல்லை. அதனால் அதிக அளவிலான பொது மக்கள் குறும்படங்களைக் காண வந்திருந்தனர். புலியனூர் கிராமத் தலைவர் முன்னிலையில் குறும்படங்கள் திரையிடல் தொடங்கியது.

சென்னையில் கூட குறும்படங்கள் முடிந்த பின்னர் கைத் தட்டுங்கள் என்று சொன்ன பிறகுதான் கைத் தட்டுவார்கள். ஆனால் இந்தக் கிராம சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குறும்பட முடிவிலும் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையிடல் நிகழ்வு பத்து மணி வரை நடைபெற்றது. சுமார் பதினைந்து குறும்படங்கள் திரையிடப்பட்டது. சுமார் ஒன்பதரை மணியளவில் பெரியவர்கள் தங்கள் வீடு நோக்கி புறப்பட்டனர். சென்றவர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல வந்திருந்தனர். ஆனால் சிறுவர்களோ, நீ போ.. நான் அப்புறமா வரேன்.. என்றுக் கூறி அனைத்துக் குறும்படங்களையும் பார்த்தப் பின்னரே வீட்டுக்கு சென்றனர்.

குறும்படங்களின் கதைப் பற்றியும், அதில் இயக்குனர் சொல்ல வந்த கருத்தையும் மிக தெளிவாக இந்தக் கிராம மக்கள் உள்வாங்கிக் கொண்டனர். இந்தக் கிராமத்தில் இனி ஒவ்வொரு மாதமும் குறும்படத் திரையிடல் நடைபெறும்.

குறும்படத் திரையிடல் முடிந்ததும், இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்க சென்றோம்.. உறங்க சென்றவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி.. உறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம் அந்தக் கிராம நூலகம். டால்ஸ்டாய் முதல் தபு சங்கர் வரை அனைத்து எழுத்தாளர்களின் புத்தகங்களும் கிடைக்கப் பெற்ற நூலகமாக இருந்தது அது. கி.ரா.. ஜெயகாந்தன்.. ராமகிருஷ்ணன்..என சகலவிதமான எழுத்தாளர்களும் எங்களுக்கு முன்னரே அங்கு சென்று இடம் பிடித்துக் கொண்டிருந்தது போல இருந்தது. புதிதாக திருமணம் செய்துக் கொண்ட ஆண், முதலிரவில் முதன் முதலில் மனைவியை எங்கே தொடுவது என்று தவிப்பது போல், எந்தப் புத்தகத்தை எடுப்பது, எந்தப் புத்தகத்தை விடுவது என்று எல்லோரும் திணறிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒருவழியாக அனைவரும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உறக்கத்தை கலைத்து புத்தகங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர்.

விடிந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் வயல்வெளிக்கு இரைக்கும் பம்ப் செட்டிலும், கிணற்றில் நீந்தியும் குளித்த அனுபவம் காலையில் கிடைத்தது. இந்த பம்ப் சேட்டை அடைவதற்கு நாங்க பயணப் பட்ட தூரம் குறைந்தது நான்கு கிலோ மீட்டர்கள் இருக்கும். ஆனால் பாதை முழுவது அரிதான பல பறவைகள் எங்களுடன் பயணப்பட்டது. ஏரி முழுவது வளந்திருந்த புல்வெளிகள், ஈச்சமரங்கள், தேனீக்கள், பெயர் தெரியாத பல பறவைகள் என அந்தப் பாதை கொடுத்த பரவசம் நடந்து சென்ற களைப்பை கலைந்தது.

ஒருத் தேநீர்க் கடைக்கூட இல்லாத கிராமம் இந்தப் புலியனூர் கிராமம். தேநீர் வேண்டுமென்றால் சுமார் ஒன்பது கிலோ மீட்டர்கள் பயணப்பட்டு வெள்ளிமேடுப் பேட்டை சென்றுதான் குடிக்க வேண்டும். தேநீர்ப் பிரியர்களுக்கு மட்டுமே இதுக் குறை..மற்றபடி சென்னைக்கருகே மிக அழகான, அருமையான கிராமம் இந்த புலியநூர் கிராமம்.

