Showing posts with label oor sutralam vanga. Show all posts
Showing posts with label oor sutralam vanga. Show all posts

Friday, May 21, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..



தமிழ்ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (14-05-2010) தொடங்கி திங்கள் (17-05-2010) காலையில் முடிவடைந்தது.

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கும்போதே அதில் மிக முக்கியப் பகுதியாக இடம்பெற்றது ஊர் சுற்றலாம் வாங்க பகுதி. குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடங்களையும், அந்த மக்களின் கலாச்சார கூறுகளையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் பயணங்களின் புனிதங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும், ஊர் சுற்றுவது எத்தகைய உயரியப் பண்பு என்பதையும் வாசகர்களுக்கு விவரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்தப் பகுதி. மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல் "காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்யஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.

அந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம்பொருளை அதில் காணமுடியும் என்பதுபோலத்தான் அதுவும்.

அல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்கவேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.

இந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.

ஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே"..

இப்படிப் பட்டதாக பயணங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம். பொறுமை, ஏமாற்றம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவற்றின் பல கூறுகளை ஒரு பயணம் நமக்கு கற்றுக் கொடுத்துவிடும். எவ்வித எதிர்ப்பார்த்தலும் இல்லாத ஒரு பயணமாகவே இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி இருக்க வேண்டும். இதில் பங்கு பெற நீரில் மாட்டிக்கொள்ளும்போது நீரின் சுழளுக்கேர்பவும், புயலில் சிக்கிக் கொள்ளும்போது காற்றின் திசைக்கேற்ப வளைந்துக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ.காம் அத்தகைய உணர்வுகளையே அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் பங்கு பெற நினைக்கும் அனைவரும் இதனை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வுகளும் ஒரு முன்னோட்டமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி நிச்சயம் ஒரு பரவச நிலையை, அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்கும் என்பது திண்ணம்.

இனி இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் சில முக்கிய கூறுகள் உங்களுக்காக,

இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு உதகையில் உள்ள மசினக்குடிக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டதும் அதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பதினைந்து ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. கடைசி நேரத்தில் மூன்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விலகிக் கொள்ள 12 ஆர்வலர்களுடன் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கோவை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

காலை ஒன்பது மணியளவில் கோவையை பேருந்து அடைந்ததும் குறும்பட வட்டம் உறுப்பினரும், நண்பருமான திரு. சாசு அவர்கள் எங்களை வரவேற்றார். கோவையில் இருந்து மசினக்குடி செல்வதற்கான பயண ஏற்பாட்டையும் அவரே செய்திருந்தார்.

மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை வழியாக மசினக்குடியை சென்றடைய சனிக்கிழமை மாலை ஆறு மணியாயிற்று. வழியில் குன்னூர் மற்றும் உதகையில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான இடங்களில் வண்டியை நிறுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

மசினக்குடி சென்றடைந்ததும் அங்கே எங்களுக்காக காத்திருந்த பெங்களூருவை சேர்ந்த பிரசாத் மற்றும் அஷ்வின் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். பின்னர் "Blue Valley " எனும் தாங்கும் விடுதியில் மூன்று அறைகள் எடுத்துக் கொண்டு இரவுப் பொழுதை அங்கே கழிக்கலானோம். காடுப் போன்ற பரப்பில் அங்கேக் குடில் குடிலாக அமைந்துள்ள பகுதிதான் நாங்கள் தங்கியிருந்த குடில்கள். இதில் தங்கியது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை ஆர்வலர்களுக்கு கொடுத்திருக்கும்.

பின்னர் அதிகாலை ஐந்து மணியளவில் விலங்குகளை காண முதுமலை காடுகள் அமைந்துள்ள வனப்பகுதியில் எங்கள் பயணம் தொடங்கியது. பல விலங்குகள் காணக்கிடைக்கும் என்று பலரும் கூறி இருந்தாலும், மான், மயில், பறவைகள், யானைகள் போன்றவற்றை மட்டுமே அங்கேக் காண முடிந்தது. இருந்தாலும் காட்டு வழிப் பயணம் மனதுக்கு ஒரு புத்துணர்வையும், உடலுக்கு நல்லக் காற்றை சுவாசித்த ஆறுதலையும் கொடுத்தது.

மசினக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உதகை, கொடநாடு வழியாக கோவையை வந்தடைந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் உதகை அருகே ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் எங்கள் பயணம் மட்டுமின்றி பலரது பயணமும் சில மணி நேரங்கள் தாமதமானது. இதனால் நாங்கள் பார்க்க வேண்டிய சிலப் பகுதிகளை தாரை வார்த்துவிட்டு கோவை நோக்கி விரைந்தோம். கோவையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டு திங்கள் காலை சென்னை வந்தடைந்தோம்.

மிக நுட்பமாகவும், மிக நேர்த்தியாகவும், அனைத்து விடயங்களையும் இங்கே பதிவு செய்ய இயலவில்லை. நிச்சயம் அடுத்த ஊர் சுற்றலாம் வாங்கப் பகுதி இன்னும் சிறப்பாக அமையும் என்றே கருதுகிறோம். பயண சிரமங்களை பொறுத்துக் கொண்டும், இடையில் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளையும் பொறுத்துக் கொண்டு பயணத்தின் சங்கடங்களையும் கூட சந்தோசமாக மாற்றியநண்பர்கள், ரமேஷ், கணேஷ், தயாளன், லிவிங்க்ஸ்டன், சத்யானந்தன், ராகோ, நந்தகுமார், சாசு, பிரசாத், அஸ்வின் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள் பல.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/GXfAsJ?authkey=Gv1sRgCOb5j4iG-O2FkQE#



Thursday, April 29, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..நிகழ்வு.


தமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..நிகழ்வு.

நாள்: மே 15 -16 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: மசினங்குடி (உதகமண்டலம்)
கட்டணம்: 2000/- (மொத்த செலவு)

தமிழ் ஸ்டுடியோ.காம் வாசகர்களே..

தமிழ் ஸ்டுடியோ.காம்மின் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சி நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் உங்களுடன் புறப்படத் தயாராகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும், ஆர்வலர்களுக்கு தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளின் திரை விலக்கி காட்டவும், இந்த முறை நமதுப் பயணம் மசினங்குடியை நோக்கி செல்கிறது. மசினங்குடிப் பகுதி நீலகிரி மழைப் பகுதியில் உதகமண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில், இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில், வனத்துறை ஏற்பாட்டில் விலங்குகள் சுற்றித் திரியும் பகுதியை கண்டு கலைக்கலாம். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிலில் தங்கியிருந்தும் விலங்குகளை கண்டு களிக்கலாம்.

மேலும், மசினங்குடியில் இருக்கும், இயற்கை வனப்பை, அதன் அழகை பெரும்பாலான மனிதர்களின் காலடிப் படாத பகுதிகளையும் பார்த்துவிட்டு வருவதே இந்த ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியின் நோக்கம். மலைப் பகுதி சார்ந்த குறும்படங்கள் எடுக்க விரும்பும், ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முழுக்க முழுக்க குறும்பட ஆர்வலர்கள், இயக்குனர்கள் என குறும்பட கலைஞர்கள் ஒன்றிணைந்து செல்லவிருக்கும் இந்த ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வில் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். அதற்கான கட்டணம் 2000/-

பயணத்தின் போது குறும்படங்கள் சார்ந்தும், தமிழ் மற்றும் உலக இலக்கியத்தின் சிறுகதைகளை குறும்படமாக உருமாற்றும் கலந்துரையாடல் நடைபெறும். இலக்கிய குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம்.