Thursday, August 11, 2011

படைப்பாளிகள் - ஆர்.ஆர். சீனிவாசன்



படைப்பாளிகள் - ஆர்.ஆர். சீனிவாசன்

செந்தூரன் (படிமை மாணவர்)


"யாருடனும் பேச இயலாத நபர்களுக்காகவும், யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்காகவும் என் படைப்புகள் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்."
- ஆர். ஆர். சீனிவாசன்.


மொழியும் கூட ஒரு ஊடகம்தான். மனிதர்களின் உணர்வுகளை, அவர்களின் சுய உணர்வாகவே கடத்தி செல்ல மொழி ஒரு ஊடகமாகத்தான் பயன்படுகிறது. ஆனால் காட்சி ஊடகம் அப்படியல்ல.. அது மனிதனின் உணர்வுகளை, நியாய அநியாயங்களை பகுத்து திரும்ப அவனிடமே கடத்துகிறது. கேமரா என்பது தன்னை கையிலெடுக்கும் கலைஞனை பொருத்து தன் வீரியத்தை தகவமைத்துக் கொள்கிறது. ஆர். ஆர். சீனிவாசனின் கேமரா, தான் சொல் வந்ததை நேர்மையாக சொல்வதோடு, சமூக புரட்சிக்கு தேவையான விதையையும் விட்டு செல்கிறது.

எந்த ஒரு கலைஞனும் தான் தேர்ந்தெடுத்த துறை தாண்டி தனது அறிவை விசாலப்படுத்தினால் மட்டுமே தன் துறை சார்ந்து, ஆழமாகவும், நேர்த்தியான அறிவோடும், சில கட்டுகளை உடைத்தும் தன் படைப்பை வெளிப்படுத்த முடியும். சீனிவாசன் தனது அறிவுத் திறத்தால் எடுத்துக் கொண்ட படைப்பை அதன் உச்சபட்ச வீரியத்தோடு படைக்கும் பேராற்றல் உடைய ஆவணப்பட கலைஞன். மொழி தாண்டி ஒரு கலைஞனாக, கலகக்காரனாக இந்த சமூகத்தின் வேர்களை ஒழுங்கமைக்க இந்த ஆவணப்படங்களின் மூலம் தன்னாலான பங்களிப்பை செய்தவர். அவரது முதல் படைப்பான "நதியின் மரணம்" தொடங்கி அண்ணா பற்றிய ஆவணப்படம் வரை இந்த ஒழுங்கமைவு தொடர்கிறது.

ஒரு ஆவணப்படம் எடுக்க அது சார்ந்து பல்வேறு ஆய்வுப்பணிகளை செய்து இறுதியில் சரி, தவறுகளை ஆராய்ந்து ஒரு சுயமதிப்பீடு செய்துக் கொண்டு களப்பணியில் ஈடுபட்டு பின்னர் அதனை ஒரு படைப்பாக கொண்டு வருவது சில கலைஞர்களால் மட்டுமே சாத்தியப்படக் கூடும். அந்த வகையில் சீனிவாசன் ஆவணப்பட துறையில் மிக முக்கியமான ஆளுமையே.

இனி திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. உங்களுக்கு எப்படி திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது?

என் குடும்பம் ஒரு சாதாரண வியாபாரம் சார்ந்த குடும்பம். என் தந்தை ஓர் வியாபார நிறுவனம் வைத்திருந்தார். அந்த நிறுவனத்தில், நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை அந்த வியாபாரத்தையும் கவனித்து வந்தேன். அந்த நேரத்தில் என் அப்பா, அம்மாவோடு இருந்த நாட்களை விட என் பாட்டி, தாத்தாவோடு இருந்த நாட்கள்தான் அதிகம். எனக்கு என் பாட்டிமேல் அதிகபடியான பிரியம் இருந்தது. எனக்கு என் பாட்டி ஒரு படிமமாய் இருந்தார்கள். அதனாலேயே நான் அவர்களோடு இருந்து வளர்ந்து வந்தேன். என் பாட்டி ஒரு பெரியஆளுமை. அவர்களின் மனம் சார் பழக்கங்களும், உடல் சார் பழக்கங்களும் இப்போதும் என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்களின் அதீத அன்பினால்ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். என் பதினேழு வயதில் பாட்டி இறந்துபோய்விட்டார். அவரின் சாவு மிகவும் இயற்கையான சாவாகவே இருந்தது. ஆனாலும் எனக்கு அந்த வயதில் அது ஒரு பெரிய இழப்பாகவே இருந்தது. என்னை என்னாலேயே தேற்றமுடியாத சாவாகவே அது இருந்தது. நான் மிகவும் நிலை குலைந்து போயிருந்தேன்.

அப்பொழுது அந்த வாழ்க்கையே சிக்கலுக்களுக்குரியதாய் மாறியிருந்தது. அந்த நிலையில் இருந்து வெளிவர நான் நிறைய காரியங்கள் செய்ய வேண்டியதாயிருந்தது. அதிலே முக்கியமான காரியமாக நான் அதிகமாக சைக்கிள் ஓட்டினேன். எங்கேயாவது சென்றுகொண்டே இருக்கவேண்டும். சைக்கிளிலேயே பல மணி நேரங்கள் திருநெல்வேலியின் தெருக்களுக்குள்ளாகவே ஓட்டிக்கொண்டிருப்பேன். என் மன நிலையை மாற்றவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருந்தேன். எங்கேயாவது பயணம் போய்க்கொண்டே இருக்கவேண்டும், அல்லது தனிமை கோரமாயும் சிக்கலானாதகவும் இருந்தது. என் தெருவில் எனக்கு மிகவும் அற்புதமான நண்பர்கள் இருந்தார்கள்.அவர்களோடு இணைந்து காடுகளுக்கு அதிகமாய் பயணம் செய்தேன். தாமிரபரணியின் அனைத்து இடங்களிலும் குளிப்பது, மேற்கு தொடர்ச்சி மலை என் வாழிடமாக இருந்தது. வாரா வாரம் சென்றுகொண்டிருப்போம். குற்றாலத்துக்கு மட்டுமே கணக்கிலடங்கா முறை சென்றிருப்பேன். தொடர்ச்சியாய் இந்த துயரங்களை மாற்றுவதற்கு ஏதேதோ செய்துகொண்டிருந்தேன்.