குறுந்திரைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறு அன்று செஞ்சி புறப்படத் தயாரானோம். வேல்லிமேடுப் பேட்டை வந்து காலை உணவருந்த நல்ல உணவகம் தேடினோம். ஒரு சிறு உணவகம், ஒரு இட்லி 1.50 மட்டுமே. 600 ரூபாய் பில் வந்திருக்கும் என்று பார்த்தால் 65 ரூபாய் என்று வந்தது. நல்ல காலை உணவாக அமைந்தது. பரிமாரியப் பெண் தேவையறிந்து மிகப் பணிவாக பரிமாறினால். அந்த காலை உணவை இன்னும் ஒரு மாதத்திற்கு மாக்க இயலாது. செஞ்சி நோக்கி புறப்பட்டது மகிழுந்து. பள்ளிக் காலத்தில் ஆசிரியர்களின் அறிவினைக் கொண்டு சுற்றிப் பார்த்த இடம், விபரம் தெரிந்து முதல் முறையாக செல்வதால் உண்மையில் ஒரு பேரானந்தம்.

வேல்லிமேடுப் பேட்டையிலிருந்து செஞ்சி செல்லும் சாலை சிலக் கிலோ மீட்டர்கள் யாரோ சாபம் விட்டது போல் குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. சாலை செப்பனிடும் பணி நடக்கிறது. எப்படியும் தேர்தல் வரும் முன்னர் முடிந்துவிடும். அதுவும் அங்குள்ள ஓட்டுக்களின் எண்ணிக்கையைப் பொருத்தது. குறைந்த ஓட்டுக்கள் என்றால் முடிய அடுத்த ஐந்து வருடங்கள் ஆகும். சாலை எப்படி இருந்தாலும் அதன் இருமங்கிலும் இருந்த வயல்வெளியில் பெண்கள் களை எடுத்துக் கொண்டிருந்தனர். களை எடுத்த பெண்கள் கலையாக இருந்ததால் சாலை களைப்பை மனம் களை எடுத்துவிட்டது.

செஞ்சியில் முதலில் ராணிக் கோட்டையை சுற்றிப் பார்க்க சென்றோம். விரைவாக கோட்டையின் உச்சியைத் தொட்டுவிடலாம். ஆனால் படிகள் ஏறுவதற்குள் நெஞ்சு வெடித்துவிடும். அவ்வளவு செங்குத்தான படிகள். ஆனால் இராஜாக் கோட்டை உச்சியைத் தொட நேரமாகும். பயணம் இனிமையாக இருக்கும் என்று அங்கிருந்த பெண் ஒருவர் சொன்னார். கோட்டைகளில் கூட பெண்கள் யாரையும் நிம்மதியாக விடுவதில்லை.

நல்ல நல்ல இடங்கள், பொது மக்கள் அதிகம் வராத சுற்றலாத் தளங்கள் அனைத்திலும் காதலர்களின் வருகையும், சில்மிசங்களும் எல்லையைத் தொடும். சித்தன்னவாசல், செஞ்சிக் கோட்டை, என நான் பார்த்த இடங்கள் அனைத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. சித்தன்ன வாசலில் அறிய ஓவியங்களுக்கிடையில் ரேவதி ஐ லவ் யு ...ராஜா என எழுதியிருக்கும் காதல் கிறுக்கன்கள் செத்தொழிந்தால்தான் இந்த இடங்கள் எல்லாம் உருப்படும். செஞ்சிக் கோட்டை முழுவதும் காதல் கதிதங்கள்.. வாசகங்கள்.. போதாக் குறைக்கு இலவசப் படம் காட்ட நிஜக் காதலர்கள்...இவர்களை காதலர்கள் என்று எப்படி சொல்ல.. 'காம'கோடிகள்.

பின்னர் ராஜா கோட்டையை பார்க்க புறப்பட்டோம். மாலை மூன்று மணி வரைதான் இராஜாக் கோட்டையை பார்க்க அனுமதி.. நாங்கள் சென்றது மாலை நான்கு.. எனவே கோட்டை ஏறாமல் மற்ற இடங்களைப் பார்த்துவிட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம்.

முதல் குறுந்திரைப் பயணம் வெற்றிகரமாக அமைய காரணமாயிருந்த நண்பர்கள் சிவக்குமார், மகிழுந்து கொடுத்து உதவிய பத்மநாபன், (உண்மையில் மகிழுந்து இல்லையென்றால் பயணம் இத்தகைய சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை.) உடன் வந்து உதவிப் புரிந்த விஜயக்குமார், இதயா, சதாசிவம், அனைவர்க்கும் இந்த தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------
தமிழ் ஸ்டுடியோ.காம் முதல் குறுந்திரைப் பயணம்

பொது மக்களை குறும்படங்களும், அதன் பயனும் சென்று சேர வேண்டும், அனைத்து தரப்பினரும் குறும்படம் குறித்த விழிப்புணர்வு வரவேண்டும் என்கிற நோக்கில் தமிழ் ஸ்டுடியோ.காமின் குறுந்திரைப் பயணம் அமையவுள்ளது. இதன்படி, தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும், திறந்த வெளியில் இரவு நேரத்தில் கிராம மக்கள் முன்னிலையில் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடப்படும். பின்னர் அந்தக் குறும்படங்கள் குறித்து பொது மக்களிடம் விவாதங்கள் நடத்தப்படும். நிகழ்வின் இறுதியில் அந்த கிராமத்தில் குறும்படம் சார்ந்த ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து குறும்படங்கள் திரையிட ஏற்பாடு செய்யப்படும்.

