Tuesday, August 23, 2011

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பாலைநிலவன்

விக்ரமாதித்தன் நம்பி

பகடியின் உச்சமான கவிதை - ஒரு சிறிய சோப்புப்பெட்டி

நல்வாழ்வின் நற்செதியால் நிரம்பிய
ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
வாழ்வு பற்றிய புனைகதைகளை
எல்லோர்க்கும் பரிசளிக்கும் விதம்
யாரும் அறியாததல்ல
உயிர்த்தெழுதல் பற்றிய அக்கதைகளைக் கேட்போர்
சிறந்த நாவலாசிரியாராகி விடுகிறார்கள்
ஆயினும்
யாரும் எழுதுவதில்லை
ஓர் அழகிய சர்ச்சின் கவலைகளை
கதைகளாகச் சொல்லத் தொடங்குகிறார்கள்
உயிர்த்தெழுதலால் நிரம்பிய பாத்திரங்கள்
நமது வீடுகளில்
குற்றத்தின் பயத்துடன் நடமாடத் தொடங்குகிறார்கள்
அவர்களில் ஒருவரும் மரணிப்பதில்லை
மரித்தாலும்
சவப்பெட்டியை
சோப்புப் பெட்டியாகப் பிறந்து வெளியேறிவிடுவார்கள்
எனவே
உலகம் ஒரு சிறிய சோப்புப் பெட்டியில்
சுற்றிச் சுழல்கிறது.
அதை ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
தன் கையில் வைத்திருக்கிறான்
சடுதியாகப் பெருமழை பெய்யத் தொடங்கினால்
சோப்புப் பெட்டியில் துயிலும் உலகம்
முழுமுற்றாகக் கரைந்துவிட வாய்ப்பியிருக்கிறது அல்லவா?
எனவே
பெருமழை வரும்வரைக்கும்
ஓர் அழகிய சர்ச்
சோப்புப் பெட்டியினுள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது
மரணத்தின் உடலாக

- பாலைநிலவன்
(பறவையிடம் இருக்கிறது வீடு தொகுப்பு, பக்கம் 66-67)

பாலையின் பிற கவிதையிலிருந்து வித்யாசமான கவிதை, இது. பாலைநிலவன் நேர்பேச்சில் பகடி பொங்கி வழியும் (பாலை மட்டுமில்லை, லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், பிரான்சிஸ் கிருபா, ஷங்கர ராம சுப்ரமணியன் ஆகியோர் பேச்சிலும் சிரித்து முடியாது. அந்த நேரம் எந்த ஞாபகமும் வராது? இப்போது இந்தக் கவிதையில் அந்தப் பகடியைப் பார்க்க முடிகிறது..

எவ்வளவு சீரியதான விஷயம் கவிஞன் என்ன நைச்சியமாகச் சொல்கிறான். நவீன தமிழ்க் கவிதையில் இப்படி ஒரு ஏகடியத்தைக் கண்டதேயில்லை. நம்முடைய சமூகத்தில் பகடி பண்ண வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன நவீன கவிஞர்கள் குறைவைக்கலாகாது.

பறவையிடம் இருக்கிறது வீடு, தொகுப்பில் எத்தனையோ சிறந்த கவிதைகள் இருந்தும் - இநத்க் கவிதையை எடுத்துப் பேச முன்வந்திருப்பது, இதன் விஷயத்துக்காகவும் சொல்லியிருக்கும் விதத்துக்காகவும் தாம்..

மதங்கள் எல்லாமே நிறுவனமயமாகிவிட்டன, கவிஞர்கள் விமர்சிக்கிறார்கள். இந்தக் கவிதை, தமிழுக்குப் புதிது இந்தச் சொல்முறை, முற்றிலும் புதிது. நவீன கவிதை எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் இது.

கவிதையின் முதல் வாசகமே நல்ல கிண்டல் முதல் வரியே கேலிதான்.
தொடரும் கிண்டலும் கேலியும் சுவாரஸ்யமானவை
உயிர்தெழுதல் பற்றிய அக்கதைகளைக் கேட்போர்
சிறந்த நாவலாசிரியராகிவிடுகிறார்கள்
ஆயினும்
யாரும் எழுதுவதில்லை.
இன்னும் கூடக் கூர்மையானவை இந்த வரிகள்
அவர்களில் ஒருவரும் மரணிப்பதில்லை
மரித்தாலும்
சவப் பெட்டியை
சோப்புப் பெட்டியாகப் பிறந்து வெளியேறிவிடுவார்கள்.
அடுத்தடுத்து புனைவுகளும் கண்டனமும்.
ஓர் அழகிய சர்ச் என்று திரும்ப திரும்ப வருவதைக் கவனிக்க வேண்டும்.
எனவே
உலகம் ஒரு சிறிய சோப்புப் பெட்டியில்
சுற்றிச் சுழல்கிறது
அதை ஓர் அழகிய சர்ச்சின் பிரசங்கி
தன் கையில் வைத்திருக்கிறான்
பகடியின் உச்சம் இது.

சடுதியாக பின் பெருமழை பெய்யத் தொடங்கினால்
சோப்புப் பெட்டியில் துயிலும் உலகம்
முழுமுற்றாகக் கரைந்துவிட வாய்ப்பிருக்கிறது அல்லவா?
எனவே
பெருமழை வரும் வரைக்கும்
ஓர் அழகிய சர்ச்
சோப்புப் பெட்டியினுள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது
மரணத்தின் உடலாக,
சுழற்றியடிக்கும் புனைவுகள்.
பாலையின் அழியாத கவிதைகளில் ஒன்றாக இருக்கும் இது.

நவீன கவிதை தந்திருக்கும் சுதந்திரத்தையும், வசதியையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவனே நல்ல கவிஞன். பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறவன் மோசமான கவிஞன். ஒரு விஷயம், எப்போதுமே முன்வரிசைக்குக் கொஞ்சம் பேர்தான் வருகிறார்கள். நிறைய பேருக்குப் பின்வரிசையில் இருப்பதே தெரிவதில்லை. பெயர் சொல்லும்போது மட்டும் விழித்துப் பார்த்துக் கொள்கிறார்கள். நிறைய இருக்கைகள் காலியாகவே கிடக்கின்றன. முன்வரிசையில் நாமாகத்தான் போய் அமர வேண்டும். எப்போது வேண்டுமானால் – பிந்தி – வருவதற்கும் நினைத்தால் எழுந்து போவதற்கும் முன்வரிசை தோதுப்படாது பின்வரிசைதான் சௌகரியம்.

பாலை, தன்னை ஒப்புக்கொடுத்த கலைஞன் தொடர்ந்தும் சீராகவும் இயங்கியே வருகிறார், அவருடைய எம். ஜி. ராமச்சந்திரனும் கார்ல்மார்க்ஸீம் சிறுகதைத் தொகுப்பு. சமீபத்திய சாட்சியம். அவரைப் போன்ற படைப்பாளிகள் கவனிக்கப் பெறுவதும், கௌரவிக்கப் பெறுவதும நிகழும் போதுதான் தமிழ்ச் சூழல் நன்றாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்ள முடியும்.


http://koodu.thamizhstudio.com/thodargal_18_3.php


No comments:

Post a Comment