அதற்கு முன்னைய காலத்தில் நான் சிறுவனாய் இருந்தபோது என்னுடைய அப்பா ஒரு கேமரா வாங்கித் தந்திருந்தார். அதைவைத்து நிறையபுகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்.அந்த காமெராவை இன்றும் வைத்திருக்கிறேன். இந்த காலகட்டத்தில்தான் என் பயணமும், புகைப்படக்கலையும் என்னையும் அறியாமல் ஒன்றாய் இணைந்தது. நிறைய புகைப்படம் எடுக்கிறேன், ஊரெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறேன், ஆனாலும் அந்த துயரம் என்னை விட்டகன்றாற்போல் தெரியவில்லை. துயரத்தில் இருந்து மீளமுடியாத்தன்மை. அது எப்படி இருக்குமென்றால் நிற்கும் இடத்திலேயே நிலம் இரண்டாக பிளந்து உள்ளே சென்றுகொண்டிருந்தால் எப்படி இருக்கும், அப்படிதான் அந்த துயர். ஆனாலும் நாம் ஒருமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். என்னை அந்த வழியிலிருந்து மீட்டெடுக்க யாரும் இருக்கவில்லை, உதவி செய்யவும் முன்வரவில்லை. எல்லோரிடமும் நன்றாய் பழகுவேன், நன்றாய் பேசுவேன், பார்ப்பதற்கு சாதாரணமாய் இருப்பவன் போன்றே இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அந்த துயரத்திலிருந்து மீள என்னால் முடியவில்லை. 1980களின் பிற்பகுதியில் எஸ்.வி.ராஜதுரை "இனி" என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகையில் எனது நண்பர்களான தர்மராஜ், ரமேஷ் போன்றவர்கள் எழுதிக்கொண்டு இருந்தனர். அந்த பத்திரிக்கையை நான் கவனிக்க ஆரம்பித்தேன். அந்த புத்தகத்தில் என்னை ஈர்த்தது கட்டுரையோ, கதையோ, கவிதையோ அல்ல. அந்த புத்தகத்தின்அட்டையில் ஜான் ஐசக் என்னும் புகழ் பெற்ற புகைப்படக்காரரின் புகைப்படங்கள்தான். அந்த படங்களை பார்த்து நான் வியந்தேன். எப்படி இந்த புகைப்படங்களை எடுக்கிறார்? அதுவரைக்கும் நான் எடுக்கும் புகைப்படங்கள் பயணம் சார்ந்தே இருந்தது. ஆனால் இந்த புகைப்படங்கள் வேறு ஓர் தளத்தில் இருந்தன. அந்த தளத்தை எட்டுவதென்பது எனக்கு சிரமமானதாய் இருந்தது.

பின்னாளில் அது ஒன்றும் பெரிய தொழில்நுட்ப விடயம் கிடையாது என்பதை உணரமுடிந்தது. அதன் பின் என் புகைப்படங்களில் அவரை தேட ஆரம்பித்தேன். அந்த புத்தகத்தை திரும்ப திரும்பப் பார்த்ததில் அந்த பத்திரிக்கை ஓர் மாற்று இலக்கிய பத்திரிக்கையாய் இருந்தது. அதாவது குமுதம், ஆனந்த விகடன் அல்லாத அதே வேளையில் யாத்ரா, கொல்லிப்பாவைமாதிரி அல்லாமல், ஆனால் அதிகப்படியான புகைப்படங்களுடனும், ஓவியங்களுடனும் இருந்தது. எண்பத்தேழுகளில் இந்த பத்திரிக்கை முக்கியமானதாய் இருந்தது. அப்பொழுதான் அதில் இருக்கக்கூடிய இலக்கிய விடயங்களை படிக்க ஆரம்பித்திருந்தேன். என் துயரை நீக்கக்கூடிய ஒன்றாய் இலக்கியத்தை பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின் ஒருநாளில் இருபது மணி நேரம் வாசித்தேன். அதற்கு பின்னான காலங்களில் முழுநீள இலக்கியவாதியாய் மாறினேன். அதைத் தொடர்ந்து அதன்படியே நான்கு வருடங்களுக்கு மேல் புத்தகங்களையே படித்துக்கொண்டே இருந்தேன். அதை விடுத்து வேறு எந்த வேலையும் பார்க்கத் தோன்றவில்லை.அந்த நேரங்களில் நான் நிறைய எழுத்தாளர்களை சந்தித்தேன். அதில் முக்கியமானவர் தேவதேவன். என்னுடைய நண்பர்கள் தர்மராஜ், ரமேஷ் மற்றைய நண்பர்கள் நிறைய விடயங்களை பேசுவார்கள் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். தமுஎச எழுத்தாளர்கள் முக்கியமாக தமிழ்ச்செல்வன், கோணங்கி, கிருஷி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருநாள் என் நண்பர்களும், தேவதேவனும் ஒரு வீதியில் நடந்துகொண்டிருந்தோம். முதல்தடவையாக என் ஆளுமையாகவும், என்னோடு பொருந்திப்போககூடிய ஒருவராய் தேவதேவனைப் பார்த்தேன். அவரின் பேச்சினால்.அவரின் கவிதைகள் எனக்குள் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது. அதற்குபிறகு நான் நிறைய இலக்கியங்கள், நவீன இலக்கிய கோட்பாடுகள் படித்து முடித்திருந்தேன். ஆனாலும் அவர்தான் என்னை அதிகம் பாதித்தவர் இன்றுவரைக்கும்.