காரணம்?

அனைத்து தரப்பினரையும் குறும்படங்களின் பயன் சென்று சேரவேண்டும். பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், என்பவையே இதன் பிரதான நோக்கமாக இருப்பினும், இதில் குறும்படங்களை வணிக அளவில் வெற்றி பெற செய்யும் நோக்கமும் அடங்கியிருக்கிறது. முதலில் பொது மக்களிடம் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பின்னர் அவர்களே குறும்படங்களை தேடித் பார்க்கும் நிலை ஏற்படும். இதன் விளைவாக அந்தக் கிராமங்களில் உள்ள சிறியத் திரையரங்குகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அந்தக் கிராம மக்களிடம் சிறுத் தொகை வசூல் செய்யப்பட்டு, குறும்பட தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரியமையாளருக்கும் வழங்கப்படும். இத்திட்டம் எட்டாக்கனியாகவே இருந்தாலும் அதனை பரீட்ச்சார்த்த முறையில் செய்துப் பார்க்க தமிழ் ஸ்டுடியோ.காம் முனைந்துள்ளது.

இதன்படி உங்கள் கிராமத்தில் குறும்படங்கள் திரையிட நீங்கள் விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 9840698236, 9894422268

குறுந்திரைப் பயணத்தின் முதல் கிராமமாக திண்டிவனத்தில் உள்ள புலியனூரில் எதிர்வரும் சனிக்கிழமை (17-07-2010) குறும்படங்கள் திரையிடப்படுகிறது. புலியனூர் செல்லும் வழி.. திண்டிவனம் --> செஞ்சி பேருந்து நிலையம் --> பேட்டை --> புலியனூர்.

புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறும்படங்கள் சனிக்கிழமை மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை திரையிடப்படும். ஆர்வலர்கள் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு

9840698236, 9894422268

Thursday, June 10, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

ஆதவன்

நாள்: சனிக்கிழமை (12-06-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த பகுதியின் இரண்டாவது மாத முயற்சியாக கேமரா பயிற்சி அளிக்கப்படுகிறது. கேமரா சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும். ஆர்வலர்களை கேமராவை இயக்கவைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும

இந்த மாதம் கேமரா பயிற்சி கொடுக்கவிருப்பவர், ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், லீனா மணிமேகலை அவர்கள் பங்குபெறுகிறார்.

குறும்படங்களை விருதுகளுக்கு அனுப்புவது தொடர்பான வழிகாட்டல் நடைபெறும்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு



கௌடில்யன் ரமேஷ் 15 நிமிடங்கள்
ராவ் சாஹிப் சர்வோத்தமன் 12 நிமிடங்கள்
எழுத்தாளனின் சமையல் குறிப்புகள் தமிழ் சாமி அய்யா 13 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட நடிகர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இராமகிருஷ்ணன் அவர்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கோரிப்பாளையம் போன்ற திரைப்படங்களின் கதாநாயகன்ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

Monday, May 24, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு



தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு

ஆதவன்27-05-2010


வியாழன், 27-05-2010

இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார்.

இவர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'ஆழத்தாக்கம்' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படத்தின் இயக்குனர் திரு. பைசல் அவர்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Huozhe (1994) in english To Live

இயக்கம்: Zhang Ymou

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:

http://www.imdb.com/title/tt0110081/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


Friday, May 21, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..



தமிழ்ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (14-05-2010) தொடங்கி திங்கள் (17-05-2010) காலையில் முடிவடைந்தது.

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கும்போதே அதில் மிக முக்கியப் பகுதியாக இடம்பெற்றது ஊர் சுற்றலாம் வாங்க பகுதி. குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்களையும், அந்த மக்களின் கலாச்சார கூறுகளையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் பயணங்களின் புனிதங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும், ஊர் சுற்றுவது எத்தகைய உயரியப் பண்பு என்பதையும் வாசகர்களுக்கு விவரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்தப் பகுதி. மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல் "காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்யஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.

அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம்பொருளை அதில் காணமுடியும் என்பதுபோலத்தான் அதுவும்.

அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்கவேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.

இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.

ஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே"..

இப்படிப் பட்டதாக பயணங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம். பொறுமை, ஏமாற்றம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவற்றின் பல கூறுகளை ஒரு பயணம் நமக்கு கற்றுக் கொடுத்துவிடும். எவ்வித எதிர்ப்பார்த்தலும் இல்லாத ஒரு பயணமாகவே இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி இருக்க வேண்டும். இதில் பங்கு பெற நீரில் மாட்டிக்கொள்ளும்போது நீரின் சுழளுக்கேர்பவும், புயலில் சிக்கிக் கொள்ளும்போது காற்றின் திசைக்கேற்ப வளைந்துக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ.காம் அத்தகைய உணர்வுகளையே அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் பங்கு பெற நினைக்கும் அனைவரும் இதனை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வுகளும் ஒரு முன்னோட்டமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி நிச்சயம் ஒரு பரவச நிலையை, அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்கும் என்பது திண்ணம்.

இனி இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் சில முக்கிய கூறுகள் உங்களுக்காக,

இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு உதகையில் உள்ள மசினக்குடிக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டதும் அதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பதினைந்து ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. கடைசி நேரத்தில் மூன்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விலகிக் கொள்ள 12 ஆர்வலர்களுடன் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கோவை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

காலை ஒன்பது மணியளவில் கோவையை பேருந்து அடைந்ததும் குறும்பட வட்டம் உறுப்பினரும், நண்பருமான திரு. சாசு அவர்கள் எங்களை வரவேற்றார். கோவையில் இருந்து மசினக்குடி செல்வதற்கான பயண ஏற்பாட்டையும் அவரே செய்திருந்தார்.

மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை வழியாக மசினக்குடியை சென்றடைய சனிக்கிழமை மாலை ஆறு மணியாயிற்று. வழியில் குன்னூர் மற்றும் உதகையில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான இடங்களில் வண்டியை நிறுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

மசினக்குடி சென்றடைந்ததும் அங்கே எங்களுக்காக காத்திருந்த பெங்களூருவை சேர்ந்த பிரசாத் மற்றும் அஷ்வின் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். பின்னர் "Blue Valley " எனும் தாங்கும் விடுதியில் மூன்று அறைகள் எடுத்துக் கொண்டு இரவுப் பொழுதை அங்கே கழிக்கலானோம். காடுப் போன்ற பரப்பில் அங்கேக் குடில் குடிலாக அமைந்துள்ள பகுதிதான் நாங்கள் தங்கியிருந்த குடில்கள். இதில் தங்கியது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை ஆர்வலர்களுக்கு கொடுத்திருக்கும்.

பின்னர் அதிகாலை ஐந்து மணியளவில் விலங்குகளை காண முதுமலை காடுகள் அமைந்துள்ள வனப்பகுதியில் எங்கள் பயணம் தொடங்கியது. பல விலங்குகள் காணக்கிடைக்கும் என்று பலரும் கூறி இருந்தாலும், மான், மயில், பறவைகள், யானைகள் போன்றவற்றை மட்டுமே அங்கேக் காண முடிந்தது. இருந்தாலும் காட்டு வழிப் பயணம் மனதுக்கு ஒரு புத்துணர்வையும், உடலுக்கு நல்லக் காற்றை சுவாசித்த ஆறுதலையும் கொடுத்தது.

மசினக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உதகை, கொடநாடு வழியாக கோவையை வந்தடைந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் உதகை அருகே ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் எங்கள் பயணம் மட்டுமின்றி பலரது பயணமும் சில மணி நேரங்கள் தாமதமானது. இதனால் நாங்கள் பார்க்க வேண்டிய சிலப் பகுதிகளை தாரை வார்த்துவிட்டு கோவை நோக்கி விரைந்தோம். கோவையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டு திங்கள் காலை சென்னை வந்தடைந்தோம்.

மிக நுட்பமாகவும், மிக நேர்த்தியாகவும், அனைத்து விடயங்களையும் இங்கே பதிவு செய்ய இயலவில்லை. நிச்சயம் அடுத்த ஊர் சுற்றலாம் வாங்கப் பகுதி இன்னும் சிறப்பாக அமையும் என்றே கருதுகிறோம். பயண சிரமங்களை பொறுத்துக் கொண்டும், இடையில் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளையும் பொறுத்துக் கொண்டு பயணத்தின் சங்கடங்களையும் கூட சந்தோசமாக மாற்றியநண்பர்கள், ரமேஷ், கணேஷ், தயாளன், லிவிங்க்ஸ்டன், சத்யானந்தன், ராகோ, நந்தகுமார், சாசு, பிரசாத், அஸ்வின் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள் பல.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/GXfAsJ?authkey=Gv1sRgCOb5j4iG-O2FkQE#