நாங்கள் நடந்து போகும்போது அவர் எப்படிபட்ட நபர் என்பதை கூறிக்கொண்டுவந்தார். என் வாழ்வில் நடந்த விடயங்களையே அவரும் கூறுவது போன்றே இருந்தது. அதுவே என்னிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் பின் நிறைய படிக்கவும், எழுதவும் ஆரம்பித்தேன். நமது வாழ்க்கை இலக்கியமாகவே இருக்கவேண்டும் என்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருக்கிறேன். "இனி" இதழின் மூன்றாவது, நான்காவது இதழிலிலேயே ஜான் ஐசக்குடைய புகைப்படமும், நேர்காணலும் வெளிவந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அவர் நான்கைந்து காமெராக்களை தோளில் சுமந்தபடி அழகாய் நின்றிருந்தார். அவரின் அந்த புகைப்படம் என்னை வெகுவாக ஈர்த்தது. அவர் ஐக்கிய நாடுகள் சபையின் புகைப்பட நிருபராய் இருந்தார். அவரின் வாழ்வு என்றும் நாடோடியைப் போன்றுதான். குறிப்பாக அவர் நரிக்குறவர்களைப் பற்றி நிறைய எழுதியிருந்தார். நானும் அந்த நேரத்தில் நரிக்குறவர்களைப்பற்றி ஆய்வுசெய்து கொண்டிருந்தேன். இதெல்லாம் சேர்ந்து எனக்கொரு விடயம் தெளிவாய் தெரிந்தது. நான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பு முடிந்ததும் எந்த வேலையும் செய்யக்கூடாது, ஒரு நாடோடியைப்போல, புகைப்படக்காரனாக உலகம் முழுவதும் சுற்றவேண்டும், இதைத்தவிர வேற எந்த காரியமும் செய்யகூடாது என்பது உறுதியாகிவிட்டிருந்தது. அதன் பிறகு நான் எந்தவிதமான வேலைக்கும் போகவேயில்லை. இந்த நேரத்தில் இலக்கியங்கள் பலதும் படித்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது என் நண்பர்கள் சிவகுமார், அருணன் போன்றோர் வளவனூரில் சினிமா பட்டறை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் ஜான் ஆப்ரஹாமின் ஒடேசா இயக்கத்தினர். நான் அந்த வொர்க் ஷாப்பில் நான்கு நாள் கலந்துகொண்டேன். நிறைய படங்கள் பார்த்தேன். அதாவது முதல் தடவையாக நிறைய நல்ல படங்கள் பார்த்தேன். அந்த படங்களை பார்க்கும்போது எனக்குள் ஒரு பெரிய மாற்றம்நிகழ்ந்தது. அந்த படவிழாவில் என்னை மிகவும் பாதித்த படம் 'the glass' என்கிற படம்தான். அதை இயக்கியவர் பெர்ட் ஹன்ஸ்ட்ரா இன்று வரைக்கும் அந்த படம் பாதித்தது போன்று எந்தபடமும் பாதித்ததில்லை. அது ஏன் பாதித்தது என்று இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். பதில் கிடைத்தபாடில்லை. அதன் இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்றவை என்னுள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த ஒடேசா இயக்கத்தினரில் பலர் எனக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள். அந்த வொர்க் ஷாப் முடியும்போது எனக்குள் ஓர் தெளிவு ஏற்பட்டது. அதாவது என்னுடைய தளம் இலக்கியமோ, புகைப்படமோ இல்லை, அது சினிமாதான் என்பது உறுதியாக தெரிந்தது. இனிமேல் சினிமாவைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யகூடாது என்று முடிவுசெய்துகொண்டேன். என்னுடைய மாற்றங்கள் எல்லாமுமே ஒரு மனிதரைப்பார்த்து வரவில்லை, நல்ல படைப்புகளைப் பார்த்தே என்னுள் மாற்றம் பிறந்தது. அந்த பட்டறை முடிந்தவுடன்அவரவர் தங்கள் ஊர்களில் திரைப்பட சங்கங்கள் உருவாக்குவதென முடிவானது. நான், மணி, ஷங்கர் அனைவரும் சேர்ந்து 1991ல் காஞ்சனை திரைப்பட இயக்கத்தை ஆரம்பித்தோம்.

காஞ்சனை திரைப்பட இயக்கம் ஆரம்பித்து இருபது வருடங்கள் ஆகின்றன. என்னிடம் யாராவது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் முதலில் கூறும் பதில் காஞ்சனை திரைப்பட சங்கம் என்றுதான் கூறுவேன். அதுதான் எனக்கு மகிழ்வைத் தரக்கூடியது. தொண்ணூற்று ஒன்றிலிருந்து, தொன்னூற்றொன்பது வரை திரைப்பட இயக்கத்தில் நாங்கள் செய்த வேலைகள் நினைத்துப் பார்க்கமுடியாதவை. இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இயக்கத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் திரையிட்டிருக்கிறோம். தொல்லியல் தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கிறோம். ஒளிப்பதிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நிறையவே நடத்தியிருக்கிறோம். அதே போன்றுயாரிடமும் பணம் வாங்காமல் வெறும் நூறு ரூபாய் வாங்கி ஆவணப்பட பயிற்சி பட்டறை நடத்தினோம். சர்வதேச திரைப்படங்கள் பலவற்றை திரையிட்டோம்.இந்த நிகழ்வுகளெல்லாம் என் இருபதெட்டு வயதில் நிகழ்ந்து முடிந்துவிட்டது. அந்த எட்டு, ஒன்பது வருடங்களில் நாங்கள் காஞ்சனை இயக்கத்தின் மூலம் செய்த வேலைகளைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

அந்த பணியைப் பார்த்து பலர் என்னை தொடர்புகொண்டனர். சிலர் என்னை நேரில் சந்திக்கும்போது சீனிவாசன் என்பவன் இவ்வளவு சின்னப்பையனா என்று சந்தேகப்பட்டார்கள். அவர்கள் மனதில் இவ்வளவு வேலைகளை செய்பவன் நிச்சயமாய் ஒரு கண்ணாடிபோட்ட ஒரு பெரியவர் என்ற பிம்பம் உருவாகியிருந்தது. நாங்கள் செய்த வேலைகள் வெறும் திரைப்பட சங்கம் மட்டுமின்றி "அகவிழி" எனும் திரைப்பட பத்திரிகை, புத்தக வெளியீடுகள், காடுகளுக்கு பயணம், தொல்லியல் ஆய்வுகள் என தொடர்ச்சியான பணிகள் காஞ்சனை மூலம் நடைபெற்றது. அந்த நேரத்தில் எங்களுடன் மாணவர்கள் பலர் இணைந்து பணியாற்றினார். அவர்கள் இன்று பலர் வெளி நாடுகளில் உள்ளனர். அவர்கள் எல்லோரும் சொல்லும் விடயம் எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான காலகட்டம் காஞ்சனை காலகட்டம்தான் என்பார்கள்.

அதன் பின்னான காலங்களில் இது போன்ற என் செயல்பாடுகளினால் பலபல்கலைக்கழகங்களில் இருந்து பேசக் கூப்பிடுவார்கள். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் என்னுடைய நண்பர்கள் அருட்செல்வன், நடராஜன், ரவீந்திரன் போன்றோர் என்னை பேச அழைப்பார்கள். அதன் பின் சிறிது காலம் அங்கே பகுதிநேர வகுப்பெடுத்தேன். குறிப்பாக திரைப்பட வகுப்புகளும்,காமெரா சார்ந்த வகுப்புகளும் எடுத்தேன்.தொடர்ந்து இருவருடங்கள் அங்கே பணியாற்றினேன். பல்கலைக்கழகத்திலும் ஒரு திரைப்பட சங்கம் ஆரம்பித்தோம். வகுப்பெடுப்பது என்பது எனக்கு என்னைப் புரிந்து கொள்ள உதவியது. இன்று வரைக்கும்பல கல்லூரிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறேன்.நான் இன்றையபொழுதினில் நடக்ககூடிய நிகழ்வு வரை தெரிந்து வைத்திருக்கிறேன் என்றால் நான் வகுப்பெடுப்பதும், திரைப்படத்தை திரையிடுவதும்தான் காரணம். திரைப்பட சங்கங்களை மக்கள் எப்படி பார்க்க வேண்டுமெனில் தாங்கள் எப்போதும் பயிற்றுவிக்க கூடிய ஒன்றாயும், கற்றுக்கொள்ள கூடிய ஒன்றாயும் பார்க்கவேண்டும். மற்றவர்களுக்கு வகுப்பெடுப்பதும் சரி, திரையிடுவதும் சரி நாமும் கற்றுக்கொள்ளகூடிய அளவிலேயே இருக்க வேண்டும். நான் சமூகத்துக்கு சேவை செய்கிறேன் என்று கூறினால் நீங்கள் வெகுவிரைவிலேயே வறண்டுபோய் விடுவீர்கள். அப்படி இல்லாமல் நீங்கள் நிறைய படம் பார்க்க வேண்டும். நிறைய விவாதங்கள் செய்யவேண்டும் அப்போதுதான் உங்களை நீங்களேசெழுமைப் படுத்திக்கொள்ளமுடியும்.

நான் சுற்று சூழல், திரைப்பட இயக்கம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போதுதான் தாமிரபரணி சம்பவம் நிகழ்ந்தது. அந்த சம்பவம் நிகழும்போது நாங்கள் அங்கு இல்லை. அந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மணி நேரத்தில் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டோம். நாங்கள் போனபோது இரண்டு பேர் இறந்துவிட்டதாக கூறினார்கள்,அடுத்தநாள் இரண்டு பத்தாயிற்று, அதற்கு அடுத்தநாள் பத்து பதினேழாக ஆயிற்று. தாமிரபரணியில் இருந்து பிரேதங்களை எடுப்பதை நான் கண்டேன். அது மிகவும் பயங்கரமாய் இருந்தது. இந்த விடயத்தை பத்திரிகைகள் மிக நேர்மையாய் பதிவு செய்தன. ஆனாலும் காவல்துறை அதற்கு நேர் எதிரான செய்திகளை பரப்பிக்கொண்டிருந்தனர். இந்த பிரச்சனை நடந்தபோது இந்த பிரச்சனைக்கு எப்படி முகம் கொடுப்பது என பேசிக்கொண்டிருந்தோம். இந்த விடயத்தை ஆவணமாக்கி அனைவருக்கும் கொடுக்கலாம் என எண்ணினோம். ஆவணப்படம் பண்ணுவதென்பது எங்கள் நோக்கம் கிடையாது. அடிபட்டவர்கள் அனைவரையும் நேர்காணல் செய்து அதை நீதிமன்றத்திற்கு கொடுக்கலாம் என்பது எங்கள் நோக்கம். அதைப்போலவே அடிபட்ட பலரிடம் பதிவு செய்தபோது, என்டிடிவி (NDTV) யில் இருந்து ஒருவர் வந்திருந்தார் அவர் பெயர் நூபூர் பாசு. இந்த விடயத்தை முற்று முழுதாய் வெளிக்கொணர அவரோடு இணைந்து உதவி செய்து நிறைய விஷயங்களை அவரிடம் கொடுத்தேன். அப்போது அவர்தான் கூறினார் நீங்கள் ஏன் இந்த விடயத்தை ஓர் ஆவணப்படமாக எடுக்ககூடாது என்றார். நான் கூறினேன் ஆவணப்படம் எடுப்பது போன்று நாங்கள் படம்பிடிக்கவில்லை. அதற்கு மேல் இந்த விஷயத்தை பற்றி எனக்கு அதிகப்படியாக தெரியாது என்றேன். மேலும் நான் ஒரு திரைப்பட இயக்கத்தில் இருக்கக்கூடிய ஆள்தான், இருந்தாலும் தாமிரபரணி சம்பவத்தில் இருக்கக்கூடிய அரசியல் தன்மை எனக்கு தெரியாது என்றேன்.