Monday, May 17, 2010

கேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்



கனடாவின் இளம் எழுத்தாளர்களுள் நம்பிக்கை அளிக்கின்ற ஒருவராக விளங்கும் கேரென், 'ஒரு நாடோடிக்கவி' என்று அழைக்கப்படுபவர். தாய்லாந்து, பர்மா, ஸ்பெயின் என்று அலைந்து திரிந்து, கவிதைகளும், பயண நூலும், நாவல்களும் எழுதி இருப்பவர். தீவிரமான வாழ்க்கை அனுபவங்களுக்குள்-பரிசோதகைளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவர். அடுத்த கட்டத்தில், "வீடென்பது குழந்தை வளரும் இடம் மட்டுமல்ல, அகம், விரியும் ஆழமும் கொள்ளும் இடமுமாகும்" என்று உணர்ந்திருப்பவர்.

கேரெனின் தந்தை ரோமன் கத்தோலிக்கர்; தாய் Jehovah's witness-பிரிவைச் சேர்ந்தவர். கேரெனின் குடும்பத்தில் சதா பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்து வந்து கொண்டிருப்பது இந்த சமய உட்பிரிவு பேதம். அத்துடன் தந்தை குடிகாரர். மூத்த சகோதரி ட்ரெஸி போதை மருந்துக்கு அடிமையாகி, 24-வது வயதில் தற்கொலை செய்து கொண்டவர். கேரென் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து, தாய்லாந்து சென்றவர். அடுத்து, ஸ்பெயினில் ஆங்கிலம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.

இவரின் முதல் கவிதைத் தொகுதி 'The small words in my Body'. பிற பண்பாடுகள் பற்றி எழுதுகையில், பார்வையாளரா தன்னை உணர்ந்து கொள்ளும் கேரென், "கவிதை என் குருதியிலிருந்து வெளிப்படுகின்றது. அது ஒவ்வொன்றினுடைய நாடியாகவும் சுவாசிப்பாகவும் உள்ளது" என்கிறார்.
"இது ஐந்தாம் பருவம்
வரலாறு போய்விடும்போது
வார்த்தைகளுக்கு எதிரொலிகளோ
அர்த்தங்களோ இல்லாதபோது
எனது தந்தை காணாதுபோகும்போது
என் அக்கா தனித்து வதைபடும்போது ..."
என்று தொடங்குகிறது அவரது ஒரு கவிதை.

"மக்கள் என்னிடம் கதைகள் சொல்லும்போது, அவற்றை உலகிற்குக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு நான் கூறும்போது, அவை பல்வேறு மக்களின் பல்வேறு காலங்களின் கதைகளாகின்றன" என்று கருதும் கேரென், 1996-இல் பர்மாவுக்கு ஒரு பயணியாக வந்தார். அங்கிருந்த இராணுவ ஆட்சி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், ஆங்-ஸான்-சூ-கீ போன்ற போராளிகள், பௌத்த மதத்தினரும் விலகி நிற்காமல் போராட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது, நாடெங்கிலும் நிலவிய வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்கள் அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து பர்மா மீது அவரது கவனம் குவிந்திருந்தது. Pencanada அமைப்புக்காக 1994-95 இல் அவர் பணியாற்றியபோது, அதில் உறுப்பினராயிருந்த மாதிடா என்னும் எழுத்தாளர் பர்மா அரசுக்கு எதிர்நிலையில் எழுதிவந்தமையால், 20 ஆண்டுகள் தனிக் கொட்டடியில் வைக்கப்பட்டிருந்ததும், அவருக்குள் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

காட்டில் பதுங்கிப் போராட்ட வாழ்வு நடத்தும் போராளிகளைச் சந்தித்தபோது, புரட்சியாளர்களுள் ஒருவருடன் அவர் காதல் வயப்படவும் நேர்கிறது. பல்கலைக்கழகங்கள், மடாலயங்கள்


read more... http://koodu.thamizhstudio.com/ayal_ilakkiyam_thodargal_1_3.php



Tuesday, May 4, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (08-05-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

இவர், திருடா திருடி, பொறி, யோகி போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் படம்:

இந்த மாதம் மூன்றாவது பகுதியில், ஆவணப்பட இயக்குனர் திரு. கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "நீருண்டு நிலமுண்டு" ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கிராமங்களில் நீர் சேகரிப்பின் தேவையை, அதன் சாத்தியங்களை மிக விரிவாக பேசும் ஆவணப்படம். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268