அவர்தான் என்னை ஊக்குவித்தார். மேலும் இதை நீங்கள் படம் பண்ணவில்லை என்றால், நீங்கள் ஓர் திரைப்பட சங்க ஆர்வலர் என்று வெளியில் கூறாதீர்கள் என்றார்.பின் நான் சென்னை வந்து தோழர் டி.எஸ்.எஸ் மணி,இயக்குனர் ஜனநாதன் ஆகியோருடன் இணைந்து அந்தபடத்தை உருவாக்கி, வெளியிட்டோம். வெளியிட்ட பின் அந்த திரைப்படம் பெரிய பிரச்சனையை கொணர்ந்தது. தோழர் டி.எஸ்.எஸ் மணியை பதினைந்து நாள் சிறையில் அடைத்தார்கள், அந்த திரையங்க மேலாளரையும் சிறையில் அடைத்தனர். நான் தப்பித்து பெங்களுர் சென்றுவிட்டேன்.என் மீது மூன்று வழக்குகள் போடப்பட்டன. அந்த "நதியின் மரணம்" செய்வதற்கு முன்னமே நான் சின்ன சின்ன படங்கள் பண்ண ஆரம்பித்திருந்தேன். தொன்னூற்று எட்டுகளில் பார்வையற்ற குழந்தைகளைப் பற்றி மாணவர்களோடு இணைந்து "விழிகளை மூடுங்கள்" என்னும் படமும் பின்னைய நாட்களில் நான் தனித்து "சிதிலம்" என்ற பெயரில் ஒரு பாழடைந்த கோவிலைப் பற்றி அதன் புகைப்படங்களோடும், படிமங்களை வைத்தும் எடுத்தேன். திருநெல்வேலியில் படத்தொகுப்பு செய்யும் வசதிகள் அன்று இருக்கவில்லை. எனவே முன்னைய படங்களின் அனுபவங்கள் மூலமே நான் சென்னை வந்திருந்தேன். படத்தொகுப்பு முடிந்தவுடன் ஊர் திரும்பிவிடலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன் ஆனாலும் வழக்கு முடிவதற்கே இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே இங்கேயே தங்கி படங்கள் எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் இங்கேயே இருந்துவிட்டேன்.

2. திரைப்படங்களை எங்கே திரையிட்டீர்கள்?

கல்லூரிகள், திரையரங்குகள், பொது இடங்கள் பலவற்றில் திரையிட்டோம். அதாவது காஞ்சனை திரைப்பட இயக்கம் பற்றி கூறுகிறேன். பள்ளிகளிலும், ஒரு அறைக்கு வெளியேயும் பல இடங்களில் திரையிட்டிருக்கிறோம். ஒரு தெருவில் திரையிடுவது என்னும் ஒரு நிகழ்வினையும் உருவாக்கி, பல தெருக்களில் திரையிட்டோம். மற்றைய இயக்கங்கள் படம் போடுவது மட்டுமே அவர்களின் வேலையாய் இருந்தது. நாங்கள் படங்கள் திரையிடுவதை கலாச்சார நகர்வை போன்று நடத்தினோம். இது எல்லாமுமே டிவிடி வருவதற்கு முந்தைய காலங்களில். 16mm இல் திரையிட்டோம். நான் பெங்களூர் சென்று அதன் பிரிண்டுகளை வாங்கிவருவேன், பூனா சென்று வாங்கிவருவது, திருவனந்தபுரம் சென்று வாங்கிவருவது பின் அதை பள்ளி, கல்லூரிகளில் திரையிடுவோம். இதற்கெல்லாம் எப்படி பணம் வசூலித்தோம் என்பது இன்றும் ஆச்சரியமான ஒன்றுதான். அதை நாங்கள் கலாச்சார நகர்வாய் நடாத்தினோம். திடீரென ஒருநாள் காமெரா பயிற்சி பட்டறைகள் நடாத்துவோம், காடுகளுக்கு பயணம் செய்தல், ஆவணப்பட பயிற்சி பட்டறை இதெல்லாம் காஞ்சனை மூலமாய் நடைபெறும். அந்த பட்டறைகளை நிறைய விதமான தொழில்நுட்ப வல்லுனர்கள் நடத்துவர், சில வேளைகளில் காமெரா, சினிமா சார்ந்த வகுப்புகள் நான் நடத்துவேன், தொல்லியல் என்றால் அது வேறு வல்லுனர்கள் வகுப்பெடுப்பர்.

3. ஆவணப்படங்களின் நோக்கம் என்ன?

நான் இதுவரைக்கும் எந்த குறும்படங்களும் செய்ததில்லை. எல்லாமுமே ஆவணப்படங்கள்தான். என்னுடைய ஆவணப்படங்கள் அனைத்தையுமே வெற்று திரைப்படமாய் மட்டும் கருதாமல், அது சமூகத்தில் போராடக் கூடியவர்களுக்கு உதவியாய் இருக்கவேண்டும் என நாங்கள் எண்ணினோம். பதினேழு பேர் இறக்கிறார்கள்.எனவே அவர்களின் போராட்டத்துக்கு எங்கள் படம் ஒரு கருவியாய் இருக்கவேண்டும். அதே போன்று கருவியாயும் இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்பொழுது அந்த இறப்புகளுக்கு ஓர் சாட்சியாய் இருந்தது. அது வெறும் ஆவணமாயும், வெறுமையாய் வெளியில் எடுத்து கூறுவதாக மட்டுமே அமையவில்லை. நீதிமன்றத்தில் அதை சாட்சியாய் நிறுத்தினோம். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. நீதியரசர் மோகன் தலைமையில் நீதிபதிகள் கேவலமான தீர்ப்பு வழங்கினர். இந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்கள், பின் அப்படி ஒரு விடயமே அங்கு நடைபெறவில்லை என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

இப்படி ஓர் படம் செய்து அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்து நீதிக்காக போராடியது எனக்கு தெரிந்து எந்த படமும் இல்லை. நீங்கள் ஒரு பிரச்சனை நடந்து அதை பத்து வருடங்களுக்கு பின் படம் பிடிக்கலாம். ஆனால் அது ஆதாரமாய் இராது. வெறும் படமாய் மட்டுமே இருக்கும். அந்த வழக்கு முடிவடைந்தவுடன் அந்த படத்தை ஊர் ஊராக திரையிட்டு அந்த மக்களை பற்றி பேசி, போராட்டம் என்றால் என்ன, தலித் பிரச்சனை என்றால் என்ன என்பதைப்பற்றி அப்பொழுதான் அறிகிறேன். சொல்லப்போனால் படம் பண்ணிய பிறகுதான் படிக்க ஆரம்பிக்கிறேன். இதுவரை பதினைந்து ஆவணப்படம் பண்ணியிருக்கிறேன். இந்த பதினைந்து படங்களிலும் அதிகமாய் பயன்பெற்றது யாரெனில் அது நானாகத்தானிருக்கும். அவ்வளவு தூரம் அந்த பிரச்சனைகளை பற்றி படித்து தெரிந்துகொண்டேன். ஒரு ஆவணப்படம் பண்ணும்போது ஒரு முனைவர் தர மாணவர் எவ்வளவு படிக்கிறாரோ, அவ்வளவு நான் படித்து ஆய்வு செய்துபடம் செய்கிறேன். இந்த படம் வெளிவந்து சமூகத்தில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியது.

4. குறும்படங்களின் வளர்ச்சி, ஆவணப்படங்களில் இல்லை. என்ன காரணம்?

இல்லை, நான் 2000களில் அதற்கான வேலைகளை ஈடுபட்டிருக்கிறேன். அதாவது நதியின் மரணம் படத்தின் பின்னான காலங்களில் இந்த சமூக விழிப்புணர்வை சரியாய் பயன்படுத்தவேண்டும் என எண்ணினேன். அந்த நேரங்களில் பலரும் குறும்படங்கள் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் எதுவுமே சரியான கட்டமைப்புக்குள் அடங்காமலே அங்கேயும் இங்கேயுமாய் உதிரியாய் கிடந்தது. அது சரியான முறையில் திரையிடப்படாமலே இருந்தது. படங்கள் எதுவுமே வெளிக்கொணர ஆட்கள் இன்றியும்,இது ஓர் புதிய சினிமா, முன்னையதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்னும் விளக்கமான கோட்பாடுகள் ஏதும் யாராலும் கொடுக்கப்படவில்லை. இந்த நேரத்தில் இரண்டாயிரமாம் ஆண்டு "தீபிகா" இயக்கத்தோடு இணைந்து "உலகில் தமிழின் முதல் குறும்பட, ஆவணப்பட நிகழ்வை" நடத்தினோம். நானே நேரடியாக குறும்படம், ஆவணப்படங்கள் செய்தவர்களின் வீடுகளுக்கு சென்று அந்த படங்களை சேகரித்து அது தொடர்பான ஓர் அறிக்கை எழுதி அதாவது மற்றைய சாதாரண சினிமாக்களை விட இந்த படம் மிகவும் முக்கியமானது என ஓர் அறிக்கை எழுதி, அந்த படங்களின் கதைக்குறிப்புகளை எழுதி அதை சரியாக பரவலாக கிடைக்கும்படி செய்து, அரும்பு பத்திரிகையில் அதைப்பற்றிய ஒரு பதிவாக குட்டி ரேவதி மூலமாய் பதிவு செய்தோம் "அறியபடாத சினிமா" என்னும் தலைப்பில். ஆவணப்படம் என்றால் என்ன, அதன் வரலாறு பற்றிய பதிவுகளை பகிர்ந்தோம். அந்த படங்களை பற்றி கூறி, அந்த நாற்பது படங்கள் அனைத்தையுமே திரையிட்டபோது அரங்கு நிறைந்த காட்சிகளாக மூன்று நாட்கள் இருந்தது. அந்த நேரங்களில் அனைத்து பத்திரிகைகளிலும் அந்த நிகழ்வுபற்றி "முதல்முயற்சி " என எழுதப்பட்டது. இந்த நிகழ்வு என்னை பொருத்தமட்டில் மிக முக்கியமான தருணம். இப்போதும் நண்பர்கள் தொடர்ந்து காஞ்சனை திரைப்பட இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். சென்னையில் திரைப்பட இயக்கம் வேறு, வேறு மாதிரியான அமைப்பில்,வேறு வேறு ஆட்களுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆவணப்படமும், அதில் இருக்ககூடிய வரலாறும், பதிவு செய்யக்கூடிய காலமும் மிக முக்கியமான ஒன்றாய் நான் கருதுகிறேன். நான் கதைப் படங்கள் எடுத்தாலும் ஆவணப்படங்களை தொடர்ந்து இயக்குவேன்.

5. சாதி எதிர்ப்பு சார்ந்த உங்கள் ஆவணப்படங்கள் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும்?

பதில்: தாமிரபரணி கொடுமை நடப்பதற்கு முன்பாக நான் ஒரு காந்தியவாதி. காந்தி, ஜே.சி. குமரப்பா இவர்களின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த வாழ்க்கையே வாழ விரும்பும் ஓர் நபர். என் இருபத்தெட்டு வயது வரைக்கும் அப்படித்தான் இருந்தேன். தொன்னூற்று ஒன்பதாம் ஆண்டு நடைபெற்ற இந்த தாமிரபரணி பிரச்சனை எல்லாவற்றையும் பிரித்துப்போட்டது. கொல்லப்பட்ட பதினேழு பேரின் வீட்டிற்கும் நான் சென்றிருக்கிறேன். பதினேழுபேரும் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டார்கள் என யோசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் என்னை அதை விட ஒரு விடயம் அதிக அதிர்ச்சிக்கும், நான் இப்பொழுது வேகமாய் வேலை செய்வதற்கும் தூண்டியது. நீங்கள் கேள்விப்பட்டாலே அதிர்ச்சியாவீர்கள். அந்த பதினேழு பேரும் கொல்லப்பட்டதுக்கு திருநெல்வேலியில் எந்தவிதமான எதிர்ப்புணர்வும் எழவில்லை. எங்கள் தெருவில் இருந்தவர்கள், பொது மக்கள், என் நண்பர்கள் என யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

என் வாழ்வில் முதன் முறையாக சாதியின் கொடூரத்தன்மையையும், அதன் மோசமான விளைவையும் காணும்போது மிகவும் வேதனை கவிந்ததாய் இருந்தது. ஏன் அப்படியென்றால் திருநெல்வேலி என்பது என் ஊர், மிகவும் பாரம்பரியமான ஊர், பெரிய இலக்கியவாதிகள் இருக்கிறார்கள், தாமிரபரணி ஓடுகிறது என்பது போன்ற ஊர்ப்பாசம் இருந்தது. தாமிரபரணி கொடுமையின் பின்னான காலத்தில் இவ்வளவு கேவலமான ஒரு ஊரிலா இருக்கிறோம் என வெட்கமாய் இருந்தது. திருநெல்வேலி என்னுடைய சொந்த ஊர் என்று சொல்வதை இன்றும் அருவருப்பானதாகவே உண்ர்கிறேன். ஆனாலும் இதற்கு முன்னரும் நான் நிறைய ஜாதிக்கலவரங்கள் பார்த்திருக்கிறேன். பத்திரிகைகளில், நேரடியாய் தெருக்களில். ஆனால் இதையெல்லாம் மீறி இந்த பிரச்சனை என்னை வேறு ஒரு விதத்தில் பாதித்தது. இதில் மற்றுமொரு கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் இந்த பதினேழுபேருமே கொல்லப்பட்டதை விரும்பினார்கள். அந்த ஊர்வலம் அடித்துக் கலைக்கப்பட்டதை விரும்பினார்கள். அந்த ஊர்வலத்தில் பதினேழுபேர் கொல்லப்பட்டது நியாமானதுதான் என்பது பொது மக்களின் மனோபாவமாக இருந்தது.

அந்த ஊரில் நான் பேருந்தில் பயணிக்கும்போதும், வீதியில் நடந்து செல்லும்போதும், ஆவணப்படத்திற்க்காக கேள்வி கேட்கும்போதும் மிக வேதனையளிப்பதாய் இருந்தது. பதினேழு பேரும் கொல்லப்பட்டது சரிதான் என்பது அந்த மக்களின் மனநிலை, என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னும் கூறப்போனால் தலித்மக்கள் கேவலமானவர்கள், பொறுக்கிகள், அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதை அனைத்து பொது இடங்களிலும் எல்லோருமே இப்படி பேசுவதை நான் கேட்டேன். திருநெல்வேலி போன்ற வைதீகம் வாய்ந்த ஊர்களில், வைதீகம் என்று சொல்லப்படுகிற ஊர்களிலெல்லாம் ஜாதி ஒடுக்குமுறையும் வன்முறையும் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டேன். ஏன் இவ்வளவு கொடூரமானவர்களாய் இருக்கிறார்கள்? திருநெல்வேலியில் "நீ என்ன ஜாதி" என்பதை கேட்காமல் ஒருவனால் இருந்துவிடவே முடியாது. திருநெல்வேலி காற்றில் கூட ஜாதி வாசனை வீசும்.அவன் கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி, அவர்கள் ஆய்வாளர்களாய் இருந்தாலும் சரிதான், அங்கு எல்லாமுமே ஜாதியின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது என்பதை நன்றாய் உணர்ந்தேன். இது போன்ற விஷயங்கள் என்னை வெறுப்பூட்டியது. இந்த நேரத்தில்தான் உலக அரசியலில் நிகழக்கூடிய விஷயங்கள், சமூகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி தெரிந்திருந்தது. தொன்னூற்று ஒன்பதாம் ஆண்டில் ஒரு பெரிய பயங்கரமான ஜாதிப் போராட்டம், வன்முறை வெடித்தது. ஏன் இப்படி நடக்கிறது என்பது பற்றி நான் ஆய்வு செய்துகொண்டிருந்தேன்.

அதன் பின் தலித் முரசுக்காக "untouchable country" எனும் ஆவணப்படத்தை எடுத்தேன். அந்த சந்தர்ப்பத்தில் எங்கெல்லாம் ஜாதிக்கலவரங்கள் நடந்ததோ அதைப்பற்றி பலவிதமான ஆய்வுகள் செய்தேன் .குறிப்பாக முதுகுளத்தூர் கலவரம், குறிஞ்சாங்குளம் கலவரம், கீழ்வெண்மணி என ஒவ்வொரு ஜாதிக்கலவரத்துக்கு பின்னும் என்ன இருக்கிறது என்பது பற்றி தெளிவாய் அறிந்துகொண்டேன். அந்த விஷயங்களை தெரிந்துகொண்டு காந்தியிடமிருந்து மெதுவாய் அம்பேத்கர் பக்கம் நகர்ந்துகொண்டேன். அம்பேத்கர் எவ்வளவு ஆழமான விசயங்களை சிந்தித்திருக்கிறார் என்பதை படிக்க ஆரம்பிக்கிறேன், அதன் பின் நிறைய தெரிந்துகொண்டேன். ஜாதியின் அடிப்படை வேரான இந்து மதம், அதன் அடிப்படையான பார்ப்பனியம் இந்த விடயங்களை ஆழமாய் தெரிந்து கொண்டேன்.ஆனாலும் அது இன்னமும் முடியாமலேயே இருக்கிறது. இதன் மூலமாக திருநெல்வேலி மீதும்,அந்த மக்கள் மீதும் இருத்த கோபம் இந்த நிமிடம் வரையும் குறையவே இல்லை. இவ்வளவு கொடுமையான சமூகத்தில் எப்படி வாழ முடியும்? ஜாதிதான் எல்லாவற்றிலும் பெரிது. வர்க்கப் போராட்டம் என்பதை விட இந்த ஜாதியே பெரிய பாத்திரமாய் இருக்கிறது என்பதை உணர்ந்து இன்று வரை ஜாதி குறித்த ஆய்வுகளில் தொடர்ச்சியாய் சென்று அம்பேத்கரில் முடிவடைந்தது. அம்பேத்கரிலிருந்து மகாத்மா ஜோதிராவ் பூலே மிகமுக்கியமான நபராக தெரிந்தார். பூலே, பெரியார் இவர்களெல்லாம் இந்தியாவில் எவ்வளவு பெரிய நகர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக தெரிந்துகொண்டேன்.

6. திரைப்படம், இலக்கியம் இரண்டையுமே எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: பொதுவாக இரண்டையுமே நான் எளிமையாக பார்க்கிறேன். அதாவது எல்லா மனிதனுக்கும் அன்றாட வாழ்விலிருந்து விலகி சற்று தீவிரமான காலகட்டம் என்று உள்ளது. மரணம் எல்லோருக்கும் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது. இப்பிடியான துயரமான காலகட்டத்தில்தான் நான் இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன், சினிமா பார்க்க ஆரம்பித்தேன். எனவே ஒரு மனிதனின் ஆழமான சிக்கலில் இருந்து வெளிவர சினிமா, இலக்கியம் இரண்டுமே மிகவும் முக்கியம்.சினிமா என்றால் சாதாரண படங்கள் இல்லை, நிச்சயமாய் என்னுடைய காலகட்டத்தில் ரித்விக் கடக், சார்லி சாப்ளின் இவர்களின் படங்கள் என் வாழ்வின் துயரமான பகுதிகளில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறது. ஒரு திரைப்படத்தில் இருக்ககூடிய ஏதோ ஒருபடிமம், இசை,ஏதோ ஒரு வசனம், ஏதோ ஒரு காட்சி, ஒருவனை வாழ்கையிலிருந்து காப்பாற்றிவிடும் என முழுமையாக நம்புகிறேன்.

ஒரு துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு திரைப்படம் காரணம் என்பதை நம்பும் ஒருவன் அதே வேலையைத்தான் செய்யமுடியும். அப்படியென்றால் ஆழமான திரைப்படங்கள் மட்டும்தான் மக்களை மீட்டெடுக்கும் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். ஒரு நாளைக்கு நான் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. மீட்டெடுக்க முடியாத துயரங்களின் உழல்பவர்களை, நானாக சென்று பார்த்து நிறைய டிவிடிகளை கொடுத்து அவர்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவர முடியும் என நம்புகிறேன். இதை இன்றுவரை தொடர்ந்து செய்கிறேன். நான் திரைப்பட வகுப்புகள் எடுப்பதும், என் இயக்கம் இயங்குவதும் இதன் பின்னணியில்தான் இருக்கிறது. இதன் மூலமாக யாராவது ஒரு மனிதனை வெளியில் கொண்டுவர முடியும் என நான் நம்புகிறேன். இதனால் தான் நான் வணிகரீதியான படம் செய்யவில்லை. நான் நிறைய இடங்களில் பயிற்சி பட்டறை நடத்துகிறேன். யாராவது ஒரு மாணவன், கடைசி நாள் "சார் உங்கள என்னால மறக்கமுடியாது நீங்க எனக்கு உதவி செஞ்சிருக்கிங்க" என்று கூறுவான்.

அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கிலே தான் இந்த வேலைகளிலெல்லாம் ஈடுபடுகிறேன். ஏனென்றால் நான் யாருடனும் பேச தெரியாத நபராகவும்,யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ளாத நபராகவும்தான் இருந்திருக்கிறேன். யாருடனும் பேச இயலாத நபர்களுக்காகவும், யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்காகவும் என் படைப்புகள் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இலக்கியம் தெரிந்துகொள்ள விசாலமான மனம் வேண்டும். ஒரு நல்ல இலக்கியவாதியால் மட்டுமே ஒரு தரமான சினிமா தரமுடியுமா என்றால் அது நிச்சயமாய் சந்தேகம்தான். ஒரு திரைப்படம் எடுப்பவருக்கு ஓவியம், புகைப்படக்கலை பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அவர் சினிமாவை ஆழ்ந்து தெரிந்திருக்க வேண்டும். அவரால்தான் நல்ல படம் தரமுடியும். இலக்கியம் படிப்பதன் மூலமாய் நம் அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும், மனதை பண்படுத்திக் கொள்ள முடியும். நல்ல கதையை தேர்வு செய்தால் மட்டுமே அது நல்ல படம் ஆகிவிடாது. இலக்கியம் வேறு ஊடகம், சினிமா வேறு ஊடகம். ஒரு சினிமா இயக்குனர் இலக்கியத்தையே படமாக்குவதால் மட்டுமே அது நல்ல படமாக மாறாது. சினிமா மொழி தெரிந்தவரால் எந்தக் கதையையும் கதையற்றதையும் உயர்ந்த படமாக உருமாற்ற முடியும்!’

நேர்காணல்: செந்தூரன் (படிமை மாணவர்)
படங்கள்: சோமசுந்தரம் (படிமை மாணவர்), ஆர். ஆர். சீனிவாசன்

இவரது ஆவணப்படங்களைக் காண:

http://www.cultureunplugged.com/storyteller/RR%20Srinivasan%20Ramamoorthy

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


http://thamizhstudio.com/creators_29.php

No comments:

Post a Comment